Jump to content

பழைய கள்ளு, அரைத்த மாவு, உடைக்கப்படவேண்டிய மொந்தை


Recommended Posts

உலகளாவிய ரீதியில் தற்போது தமிழர்கள் தங்களிற்குள் ஈழம் தொடர்பில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டவண்ணம் உள்ளனர். பார்வைக்குப் பல கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள் நடைபெறுவதாகப் படுகிறது. எனினும், சற்று ஆராய்கையில், துரதிஸ்ரவசமாக அரைத்த மாவே அரைக்கப்படுகின்றது. புளித்த கள்ளே மொந்தை மாறிக்கொண்டிருக்கின்றது.

எழுபதுகளிற்கும் இன்றைக்கும் இடையிலான மிகப்பெரும் வித்தியாசம், எழுபதுகளில் தமிழர்கள் பெரும்பாலும் ஊர்ச்சட்டம்பிகளாக மட்டுமே இருந்தோம். சான்றிதழ்களை அடுக்கி வைத்திருப்பினும், பிறதேசம் சென்று வந்திருப்பினும் சிந்தனையில் ஊர்ச்சட்டம்பியாகவே இருந்தோம். இன்று இரு தசாப்தங்கள் ஒரு மில்லியன் தமிழர் புலம்பெயர்ந்து வாழ்ந்து விட்ட அனுபவத்தோடு இருக்கின்றோம். கப்பலில் அல்லது மத்திய கிழக்கில் வேலைக்குச் சென்று திரும்பிய முன்னையவர்களிற்கும், புலத்தை வீடாக்கி வாழ்ந்தவர்களிற்கும் இடையில் சிந்தனையில் வித்தியாசம் தவிர்க்கமுடியாதது. இன்று இந்த வித்தியாசத்தோடு இருக்கின்றோம்.

எமது விடுதலை முன்னெடுப்புக்கள் தோற்றுப்போய் இன்று நாங்கள் இருக்கின்ற இந்நிலையில் வெற்றிச் சூத்திரங்களிற்கான தேடல் நிகழ்வது எதிர்பார்க்கப்படக்கூடியது. ஆனால் ஏனோ அத்தகைய தேடல் ஏதும் எங்களிற்குள் காணப்படவில்லை. இதை ஒட்டுமொத்த இனத்தின் சிந்தனை வறட்சியென்றோ, மக்குத்தனம் என்றோ கூறிவிடமுடியாது. எந்த இனமும் மொத்தமாக முட்டாளாக இருந்துவிடமுடியாது. அப்படியெனின் எதனால் எமது கண்களில் பழங்கள்ளுகள் மட்டும் பட்டுக்கொண்டிருக்கின்றன என்பது நாம் முதலில் கேட்கவேண்டிய கேள்வி.

பழைய கள்ளு என்று இருதடவை எழுதிவிட்டு, எதனைப் பழங்கள்ளு என்று குறிப்பிடுகின்றேன் என்று கூறாது நகருவது ஏற்புடையதல்ல. எனவே சில உதாரணங்கள். “ஈழப்போராட்டத்தில் எனது பதிவு” என்று ஐயர் எழுதுகின்ற கட்டுரைகளை முதலில் பார்த்தால், ஒரு பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நாவல்களின் வினைத்திறனிற்கு அப்பால் இக்கட்டுரையால் எப்பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. பஸ்தியாம்பிள்ளை கொலையை எவர் எவர் எந்த எந்தப் பறனில் இருந்து எவ்வாறு இறங்கி வந்து நடத்தினர் என்ற எமது ஆர்வத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் எல்லாளன் நடவடிக்கையினது காணொளியையே பலதடவை பார்த்துவிட்டு நிற்கும் நாங்கள் பஸ்தியாம்பிள்ளை கொலைவிவரணத்தை, மூன்று பரிமாணத் தொலைக்காட்சியில் "பாலும்பழமும்" படம் பார்த்ததைப் போலத் தான் பார்க்க முடிகிறது.

மிகமுக்கியமாக, எண்பதுகளின் நடுப்பகுதிவரை தான் ஐயரால் படங்காட்டமுடியும். ஏனெனில் அதன் பிறகு நடந்தவை நடப்பவை ஒன்றில் நாம் ஏதாவது ஒரு ஏட்டில், பிரசுரத்தில், ஒளிவீச்சில் அல்லது நேரடியாகப் பார்த்தவையாகத் தான் இருக்கும். ஐயரின் கதைசொல்லிப் பாத்திரத்திற்கான தேவை எண்பதுகளின் நடுப்பகுதியில் நீங்கிவிடும். வெற்றிச் சூத்திரத்திற்கான தேடலில் ஐயரின் கட்டுரைகளின் பங்கு என்ன என்று தேடுகையில், அங்கு எதுவுமே தென்படவில்லை என்பதற்கு அப்பால் அத்தகைய சிந்தனைக்கு ஏற்ற தளம் ஐயரிடம் காணப்படவில்லை என்றே படுகின்றது.

இதைப்போலத்தான், சேர்பொன் இராமநாதன் காலந்தொட்டு நடந்ததான வரலாறுகளாக இரைமீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற பல்லாயிரம் உரையாடல்களும் வகைப்படுகின்றன. மேலும், யூதரைப் போல தமிழர் மாறவேண்டும், எரித்திரிய போராட்டத்தைச் சுவாசிக்க வேண்டும், மாக்சைக் குத்தவேண்டும் மாவோவைக் குடையவேண்டும் என்பது போன்ற வாதங்களும் மேடைப்பேச்சுக்களாகவே விழுந்துகொண்டிருக்கின்றன. தேடல் என்பது மருந்திற்கும் இன்றி, ஏதோ தமிழ்த்திரைப்படம் பார்ப்பது போல எமது அரசியல் விஞ்ஞானம் பரிதவித்துக் கொண்டு நிற்கின்றது. “தடா ஓ சுந்தரம்" போன்ற பாத்திரங்கள் கனேடியத் தமிழ் வானொலியில் இந்தியச் செய்தி பகிரர்வதற்காக காசு கொடுக்கும் அளவிற்குப் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் மந்தை மடையர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. சும்மா விமர்சனம் செய்து போட்டுக் கருத்துக் கூறாமல் போகமுடியாது. எனது கருத்தைச் சுருக்கமாகக் கூறிவிடுகின்றேன்.

எம்மைப் புரிந்து கொள்ளல்

போராட்டத்தின் உச்சிக்காலத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எல்லோரும் கருத்தொருமித்து இருப்பதான மாயை எமக்குள் இருந்தது. ஆனால், காசு கொடுத்த பதினைந்து வீதம், அதற்குள்ளும் தாங்களாய் உலகத்தமிழரிற்குத் தொலைபேசி அழைப்பேற்படுத்தித் தேடிப்போய்க் கொடுத்த மூன்று வீதம் மட்டுமே ஈழம் என்ற கனவைத் தாங்கி நின்றிருந்தது என்பது இன்று வெளிப்படை. மற்றையவர்கள், உலகின் இதர சமூகங்களைப் போல வெவ்வேறு அபிலாசைகளைக் கொண்டிருந்துள்ளார்கள். போராட்டத்தை ஆதரித்தவர்களிற்குள் கூட ஆதரவிற்கான காரணங்கள் மாறுபட்டுக் கிடந்துள்ளன. இதில் எந்தத் தவறும் இல்லை இதில் விமர்சனத்திற்கு இடமில்லை. இது மனிதத் தன்மை மட்டுமே. அந்தவகையில், இன்றைய முதற்தேவை திட்டங்களை முன்வைப்பதாகவோ கட்டமைப்புக்களை நிறுவதாகவோ இருக்கமுடியாது. மாறாக, குறைந்த பட்சம் சில ஆண்டுகள் ஏனும் எமது சமூகம் தத்தமது இச்சைப்பிரகாரம் இயங்குவதை அவதானிப்பதே எமது முதற்தேவை. எம்மையே நாம் புரிந்து கொள்ளமுதல் மற்றையவரைப் புரிந்து கொள்ள முடியாது.

