Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

 • Replies 320
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

 • கருத்துக்கள உறவுகள்

நீ சாலையோரக் கவிஞனா இல்லை --- எம் மனச்

சாலையில் தேரோட்டும் கலைஞனா 

வாழ்க்கையில் வலைவீசி வார்த்தைகளை அள்ளுகிறாய்

மரநிழலில் வீற்றிருந்து மனங்களைக் கிள்ளுகிறாய் 

புத்திரன்தான்  புறக்கணித்தபோதும்  வருந்தாதே 

பத்திரமாய் இருக்கும் பேரறிவு  உன் முடிக்குள்....!   🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த வீதியோரக் கவிஞனுக்குள் தமிழ் வார்த்தைகள் கொஞ்சி விளையாடுகிறது. காலம் செய்த கோலம் வீதியில் வீற்றிருந்து கவிதை சொல்கிறான். ஒருநாளும் நான் இதுபோல் அழுதவனல்ல அந்த திருநாளை மகன் கொடுத்தால் யாரிடம் சொல்ல என்ற வரிகள் அவனது அடிமனதின் உணர்வுகளை எடுத்துச் சொல்கிறது.

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பட்டங்கள் – சில குறிப்புகள்

-ராணிதிலக்

கோடை வெப்பத்தைத் தருகிறது.
வெப்பம் காற்றைத் தருகிறது.
தென்னைகள், மாமரங்கள் அசைகின்றன.
சிறுவர்கள் வந்து சேர்கின்றனர்.


ஒரு செய்தித்தாளை எடுத்துக்கொண்டார்கள்.
சச்சதுரமாகக் கத்தரித்தார்கள்.
ஒரேயொரு தென்னங்குச்சி வைத்தார்கள்.
குறுக்காக இன்னொரு தென்னங்குச்சி வளைத்துக் கட்டினார்கள்.
கயிற்றால் சுருக்கு இட்டார்கள்.
நீண்ட வாலை, அதன் கீழ்ப்பகுதியில் ஒட்டினார்கள்.
பிறகு அதற்கு கண், வாய், மூக்கு வரைந்தார்கள்.
இப்படித்தான் பட்டம் உருவானது.
சின்னஞ்சிறிய சிறுவர்கள் கடவுளர்களைப் போன்றவர்கள்.


நான் தனியன்
நான் ஒரு பட்டம்.
எல்லாரும் இப்படித்தான் சொல்கிறார்கள்
வானில்
ஒரு தன்னந்தனியாக ஒரு பட்டம் பறக்கிறது
ஒரு தன்னந்தனியன்களாகப் பல பட்டங்கள் பறக்கின்றன
இந்த வானில்
நீ
தனியன் இல்லை
நீங்கள்
தனியன்கள் இல்லை
எனப்
பறவைகள், மேகங்கள்
ஒன்றுசேர்ந்து
கூடப்
பறக்கின்றன


ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து, ஆறு
என
எண்ணிக்
கொண்டிருக்கும்
போதே
பட்டங்கள் பெருகுகின்றன
பட்டங்கள்
தம்மைத் தாமே
பெருக்கியும் கொள்கின்றன.


நான்
ஒரு
வால் அறுந்த பட்டம்.


ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு நிறத்தில்
ஒவ்வொரு வடிவத்தில்
ஒரு
பட்டம் தேவையாகிறது


மொட்டை மாடியிலிருந்து
சிறுவர்கள் பட்டம் விடுகிறார்கள்
பட்டம் இல்லாத
சிறுவன் ஏக்கத்துடன் பார்க்கிறான்
நான்தான் உன் பட்டம்
நான்தான் உன் பட்டம்
என்கின்றன
அநேகப் பட்டங்கள்
வானில்


தனிமை, துயரம், மகிழ்ச்சி, பிரிவு, கண்ணீர், காமம், அனுபவம், படிப்பு, வேலை என்று பட்டங்களுக்கு ஏதும் இல்லை.
அதனால்தான், அவற்றால் வானில் ஏகாந்தமாகப் பறக்கமுடிகிறது.


ஒரு பட்டம், இன்னொரு மேகத்தைக் கடக்கிறது
ஒரு பருந்து, இன்னொரு பட்டத்தைக் கடக்கிறது
ஒன்றை
ஒன்றுகடக்கும்
படிக்கட்டுகளைப்போல
தொடர் மலைகளைப்போல.


