Jump to content

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சரி தவறு

கயல்விழி சண்முகம்

சரியெனப்பட்டது

சத்தமாய் சரிதானென்றேன்

தவறெனப் புரிந்தது

தயக்கமின்றி தவறெனச் சொன்னேன்!

ஒத்திசைக்க உற்றவர்கள்

உடனிருந்தார்கள்!

அவர்தம்

கூட்டணி மாறியது

சரியென்றதை தவறெனவும்

தவறென்றதை சரியெனவும்

இம்சிக்கிறார்கள்

பிறழாத நாக்கு வேறு

பொய் நவில மறுக்கிறது

இப்போதும்

முன்னிருந்த நிலைதான்

இடறாத கொள்கையோடும்

பிறழாத நாக்கினோடும்

தன்னந்தனி மரமாய் நான்!

வந்தமரக்கூடும்

என் கிளையிலும்

சில பறவைகள்!

http://kayalsm.blogspot.com/2011/05/blog-post_23.html

காலத்திற்கு ஏற்ற கவிதை

Link to comment
Share on other sites

 • Replies 331
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

 • கருத்துக்கள உறவுகள்

உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

வித்யாசாகர்

-----------------------------------------------------------

நாட்கள் தொலைத்திடாத

அந்த நினைவுகளில்

சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;

உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய

முதல் பொழுது முதல் தருணம் -

உடையாத கண்ணாடியின் முகம் போல

பளிச்சென இருக்கிறது உள்ளே;

ஓடிவந்து நீ

சட்டென மடியில் அமர்ந்த கணம்

என்னை துளைத்து துளைத்து பார்த்த

இருவிழிகள்,

எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என

எல்லாமே உன்னை எனக்குள் -

மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;

எனக்காக இல்லையென்றாலும்

உனக்காகவேனும் வந்து -

உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்

ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து -

இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்

வைத்திருக்கிறேன்;

பெரிதாக அதையெல்லாம் எண்ணி

கதையெழுதும் காதலெல்லாம்

அல்ல; நம் காதல்;

காதலென்ற வார்த்தை கூட நம்

உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,

அதையெல்லாம் கடந்து

நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.

திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்

தவறிப் போட்டுவிட்ட - கல் போல

மனதிற்குள் மனதை போட்டுவிட்டு

யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.

சொல்லியிருந்தால் மட்டும் உலகம்

அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ

தெரியாது - ஆனால் -

காதலென்னும் அவசியமோ

நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ

அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட

அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;

அப்படி -

சேருமிடமே தெரியாத

வானமும் பூமியும் போல்

எங்கோ ஒரு தூரத்தில்

ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;

நானென்றால் நீ ஓடிவருவதும்

நீயென்றால் நான் காத்திருப்பதும்

எச்சில் பாராமல் -

தொடுதலுக்கு கூசாமல் -

ஆண் பெண் பிரிக்காமல் -

எந்த வரையறையுமின்றி -

உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும்

நெருங்கியிருந்த உணர்வு

சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???

தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட

திராணியின்றி நகைக்கும்

உலகம் தானே இது;

அட, உலகமென்ன உலகம்;

உலகத்தை தூக்கி வீசிவிட்டு

நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள

தயாரில்லை என்பதற்கான காரணத்தை

காலம் மட்டுமே ஒருவேளை

அறிந்திருக்கக்கூடும்;

எப்படியோ; யார்மீதும்

குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்

இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே

உனக்கும் எனக்கும் மட்டும்;

தூரநின்று கண்சிமிட்டும்

அந்த குழந்தையின் சிரிப்புப்போல

நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்

நினைவுகளில் தான்

கட்டிவைத்திருக்கிறேன் என்னை -

வாழ்விற்குமாய்; இப்போதும்!!

இப்படியே கடந்து கடந்து

ஓர்நாளில் -

என் உயிர்முடுச்சு அவிழ்ந்து

நான் கீழே விழுகையில் -

ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது

நீ வந்து நிற்கையில் -

என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்

நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு

வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்!!

http://www.vaarppu.com/view/2449/

Link to comment
Share on other sites

ஏதிலி

அழகான ஊர் திருபொதிகையூர்

அது எங்கள் ஊர்.

குளம் , குட்டை , பல்வகை மரங்கள் ,

சிறு சிறு குடில்கள், அதற்கு முற்றம்,

பெற்றம், நாற்று நடும் வயல்,

கிணறு , தோட்டம். அன்புடன் தென்னம்பிள்ளை ஐந்து,

புன்செயில் இரண்டு பனைமரங்கள், பாசி , உளுந்து என பருப்புகள் ,

மக்கா, கம்பு என்ற சோள வகைகள்.

பருத்தி ஆமணக்கு ... மாமரமும் , வாழையும் , மாதுளமும் ஒவ்வொன்று .

என எங்களுக்காக எங்களுடன் வாழ்ந்தது.

கிழக்கே உதிக்கும் கதிரவனை அரை நாழிகை பொழுது

மறைக்க முற்படும் மலை குன்று ஒன்று.

மாதம் மும்மாரி பெய்ய,

ஏர் கொண்டு உழுது உழைக்க.

கடும் உழைப்பில் செழிக்க,

இல்லாதவர்க்கு வாரி கொடுத்தே வாழ்ந்து வந்தோம்.

பசுமையான ஊர்,

பாசம் கொட்டும் தாய்,

பண்பு சொல்லும் தந்தை,

அன்பு காட்டும் அக்கா ,

நேசம் வளர்த்த நண்பர்கள்,

கதை சொல்லும் ஆயி என்றே

பிறந்த மண்ணில் தமிழினிற்கினியன் ஆக

ஏழு வயது வரை வாழ்ந்து வந்தேன் .

தந்தை வன்னியரசு, தாய் இசைப்பிரியா,

அக்கா தமிழினி ஆயி சண்முகவடிவு

என்று நாங்கள் வாழ்ந்து வந்த குடும்பம்

ஓர் மாலை பொழுது , பள்ளிக்கூடம்

முடிந்து வந்ததும் இல்லத்தின் முற்றத்தில்

நானும் அக்காவும் ஆயிடம் கதை

பேசிக் கொண்டிருந்தோம் ... அம்மா

இராச்சோறு ஆக்கி கொண்டும் , தந்தை

பெற்றத்தை குளிப்பாட்டிகொண்டும் இருந்தோம்.

திடீரென சமருக்கு வரும்

வானூர்திகள் குண்டுமழை பொழிய ,

எங்கள் தோட்டம் கண் முன்னே அழிந்தது.

மறுமுறை திரும்ப வருவதற்குள்

பதுங்குகுழியை தேடி ஓடினோம் எல்லாரும்.

