Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மனதைக் கவர்ந்த கவிதைகள்


Recommended Posts

அழுக்கு   
 
 
download9406256.jpg?w=1000
 
அத்தைப்பெண்
 
அன்ன லட்சுமியை
 
இன்று பார்த்தேன்.
 
ஊரில்
 
அவர்கள் வீட்டில் மட்டுமே
 
கார் இருந்தது
 
அந்தக் காரின்
 
பின்சீட்டில்
 
அவளை முத்தமிட்டதும்
 
காவிரிக் கரையில்
 
கைப் பிடித்து
 
திரிந்ததும்
 
நினைவு இருக்கிறது.
 
பிறகு
 
பெரிய படிப்பு படிக்க
 
பட்டணம் வந்துவிட்டோம்.
 
அவளுக்கு
 
படிப்பு அதிகம்
 
வரவில்லை
 
எழுத்துப் பிழைகளுடன்
 
சில கடிதங்கள்
 
எழுதினாள்
 
காரை விற்று விட்டார்களாம்
 
வியாபாரம்
 
எனும் விளையாட்டில்
 
மாமா தோற்றுவிட்டார் போல ..
 
என்னைப் பார்க்க வேண்டும்
 
என்று எழுதியிருந்தாள்
 
சில
 
வரிகள்
 
புரியவில்லை.
 
பதில் எழுத
 
முடியவில்லை.
 
என் கல்யாணத்துக்கும்
 
மாமா வரவில்லை
 
அன்ன லட்சுமி
 
‘தவறுதலாய்’
 
மயில்துத்தம் சாப்பிட்டு
 
மருத்துவமனையில்
 
இருப்பதாகச் சொன்னார்கள்.
 
புதிய காருடன்
 
குலதெய்வம் காண
 
போகும் வழியில்
 
பேருந்து நிறுத்தத்தில்
 
பொசுக்கும் வெயிலில்
 
எண்ணை இல்லா தலையுடன்
 
எண்ணை வழியும் முகத்துடன்
 
அழுக்குச் சேலையில்
 
மூக்குத் துடைக்கும்
 
குழந்தையுடன்
 
அவளைப் பார்த்தேன்
 
நிற்கலாம் என்றே
 
நினைத்தேன்.
 
பக்கத்தில்
 
மனைவி இருந்தாள்
 
அவளுக்கு
 
அழுக்கு பிடிக்காது…
Link to comment
Share on other sites

 • 1 month later...
 • Replies 320
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்வை உறிஞ்சி நீளும் கோடை

சித்தாந்தன்

 

 

driftwood-bw-fine-art-photography-print-

கடைசியில் கடவுள் சாத்தானுடன்

கைகுலுக்கிக் கொண்டார்.

அங்கவஸ்திரத்தில் படிந்திருந்த புழுதியை

இலாவகமாக உதறிவிட்டார்.

கைகளில் படிந்திருந்த குருதிக் கறையை

அவரால் கழுவ முடியவில்லை.

தன்னைத் துரத்தும்

ஓலங்களிலிருந்தும் அவரால் மீளமுடியவில்லை.

பிணங்களின் மீதமர்ந்து

விழிகளைப் பிடுங்கும் காகங்களின் மீது

சாபமாய் இரண்டொரு வார்த்தைகளை வீசினார்

அவையும் உதடுகளைக் கூடத் தாண்டவில்லை.

சலிக்கும் வாழ்வை எழுதியெழுதி

வெறுப்புற்றார்.

சாபங்களின் புற்றில்

பாம்புகளுடன் சல்லாபித்து

காலத்தைக் கழிப்பதே விதியென்றான பின்

தகிக்கும் கோடை

வாழ்வை உறிஞ்சி நீள்வதாய் புலம்பினார்.

நிலம் பிளந்து

வேர்கள் இறுகி கிளை விரித்த மரத்தில்

காய்களோ கனிகளோ இருக்கவில்லை

பறவைகள் கூட வந்தமரவில்லை.

http://tarunam.blogspot.co.uk/2013/09/blog-post.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான கவிதைகளின் தொகுப்பாய் நற்கவிதைகளின் தொகுப்பு அருமை 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பெண் புலி!

தினேஷ் பாலா

 

