Jump to content

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்


Recommended Posts

புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம்

திங்கள், 31 ஆகஸ்ட் 2009 19:39 டி.அருள் எழிலன் பயனாளர் தரப்படுத்தல்: / 46

குறைந்தஅதி சிறந்த

2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வதந்திதான் என்று நாம் உத்திரவாதம் தான் கொடுக்க முடியுமா?

வன்னி மீதான போர் தீவிரப்படுத்தப்பட்டு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய அரசின் துணையோடு இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த மார்ச் மாதவாக்கில் நண்பர்கள் ஒரு மெயிலை எல்லோருக்கும் தட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். புலி எதிர்ப்பாளர்கள், சி.பி.எம் கட்சியைச் சார்ந்த தோழர்கள் இந்த மெயில்களை பெரும் கொண்டாட்டத்தோடு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனுப்பிய அந்த மெயில் அப்படியே எனக்கும் ஃபார்வேர்ட் செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் இராணுவ, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அந்த கோப்பை அப்படியே பி.டி.எப்ஃ, எம்.எம்.எஸ் பைலாக மாற்றி (இதை ஏன் சொல்கிறேன் என்றால் மெயிலைத் திறந்த உடன் அது நம் கணிப்பொறி திரையில் ஒரு மினி சினிமா மாதிரி வந்து வந்து மறையும்) அனுப்பியிருந்தார்கள். அந்த புகைப்படத் தொகுப்பு நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்.

பிரபாகரன் அவரது உறவுகளோடு அமர்ந்து உண்டு கொண்டிருப்பார். ஈழக் குழந்தைகளோ கையில் தட்டேந்தி உணவுக்காக நின்று கொண்டிருக்கும். (அதவாது பிரபாகரன் உணவருந்துகிற படம் பழையது. குழந்தை தட்டோடு நிற்பது இறுதிப் போரின் போது எடுக்கப்பட்டது) பிரபாகரன் நீச்சல் குளத்தில் அவரது மகனோடு நிற்பார். ஈழக் குழந்தைகளோ அம்மணக் குண்டிகளாய் குளத்தில் குளிக்கிறார்கள். துவாரகா பட்டம் பெறுகிற மாதிரி ஒரு படம், ஈழத்து மாணவிகளோ கையில் துப்பாக்கியோடு நிற்கிற படங்கள். இப்படியான ஒரு மெயில் பலரது மனதையும் மனக்கிலேசத்துக்கு ஆளாக்கியிருக்கக் கூடும். புலிகளின் அழிவைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் இந்த மெயிலைக் கொண்டாடியும் புலிகளைக் கொண்டாடக் கூடிய நண்பர்கள் வேதனைப்பட்டும் இது குறித்து பேசிக் கொண்டார்கள். நான் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மொபைலில் வருகிற எஸ்,எம்.எஸ்களே ஒரு கட்டுரையைத் தீர்மானிக்கும் என்றால் நாம் ஏன் இது குறித்து எழுதக் கூடாது என்றுதான் இப்போது இதை எழுதுகிறேன்.

பிரபாகரன் குளித்த நீச்சல் குளம் சென்னை பாண்டிபஜாரில் பிளாட்பார்ம் கடையில் ரூபாய் நூற்றி ஐம்பது ரூபாயில் தொடங்கிக் கிடைக்கிறது. ஆயிரம் ரூபாய் செலவு செய்கிற திராணி உங்களுக்கு இருந்தால் ஒரு மினி நீச்சல் குளத்தை நம் வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொள்ளலாம். சொந்த வீடு இல்லாதவர்கள் கள்ளத்தனமாக வீட்டு உரிமையாளர் ஊரில் இல்லாத போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் என் குழந்தைக்கு ஒரு சின்ன நீச்சல் குளம் வாங்கியிருக்கிறேன். அதாவது நமது எதிர்கருத்து நண்பர்களின் அளவுகோலின்படி நான் பிரபாகரனுக்கு நிகரான ஒரு ஆடம்பரவாதி (பிரபாகரனின் மகள் துவாரகா மாலதி படையணியில் போரிட்டு களத்தில் மடிந்த பெண் போராளி என்பது உபரியான தகவல். தவிரவும் சார்ல்ஸ் ஆண்டனி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்தவர், துவாரகா டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதெல்லாம் நமது ஊடகங்களின் கட்டுக்கதை.) சரி பிரபாகரனை ஆடம்பரவாதியாக சித்தரித்து இவர்கள் அனுப்பியது போன்ற ஒரு மெயிலையோ புகைப்படத் தொகுப்பையோ உலகின் வேறு எந்த தலைவருக்குமே உருவாக்க முடியாதா, என்ன? பிடல் காஸ்ட்ரோவுக்கோ, ஜோதிபாசுவுக்கோ, காந்திக்கோ உருவாக்கி விட முடியாதா? ஜோதிபாசு காரில் போவது போன்று ஒரு படம், ஏழைப்பாட்டாளி ஒருவர் பொட்டல்வெளியில் செருப்பில்லாமல் நடந்து போவது போன்று ஓரு படம்; அவருக்கு நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் மெத்தப்படித்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்று ஒரு படம்; ஏழைத் தொழிலாளி முறையான சிகிச்சையின்றி இறந்தது மாதிரியான ஒரு படம்; அனுப்ப முடியாதா என்ன?

