Jump to content

கனடா


Recommended Posts

கனடாவில் ஈழத்தமிழன் எழுச்சி பெற்றான்

ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் அதிகமான சனத் தொகையுடன் வாழும் நாடு கனடாதான். நீண்ட பாரிய சாலைகளுடன் திரும்பின இடமெல்லாம் அழகு ஒளி வீசும் அந்த நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய நிலையில் வாழ்கிறார்கள் என்ற உண்மையை இக்கட்டுரை ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க முயல்கிறது.

கனடாவில் தமிழ் இளைஞரிடையே பாரிய மோதல்களும், கொலைகளும் நடைபெறுகின்றன. குடும்பங்களுக்குள் பலமான பிரிவுகள் இடம் பெறுகின்றன என்ற விவகாரத்தையே ஐரோப்பாவில் பலர் இரு தசாப்தங்களாகப் பேசி வருகிறார்கள். இந்த யானையைப் பார்த்த குருடர்களால் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவை என்பதை நேரடியாக சென்று சமூகவியல் கண்ணோட்டத்துடன் நோக்கிய போதுதான் என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது. ஐரோப்பாவில் தமிழ் மக்கள் வாழ்வதைவிட கனடாவில்தான் சிறப்பாக வாழ்கிறார்கள் என்ற உண்மையை இங்கிருந்து கனடா சென்று திரும்பும் பலர் ஏனோ பேசத் தவறியிருக்கிறார்கள் என்பதையும் அங்கு சென்ற போது உணர முடிந்தது.

கனடாவில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். எப்போதுமே பெருந்தொகையான மக்கள் இருந்தால் அதற்கு ஏற்பதாக அசம்பாவிதங்களும் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. அவை போன்ற தவறுகள் ஐரோப்பாவிலும் நடந்துதானிருக்கின்றன. ஆனால் அங்குள்ள சனத்தெகையுடன் ஒப்பிட்டால் அங்கு நடைபெறும் குற்றச் செயல்கள் சிறியவை என்பதே உண்மையாகும். வெறுமனே குற்றங்களை மட்டும் படம் பிடித்துக் காட்டுவதை விடுத்து சிறப்புக்களை முதன்மைப்படுத்திப் பேசியிருந்தால் கனடாவில் நமது மக்கள் சிகரங்களைத் தொட்டிருக்கும் உண்மையை இங்கு வாழ்வோரும் உணர்ந்திருக்க முடியும். இனி சிறப்புக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதலாவது மக்கள் வளமோடு வாழ்வதற்குரிய சூழல் ஐரோப்பாவை விட கனடாவிலேயே சிறப்பாக உள்ளது. மிகப் பிரமாண்டமான நெடுஞ்சாலைகளால் நாட்டின் போக்குவரத்து மிகவும் இலகுவாக்கப்பட்டிருக்கிறது. எரிபொருள் ஐரோப்பாவில் விற்பதைவிட அரைப்பங்கு விலையிலேயே விற்கப்படுகிறது. அதன் காரணத்தால் அங்கு விற்பனையாகும் ஒவ்வொரு பொருளும் இங்கு விற்பதைவிட அரைப்பங்கு விலையிலேயே விற்பனையாகிறது. இதனால் சிறந்ததோர் வாழ்க்கைத் தரத்தை கட்டியமைக்க அந்தநாடு நல்லதோர் அடிப்படை நிலமாக இருக்கிறது. அகதிகள், வெளிநாட்டவர் மீது துவேசத்தைக் கக்கி கேவலமான அரசியல் நடாத்தும் ஐரோப்பிய அரசியல்வாதிகளைப் போன்ற கீழ்த்தர அரசியலும் அங்கில்லை. அண்ணா சொன்னது போன்ற எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்ற உணர்வு அங்கு வாழும் நம்மவர் இதயங்களில் உள்ளது தெரிகிறது. அங்கிருந்து பார்க்கும் போது டென்மார்க்கில் நிலவும் துவேச அரசியல் அருவருப்பைத் தருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் வந்த பின்னர் ஐரோப்பாவில் பலமான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. சட்டங்களை இறுக்குகிறோமென்று இங்குள்ள அரசியல்வாதிகள் போடும் கபட வேடம் இந்த நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியின் இன்னொரு அடையாளமாக உள்ளது. ஆனால் கனடாவின் தொழிற்சாலை வீதிகளில் நடந்து செல்லும்போது பல தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆள் தேவையென்ற பலகைகள் தொங்குவதைக் காண முடிந்தது. வேலை காலி இருந்தால் ஈழத் தமிழன் உலகின் சிறந்த பணக்காரனாகத் திகழ்வான் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒன்றுக் இரண்டு வேலைகள் செய்து, ஒவ்வொரு விநாடியையும் தனது உழைப்பால் பணமாக்கிக் கொண்டிருக்கிறான் ஈழத்தமிழன் என்ற உண்மையைக் கனடாவில் காணமுடிகிறது. ஒரு காலத்தில் நெற்றி வியர்வை சிந்தப் பாடுபடுகிறான் என்று கூறப்பட்ட ஈழத் தமிழன் இன்று தாயகத்தில் அப்படி உழைக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த உழைப்பாளிகளில் பெருந் தொகையினர் இப்போது வெளிநாடு வந்துவிட்டார்கள் என்பதே உண்மை, அதைக் கனடாவில் சிறப்பாகக் காண முடிகிறது.

