-
Tell a friend
-
Topics
-
0
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 14 முதல் முழு பொது முடக்கம் - 15 நாட்களுக்கு 144 தடை 13 ஏப்ரல் 2021 பட மூலாதாரம், UDDHAV THACKERAY மகாராஷ்டிராவில் கடுமையாக உயர்ந்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் முழு பொது முடக்கத்தை அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. இது தொடர்பாக தமது சமூக ஊடக பக்கங்கள் வாயிலாக மாநில மக்களிடையே பேசிய உத்தவ் தாக்கரே, "மாநிலத்தில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது," என்று தெரிவித்தார். "தற்போது மாநிலத்தில் 523 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. 4,000 கோவிட் மருத்துவ நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 3.5 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தில் தினமும் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் அன்றாட ஆக்சிஜன் பயன்பாடு 850 முதல் 900 மெட்ரிக் டன் வரை உள்ளது. எனவே, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வரவழைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்." "கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை என்பதால் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது," என்று உத்தவ் தாக்கரே பேசினார். மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் அதன் போக்குவரத்தை சமாளிக்க ராணுவத்தின் உதவியை கோரியிருக்கிறார் முதல்வர் உத்தவ் தாக்கரே. புதிய கட்டுப்பாடுகள் என்ன? மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14 முதல் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். அதவும் அந்த சேவைகள் காலை 7 முதல் இரவு 8 மணிவரை மட்டுமே இயக்கப்படும். உணவகங்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளில் தங்களுடைய உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும். அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய ஊக்குவிக்க வேண்டும். உள்ளூர் சூழ்நிலைகளைப் பொறுத்து, ஓட்டுநர்கள், பராமரிப்பாளர்கள், வீட்டுப் பணியில் உள்ளவர்களை அத்தியாவசிய சேவை பட்டியலில் கொண்டு வருவது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 14 முதல் 15 நாட்களுக்கு அமலில் இருக்கும். உச்சம் தொடும் கொரோனா மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் எந்த நேரமும் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் எனும் அச்சத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப மும்பையின் லோக்மான்யா திலக் ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க வேகமாக சென்றுகொண்டிருக்கிறார்கள். உள்ளூரில் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளதால் பலரும் சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்கிறார்கள். இந்த நிலையில்தான் அம்மாநிலத்தில் முழுமையான பொது முடக்கம் அறிவிக்கப்படுவதுத தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் முடிவில் சமூக ஊடகங்கள் வாயிலாக இன்று இரவு 8.30 மணியளவில் மாநில மக்களுக்கு அவர் அரசு எடுக்கவிருக்கும் முடிவுகளை விளக்கவுள்ளார். கடந்த ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்குடன், இந்திய பிரதமர் மோதி திடீரென நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்த நிலையில், பல லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியமால் தவித்தனர். அவர்கள் நடந்தே நூறு கிலோ மீட்டர் முதல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் வரை பயணம் செய்த கதைகளும் செய்திகளில் அடிபட்டன. இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட 50% அளவு, மகாராஷ்டிரா மாநிலத்திலேயே உள்ளது. மகாராஷ்டிராவில் நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், கடந்த 10ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, முழு பொது முடக்கத்தை தவிர அரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார். இதேபோல, மாநில கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை குழுவுடனும் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலத்தில் கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அளவு, ரெம்டெசிவீர் வைரஸ் எதிர்ப்பு மருந்து கையிருப்பு நிலவரம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிலவரம், சிகிச்சை நடைமுறைகள், கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள், விதிகளை மீறுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நாக்பூரில் மருத்துவமனை சேதம் பட மூலாதாரம், JN HOSPITAL நாக்பூரின் காந்த்ரி பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவர்களின் உறவினர்கள் திடீரென்று மருத்துவமனையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையில் ஒரு நோயாளி உயிரிழந்தார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் பிரச்னை எழுப்பினர். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். பட மூலாதாரம், HOPE HOSPITAL இதேபோல ஹோப் மருத்துவமனையில் உள்ள தரை தளத்தில் கோபத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள், அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். அங்குள்ள வரவேற்பறையில் பெட்ரோலை ஊற்றி அந்த பகுதிக்கு சிலர் தீ வைத்தனர். இதனால், காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியதாயிற்று. பட மூலாதாரம், JN HOSPITAL NAGPUR ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையில் 29 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அங்கு நோயாளியின் உறவினர்கள் குற்றம்சாட்டுவது போல ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று அந்த மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரியான விஜயா மேனே கூறுகிறார். சம்பவ நாளில் 60 முதல் 70 ஆக்சிஜன்கள்வரை கையிருப்பில் இருந்தன என்று அவர் தெரிவித்தார். இதேவேளை, அமித் பரத்வாஜ், ஹுக்கும்சந்த், கிரண் போத்கே, கல்பனா காடூ, நமிதா மங்கர் உள்ளிட்ட நோயாளிகள் கொரோனா பாதிப்புக்கு பிறகு உயிரிழந்துள்ளதாகவும் அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் கோய்லா ஷிராமிக் சபா தலைவர் ஷிவ் குமார் யாதவ் தெரிவித்தார். இதற்கிடையே, கோவிட் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விதர்பா மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பொருட்படுத்தாமல் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் சிகிச்சை வழங்க முன்வரும்போது, அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய இத்தகைய செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும் என்று அந்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-56735199
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.