Jump to content

தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி

- லெ.முருகபூபதி

இலங்கையில், நீர்கொழும்பு என்ற சிறுநகரத்தில் 1951ல் பிறந்த லெ.முருகபூபதி 1972ல் 'மல்லிகை' இதழில் வெளியான சிறுகதை மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். 1977ல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய முருகபூபதி, நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், இ.மு.எ.சவின் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் செயற்பட்டவர். 1975ல் வெளியான 'சுமையின் பங்காளிகள்' என்ற இவரின் முதலாவது சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது. 2003ல் 'பறவைகள்' நாவலுக்காக முருகபூபதிக்கு சாகித்திய விருது கிடைத்தது. 1985ல் சோவியத் யூனியனின் அழைப்பின் பேரில் உலக இளைஞர் - மாணவர் விழாவிலும் பங்கேற்றவர். 1987ல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த முருகபூபதி, தொடர்ந்து பல்துறை சார்ந்தும் எழுதிவருபவர். இதுவரை பதினெட்டு நூல்கள் வெளியாகியுள்ளன. ஈழத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு உதவும் அமைப்பை கடந்த 20 வருடங்களாக நடத்திவருகிறார். கடந்த பத்து வருடங்களாக அவுஸ்திரேலியாவில் 'தமிழ் எழுத்தாளர் விழா'வையும் முன்னின்று நடத்திவருகிறார்.

எதிர்வரும் ஜனவரியில் கொழும்பில் நடக்கவிருக்கும் 'சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு' மீது விமர்சனங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கும் சூழ்நிலையில் அம்மாநாடு குறித்து மாநாட்டின் அமைப்பாளரான லெ.முருகபூபதியிடம் கேள்விகளை மின்னஞ்சலூடாக முன்வைத்தேன்.

- ஷோபாசக்தி

09.10.2010

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை வடக்கிலோ கிழக்கிலோ அல்லது மலையகத்திலோ நடத்தாமல் நீங்கள் கொழும்பில் நடத்துவதன் காரணம் என்ன?

எமது மாநாட்டை நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில் நடத்துவதற்கு எமக்கும் விருப்பம் இருந்தது. எனினும் அதற்கான ஒழுங்குகளை செய்வதில் பல சிரமங்கள் நீடிக்கின்றன. முக்கியமாகப் போர் முடிந்து மக்களின் மீள்குடியேற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், தென்பகுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் படிப்படியாக தமது சொந்த நிலங்களிற்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் அப்பகுதிகளில் தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்வதிலிருக்கும் சிரமங்களை நேரடியாகவே பார்த்தேன். நாம் கள ஆய்வு செய்தபின்பே இந்த முடிவுக்கு வந்தோம். மிகவும் முக்கியமான காரணம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரவிருப்பவர்களுக்கான, குறிப்பாக அப்பகுதிகளில் உறவினர்கள் எவரும் இல்லாத தமிழக மற்றும் மலேசியா, சிங்கப்பூர் பிரதிநிதிகளின் வசதிகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருந்தது. கொழும்பில் வாராந்தம் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் விழாக்கள் நடந்தவண்ணமிருக்கின்றன. எமது மாநாட்டை நான்கு நாட்களுக்கு கொழும்பில் நடத்துவது பலவிதத்திலும் வசதியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமாகும். வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இட நெருக்கடிகளையும் பல்வேறு சிரமங்களையும் நாம் உட்பட வருகை தருபவர்களும் எதிர்நோக்க நேரிடும். வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்கு வெளிநாட்டவர்கள் செல்வதெனில சிலவேளை பாதுகாப்பு அமைச்சகத்தில் அனுமதிகளைப் பெறவேண்டியுமிருக்கும். எனினும் வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களில் கொழும்பு மாநாடு முடிந்ததும் இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தும் யோசனை எம்மிடம் உண்டு. அவை இடத்துக்கிடம் ஒருநாள் நிகழ்வுகளாகவும் இலக்கியச் சந்திப்புகளாகவும் அமையலாம்.

இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்ன தொடர்புகளுள்ளன?

இதுதான் அண்மைக்காலங்களில் சிலரால் முன்வைக்கப்படும் விசித்திரமான கேள்வி. இந்தக் கேள்விக்கு இந்த மாநாட்டிற்கும் இலங்கை அரசுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவே எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதே எனது ஆணித்தரமான பதில். இலங்கையிலிருக்கும் பல எழுத்தாளர்களின் நீண்ட கால விருப்பம்தான் இந்த எழுத்தாளர் மகாநாடு. கடந்த பதினைந்து வருடங்களில் நான் இலங்கைக்கு பல தடவைகள் சென்று வந்திருக்கின்றேன். பல இலக்கிய சந்திப்புகளில் இவ்வாறு ஒரு மாநாட்டை நடத்துவது குறித்து நானும் சக எழுத்தாள நண்பர்களும் ஆலோசனை நடத்தியிருக்கின்றோம். அவுஸ்திரேலியாவில் 2001ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் விழாவை வருடந்தோறும் முன்னின்று நடத்தி வருகின்றேன். இலங்கை, தமிழகம், உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தெல்லாம் வருகைதந்த பல எழுத்தாளர்கள் அவுஸ்திரேலியா ஒன்று கூடலில் கலந்துகொண்டிருக்கிறார்கள். புதுவை இரத்தினதுரை, சேரன் உட்படப் பலரை விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றேன். ஆனால் அவர்களுக்கு வர விருப்பம் இருந்தும் வரமுடியாமல் போனது. ஷோபா உங்களைக்கூட அழைத்திருக்கிறேன்.. நினைவிருக்கிறதா? ஆனால் இலங்கையிலிருந்து எத்தனைபேரைத்தான் எம்மால் அவுஸ்திரேலியாவிற்கு அழைக்கமுடியும்? விமான டிக்கட்டுக்கான பணவசதி மற்றும் விஸா பிரச்சினைகள்... இப்படி எத்தனையோ இருக்கின்றன. அதனால் விடுமுறை காலத்திலாவது தாயகத்தில் அனைவரும் ஒன்று கூடலாம்தானே என்ற யோசனை உதித்தமையால்தான் இலங்கையைத் தெரிவுசெய்தோம். போர் முடிந்த பின்னர் இலட்சக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் தனிப்பட்ட முறையில் இலங்கைக்குச் சென்று திரும்பியிருக்கின்றனர். அத்துடன் பல தமிழகப் படைப்பாளிகள், கலைஞர்கள் மட்டுமன்றி புகலிடத் தமிழ் எழுத்தாளர்களும் தனிப்பட்ட பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு சென்று திரும்பக்கூடிய சூழ்நிலை இருக்கும்போது எமது ஒன்றுகூடலிலும் அவர்களால் கலந்துகொள்ள முடியும்தானே என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. உதாரணமாக தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் உட்பட பல எழுத்தாளர்கள் அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பியுள்ளனர். அங்கு தமிழ் ஊடகங்களில் தமது நேர்காணல்களைப் பதிவு செய்துள்ளனர். இதற்கு எந்தவொரு அரசியல் பின்னணியும் இல்லை. அதுபோன்று கலை, இலக்கிய, ஊடகக் குடும்பங்களின் ஒன்றுகூடலாகவும் அதேசமயம் அனுபவப் பகிர்வு நிகழ்வாகவும் இந்த மாநாடு அமையவேண்டும் என்பதுதான் எமது விருப்பமாக இருக்கிறது.