po-dine.jpg.jpg

ஒரு நீண்ட கனவு

அது ஒரு நீண்ட கனவென்று

என்னால் உறுதியாய் கூறமுடியும்

காடுகளும் மலைகளும்

சூழ்ந்த நட்ட நடு

வனத்திற்குள்

அத்தனை ஆக்ரோஷமாய்

மூச்சிரைக்க ஓடி வருகிறது

அத்தனை அன்புகளை

சுமந்து கொண்டு ஒரு புலி

அது அதன் மொத்த பிரியங்களையும்

ஒரு மூட்டையாய் கட்டி

சுமந்து ஓடி வருகிறது

இருந்தும் புலியென்றால்

பயம் என்று மட்டுமே

எனக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது

நான் என் சுயத்தை

பத்திரப்படுத்த ஓடி வருகிறேன்

இங்கே நான்

மறைத்துக்கொள்ள மறைந்துகொள்ள

நிறைய வழிமுறைகள்

இருக்கின்றன

எதார்த்தம் எளிமையானது

எளிய எதார்த்தம் மிக மிக

எளிமையானது

எதார்த்தத்தின் சிலந்தி வலைக்குள்

சிக்க மனமில்லாமல்

அதை கிழித்துக் கொண்டு

ஓடி வருகிறது அந்த புலி

நிஜத்தில் இத்தனை மைல்கள்

நான் ஓட முடியுமாவென

தெரியவில்லை எனக்கு

இன்னும் சில தூரங்களுக்கு

அப்பால் நான் இந்த

புலியிடம் அகப்பட்டுக் கொள்ளலாம்

அல்லது தப்பித்தும்

சென்றுவிடலாம்

நான் விரும்புவதெல்லாம்

ஒன்றேயொன்றுதான்

இந்த வனத்திற்குள்

நான் தனியே நின்று

கதறியழும் தருணமென்று ஒன்று

வரவே கூடாது

அதற்குள் எனக்கு

இந்த கனவு கலைந்துவிட வேண்டும்!!!

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=6404

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பாதி பருகிய குவளைகள்

ஈரோடு கதிர்

coffee.jpg

 

 

எதிர்பாரா ஒரு பொழுதில்

எதிரெதிரே கலந்த கண்களில்

ஒளிர்ந்தடங்கியது ஒற்றை மின்னல்

 

அவள்தானா?

அவன்தானா?

ஆண்டுகள் தீர்ந்தும்

நினைவின் இடுக்குகளில்

சிதையா முகத்தின் மிச்சம்

 

விழிகள் விரிந்த நொடியில்

உதடுகளில் புன்னகை உதிர

விசாரிப்புகள் விருப்பப் பார்வைகள்

நேசம் பொதிந்த நெடுமூச்சுகள்

 

ஏதாவது சாப்பிடலாமென

அருகாமைக் கடையில்

காபி குவளைகளோடமர்ந்து

உதடுகள் ஒன்றை உரையாட

விழிகள் வேறொன்றைப் பேச

 

தீரத் தவிக்கும் நிமிடங்களை

தீர்க்கமற்றுப் பிடித்து

தீரத் துடிக்கும் காபியை

பருகாமல் பருகி

பாதியாய் வைத்த

நொடியின் விளிம்பில்

 

அவனறியாமல்

இடமாற்றி வைத்தாள்

பாதி பருகிய குவளைகளை

அவனறிந்ததை அறியாமலே!

http://maaruthal.blogspot.co.uk/2013/03/blog-post_16.html

Link to comment
Share on other sites

காமராஜர் நாடார் என்று சொல்லிக்கொண்டதில்லை 
kamarajar1.jpg
 
அவர் நாடார் தான் ... 
 
நாடாராய்த்தான் வாழ்ந்தார்...!
 
உண்மைதான்...
பெண் நாடார்,
பொன் நாடார்,
பொருள் நாடார்,
புகழை நாடார், 
பதவியை நாடார், 
ஊழலை நாடார்,
 
பணத்தை நாடார்..

அவர் பகட்டை நாடார்,
பெயரை நாடார்.. 
பெருமை நாடார்..
படோடோபம் நாடார்... 
கையூட்டை நாடார்.. 
சிபாரிசை நாடார். .. 
கிடைத்த பிரதமர் பதவியை நாடார்...
யார் சொன்னது
 அவர் நாடார் இல்லை என்று...?
 
 • Like 2
Link to comment
Share on other sites

The Rape of Saratha 

விசாரணையும் விடுவிப்பும்

A poem by Raj Swarnan 

5 January 2000

saratha.gif

[see also Sri Lanka Navy gang rapes and murders Sarathambal, a Brahmin Tamil Girl.]

rape.jpg

இலங்கையின் யாழ்ப்பாணக்குடா நாட்டை அண்டிய புங்குடுதீவுப் பகுதியில் சாரதாம்பாள் என்னும் பிராமணப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு கடித்துக் குதறப்பட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளாள். இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் படி ஸ்ரீலங்கா ஜனாதிபதி பணித்துள்ளார். எனினும் ஒரு வாரமாகியும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப் பகுதி இலங்கைக் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

 

ஓ.. நாய்களே..

கடித்துக் குதறுங்கள் - உங்கள்

காம இச்சை தீரும் வரை

நீங்கள்

என்ன செய்தாலும்

ஏது செய்தாலும்

தட்டிக் கேட்கும் தைரியம்

யாருக்குண்டு இத் தரணியில்?

நடந்த கதையைச் சொல்லி

முன்று மணித்தியாலமாய் முக்கைச் சிந்த

அப்பாவித் தமிழனிடம்

தொலைக்காட்சியா இருக்கிறது?

நாங்கள் செத்தாலும் பிழைத்தாலும்

என்ன நடந்ததென்று 

எடுத்துச் சொல்லும்படி

பீபீசீ வந்து 

பேட்டி காணப் போகிறதா?

