Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சுவிஸில் கணவர் , மனைவியை கொன்றது ஆணவக் கொலையா? ஆண் உளவியல் கொலையா?


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் ஈழத் தமிழர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

57 வயது நிரம்பிய கணவர் , மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயது நிரம்பிய தனது மனைவியை பலரும் பாத்திருக்கையில் கொலை செய்துள்ளார்.

ஒரு உணவு விடுதியில் காலை 8.30 அளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தனது மனைவியை, கணவன்  ஒன்பது தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது கொலையாளி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது போலீசாரிடம் சரணடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடும்ப வன்முறை என்பது புலத்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் வழக்கமான நிகழ்வாகவே உள்ளது.

பெரும்பாலும் மூத்த தலைமுறையினர் புலம்பெயர்ந்து வந்தாலும் தமது பரவணிப் பழக்கத்தைக் கைவிடும் மனநிலைக்கு இதுவரை வரவில்லை என்பதை அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் ஊடாக அறிய முடிகின்றது. ஆனாலும் – ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர – பகிரங்கக் கொலைகள் மிக மிகக் குறைவாகவே நடைபெற்றுள்ளன.

சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் நடைபெற்ற கொலைக்கான காரணம் எதுவென காவல் துறைத் தரப்பில் இருந்து இதுவரை செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும் ஒரு மனிதனைக் கொலை செய்வதை – எந்தவொரு சந்தர்ப்பத்திலும் – ஏற்றுக் கொள்ள முடியாது. அது மனித மாண்புக்கு எதிரானது. சட்ட அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் மன்னிக்கப்பட முடியாத குற்றம்.

ஆனால், தமிழர்கள் புலனாய்வுத் துறையினரையும் விடவும் புத்திசாலிகள். பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு விட்டார் என்றதும், காரணம் இதுவாகத்தான் இருக்கும் என்பதை அவர்கள் தாமாகவே ஊகித்துக் கொள்கின்றனர்.

பெண்ணின் நடத்தைப் பிறழ்வே கொலைக்கான உந்துதலாக இருக்கக் கூடும் எனத் திடமாக நம்பும் இத்தகையோர் – குறிப்பாக பிற்போக்குச் சிந்தனை கொண்ட ஆண்கள் – அத்தகைய ஆணவக் கொலைகளின் ஊடாக ஆணின் கௌரவம் நிலைநாட்டப் படுவதாக எண்ணிப் பெருமிதமும் கொள்கின்றனர். பெண்ணின் சுயம் பற்றியோ சுதந்திரம் பற்றியோ அவர்களுக்குப் புரிதலும் இல்லை, அக்கறையும் இல்லை. ஆகக் குறைந்தது பெண்கள் பக்கம் உள்ள நியாயத்தைச் செவிமடுக்கக் கூட அத்தகையோர் தயாராக இருப்பதில்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உலகம் முழுவதிலும் நடைபெற்ற வண்ணமேயே உள்ளன. நாகரிகத்தின் உச்சத்தை மனித குலம் தொட்டு விட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்திலும் கூட பெண்கள் இரண்டாந் தரப் பிரசைகளாகவே நடாத்தப்படுகின்றனர். பண்பாடு, கலாசாரம், மரபு என்ற அடிப்படைகளில் அவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். சமூக ஒழுக்கத்தை பெண்கள் மாத்திரமே கடைப்பிடிக்க வேண்டும், காக்க வேண்டும் என ஆண்கள் எதிர்பார்க்கின்றனர். அவை மீறப்படும் போது வெகுண்டெழும் அவர்கள் பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கின்றனர். இதன் உச்சக் கட்டமாக பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். இத்தகைய கொலைகள் ஊடாக சமூகத்தின் பண்பாடு காக்கப்பட்டு விட்டதாக நம்பும் ஆண் வர்க்கம் அதனைக் கொண்டாடுவதை உலகின் பல பகுதிகளிலும் காண முடிகின்றது.

இத்தகைய போக்குக்கு ஐரோப்பாக் கண்டமும் விதிவிலக்கு அல்ல என்பதைப் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன. உலகில் வாழ்வதற்குச் சிறந்த நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ள ஒரு நாடுகளுள் ஒன்றான சுவிற்சர்லாந்தில் ஆண்டுதோறும் 20 பெண்கள் ஆணவக் கொலைக்கு ஆளாகின்றனர். ‘குடும்ப கௌரவத்தைக்’ காக்கும் நோக்கிலான இந்தக் கொலைகளின் காரணகர்த்தாக்களாக பெரும்பாலும் அவர்களின் கணவர்கள் அல்லது முன்னாள் கணவர்களே உள்ளனர்.

தங்கள் பலத்தை(?) வெளிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு பெண்களைக் கொலை செய்யும், கொடுமைப்படுத்தும் ஆண்கள் ஒன்றை நினைத்துப் பார்ப்பதில்லை. ஆண்களையும் பெண்களையும் அறிவியல் அடிப்படையில் ஒப்பிடும் போது பலம் மிக்கவர்கள் பெண்களே என்பதே உண்மை. தங்கள் பலத்தின் மீதான அவநம்பிக்கையே பெண்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க ஆண்களைத் தூண்டுகிறது.