மறுமுறை வந்த வானூர்திகள் - ஆம்

இரண்டு ... ஊரில் ஒரு வீட்டையும் விடாது

அழித்தது - சிதறி கதறி ஓடினோம் .

குற்றுயிராய்... நாங்கள் மட்டும் அல்ல

எங்கள் மண்ணும் வீடும் ஊரும்.

குண்டுகள் வந்து விழுந்த அடுத்த

நாழிகை பொழுது நாங்களும் வீழ்ந்தோம்.

நிலை குலைந்தோம் எங்கள் நிலம் இழந்தோம்

எங்கள் உறவுகள் பலரை இழந்தோம்.

என்னில் நேசம் வளர்த்த நண்பர்கள் சிலரும் அவற்றில் அடங்கும்.

கனவில்லை, காலிவூட் படமில்லை மெய்யே,

பதுங்கு குழிகள் பாடம் சொன்னது எங்களுக்கு,

மக்களே இன்னும் ஒரு நாள் கூட இங்கு இராதீர்கள்.

எங்கோ சென்று உயிர் பிழைத்து கொள்ளுங்கள்.

உங்கள் உறவுகளை இழந்தது போதும்,

உடல் உறுப்பிழந்து ஊனமானது போதும்.

இங்கு சுகமுடன் வாழ்ந்தது போதும்

நலமுடன் வாழ எங்காவது புறப்படுங்கள்,

வீற்றிருந்த இல்லம் காணோம்,

வாழ்ந்த ஊரே காணோம் ,

தோட்டம் துரவுகள் காணோம் ,

தென்னம் பிள்ளைகள் காணோம் ,

மா வாழை காணோம்,

பனை மரங்கள் கருகின,

நாங்கள் உயிருக்கு உயிராக

கண்ணும் கருத்துமாய் வளர்த்த

ஓர் அறிவு உயிர்கள்

செத்தே அழிந்தது கண்டோம்,

நிலங்கள் அழிந்தது, ஊரும் ஒருக்குலைந்தது.

ஐந்து சிவன் கோயில்கள் இடிக்கப்பட்டது

கிருத்துவ ஏசு தேவாலையங்கள் தகர்க்கப்பட்டது.

எல்லாம் படைவீரர்கள் போட்ட குண்டுகளில்

தரை மட்டம் ஆனது கண்டோம்.

தாமதியாதீர் புறப்படுங்கள் இவ்விடத்தி நின்று

தாய்மண் சொன்ன அறிவுரைகள்

என் தந்தைக்கு எட்டியது ,

வானூர்திகள் குண்டுகள் நிரப்ப

சென்ற அரைநாழிகை இடைவெளியில்

எங்கள் தந்தை எரிந்து

மீதியாகி இருந்த மனை கண்டு

குமுறி அழ நேரமில்லை குண்டுகள்

நிரப்பி திரும்புமோ வானூர்தி என்ற அச்சம்.

உடுப்புகள் எல்லாம் எரிந்தது

அம்மா ஆக்கிய சோறு

அடுப்பிலேயே அணைந்தது ,

எங்கள் பாட நூல்கள் ,

நாங்கள் சேர்த்த உண்டியல்- என்று

எரியாத பொருளே இல்லை

எரிந்தும் எரியாத தகரப்பெட்டி தவிர,

அதில் தாய் தந்தை திருமணநாள்

உடுப்புகள், புகைப்படங்கள் மீதியாக,

கடைசி ஆண்டு வரவை - எங்க நிலம்

ஈந்த ஒரு நூறாயிரம் காசு மட்டும்.

அழகோவிய இல்லம் தழலில் கருகியதே.

கண்ணீர்த்துளிகள் என்றால் என்னவென்று

தெரியாது வளர்ந்த நாங்கள்,

என் தந்தை அழுவது கண்டு

தாயும் அழுதார் எல்லோரும் அழுதோம்.

புறப்பட துணிந்தோம் - கண்ணீர் கொப்பளிக்க,

திரும்பி பாராது - அழுத விழிகளோடு.

ஓடினோம் எங்கள் ஊரைவிட்டு

நாங்கள் பிறந்த மண்விட்டு

நாடி இருந்த நாட்டைவிட்டு

போகும் வழியிலே நெஞ்சை

பதற வைக்கும் மாந்த

பேரழிவு கண்டோம் வெந்தோம்.

வெந்து நெருடலில் நொந்தோம்.

பேருந்துக்கு நின்றிருந்த பள்ளி

ஆசிரிய ஆசிரியை சிறியோர் பெரியோர்

என்று பாராது உடல் சிதறி

செத்து கிடந்தனர் பார்க்க இயலாது

கண்களை மூடிக்கொண்டோம் நானும் அக்காவும்.

எங்கள் ஊரை இலங்கை படையணி

கைப்பற்றியது ... உலகுக்கு உரைத்த

இலங்கை வானொலி செய்திகள் - ஒளிபரப்பியது.

கேட்டோம் எங்களுடன் வருபவர்களின் வானொலி பெட்டியில்.

ஏதேதோ வண்டி பிடித்து நகர்ந்தோம்

எங்கள் ஊர்விட்டு நாட்டைவிட்டு உயிருகாகவே.

இலங்கையின் வடமேற்கு கடற்கரை .

நள்ளிரவு செல்ல சில நாழிகைகள்.

எங்களுடன் வந்தவர்கள் கூட்டமாக

மீன்பிடி படகு என்று கள்ளத்தோணியில்.

அலைகளின் ஆர்ப்பரிப்புடன் உப்புக்காற்று புடைசூழ

கடல் வழிப்பயணம் தொடர்ந்தோம் நாங்கள்.

தமிழகத்தின் தனசுகோடியில், அதோ விளக்கு

தெரிவது தமிழகமென்று ... எல்லோரும் இறக்கப்பட்டோம்.

எங்களிடம் இருந்த நூறாயிரம் காசை

பிடுங்கி கொண்டு திரும்பினான் படகோட்டி.

முட்டு நனைய கடல்நீரில் நடந்தோம்.

கை கோர்த்துக்கொண்டு ஏதுமில்லா ஏதிலிகளாய்.

தமிழ்நாடு கடற்கரையில் ஒதுங்கிய நாங்கள்

ஒளிவிளக்கு தெரிந்தது - மீனவ குடியிருப்பு.

குளிரில் நடுங்கியபடி ஒரு வீட்டுக் கதவை

தட்ட அவர்கள் தந்த உபசரிப்பு

எங்கள் துன்பமெல்லாம் கனவென மறந்தோம்.

எங்களை தமிழகம் கட்டியணைத்து வரவேற்றது.

காலையில் அகதி முகாம் அனுப்பப்பட்டோம்,

எல்லாம் இருந்த நாங்கள் ஏதுமில்லாது .

