Jump to content

காதல் களம் கணவன் கடைசிக்கனவு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:-

முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

logo.png

முன்னுரை

நான் செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவீச்சில் 2006ம் ஆண்டு காயமடைந்து இருகால்களையும் இழந்த ஒரு முன்னாள் பெண் போராளி. எனது வயது25. 2009யுத்தம் முடிந்து நான் சரணடைந்து பல இன்னல்கள் நடுவில் இன்று உயிர்வாழ்கிறேன்.

தடுப்பிலிருந்து வெளி வந்த பின்னர் நான் தனிமைக்குள் உள்வாங்கப்பட்டேன். அப்போது பல நிஐங்களின் நினைவுகள் என்னுள் நிழலாடி என்னைத் துயரங்களால் சுற்றிக் கொண்டது. என்னை நான் அழிக்கும் நிலையிலும் இருந்தேன். எனக்காக அக்கறைப்பட்டு எனது சோகங்களைக் கேட்க யாருமில்லாத அந்த நாட்களில் நான் அனுபவித்த துயரங்களுக்கு அளவில்லை. அந்த வேளையில் தான் எனக்குள் ஒரு ஐீவன் புகுந்தது. அவள் யாரும்மல்ல அவள் தான் எனது வாழ்வைப் பதிவு செய்துள்ள எழுத்துக்குரியவள் சாந்தி ரமேஷ் வவுனியன்.

வாழ்வியல் இலக்கணங்களுக்குள் வந்து போகும் குளறுபடிகள் ஏராளம் ஏராளம்!

கைக்கெட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் என் வாழ்வில் பதின்ம வயதுக் கனவுகள் அறுந்து போய்விட்டன….

இக்கதை மூலம் எனது கடந்த வாழ்க்கையையும் அடுத்த கட்ட வாழ்க்கையையும் தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். மனித மனங்களையும் உணர்வுகளையும் ஒன்றாக இணைத்து நெய்யப்பட்டுப் படைக்கப்பட்ட இக்கதை என்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காகவும், என்னைப் போன்றவர்களும் தங்களைத் தாங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்காகவும் இக்கதையை நிச்சயம் படிக்க வேண்டும்.

நாம் பல கதைகளை வாசித்திருந்தாலும் நாம் எந்த மனநிலையில் நின்று கதையைப் படிக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல்தான் அன்பர்களே அந்தக் கதைக்கான கருத்துக்களும் வெளிப்படும். இக்கதையை அசைபோட்டு சிந்தித்துப் பார்த்தீர்களானால் ‘சீக்” என்கிற சினமே தான் உங்களுக்குள் ஏற்படும். ஆனால் நான் இந்த வாழ்க்கையை நிஐத்தில் அனுபவித்திருக்கிறேன். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களைப் போல் இன்னும் பல துன்பங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றன.

வாழ்க்கையில் படாத காயங்கள் பட்டு அலையடித்து ஓய்ந்தாற் போல தற்போது ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கும் வேளையில் தான்….. ஒரு அக்காவாக தோழியாக சாந்தி ரமேஷ் வவுனியன் அவர்கள் எனக்கு அறிமுகமாகி எனக்கு உறவாகினார். இவருடன் மனம் விட்டு கதைக்கும் போது எனக்குள் ஓரளவு சுமைகள் குறைந்த உணர்வு.

எனது வாழ்வை அதுவும் ஊனமடைந்தவள் என்ற காரணத்துக்காகவே நான் வஞ்சிக்கப்பட்ட தருணங்களையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டுமென்ற ஆதங்கம் நெடுநாளாகவே இருந்தது. ஆனால் எனக்கு எனது வாழ்க்கை அனுபவங்களைப் பதிவாக்குவதற்குரிய ஆதரவும் தைரியமும் இல்லை. எனது சொந்த வாழ்வின் காயங்களையெல்லாம் சாந்தி ரமேஷ் வவுனியன் ஊடாகப் பதிவு செய்ய விரும்பி சம்பவங்களை அக்காவுடன் பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் நான் எதிர்பார்க்கவில்லை எனது வாழ்வின் அனுபவங்களை இவ்வாறு ஒரு கதையாக வெளிக்கொணர்வார் என்று. எனக்குள்ளே நிறைந்திருந்த கதைகள் எழுத்தாய் எனக்குக் கிடைத்த நிமிடம் சிந்தித்தேன். இனி நான் இறந்தாலும் பறவாயில்லையென.

ஏன் என்றால் எம்மில் பலர் கதை சொல்லவும் கதை கேட்கவும் தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்கள் நிறையப் பேரை நான் கண்டுமிருக்கிறேன். ஆனால்¸எனது கதைகளைக்கேட்கவும் நான் துயரமடைகின்ற நேரங்களில் எனக்குத் துணிச்சல் தந்து எனது வாழ்வு இன்னும் முடியவில்லை நீ வாழ வேண்டுமென்று நம்பிக்கை தரும் தோழியாக அக்கா இருந்திருக்கிறாள். அந்த வகையில் நான் சாந்தி ரமேஷ் வவுனியன் அவர்களுக்கு முதலில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனது இந்தக் குறுகிய வயதின் காலப்பகுதிக்குள் பல வகையான மனிதர்களையும் மனித வக்கிரங்களையும் கண்டிருக்கிறேன். இந்தக் கதையில் குறிப்பிட்டிருப்பதைப் போல வாழ்க்கையில் நிறையத் தோல்விகளைச் சந்தித்து மனம் தளர்ந்து இருந்த வேளையிலும் இன்று வரையும் என்னை நிறைய வயதானவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் உதவுபவர்கள் என்று பலர் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள். ஆனால் நான் அதிகமாக எல்லோராலும் ஏமாற்றப்பட்டுள்ளேன்.

அன்பு காட்டிப் பழகுவது போல நடித்துப் பழகிப் பல உறவுகளின் அன்பு நீடிக்காது உபத்திரவமான போது மனம் உடைந்து போகும் சம்பவங்கள் பலவற்றுக்கு முகம் கொடுத்திருக்கிறேன். அவை எனது வாழ்க்கையில் மிகுந்த ஒரு மன உழைச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. பலதரம் என்னையே அழித்துக் கொள்ளவும் முயற்சித்தேன்.

உண்மையிலே இந்த உலகத்தில் யாரும் தனிமையாக வாழ முடியாது. தனிமை என்பது பொல்லாத பேய் என்பதனைப் பட்டறிந்தவள் நான். அன்பாய் சிலவார்த்தைகள் பேசி ஆறுதற்படுத்த மனம்விட்டுக் கதைப்பதற்கோ நல்ல உறவுகள் யாருக்குமே தேவை. அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்காத பட்சத்தில் தான் பலர் மனநோயாளியாக மாறுகிறார்கள். இந்த நிலைமைக்குள் அடிக்கடி நானும் உள்வாங்கப்பட்டு வந்து போனதுண்டு.

நான் மட்டுமல்ல என்னைப் போன்றோர் இன்னும் பலர் இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் உள்ளார்கள். பல பெண்கள் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் சமூகத்திற்குச் சீரழிவான முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் அப்படி எடுக்கும் முடிவுகளுக்கும் கூட நாம் ஒவ்வொருவரும் தான் காரணமாக இருக்கிறோம். அவர்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறுவதற்கும் நல்வழிப்படுத்துவதற்கும் நல்ல நண்பிகள் உறவுகள் சகோதரங்கள் கிடைக்காத பட்சத்தில் தான் அவர்கள் அப்படியான முடிவுக்குள் வருகிறார்கள் என்பதனை நான் வாழ்ந்து அனுபவித்துள்ளேன்.

மற்றும் பொருளாதார சிக்கல்களும் ஒரு முதன்மைக் காரணமாக இருக்கிறது. பொருளாதாரச் சிக்கல் தான் நிறையப் பெண்கள் தங்களைத் தாங்கள் இழந்து சில தவறான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் நாம் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. உண்மையிலே இவர்கள் பாவம். இவர்களுக்காக புலம்பெயர்ந்த உறவுகளே இன்று உங்கள் பங்கென்ன…?

உறவுகளே உங்களுக்கு என்னைப்போன்றவர்களின் நிலைமையைக் கேட்கும் போதும் இன்னும் பல ஊனமுற்றவர்களின் நிலைமைகளை அறியும் போதும் எவ்வளவோ இளைஞர் யுவதிகள் தங்களின் இளமைக் காலங்களைத் தொலைத்து அலைந்து திரியும் சம்பவங்களைக் கேட்கும் போதும் இவ்வளவு காலமும் நடந்த போரின் போது இறந்த உங்களது உறவுகள் சகோதரர்கள் நண்பர்களை நினைவுபடுத்தி பார்க்கும் போதும் உங்களது மனங்கள் குமுறுவதில்லையா?

இவர்களுக்கு இந்த நிலைமை ஏன் வந்தது? எதனால் வந்தது? யாரால் வந்தது? என நீங்களே உங்களது மனசாட்சியைத் தட்டிக் கேட்டுப்பார்க்கவும். யுத்தம் எங்களைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது. நாங்கள் ஒருதரம் நிமிர எங்களைத் தூக்கிவிடுங்களென்று கேட்கிறோம்.

ஆனால் உங்களில் சிலர் எங்கள் எல்லாரையும் பணயம் வைத்துப் பந்தயம் நடத்தவே முன்நிற்கிறீா்கள். உங்கள் பிள்ளைகளும் நீங்களும் நீங்கள் வாழும் நாடுகளில் எல்லா வசதிகளோடும் இருந்து கொண்டு எங்களைப் பலிகொடுக்கவே பெரும் பிரயத்தனப்படுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைகள் பஞ்சு மெத்தையில் தவழ நீங்கள் போராட்டம் நடத்த நாங்கள் வன்னிக்குள் செத்துக் கொண்டிருந்தோம். ஆயிரக்கணக்கில் எங்கள் சிறுவர்கள் செத்துப்போனார்கள். இன்றும் தெருத்தெருவாய் அலைகிறது எங்கள் இளைய சந்ததி. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கள் மிச்ச வாழ்க்கையையும் அழித்துவிட்டுத்தான் ஓய்வீர்கள் போல வீரம் பேசுகிறீர்கள்.

இங்கு முன்னை நாள் போராளிகள் ஒவ்வொருவரும் சமூகத்தாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டு இருக்க இடம்மில்லாமல் தொழில் இல்லாமல் தெருக்களில் அலைந்து திரிகிறார்கள். சிலரின் நிலைமை நஞ்சு குடித்து சாகும் நிலைமைகளில் எல்லாம் விரத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் மக்கள் எனச் சொல்லிப் போராட்டம் தொடங்கும் போராடுவோம் என்றெல்லாம் சொல்லிப் போராடும் புலம் பெயர் உறவுகளே….! எங்களால் இனி ஏலாது. நாங்கள் களைத்துப்போனோம். ஒருமாற்றத்திற்காக நீங்கள் வாழும் நாடுகளுக்கு எங்களைக் கொண்டு செல்லுங்கள். யுத்தத்தால் சிதைவுற்ற இந்த நாட்டுக்கு வந்து உங்கள் போராட்டங்களை ஆரம்பியுங்கள். நாங்கள் புலத்தில் இருந்து உங்களுக்கு குரல் தருகிறோம். நிச்சயமாக நீங்கள் வரமாட்டீர்கள்.

யுத்தம் முடிந்து 2வருடங்கள் முடிகிறது. நாங்கள் அன்றாடம் வாழ்க்கையோடு முட்டிமோதித் தடம் புரள்கிறோம். ஆயிரக்கணக்கில் நாங்கள் அவதிப்படுகிறோம். எங்களுக்கு ஆயுதங்கள் தர வேண்டாம். அன்றாடம் வாழ ஒரு வாழ்வு தாருங்கள்.

எங்கள் இளைய சந்ததியைக் காப்பாற்றுங்கள். வன்னிக்கு வந்து சிலவாரங்களாவது வாழ்ந்து பாருங்கள். எங்கள் வாழ்க்கையின் கஸ்ரங்களை அனுபவித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் தொலைக்காட்சி கணணி என்று உலகத்தை எப்படி அனுபவிக்கிறார்கள். ஆனால் எங்கள் குழந்தைகள்….? இங்கே வாருங்கள் எங்களது வாழ்வைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த வேண்டுதல் விடுதலையை விற்றுவிட்டு அம்மணமாய் நாங்கள் வயிற்றுக்காக வாழ்வதாய் நினைப்பீர்கள். ஆனால் யதார்த்தம் இதுதான். பசிதான் உலகில் கொடுமையிலும் கொடுமை. அக்கொடுமையை நாங்கள் வன்னிக்குள் அனுபவித்தோம். உணவில்லை உறக்கமில்லை சாவும் இரத்தமும் அழுகைகளும் குவிந்திருந்த அந்தக் காலத்தில் வாழ்ந்தோம். இன்னும் பல நூறாண்டுகள் சென்றாலும் எங்கள் இதயங்களில் பதிந்து போன இந்தக் காயங்கள் ஆறாது. இங்குள்ள எங்களுக்கு இன்று தேவையானது வயிற்றுப்பசி போக்கி நிம்மதியாய் வாழ ஒரு வாழ்வு.

நீங்கள் எட்ட நின்று கொண்டு நெருப்போடு என்னடா விளையாட்டென்று பாடியாட எங்களை நெருப்புக்குள் தள்ளிவிட்டுச் சாகடிக்கிறீர்கள். தயவு செய்து உங்கள் கனவுகளை நிறுத்துங்கள். எங்கள் வாழ்வுக்கு ஏதாவது துரும்பைத் தர முடிந்தால் தாருங்கள். முடியாவிட்டால் விட்டுவிடுங்கள் நாங்கள் எப்படியாவது வாழ்கிறோம். எங்கள் பெயரால் பிழைப்பு நடத்தி திரும்பவும் எங்களைப் பலியாடுகளாக்கும் கனவை விட்டுவிட்டு சுகமான உங்கள் வாழ்க்கையை வெளிநாட்டிலேயே கடத்துங்கள். எங்களை விடுங்கள்.

இது வெறும் கதையல்ல. நான் வாழ்ந்த வாழ்க்கை , மனக்குமுறல்கள் சொல்லமுடியாத உணர்வுகள். எனது சொந்தக் கதை. இது பலருக்கான கதை. விடுதலைக்காகப் போனவர்கள் நாங்கள் இன்று படுகின்ற அவலங்களின் பதிவு. இருகால்களையும் இழந்த எனது வாழ்வை எனது ஊனமுற்ற துயரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எனது சமூகத்தாலும் நான் வாழ்ந்த இடங்களிலும் வஞ்சிக்கப்பட்டது போல் பல்லாயிரம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். முன்னாள் போராளிகள் என்ற அடையாளத்திற்குள் ஒவ்வொரு பெண்ணும் படுகின்ற அவலங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக எனக்காக உறவுகளே உதவுங்கள். எங்களையும் வாழ வையுங்கள்.

-வன்னியிலிருந்து அன்பினி -

என்(ன)உரை !

“காதல் களம் கணவன் கடைசிக்கனவு“இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள்.

2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன்னொருவன் கட்டாயக்கணவனாக இன்னும் சிலர் அவளது ஊனத்தைக் காரணம் காட்டி இரகசிய மனைவியாக்கவும் இம்சித்தார்கள்.

இத்தகைய எல்லா வகையான சுமைகளையும் தாங்கிக் கொண்டு செயற்கைக்காலின் நம்பிக்கையோடு ஆறாத மனக்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 26வயது நிரம்பிய இவளின் வாழ்வு போல் ஊரில் பலநூறு பெண் போராளிகளின் சாதாரண பெண்களின் வாழ்வு சிதைந்து கொண்டிருக்கிறது. தனது கதையினூடாகப் பலரது வாழ்வைப் புரிவிக்க முயன்றுள்ளாள்.

இக்கதையின் கதைசொல்லியாகவே நான் இருக்கிறேன். ஆனால் கதையோடு உலவும் அன்பினியின் வாழ்வு அவளது சொந்த வாழ்வு. அவளது காதல் முதல் களம் , கணவன் கடைசிக் கனவு வரையிலும் அவளது வாழ்வும் துயரமும் நிரம்பி வழிகிறது.

2009மே17 தான் சரணடைந்தவள் 2011மே17இல் தனது வாழ்வை மையப்படுத்திய இக்கதையை வெளியில் கொண்டு வருமாறு வேண்டியிருக்கிறாள். அவளது ஆசைப்படி 2011மே17அன்று அன்பினியென்ற பெயரில் உலவும் இக்கதைக்குரியவளின் அனுபவங்களை வெளியிடுகிறேன். ஆனால் கடதாசியில் அச்சிட்டு நூல்வடிவமில்லாமல் இணைய நூலாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்.

நாங்கள் வெளியில் இருந்து இலக்கியம் படைத்த போராட்டம் களம் களமாடிய மனிதர்களின் குணங்கள் அட இப்படியுமா என வெறுப்புத் தருகின்றனவான பல சம்பவங்கள் அன்பினியோடு பிணைந்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து நாங்கள் இன்னும் கனவுகாணும் உலகத்தை முற்றாக வெறுக்கிறவளாக அன்பினியும் அன்பினி போன்ற ஆயிரமாயிரம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கிற உண்மையை இவளோடும் இவள் போன்றவர்களோடும் பேசுகிற அவர்கள் பகிர்கிற விடயங்களிலிருந்து புரிய முடிகிறது.

தனது கதைக்குத் தானே முன்னுரையும் தந்து தனது கதையை உலகத்தமிழர்களிடம் சேர்ப்பிக்கும் உரிமையைத் தந்திருக்கும் இவள் மீது கனவுகளில் வாழும் மனிதர்களே கல்லெறியாதீர்கள். அவளது மனதில் ஆறாது எரியும் காயங்களுக்கு உதவ முடிந்தால் உங்கள் நேசக்கரத்தை நீட்டுங்கள்.