போர்க்காலத்தில் இன்னும் என்னென்ன வதந்திகளை எல்லாம் இவர்கள் பரப்பினார்கள்? ‘பிரபாகரன் போர்ப் பகுதியில் இல்லை; மக்களை பலிகடவாக்கி விட்டு அவர் தூர தேசத்துக்கு தப்பி விட்டார்’’ என்றார்கள். அதுவும் பொய்யென்று ஆன பிறகு இப்போது சொல்கிறார்கள், “புலிகள் மக்களை மணல் மூட்டைகளாக்கி விட்டார்கள். மக்களைக் கொன்றது அவர்கள்தான்”. அதற்காக வாக்குமூலங்களை உருவாக்கும் முயற்சிகளில் இருக்கிறார்கள். இப்படி எத்தனையோ வதந்திகள்!! எல்லாவற்றையும் வதந்திகள் என்று விட்டு முடியுமா அல்லது புலிகள் பற்றிச் சொல்லப்படுகிற கதைகளில் ஒரு பாதி உண்மை என்று என்று எடுத்துக் கொள்வதா என்கிற தேடுதல் கூட இல்லாமல் - படுகொலை நிகழ்த்திய பௌத்த சிங்களப் பேரினவாத அரசு குறித்து மௌனம் சாதித்து விட்டு, நாம் இனப்படுகொலைக்காக பேசும்போதெல்லாம் இவர்கள் புலிப்பாசிசம் என்றும் வன்னிப் புலிகள் என்றும் இனப்படுகொலைக்காக ஒலிக்கும் குரல்களை பலவீனப்படுத்துகிறார்கள். வதந்திகள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எல்லாமே வதந்திகள் என்று ஒதுக்குவதன் மூலம் நாம் ஒதுக்கித் தள்ள நினைப்பது தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும்தான். நல்ல காலம் அதை தமிழகத்தில் யாரும் வெளியிடவில்லை. தமிழகத்தில் அது வெளியிடப்பட்டிருந்தால் புலிப் பிரச்சாரம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய பேராசிரியர் அ.மார்க்ஸ் ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் என்று ஒரு கட்டுரையை புதுவிசை இதழில் எழுதியிருந்ததையிட்டுதான் என் கருத்தை நான் பதிவு செய்ய நேர்ந்தது. எஸ்.எம்.எஸ். வதந்திகள் குறித்து எழுதியதில் இந்திய வீரர்கள் ஈழ மக்களைக் கொல்கிறார்கள்; இராணுவ மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதெல்லாம் வதந்திகள் என்று சொல்கிறார் மார்க்ஸ். உண்மையில் இதெல்லாம் வதந்திகள் மட்டும்தானா? இந்திய வீரர்கள் ஈழத் தமிழர்களைக் கொன்றதில்லையா? ஆயுதங்களும் படைகளும் அனுப்பவில்லையா? சார்க் மாநாட்டுக்கு இந்தியத் தலைவர்கள் சென்றபோது இந்திய இராணுவம் கொழும்பு நகரத்தையே தங்களின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லையா? புலிகளின் ஆயுதக் கப்பல்களை வழிமறித்து இந்தியக் கடற்படை தாக்கியழிக்கவில்லையா? தமிழகம் வழியாக இராணுவ டாங்கிகளும், வெடிப்பொருட்களும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்த இந்தியா அனுப்பவில்லையா? அவைகள் மதுரை செக்போஸ்டில் சிக்கி இந்திய அழுத்தம் காரணமாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படவில்லையா? ஈரோடு வழியாக சரக்கு ரயில்களில் டாங்கிகள் கொச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பு செல்லவில்லையா?