விழுந்தடித்து வாருங்கள்..

விக்கினமின்றி உங்கள்

விடுவிக்கும் திருப்பணியை

விரைவாய்த் தொடருங்கள்..

எதுவும் நடக்காது..

தயங்காது வாருங்கள்..

வந்து வடிவாய் - உம்

வக்கிரத்தைத் தீருங்கள்..

எல்லாம் நடந்த பின் தான் 

ஏதும் விசாரணை நடக்கும்..

கண்கெட்ட பின் தானே 

பலருக்கு இங்கு

சூரிய நமஸகாரம் செய்ய வேண்டுமென்ற

சுரணையே வருகிறது..

விசாரணை முடிந்து 

தீர்ப்பு வருமுன்

இன்னொரு சாரதாம்பாள்

இல்லாமலா போய்விடுவாள்?

சாமிக்குப் படையலிட்ட 

சாரதாம்பாள் - இன்று

நேவிக்குத் தன்னுடலைத்

தானமாய்த் தந்தாள்..

ஆமிக்கும் நாளை மீண்டும்

அமுதாய்ப் போவதற்கு

அப்பாவிப் பெண்ணுடல்கள்

ஆயிரம் உண்டன்றோ?

விசாரணை ஒருபுறம்

நடந்து கொண்டிருக்கட்டும்..

விடுவிப்பு மறுபுறம்

தொடர்ந்து கொண்டிருக்கட்டும்..

ஓ மானுட சமுதாயமே.. - உன் 

மனச்சாட்சிக்கு என்னவாயிற்று?

நானும் பெண்தான் என்று

பெண்வேடம் போட்டுப்

பேச்சுக்கு ஒப்படிக்கும்

பேடிகளின் கதையை

இன்னுமா நம்புகிறாய்?

நானும் தாய் தான் என்று

நயவஞ்சக வேடமிடும்

நரிப்பிறவிகளில் - உனக்கு

இன்னுமா நம்பிக்கை?

புத்தாயிரமாண்டில்

புகுந்துள்ள உலகமே - எம்

புங்குடு தீவுப்பக்கம்

சற்றே வந்து பார்..

உதட்டுச் சமாதானம் பேசும்

உத்தமியர் கட்டளைக்கீழ்

விடுவிக்க வந்தவரின்

விளையாட்டைக் கொஞ்சம் நீ

தட்டிக் கேட்காவிட்டாலும்

எட்டிப் பார்த்துவிட்டுப் போ..

எங்களுக்காய் எதுவும் நீ

பெரிதாய்ச் செய்ய வேண்டாம்..

உயர் மட்டங்களில் ஏதும் 

உரசல் காயம் பட்டால் தானே

உரத்த சத்தம் உன்

வாய் வழி புறப்படும்..

ஆனாலும்..

உன்னிடம் ஓர் உதவி..

இருட்டறையில் இருந்து கொண்டு

இராட்சதர்களைத் தேடும்

இந்தக் குருட்டுப் பிறவிகளுக்கு - ஓர்

இலெக்றிக் லாம்பு

இனாமாகக் கொடுப்பாயா?

விஷ ஜந்துக்கள் எங்கே

விருத்தியாகின்றன என்று

இனியாவதிவர்கள்

வெளிச்சம் போட்டுப் பார்க்கட்டும்..

http://tamilnation.co/forum/swarnan/saratha.htm

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நம் பொய்கள்

ஜி. முருகன்

பனிப் பொழிவைப்போல

நம் வாழ்க்கையின்மேல்

உதிர்ந்து கொண்டிருக்கின்றன பொய்கள்

சில பொழுது மேகங்களைப் போல

காதலின் வசீகரமாகி

முத்தத்தில்

எச்சிலைப்போல கலக்கின்றன

ஆடை கலைப்பில்

கூடி முயங்கி

முனகலிட்டு

தாபத்தில் கலக்கும்

பொய்யும் பொய்யும்

விடுபட்டு

சரிந்து

களைப்புறுகின்றன

ஒவ்வொரு முறையும் நாம்

பொய்யின் பரிசுகளையே பரிமாறிக்கொண்டு

விடைபெறுகிறோம்

பொய்கள் விடைபெறுவதில்லை

அவை வாழ்க்கையின்

கண்ணாடி குடுவையை

நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

http://gmuruganwritings.wordpress.com/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குறைகூறி

மகுடேசுவரன்

William_Ronald_The_Critic_1344_366.jpg

நம்மைச் சுற்றி எப்படி வந்தான்

இந்தக் குறைகூறி ?

இவனிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவே

ஆற்றல் அனைத்தும் விரயமாகிவிடுகிறது.

வெள்ளைத்தாளில்

கரும்புள்ளி தேடுவதே இவன் வாடிக்கை.

தோசையின்

பசியணைக்கும் வள்ளாண்மையைப் பேசாமல்

அதன் வட்டக்குறைகளையே பேசுபவன்.