அன்புடன் சாந்தி

யேர்மனி

காதல் களம் கணவன் கடைசிக்கனவு (குறுநாவல்)

உலகில் விடுதலைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளுக்கும் இக்கதை சமர்ப்பணம்.

1

உலகின் எல்லா வகையான சந்தோசங்களையும் தானும் அனுபவிக்க விரும்பிய நந்தனியின் கனவுகளை நசுக்கிய வீட்டுச் சூழல் அவளது பதின்ம வயதுச் சந்தோசங்களையெல்லாம் பறித்துப்போயிருந்தது.

அழகிய அவளது கூந்தல் இரட்டைப்பின்னலுக்குள் முடக்கப்பட்டது. அவள் விரும்பிய அழகிய ஆடைகளை அவளால் அணிய முடியாது போனது. அம்மாவால் நந்தனி பெண் என்ற வரையறைக்குள் இறுக்கமாய் அடைக்கப்பட்டாள். அவளை அடைத்த அந்தச் சுவர்களை இடித்துக் கொண்டு வெளியில் பறக்க எண்ணிய தருணங்களில் அப்பாவின் அடியால் நந்தனியின் இறக்கைகள் ஒடிக்கப்பட்டன.

கண்ணீரால் அவளது கனவுகள் கரைக்கப்பட்டு பெண்ணாய் அவள் வனையப்பட்டாள். கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவள் ஓ.எல் தாண்டி ஏ.எல் வகுப்பில் காலடி வைத்த நேரம் அவளது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கல்வியின் உயர்ச்சி தனது கனவுகளையெல்லாம் நனவாக்க முடியுமென்று நம்பினாள். அந்தக் கனவையும் களவாடிச் சென்ற அம்மாவின் குரலுக்கு வலுவாய் அப்பாவின் கண்டனம் அதுவும் போயிற்று. வீடு தான் நந்தனியின் பரந்த உலகத்தைத் தன் கட்டுக்குள் நிறுத்தியது.

நந்தனி அழகான பூக்கன்றுகளை வளர்த்தாள். 5ஆட்டுக்குட்டிகளையும் 2பூனைக்குட்டிகளையும் இரண்டு கிளிகளையும் வளர்த்தாள். அவளது கதைகளைக் கேட்க அவள் வளர்த்த மரங்களும் கால்நடைகளுமே துணையாயிருந்தன. அவளது உலகின் நீளம் வீட்டுப்படலை வரையுமே மாறிப்போனது.

சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட 2002 பெப்ரவரி. இலங்கை அரசியலில் மாற்றங்கள் ஏற்படும் என எழுதப்பட்ட ஒப்பந்தம். விடுதலைப்புலிகளும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் உலவும் நிலமையும் அரசியல்பணி செய்யும் நிலமையும் உருவாகியது. ஆரவாரமாய் மக்கள் புலிகளை வரவேற்று வவுனியா யாழ்ப்பாணம் என பெருவிழாவாய் கொண்டாடினர். ஒருநாட்டின் சுதந்திரதின விழாப்போல அவர்களை வரவேற்றுத் தோழில் சுமந்து இனிப்புகள் வழங்கி மூடப்பட்ட பாதைகள் திறந்து அந்த நாட்களின் சந்தோசங்கள் இனிமையானவை.

மக்களுக்குள் இறங்கிய புலிகளின் அரசியல் வேலைகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு மாணவர்களையும் அரசியல் பணிகளில் இணைத்துக் கொண்டு இயங்கிய காலம் அது.

2

அரசியல் வேலைக்கென அயல்வீட்டிற்குக் குடிவந்த அவர்கள் பற்றி அம்மா அதிகம் அலட்டத் தொடங்கினாள். அது ஒரு போராளிகளின் முகாமாகியது. அவர்களது நடமாட்டம் அவர்களது செயற்பாடுகளையெல்லாம் அம்மாவும் அப்பாவும் அறியாமல் நந்தனி கவனிக்கத் தொடங்கினாள்.

அங்கே அவள் வயதையொத்த பெண்கள் வந்து போகத் தொடங்கினார்கள். அவளுக்கு விரும்பிய காற்சட்டைகளையும் கைமடிக்கப்பட்ட சேட்களையும் அணிந்திருந்தார்கள். நீண்ட தலைமுடியை கட்டையாய் அழகாய் சிலர் வெட்டியிருந்தார்கள் சிலர் நந்தனியைப் போல் இரட்டைப்பின்னலிட்டு அதனை ஒரு வகையாய் கட்டியிருந்தார்கள். நெற்றியில் இவளைப்போல் பொட்டு வைக்காமலிருந்தார்கள் காதுகளில் தோடுகளே இருக்கவில்லை. ஆனால் அவர்கள் மிடுக்கோடு திரிந்தார்கள். வாகனங்களை ஓட்டி வந்தார்கள். ஆயுதங்களை இலகுவாய் சுமந்து வந்தார்கள். அவர்களது நடையில் செயலில் பல்வகையான அர்த்தங்களைக் தனக்குள் எழுதிக் கொண்டாள் நந்தனி.

அவர்களைப் பற்றிய செய்திகள் கவிதைகள் கதைகள் என வானொலியில் பத்திரிகைகளில் எல்லாம் அவர்கள் பற்றி அவர்களது வீரம்பற்றியெல்லாம் வாசித்திருந்தவளுக்கு அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பாக அது இருந்தது. அவள் ஆச்சரியத்தால் அசந்து போனாள். அங்கே வந்து போகின்றவர்களில் ஒருத்தி நந்தனிக்கு நட்பாகினாள்.

அம்மா அப்பா அறியாமல் வேலிக்கால் அவர்களுடன் பேசிக்கொண்டாள். அவர்கள் அவளுக்காகப் புத்தகங்களைப் பரிசளித்தார்கள். அப்புத்தகங்கள் ஊடாகத் தங்களது வரலாற்றினைப் பரிசளித்தார்கள்.

அவர்களாய் தானும் மாறி தனக்குள் ஒளிந்திருக்கும் வீராங்கனையைக் காணத்துடித்தாள் நந்தனி. கனவுகளில் அவர்கள் அணிந்த ஆடைகளை இவள் அணிந்து கொண்டு மிடுக்கோடு உலவினாள். அவர்கள் கொடுத்த புத்தகங்களில் வாழ்ந்த வீராங்கனைகள் போல் இவள் புத்தகங்களில் தானும் எழுதப்பட வேண்டுமென்று கனவு கண்டாள். ஆனால் ஒவ்வொரு முறையும் விழுகிற அப்பாவின் அடி அவளது வீராங்கனைக்கனவை நசித்துப்போட்டது.

அங்கே நடு இரவு வரை எரியும் மின்னொளி அதிகாலைக்குப் பின்னர் அங்கிருந்து கேட்கும் பாடல்கள் எல்லாம் அவளுக்கான புதிய உலகத்தின் கனவுகளை வண்ணங்களால் நிரப்பிக் கொண்டிருந்தது. அவளுக்கான சந்தோசங்களையும் கனவுகளையும் அந்த வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் வாயிலாக அனுபவிக்கத் தொடங்கினாள்.

சற்றுக் காலங்களில் அந்த வீடு ஆண்போராளிகளுக்கானதாகியது. பழையவர்கள் எங்கோ போய்விட புதிய முகங்கள் வந்து சேர்ந்தார்கள். எட்டிப்பார்க்கும் உயரத்தில் இருந்த வேலியை அப்பா ஓரடி உயர்த்தி அடைத்தார். அங்கே வந்திருப்பவர்களை அவள் பார்க்கக்கூடாதென்ற எண்ணமே அது.

அந்த வீட்டிற்கு அவளைவிட உயரமான அவளது உலகின் புதிய வாசலாக ஒருத்தன் அங்கே வந்து சேர்ந்தான். உயர்ந்த அவனது தோற்றம் எப்போதுமே தனிவர்ணத்தில் அவன் அணிந்து கொள்ளும் ஆடைகள் அவனை அங்குள்ளவர்களுக்குள் வித்தியாசப்படுத்தியிருந்தது. எங்கோ எப்போதோ பார்த்துப் பேசிய உணர்வை அவனைக் காணும் தருணங்களிளெல்லாம் உணர்ந்து கொண்டாள் நந்தனி.

வண்ணங்களால் நிறைந்த அவளது கனவுகளில் அதிகபட்ச உரையாடல் நந்தனிக்கும் அவனுக்குமானது சில நிமிடப்பார்வைகள் மட்டும் தான். நாட்கள் செல்ல அவன் அவளது அம்மாவின் இதயத்தில் இடம்பிடித்தான். அப்பாவின் மாலைநேர மதுபோதையில் அப்பாவின் அந்தநாள் கதைகளைக் கேட்க அப்பாவின் துணையாகினான். அதுவே அவர்களது பார்வைகளின் பரிமாற்றத்தை வார்த்தைகளின் பரிமாற்றமாக்கியது. உயர்த்தி அடைக்கப்பட்ட வேலிகளுக்கால் யாரும் அறியாமல் அவனைத் தரிசித்தவளுக்கு அவனை அருகாய் சந்திக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்தது காலம்.

அவன் தன்னைப்பற்றிய கதைகளை நந்தனிக்குச் சொல்லத் தொடங்கினான். அவனது கள அனுபவங்கள் முதல் தனது கல்லூரி வாழ்வு வரை கதைகள் சொன்னான். பெண்ணாய் அவளைப்பூட்டி வைத்தாள் அம்மா. அவன் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவனாகினான்.

தனக்குள் புகைந்து கொண்டிருந்த துயரங்களையும் வலிகளையும் அவனோடு பகிர்ந்து கொண்டாள் நந்தனி. அவளது இரட்டைப்பின்னலை அவிழ்க்க அவன்

அனுமதி வாங்கிக் கொடுத்தான். நிறுத்தப்பட்ட கல்வியைத் தொடர அவனே அம்மாவோடு தர்க்கம் புரிந்து வென்று அவளைக் கற்க அனுப்புவித்தான்.

அவன் அவள் விரும்பிய யாவற்றையும் செய்ய அனுமதித்தான் அதனை யாரும் தடுக்காமல் அவள் இயங்கத் தொடங்கினாள். அவனது ஆட்களுடனான அறிமுகங்களை ஏற்படுத்திக் கொடுத்தான். அவள் அடைந்திருந்த கட்டுக்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாய் பறக்கத் தொடங்கினாள் நந்தனி.

3

நல்ல குரல் வளமும் பாடும் திறனையும் பெற்றிருந்தவள் தனது குரலை அறிவிப்புத்துறைக்குள் விரிவுபடுத்த விரும்பினாள். ஒருநாள் அவளது கனவை நனவாக்கி அவளை அறிவிப்புத் துறைக்குள் அறிமுகம் செய்து வைத்தாள் ஒருத்தி. ஆர்வமுடன் பொங்குதமிழ் மேடைகளில் அறிவிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். புரட்சியின் அடையாளங்களான சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் மேடையில் நின்று பொங்கித் தமிழுரைத்தவர்களுடன் எல்லாம் கைகோர்த்துக் கொண்ட நந்தனிக்கு……அதுவொரு புதிய உலகத்தைச் சிருஸ்டித்துக் கொடுத்தது.

அம்மாவாலும் அப்பாவாலும் ஏற்றுக்கொள்ள முடியாத அவளது பறத்தல் ..... ஏற்றுக் கொள்ள முடியாத நிலமையில் அவளை அவர்கள் தண்டிக்கத் தொடங்கினார்கள். அவளது இயல்பான அச்சம் அவளைவிட்டுத் தானாகவே போய்விட்டது. தனக்குத் தானே அரசியாய் தன்னைத் தண்டிக்கும் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்துக் கதைக்கத் தொடங்கினாள். அவளது உலகம் புரட்சிகரமானதாக உணர்ந்தாள்.

தாயகம் தேசியம் சுயநிர்ணயம் சுதந்திரம் என்ற சொற்களை அவள் உச்சரிக்கிற நேரமெல்லாம் வீரம் அவளுக்குள் எப்படியோ ஒரு பூதம்போல் புகுந்துவிடும். துப்பாக்கி தூக்காத வேங்கையாக அவள் வீட்டுக்குள் பெண்விடுதலை பேசத்தொடங்கினாள். அவளை அடிக்க ஓங்கும் அம்மாவின் கையைத் தடுத்துக் கேள்வி கேட்கத் தொடங்கினாள்.

ஆனால் வீட்டு இறுக்கம் தொடர்ந்து அழுத்த நிரந்தரமாய் வீட்டை விட்டு வெளியேறும் நிலமையை உருவாக்கியது. தனது பாதையைத் தானே தேர்ந்தெடுத்து வீரம் நிறைந்த களத்திற்குப் போகப்போவதாய் அவளைப்புதுப்பித்த அவனுக்குத் தனது முடிவு பற்றி கடிதம் மூலம் அறிவித்திருந்தாள்.

பயந்து பயந்து அழுதழுது யன்னல் கம்பிகளுக்கால் வெளியைப் பார்த்தவள் தானாகவே முடிவெடுத்து வெளியேறினாள். ஒருநாள் வீட்டுப் படலையைத் தாண்டிப்போனவள் திரும்பி வரவில்லை. ஓடுகாலி ஓடிவிட்டதாக அம்மா திட்டினாள். அவள் ஓடிவிட்டாள். அவள் பார்த்த புரட்சியின் நாயகிகளோடும் களங்கள் படைத்த வீரங்களோடும் அவள் போய்ச் சேர்ந்தாள்.

போன இடம் எல்லாமே புதுமை நிறைந்த அனுபவம். நந்தனியென்ற தனது அழகான பெயர் மாறி அவள் அன்பினியாக மாறினாள். அவளது இயல்புக்கு ஏற்றாற்போன்று அன்பினியென்ற பெயர் அவளுக்குப் பொருத்தமாகியது.

முதல் முதலில் அவள் அரசியல் பெண் போராளிகளைச் சந்தித்தாள். தளபதியாய் அவள் முன்னிருந்த மூத்தபெண் தளபதி அவளுடன் உரையாடத் தொடங்கினாள். அவளது ஆர்வம் அவளது இன்றைய முடிவு எல்லாவற்றையும் கேட்டார்கள். அவளது அழகு அவளது பேச்சு வன்மை அவளை தொலைக்காட்சி வானொலிக்குள் பயனாயிருக்குமென ஒருவர் சொன்னார். ஆனால் ஆயுதப்பயிற்சியின் பின்னால் ஊடகத்துறைக்குள் அவள் அனுப்பப்படுவாளென வழங்கப்பட்ட உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு பயிற்சிக்கு அனுப்பப்பட்டாள்.

அவளோடு மேலும் 5பேர். அந்த 5பேரும் இவளைப் போல் 17வயதுக்காரர்கள் தான். பயிற்சிக்குப் போகும் போது ஆளாளுக்கு அறிமுகமானார்கள். அவர்களில் ஒருத்தி அவளது பெயர் யாழிசை. அன்பினியின் அன்புக்கும் விருப்புக்கும் உரியவளானாள் யாழிசை. யாழிசையும் அன்பினிபோல் இனிமையான குரல்வளம் மிக்கவள். நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவாள். சினிமாக் கதாநாயகிகள் போல நல்ல அழகியவள்.

அவர்கள் தொட்டுப்பார்க்க சுட்டுப்பழக விரும்பிய ஆயுதங்களைக் கைகளில் எடுத்துப் பயிற்சிகள் செய்யப்போகிறோம் என்ற கனவோடு காடுநோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைக் காவிச்சென்ற வாகனம் ஓரிடத்தில் அவர்களை இறக்கியது. இனி அடுத்த பயணம் நடைப்பயணம் என்றார்கள். ஆர்வமுடன் ஆளாளுக்குப் போட்டிபோட்டு ஓட்டமும் நடையுமாக அவர்களது பயிற்சிக்களம் நோக்கி நடந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த தூரம் சிறிது. ஆனால் அவர்கள் நெடுந்தூரம் நடக்க வேண்டியிருந்தது. களைத்துப்போனது உடல்.

தொடர்ந்து நடக்க முடியாமல் தங்கி நின்று போவமோ என்றார்கள் புதியவர்கள்.

என்ன ஊரிலை சயிக்கிளில சவாரி செய்து கலர்காட்டினமாதிரியோ இயக்கமெண்டு நினைச்சியள்…? இது விடுதலைப் போராட்டம் இங்கை பயிற்சியெடுக்கப் போறியள் சண்டை செய்யப்போறியள் அதை மட்டும் நினைக்க வேணும்….பொத்திக் கொண்டு நடவுங்கோ….என அவர்களை அழைத்துப் போனவர்களின் அதட்டல் கேட்க முதல் அவர்களது பயிற்சிக்களம் பற்றிய எண்ணங்கள் இனிப்பாயே இருந்தது.

ஏன் களத்துக்கு வந்தா ஓய்வெடுக்கக்கூடாதா ? சிரிக்கக்கூடாதா ? அன்பினியும் யாழிசையும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். முன்னே சென்ற வழிகாட்டி ஒரு பூதம்போல பிள்ளைகளை அதட்டிக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள். மந்தைகள் போல அவளின் பின்னால் நடந்து போனார்கள். வெளிச்சமும் வாகனங்களும் நிறைந்த வீதிகளில் சயிக்கிள்களில் திரிந்தவர்கள் அடர்காடுகளுக்கு ஊடாய் பயணித்துக் கொண்டிருந்தனர்.

