• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கரும்பு

கருத்தாளர் வசம்புவும் யாழ் இணையமும்: சில எண்ணத்தடங்களும் எதிர்கால பார்வையும்

Recommended Posts

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

முன்பு எழுந்தமானமாக எழுதத்தோன்றும் போதெல்லாம் எழுதமுடிந்தது. இப்போது காலம், சூழ்நிலை பார்த்தே எழுதவேண்டியுள்ளது. இதனால் முன்புபோல் நம்மால் அடிக்கடி அங்கும் இங்குமாக ஆக்கங்களை படைக்க முடியவில்லை. ஆயினும்..

யாழ் இணையத்துடன் - நம்மைப்போன்ற வலைத்தள கருத்தாளர்களுடன் நீண்டதூரம் பயணம் செய்து அண்மையில் அமரத்துவம் அடைந்த 'வசம்பு' என அழைக்கப்படும் மதிப்புக்குரிய ‘சிவஞானசுந்தரம் கிருபானந்தன்’ அவர்களை நினைவுகூர்ந்து ஓர் ஆக்கத்தை படைக்கவேண்டிய கட்டாயத்தை எனது உள்ளம் கடந்த சில நாட்களாக வலியுறுத்தியது. ஆரம்பத்தில் இரண்டு வரிகளாயினும் ஓர் கவிதையாக - அஞ்சலிப்பா எழுதலாம் என்று பார்த்தேன். கவிதை எழுதுவதற்குரிய உளநிலை எனக்குள் ஏற்படவில்லை. எனினும்..

2004ம் ஆண்டு தொடக்கம் வசம்பு அவர்கள் யாழ் கருத்தாடல் தளத்தில் தனது எண்ணங்களை பகிர்ந்துவந்திருப்பினும், 2007ம் ஆண்டிலேயே நான் யாழ் இணையத்தில் இணைந்தாலும், கடந்த மூன்று முக்கால் வருடங்களில் வசம்பு அவர்களுடன் யாழ் கருத்துக்களத்தில் நான் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும், அத்துடன் தொழில்நுட்பம் - நவீனத்துவம் - நம்மவர் எதிர்காலம் இவைபற்றிய எதிர்கால சிந்தனைகளையும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக தெரிகின்றது.

வசம்பு:

வசம்புவுடன் நான் மிகவும் முறுகுப்பட்ட காலங்கள் இருக்கிது. ஆனால் பின்னர் அவர் யாழில கருத்தெழுதும் பாணியை பழகியபின்னர் வசம்புவுடன் ஆக்கபூர்வமான முறையில கருத்தாடல் செய்வது எப்படி எண்டு பழகீட்டன்.

கருத்தாடல் தளம் ஒண்டில தேவையானது தனது கருத்துகளை உறுதியாக நிண்டு சொல்லி, ஆதாரங்களுடன் நிரூபிக்க முயல்வது. அதாவது கிட்டத்தட்ட நாங்கள் மேடைகளில பார்க்கிற பட்டிமன்றம் மாதிரி எண்டு சொல்லலாம். வசம்புவிற்கு இந்தத்திறன் நிறையவே இருக்கிறது. ஆளைப்பார்த்து கருத்தாடல் செய்யாது எழுதப்பட்ட கருத்தை பார்த்து கருத்தாடல் செய்தால் வசம்புடன் யாழில முறுகுப்படுகின்ற பலர் ஆக்கபூர்வமான முறையில வாதம் செய்யமுடியும் எண்டு நினைக்கிறன்.

வசம்புவை எனக்கு தனிப்பட தெரியாது. வளமுடன் வாழ வாழ்த்துகள்!

மேற்கண்ட கருத்து 'யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்' எனும் தலைப்பில் - எனது அனுபவப் பகிர்வில் வசம்பு அவர்கள் குறித்து நான் முன்பு எழுதியது. ஓர் கருத்துக்களத்தில் கருத்தாளர் ஒருவர் எப்படி கருத்தாடல் செய்யவேண்டும் என்பதற்கு வசம்பு அவர்களும் சிறந்ததொரு உதாரணமாக விளங்கினார். கருத்தை பார்த்து, கருத்தை கருத்தால் வெல்லும் பாங்கு கருத்துக்களத்தில் உறவாடல் செய்பவர்களிற்கு காணப்படவேண்டிய முக்கியமானதொரு தகமை. குறித்த தகமையை வசம்பு அவர்களிலும் காணமுடிந்தது.

இங்கு, வசம்பு அவர்கள் தனிநபர் தாக்குதல் செய்யவில்லை, எப்போதும் கருத்திற்கே பதில் கருத்து வைத்தார் என்று நான் கூறவில்லை. ஓர் விவாதம் சூடுபிடிக்கும்போது - கருத்தாளர்கள் தாம் வைத்த கருத்தை துல்லியமானது என நிலைநாட்ட முயலும்போது - வாதத்தில் வெற்றியடைய முயற்சிக்கும்போது - ஓர் கட்டத்தில் அல்லது ஆரம்பத்திலேயே உணர்ச்சிவசப்பட்டு சககருத்தாளர்கள் மீது தனிநபர் தாக்குதல்கள் செய்வது வழமை. இங்கு வசம்பு அவர்களும் அவ்வாறான சூழ்நிலைகளில் சில சமயங்களில் நிதானம் இழந்ததை அவதானித்துள்ளேன். கருத்துக்களத்தில் ஓர் இலட்சிய புருசராக இல்லாதுவிடினும், ஒப்பீட்டளவில் வசம்பு அவர்கள் நாகரிகமான முறையில் கருத்தாடல்களில் பங்குபற்றினார்.

இணையத்தில் கருத்தாடல் செய்வது சம்பந்தமான சில விடயங்களை அலசிப்பார்த்துவிட்டு தொடர்ந்து வசம்பு அவர்களுடனான நினைவுப்பகிர்விற்கு திரும்புவது உசிதமாகபடுகின்றது:

வலைத்தளத்தில் கருத்துக்களம் என்று பார்த்தால்: முதலாவது விடயம் இது புதியது - இதன் வயது சுமார் பத்து ஆண்டுகளே - இங்கு நாம் இதனை பரீட்சிக்கும் முதலாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். உலகத்தில் எவருக்குமே இதுபற்றி முன் அனுபவம் இல்லை. எல்லோரும் நாளாந்தம் புதிய, புதிய அனுபவங்களை பெறுகின்றார்கள். கடந்த மூன்று வருடங்களிற்கு முன்னர் கருத்துக்களம் பற்றி எனக்கு காணப்பட்ட பார்வைக்கும் இன்று கருத்துக்களம் பற்றி எனக்குள்ள பார்வைக்கும் இடையில் ஏராளம் வேறுபாடுகள் உள்ளன. தினமும் புதிய, புதிய அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கின்றன, அவைமூலம் தொடர்ச்சியாக எம்மை நாம் கற்பித்து கொள்கின்றோம். அதாவது, முதலாவது விடயமாக நிருவாகம் + மட்டறுத்துனர்கள் + கள உறவுகள் + வாசகர்கள் என அனைத்து பங்காளிகளிற்குமே கருத்துக்களம் பற்றி போதிய அறிவு, அனுபவம் இல்லை. நாம் எல்லோருமே இந்த விடயத்தில் கற்றுக்குட்டிகள். பல சமயங்களில் கசப்பான அனுபவங்கள் கருத்துக்களத்தில் பெறப்படுவதற்கு இது காரணமாக அமைகின்றது.