வான் முழுவதும் ஆயிரம் ஆயிரம் பட்டங்கள் அசைந்தாடுகின்றன.
வான் முழுவதும் ஆயிரம் ஆயிரம் பாம்புகள் அசைந்தாடுகின்றன.


கருப்பு, மஞ்சள், வெள்ளை, சிகப்பு, நீலம்
அநேக நிறப் பட்டங்கள்
மேலே மேலே ஏறிப் பறக்கின்றன
அவனும்
அவளும்
ஒரே வண்ணத்தைப் பார்க்கிறார்கள்


பெரிய ஆகிருதியுடன் சிறிய வாலுடன் ஒரு பட்டம் பறக்கிறது.
சிறிய ஆகிருதியுடன் பெரிய வாலுடன் ஒரு பட்டம் பறக்கிறது.
இவற்றில்
எது
ஆண்?
பெண்?


ஒரு பட்டம் அறுந்து விழும்போது
ஏன்
எல்லாப் பட்டங்களும்
அப்படி
நடுங்குகின்றன?


எல்லா பட்டங்களும் வெளியில்தான் பறக்கின்றன
எல்லா வால்களும் நமக்குள்தான் துடிதுடிக்கின்றன


பகல் முழுவதும் ஒரு பட்டம் வெப்பத்துடன் பறக்கிறது.
இரவு முழுவதும் ஒரு பட்டம் குளிர்ச்சியாகப் பறக்கிறது.


நான் கண்ணைமூடும்பொழுது
ஒரு பட்டம்
ஒரு பருந்தாகிறது
நான் கண்ணைத் திறக்கும்போது
ஒரு மேகம்
ஒரு பட்டமாகிறது


வானம் முழுவதும் பட்டங்கள்
அர்த்தமற்ற
வார்த்தைகள், வார்த்தைகள், வார்த்தைகள்tumblr_m39bblhcdr1qa85l7o1_500.jpg


நான் பட்டம் விடுகிறேன்
நான் சிறுவனாகிறேன்


நமக்குள்
ஒரு
பட்டம்
அசைந்து அசைந்து
பறக்கிறது
வளர்கிறது
எப்பொழும்
அது நமக்குத் தெரிவதில்லை.


வானில்
பறக்கும்
பட்டங்களுக்கு
நிழல்
இருப்பதில்லை


ஒரு பட்டத்தை இன்னொரு பட்டம்
அறுத்துக் கீழே
தள்ளும்போது
அசைந் தசைந் தசைந்தாடி
விழுகிறேன்
நான்.


வானில் ஒரு பட்டம் பறந்துகொண்டிருப்பதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
உள்ளுக்குள் ஒரு விடுதலை உணர்வு தளும்பியதை உணரமுடிகிறது.
சிலவேளை மனிதனும் இவ்வாறு வானில் பறந்தபடியே காணாமல்போனால் என்ன? என்று தோன்கிறது.


அறுந்த பட்டம் ஒன்று, காற்றில் போய்க்கொண்டே இருக்கிறது.
சிறுவர்கள் அதை நோக்கி ஓடியடிபடியே இருக்கிறார்கள்.
என் ஊரும் நாடும் அவ்வளவு பிரமாதம் இல்லை.
திரும்பிவராமல் போய்விடு பட்டமே! போய்விடு பட்டமே!


பட்டங்களைச் சிறுவர்கள் தரை இறக்குகிறார்கள்.
பூமி முழுவதும் இருள் சூழ்கிறது.
 

http://kanali.in/pattankal/

Link to comment
Share on other sites

 • 1 month later...
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்

சேரன்

 

spacer.png

 

பட மூலம், Newsexpress

எல்லாவற்றையும் மறந்துவிடலாம்
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை வெறுத்து
ஒருகணப் பொறியில் தெறித்த
நம்பிக்கையோடு
காலி வீதியில்
திசைகளும், திசைகளோடு இதயமும்
குலுங்க விரைந்தபோது,

கவிழ்க்கப்பட்டு எரிந்த காரில்
வெளியே தெரிந்த தொடை எலும்மை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப்போன ஒரு விழியை,
விழியே இல்லாமல், விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
‘டிக்மண்ட்ஸ்’ ரோட்டில்
தலைக் கறுப்புகளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து கிடந்த
ஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத் துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப்போய்க் கிழந்த
ஒரு இடது கையை,
எரிந்துகொண்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்துபோன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை

எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்,
உன் குழந்தைகளை ஒளித்துவைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்த
அந்தப் பின் மாலையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று
ஒளிந்தபடி காத்திருந்தபோது
பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையும்
நிலத்தில் சிதறி
உலர்ந்த சோற்றையும்
நான் எப்படி மறக்க? 

https://maatram.org/?p=8650

Link to comment
Share on other sites

 • 1 month later...