அவதானிப்பது என்பதற்காக எவரும் வாழாதிருக்கவேண்டும் என்பதில்லை. உலகின் அனைத்துச் சமூகங்களைப் போலவும், எமக்குள்ளும் ஒவ்வொருவரும் தத்தமது ஆர்வங்களைத் தக்க வைக்க முனைவது நியாயமானது. மக்களிற்குத் தமது சிந்தனைகளைப் பகிரல், மக்களைத் தமது தத்துவங்களின் பால் ஈர்த்தல் முதலான அனைத்தும் நியாயமானவையே. இதில் தனி ஈழக் கோரிக்கையும் உள்ளடக்கம். வாதப் பிரதிவாதங்களின் முடிவில் ஏதோ ஒரு நிலை பலம் மிக்க நிலையாய் வெளிப்படும். மக்கள் தத்தமது ஆசை அபிலாசைகளின் பிரகாரம் எதையோ பொதுமையாக வெளிப்படுத்துவர். அந்தப் பொதுமை அவசியமானது. அந்தப் பொதுமை தற்போது இல்லாதிருப்பது.

மேற்படி கருத்து, அதிதீவிர ஈழப்பற்றாழர்களைக் கொதிப்படையச் செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் துரதிஸ்ரவசமான முறையில், தனித்தமிழ் ஈழ கட்டமைப்பு என்ற எமது விருப்பு மற்றைய விருப்புகளோடு மோதித் தன்னைப் பொதுமையா இல்லையா என்று நிறுவவேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு நிற்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். தனித்தமிழீழ கட்டமைப்பு என்ற அபிலாசை உடையோர், நாங்கள் முப்பது வருடம் இத்தனை உயிர் கொடுத்துப் போராடிய பின்னர் புதுசா முதலில் இருந்து எங்கட பொதுமை என்ன என்று நிறுவ முடியாது, அது நியாயமில்லை, மற்றைய அபிலாசைகளை விட எங்களிற்கு ஒரு தனியிடம் உண்டு என்று கருதுவது உண்மையில் தமது கருத்து மட்டுமே என்று புரிந்து கொள்ளவேண்டியது அவசியம். பொதுமை ஒன்று புதிதாக வாதப் பிரதிவாதங்களின் வாயிலாக, போட்டிகளின் வாயிலாக எமக்குள் நாம் கண்டடைய வேண்டியது தவிர்க்க முடியாதது.

வெற்றி பெற்ற சமூகங்களைப் புரிந்து கொள்ளல்

1776ல் அமெரிக்க சுதந்திர சாசனத்தில் கையொப்பமிட்ட அமெரிக்காவின் தந்தையர் என்று கருதப்படுவோர் அமெரிக்கா என்றால் என்ன என்று தாம் கருதும் சிந்தனைகளை எழுத்துவடிவில் வெளியிட்டுக் கருத்துப் பகிர்ந்தனர். பிரஞ்சு மற்றும் அமெரிக்க புரட்சிகளைத் தொடர்ந்து தான் ‘சுதந்திரம் சமத்துவம்’ என்ற கருத்துக்கள் வலுப்பெற்றன எனினும், சோக்கிறற்றிஸ் முதல், பிளேற்றோ வழியாய் ஹொப்ஸ் (1679 வரை) லோக் (1704 வரை);, கான்ற் (1804 வரை) ஹேகல் (1831 வரை), நீட்சே (1900) என்று ஏகப்பட்ட சிந்தனையாளர்கள் மனிதன் என்றால் என்ன, சேர்ந்து வாழ்தலின் சவால்கள் போன்ற முனைகளில் சிந்தித்துக் குவித்துள்ளார்கள். இன்றுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய சனநாயகம் என்பது ஹொப்ஸ் மற்றும் லோக்கினுடைய சிந்தனைகளால் பெரிதும் செதுக்கப்பட்டது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் தோன்றிய நாங்கள் மேற்படி சிந்தனையாழர்களின் சிந்தனையால் சிருஸ்டிக்கப்பட்ட பூமிகளில் எமது பூர்விகப் பூமியைக் காட்டிலும் கூடிய சுதந்திரத்தோடும் வாய்ப்புக்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தநிலையில், சுதந்திர தமிழ் ஈழத்தை நிறுவ விரும்புபவர்கள் தமிழீழம் என்றால் என்ன என்பது பற்றிய தமது சிந்தனைகளை, தாம் கனவு காணும் வாழ்வு பற்றிய பகிர்வுகளைக் கிரமமாக முன்வைக்கப் பழகவேண்டும். வெறும் உணர்ச்சிகளால் மட்டும் தேசநிர்மாணம் முற்றுப் பெற்றுவிடாது. பபயங்களாலும், வெறுப்புக்களாலும், பழிவாங்கும் எண்ணங்களாலும், உணர்சிகளாலும் மட்டும் ஒரு கருத்து வென்று விடமுடியாது. முப்பாட்டன் பெருமை தமிழீழ நிர்மாண ஆசை நியாயமானது என்பதை நிறுவுவதற்கான துரும்புச் சீட்டு ஆகிவிடாது. . நாம் கனவு காணும் தேசம், எவ்வாறு கனவு தேசமாகும் என்பதற்கான கிரமமான கருத்துப் பகிர்வுகளும் வாதப்பிரதிவாதங்களும் அவசியம். இதற்கு வெற்றி பெற்ற மனிதரைப் புரிந்து கொள்ளல் அவசியம். வெற்றி பெற்ற சிந்தனைகளைக் காட்டிலும் எமது சிந்தனை சிறப்பானது என்று நாம் நிறுவ முடிய வேண்டும்.

இதர தேசங்களிலிருந்து மிகவும் அப்புறப்பட்டுக் கிடந்த புராதன சூழலில் இருந்து வந்த தென்சூடானியச் சிறுவன் “வலன்ரீனோ அசெக் டெங்” தமது போராட்ட மற்றும் போர் அனுபவங்களை “வட் இஸ் த வட்” என்ற நாவலில் பகிரையில், ஈழச் சிறுவர்களாக நாங்கள் கண்ணுற்ற அதே அனுபவங்கள் அங்கும் விரிவது எம்மை ஆச்சரியப்படுத்துகிறது. மனிதன் என்பவனின் பொதுவான குணங்கள்--தேசிய, மொழி, பாரம்பரிய, வித்தியாசங்கள் தாண்டி--எமக்குப் புலப் படுகின்றன. எனவே வெற்றி பெற்ற மக்களை, குறிப்பாக வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் மக்களை நாம் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும்.

புலத்தில் பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் படிப்பவர்கள் கூட தென் இந்திய பேச்சுக்களையும் தமிழ் வானொலி தொலைக்காட்சி புத்தகங்களையும் மட்டும் வாசித்துக் கொண்டு கிடக்கும் நிலை மாறவேண்டும். அடிமைகள் அடிமைகளை வழி நடத்த முடியாது. தாம் தாம் வாழும் தேசங்களின் மொழிகளில் மொழித்தேர்ச்சி பெற்ற எம்மவர்கள் இன்று அதிகம் என்ற போதும், சிந்தனை மாற்றம் இன்றிப் புராதனமாய்க் கிடப்பதற்குக் காரணம் தத்தமது வாழ்வு நிலங்களையும் மக்களையும் புரிந்து கொள்ளாமை தான். அண்மையில் ஆங்கில இலக்கியத்தில் இவ்வருடம் பட்டம்பெற இருக்கும் ஒரு மாணவியோடு கதைக்கும் போது ஹெமிங்வே என்ற பெயரை அவர் கேட்டதில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது. பள்ளியால் வந்து மாணவர்கள் மானாடமயிலாட மட்டும் பார்ப்பின் இந்நிலை தான் தொடரும். பாடத்திட்டங்கள் மட்டும் சிந்தனை வளாச்சிக்குப் போதுமானவவை அல்ல.

அதுபோலத்தான், தம்மை புத்திசீவி என்று காட்ட விரும்புகின்ற வளர்ந்தவர்கள் பலரும் இன்னமும் மாக்சையும் ற்றொட்ஸ்கியையும் பற்றி வாதப்பிரதிவாதங்கள் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். தோற்றவையையே பற்றித் தொங்கிக் கொண்டிருப்பது எமது சாபக்கேடு. டக்கோட்டா பூர்விகக் குடியினரின் பழமொழி ஒன்று உண்டு, “நீ குந்தியிருப்பது செத்த குதிரை என்று தெரிந்தால் இறங்குவது உசிதம்” என்று.