இரண்டாவது விடயம் ~ நேரம் | நேரக்கட்டுப்பாடு | நேரமிகுதி ~. கருத்துக்களத்தின் பங்காளிகளாக அமையக்கூடிய வெவ்வேறு மட்டத்தில் உள்ளவர்களிடையே காணப்படும் சீரற்ற நேரப்பங்கீடு வலைத்தளம் ஊடாக இயங்கும் கருத்துக்களத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுவதற்கும் - இறுதியில் மனக்கசப்புக்கள், விரும்பத்தகாக அனுபவங்கள் பெறப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது. உதாரணத்திற்கு நிருவாகிக்கு அல்லது மட்டறுத்துனர்களிற்கு தமது பணியை செய்வதற்கு நேரம் போதாவிட்டால் சில மணி நேரங்களிலேயே கருத்துக்களத்தில் அமளி, துமளி ஏற்படக்கூடும்.

மூன்றாவது விடயம் ஒவ்வொரு கருத்தாளரும் வெவ்வேறு காரணங்களிற்காக யாழ் இணையத்திற்கு வருகின்றார்கள், கருத்தாடல் செய்கின்றார்கள். பொழுதுபோக்கு, விளம்பரம், தகவல் பரிமாற்றம், போராட்டம் என இவர்களின் தேவைகள் வேறுபடுகின்றன. ஒருவருக்கு ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தேவைகள் காணப்படலாம். இதனாலும் பல பிரச்சனைகள் உருவாகின்றன. உதாரணமாக போராட்டத்தை மையப்படுத்தி கருத்தாடலில் ஈடுபடுபவருக்கு பொழுதுபோக்கு சம்மந்தமான ஓர் கருத்தாடலில் கருத்தாளர்கள் அரட்டை அடித்து மகிழ்வது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு பொழுதுபோக்கு பகுதியில் கருத்தாடல் செய்பவர்கள் மீது அவர் தனிநபர் தாக்குதலும் செய்யக்கூடும்.

நான்காவது விடயம், எமக்கு எதிர்ப்புறமாக - தனது இல்லத்தில் அல்லது அலுவலகத்தில் அல்லது நூல்நிலையத்தில் கணணிக்கு முன்னால் அமர்ந்து கருத்தாடல் செய்யும் சககருத்தாளர் பற்றி அவர் எவ்வாறான நிலையில் - எப்படியான சூழ்நிலையில் ( உடல் + உளம் ) - எத்தகைய அழுத்தங்கள் மத்தியில் - கருத்தாடல் செய்கின்றார் என்று எம்மால் அறியமுடியாது போகின்றது. இதை ஒருவிதத்தில் தத்தம் கண்களை கட்டிக்கொண்டு, காதைப்பொத்திக்கொண்டு ஆளையாள் தடவிப்பார்த்து உரையாடல் செய்வது என்றுகூட கூறலாம்.

மேற்கூறியவை போன்று பலநூறு விடயங்கள் கருத்துக்களத்தில் சம்பந்தப்பட்டுள்ளன. இதை நான் ஏன் இங்கு கூறவேண்டியுள்ளது?

அடிப்படையில் கருத்துக்களத்திற்கு சில எல்லைகள் உள்ளன. நாளாந்தம் எல்லைகளில் மாற்றங்கள் வரலாம். ஆயினும், யதார்த்தம் என்று பார்க்கும்போது ஒட்டுமொத்த தோற்றமாக கருத்துக்களத்தை தரிசிக்கும்போது எமக்கு தனிநபர்களே பூதாகரமாக தெரிகின்றார்கள். இலகுவில் ஓர் கருத்தாளர் மீது எமக்கு கோபம் வருகின்றது. சொல்லப்பட்ட கருத்தின் மீதல்லாது சொல்லியவர் மீது கடிந்து கொள்கின்றோம். இந்தவகையில் வசம்பு அவர்களும் தொடர்ச்சியாக பலரது கோபத்திற்கு ஆளாகினார்.

யாழ் கருத்துக்களத்தில் சிவப்பு, பச்சை என புள்ளியிடும் ஓர் செயற்பாட்டு அமைப்பை அண்மையில் அறிமுகப்படுத்தினார்கள். உங்களிற்கு ( வாசகர்களிற்கு இந்தவசதி கொடுக்கப்படவில்லை, கருத்துக்கள உறவுகள் மட்டுமே இதனை பயன்படுத்தமுடியும் ) ஒரு கருத்து பிடித்தால் குறித்த கருத்திற்கு பச்சைப்புள்ளி வழங்கமுடியும், பிடிக்காவிட்டால் சிவப்பு புள்ளி வழங்கமுடியும். ஒருவர் ஒருநாளைக்கு மூன்று தடவைகள் சிவப்பு, பச்சை புள்ளிகளை வழங்கலாம். ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட உறுப்புரிமைகளை வைத்திருந்தால் ( உதாரணமாக எனக்கு கலைஞன், கரும்பு ஆகிய இரண்டு உறுப்புரிமைகள் உண்டு ) தனது ஒவ்வொரு உறுப்புரிமை மூலமும் மூன்று தடவைகள் சிவப்பு, பச்சை புள்ளிகளை வழங்கலாம். அதாவது இரண்டு உறுப்புரிமை வைத்திருக்கும் ஒருவர் ஆறுதடவைகள் ஒருநாளைக்கு புள்ளிகள் வழங்கமுடியும். மூன்று உறுப்புரிமைகள் வைத்திருக்கும் ஒருவர் ஒருநாளைக்கு ஒன்பது புள்ளிகள் வழங்கமுடியும்.

குறிப்பிட்ட புள்ளிவழங்கல் திட்டம் வசம்பு அவர்களிற்கு தனிப்பட உளவியல் ரீதியாக அதிக பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று கூறலாம். வசம்பு அவர்கள் தாயகம், போராட்டம், போராட்ட அமைப்புக்கள், அரசியல்... இவ்வாறான விடயங்களில் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்யும் பெரும்பாலான கருத்தாளர்களிற்கு பிடிக்காத கருத்துக்களை கூறினார். இதனால் தினமும் அவர் கருத்துக்களிற்கு சிவப்பு புள்ளிகளை சக கருத்தாளர்கள் வழங்கினார்கள். நான் ஒருபொழுதும் சிவப்பு புள்ளியை வசம்பு அவர்களிற்கு வழங்கியது கிடையாது. இதர சககருத்தாளர்களிற்கும் சிவப்பு புள்ளியை ஓரிரு தடவைகள் தவிர வேறு சந்தர்ப்பங்களில் வழங்கியது கிடையாது. ஆனால்.. தினமும் எனக்கு பிடித்தமான கருத்துக்களிற்கு பச்சைப்புள்ளிகளை தாராளமாக வழங்கி வந்தேன், வழங்கி வருகின்றேன். சக கருத்தாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதே இதற்கான முக்கிய காரணம்.