இப்படி எவ்வளவோ கேட்க முடியும். எல்லாமே வதந்திகளல்ல. எல்லாமே உண்மைகளும் அல்ல. எளிய மக்களின் உணர்ச்சிப் பெருக்கில் உண்மையும் பொய்யும் கலந்தே கதைகள் உலவுகின்றன. அதிலுள்ள ஒரு பொய்யை எடுத்து அல்லது சில பொய்களை எடுத்து பல நூறு உண்மைகளை வதந்திகள் என்று நிறுவ முயல்வது ஏன்? இப்போது வெளிவந்திருக்கும் இனப்படுகொலை ஆவணத்தையும் வதந்தி என்று கழித்துக் கட்ட நினைப்பதன் அரசியல் சிந்தனை என்ன? (தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வீடீயோ ஆதாரங்களை சென்னையில் இருக்கும் இலங்கையின் துணைத்தூதர் போலியானது (வதந்தி) என்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் புலி எதிர்ப்பின் பெயரால் இலங்கை அரசோடு சேர்ந்தியங்கும் பெரும்பலானவர்களும் இந்த வீடீயோவை அப்படியே உல்டாவாக்கி கொல்வது புலிகள் என்றும் கொல்லப்படுவது தமிழ் மக்கள் என்றும் மாற்றிப் பேசுகிறார்கள்)

மற்றபடி மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் தமிழக எழுத்தாளர்கள் குறித்த எபிசோட் ஒரு காமெடி பீஸ்தான். இந்த காமெடி பீஸை “யார் மனமும் புண்படாமல் போராடிய” கவிஞர்களின் ஒப்பாரிப் போராட்டத்தில் இருந்து நாம் கண்டு வருகிறோம். மற்றபடி ஒரு சில எழுத்தாளர்களைத் தவிர அஞ்சி நடுங்கி சந்தர்ப்பவாத அரசியலுக்குள் வாழும் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள்தான் இந்த தமிழ் எழுத்தாளர்கள் என்பதைத் தாண்டி இவர்கள் மீது என்ன கருத்துச் சொல்ல முடியும்? ஈழம் குறித்து ஆதரித்தோ எதிர்த்தோ எழுதாத சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இனப்படுகொலைகள் குறித்துப் பேசுகிற நம்மைப் பார்த்து 'படுகொலைகளைக் கொண்டாடுவதை நிறுத்துங்கள்' என்கிறார்கள்.

ஐம்பதாயிரத்துக்கும் மேலதிகமாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டு, முகாம்களில் இன்றும் கடத்திக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்காக நியாயம் கேட்டால் படுகொலைகளைக் கொண்டாடாதீர்கள் என்று நம்மை கொலைகளைக் கொண்டாடுபவர்களாக சித்தரிக்கிறார்கள். இலங்கையின் பௌத்த மரபை பாசிசம் என்றால் அது அம்பேத்கருக்கு செய்கிற துரோகம் என்று அடுத்த அஸ்திரத்தை வீசுகிறார்கள். இலங்கையிலும், பர்மாவிலும் கடைபிடிக்கப்படுகிற பௌத்த தேரவாத மரபு பௌத்தத்தின் இறுக்கமான பாசிசத் தூய்மைத் தன்மை கொண்டது என்று நமது பௌத்த நண்பர்கள் சொல்கிறார்கள். இது குறித்து தனியே எழுத விரும்புவதால் இதில் இத்தோடு விடுவோம்.