இந்த மாநாட்டின் மூலம் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவதற்கு ஏதாவது செயற்திட்டங்களை வைத்திருக்கிறீர்களா? அல்லது இந்த மாநாடு வெறும் ஒன்றுகூடலும் இலக்கியச் சுற்றுலாவும் மட்டுமா ?

இது வெறுமனே ஓர் ஒன்றுகூடல் கிடையாது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக மாநாட்டுக் குழு மிகத் தெளிவாக பன்னிரெண்டு செயற் திட்டங்களை வகுத்துக்கொண்டுள்ளது

தமிழ் இலக்கியம் சர்வதேச ரீதியாக கவனிப்புக்குள்ளாகியிருப்பதனால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் செம்மைப்படுத்தும் (செவ்விதாக்கம் - Copy editing) கலையை வளர்த்தெடுப்பது, தமிழ் இலக்கிய படைப்புகளை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகளை ஊக்குவிப்பதற்காக இத்துறைகளில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புகளை பேணி வளர்த்து மொழிபெயர்க்கப்படும் தமிழ் படைப்புகளை சர்வதேசரீதியாக அறிமுகப்படுத்தல், தமிழ் இலக்கிய படைப்புகளை ஆவணப்படுத்துவது தொடர்பாக இதுகுறித்த சிந்தனைகொண்டவர்களுடன் இணைந்து இயங்குவது, இலங்கையில் இயற்கை அனர்த்தம், யுத்தம், விபத்து ஆகியனவற்றால் பாதிப்புற்ற தமிழ் எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஒரு நம்பிக்கை நிதியத்தை (Trust Fund) உருவாக்குவது, தொடர்ச்சியாக இலங்கையில் வெளியாகும் கலை, இலக்கிய சிற்றேடுகளுக்கு அரச மானியம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாக ஆராய்ந்து மானியம் பெற்றுக்கொடுக்க முயற்சிப்பது, தமிழ் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான பணிகளை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைகளை பெறுதல், நடத்தப்படவிருக்கும் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் கலை - இலக்கியத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல், தமிழ் எழுத்தாளர்கள் - இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் - இதழாளர்கள் - ஊடகவியலாளர்கள் - ஓவியர்கள் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக உறவுப்பாலத்தை உருவாக்குதல், இலங்கையிலும் சர்வதேசரீதியாகவும் இலக்கியத்துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறைப் படைப்பாளிகளின் பங்களிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை ஊக்குவித்தல், அத்துடன் சிறுவர் இலக்கியத்துறையை மேம்படுத்துதல், குறும்படம் தொடர்பான பிரக்ஞையை தமிழ் மக்கள் மத்தியில் வளர்த்து தேர்ந்த சினிமா ரஸனையை வளர்த்தல், ஓவியக்கலை, ஒளிப்படக்கலை, கணினிக்கலை (Graphics ) முதலான துறைகளில் ஈடுபடும் இளம் தலைமுறையினருக்கும் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் மத்தியில் உறவுகளை ஏற்படுத்தும்விதமான காட்சிப்படுத்தும் (Demonstration ) கருத்தரங்கு அமர்வுகளை நடத்துதல், கூத்துக்கலை - நாடகம் - சிறுவர் நாடகம் தொடர்பான கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறை ஆகியனவற்றையும் அரங்காற்றுகைகளையும் நடத்துதல் ஆகியவையே அந்தச் செயற்திட்டங்கள். இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இம்மாநாடு ஒரு திறப்பாகவும் களமாகவும் அமையும் என நம்புகிறோம்.

விழாவிற்கான நிதியை எவ்விதம் திரட்டப்போகிறீர்கள்? விழாவின் முன்தயாரிப்பு வேலைகளிற்காக இதுவரை செலவிடப்பட்டிருக்கும் பணம் எங்கிருந்து பெறப்பட்டது?