வடக்கு நோக்கி நின்றால்

நீ கிழக்கு நோக்கி நின்றிருக்கலாம் என்பான்.

மனச்செயலியை

முற்றாகக் குலைக்கும் வைரஸாகிவிடுகிறது

குறைகூறி உதிர்க்கும் ஒரு கருத்து.

ஒருவனின் மழலையே அவன் என்பதில்

நான் முழுநம்பிக்கையுள்ளவன்.

அந்த மழலையை அரிந்து அகற்றுவதில்

குறைகூறி குறியாயிருக்கிறான்.

குறைகூறியை

நாம் எப்போதும் நாடுவதில்லை

அவன்தான்

நம்மைத் தேடியபடியே இருக்கிறான்.

அவனிடமிருந்து

நாம் ஒளிந்துகொள்ளாததால்

அவன் நம்மைக் கண்டுகொள்கிறான்.

ஒரேயொரு குறைகூறி

நம்மை எல்லாத்திசையிலும் முடக்கிவிடுவான்.

ஒரேயொரு குறைகூறி

நம்மை என்றும் எழாதபடி வீழ்த்திவிடுவான்.

ஒரெயொரு குறைகூறி

நம்மைக் குதறிக் கொன்றுவிடுவான்.

குறைகூறி என்னும் பெருநோயாளி

வைத்தியக் குறிப்புகள் கூறுபவனைப்போல் தோன்றுவான்.

குறைகூறி என்னும் பைத்தியக்காரன்

அலையாத விழிகளோடு எதிரே நிற்பான்.

குறைகூறி என்னும் குற்றவாளி

நமக்கு நீதி செய்பவன்போல் அமர்ந்திருப்பான்.

குறைகூறி என்னும் தாழ்ந்த சுயமதிப்பீட்டாளன்

நம்மை விமர்சனத் தராசில் நிறுத்துவான்.

இப்பொழுது நான் எச்சரிக்கையாகிவிட்டேன்.

அவன் என்னை எந்நோக்கோடு அணுகுகிறான்

என்பதைப் புரிந்துகொண்டேன்.

அவன் ஓர் ஆளே இல்லை என்பது தெரிந்துவிட்டது.

முன்பெல்லாம்

குறைகூறி எதைச் சொன்னாலும்

‘அப்படியா சொல்றீங்க ?’ என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

இப்பொழுது

‘போடாங்கொய்யாலே’ சொல்கிறேன்.

http://kavimagudeswaran.blogspot.co.uk/2011/12/blog-post_25.html

Link to comment
Share on other sites

 • 4 weeks later...
கவிதைச்சரம்
 
images.jpg
ருமை மாடு 
எவ்வளவு அப்பிராணி !
அதன் மீதமர்ந்துதான் 
எமதர்மன் வருவானென்று 
படித்ததில்லை நீங்கள்?
 
எனவே தீர்மானியுங்கள் 
மரணம் அச்சமூட்டக்கூடியதா என்று!
 
சடலங்களைக் கிடத்திவிட்டு
உயிரைமட்டும் கவர்ந்து செல்கின்றன 
மரணங்கள்.
சடலங்கள் ஒருவேளை அச்சமூட்டக்கூடும்.
அதற்கு 
மரணம் பொறுப்பாளியல்ல. 
 
மரணம்  
ஒரு நல்ல காதலியை 
அல்லது நல்லதொரு காதலனைப் போல
நமக்காக நெடுங்காலம் காத்திருக்கிறது 
அரவணைக்க.
 
நீங்கள் என்னதான் சொல்லுங்கள் 
கடைசியில் 
அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது.
 
விலகி ஓடாமல் சிநேகிதமாகிக்  கொள்வது 
புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன்.
 
எனவே தீர்மானியுங்கள்.   
 
ரதன் சந்திரசேகர்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் என்னதான் சொல்லுங்கள் 
கடைசியில் 
அதன் விருப்பம்தான் நிறைவேற போகிறது.
விலகி ஓடாமல் சிநேகிதமாகிக்  கொள்வது 
புத்திசாலித்தனமென்று சொல்லுகிறேன்.
எனவே தீர்மானியுங்கள்.    :icon_idea: 
Link to comment
Share on other sites

பாலுறுப்புகள் மறைக்கப்பட்டு முகம் மட்டுமே 
தெரியும் புகைப்படமே ஒட்டப்பட்டிருக்கிறது - எதற்காக
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
 
எனது அப்போதய தோற்றத்திற்கும் - இப்போதய 
மாற்றத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் இல்லை...எதற்காக 
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். 
 
கடவு சீட்டையோ - வங்கி கடனையோ எனது 
அடையாள அட்டையினை வைத்துக் கொண்டு
உன்னால் எனக்கு பெற்றுத்தரவாவது முடியுமா...எதற்காக 
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். 
 
