Jump to content

நான் துறவி அல்ல, காதலன்! - சத்குரு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் துறவி அல்ல, காதலன்!

KaviApr 01, 2023 11:31AM
ஷேர் செய்ய : 
Screenshot-2023-04-01-112904.jpg

சத்குரு

படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள்.

“நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி காதலாக இருப்பது ஆரோக்கியமான நிலையா? ஒரு துறவியிடம் கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள்!” என்று அண்மையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

3jQLR6Md-images.jpeg

“நான் துறவி அல்ல; முழுமையான காதலன்!” என்று சிரித்தேன். நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தபோது, எங்களுக்கு ஓர் ஆசிரியை இருந்தார். ஆங்கிலக் கவிதைகள் பற்றிப் பாடம் நடத்துவார். சரியாகப் புரிந்து கொள்ளாத மாணவர்களைப் பார்த்து, “காதல் இல்லாமல் கல்லைப்போல் உட்கார்ந்தால், கவிதை எப்படிப் புரியும்? போய், மகாராணி காலேஜ் முன்னால் நின்று பாருங்கள், காதல் வந்தால் கவிதையும் தானே வரும்” என்பார்.
ஈஷா நடத்தும் பள்ளிக்கூடத்தில், ஜுன் மாதத்தில் திடீர் என்று மழை பிய்த்துக்கொண்டு கொட்டியது. பள்ளி ஆசிரியர்கள் பெரிய பெரிய பாடத் திட்டங்களுடன் வந்து என்னைச் சந்தித்தார்கள்.

“நான் ஒரு குழந்தையாக இருந்தால், இப்படி எல்லாம் வகுப்பு நடத்தும் பள்ளிக்குப் போகவே மாட்டேன். குழந்தைகளைச் சும்மா காட்டுக்குள் கூட்டிப்போங்கள். ஆற்றில் விளையாடட்டும். மழையில் நன்றாக நின்று நனைந்து ஊறட்டும். அதன் பிறகு அழைத்து வாருங்கள்” என்றேன்.

1633184038-1633184037347-1024x682.jpg

குழந்தைகள் குதூகலமாக மழையில் விளையாடினார்கள். போதும் என்று தோன்றிய பிறகு, உள்ளே வந்தார்கள். இப்போது அவர்களிடம் மழை பற்றி உணர்வுப்பூர்வமாக ஓர் ஆர்வம் வந்துவிட்டது. மழையின்மீது பிறந்த காதல், அதுபற்றிய விஞ்ஞானத்தை அறிந்துகொள்வதிலும் வந்துவிட்டது. மழையின் புவியியல் பின்னணி என்ன? உயிர்களுக்கும் மழைக்குமான தொடர்பு என்ன? மழையை வைத்து நம் நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பொருளியல், ரசாயனம், சமூகவியல் என்று அனைத்தைப் பற்றியும் அவர்களிடம் பேச முடிந்தது.

எதன் மீதாவது ஆர்வம் வந்துவிட்டால், அதுபற்றி அறிந்து கொள்ளாமல் தூங்க முடிவது இல்லை. அந்த ஆர்வத்தைத் தூண்டிவிடாமல், பாடப் புத்தகங்களை எழுதினால், தொட்டுப் பார்க்கவே பிடிக்காமல் போகிறது. தொட்டுத் திறந்தாலே… தூக்கம்தான் வருகிறது.

இது எப்படி மாணவனின் தப்பாகும்? பாடப் புத்தகத்தை ஒரு காதல் கதை மாதிரி எழுதி இருந்தால், ஏன் படிக்காமல் தவிர்க்கப் போகிறார்கள்? அறிவியலையும், வரலாற்றையும், கணிதத்தையும் காதலுக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதக் கூடாதா? காதலை கெமிஸ்ட்ரி என்பவர்கள், கெமிஸ்ட்ரியைக் காதலாகத் தர முடியாதா? பாடத்தின் மீது காதல் பிறப்பதுபோல் அமைக்காத கல்வி முறையின் மீதுதானே அடிப்படைத் தவறு?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தீர்கள் என்றால், காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான, மகிழ்ச்சியான, ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஒரு காரணம் தூண்டிவிடுகிறது.

காதலை ஆங்கிலத்தில் அழகாக ‘Falling in Love’ என்று சொல்வார்கள். காதலில் ஏற முடியாது, இறங்க முடியாது, நிற்க முடியாது, பறக்க முடியாது. விழத்தான் முடியும். ‘நான்’ என்ற தன்மை கொஞ்சம் நொறுங்கிக் கீழே விழுந்தால்தான், காதல் பிறக்க முடியும்.