27 டிசம்பர் 2009 தினக்குரல் இதழில் இதற்கான பதிலை நான் ஏற்கனவே விரிவாகக் கூறியுள்ளேன். அவுஸ்திரேலியாவில் கலை, இலக்கியவாதிகளிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கடந்த பத்து ஆண்டுகளாக எழுத்தாளர் விழாக்களை நடத்திய அனுபவம் எனக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் இருக்கிறது. அதேபோன்று உலகெங்கும் பரந்துவாழும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட கலை, இலக்கிய ஆர்வம் மிக்க நண்பர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற்றே இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை நடத்தப்போவதாக அந்த நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றேன். இதே கருத்தையே 03.01.2010 அன்று கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டத்திலும் தெரிவித்திருக்கிறேன். புலம் பெயர்ந்து வாழும் எமது கலை, இலக்கியவாதிகளான நண்பர்களிடமிருந்து நிதியுதவி பெறுவதற்காக கொழும்பில் இம்மாநாட்டுக்காக நாம் ஒரு வங்கிக் கணக்கும் தொடக்கியுள்ளோம். இது குறித்துப் பலருக்கும் அறிவித்துமிருக்கின்றோம். இந்த தகவல்கள் சில இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.

இதுவரையில் நடந்த செலவுகளுக்கான நிதியுதவியை நானும், கொழும்பில் நண்பர் பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங்கும், 'ஞானம்' ஆசிரியர் தி. ஞானசேகரனும் வழங்கியிருக்கிறோம். கடந்த ஜனவரி 3ம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பான செலவுகள் உட்பட பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களை கூட்டத்திற்கு 'ஓட்டோ'வில் ஏற்றி வந்த செலவுகளையும் நானே பொறுப்பேற்றேன். பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங் அனைவருக்குமான மதிய உணவுச் செலவுகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம், ஹட்டன், திருகோணமலை முதலான பிரதேசங்களில் நடந்த மாநாடு தொடர்பான தகவல் அமர்வுக் கூட்டங்களுக்கு ஞானசேகரன் தமது சொந்தச் செலவில் சென்றுவந்தார். இந்தச் செலவுகள் உட்பட மாநாட்டுச் செலவுகள் பற்றிய வரவு - செலவு அறிக்கை மாநாடு முடிந்து ஒரு மாத காலத்துள் அங்கீகரிக்கப்பட்ட கணக்காய்வாளரின் மேற்பார்வையுடன் நிதியுதவி, நன்கொடை தருபவர்களுக்கு வழங்கப்படும். இதுதான் உண்மையே தவிர இம்மாநாட்டுக்கு இலங்கை அரசே நிதி பெய்கிறது என்ற செய்திகள் வெறும் வதந்தியே. இந்த வதந்திச் செய்திகளைப் பரப்புவர்கள் அவர்கள் பரப்பும் செய்திகளிற்கு ஆதாரங்களை வழங்க முடியாத நேர்மையற்றவர்கள்.

'குமுதம் ரிப்போட்டர்' இதழ் விழாச் செலவுகளையும் பயணச்சீட்டுகளையும் எழுத்தாளர்களிற்கான சுற்றுலாவையும் இலங்கை அரசு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக எழுதியுள்ளதே. நீங்கள் குமுதம் ரிப்போட்டருக்கு எதிர்வினை செய்திருக்கிறீர்களா?

ஷோபா! கருத்துக்களுக்குப் பதில் சொல்லலாம். ஆனால் கற்பனைகளுக்கு எப்படிப் பதில் சொல்லமுடியும். குமுதம் ரிப்போட்டரில் அப்படியான அவதூறு தகவல் வருவதற்கு முன்னர் எங்களது மூத்த படைப்பாளி எஸ். பொன்னுத்துரை, நாம் இலங்கை அதிபரிடமிருந்து லஞ்சம் வாங்கி மகாநாடு நடத்தவிருப்பதாக 'கீற்று' இணையத்தில் அபாண்டமாகப் பழி சுமத்தினார். என்னைப்பற்றி நீண்டகாலமாக நன்கு தெரிந்த ஒருவரே இப்படி உண்மைக்குப்புறம்பாக அவதூறு பரப்பித் திரியும்போது என்னையோ மற்றும் இந்த மகாநாட்டில் இணைந்து பணியாற்றும் எவரையுமே தெரிந்திராத குமுதம் ரிப்போட்டருக்கு வழக்கம்போலவே பரபரப்புக்கு ஒரு செய்தி தேவைப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். எஸ்.பொன்னுத்துரை 'தீராநதி' இதழிலும் (செப்டெம்பர்) தனது எள்ளல்களைத் தூவியிருந்தார். அதற்கு 'தீராநதி' அக்டோபர் இதழில் எனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளேன். குமுதம் ரிப்போட்டரில் சொல்லப்பட்டிருப்பதுபோல் எவருக்கும் இலங்கை அரசு விமானச் செலவுக்கும் இதர சுற்றுலாச் செலவுக்கும் பணம் கொடுத்திருந்தால் அதனைப் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் விபரங்களை 'குமுதம் ரிப்போட்டர்' வெளியிடலாம்தானே? Investigation Journalism செய்யும் 'குமுதம் ரிப்போட்டர்' இதனையும் துப்புத்துலக்கி வெளியிடலாம்.

எதிர்க்கவேண்டும், பகிஷ்கரிக்க வேண்டும் என்ற முன் தீர்மானங்களுடன் இயங்குபவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு கீற்று இணையமும் குமுதம் ரிப்போட்டரும் இன்னுஞ் சில இணையங்களும் உதாரணங்கள். அவ்வளவுதான். இவர்களுக்கெல்லாம் உட்கார்ந்து வரிக்குவரி எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தால் எமது மாநாட்டுப் பணிகளை யார்தான் செய்வது? அப்படியாயின் அவதூறுகளுக்குப் பதில் சொல்வதற்கும் நாம் ஒரு குழுவைத் தெரிவுசெய்ய வேண்டும். மாநாட்டை சீரியமுறையில் நடத்தி முடிப்பதுதான் நாம் இவர்களுக்கெல்லாம் சொல்லும் பதிலாக இருக்கமுடியும்.