மீண்டும் சிவப்பு புள்ளி விடயத்திற்கு வருவோம். சிவப்பு அல்லது பச்சை புள்ளி வழங்கப்படும்போது ( + ) , ( - ) கணிப்பீடு போல் எது தொகையில் அதிகளவில் உள்ளதோ அது கருத்தாளர் ஒருவரின் பிரத்தியேக பக்கத்தில் ( Profile ) வெளிக்காட்டப்படும். உதாரணமாக எனக்கு மொத்தமாக 200 சிவப்பு புள்ளிகளும் 450 பச்சை புள்ளிகளும் கிடைத்தால் இறுதியில் 450 - 200 = 250 பச்சைப்புள்ளிகள் எனது பிரத்தியேக பக்கத்தில் வெளிக்காட்டப்படும். அதிகளவு பச்சை புள்ளிகளை பெறும்போது எனது மதிப்பு நிலை Excellent - மிகநன்று என காண்பிக்கப்படும். மாறாக 450 சிவப்பு புள்ளிகளும் 200 பச்சை புள்ளிகளும் மொத்தமாக எனக்கு கிடைத்திருந்தால் இறுதியில் 200 - 450 = - 250 சிவப்பு புள்ளிகள்... எனவே எனது பிரத்தியேக பக்கத்தில் எனது மதிப்பு நிலை - Reputation மிகவும் கேவலமானது - Very Bad என காண்பிக்கப்படும்.

வசம்பு அவர்களின் பிரத்தியேக பக்கத்தில் தினமும் அவர் பெற்ற அதிகளவான சிவப்பு புள்ளிகள் காரணமாக அவரது மதிப்பு நிலை - Reputation மிகவும் கேவலமானது - Very Bad என காண்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட புள்ளி வழங்கல் செயற்பாட்டு அமைப்பு நிச்சயம் வசம்பு அவர்களின் உள்ளத்தை மிகவும் பாதித்து இருக்கும் என நினைக்கின்றேன். இதன்பின்னர் சிறிதுகாலத்தின் பின் அவர் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்வதை வெகுவாக குறைத்துக்கொண்டார். யாழ் கருத்துக்களத்தில் அண்மைக்காலத்தில் வசம்பு அவர்கள் பங்குகொள்ளாமைக்கு தனிப்பட வேறு காரணங்கள் காணப்படலாம். ஆயினும், குறிப்பிட்ட இந்தவிடயமும் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடலில் ஈடுபடுவதற்கான அவரது ஆர்வத்தை குறைத்திருக்கலாம்.

நான் அண்மையில் தெருவில் நடந்து சென்றபோது நவீன தொழில்நுட்பங்கள், நவீனத்துவம், வியாபார உலகம் இவைபற்றிய சில எண்ணங்கள் எனக்குள் ஓடின. அப்போது இவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களில் இருந்து முதலில் என்னை காத்துக்கொள்ள வேண்டும், அடுத்ததாக எனக்கு நெருக்கமானவர்களை காத்துக்கொள்ள வேண்டும், மூன்றாவதாக சமூகத்தை காத்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்துக்கொண்டேன். நான் சுயநலத்தினால் இவ்வாறு கூறுகின்றேன் என்று நீங்கள் நினைத்தாலும், அதை நான் மறுக்கவேண்டிய தேவை இல்லாதுவிடினும்.. நான் முதலில் என்னை காத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியதற்கு முக்கியதொரு காரணம் உள்ளது. ஏன் என்றால்..

எனது வாழ்க்கை எனது கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே எனது சிந்தனைகளை எனது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது இலகுவானது. இதேபோல் எனக்கு நெருக்கமானவர்களிற்கு அன்புக்கட்டளை இடுவதன் மூலம் சில செய்கைகளை - தற்காப்பு முயற்சிகளை - Precautions - எடுக்கச்செய்து அவர்களையும் காக்கமுடியும். ஆனால்.. இந்த சமுதாயம் எனது கட்டுப்பாட்டில் இல்லை. சமுதாயத்தில் வாழக்கூடிய பெரும்பாலானவர்களிற்கு விரும்பாத கருத்துக்களை நான் கூறினால் 'எங்களுக்கு அறிவுரை சொல்ல நீ ஆரடா? சும்மா பொத்திக்கொண்டு போடா... லூசா..!' இவ்வாறு பதில் வரக்கூடும். எனவே, சமுதாயத்திற்கு எனது சிந்தனைகளை கூறுவது கடைசி செயற்பாடாகவே வருகின்றது.

உண்மையைக் கூறப்போனால்... தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம்.. இவற்றின் வேகத்திற்கு ஈடுகொடுத்து மனிதனின் உளவளம் தயாராகவில்லை. தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை. நீங்கள் எந்திரன் படம் பார்த்து இருக்கக்கூடும். அங்கு, கடைசியில் தானியங்கி மனிதன் எவ்வாறு நமது - நிஜமனிதனின் கட்டுப்பாட்டை மீறி இதர தானியங்கி மனிதர்களை உருவாக்கி நிஜமனிதரிற்கு பெரும் அழிவுகளை செய்கின்றானோ.. அது ஓர் பொழுதுபோக்கு படமாக காணப்படினும்... ஆனால்.. அச்சொட்டாக அவ்வாறான ஒரு நிலமையிலேயே இன்று உலகம் உள்ளது. அதாவது தொழில்நுட்பம், விஞ்ஞானம், வியாபாரம் இவை மனித வாழ்வை தமது பூரணகட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து மனிதனை அடிமைப்படுத்தி உள்ளன. இதனால் வருகின்ற கேடுகளிற்கு - இதனால் உடலாலும், உளத்தாலும் அடையக்கூடிய பாதகமான தாக்கங்களிற்கு மனிதனால் - எம்மால் முகம் கொடுக்க முடியவில்லை.

சரி, இவற்றை நான் ஏன் இங்கு கூறவேண்டும்? வசம்பு அவர்களின் கருத்தாடலை பார்க்கும்போது என்னால் ஓர் விடயத்தை ஊகிக்கமுடிகின்றது. அவர் மாற்றுக்கருத்தாளர் என்று நாமம் இடப்படுவதற்கு அல்லது யாழ் கருத்துக்களத்தில் உள்ள கடும் போக்காளர்களினால் துரோகி, எட்டப்பன் என்று முத்திரை குத்தப்படுவதற்கு - அவர் ஏன் அப்படி கருத்துக்களை வைத்தார் என்று கேள்வி எழுகின்றது. போர் மூலம் தீர்வு வரப்போவது இல்லை என்பது காலங்காலமாக அவர் உள்ளத்து உட்கிடக்கையாக இருந்திருக்கக்கூடும். இதனால் போர் - போர் சம்பந்தமான போராட்டங்கள் இவற்றில் அவருக்கு ஈடுபாடு இல்லாமல் போயிருக்கலாம். அவர் தனிப்பட்ட வாழ்வில் பெற்ற அனுபவங்கள் அவர் கருத்துக்களினை தீர்மானித்துள்ளன. இவ்வாறே, இதர கருத்தாளர்களின் கருத்துக்களும் தீர்மானிக்கப்படுகின்றன. எப்படியானாலும்...