எம்மவர்கள் வெற்றி பெற்ற குழுமங்களை புரிந்து கொள்ளவேண்டும். அத்தோடு வெற்றி என்பது மாறிக்கொண்டிருக்கும் என்பதனால் தொடர்ந்து தாம் வாழும் உலகை அவதானித்துக் கொண்டிருக்வேண்டும். புதியதைப் புரிவதற்கு முதலில் அத்திவாரங்கள் புரியவேண்டும். பரந்துபட்ட வாசிப்பு வேண்டும்.

அதிகாரங்களைப் புரிந்து கொள்ளல்

இன்றும் கூட கனேடிய தமிழ் வானொலியில் அப்பப்போ கிருபாகரன் ஐநாவில் தமிழர் பிரச்சினை பற்றி என்ன பேசினார்கள் என்று குடுக்கும் செவ்விகள் செய்தி ஆகின்றன. நாங்கள் அப்பாவிகளா, அறிவிலிகளா அடிமுட்டாள்களா என்று என்னால் முடிவெடுக்க முடியவில்லை.

சர்வதேசம் என்றால் என்ன என்பது பற்றியோ, நாடுகளிற்கிடையேயான அதிகார நகர்வுகள் பற்றியோ தடக்கி விழுந்தால் கட்டுரைகள் நிறைந்து கிடப்பதனாலோ என்னமோ, அடிப்படைகள் இன்னமும் புரியப்படாமல் எமது மக்கள் நிற்கின்றனர். ஐநா என்றால் என்ன அதன் அதிகாரம் என்ன, ஐநாவை உருவாக்கிய பின் ஏன் நேட்டோ உருவானது, சர்வதேச விவகாரங்களில் “றியலிசம்” என்ற கருத்துநிலையின் பங்கு என்ன, றியலிசம் என்றால் என்ன, இது எப்படி மாறும், புதிய சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன என்று எல்லாம் நாம் புரிவதற்கு முதலில் இவ்வாறான விடயங்கள் உள்ளன என்று எமக்குத் தெரிய வேண்டும். அதற்குத் தேடல் வேண்டும்.

கிருபாகரன் என்பவரை எனக்குத் தெரியாது ஆனால் அவர் தன்னைச் செய்தி உருவாக்கியாக வெளிப்படுத்துவது கண்டு எனக்குக் கோபம் வரவில்லை. காரணம் உலகம் அப்படித் தான். மக்கள் தங்களை மந்தை நிலையில் இருந்து வெளிக்கொணர்வது தாங்களாகச் செய்யவேண்டியதே அன்றி மற்றையவர் வேலை இல்லை. ஆனால் தனித் தமிழீழ நிர்மாணம் என்ற சிந்தனையை இதய சுத்தியாய் கொண்டிருப்பவர்கள் நிட்சயம் அத்தமிழீழத்தின் மக்களை மந்தை நிலையில் இருந்து வெளிக் கொணரவும் முனைய வேண்டும். தனித் தமிழ் ஈழ நிர்மாணம் என்பது மக்களை விட்டுவிட்டு சிந்திக்கப்படமுடியாதது. மக்களில் இருந்து தான் அது தொடங்க முடியும்.

இளையோர்

இந்தியாவில் பெண்ணைத் தெய்வம் என்று கூறி அதன்வாயிலாகப் பெண்ணடக்குமுறை கோலோச்சுவததைப் போல, புலத்தில் இளையோரைப் பப்பாவில் ஏத்திப் பல ஒட்டுண்ணிகள் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றன. இங்கு நாம் ஒட்டுண்ணிகள் மேல் கோபம் கொள்ளமுடியாது. அது உலக நியதி, பொருளாதார அடிப்படை, அது அப்படித் தான் இருக்கும். ஆனால், இளையோர் இங்கு விமர்சிக்கப்படவேண்டியவர்கள்.

வெற்றிபெற்ற சமூகங்களில் பிறந்து, கற்று, வளரும் இளையோர் தேடலின்றி, வாசிப்பு இன்றி, விவாதம் இன்றி மடைத்தனமான பேச்சுக்களை பவ்வியமாய் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருக்கும் வரை ஒட்டுண்ணிகள் ஒலிவாங்கிக்குள் துப்பிக் கொண்டு தான் இருக்கும். ஒரு மடைத்தனமான பேச்சை உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்குமு; ஒருவரிற்கு பேச்சாளரை நிறுத்திக் கேள்வி கேட்கத் தோன்றவில்லை என்றால் ஒன்றில் பேச்சாளர் தொடர்பில் பார்வையாளரிற்கு ஏதோ பயம் இருக்க வேண்டும் அல்லது பார்வையாளர் அடி முட்டாளாக இருக்கவேண்டும். இதில் எது காரணமாயினும் அது மாற வேண்டும்.

இன்று எமக்குத் தேவையான சமூகமாற்றம் என்பது அனைத்து மட்டங்களிலும் நடக்கவேண்டும். அதில் இளையோரிற்கும் பங்குண்டே அன்றி இளையோர் அனைத்துமாகிவிட முடியாது. மொத்தத்தில் இளையோர் முதியோர் முதலான இன்னபிற அடைமொழிகளை விட்டு, ஒருவர் தனது சிந்தனையால் மட்டும் அங்கீகாரம் பெறும் நிலை வரவேண்டும். இன்னார் பேசியதால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற நிலை மாறி, இன்ன பேச்சு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற நிலை மலரவேண்டும்.

நீட்சி கருதி இத்தோடு நிறுத்திக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply

ஊரிலை இருந்தபோது, இப்பவும் என்று நினைக்கிறன் "மாணவர்", மாணவர் அமைப்பு என்கின்ற பதம் வலிமையாய் பாவிக்கப்பட்டிச்சிது, பாவிக்கப்படுகிது. இப்ப வெளிநாட்டில "இளையோர்" என்கின்ற பதம் பாவிக்கப்படுகிது. மாணவர் என்கின்ற பதம் அதிக அளவில பயன்படுத்தப்படாமல் இளையோர் - youth என்கின்ற பதத்துக்கு மாறியதன் பின்னால் ஏதேனும் மர்மம் இருக்கிதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் பதிவு. சிந்தனையை வளப்படுத்த தமிழர்கள் பெரும்பாலும் முனைவதில்லை. ஆக்கபூர்வமான விவாதங்களில் ஈடுபட பன்முகத் தேடல்/அறிவு தேவை. இவற்றை விட்டு தமிழர்களும், புலம்பெயர் நாடுகளில் வளரும் பலரும் நீங்கள் கூறியது போலவே ஒரு சட்டகத்தினுள் தங்களைக் குறுக்கிக் கொண்டு வாழத் தலைப்பட்டுள்ளனர். எனவே பழைய கள்ளுத்தான் புளித்தாலும் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கும்.

ஐயரின் பதிவுகளைப் படிக்கும்போது சம்பவங்களின் கோர்வையைத்தான் காண முடிகின்றது. சம்பவங்களுக்கான காரண காரியங்களையோ, தர்க்கிகங்களையோ காணமுடியவில்லை. எனவே எபது போராட்டமும் தன்பாட்டிலேயே வளர்ந்து வந்திருக்கின்றது என்பது புரிகின்றது. தமிழர்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவு இல்லாமல் இருப்பதாலேயே நாங்கள் முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றோம்.

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள ஆக்க பூர்வமான கட்டுரை.

'தமிழன் தனக்கு ஒரு தீர்வை எட்டினால்தான் ஆச்சரியமே ஒழிய எட்டாமலிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை" என ஒருவர் சொன்னார்.உண்மையிலும் உண்மை.

யாழ் சென்றுவந்த எனது நண்பனின் மனைவி சொன்னார் 80 களுக்கு தமிழன் திரும்புகின்றானென்று.படிப்பு,வெளிநாடு செல்லுதல்,சீதனம், பழையபடி முருங்கமரமேறுகின்றார்களென்று30 வருட போராட்டம் நடந்த நாடு மாதிரியே இல்லை என்று.