விழாவில் இலங்கை அரசின் அமைச்சர்களோ அல்லது அதிகார வர்க்கத்தினரோ கலந்துகொள்வார்களா?

இதுவரையில் நாம் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அழைப்பு அனுப்பவில்லை. இது எழுத்தாளர்களின் மாநாடு. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை எமது மாநாட்டு நோக்கங்களில் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.

இலங்கையில் எழுத்தாளர்களால் எதையும் சுதந்திரமாகப் பேசிவிட முடியாத நிலையிருக்கையில் இந்த மாநாடு சாதிக்கப் போவது என்ன என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன?

மீண்டும் எமது நோக்கங்களையே பாருங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று நாம்தான் வெளியிலிருந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கின்றோம். இதே சுதந்திரம் போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர் வடக்கிலிருந்ததா? கிழக்கிலிருந்ததா? குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இருந்ததா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து சுதந்திரமாக எழுதுவது போன்று, பேசுவது போன்று உங்களால் வடக்கிலிருந்து முன்பு பேச முடிந்ததா? எழுத முடிந்ததா? இந்த அவலச் சூழல்களிற்கும் உள்ளேயிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களை நாம் கைவிட்டு விடுவதா?

இன்று இலங்கையில் எழுத்தாளர்களின் தேவைகள் என்ன? அவர்களில் போரினால் அல்லது வறுமையினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்திற்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? அவர்களின் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான எதிர்காலத்திற்கு நாம் தரப்போகும் நம்பிக்கைகள் என்ன? வன்னியில் எத்தனை பாடசாலைகள் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.? இந்தக் கவலைகள் எத்தனை புலம்பெயர் எழுத்தாளனிடமிருக்கிறது? வாழ்வாதாரத்திற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கையேந்திக்கொண்டிருக்கும் நாளைய தலைமுறை எமது படைப்புகளை, எழுத்துக்களைப் படிக்கவேண்டும் என்றால் அவர்களைப் பார்ப்பதற்காகவாவது மனிதாபிமானம் பற்றி வெளிநாடுகளிலிருந்து எழுதுபவர்கள், பேசுபவர்கள் இந்தச் சந்தர்ப்பத்திலாவது வந்து பார்க்கலாம்தானே. அந்தப் பிள்ளைகள் சுதந்திரமாக வாழ்வதற்கு, முதலில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பற்றி நாம் சிந்திக்கின்றோமா? எத்தனை புகலிட, ஈழத்துப் படைப்பாளிகளுக்கு இதுகுறித்த சிந்தனைகள் இருக்கின்றன? தங்கள் நூல்களை வெளியிடுவதிலும் அதற்கு விளம்பரம் தேடுவதிலும் ஆர்வம்கொண்டிருப்போர் ஈழத்தில் வருங்கால தலைமுறை குறித்து ஏதும் ஆக்கபூர்வமாக செய்ய முன்வருவார்களா?

நாம் மகாநாட்டு நோக்கங்களுக்காக ஒரு நிகழ்ச்சி நிரலை வடிவமைத்துள்ளோம். அதன் பிரகாரம் மாநாடு நடைபெறும். இம்மாநாடு இலங்கையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. முதலாவது மாநாட்டைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் மாநாடு எந்தெந்த நாடுகளில் நடைபெறப்போகிறதோ அதற்கான அமைப்புக் குழுக்களும் தெரிவுசெய்யப்படும். எனவே வருகைதரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு எதிர்காலத்தில் இயங்கவேண்டியிருப்பதனால் நாம் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மாநாட்டின் மீது விமர்சனங்களை வைத்த நமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.மீதும் அதை வெளியிட்ட 'கீற்று' இணைய இதழ் மீதும் நீங்கள் வழக்குத் தொடுக்கப்போவதாக எழுதியிருந்தீர்கள். எழுத்தாளர்களிடையே பரிமாறிக்கொள்ளப்படும் விமர்சனங்களையும் நடக்கும் கருத்துப் போர்களையும் நீதிமன்றம்வரை எடுத்துச் செல்வது எவ்வளவு தூரம் சரியானது என நீங்கள் கருதுகிறீர்கள்? இவை எழுத்துப் பரப்பிலேயே தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளல்லவா?

எஸ்.பொ. கீற்று இணைய இதழில் கருத்தா சொல்லியிருந்தார்? அவர் விஷம் கக்கியிருந்தார். நீங்களும் அவர் ஏதோ கருத்துச் சொல்லியிருப்பதாக அல்லவா பார்க்கிறீர்கள். 'லஞ்சம்' என்ற சொல்லை அவர் பயன்படுத்தியதன் மூலம் எமது எழுத்தாளர்கள் அனைவரையுமே அவமானப்படுத்தியிருக்கிறார். அவருடன் இந்த மகாநாடு சம்பந்தமாகத் தொடர்புகொண்டு பேசுவதற்குப் பல தடவைகள் முயன்றேன். அது அவருக்கு நன்கு தெரியும். ஒரு மூத்த படைப்பாளி என்ன செய்திருக்கவேண்டும்? என்னுடன் கலந்துரையாடியிருக்கலாம். அல்லது அவருக்கு நன்கு நெருக்கமான எமது மாநாட்டு இலங்கை இணைப்பாளர் 'ஞானம்' ஆசிரியருடன் தொடர்பு கொண்டு உரையாடியிருக்கலாம். ஆனால் இப்படி ஆரோக்கியமான புரிந்துணர்வுடன் எதனையும் முன்னெடுக்காமல், நாம் கொழும்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஏழு மாதங்கள் கடந்தபின்னர் திடீரென்று 'கீற்று' இணைய இதழில் பரபரப்பாக, உண்மைக்குப் புறம்பாக எழுதும்போது நாம் என்ன செய்ய முடியும்? சொல்லப்பட்ட அவதூறை நிரூபியும் அல்லது மானநட்ட வழக்கைச் சந்திக்க நேரும் என்றுதானே சொல்லமுடியும்.