பரவிக்கிடக்கும் சமணக்காட்டை அழிக்க எட்டாயிரம் சமணர்களை உயிரோடு கழுவேற்றினார்கள் சைவர்கள் அல்லது பார்ப்பனர்கள். வரலாறு அதை பதிவு செய்திருக்கிறது. பதிவு செய்து நியாயம் கேட்டவன் அந்த எட்டாயிரம் படுகொலைகளை கொண்டாடவா செய்தான் அல்லது அம்பேத்கர்தான் இனப்படுகொலை செய்யச் சொன்னாரா? பாசிசத்தை எவன் செய்தால் என்ன அது உலகு தழுவிய இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கிறிஸ்தவ பாசிசமாக இருந்தால் என்ன? பார்ப்பன இந்து மத வெறிப்பாசிசமாக இருந்தால் என்ன? தலிபான்களின் அடிப்படைவாத பாசிசமாக இருந்தால் என்ன? தேரவாத பௌத்த பாசிசமாக இருந்தால் என்ன? பாசிசத்தை அதன் பேரில் அழைத்து விட்டுப் போக வேண்டியதுதனே?

சுசீந்திரன், ஷோபாசக்தி, ஆதவன் தீட்சண்யா, சுகன் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சின் இந்தக் கட்டுரையும் இங்குள்ள புலி ஆதரவாளர்களோடு ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் ஒன்றாக இணைத்து எல்லோருக்கும் ஒரே புலி முத்திரை குத்தி முடக்கும் கட்டுரைதான். இங்குள்ள புலிஆதரவாளர்களைச் சாடுகிற நோக்கில் போகிற போக்கில் அகிலன் கதிர்காமரை இடதுசாரி பாரம்பரியம் உள்ளவராக சித்தரிக்கிறார். சுசீந்திரன், சுகன், ஷோபாசக்தியை ‘புலிகளை விமர்சிக்கிறவர்கள்’ என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். நான் சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கி விட்டதாக எழுதியதாக பதிவு செய்கிறார். நாகார்ஜூனனும், வளர்மதியும் புலிகளை ஆதரித்தார்களோ இல்லையோ நான் புலிகளை ஆதரித்தேன். ஆதரித்து விட்டு இன்றைக்கு இல்லை அய்யய்யோ எனக்குத் தெரியாதே என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகியிருக்கிறான். எனக்கு அந்தத் தேவைகள் இல்லை. சகோதரப் படுகொலைகள், ஜனநாயக மறுப்பு, ஒழுக்கக் கொலைகள், அரசியல் அற்ற தன்மை என்று புலிகள் செய்த எல்லா தவறுகள் மீதும் விமர்சனம் கொண்டே நான் ஆதரித்து வந்திருக்கிறேன். மற்றபடி மூன்று லட்சம் சிவிலியன்களை அவர்கள் பிணையக் கைதிகளாக்கினார்கள், மக்களை மணல் மூடைகளாக்கினார்கள் என்பதெல்லாம் எஸ்.,எம்.எஸ் வதந்திகளைப் போல பாதி வதந்திகள்தான். இது குறித்து வாக்குமூலம் என்கிற போர்க்கால வாக்குமூலங்களை பதிவு செய்து நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது வரும் போது ஈழத்தில் என்ன நடந்தது என்பது வெளிப்படும் என்பதால் அது குறித்தும் பேசுவதைத் தவிர்க்கிறேன்.

மற்றபடி இலங்கை அரசிடம் பணம் வாங்கியது தொடர்பாக நான் கூசாமல் சொன்ன குற்றச்சாட்டு குறித்து,