ஆக்கபூர்வமான உரையாடல் - கருத்துக்களம் மூலம் சாதிக்கப்படக்கூடியவை எவை எனும் கேள்விகள் நமக்குள் எழுகின்றன. நடந்தவை நடந்தன. நடப்பவற்றையும், நடக்கப்போவதையும் தீர்மானிப்பதில் தனிநபர் -> நெருக்கமானவர்கள் - > சமுதாயம் எனும் ஒழுங்கில் நாம் நிச்சயம் செல்வாக்கு செலுத்தமுடியும். 'நீ எப்படியும் வாழ்ந்துபோட்டு போ. உன்ரை ஆக்களும் எப்பிடியாவது சீரழிஞ்சு போகட்டும். ஆனால்.. எங்கட சமுதாயத்தில கைவைக்க நீ ஆர்? உனக்கு என்ன தகுதி இருக்கிது? நீ இவ்வளவு காலமும் எங்கடை சமுதாயத்துக்கு உருப்படியாய் என்ன செய்தனீ..?' இதே பாங்கில் சக கருத்தாளர் என்னை விளம்பக்கூடும், சககருத்தாளரை அதே பாங்கில் நானும் விளம்பக்கூடும். இப்படியான உளப்போக்குகளை கருத்தாடலில் வெளிப்படையாக காண்பிக்காவிட்டாலும்.. உள்ளார இவ்வாறான உளநிலையில் நம்மில் பலரும் காணப்படக்கூடும். இது வாதம் ஒன்று வைக்கப்படும்போது வாதிடுபவர்கள் வாதத்தினை மையப்படுத்தாது வாதிடுபவர்களை மையப்படுத்தி கருத்துக்களை திசை திருப்புவதற்கும் ஏதுவாக அமைகின்றது.

அடுத்த ஐம்பது ஆண்டுகள் எமது கைகளில் உள்ளன என்று நண்பர் ஒருவருக்கு கூறினேன். இதை எனது வாழ்க்கை -> எனக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கை -> சமுதாயத்தின் வாழ்க்கை எனும் ஒழுங்கில் பார்க்கமுடியும். பல்வேறு கருத்தாளர்கள் வலைத்தளம் ஊடாக கருத்துக்களத்தில் சங்கமிக்கும்போது 'சமுதாயத்தின் வாழ்க்கை' எனும் பகுதியை தொட்டு கருத்தாடல் செய்யும்போது முரண்பாடுகள் வருகின்றன, அவை பெருகுகின்றன. வசம்பு அவர்கள் தனது தீர்க்கதரிசனம் மூலம் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்த விடயங்கள் தற்போதுள்ள தாயக நிலமையை அவர் ஏற்கனவே எதிர்வுகூறியுள்ளாரோ - எச்சரித்துள்ளாரோ என எண்ணத்தோன்றுகின்றது.

இறுதியாக, நகைச்சுவை உணர்வை அளவுக்கு அதிகமாகவே பெற்றவர் வசம்பு. அவரது நக்கல், நளினங்களை விரும்பாத பலர் காணப்படலாம், விரும்பும் பலரும் காணப்படலாம். நான் முதலாவது வகை. குறிப்பாக காதல், பெண்கள், குடும்பவியல் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசம்பின் நகைச்சுவைகள் எனக்கு பிடிப்பதில்லை.

வசம்பு வெட்ட முடியாத வகையில விரசமாக எழுதுவார். இவர்கள் நகைச்சுவைக்குத்தான் அப்படி எழுதுவது. ஆனால் சிலவேளைகளில சிலருக்கு அவை கோபத்தை ஏற்படுத்தக்கூடும்.

நான் இதுபற்றி 'யாழ் இணையத்தில நான் அறிந்தவர்கள்/பழகியவர்கள் பற்றிய சிறுகுறிப்புக்கள்' எனும் தலைப்பில் - எனது அனுபவப் பகிர்வில் முன்புகூறிய கருத்திற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்:

நீங்கள் எதை விரசமாக நினைக்கின்றீர்களோ தெரியவில்லை. ஆனால் நான் கூடியவரை வக்கிரம் இல்லாது நகைச்சுவையாக சிலவற்றை எழுதியிருக்கின்றேன். முடிந்தவரை களத்தில் நாகரீகமாகவே கருத்தாடுகின்றேன்.

மற்றும்படி களத்தில் எவரிடமும் தனிப்பட்ட கோபதாபம் எனக்கில்லை. கருத்துக்களோடு மட்டுமே மோதியிருக்கின்றேன். அதுகூட தம்மை ஏதோ தேசியவாதிகள் போல் காட்ட சிலர் செய்யும் பில்டப்புகளையே சாடியிருக்கின்றேன். தம் மன அழுக்குகளை மறைக்கவும் தமது முதுகிலுள்ள அழுக்குகளை மறைக்கவும் அடுத்துவர்களின் அழுக்குகளை அம்பலப்படுத்துகின்றோம் என்று சிலராடும் கபட நாடகங்களையே சுட்டிக் காட்டுகின்றேன். இப்படியானவர்களின் செயல்களால் எம்மக்களிடையே மேலும் மேலும் பிளவுகளை ஏற்படுத்தி தாம் சுகம் காணவே இவர்கள் முயலுகின்றார்கள். ஆனால் நல்லவேளையாக களத்தில் கருத்தாடும் பல கருத்தாளர்கள் தெளிவான சிந்தனைகளுடன் இவர்களை இனம் கண்டுள்ளது பாராட்டப் பட வேண்டியது.

மொத்தத்தில் முரளி உங்கள் திறைமைகளை வைத்து ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தொடர்ந்தும் தாருங்கள். நீங்கள் உங்கள் உடல்நலத்தைப் பேணி நீண்டகாலம் வாழ்ந்து மேன்மேலும் படைப்புக்கள் தர நானும் மனனமார வாழ்த்துகின்றேன்.

நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று

கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து

சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்தசெயல் நோக்கின்

சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கையிது என்றேன்!

வாழ்க்கையில் நிலையாமை பற்றியும், நட்பையும் நினைவுகூர்ந்து சுவாமி விபுலானந்தர் இறந்துபோன தனது நண்பனுக்கு கங்கையில் விடுத்த ஓலை எனும் பெயரில் பெரிய கவித்திரட்டு ஒன்றே படைத்தார். என்னால் ஓர் சிறிய நினைவுப்பகிர்வை மட்டுமே சக கருத்தாளர் முகமறியாத உறவு வசம்பு அவர்களிற்காக இங்கு எழுதமுடிகின்றது. எல்லோரும் ஒருநாளைக்கு இறக்கத்தான் வேண்டும். ஆனாலும், பிரிவு என்பது துயரைத் தருகின்றது. அனுபவங்களை மீட்டுப்பார்க்கும்போது வேதனைகளும் சுகமான அனுபவங்களாக அமைகின்றன.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு!

நேற்றுவரை எம்முடன் உறவாடிய வசம்பு இனி மீண்டும் கருத்தாடல் செய்வதற்கு வரப்போவது இல்லை, இங்குள்ள பெரும்பாலான கருத்தாளர்களுடன் கருத்துக்களினால் முரண்படப்போவதும் இல்லை. கருத்துக்கள் எழுதிய அவரது விரல்கள்.. கைகள்.. சிந்தித்த மூளை... இவை எல்லாம் இறப்பின் சக்கரத்தில் இறுதிப்பயணத்திற்காக காத்து இருக்கின்றன. அவை சுட்டெரிக்கப்படுவதற்கு தற்போது மணித்தியாலங்கள் எண்ணப்படுகின்றன. ஆனாலும்..

யாழ் கருத்துக்களம் அழியாதவரை.. வசம்பு எனும் ஜீவன் இங்கு மெளனமாக வாழ்ந்துகொண்டே இருக்கும்...!

ஓம் சாந்தி..!