நான் நினைக்கின்றேன் பணம்,பதவி,புகழுக்காக எதுவும் செய்யும், தன்னைப்பற்றியே மட்டும் சிந்திக்கும் ஒரு இனம் எங்கள் இனம். இவர்கள் யார் சொல்லியும் திருந்தப் போவதில்லை.இவர்களுக்கு எதுவும் விளங்காமல் இல்லை விளங்காத மாதிரி இருக்கின்றார்கள் சுயநலத்திற்காக.

Link to comment
Share on other sites

Innumoruvan மிகவும் சரியான கணப்பீடு செய்துள்ளீர்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக்கப்படிருக்கிறோம்.

எம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்களைப் பார்க்கவோ அவற்றின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளவோ முயற்ச்சிக்காமல் பழைய பெருமையும், வீரவசனங்கள் பேசுவதிலுமே காலங்கடத்துகிறோம். சிறந்த எதிர்காலத்திற்கான தேடுதல்கள் அற்றவர்களாகவே இருக்கிறோம் என்பதுவும், எமது அடுத்த சந்ததியினரையும் சிந்தனை வறட்சியுற்றவர்களாக ஆக்கும் பணியும் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதுவும் உண்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்விடுகையின் தரம் எப்படிப்பட்டதென்பதை இவ்விடுகைக்குக் கருத்தெழுதியவர்களை வரிசைப்படுத்தினாலே கண்டுகொள்ளலாம். அவலை நினைத்து உரலை இடிக்கிறார் கட்டுரையாளர்.

Link to comment
Share on other sites

இவ்விடுகையின் தரம் எப்படிப்பட்டதென்பதை இவ்விடுகைக்குக் கருத்தெழுதியவர்களை வரிசைப்படுத்தினாலே கண்டுகொள்ளலாம். அவலை நினைத்து உரலை இடிக்கிறார் கட்டுரையாளர்.

கருத்து எழுதியவரையும் பின் ஊட்டங்கள் இட்டவர்களையும் இப்படியாவது உங்களால் வேறுபடுத்திப்பார்க்க முடிந்ததே கண்ணில்லாத குருடர்கள் வாழும் உலகில் பார்வையுள்ள ஒரு சிலரைப் பார்த்தால் இப்படித்தான் புரிந்துகொள்வீர்கள். எனக்கு நம்மவர் மத்தியில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான இணையத்தளங்களைப் பார்த்தால் நம்மஊர் மித்திரன் பத்திரிகை அல்லது இங்கு ஜேர்மனியில் வெளிவரும் Bild பத்திரிகைகளும் அதன் வாசகர்களும்தான் ஞாபகத்திற்குவரும். தப்பித்தவறி சற்றே மாறுபட்டுச் சிந்திக்கும் ஒருசிலர் இந்த வட்டத்தில் வந்துவிட்டால் அவர்களின் கருத்துக்களை அலசுவதைவிட்டு அவர்களைத் தனிப்பட்டமுறையில் மட்டந்தட்டுவதே வழமையாகிவிட்டது. நம்பார்க்கும் இந்த ஒருசில இணையத்தளங்களைத்தாண்டி வெளியே எத்தனையோ சிறந்த சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தமிழிலேயே எவ்வளவோ எழுதுகிறார்கள். உதாரணத்திற்கு Facebook இற்கு வந்து தேடுங்கள் எத்தனை சிறந்த தமிழ் சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். கண்களைமூடிய புhனைபோல இருக்காமல் வெளியே வந்து அற்புதமான உலகத்தைப் புரிந்துகொள்ளவும் சிந்தனைகளை மேம்படுத்தவும் முயலுங்கள்

Link to comment
Share on other sites

இவ்விடுகையின் தரம் எப்படிப்பட்டதென்பதை இவ்விடுகைக்குக் கருத்தெழுதியவர்களை வரிசைப்படுத்தினாலே கண்டுகொள்ளலாம். அவலை நினைத்து உரலை இடிக்கிறார் கட்டுரையாளர்.

நீங்கள் கூறுவதுபோல், இன்னுமொருவனின் கட்டுரைகளுக்குப் பதில் கருத்தெழுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதற்குக் காரணமும் நீங்கள் குறிப்பிட்ட தரம்தான். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போல அது தரமற்றதற்காகவல்ல. சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாதளவிற்கு மிகவும் ஆழமாகச் சிந்தித்து, யதார்த்தமாக நடக்கவேண்டியவைகளை குறிப்பிடுவார். அவரின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்குப் போதுமான அறிவு எம்மிடம் இல்லாததே. ஆனால் அவரின் ஒவ்வொரு சொற்களுக்குப் பின்னும் அவரின் சாமான்யம் தெரியும். நீங்கள் அவரின் ஆக்கங்களைத் திரும்பத் திரும்ப வாசித்தால்தான் அவர் சொல்ல வருவது விளங்கும்.

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவதுபோல், இன்னுமொருவனின் கட்டுரைகளுக்குப் பதில் கருத்தெழுபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அதற்குக் காரணமும் நீங்கள் குறிப்பிட்ட தரம்தான். ஆனால், நீங்கள் குறிப்பிட்டது போல அது தரமற்றதற்காகவல்ல. சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாதளவிற்கு மிகவும் ஆழமாகச் சிந்தித்து, யதார்த்தமாக நடக்கவேண்டியவைகளை குறிப்பிடுவார். அவரின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்குப் போதுமான அறிவு எம்மிடம் இல்லாததே. ஆனால் அவரின் ஒவ்வொரு சொற்களுக்குப் பின்னும் அவரின் சாமான்யம் தெரியும். நீங்கள் அவரின் ஆக்கங்களைத் திரும்பத் திரும்ப வாசித்தால்தான் அவர் சொல்ல வருவது விளங்கும்.

Innumoruvan மிகவும் சரியான கணப்பீடு செய்துள்ளீர்கள்.......

நான் எனது முதலாவது பின்ஊட்டலிலேயே கருத்தை தொடங்கியவவரைப் பாராட்டி அவருக்குச் சார்பான கருத்தைமுன்வைத்திருந்ததை நீங்கள் கவனிக்கவில்லைப்போலும்.

நான் எனது இரண்டாவது பின்ஊட்டலில் கருத்தைத் தொடங்கியவரையும் அவரைப் பாராட்டித் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்தவர்களையும் புரிந்துகொள்ளமுடியாததால்தான்

கீழேயுள்ள இடுக்கை இடப்பட்டிருக்கிறதென்பதையே கூறமுற்பட்டேன்.

இவ்விடுகையின் தரம் எப்படிப்பட்டதென்பதை இவ்விடுகைக்குக் கருத்தெழுதியவர்களை வரிசைப்படுத்தினாலே கண்டுகொள்ளலாம். அவலை நினைத்து உரலை இடிக்கிறார் கட்டுரையாளர்.

Link to comment
Share on other sites

மச்சான், கிருபன், அர்யுன், அம்பலத்தார், எழுஞாயிறு, தமிழிச்சி உங்கள் அனைவரது கருத்துக்களிற்கும் மிக்க நன்றி.

மச்சான், நீங்கள் அவதானிக்கின்ற "இளையோர் மாணவர்" என்ற வித்தியாசம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

மச்சான்இ மற்றும் இன்னுமொருவன்இ புலம்பெயர் தேசங்களிலும் ஆரம்பத்தில் மாணவர் அமைப்பு என்ற பெயரில்தான் இயங்கி வந்தார்கள். ஆனால், சமாதான காலத்தில் இளையோர் அமைப்பு எனப்புதிதாக ஒன்றைத் தொடங்கி வைத்தார்கள். மாணவர் அமைப்பும் சில வருடங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருந்தன. அக்காலத்தில்இ இளையோர் அமைப்பில் இருந்தவர்கள் நாட்டுக்குச் சென்று வந்தவர்களாகவோ அல்லது இங்குள்ள புத்திஜீவிப் பிள்ளைகளாகவோ (இளையோர்) இருந்தார்கள். மாணவர் அமைப்பில் இருந்தவர்களை ஓரங்கட்டத் தொடங்கப்பட்ட ஒன்றுதான் இந்த இளையோர் அமைப்பு. இதற்கு முன்னர், 90களின் பிற்பகுதியில் கான்ரைட் என்ற பெயரிலும் மாணவர் அமைப்பிற்கெதிராக ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். எல்லாம் அரசியல் நோக்கம்தான்.

