Jump to content

மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா!

-தயாளன்

 

all-quiet-on-the-western-front_V2-691x10

இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன்  சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது.

சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை தெரிந்து கொண்டால் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

1914ல் தொடங்கிய முதலாம் உலகப் போர் 1918இல் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் முக முக்கிய முனையாக ஜெர்மனி – ப்ரான்ஸ் இடையே மேற்கில் இருந்த போர் முனையில் ஆயிரக்கணக்கான் போர் வீரர்கள் கொல்லப்பட்டனர்.  நவம்பர் 11, 1918 அன்று போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட இறுதி நிமிடங்கள் வரை தாக்குதல்களும், போர்க் குற்றங்களும் நிகழ்ந்தன. அது குறித்த வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமே All quiet on the Western Front.

ஜெர்மானியை சேர்ந்த பால் என்னும் இளைஞன் உலகப் போரில் தன்னுடைய நாட்டிற்காக படையில் சேருகிறான். தொடக்கத்தில் போர் குறித்த கனவும்,  அதன் சாகசம் குறித்த கற்பனையுமாக உற்சாகமாக போர் முனைக்கு பயணம் செல்கிறான். உடை, காலணி, துப்பாக்கி இவற்றைப் பார்த்து பரவசம் அடைகிறான். போர் முனையை அடைந்த அன்று நிஜமான போர் எப்படி ஈவிரக்கமற்றது என்பதை பார்த்து அதிர்ந்து நடுங்குகிறான். வானில் இருந்து பொழியும் குண்டுகளும், அதன் காதைப் பிளக்கும் ஓசையும், துப்பாக்கிகளின் இடையறாத சப்தங்களும், அவனை கந்தலாக்கிப் போடுகிறது. அன்றிரவு நடந்த போரில் தனது நண்பனை சாகக் கொடுக்கிறான். பெரும் கனவோடு வந்தவன், போரின் கொடூரங்களை கண்டு நடை பிணமாக மாறத் தொடங்குகிறான்.

all-quiet-04.jpg

 

நாட்கள் செல்ல, செல்ல போர் நீண்டு கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நண்பர்களாக இழக்கிறான். இறுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வரவிருக்கும் நாளில் ஜெர்மானிய தளபதி இறுதியாக தாக்குதல் நடத்த பணிக்கிறார். 11 மணிக்கு போர் நிறுத்தம் வர இருக்கும் சூழலில் 10.45 மணிக்கு தாக்குதலை நடத்த உத்தரவிடுகிறார். அந்த போரில் 10.59 மணிக்கு கொல்லப்படுகிறான். அவனது சாவு ஆவணப்படுத்தப்படாமலேயே போர் முடிவுக்கு வருகிறது.

பால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெலிக்ஸ் கம்மீரர் உலகத் தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  போருக்கு முதலில் செல்லும் போது முகத்தில் காட்டும் உற்சாகமாகட்டும், போர்க்களத்தில் காட்டும் நடுக்கம், அதிர்ச்சி, உளச்சிக்கல் ஆகியவற்றை அசாத்தியமான திறனுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.  தனது நண்பர்களை ஒவ்வொருவராக பறிகொடுக்கும் போது கடைசியில் நடைப்பிணமாக மாறும் தருணம் வரை அவர் காட்டியிருக்கும் குணசித்திர மாற்றம் கண்களை குளமாக்குகிறது.

all-quiet-02.jpgஅவரது நண்பர்களாக வரும் டேனியல், அல்பெர்ட் ஆகியோரின் கண கச்சிதமான நடிப்பு அபாரம். தளபதிகளாக வருபவர்கள், போர் வீரர்களாக நடித்திருக்கும் துணை நடிகர்கள் என எல்லாருமே படத்திற்கு மிகப் பெரிய பங்களித்திருக்கிறார்கள்.

