Jump to content

இலங்கைத்தீவு தொடர்பான சர்வதேச அரசியல் சூழலும் தமிழர் தரப்பின் அரசியல் நகர்வுகளும் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி


Recommended Posts

2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் கடந்த 29-11-2010 அன்று இடம்பெற்றது. அந்த வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்காது ஒதுங்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அதற்கான காரணம் ‘‘மீள்குடியேற்றம் அரசியல்த் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தம்முடன் அரசு ஆக்கபூர்வமான பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பதென’’ அறிவித்துள்ளது.

அத்துடன் வரவுசெலவுத்திட்டத்தின் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை(10-12-2010) ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது அதனையும் எதிர்த்து வாக்களிக்காது கூட்டமைப்பு ஒதுங்கிக் கொண்டுள்ளது.

பேச்சுப்பல்லக்கு செயற்பாடோ அரசின் காலடியில்

மேற்படி வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்த வரவு செலவுத்திட்டமானது தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழித்து ஒழிப்பதற்கான வரவு செலவுத் திட்டமென மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளனர். தமது பேச்சுகளில் கடுமையாக விமர்சித்துவிட்டு தாமே கூறிய கருத்துக்களுக்கு நேரெதிராக அவர்களது செயற்பாட்டில் அதனை எதிர்க்காமல் இருந்ததன் மூலம் அரசாங்கத்தை ஆதரித்துள்ளனர். தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை கைவிட்டுள்ள கூட்டமைப்பு தமது உண்மை நிலைப்பாட்டை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே வரவுசெலவுத்திட்டத்தை எதிர்ப்பது போன்று பேசி மக்களை ஏமாற்றியுள்ளனர். மறுபுறத்தில் தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிப்பதில் முனைப்புக்காட்டிவரும் அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையிலும் சர்வதேச சமூகத்திடமிருந்தும், புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் வரக்கூடிய அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கிலும் வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்காமல் இருந்ததன் மூலம் ஆதரவளித்துள்ளனர். மேலும் தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அரசின் கைக்கூலிகளாக உள்ளனர். அவர்களது கொள்கை, செயற்பாடுகளுக்கும் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை, செயற்பாடுகளுக்கும் இடையில் அடிப்படையில் வேறுபாடுகிடையாது. எனினும் கூட்டமைப்பு தமது பேச்சுக்கள் ஊடாக தாம் தமிழ்த் தேசியத்தில் உறுதியாக இருப்பதுபோன்று காட்டி மக்களை ஏமாற்ற முயல்கின்றது.

இலங்கைத்தீவின் அரசியல் சூழல்

இலங்கைத்தீவில் அரசியல் நிலைமைகளை நோக்கினால் தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்மை 2009 மே 18 இல் ஸ்ரீலங்கா அரசு இராணு ரீதியாக அழித்தது. யுத்தம் மூலம் தமிழ் மக்களை அடிமைப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா அரசானது தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது அழிப்பதற்கான செயற்பாடுகளை நடைமுறையில் அதிவேகப்படுத்தியுள்ளது. சிங்களக் குடியேற்றங்கள், இராணுவக் குடியேற்றங்கள், பௌத்த விகாரைகள அமைத்தல்;, பொருளாதார, கல்வி, நிர்வாக ரீதியாக சிங்கள மயமாக்கல் என விரிவடைந்து செல்கின்றது. 2011 ஆண்டு வரவு செலவுத்திட்டமானது தமிழ்த் தேசத்தின் இருப்பை முழுமையாக இல்லாது அழிப்பதற்கான திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் நோக்கிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசத்தை இல்லாது அழிக்கும் அரசின் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புரிந்து கொண்டு அதனை தமது வரவு செலவுத்திட்ட உரைகளில் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நிலைமைகளை கருத்தில்க் கொள்ளாது முள்ளிவாய்க்கால் படுகொலைகளையும், 2009 மே மாதத்திற்குப் பின்னர் தமிழ்ர் தாயகப் பிரதேசங்களில் ஸ்ரீலங்கா அரச நிர்வாக இயந்திரமும், அதன் முப்படைகளும், துணை இராணுவக் குழுக்களும் கூட்டிணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையும் மட்டும் கருத்தில் கொள்பவர்களுக்கு மரண பயம் ஏற்படுவதும் அதன் காரணமாக இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் இனி எதுவுமே செய்ய முடியாது மாறாக ஸ்ரீலங்கா அரசு சொல்வதைக் கேட்டு அவர்கள் விரும்புவதனை மட்டுமே செய்து அவர்களது தயவில் அடிமைகளாகத்தான் வாழ முடியும் என்ற தோல்வி மனப்பான்மை ஏற்படக் கூடும்.