Edited by கரும்பு
 • Like 21

Share this post


Link to post
Share on other sites

அருமையாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள்...நன்றீ

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இலக்கியத்திற்கான 82ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற கொலம்பிய எழுத்தாழர் கப்பிரியேல் காசியா மாக்கஸ், தனது "நூற்றாண்டுத் தனிமை" (One hundred years of solitude) என்ற அற்புதமான நூலில் ஒரு கற்பனை நகரை உருவாக்கி அதில் கற்பனை மனிதர்களையும் சம்பவங்களையும் உருவாக்கி மலைப்பேற்படுத்தும் வகையில் சமூக விடயங்களை ஆராய்ந்துள்ளார். இதில் ஒரு இடத்தில் தான் உருவாக்கிய கற்பனை நகரில் அதன் மக்களிற்கான பிணைப்புப் பற்றிப் பேசுகையில் மாக்கஸ் பின்வரும் பொருள் ஏறத்தாள வரும்வகையில் கூறுவார்:

"இங்கு இன்னும் எவரும் இறக்கவில்லை. இந்நகரிற்கான மயானம் இன்னும் உருவாகவில்லை. இந்த மண்ணிற்குள் இன்னும் எவரும் புதைக்கப்படவில்லை. ஆரேனும் ஒருவர், இம்மண்ணின் மகவுகளில் ஒன்று, இந்த மண்ணிற்குள் புதைக்கப்படும் போது தான், இந்த மண்மீது இம்மக்களிற்குத் துண்டித்துக்கொள்ள முடியாத ஒரு பிணைப்பு உருவாகும். அதுவரை இந்நகரை விட்டு விலகிச்செல்லுதல் ஒன்றும் அவர்களிற்குச் சிரமமாய் இருக்காது" என்று.

யாழ்களம் என்பது கூட இவ்வாறு சிருஸ்டிக்கப்பட்ட ஒரு கற்பனை நகரம் தான். நாம் எல்லாம் இந்நகரின் வாசிகளாக உலாவுகிறோம். இப்போது தான் யாழ்களம் என்ற சிருஸ்டிக்கப்பட்ட நகரில் ஒரு சாவு நிகழ்ந்துள்ளது. இச்சாவு, இக்களத்தை விட்டு விலகுவதைப் பலரிற்கு இனி முன்னதை விடச் சிரமாக்கும் என்று, மாக்கஸின் அவதானத்தோடு ஒத்துப்போகும் வண்ம் அமைகிறது முரளியின் இப்பதிவு.

உள்ளம் திறந்த, உணர்ச்சிபூர்வமான உங்கள் பதிவிற்கு நன்றி கலைஞன்.

Edited by Innumoruvan
 • Like 8

Share this post


Link to post
Share on other sites

கலைஞன் என்கின்ற கரும்பு அவர்களது இடுகை அருமையான பல விடையங்களை உள்ளடக்கி யாழ் களத்தினின்றே நிரந்தரமாக நீங்கிப்போன ஒரு உறவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தது. தவிர இன்னுமொருவன் இவ்விடுகைக்கான தங்களது பதிலிடுகை சிறப்பாகவுள்ளது. கரும்பினது சுவாமி விவேகானந்தர் அவர்களது கங்கைவிடு தூதின் எடுகோளும். அதற்காகவே அமைந்ததுபோனற இன்னமும் ஒருத்தரும் இறக்கவில்லை எனும் உரைநடையும். நீங்கள் இருவரும் யார் எங்கிருக்கிறீர்கள் எனும் வினாவையும் உங்களைச் சந்திக்கவேண்டுமெனும் அவாவையும் ஏற்படுத்துகிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நன்றி கரும்பு

தங்களது ஆக்கத்துக்கும் நேரத்துக்கும்....

வசம்பு அவர்களின் ஆத்மசாந்திக்காக செய்யும் இவ்வகையான தேடுதல்களை வரவேற்கின்றேன். ஊக்கமும் தருகின்றேன்.

ஆனால் இதற்குள் சில கேள்விகள் உண்டு எனக்கு.

அதுபற்றி வேறு ஒரு இடத்தில் விவாதிக்கலாம். இதற்குள் அது வேண்டாம்.

நன்றி.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம் கரும்பு அருமை அருமை ....; வசம்புவின் மரணசெய்தி பற்றி சாந்தி அவர்களே முதலில் அறியத் தந்ததுதடன் யாழில் செய்தி இணைப்திருப்பதாகவும் கூறியிருந்தார் உடனேயே யாழில் வசம்பு பற்றிய நினைவுளை பதிவாக இடலாமென நினைத்தேன் ஆனால் எவ்வித ஆக்கமோ அரசியல் பற்றிய விடயங்களோ இனி எழுதுவதில்லைய எடுத்துக்கொண்ட சத்தியம் தடுத்துவிட்டது காரணம் நானும் வசம்பு அவர்களிற்காக எழுதிய நினைவவை மீட்டல்களின் ஏதாவது ஒரு வசனத்தை இங்கு யாராவது எடுத்து வைத்துக்கொண்டு பின்னர் நேசக்கரம் செயற்பாட்டை விமர்சித்து விடுவார்கள் என்கிற பயம்தான் ஆனாலும் வசம்பு அவர்கள் பற்றிய உயர்வான எண்ணமே என் நினைவலைகளில் தொடர்ந்திருக்கும் நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

கரும்பு வசம்பு அண்ணாவை ஒரு ஆக்கத்தினூடு நீங்கள் நினைவு கூறுகின்றமை வரவேற்கத்தக்கது.

ஆனால் இதில் சில விடயங்களை வசம்பு அண்ணா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் நிராகரித்திருப்பார். அதாவது சிவப்பு புள்ளிகள் கண்டு அவர் பயந்திருக்கலாம் என்பது. பலமான கருத்தியல் போர்களை தனித்து நின்று எதிர்கொண்ட வசம்பு அண்ணா நிச்சயம் இவற்றிற்கு பயந்திருக்கமாட்டார்.

நான் இந்தக் களத்துக்கு வந்த புதிதில் சில அரசியல் விடயங்களை முன் வைத்து என்னை யாழில் இருந்து தடை செய்ய தலைப்பிடப்பட்ட போது.. வசம்பு அண்ணா துணிந்து ஒரு கருத்தாளனுக்கு உரிய முறையில் தார்மீக ஆதரவளித்திருந்தார். அது மறக்க முடியாதது.

வசம்பு அண்ணாவிடம் எனக்கு பல விடயங்கள் பிடித்திருந்தாலும் சில சமயங்களில் போராளிகளின் (அவர்கள் விடுதலைப்புலிகள் என்ற ஒரே காரணத்திற்காக) இழப்பை அவர் கையாண்ட விதத்தில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. ஏன் அதை அவர் அப்படிக் கையாண்டார் என்பது எனக்கு இன்றும் புரியவில்லை.

எப்போதும் ஒரு மனிதனின் நல்ல பக்கத்தை தான் அதிகம் புரட்டிப் பார்க்க வேண்டும்.. அந்த வகையில் வசம்பு அண்ணா நமக்கு அளித்த நல்ல விடயங்களை இன்னும் முன் வைப்பது சாலச்சிறந்தது.. சில மிகைப்படுத்தல்களை தவிர்ப்பது ஆக்கத்துக்கு இன்னும் உயிர்ப்பூட்டும் என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காலத்திற்கேற்ப ஆரோக்கியமானதொரு நினைவுகூரலுக்கு நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு ஆக்கம்.

யாழ்களத்தை மெருகூட்டியவர்களில் அண்ணன் வசம்புவும் ஒருவர்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி கரும்பு அண்ணா,

வசம்பு அண்ணாவுடன் நான் கருத்துப்பகிர்ந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் ஒரு கள உறவாய் உங்கள் நினைவுப்பகிர்வை படிக்கும் போது உங்கள் மீதும் களத்தின் மீதும் ஒரு நல்ல அபிப்பிராயம் தோன்றுகிறது.