எங்களுகென்று ஒரு குடியிருப்பு பகுதி,

அதே செடிகள் கொடிகள் மரங்கள்.

ஆனால் நிலமும் கோயில்களும் இல்லை.

ஆயி மட்டும் இறந்துவிட்டார் வருத்தப்பட்டே.

நாங்கள் தமிழகத்தில் நலமுடன் உள்ளோம்

படித்த மேதையாய் அறிவுடன் உள்ளோம்

பொன்பணம் கொண்டு செழிப்புடன் உள்ளோம் .

நாங்கள் உறவுகளை உருவாக்கிக் கொண்டோம்.

நாங்கள் முதலில் வாழ்ந்த திருப்பொதிகையூர்

வாழ்கையை திரும்பி வாழ்கிறோம் ... இன்று.

ஆனால் ஊர் பெயரில்லை எங்களுக்கென்று,

தெருவின் பெயரோ இல்லை எங்களுக்கென்று.

முகவரி ஏதும் இல்லை எங்களுக்கென்று.

இதுவெல்லாம் எங்கள் மனதின் நெருடல்.

கடைசியாக, பிறந்தமண்ணில் சாக வேண்டும்

இது என் தந்தையின் ஏக்கம்

பக்றுளி நெடியோன்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொல்வது பிடிக்கும்

போகன்

எனக்கு

கொல்வது பிடிக்கும்

முதன் முதலாய்

என்னை விரட்டிய

தெரு நாயை

அடித்துக் கொன்றேன்

அன்று

தெரிந்துகொண்டேன்

நாய்களுடன் விவாதிப்பது

என்றுமே பயன் தராது

என்னுடைய பயத்தை

நான்

கொல்வதன் மூலமே

வென்றேன்

எப்போதெல்லாம் பயந்தேனோ

அப்போதெல்லாம் கொன்றேன்

பிடிக்காத வாத்தியார்

பிடிக்கவில்லை என்ற பெண்

விளையாட்டில் வென்ற நண்பன்...

ஆனால்

ஒரு கோழையைப்போல்

ரகசியமாய்க் கொல்வது

எனக்குப் பிடிக்கவில்லை

வெளிப்படையாக கொல்வதற்கு

நீங்கள்

சில காரணங்களை கேட்டீர்கள்

நாடு,மொழி,மதம்

இனம்,ஜாதி சித்தாந்தம்

போன்ற முகாந்திரங்களுடன்

கொல்வதை

நீங்கள் அனுமதிக்கிறீர்கள்

என புரிந்துகொண்டேன்

ராணுவத்தில் சேர்ந்து

எதிர் நாட்டினரைக் கொன்றேன்

விருதுகள் கிடைத்தன

கடவுள் நம்பிக்கை

இல்லாவிடினும்

மதக் கலவரங்கள் செய்தேன்

ஏனெனில்

மதக் கலவரங்களில்

எல்லாம் அனுமதிக்கப் படுகின்றன

பெண்களைப் புணர்வதும்

குழந்தைகளை எரிப்பதும் கூட..

ஆண்களைக் கொல்வதை விட

பெண்களைக் கொல்வது இனிப்பானது

இன்னும் பிறக்காத சிசுக்களை

வயிற்றிலிருந்து பிடுங்கிக் கொன்றிருக்கிறேன்..

எல்லாம் கடவுளுக்காக எனில்

எதுவும் பாவமில்லை

உண்மையில் கொல்பவர்

அனைவர் கையிலும்

சொர்க்கத்தின் திறவுகோலை பார்த்தேன்

எல்லாக் கடவுள்களும்

கொலை செய்துள்ளனர்

ஆகவே

கொல்வதினால்

நானும் கடவுள் ஆகிறேன்

பின்னர்

இனக் கலவரங்களில் ஈடுபட்டேன்

மொழிப் போர்களில்..

சித்தாந்த சுத்திகரிப்புகளில்...

கொன்ற இடங்களில் எல்லாம்

என்னைப் பயந்தீர்கள்

மரியாதை செய்தீர்கள்

வலியதே எஞ்சும்

என்பது உங்களுக்கும் தெரியும்

சிலர்

என்னை

பாசிஸ்ட் என்பீர்கள்

கவலையில்லை

ஏனெனில்

எனக்குத் தெரியும்

உங்களைக் கொல்பவர்களை

மட்டுமே

நீங்கள்

உங்களை

ஆள அனுமதிப்பீர்கள் என்று...

http://ezhuththuppizhai.blogspot.com/2010/06/blog-post_8250.html

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

போதை

உயிரோடை

index.jpg

பாதியில் படித்து நிறுத்திய

கதையை தொடர்வது

அதிகாலை கனவை

தொடர்வது போல எளிதல்ல

ஊன் உறக்கம் மறந்த

வாசிப்பின் எழுத்துகள்

உதிரத்தில் மிதக்கக் கூடும்

பேய் விரட்டுவதினும்

கடினமானதே

படிப்பின் போதையை

விட்டொழிப்பது

வாசிப்பை நிறுத்தி வைத்து

சற்றே இடைவெளி விட்டு

ஒருநாள்

படிக்கும் போதுணர்ந்தேன்

போதையொன்றும்

பெரும் பரவசத்தை தருவதில்லை

http://uyirodai.blogspot.com/2011/04/blog-post_29.html

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விரும்பிய கதைப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினால் முடியும் வரைக்கும் படிக்காமல் வைக்க முடியாது ஆனால் பாடப் புத்தகம் படிக்கத் தொடங்கினால் விரைவாக நித்திரை வந்து விடும் :lol:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விரும்பிய கதைப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினால் முடியும் வரைக்கும் படிக்காமல் வைக்க முடியாது ஆனால் பாடப் புத்தகம் படிக்கத் தொடங்கினால் விரைவாக நித்திரை வந்து விடும் :lol:

எனக்கும் பாடப்புத்தகம் படிக்கத்தொடங்கினால் நித்திரை வந்துவிடும். அதற்காகவே தற்போதும் முன்னர் படித்த புத்தகம் ஒன்றை பக்கத்தில் வைத்திருக்கின்றேன். இரண்டு பக்கம் தாண்டமுதல் நித்திரை வந்துவிடும். அப்படி வரும் நித்திரை குலைய ஏழெட்டு மணித்தியாலம் போகும்! ^_^

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் பாடப்புத்தகம் படிக்கத்தொடங்கினால் நித்திரை வந்துவிடும். அதற்காகவே தற்போதும் முன்னர் படித்த புத்தகம் ஒன்றை பக்கத்தில் வைத்திருக்கின்றேன். இரண்டு பக்கம் தாண்டமுதல் நித்திரை வந்துவிடும். அப்படி வரும் நித்திரை குலைய ஏழெட்டு மணித்தியாலம் போகும்! ^_^

வாசிப்பு என்பது ஒருவகையில் தியானம் மாதிரி!