4

போய்ச் சேர்ந்த இரவே அடுத்தநாள் அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. பிள்ளைகள் சுற்றியிருக்க பெரிய அக்காக்களின் ஆலோசனைகள் கட்டளைகள் அவர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் என அவர்கள் விளக்கினார்கள். அவர்கள் இருள் வந்த பின்னரும் கதைத்துக் கொண்டிருந்தனர். அன்பினியால் அங்கு நித்திரை தூங்காமல் இருக்க முடியவில்லை. அந்தளவுக்கு உடல் களைப்பாயிருந்தது. அவளுக்கு அக்காக்களின் கதைகள் ஏதோ கனவில் கேட்பது போலிருந்தது. அருகில் இருந்த யாழிசை இடையிடை நுள்ளி இவளது நித்திரையைக் குழப்பினாள்.

முற்றிலும் அவர்கள் அறிந்திராத உலகம் அது. பரிச்சயமில்லாத அடர்ந்த வனங்களின் நடுவில் அதிகாலையில் பொழுது வெளிக்கு முன்னம் எழும்பிக் கடமைகள் முடித்து குறைந்த உணவோடு பயிற்சியில் நிற்க வேண்டும். ஓடச்செல்லும் வழியில் அவளுடன் பயிற்சிக்கு வந்திருந்த யாழிசையும் அவளும் பரதநாட்டியம் ஆடுவார்கள் பாட்டுப் பாடுவார்கள். சிலவேளை குறித்த நேரம் பிந்தி இருவரும் வந்து திட்டு வாங்கிய அனுபவங்களும் தண்டனை வாங்கிய அனுபவங்களும் உண்டு.

பதுங்குகுளிகளை அமைக்கவும் பாரமான பொருட்களைச் சிரமப்பட்டுத் தூக்கிச்சுமக்கவும் வேண்டிய நேரங்களில் பலர் அங்கங்கே அழுவார்கள். இதென்ன வாழ்க்கை ? வீட்டை போகப்போறம்….என்று குழம்பிய சம்பவங்களும் நிறைய உண்டு.

கடும்பயிற்சி உடல் உழைப்பு அவற்றோடு ஈடுகொடுத்து இயங்க முடியாமல் சில நேரங்களில் எழும்பாமல் உடல் நொந்து படுத்திருக்கும் புதியவர்களை சக தோழிகளின் கிண்டல்கள் அவமதிப்புக்கள் அவர்களது நம்பிக்கைகளையெல்லாம் உடைத்துவிடும்.

அப்படியொரு நாள் அன்பினியும் அவளது தோழி யாழிசையும் மற்றைய பிள்ளைகளின் முன்னால் தண்டனை பெற வேண்டியிருந்தது. அவமானத்தால் மனம் குறுகியது. இதுக்கா இயக்கத்துக்கு வந்தம் ? இருவருமே யோசித்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட அன்றைய தண்டனையை மறக்க முடியாமல் சிலவாரங்கள் மனம் ஓய்வின்றிக் குழப்பத்தில் இருந்த நேரம்…., இருவரும் சேர்ந்து சொல்லாமல் ஓடிப்போக ஆயத்தமானார்கள். இருவருமே தப்பியோடுவதற்கான வழியைத் தேடிப் பார்த்தார்கள்.

திக்குத் திசையறிந்து அந்த வனத்தைத் தாண்டிப்போக எவ்விதமான வழியும் தெரியவில்லை. தப்பித்துப் பிடிபட்டால் கிடைக்கும் தண்டனையை அறிந்த பின்னர் அதையும் கைவிட்டார்கள். ஒவ்வொரு நாளையும் ஒவ்வோரு யுகமாய் கழித்தார்கள். அந்த வாழ்வு அவர்களுக்கு மிகவும் கடினமும் அசெளகரியமுமாக இருந்ததை விட அங்கேயுள்ள மூத்த அக்காக்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் அவர்களது மனங்களை நோகடிக்கும் துயரமே கொடுமையாயிருந்தது.

மேதா வாறா….. நாங்கெல்லாம் வந்ததிலயிருந்து துவக்கோடையே திரியிறம் இவை வந்தோடனும் ரீவிக்குப் போப்போயினமாம்….. றேடியோவில அறிவிக்கப் போயினமாம்… நாங்களும் கொஞ்சம் வெள்ளையா வடிவா இருந்தா எங்களையும் ரீவிக்கு அனுப்பியிருப்பினமெல்லோ…. வடிவானவையளெல்லாம் அரசியல் செய்ய நாங்கள் மட்டும் சென்றியில சாகவேணும்…..எனக் கொல்லும் வார்த்தைகளால் அவர்களது இடைஞ்சல் தாங்காமல் நோவோடும் வலியோடும் பயிற்சியில் போய் நிற்பார்கள்.

உடல் இயலாமையால் சிலநேரங்களில் கடைசியாய் வரிசைக்கு வந்தால் பயிற்சி ஆசிரிய அக்காக்களின் தொனியே அவர்களைச் சாகடித்துவிடும். அவள் பார்த்த அவள் கனவில் உலவிய வீரம் நிறைந்த பெரிய அக்காக்கள் கூட அவளை அவமதித்திருந்தார்கள். இதுதான் பயிற்சிக்களமோ என்றும் யோசிப்பாள். அவள் நினைத்தவற்றுக்கு மாறாக அவளது அனுபவங்கள் கசப்பாயிருந்தன.

அன்பினியும் அங்கு பயிற்சிக்கு வந்திருந்த பல புதியவர்களும் தண்டனை பெறாத நாட்களென்பது குறைவு. இரவு பதினொரு மணிவரை நித்திரை முளித்திருக்கும் கடமையிருக்கும். அதன் பின் நித்திரைக்குப் போய் விடியற்காலை 4.30மணிக்கு எழுந்து கடமைகள் முடித்து 5மணிக்கு பயிற்சியிடத்தில் நிற்க வேண்டும். ஆரம்பம் 10 சுற்று காடுகளுக்கால் அவர்களுக்கென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களால் ஓடி வர வேண்டும்.

அப்படியான தருணங்களில் தோழிகளுடன் சேர்ந்து காடுகளுக்குள் படுத்துறங்கியிருக்கிறாள். ஓடப்போன அணியிலிருந்து தினமும் இருவராவது குறைவார்கள். பயிற்சியிடத்துக்கு வராத அந்த இருவரை அல்லது பலரைத் தேடி ஒரு அணி புறப்படும். அவர்கள் ஓடிச்சென்ற வழியே இருபக்கத்தாலும் தேடிவரும் அந்த அணி.

பாதியில் ஓட்டத்தை நிறுத்திவிட்டுப் போன வழியில் நல்ல நித்திரையாய் கிடக்கும் அவர்களை எழுப்பி மீண்டும் பயிற்சிக்குக் கொண்டு போய் விடுவார்கள். பயிற்சிக் களத்தின் விதிகளை மீறிய நித்திரை குழப்படி யாவற்றுக்கும் தண்டனை காத்திருக்கும்.

ஓட்டச்சுற்று ஓடி முடிக்காமல் நித்திரையானவர்களுக்கான தண்டனையாக துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மணிக்கணக்காய் முட்டுக்காலில் இருக்க வேண்டும். அல்லது தோப்புக்கரணம் போட வேண்டும் அல்லது துப்பாக்கியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருந்து எழும்ப வேண்டும். தண்டனை பெறும் ஒவ்வொருவரையும் சக தோழிகள் அடிக்கிற கிண்டலைச் சிரித்தபடி வாங்கிக் கொண்டு பலதரம் அன்பினியும் நித்திரை கொண்டிருக்கிறாள். தண்டனை பெறுவது கூட ஒருவகை மகிழ்ச்சியான அனுபவம்தான் அவளுக்கும் அங்கு பயிற்சி பெறும் பிள்ளைகளுக்கும்.

இன்றைய பயிற்சியாசிரியர்கள் கூட ஒருகாலம் தண்டனைகள் பெற்று பயிற்சி முடித்தவர்களென்றே சொல்வார்கள். ஆனால் எதுவித தவறுகளும் செய்யாமல் தண்டனை பெறாமல் பயிற்சியாசிரியர்களானது போல புதியவர்களுக்கு கதைகள் சொல்வார்கள்.

ஒருமுறை அன்பினியும் அவளது இனிய தோழி யாழிசையும் இன்னும் இருவரும் சொல்லாமல் ஓடிய விபரத்தில் சேர்க்கப்பட்டார்கள். ஒரு மதியம் வெயில் கொழுத்தியெறிந்தது. கடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அதுவொரு ஒத்திகைச் சமருக்கான பயிற்சி. தலையிடியும் பசியும் அன்பினியாலும் அவளது சகதோழிகள் சிலராலும் தொடர்ந்து பயிற்சியில் நிற்க முடியவில்லை.

அவர்கள் 4பேரும் ஒத்திகை நிகழ்ந்த பதுங்குகுளியொன்றிற்குள் குதித்தார்கள். கையில் இருந்தவற்றைப் பக்கத்தில் வைத்துவிட்டு அப்படியே நித்திரையாகிவிட்டார்கள். 4மணித்தியாலம் எந்த இடைஞ்சலுமின்றி அவர்களது நித்திரை முறிந்து எழுந்த போது மாலைநேரம் தாண்டியிருந்தது. வளமையாகத் தேடும் இடங்களில் தேடிப்பார்த்துவிட்டு இவர்களைப் பயிற்சியின் கடினம் தாங்காமல் ஓடிப்போனவர்கள் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

நித்திரை முறிந்து விழித்த போது எல்லோரையும் பயம் பற்றிக் கொள்கிறது. எந்த மூஞ்சியை வைத்துப் பயிற்சியாசிரியர் முகத்திலும் சக தோழிகள் முன்னாலும் போய் நிற்பதென்று குழம்பி கடைசியில் இவள் தான் முன்னுக்குப் போவதாய் எழுந்தாள்.

உரிய இடத்தை அடைந்ததும் இவர்களைப் பார்த்தவர்கள் முகத்தில் எழுதப்பட்ட கோபம் கொதிப்பு எல்லாவற்றையும் கண்ணால் பார்க்கும் தைரியத்தை இழந்து போனார்கள். அக்காக்களின் கிழியென்றால் சொல்ல முடியாது. எல்லா இடமும் தேடியவர்கள் பதுங்குகுளியை மட்டும் பார்க்காமல் போய்விட்டது உங்கள் தவறுதானேயென்று ஒருத்தி சொன்னாள். அதுவும் ஒரு தோல்விதானே என்றாள். அந்த மாதிரிக் களப்பயிற்சிக்கு பொறுப்பாயிருந்த அக்காவின் வாயிலிருந்து வந்தவற்றில் எல்லாவற்றையும் சத்தம் போடாமல் வாங்கிக் கொண்டார்கள்.

ஆரையடி பாக்கப் போனியள் ? வேட்டைக்கு வாறவங்களை சந்திக்கப் போனீங்களோ ? இல்லது வேவுக்காறங்களைப் பாக்கப் போனியளோ ? எவங்களையடி வரச்சொல்லீட்டுப் போனீங்கள் ? என பூசை கனமாகத்தான் நடந்தது. இவை எழுதின மாதிரி அப்பிடியே ஓடிப்போயிருக்கலாம் என்றாள் ஒருத்தி. தவறு தங்கள் பக்கம் என்பதனை ஒப்புக் கொண்டு அக்காக்களிடம் மன்னிப்புக் கோரி தண்டனையைத் தருமாறு கேட்டார்கள். எருமையள் மாதிரி தண்டனையை வாங்கீட்டு பிறகு மறந்திட்டுக் கூத்துப்போடுதுகள்…உதுகள் திருந்திறமாதிரித் தெரியேல்ல…..சலித்தாள் ஒரு அக்கா.

5

எப்போது பயிற்சி முடிந்து வெளியில் போவோம் என ஒவ்வொரு மணித்துளியாய் எண்ணிக் எண்ணிக் கொண்டிருந்தார்கள் புதியவர்கள். அன்பினியும் அந்த நாளுக்காய் தினமும் காத்திருந்த அந்த நாள் வந்தது. அவளது சந்தோசங்களை வெளியில் கொட்டிக் கொண்டாட வேண்டும் போலிருந்தது. ஆனால் அதையெல்லாம் கொண்டாட முடியாத கண்டிப்பு நிறைந்த அறிவுரைகளைக் கேட்டதோடு அந்த ஆசை அடையாளம் தெரியாமல் போய்விட்டது.

பயிற்சிக்களம் தந்த மனக்காயங்களை மறந்து ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது இரட்டைப்பின்னலுக்குள் தொலைந்திருந்த தலைமயிரை குட்டையாய் வெட்டினாள். முடியாதது எதுவும் இல்லையென்ற நிலைக்குத் தன்னைப் பண்படுத்திக் கொண்டாள். ஊர்களுக்குச் சென்று பரப்புரைகள் செய்தாள். பெண்கள் எழுச்சியும் மாற்றமும் பற்றியெல்லாம் பெண்களுடன் பேசத் தொடங்கினாள்.

000 000 000

கடவுள் கொடுத்த வரம் போல அவளது பயிற்சிக்காலத் தோழியும் பாடகியும் பரதநாட்டியக்கலைஞருமான யாழிசையும் இவளுடன் சேர்த்து 20பேர் ஒன்றாகப் பணிக்கு அனுப்பப்பட்டார்கள். பயிற்சிக்காலக் கடுமையும் சிரமமும் இல்லாது பாட்டு நடனம் பணியென நாட்கள் ஓடத்தொடங்கியது.

ஒரு கலைஞராய் தன்னை வளர்த்த நேரம் தன்னையொரு சிறந்த களப்பணியாளராயும் வளர்த்துக் கொண்டாள். சில நேரங்களில் தனது கடந்த காலங்களை நினைக்க அவளுக்குச் சிரிப்பாயும் இருக்கும். அந்தளவுக்கு அவள் இப்போ மாறிவிட்டாள். ஆரம்பத்தில் உணர்ந்த வெறுப்பு விட்டுவிட்டுப் போய்விடலாமென்ற எண்ணம் எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் பணியில் இறங்கினாள்.

அவளது ஆற்றல் சுதந்திரப்பறவைகள் பத்திரிகைக்குள் உள்வாங்கப்பட்டது. அங்கே போராளிக் கலைஞர்கள் பலரைச் சந்தித்தாள். அவர்களது ஆற்றல் இலக்கிய ஆழுமை எல்லாவற்றையும் தானும் கற்றுக் கொண்டாள். அவளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் கொடுக்கப் பல அக்காக்கள் இருந்தார்கள்.

பயிற்சியின் போது தனக்கு நேர்ந்த சகப்பான அனுபவங்களைப் பற்றியெல்லாம் கண்ணீரோடு அவர்களுக்குச் சொன்னாள். அவளுக்குள் ஆணியாய் பதிந்து மறக்க முடியாது இன்றும் ஞாபகப்படுத்தித் துயருறும் கதைகள் பலவற்றைச் சொன்னாள்.

அவர்களுள் ஒருத்தி அவள் ஒரு மூத்த போராளி. அன்பினியின் வயதின் காலங்கள் இயக்கத்தில் இருக்கிறாள். அவளுக்கு அன்பினி நிறையக் கதைகள் சொல்வாள். சலிக்காமல் எல்லாவற்றையும் கேட்டு நம்பிக்கையைக் கொடுக்கிற தாயாக அன்பினிக்கு எல்லாமுமாக இருந்தாள் அந்த அக்கா.

நான் இயக்கத்துக்கு வர முதல் நான் பாத்த இயக்கம் வேறை….ஆனால் அனுபவித்த இயக்கம் வேறை….. வெளியில வடிவாத் தெரிஞ்ச கன விசயங்கள் இங்கை ஏற்றுக் கொள்ளேலாம இருக்கு….. இயக்கத்தை விட்டிட்டு வீட்டை போகக்கூட கனதரம் யோசிச்சனான் தெரியுமோ…. ஒருநாள் கணணியில் தட்டச்சுச் செய்தபடி அம்மாவுக்கு நிகராக அவளுக்கு ஆற்றுகை கொடுக்கும் அந்த மூத்த போராளிக்குச் சொன்னாள்.

அவளும் ஒரு பயிற்சியாசிரியராய் இருந்திருந்ததாகவும் பயிற்சிக்காலங்களில் தானும் இவள் போன்றதொரு மனநிலையில் இருந்ததாகவும் பல கதைகளைச் சொன்னாள் அக்கா. அன்றோடு பயிற்சிக்காலங்கள் பற்றிய கதைகளை அக்காலத்துக் காயங்களை ஞாபகம் கொள்வதை நிறுத்திக் கொண்டாள் அன்பினி.

எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லாக் குணங்களும் இருக்கு….. போராளிகள் என்ற மொழிக்குள் ஒருவரின் இயல்புகளை மாற்றிவிட முடியாது. மனித இயல்புகள் மாற்ற முடியாதவை. அந்த இயல்புகள் யாவும் நிறைந்தவர்கள் தான் போராளிகளும்….. சொல்லிக் கொண்டு போன அக்காவை இடைமறித்தாள் அன்பினி.

போராளிகள் மனித இயல்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையென்றெல்லோ இயக்கத்துக்கு வர முன்னம் படிச்சனான்….

