Jump to content

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மின்னஞ்சலில் எஸ் .பொ அவர்கள் அனுப்பிய அறிக்கையின் முழு வடிவம் இது

"யாதும் ஊரே...... தீதும் நன்றும்' என்ற தலைப்பில் எனக்கு எதிராக சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் ஏக தலைவராகத் தம்மை நியமித்துக்கொண்ட முருகபூபதி வெகுண்டெழுந்து உண்மைகளை மறைத்தும் மறுத்தும் யாழ் இணையத்தில் பதிவு செய்த கட்டுரை என் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் சர்வதேச

எழுத்தாளர்களுடைய தலைவராகிவிட வேண்டுமென்ற பதவி மோகத்திலே அவர் தமது சுயமூளையை இழந்து மனப்பிறழ்விலே அவலப்படுகிறாரோ என்ற அநுதாபமே எனக்கு ஏற்பட்டது. அவருடைய உளறல்களை மதித்து ஒரு பதில் எழுதுதல் அவசியமில்லையாயினும், வரலாற்று ஆவணங்கள் செப்பமாக பாதுகாக்கப்படுதல் என்பது இன்றளவும் என் தர்மமாக விடிந்துள்ளதால் இப்பதில் தக்கது.

சர்வதேச ஈழத் தமிழர்களுடைய தலைவர் என்று தம்மை குடமுழுக்குச் செய்துள்ள கே.பி., ராஜபக்சே சகோதரர்களினால் மூளைச்சலவை செய்யப்பட்டு சர்வதேச தமிழ் இனத்தைக் குழப்பத்திற்குள்ளாக்கும் வகையில் வெளியிடும் அறிக்கைகளில் பொதிந்துள்ள உளறல்களைத் தமிழ்நாட்டில் வாழும் ஈழ உணர்வாளர்கள் அனைவரும் ஒருமுகமாகக் கண்டித்து, அவை உண்மைக்குப் புறம்பானவை என்பதைத் தர்க்க ரீதியாக நிறுவியும் வருகிறார்கள். post-4927-021965300 1284103197_thumb.jpg

இது ஒருபுறம் இருக்க, கே.பி. நிகர்த்த ஓர் உளறல் அறிக்கையை, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் தலைவர் என்ற பதவியைத் தாமே பெற்று விட வேண்டுமென்ற பாரிய ஆவலாதியுடன் வெளி

யிட்டுள்ளார். அந்த அறிக்கை நான் அறிந்துள்ள முருகபூபதியின் சுபாவத்துக்கு முற்றிலும் மாறானது. நன்கு மூளைச் சலவை செய்யப்பட்ட பதவிக்கொதியரான வேறொரு முருகபூபதியைக் காண முடிகிறது. ராஜபக்சே சகோதரர்களால் அவர் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக அவர் யாராலேயோ அல்லது எதனாலோ மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார். இதற்கு அந்த அறிக்கையே சுய சான்றாக அமைகிறது.

எழுத்து உலகில் ஓர் இடத்தினை யாசித்த முற்போக்கு எழுத்தாளர் குஞ்சுகள் கடந்த அரை நூற்றாண்டு காலமாகவே என்னைத் திட்டுவதினாலே எழுத்தாளர் அந்தஸ்தை அடைந்து

விடலாமென்று என்னைப் பலவகைகளிலும் கொச்சைப்படுத்தி எழுதி வந்தார்கள். எனவே, இந்த ஏசல்களும் திட்டுகளும் எனக்குப் புதியன அல்ல. ஆனால், முற்போக்கு எழுத்தாளர் கோஷ்டியில் பரவியிருந்த இந்நோய் இப்பொழுதுதான் முருகபூபதியைப் பிடித்துள்ளது என்பது உண்மையில் எனக்கு வருத்தமளிக்கின்றது. ஆலை இல்லாத ஊருக்குச் சர்க்கரையாக விளங்கும் இலுப்பைப்பூதான் தாம் என்பதை அவருடைய அறிக்கை சுயமாகப் புலப்படுத்தும்.