சென்ற கணம் வரை உங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் ஹீரோ. காதல் வந்துவிடட்டுமே, உங்களைவிட இன்னொருவர் முக்கியமாகிவிடுகிறார். எப்போது இன்னோர் உயிர் நம்மைவிட முக்கியமாக ஆகிவிட்டதோ, அதற்குப் பெயர்தான் காதல்.

கல்லூரி நண்பர்கள் சிலர் பல வருடங்கள் கழித்து தங்கள் புரொஃபசர் வீட்டில் சந்தித்தனர். எங்கெங்கோ சுற்றிவிட்டு பேச்சு அவர்களுடைய காதல் வாழ்வு பற்றித் திரும்பியது. ஒவ்வொரு நண்பரிடத்திலும் ஏதோ ஓர் ஏமாற்றம், ஏதோ ஒரு வருத்தம்.

UsQBCWy1-images-1.jpeg

புரொஃபசர் ஒரு ஜாடியில் தேநீர் கொண்டு வந்து வைத்தார். “அந்த அலமாரியில் நிறையக் கோப்பைகள் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த கோப்பையில் தேநீரை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

பீங்கான் கோப்பை, கண்ணாடிக் கோப்பை, வெள்ளிக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள். நண்பர்கள் ஆளுக்கு ஒரு கோப்பையை எடுத்து தேநீர் நிரப்பி அமர்ந்ததும், புரொஃபசர் சொன்னார்…

“சாதாரணமான மண் கோப்பைகளை யாரும் எடுக்கவில்லை. விலை உயர்ந்த அழகான கோப்பைகளைத்தான் நீங்கள் எல்லோரும் எடுத்திருக்கிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? கோப்பையைக் கையில் வைத்திருக்கப் போகிறீர்கள் அவ்வளவுதான். தேநீர்தான் உள்ளேபோய் உங்களுடன் ஒன்றாகப் போகிறது. ஆனால், உங்கள் கவனம் கோப்பையில் நின்றுவிட்டது.

எனக்கு என்ன கிடைத்தது, அடுத்தவருக்கு எந்தக் கோப்பை போய்விட்டது என்பதில் சிந்தனை போய்விட்டதால், தேநீரின் உண்மையான ருசியைக் கவனிக்கத் தவறுகிறீர்கள். காதலும் அப்படித்தான். அந்த அற்புதமான உணர்வு கொண்டுவரும் ஆனந்தத்தை வெளித் தோற்றங்களுடன் தொடர்புபடுத்தி, ருசிக்கத் தவறுகிறீர்கள்… வேதனையில் அல்லாடுகிறீர்கள்!”

உண்மைதான். மாட்டுக்குக்கூடக் காதல் இருக்கிறது. கழுதைக்குக்கூடக் காதல் இருக்கிறது. புழு, பூச்சிக்கும் காதல் இருக்கிறது. காதலிக்கத் தெரியாதவர்கள் அதற்கும் கீழே இருப்பவர்கள். காதல் என்பது மிக ஆழமான ஈடுபாடு. துறவறம் பூணுபவர்கள் காதல் அற்றவர்கள் அல்ல… குறிப்பிட்ட நபரோடு மட்டும் பிரியத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு எல்லாவற்றின் மீதும் காதல் வந்துவிட்டது என்று அர்த்தம்.

வாழ்க்கை என்றாலே காதல்தான். நீங்கள் சுவாசிக்கும் காற்றைக் காதலோடு கவனியுங்கள். நமக்குள் போய், நம்மில் ஒரு பாகமாகவே மாறும் உணவைக் காதலோடு புசியுங்கள்.

காதலாக இருக்கும்போது, உங்களுடைய உணர்வு இனிப்பாக இருக்கிறது. உயிர் போனாலும் சரி என்ற ஆனந்த உணர்வு நிறைகிறது. ஒரே ஒருவராலேயே இவ்வளவு கிடைக்கும் என்றால், எல்லா ஜீவராசிகளிடமும், ஜீவனுக்கு மூலமாக இருக்கிற காற்றிடமும், மண்ணிடமும், கல்லிடமும், செடியிடமும் காதல்கொண்டால், எப்பேர்ப்பட்ட அளவில்லாத ஆனந்தம் கிடைக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். மலை, நதி, பூ, புல்வெளி, பட்டாம்பூச்சி, ஆடு, மாடு என்று காணும் ஒவ்வொன்றின் மீதும் காதல் கொள்ளலாம்.