பொன்னுத்துரை எழுத்துப்பரப்பிலே தீர்த்துக்கொள்ளத்தக்க கருத்துக்களையா முன்வைத்தார்? தயவுசெய்து எனது 'தீராநதி' பதிலைப் படியுங்கள். ஒன்றுக்கொன்று முரணாக, பரபரப்புக்காகவே அவர் செய்த திருகுதாளம்தான் அந்த வஞ்சனையான கூற்றுகள். சகோதர எழுத்தாளர்களைக் காயப்படுத்துவதில் அவர் கைதேர்ந்தவர். அவரது வரலாற்றில் எத்தனைபேரை இப்படி அவதூறு பொழிந்து காயப்படுத்தியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியும். அவர் ஏன் சுமார் ஏழு மாதங்கள் கடந்து இப்படி விஷம் கக்கினார் என்பதன் ரிஷிமூலம் எமது மாநாட்டின் பின்னர் வெளியாகும். அதுவரையில் பொறுத்திருங்கள்.

இந்த மகாநாட்டை நீங்கள் நடத்தத் திட்டமிட்டபோது யார் யாருடன் கலந்தாலோசனை செய்தீர்கள்? உங்களது திட்டத்திற்கு அவர்களின் எதிர்வினை எவ்வாறிருந்தது.?

இலங்கையில் மல்லிகை ஆசிரியரும் மூத்த படைப்பாளியுமான டொமினிக் ஜீவா, ஞானம் சிற்றிதழின் ஆசிரியர் உட்பட வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை பிரதேசங்களையும் சேர்ந்த பல படைப்பாளிகள், இலக்கியவாதிகளான சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வீரகேசரி - தினக்குரல் - தினகரன் ஆசிரியர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள்... இப்படிப் பலருடனும் இலங்கை செல்ல முன்னரே கடந்த வருடத்தின் இறுதியில் பல நாட்கள் உரையாடியிருக்கின்றேன். இந்தப் பட்டியலில் சுமார் நூறு பேர்கள் இருப்பார்கள். அத்துடன், அவுஸ்திரேலியா, கனடா, அய்ரோப்பிய நாடுகளில் வதியும் எழுத்தாளர்களுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.

கனடாவில் பூரணி மகாலிங்கம், பொ.கனகசபாபதி, உட்பட பலருடனும் மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். சேரன், செல்வா கனகநாயகம். அ.முத்துலிங்கம், ரஞ்சகுமார், கனடா உதயன் லோகேந்திரலிங்கம், தேவா ஹெரால்ட், ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, நிலக்கிளி பாலமனோகரன், டென்மார்க் ஜீவகுமாரன், தருமகுலசிங்கம், நூலகர் செல்வராஜா, மு.நித்தியானந்தன் அளவெட்டி சிறிசு கந்தராஜா, நான்காவது பரிமாணம் நவம், வி.ரி. இளங்கோவன் உட்பட பலர் மின்னஞ்சலில் தொடர்புகொண்டனர். சிலர் வரமுடியாதிருப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய விஸா சம்பந்தப்பட்ட காரணங்களைச் சொல்லியிருக்கிறார்கள். எல்லோருமே இது ஒரு நல்ல முயற்சி என்றுதான் பொதுவாகவே சொன்னார்கள்.

தமிழகத்திலிருந்து பா.செயப்பிரகாசம் கூட கடந்த பெப்ரவரி மாதம் வரவேற்று எழுதியிருந்த மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன். கொழும்பு உட்பட ஏனைய பிரதேசங்களில் நடந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு பலரும் என்னுடன் கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தனி ஜீவா உட்பட பலர் எனக்குக் கடிதங்கள் எழுதியிருப்பதுடன் மகாநாட்டுப் பணிகளில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். மேமன் கவி, ஸ்ரீதரசிங், திக்குவல்லை கமால், பேராசிரியர்கள் எம்.ஏ. நுஃமான், மௌனகுரு, மல்லிகை ஜீவா, ஓ.கே. குணநாதன், அன்னலட்சுமி ராஜதுரை, வசந்தி தயாபரன், தெணியான், கலாமணி, பத்மா சோமகாந்தன், ஜின்னாசரிபுதீன் மற்றும் பத்திரிகை - ஊடக நண்பர்களுடன் அடிக்கடி தொலைபேசித் தொடர்பில் இருக்கின்றேன். சிலரது கடிதங்கள் 'மல்லிகை', 'ஞானம்' உட்பட சில ஊடகங்களிலும் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.

நான் தொடர்புகொண்டவர்களிடமிருந்து எனக்குப் பெருத்த ஆதரவே கிடைத்தது. அவர்கள் பயனுள்ள யோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இப்போது மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு விடயத்தில் செய்ததுபோலவே ஒரு அந்தர் பல்டியடித்து இந்த மாநாட்டில் அவர் கலந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கிறதாகக் கருதுகிறீர்களா?