அக்கா சிரித்தாள். அன்பினி…! போராளிகளும் மனிசர்தான் அவை கடவுள்களில்லை….நீர்….நான்….அந்தா இந்தா இதிலையுள்ள எல்லாரும் போராளியள்…. எங்களுக்குள்ளை ஒரு இலட்சியத்தை முன்னிறுத்திப் போராடுறம்…..நாங்கள் எல்லாருமே கொண்டிருக்கிற இலட்சியம் எங்கடை நாட்டு விடுதலை….. நாட்டுக்காகப் போராட வந்திருக்கிறம் ஆனால் நாங்கள் மனிதர்கள்…..எங்களை மண்ணுக்காகக் குடுக்கத் தயாரா வந்திருக்கிறம்…..ஆனால் எங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனிக் குணங்கள் இருக்கிறது. அக்குணங்களை நாங்கள் வெளிப்படுத்தாதவரை எங்களைப் பற்றி யாருக்கும் தெரியாது….நீங்கள் பயிற்சிக் களத்தில கண்டவையள் போராளிகள் ஆனால் அவர்கள் மனிதர்கள். ஒரு சாதாரண மனிதருக்குரிய எல்லா வகையான குணங்களும் உள்ளவர்கள். அவர்கள் கோபப்படும் போதும் இரக்கப்படும் போதும் அவர்களது தனித்தனி மனநிலையை உணர்ந்துள்ளீர்கள்……மற்றும்படி எதுவுமில்லை. அக்கா தனது விளக்கங்களை நீட்டிக் கொண்டு போனாள்…..ஆனாலும் பயிற்சிக்களத்தில் சந்தித்த கேட்ட வார்த்தைகளை மறக்க முடியாது பலதரம் அழுதிருக்கிறாள் அன்பினி. அந்த நேரங்களில் எல்லாம் அந்த அக்காதான் அவளை ஆறுதல்படுத்தித் தேற்றித் தெளியவைத்தாள்.

அன்பினியை மக்களுக்குள் இறங்கிப் பணியாற்ற அந்த அக்கா அவளுக்கான அனுமதியைக் கொடுத்தாள். அன்பினி பெண்களின் பிரச்சனைகள் தேவைகள் போன்ற விடயங்களைச் சேகரித்து வரத் தொடங்கினாள். அவற்றைத் தனது எழுத்தால் மெருகிட்டு சுதந்திரப்பறவைகளுக்கு இதர வெளியீடுகளுக்கெல்லாம் கொடுத்தாள். தன்னால் இயன்ற மாற்றங்களை தமிழ்ப் பெண்களுக்குள் செய்யும் முனைப்போடு பெண்களோடு இணைந்து சமூகக்களத்தில் இறங்கினாள்.

அதன் ஒரு கட்டமாக 2006ஆவணி செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி நெறியில் கலந்து கொண்டு அங்கே கலந்து கொண்டிருந்த பிள்ளைகளுடன் அவளும் ஒருத்தியானாள். சிரிப்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்தது வளாகம். அவள் வயதிலும் அவளில் இளையவர்களும் அங்கே கலந்து கொண்டனர்.

அங்கிருந்து பல புதிய தோழிகளைச் சேர்த்துக் கொண்டாள். புதியதோர் உலகம் அங்கே அவள் முன்னே செதுக்கப்பட்டிருந்தது. கடினம் நிறைந்த பயிற்சிக்களம் அது தந்த அனுபவங்கள் அடிக்கடி நினைவுகளைக் கிழறும் எண்ணங்களால் மனசிற்குள் காயமாய் பதியப்பட்ட சம்பவங்கள் யாவையும் நினைத்து நினைத்துக் கலவரப்படும் துயரங்கள் யாவையும் மறந்து அங்கே அன்பினி….

எல்லா வகையான சந்தோசங்களையும் பிரமாண்டம் நிறைந்த கனவுகளையும் பறித்துக் கொண்டு போகவும் ஒரு நாள் உதிக்குமென்பதை அவர்கள் அறியாத ஒருநாள் அந்தக் கரிய நாள் விடிந்தது. சாவு தங்களைக் காவுகொள்ளுமென்ற கனவுகளை அவர்கள் காணவில்லை. இரத்தத்தால் அந்த வளாகம் சிவக்குமென்று சிந்தித்திருக்கவில்லை. தங்கள் உறவுகள் தங்களை இழந்து துடிப்பார்கள் என்று எதையுமே அறிந்திராத அந்த நாள் விடிந்து கிபீர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தினுன் குண்டுகளை இறக்கிவிட்டுப் பறந்துபோனது.

எத்தனையோ குருத்துக்களின் கனவும் வாழ்வு பற்றிய விருப்பங்களும் சிதைந்து போனது. கனவுகளை வளர்த்துக் கனவுகள் நனவாகுமென்ற முனைப்போடு வாழ்ந்த அவர்களது உலகத்தை துயரம் தின்று கொண்டது. சில மணித்துளிகளில் அந்தக் கோரம் நிறைந்த துயரம் நிகழ்ந்து முடிந்தது.

இரத்தச் சேற்றில் சிறுமிகள் தத்தளிக்க குண்டுப்பறவைகள் குண்டுகளைக் கொட்டிப்போனதன் முடிவாக ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 உலகமே அதிர்ந்தது. 52மாணவிகளின் உயிர்களை இழந்து போனது தேசம். உயிர்களின் இழப்போடு துயரங்கள் முடியாத மிச்சம் கால்களை கைகளை உடலில் பல பாகங்களை பலர் இழந்து போயினர். யுத்தத்தின் ஓர்மம் நிறைந்த கைகளால் அன்றைய நாளைக் காலம் பதிவு செய்து கொண்டது.

ஊடகங்களில் அவர்களும் அந்த நாளும் சோக இசையோடு சொல்லியெழுத முடியாத கனவுகளோடு சிதைந்து போன சிறுமிகளை நினைவு கூர்ந்து கொண்டிருந்தது. பத்திரிகைகளில் அவர்கள் முகப்புச் செய்திகள் ஆகினர். அவர்களை நினைத்து இரங்கல்களும் இலக்கியப் பற்றாளர்களால் அவர்கள் கவிதைகளாக கதைகளாக நினைவுளாகப் பதியப்பட்டனர். அந்தத் துயர் நிறைந்த நாளை எவராலும் மறக்க முடியாத வடுவை அந்த நாள் தந்து போனது.

அந்த நாள் அன்பினிக்கும் கரியநாளாய் அவளது கனவுலகம் சிதைந்து போனது. இரத்தச் சேற்றில் அவளும் கிடந்தாள். அசைந்து எழுந்து ஒட எத்தனித்தாள். இயலவில்லை அவளைப் பிடித்துக் கட்டி வைத்தாற்போல அசைய முடியவில்லை. கால்களை ஊன்றி நிமிர்ந்துவிட எத்தனித்தாள். எதையுமே செய்ய முடியவில்லை. முகமெங்கும் இரத்தமாயிருப்பதைக் கைகளால் தொட்டுப்பார்த்துத் தெரிந்து கொண்டாள். அங்ககங்கே அழுகையும் முனகலும் கேட்டுக் கொண்டிருந்தது. அவளது ஞாபகங்களிலிருந்து எல்லா ஒலிகளும் தூரமாகிக் கொண்டிருந்தது.

ஆழம் நிறைந்த வெளிகள் ஊடாகவும்….அவலம் நிறைந்த தெருக்கள் ஊடாகவும் ஏதோவொருபாரம் அவளது சந்தோசங்களையும் அவள் போன்ற சிறுமிகளின் உயிர்களையும் பறித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. யமனின் கால்கள் ஒவ்வொருவராய் மிதித்துக் கொண்டு போகின்றது போல் நினைவுகள் தொலைந்து கொண்டிருந்தது…..அன்பினியின் அழுகை மறைந்து அவள் குரல் அடங்கிப் போக எங்கோ அவள் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள்.

6

கண்கள் விழித்து நினைவுகளை விறாண்டினாள். ஒவ்வொன்றாய் நிகழ்வுகளைத் தோண்டித் தேடினாள் ஞாபகங்களை. தான் இருக்கும் இடம் தன்னருகில் இருக்கும் மனிதர்கள் யாவரையும் ஞாபகத்திற்குள் கொண்டு வந்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் அவள் கண்ணுக்குள் காட்சிகள் இரத்தமாய் வழியத் தொடங்கியது. தன்கால்களைத் தேடினாள். முளங்கால் வரையும் சுற்றப்பட்டிருந்த துணிகளுக்குக் கீழ் எதுவுமில்லை. என்ரை கால்…? அவள் தனது கால்களைத் தேடிக் கத்தியழுதாள்.

தலையை நிமிர்த்திக் கைகளை எடுத்துக் கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். சுற்றப்பட்ட வெள்ளைத் துணிக்குள்ளால் இரத்தம் கசிந்தது. நம்பிக்கைகள் அறுந்து நொருங்கியது. எத்தனையோ பேர் வந்தார்கள் சுகம் விசாரித்தார்கள் வார்த்தைகளால் நம்பிக்கையை விதைத்தார்கள். எதையுமே கேட்கும் நிலையில் அவள் இல்லை. எல்லோர் மீதும் எரிந்து விழுந்தாள்.

அசைய , எழுந்து இயங்க எல்லாவற்றிற்கும் அவளுக்கு ஒரு துணை தேவைப்பட்டது. இப்போதைய அவளது ஏக்கமெல்லாம் எப்படி நடப்பது ? எப்படிச் சுயமாகத் தனக்கான எல்லாவற்றையும் கவனிப்பது ? அவளது சுதந்திரத்துக்கான பலமாயிருந்த கால்கள் பறிக்கப்பட்டதன் துயரம்தான் அவளை நித்திரை கொள்ள விடவில்லை. இரவுகளில் அவள் உறங்க தூக்க மாத்திரைகளும் நோவை மறக்கும் மயக்க மருந்துகளுமே அவளை இயக்கிக் கொண்டிருந்தன. காலிழந்தவர்கள் பலரைக் கண்டிருக்கிறாள். அவர்களுடன் பணியாற்றியிருக்கிறாள். அவர்களுக்காகவும் பணியாற்றியிருக்கிறாள். ஆனால் தனது கால்களை இழந்த போதுதான் காலின் அவசியத்தை அவள் அதிகம் உணர்ந்து கொண்டாள்.

கனவுகள் போலப் பொழுதுகள் ஒவ்வொரு நாளும் ஓடியோடிப் போய்க்கொண்டிருந்தது. காயங்கள் ஆறத்தொடங்கியது. அடுத்த கட்டம் அவள் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்லும் நேரமது.

மருத்துவமனையிலிருந்து விடுதலையாகி ஊனமுற்றோர்களைத் தாங்கி வைத்திருந்த நவம் அறிவுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டாள். அவளது தேவைகள் யாவற்றுக்கும் யாராவது ஒருவர் வந்து உதவும் வரை எல்லாவற்றிற்கும் காவலிருக்க நேர்ந்தது. சக்கர நாற்காலிக்குள் அவளது இயக்கம் ஒடுங்கிப்போனது. ஒவ்வொரு தரமும் அவள் இயற்கைக் கடனைக் கழிக்க , குளிக்க , ஆடைகளைத் துவைக்க ஆட்களை அழைக்க வேண்டியிருந்தது. அங்கே அவள் புதியவள் ஆகையால் அவளுக்கான தேவைகளை நிறைவேற்ற பராமரிப்பாளர்கள் உடனே வந்து சேரமாட்டார்கள். சில நேரங்களில் உதவிக்காக அவள் இருக்கும் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு சத்தமிட்டு அழைக்க வேண்டும். அப்படியும் யாரும் வராதவிடத்து பெலத்து அழுது கத்தினால் தான் ஆட்கள் வருவார்கள்.

பயிற்சி முகாமில் சந்தித்த கிண்டல்கள் போல் அங்கும் சில பராமரிப்பாளர்களால் அவள் தண்டிக்கப்பட்டாள். மூத்தவர்களுக்குப் பணிகள் முடித்துவிட்டே இவள் போன்ற புதியவர்களுக்கான பணிகள் செய்யப்படும். அந்த நவம் அறிவுக்கூடம் பல கலைஞர்களை , தொழில்நுட்பவியலாளர்களை , பல்துறை சார்ந்து பலரை உருவாக்கி வெளியில் அனுப்பியிருக்கிறது. ஆனால் இவள் போன்ற புதியவர்களுக்கு பழையவர்களால் செய்யப்பட்ட சில வேண்டத்தகாத விடயங்களை யாருக்கும் சொல்லாமல் தனக்குள் மறைத்துக் கொண்டாள். எங்கும் எல்லாவகையான மனிதர்களும் இருப்பார்கள் என அவளுக்கு அம்மாவுக்கு நிகராயிருந்த மூத்த தளபதியக்கா சொன்னதைத் தான் நினைத்துத் தன்னை சமாதானப்படுத்துவாள்.

சக்கர நாற்காலிக்குள் தன்னால் உழல முடியாதென்பதை உரியவர்களுக்குச் சொல்லியழுது சண்டை பிடித்துச் செயற்கைக்கால் பொருத்துமாறு கெஞ்சினாள். இருகால்களையும் இழந்த நிலையில் அவளால் இலகுவாய் நடக்க முடியாதென்று சொன்ன வெண்புறா செயற்கைக்கால் பொருத்தும் நிபுணர்களின் ஆலோசனையை நிராகரித்துத் தன்னால் விரைவில் நடக்க முடியுமென வாதிட்டாள்.

2007காயம் ஆறி ஒருவருடம் முடிந்து வெண்புறாவிற்குச் சென்று அளவு கொடுத்துத் தனக்கான இரு கால்களையும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் பெற்றுக் கொண்டாள். கால்கள் பொருத்திய ஆரம்பம் மிகுந்த வலியோடு பயிற்சி செய்தாள். இரு கையிலும் தாங்கியோடு ஆரம்பித்துச் சில வாரங்களில் ஒற்றைக் கைதாங்கியோடு நடக்கத் தொடங்கி மேலும் சில மாதங்களில் கைத்தாங்கியில்லாமல் நடக்கத் தொடங்கினாள். ஆச்சரியம் தான் பலருக்கு ஆனால் தன்னால் முடியுமென்று சாதித்துக் காட்டினாள்.

வெண்புறா நிறுவனம் அவளுக்குக் காலையும் கொடுத்து நம்பிக்கையையும் கொடுத்துத் தேற்றிவிட செயற்கைக்கால் பொருத்திக் கொண்டு வெளியில் வந்தாள். வானொலிக்குள் அவள் உள்வாங்கப்பட்டு வானொலிக்கலைஞராய் ஒலிப்பதிவு அறிவிப்பு எல்லாவற்றிலும் காலிழந்த துயரமும் மறந்து போய் செயற்படத் தொடங்கினாள். அவ்வப்போது நெஞ்சுக்குள் திரண்டு அழுத்தும் காலிழந்து ஊனமான துயரம் துன்புறுத்தினாலும் மற்றவர்கள் முன் சிரித்தபடி வேலைகளில் ஈடுபடத் தொடங்கினாள்.

தனக்குள்ளிருந்து திரட்டப்பட்ட திறமைகளையெல்லாம் அவள் முழுமையாய் பயன்படுத்தத் தொடங்கினாள். அறிவிப்பில் அவள் புதிய புதிய விடயங்களைச் சிருஸ்டித்தாள். அவளது குரலைக் கேட்க அவளது நிகழ்ச்சியைக் கேட்க காவலரண்களிலும் கடைகளிலும் வீடுகளிலும் பலர் அவளது நேயர்களாகியிருந்தனர்.

அவளுக்கும் அவளது பயிற்சிக்காலத் தோழி யாழிசைக்கும் மீண்டும் பணி ஒரே பிரிவில் ஒரே இடத்தில் இருவரும் இயங்கத் தொடங்கினார்கள். அன்பினி யாழிசையுடன் சேர்ந்து முன்பு போல் நடனம் ஆடமுடியவில்லை. முளங்காலுடன் அறுபட்டுப்போன தனது கால்களைப்பற்றிக் கவலைப்படுபவளுக்கு இவளது துயரத்துக்கு ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துவாள் யாழிசை. பணியோடு நெடுநேரம் இருவரும் பேசிக்கொள்வார்கள்.

ஒருநாள் யாழிசை தனது காதல் பற்றி அன்பினிக்குச் சொன்னாள். ஒரு மருத்துவப் போராளியை அவள் காதலிப்பதாகவும் தங்களுக்குத் திருமணம் நிகழ வேண்டும் என்றும் தனது விருப்பங்களை இவளுக்குச் சொல்லி மகிழ்ந்தாள்.

காதல் வந்தால் உலகே மாறுமென்று சொன்ன கதைகள் உண்மை போலத்தானிருந்தது. யாழிசையின் கனவுத்தோட்டத்தில் யாழிசையும் அவளது மருத்துவப்போராளிக் காதலனும் அவளது ஆசைகளும் வாசம் நிறைந்த மலர்களாலும் பளிங்குகளாலும் கட்டப்பட்டிருந்தது.

தனது காதலன் பற்றிச் சொல்கின்ற தருணங்களில் அவள் கொள்கிற மகிழ்ச்சியை ஏனைய தருணங்களில் அன்பினி பார்த்தத்தில்லை. எல்லாவற்றையும் ரசனையுடன் அவள் சொல்கின்ற போது பரத அபிநயங்கள் பிடித்துக்காட்டிச் சிரிப்பாள். அவர்கள் இருவரும் பயிற்சி முடித்து வெளியில் பணியில் சேர்ந்த நேரம் பல சுவாரசியம் நிறைந்த அனுபவங்களை வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்களிடமிருந்து பெற்றது பற்றியெல்லாம் யாழிசை நகைச்சுவையுடன் கூறி அன்பினியை மகிழ்விப்பாள்.

அப்படித்தான் 2004ம் ஆண்டு…,அந்த நாட்களில் புதியபுதிய முகங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து சேர்ந்தார்கள். இவர்களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் , ஆங்கிலக்கற்பித்தல்கள் , சினிமாக் கற்பித்தல் என்று பலர் வந்து வகுப்பெடுத்தார்கள். இவளும் இவளது தோழிகளும் அந்த வகுப்புகளில் எல்லாம் பங்குபற்றுவார்கள். அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ அந்த அறுவைகளில் நித்திரை தூங்கித் தூங்கி இருந்தே ஆகவேண்டும்.