"தொண்ணூறுகளின் துவக்கத்தில் ஒரு புத்தக வெளியீடு. முருகபூபதியின் சிறுகதைத் தொகுதியின் வெளியீடு மெல்பெர்னில். சமாந்தரங்கள் என்பது அத்தொகுதியின் பெயர். அவ்வெளியீட்டு விழாவில் என்னைச் சிறப்புப் பேச்சாளனாகக் கலந்துகொள்ளும்படி கேட்டு, சுந்தரதாஸ் மூலம் பயண ஏற்பாடுகளைச் செய்தார்....' (வ. வா. -1684) இதை வைத்து அவுஸ்திரேலியாவில் சிறுகதை ஆசிரியர் என்ற அங்கீகாரம் பெறுவதற்கு எஸ். பொ.வை விட்டால் யாரும் கிடைக்கவில்லை என்று தம்பட்டம் அடிப்பதா? உண்மை இதுதான்; டானியல்,

டொமினிக் ஜீவா காலத்திலிருந்து இன்றளவும், புதிய எழுத்து ஆற்றல்களை ஊக்குவித்தல் என் தமிழ் ஊழியத்தின் பகுபடாக் கூறாக நிலைத்துள்ளது. இந்தப் பட்டியல் மிக நீளமானது என்பதை முருகபூபதியும் அறிவார்.

ஆனால், முருகபூபதி சிட்னியில் நடந்த என் புத்தக வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்க ஒருவரும் கிடைக்காததனால் தான் மெல்பெர்னில் இருந்து வந்து அபயம் தந்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறார். இன்றும் சிட்னியில் கவிஞர் அம்பி, பொன் பூலோகசிங்கம், பேராசிரியர் கந்தராஜா, திருமதி ஞானம் இரத்தினம், பாலம் லட்சுமணன், திருநந்தக்குமார், தனபாலன் என ஏராளமான இலக்கியவாதிகள் என் நண்பர்களாக இருந்தபோதிலும், வாழ்க்கையே தொலைந்ததாக விரக்தியில் மூழ்கி, கூட்டுக்குள் நத்தையாக வாழ முற்பட்ட முருகபூபதியை மீளவும் பொது வாழ்க்கைக்குக் கொண்டு வரவேண்டுமென்று, என் மூத்தமகன், மருத்துவர் அநுரவின் ஆலோசனைக்கிணங்க வரவழைக்கப்

பட்டார். அவருடைய புனர்வாழ்வில் அக்கறை கொண்ட குற்றத்திற்காகவா, இவ்வாறான அபாண்டத்தைக் கட்டு அவிழ்த்துவிட்டு உள்ளார்? மனிதநேயன் அநுரவின் அன்பைக்கூடக் கொச்சைப்படுத்துகிறார். ஒரு பதவிக்காக அவர் எப்படியயல்லாம் வரலாற்றைத் திரித்துப் பேசுகிறார் என்பதை நினைக்க வருத்தமாகவும் இருக்கிறது.

இன்னொன்று பனியும் பனையும் தொகுப்பு சம்பந்தப்பட்ட செய்தி. "என் பெயர் அந்நூலில் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது' என்று அலறுகிறார். பனியும் பனையும் நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது.

"நண்பர் லெ. முருகபூபதியுடன் முதலில் தொடர்பு கொண்டேன். அவர் திரட்டித் தாம் வைத்திருந்த சுமார் பத்துக் கதைகளை உடன் அனுப்பி உதவினார். என் இலக்கிய நண்பர்

களாக இனிமை பாராட்டும் மு. நித்தியானந்தன், கலாமோகன், காலம் ஆசிரியர் செல்வம், "தாயகம்.' ஆசிரியர் ஜோர்ஜ், "நான்காவது பரிமாணம்' ஆசிரியர் நவம் ஆகியோருடன் தமிழ் நாட்டிலிருந்தே தொடர்பு கொண்டேன். இந்த ஐவரும் என் உதவிக்கு வந்தனர். அனைவருக்கும் என் நன்றிகள். இவர்களுள் நித்தியின் உதவியை விசேடமாகக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.'