ஸ்ரீலங்கா அரசாங்கமானது தமிழ்த் தேசத்தை இல்லாது அழிப்பதற்கான செயற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றது. சமகாலத்தில் அரசாங்கத்தின் செற்பாடுகளுக்கு தமிழ் மக்களதும் மக்கள் பிரதிநிதிகளதும் ஆதரவு இருப்பதாக சர்வதேச சமூகத்திற்குக் காட்ட வேண்டி தேவை அல்லது ஆகக் குறைந்தது தமிழ் மக்களது எதிர்ப்பு இல்லாமல் உள்ள நிலைமையை பேண வேண்டிய நிலை உள்ளது.

இவ்வகையான சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கானது சகல வழிமுறைகளையும் கையாண்டு முயற்சி செய்து வருகின்றது என்பது வெளிப்படை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நல்லெண்ணம் என்ற போர்வையில் தமிழ்த் தேசத்தை இல்லாது அழிக்கும் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா அரசு தமிழ்த் தேசத்திற்கு எதிரான தனது போக்கினைத் தீவிரப்படுத்தினால் தமிழர் தரப்பை தமிழ்த் தேசிய உரிமைக் கோரிக்கைகளை படிப்படியாக முற்றாகக் கைவிடச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையையே அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நாம் இலங்கைத்தீவில் உள்ள அரசியல் நிலைமைகளை மட்டும் கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. மாறாக புலம்பெயர் தமிழ் மக்களது செயற்பாடுகளையும் இலங்கை தொடர்பாக இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழ்நிலைகளையும் முழுமையாக கருத்தில் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழ்ர்களது செயற்பாடு

தற்போது புலம்பெயர் தமிழர்;கள் ஒன்று திரண்டு ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி மேற்கொண்டுவரும் போராட்டங்கள் எழுச்சி அடைந்துள்ளது. அவர்களது போராட்டங்கள் இலங்கையில் தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களது அரசியல் உரிமைக் கோரிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதாகவும், இலங்கை அரசுக்கு நெருக்கடிகளை எற்படுத்துவதாகவும், தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் நன்மைகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

சர்வதேச அரசியல் சூழல்

2009 மே மாதத்திற்கு முன்னர் தாயகத்தில் ஓர் நடைமுறை அரசு கட்டியெழுப்பப்பட்டிருந்தது. தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பு அரணாகவும், பேரம் பேசும் வலுவாகவும் அது விளங்கியது. ஆனாலும் அன்றய காலகட்டத்தில் இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகுவதை சர்வதேச சமூகம் விரும்பாத காரணத்தால் அன்று சர்வதேச நாடுகளின் ஆதரவு தமிழர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. அதற்குக் காரணம் சர்வதே நாடுகள் தமது கேந்திர நலன்களை முன்னிலைப்படுத்தியமையாகும்.

ஆனால் 2009 மே மாதத்தின் பின்னர் பிராந்திய அரசியல் நிலைமைகளும், சர்வதேச அரசியல் நிலைமைகளும் மாற்றம் அடைந்துள்ளது.

தற்போது பல சர்வதேச அரசுகளும், ஐ.நா சபையும், சர்வதேச ஊடகங்களும் ஸ்ரீலங்கா அரசு தொடர்பாக விமர்சனக் கருத்துக்களை கொண்டுள்ளமையை அவர்களது உத்தியோக பூர்வமான அறிக்கைகள் ஊடாகவும், செயற்பாடுகள் ஊடாகவும் அவதானிக்க முடிகின்றது.