தற்காலிக கொட்டகையின் தாள்வாரத்தில்
படுத்திருக்கும் எனது வழர்ப்பு நாய் - உன்னை
பார்த்து குரைக்காமல் வாலாட்டுகிறது - நீயோ எதற்காக 
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
 
எனது பிறந்த ஆண்டு மாதம் திகதியில் 
பொருத்தம் ஏதாவது பார்த்து - உன் கொடூர சகோதரன்
யாரையாவது என்னோடு கோத்து விட போகிறாயா... எதற்காக 
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய். 
 
எங்கள் அடையாளங்கள் எல்லாமுமே
தொலைந்ததென்றான பிறகும் - எதற்காகவோ
எனது அடையாள அட்டையினை கேட்கிறாய்.
 
உன்னை தூரத்தில் பார்த்ததும் நீயாக கேட்கும்
முன்னரே பழக்கதோசத்தில் - அடையாள அட்டையினை
நானகவே எடுத்து நீட்டுகிறேன்.
 
நெடுந்தீவு முகிலன்
 
Link to comment
Share on other sites

காவிரி

 
um2m.jpg

வாயக்கட்டி வயித்த கட்டி 

விதை நெல்லுக்கு வட்டிக்கட்டி 

சோறு தந்தவனுக்கு இன்று 

கஞ்சித்தொட்டி. 

ஆளும் கட்சி போராட்டம் 

எதிர்க்கட்சி போராட்டம் 

அனைத்துக்கட்சி போராட்டம் 

எதுவும் கொண்டுவருவதில்லை 

காவிரியில் நீரோட்டம். 

வாங்கிவைத்த 

பூச்சி மருந்து வீணாகுதாம் 

வரப்பில் நின்று 

வயிறு நிறைய குடித்துவிட்டான் 

உழவன். 

கையும் காலுமாவது மிச்சமாச்சு 

அந்த காலம் 

கடன் தொல்லைதான் கூடிபோச்சு 

இந்த காலம். 

நமக்கென்று ஆறுகள் உண்டு 

நாலா பக்கமும் 

தண்ணீர்தான் வருவதில்லை 

தாகம் தீர்க்க.

தடையில்லா மின்சாரம்தான் 

தருகிறோமே எடியூரப்பா 

காவிரியில் தண்ணீருக்கு 

இன்னும் ஏன் நீ... இடையூரப்பா. 

ஏற்கனவே தண்ணீர் இல்லை 

மணலையும் எடுத்தப்பிறகு 

என்ன பெயர் வைப்பது 

ஆற்றுக்கு?. 

கங்கையில் வேண்டுமானால் 

பிணங்கள் விழுவது 

புனிதமாக இருக்கலாம் 

காவிரிக்காக 

பிணங்கள் விழுவது 

மனிதமா?

Edited by nunavilan
Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

தியான வெளி

இந்திரன்

download.jpg

காகித விளக்குகளை ஏற்றி வைக்கிறாய்

நாற்புறமும்..

மெலிதான கொசுவலைக்குள்

இருவரும் .

ஒருவர் விழியில் மற்றவரின் பிம்பம்

இடவல மாற்றங்களோடு இருப்பதைப் புரிந்து கொண்டு.

கிரகங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரபஞ்சத்தில்

நீயும் நானும்

ஒன்றை ஒன்று பொருத்தி சுடர்விட்டு எரியத் தொடங்கும்

இரண்டு அகல் விளக்குகள்.

உன்னைத் தொடாமலேயே உனது உடம்பை

நான் மனத்துக்குள் உணர்கிறேன்

நாகலிங்கப் பூவிற்குள் தேன் தேடும் எறும்பைப் போல்

உனது மேனியைத் மெலிதாய்த் தொடுகிறேன்

விந்தையான புதிர் ஒன்றைத் தொடுவது போல்.

ஒரு புறாவைப் போல் நீ சிலிர்த்துக் கொள்கையில்

மாறிப் போய் ஒலிக்கும் உன் குரலில் நீ முணுமுணுப்பது

மந்திர உச்சாடனம் போல் கேட்கிறது .

எனது வலது கரம் உனது இடது கரத்தின் மீதும்

உனது வலது கரம் எனது இடது கரத்தின் மீதும்

இசையின் இரண்டு கமகங்கள் போல் படிகின்றன.

உனது விரல்களின் நுனிகள்

இதயத்தின் வார்த்தைகளைப் பேசுவதை

உடம்பின் அதிர்வலைகளால் உணர்ந்து கொள்கிறேன்.

கண்களை மெலிதாய் மூடியபடி

ராகமாலிகையொன்றை

உதட்டுக்குள் நெய்தெடுக்கிறாய் என்னைப் போலவே.

ஒருவர் பாடும் பாடல் ரீங்கரிக்கிறது

மற்றவர் செவியில்.

ஒருவருக்குள் இன்னொருவரின் உயிர் உருகத் தொடங்கியதும்

இருவருக்குள்ளும் உறங்கும் சக்தி விழித்துக் கொண்டு

மிதக்கத் தொடங்குகிறது

காதல் மணக்கும் தியான வெளியில்.

http://malaigal.com/?p=3629

Link to comment
Share on other sites

புரட்சி என்பது...