(ப. ப. பக்கம் 397)

பனியும் பனையும் சம்பந்தமாக "என் இனிய நண்பர் இந்திரா பார்த்தசாரதி' எனக் கூறிக் கொண்டு அவரின் முதுகிலும் குத்தியுள்ளார். இ. பா. தமிழ் உலகம் போற்றும் படைப்பாளி. சிந்தனாவாதி. வோர்ஸோ பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இலக்கியப் பணிக்காக, சாகித்ய அகடாமி விருது, பத்மஸ்ரீ விருது, சரஸ்வதி சம்மாம் பரிசு ஆகியன பெற்றவர். அவர் மூலமாக பேராசிரியர் இந்திரா, தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையில் முதலாவது புலம் பெயர்ந்தோர் கருத்தரங்கத்தை நடத்தினார்கள். பின்னர் புதுவைப் பல்கலைக்கழகத்திலும் நடந்தது. தமிழச்சி முதன் முதலாகப் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தை ஆய்ந்து ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கொடி, சசிகலா, பாரதி ஆகிய பலரும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தை ஆய்ந்து முனைவர் பட்டத்திற்குச் சமர்ப்பித்துள்ளார்கள். இந்தப் பட்டியல் பெருகும். இலங்கையில் உள்ள தமிழ்த் துறைகளிலே புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்து எத்தனை பேர் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்கள்? நமது இலக்கியத்திற்கு சர்வதேச அரங்கில் ஒரு மகத்தான இடத்தைப் பெற்றுத் தரும் பணியின் மூலவராகவும், உந்து சக்தியாகவும் வாழும் அவரை, ஒரு துரும்புகூட தூக்கிப் போடாதவர் என்று பழி சொல்ல எந்த நீசனும் ஒப்பான். இதையும் முருகபூபதி அறியக் கடவர். புலம்பெயர்ந்தோர் என்ற சொற்றொடர், எஸ். பொவால் அறிமுகம் செய்யப்பட்டது என்று வாய் மணக்கப் பாராட்டிய அவர், இப்பொழுது யார் செய்த மூளைச் சலவையினால் மதி இழந்து தடுமாறுகிறார்?

கல்யாணம் நின்று விடுமென்று சீப்பை எடுத்து மறைத்தானாம் ஒரு புத்திசாலி. அவ்வாறுதான் தான் உதவி செய்யாது தான் பனியும் பனையும் இரண்டாவது பதிப்பு கிடப்பில் இருப்பதாகக் கொக்கரிக்கிறார். புதிய பதிப்பு அறுபதுக்கு மேற்பட்ட கதைகளுடன் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் ஈழர் கதைகள் கொண்ட 2000 பக்கங்கள் கொண்ட கதைக் களஞ்சியமும், ஆயிரம் பக்கங்கள் கொண்ட தமிழ் ஈழர் கவிதைக் களஞ்சியமும், ஆயிரம் பக்கங்களில் தமிழ் ஈழரின் குறுநாவல் களஞ்சியமும் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. இது பாரிய பணி. பல வருடங்கள் தயாரிப்புப் பணிக்குத் தேவை. இவை அறியாது, தன் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் தமிழில் இலக்கியப் பணிகள் நின்றுவிடுமென்று கொக்கரிப்பது எத்தகைய தலைக்கனம்? இத்தகைய தலைக்கனம்தான் உலகத் தமிழ் எழுத்தாளரின் தலைமைப் பதவிக்கு ஓடித்திரிபவரின் யோக்கியதை. தனக்குப் பெயரும் புகழும் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே தமிழ் ஈழரின் இலக்கியத்திற்குப் பங்களிப்பேன் என்று ஒப்புதல் வாக்குமூலமளிப்பது எவ்வளவு கேவலமானது? "அவர் நம்பினார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ப நான் நடக்கவில்லை' என்று கூறுதல் எத்தகைய அசிங்கமான ஒப்புதல் வாக்குமூலம்? post-4927-070047100 1284103259_thumb.jpg

