Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

Degree   

2021 Dec 22

வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு)  , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர  meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் ,  Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali)  சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு வந்திருந்த மீடியாக்காரங்கள் மைக்கை நீட்ட , சிரிப்பு மாறாமல் அதை தவிர்த்துக் கொண்டு போனார் கிரேக். 

1982 ஆடி மாதம்

“ ரேடியோவைக் குறையன்” எண்டு அம்மா பேச, “ நூலும் இல்லை வாலும் இல்லை வானில் பட்டம் விடுவேனா“ எண்ட வரியோட ரேடியோவை நிப்பாட்டீட்டு வந்தன். வெளியில வந்து நிண்டால் எனது நிலைமையை நெச்சுத் தான் ராஜேந்தர் பாடினாரோ எண்டு இருந்திச்சுது. 

ஊரில ஆர் வீடு கட்டினாலும் காலமை ஓடிப்போய் “அண்ணை bag ஐப் பாத்து வெட்டுங்கோ நூலை எடுத்து வைச்சுத் தாங்கோ” எண்டு கொஞ்சம் கொஞ்சமா சீமெந்து பாக் நூலைச்சேத்து கட்டிக்கட்டி நூலைப் பந்தாக்கி தடியில சுத்தீட்டு பட்டத்துக்கு வழி தெரியாம அம்மாட்டைக்கேக்க , “ எடுக்கிற marks க்கு இது தான் குறை எண்ட பதில் “ அந்த வருசப் பட்டம் விடிற ஆசையை நூல்ப்பந்தோட போக வைச்சுது. அம்மாவைப் பொறுத்த மட்டில் படித்துப் பெற்றாலே பட்டம் மற்றதெல்லாம் வெறும்  வட்டம். அடுத்த ஆவணீல திருப்பியும் விண் கூவிக் கேக்க அதே ஆசை திரும்பி வந்திச்சுது. சரி இந்தமுறை எப்பிடியும் கட்டுவம் எண்டா எப்பிடி எண்டு தெரியேல்லை. கிரிக்கட் , கிளிபூர் , பிள்ளையார் பேணி எண்டு எல்லாம் விளையாடின ஒழுங்கையில பட்டம் மட்டும் ஏனோ விடிறதில்லை. 

ஈக்கிலை எடுத்து வளைச்சுக்கட்டினா மீன் பட்டம் எண்டு ஆரோ சொன்னதைக்கேட்டு நானும் கட்டீட்டு ,ஒட்டிறதுக்கு பழைய பேப்பரை் எடுத்து வெட்டி சுடுதண்ணி விட்டுக் கிண்டின கோதம்பமாப் பசையால ஒட்டிக்கொண்டு போனா அதுக்கு முச்சை கட்டிற எப்பிடியெண்டு தெரியேல்லை. சொத்தியாக்கட்டின முச்சையில பட்டம் ஏறாமல் சும்மா சுத்திக்கொண்டு மட்டும் இருந்திச்சுது. 

அடுத்த வருசம்  அம்மாவுக்கு ஜஸ் வைச்சு ஒரு மாதிரி கடையில வாங்கின பட்டத்துக்கு ஏற்கனவே இருந்த முச்சையில நூலைக்கட்டி, குஞ்சம் கட்டி பழைய சீலையைக் கிழிச்சு வாலும் கட்டீட்டு பறக்க விடுவம் எண்டா தூக்கிப்பிடிச்சு காத்தில ஏத்தி விட ஒருத்தரும் வரேல்லை. கிளிபூர் எண்டால் குடும்பமாய் வாறவங்கள் பட்டம் விடுவம் எண்டு கேக்க பதுங்கினாங்கள். நிலத்தில பட்டத்தை வைச்சிட்டு பறக்கும் எண்ட நம்பிக்கையில திரும்பிப் பாக்காம ஓட பட்டமும் நிலத்தோடயே வந்திச்சுது.  அடுத்த முறை உதவிக்கு ஒருத்தனைக் கூப்பிட்டு உயத்திப்பிடிக்க விட்டிட்டு திருப்பியும் ஓட, ஏற முதலே பட்டம் கிழுவை மரத்தில சிக்கிச்சுது. மரத்தில ஏறி கிழியாம எடுத்து திருப்பிப் பறக்க விட பட்டம் மரத்துக்கு மரம் சிக்கிச்சிதறி ரோட்டால போற பிச்சை எடுக்கிற ஆச்சீன்டை உடுப்புப் போல கிழிஞ்சு தொங்கி வந்திச்சுது. அப்ப தான் விளங்கிச்சுது ஒழுங்கைக்கு  ரெண்டு பக்கமும் வேலிக்கு நட்ட மரம் இருக்கும் வரை பட்டம் விடேலாது எண்டு. 