 
Che-Guevara.jpg
ஒன்றுபடு, 
போராடு., 
வெற்றிபெறுவோம்..,
புரட்சியின் விதி வரையறுக்கப் 
படாதவை..
 
எல்லா இடங்களிலும் 
நசுக்கப் படும் மக்களுக்காக புரட்சி 
பின் 
நசுக்கப் படும் புரட்சி ..
 
மறுக்கப் பட்ட நீதிக்காக புரட்சி 
புரட்சி செய்து ஆட்சியை பிடிப்பவனுக்கு 
பிடிக்காத வார்த்தை புரட்சி.. 
 
எல்லா வயிறும் எரியும்
ஏழைக்கு பட்டினியாலும் 
பணக்காரனுக்கு அஜீரணத்தாலும் ..
 
கடவுள், பக்தன் 
முதலாளி, தொழிலாளி 
அரசு, மக்கள் 
எப்போதும் லாபம் 
தரகர்களுக்கு மட்டும் ..
 
உன் குடும்பத்தின் 
பட்டினி போக்கிப் 
பின் 
வீதிக்கு வா..
போராடு...
சிறை செல் ..
மரித்துப் போ ..
சுவரொட்டியில் சிரி..
 
சே..
மாவோ.. 
லெனின் ...
மார்க்ஸ் ....
பெரியார் ...
கொள்கைகளை வீதியில் முழங்கு 
குல தெய்வத்துக்கு 
கெடா வெட்டு ..
 
உன் சகோதரன் போராடினால்
குற்றம் சொல்லி 

’கட்டு’ ரை எழுது

நீதான் செவப்பு
மற்றெல்லோரும் கருப்பென சொல்
ஒரு மதத்தை இழிவு செய்ய
இன்னொரு மதவாதிகளிடம்
கையேந்து...
 
இனி 
ஆயுதம் துணை வராது 
அரசாயுதம் அழிக்கும் உன்னை,
அறிவுப் புரட்சி செய் 
அனுதினமும் தொழில் செய் 
பங்கெடுப்பவனுக்கும்
பங்கு கொடு ..
 
புரட்சி என்பது 

மாற்றத்தைக்  கொண்டு வர 

முதலில் நீ மாறு...

 

Link to comment
Share on other sites

 • 1 month later...

விழித்துக்கொண்டே பார்க்கின்ற 

விபரீதக் கனவுகள்..?

kanavukaL.jpg 

திரைப்படஙகள் வெறும் கனவுகள்தாம்

அதுவும்

விழித்துக்கொண்டே பார்க்கின்ற 

விபரீதக் கனவுகள்..?

சில வேளைகளில்

இந்த

கனவுகளைக் கண்டுமுடிக்குமுன்

கண்களே

காணாமல் போய் விடுகின்றன..?

சினிமா

என்ற மாயக்காற்றை

சுவாசித்தவர்களில்

பலர்

முதல் மூச்சிலேயே

மூர்ச்சையாகிப் போனார்கள்...!

இன்னும் சிலரோ

மூச்சிழுத்த அவசரத்தில் 

தங்கள்

மூக்குகளையே உடைத்துக் கொண்டார்கள்....!

ஆனாலும்

நான் சினிமாவை நேசிக்கிறேன்..?

ஏனென்றால்

அதில் மட்டும்தானே

வில்லன்கள் வீழ்த்தப்படுகிறார்கள்..!

டி.அருள்செழியன்

ஆனந்தவிகடன்/1987

 

http://darulchezhian.blogspot.ca/2014/01/blog-post_10.html

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எந்திரன்

போகன்

 

 

art-bot2.jpg

நான்

ஒரு கதை சொல்லி

என்று வந்தான்  அவன்.

உங்கள்

நாட்குறிப்புகளைக்

கொடுங்கள்.

உங்கள் வாழ்வைக்

கதையாய்ப்

பின்னித் தருகிறேன் என்றான்

என் நாட்கள் யாவும்

நகல்களால் நிரம்பியவை

எனினும்

தன்கதையைப்

பிறர் பேசக் கேட்கும்

அற்ப ஆசை

என்னையும் தொட்டது,

சில காலம் கழித்து

ஏமாற்றத்துடன்  வந்தான் .

'மன்னிக்கவேண்டும்

நான்

ஒரு

அறிவியல் கதை சொல்லி அல்ல.

இயந்திரங்களைப்

பற்றி எழுத

எனக்குத் தெரியாது.'

என்றான் வருத்தமாய்..

 

http://ezhuththuppizhai.blogspot.co.uk/2010/07/blog-post_21.html

Link to comment
Share on other sites

 
 
கந்தையா மாமாவின்
தேனீர் கடையின் இருக்கையில்
அண்ணாந்து கொண்டிருந்த ஆணி ஒன்று...
 
என் அப்பா ஆசையாய் வாங்கித் தந்த
காற்சட்டையின் பின் பக்கத்தை
பலவந்தமாகக் காயப்படுத்தியது.
 