இலங்கையில் வெளியான தீ, சடங்கு போன்ற நூல்களை முதல் பதிப்பு என்று சொல்லி தமிழகத்தில் வெளியிட்டு ஏமாற்றினேன் என்று பிறிதொரு குற்றச்சாட்டை என்மீது வீசுகிறார். தீ என்றுமே இலங்கையில் பிரசுரமானதல்ல. சடங்கு மீளவும் தமிழ்நாட்டில் பிரசுரிக்கப்பட்ட பொழுது இந்தக் குறிப்பு அதில் அச்சாகியுள்ளது. ‘Sadangu first Pulished by Arasu Publications, Colombo - 1971. Indian Edition Published by Ranimuthu, Madras 1981. First Published in Mithra Books -15th October 1996. . சுஜாதா, இ.பா., அசோக மித்ரன், இராமானுஜம், சாலை இளந்திரையன் போன்றவர்கள் தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களே. அவர்கள் என்னுடன் இனிமையான நட்பு பாராட்டுபவர்கள் என்பது முருகபூபதிக்கு புதியதாக இருக்கலாம். தமிழ்நாட்டில் என்னுடன் இலக்கிய நட்பு பாராட்டுபவர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் சிட்டி, கி.சு.செல்லப்பா, தி.க.சி., சிற்பி, இன்குலாப், தமிழன்பன், அம்பை, கோவை ஞானி, பழமலய், சூரியதீபன், அறிவுமதி போன்ற நூறு பேருக்கு மேற்பட்டவர்கள் இடம் பெறுவார்கள். அது என் எழுத்து ஊழியத்துக்குச் சித்தித்த யோகம்! இது சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டு அமைப்பாளர் என்ற பதவியை எட்டிப்பிடித்து விடுவதனால் வசப்படமாட்டாது என்பதை மூளைச்சலவை செய்யப்பட்ட அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இன்னுமொன்று இங்கு சொல்லப்படவேண்டும். ஒரு நூலுக்கான முன்னுரையை நாடறிந்த எழுத்தாளர்களிடம் பெறுதல் வழக்கம். விலாசமற்ற "கண்டவன் நிண்டவ'னிடமா பெறமுடியும்?

இன்னொரு உண்மை பதிவுக்குரியது. சடங்கு சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பிரதிகள் இதுவரை விற்பனையாகி உள்ளது. தமிழ் ஈழன் ஒருவனின் இலக்கியப் படைப்பு ஒன்று விற்பனையில் இவ்வளவு சாதனைபுரிந்த வரலாறில்லை. முருகபூபதியின் பொச்சரிப்பினால், சடங்கின் படைப்புத்திறன் சோடை போய்விடப் போவதுமில்லை. அது வெளிவந்து 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பாடநூலக பயிலப்படுகின்றது. Toronto பல்கலைக்கழகம் இதனை ஆங்கிலப்படுத்தியுள்ளது. தம்பி முருகபூபதி வீண் கொக்கரிப்பிலும் மனப்பொச்சரிப்பிலும் ஈடுபடாமல் தமிழ் ஈழரின் படைப்பு ஓர்மங்களை உலகை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்க முனையட்டும். என் படைப்புப் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவருடைய ஊத்தை அறிக்கைகளினால் என் படைப்பு நேரம் பறிக்கப்படுகிறதே என்பதுதான் என் கவலை.