அப்போது கனடாவிலிருந்தும் லண்டனிலிருந்தும் ஆங்கில வகுப்பெடுக்க பலர் வந்தார்கள். அன்பினியும் யாழிசையும் சார்ந்த ஒரு குழுவிற்கும் கனடாவிலிருந்து ஒரு அம்மா ஆசிரியையாய் வந்தா. 50தாண்டிய அம்மாவின் கற்பித்தலும் அனுபவப் பகிர்வுகளும் அவளது சுடுதண்ணி வாத்தியார்களை நினைவுபடுத்தும். அம்மா பழைய படங்களில் வரும் வில்லிகள் போலவே வகுப்பெடுப்பா. அவாவுக்கு இவர்கள் வைத்த பெயர் பூலான்தேவி. பூலான்தேவியென்றே அவரது வருகையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். அந்த அம்மா அவர்கள் பெண்கள் அடக்க ஒடுக்கமாய் பெண்ணுக்கான குணங்களுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரைகள் கூறுவார். அந்த அறிவுரைகளுடன் அன்பினி முரண்பட்டதற்காக கனடாப் பூலான்தேவி மேலிடத்துக்கு முறையிட்டு குட்டு வாங்காமல் பெரிய அக்காக்களிடம் திட்டுவாங்கியதோடு பூலான்தேவியின் வகுப்பில் வாயே திறப்பதில்லை.

சமூகம் இவர்கள் மீது சுமத்திய தடைகளை உடைத்துக் கொண்டு இச்சமூகத்தின் பிரஜைகளாய் பெண்களை உருவாக்க வேண்டுமென்று பல அக்காக்கள் சொன்ன கதைகளிலிருந்து மாறுபட்டுக் கனடா அம்மாவின் கற்பித்தல் அமைந்தது. யாரிடமும் முறையிட முடியாத நிலமை. கனடாவுக்கு அம்மா போகும் நாள் வந்தால் தங்களுக்கு விடிவென்று பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அப்படிப் பலர் வந்தார்கள் இவர்கள் நித்திரை தூங்கத் தூங்க வகுப்புகள் எடுத்தார்கள். விதியே விதியே இந்த வெளிநாட்டுத் தமிழ் வகுப்புகளை மாற்றாயோ என்றெல்லாம் யாழிசையும் அன்பினியும் முணுமுணுப்பார்கள். இதிலை தூங்கிறத்தைவிட சென்றியில பங்கர் வெட்டலாம்….இப்படியும் சிலர் முணுமுணுப்பார்கள்.

பூலான்தேவியின் தொல்லையிலிருந்து தப்பி மூச்சு விட்ட நேரம் இன்னொருவர் அவர்களுக்கு வகுப்பெடுக்கப் புதிதாக வந்திருப்பதாகப் பிள்ளைகள் சொன்னார்கள். அதுவொரு புதிய அனுபவம். அவரைப்பற்றிப் பல விடயங்களை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் ஒரு தமிழகத்துக்காரர். அதையும்விட ஒரு சினிமாக்காரர். இயக்குனர் என அவரது அறிமுகத்தை அவளது நாட்டியத் தாரகையும் பாடகியுமான யாழிசை சொல்லிக் கொண்டிருந்தாள். பூலான்தேவியின் வகுப்பைவிட அது வித்தியாசமானதாக இருந்தது. அவர் தனது சினிமா அனுபவங்கள் முதல் சிறை அனுபவங்கள் வரை பகிர்ந்து கொண்டார்.

அந்தச்சினிமாக்காரரிடம் கேள்விகள் கேட்டார்கள் அவரோடு பலவிடயங்களைப் பேசினார்கள். அந்த நேரத்தில் அவரைப் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் கேட்டார். ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை.உங்களுக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்யலாமே ?

அவர் சிரித்தார். பின்னர் சொல்லத் தொடங்கினார்…., சிறை எனக்கு வீடுமாதிரி…. நான் அடிக்கடி சிறைக்குப் போய் வருவேன்… இதையெல்லாம் புரிந்து நான் சிறைக்குப் போய் வரும்வரை குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து என்னுடன் வாழக்கூடிய ஒருத்தி கிடைத்தால் நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அவரது வயதுக்கு ஒத்த வயதில் இருந்த ஒரு அக்காவை மனதில் நினைத்துத்தான் அவரிடம் திருமணம் பற்றி புலிகளின் குரல் பொறுப்பாளர் கேட்டதாகப் பிள்ளைகள் கதைத்தார்கள்.

பின்னர் அந்த அக்காவுக்கு அந்தச் சினிமாக்காரரைச் சொல்லி நக்கலடிப்பார்கள். அக்கா சிரிப்பாள்…அதற்கு மேல் கதைக்கமாட்டாள். அக்காவுக்குள் அந்தச் சினிமாக்காரர் மேல் ஒருதலைக்காதல் இருந்தது. அக்கா அந்த இயக்குனரை நேசித்தாள். அவருடன் வாழும் கனவோடு இருந்தாள். ஆனால் அக்காவின் காதல் நிறைவேறவில்லை. அவளது ஒருதலைக்காதல் அவளுக்குள்ளேயே கரைந்து போனது.

பெரியாரின் கொள்கைகளைக் கைக்கொள்ளும் அந்தப் புரட்சிக்காரச் சினிமாக்காரர் பெரியார் போல தானும் புரட்சி செய்ய விரும்பினாரோ என்னவோ. அன்பினியின் நாட்டியத்தோழி யாழிசையைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டாராம். செய்தி பிள்ளைகளுக்கு ஊடாக அன்பினிக்கும் வந்தது.

72வயதில் பெரியார் தன்னிலும் மிகவும் இளவயதான 26வயது மணியம்மையை மணம் முடித்தது போல இந்தப் பெரியாரின் பேரனெனச் சொல்லிக்கொள்ளும் சினிமாக்காரம் விரும்பியிருக்கிறாரோ எனப் பிள்ளைகள் பேசிக்கொண்டனர்.

மணியம்மை திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்டதனால் தன்னிலிருந்து 46வயது முதியவரான பெரியாரைத் திருமணம் செய்ததில் காரணம் இருந்தது. ஆனால் யாழிசை அவளொரு விடுதலைப் போராளி அந்தச் சினிமாக்காரர் மீது எதுவித ஈர்ப்பையும் கொண்டிருக்கவில்லை. அன்பினிக்கு எல்லாம் குழப்பமாயிருந்தது.

அந்தச் சினிமாக்காரருக்கு யாழிசையைப் பிடித்திருந்ததற்கான காரணங்களைத் தேடினாள் அன்பினி. எதுவும் அவளது சிந்தனைக்குள் எட்டவில்லை. காதல் எந்த வயதிலும் எவர் மீதும் வரலாம் என்பதற்கு அவரது காதலும் இருந்தது. மேலிடம் வரையும் அவளைத் திருமணம் செய்ய விரும்புவதை சினிமாக்காரர் தெரிவித்ததாகவும் பிள்ளைகள் அவளுக்குச் சொன்னார்கள். இப்படிப்பலர் வந்தார்கள் போனார்கள் சமாதானகாலம் பல சுவாரசியமான நிகழ்வுகளையும் ஞாபகங்களையும் தந்துவிட்டுப் போனது.

7

சமாதான காலம் மெல்ல மெல்ல நொருங்கிக்கொண்டிருக்க அவ்வப்போது ஆள ஊடுருவும் தாக்குதல்கள் பேச்சுவார்த்தைகளில் முறுகல் என களம் இறுகிக் கொண்டு போனது. அந்த இறுக்கம் மிகுந்த ஒருநாள் அன்பினியின் நாட்டிய தேவதை யாழிசை அழுது கொண்டிருந்தாள். செத்துப்போய்விடலாமென்று புலம்பினாள். அவளுக்குத் திருமணம் நிகழப்போவதாகச் சொன்னாள். அவளது காதலைப் பிரித்து அவள் கனவுகளை நிரப்பிய அவள் நெஞ்சுக்குள் நிறைந்த காதலனைப் பிரித்து இன்னொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னாள்.

யாழிசையை அரசியல் பிரிவில் உள்ள பெரிய பொறுப்பில் உள்ளவர் ஒருவன் காதலிக்கிறானாம். அவன் யாழிசை மீது கொண்ட ஒருதலைக்காதலுக்கு யாழிசை பலியிடப்படக்காத்திருந்தாள். பெரும் வயது இடைவெளி அவனுக்கும் அவளுக்கும். அவனது விருப்பம் மேலிடம் வரை தெரியப்படுத்தப்பட்டது. அவனுக்குப் பொறுப்பாய் இருந்தவர் மூலம் பெரியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு பெரியவர்களே முடிவெடுத்து அவளது காதலனை மறந்து அவளைக் காதலிக்கும் புதியவனுக்கும் அவளுக்கும் சம்பிரதாய முறைப்படி திருமணம் ஒழுங்காகியது.

பெரியவர்கள் எடுத்த முடிவில் தலையிடவோ குறுக்கிடவோ அவளுக்கு அனுமதியிருக்கவில்லை. வீட்டுப்படிகள் தாண்டி வந்த நேரம் சுதந்திரப்பறவைகள் என்றே வந்தோம் இன்று எங்கள் சிறகுகள் வெளியில் தெரியாமல் அறுக்கப்பட்டு மீண்டும் பெண்களாக வனையப்படுகிறோம்…..என நொந்தாள் யாழிசை.

ஒருத்தி தான் காதலிப்பவனை மணமுடிக்க முடியாத ஆணாதிக்கம் நிறைந்த ஆண்களால் அவளது திருமணம் முடிவானது. அவள் அவளது காதலனை காதலைத் துறந்து அவளை விரும்பும் ஆணுக்காக அவள் நிச்சயிக்கப்பட்டாள். வெளியில் பேசப்படும் பெண்ணியம் பெண்விடுதலையெல்லாம் வெறும் பேச்சுகளாக அவளையும் பற்றிக் கொள்கிறது.

பெண்களின் விடுதலையைப் பெண்களுக்கான எழுச்சியை மாற்றத்தை ஏற்படுத்திய காலம் தந்த கொடையின் கீழ் இத்தகைய அடிமைத்தனங்களும் நிகழுமா ? அன்பினி தனக்குள் குழம்பினாள். இதுவும் ஒருவகையில் கட்டாயத் திருமணம் தானே….?

தலைவர் அடிக்கடி பெண்கள் பற்றி உச்சரிக்கும் வார்த்தைகளை அன்பினி அவளுக்குச் சொன்னாள். தலைவருக்குக் கடிதம் எழுதச் சொன்னாள். தலைவருக்கு இவள் எழுதும் கடிதத்தைச் சேர்க்க யாரிடம் போக வேண்டுமோ அந்தப் பொறுப்பானவர் தனது பொறுப்பின் கீழ் பணியாற்றும் ஒருவருக்கே இவளைத் துணையாக்க முடிவெடுத்திருக்கிறார் என்பதைச் சொன்னாள் யாழிசை.

அவளது விருப்பப்படி அவள் விரும்பிய காதலனை மறந்து அவளைக் காதலிக்கும் ஒருவனைத் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏன் …? உனக்கு வாயில்லையா ? யாழிசையைக் கேட்டாள். யாழிசை அழுதாள்.அழகான அவளது முகம் நீர்காணாத பூமரமொன்றின் செடிபோல் வாடிப்போனது.

யாழிசைக்குள் பூத்திருந்த காதல் செடிகள் அவளது கண்ணீரால் ஒவ்வொன்றாய் கருகத் தொடங்கியது. காதலில் வென்றவர்கள் குறைவு தோற்றவர்களே அதிகம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறாள். ஆனால் அந்தத் தோல்வி தனக்கும் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனது காதலைத் தானே கொலை செய்தாள். புதிய கணவனுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய பெண்ணாய் மாறினாள். மாறியதாய் வெளியில் காட்டினாலும் அவள் இதயத்தின் மூலையொன்றில் அவளது காதலனுக்காயும் காதலுக்காயும் நிரந்தரமான இடமொன்றைத் தானறியாமலேயே ஒதுக்கியிருந்தாள் என்பதனை யாருக்கும் தெரியாமல் அழுகிற தருணங்களில் உணர்ந்து கொண்டாள் யாழிசை. ஒரு வீராங்கனையாய் கனவு கண்டவள் கோளையாய் போனாள்.

000 000 000

பலநூறுபேரின் முன்னால் யாழிசை அழகாக அலங்கரிக்கப்பட்டு இருத்தப்பட்டாள். அவள் கண்ணீரை மூடி அந்த அரசியல் பிரிவுக்காரன் அவளுக்கு மாலையிட்டான். சம்பிரதாய பூர்வமாக அவனது மனைவியாக்கப்பட்டாள். அவளது அழகு அவனைக் கொள்ளையிட்டதாம். அவளது குரலும் நாட்டியமும் அவனை நேசிக்க வைத்ததாம். திருமணம் முடிந்து அவளும் அவனும் தனியே சந்தித்த நாளில் சொன்னான்.

அவன் தனது பதின்ம வயதுக் காதல் பற்றியெல்லாம் சொன்னான். அவளை முதல் பார்த்த நாளிலிருந்து திருமணமாகும் வரை அவளை அவன் இரகசியமாய் ரசித்தது வரை சொல்லிச் சிரித்தான். ஆனால் ஓரிடத்திலும் அவளது கதைகளைக் கேட்கவில்லை. அவளது பதின்ம வயதுக்கனவுகள் அவளது இதயம் நிறைந்த மருத்துவப் போராளியின் காதல் அதையெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் அவனின் முன்னால் அவள் சுதந்திரப்பறவையாய் இல்லை சிறகுகள் நறுக்கப்பட்ட பெண்ணாய் சதாரண பெண்ணாய் ஆகியிருந்தாள்.

அவன் மாலையிட்டதோடு அவள் மனதுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மருத்துவப் போராளியை மனதிலிருந்து தூக்கியெறியவே எண்ணினாள். ஆனால் அவன் அவளது எல்லாத் துடிப்போடும் ஒட்டிக் கொண்டேயிருந்தான்.

அவள் அவனுக்கு இல்லையென்றதை அறிந்த நேரம் அவன் எப்படியெல்லாம் அழுதிருப்பான்….? எப்படியெல்லாம் துடித்திருப்பான்……? தனக்குள்ளே பலவாறு எண்ணிப் பார்த்தாள் யாழிசை. இவை எல்லாவற்றையும் அன்பினிக்குச் சொல்லி அழுவாள். ஏனடி நாங்கள் பெண்களாப்பிறந்தம்….? பலமுறை கேட்டு மனம் புழுங்கியிருக்கிறாள்.

எத்தனையோ உதாரணங்கள் காட்டப்பட்ட போராளிகளின் மனைவிகள் பலரும் இப்படித்தானா கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள்…? தம்பதிகளாகக் காணும் பலரைப்பற்றி யாழிசை இப்படித்தான் எண்ணியிருக்கிறாள். எப்போதுமல்லாது எப்போதாவது இதயத்தை ஊசிமுனை கொண்டு குத்துவது போல அவளது காதலன் அவள் கண்ணுக்குள் ஞாபகமாய் கண்ணீராய் வழிந்து போவான். விதியென்பது இதுவா…..? தலையெழுத்து இதுவா….? தன்னையே நொந்து கொள்வாள்.

000 000 000

யாழிசையின் புதியவாழ்வு 5மாதங்கள் நிறைவாகிய காலமது. ஒருநாள் அதிகாலை யாழிசையின் கணவனும் முக்கியமானவர்கள் சிலரும் விமானக்குண்டு வீச்சில் பலியெடுக்கப்பட்டார்கள். 5மாத மணவாழ்வோடு யாழிசை விதவையானாள். ஒருதலையாய் அவளைக் காதலித்து அவளை மனைவியாக்கியவன் அவள் கண்ணீரோடு நிற்க அவளை விட்டுவிட்டு வீரவணக்கம் செய்யப்படும் நிலையில் நிழற்படமானான். சம்பிரதாயபூர்வமாய் திருமணம் நிகழ்த்தப்பட்டது போல அவனது மரண நிகழ்வும் இயக்க வளமைப்படி நடந்து முடிந்தது.

யாழிசையின் மருத்துவப்போராளிக் காதலன் வன்னியை விட்டு கிழக்கு மாகாணத்திற்கு மாறிப்போய்விட்டான். ஏன் மாற்றமாகிப்போனான் ? எங்கே இப்போது இருக்கிறான் என்ற விடயம் எதுவும் அவளுக்குத் தெரியாது. எங்கிருந்தாலும் அவன் நலமோடு இருக்க இறைவனைப் பிரார்த்தித்தாள். ஒரு போராளியாயே வாழ்ந்து மடிந்திருக்கலாம்….இடையில் காதல்..காதலை மறந்து ஒருவனுடன் திருமணம்…..இதுவெல்லாம் ஏன் நிகழ்ந்தது…? விடை கிடைக்காத கேள்விகள் யாழிசையின் வாழ்வை மாற்றிப்போட்டது.

000 000 000

8

நாட்டு நிலமை பதற்றமடையத் தொடங்கியது. வேலைகள் நிறையவே காத்திருந்தது. கடும்வேலையில் துவழ்ந்து போகாமல் சிரிப்பையும் கலகலப்பையும் கொண்டு வந்துவிடும் அன்பினியின் இயல்பால் பணியிடம் ஒரு பள்ளிக்கூடமாகிவிடும்.

ஆளாளுக்கு தங்களுக்குள் இருக்கும் காதலன்களைப் பற்றிச் சொல்வார்கள். சிலர் காதல் கைகூடாமல் கட்டாயத் திருமணம் செய்விக்கப்பட்டு காதல் கனவு புதிய கணவனுடன் பழைய காதலை காதலனை இதயத்தில் மூலையொன்றில் பத்திரப்படுத்திய கதைகளையெல்லாம் அன்பினிக்குச் சொல்லுவார்கள்.