Share this post


Link to post
Share on other sites

நன்றிகள் கரும்பு......

எல்லோரும் இப்ப சுடலை ஞாணத்தில் இருக்கிறம் போல கிடக்குது......

ஒருவன் வாழும் பொழுது சொல்லாத கருத்துக்களை மரணத்தின் பின்பு சொல்லுகிறோம்

அமரர்வசம்பு அவர்கள் உளவியல் பாதிப்பின் காரணமாக யாழுக்கு வரவில்லை என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது கரும்பு அவர்களே

Share this post


Link to post
Share on other sites

மிகவும் சிறப்பாக நினைவுகூறல் எழுதி இருக்கின்றீர்கள் கரும்பு. வெறுமனே வசம்பை பற்றி மட்டும் சொல்லாமல், இணையவழி கருத்தாடல்கள் பற்றியும் சொன்னது நல்லாக இருக்கு

Share this post


Link to post
Share on other sites

யாழ்களம் என்பது கூட இவ்வாறு சிருஸ்டிக்கப்பட்ட ஒரு கற்பனை நகரம் தான். நாம் எல்லாம் இந்நகரின் வாசிகளாக உலாவுகிறோம். இப்போது தான் யாழ்களம் என்ற சிருஸ்டிக்கப்பட்ட நகரில் ஒரு சாவு நிகழ்ந்துள்ளது. இச்சாவு, இக்களத்தை விட்டு விலகுவதைப் பலரிற்கு இனி முன்னதை விடச் சிரமாக்கும் என்று, மாக்கஸின் அவதானத்தோடு ஒத்துப்போகும் வண்ம் அமைகிறது முரளியின் இப்பதிவு.

உள்ளம் திறந்த, உணர்ச்சிபூர்வமான உங்கள் பதிவிற்கு நன்றி கலைஞன்.

இந்த நகரத்தின் முதல் சாவு வசம்பு அல்ல. பல முகம் காட்ட முடியாத, இறந்த பின்னும் இன்னார் தான் என்ற சொல்ல முடியாமல் போன பல போராளிகளும் எழுதியுள்ளனர். அவர்களில் பலர் மாவீரகளாகி விட்டனர். அந்த மாவீரகள் தான் இன்றும் இந்த யாழ் எனும் கண்ணுக்கு புலப்படாத உணர்வுகளாலான நகரை மோகன் அண்ணாவால் இடிக்க முடியாதபடி காவல் தெய்வங்களாக காத்துக் கொண்டும் இருக்கின்றார்கள்

Share this post


Link to post
Share on other sites

கரும்பு, வசம்பு அவர்களின் நினைவு கூரலுக்கு நன்றி. ஒரு பச்சையும் உங்களுக்கு தரப்படுகிறது. மைனஸ் புள்ளிகளால் மனம் வாடினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.அவரே கருத்து எழுதி விட்டு சரி இனி மைனசுகளை வந்து போடுங்கோ என்று நக்கலாக பல இடங்களில் கூறியுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அவர் மட்டுமல்ல பல கள உறவுகள் மாவீரர் வணக்கம் செலுத்துவதில்லை.அவரை மட்டும் சாடுவதேன்?

எனது பார்வையில் வசம்பு அவர்கள் வி.புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவராக தான் தெரிகிறார். நான் வாசித்த வரையில் ஒரு போதும் புலிகளின் எந்த ஒரு செயலையும் வரவேற்கவில்லை.அதே நேரம் மிகத்துணிவுடன் பிழைகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார் எம்மில் அனேகர் இராணுவ தாக்குதல்களில் திளைத்து இருத்த போது. என்றாலும் நடிப்பவர்களை விட அவரின் நேர்மை என்னை மிக மிக கவர்ந்தது.

Dear vasambu I miss you. :rolleyes:^_^

Share this post


Link to post
Share on other sites

அமரர் வசம்பு அவர்கள் நினைவாக படைக்கப்பட்ட இந்த ஆக்கத்தில் கருத்துக்களை, உணர்வலைகளை பரிமாறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இன்னுமொருவன், நீங்கள் கூறிய நூல் பற்றி சில காணொளிகள் பார்த்தேன், அத்துடன் Wikipediaவிலும் மேலோட்டமாக வாசித்து பார்த்தேன், நன்றி.

Share this post


Link to post
Share on other sites

சிறப்பான நினைவு கூறலுக்கு நன்றி முரளி அண்ணா. மற்றவர்கள் சொன்னதப் போல வசம்பு அண்ணா சிவப்பு புள்ளிகளைக் கண்டு பயந்தவராக தெரியவில்லை. அவர் எதையுமே இலகுவாக எடுக்கும் (take it easy type), வாழ்க்கையை ரசித்து வாழும் மனோபாவம் கொண்டவராகவே எனக்கு தெரிந்தார். அவரின் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் அவரின் துணிவு வியக்கத் தக்கது. தனது கருத்துகளை பயப்படாமல் கூறி அதுக்கு வரும் விமர்சனங்களுக்கு தனி ஆளாக விவாதம் செய்வது இலகுவானதல்ல. அத்துடன் அவர் கூறும் விவாதங்களுக்கு அவரது பக்கத்தில் நியாயம் இருப்பதாகவே தோன்றும்.

நுணா அண்ணா சொன்னது போல we all will miss him :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

எனது பார்வையில் வசம்பு அவர்கள் வி.புலிகளினால் நேரடியாக பாதிக்கப்பட்டவராக தான் தெரிகிறார். நான் வாசித்த வரையில் ஒரு போதும் புலிகளின் எந்த ஒரு செயலையும் வரவேற்கவில்லை.அதே நேரம் மிகத்துணிவுடன் பிழைகளை சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தார் எம்மில் அனேகர் இராணுவ தாக்குதல்களில் திளைத்து இருத்த போது. என்றாலும் நடிப்பவர்களை விட அவரின் நேர்மை என்னை மிக மிக கவர்ந்தது.

Dear vasambu I miss you. :rolleyes:^_^

போரை மக்களோ புலிகளோ வலிந்து ஏற்றுக் கொள்ளவில்லை. போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்று நிராயுதபாணிகளாக நின்ற தமிழ் மக்களைப் பார்த்து முழங்கியதே சிங்களம் தான்.

போர் திணிக்கப்பட்டது.. எதிர்கொள்ளப்பட்டது. அதனை விடுதலைப்புலிகள் மட்டுமல்ல.. 17 இயக்கங்கள் தமிழீழம் என்ற நாமத்தின் கீழ் நடத்தின. புலிகள் மட்டும் இலட்சியத்தோடு இருந்தனர்.

வசம்பண்ணாவும் சரி இதர அரசியல் மாற்றுக் கருத்தாளர்களும் சரி பிழை கண்டதோடு சரி. தீர்வு சொல்ல முடியவில்லை. பிழை கண்டு பிடிப்பது இலகு. ஆனால் தீர்வு காண்பது தான் கடினம்..!

நான் வசம்பண்ணாவை பல விடயங்களில் மதித்தாலும் அரசியல் சார்ந்து அவரின் போக்கில் நியாயம் காண முடியவில்லை.