கைகளால் கட்டுப் போட்டுக்கொண்டு
வீட்டுக்கு வரும் வழியில்
என் பின்னால் வந்து கொண்டிருந்த
பருவப் பெண்களின் கண்கள்
என் பதட்டம் தெரியாமல் சிரித்துக் கொண்டன.
 
ஓட்டமும் நடையுமாய் வந்து
ஆவேசத்தில் கழற்றினேன்
 
ஆயிரம் திட்டுகளுக்கு பின்புதான்
அம்மா கையிலே எடுத்தாள்.
 
பிறந்த வீட்டில் இருந்து சீதனமாய்
கொண்டுவந்து பத்திரமாய்
பொத்தி வைத்திருந்த
தையல் ஊசியும் பத்துப்போட்ட
களைப்பில் செத்துப்போனது.
 
சித்திரம் போட்ட அந்த அழகோடு
பலமுறை பட்டணமும் போய்ப்போய் வந்தேன்
 
வெயில் பொசுக்கி விடுமென
காற்றில் உலரவிடுவேன்.
 
பெரும்பாலும் திருநாட்களிலே
பாவஇனைக்கு உப்படுத்தினேன்
 
தேசிய உடை என்று...
ஊரில் பட்டமும் வாங்கினேன்
 
பெரியவனான போதும் பாதுகாத்தேன்.
 
இப்போது என் மனைவி
குப்பையில் தூக்கி வீசுகிறாள்
 
ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாய்
பொத்திவைத்திருக்கிறேன் எனது பழைய காற்சட்டையை ...
 
நெடுந்தீவு முகிலன்
Link to comment
Share on other sites

 

என் ஊரும் ஒரு நாளும்...
 
பெருமழைதான்
என்றாலும்
வியர்வை பிசுபிசுக்க
நான் பிறந்த மண்ணில்
பரிச்சயமற்றவளாய்
பெண் தெய்வம்
ஒன்றைத் தேடி
மிக நிதானமாக
நடந்துகொண்டிருந்தேன்.
 
வாகனங்கள் நிறைந்த
ஒரு கூட்ட நெரிசலில்
பெண் தெய்வம் நிற்பதாக
அறிவித்துக்கொண்டிருந்தார்கள்
நானோ....
பாதை மாறியதை உணர்ந்து
மார்க்கங்களற்ற
பெண் தெய்வத்தை
தேடிக்கொண்டிருந்தேன்
பிறகும்.
 
மன்னிப்பும் தவறும்
மனித இயல்பென
மறுதலிக்கும் மனதில்
புத்தனின் பிறப்புக்கு
முன் பிறந்து 
கடவுளாக
மதிக்கப்படாத மனிதனின்
மென்சாந்தம் கண்டேன்
ஒரு சிலரிடம்.
 
சிரிப்பு என்னவென்றால்
பெண்கடவுளர்களோடு 
வீரக் கடவுளர்களையும்
பூட்டி வைத்திருந்தார்கள்
கள்ளர்களுக்குப் பயந்து.
 
ஊர்க்காற்றை மட்டும்
சேமித்துக்கொண்டு
மீண்டும்.....
வாடகை தேசம் 
வந்துவிட்டேன்
வெள்ளைக்
கடவுளர்களைக் கும்பிட!!!
 
Link to comment
Share on other sites

 • 2 weeks later...

எப்படி உணர்த்துவது?
நா.பாலா

mutham.jpg

'என் உலகமே இருளில் இருக்கிறது' 

என்று பிதற்றினாய்!

விரல் எட்டும் தொலைவில்தான்

விளக்குகளின் பொத்தான் இருப்பதை!

'சபிக்கப்பட்ட முகம் எனது' என்று 

சலித்துக் கொண்டாய்!

உன் கண்ணாடியில் பாதரசம் போய்ப்

பல வருடங்கள் ஆகி விட்டதை!

'என்னால் பல மணி நேரங்கள் 

தொடர்ச்சியாய்ப் பேச முடியும்'

என்று பெருமிதப்பட்டாய்!

அதில் முக்கால்வாசி நேரம்

யாரையாவது குறை கூறுவதை!

'புரிகிற மாதிரி கதைகளைப்

புதுமைப்பித்தன் எழுதுவதில்லை' என்றாய்!

'நீயே தத்துப்பித்து' என்பதை!

'அனாவசியமாய்ப் பேசுவதில்லை' என்றாய்! 

அவசியமான தருணங்களிலும்

நீ அமைதியாயிருப்பதை!

'கோபுரத்தில் தங்கக் கலசம் என் உபயம்' 

எழுதி வைத்து வரலாற்றில் இடம் பிடித்திட முனைந்தாய்! 

 உன் வீட்டருகே

போன கோடையில் பற்றியெரிந்த

குடிசைகளில் பாதி இன்னும்

கூரை வேயப்படாமல் இருப்பதை!

'யாருமே என்னுடன் பேசுவதில்லை' 

என்று கதறினாய்...