அப்படிக் காதல் பற்றிய கதையில் அன்றொருநாள் அன்பினி வசமாக மாட்டிக்கொண்டாள். இவளது காதலைக் கேட்காமல் விடுவதில்லையென்ற முடிவில் தோழிகள் இவளைச் சூழ்ந்தார்கள். தப்பிக்க முடியாது தனது காதல் காதலன் பற்றிச் சொன்னாள். அவர்களே அவளுக்குத் தூதுவர்களாக அவளது காதலனின் பெயர் பிரிவு போன்றவற்றைப் பதிவு செய்து அவனைத் தேடினார்கள். தங்களது நிறைவேறாத காதல் போல் இவளுக்கும் ஆகக்கூடாதென்பதில் சிலர் அக்கறையோடு அவனைத் தேடினார்கள். அவனும் ஒரு தளபதியாகையால் தேடுதல் இலகுவாய் முடிந்தது.

2008 இவள் நேசிப்புக்கு உரியவனைத் திரும்பச் சந்தித்தாள். அவன் தாக்குதல் தளபதியாய் ஒரு படையணியின் கட்டுப்பாட்டாளனாயிருந்தான். மீண்ட சந்திப்பு அவனிடம் அவள் பேச நிறையவே சேமித்து வைத்திருந்தாள். சொல்ல முடியாத உணர்வுகள் அவள் மனக்குளத்திலிருந்து சிதறிக் கொண்டிருந்தது.

அவள் முதல் சந்தித்த போதிருந்த தோற்றத்திலிருந்து அவன் சற்று வித்தியாசமாக இருந்தான். அன்பினியைக் கொள்ளை கொண்ட அந்தக் கண்களை ஊடுருவிச் சிரித்தாள். அவன் சில வார்த்தைகளுடன் நிறுத்திக் கொண்டான்.

இரண்டு கால்களையும் இழந்த அவளைத் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாதென்றான். திருமணக்குழுவினருக்கு அவளுக்கு அவனில் காதலில்லை வெறும் நட்புத்தானென்று சொல்லும்படி கூறினான். இனிமேல் யாரிடமும் அவனை விசாரிக்கக்கூடாது தேடக்கூடாதென்றால் கட்டளையிட்டான். அவன் அவளது காதலனில்லையென்று சொல்லும்படியும் சொல்லச் சொன்னான். ஒரு களத்தின் கட்டளைத்தளபதி தனது காதலிக்கும் கட்டளையிட்டான்.

தன்னை இந்த நிலையில் காணும் போது வருந்துவான் கண்ணீர் சிந்துவான் அவளது கால்களைக் கொண்டு போன கிபீரைச் சபிப்பான் என்றெல்லாம் நினைத்தவளுக்கு எல்லாம் ஏமாற்றமாய் போனது. அன்பினியின் முதலாவது தோல்வி அதுவானது. அவளின் கனவுக் கிரகத்தில் வர்ணக்கலவையாய் நிரப்பப்பட்டவன் கறுப்பாய் பயங்கரமாய் பெரும் சுழிக்காற்றாய் அவளை அடித்துக் கொண்டு போனான்.

காலை இழந்த போது அழுததைவிட அன்று அதிகம் அழுதாள். கண்கள் முட்டிய கண்ணீரும் வார்த்தைகள் தொண்டைக்குள் அடைபட்டு எதையும் பேசவிடாது கட்டிப்போட்டது.

காதலித்த போது அவனைக் கவர்ந்த அழகியவள். அவளது அழகான கன்னங்கள் கீறலும் குளியுமாய் அவனது காதலுக்கும் கவர்ச்சிக்கும் காரணமாயிருந்த கண்களும் துயர் நிரம்பிக் கண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தது.

உடலின் ஊனம் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துமா ? அவன் காதலித்த போது தெரிந்த அழகியாய் இருந்தால் மட்டுமே அவளை அவன் ஏற்றுக் கொள்வான் போல அவளோடு தர்க்கம் புரிந்தான். இறுதியில் அவனால் நிராகரிக்கப்பட்டுத் தோற்றுப்போனாள் அன்பினி.

அவன் காதலிக்கவில்லையென்ற தனது முகக்காயத்தின் தளும்புகளைக் கண்ணாடியில் பார்த்தாள். இந்த முகத்தை இனி யாராலும் காதலிக்க முடியாது. காயங்களால் சிதைக்கப்பட்ட முகத்தில் இனி யாருக்கும் காதல் வராது என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். அவளது காதலும் காதலனும் அவளைத் தனிக்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தனக்குள் அழுது தனக்கு ஆறுதலடைந்து அன்பினி தேறினாள். அப்படித்தான் வெளியில் நினைத்தார்கள். ஆனால் அவள் தேறமுடியாது துயரங்களால் தின்னப்பட்டாள்.

சில மாதங்கள் போய் முடிந்தது. அவளது முதற்காதல் தோற்று அவள் தனக்குள் உடைந்து போனாள். அவனது ஞாபகங்களைத் தள்ளிவிட்டு மாற முடியாதபடி அவன் அன்பினிக்குள் உறைந்து போயிருந்தான்.

9

திருமணம் முடிக்காவிடினும் காரியமில்லை. தனது காதலன் எங்காவது உயிரோடு இருக்கிறான் என்ற நினைவுமட்டும் போதுமென்று அவனை மறந்திருந்தவளுக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அவன் ஒருநாள் வீரமரணமடைந்துவிட்டான். காதல் போனது போல அவளது காதலனும் போய்விட்டான். செய்தியில் கேட்டு அவனுக்காக அழுதாள். அவனுக்காக விளக்கேற்றினாள். அதைவிட அவளால் எதுவும் இயலாது போனது. ஊனமென்ற காரணத்துக்காய் அவன் ஒதுக்கிவிட்ட போதிலும் அவனுக்காக அவள் துடித்துக் கொண்டிருந்தாள்.

தொடர்ந்த பணிகள் ஓரளவு காதல் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தது. காதலைவிடவும் இந்த உலகில் அழகான உலகம் உண்டென்பதைத் தனது கடந்து வந்த தடங்களிலிருந்து கற்றுக் கொண்டாள். அவளால் இப்போது இயன்றது அறிவிப்புத்தான். அவளது குரல் வானொலியில் தேசமெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. அவளது குரலால் இயன்ற பணிகளைச் செய்யத் தொடங்கினாள். ஊர்களை அழித்துக் கொண்டு யுத்தம் தனது கொடிய கைகளை நிலம் மீது விரித்தது. தினம் தினம் துயரங்களாலும் இழப்புகளாலும் தேசம் அழத் தொடங்கியது. மன்னாரில் தொடங்கி அவர்கள் துரத்தத் துரத்த இடம்விட்டு இடம்விட்டு இடம்பெயர்ந்து போனார்கள்.

அங்கவீனமானவர்கள் பலரை உறவுகள் பொறுப்பேற்றுத் தங்களுடன் கூட்டிப் போனார்கள். எல்லா அவசரங்களோடும் அவசர திருமணங்களை திருமணக்குழுவினர் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். இலட்சியங்களுடன் திரிந்தவர்கள் பலருக்குத் திருமணம் முடித்துக் குடும்பங்களாக்கினார்கள்.

2008இன் இறுதியில் அன்பினியையும் திருமணக் குழுவினர் தேடி வந்திருந்தனர். ஒரு தரம் காதலில் தோற்றுப் போய் காதலனும் வீரச்சாவடைந்து அத்துயரிலிருந்து மீள முன்னம் அன்பினியை ஒருவன் காதலிக்கிறானாம் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறானாம் என்றார்கள்.

அவளிலும் 12வயதால் மூத்த அவன் அவளை ஒருவருடமாக ஒருதலைக்காதல் செய்கிறானாம். அவனை ஏற்கனவே அறிந்திருக்கிறாள் அன்பினி. அவனது கவிதைகளை தனது குரலில் ஒலிபரப்பியிருக்கிறாள். அவனது கதைகளைப் பத்திரிகைகளில் வாசித்திருக்கிறாள். அத்தோடு அவன் ஒரு மருத்துவப் போராளி என்பதனையும் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறாள். இத்தனையும் நிரம்பியவனை அவள் மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்கள்.

அவனும் இவளைப் போல் ஊனமடைந்திருந்தான். ஒற்றைக்கையும் ஒற்றைக்காலும் காயத்துக்கு உள்ளாகி முறிந்த காலும் கையும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலமையில் அவனது நிலமையிருந்தது. இரண்டு கால்களையும் இழந்தவளுக்கு காலும் கையும் இயலாத அவனைத் துணையாக்குவதில் விருப்பமில்லை.

நாளை அவளுக்கு ஒரு குழந்தை கருவானால் கால் இயலாத அவனால் அவளைச் சுமக்க முடியுமா ? இன்று நடக்கின்ற செயற்கைக்காலால் நாளை நடக்க முடியாது போனால் அவளைச் சக்கரநாற்காலியிலேனும் வைத்துச் சுமக்க முடியுமா ? இருவருமே என்றாவது ஒருநாள் அனாதைகளாகமாட்டோமா ?

பல கேள்விகள் அவளுக்குள் பூதம் போல் மனக்கிணற்றிலிருந்து கிழம்பிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒழுங்கான காலும் கையும் இருந்தவனே இனிக்காதலில்லையென விலக்கிய காயம் இன்னும் நெஞ்சுக்குள் வலித்துக் கொண்டிருக்க இன்னொருவனின் காதலா ? சுருங்கச் சொன்னால் அவன் மீது அவளுக்குக் காதல் துளியும் வரவில்லை.

பெரிய அக்காக்கள் வந்தார்கள் பெரிய அண்ணாக்கள் வந்தார்கள். அவனை அன்பினி திருமணம் செய்ய வேண்டுமெனவே வலியுறுத்தினார்கள். என்ன வயது கூடவெண்டு நினைக்கிறியா……? இல்லை வடிவு குறைவெண்டு நினைக்கிறியா….? எங்களுக்கையே பார் எவ்வளவோ பேர் தகுந்த பொருத்தங்கள் இல்லாமலேயே வாழேல்லயா….? கனக்க வயது வித்தியாசத்திலயும் அவையெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கினம்….! பல மூத்த தளபதிகள் போராளிகளின் பெயர்களை அன்பினிக்கு உதாரணம் காட்டினார்கள். அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டுமென்ற முடிவில் பலர் முயன்று கொண்டிருந்தார்கள்.

உன்னுடைய கதையை அவர் கதையா எழுதியிருக்கிறார் தெரியுமா….? அவருடைய கதையின்ரை முடிவில உனக்கு வாழ்க்கை தாறதாத்தான் கதையை முடிச்சிருக்கிறார்……அவர் எழுதின கதையில பாத்திரமான நீ கட்டாயம் அவரைக் கலியாணங்கட்ட வேணும் அன்பினி…. அரசியல்பிரிவு அக்கா கடைசி முயற்சியாக அன்பினிக்கு அவனது புராணம் பாடினா.

அக்கா ஒரு எழுத்தாளர் பல பெண்களுக்கு கணவனாகக் காதலனாக வாழ்ந்ததாக கதையெழுதினா அத்தனை பெண்களும் அவருடன் காதலிகளாகவும் மனைவிகளாகவும் வாழ வேணுமா….? நான் இயக்கத்துக்கு வரேக்க நான் என்ன நினைச்சு வந்தனான் தெரியுமா…? வாழும்வரை என்ரை சமூகத்தில ஒரு சுதந்திரமானவளாக வாழ வேணும் சாகும்போது கூட என்ரை சமூகத்தில ஒரு முன்னோடியாகச் சாக வேணுமெண்டெல்லாம் கனக்க நினைச்சனான்….ஆனா நீங்கள் என்ர ஊனத்தைக் காரணமா வைச்சு கட்டாயக்கலியாணம் செய்யச் சொல்றீங்கள்…..? நீங்கள் எத்தினை மேடையளில பெண்விடுதலை பெண்ணுரிமை பற்றியெல்லாம் பேசியிருக்கிறியள்….அதெல்லாம் ஊருக்கு மட்டுமான உபதேசங்களா அக்கா…? இதுதானாக்கா அண்ணை கண்ட பெண்விடுதலை….? அண்ணையை ஏமாத்திறமக்கா எல்லாரும்…..அவளது நீண்ட கருத்தாடல்கள் எல்லாம் தோற்றுப்போனது.

மெல்ல மெல்லத் தொடங்கிய திருமணப் பேச்சு நாளடைவில் கட்டாயமாய் அவனை அவள் திருமணம் செய்து கொள்ளும்படி பணிக்கப்பட்டாள். திருமணம் செய்யாதுவிடில் அவளைக் கவனிக்க யாருமற்றுப் போய்விடுவாளென எச்சரிக்கப்பட்டாள். அவளது மறுப்பு அவளது வெறுப்பு எதுவும் எடுபடாமல் ஒருநாள் அன்பினிக்கு அவனைக் கட்டாயத் திருமணம் செய்து வைத்தார்கள். மாலைக்குப் பதில் மணிக்கூடுகள் மாற்றப்பட்டு அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக்கினார்கள்.

அவன் விரும்பிய காதல் மனைவியாக அன்பினி அவனுக்காக எழுதப்பட்டாள். ஆனால் அவன் மீது அவளுக்கு எந்தவிதமான உணர்வுகளும் ஏற்படவில்லை. வெறுப்புத்தான் மிஞ்சியது. சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகள் முடிந்ததும் அவன் தனது கடமைக்குப் போக அவளையும் அழைத்தான். தானாக நேசித்தான் தனக்காகவே மூத்த தலையீடுகளைப் புகுத்தி அவளைத் துணையாக்கியவனோடு போக மறுத்தாள். மணிக்கூடு மாற்றியது மட்டும் தான் அவளது திருண வாழ்வு.

அன்பினி புலிகளின்குரல் வானொலியில் தொடர்ந்தும் தனது பணியைச் செய்யத் தொடங்கினாள். வானொலி இடம்மாறி இடம்மாறிச் செய்தி ஒலிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளைத் தொடர்ந்தும் கொண்டு செல்வதில் பெரும் சிக்கலாக இருந்தது வானொலி நிர்வாகத்தினருக்கு. கால்களில்லை தானாக நடந்து செல்லவோ தன்னைத் தற்காத்துக் கொள்ளவோ முடியாதவளைத் தங்களோடு நகர்த்திச் செல்லும் சிரமத்தில் அவளோடு பொறுப்பாளர் சினந்தபடிதானிருந்தார்.

அப்போது வானொலியை இரணைப்பாலை தென்னந்தோப்பு பகுதிக்கு மாற்றியிருந்தார்கள். மழைபோல் பொழிந்து கொண்டிருந்த எறிகணைகள் நடுவில் ஒலிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் அந்த இடத்தை மாற்ற வேண்டிய நிலமை வந்தது.

அன்பினியும் அவளுடன் 4பிள்ளைகளும் இரணைப்பாலையில் ஒரு பதுங்குகுளியில் விடப்பட்டார்கள். வானொலி ஒலிபரப்புக்கான சாதனங்களை நகர்த்திவிட்டு மறுநாள் காலை அன்பினியையும் அவளுடன் கூட நின்ற பிள்ளைகளையும் கூட்டிப்போவதாகப் பொறுப்பாளர் சொன்னார்.

காலைவரை பதுங்குகுளியில் காத்திருந்து மதியம் ஆகியது. ஒருவரும் வரவுமில்லை நகர்த்திச் செல்லப்படவுமில்லை. தலையை நிமிர்த்த முடியாதளவு குண்டுகள் அதிர்ந்து கொண்டிருந்தது. ஏனைய 4பிள்ளைகளும் இவளை விட்டுவிட்டுப் போக முடியாது தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தாங்களாக நடந்து செல்லக்கூடியவர்கள் இவளோ துணையொன்றுடனே நடக்க வேண்டியவள். நீங்கள் போங்கோ என்னைப் பாக்க வேண்டாமென்று அவர்களிடம் சொன்னாள் அன்பினி. ஆனால் அவர்களோ இவளை விட்டுவிட்டுப் போகமாட்டோமென இவளோடே நின்றார்கள்.

சனங்கள் ஆளையாள் முந்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள். இவர்களை யாரும் கவனிக்கவில்லை. கடைசியில் அன்பினியை அழைத்துக் கொண்டு 4பிள்ளைகளும் வெளிக்கிட்டார்கள். தென்னைகளுக்கால் காப்பெடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்கள். அன்பினியால் நடக்கவே முடியவில்லை. என்னைவிட்டிட்டு நீங்க போங்கோ என அவர்களைப் பார்த்து அழுதாள்.

அவளைவிட்டுப் போக மனமின்றி அவர்கள் காப்பெடுத்துக் காப்பெடுத்துப் போய்க் கொண்டிருந்தார்கள். அன்பினி ஒரு தென்னையின் காப்பில் இருந்தாள். பொறுப்பாளர் மீது வெறுப்பாயிருந்தது. கூட்டிப்போக வருவதாய் சொல்லிவிட்டுப் போனவர்கள் தங்களைச் சாகட்டுமென விட்டுப்போய்விட்டதாக அழுதாள். தானும் மற்றவர்கள் போல் ஊனமின்றி ஒழுங்காயிருந்தால் தன்னைத் தானே காப்பாற்றிப் போயிருப்பேனென நினைத்தாள். இனிச் சாவுதான் முடிவென்று நினைத்தாள். பசி தாகம் களைப்பு என உடல் மிகவும் சோர்ந்து போனது. கையோடு காத்துவந்த உடுப்புப்பையையும் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். அருகில் பிணங்கள் அழுகுரல்கள் எல்லாத் துயரோடும் தனது சாவின் கணங்களுக்காக அஞ்சியபடியிருந்தாள்.

அவளைவிட்டுப் போன 4பிள்ளைகளும் அன்பினியிடம் திரும்பி வந்தார்கள். அவளை மெல்ல மெல்ல நடக்க வைத்துத் தங்களோடு தாங்கிப் போனார்கள். அந்தப்பிள்ளைகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் அவளிடம் இல்லை. காக்க வேண்டியவர்கள் விட்டுவிட்டுப் போக தங்களோடு இவளையும் கொண்டு போகும் முனைப்பில் அவளோடு வந்த பிள்ளைகளுக்கு இதயத்தால் நன்றி தெரிவித்துக் கொண்டாள்.