படத்தின் உருவாக்கத்தில் மிகப் பெரிய பங்கு ஒளிப்பதிவுக்கு இருக்கிறது. ஆவணப் படத்தின் தன்மையோடும் அதன் யதார்த்தத்தோடும் புனைவு சினிமாவை படம்பிடித்திருக்கிறது ஜேம்ஸ் ப்ரெண்ட்டின் கேமரா. படத்தின் தொடக்க ஷாட்களிலேயே மொத்த படத்திற்கான உணர்வையும் கடத்தி விடுகிறது கேமரா. பனி முடிய டாப் ஆங்கிள் ஷாட் கீழிறங்கி வரும்போது போரில் கொல்லப்பட்ட போர் வீரர்களின் உடல்களின் வழியாக கேமரா பயணிக்கும் போது தொலைவில் இருந்து வீசப்படும் குண்டு வந்து விழுந்து வெடிக்கிறது. இந்தக் காட்சி போரின் மோசமான பக்கத்தை, அதன் குரூரத்தை முகத்தில் அறைவது போல் சொல்கிறது.  சிப்பாய்கள் முன்னேரும் போது, அதனுடன் சேர்ந்து கேமராவும் முன்னேறுகிறது. டாங்கிகளின் கோரத் தாண்டவத்தை அப்பட்டமாக காட்டுகிறது. உண்மையான போர் முனையில்  சிக்கிக் கொண்ட உணர்வைத் தருகிறது ஒளிப்பதிவும் கலை இயக்கமும்.
all-quiet-on-the-weste.jpeg

ஈரமும், சேறும் படர்ந்த பதுங்கு குழிகளும் துப்பாக்கிகள், குண்டுகள், கவச வாகனங்கள், நச்சுப் புகை வீசும் ஆயுதங்கள், ஈவிரக்கமின்றி மனிதர்களைக் கொல்லும் விமானங்கள், அதன் நடுநடுங்க வைக்கும் பேரொலிகள், போர் வீரர்களின் உடைகள், பதுங்கு குழிகளின் விவரணைகள் என்று படக்குழுவின் அபாரமான உழைப்புக்கு ஆஸ்கர் கிடைத்திருப்பதில் வியப்பில்லை.

படத்தின் ஒலி வடிவமைப்புக்கும் ஆஸ்கர் கிடைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு நேர்த்தியான ஒலிகளால் போரின் அழிவு நமக்கு கடத்தப்படுகிறது. இசைக்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. போர்க்காட்சிகளுக்கென்ற பிரத்யேகமான இசையை படைத்திருக்கிறார்கள்.  தேவையான இடங்களில் அசலான ஒலிக்கு இடத்தை தந்து விட்டு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இசை அதிருகிறது.

The_futility.jpg

இந்தப் படம் மனித குலத்திற்கு மாபெரும் செய்தியை அறிவிக்கின்றது. போர் என்பது மனித குல மாண்புகளுக்கு எதிரானது. அறம், விழுமியங்கள் எதனையும் போர் அழித்தொழித்து விடும் என்பது மட்டுமல்ல.  போரின் முக்கிய இயல்பே மனிதத்தன்மையை அழிப்பது.  மானுட அறத்தை, உலகு தழுவிய மானிட நேயத்தை இந்தப்படம் போர்க்களக் காட்சிகளின் மூலம் வலியுறுத்துகிறது. சில நூறு மீட்டர் நிலத்திற்காக லட்சக்கணக்கான மனித உயிர்களை பலி கொண்ட உலகப்போரின் சிறு பகுதியை ஆவணப்படுத்தி இருக்கிறது இப்படம்.  அத்தனை கொடூரங்களுக்கும் முகங்கொடுத்த மேற்கு முனை கனத்த அமைதியோடு வரலாற்றின் மவுன சாட்சியாக நிற்கிறது.

பொதுவாக, போருக்கென்று சில நெறி முறைகள் உள்ளன! அதை மீறும் போது தான் போர்க் குற்றம் என்று வரையறுப்பார்கள். ஆனால், இந்தப் படமோ போரே ஒரு குற்றம் என்று ஓங்கிச் சொல்கிறது. இப்படம்  நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பட விமர்சனம் : தயாளன்

 

https://aramonline.in/12838/all-quiet-on-the-western-front/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை. நேற்று பார்ப்பதாக இருந்தேன். நேரம் இன்மையால் முடியவில்லை. கட்டாயம் பார்க்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலரது தேவையற்ற ஈகோகளுக்காக பல உயிர்கள் காவு கொள்ளப்படுவதுடன் படம் முடிவடைகிறது, சேவிங் பிரைவேட் ரையன் படம் போர் நடமுறையினை ஓரளவுக்கு நெருக்கமாக காட்சி படுத்த முயன்றிருந்தாலும் படத்தில் வழமையான கொலிவூட் கலவையினை கலக்கி படத்தினை கெடுத்துவிட்டிருப்பார்கள், ஆனால் இந்த படத்தில் அப்படி இல்லாவிட்டாலும் ஆக கூடுதலாக நம்பகத்தன்மை அற்ற விகிதத்தில் மனிதாபிமானம் கலந்து விட்டாலும்  படம் நல்ல படம்.

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.