ஆலயப் பிரவேசப் போராட்டத்தில், டானியல், ஜீவா, ரகுநாதன் போன்ற கிறிஸ்தவர்கள் ஈடுபட்டது போன்று நான் ஏன் ஈடுபடவில்லை என்றும் ஒரு கேள்வி கேட்கிறார். ஈடுபடுவதும் ஈடுபடாததும் என் சுதர்மம். நான் கடவுள் வழிபாட்டினை அநுசரிக்காது வாழ்பவன். அத்தகையவன் ஏன் ஆலயப்பிரவேசப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்? நான் 1955ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு வாசியாக வாழ்கிறேன். அங்கு தேநீர்க் கடை பிரச்சினையே கிடையாது. இல்லாத ஒன்றுக்கு எதிராக போராட வேண்டும் என்று ஒரு மனநோயாளியே வாதாடுவான்.

நான் தலித் இலக்கியப் போராளியாக இப்பொழுது பாவனை செய்வதாக ஒரு கற்பனைக் குற்றச்சாட்டு. தலித் இலக்கியம் என்ற கருத்துவத்தை நேர்மையாக விமர்சனம் செய்பவன் நான். "என்றுமே ஜாதியின் பெயராலும் பிரதேசத்தின் பெயராலும் இலக்கியத்திருத்தவிசிலே ஓர் ஆசனம் யாசித்தது கிடையாது. சலுகைத் திட்டத்தின் கீழ் ஓர் அங்கீகாரம் என் தர்மத்தினதும் ஆற்றலினதும் நிராகரிப்பு என நம்புகின்றேன்.' (வேலி - பக்கம் - 7) "அந்தப் போராட்டத்தின் வெவ்வேறு கட்டங்களிலேயும் உயிர்ப்புடன் பங்கேற்றவர்கள் நளவர்கள். இந்த நளவர்கள் தமிழ்நாட்டிலே நாடார்கள் என அழைக்கப்படுகிறார்கள். இந்த நாடார்கள் தமிழ்நாட்டிலே தங்களைத் தலித்துகள் என்றோ, அன்றேல் அந்த ஜாதியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்களை தலித் எழுத்தாளர்கள் என்றோ குறி சுட்டுக் கொள்ளுகிறார்களா? நாடார்களின் இலக்கியம், பாக்கு நீரிணையைத் தாண்டியவுடன் தலித் இலக்கியமாக மாறிவிடுமா? தவறான பிரமேயங்களை வைத்துக்கொண்டு, வழுவற்ற தத்துவ உண்மைகளைக் கண்டறிதல் சாத்தியமா? இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்காமல், ஒரு பொய்யை ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளில் ஒரு சாரார் ஒரு மாமாங்க காலமாக, ஈழமே தலித் இலக்கியத்தின் முன்னோடி என்கிற ஒரு வகைப் பெருமையிலே குளிர் காய்தல் மகா அநியாயமானது.' (வேலி - ப. 9)

நான் காய்த்த மரம். கல்லடி பட்டும் சிரித்து வாழ்பவன். என் எழுத்துப் பணி இனமான ஊழியமும் சேர்ந்தது. இன்றளவும் அரிதாரம் பூசாத ஒரு திறந்த புத்தகமாகவே வாழ்கிறேன். "தமிழில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொடுக்கப்படவேண்டுமென்றால் அது எஸ். பொ. வின் வரலாற்றில் வாழ்தலுக்கு அளிக்கப்படலாம்' என்று தமிழ்நாட்டின் தமிழ் மார்க்சிய விமர்சகரான மூதறிஞர் கோவை ஞானி அபிப்பிராயப்படுகிறார். இந்நிலையில் ஒரு மகாநாட்டை நடத்துவதை எதிர்ப்பதன் மூலம் எனக்கு புகழ் வருமென்று கருதமாட்டேன். இப்பொழுதும் அறத்தின் பக்கத்தில் வாதுரைக்கும் எழுத்துப் போராளியாக வாழ்வதினால், என் நியாயங்களைப் பதிவு செய்தேன். என் நியாயங்களுக்கு எதிர்நியாயம் முன்வைப்பதுதான் அறிவும் பண்பும். அதை விடுத்து, படுக்கையை நனைக்கும் ஒரு சவலையாக நடந்து கொள்ளுவதன் மூலம் எள்ளளவும் தமிழை முன்னெடுக்க முடியாது என்பதை அறிதல் அவருக்குச் சேமமானது.