இறுதியில் நகர்த்தல் அணியொன்று இவர்களைக் கண்டது. என்ன பிள்ளையள் இங்கை ? எங்கை உங்கடையாக்கள் ? தனிக்கவிட்டுவிட்டுப் போன தங்கள் அணிபற்றிச் சொன்னார்கள். ஈற்றில் அன்பினியை அந்த அணி தங்கள் வாகனத்தில் ஏற்றிப் போய் புதுமாத்தளனில் இறக்கிவிட்டார்கள். அப்போது புதுமாத்தளனில் தான் புலிகளின் குரல் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டுப் போனார்கள். நடந்து வந்த 4 பிள்ளைகளும் அன்பினியோடு இணைந்தார்கள்.

தொலைக்காட்சி வானொயில் வேறு மொழியொன்றில் பணியாற்றிய குடும்பம் தளபதி பானுவின் நகர்த்தல் அணியோடு காப்பாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குடும்பம் அன்பினியையும் அவளுடன் நின்ற 4பேரையும் தங்களுடன் அழைத்துப் போனார்கள். பதுங்குகுளியில் விடப்பட்டுப்போன கதைகளை அழுகையோடு அவர்களுக்குச் சொன்னார்கள்.

அந்தக் குடும்பத்து அன்ரி அந்த இக்கட்டான வெடிகுண்டுச் சத்தங்களுக்கு நடுவிலும் இவர்களுக்காய நீதி வேண்டினார். இவர்கள் விடப்பட்டுச் சென்றது பற்றி அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கு அன்பினியினதும் மற்றப் பிள்ளைகளினதும் கைபடக் கடிதம் எழுதுவித்து அனுப்பினார். அந்தக் கடிதம் அந்த இக்கட்டுக்குள்ளும் திரு.நடேசன் அவர்களுக்குப் போய் உரிய பொறுப்பாளருத் தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் நின்ற வீட்டிற்கு வந்தார் பொறுப்பாளர்.

தனது பக்கத்தவறுக்கு வருந்துவார் மன்னிப்புக் கோருவார் என நினைத்தவர்களுக்கு அவரிடமிருந்து ஏச்சுத்தான் கிடைத்தது. ஊனமுற்றவர்கள் குண்டைக் கட்டி வெடிக்க வைக்குமாறும் குப்பியடிக்குமாறும் கூறினார் பொறுப்பாளர். ஏற்கனவே பல ஊனமடைந்தவர்களுக்கு அந்த முடிவை அறிவித்துள்ளதாகவும் கூறினார் அவர்.

என்னண்ணா….! சொல்றீங்கள்…..நான் வெடிக்கமாட்டன்…..என அழுதாள் அன்பினி. எதுக்கெடுத்தாலும் அழுது கொண்டிரும்….உம்மாலை ஒரே தொல்லை…..உம்மைக் காவிக்கொண்டு போகேலாது பிள்ளை….ஒண்டில் வெடியும் இல்லது குப்பிகடியும்….அவர் தனது முடிவைச் சொல்லிவிட்டுப் போனார்.

ஆயுதங்கள் ஓய்ந்த சமாதான காலத்தில் போராளியானவள். அதிகம் கள அனுபவம் அற்றவள். வெடியென்றால் வெடித்துச் சிதறிய வீரர்களை நினைத்துப் பார்த்தாள். அவர்கள் அதற்காகத் தயார்படுத்தப்பட்டு நெடுங்காலப் பயிற்சி பெற்றுப் போய் வெடித்தார்கள். இவள் பணியாற்றியது அரசியல்துறை ஊடகத்துறை…..! அங்கே வெடித்தவர்களையும் குப்பி கடித்தவர்களையும் பற்றிய கதைகளை வாசித்தாள் கவிதைகளை வாசித்தாள் நிகழ்ச்சிகள் செய்தாள். ஆனால் தானும் அப்படி வெடிக்க குப்பிகடிக்கும் தைரியத்தை அவள் பெற்றுக் கொள்ளவில்லை. தங்களை ஆகுதியாக்கியவர்கள் போல் இவளால் இலகுவாய் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் முடிவுக்கு வர முடியவில்லை. அவளோடு வாழ்ந்தவர்கள் பலர் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதான செய்திகள் அன்பினியையும் கலவரப்படுத்திக் கொண்டிருந்தது.

10

இறுதியில் அன்பினியை ஓர் குடும்பத்தினரிடம் பொறுப்புக் கொடுத்தார்கள். அவர்களோடு அவள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தாள். எறிகணை மழைக்குள்ளால் அவள் இடம்மாறி இடம்மாறிப் போய்க் கொண்டிருக்க அவளது கணவன் ஒருதரமும் வந்து பார்க்கவுமில்லை. எப்படியிருக்கிறாள் என்பது பற்றி அக்கறைப்படவுமில்லை. திருமணம் செய்து வைத்தவர்கள் மீதே அவளுக்குக் கோபம். ஒப்புக்கு ஒரு திருமணம் அதைத்தவிர அவள் எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்கவில்லை. குறைந்த பட்சம் அவளது திருப்திக்காகவேனும் அவன் அவளை வந்து பார்ப்பது கூட இல்லை.

2009 ஏப்ரல் இறுதிப்பகுதி. அன்பினியைத் தேடிப்போனான் அவளது கணவன். கடலால் அவளை வெளியேறும்படியும் அதற்கான பாஸ் அனுமதியையும் பெற்றுத்தருவதாகவும் வேண்டினான். கால்களுமில்லை அவளைக் கைதாங்கிக் காவிச்செல்ல ஆட்களுமின்றிய நிலமையில் அவனையும் வரும்படி வேண்டினாள்.

நான் வரமாட்டன்….கடைசி முடிவு சாவெண்டாலும் அது இங்கையே எனக்கு அமையட்டும்……

அவளோடு போக மறுத்தவன் இறுதி முடிவு தனது உயிரை விடுவதுதான் என்பதனையும் உறுதியாய் தெரிவித்துவிட்டுப் போய்விட்டான். அன்பினியைப் பொறுப்பேற்றவர்கள் கடலால் தப்பிவிட்டார்கள். அவள் மே17வரையும் முள்ளிவாய்க்கால் முனைவரையும் வேறொரு குடும்பத்தின் உதவியோடு போயிருந்தாள். கடந்து வந்த பாதையெல்லாம் உயிர்கள் துளித்துளியாய் காற்றோடும் கந்தகப்புகையோடும் கலந்து கொண்டிருக்க காத்திருந்தவர்களுடன் அவளும் காத்திருந்தாள்.

பிணங்களின் நடுவில் சாகும் தறுவாயில் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தது. அருகில் பிணங்கள் குவிந்து கிடக்க பிணங்களோடு காவலிருந்தவர்களோடு அன்பினியும் காவலிருந்தாள்.

பலர் தங்களுக்குத் தாமே சிதைமூட்டிச் சாம்பலானதாயும் தங்களைத் தாங்களே வெடிக்க வைத்ததாயும் பலரது கதைகள் அவளையும் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அவளது ஒருதலைக்காதலனும் கணவனும் தனக்குத்தானே மருந்து கட்டித் தன்னைத்தானே வெடிக்க வைத்தானென்ற செய்தி அவளுக்குச் சொல்லப்பட்டது. அவள் நேசித்த காதலனும் தன்னைத்தானே வெடிக்க வைத்தான். ஒருதலைக்காதலாய் அவளை மணமுடித்தவனும் தன்னைத் தானே வெடிக்க வைத்து அவனும் போய்விட்டான்.

சூனியம் என்பதையும் அதன் அர்த்தத்தையும் அன்றுதான் அன்பினி அனுபவித்திருந்தாள். அவனுக்காய் முதல் முதலாய் கண்ணீர் விட்டழுதாள். ஒருநாள் கூட அவனின் அருகாமையை அவனுடனான வாழ்வைப் பகிர்ந்து கொள்ளவில்லை. அவளுக்குத் திருமணம் முடித்து வைத்தவர்களுக்கு ஒரு பொறுப்புத் தீர்ந்த நிம்மதியோடு ஆளாளுக்குத் தங்கள் பக்கம் போய்விட்டார்கள். அவள் திருமணவாழ்வின் எதுவித சந்தோசங்களையும் அனுபவிக்காமலேயே விதவையானாள்.

அவனோடு வாழாத தனது வாழ்வைச் சுமந்து கொண்டு காப்பாற்ற வருவார்களென நம்பியவர்களுக்காகக் காத்திருந்தாள் அன்பினி. அமெரிக்காவின் கப்பல் வருமாம் அவர்களைக் காப்பாற்றிப் போகுமாமென்றெல்லாம் சொன்னார்கள். காயங்களோடும் இரத்தம் வழியும் துயரங்களோடும் காத்திருந்தவர்களோடு காத்திருந்தாள்.

அயல்நாடு வரும் அமெரிக்கா கப்பல் கொண்டு வரும் எல்லோரும் காக்கப்படுவார்கள். சொர்க்கம் நிறைந்து ததும்பும் உலகத்தில் தாமெல்லாம் போயிறங்குவோம் என்றுதான் காத்திருந்தார்கள் அன்பினியும் அவளோடு பலரும்.

2009 மே 17. இராவணன் சீதையைக் கவர்ந்து போனது போல மன்னர்கள் புட்பகவிமானங்கள் போல இப்போதைய நவீன விமானங்களைக் கொண்டு வந்து காக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை பொய்யாகிக் கப்பலும் வரவில்லை காப்போரும் வரவில்லை.

எல்லாம் முடிந்து போனது. உலகின் உதாரணமாய் எழுதப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உலக வல்லரசுகளின் துணையோடு தோற்கடிக்கப்பட்டு தாயகக்கனவோடு போன ஆயிரமாயிரம் பேரின் கனவுகள் நனவாகாமல் பாதியில் எல்லாம் முடிந்து போனது.

ஒரு கண்டத்திலிருந்து மறுகண்டம் பெயர்த்துக் கொண்டு போனது போல் அன்பினியும் அவள் போல் ஆயிரமாயிரம் பேரையும் அந்தப் பெரும்படை எடுத்துக் கொண்டு போனது.

வரிசையில் காத்திருந்து வகைபிரிக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றப்பட்டார்கள்.

தரம்பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வழி ஒவ்வொரு பிரிவுக்கும் திறக்கப்பட்டது. தளபதிகளின் பிள்ளைகள் மனைவிகள் இவ்வழியால் வருக என அறிவிக்கப்பட்டதும் அன்பினிக்குத் துணையாய் வந்த பெண் அன்பினியை அப்படியே விட்டுவிட்டுத் தனது பிள்ளைகளோடு போய்க்கொண்டிருந்தாள்.

சுயநலம் அங்கே ஒவ்வொருவரையும் தற்காத்துக் கொண்டிருந்தது. அவளைக் கொண்டு செல்ல எவரும் இல்லை. இயன்றமட்டும் நடக்கலாமென நடந்து போனவள் ஓரிடத்தில் ஒருவனின் காலடியில் தடக்கி விழுந்து போனாள். கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். பயத்தால் உடல் நடுங்கியது. அவன் அவளைத் தூக்கிவிட்டான். அவளை உள்ளே கொண்டு செல்லுமாறு பெண்களை அழைத்து அவளை அவர்களிடம் ஒப்படைத்தான்.

எந்த மூலையில் நின்றாலும் அவள் மீது அவனுக்கொரு கண்ணிருந்தது. அந்தநாள் வரையும் அதற்கு முந்திய மாதம் வரையும் வன்னிப் பெருநிலப்பரப்பில் கனரகங்களோடும் தேசக் கனவுகளோடும் நின்றவர்கள் பலர் அங்கு அவர்களது கனவு விடுதலையுணர்வு எல்லாவற்றையும் மறந்து இவள் போன்றவர்களை விசாரணையென்ற பெயரில் மிரட்டியதும் அடித்ததும் அவலப்படுத்தியதும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இன்னொரு முள்ளிவாய்க்கால் அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. கடைசிவரை பாகுபாடின்றிப் பிள்ளைகளையெல்லாம் கட்டாயக்களம் அழைத்த மூத்த அண்ணாக்களும் அக்காக்களும் கூட அங்கே இவர்களைத் தங்கள் விசாரணைகளால் சப்பினார்கள்.

பெரியவர்கள் உயிர் தப்பவும் பெரியவர்களின் வழிகாட்டலில் விடுதலையைத் தேசம் அடையுமென்ற கனவில் அவர்களுக்காக காற்றோடு கடலோடு மண்ணோடு பெயர் சொல்லாமல் அன்னியத் தெருக்களென எத்தனையோ பேரின் தியாங்களையெல்லாம் எப்படி இவ்வளவு இலகுவாய் மறந்தார்கள்? இன்று இப்படிச் சித்திரவதைப்படவா 30வருடங்கள் காத்திருந்தது தேசம் ? அன்பினிக்குள் கேள்விகள் நிறைந்து பொங்கியது. அவளை ஒவ்வொருவரும் விசாரிக்க விசாரிக்க எல்லாவற்றையும் மீறிய அழுகைதான் வந்து கொண்டிருந்தது. மனிதம் , மனிதப்பெறுமதி பற்றி விளக்கம் விரிவுரை நிகழ்த்தியவர்கள் கூட வில்லர்களாய் நின்றார்கள்.

அவளைப்புதிதாய் ஒரு குழு சுற்றிக் கொண்டது. எந்தப் பிரிவு ? எத்தினையாவது பாசறை ? எத்தினையாம் ஆண்டு இயக்கத்தில சேந்தது ? எப்பிடிக் கால் போனது ? தளபதிகள் கனபேர் பிள்ளைகளைத் தனிய விட்டிருக்கினமாம்….எந்தத் தளபதியின் மகள் நீ ? இப்படியெல்லாம் கொலைகாரர்களாய் அவளைக் கேள்விகளால் கொன்று கொண்டிருந்தார்கள் பல விடுதலைப்புலிகளின் போராளிகள். அவர்களெல்லாம் இவள் போன்ற அடிநிலைப் போராளிகளால் மதிப்புச் செலுத்தி மாபெரும் வீரர்கள் என்று மனதில் வைத்திருந்தவர்களே என்பதை நினைக்கவே அருவெருப்பாயிருந்தது. காறித்துப்ப வேண்டும் போலிருந்தது. ஏன்….? எதற்கு…..? சுயநலங்கள் ஏன் பொதுநலமென்ற தோல்போர்த்தி இத்தனை வருடங்களை எத்தனையாயிரம் உயிர்களைப் பலியிட்டுப் புரட்சி பேசியதெல்லாம் இதற்காகவா ?

அவளை ஏற்கனவே பாதுகாத்த சிங்கள இளைஞன் தான் மீண்டும் அவளிடம் வந்தான். என்ன….? என்ன தேவை….? என அந்தக் குழுவை உயர் தொனியில் கேட்டான். விசாரிக்கிறம் சேர்….அதை நாங்க செய்வம் நீங்கள் போங்கோ…..என அவர்களை அவளிடமிருந்து விலக்கிவிட்டான். அவளைத்தானே விசாரிக்கத் தொடங்கினான். அழாதையுங்கோ….என அவளுக்கு ஆறுதல் சொன்னான். எல்லாரும் ஒரேமாதிரியில்லை…உங்கடை ஆக்களோடை கனக்க கதைக்காதையுங்கோ….கடதாசியில் கண்களைப் பதித்துக் கொண்டு பல ஆலோசனைகள் சொன்னான். அவளது வாக்குமூலத்தை அவன் பதிவு செய்தான். உங்களோடை அதிகம் நான் மினக்கெட்டா உங்கடை ஆக்களே என்னைமாட்டீடுவினம்….. சொல்லீட்டுப் போறன்….. உதவிகள் கிடைக்கும் யோசிக்காதையுங்கோ…. கன நேரமா கவனிக்கிறன் இன்னும் நீங்க சாப்பிடேல்ல…..என்றான்.

இயற்கைக்கடன் கழிக்க முடியாத இக்கட்டில் அவள் தவித்ததை எண்ணி அங்கே வழங்கப்பட்ட எதையும் வாங்கிச் சாப்பிடவில்லையென்பதை அழுது கொண்டு சொன்னாள். உங்களுக்கான உதவி செய்ய ஆக்களை அனுப்புவன் நீங்க சாப்பிடுங்கோ…என்றவன் அவளுக்காக உணவைத் தருவித்தான். அவளோடு அதிகம் மினக்கெடுவது அவனுக்கும் ஆபத்தாகலாம் எனச் சொன்னவன் எழுந்தான். எல்லாரும் என்னைமாதிரியில்லை….கவனமா நடவுங்கோ….உங்கடை தனிப்பட்ட பாதுகாப்பில கவனமாயிருங்கோ….சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

குப்பைக்குள்ளும் இப்படியான புனிதங்கள் இருக்குமெனக் கேள்விப்பட்டிருக்கிறாள். அவள் மீது அன்பு செலுத்தி அவளது ஊனத்தைப் பார்த்து இரங்கவும் ஒருத்தன் அவள் எதிர்த்த இனத்திற்குள் இருக்கிறான் என்பது கொஞ்சம் ஆறுதலாயிருந்தது. எங்கே நின்றாலும் அவளை அவன் கவனித்துக் கொண்டேயிருந்தான்.