 

பரவிப்பாஞ்சான் பால் கோப்பியும் எரிக்சொல்கைமின் ஏவறையும்
 
118283617_1574925966013459_7801421510266
 
பலஸ்த்தீனம் மட்டுமல்ல
இடைத்தரகர்களால் ஏமாந்தது
எங்கள் ஈழமும்தான்
கட்டியெழுப்பிய கனவு ராச்சியம்
கொட்டி நொறுங்கி
பத்து திவசம் கடந்திற்று
இப்பொழுது
ஒஸ்லோவின் ஒல்லிப்புறா
கள்ள முட்டையிட்டு
கைமாறு செய்கிறது யாருக்கோ
நல்ல வேளை
வஞ்சகமின்றி சிரித்தப்படி
நம் தமிழ்ச்செல்வன் படைத்த
நண்டுக்கறி வறுவலுள்
நஞ்சு இருந்ததாய்
இன்னும் சொல்லவில்லை
தாங்வியூவில்
தலைகணியும் இல்லாமல்
பாணும் பருப்போடு
படுக்கவிட்டார்கள் என்றும்
பச்சைப்பொய்
இன்னமும் அவிழவில்லை
பரவிஞ்சான் பால் கோப்பி
செமித்திற்று போல
கனவான்கள் சொன்னால்
அப்படியே கவ்வி
தலையாட்டும்
ஓணான் பரம்பரையல்ல
உலகத்தமிழன்
உள்நோக்கம் அறிந்தும்
வெள்ளந்தியாய் சிரித்து
வரவேற்றது ஈழத்தின் பண்பு
சேடம் இழுத்துக் கிடந்த ஈழத்துக்கு
சேலைன் ஏத்துவதற்காக
அகாசி சொல்கெய்ம்கள்
அன்று வரவில்லையே
ஆனையிறவை பிடித்து
அடுத்த ஊர்
சைபீரிய பறவைகளும்
டுயட் பாடி மகிழ
பார்த்தன்றோ சிலிர்த்தோம்
பளையின் தென்னங்கீற்றில்
இரண்டு இளங்கிளிகள்
இழுத்து உதடு கவ்வி
முத்தமிடத் தொந்தரவின்றி
முகமாலை வரையல்லவா
எதிரிகளை துரத்தி
எல்லையிட்டு எழுந்து நின்றோம்
புளியங்குளம் தாண்டி
புரவிகள் பாய்ந்து
எலுமிச்சையாள் நீராட
தடாகத்தை மீட்டு
ஒட்டு சுட்டான் குன்றேறி
எட்டுத்திக்கும் நோட்டமிட்டோம்.
அப்போதானே
ஐயா சொல்கெய்ம்
பூவிலங்கோடு புறப்பட்டு வந்தார்
கையோடு
புளுதி நிலத்துக்கு
புல்டோசர் சாரதிகளாய்
சில்வாவும் அல்லவா
கொல்லை புதினமறியலானான்
கட்டில் மெத்தையோடும்
கள்ளக்கூட்டம்
எத்தனை அறைகளென
அளவெடுத்துப் போனது
எல்லாம் தெரியாமல் ஈழமில்லை
புட்பகத்தை தேடி எடுத்து
சேவிஸ் கராஜ்சில் நிறுத்தி
இரணை மடுத் தீர்த்தத்தில்
இரண்டு சொட்டுத் தெளித்து
பறந்தபோதுதான்
கொல்லையில் ஒரு வல்லரசு
ஈழத்தில் உருவாதல் கண்டு
கள்ளிப்பால் சிரிப்போடு
கனபூனைகள் வந்தன
வஞ்சகரை ஒருபோதும்
மன்னிக்காது காலம்
இப்போது
தம்பியும் இல்லை
தத்துவ ஆசிரியனும் இல்லை
கண்ட நாயெல்லாம்
காலைத்தூக்கி
எங்கள் மாளிகைத்தூண்மேல்
மலம் கழிக்கின்றன
 
கவிஞர் பொன் காந்தன்
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.