மேலும், மேலும் வாசிக்க அது உங்களை ஆட்கொண்டு, ஒரு விதமான அமைதி நிலையை மனதில் உருவாக்கும்!

தியானத்தைப் போலவே, இதன் பலாபலன்களை மற்றவர்க்கு, விளக்குவதும் கடினமானது!

அவரவர், அனுபவித்தே நுகர வேண்டியது!

நல்ல பழக்கம் கிருபன்! தொடருங்கள்!!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பருந்து

தேவதேவன்

உங்கள் சின்னஞ் சிறிய வயதிலாவது

பார்த்து அனுபவித்திருக்கிறீர்களா,

பருந்து ஒன்று

கோழிக் குஞ்சொன்றை

அடித்துச் சென்ற காட்சியை?

அதன் கூர்மையான நகங்களால்

உங்கள் முகம் குருதி காணப்

பிராண்டப் பட்டதுபோல்

உணர்ந்திருக்கிறீர்களா?

பறவை இனத்திற் பிறந்தாலும்

விண்ணிற் பறக்க இயலாது

குப்பை கிண்டித் திரியும் அதனை

துடிக்கத் துடிக்க ஓர் உயரத்திற்கு

அழைத்துச் சென்ற அந்தக் காட்சி!

அக் குஞ்சோடு குஞ்சாய் மரித்து

அப் பருந்தோடு பருந்தாய்

பறந்து திரிந்திருக்கிறீர்களா

பாதையில்லா வானத்தில்?

குப்பைகளை

ஆங்கே நெளியும் புழுக்களை

கோழிக் குஞ்சுகளை

அவை தங்களுக்குள்ளே இடித்துக் கொள்வதை

புலம்பல்களை

போரை

போர்க்களங்களில்

பிணமாகி அழியும் மனிதர்களை

பிணங்களின் அழுகிய வாழ்வை-

நீங்களும்தான் பார்த்திருப்பீர்களில்லையா?

அது தன் சிறகு மடித்து

தனது பனித்த கண்களுடன்

ஒரு குன்றின் மீதமர்ந்திருக்கையில்

அய்யம் சிறிதுமின்றி

ஒரு தேவதூதன் போன்றே காணப்படுகிறதில்லையா?

http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_04.html

 • Like 2
Link to comment
Share on other sites

எங்கேயோ வாசித்த ஒரு கவிதை,மனதில் விழுந்து ஏதோவொரு விபரிக்க முடியாத நிறைவை அளித்து நினைவுகளில் என்றுமே தங்கிவிவிட்டது....

250224_160760627323563_100001688793360_398449_7814148_n.jpg

"விவிலியத்தில்

மத்தேயு அதிகாரத்தில்

மயிலிறகாய் வருடும்

மலைப் பிரசங்கத்தில்

ஏகாந்தமாய் வாழும்

வானத்துப் பறவைகள்

நாம்....

விதைப்பதும் இல்லை

அறுப்பதும் இல்லை.....!"

Edited by ந.சுபேஸ்
Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

கதவுகளுக்குப் பின்னால்...

ஜெ.திவா

தயவு செய்து

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

நான் அப்போதுதான்

என் ஆடைகளை

அவிழ்க்கத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்

அழத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்

என் சிசுவுக்கு

முலையூட்டத் தொடங்கியிருக்கலாம்

நான் அப்போதுதான்

ரத்தக் கறைபடிந்த

என் கொலைக்கருவியை

பார்க்கத் தொடங்கியிருக்கலாம்

தயவு செய்து

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

நான் விதைக்குள் தவிக்கும்

ஒரு தளிரை விடுவித்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு பறவையின் மனதை அறிய

ஒரு கிளிக்கு

பேச்சுப் பழக்கிக்கொண்டிருக்கக்கூடும்

நான் சுவரில் தொங்கும் ஒரு கடிகாரத்தையே

பார்த்துக்கொண்டிருக்கக்கூடும்

நான் ஒரு கனவின் பாதி வழியில்

நின்றுகொண்டிருக்கக்கூடும்

தயவுசெய்து

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

யாரேனும் ஒருவர்

பார்க்கக் கூடாத ஒன்றைப்

பார்த்துக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்

கேட்கக் கூடாத ஒன்றைக்

கேட்டுக்கொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்

திறக்கக் கூடாத ஒன்றைத்

திறந்துகொண்டிருக்கலாம்

யாரேனும் ஒருவர்

இழக்கக் கூடாத ஒன்றை

இழந்துகொண்டிருக்கலாம்

தயவு செய்து

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்

இந்த அற்ப சாகசங்கள் முடிவுக்கு வந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்

பாதிப் பைத்தியம் தெளிந்துவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்

இசைத் தட்டுகள் நின்றுவிடும்

இன்னும் கொஞ்ச நேரத்தில்

ஒரு கதவை மூடிவைக்கும்

எல்லா தேவைகளும் விலகிவிடும்

தயவு செய்து கதவைத் தட்டிவிட்டு

உள்ளே வரவும்

கடவுள் உங்களை

மன்னிக்க மாட்டார்

ஒரு சுருக்குக் கயிற்றின்

கடைசி முடிச்சை போடுவதை

நீங்கள் தடுத்து விடும்போது

கடவுள் உங்களை

ஏற்றுக்கொள்ள மாட்டார்

ஒரு விடைபெறும் முத்தத்தின் பாதையில்

நீங்கள் குறுக்கிட்டுவிடும்போது

கடவுள் உங்களோடு

பேசுவதை நிறுத்திவிடுவார்

எல்லா உணர்ச்சிகளையும் நீங்கள்

உங்களுடைய சொற்களால் நிரப்பும்போது

கடவுள் உங்களுக்கு

கதவு திறக்க மறுத்துவிடுவார்

நீங்கள் மூடப்பட்ட ஒரு அறையின் கதவுகளை

இவ்வளவு சந்தேகத்துடன் பார்க்கும்போது

தயவு செய்து

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வரவும்!

http://jthiva.blogspot.com/2011/06/blog-post_22.html

Link to comment
Share on other sites

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை

எங்களுடைய

புன்னகையை சந்தேகிக்கும்

எல்லோருக்கும் சொல்கிறோம்…….

எங்கள் கடல்

அழகாயிருந்தது

எங்கள் நதியிடம்

சங்கீதமிருந்தது

எங்கள் பறவைகளிடம் கூட

விடுதலையின் பாடல்

இருந்தது…..