பட்டக்கனவு பகற்கனவு ஆக விடாமல் அடுத்த கிழமை canteen க்கு வைச்சிருந்த கைக்காசை போட்டு ஓட்டுக்கு மேல ஏறி நிண்டு பட்டம் விட எழும்பின பட்டம் காத்தில இழுபட்டு கரண்ட் வயரில சிக்க எனது முதல் degree ( பட்டம்) கிடைக்காமலே போனது. அடுத்த கிழமை பள்ளிக்கூடத்துக்குப் போனால் கைவேலை வகுப்பில வெசாக்கூடு கட்டு எண்டாங்கள் . பச்சை ஓலையின்டை ஈக்கிலைச் சீவி வெட்டி சதுரமாயக்கட்டி அதைக் கூடாக்க செய்த முயற்சி பட்டம் போல சொத்தியாய் வர விளங்கிச்சுது “ இது புளிக்கிற பழம் எண்டு” . வீட்டை வந்து படுத்தால் எங்கேயோ வயல் வெளியில ஏத்தி விட்ட பட்டம் இரவிரவாய் விண் கூவிறது கேட்டுக்கொண்டே இருந்திச்சுது. 

“ பட்டம் பறக்குது பட்டம் பறக்குது பாலா ஓடி வா “ எண்டு பிள்ளை படிக்கிற பாடம் மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. பள்ளிக்கூடத்தில வெசாக் கூடு கட்டு எண்டு கைவேலைப் பாடத்தில சொன்னவங்கள் பட்டம் கட்டு எண்டு ஏனோ சொல்லவோ சொல்லித்தரவோ இல்லை இண்டைக்கும். 

2021 தை 14

அண்ணா இந்தமுறையும் நாங்கள் தான் sponsor எண்டு சொன்ன செந்தாவின் குரலில , ஊரின் பற்றும், திறமையின் இறுமாப்பும் தெரிய இந்தமுறை போறது எண்டு முடிவெடுத்தன். 

வல்வெட்டித்துறைக்காரங்கள் எண்டால் எல்லாத்திலேம் விசேசம் தான். பாசக்கார கோபக்காரங்கள். கடலில மட்டும் இல்லை காத்திலேம் கப்பல் விடுவாங்கள். காரில இருந்து பிளேன் வரை விதம் விதமா செய்வாங்கள். செய்யிறது மட்டுமில்லை உலகத்தையும் திரும்பிப் பாக்க வைப்பாங்கள்.  ஊரெல்லாம் ஆடி ஆவணீல பட்டம் விட இவங்கள் மட்டும் வாடைக்காத்தில மார்கழி தையில பட்டம் விடுவாங்கள். 

எங்கடை ஊரில, பட்டம் கட்டிறவனுக்கு முச்சை கட்டத் தெரியாது. முச்சை கட்டிறவனுக்கு விண் கட்டத் தெரியது. எல்லாம் கட்டினவனுக்கு ஏத்தத் தெரியாது. இவ்வளவத்தையும் செய்து ஏத்தீட்டு ஏத்தின பட்டத்தை இறக்கி திருப்பிக் கொண்டாறவன் ஒருத்தரும் இல்லை .  இவங்கள் பரம்பரையா கடத்தினதில கனக்க இருக்கு அதிலேம் பட்டக்கலை முக்கியமானது. அது இவங்களுக்கு மாத்திரம் கை வந்த கலை. 

ஈக்கிலை வளைக்கவே நாங்கள் கஸ்டப்பட மியான்மார் பக்கத்து மூங்கில் வீடுகள் உடைஞ்சு கடலில மிதந்து வாறதை எடுத்து சீவி வெட்டி பட்டம் செய்யிறது லேசில்லை . நாங்கள் ஒரு பட்டத்துக்கு முக்கேக்க இவங்கள் ஐஞ்சு பட்டம் ஒண்டா ஏத்தி அதில ஒண்டுக்கு வயரையும் சேத்துக் கட்டி ஏத்தி இரவில light ஐ எரிய விடுவாங்கள். அது என்னத்துக்கும் சமிக்கையோ தெரியாது. ஏத்தின பட்டத்தை காத்தோட விடாமல் கிட்டக்கிட்ட நிக்கிற ரெண்டு பனைக்கு குறுக்கால தடிகட்டி ஏத்திற பட்டத்தை கரைவலை மாதிரி ஐஞ்சாறு பேர் சேந்து இறக்குவாங்கள். பட்டத்துக்கு விதம் விதமாச் சத்தம் போடிற நாண் கட்டுவாங்கள். உரபாக், ரிபன் துண்டு, parcel கட்டி வாற மஞ்சள் tape எண்டு கன சாமாங்கள் பயன்படுத்துவாங்கள். எண்டாலும் நாண் கட்டிறதுக்கெண்டு பனையின்டை வடலித்தண்டு தான் திறம். கூடலா சேந்து நிக்கிற வடலியின்டை தண்டை வெட்டி சீவிக் காய வைச்சு, பிறகு  குதிக்காலால அமத்தி வைச்சுக்கொண்டு கையால இழுத்து இழுத்து , கத்தியால சீவிக் கட்டிற நாண்மாதிரி எந்த நாணும் வராது. 

