Jump to content

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,க. சுபகுணம்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 4 மார்ச் 2023, 02:50 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன.

அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்டும் ஏதேனும் அவர்கள் கண்டிக்கும் வகையிலான தவறைச் செய்யும்போது அதிலிருந்து தப்பிக்க இன்னும் சாமர்த்தியமாக, அவர்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் எப்படி பொய் சொல்லலாம் என்பதைத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளேன்.

அந்தப் பொய்களால் தண்டனைகளில் இருந்து தப்பிப்பதில் வெற்றியும் கண்டுள்ளேன். இதை நம்மில் கிட்டத்தட்ட அனைவருமே செய்திருப்போம். இப்படி பெற்றோரிடம், ஆசிரியர்களிடம், நண்பர்களிடம் என்று குழந்தைகள் பொய் சொல்வதை பார்த்திருப்போம்.

அத்தகைய பொய்களைச் சொல்ல குழந்தைகள் கற்றுக்கொள்வதே பெற்றோரிடம் இருந்துதான் என்றும் அந்தப் பழக்கம் தொடரவும் பெற்றோரே காரணம் என்றும் மனநல மருத்துவர் சிவபாலன் கூறியபோது ஆச்சர்யமாக இருந்தது.

மனநல மருத்துவர் கௌதம் தாஸ், “பெற்றோர் பொய் சொல்வதைப் பார்க்கும்போது குழந்தைகளும் பொய் சொல்லக் கற்றுக் கொள்கிறார்கள். அதேவேளையில், பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாதபோது, அதை நிறைவேற்ற வைப்பதற்காகப் பொய் சொல்லத் தொடங்குகிறார்கள்,” எனக் கூறுகிறார்.

 

அனைத்து பெற்றோர்களுமே தங்கள் குழந்தைகளை நேர்மையான மனிதர்களாக வளர்க்க வேண்டும் என்றே எண்ணுகின்றனர். அதனாலேயே அதில் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகள் பொய் சொல்வதைக் கண்டுபிடிக்கும்போது அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், அப்படி சிறார்கள் மீது பெற்றோர் கோவப்படுவதால் அவர்கள் பொய் சொல்வது குறைவதில்லை அதிகரிக்கவே செய்கின்றன என்கிறார் மருத்துவர் சிவபாலன். “நீங்கள் ஒருமுறை அவர்கள் சொன்ன பொய்யைப் பெருங்குற்றமாகக் கருதி தண்டித்துவிட்டால், அடுத்த முறை நீங்கள் கண்டுபிடிக்காதவாறு எப்படிப் பொய் சொல்லலாம் என்று குழந்தைகள் சிந்திக்கத் தொடங்குகின்றனர். தண்டிப்பதாலேயே அவர்களை மீண்டும் பொய் சொல்லாமல் இருக்க வைக்க முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

இது ஒருபுறமிருக்க, அத்தகைய பொய்களைச் சொல்லத் தொடங்குவதற்கேகூட அத்தகைய தண்டனைகள்தான் காரணம் என்கிறார் மருத்துவர் கௌதம் தாஸ். வீட்டுப்பாடம் செய்யாமல் வரும்போது அதற்காக ஆசிரியர்கள் தண்டிப்பதும் அந்த விஷயம் தெரியவரும்போது பெற்றோர்கள் கண்டிப்பதும் நடக்கும்போது, அவற்றில் இருந்து தப்பிக்க, அடுத்தமுறை வீட்டுப்பாடம் செய்யத் தவறும்போது குழந்தைகள் பொய் சொல்கிறார்கள்.

“ஒருவருக்கு தண்டனை வழங்குவதாலேயே அவர் மாறிவிடுவார் என்று இல்லை. அவர்களுக்குத் தன்மையாக எது சரி என்பதைக் காட்டி வழிநடத்த வேண்டும்,” எனக் கூறுகிறார் கௌதம் தாஸ்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள்

குழந்தைகள் பொய் சொல்வது குறித்த பேச்சு எழும்போது முதலில் பொய் என்றால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.