காதலிப்பது கையில் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால்தான், பிரச்சனை. அதைத் தவிர்த்துவிட்டால், கடலின் மீதும், ஆகாயத்தின் மீதும், நிலவின் மீதும்கூட உண்மையான காதல் கொள்ளலாமே? அந்த உணர்வை உங்களிடம் இருந்து யாரால் தட்டிப் பறிக்க முடியும்?
 

 

https://minnambalam.com/featured-article/sadhguru-on-saint-and-lovers/

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பக்தன் (I mean, follower) அல்லன். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காடு  ஆக்கிரமிப்புப் பற்றிய குற்றச்சாட்டில் அவர் தாம் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் அல்லது தண்டனக்கு ஆளாக வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. மூளைச்சலவை செய்து இளையோரைத் தவறாக வழிநடத்தும் கொடிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய அவர் மீது எனக்கு வெறுப்பே உண்டு என்பதையும் முதலில் பதிவு  செய்தே ஆக வேண்டும்.

      இவற்றிற்கு அப்பாற்பட்டு அவருடைய கருத்துகளில் தெளிவும் பகுத்தறிவும் உள்ளதை என்னால் அங்கீகரிக்காமல் இருக்க முடியவில்லை. வேறு எந்த நவீன காலத் துறவியிடமும் இச்சிறப்பை நான் கண்டதில்லை (ஓஷோவிடம் இருக்கலாம்). ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கிருபனின் பதிவைக் கொள்ளலாம். மேலும் ஒரு மேற்கோளைச் சுட்ட விழைகிறேன். "கடவுள் என்ற ஒன்று உண்டா ?" என்ற கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் அவர்களின் பதில், "அப்படியொன்று பற்றிய நினைவே இல்லாமல் உங்கள் கடமையைச் செய்து மகிழ்ச்சியாய் இதுவரை உங்களால் வாழ முடிகிறதென்றால், அதைப்பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? அப்புறம் கடவுள் இருந்தாலென்ன இல்லாவிட்டால் என்ன ? அவர் உங்களைத் தொந்தரவு செய்யாதபோது நீங்கள் ஏன் அவரைத் தொந்தரவு செய்கிறீர்கள் ? மகிழ்ச்சியாய் மனநிறைவுடன் வாழ்வதே முக்கியம். இறை நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே ". (அவர் சொன்ன கருத்தை என் மொழியில் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். அவரது "அத்தனைக்கும் ஆசைப்படு" நூலில் வாசித்த நினைவு).

      அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில், சாத்தான் வேதம் ஓதுவதாகக் கொண்டால் கூட அது நல்ல வேதமாக இருக்கிறது என்பது என் கருத்து. 

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சத்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற எந்த குருஜிகளினதும் பக்தன் கிடையாது. இவர்கள் எல்லாமே கோர்பரேட் குருஜிகள். மக்களின் ஆன்மீகத் தேடலை/விடுதலையை, பிறருக்கு உதவவேண்டும் என்ற நோக்கை, நிம்மதியான வாழ்வை வேண்டுவதை வியாபாரமாக்கும் கோர்ப்பரேட் நிறுவனங்கள். அதைப் புரிந்துகொண்டுதான் அவரது கட்டுரைகளை வாராவாரம் மின்னம்பலத்தில் படிக்கின்றேன்😀

  • Like 2
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நானும் அதே தான் ... (எ) இவரின் பக்தன் இல்லை ஆனால் இவரது பகுத்தறிவு கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உணர்வதால் கிடைக்கும் போது வசிப்பது/கேட்பது.  தேடுவது குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sabesh said:

நானும் அதே தான் ... (எ) இவரின் பக்தன் இல்லை ஆனால் இவரது பகுத்தறிவு கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உணர்வதால் கிடைக்கும் போது வசிப்பது/கேட்பது.  தேடுவது குறைவு

இவரின் பக்தன் இல்லை ஆனால் இவரது பகுத்தறிவு கருத்துக்கள் சிந்தனையை தூண்டுவதாக உணர்வதால், உங்கள் அளவு வசிப்பது/கேட்பது கடந்து (ஒரு சொற்ப படிகள் கடந்து) அதன் அனுபவத்தை ரசிக்கத் துணிந்தவன். ரசித்தவன்.  🙏 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.