பேராசிரியர் சிவத்தம்பி நான் பெரிதும் மதிக்கும் கல்விமான். இலங்கை செல்லும்போதெல்லாம் அவரை நான் சந்திக்கத் தவறுவதில்லை. அவர் என்னிடத்தில் எத்தகைய அன்பு வைத்திருக்கிறார் என்பது பரஸ்பரம் எம்மிருவருக்குமே தெரியும். அவரிடம் நான் வைத்திருக்கும் அளவற்ற மரியாதை குறித்து என்னை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். எனினும் அவரது முரண்பாடான சில கருத்துக்கள் சகிக்க முடியாதவைதான். கொழும்பில் ஜனவரி 3ம் திகதி மாநாட்டுக்கான திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் சொன்ன கருத்துக்கள், அவை வெளியான இதழ்கள் அனைத்தும் நான் கைவசம் வைத்திருக்கின்றேன். அவர் அந்தர்பல்டி அடித்து இந்த மாநாட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனச் சொன்னதும், நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "என்ன சேர்... இப்படிக் காலை வாரிவிட்டீங்களே?" என்றுதான் கேட்டேன். அதற்கு அவர், ""இந்த மகாநாட்டை நானும் சேர்ந்து நடத்துவதாகப் பொன்னுத்துரை சொல்றானடாப்பா! நீங்கள் வந்து பேசச் சொன்னீங்க... வந்து பேசினேன். இப்ப உன்னோட ரெலிபோனில எல்லாத்தையும் கதைக்க ஏலாது, யாரையாவது வந்து என்னைச் சந்திக்கச் சொல்லு." என்றார். சிவத்தம்பி அப்படிச் சொன்னதற்கும் பொன்னுத்துரைதான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.

பொன்னுத்துரை, "பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களினால் நடத்தப்படும் மாநாடு" என்றும் சொல்லிவிட்டார் அல்லவா! ஏற்கனவே சிவத்தம்பி கலைஞருடைய அழைப்பால் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றுவந்து ஏச்சுப்பேச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார். பொன்னுத்துரை அப்படிச் சொன்னதும் அதிலிருந்து தப்பிக்க ஏதாவது சொல்லவேண்டும்தானே. அவர் மட்டுமல்ல, எஸ். பொன்னுத்துரை எமது மாநாட்டுக்கு வந்தாலும் நாம் அன்புடன் வரவேற்கத் தயாராகத்தான் இருக்கின்றோம். நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததைப் பகிர்ந்து, அறியாததை அறிந்துகொள்வதற்காகவும் தமிழ் இலக்கிய வளர்சிக்கான சில பணிகளை முன்னெடுக்கவுமே நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகின்றோம்.

நேரடியான அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று எழுதிக்கொண்டிருக்கும் எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்கள் கூட மகாநாட்டுக்கு வர மறுத்துள்ளார்களே?

அவரது பெயரும் குறிப்பிடப்பட்டு 'கீற்று' இணையத்தில் அந்தச் செய்தி வெளியானதும் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீண்டநேரம் உரையாடினேன். அதுவரையில் நானும் இந்த மாநாட்டின் பின்னணியிலிருப்பது அவருக்குத் தெரியாது. ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் நான் அவருக்கு விளக்க நேர்ந்தது.

இப்படித்தான் 'ஸீ தமிழ் தொலைக்காட்சி' கலாநிதி மற்றும் 'ஜூனியர் விகடன்' கதிர், கவிஞர் தாமரை ஆகியோருக்கும் விளக்க நேர்ந்தது. அவர்களுக்கு மின்னஞ்சலூடாகவே கடிதங்களை அனுப்பியிருந்தேன். அதனால் தாமரைக்கு அனுப்பிய கடிதம் பா. செயப்பிரகாசம் உட்பட பலருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலிருக்கும் கருணாகரமூரத்தியுடன் சுமார் ஒரு மணிநேரம் பேசியிருக்கின்றேன். அவருக்கும் மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் இருந்தது. பொன்னுத்துரையின் அபாண்டப் பழிச்சொற்களுக்குப் பிறகு அவரும் உங்களைப் போன்று என்னிடம் துருவித் துருவி விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தார். இப்படியே பலருக்கும் விளக்கம் சொல்வதிலேயே எனது பொழுது கழிந்திருப்பின் எனது நிலை என்ன என்பதைச் சீர்தூக்கிப்பாருங்கள்.

சந்தேகம் பொல்லாத வியாதி. முதலில் எவருக்கும் தன்னம்பிக்கை இருக்கவேண்டும். பிறகு மற்றவர்கள் மீது புரிந்துணர்வுள்ள நம்பிக்கை தோன்றவேண்டும். இல்லையேல் தாமும் சோர்ந்து மற்றவர்களையும் சோர்வடையச் செய்துவிடுவார்கள். 2020ம் ஆண்டளவில் உலகை இந்த 'சோர்வு' என்ற கொள்ளை நோய்தான் ஆக்கிரமிக்கப்போகிறது என்று சமீபத்தில்தான் படித்தேன்.

இந்த மாநாடுக்கு எதிராக இதுவரை ஈழத்திலிருக்கும் எழுத்தாளர்கள் பகிரங்கமாகவோ அல்லது உங்களிடம் நேரடியாகவோ எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளார்களா?

ஒரே வார்த்தையில் 'இல்லை' என்பதுதான் எனது பதில்.

எஸ்.பொ.வின் கண்டனம் மற்றும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச எழுத்தாளர் கூட்டமைப்பின் கண்டன அறிக்கை இவற்றின் பின்னால் உண்மைகள் இல்லாத பட்சத்தில் அவர்கள் இவ்வாறு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு எதிராகத் தீவிரமாகப் பரப்புரை செய்வதன் காரணமென்ன?