எங்கள் நிலத்தில்தான்

எங்கள் வேர்கள் இருந்தன…

நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்

எம்மூரில்…

அவர்கள்

எங்கள் கடலைத்தின்றார்கள்…

அவர்கள்தான்

எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…

அவர்கள்தான்

எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்……..

எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத்துரத்தினார்கள்

அவர்கள்தான்

எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை

தெருவில் போட்டு நசித்தார்கள்…..

நாங்கள் என்ன

சொல்வது

நீங்களே தீர்மானித்து

விட்டீர்கள்

நாங்கள் மனிதர்கள் அல்ல என்று……

எங்கள்வயல்கள்

பற்றி எரிகையில்

எங்கள் நதிகளில்

எம் தலைகளைக்கொய்த

வாட்கள்

கழுவப்படுகையில்நீங்கள்

எங்கிருந்தீர்….

எப்போதுமிருக்கும்

பச்சை வயல்வெளியை

ஒற்றைப்பனை மரத்தை

தெருப்புழுதிக் கிளித்தட்டை

ஊர்க்கோயிலை

என்

பாட்டியின்

ப+ர்வீகக் கிராமத்தையும்

அதன் கதைகளையும்

இழந்து நாங்கள்

காடுகளில்

அலைகையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

சப்பாத்துக் கால்கள்

எங்கள்

குரல்வளையில் இருக்கையில்

எம் பிள்ளைகள்

வீதியில

துடிதுடித்து அடங்குகையில்

துப்பாக்கிகளின்சடசடப்பு

ஊருக்குள் வருகையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள்

ஊர்பிரிந்து வருகையில்

உயிர் தெறித்து விழுகையில்

கண்ணீர் பிரியாத துயரம்

எம்மைத் தொடர்கையில்

நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள் பசித்திருந்தோம்

நாங்கள் பயமாயிருந்தோம்

நாங்கள் விழித்திருந்தோம்

நாங்கள் விக்கித்து

வேறு வழியின்றி

மூர்ச்சித்துச் செத்தோம்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எப்போதும்

எங்கள் கனவுகளைத்

துப்பாக்கிகள் கலைத்தன

குண்டுகள் விழுந்தமுற்றத்தில்

பேரச்சம் நிறைய

நாம் தனித்தோம்

நாம் தவித்தோம்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

ஊரோடு கிளம்பி

நாவற் குழியில்

நசுங்கிச் செத்தோமே

நவாலியில் கூண்டோடு

நாய்களைப்போல்

குமிந்த எம் உடல்களின் மேல்

நாம் கதறி அழுகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

நாம்

வேர்களை இழந்து

ஊர் ஊராய்

அலைகையில்

துர்க்கனவுகளில்

துப்பாக்கிகளைக்கண்டு

எங்கள் பிள்ளைகள்

திடுக்கிட்டு அலறுகையில்

எங்கள்

பள்ளிக்கூடத்தில்

குண்டுகள் வீழ்கையில்

ஒழுகும் கூரையில்

எம் குழந்தையின்

கொப்பி எழுத்துக்கள் கரைகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

நாங்கள் எங்கள்

பனைமரங்களைவிட்டு துரத்தப்படுகையில

தெருப்புழுதி

எங்கள் பாதங்களில்

ஏறிவர

பாதங்களின்

சுவடுகளேயறியாக்

காடுகளிற்குள்

நாம்

துரத்தப்படுகையில்

காடுகளில்

எங்கள் குழந்தைகளின்

புன்னகை

மழையில் நனைகையில்

மலேரியாவில் சாகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

சப்பாத்துக்கள்

எங்கள் முற்றத்தை மிதிக்கையில்

உறுமும் வண்டிகள்

எங்கள் வேலிகளைப்பிரிக்கையில்

துப்பாக்கிகளின் குறி

எம்மீது பதிகையில்

உயிர் ஒழித்து

நாங்கள்

ஊர்விட்டோடுகையில்

அப்போது நீங்கள் எங்கிருந்தீர்

எங்கள்

நதியின் சங்கீதம்

துப்பாக்கி வாய்களில்

சிக்கித் திணறுகையில்

கடலின் பாடலை

அவர்கள் கைது செய்தபோது

எங்கள் குழந்தைகளை

அவர்களின் வாட்கள்

இரண்டாகப்பிளக்கையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

ஊரில்

கந்தகம் மணக்கையில்

வானில்

மரணம் வருகையில்

வயலில் அவர்கள்

மரணத்தை விதைக்கஇயில்

வரம்புகளில் உடல்களைக்கிடத்தையில்

ஊரைப்போர் விழுங்கையில்

ஊர் ஊராய்

நாம் அலைகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய

தெருக்களில் சருகுகள்

நிறைகையில்

குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில்

நொருங்கித்தேய்கையில்

மனிதர்களின்

சுவடுகளேயறியா

இடங்களிற்கு நாம்

துரத்தப்படுகையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

உறைந்துபோய்க்கிடக்கும்

எங்கள் குழந்தைகளின்

புன்னகையை

குரல்களற்று அலையும்

ஊர்க்குருவியின் பாடலை

பச்சையற்றெரியும்

எங்கள் வயல்களின் பசியை

பேனாக்களை இழந்த

எங்கள் குழந்தைகளிடம்

இருந்து துப்பாக்கிகளை

மீட்கமுடியாமல்

நாங்கள் தத்தளிக்கையில்

அப்போது

நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய

புன்னகையை சந்தேகிக்கும்

எல்லோருக்கும் சொல்கிறோம்…….

முகவரிகளற்றுத்

தேசங்களில் அலையும்

உறவுகளின் முகங்களை

மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை

மறுபடியும்

தரமுடியுமா உம்மால்?

அப்போதெல்லாம்

நாங்கள் ஏன் தனித்தோம்

உலகே

எங்கள் உணர்வுகளின் வலி

எட்டவில்லையா உனக்கு

எம்மூரின் நதியின் சலசலப்பில்

வருடும் தென்றலின் தழுவலில்

ஒவ்வொரு பூவின் முகத்திலும்

விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே

தெரிகிறதா உனக்கு

நாங்கள் கனவுகள் சுமக்கிறோம்

எங்களிடம்

மிச்சமிருக்கும்

சுதந்திர உணர்வுகளின் மீது

எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்

நிறங்களற்றுப்போன

இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்?

- சஹானா

http://www.agiilan.com/?p=10

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கனவுகள் சுமக்கிறோம்

எங்களிடம்

மிச்சமிருக்கும்

சுதந்திர உணர்வுகளின் மீது

எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்

நிறங்களற்றுப்போன

இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்?

நாங்கள்தான்.

மனதைத் தொடுகின்ற கவிதை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என் பாதையும் என் பயணமும்

கவிஞர்.பாரதிமோகன்

இலக்கு நோக்கிய

என் பயணத்தில்

பாதை தெரியாமல்..