அவருடைய மூளை மந்தித்துள்ளது என்பதற்கு இன்னொரு உதாரணமும் தரலாம். ஞானம் 115ஆவது இதழை எஸ். பொ. மலராக வெளியிடும் உரிமையும் தர்மமும் அதன் ஆசிரியருக்கு உண்டு. ஏன் வெளியிட்டீர்கள் என்று அவரிடம்தான் கேட்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில், சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு சதமேனும் உதவி செய்யவில்லை என்று சொல்லுகிறார். இலங்கை சுனாமிப் புனர்வாழ்வுப் பணியின் கணக்குத் தணிக்கையாளராக அவர் செயற்பட்டாரா? ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை என் சிட்னி குடும்பத்தினர் கிழக்கின் உறவுகளுக்கு உதவுவதைத் தமது கடமையாக வரித்துள்ளார்கள். வலது கையால் கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் செய்வதுதான் தானம். "அது செய்தேன், இது செய்தேன்' என முருகபூபதி போல தலைப்பாகை கட்டிக்கொள்ளுதல் தானமல்ல.அவருடைய ஏனைய குழந்தைத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதின் மூலம் என்னையும் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.

மகாநாட்டை நடத்த ஆலோசிக்கப்பட்ட கூட்டத்திற்கு சிவத்தம்பி முன்னிலை என்று பிரசாரம் செய்யப்பட்டது. அவரே, இலங்கையில் இந்த மகாநாட்டினை நடத்துவது முறையல்ல என்று அறிக்கை விட்டுள்ளார். தினக்குரல், மாலை மலர், Indian Express போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தமக்கும் மகாநாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பகிரங்கமாகக் கூறுகிறார். பா. செயப்பிரகாசம் தமக்கு ஆதரவு தருவதாகக் கூறுகிறார். அவர் எடுத்த முயற்சியினாலேதான் எழுத்தாளரும், சினிமாக்கலைஞர்களும் கலந்துகொண்ட மகத்தான கூட்டம் ஒன்று சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்திலே நடைபெற்றது. மூத்த ஊடகவியலாளர் சோலை, சுதாங்கன், தியாகு மற்றும் சினிமா இயக்குநர்கள் ஆர்.சி. சக்தி, மணிவண்ணன், சேகர் மற்றும் அறிவுமதி, காசி ஆனந்தன், பாமரன் போன்ற ஏராளமான படைப்பாளிகளும் கலந்து கொண்டார்கள். சர்வதேச மகாநாட்டினைக் கொழும்பிலே நடத்தக்கூடாது என்றும், தமிழ்நாட்டின் எழுத்தாளர்களும் கலைஞர்களும் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இவ்வாறான தீரமானத்தை நிறைவேற்றியுள்ள அமேரிக்க, ஐரோப்பிய தமிழ்ச் சங்கங்களின் பெயர்களைக் கவிஞர் தாமரை வெளியிட்டார். இதன் தாக்கத்தினாலும் சிவத்தம்பி இந்த மகாநாடு கொழும்பில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டிருத்தலும் சாத்தியமே. அரசியல் சாயம் பூசப்படும் என்று அவர் அடித்துச் சொல்லுகிறார். என் எதிர்ப்புக்கு இதனையே பிரதான காரணியாகச் சுட்டிக்