அவர்களைத்தான் கேட்கவேண்டும். ஈழப் போராட்டம் தொடர்பாக உணர்வுபூர்வமாகச் சிந்தித்தவர்கள் தமிழக எழுத்தாளர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பொன்னுத்துரை சகட்டுமேனிக்கு பொய்யும் புரட்டும் சொன்னதும் அவரது கூற்றுக்களை உண்மை என்று அவசரப்பட்டு நம்பிவிட்டார்கள். யாருக்காவது பொன்னுத்தரையிடம், நீங்கள் வைக்கும் குற்றசாட்டுகளிற்கு ஆதாரம் என்ன? என்று திருப்பிக் கேட்கத் தோன்றவில்லை. சரவணன் என்பவர் மாத்திரம் கீற்று இணையத்தில் நிதானமாகக் கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதுவரை தமிழ்த் தேசியவாதச் சாயம் பூசிக்கொண்டவர்கள் மட்டுமே மாநாட்டை விமர்சித்தார்கள். 'ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு' என்றொரு அமைப்புக் கூட எழுத்தாளர் விழாவை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இப்போது இடதுசாரியச் சிந்தனைகொண்டவராக அறியப்படும் யமுனா ராஜேந்திரன் போன்றவர்களும் கண்டனக் களத்திலும் கையெழுத்துச் சேகரிப்பிலும் இறங்கியிருப்பதை எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள்?

இந்த மாநாட்டோடு ஒபாமாவுக்கு என்ன கருத்துவேறுபாடு என்பது புரியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பல புதிய அமைப்புகள் தோன்றியிருக்கின்றன. இதில் பொதுநல நோக்கின்றி அவர்களது சுய தேவைகள் கருதி உருவான அமைப்புகளும் உள்ளன. ஈழத்து இலக்கிய உலகு பற்றியோ, புகலிட இலக்கியம் பற்றியோ இதுவரையில் அக்கறை காண்பிக்காதவர்களும்கூட எமது மாநாடு பற்றித் தெரிந்தவுடன் தத்தமது அமைப்புகளின் ஊடாக அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன் மூலமாவது அவர்களுக்கு ஈழத் தமிழ் இலக்கியம், எழுத்தாளர் ஒன்று கூடல் பற்றிய பிரக்ஞையை நாம் உருவாக்கியிருக்கிறோம் என்ற ஆறுதல் எமக்குண்டு.

யமுனா ராஜேந்திரனின் நிலையும் எஸ். ராமகிருஷ்ணனின் நிலை போன்றதுதான். பொய்யுரைகளை நம்பினார்களேயன்றி பகுத்தறிந்து, மாநாட்டு ஏற்பாட்டாளர்களுடன் குறைந்தபட்சம் சிறு உரையாடலைக்கூட நடத்தாமல் உணர்ச்சி வேகத்தில் இயங்கத் தொடங்கியுள்ளனர். வெற்று உணர்ச்சிகளினாலேயே நாம் மிகப் பெரிய அவலங்களைச் சந்தித்திருக்கின்றோம். விவேகத்துடன் இயங்குவதன் மூலம் வருங்கால தலைமுறையினருக்காவது நம்பிக்கையைக் கையளிக்க முடியும் என நம்புகின்றேன்.

இந்த மகாநாட்டை ஊக்குவிப்பதற்காக இலங்கை அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளதா? அவ்வாறு எடுத்தால் அது சரியானது என நீங்கள் கருதுகிறீர்களா?

மீண்டும் எமது நோக்கங்களைப் பாருங்கள். இலங்கை அரசு இலங்கை மக்களின் வரிப்பணத்திலும் மக்களின் வாக்குகளிலும் இயங்குகிறது. அரசிடம் எதனை முன்னிட்டும் மக்கள் கோரிக்கைகளை முன்வைப்பது அடிப்படை உரிமை. குறிப்பாக 'மானியம்' பற்றி அறிந்திருப்பீர்கள். மேலை நாடுகளில் அரசுகள் பல்தேசிய கலாசார ஆணையங்கள் மூலம் கல்வி, கலை, இலக்கிய, கலாசாரப்பணிகளுக்காக மானியங்கள் ஒதுக்குவதை அறிந்திருப்பீர்கள். இலங்கையில் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியனவற்றில் இயங்கும் நூலகங்களுக்கு கல்வி அமைச்சின் ஊடாக மானியம் வழங்கி நூல்களைக் கொள்முதல் செய்ய உதவும் நடைமுறை இருக்கிறது. இது சீராக நடைபெறுகிறதா என்பது குறித்துச் சில விமர்சனங்கள் இருக்கின்றன என்பது வேறு. தமிழகத்தில் நூலக அபிவிருத்திச் சபை மூலம் தமிழ் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை அறிவீர்கள். வணிக இதழ்கள் தவிர்ந்த சில இலக்கிய சிற்றிதழ்களுக்கும் அரசின் ஆதரவு இந்த விநியோகத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையிலும் இப்படியான மானிய உதவியை அரசிடம் கோருவதில் ஏதும் தவறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? இதுவிடயத்தில் அரசுடன் பேசவேண்டிய தேவை இலங்கையில் நீண்டகாலம் சிற்றிதழ்களை நடத்துபவர்களுக்கு உண்டு. அதனால் அதனை வலியுறுத்துவதும் அதற்காக அரசுக்கு அழுத்தம் பிரயோகிப்பதும் எமது கடமைகளில் ஒன்றென நினைக்கின்றோம்.

இந்த மகாநாடு குறித்து இதுவரை அரசு தரப்பிடமிருந்தோ அதிகார வர்க்கத்திடமிருந்தோ விழாக் குழுவினருக்கு ஏதாவது அழுத்தங்கள் வந்துள்ளனவா?

இதுவரையில் இல்லவே இல்லை. இப்படி ஒரு மாநாடு நடக்கவிருக்கும் தகவலே இனிமேல்தான் தெரியவரலாம். கலை, இலக்கிய ஆர்வம் உள்ள பல தமிழ், சிங்கள, முஸ்லிம் எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களுடன் கூட நாம் இதுவரையில் இதுபற்றி இன்னமும் பேசவில்லை என்பதும் உண்மை.

எழுத்தாளர் மாநாட்டில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் மகிந்த குடும்பத்தினரின் அராஜக ஆட்சி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்புள்ளதா?