பொய் சொல்வது இரண்டு வகைப்படும் என்கிறார் மருத்துவர் சிவபாலன். ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு அதை வெளியே சொல்லாமல் மறைப்பது அல்லது ஒரு விஷயத்தைச் செய்யாமலேயே அதைச் செய்துவிட்டதாகச் சொல்வது அதில் முதல் வகை.

இப்படியான பொய்களைச் சொல்பவர்களுக்கு அதன்மூலம், தண்டனையில் இருந்து தப்பிப்பது போன்று ஏதேனும் ஓர் ஆதாயம் கிடைப்பதாக இருக்கும்.

இரண்டாவது வகையான பொய் மிகவும் இயல்பாகச் சொல்லப்படுவது. ஓரிடத்தில் பொய் சொல்வதே அவசியமாக இருக்காது. ஆனால், அவர்களுக்குப் பொய் சொல்வது ஒரு பழக்கமாகவே மாறியிருக்கும். பழக்கத்தின் பேரில் இயல்பாக, அவசியமே இல்லாமல் பொய்களைச் சொல்வார்கள்.

இந்த இரண்டு வகை பொய்களையுமே மிகச் சாதாரணமாக அனைத்து மனிதர்களுமே சொல்கிறார்கள். இது சாதாரணமானதுதான்.

பல நேரங்களில் குழந்தைகள் நாம் சொல்லித்தராத நேரத்தில், நம் செயல்பாடுகளைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள் என்கிறார் சிவபாலன். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்கள் தம் குடும்பத்திலுள்ள பெரியவர்களின் நடத்தைகளைப் பார்த்துத்தான் பல விஷயங்களைச் செய்கிறார்கள். அப்படியான விஷயங்களில் பொய் சொல்லும் பழக்கமும் ஒன்று என்கிறார் சிவபாலன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கொண்டு பேசியவர், “குழந்தைகள் முதலில் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பொய் சொல்லக் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். இதைக் கடந்துதான் வெளியில் இருந்து கற்கிறார்கள்.

ஆசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரிடமிருந்து அவர்கள் பொய் சொல்லக் கற்றுக்கொண்டாலும் தமது வீட்டில் உள்ளவர்கள் பொய் சொல்வது தவறு எனக் கூறி அதைத் தமது நடவடிக்கைகளின் மூலமாகக் குழந்தைக்கு உணர்த்தும்படி நடந்துகொண்டால், அவர்களுடைய மனதில் அது ஆழமாகப் பதிவாகும்.

அப்படிச் செய்யாமல், வீட்டிலேயே தான் செய்யும் காரியத்தை அப்பாவிடம் சொல்லிவிடாதே என்று அம்மாவும் தான் செய்யாத வேலையை அம்மாவிடம் செய்துவிட்டதாகச் சொல்லுமாறு அப்பாவும் குழந்தை முன்பாகவே கூறினால், குழந்தையின் பழக்கத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார்.

இயல்பாக அனைத்து குடும்பங்களிலுமே இத்தகைய செயல்பாடுகளைக் கடந்து வந்திருப்போம். இதைப் பார்க்கும் குழந்தைகளும் தங்களுக்குத் தேவையான நேரங்களில் செய்யாத வீட்டுப்பாடத்தைச் செய்ததாகச் சொல்லலாம், செய்த தவறைச் செய்யவில்லை எனச் சொல்லலாம்.

“அப்படிச் சொல்வது தவறு இல்லை போலும் என்று சிறிது சிறிதாகக் குழந்தைகளுடைய மனதில் பதிவாகும். அது வெளியுலகுடனான அவர்களது பழக்க வழக்கங்களிலும் பிரதிபலிக்கும்,” என்கிறார் சிவபாலன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பொய்’ குழந்தைகளின் கற்பனைத் திறனை வெளியே கொண்டு வருகிறது

அடிப்படையில் குழந்தைகளுக்கு எது பொய், எது உண்மை என்ற வேறுபாடே தெரியாது என்கிறார் சிறார் எழுத்தாளரும் நீண்டகாலமாக குழந்தைகளிடையே பணியாற்றி வருபவருமான விஷ்ணுபுரம் சரவணன்.