ஒரு சிறிய எடுத்துக்காட்டு மூலம் இதனைத் தெளிவாக விளக்க முடியும். ஶ்ரீலங்காவைப் பொறுத்தவரை பெரும்பான்மைச் சமூகமான சிங்கள இனம் சிறுபான்மைச் சமூகமான தமிழ் இனத்தை ஒடுக்குகின்றது. தான் பெரும்பான்மை இனம் என்ற உணர்வுக்கும் அப்பால், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் கரங்கோர்த்து விட்டால் தாம் பிராந்தியத்தில் சிறுபான்மை இனமாகி விடுவோம் என்கின்ற ஒரு அச்சம் சிங்கள இனத்திடம் உள்ளது. அது மாத்திரமன்றி பூமிப்பந்தில் சிங்களவர்கள் வாழும் ஒரே நாடாக ஶ்ரீலங்கா மாத்திரமே உள்ளது. ஆனால், தமிழர்களோ உலகின் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள். இதனால் உருவான உளச்சிக்கலே சிங்கள இனம் ஶ்ரீலங்காவில் பெரும்பான்மை இனமாக இருந்தாலும், ஒருவித சிறுபான்மைச் சிந்தனையில் இருக்கக் காரணம். இதன் விளைவாக அவர்கள் தமிழர்களை அடக்கி ஆள நினைக்கின்றனர்.

பெண்கள் விடயத்தில் ஆண்களிடம் நிலவும் மனோபாவமும் இத்தகையதே.
புலம் பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை பெண்கள் தரப்பில் தப்பே இல்லையா என்ற கேள்வியைச் சிலர் எழுப்பக் கூடும். தப்பு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். தண்டனை வழங்கக் கூடிய இடத்தில் ஆண்கள் இருக்கிறார்களா? அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதா? அந்த உரிமையை வழங்கியது யார்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

புலம் பெயர் நாடுகளைப் பொறுத்தவரை முதன்முதலில் புலம்பெயர்ந்தவர்கள் ஆண்களே. இருபது முப்பது வருடங்களுக்கு முன்னர் புலம்பெயர்ந்த போது என்ன மனோநிலையுடன் வந்தார்களோ அதே மனோநிலையுடனேயே தற்போதும் வாழ நினைப்பது அவர்களின் முதல் தப்பு. பெண்களை இரண்டாம் பட்சமாக நினைக்கும், தம்மை விட அவர்களை அறிவில் குறைந்தவர்களாக நினைக்கும் அதே மனோபாவம் இங்கும் தொடரவே செய்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை, தாயகத்தில் கட்டுப்பெட்டிகளாக(?) வாழ்ந்த அவர்கள் புலம் பெயர் நாடுகளில் தளைகளை உடைத்து, பல்வேறு விடயங்களைக் கற்றுக் கொண்டு, சாதனைப் பெண்களாக வலம்வருவதை பாரம்பரிய சிந்தனை கொண்ட ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. தமது கைப்பிடியில்(?) இருந்து விலகிச் செல்லும் அத்தகைய பெண்களை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் ஏதோ ஒரு விதத்தில் அவர்களைப் பழிவாங்க நினைக்கின்றனர்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களில் அநேகர் ஏதோவொரு விதத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களே.

போரின் வடுக்களைத் தாங்கியவண்ணம் நாட்டைவிட்டு வெளியேறிய அவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் சிகிச்சை புலம் பெயர் நாடுகளில் அவர்களுக்குக் கிட்டுவதில்லை. போரின் விளைவால் உருவான மன அழுத்தம், புலம் பெயர் நாடுகளில் நிலவும் பணியிடச் சூழல் அழுத்தம், குடும்பச் சூழலில் உருவாகும் மன அழுத்தம் எனப் பல்வேறு உளச் சிக்கல்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்களில் பலர் அதீத மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். இந்தப் பழக்கம் குடும்பங்களில் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றது.

சமூகத்தில் உருவாகக் கூடிய கலந்துரையாடல் மூலமே இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், அதற்கான விருப்பும், தகைமையும் தமிழ்ச் சமூகத்திடம் உள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. திறந்த மனத்துடனான உரையாடலுக்குத் தயாராக இல்லாத ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் விளங்கும் வரை இது போன்ற கொலைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு காண்பது எட்டாக்கனியாகவே விளங்கப் போகின்றது.

சமூகத்தில் அக்கறை கொண்ட தனிநபர்களும், பொது அமைப்புகளும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் மாத்திரமே பல பெறுமதியான மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும். செய்வார்களா?

https://www.ceylonmirror.net/108143.html

 

 • Like 1
Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி ஐலன்ட்.  பொது இடத்தில் கொலை செய்ததால் மனநலம் குறைபாடு இருக்கலாம்.  
பிடிக்கவில்லை எனில் பிரிந்து போகும் சுதந்திரம் உள்ள போது ஏன் கொலை எனும் முடிவுக்கு வருகிறார்கள்?