Link to comment
Share on other sites

...........சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளமுடியாதளவிற்கு மிகவும் ஆழமாகச் சிந்தித்து, யதார்த்தமாக நடக்கவேண்டியவைகளை குறிப்பிடுவார். அவரின் ஆக்கங்களுக்கு பின்னூட்டம் எழுதுவதற்குப் போதுமான அறிவு எம்மிடம் இல்லாததே. ஆனால் அவரின் ஒவ்வொரு சொற்களுக்குப் பின்னும் அவரின் சாமான்யம் தெரியும். நீங்கள் அவரின் ஆக்கங்களைத் திரும்பத் திரும்ப வாசித்தால்தான் அவர் சொல்ல வருவது விளங்கும்.

இளையோரமைப்பின்மூலம் இளையோரை சர்க்கஸ்காரனின் சொன்னதெல்லாம் செய்யும் குரங்காக மாற்றும் செயற்பாடுகள்தான் பெரும்பாலும் நடக்கிறது. பதுத்தறிவு குன்றிய இளையோர் சிலர் இதற்கு இரையாகுகிறார்கள். இந்தப்போக்கை மாற்றுவதற்கு இளையோர் மட்டுமல்லாது எமது மக்கள் அனைவரதும் தேடுதலின் எல்லைகளை விரிவடையச் செய்யவேண்டியது அவசியமாகும்.. சிந்தனைமிக்க எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் தமது படைப்புக்களைச் சாதாரணமானவர்களும் இலகுவாகக் கிரகித்துக்கோள்ளும்விதமாக இலகு தமிழில் எளிமையான வார்த்தைகளில் எழுதுவது நல்லது. அப்பொழுதுதான் சமுதாயத்தின் அடித்தட்டிலுள்ள மிகவும் பின்தங்கியவர்களும் பொறுமையாக இம்மாதிரியான கருத்துக்களைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் பழகிக்கொள்வார்கள். இதன் மூலமே சாதாரண மக்களையும் சிந்தனையாளர்களாக்கமுடியும்.

தமிழச்சியின் இடுக்கையும் சுட்டிக்காட்டுகிறது.

அதுபோக தமிழச்சி உங்களிடம் வேறொரு கேள்வி..பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களில் ஊறித்திளைத்ததுமட்டுமல்லாமல் மிகவும் நேர்த்தியான பார்வையும் கூர்மையான சிந்தனையும் கொண்டு தமிழகத்தின் பிற்படுத்தப்பட்டவர்களின் சிந்தனையைத் துண்டுவதற்காக எழுதுவதையே குறிக்கோளாகக்கொண்ட தமழகத்தின் தமிழச்சியின் சிந்தனைகளில் ஈர்க்ப்பட்டுத்தான் தமிழச்சியென்று பெயர் இட்டுக்கொண்டீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தவகையில், இன்றைய முதற்தேவை திட்டங்களை முன்வைப்பதாகவோ கட்டமைப்புக்களை நிறுவதாகவோ இருக்கமுடியாது. மாறாக, குறைந்த பட்சம் சில ஆண்டுகள் ஏனும் எமது சமூகம் தத்தமது இச்சைப்பிரகாரம் இயங்குவதை அவதானிப்பதே எமது முதற்தேவை. எம்மையே நாம் புரிந்து கொள்ளமுதல் மற்றையவரைப் புரிந்து கொள்ள முடியாது.

இதைச்செய்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விடுகையின் தரம் எப்படிப்பட்டதென்பதை இவ்விடுகைக்குக் கருத்தெழுதியவர்களை வரிசைப்படுத்தினாலே கண்டுகொள்ளலாம். அவலை நினைத்து உரலை இடிக்கிறார் கட்டுரையாளர்.

சரியாக கணிப்பிட்டு இருகிறீர்கள், கட்டுரையின் நோக்கம்மும் இதன் மூலம் வெளிப்படுகிறது,

அதை விட விசத்தில் இணிப்பு பூசி கொடுப்பது என்பது கீழே வ்ரும் இந்த வரிகளிம் தெரிகிறதா என பாருங்கள் :lol::D:D

டக்கோட்டா பூர்விகக் குடியினரின் பழமொழி ஒன்று உண்டு, “நீ குந்தியிருப்பது செத்த குதிரை என்று தெரிந்தால் இறங்குவது உசிதம்” என்று.

இவர்களின் நோக்கம் குதிரையில் சவாரி செய்வதே ஒழிய குதிரையை இலக்கு நோக்கி நகர்த்துவது இல்லை. இவர்கள் ஆபத்தானவர்கள், பல குதிரைகலில் மாறி மாறி ஏறக்கூடியவர்கள். 30 வருடத்தின் பின்னரும் தெளிவான இலக்கு இல்லை என கூறுபவர்களிடம் என்ன இலக்கு இருக்க முடியும்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Innumoruvan மிகவும் சரியான கணப்பீடு செய்துள்ளீர்கள்.

சுருக்கமாகச் சொல்வதானால் நாம் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட சமுதாயமாக்கப்படிருக்கிறோம்.

எம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்களைப் பார்க்கவோ அவற்றின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ளவோ முயற்ச்சிக்காமல் பழைய பெருமையும், வீரவசனங்கள் பேசுவதிலுமே காலங்கடத்துகிறோம். சிறந்த எதிர்காலத்திற்கான தேடுதல்கள் அற்றவர்களாகவே இருக்கிறோம் என்பதுவும், எமது அடுத்த சந்ததியினரையும் சிந்தனை வறட்சியுற்றவர்களாக ஆக்கும் பணியும் சிறப்பாகச் செய்துகொண்டு இருக்கிறோம் என்பதுவும் உண்மை

ஓம்மோம்! அம்பலத்தார்! கணிப்பீடு சரி! நீங்கள் உங்க போட்டியள்ள(எந்தப்போட்டியளெண்டு விளங்கும்தானே) பக்கச்சார்பாக் கணிக்கிறியளாமெண்டெல்லோ கேள்விப்பட்டன்.முதல் அதுகளை மாத்துங்கோ!

Link to comment
Share on other sites

Civilizations die from suicide, not by murder - Arnold J. Toynbee

A Study of History

Genesis

Toynbee argues that "self-determining" civilizations are born (out of more primitive societies), not due to racial or environmental factors, but as a response to challenges, such as hard country, new ground, blows and pressures from other civilizations, and penalizations. He argues that for civilizations to be born, the challenge must be a golden mean; that excessive challenge will crush the civilization, and too little challenge will cause it to stagnate.

He argues that civilizations continue to grow only when they meet one challenge only to be met by another. In 1939 Toynbee wrote, "The challenge of being called upon to create a political world-order, the framework for an economic world-order...now confronts our Modern Western society."[1] He argues that civilizations develop in different ways due to their different environment and different approaches to the challenges they face. He argues that growth is driven by "Creative Minorities," those who find solutions to the challenges which others then follow. This process is called mimesis, i.e. mimeing.

Decay

He argues that the breakdown of civilizations is not caused by loss of control over the environment, over the human environment, or attacks from outside. Rather, it comes from the deterioration of the "Creative Minority," which eventually ceases to be creative and degenerates into merely a "Dominant Minority" (who forces the majority to obey without meriting obedience). He argues that creative minorities deteriorate due to a worship of their "former self," by which they become prideful, and fail to adequately address the next challenge they face.

Link to comment
Share on other sites

சயிவன் உங்கள் கருத்திற்கு நன்றி. குறுக்காலபோவனின் இணைப்பு தலைப்போடு நன்கு பொருந்துகின்றது இணைப்பிற்கு நன்றி.

