Jump to content

ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்- எழிலன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு சேர்த்து கொல்லப்பட்டாளே ஒரு தாய் அவளுக்காகவும் போராட வேண்டும். இந்த கருணையும் நீதி கோரலும் நெருப்பு போன்ற ஒளியை அந்த மக்களுக்காக ஏற்றும் என்றால் அது மட்டுமே அறம். ஆரியவதிக்காகக் கோரும் நீதியின் மூலம் நாம் நிறுவ நினைக்கும் ஜனநாயகம் எல்லோருக்குமானதாக மாற வேண்டும். அந்த ஏழையின் உடம்பில் ஏற்றப்பட்ட ஆணிகளைப் போல பல நூறு துப்பாக்கிக் குண்டுகளை உடலில் சுமந்தபடி வன்னிப் பெண்கள், குழந்தைகள் அலைகிறார்கள். அவைகளை எப்போது நாம் அப்புறப்படுத்தப் போகிறோம். ஆரியவதி மீது ஏற்றப்பட்ட வர்க்கத் திமிர் ஆணிகளை அகற்றக் கோரும் நமது குரல்கள் வன்னியின் மீது ஏற்றப்பட்ட ஆணிகளை அகற்றக் கோரினால் அதை எங்கள் உள்ளூர் எஜமானர்கள் அனுமதிப்பார்களா?

தென்னிலங்கையின் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆரியவதி வயது 49. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆரியவதி சவுதியில் வீட்டு வேலைக்காகச் செல்கிறார். கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டுச் சென்ற ஆரியவதி இம்மாதம் 21-ஆம் தியதி கொழும்பு திரும்பியிருக்கிறார் உடலில் 23 ஆணிகளுடன். சவுதியில் ரியாத் நகரத்தில் இருந்த எஜமானரின் வீட்டில் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்து வீட்டை சுத்தமாக பராமரித்து,உடுதுணி துவைத்து, கார் கழுவி, கக்கூஸ் கழுவி, தரையை துடைத்துப் பளபளப்பாக்கி, என எல்லா வேலைக்காரிகளும் நகர்ப்புற ஆண்டை வீட்டில் என்ன செய்வார்களே அதுவே ஆரியவதிக்கும் நடந்தது. மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெண்களின் வறுமையப் பயன்படுத்திக் கொள்ளும் வளைகுடா எஜமானர்கள் வீட்டுவேலைக்கு, லாய வேலைக்கு, மருத்துவமனை சுத்தப்படுத்தும் வேலைக்கு என்று எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பலான மூன்றாம உலக நாட்டுப் பெண்களின் பாலியல் உரிமைகள் அங்கே பறிக்கப்படுகின்றன. பல நேரங்களில் சில முதிய ஷேக்குகள் இளம் இந்தியச் சிறுமிகளை திருமணம் செய்து கடத்திச் செல்வதையொத்த சித்திரவதைகளும் உண்டு. வறுமை, அந்நிய தேசம், முற்றிலும் புதிய கலாசாரம், பிள்ளைகளை, கணவனை பிரிந்த ஏக்கம் என இதை எல்லாம் விட சென்ற உடனேயே பாஸ்போட்டை பிடுங்கி வைத்துக் கொள்ளுதல் என எந்த வகையில் நோக்கினாலும் இந்த கொடூர சுரண்டல் வடிவத்திற்கு அதிகம் பலியாவது மூன்றாம் உலகப் பெண்கள்தான். ஆனால் இம்மாதிரியான சித்திரவதைகள் நடப்பது பிழைக்கப் போன அந்நிய தேசத்தில் என்பதால் நமக்கு பதட்டமும் கோபமும் தொற்றிக் கொள்கிறது.