அகிலன் கதிர்காமரை இடது சாரி பாரம்பரியம் உள்ளவராக பேரா.அ.மார்க்சுக்குத் தெரிகிறது. எனக்குத் தெரிந்து சந்தர்ப்பவாத அரசியல் பாரம்பரியத்தில் இருந்து வந்த அகிலன் கதிர்காமர் இன்று ஒரு என்.ஜீ.ஓ. ஆகவே அவர் மனித உரிமை சக்திகளுடன் தொடர்பில் இருப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல. சிறிலங்கா டெமாக்கரெட்டிக் பாரம் என்னும் தன்னார்வக்குழுவை கனடாவை மையமிட்டு நடத்திக் கொண்டிருக்கிறார் அகிலன் கதிர்காமர். சுகன் இலங்கை அரசிடம் பணம் வாங்கினார் என்பது ஒரு குற்றச்சாட்டு. மார்க்சுக்குத் தெரியும் என நினைக்கிறேன். போருக்குப் பிந்தைய இலங்கை அரசின் நிதி இரண்டு விஷயங்களுக்காக அதிகமாக செலவிடப்படுகிறது. ஒன்று இராணுவத்துக்கு இன்னொன்று புலத்திலும், தமிழகத்திலும் நிலவும் புலி ஆதரவை சிதைக்கும் ராஜதந்திர நடவடிக்கைக்கு. இதற்காக அவர்கள் தன்னார்வக் குழுக்களையே சார்ந்திருக்கிறார்கள். அதாவது ஒரு பக்கம் முகாம்களுக்குள் தன்னார்வக்குழுக்களை அனுமதிக்காமல் தடுத்து விட்டு இலங்கைக்கு வெளியே தன்னார்வக் குழுக்களை வைத்து ஈழம், புலி ஆதரவு, எதிர்ப்பியங்களை நசுக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறது இலங்கை அரசு.

அந்த வகையில்தான் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் ஜெர்மன் சுசீந்திரனால் ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்கு நிதி உதவி செய்தது ஒரு தன்னார்வக்குழு. இந்த தன்னார்வக் குழுவின் நிதி வாசல் இலங்கை அரசு. சுமார் அறுபது லட்சம் ரூபாய் இந்தக் கருத்தரங்கிற்காக செலவிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இருந்து இந்த கருத்தரங்கிற்கு சிலர் சென்று வந்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள். மார்க்ஸின் நண்பர்களான சுசீந்திரன், இடதுசாரிகள் என்றும் பெண்ணியவாதிகள் என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் என்னும் ராஜேஸ்பாலா, நோயல் நடேசன் போன்றோர் இலங்கை அரசின் பணத்தில் இங்கு வந்து சென்றார்கள். இந்தக் கருத்தரங்கு திருவனந்தபுரத்தில் நடந்தபோது ஷோபாசக்தி சென்னையில் இருந்தார். அவர் சென்று வந்தாரா என்பது நமக்குத் தெரியாது.

தவிரவும் இலங்கையின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் துறைதான் அகதிகள் மறுவாழ்வு, புனர்வாழ்வு போன்ற பணிகளில் சிலதைச் செய்கிறது. இந்த அமைச்சகத்திற்கு தமிழகத்திலிருந்தே 70% பொருட்கள் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்படுகின்றன. அப்படியான ஏஜென்சிகளை நடத்துகிறவர்கள் யார் என்று உங்களுக்கு (மார்க்சுக்குத்) தெரியுமா? அப்படித் தெரியாவிட்டால் (உங்கள் நண்பர்களிடம் யாரிடம் கேட்டாலும் தெரியும்) கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நான் சொல்ல வருவது இதுதான். இன்றைய தேதியில் புலி எதிர்ப்பு என்பது முதலீடில்லா வருமானம் ஈட்டக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதாயங்கள் கிடைக்கும் சூழல் இருக்கிறது. குரூப் நிதிகள், தனிநபர் நிதிகள் என தேவைக்கு ஏற்ற மாதிரி பரிமாறப்படுகிறது. உண்மையில் நீங்கள் இதை கண்டிக்க வேண்டும் என நினைத்திருந்தால் சுகன் பாடிய தேசிய கீதம் குறித்து கருத்துச் சொல்லியிருக்க வேண்டும், சுசீந்திரனின் புது விசை நேர்காணல் குறித்தும், அகிலன் கதிர்காமர் குறித்தும் உங்கள் நண்பர்களிடம் அல்ல வேறு ஆட்களிடம் விசாரித்து எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை திட்டி விட்டு அதோடு சேர்த்து எலலாவற்றையும் ஊத்தி மூடுவது நியாயம் ஆகாது. இங்குள்ள தமிழ் தேசியவாதிகளை அம்பலப்படுத்துவது சிரமமான காரியமா என்ன? நானும் எழுதியிருக்கிறேன்.