“குழந்தைகளுக்கு ரயில், ரயில் பொம்மை இரண்டுமே ஒன்றுதான். ‘நீ இதைச் செய்தால் உனக்கு ஒன்று வாங்கிக் கொடுப்பேன்’, ‘நீ வீடு வரைக்கும் அமைதியாக அடம்பிடிக்காமல் வந்தால், உனக்கு இதைச் செய்து கொடுப்பேன்’ என்று பெற்றோர்கள் அவர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் விடுவதில் தொடங்குகிறது, குழந்தைகளிடையே பொய்களுக்கான அறிமுகம்.”

“இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, அதைச் செய்ய முடியாமல் போகும்போது அதைச் சமாளிக்க பெற்றோர் கூறும் பொய்கள்தான், பள்ளிகளில் வீட்டுப்பாடத்தைச் செய்யாமல் விடும்போது அதைச் சமாளிப்பதில் குழந்தைகளிடம் பிரதிபலிக்கின்றன.

ஆனால், அது தவறு என்று ஆரம்பத்தில் அவர்களுக்குத் தெரிவதில்லை. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும்போது அதற்கு சாக்காகச் சில விஷயங்களைச் சொல்வதை மற்றவர்களுடனான பழக்க வழக்கத்தில் ஒரு முறை என்றுதான் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். நமக்குத்தான் அது பொய்யாகத் தெரிகிறது. நம்மை ஏமாற்ற முயல்கிறார்கள் எனக் கருதுகிறோம்,” எனக் கூறுகிறார் சரவணன்.

இது நடக்காமல் இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் குழந்தைகளுக்கு நம்மால் செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பதும் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை உடனே முடியவில்லை என்றாலும் சற்றுத் தாமதமாகவாவது நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்கிறார் சரவணன்.

அதோடு, இன்னொருபுறம் இப்படியான பொய்கள் குழந்தைகளுடைய கற்பனைத் திறன் வெளிப்படவும் காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்.

பொதுவாக ஒரு பொய்யைச் சரியாகச் சொல்வதற்கு, அந்தப் பொய்யைச் சொல்பவர்கள் முதல் பொய்யைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் உரையாடல்களின் நீட்சியிலும் அந்த முதல் பொய்யை உண்மையாக்கும் வகையில் பேசியாக வேண்டும். இதில் ஏதேனும் ஓரிடத்தில் அந்த நீட்சி தடைபட்டாலும்கூட அவர் பொய் சொல்கிறார் என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.

“குழந்தைகளால் அப்படி அடுக்கடுக்காக, எதிரில் நிற்பவரால் கண்டுபிடித்துவிட முடியாதவாறு ஒரு நீட்சியாகப் பொய்களைச் சொல்ல முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்களிடம் இருந்து உண்மை வெளிப்படும். குழந்தைகள் சொல்லும் பொய் ஒருகட்டத்தில் நடைமுறையில் இருந்து விலகிச் செல்லும்.

அவர்கள் சொல்லும் காரணங்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அவர்கள் அடுக்கும் காரணங்களில் ஏதாவதொரு கட்டத்தில் உண்மையைச் சொல்லிவிடுவார்கள். அந்தக் காரணங்களில் அவர்களது கற்பனைத் திறன் அபாரமாக வெளிப்படும். பொய் சொல்வதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறன் மேம்படுகிறது.

அந்தக் கற்பனைகளை ரசித்தவாறு நாம் பொறுமையாக அவர்களோடு நீண்ட உரையாடலை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். அதற்கு அவர்களைப் பேசவிட வேண்டும்.