சென்னை, கொழும்பு, மும்பை, பெங்களூர் போன்ற நகர்புறங்களில் எங்கள் கிராமத்துக் குழந்தைகளைக் கொண்டு வந்து எஜமானிகளின் மேனி அழகைப் பேண ஏவல் நாய்களாக வைத்திருக்க வில்லையா? உங்களின் குழந்தை கான்வென்ட் செல்ல எங்கள் குழந்தை புத்தக மூட்டையைச் சுமக்கவில்லையா? இது வேலைக்காரி, இது வேலைக்காரியின் மகள் என்று வெளியில் சென்றால் வித்தியாசம் தெரியும் படி எங்கள் குழந்தைகளின் தலைகள் பரட்டையாக இருக்கும் படி நீங்கள் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆமாம் ஆணியேற்றப்பட்ட ஆரியவதிகளை விட ஆணியேற்றப்பட்டு தப்பிவிட முடியாத படி கொலைக்களத்தில் தொங்கவிடப்பட்டுள்ள ஆரியவதிகள் மீது சாத்தப்பட்டுள்ள ஆணிகள் பிடுங்கப்பட வேண்டுமா இல்லையா? ஆமாம் எல்லா ஆணிகளும் பிடுங்கப்பட வேண்டும். அது ஆரியவதியாக இருந்தாலும் வன்னிப் பெண்களாக இருந்தாலும், திருப்பூரில் சுமங்கலித் திட்டத்தில் அடிக்கப்பட்டிருக்கும் பெண்களாக இருந்தாலும் ஆணிகள் எல்லாம் ஒன்றுதான். சில ஆணிகள் ஸ்கேன் செய்தால் தெரிந்து விடுகிறது பல ஆணிகள் ஸ்கேன் செய்தாலும் தெரிவதில்லை. அல்லது சில ஆணிகள் குறித்து நாம் பேசுவதில்லை. ஆணிகளை பேரினவாத அதிகாரம் மறைத்திருக்கிறது.

கடந்த 21-ஆம் தேதி நாடு திரும்பிய ஆரியவதி குறித்த உலுக்கும் கதைகளை எல்லா சிங்கள ஊடகங்களும் முக்கியமாக வெளியிட்டன. பௌத்த பிக்குமார்கள் ஆரியவதிக்கு நடந்ததை நாட்டின் கௌரவப் பிரச்சனையாக்கினார்கள். கொழும்பில் சிங்களர்கள் வீட்டில் மலையாளப் பணிப்பெண்களை வீட்டு வேலைக்கு வைக்கக் கூடாது என்று மலையாளிகளுக்கு எதிராக இயக்கம் எடுத்தவர்களின் வாரிசுகள் ஒரு ஏழை பணிப்பெண்ணுக்காக தெருவுக்கு வந்தார்கள். கண்ணிமையில் எத்தனை ஆணிகள், கையில் எத்தனை ஆணிகள், காலில் எத்தனை ஆணிகள் என்று எண்ணிக்கையை சரியாகவேச் சொல்கிறார்கள். இனி ஆரியவதியின் உடலில் இருந்து எடுக்க முடியாத ஆணிகள் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் அதன் ஒரு பாகம். சவூதி அரேபியத் தூதரகம் முன்னால் போராட்டம். பெண்கள் வீர முழக்கங்களை இட்டார்கள். அவர்களோடு பிக்குமாரும் பெண்ணின் கௌவரத்திற்காக வந்து போராடினார்கள். தூதகரம் மூலமாக எடுத்த முயர்ச்சியில் அந்த எஜமானர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊர்ஜிதமாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டு நிச்சயம் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் ஆரியவதியின் உடலில் ஆணியேற்றியவர் மீதான கைது நடவடிக்கை எங்கே பிறக்கிறது என்றால் ஆரியவதிக்காக உரிமைக்குரல்கள் எழுப்பியதால்தான். இந்த உரிமைக்குரல்கள் எழுப்பப்படாமல் போயிருந்தால் அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என்பதோடு இந்தியாவிலிருந்தோ, பாகிஸ்தானில் இருந்தோ பங்களாதேஷில் இருந்தோ சில பத்து ஆரியவதிகளை இறக்கி ஆணியடிப்பது அந்த வர்க்கத்திற்கு ஒன்றும் முடியாத காரியமல்ல. ஆக ஆணிக்கு எதிராக எழுந்த குரல்களை வரவேற்கிற அதே நேரம் வன்னிப் பெண்கள் மீது ஏற்றப்பட்டுள்ள ஆணிகளுக்காக ஏன் எழுவதில்லை. அல்லது அழுவதில்லை என்பதே எனது கேள்வி.