இதுதான் மிகமிகச் சுவாரஸ்யமான கேள்வி. கண்ணதாசனின் பாடல்வரி ஒன்று இருக்கிறது. "இருக்கும் இடத்திலிருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே". வெளியிலிருந்துகொண்டு சௌகரியமாக எதுவும் கேட்கலாம். சிறு துரும்பைக்கூட எடுத்துப்போடாமல், முடங்கியிருந்துகொண்டு ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும். சூப்பர் ஸ்டாரின் எந்திரன் பட வசனகர்த்தாவிடம் இப்படி ஒரு கேள்வியை நிச்சயமாகக் கேட்கமாட்டீர்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரின் படங்களில் என்ன வசனங்கள் எப்படி வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களிலும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வசூலைக் குவித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் ஒன்றுகூடல் போன்ற அனுபவப் பகிர்வின் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பும் படைப்பாளியோ, கலைஞனோ ஊடகவியலாளனோ நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்கள் கூட அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எரியும் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் தன்னைத்தானே தகனம் செய்துகொள்ளவேண்டும் என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள், கட்டளையிடுகிறீர்கள்.. இது என்ன நியாயம்? இது கொடுமை.

இந்த மாநாட்டை இந்தியாவில் நிகழ்த்தாமல் யுத்தக் குற்றவாளியான இலங்கை அரசின் தலைநகரில் ஏன் நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வியில் நியாயமில்லை என்றா கருதுகிறீர்கள்?

இவ்வளவு காலமும் இந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் ஏன் இப்படி ஒரு மாநாடு பற்றிச் சிந்திக்கவில்லை.? இந்திய திரைப்படங்கள், இந்திய நூல்கள் இலங்கை வரலாம், விற்பனையாகலாம். ஆனால் ஈழத்து நூல்கள், ஈழத்துத் தமிழ் திரைப்படங்கள் அங்கு சந்தை வாய்ப்பை பெற முடியாது. இதுதான் இந்திய மத்திய அரசின் சட்டம். இதுபற்றி இதுநாள் வரையில் எந்தவொரு இந்தியத் தமிழ் எழுத்தாளனோ கலைஞனோ சிந்தித்திருப்பானா? தாய் நாடு - சேய் நாடு என்று சொல்லிச் சொல்லியே எங்களை நாமே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறோம். காலம்பூராவும் வல்லாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு தொங்குதசையாகவே நமது ஈழத்து கலை, இலக்கிய உலகம் வாழவேண்டும் என்பது எழுதாத விதியா?

இப்படிச் சொல்வதனால் என்னைப் பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம். இந்தியா எமது அயல்நாடு. தமிழக படைப்பாளிகள் பலர் எமது இனிய நண்பர்கள். அவர்கள் இலங்கை வரும்போதும் புகலிட நாடுகளுக்கு வருகைதரும் போதும் ஏற்றிப்போற்றுகின்றோம். தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு வித்திட்ட எங்களது அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரையே அவர்கள் மறந்துவிட்டார்களே! நவாலியூர் சோமசுந்தரப் புலவரை தெரியாதவர்கள் பலர் தமிழகத்தில் ஊடகங்களில் இருக்கிறார்கள் என்ற தகவல்கூட சமீபத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. "ஆறுமுக நாவலரைத் தெரியாது, நாவலர் நெடுஞ்செழியனைத்தான் தெரியும்" என்றாரே பயணக்கதை மன்னன் மணியன். ஈழத்துப் படைப்புகளுக்கு அடிக்குறிப்பு போட வேண்டும் எனறாரே கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜா. இப்படியாகச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இலங்கையில் தமிழர்கள் இரத்தம் சிந்தி உயிரைத் துறந்து தமிழை வளர்த்திருக்கிறார்கள், தக்கவைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழன் பாதுகாப்பின் நிமித்தம் ஏதிலியாக ஓடியபோதும் தமிழைக் கைவிடவில்லை. தமிழ் இலக்கியத்தை விட்டு விட்டு ஓடவில்லை. இந்தியச் சினிமா, இந்தியப் பதிப்பகங்களின் வெளிநாட்டு சந்தைக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்தான் இருக்கிறார்கள். இலங்கை தலைநகர் பற்றிக் கேட்கிறீர்கள், எண்பது வருடங்கள் கடந்தும் கொழும்பில் வீரகேசரி என்ற தமிழ்த் தேசிய தினசரி தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. இந்த எண்பது வருடகாலத்துள் 1958, 1977, 1981, 1983 வந்து போயிருக்கிறது. இனக் கலவரங்கள் வந்துற்றபோதும் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ் விழாக்கள் நடந்துகொண்டுதானிருக்கின்றன. வருடந்தோறும் ஆடி மாதம் வேல் ரதம் காலி வீதியில் நகர்ந்துகொண்டுதானிருக்கிறது. ஏராளமான தமிழ்ப் பாடசாலைகள் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன.

முருகபூபதியின் தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் என்ன?

முருகபூபதி அரசியல்வாதியோ, வியாபாரியோ, பிரமுகரோ இல்லை. முழுமையான இலக்கியவாதி. சிறிதுகாலம் வீரகேசரியில் பணியாற்றியமையால் ஒரு பத்திரிகையாளன் என்ற முகமும் உண்டு. மனிதாபிமானம்தான் எனது இயங்குதிசை. அந்த நிலைப்பாடு என்னிடமிருப்பதனால்தான் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் பணிகளில் பலருடன் இணைந்திருக்கின்றேன். எனது இலக்கிய செயற்பாடுகளும் மனிதாபிமானம் சார்ந்ததுதான். சுருக்கிச் சொல்வதெனில் மானிட நேயம்தான் எனது அரசியல்.

http://www.lumpini.in/sevvi_005.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.