Noel Nadesan (Australia)

Dr.Rajasingham Narendran (Middle East)

Mrs. Rajeswari Balasubramaniam (U.K)

Manoranjan Selliah (Canada)

Rajaratnam Sivanathan (Australia)

இவர்கள் எல்லாம் தன்னார்வக்குழுவினர்தான். இலங்கை அரசிற்கும் புலத்தில் உள்ள தமிழர்களுக்கும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணி செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக இவர்கள் புலத்தில் ஈழம் என்கிற கருத்தை கைவிடச் சொல்கிறார்கள். இலங்கை அரசிடமோ கோடி கோடியாக நிதிகளைப் பெற்று செயல்படுகிறார்கள். இது தொடர்பாக ‘லிட்டில் எய்ட்’ என்ற நிறுவனத்தை இவர்கள் துவக்கியிருக்கிறார்கள். நண்பர்கள் முடிந்தால் Recent visit to sri lanka: summary report by tamil expats என்ற தலைப்பிலான இந்தக் கட்டுரையைப் படிக்கவும். http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=59396. இவர்கள் எந்த அளவுக்கு புலிகளை விட கீழ்த்தரமானவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோவையும் முடிந்தால் பாருங்கள். http://littleaid.org.uk/little-aid-ambepusse-project-latest-video. எண்ணிப் பார்க்க முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ள மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு. அந்த முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறார்களாம் இந்த தன்னார்வக்குழுவினர். துள்ளாத மனமும் துள்ளும் என்னும் இயக்குநர் எழில் அவர்களின் திரைப்படத்தில் உள்ள ‘‘தொடு தொடு எனவே வானவில் என்னை’’ என்கிற பாடலைத்தான் அந்த சிறுவ சிறுமிகள் பாடுகிறார்கள் என்பதை நாம் சிரமப்பட்டே புரிந்து கொள்ள முடியும். காரணம் துரோகக் குழுக்களுள் உள்ள சில இளைஞர்களை வைத்து அந்த சிறுவர்களை மனரீதியாக அச்சுறுத்தி இந்தப் பாடல் பாடப்படுவதை நீங்கள் சூழ நிலவும் இராணுவச் சீருடைகளைக் கொண்டே புரிந்து கொள்ள முடியும். தற்போது, கைதட்டச் சொன்னால் கைதட்டும் பிணங்கள்தான் வன்னி மக்கள். பாடச் சொன்னால் பாடுகிறார்கள். இது சலிப்பைப் போக்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்கள் இந்த தன்னார்வக்குழுக்கள்.

இந்த தன்னார்வக்குழுக்கள் முகாம்களுக்குச் சென்று வந்து ‘‘மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பது நியாயமானதே’’ என்று கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இதோ அந்தக் கேவலத்தை நீங்களும் கொஞ்சம் படியுங்கள். http://inioru.com/?p=4837&cpage=1#comment-2454

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு. இந்த மன வேறுபாட்டை ஊட்டி வளர்த்தது இலங்கை அரசு. புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்களை மீண்டும் அவர்களின் இடங்களில் வாழ்வதற்கான உரிமையை இலங்கை இராணுவம் மறுத்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அந்தப் பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளேயே இருக்கிறது. அது போல கிழக்கு தன்னார்வக்குழுக்களின் இறுகிய பிடிக்குள் சிக்கியிருக்கிறது. எதிர்ப்பியக்கங்களற்ற இஸ்லாமிய சந்தர்ப்பவாத தலைமை இலங்கை அரசோடு அதிகாரத்தைப் பகிர்ந்திருக்கிறது. புலிகளின் தலைமை அழிக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமடைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்களின் குரல் வலுப்பெறுகிற சூழலை இலங்கையில் இன்று நாம் காண்கிறோம். இது நல்ல விஷயம்தான். ஆனால் இஸ்லாமியத் தலைமைகள் இலங்கை அரசோடு சேர்ந்தியங்குவதன் மூலம் கிழக்கு முஸ்லீம்களுக்கு எதைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்கள். இப்போதே கிழக்கில் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை கருணாவை வைத்து துவங்கிவிட்டது சிங்கள அரசு. தமிழ் மக்களோடு சேர்ந்து நிற்க வேண்டிய இஸ்லாமியத் தலைவர்களும், சில சிந்தனையாளர்களும் மிகவும் நாசூக்காக ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களர்களுக்கு அடுத்தபடியான பெரும்பான்மை இனம் முஸ்லீம்கள்தான் என்று.