பலநாட்கள்..

இடறி விழுந்து

தடம் மாறி

சில நாட்கள்..

முட்டி முளைக்கின்ற போதெல்லாம்

கிள்ளி எரிகின்ற விரல்கள்..

எங்கே தொலைந்து போவேனோ

என்ற அச்சத்திலேயே..

போராடி போராடி

புதிய பாதை தேடி-மீண்டும்

இலக்கு நோக்கிய பயணம்..

பாதையும் முடியவில்லை

பயணமும் முடியவில்லை

களைப்பினூடே திரும்பிபார்கிறபோதுதான்

உணர்கிறேன்..

வாழ்வில் பாதி முடிந்திருப்பதை

மீதி வாழ்க்கையை

எப்படி வாழ்வது...

மீண்டும் தொடர்கிறது

என் பயணம்..

அதற்கான இலக்கோடு!

http://bhaarathimohan.blogspot.com/2011/03/blog-post.html

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

சிறகுமுளைத்த பெண்

ஸர்மிளா ஸெய்யித்

நேற்றுவரை நானும்

ஜன்னல் கம்பிகளின் பின்னிருந்துதான்

ஓடும்மேகங்களைப் பார்த்தேன்

நிலாவையும் வெள்ளியையும் ரசித்தேன்

ஒருதுண்டு மேகத்தையும்

அள்ளியெறிந்தாற்போல

சில வெள்ளிகளையும்

எத்தனை நாளைக்கென்று

ஜன்னல் வழியே ரசிப்பது

அக்கினிக் குண்டத்திலிருந்து

தப்பித்தாற்போலதான்

இந்த வெளியேற்றமும்

ஆரம்பத்தில்

நாட்படாத கோழிக்குஞ்சின் அளவுதான்

சிறகிருந்தது

சிறந்ததையே எண்ணினேன்

சிந்தித்தேன்

சிறந்தவற்றிற்காக உழைத்தேன்

எப்போதும் இன்புற்றிருந்தேன்

பிறரும் இன்புற்றிருக்க விரும்பினேன்

குற்றம்காண முனைவதல்ல என் மனது

எல்லாவற்றிலுமிருக்கும்

நல்ல பக்கங்களை ஏற்று நடந்தேன்

அக்கம் பக்கத்தார்

அண்டியிருந்தோரெலாம்

எனை உற்றுக் கவனிக்கக் கண்டேன்

யாருக்கும் நெஞ்சுபொறுக்கவில்லை

எனக்கு சிறகுமுளைத்ததுகண்டு

இது எம் குலத்திற்காகாத

குணமென்று எச்சரிக்கப்பட்டேன்

கண்டுகொள்ளாது நடப்பதும்

மௌனமாயிருப்பதுமே

எம் குலப்பெருமையென

அறிவுறுத்தப்பட்டேன்

நேரிய என் விழிகள்

இருட்டை நோக்கியதாயிருக்க

பணிக்கப்பட்டேன்

நிமிர்ந்த என் நெஞ்சுக்கும்

தாழ்ப்பாழிட கோரப்பட்டேன்

இத்தனை எல்லைகளை

தாங்காத என்நெஞ்சு குமுறியது

இடமா இல்லை அண்டத்தில்

வேலி தாண்டிய என் வேர்களை

இழுத்துக்கொண்டு பறந்தேன்…

குலத்தையும்

கூடயிருந்தவர்களையும்

விட்டு பறப்பதொன்றும்

சுகமான அநுபவம் கிடையாது

அது சிலுவையை சுமப்பதுபோன்றது

என் சிறகுகளை

வெட்டியெறிய

என் கால்களுக்கு விலங்கிட

எண்ணற்ற முயற்சிகள்

எல்லாம் எதிர்கொண்டேன்!

என் பயணத்தில்

உலகையறிந்தேன்

மனங்களின் பாஷையைக் கற்றேன்

வாழ்வின் போக்கையும்,

அது புகட்டும் போதனைகளையுமறிந்தேன்

இவை கொஞ்சம்தான்

கைம்மண்ணளவு!

இன்னும் நெடுந்தூரம்

பறப்பேன்

அண்டத்தின்

ஐஸ்வரியங்களை அறிவேன்

நதியோரப் பள்ளத்தாக்கில்

பெரும் விருட்சமொன்றின் கிளையில்

தரித்து நிற்கின்றேன்…

களைத்துப்போன என்னைத் தேற்றவும்,

காயம்பட்ட என் சிறகுகளை ஆற்றவும்.

வெளிச்சத்தை நோக்கிய

எனது பயணத்தில்

ஒருநாள்

என் குலத்தை

எனைக் குற்றம்கண்டோரை

சந்திப்பேன்

எங்கள் குலத்தின் பொக்கிஷ‌மென

அந்நாளில் அவர்கள்

எனைப்போற்றவும் கூடும்!!!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=15194&Itemid=263

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இத் திரியை பார்த்தேன் எல்லா கவிதைகளும் நன்றாக இருக்கு, பதிவுகளிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

மனைவி இழந்தவனின் டாங்கோ நடனம்

-பாப்லோ நெருடா-

ஓ மலைனா,

இந்நேரம் என்மடல்களைப் பார்த்திருப்பாய்,

இந்நேரம் கோபத்தில் கத்தியிருப்பாய்,

வெறிநாயென்றும், நாய்களைப் பெற்றவன் என்றும் வசைபாடி

என் தாயின் நினைவை

இந்நேரம் இழிவுபடுத்தியிருப்பாய்.

வெப்ப நாடுகளையும்,

எனக்குப் பெரும் தொல்லை தந்த காய்ச்சல்களையும்

இன்றும் நான் வெறுக்கும் ஆங்கிலேயர்களையும்

அங்கே இப்போதும் நான் இருந்துகொண்டு குறைசொல்லிக்கொண்டிருப்பதாய் நினைத்து

என்னைத் திட்டிக்கொண்டிராமல்

என் இரவுநேரக் கனவுகளையும்

என் உணவுமுறையையும்

உன்னால் நினைவுகூர இயலாது.

மலைனா,

உண்மையில் இரவு எவ்வளவு பெரியது,

உலகம் எவ்வளவு தனிமையானது!

முன்புபோலவே,

ஒற்றையறைகளுக்கும்

உணவுவிடுதியின் ஆறிப்போன சாப்பாட்டிற்கும்

நான் பழகிவிட்டேன்.

என் சட்டைகளையும் சிராய்களையும்

தரைமீது கழற்றிப் போடுகிறேன்.

என் அறையில் உடைமாட்ட கொக்கிகள் இல்லை.

சுவர்களில் எவருடைய படமும் இல்லை.