சித்தன்,

உணர்வு சார்ந்தவிடயங்களை விவாதிப்பது சிக்கலானது தான். பழங்குடியினரின் பழமொழி இறந்த குதிரையில் இருந்து இறங்கச் சொல்கிறதே தவிரப் பயணத்தை நிறுத்தச் சொல்லவில்லை. மேலும் குதிரை இறந்ததா இலையா என்பதையும் உங்களையே முடிவெடுக்கச் சொல்கிறது. உங்கள் புரிதல்களிற்பேற்ப நம்பிக்ககைகள் பெறுமதிகளிற்கேற்ப நீங்கள் பயணிப்பது உங்கள் தெரிவு.

Link to comment
Share on other sites

சயிவன் உங்கள் கருத்திற்கு நன்றி. குறுக்காலபோவனின் இணைப்பு தலைப்போடு நன்கு பொருந்துகின்றது இணைப்பிற்கு நன்றி.

சித்தன்,

உணர்வு சார்ந்தவிடயங்களை விவாதிப்பது சிக்கலானது தான். பழங்குடியினரின் பழமொழி இறந்த குதிரையில் இருந்து இறங்கச் சொல்கிறதே தவிரப் பயணத்தை நிறுத்தச் சொல்லவில்லை. மேலும் குதிரை இறந்ததா இலையா என்பதையும் உங்களையே முடிவெடுக்கச் சொல்கிறது. உங்கள் புரிதல்களிற்பேற்ப நம்பிக்ககைகள் பெறுமதிகளிற்கேற்ப நீங்கள் பயணிப்பது உங்கள் தெரிவு.

இப்படி விளக்கா விட்டால் பலருக்கு உங்களின் கருத்துக்கள் மயக்கமாகவே இருக்கும். என்றாலும் உங்களின் எழுத்து தொடர வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

சிந்தனை உள்ளவர்கள் செயற்பாட்டளவில் ஒண்றும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். வெள்ளையும் சொள்ளையுமாக கோட்டும் டையுமாக வந்து எல்லா இடத்திலும் அலங்கார பொருளாக நிக்க விரும்பும் இவர்கள் தாங்கள் சொல்லி மற்றவர்கள் செய்ய வேண்டும் எனும் எண்ணம் மட்டுமே கொண்டும் இருக்கிறார்கள்.

சிந்தனையும் செயல் வடிவமும் கொண்டவர்கள் மிகச்சிலரே. அவர்கள் பொதுவாழ்க்கைக்கும் வருவதும் மிகவும் அரிது.

இதை புரிந்து கொள்ளாமல் எல்லாரும் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக வேண்டும் என்பது இயற்கையில் நடக்க போவது அல்ல. அது இயற்கையும் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்குமே இயலாத கூட்டமாக தமிம்இனம் இருப்பதற்கான தேடல் அவசியம்.

சிங்களவனிடம் இல்லாத சர்வதேச தொடர்பு என்பது தமிழருக்கு நிற்சயமாக அதிகமாக இருந்தும் எந்த பரப்புரையும் நிகழவில்லை. ஒரு இனஅழிப்பு போரையே இது இனஅழிப்பு போர் என்று கூட இதுவரையில் மற்றைய எந்த சமூகத்திற்கும் எடுத்து செல்ல முடியவில்லை.

கடந்தகாலம்.....

யாராவது ஒருவரை தனக்கு தாழ்தவராக நிர்ணயித்து அவர்களது இயலாமையை சிறுபாண்மையை சாதமாக்கி எந்தவித நற்குணமுமற்று இருந்தவர்கள் தம்மை மேலானவராக எடுத்து காட்டி அதில் சுகம் கண்டு வாழ்ந்தவர்கள். தம்மை மேன்மையானவர்கள் என்ற நிலையில் அவர்களே தூக்கி வைத்துவிட்டதால் எந்த இதர தேடல்களும் இருக்கவில்லை. ஆனால் கற்றவர்கள் என்ற அடையாளம் சில ஆங்கில சொற்களை பாவித்தால் கிடைக்கும் என்ற ஒரு கற்பனை நிலைமை உருவாக்கம் பெற்றிருந்ததால். ஆங்கில சொற்களுக்கான தேடல்கள் மட்டும் எங்கும் பரவலாக இருந்தது. தவிர ஒன்றிரண்டு கற்றிந்தவர்கள் இருந்தார்கள்தான் அவர்களுக்க எவ்வாறு இந்த முடவருக்கு உண்மை நிலையை புரியவைப்பது என்ற போரட்டத்தை பார்க்கவே ஆயுள் சரியாக இருந்தது.

போராட்டகாலம்..........

மிகவும் பெருத்த சவாலான காலம். இதுதான் தமழினம் என்று கூறிகொண்டு வாழும் ஒரு கூட்டம் உண்மையான தமிழர்களை தொலைத்த காலம். இலைமறை காயாக இருந்த 35ஆயிரம் வரையிலான தமிழர்களை தொலைத்த காலம். சிங்களவனை பொறுத்த வரையில் இது மிகவும் இனியகாலம். தமிழருக்கு எதிரான ஒரு போருக்கு சில காலங்களுங்க்கு அவன் சிந்திக்கவே தேவையில்லை. காரணம் தமிழர்கள் யாரும் தற்போது இலங்கையில் இல்லை என்ற சொல்லலாம். தற்புணர்ச்சி சுயநலம் சாதியம் சமயம் அறியாமை போன்ற தூசிகளுக்கால் இருந்து ஒரு மனிதன் தனது மூதையாரின் தேடல்களுடன் இனி தமிழனா வர குறைந்தது சில ஆண்டுகள் செல்லும். அதை கடந்த பின்பே சுதந்திரம் விடுதலை போன்ற சில எண்ண கூர்புகள் கருகட்டுவது சாத்தியம்.

நிகழ்காலம்............

தொலைநோக்கு சிந்தனைகளற்று நகருகின்றது.... ஆக இந்த கப்பலில் நாம் தொலைதூரம் போக முடியாது என்பது எல்லோருக்கும் தெளிவாக தெரிகின்றது. முள்ளிவாய்க்காலில் அஸ்தமித்த சூரியனின் தொடர்ந்த இருளால் உறங்கிய நிலைக்கு சென்றுவிட்ட உண்மைகளும் தமக்கு சாதகமாக அமைய. பல காளன்கள் புதிதாக முளைக்க எத்தணிக்கின்றனவே தவிர முன்னெற்ற சிந்தனைகள் ஏதுவும் இருப்பதாக தெரியவில்லை. இது கடந்தகாலங்களில் எமக்குள் ஊற்றி வளர்க்கபட்ட நஞ்சுகள் போராட்ட காலத்தில் சற்று தணிந்திருந்தது. இப்போது அது தொண்டைக்கு ஏறுகிறது. தன்னை எப்படியாவது ஒரு பெரும்புள்ளியாக தூக்கி நிறுத்துவது அதற்கும் கடந்தகால யுத்திதான் யாரவது ஒருவரை எந்த நேரமும் சொட்டை சொல்வது இதனால் தமது நிலைமை மேன்மை அடைவது போன்ற ஒரு கற்பனை நிலைமை. இது இனி எவ்வளவு தூரம் எடுபடும் என்பது கேள்வியாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் தோல்வி என்பது நிற்சயம் காலநேரம் கணிப்பது கடினம்.