காட்டினேன். இச்சூழலிலே, மூளைச்சலவை செய்யப்பட்ட, பதவி வெறிகொண்டலையும் மனப்பிறழ்வாளரே மகாநாட்டைக் கொழும்பிலே நடத்தவேண்டுமென்று அடம்

பிடிப்பான் என்பதை முருகபூபதி அறியக்கடவர். "அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடத்தப்படும்' என்று அக்காலத்தில் விளம்பரம் செய்வார்கள். அதேபோலத்தான், நியாயங்கள் எதுவானாலும், நாங்கள் மகாநாட்டுக் காகக் கூத்துக்கட்டுவோம் என்று முருகபூபதி அறிக்கை விடுவதும்!

கொழும்புத் தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன. மகாநாட்டிற்கு எதிரான செய்திகளை வெளியிடலாகாது என்று வீரகேசரி, தினக்குரல் போன்ற தினசரிகள் எச்சரிக்கப் பட்டுள்ளனவாம். அரசியல் சாயம் பூசாதீர்கள் என்று முருகபூபதி அலறுகிறார். மகாநாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படுத்துவதில் ராஜபக்சே சகோதரர்கள் அக்கறையுடன் செயற்படுகிறார்கள். காரணம்?

நல்லூர்க் கந்தசாமி கோயில் விழா நடக்கவில்லையா? ஆடிவேல் விழா நடக்கவில்லையா? என்று ராஜபக்சேவின் குரலிலே டம்பமடிப்பதை நிறுத்தக் கடவர். நல்லூர்க் கோயிலுக்குச் செல்லும் சிங்கள பக்தர்கள் அநுபவிக்கும் சுதந்திரத்தைச் சைவ பக்தர்கள் அநுபவிக்காது தவிக்கிறார்கள் என்பது தெரியுமா? நயினாதீவு சிங்கள பக்தர்களினால் தினமும் படையயடுக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் கிராமங்கள் தோறும் புத்த ஆலயங்கள் கட்டப்படுவதைக் கண்டு தமிழர்கள் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளார்கள். தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தீவிரப்படுத்தப்படுகிறது என்பதும், தமிழர்களுடைய புனர்வாழ்வுப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதும் உலகறிந்த உண்மை. ஆனால் சகஜநிலை வந்துவிட்டதினால் தமிழ்த்திரைப்படம் காட்டப்படுவதாக முருகபூபதி வசுகோப்புக் காட்ட முனைவது மகா குழந்தைத்தனமானது. முதிர்ச்சி பெறாத உள்ளத்துடனும், சலவை செய்யப்பட்ட மூளையுடனும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் தலைமைப் பதவிக்கு ஏங்கிக் கிடக்கும் அந்த அப்பாவியை தமிழ் ஈழரும், தமிழ் எழுத்தாளர் - கலைஞர்கள் ஆகியோரும் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் இழந்துபோன அந்தஸ்தைத் தேட அலை கிறேனாம். சென்ற ஆண்டில் இலங்கையில் ஞானம் என் பவளவிழா மலர் வெளியிட்டது. அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து வெளிவரும் கலப்பை சிற்றிதழின் 15ஆம் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டேன். நான் பதவி, புகழ், பணம் ஆகியவற்றை எதிர்பார்த்து எழுதுபவனல்லன். என்னால் எழுதாமல் இருக்க முடியாது. அஃது என் சுவாசம். தமிழ் ஈழரின் படைப்பு ஆற்றல் உலகளாவியதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது என் ஊழியம். உலகளாவிய அளவில் எனக்கு அபிமானிகளும் வாசகர்களும் உண்டு என்பது உபவிளைவே.