உன்னை மீண்டும் பெறுவதற்காக

என் ஆன்மாவில் உள்ள எவ்வளவு நிழலையும் நான் தருவேன்.

மாதங்களின் பெயர்கள் மிரட்டல்களைப்போல் ஒலிக்கின்றன.

குளிர்காலம் என்றசொல் சாப்பறைபோல் ஒலிக்கிறது.

என்னைக் கொன்றுவிடுவாயோ என்றஞ்சி

தென்னை மரத்தடியில் நான் புதைத்த கத்தியை

ஈரமணலடியே, செவிட்டு வேர்களுக்கிடையில்

பின்னர் நீ கண்டுபிடிப்பாய்.

உன் கையின் அழுத்தத்திற்கும்

உன் காலின் மினுங்கலுக்கும் பழக்கப்பட்ட

அந்த சமையலறை எஃகைக் காணத் திடீரென விழைகிறேன்.

மனித மொழிகள் அனைத்திலும்

வறியோர் மட்டுமே

உன் பெயரறிவர்.

துளைக்கவியலா தெய்வீகப்பொருளான

உன் பெயரைப் புரிந்துகொள்ள

அடர்ந்தமண்ணுக்கும் இயலவில்லை.

நிலைப்படுத்தப்பட்ட கதிரவனின் நீரைப்போல் ஓய்ந்திருக்கும்

உன் கால்களின் பட்டப்பகலையும்

உன் விழிகளில் உறங்கிப் பறந்துயிர்க்கும் குருவியையும்

உன் இதயத்தில் நீ வளர்க்கும் வெறி நாயையும்

எண்ணுகையில் துயர்மேலிடுகிறது.

இதுபோலவே,

நமக்கிடையே இருக்கும் மரணித்தவர்களையும்

இனி மரணிக்கப்போகிறவர்களையும்

பார்க்கிறேன் நான்.

சாம்பலை மூச்சாய் விடுகிறேன்.

காற்றிலேயே சாபம் விடுகிறேன்.

எனைச்சுற்றி எப்போதும் இருக்கப்போகும்

அகண்ட இந்த வெறுமைவெளியையும்

பூதாகரமான கடற்காற்றையும்

உன்னை அடைவதற்காக நான் தருவேன்!

குதிரைத்தோலின் அங்கமாகிடும் சாட்டையைப்போல்

நினைவுமறதி கலக்காத நீண்ட இரவுகளில் கேட்கும்

உன் இரைந்த மூச்சும்,

காற்று மண்டலத்தின் ஒரு பகுதியாகிவிடுகிறது.

மெதுவாக, ஆடிக்கொண்டே, வெள்ளியென,

பிடிவாதமான தேனை ஊற்றுவதுபோல்

கொல்லைப்புறத்து இருளில்

நீ சிறுநீர் கழிப்பதை கேட்பதற்காக,

நான் வைத்திருக்கும் நிழல் கூட்டத்தையும்,

என் ஆன்மாவில் சண்டையிடும்

பயனற்ற வாள்களின் போரொலியையும்,

மறைந்துபோனவற்றையும், மறைந்துபோன உயிர்களையும்,

புரிந்துகொள்ளவியலா அளவிற்குப் பிரிக்கமுடியாமல்

தொலைந்து போனவற்றையும்,

என் நெற்றியின்மீது தனித்திருந்து அழைக்கும் குருதிப் புறாவையும்

எத்தனை முறை வேண்டுமானாலும் தருவேனே.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போதிமரம்

தமிழ்நதி

என்னை விறுக்கென்று கடந்த

உன் விழிகளில்

முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது

உன் உதட்டினுள்

துருதுருக்கும் கத்திமுனை

என் தொண்டைக்குழியை வேட்கிறது.

மாறிவிட்டன நமதிடங்கள்

துடிப்படங்கும் மீனாக நான் தரையில்

துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்.

துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ

சற்றுமுன்பேஅம்மணமானோம்.

இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்

எரிகிறது எரிகிறது தேகம்

நம் அட்டைக்கத்திகளில்

எவரெவரின் குருதியோ வழிகிறது

நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்

ஒழுகிற்று

ஊரும் உயிரும் இழந்த

பல்லாயிரவரின் ஒப்பாரிகள்

வன்மம் உதிர்த்து

வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்

மரணம் என்ற போதிமரத்தின் கீழ்

நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை

வதைமுகாம் மனிதர்களின்

கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது

தோற்றவரின் வேதம் என்பாய்

சரணாகதி என்பாய்

போடீ போ!

இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!

http://tamilnathy.blogspot.com/2009/12/blog-post_20.html

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வெளியே மழை பெய்கிறது
ரெஜோ
raining-outside.jpg

இந்த நகரத்தின் தெரு முனைகள் எங்கும்

சூன்யத்தின் வாசல் வாய் விரித்திருக்கிறது …

வாய் புகுந்து மீண்டால்

இன்னொரு தெரு

இன்னொரு வாசல்

தப்ப முடியாதென்றே தெரிகிறது …

உடலெங்கும் தீ, பற்றி எரிகிறது

மனதெங்கும் வன்மம் சுற்றிப் படர்கிறது

இருந்த அடையாளங்கள் எதுவுமின்றி

தொலைந்து போகத் தோன்றுகிறது

பித்த நிலைக்கும் முக்தி நிலைக்கும்

மத்தியில் மதிலொன்று சிரிக்கின்றது

மதில் மேல் பூனையாய் என் நிழல்

எந்தப் பக்கம் விழும் …

நிழலைத் துரத்திக் கொண்டு நானும்

என்னைத் தொலைக்க நினைக்கும் நிழலும்

ஓடிக் கொண்டேயிருக்கிறோம்

மதிலைச் சிதைத்த படி …
சில ரகசியங்கள் புரிகின்றன

சில புதிர் முடிச்சுகள் அவிழ்கின்றன

அகோரங்கள் அழகாகின்றன

அழகிற்கான வாய்ப்பாடுகள் அழிகின்றன …

எந்தப் பாதையும் இங்கே எனக்கில்லை

எந்த கதவுகளுக்கும் என்னிடம் திறப்பில்லை

வாசல் தேடி வர யாருமில்லை

கதவின் பின்னே காத்திருப்பதில் நியாயமில்லை …

கதைகள் அழிக்கப்பட்ட காகிதத்தில்

புதிய கதைகளுக்கு இடங்களிருந்தாலும்

கசங்கிய ரேகைகள்

கவனமாய் இருக்கச் சொல்லுகின்றன …

மீண்டும் ஒரு முறை, முதலில் இருந்து …

எழுத அமர்கிறேன்

வார்த்தைகள் தடித்து வர மறுக்கின்றன

நடுங்கும் கைகளை நகங்கள் கிழிக்கின்றன ..