சில விடயங்களை உரிய முறையில் உரிய இடங்களில் கொண்டு சென்று சேர்த்தோம் என்ற நிலை கடந்து கொடியுடனும் மேளத்துடனும் போகவில்லை என்ற குற்றசாட்டுகளை பட்ட பகலில் பத்திரிகைகளிலேயே எழுதுகிறார்கள். ஆக விடுதலையை இவர்கள் தாண்டிவிட்டார்கள் என்பதை நான் சொல்லவில்லை அவர்களே சொல்கின்றார்கள். விடுதலையை கடந்து கடந்தகால நிலைமைக்கு நாம் திரும்பி கொண்டிருக்கிறோம் என்பது வேதனையானதுதான். 30வருட போராட்ட காலத்தில் நாம் கற்றுகொண்ட ஒரு நல்ல விடயம் இருக்கின்றது அதுதான் மிகபெருத்த வேதனைகளையும் தாங்கி வாழ்வது அதை இன்னமும் கொஞ்சம் பழக்கபடுத்துவது ஆதங்கபடுபவர்களுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

தேடலும் புரிதலும் அவசியமானது. தேடிப்பெறும் ஒன்றை நாம் என்ன செய்கின்றோம் என்பதே முக்கியமாகின்றது. எமது வடிவம் மாறுதலுக்கு உட்படாமல் இருக்கின்றது. இந்த வடிவத்துள் எத்தனை ஆயிரம் புரிதல்களையும் தேடல் மூலம் பெற்றவைகளையும் போட்டாலும் வெளிப்படும் பெறுபேறு ஒன்றாகவே இருக்கின்றது. இடியப்ப உரலுக்குள் பல விதமான மாவை போட்டு பிளிந்தாலும் பல நிற மாவை போட்டு பிளிந்தாலும் வருவது என்னவோ இடியப்பம் தான். நாம் இடியப்ப உரலாக இருக்கின்றோம். இதில் மாற்றம் சாத்தியமற்றதாகவே எண்ணுகின்றேன். உரல் ஒரு நாள் உடைந்து அல்லது அழிந்து போகும். இது தவிர்க்க முடியாதது. அதுவரை எந்த ஒரு நல்ல விசயத்தையும் இந்த உரல்கள் சிக்கலாக பிளிந்து விடும்.

ஒரு பனை மரம் அருகில் வளரும் ஆலமரம் நாளடைவில் பனையை சுற்றி குறிப்பிட்ட காலத்தில் பனையை தின்றுவிடும்.புலம்பெயர் வாழ்வு என்பது ஆலமரங்களுக்கு அருகில் முளைத்த பனைகளாக நாம் இருக்கின்றோம்.

புலத்திலும் நிலத்திலும் நாம் தொலைந்து போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இதை மாற்றமுடியாது என்பதை முதல் நாம் ஏற்றுக்கொள்வோம். ஏற்றுக்கொள்ளப்பட்டாலே எமது வடிவத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

Link to comment
Share on other sites

ஒரு பனை மரம் அருகில் வளரும் ஆலமரம் நாளடைவில் பனையை சுற்றி குறிப்பிட்ட காலத்தில் பனையை தின்றுவிடும்.புலம்பெயர் வாழ்வு என்பது ஆலமரங்களுக்கு அருகில் முளைத்த பனைகளாக நாம் இருக்கின்றோம்.

புலத்திலும் நிலத்திலும் நாம் தொலைந்து போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இதை மாற்றமுடியாது என்பதை முதல் நாம் ஏற்றுக்கொள்வோம். ஏற்றுக்கொள்ளப்பட்டாலே எமது வடிவத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

நீங்கள் சொல்வது புலத்தில நிச்சயம் நடக்கும்,ஆனால் நிலத்தில நடக்காது.அதற்கு ஏற்ற வகையில் நாம் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் ,

Link to comment
Share on other sites

அண்மையில் ஆங்கில இலக்கியத்தில் இவ்வருடம் பட்டம்பெற இருக்கும் ஒரு மாணவியோடு கதைக்கும் போது ஹெமிங்வே என்ற பெயரை அவர் கேட்டதில்லை என்பது அதிர்ச்சியாய் இருந்தது

காந்தியும், பாரதியாரும் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்தவர் என்று மேடையில் முழங்கும் எம் சிறுவர்களால் ,எப்படி இளையோர் ஆனவுடன் மனிதநேயம் ,சுதந்திரம் பற்றி எல்லாம் சிந்திக்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நல்லதொரு கருப் பொருளை வைத்து இக் கட்டுரையை எழுதியுள்ளீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

இத்தலைப்பில் இடப்பட்ட பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் இத்தலைப்பிற்கு வலுச்சேர்ப்பதாகவே உணருகின்றேன். இயன்ற வரை, பின்னூட்டங்களிற்கான எனது பின்னூட்டமாக இப்பின்னூட்டம் அமைகிறது. துரதிஸ்ரவசமாக இடம் கருதிப் பல விடயங்களை விரிவாகப் பேசமுடியாதுள்ளது, இயன்றவரை சுருக்கமாக் முன்வைக்கின்றேன்;.

முதலில் செயலைக்காணவில்லை சொல் தான் தெரிகிறது என்ற கருத்துநிலை மிக முக்கியமானது. முள்ளிவாய்க்கால் வரை எங்களின் முறைமை என்று ஒன்று இருந்தது. இந்த முறைமைக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள், எதிராகச் செயற்பட்டவர்கள், பங்களிக்காது ஒளித்து வாழ்ந்தவர்கள் என எம்மக்கள் மூன்று பிரிவுகளிற்குள் அடக்கப்பட்டனர். சமூகப் பெறுமதிகள் என்பன எப்போதும் தேவை சார்ந்து நாசூக்காகத் தான் எழுகின்றன என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அந்தவகையில், போராட்டகாலத்தி;ல், செய் அல்லது செத்துமடி என்ற நிலைப்பாட்டை சமூகம் புகழ்ந்தது. செயற்பாட்டாளர்களை உற்சாகப்படுத்தியது. நாசூக்காகச் செருகப் பட்ட இந்தப் பெறுமதியினை, சமூகத்தின் அனைத்து மக்களும் தத்தமது நலன்கள் சாhந்து கொண்டாடினார்கள். செயற்பாட்டாளர்கள் என்ற பிரிவு மட்டுமன்றி, எதிராய்ச் செயற்பட்டவர்கள், ஒளித்துவாழ்ந்தவர்கள் என்ற பிரிவினரிற்கும் இப்பெறுமதியில் உடன்பாடு இருந்தது.

செயற்பாட்டாளர்கள், தாம் ஏற்றுக் கொண்ட போராட்டம் வெல்ல வேண்டும் அதற்கு மேலும் செயற்பாட்டாளர்கள் தேவை என்ற ரீதியில் செயலை ஊக்குவித்தார்கள். செயற்படாதவர்களை விமர்சித்தார்கள். பங்களிக்காது ஒளித்து வாழ்ந்தவர்கள் தாங்கள் போராட்டத்திற்குப் பங்களிக்காவிடினும் போராட்டத்தை குறைந்தபட்சம் ஒரு தமிழ் விளையாட்டு அணி களத்தில் ஆடுவதை இரசிப்பதற்கொப்பாகவேனும் இரசித்தார்கள். “போய்ஸ்” என்று போராளிகளை அழைத்தவர்களை இப்பிரிவிற்குள் அடக்கலாம். தோற்பது தமிழரான தமக்கும் மரியாதை இல்லை என்ற ரீதியிலும், வெற்றியின் இதர பலன்கள் தமக்கும் கிடைக்கும் என்ற வகையிலும் கூட பங்களிக்காதோரும் செயலை ஊக்கப்படுத்தினர். ஏதிரிகள், இரு காரணத்தி;ற்காகச் செயலலை ஊக்கப்படுத்தினர். ஓன்று, செயல் சமூகத்தால் கொண்டாடப்படும் பெறுமதியாய் இருக்கும் நிலையில் சமூகத்தைத் தம்பக்ககம் இழுப்பதற்கும் உறவாடிக் கெடுப்பதற்கும் சமூகத்தின் பெறுமதியான செயலைத் தாமும் கொண்டாடுவதாய்க் காட்டவேண்டிய தேவை. மற்றையது போராட்டம் தொடர்வதால் தமக்கு உள்ள பொருளாதார ஆதாயம். அவ்வகையில் களத்தில் உயிர்க்கொடைகள் நடந்து கொண்டிருக்கையில், புதிய போராளிகள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கையில் செயல் போற்றப்பட்டுத் தான் ஆகவேண்டியிருந்தது. மேலும் செயல் என்ன என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது.

துரதிஸ்ரவசமாக, முள்ளிவாய்க்காலின் பரிமாணத்தை இன்னமும் சமூகம் முற்றாக உணர்ந்து கொள்ளவில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் “செயலைக்காணவில்லை” என்ற பதம்.