அதைவிட்டுவிட்டு, அவர்கள் பொய் சொல்கிறார்கள் எனத் தெரிந்த உடனேயே, மிரட்டி, கண்டித்து தடுத்துவிடக் கூடாது. அது அடுத்த முறை சிக்கிவிடாமல் இன்னும் சாதுர்யமாகப் பொய்களை வடிவமைக்கத்தான் அவர்களை இட்டுச் செல்லும்,” எனக் கூறுகிறார் விஷ்ணுபுரம் சரவணன்.

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொய் சொல்வது பெருங்குற்றமா?

குழந்தைகள் பொய் சொல்வதை பெற்றோர்கள் ஒரு குற்றமாகப் பார்க்கக்கூடாது எனக் கூறும் சிவபாலன், அது தவறு என்பதை அவர்களே புரிந்துகொள்ளும் வகையில், பொய் சொல்வது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தன்மையாகக் கையாள வேண்டும் என்கிறார்.

குறிப்பாக, குழந்தைகளை மணிக்கணக்கில் அமர வைத்து அறிவுரைகளை அள்ளி வீசுவதால் அவர்களுக்கு எதுவும் புரிந்துவிடாது என்று கூறும் அவர், குழந்தைகள் நம்முடைய செயல்பாடுகளின் வழியேதான் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதால், அவர்களுக்கு நாம் எதை அறிவுறுத்த நினைக்கிறோமோ அப்படியே வாழ்ந்து காட்டவேண்டும் என்கிறார்.

பொய் சொல்லக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டுமெனில், முதலில் நாம் பொய் சொல்லாமல் இருக்கவேண்டும். அதன்பிறகு, “பொய் சொல்வது தவறான செயல். அதைச் செய்யக்கூடாது. நாங்களெல்லாம் இருக்கிறோம் பார்த்தாயா அப்படி இருக்க வேண்டும்’ என்று பொய் சொல்வது குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நாம் குழந்தைக்கு முன்பாக நடந்து காட்ட வேண்டும்,” என்கிறார் சிவபாலன்.

“அய்யோ பொய் சொல்லிவிட்டோமே, அது தப்பாச்சே!’ என்று குழந்தைகளே யோசிக்கும் வகையில் அவர்களுக்கு முன்பாக நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.”

குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கொண்டு பேசியவர், “பெற்றோர்கள் இருவரும் கலந்துபேசி, குழந்தையின் முன்பாக உண்மையைப் பேசவும் நேர்மையாக நடந்து கொள்ளவும் வேண்டும். குழந்தைகளைப் பொறுத்தவரை தண்டனையின் வழியே அவர்களுடைய பழக்க வழக்கங்களை மாற்ற முடியாது,” எனக் கூறினார்.

“குழந்தைகளுக்கு 8 வயது வரைக்கும் பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். 8 முதல் 15 வயது வரை ஆலோசகராகச் செயல்பட வேண்டும். அதற்கு மேல், அவர்களுக்குத் தோழராக இருக்க வேண்டும். வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல், தோழமையுடன் பழகுதல் மூன்றையும் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.

வயதைப் பொறுத்து குழந்தைகளிடம் பெற்றோர் நடந்துகொள்ள வேண்டும். சிறு வயதில் பொய் சொல்லும்போது, அது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கு மேல் ஓர் ஆலோசகராக, பொய் சொல்வதால் ஏற்படும் பாதிப்புகளை அறிவுறுத்த வேண்டும்.

15 வயதைக் கடக்கும்போது ஒரு தோழரைப் போல் நடந்துகொள்ள வேண்டும். அந்த வயதில் அவர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காதபட்சத்தில், அவர்களுக்கு உறுதுணையாக நின்று பாதுகாக்க வேண்டும். ஒருகட்டத்தில் அவர்களே புரிந்து கொள்வார்கள். தண்டனை வழங்குவதால் பொய் சொல்வது நிர்ணயம் ஆகுமே தவிர சரியாகாது,” எனக் கூறினார் மருத்துவர் கௌதம் தாஸ்.

https://www.bbc.com/tamil/articles/c3gdek23gyeo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.