தற்செயலாய் காயம் கண்டு

கசிகின்ற ரத்தம் கிளர்ச்சியளிக்கிறது ..

இன்னும் சில காயங்கள்

வலிகளே வரங்களென்கின்றன …

பகலில் தூக்கம் பிடித்திருக்கிறது

கண்களை மூடிக் கொண்டால்

உலகம் இருண்டுதான் போகிறது …

நள்ளிரவில் ஓலமிடுகிறேன்

நாய்களில் சில ஒத்திசைக்கின்றன …

சீக்கிரம் இறந்து போகப் போவதாய்

கற்பனை செய்து கொள்கிறேன் …

கனவில் எல்லாம் குறுவாள் எடுத்துக்

கொலைகள் செய்கிறேன் …

பைகளில் சில்லறை கனக்கிறது

பசிக்கிறது

நினைவில் வருகிறது அம்மாவின் முகம்

பசித்திருப்பதின் நியாயம் பிடித்திருக்கிறது …

வெளியே மழை பெய்கிறது

அழத் தோன்றுகிறது .

 • Like 1
Link to comment
Share on other sites

 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

பருவமெய்திய பின்
மன்னார் அமுதன்

--------------------------

பருவமெய்திய பின்தான்

மாறிப் போயிருந்தது

அப்பாவிற்கும் எனக்குமான

பிடித்தல்கள்

வாசலில் வரும் போதே

வீணாவா! வா வாவெனும்

அடுத்த வீட்டு மாமாவும்

அகிலாவின் அண்ணாவும்

போலிருக்கவில்லை அப்பா

மழை வரமுன்

குடையுடனும்..

தாமதித்தால்

பேருந்து நிலையத்திலும்..

முன்னும் பின்னுமாய் திரிய

காரணம் தேவைப்படுகிறது

அப்பாவுக்கு

துக்கம் தாழாமல்

அழுத ஒருபொழுதில்

ஆறுதல் கூறுவதாய்

அங்கம் தடவுகிறான்

அகிலாவின் அண்ணா

யாருக்கும் தெரியாமல்

மொட்டைமாடிக்கு வா

நிலா பார்க்கலாமென மாமா

இப்போதெல்லாம் பிடிக்கிறது

அப்பாவை

 • Like 1
Link to comment
Share on other sites

சேமிப்பு

கீரை விற்ற கிழவியிடம்

பேரம் பேசி சேமித்தேன்

ஒரு ரூபாய் பணமும்

ஒரு மூட்டை பாவமும்!

ஈரம்

கோவை புதியவன்

குட்டிச்சுவற்றில் வைத்த சோறு ...

காய்ந்தாலும் ஈரமாகவே இருக்கிறது மனம்

வராத காக்கையை எதிர்நோக்கி.!

சாதனை

கோவை புதியவன்

சாதிக்க மலையேறிய பின்

சறுக்கி விழுந்தது

பயம் மட்டுமே!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Quote: "சேமிப்பு

கீரை விற்ற கிழவியிடம்

பேரம் பேசி சேமித்தேன்

ஒரு ரூபாய் பணமும்

ஒரு மூட்டை பாவமும்!"

அருமை கவிதை அறிவிலி, இதுதான் பல பேர் செய்வது ஆனால் கோட்டை விட்டுவிடுவார்கள் லட்ச கணக்கில்

Link to comment
Share on other sites

ஈரம்

கோவை புதியவன்

குட்டிச்சுவற்றில் வைத்த சோறு ...

காய்ந்தாலும் ஈரமாகவே இருக்கிறது மனம்

வராத காக்கையை எதிர்நோக்கி.!

எங்கு இப்போது எல்லாம் ஈரமான மனமும் .. காக்கைக்கு சோறு வைக்கும் இடமும் இருப்பதாக தெரிவது இல்லை....

:unsure:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முத்தக் கவிதைகள்:

viewer.png

முத்தம்...

ஒரு பெண்

தன் பெண்மையை உணர்ந்து

மெய் சிலீர்த்திடும்

சுதந்திரத்தருணம்!

~*~*
~*~

முத்தம்!

அன்பின் வெளிப்பாடு

காதலின் கடைக்குட்டி

நினைவுக்கோர்வையின் அகவரிசை

ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி

யதார்த்தத்தை மீறிய கற்பனை.

~*~*
~*~

முத்தம் !

ஒரு நொடிக்கொண்டாட்டம்

காமத்தின் கதவுத்தாழ்பாள்

ஏவாளின் ஆப்பிள்

பெண் உணர்தலின் முதற்புள்ளி

கற்பனையை மீறிய யதார்த்தம்.

~*~*
~*~

சவ வீட்டிலும்

சத்தமில்லா தெருக்களிலும்

பகிரப்படும் முத்தங்கள்

வெவ்வேறானவை..
~*~*
~*~

ஏங்கி நிற்கும்

இதய வெற்றிடத்தை

எதிர்பாரா ஒற்றை

முடிவில் முத்தம்

மலர்களால் நிரப்பும்.

~*~*
~*~

தடுத்து பழகாதீர்கள்

கொடுத்து பழகுங்கள்

முத்தங்களை!

- அருண்.இரா

 • Like 1
Link to comment
Share on other sites

வேஷம்

ஒரு ரூபாய்க்கு வெத்தலை

அதோட சுண்ணாம்பு, பாக்கு

அப்படியே ஒரு பீடிகட்டு

ஸ்டார் தியேட்டரில்

பகல் காட்சி தரிசனம் பெற

ஒளிந்து ஒளிந்து

ஓடுவது

நடுவே ஒரு டீ

ஒரு வடை

அட இப்ப என்ன வந்திடுச்சி

என்ன தான் குறைஞ்சுப் போச்சி

வஞ்சனையில்லாமல்

வாய்க்கு ருசியாய் சாப்பிடறது தான்

வாழ்க்கை

மெய்யையும், வாயையும்

அடக்கி என்ன சாதிக்கப்போறோம்

அர்த்தங்கெட்ட வாழ்க்கையில

அண்ணாச்சி என்று

கடைகாரரையும் துணைக்கழைப்பது

கோவிலில்

பக்தனாக விபூதி அணிவது

வெளியே மிருகமாக

வேட்டையாட நினைப்பது

உள்ளொன்றும் புறமொன்றுமாக

வாழ்வினிலே நடிப்பது

தற்போது தான் எனக்கு

வாழ்க்கையே திரைப்படமாகத்

தெரியத் தொடங்கியிருக்கிறது

வேஷங்கள் அனைத்தும்

புரியத்தொடங்கியிருக்கிறது.

http://pamathiyalagan.blogspot.com/2010/09/2.html

Link to comment
Share on other sites


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.