பெரும்பாலான மக்கள் அழகான மாளிகைகள் போன்ற வீடுகளில் ஆடம்பரமாக வாழ்கிறார்கள். தமிழருக்கான வர்த்தகங்கள் எல்லாம் யாழ்.குடாநாட்டைவிட பாரிய அளவில் கனடாவில்தான் இருக்கின்றன. திரும்பின இடங்கள் எல்லாம் தமிழர்களின் பாரிய கடைகள் காணப்படுகின்றன. இடியப்பம், தோசை, பிட்டு, இடிசம்பல், மோதகம், கொழுக்கட்டை, பயத்தம் துவையல் என்று என்ன காலைச் சாப்பாடு வேண்டுமோ அத்தனை சாப்படுகளும் கடைகளில் அதிகாலையிலேயே சுடச்சுடக் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் மறந்து போன எத்தனையோ சிற்றுண்டிகளை கனடாவில் காண முடிகிறது. அப்படியொரு தமிழீழத்தை அமெரிக்கக் கண்டத்தில் ஈழத்தமிழன் உருவாக்கியிருக்கிறான் என்பதை தமிழீழத்தில் உள்ள ஒவ்வொரு தமிழரும் எண்ணிப் பெருமைப்பட வேண்டும். கனடா வாழ் ஈழத்தமிழர் பற்றி குறைபட வந்திருக்கும் கருத்துக்கள் வக்கற்ற அறிவிலிகளின் வேலை என்பதை தமிழர் தாயகத்தில் உள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும்.

அங்குள்ள தமிழ் ஊடகங்களின் வளர்ச்சியை ஐரோப்பாவுடன் ஒப்பிட்டால் அவர்கள் முன்னணியில் நிற்பதை உணர முடியும். இங்கிருக்கும் ஊடகங்கள் சிகரங்களை தொட்டுவிட்டதாக நாம் எண்ணுவது தவறான கருத்து என்பதையே கனடா புரிய வைக்கிறது. ஈழமுரசு கனடா, உலகத்தமிழர், பரபரப்பு, ஈழநாடு கனடா, உதயன், முழக்கம், சினித்திரன், தமிழ்டைம், நம்நாடு, தேசியம், வைகறை என்று பட்டியலிட்டுக் கொண்டே போகக் கூடியளவிற்கு பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்று பெருந்தொகையாக வெளிவருகின்றன. இவற்றில் அதிகமானவை இலவச வெளியீடுகளாகவே வருவது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமல்ல மூன்று வரையான தமிழ் தொலைக்காட்சிகள், ஆறுக்கும் மேற்பட்ட வானொலிகள், நள்ளிரவு முதல் அதிகாலைச் சேவைக்கே ஒரு வானொலி இருக்கிறது. இவைகள் தமிழ் மக்களிடையே செயற்படும் அழகு, அங்கு பணியாற்றுவோரின் திறமை, அவர்கள் ஊடகங்களை நெறிப்படுத்தும் திறனையெல்லாம் அவதானித்தால் ஆச்சரியம் உண்டாகும். பூக்கள் திரைப்படத்தைத் திரையிடுவதற்காக அங்கு சென்ற போது சகல ஊடகங்களும் போட்டி பொறாமை இல்லாது ஆதரவு தந்தன. இவர்களிடம் போனால் அவர்களிடம் போகக் கூடாது, அவர்களிடம் போனால் இவர்களுக்குப் பிடிக்காது என்ற பாமரத்தனம் இல்லாமல் அனைவரும் பெருந்தன்மையுடன் ஆதரவு தந்தார்கள். அங்குள்ளோர் சிலசில குறைகளைக் கூறினாலும் ஐரோப்பிய ஊடகங்கள் அவர்களிடம் கற்க நிறைய இருக்கிறதென்பதே உண்மையாகும்.