 


ன்னிக்கவும்
இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது.

மன்னிக்கவும்
முலை விடாத வயதில்
உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும்
என்ற கேள்விக்கு
காட்பரீஸை மென்றுக்கொண்டே
சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான்.

மன்னிக்கவும்
அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன்
கூடவே தொற்றிக் கொண்டு போகாமல்
யாருமில்லாத வீட்டில் தனியே யிருக்க
ஒத்துக்கொண்டது என் கவனக்குறைவு தான்.

மன்னிக்கவும்
இரவில்
பாதி தூக்கத்தில்
சித்தப்பா அருகில் வந்து படுத்ததை
அறியவில்லை
அவரின் கைகள் அவ்வளவு நீளம்,
அதன் நகங்கள் அவ்வளவு பதம் என்பதை
என் ஜனன உறுப்புகளை அவர் தொடும்வரை
அறியவில்லை.

மன்னிக்கவும்
………………………….
………………………….

மன்னிக்கவும்
குடும்பம் என்பது கூடு
குடும்ப ஆண்கள் பாதுகாவலர்கள்
குடும்பத்துக்குள் என்ன நடந்தாலும் வெளியே சொல்லக்கூடாது
குடும்ப மானம் குடும்ப பெண்களின் கைகளில் தான் இருக்கிறது
என்ன இருந்தாலும் அவர் என் சித்தப்பா.

மன்னிக்கவும்
அவ்வப்போது ஆவென திறந்து ஓலமிடும்
சித்தப்பா என்ற காயத்தில் கசிவது
ரத்தம் அல்ல விந்தும் அல்ல
கண்ணீரும் அல்ல
அது ஒரு நிறமில்லா திரவம்
நம்பிக்கை என்ற அழுகிய பிணத்தின் வாசனை
அடிக்கும் திரவம்.

மன்னிக்கவும்
இது உங்களைக் காக்க வைத்து சொல்ல வேண்டிய செய்தியில்லை தான்.

மன்னிக்கவும்

சொல்ல வேண்டியதை

சொல்ல வேண்டிய சமயத்திலேயே

சொல்லியிருந்தால்

இன்று என் மகளை

சித்தப்பா

தொட்டிருக்க மாட்டார்.

 


 

 லீனா மணிமேகலை
 

http://kanali.in/mannikkavum/

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்

 -ஜோன் கென்னி

(தமிழாக்கம்: டிசே தமிழன்)

 

நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?
………………………………….

நான் இருக்கின்றேன்.
பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.
இலேசான ஓர் இரவுணவு.
குளியல்.
அவ்வளவு போதையேறாத குடி.
அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும்அந்த 'விடயம்'
படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் -போன்களைப் பார்ப்பது.

 

http://kanali.in/john-kenney-poems/?fbclid=IwAR1HWFpg-uTF2Dtg1QHtQNtyEkD_KNTXwSETDaYd_LPYOVDGDlqBoOejNW4

 

 

 

Link to comment
Share on other sites

 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

கல்லில் எரியும் நெருப்பு

spacer.png

 

நெருப்பு எப்படி எரியும் என்பதை
ஒருவரும் திட்டமிட முடியாது.

கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும்
என்பதற்கும் வரைபடம் இல்லை.

படையாட்களின் எந்திரங்கள்
நினைவை அழிக்க முனையும்போது
எமது  கண்ணீர்
பெரு நாகங்களாக  மாறி
அவற்றைச் சுற்றி வளைக்கின்றன

எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும்
இலங்கையை எரிக்க.

Cheran.jpg?resize=100%2C100&ssl=1

சேரன்
 

https://maatram.org/?p=9073

 

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

 

141281770_2587003238264165_6121925398896

உலகம் உன்னை
உதைக்கும்
துன்பம் தந்தே
வதைக்கும் .
மனதை தொடர்ந்து
சிதைக்கும்.
மனிதத் தனமின்றி
கதைக்கும்.
நேர்மை கொண்டால்
உனக்கும்
நல்ல வாழ்க்கை
கிடைக்கும்
முயற்சி கொண்டால்
நிலைக்கும்
முன்னிலை வரலாறு
படைக்கும்.
நிலத்தில் புதைந்த
விதைக்கும்
நீரும் கிடைத்தால்
முளைக்கும்.
கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்
 • Like 2
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

உன்னுடன் நான் வாழ்ந்த நொடிகளே போதும்..... நா. முத்துக்குமார்.....!   🌹

 • Like 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...