'யார் பேசுவதையும்

நீ காது கொடுத்துக் கேட்பதில்லை' என்பதை!

'நேற்றுக் கனவில் 

அவள் எனக்கு முத்தமிட்டாள்'

என்று வெட்கப்பட்டாய்....

'உன் ஆசைகளின் பிரதிபலிப்புத் தான் கனவுகள்' 

என்பதை

எப்படி உணர்த்துவது?

 

 

http://thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=405&iid=38

 

 

Link to comment
Share on other sites

 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

நெடுங்காமம்

அவள் ஏறும் போது நான் கவனிக்கவே இல்லை,

அவளின் குரல் மட்டும் இருக்கை

கிடைத்து விட்ட சந்தோஷத்தில் கூவியது,

என் முன் இருக்கையின் குறுக்கில் அவள்

உட்கார்ந்த போதும் முகத்தை பார்கவே இல்லை,

நிமிர்ந்து பார்க்காத என்னை பார்த்த பின்பு அவளின்

அழகின் மேல் அவளுக்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும் ,

இப்படி ஒருவனா என்று தோன்றி இருக்க கூடும் ,

அவள் பேசினாள், அவள் ஏதோ கையை ஆட்டி கொண்டே

தாயுடன் பேசினாள்,

அவளின் செய்கை அப்பட்டமாக

என்னை நோக்கி என்று புரிந்தது,

கருப்பு உருவம் , மெலிந்த தேகம், லட்சணமான முகம்,

இருந்தும் என்னை கவரவில்லை,

மீண்டும் புத்தகத்துள் ஆழ்ந்தேன்.

கதையில் கடுங்காதலுற்ற யவன ராணி

இளஞ்செழியனிடம் காதலை உரைக்கும் வார்த்தைகள்

புத்தகத்தின் தாள்களிடமிருந்து பீய்த்து

கொண்டு என் உடலில் மெதுவாக ஏறின,

என் பார்வையை அவளின் பால் திருப்பினேன்,

“அட இவள் அழகாய் தானே இருக்கிறாள்”,

பார்த்து கொண்டே இருந்தேன் , நான் பார்ப்பது தெரிந்து அவளின் உள்மனது திருப்தி அடைந்திருக்க வேண்டும் போல,

அவளும் ஒரு

ராணிக்குரிய மிடுக்குடன்

தன்னை நிலைப்படுத்து அமர்ந்தாள்,

சிறிது நேரம் கழித்து பார்வையை திருப்பினாள்,

அப்போதும் அவன் (என் ) பார்வை தழைக்காததை கண்டு சற்றே சலிப்புடன் திரும்பிக்கொண்டாள்,

மற்றுமொரு நேரம் திரும்பி பார்க்கையில் அவன் மாறாததை கண்டு அவளுக்கு கோபம் தான் வந்தது.

சற்று முன்னர்

“இப்படி ஒரு ஆண் பிள்ளை இருப்பானா?” என்று அதிசயிதவள்,

இப்போது “ச்சே இப்படி ஒரு ஆண் பிள்ளை இருப்பானா, கூச்ச படாமல் பார்த்து கொண்டு ” என்று வெறுக்கிறாள்,

இந்த பொல்லாத காற்று அவள் கூந்தலை

என் முகத்தில் வீசிவிட்டு போனது,

அவளை சடாரென்று கட்டியணைத்து முத்தமிடும் பேராவலை அடக்கிகொண்டேன்.

யாரோ சொன்னார்கள் பேருந்து கட்டுபாட்டை இழந்து விட்டதென்பதை,

ஜன்னல் வழியே பார்த்தேன்

பேருந்து சாலையை விட்டு விலகி

காய்ந்த வயல்வெளியில்

இறங்கி தறிகெட்டு ஓடி கொண்டிருந்தது…

http://kaatchipizhai.wordpress.com/2008/12/23/நெடுங்காமம்/

Link to comment
Share on other sites

 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

புரூட்டஸ்களின் புன்னகை

பாரிமைந்தன்

புரூட்டஸ்களின்

புன்னகைக்குள் ஒளிந்திருக்கிற

வன்மத்தை ஒருபோதும்

உணர்ந்திருப்பதில்லை சீசர்கள்.

கத்திகளால் குத்தப்படுவதை விட

கொடுமையானது

துரோகத்தின் வலி என்பதை

புரிந்துகொள்வதில்லை ஒருபோதும்

புரூட்டஸ்கள்.

ஆண்டவரே!

இவர்கள் செய்வதறியாது செய்கிறார்கள்

இவர்களின் பிழையை

காத்து இரட்சியுமென

வேண்டிக் கொள்கிறார்கள்

இயேசு நாதர்கள்

எப்போதும்

தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காகவும்

காலாகலமும்

அப்பழுக்கற்றவர்கள்

வீட்டு முற்றத்திலேயே

அடிக்கடி

முளைக்கின்றன

துரோகச்செடிகள்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=9&contentid=3684fcce-0327-420c-a06e-02b0ca016a5e

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.