செயல் என்பதை, குறித்த வடிவங்களில் (கூட்டம், மேடைப்பேச்சு, பேரணி, கடிதம் எழுதல், அரசியல் சந்திப்புக்கள், காசு கொடுத்தல், காசு சேர்த்தல், நிகழ்ச்சி நடத்தல், கட்டமைப்பு நிறுவுதல், யாப்பு வரைதல் போன்று புலத்திலும் போராளியாகக் களத்திலும்) மட்டும் கண்டு பழகிய சமூகம் அதே வடிவில் மட்மே இப்போதும் செயலை அடையாளம் காண்கிறது அங்கீகரிக்கின்றது. அதனால்;, செயலைத் தேடுவதும் கூட மிகமுக்கியமான ஒரு செயல் தான் செயற்பாடுதான் என்ற புரிதல் இல்லாமல் போய்விடுகிறது. சுமூகம் சார் கருத்துப் பகிர்வுகள், விவாதங்கள் எல்லாம் வெட்டிப்பேச்சாக மட்டும் விளங்கிக் கொள்ளப்படுகிறது. இதனால் தான் எமது கண்முன் தற்போதும் புதுப்புது அமைப்புக்களும் கட்டமைப்புக்களும் திட்டங்களும் காளான்கள் போல் முளைத்துக் கொண்டிருக்கின்றன. சிவில் சொசையிற்றி (மக்கள்) என்று சொல்லப்படும் மட்டத்திலான கருத்துப் பகிர்வுகள் எம்மக்களால் வெட்டிப்பேச்சாய்ப்பார்க்கப்பட்டுக் கொண்டு மணிகட்டிய மாடுகள் தேடப்பட்டுக்கொண்டிருப்பதால், பல புதிய மணிகட்டிய மாடுகள் வந்துகொண்டிருக்கின்ற. இது ஒரு பரிதாபகரமான நிலை. எனவே சமூகப்பெறுமதிகள் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.

அடுத்து ஒருவரைத் தாழ்த்தித் தம்மை உயர்த்தல் என்பது. இதுவும் ஒரு முக்கிய அவதானம். அங்கீகாரத் தேடல் அனைத்து மனிதரிற்கும் உள்ளது தான். எனவே தாழ்த்தல் உயர்த்தல் போன்றவற்றிற்கு அப்பால, சமூகத்தின் கருத்;தாடல்களில் பகிரப்படுகின்ற கருத்துக்களைக் கவனிப்பின், நிச்சயம் சமூகம் பலன் பெறும்.

இதோடு இன்னுமொன்றைக் கூறிவைக்க வேண்டும். ஆங்கில வார்த்தைப் பிரயோகம் மேற்கின் சிந்தனைகள் என்பன அங்கீகாரத் தேடலில் உதுவுகின்றன என்ற அவதானிப்பு எழுகையில் ஏன் அந்த நிலை எழுகிறது என்றும் சிந்திப்பது பயன்பயக்கும். இதற்கு ஒரு காரணம் எமது அடிமை மனநிலை என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஆனால் அதற்கு மேல், மேற்கு வெற்றி பெற்று விளங்குகின்றது, எம்மை இன்னமும் அடிமைப்படுத்தும் வல்லமை பெற்று விளங்குகின்றது என்பதையும் நாம் ஏற்றுக் கொண்டு தான் தீரவேண்டு;ம். அவ்வகையில் வெற்றிபெற்றவாக்ளின் சிந்தனையை நாம் ஆராய விழைவது ஒன்றும அத்தனை பாவச்செயல் அல்ல. வெற்றி பெற்ற சமூகங்களில் எம்மால் மகிழ்வாக வாழ முடிகிறது என்று உணருபவர்கள், இவர்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் ;என்று ஆராய்வதும், அக்காரணங்கள் எமது சமூகத்திற்கு கொண்டுசெல்லப்படக்கூடியனவா என்று சிந்திப்பதும் துரொகச் செயல் என்று ஆகத்தேவையில்லை.

இறுதியாக, ஒருவரைத் தாழ்த்துவது என்பது தனது உயாச்சிக்காக மட்டும் தான் இருக்கவேண்டும் என்பதில்லை—நிச்சயம் அது ஒரு பக்கவிளைவு தான். ஆனால், சில நேரங்களில் ஒரு கருத்து அல்லது நிலை விமர்சிக்கப்படுகையில் அந்நிலையை சார்ந்து நிற்பவர்களும் விமர்சிக்கப்படுவது தவிர்க்கமுடியாதது. ஒரு நிலை மாறவேண்டும் எனின் அந்த நிலையினைத் தக்கவைப்பவர்கள் பரப்புபவர்கள் விமர்சிக்கப்பட்டே ஆகவேண்டியது தவிர்க்கமுடியாது. எனவே அனைத்தும் கருப்பு வெள்ளையாக மட்டும் இருந்து விடமுடியாது.

இறுதியாக கடந்த முப்பது வருடத்தில் 35 ஆயிரம் மாவீரர்களும் இலட்சக்கணக்கில் மக்களும் கூட இறந்து போயினர். மாவீரர் இம்மக்கள் மீது அன்பு வைத்திருந்தனர். போரில் இறக்காதவர்கள் தமிழரல்ல என்பது ஆபத்தானது. இது சுகனின் பின்னூட்டத்திற்கு நகர்வதற்கு ஏற்ற இடம்.

சுகன் உங்கள் பனை ஆலமர அவதானிப்பு நியாயமானது. அது போல் இடியப்ப உரல் மற்றும் இடியப்பச் சிக்கல் மிக அற்புதமான உருவகம். இதற்குக் காரணம் இந்த இடியப்ப உரல் உடைக்கப்படவேண்டியது என்பதாக நான் கருதவில்லை. மாறாக பண் படுத்தப்படவேண்டியது. எமது சமூகத்தின் சிந்தனை ஓட்டம் பல மட்டத்தில் நேரக்குடுவை ஒன்றிற்குள் இருப்பதைப்போல் மாற்றமின்றி இருக்கின்றது. இதனால் தான் மாறிப்போன மாவை எங்கள் இடியப்ப உரல்கள் சிக்கல்களாக மட்டும் பிளிகின்றன. அல்லது உடையப் பாhக்கின்றன.

தமிழர் என்றால் யார், தமழிழராக வாழ்தல் என்றால் என்ன, எமது சமூகத்தின் அபிலாசைகள் என்ன என்பன போன்ற அடிப்படைகளில் கூட பல முரண்பாடுகள் எமக்குள் நிறைந்து கிடக்கின்றன. தமிழீழம் என்றால் என்ன என்பதிலும் எமக்குள் மனஒருமிப்புக் குறைவாகவே காணப்படுகின்றது. மலைபோலப் பல எங்கள் முன் பயமுறுத்துவதால் மனமுடைந்து போகத் தான் பார்க்க்கிறது. ஆனால், எங்கள் குணங்கள் எங்களிற்கு மட்டும் என்றவை தாண்டிப் பொதுவான மனிதத் தன்மைகள் ஆராயப்படுகையில் நம்பிக்கை பிறக்கிறது. வேற்றி பெற்றவர்களைப்புரியாது, வெற்றி பெற்றவர்களின் நிறுவன்ங்களிற்குள் நாங்கள் எங்கள் அபிலாசைகளைக் கொண்டு சென்று வெல்லல் என்பது வேடிக்கையானது. ஒரு சமூகம் தனது நிறுவனங்களையும் தனது பெறுமதிகளையும் தன்னைச் சாhந்து தான் உருவாக்கும். அப்படியிருக்கையில், வெற்றி பெற்ற அந்த மக்களைப் புரியாது அவர்களின் நிறுவனங்களை எப்படி நாம் வெல்லமுடியும்?

சிங்களவர் ஏன் வென்றனர் என்பதற்கான தேடல் எம்மைப் புரிந்து கொள்வதிலும், வெற்றி பெற்றவர்களைப் புரிந்து கொள்வதிலும் அதிகாரங்களைப் புரிந்து கொள்வதிலும் இருந்து தான் ஆரம்பிக்கப்பட முடியும். வுpசாரணைகள் தொடர்கையில் சில சமயம் எமது பழைய பிடிப்புக்கள் எமக்குள் மாறலாம், மாறாதிருக்கலாம், புதுப்படலாம். ஆனால் அதற்குப் பயந்து விசரிக்காது இருக்க முடியாது. நாங்கள் தோற்றுப் போயுள்ளோம் என்றால் ஏன் தோற்றோம் என்று கேட்டே தீரNவுண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.