தனித்தனிய பட்டம் ஏத்தினவங்கள் தொண்ணூறுகளில தான் இதை திருவிழாவா மாத்தினாங்கள். இடம்பெயர்வோட நிண்டிருந்த பட்டத் திருவிழா திருப்பியும் 2010 இல தொடங்கிச்சுது. வாலில்லாமல் கட்டிற பெட்டிப் பட்டம் தான் 3D பட்டத்துக்கு முன்னோடி. மூண்டு பெட்டியைக்கட்டி நடுப்பெட்டிக்கு மட்டும் பேப்பர் ஒட்டாம விட நடுவால போற காத்து பட்டத்தை balance பண்ணும் எண்டு நிறுவப்படாத physics விதியை  பயன்படுத்துவாங்கள். எட்டு வருசத்துக்கு முதல் விட்ட பொங்கல் பானைப்பட்டம் பரிசபெற, 3D பட்டம் போட்டிக்கு வரத்  தொடங்கிச்சுது. 

ஈக்கில் , மூங்கில் , பிரம்பு எல்லாம் சேத்து தங்கூசி நூலால கட்டி , கட்டேக்கயே எங்க காத்துக்கு ஓட்டை விடுறது எங்க உச்சிக்கு நூல் வைக்கிறது எண்டு யோசிச்சுக் கட்டி ஒருத்தருக்கும் காட்டாம ஒளிச்சு வைச்சு தைப்பொங்கலண்டு பின்னேரம் ஐஞ்சு பேரா தூக்கிக்கொண்டு போய் நூலைக்கட்டி ஏத்த judge மார் வந்து பரிசு குடுப்பினம். 

ஒருக்கா ஏத்தின பட்டத்தின்டை நூலை கைவிட மறந்த ஒருத்தர் பட்டத்தோட மேல எழும்ப , கண்டவன்  கையிலையும் இருக்கிற கமராபோனில ஆரோ ஒருத்தன் அதைப் படம் எடுத்துப் போட்டான். ஊரில் facebook இல நூறு likes கூட வரேல்லை , “ பட்டத்துடன் பறந்த வாலிபர்” எண்டு இந்தியாவின்டை பொலிமரும்,  இலங்கையின்டை தெரணவும் தலைப்புச்செய்தியாக்க ஒருத்தன் overnight இல ஒபாமா ஆனான். 

“ சீ நான் பறந்த காலத்திலை இப்பிடி போன் இல்லை இருந்திருந்தா நானும் நியூசில வந்திருப்பன்“  எண்ட சலிப்பு ஊரில
கனபேரின்டை வாயால வரத்தான் தெரிஞ்சுது இது முதலாம் தரம் இல்லை எண்டு. எண்டாலும் பறந்தவன் , பறக்கப் பண்ணினவன் பிறந்த ஊரால கிலி கொண்ட பலரில் ஓவராப் பயந்தது ஒஸ்ரேலியா. அடிக்கிற காத்து திசையில இருக்கிறதாலேம், இன்னும் அடிக்கடி வள்ளங்களில எங்கடை ஆக்கள் போறதாலேம் இன்னும் பயந்து கொண்டுதான் இருக்குது. 

எல்லாத்தையும் கடத்தக்கூடிய  இவங்கள் ஆக்களை இப்பிடியும் கடத்துவாங்கள் எண்ட intelligent report ஐ நம்பி இண்டைக்கும் ரேடியோவிலேம் TV யிலேம் “ ஆட்கடத்தற்காரரை நம்பி ஏமாற வேண்டாம் , அவுஸ்திரேலியாவுக்கு விசா இல்லாமல் வர முடியாது “ எண்டு விளம்பரம் இன்னும் போகுது.

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

டொக்ரர் பட்டம் விட்ட காலங்களை ஞாபகப்படுத்தி உள்ளார். நகைச்சுவை உணர்வு மிக்கவர் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படடம்   கடட கஷ்டப்படடவர், அதை விட பெறுமதியான உயிர்காக்கும்   டாகடர் படடத்தை எடுத்திட்டார். முயற்சி திருவினையாக்கும்.  
 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.