Sign in to follow this  
Newsbot

குழந்தைகளை வெல்லும் ஆயுதம்

Recommended Posts

குழந்தைகளை வெல்லும் ஆயுதம்

மா. ஆறுமுககண்ணன்

ஓர் ஊரில் ஒரு ராஜா...'' இப்படித் தொடங்கியதும் கதை கேட்பதற்காகக் குழந்தைகள் ஆயத்தமாகிவிடுவர். அவர்களின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டோடும். அது ஒரு காலம்.

இன்றும் அவர்கள் விதவிதமான கதைகள் கேட்பதற்காகத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் கதை சொல்வதற்குத்தான் ஆள்களைக் காணோம்.

கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளின் கற்பனை உணர்வு, செயல் திறன் அதிகரிக்கிறது. கதைகளால் அவர்களின் மனதில் தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், அன்பு, சத்தியம் போன்ற நற்பண்புகள் ஆழமாக வேரூன்றுகின்றன.

வெறும் ஏட்டுக் கல்வியால் ஆவியாகிப்போகும் குழந்தைகளின் மனம் என்ற நீர்நிலையில், கதைகள் என்ற மேகங்கள் கனமழை பொழிந்து மகிழ்ச்சி அலைகளைப் பரவச் செய்கின்றன.

தேர்வு முறையை மட்டுமே வலியுறுத்தித் தயாரிக்கப்படும் பாடப் புத்தகங்கள் குழந்தைகளை வகுப்பில் தேர்ச்சிபெறச் செய்கின்றன. வாழ்க்கையில் அவர்கள் தேர்ச்சிபெறக் கதைகள் உதவுகின்றன.

இன்று பெரியவர்களின் பெரும்பாலான நேரத்தைத் திருடிக் கொள்ளும் தொலைக்காட்சிப் பெட்டிகள் எதிர்காலத் தூண்களான குழந்தைகளின் பொன்னான பொழுதுகளையும் சத்தமில்லாமல் கபளீகரம் செய்து கொண்டிருக்கின்றன என்பது மிகுந்த கவலை தரும் செய்தி.

கதைகளுக்காக ஏங்கி, தொலைக்காட்சிப் பெட்டிகளின் சீரியல்களில் மனதைத் தொலைக்கத் தொடங்கும் குழந்தைகள், காலப்போக்கில் தீயால் கவரப்பட்டு அதைநோக்கி வந்து பின்னர் அதிலேயே விழுந்துவிடும் விட்டிலைப்போல மாறிவிடுகின்றனர்.

குழந்தைகளுக்கானவை எனக் கூறிக்கொண்டு நாள் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்களில் குழந்தைகளுக்கான, குழந்தைகளை மேம்படுத்தும் எந்த நிகழ்ச்சிகளையும் காண முடிவதில்லை. மாறாக அவையும் பிஞ்சு நெஞ்சங்களில் மேலும் நஞ்சை விதைக்கும் பணியையே செவ்வனே செய்கின்றன.

உலகமே போற்றும் உத்தமர் காந்தி நேர்மையையும், சத்தியத்தையும், கொண்ட கொள்கைகளில் உறுதி, வாக்குத் தவறாமை போன்றவற்றைக் கடைப்பிடிக்கக் காரணம் அவர் இளம் வயதில் கேட்டு வளர்ந்த கதைகளின் தாக்கமே என தங்கள் குழந்தைகளுக்குக் கூறும் பெற்றோரைப் பார்க்கலாம்.

ஆனால், அவர்களும்கூட தங்கள் குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்லி வளர்க்க விரும்புவதில்லை. காரணம், பெரும்பாலான பெற்றோருக்கு பொறுமையுமில்லை, நேரமிருப்பதுமில்லை.

விவேகமும் வீரமும் ஒருங்கே கொண்ட மராட்டிய சிங்கம் சிவாஜியும் சிறுவயதில் தன் தாயிடம் கதை கேட்டு வளர்ந்தது உலகமறிந்த கதைதான்.

