Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மூல நோய் என்பது என்ன? எப்படிக் கண்டறிவது?

பைல்ஸ்,மூல நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

21 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தற்போது மூலநோயும் இருக்கிறது. மாறிவரும் உணவு பழக்கங்கள், வாழ்வியல் முறைகள் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 5சதவீத பேர் மூலநோயால் பாதிப்பட்டிருப்பதாக உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவிக்கிறது.

மூல நோய் பாதிப்பு குறித்தும் அதன் சிகிச்சை முறைகள் மற்றும் அதிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் மேலும் சில தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் மருத்துவர் வாணி விஜய்யை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. பிபிசி தமிழின் கேள்விகளுக்கு அவருடைய பதிலை காணலாம்.

மூல நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

நமது ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த குழாய்களில் வீக்கம் ஏற்படும்போது, அதை நாம் மூலம் என்கிறோம். ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கும்போது அதன் ரத்த குழாய்கள் வீக்கமடைகின்றன. இத்தகைய வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மலம் கழிக்கும்போது அதிகமான அழுத்தம் கொடுப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை இருப்பது போன்ற காரணங்களால் ஆசனவாய் ரத்த குழாய்கள் வீக்கம் அடைகின்றன. அதேபோல் அடிக்கடி வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படுவது, அதிகமான உடல் பருமன் கொண்டிருப்பது, நார்சத்து உணவுகளையும் தண்ணீரையும் குறைவான அளவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்போது மிக அதிகளவிலான எடைகளை தூக்குவது போன்ற காரணங்களால் ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கிறது.

 

இது அனைத்தும் மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குகிறது. இதுதவிர கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் ஏற்படுவதும், மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாகிறது.

எத்தனை வகையான மூல நோய்கள் இருக்கின்றன? அது என்னென்ன?

உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் என மூன்று வகையான மூல நோய்கள் இருக்கின்றன. உள் மூலம் இருப்பது நமது கண்களுக்கு தெரியாது. இது மிக அரிதாகவே நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆசனவாய் பகுதிக்கு நாம் அழுத்தம் கொடுக்கும்போது சில நேரங்களில் அங்கே ஒருவிதமான எரிச்சலும், அரிப்பும் ஏற்படலாம்.

அதிகமான அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்கும்போது உள்ளிருக்கும் மூலம், வெளியே வருகின்றன. அதைதான் வெளிமூலம் என்கிறோம். சிலருக்கு அது ஏற்கனவே வெளிப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும். வெளிமூலம் இருப்பதை நம்மால் காண முடியும். இதனால் ஆசனவாய் பகுதியில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு ரத்த கசிவு மற்றும் அரிப்பு ஏற்படலாம்.

வெளி மூலம் இருக்கும் சிலருக்கு, வீக்கம் ஏற்பட்டிருக்கும் ரத்த குழாய்கள் வெடித்து ரத்த கட்டிகளாக மாறும் . இந்த நிலையை நாம் பவுத்திர மூலம் (த்ரோம்போஸ்டு ஹெமராய்ட்ஸ் )என்கிறோம்.

பைல்ஸ்,மூல நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மருத்துவர் வாணி விஜய்

மக்களிடையே அதிகமாக காணப்படும் மூல நோய் எது?

உட்புற மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நாம் ஏற்கனவே கூறியது போல குறைவான அளவு அசௌகரியங்கள்தான் ஏற்படுகின்றன. அதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் வெளிப்புற மூலம் அல்லது பவுத்திர மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். எனவே மருத்துவ தரவுகளின்படி கூறும்போது பெரும்பான்மையான மக்கள் வெளிமூல நோயால்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

எந்த வயதைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்?

மூல நோய் என்பது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 20 - 50 வயதான மக்களிடம்தான் இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது.