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

கலைஞன் வசம்பண்ணாவின் நினைவு மீட்டல்களிற்கு நன்றி. சில விடையங்களில் வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் மிகவும் பண்பான நேர்மையான கருத்தாளர்.

சற்று தொடர்பு பட்ட விடையம், மரணம் என்பது எல்லோரையும் என்றே ஒரு நாள் தீண்டப்போகிறது .

எமது சொத்துக்கள் போன்றவற்றை மரணத்தின் பின் கைய்யாளுவதுதற்கு உயில் எழுதுவது போல் எமது இலத்திரனியல் தகவல்கள் இலத்திரனியல் சமூக வலையமைப்பில் உள்ள பரிமாற்றங்கள் என்பவற்றை எப்படி கைய்யாளபட வேண்டும் என்று எம்மிட ஏதாவது திட்டம் எல்லது எதிர்பார்ப்புகள் உள்ளதா? இதைப்பற்றி ஆர்வம் இருந்தால் கலைஞன் ஒரு திரி தொடங்குங்களேன்?

http://lawvibe.com/planning-your-digital-estate-dealing-with-online-data-after-death/

http://news.bbc.co.uk/2/hi/programmes/click_online/8273047.stm

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நினைவுமீட்டலுக்கான எதிர்வினை.

யாழ்களத்தின் கருத்தாளர்களாகிய நாம். மறைந்த அமரர் திரு வசம்புவை கருத்துகளத்திலேயே இரண்டு இடத்தில் நினைவு கூர்ந்துள்ளோம். அஞ்சலியும் செலுத்தியுள்ளோம்.முகப்பிளையும் அவரின் படத்தை இணைத்து யாழ் களத்தில் அவருக்கான அதி உச்ச மரியாதையும் செய்துள்ளோம். மூன்றாவதாக ஒரு இடத்தில் தனி திரி தொடங்கி அவரை நினைவு கூறும் அல்லது அவரின் பதிவுகளை மீட்டுபார்க்கும் தேவை உங்களுக்கு ஏற்பட்டதன் காரணங்களை கரும்பு அவர்கள் விளக்குவார்கள் என்று நம்புகிறேன். கரும்பு அவர்கள் இதற்குமேலையும் யாழ் கள உறவுகள் அவரது மாற்று கருத்துகளை மதித்து,வசம்புவுக்கு தேசத்தின் மாற்று கருத்தாளர் என்ற சாவின் பின்னான மதிப்பை வழங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாரோ என்னமோ.?

சாவு அரசியல் அல்லது பிண அரசியல் என்பது இன்று நேற்று அல்ல, ஜூலியஸ் சீசர் காலம் தொட்டு, எம்.ஜி.ஆர் முதலாக பல வரலாறுகளை கொண்டது. கரும்பு அவர்கள் வசம்புவின் சாவினை மையமாக வைத்து, இங்கு மாற்று கருத்து அரசியல் செய்யும், அவரது மொழியில் கருத்து வறுமை ஏன் அவருக்கு ஏற்பட்டது என்ற விளக்கத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன்.

கரும்பு அவர்கள், வசம்புவை விடுத்து இதை பொதுவாக எழுதி இருந்தார் என்றால், இந்த எதிர்வினைக்கான அவசியமே இருந்திருக்காது. ஒருவரின் சாவை வைத்து, தனது கருத்து திணிப்பை செய்வது, எனக்கு லக்ஸ்மன் கதிர்காமரின் சாவை வைத்து ஸ்ரீலங்கா அரசு, புலிகளுக்கு எதிரான கருத்துகளை, மேற்குலகத்தில் விதைத்த சம்பவத்தை நினைவு கூறுகிறது.

யாழ் களத்தில் வசம்புவின் சாவு தான் முதல் சாவு அல்ல. யாழ் களத்தில் இருந்து நாங்கள் விலகாமல் இருக்க அல்லது விலக சிரமாக இருக்க, வசம்புவின் சாவு தான் எமக்கு உதவும் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. அதுபற்றி ஒரு கருத்து கணிப்பு வைத்தால் முடிவு வேறுவிதமாக தான் இருக்கும். இந்த களத்திலே பெயர் தெரியாமல் இனம்காட்டாமல் மறைந்த மாவீரகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அது மட்டறுத்தினர்களும் நிர்வாகிகளும் நன்றாகவே அறிவார்கள். அவர்களை எல்லாம் பொதுவாக வைத்து ஒரு கருத்து தடம் வரையாமல், வசம்புவை மட்டும் முன்னிறுத்தி அவரை வைத்து யாழ் களத்தில் உங்கள் மாற்று கருத்துகளை விதைப்பது ஏற்புடையது அல்ல.

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

சிவப்புப் புள்ளிகளால் வசம்பண்ணன் யாழில் மேலும் பங்கேற்கவில்லை என்பதை ஏற்ருக்கொள்வது கடினமாக உள்ளது. அவர் கருத்தெழுதிய திரிகளை உற்றுநோக்கும்போது மாசி 2009 இல் இருந்து களத்தில் கருத்தெழுதுவதை வலுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார்.

மாசி 2009 இல் இருந்து வைகாசி 2010 வரை அவர் 40 திரிகளில் மட்டுமே பங்கு கொண்டுள்ளார். அதாவது சிவப்புப் புள்ளிகள் முறை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னமே அவரது பங்களிப்பில் தொய்வு விழுந்துள்ளது. இதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நிகழ்வுகளோ அல்லது உடல்நிலையோ காரணமாக இருந்திருக்கலாம். அல்லது தாயகத்தில் நடந்த நிகழ்வுகளேகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம். என்னதான் போராளிகளை அவர் எதிர்த்து வந்திருந்திருந்த போதிலும் அப்போராளிகளின் காவலை மக்கள் இழந்து அழிவுற்றபோது அவர்மனம் புண்படவே செய்திருக்கும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நாளாக நாளாக திராட்சை ரசத்தின் சுவை அதிகரிப்பது போல முரளியின் எழுத்திலும் தரம் கூடிக்கொண்டு போகிறது.! :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

நன்றி மச்சான்

உங்கள் நினைவு மீட்டல் நிச்சயம் வசம்பு அண்ணாவின் குடும்பத்தைச் சென்றடையும்.

வாத்தியார்

*********

Share this post


Link to post
Share on other sites

நினைவுமீட்டலுக்கான எதிர்வினை.

யாழ்களத்தின் கருத்தாளர்களாகிய நாம். மறைந்த அமரர் திரு வசம்புவை கருத்துகளத்திலேயே இரண்டு இடத்தில் நினைவு கூர்ந்துள்ளோம். அஞ்சலியும் செலுத்தியுள்ளோம்.முகப்பிளையும் அவரின் படத்தை இணைத்து யாழ் களத்தில் அவருக்கான அதி உச்ச மரியாதையும் செய்துள்ளோம். மூன்றாவதாக ஒரு இடத்தில் தனி திரி தொடங்கி அவரை நினைவு கூறும் அல்லது அவரின் பதிவுகளை மீட்டுபார்க்கும் தேவை உங்களுக்கு ஏற்பட்டதன் காரணங்களை கரும்பு அவர்கள் விளக்குவார்கள் என்று நம்புகிறேன். கரும்பு அவர்கள் இதற்குமேலையும் யாழ் கள உறவுகள் அவரது மாற்று கருத்துகளை மதித்து,வசம்புவுக்கு தேசத்தின் மாற்று கருத்தாளர் என்ற சாவின் பின்னான மதிப்பை வழங்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாரோ என்னமோ.?

