Jump to content

ரஜினி மகள் வீட்டில் திருடிய நகைகள் மூலம் வீடு வாங்கிய முன்னாள் பணிப்பெண், ஓட்டுநருடன் கூட்டு: போலீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி மகள் வீட்டில் திருடிய நகைகள் மூலம் வீடு வாங்கிய முன்னாள் பணிப்பெண், ஓட்டுநருடன் கூட்டு: போலீஸ்

நகை திருட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
 
படக்குறிப்பு,

ஈஸ்வரி (இடது), ஐஸ்வர்யா (வலது)

3 மணி நேரங்களுக்கு முன்னர்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக சிறுகச் சிறுக திருடிய நகைகளைக் கொண்டு சென்னையில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வாங்கியதாக பணிப்பெண் மற்றும் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவரும் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 100 சவரன் தங்கம், 30 கிராம் வைர நகைகள், நவரத்தின நகை செட், நான்கு கிலோ வெள்ளிப் பொருட்கள் உள்ளிட்டவற்றை திருடியதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஐஸ்வர்யா வீட்டில் பணிப்பெண் ஈஸ்வரி (46), ஓட்டுநர் வெங்கடேசன்(44) ஆகியோர் வேலை செய்து வந்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் வீட்டில், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் மதிப்புள்ள பல நகைகளை காணவில்லை என கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

 

அதில், கடந்த 18 ஆண்டுகளில் அவர் சேகரித்த பலவிதமான விலை உயர்ந்த நகைகள் பலவற்றையும் அந்த லாக்கரில் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த லாக்கரை கடந்த மூன்று ஆண்டுகளாக திறக்கவில்லை என்பதாலும், பலமுறை அந்த லாக்கரை தனது வீட்டில் இருந்து கணவர் தனுஷ் வீட்டுக்கு எடுத்துச் சென்று மீண்டும் கொண்டு வந்திருந்ததால், நகைகள் கொள்ளை போனது தனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 வருடங்களாக வேலை செய்தவர்

தேனாம்பேட்டை காவல் நிலையம்

ஐஸ்வர்யா வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியோர் வேலைசெய்து வந்ததாகவும் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஈஸ்வரி மட்டும் வேலையிலிருந்து விலகி விட்டார் என்பதால் முதலில் அவரை காவல்துறையினர் விசாரித்தனர்.

அவர் கொடுத்த தகவலைகொண்டு, இதுநாள் வரை வேலையில் ஈடுபட்டிருந்த ஓட்டுநர் வெங்கடேசன் என்பவரையும் கைது செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

நகை லாக்கர் வைக்கும் இடமும், அதற்கான சாவி வைக்கும் இடமும் ஈஸ்வரிக்கு தெரியும் என்று ஐஸ்வர்யா புகாரில் தெரிவித்திருந்தார். அதன் பேரிலேயே ஈஸ்வரியிடம் போலீஸார் விசாரித்தனர். அதைத்தொடர்ந்து வெங்கடேசனிடமும் நடத்திய விசாரணையில் இருவரும் கூட்டு சேர்ந்து ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடியதை ஒப்புக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் 21ஆம் தேதியே இருவரும் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் திருடிய நகை உள்ளிட்ட பொருட்களின் விவரம் எத்தனை என்பதை போலீஸார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

அடகு கடையில் நகைகள் விற்பனை

இளவரசி
 
படக்குறிப்பு,

ஈஸ்வரி

இந்நிலையில், ஈஸ்வரியும் வெங்கடேசனும் தங்களுடைய நண்பர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள், அடகு கடையில் வைத்திருந்த நகை என 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருட்டு நகைகள் சிலவற்றை மயிலாப்பூரில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதையும் போலீஸார் கண்டறிந்தனர். அதன்பேரில் அடகு கடை உரிமையாளர் வினால்க் சங்கர் நவாலி என்பவரை தற்போது விசாரித்து வருவதாக பிபிசிதமிழிடம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

''இருவரும் பல ஆண்டுகளாக சிறிய அளவில் தங்கநகை, வெள்ளி பொருட்களைத் திருடியுள்ளனர். கொள்ளையடித்த பொருட்களில் சிலவற்றை அடகு வைத்து, ஈஸ்வரி ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கியிருக்கிறார். ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகிய இருவரும் இதுவரை அளித்துள்ள தகவலை வைத்துப்பார்க்கையில், பல இடங்களில் அவர்களின் நண்பர்களிடம் நகைகளை மறைத்துவைத்துள்ளனர். அதனை மீட்பதற்காகத் தீவிரமாக விசாரித்துவருகிறோம்,'' என தேனாம்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளாக சிறிய அளவில் நகை மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்டதால், அவற்றில் ஒரு பகுதியை மட்டும்தான் தற்போது மீட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பணிப்பெண் ஈஸ்வரியின் கணவர் அங்கமுத்துவிடம் விசாரித்தபோது, தனது மனைவியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என்று கூறியுள்ளார். இருந்தாலும் அவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸார் கூறும்போது, ''ஈஸ்வரியின் கணவர் தனது மனைவியின் பெயரில் வீடு இருப்பது பற்றி தனக்கு தெரியாது என்கிறார். ஈஸ்வரி, ஓட்டுநர் வெங்கடேசனின் உதவியுடன்தான் பல ஆண்டுகாலமாக திருடியுள்ளார்.

திருடிய பொருட்களை இருவரும் பல இடங்களில் மறைத்து வைத்துள்ளார். அவர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு பணம் சேர்ந்ததும், திருடுவதை குறைத்துள்ளார். வீடு வாங்கி விட்டு, மீதமுள்ள நகைகளை அடகு கடையில் வைத்துள்ளார். அந்த பணம் எதற்காகப் பயன்பட்டது என்று விசாரித்து வருகிறோம். அதேநேரம், வெங்கடேசன், தனது பங்குக்கு பணமாகப் பெற்றுள்ளார். அவர் சொத்தாக எதுவும் வாங்கவில்லை என்று தற்போது சொல்கிறார். மேலும் விசாரித்து வருகிறோம்,'' என்று கூறினர்.

ஆனால் முதலில் புகார் கொடுத்தபோது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வெறும் 60 சவரன் நகைகளைக் காணவில்லை என்று கூறியிருந்தார், தற்போது 100 சவரன் தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதால், ஐஸ்வர்யாவிடமும் அவரிடம் இருந்த நகை தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டுள்ளனர். பல ஆண்டுகளாக பொருட்கள் திருடு போனது குறித்து ஐஸ்வர்யா அறியாமல் இருந்தது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

''புகார் கொடுத்தபோது, ஆரம், நெக்லேஸ்,கம்மல், வளையல் உள்ளிட்ட 60 சவரன் நகை, இரண்டு வைரநகை செட், நவரத்தின நகை செட் ஆகியவை காணவில்லை என்று ஐஸ்வர்யா கூறியிருந்தார். தற்போது நாங்கள் 100 சவரன் நகைகளை மீட்டிருக்கிறோம்.

பல ஆண்டுகள் நகைகளைத் திருடியுள்ளதை ஈஸ்வரி,வெங்கடேசன் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கொடுத்துள்ள தகவல்களை கொண்டு மற்ற இடங்களில் உள்ள நகைகளை மீட்டு வருகிறோம் என்பதால், ஐஸ்வர்யாவிடமும் அவரிடம் இருந்த நகைகளுக்கான ஆவணங்களைக் கேட்டிருக்கிறோம்,''என்கின்றனர் அதிகாரிகள்.

https://www.bbc.com/tamil/articles/ce561g4818lo

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.