போர் முடிவுக்கு வந்த காலத்தில் இரு யானைக்குட்டிகளுக்காக சிங்கள ஊடகங்கள் அழுததை போர் முடிவுக்கு வந்த காலத்தில் கண்டேன் .தலதாமாளிகையின் பௌத்த மத வைபவங்களில் பயன்படுத்துவதற்கு கொம்பன்யானைகள் போதாமல் இருப்பதால் சிறு பிராயத்தில் இருந்தே பயிற்சியளித்து வளர்ப்பதற்காக இரு குட்டி யானைகளை பின்னவல யானைகள் சரணாலயத்தில் இருந்து தாயிடம் இருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து விட்டதாக சிங்கள ஊடகங்கள் தலையங்கம் எழுதின.மூன்று வயதைக் கூட கடக்காத பால்குடி மறவாத அந்தக் குட்டிகளுக்காக மிருக ஆர்வலர்கள் கண்ணீர் விட்டார்கள். மனித உரிமை ஆர்வலர்கள் குட்டி யானைகளின் உரிமை குறித்துக் கசிந்தார்கள்.தாயின் அரவணைப்பு இல்லாமல் ஏங்கிய அந்த இரண்டு குழந்தைகளும் தாயிடம் சேர்க்கப்பட்டன. போராட்டங்களால் அது சாத்தியமானது பேரினவாதிகளின் மனதை அது கரைத்தது. இந்த யானைக்குட்டிகளிடம் காட்டிய இரக்கம் ஏன் கொழும்பு மனித உரிமை ஆர்வலர்களுக்கு மக்களிடம் இல்லாமல் போனது.

ஆக இரக்கம், கருணை, கோபம், போராட்டம், எல்லாமே இன்றைய இலங்கையில் அதிகாரத்திற்குட்பட்டதுதான். அது தன் எல்லையைத் தாண்ட மறுக்கிறது. வடக்கிலும் கிழக்கிலுமாக 89,000 விதவைகள் இருக்கிறார்கள் என்கிறது அரசு. இது ஒரு உத்தேச மதிப்பீடுதான். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விதவைகள் தமிழ் பகுதியில் இருக்கக் கூடும். அவர்களின் பிள்ளைகளை, கணவனை காலம் முழுக்க அவர்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டும், வாழ்வின் ஒட்டு மொத்த சேமிப்புகளையும் இழந்து விட்டார்கள், அவர்களிடம் எதுவுமே இல்லை. கொலையுண்ட மக்களுக்காகப் பேசுவதா? கொலைகாரர்களை தண்டிக்கக் கோருவதா? அல்லது பாதியில் விட்ட ஈழத்த்திற்காகப் பேசுவதா? என ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருக்கும் இந்த விஷயங்கள் குறித்து பேசுவதையே இன்று கூச்சலாகப் பிரகடனப்படுத்துகிறார்கள். ஏதோ வன்னி மக்களை நாமே கொலை செய்து கொன்று புதைத்தது போலவும். அவர்களை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தி நாடற்றவர்களாக்கியது நாம்தான் என்பது போலவும் பேசுகிறார்கள் கே.பியில் தொடங்கி தமிழகத்தின் பல முற்போக்கு அறிவு ஜீவிகளும் இதையே வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலரின் அறிவும் அதன் மேதமையும் எவ்வளவு வன்முறையானது, ஆபசாமானது, வக்கிரமானது … என்பதை நான் ஈழ விஷயத்தில்தான் கண்டேன். கருணை, இரக்கம், நெகிழ்சித்தன்மை, இவைகளை தந்திரமான வடிவங்களைக் கொண்டு பின்னி விட முடியும். எச்சரிக்கையாக இல்லாது போனால் நாம் அடைய விரும்பும் கருணை ஒளிவட்டம் நம்மை குருதியில் கை நனைக்கச் செய்து விடும் ஆபத்துக் கொண்டது. பௌத்த மேலாதிக்க சிங்கள பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடாத இவர்கள் போராடும் சக்திகளை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குகிறார்கள். போராடும் சக்திகளாக தங்களை காட்டிக் கொள்கிற தேசியவாதிகளோ தங்களை சுயபரிசோதனைக்குள்ளாக்கத் தயாரில்லை வெட்டி வீரமரபும், சேர, சோழ, பாண்டிய அபத்தங்களுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. இது அறிவு மேனையைப் போன்ற ஆபத்து நிறைந்தது இல்லை என்றாலும் இந்த அபத்தத்தை வைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் செய்ய முடியாது. என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. திராவிட இயக்க மரபு உருவாக்கி வைத்த இந்த எதுகை, மோனை வாய்ச்சவடால்கள் மக்களுக்கு எவ்வகையிலாவது பயன்படுமா? மக்கள் சேர,சோழ, பாண்டியர்கள் இல்லையப்பா……..அவர்கள் பஞ்சைப் பாரரிகள்………..அரை வயிற்றுக்கும் கால் வயிற்றுக்கும் அலைகிறவர்கள். இந்த மேன்மைகள் எதுவும் அவர்களின் பசியை ஆற்றாது. வன்னி மக்களின் பசியையும்தான்.