மனதை லேசாக்கும் நகைச்சுவைக் கதைகள், சிக்கல்களைத் தீர்த்து வாழ்வில் வெற்றிபெறச் செய்யும் புதிர்க் கதைகள், எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ள வைக்கும் சமயோஜிதக் கதைகள் என பல்சுவைக் கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள் வருங்காலத்தை வளமாக ஆக்கிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

பள்ளியில் சேர்த்ததும் தனது கடமை முடிந்தது என்றோ, கதைப் புத்தகங்கள், குழந்தைகள் கேட்கும் ஒலி-ஒளி நாடாக்கள் வாங்கிக் கொடுத்து அவர்களைக் கேட்கச் செய்வதுடன் தங்கள் பொறுப்பு கழிந்தது என்றோ பெற்றோர் நினைத்தல் கூடாது.

குழந்தைகளுடன் அமர்ந்து கதைகளில் வரும் பாத்திரங்களாகவே மாறி அவர்களுக்குக் கதை சொல்லும்பொழுது பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பு அதிகரிக்கும். இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது தாத்தா, பாட்டிகளிடம் கதை கேட்கும் பாக்கியம் பெரும்பாலான குழந்தைகளுக்கு வாய்த்தது. கூட்டுக் குடும்பமே கனவாகிப்போன இன்றைய நாளில் தாத்தா, பாட்டிகளோ முதியோர் இல்லத்தில். கதைகளோ காணாமல் போய்விட்டன.

அடிக்கடி முருங்கை மரம் ஏறும் விலைவாசி வேதாளத்தைக் கட்டுப்படுத்த விக்ரமாதித்தர்களாக மாறி நாள்முழுதும் உழைக்க வேண்டியிருப்பதால் பெரும்பாலான பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளிடம் அன்பாகப் பேசக்கூட முடிவதில்லை.

அப்படியிருக்கையில் அவர்களுக்குக் கதைகூற நேரம் எங்கிருந்து கிடைக்கும்? இதனால் குழந்தைகளுக்குத் தனிமையே துணையாகி விடுகிறது.

பல இடங்களில் தந்தை, தாயின் அன்பையும், அரவணைப்பையும்கூட குழந்தைகள் தொலைக்காட்சிப் பெட்டிகளில் ஊட்டச்சத்து பான விளம்பரங்களில் வரும் பெற்றோரிடமே தேட வேண்டிய நிலை உள்ளது.

கதை சொல்ல ஆளில்லாததால் குழந்தைகளுக்கு கதைப் பஞ்சம் ஏற்படுகிறது. விக்ரமாதித்தர்களும் வேதாளமும், பஞ்ச தந்திரக் கதைகளும் இன்று குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன.

பிஞ்சுகள் நெஞ்சங்களில் விதைக்கப்படும் அறிவார்ந்த, ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் கதைகள் நாள்பட முளைத்து தக்க நேரத்தில் உரிய பலன்களை ஒன்றுக்குப் பத்தாகத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

"காலை எழுந்தவுடன் படிப்பு; மாலை முழுதும் விளையாட்டு' என்பதுடன் இரவில் உறங்கச் செல்லும் முன் அன்பு உள்ளிட்ட அனைத்து நற்பண்புகளையும் வலியுறுத்தும் கதைகளும் அவசியம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

விதவிதமான உடைகள், வாய்க்கு ருசியான தின்பண்டங்கள் மட்டுமே குழந்தைகளைத் திருப்திப்படுத்துவதில்லை. நல்ல கதைகளும் அவர்களை மிகவும் மகிழ்விக்கும். குழந்தைகளின் மனங்களை அதிக அன்பினால் மட்டுமல்ல, ஆயுதத்தாலும் வெல்லலாம். அந்த ஆயுதம் "கதா'யுதம்.

Thanks: dinamani.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this