 

வடக்கு நோக்கி ஆயுத தளபாடங்கள்
வடிவாக அணிவகுப்பு
இருந்தவை போதாமல் இன்னும் குவிப்பு
உலக அரசியலா
உள்ளூர் மிரட்டலா
பிராந்திய பாதுகாப்பு போட்டியா
சீனாவுக்கு ஆதரவாக அணிவகுப்பா
இந்தியாவுக்கு சொல்லும் செய்தியா
போர்காலம் போல வீதியில்
இராணுவ ஊர்வலம்
மனதுக்குள் ஆயிரம் சந்தேகம்
 
வட்டக்கச்சி
வினோத்
May be an image of outdoors
 
 
 
 
Link to comment
Share on other sites

 • 4 months later...

 

 
வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..!
எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,
எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!
தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...
தறிகெட்டு போனதென்னவோ
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .
பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...
பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...
பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...
கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .
வேசிக்கு காசு
வேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .
வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .
இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,
வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,
தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .
கடைசி மூன்று மாதம்...
அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்து போனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...
கருகருவென
என் நிறத்தில்...
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?
'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '
என்று சொல்லி திரும்பினேன் .
ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று
கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,
கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...
அதே அந்த பெண்
குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,
வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...
தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப் போலவே
சப்பை மூக்கு,
என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,
கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,
எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,
தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,
முன் சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...
விளையாடிக் கொண்டு இருந்தேன்!
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,
இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,
அதே கருப்பு,
அதே சிரிப்பு,
கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .
வீடு நோக்கி நடந்தேன்,
பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...
கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை
நெடுநேரம்...
பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு
வரச் சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,
பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !
பல்லில்லா வாயில் பெருவிரல் !
இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,
அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,
ஒரு வயதானது ...
உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,
'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...
சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,
முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே...
'அப்பா'தான்!
அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,
அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...
உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,
அவள் வாயில் இருந்து வந்த..,
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...
அம்மா சொல்லித் திருந்தவில்லை,
அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,
முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...
படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...
திருமணம்
செய்து வைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,
நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...
அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...
ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத் தெரியாதா என்ன?
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு,
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,
என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,
அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள், 😰 😰 😰 😭 😭
அவள் எச்சில்
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
அடங்குகிறது....................
.......................
"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,
மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல் நீங்கள் நல்ல தகப்பனாக பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்....
எழுதியவர் யார் என்று
தெரியவில்லை ; ஆனால்
படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

 

 
எழுதியவர் யார் என்று
தெரியவில்லை ; ஆனால்
படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"

எழுதியவர் யார் என்று தெரியவில்லை, ஆனாலும் அருமை..

//ஊரே ஒன்று கூடி..,உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனக்குத் தெரியாதா என்ன?யாருடைய பார்வைக்கப்புறம்.பறக்கும் இந்த உயிரென்று?//.

இதைவிட எப்படி விபரிப்பது தந்தை - மகள் பாசத்தை..

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

படித்துப் பார்த்தேன் .....தேன் ......கவிதையினுள் கரைந்தேன்......!   👌

நன்றி நுணா.......!  

 • Like 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்
 
8B2D067B-36F3-4A01-B387-1CD0CE91DD9D.jpeg

 

என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை,

என் காதலியர், 

என் குடும்பத்தினர்,

என் நண்பர்களைப் போல.

 

ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன்,

குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன்,

ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன்,

சிகரெட்டால் சூடு வைத்து

பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன்.

 

என் புதிய செல்பேசிகள்

பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன

முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன

தனக்குத் தானே தாலாட்டுப் பாடி

ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன

முக்கியமாக, என் புதிய செல்பேசிகள்

பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன.

என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு

கண்ணீர் உகுக்க 

என்னை விடுவதில்லை.

என்னை விட்டு தாம்

போகவே இல்லை என

 நம்ப வைக்க முயல்கின்றன.