தமிழன் வழிகாட்டி என்ற ஒரு தகவல் நூலையும், வணிகம் என்ற வழிகாட்டியையும் பார்த்த போது பெரும் ஆச்சரியம் உண்டானது. தமிழன் வழிகாட்டி என்ற நூலை வெளியிடுபருடைய முயற்சி தனிமனித உழைப்பின் சிகரம் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு பிரமாண்டமான தமிழர் தகவல் எதுவும் இதுவரை ஐரோப்பாவில் வெளியாகவில்லை. இங்கிலாந்தில் வரும் வழிகாட்டிகள் அதில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டென்மார்க் போன்ற சிறிய நாடுகளில் அப்படியொரு முயற்சி மருந்திற்குக் கூட நடைபெறவில்லை என்பது வெட்கம் தரும் உண்மையாகும்.

திரும்பிய திசையெல்லாம் ஆலயங்களின் மணியொலி கேட்கிறது. இலங்கையில் உள்ள ஆலயங்கள் அத்தனையும் அதே பெயருடன் கனடாவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஓர் உதாரணம் சமீபத்தில் கட்டப்பட்ட செல்வச்சந்நிதி முருகன் ஆலயமாகும். மேலும் தனி மனிதரும் கழகங்களும் தமது மனம்போல பாரிய கலை நிகழ்வுகளை நடாத்துகிறார்கள். அதன் மூலம் பெரும் பணத்தை உருவாக்குகிறார்கள். ஐரோப்பாவில் அப்படியொரு நிலமை இப்போது ஏறத்தாழ இல்லை என்றே கூற வேண்டும். அந்தளவிற்கு கலைகளில் ஐரோப்பா நாளும் நாளும் பின்தங்கி வருகிறது. ஆனால் கனடாவில் கலை நிகழ்வுகளின் மூலம் பாரிய நிதியை உழைத்து வருகிறார்கள் நம் தமிழர்கள் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.

கனடாவில் நடைபெறும் தமிழ் இளைஞரின் வன்முறைகளுக்கு எதிராக பல இளைஞர்கள் ஒன்றிணைந்து கலை நிகழ்வொன்றை இரு வாரங்களுக்கு முன்னர் நடாத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்வு அங்கு நிலவும் வன்முறைகளை தடுக்க கணிசமாக உதவும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இளைஞர் நடாத்தும் பொறுப்பற்ற மோதல்களுக்குப் பயந்தே பல ஐரோப்பிய நாடுகளில் கலைவிழாக்கள் குறைந்து வந்தன. ஆனால் கனடாவில் பல கலைவிழாக்கள் ஒரு சிறிய அசம்பாவிதமும் இல்லாமலே நடைபெற்றதைக் காண முடிந்தது. அங்குள்ள தமிழ் படைப்பாளிகள் அனைவருக்குமே ஏதோ ஓர் ஊடகத்தில் வாய்ப்பிருக்கும். எழுத்துத் தடை, வானொலித் தடை, தொலைக்காட்சித்தடை போன்ற செப்படி வித்தைகளுக்கு அங்கு இடமில்லை. அனைவருக்கும் வாழ அங்கு ஏதோ ஒரு தளம் இருக்கிறது.

பெருந்தொகையான இளைஞர்களும் கலைஞர்களும் திரைப்படத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சிகரங்களை தொடாவிட்டாலும் கடுமையாக முயற்சித்து வருகிறார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு படப்பிடிப்பிற்காக பறந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத் திரைப்படங்களின் விலையைக் கூட கனடாவில் உள்ள ஈழத் தமிழரின் சந்தையே பெருமளவு தீர்மானிக்கிறது. கனேடிய அரசியலிலும் இம்முறை ஈழத் தமிழர் மிகப்பெரிய தாக்கமுள்ள சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட ஒரு நாடாக இருந்தபோதும் அங்கு விடுதலை நேசத்துடனான பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்ற ஆண்டு ஒரு சிறிய அறிவித்தலோடு நடைபெற்ற மாவீரர் நாளுக்கு கூடிய மக்கள் தொகையும், ஆதரவும் இதற்கொரு உதாரணமாகும். இப்படி கனடாவில் உள்ள நமது ஈழத் தமிழரின் சிறப்புக்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். இப்படி நலங்களெல்லாம் இருக்க நாம் ஏன் குறைகளை மட்டுமே பேசினோம் என்பதுதான் முக்கிய கேள்வியாகும். இது போன்ற தவறுகளை இனிமேலும் செய்யக் கூடாது என்பதற்காகவே ஐரோப்பிய மண்ணில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