அதேபோல் அறுபது, எழுபது வயதுகளில் உடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்போது, அது மூல நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

மூல நோய் மிக அரிதாகவே குழந்தைகளிடம் காணப்படுகிறது. குழந்தைகள் சரியாக மலம் கழிக்காமல் இருப்பது, மலத்தை அடக்கி வைப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களால் அவர்கள் தங்களுடைய பதின்பருவ வயதுகளில் மூல நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மூலநோய் ஏற்படுவதற்கு மக்களின் உணவு பழக்கங்களும் ஒரு காரணமா?

நிச்சயமாக. இன்றைய உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறை பழக்கங்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சீஸ், பீட்ஸா, மைதா மற்றும் பிற வகையான துரித உணவுகளை அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் குறைவான அளவு காய்கறிகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொள்பவர்களுக்கும் மூல நோய் ஏற்படலாம். எனவே இதுபோன்ற பிரச்னைகளில் நமது உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மூலநோய் இருப்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவையா?

ஆம். குறிப்பாக மூல நோய் ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்கள் தங்களது உணவு முறைகள் மூலம் அதனை சரிசெய்துகொள்ள முடியும்.

முக்கியமாக மேற்கூறியது போல், மைதா மற்றும் துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எந்த வகையான மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றும்போது, அதன்மூலம் ஏற்படும் நல்ல விளைவுகளை அவர்களால் உணர முடியும்.

மருத்துவர் வாணி விஜய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அசைவ உணவுகள் மூலநோய் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்று கூறுவது உண்மையா?

கோழி, மட்டன், பீஃப் மற்றும் பன்றி கறி போன்ற இறைச்சி (Meat) வகை அசைவ உணவுகளை எடுத்துகொள்ளும்போது, அதனை செரிமானம் செய்வதற்கு நமது குடலுக்கு அதிகமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவையான அளவு கிடைக்காதபோது அது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இது மூல நோய் இருப்பவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

எனவே இறைச்சி வகைகளுக்கு பதிலாக மீன் அல்லது முட்டை போன்ற அசைவ உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவை எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய அசைவ உணவுகள் ஆகும்.

வீட்டு வைத்திய முறைகள் மூலநோய்க்கு உதவுமா?

ஆரம்ப கட்ட மூல நோய் பாதிப்புகளுக்கு மட்டுமே வீட்டு வைத்திய முறைகளை முயற்சிகலாம். உதாரணமாக அதிமான காய்கறிகள், பழங்கள் எடுத்து கொள்வது, சீரக தண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் எடுத்து கொள்வது போன்றவைகள் அவர்களுக்கு உதவும்.

அறுவை சிகிச்சை செய்வது எப்போது அவசியமாகிறது?

உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றிய பின்னரும், மாத்திரை மருந்துகளில் பலன்கள் கிடைக்காத நிலையிலும் நாம் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.

மருத்துவர் வாணி விஜய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூல நோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?

ஆரம்பகட்ட மூல நோய் பாதிப்புகளில் இருப்பவர்கள், தங்களது உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை சரி செய்து கொள்வதோடு, சில மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதன் மூலம் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்.

ஆனால் மூல நோய் பாதிப்பு தீவிரமான நிலைக்கு செல்லும்போது அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு மலம் கழிக்கும்போது அடைப்பு ஏற்படுவது, ரத்த கசிவு ஏற்படுவது, சதை வளர்ச்சி வெளியே தெரியும் அளவிற்கு அதிகரிப்பது, உட்காரும்போது வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே நல்ல பலன்களை அளிக்கும். தற்போது லேசர் முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும் கூட, அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதுதான் இங்கே நாம் நினைவுகொள்ள வேண்டிய விஷயம்.

மூலநோய்க்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா?

நிரந்தர தீர்வு என்றால் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மட்டும்தான். அறுவை சிகிச்சை செய்த பின்னர் கூட சிலருக்கு மீண்டும் மூல நோய் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் பின்பற்றி வந்தால்தான், இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை நாம் எப்போதும் தற்காத்து கொள்ள முடியும்.

https://www.bbc.com/tamil/articles/ce901dng2nzo

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.