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

இணைப்புக்கு நன்றி ஐலன்ட்.  பொது இடத்தில் கொலை செய்ததால் மனநலம் குறைபாடு இருக்கலாம்.  
பிடிக்கவில்லை எனில் பிரிந்து போகும் சுதந்திரம் உள்ள போது ஏன் கொலை எனும் முடிவுக்கு வருகிறார்கள்?

கருத்துக்கு நன்றி நுணா. பிரிந்து போகும் சுதந்திரம் இருந்தாலும், என் மனைவி எனக்கு கீழ் கட்டுபட்டு வாழவேண்டும் என்ற பாரம்பரிய போலி கெளரவ ஆதிக்க மனப்பாங்கு இவ்வாறான கொலைகளுக்கு தூண்டுதலாக உள்ளது.  மணவிலக்கு பெற்று இருவரும் தம் விருப்பத்துடன்  மகிழ்ச்சியாக  தமது வாழ்வை தொடர்வதே சிறந்த பண்பாடு. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

சமூகத்தில் அக்கறை கொண்ட தனிநபர்களும், பொது அமைப்புகளும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் மாத்திரமே பல பெறுமதியான மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும். செய்வார்களா?

https://www.ceylonmirror.net/108143.html

 

பெண்களுக்கெதிரான வன்முறை உலகமெல்லாம் நடை பெற்றுக்கொண்டே தான் இருக்கு.ஆண்கள் உடலால் வலிமை பெற்றிருப்பதால் பலரும் அதனை ஒரு பலமாக எடுத்துகொள்கிறார்கள். பெற்றோர் சிறுபிள்ளளைகளை அடிப்பதும் அதனால்தான். அவர்கள் வளர்ந்தபின் அடிக்கவோ வெருட்டவோ முடியாது. இந்த வழக்கம் அப்படியே ஆண்களின் மரபணுக்களில் தங்கி பரம்பரை பரம்பரையாக கடத்தப்படுகிறது எல்லா ஆண்களும் பெண்களை உடல் ரீதியாக தாக்காவிட்டாலும் எதோ ஒரு வகையில் தமது ஆதிக்கத்தை காட்டுவது நிறைய பேரிடம் இருக்கிறது. பெண்கள், பொருளாதாரத்தில் ஆண்களிடம் தங்கி இருக்கும்போது இந்த அடக்குமுறை மேலோங்கி நிற்கிறது என்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆதாரத்துடன் காட்டியுள்ளது. எனக்கு பெண் உரிமை, சம அந்தஸ்து என்ற கொள்கைகளில் நம்பிக்கை இல்லை. ஆணோ பெண்ணோ தமக்குள் நல்ல புரிந்துணர்வோடு இருந்தால் ஒரு பிரச்னையும் வராது. சமுதாயத்தில் பெண்களுக்கு என்று ஆண்களுக்கு என்றும் சில கடமைகள் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே பொறுமை, எல்லாவற்றையும் சாமளித்து குடும்பத்தை சேர்த்து வைத்து நடத்துதல், சமையல், பிள்ளைகளை பராமரித்தல் போன்ற தன்மைகள் இருப்பதால் அவற்றை அவர்கள் நன்றே செய்யவேண்டும். ஆண்கள் அவர்களுக்கே உரிய உடல், மன பலத்தை கொண்டு குடும்பத்தை சந்தோசமாகவும், வெற்றிகரமாகவும் நடத்த  வேண்டும். ஆனால் இது எல்லா குடும்பங்களிலும் நடப்பதில்லை. இருவரில் ஒருவர் அல்லது இருவரும் நிறைய பிழைகளை தொடர்ந்து செய்வதால் குடும்பம் சிதறுகிறது. 

Edited by nilmini
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கணவரை மனநல மருத்துவரும் விசாரிக்க வேணும்.இது இன்னும் பல உயிர்களை காப்பாத்த உதவும்.எது எப்படியோ கொலை ஒரு பிரச்சனைக்குத் தீர்வு இல்லை.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆய்வாளர் ஏதோ சொல்வதற்காக இந்த சம்பவத்தை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் முடிச்சு போடுகிறார்.

கொலை எந்த உருவில் வந்தாலும் கண்டிக்கப்படணும் என்பது எவ்வளவு சரியோ அதே அளவுக்கு சரியானது இது போன்ற கோர்த்து விடுதலையும் கண்டித்தல். 

ஆண் வர்க்கத்தை இச்சம்பவத்தில் காப்பாற்ற துடிக்கிறார்கள் என்றவர் இதன் உண்மையான காரணத்தையாவது இங்கே குறிப்பிட்டிருக்கணும். இல்லையெனில் இரண்டும் ஒன்று தான். ஆணவக்கொலை என்றவர் அதற்கான எந்த சாட்சியையும் முன்வைக்கவில்லை.

கொலை கண்டிக்கத்தக்கது

ஆனால் அந்த குற்றத்தை வேறு சம்பவங்களுக்கு துணையாக பாவிப்பதும் குற்றமே. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.