 

என் புதிய செல்பேசிகளுக்கு

என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும்

என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும்

நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும்

என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும்

என் கைரேகையை தான் உள்வாங்கும் போது 

நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும்

நான் அவற்றைக் காணாமல் தேடும் போது

யாருமற்றவனாக தனித்துணரும் போது

அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும்

அதை அடிக்கடி நிரூபிக்க

 தன்னை பல தெரிந்த இடங்களில்

 அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும்.

 

நான் கோபத்தில் கத்தும் போது

வியப்பில் கூவும் போது,

ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது

ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது

உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம்

எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது

நீ முழுக்க என்னுடன் இல்லை என

என அவளிடசொல்லும் போது,

வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது

தன்னை எழுப்பிக் கொண்டு

உதவிக்கு வர அதற்குத் தெரியும்.

 

ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு

 அஞ்சும் போது

“எதாவது வேண்டுமா?” என

 திடீரென நடுவே வரத் தெரியும்.

தூங்கும் போதும் 

உன்னை நான் மறந்து விடவில்லை

உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை

கேட்டுக் கொண்டிருக்கிறேன் 

என அன்பாக மிரட்டத் தெரியும்.

 

என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி

ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது

“நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில்

நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது.

நான் அதனிடம்

நீ உன்னுடன் இல்லை என்பதை

மாற்றி சொல்கிறாய் எனப்

புரிய வைக்க முயன்றேன்.

அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது.

எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை

தன் கண்ணீர் தடங்களை,

 தன் காற்தடங்களை விட்டுச்சென்றது.

நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும்

தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது.

நான் அழைக்காத போது

என் பின்னால் வந்து நின்றது.

ஒருநாள் நான் நான் கோபத்தில் 

அதை வீசி எறிந்தேன்.

அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது.

நான் மன்னிப்புக் கேட்டும்

தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள்

ஒளித்துக் கொண்டது.

 

நிலைமை இப்போது கைமீறிச் சென்றது.

நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது.

நான் அழைக்காதவர்கள் அழைத்து

தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது.

நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது.

திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது.

என் கடும்பகைவர்களிடம்

ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும் 

சங்கடத்தை உண்டாக்கியது.

என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது

சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற 

அவலத்தை உணர்த்தியது.

எத்தனை எத்தனை பேரை

என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன்

என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது.

இந்த நவீன உலகில்

செல்பேசிகள் மட்டுமே

குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன்.

 

ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து

காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன.

அதில் ஒரு பாலியல் காட்சி

என்னை திடுக்கிடச் செய்தது.

அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து 

எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள்

என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன.

என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க

பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள்.

வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள்.

எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள்.

அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல்

இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை.

செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும் 

 வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை

 சிறை வைக்கின்றனவோ?

 துணுக்குற்றேன்.

 

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

நான் வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”

“உனக்குப் பேய் பிடித்து விட்டது

உன் மனம் பித்தாகி விட்டது

என்னை வாங்கிய போதிருந்த நீ

இப்போதில்லை.”

 

ஒரு செல்பேசிக் கடையில்

என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது

அவர் சொன்னார்,

இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார்,

ஒரு செல்பேசி தன்னை அறியும் போது

தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும்

எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது

பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது

ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது

நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார்

 

திரும்பும் போது

கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல

அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த

பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை.

டிஸ்பிளே கூண்டில் ஆணியில்

தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள்

ஆர்வமாகப் பார்த்தன என்னை.

 

செல்பேசி தன் ஆன்மாவை திரையில்

 பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ

தவிக்கிறது.

போனை எடுங்க சார்.

அது ஒரு அழைப்பு அல்ல.

 

காதோடு ஒட்டி வைத்து

நீண்ட நேரம் நின்றேன்.

அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே 

இந்த மொத்த கவிதையையும் அது

என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது.

 

 

http://thiruttusavi.blogspot.com/2021/08/blog-post_95.html

Link to comment
Share on other sites

 • 1 month later...

 

கவிஞர்கள் என்றுமே வளமாக வாழ்ந்ததில்லை.
ஒரு புலவர் தன் நிலைமையை இப்படிக் கூறுகிறார்

கல்லைத்தான் மண்ணைத்தான்
.காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான்
.எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான்
ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
.புவியில்தான் பண்ணினானே!

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.