யுத்தம், இடப்பெயர்வு, படுகொலைகள் என தமிழினத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் சூழலில் இஸ்லாமியர்கள் தமிழர்களை விட பெரும்பான்மையாகி விட்டார்கள் என்பதுதான் இவர்கள் தற்காலத்தில் வைக்கும் சிந்தனை. காஷ்மீரிலும், மத்தியக் கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் வதைபடும் இஸ்லாமிய மக்கள் மீது ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் தனித்த அக்கறையும் ஆதரவும் எனக்கு உண்டு. இஸ்லாமிய மக்களின் உள்ளூர் எதிரியான இந்துப் பாசிசத்தை எதிர்ப்பதோடு உலக அளவிலான கிறிஸ்தவ பயங்கரவாதத்தையும் நான் எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறேன். மக்கள் படுகொலைகளை ஒரு நல்வாய்ப்பாக யார் பயன்படுத்தினாலும் அது தவறு. மரபுகளும், பெரும்பான்மை வாதங்களும் தகர்க்கப்பட வேண்டும். அது இந்து, இஸ்லாமிய, தமிழன் என எதன் பெயரில் வந்தாலும் வன்முறையே. அந்த வகையில் கிழக்கு முஸ்லீம்களின் பிரச்சனைகள் பிரத்தியேகமாக அணுகப்பட வேண்டியவை. சைவத்தாலும், வைணத்தாலும் கறைபட்ட தமிழ் தேசியம் இன்னும் மீச்சம் மீதியிருப்பதில் ஏதேனும் செய்ய விரும்பினால் சிறுபான்மை இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கிய அரசியல் செயல்படாகாவே அது இருக்க வேண்டும். மற்றபடி தன்னார்வக்குழுக்களில் பணி செய்யும் நண்பர்கள் தங்களின் நிதி அரசியலுக்காக வடக்கு, கிழக்கு முரணை கூர்மையடைய வைப்பது வேதனையளிக்கிறது.

பொதுவாக நியாயமான விமர்சனங்களை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதினால் உடனே இவன் மார்க்சை துரோகி என்கிறான். அவர் என்.ஜி.ஓக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு பேசுவதாக எழுதுகிறான் என இதையும் திரித்து கதை கட்டாதீர்கள். என்னளவில் மார்க்சின் மனித உரிமைச் செயல்படுகளின் மீது நான் மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறேன். புலிகளை எதிர்ப்பதாலேயே ஒருவர் ஜனநாயகவாதியாகி ஆகிவிட முடியாது. ஜனநாயகம் என்பது மக்களின் உண்மையான விடுதலை பற்றிப் பேசுவதுதான் என்கிற அளவில்தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். ஏனென்றால் இவர்கள் “வெறுப்புக்கு எதிராகப் பேச” இந்து ‘ராமை’ப் பயன்படுத்துவார்கள். தமிழ் தேசியவாதிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் திட்ட மார்க்சைப் பயன்படுத்துவார்கள்.

பேராசிரியர் அ.மார்க்ஸ் இங்குள்ள ஈழ ஆதரவளர்கள் குறித்த புரிதல் இல்லாமல் இக்கட்டுரையை எழுதியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகாலப் போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

அது போல ஈழம் சாத்தியமில்லை என்பதோ ஈழம் என்கிற கருத்து முடிந்து விட்டது என்பதையோ நான் நம்பவில்லை. கடந்த காலத் தவறுகளில் இருந்து புதிய இயக்கங்களை ஈழ மக்கள் கண்டடைவதன் மூலம் பேரினவாதிகளிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பதிலாக தன்னார்வக் குழுக்களை ஈழத்திற்குள் அனுமதித்தால் இப்போதல்ல எப்போதுமே ஈழத் தமிழர்கள் எழுந்திருக்க முடியாது. அவர்கள் எழ வேண்டும் என்பதே என் ஆசை. ஏனென்றால் பௌத்த பாசிச இலங்கை அரசின் நிலப்பரப்பினுள் சிங்கள மக்களோடு தமிழ் மக்கள் சேர்ந்துவாழும் சாத்தியங்கள் இல்லை. சுதந்திரத் தமிழீழம் ஒன்றே தீர்வு அல்லது பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை என்போம் அதை.