பல சர்வதேச நாடுகளும், பெருமளவு சர்வதேச ஊடகங்களும் இறுதி யுத்தத்தில் பெருமளவு போர்க் குற்றங்களை இலங்கை அரசு மேற்கொண்டதான குற்றச்சாட்டுக்களை வெளிப்படையாக சுமத்துவதுடன், அது தொடர்பாக பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும் எனவும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவரும் இத்தகைய மாற்றமானது தமிழ் மக்களது அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக வலியுறுத்தக் கூடிய சர்வதேச சூழல் உருவாகிவருவதனை தெளிவாக உணர முடியும். ஆகவே தமிழ் மக்களது பேரம் பேசலுக்கான பலம் என்பது 2009 ற்கு முன்னர் இருந்ததை விடவும் வலுவான சர்வதேச இராஐதந்திர ஆதரவுத்தளத்தைக் கொண்டதாக மாறிவருகின்றது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சர்வதேச நிலைமையையும் கருத்தில்க் கொண்டே தமிழ் அரசியல் தலைமைகள் தீர்மானங்களை மேற்கொண்டிருக்க வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்திடமிருந்து விசேடமாக மேற்கு நாடுகளிடம் இருந்து அதிகரித்துவரும் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கா அரசுக்கு உள்ளது.

சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்ப தமிழர் தரப்பை பயன்படுத்த முயலும் ஸ்ரீலங்கா

இதில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காக வடகிழக்கில் மக்களால் ஐனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் தலைகளுடன் தீர்வு தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக காட்ட வேண்டிய தேவை ஸ்ரீலங்கா அரசுக்கு உண்டு.

ஐனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தோடு இணங்கியுள்ளதாக காட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களது நடவடிக்கைகளும், இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துவரும் சர்வதேச நாடுகளது நடவடிக்கைகளும் தவறானவை என நிரூபிக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.

அதனூடாக ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக அழுத்தங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தி சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்ளுதலே ஸ்ரீலங்கா அரசின் நோக்கமாகும்.

சர்வதேச சூழல் ஸ்ரீலங்கா அரசுக்கு பாதகமானதாக மாறிவரும் நிலையில் ஸ்ரீலங்கா அரசை எதிர்க்காது ஒதுங்கியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது மேற்படி சர்வதேச நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு வாயப்பளிப்பதாகவும் அரசின் நிகழ்சி நிரலுக்குத் துணை போவதாகவும் அமைந்துள்ளது.

மேலும் தமிழ் மக்களது உரிமைக்காக உறுதியாக குரல் எழுப்பும் புலம்பெயர் தமிழ் மக்களது எழுச்சியை முற்றாக மழுங்கடிக்கக்கூடிய ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் தாயகத்திலுள்ள மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் முரண்பாட்டை உண்டுபண்ணக்கூடிய சூழலையும் உருவாக்கியுள்ளது.

தாயக்தில் உள்ள தமிழ் மக்கள் தமது உரிமைகள் தொடர்பான உண்மை நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாத அரசியல் சூழ்நிலையே இன்றும் இலங்கையில் காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் மக்களது உண்மையான அரசியல் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தாயகத்திலுள்ள தமிழ் அரசியல் தலைமைகளுக்கே உண்டு. குறிப்பாகத் தமிழ்த் தேசத்தினது இறைமையை கைவிடமாட்டோம் என்று கூறி தமிழ் மக்களை நம்பவைத்து அவர்களது வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே அதிக பொறுப்பு உண்டு. அப்படியிருக்கவும் தேர்தலிற்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு தமிழ் மக்களது நலன்களுக்கும், எதிர்பார்ப்புக்கும் மாறாக அமைந்திருந்தமையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டி வந்துள்ளது. செயற்பட்டுவருகின்றது. இந்த வரவு செலவுதிட்டத்தில் கூட்டமைப்பின் முடிவானது தமிழ் மக்களுக்கு மேலும் ஓர் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நன்றி

- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

http://inioru.com/?p=18827

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.