இலங்கையிலே, அறுபதுகளிலேயே தமிழ்த் தேசியத்தை நிராகரித்து, தங்கள் முகவரிகளையும் தொலைத்தவர்கள் மார்க்சியர். அந்த நிலையில், தமிழின் மொழித் தனித்துவத்தையும், 2000 ஆண்டுகளுக்கு மேலாகப் பேணப்படும் இலக்கியக்கூறுகளையும் தொலைக் காது தமிழ் செய்தல் வேண்டும் என்பதுதான் நற்போக்கு இலக்கியச் சித்தாந்தம். அரை நூற்றாண்டுக்கு முன்னர் எஸ்.பொ வால் முன்மொழியப்பட்டது. இந்த ஆண்டில் "நானும் தமிழ் மார்க்சியரே' என்று கோவையில் சிவத்தம்பி உருகியுள்ளார். அவருக்கே புரிந்துகொள்ள ஐம்பது ஆண்டுகள் ஆகி இருக்கிறது என்றால், சின்னப் பையனுக்கு இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ நான் அறியேன்.

முருகபூபதி தமிழ்ப் பகுதிகளிலே நடைபெற்ற விடுதலைப் போரின் கோரங்களுக்கு முகங்கொடுக்காதவர். நீர்கொழும்புவாசி. பாதிப்படையாதவர். பொருளாதார அகதியாக அவுஸ்திரேலியா வந்தவர். முள்ளிவாய்க்கால் படுகொலை அரங்கேற்றப்படுவதற்கு முன்னர் இராஜபக்சே சகோதரர்களுடன் விருந்துண்டு மகிழ்ந்த "எழுத்தாளர்கள்' அவருக்குப் பக்க பலமாக இருக்கிறார்கள். "விடுவிக்கப்பட்ட பகுதியில், இலக்கிய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோரும் அவருடன் இணைந்துள்ளார்கள். நான்காண்டுகளாகத் திட்டமிடு வதாகக் கூறுவதின் மூலம், "நான் என்றும் தமிழ்த் தேசியத்தினாற் பாதிக்கப்படாத நீர்கொழும்பான்' என்று பெருமிதம் பேசுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா? இத்தகையவர்கள் சேர்ந்து சர்வதேச எழுத்தாளர் மகாநாடு என்று "show' காட்டுவதை, தமிழ் ஈழர் என்றுமே மன்னிக்கமாட்டார்கள். சிவத்தம்பி ஆலோசனை கூறுவதைப் போல மேற்படி மகாநாட்டை இலங்கையல்லாது, வேறு இடத்தில் ஒழுங்கு செய்வதற்கு இன்னமும் காலங்கடந்துவிடவில்லை. பதவிகளிலும் வீண்பெருமைகளிலும் தொங்கிக் கொண்டிருக்காமல், அனைவரும் தமிழுக்கும் தமிழ் ஈழருக்கும் நல்லன செய்ய யோசிப்போம்.

எஸ்.பொ.

தொடர்புக்கு

எஸ்.பொ.

+91 9176333357

ponnuthurais@gmail.com

www.ponnuthurai.com

Link to comment
Share on other sites

தனது நேரத்தை யாழ் இணையத்தில் பதில் தர ஒதுக்கிய எஸ்போவுக்கு நன்றிகள்.ஈழத் தமிழ் இலக்கிய வரலாறு தெரியாதவரும் குழந்தைத் தனமானவரும் இந்த இலக்கிய அரசியலின் பின்னணி அறியாதோருக்கும் விளக்கமாகப் பதில் சொல்லி உள்ளீர்கள் நன்றிகள்.இனியும் குழந்தைத் தனமான வாதங்களில் காலத்தை வீணாக்காமல் , மா நாட்ட கொழும்பில் நடாத்தாமல் விட வேண்டும்.அல்லது அங்கு தான் சிறிலங்கா அரசின் தயவில் அதன் அச்சுறுத்தல்கள் மத்த்த் நடாத்தவேண்டும் என்றால் அது அனைதுத் தமிழர்களாலும் புறக்கணிக்கப் பட வேண்டிய ஒன்று,அதனை நடாத்த முனைபவர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள்.

நன்றி கந்தப்பு

எனக்கு கிடைத்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.