கடைசியாக,

கீற்று குறித்த கட்டுரையில் மார்க்ஸ் இப்படியான ஒரு வாக்கியத்தை புது விசை கட்டுரையில் பயன்படுத்துகிறார். “இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம்’’ என்கிறார். அகிலன் கதிர்காமர் மாதிரியான இடது சாரி பாரம்பரியம் அன்றி, கருவாட்டுக்கூடை தலையில் தூக்கிச் சுமந்து முதல் தலைமுறையாக வெளியில் வந்திருக்கும் முதல் தலைமுறை எங்களுடையது. உண்மையிலேயே மரபுகளின் வன்முறை குறித்து நான் மார்க்சிடம் இருந்தே கற்றுக் கொண்டேன். இந்த வரிகள் அவரிடமிருந்து வந்ததாக நான் நினைக்கவில்லை.

- டி.அருள் எழிலன் ( darulezhilan@gmail.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

Link to comment
Share on other sites

அ.மார்க்ஸ் எனும் கனவுலக சஞ்சாரி, மார்சிய கோட்பாடு எனும் பம்மாத்துகளூடாக முன்வைக்கும் புலியெதிர்ப்பு வியாபாரத்தனத்தை சாடிய கட்டுரையை இணைத்தமைக்கு நன்றி நாரதர். அ.மார்க்ஸ் போன்று, புலிகளின் சனநாயக மீறல்களை கண்டனம் செய்கின்றோம் என்ற பெயரில் சிங்கள பெளத்தர்களின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நியாயப்படுத்துதன் மூலம் தம்மை முன்னிலைப்படுத்தும் சிவசேகரம் போன்ற தமிழ் மக்கள் விரோதிகளையும் அப்பட்டமாக விமர்சிக்கும் கட்டுரைகள் அவசியம் எமக்கு

கிழக்கு முஸ்லீம்கள்

புலிகள் முஸ்லீம்களை துரத்தி விட்டதிலிருந்து துவங்கிறது தமிழர் இஸ்லாமியர் வேறுபாடு.

இந்த வேறுபாடின் ஆரம்பம் இதுவல்ல. இந்திய அரசு ஈ.பி.ஆர்.எல். எப் இனூடாக இந்திய கொலைப்படை இருக்கும் காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகளையும், ஆத்திரமூட்டல்களையும் செய்யத் தொடங்கியதில் இருந்து தான் இந்த வேறுபாடு முனைப்பு பெற்றது. இந்திய கொலைப் படை இருந்த காலகட்டத்தில், கிழக்கு வாழ் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வியாபார ரீதியானதும், விவாசாய நிலங்கள் சம்பந்தமாகவும் இருந்த சாதாரண வேறுபாடுகளையும் வழக்குகளையும் EPRLF வன்முறை அரசியலினூடாக பெரிதாக்கி (ஈபிஆர் எல் எவ் இதே வன்முறை அரசியலைத் தான் தமிழ் மக்கள் மீதும் செலுத்திக் கொண்டு இருந்தது), அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் தம் விவசாய நிலங்களை பயன்படுத்த முடியாத நிலை வரைக்கு கொண்டு சென்றனர். பிரேமதாசா ஆட்சிக்கு வந்தபின், இந்திய கொலைப்படை அகன்ற காலகட்டத்தில் இந்த வேறுபாட்டை லக்கி அல்கம போன்ற இராணுவ உயர்மட்ட தளபதிகளையும் புலனாய்வுப் பிரிவுகளையும் வைத்துக் கொண்டு இன்னும் ஆழப்படுத்தினார். பிரேமதாசா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் ஊர்காவல் படை அமைப்பு இந்த வேறுபாட்டை கூர்மையாக்க உருவாக்கிய ஒரு முக்கிய அமைப்பாக இருந்தது. புலிகளின் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை அரசியல், முஸ்லிம் ஊர்காவல் படையின் தமிழ் மக்கள் மீதான அட்டூழியங்களின் பின்னர் தான் முனைப்பு கொண்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகிலன் கதிர்காமர் யார் என கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.