இருந்தபோதும் நலங்களையே கூறிச் செல்வதானால் அங்கு குறையே இல்லையா என்ற கேள்வியும் இயல்பானதுதான். எந்தவொரு சமுதாயத்திலும் அதனுடைய வாழ்வியல் நிலைகளுக்கு அமைவாக பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். கனடாவில் இருக்கும் மக்களில் பலர் ஐரோப்பாவில் சிறந்த வாழ்வு நிலவுவதாகக் கருதுகிறார்கள். அதிகமான மக்களும், கலைஞரும், அரசியல் முரண்பாட்டாளரும் குவிந்திருப்பதால் உண்டாகும் சிக்கல்களும் அங்கு இருக்கத்தான் செய்கின்றன. தமக்கு ஊடகங்கள் போதிய வாய்ப்பளிக்கவில்லை என்று அங்குள்ள கலைஞர்களில் சிலர் கூறுகிறார்கள். மறுபுறம் தரம் இருந்தால் கண்டிப்பாக வாய்ப்புண்டு என்கிறார்கள் ஊடகக்காரர். இவ்விரு வாதங்களும் கலை உலகில் தீர்க்க முடியாத சங்கதிகள் என்பதை முதலில் எல்லோரும் புரிய வேண்டும்.

ஸ்கன்டிநேவியன் நாடுகளில் உள்ளதைப் போல அதிகமான இலவச சமூக நலச் சேவைகள் கனடாவில் இல்லை என்று இன்னும் சிலர் கூறுகிறார்கள். அது அந்தந்த நாட்டு வரிவிதிப்புடன் தொடர்புடைய விவகாரம். குறைந்த வரியுடன் அதிக சேவைகளை வழங்குவது கடினமாகும். இப்படி அங்குள்ள குறைகளை மறைக்க பல உப விளக்கங்களைத் தர முடியும். காலுக்கு செருப்பில்லையே என்று அழுத ஒருவன் காலே இல்லாதவனைக் கண்டதும் தனது அழுகையை நிறுத்திக் கொண்டானாம். இந்தப் பழமொழியை கனடாவில் உள்ள அதிருப்தியாளர் ஒரு தடவை உச்சரித்துப் பார்த்து திருந்திக் கொள்வது அவசியம். கடும் உழைப்பாளிகளாகவும், கனடாவில் இருந்து நெடுஞ்சாலைகளில் பாரவண்டிகளை இலாவகமாக ஓடிச்செல்லும் சாரதிகளாகவும், படிப்பாளிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், அறிஞராகவும் இருக்கும் நமது தமிழ் மக்கள் கனடாவில் வாழ்ந்து புலம் பெயர் வாழ்வின் வெற்றியைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

ஐரோப்பாவிலும் இப்போது எல்லைகள் இல்லாது போய் பாகாசுர ஐரோப்பிய ஒன்றியம் உருவாகிவிட்டது. இதைப் பயன்படுத்தி இங்குள்ள மக்களும் ஒன்றிணைந்து மென்மேலும் மேன்மை பெற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியமும், கனடாவும் இணைந்து இமாலய சாதனைகளைப் படைக்க வழியிருக்கிறது. அப்படிச் செய்தால் நாம் உலகளாவிய சக்தி மிக்க இனமாக மாறுவோம், அப்படி மாறினால் நமது தாயக விடிவிற்கு அதுவே திறவு கோலாக அமையும். இதைச் சிறிது ஆழமாகச் சிந்தித்தால் ஈழத் தமிழினத்தின் விடிவின் பாரிய திறவுகோல் ஒன்று மேலைநாடுகளிலேயே புதைந்து கிடக்கும் உண்மையை நாமும் கண்டு கொள்ளலாம். நமது மக்களிடம் கண்ட நலங்களை வஞ்சகமாக ஒளித்து வைத்து, குறைகளையே பேசும் களிம்பேறிய லோட்டா போன்ற தீய மனநோய்க் கலாச்சாரத்தை அழிப்போம். ஈழத் தமிழருக்கு இப்படியான வாய்ப்புக்களை தந்த கனடா அரசை இரு கரம் கூப்பி வணங்கி வாழ்த்துவோம்.

நன்றி அலைகள்

கி.செ.துரை

Link to comment
Share on other sites

சின்னக்குட்டி திங்கட்கிழமை அறிவிப்பு வருமென அந்தச் செய்தியல் போட்டிருக்கு. திங்கட்கிழமைவரை பொறுத்திருப்போம். சிலவேளைகளில் அந்தச் செய்தியில் சொல்லப்பட்டவாறு கூட அறிவிக்கப்படலாம்.

காரணம். அமைச்சரவையில் உள்ள ஒரு சில கடும்போக்காளர்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கிறதெண்டு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.