காணிகள் எல்லாவற்றையும் பேரினவாதிகள் பிடுங்கிக் கொண்டார்கள், கிராம சிறுதெய்வக் கோவில்களும், இந்துக் கோவில்களும், மசூதிகளும் பௌத்த விஹாரைகளாக மாற்றம் பெறுகின்றன. இந்தியாவில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் வேர் விட்ட இந்துப் பாசிசம் சிறுபான்மை மக்களை அடையாள அழிப்புச் செய்து இந்து, இந்திய மயமாக்குகிறதோ அதுவேதான் இலங்கையிலும் அங்கே தமிழர்கள்.,அ ல்லது இந்துக்கள். அந்தப் பிரச்சனை இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமானதல்ல தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமானதுதான். ஆனால் அந்த இன முரண் வடிவத்தை இன்று மடைமாற்றம் செய்து மத வடிவம் கொடுக்கிறார்கள் பௌத்த பிக்குகள். எப்படி இந்தியா காஷ்மீரிகளின் விடுதலை உணர்வை முஸ்லீம் திவீரவாதிகளின் கோரிக்கையான மாற்றி காஷ்மீரில் உள்ள பாண்டிட்களை தூண்டி விட்டு இந்து முஸ்லீம் பிரச்சனையாக மாற்றுகிறதோ அப்படி, இந்தியாவில் இந்துப் பாசிசம் செய்யும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. சிலாபம் முன்னேஸ்வரி ஆலைய காளி வழிபாட்டில் பலிகொடுப்பதற்கு எதிராக கொதிக்கும் பௌத்த பிக்குகளின் மிருகங்கள் மீதான கருணையை ஒத்ததுதான் எல்லாம். அவர்கள் மிருகங்களிடம் கருணை காட்டுவார்கள். ஆனால் மனித மாமிசம் கேட்பார்கள். அதுவும் தமிழ் ரத்தமாக இருந்தால் விரும்பு உண்பார்கள். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரான குணதாஸ அமரசேகர ” தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் . எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது ” என்று எச்சரிக்கை விடுதுள்ளார். இந்த எச்சரிக்கை இந்துக்களுக்கானது என்று முஸ்லீம்கள் ஒதுங்கலாம். முஸ்லீம்களுக்கானது என்று இந்துக்கள் ஒதுங்கலாம். இரண்டும் இல்லை மலையக மக்களுக்கானது என்று நினைக்கலாம். அதுவல்ல தீவில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவெல்லாம் உண்டோ அது அத்தனைக்கும் எதிரானதுதான் இன்றைய பெரும்பான்மை சிங்களப் பேரினவாதம். இன்று வடக்கில் தமிழ் மக்களுக்கு நடப்பது நாளை கிழக்கில் சிறுபான்மை முஸ்லீமகளுக்கு நடக்கும். இதற்கு நாம் அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லை. கடந்த காலக் கசப்புகளுக்காக வன்னி மக்களுக்காக நாம் பேசாது போனால் நாளை கிழக்கு முஸ்லீம்களுக்காக பேச எவரும் இல்லாமல் போகக் கூடும். அல்லது எதிர்ப்பை உடைக்கிற தந்திரம் அங்கும் கையாளப்படும். பேசுவதும் போராடுவதும், குரல் கொடுப்பதும்தான் நாம் வன்னி மக்களுக்குச் செய்கிற நன்மை .நிவாரணம் செய்கிற அதே நேரம் படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இதை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தப் பிராந்தியத்தில் இந்தியா விரிவு படுத்தும் மத்திய இந்திய பழங்குடிகள் கொலை பற்றி பேசுகிற நாம் வன்னிப் படுகொலைகளுக்காகப் பேச வேண்டும். நீங்கள் கொடுக்கிற நிவாரணங்கள் முக்கியமல்ல அந்த மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்கவும், அந்த நிலத்தில் சகல சிவில் உரிமைகளைப் பேணும் சுதந்திரமும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆரியவதிகளுக்காவும், குட்டியானைகளுக்காகவும் பேசுகிறவர்கள் இதற்காகவும் பேச வேண்டும். ஏனென்றால் நிலங்களை மக்களிடம் இருந்து பிடுங்கி விட்டு மனித உரிமை பேசுவதும், நிவாரணம் பற்றிப் பேசுவதும் பிணத்தின் வாயில் தடவுகிற நெய் போன்றதுதான்

http://inioru.com/?p=16623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து பிரசுரம் செய்தால் நல்லம் ......

அல்லது சிங்கள் ஊடகவியாளர்கள் இந்த சிந்தனையில் இதை எழுதியிருந்தால் நல்லாக இருந்திருக்கும்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.