சாவு அரசியல் அல்லது பிண அரசியல் என்பது இன்று நேற்று அல்ல, ஜூலியஸ் சீசர் காலம் தொட்டு, எம்.ஜி.ஆர் முதலாக பல வரலாறுகளை கொண்டது. கரும்பு அவர்கள் வசம்புவின் சாவினை மையமாக வைத்து, இங்கு மாற்று கருத்து அரசியல் செய்யும், அவரது மொழியில் கருத்து வறுமை ஏன் அவருக்கு ஏற்பட்டது என்ற விளக்கத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன்.

கரும்பு அவர்கள், வசம்புவை விடுத்து இதை பொதுவாக எழுதி இருந்தார் என்றால், இந்த எதிர்வினைக்கான அவசியமே இருந்திருக்காது. ஒருவரின் சாவை வைத்து, தனது கருத்து திணிப்பை செய்வது, எனக்கு லக்ஸ்மன் கதிர்காமரின் சாவை வைத்து ஸ்ரீலங்கா அரசு, புலிகளுக்கு எதிரான கருத்துகளை, மேற்குலகத்தில் விதைத்த சம்பவத்தை நினைவு கூறுகிறது.

யாழ் களத்தில் வசம்புவின் சாவு தான் முதல் சாவு அல்ல. யாழ் களத்தில் இருந்து நாங்கள் விலகாமல் இருக்க அல்லது விலக சிரமாக இருக்க, வசம்புவின் சாவு தான் எமக்கு உதவும் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. அதுபற்றி ஒரு கருத்து கணிப்பு வைத்தால் முடிவு வேறுவிதமாக தான் இருக்கும். இந்த களத்திலே பெயர் தெரியாமல் இனம்காட்டாமல் மறைந்த மாவீரகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அது மட்டறுத்தினர்களும் நிர்வாகிகளும் நன்றாகவே அறிவார்கள். அவர்களை எல்லாம் பொதுவாக வைத்து ஒரு கருத்து தடம் வரையாமல், வசம்புவை மட்டும் முன்னிறுத்தி அவரை வைத்து யாழ் களத்தில் உங்கள் மாற்று கருத்துகளை விதைப்பது ஏற்புடையது அல்ல.

இப்படி யாராவது கருத்துக் கூறுவார்களா என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கு. பகலவன், நீங்கள் எவளவு காலம் கருத்துக் களத்தில் வாசகராக / கருத்தாளராக இருக்கிறீர்களோ தெரியாது. ஆனால் இங்கு பலரும் நீண்ட காலமாக கருத்துப் பகிர்வில் ஈடுபடுபவர்கள், சுருக்கமா சொல்லப் போனா ஒரு குடும்பம் மாதிரி. அந்தவகையில் ஒருவரின் மரணத்தில் ஏற்படும் துன்பத்தை குறைக்க இப்படியான ஆக்கங்களை பதிவது எந்த தவறும் என நான் நினைக்கவில்லை. அப்பிடி அது தவறாயின் அதுபற்றி முடிவெடுக்க மோகன் அண்ணாவும் மற்றைய மட்டுறுத்துனர்களும் இருக்கீனம். எனவே உங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கருத்துக்கள் பற்றி கரும்பு அண்ணா விளக்கம் தரத் தேவை இல்லை என்பது எனது கருத்து. அவருக்கு விழுந்திருக்கும் பச்சை புள்ளிகளின் அளவிலும் மற்றைய கருத்துகள உறவுகளின் பின்னூடங்களிலும் இருந்து கல உறவுகளின் மன நிலையை யாரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம். நான் அலுவலகம் போன முதல் செய்யும் வேலை யாழை கொஞ்ச நேரம் மேய்வது. வெள்ளிக் கிழமை இப்பிடித்தான் வசம்பு அண்ணாவின் மரணச் செய்தியை பார்த்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அன்று முழுதும் என்னால் வேலை செய்ய முடியவில்லை, வாழ்கையின் நிலையாமை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். இவளவுக்கும் எனக்கு அன்றுவரை அவரின் முகமோ குரலோ தெரியாது. கருத்துகளுக்கு அப்பால், ஒரு சக மனிதன் ஒரு கள உறவு என்ற வகையில் அவரின் மரணம் பலரை பாதித்திருக்கலாம். வசம்பன்னனை வைத்து யாரும் மாற்றுக் கருத்து விதைப்பதாகவோ அரசியல் செய்வதாகவோ எனக்கு தோன்றவில்லை. கறும்பு அண்ணாவின் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்தபோது எனக்கு எனக்கு எங்கோ வாசித்த ஒரு கூற்று தான் ஞாபகம் வந்தது "ஒருவனின் மரணத்தின் போது அவனுக்கு தொடர்பிலாதவர்கள் விடும் கண்ணீரே அவனது வாழ்வின் வெற்றியை நிச்சயிக்கும்".

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

அமரர் வசம்பு அவர்கள் நினைவாக படைக்கப்பட்ட இந்த ஆக்கத்தில் கருத்துக்களை, உணர்வலைகளை பரிமாறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

குறுக்கு அண்ணை, நீங்கள் சொன்னவிசயம்பற்றி முன்பு நான் யோசித்து சில விடயங்களை செய்துள்ளேன். முகநூலில் காண்பிக்கப்படக்கூடிய குறிப்பிட்ட விடயம்பற்றி மூன்று நான்கு மாதங்களிற்கு முன்னர் தகவல் ஒன்றில் பார்த்தேன். வசதிகிடைக்கும்போது நிச்சயம் இதுபற்றி ஓர் ஆக்கத்தை தருகின்றேன். நன்றி.

Edited by கலைஞன்

Share this post


Link to post
Share on other sites

அவருக்கு விழுந்திருக்கும் பச்சை புள்ளிகளின் அளவிலும் மற்றைய கருத்துகள உறவுகளின் பின்னூடங்களிலும் இருந்து கல உறவுகளின் மன நிலையை யாரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம். ".

தங்களிடம் ஒரு கேள்வி

பச்சை விழுந்தால் ஏற்கும் தாங்கள்

சிவப்பு விழுந்ததை ஏற்க மறுப்பதேனோ......???

குறிப்பிட்ட புள்ளிவழங்கல் திட்டம் வசம்பு அவர்களிற்கு தனிப்பட உளவியல் ரீதியாக அதிக பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தி இருக்கும் என்று கூறலாம். வசம்பு அவர்கள் தாயகம், போராட்டம், போராட்ட அமைப்புக்கள், அரசியல்... இவ்வாறான விடயங்களில் யாழ் கருத்துக்களத்தில் கருத்தாடல் செய்யும் பெரும்பாலான கருத்தாளர்களிற்கு பிடிக்காத கருத்துக்களை கூறினார் . இதனால் தினமும் அவர் கருத்துக்களிற்கு சிவப்பு புள்ளிகளை சக கருத்தாளர்கள் வழங்கினார்கள்.

வசம்பு அவர்களின் பிரத்தியேக பக்கத்தில் தினமும் அவர் பெற்ற அதிகளவான சிவப்பு புள்ளிகள் காரணமாக அவரது மதிப்பு நிலை - Reputation மிகவும் கேவலமானது - Very Bad என காண்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட புள்ளி வழங்கல் செயற்பாட்டு அமைப்பு நிச்சயம் வசம்பு அவர்களின் உள்ளத்தை மிகவும் பாதித்து இருக்கும் என நினைக்கின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this