சில நாட்களில் வெவ்வேறு பிரிவுகளாய் அனுப்பப்பட்ட முகாமொன்றிற்கு அவளும் அனுப்பப்பட்டாள். அவனே அந்த இடத்திற்கு அவளை அனுப்பினான். அவள் போன்று ஊனமடைந்த இன்னும் சிலரை இவளோடு சேர்த்து ஒன்றாயனுப்பினான். அவர்களுக்கும் உதவியிருப்பானோ என்னவோ……

வீரங்களுடன் இறுதிவரை நிமிர்ந்து நின்ற இமயங்கள் எல்லாம் கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர். அவளும் ஒரு தடுப்பு வேலிக்குள் அடைபட்டாள்.

கனவுகள் சிதைந்து புதிய கனவுகளாக பயம் மனங்களை ஆட்கொண்டது…..கதைகளாய் வாசித்த வதைமுகாம்களின் கனவுகள் இரவுகளை நிரப்பியது. எவரோடும் எதையும் பேச முடியாத நிலமை. எங்கே எந்தத் தலை ஆடுமென்று தெரியாத அந்தரம். 3தசாப்தங்கள் சுமந்து காத்த இலட்சியப்பெரு நெருப்புச் சாம்பலும் மிஞ்சாமல் உயிர் வாழ்ந்தாலே போதுமென்ற நிலமைக்கு இட்டுச் சென்றிருந்த உண்மையைப் பலர் உணர்ந்து கொண்டார்கள். தன்னைத் தான் காத்துக் கொள்ள மற்றவர்களைப் பலிகொடுக்கவும் தயங்காத மனங்கள் நூற்றுக் கணக்கில் தங்களோடிருந்தவர்களையே தண்டித்துக் கொண்டிருந்தார்கள்.

11

பணம் பொருள் உணவு உடை வசதிகள் எல்லாவற்றையும் இறைஞ்சிப் பெறாது கொடையாய் பெற்றவர்களுக்கு எல்லாம் இறைஞ்சிக் கெஞ்சிப் பெற வேண்டிய இக்கட்டு. எல்லாத் தேவைகளுக்கும் நீண்ட வரிசையில் காத்திருந்தாலே பெற முடியுமென்ற நியதி. வரிசைகளில் முண்டியடித்து இடிபட்டு ஒவ்வொன்றையும் பெற்றுக் கொள்ள பலரும் ஓடித்திரிய அன்பினி எல்லாவற்றிற்கும் பின்னுக்கே நின்றாள். யாராவது தட்டி விழுந்து விட்டால் எழுவதற்கு ஒரு உதவியை இறைஞ்ச வேண்டும். இப்போதைய நிலமையில் இத்தகைய கைதூக்கிவிடுகிற சின்ன உதவியைக்கூட மனமுவந்து செய்ய யாரையும் நம்ப முடியாதிருந்தது.

வெளிநாடுகளிலிருந்து உணர்வாளர்களின் குரல்கள் மூலமான அறிக்கைகள் வெளிவந்து கொண்டிருப்பதாக முகாம்களுக்குள் செய்திகள் அடிபடத் தொடங்கியது. ஐரோப்பா , அமெரிக்கா , கனடா என ஆர்ப்பாட்டங்கள் நடப்பதாகச் சொன்னார்கள்.

பொங்குதமிழ் மேடையில் முழங்கி ஆடிப்பாடி உணர்வு பொங்கப் பேசிய பேச்சுக்களையெல்லாம் நினைத்துப் பார்த்தாள். அந்த மேடைகளில் இவளோடு கூட நின்று பொங்கியவர்கள் சிலர் வெளிநாடுகளில் இருந்து பொங்குவதாக செய்தியில் கேட்டாள். மக்களின் வாக்குக்களைப் பெற்று மக்களுக்காக என பாராளுமன்றம் போனவர்களை இயக்கம் வழங்கிய சலுகையில் அவர்கள் வெளிநாடுகளில் பொங்கிக்கொண்டிருப்பதைக் கேட்க ஆற்ற முடியாத கோபம் அவளுக்குள். பெண்கள் பிரதிநிதியாய் பாராளுமன்று சென்ற பெண்கூட பிரித்தானியாவிலிருந்து தங்களுக்காக குரல் கொடுப்பதாகக் கேட்ட சில செய்திகளைப் பார்க்க வெறுப்புத்தான் வந்தது. பராளுமன்றப்பெண் பிரதிநிதியுடனும் அன்பினி பொங்குதமிழ் மேடையில் பங்குபற்றியிருக்கிறாள். அவர்களது உணர்ச்சி மிக்க பேச்சுக்களால் கவரப்பட்டுப் பலர் தங்களையும் விடுதலைக்காக இணைத்தார்கள்.ஆனால் இன்று மேடைகளில் முழங்கிய அவர்கள் வெளிநாடுகளிலிருந்து….?

வெளியில் இருந்து அவள் பார்த்த விடுதலைப் போராட்டத்தின் அழகு வீரியம் உள்ளே போய் அதற்குள்ளால் உடைந்து நொருங்கி ஊனமான போதுதான் வெளியில் தெரியும் கவர்ச்சிக்குள்ளும் சீழும் இருக்கென்பதை உணர்ந்தாள்.

வழிவழி எத்தனையாயிரம் உயிர்கள் விழ விழ கடைசி வரையும் நினைக்காத துயரமெல்லாம் நிகழ்ந்து முடிந்து குண்டுகளால் செத்த நிலமை மாறி இன்னொரு இடத்தில் புதிய போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

12

ஒருவருடப் புனர்வாழ்வு முடித்து அன்பினியென்ற அடையாளம் மறந்து மீண்டும் நந்தனியாய் வந்த போது தான் உலகத்தின் ஆள நீள அகலங்களையெல்லாம் உணர்ந்து கொண்டாள்.

உறவென்று இருந்த பெற்றோரும் தங்கள் பிள்ளையில்லையென குடும்பப் பதிவிலிருந்து நீக்கி அவளை ஒரேயடியாய் ஒதுக்கிவிட்டார்கள். எல்லாப் பிள்ளைகளையும் பார்க்க உறவுகள் வந்து போனார்கள். ஆனால் ஊனமடைந்து எத்தனையோ துயரங்களைச் சுமந்து வந்தவளை பெற்றவர் ஒருமுறைதானும் எட்டியும் பார்க்கவில்லை. என்னைப் பெற்றார்களா இல்லை எங்காவது வாங்கினார்களா ? பல தடவைகள் யோசித்திருக்கிறாள்.

ஆயினும் கடைசி முயற்சியாய் வீட்டிற்குப் போனாள். அவளிலும் சில வயதுகளால் இளைய தம்பி அவளைத் தள்ளி விழுத்தினான். அவளைப் பெற்றவர்கள் அவளை ஒரு மோசமான பெண்ணாய் சித்தரித்துத் திட்டினார்கள். வீட்டுப் படலைக்கு வெளியில் தள்ளிவிட்டார்கள்.

போக வழியில்லை. இருந்த நம்பிக்கை பெற்றோர் அவர்களும் அவளுக்கு அந்திரட்டி செய்து விலக்கிவிட்டார்கள். தெரிந்தவர்கள் வீடுகளுக்குச் சென்றாள். யாரும் அவளை முழு மனதோடு ஏற்கவில்லை. அவளது கண்ணீருக்கு இரங்கிச் சில நாட்கள் தங்க அனுமதித்தார்கள். ஒரு முன்னாள் பெண்போராளியென்ற முத்திரையிட்டு அவளை அந்த மனிதர்கள் ஒதுக்கியே வைத்தார்கள்.

உள்ளேயிருந்து வெளியில் வரும்போது மாற்றிப்போடக்கூட சில ஆடைகள் மட்டுமே இருந்தது. பாய்ந்தோடக் கால்களில்லை வாழ்வாதாரத்தை மேம்படுத்த வசதியில்லை. யாரிடம் போக யாரிடம் உதவிகேட்க எதுவும் புரியவில்லை.

அந்த நகரத்திலிருந்து சில மைல்கள் தொலைவிற்கு அப்பால் அனுபவித்த சுதந்திரமும் நிம்மதியும் இந்த நகரத்தில் இல்லாது போனது. நாளுக்கு ஒரு வீட்டில் அவளது வாழ்வு அங்குமிங்கும் அலைச்சலாய் ஆரம்பித்தது. வீதியில் இறங்கினால் விடுதிக்கு வருகிறாயா என்ற கேள்வியும் தொலைபேசியிலக்கத்தை தருகிறாயா என்ற தொல்லைகளும் என்னைக்காதலித்தால் எல்லாவற்றையும் தந்துவிடுகிறேன் என்ற அருவருப்புகளும் அவளைத் துரத்தத் தொடங்கியது. தற்காத்துக் கொள்ள எதுவித நம்பிக்கைளும் இல்லாத நட்டாற்று நிலமையில் அவள். ஒரு அனாதைபோல்…ஆட்களற்றவளாய் போனாள் அன்பினி.

தடுப்பிலிருந்து வெளிவந்து ஒருவரிடம் ஒரு தொலைபேசியைப் பெற்றுக் கொண்டாள். அந்தத் தொலைபேசியே அவளுக்கு ஆறுதல் போலும். ஒருநாள் அவளைத்தேடி ஒரு அழைப்பு வந்தது.

தடுப்பில் இருந்து வந்துள்ளவர்களுக்கு வெளிநாட்டுத் தமிழர்கள் உதவுகிறார்களாம். அத்தகைய ஒரு உதவி அமைப்பின் முகவர் தானென்று தன்னை அந்த அழைப்பில் வந்தவன் அறிமுகம் செய்து கொண்டான். அவனது பெயர் தயாளன் என்று தன்னை அறிமுகம் செய்தான். நெடுநேரம் அவளோடு பேசினான். அவளது விபரங்களைக் கொடுத்தால் பணம் பெற்றுத் தருவதாகவும் அவள் விரும்பினால் அவனுக்கு உதவுகின்ற வெளிநாட்டுத் தமிழர்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் சொன்னான். அவளை நேரில் சந்தித்து விபரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டி யாழ்ப்பாணம் நகருக்கு ஒருநாள் வரச்சொன்னான். தன்னைக் கடவுள் கைவிடவில்லையென்று நம்பினாள்.

நின்ற இடத்தில் கடன்வாங்கி தயாளனைச் சந்திக்கப் போனாள். அவனை ஏற்கனவே பார்த்திருக்கிறாள். நிர்வாகப்பிரிவில் ஒரு பணியாளனாய் அவள் அரசியல் பணிகளுக்காய் சென்ற இடங்களில் அவனைச் சந்தித்திருக்கிறாள். ஏற்கனவே அவனுடன் பணிகளின் தேவைகளை ஒட்டிப் பேசியிருக்கிறாள் அன்பினி. அதற்கு அப்பால் அவனுடன் அவள் பேசியதில்லை. ஆனால் அன்பினியை ஏமாற்றிய காதலன் பற்றி ஒருதலைக்காதலன் ஒருநாள் அவளுக்கு மாற்றிய மணிக்கூடு பற்றியெல்லாம் அவன் சொன்னான். அவனது கதைகள் அவளுக்கு முன்னால் நம்பிக்கையைத் தொன்கணக்கில் கொட்டியது. அவனை மலையாய் நம்பினாள். ஆதரவற்றுப்போன தனக்கு அவன் வெளிநாட்டிலிருந்து உதவியைப் பெற்றுத்தருவான் என்று நம்பினாள். தயாளன் அவளைப்படம் பிடித்தான். அவள் கையால் புலம்பெயர் தமிழர்களுக்கு கடிதம் எழுதுவித்தான். எல்லாத்தரவுகளையும் வாங்கிக்கொண்டு அவளை பஸ்சேற்றி விட்டான்.

2010 ஏப்றல். அவளது வங்கிக்கு 15ஆயிரம் ரூபாய்கள் வெளிநாட்டிலிருந்து வந்தது. தேய்ந்து மங்கி அடையாளம் இல்லாது போன நம்பிக்கைக் கதிர்கள் முகிழ்த்து எழுந்த சூரியப் பிரகாசத்தை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தியது.

உதவியை ஒழுங்கு செய்த தயாளன் தொடர்பு கொண்டான். அவளுக்கு மாதாந்தம் வெளிநாட்டிலிருந்து உதவிகள் வருமென்று கூறினான். அவளுடன் நெடுநேரம் பேசினான். தனது நன்றிகளை அவனுக்குப் பலதரம் தெரிவித்தாள் அன்பினி. உதவிய முகம் தெரியாத உறவுகளுக்குத் தனது நன்றியைத் தெரிவிக்கச் சொன்னாள்.

தெருவில் விடப்பட்ட தங்கள் வாழ்வு எதிர்காலம் எப்படியாகப்போகிறதென்ற அக்கறையோடு நிறைய அவள்பற்றித் தயாளன் அக்கறையோடு பேசினான். காலிழந்தவளைத் துரத்திய அவளது தம்பியின் இரக்கமற்ற குணத்தை தயாளனோடு ஒப்பீடு செய்து பார்த்தாள். தன்னைக்காக்க வந்த கடவுள் அவனென்று நம்பினாள். அவளிலும் மூத்த அவனை அண்ணனென்றாள். அவன் அன்பினியின் மதிப்புக்குரிய அண்ணனானான். கடவுள் நேரில் வரமாட்டார் இப்படியான மனிதர்கள் வடிவில்தான் வருவார் என்ற நம்பிக்கை அவளுக்குள் பூத்தது.

அன்றைய நாள் மதியம் ஒரு தொலைபேசியழைப்பு அன்பினியைத் தேடிவந்தது. அரசியல் பிரிவில் பணியாற்றிய வேறொரு முன்னாள் போராளி அவன். பெயர் சூரி. இருகண்களையும் தனது ஒற்றைக்கையினையும் நாட்டுக்காக இழந்தவன். அன்பினிக்கு உதவும் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதான முகவர் தானென்றான். அன்பினிக்குத் தெரிந்த முன்னாள் போராளிகளின் விபரங்களைத் தன்னிடம் தரும்படியும் புலம்பெயர் தமிழர்கள் உதவுவதற்காகக் காத்திருப்பதாகவும் சொன்னான். தன்னைப்போல் தடுப்பிலிருந்து வெளியில் வந்து அவலப்படும் பலரது தொலைபேசியிலக்கங்களைக் கொடுத்தாள்.

எல்லா விபரங்களையும் பெற்றுக் கொண்ட சூரி ஒரு வங்கியிலக்கத்தை எழுதச் சொன்னான். ஏனண்ணா எனக்கு வங்கியிலக்கம் ? இதாரின்ரை ? முதல் எழுதும் சொல்றன்…என்றான். அந்த வங்கியிலக்கத்தை எழுதினாள்.

என்னெண்டாத் தங்கைச்சி உங்களுக்கு வந்த 15ஆயிரம் இருக்கெல்லோ அதில ஏழாயிரத்து ஐநூறுதான் உங்களுக்கு மிச்சம் ஏழாயிரத்து ஐநூறு எனக்கானது. லண்டனிலயிருந்து தான் அந்த உதவி வந்தது. அனுப்பினவையள் சொன்னவை உங்களிட்டை அதை வாங்கச் சொல்லி…..எனக்கும் நிலமை சரியான கஸ்ரம்….ஒருக்கா நாளைக்கு அதைப்போட்டு விடுறியளோ ? ஓமண்ணா….நாளைக்கு நான் போட்டுவிடுறேன்……எனக்கென்னமாதிரியண்ணை தொடர்ந்து உதவி வரும்தானே ? கேட்டாள். ஓமோம் அதிலை ஒரு சிக்கலுமில்லை அது வரும். சொல்லிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றான் சூரி. சொன்னபடி மறுநாள் சூரிக்கான பணத்தைப் போட்டாள் அன்பினி.

பின்னர் சிலர் ஊடாகக் கண்களையும் கையினையும் இழந்த அவள் கெளரவமாய் மதித்த சூரி பற்றிய நம்ப முடியாத செய்திகள் கிடைத்தது. வெளிநாட்டிலிருந்து உதவும் உதவி அமைப்பின் முகவராகச் செயற்படும் அவன் ஊடாகப் போகும் விபரங்களுக்கு உரியவர்களுக்குக் கிடைக்கும் உதவிகளிலிருந்து அவனுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமாம். சிலரிடம் இவளிடம் பெற்றது போல பணமாகப் பெறுவதும் சிலரிடம் பணமாகக் கையில் வாங்காது தனது தொலைபேசிக்குப் பணம் போடுவிப்பதாகவும் சொன்னார்கள்.

சூரி பலரிடம் இப்படி ஏமாற்றிப்பணம் பெற்றமையைப் பலர் சொல்லித் தெரிய வந்தது. ஆனால் அதனை யாரிடம் முறையிடுவது என்பதை அன்பினி அறிந்திருக்கவில்லை. தேசத்தின் விடுதலைக்காகத் தனது கண்ணையும் கையையும் இழந்த சூரி இப்படியொரு ஏமாற்றுப் பேர்வளியாய் இருக்கிறான் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.

அரசியல்பணி செய்த காலங்களில் அன்பினியும் அவள் போன்ற கடைநிலைப் போராளிகளும் கொழுத்தும் வெயிலில் மன்னார் முதல் முல்லைத்தீவு வரை சயிக்கிளில் பணிசெய்ய சூரி தனியான வசதிகளோடு இருந்ததைச் சிலர் சொல்லி முணுமுணுத்த போது மற்றவர்களுக்குச் சொல்லுவாள்,

தனது கண்களையும் கையினையும் நாட்டுக்குத் தந்தவன் அவனுக்குக் கோடிகொடுத்தாலும் அவனது தியாகத்துக்கு ஈடில்லையென்று அவனை இதயத்தில் ஏற்றி வைத்திருந்தவள். இன்று ஒரு ஏமாற்றுப் பேர்வளியாய் மாறியிருக்கிறான். எவ்வளவோ உயிர்களை உடைமைகளை இழந்து இன்று உயிர்மட்டும் மிஞ்சியவர்களாய் எதுவுமற்று நிற்கின்ற நிலமையில் ஏன் இப்படியெல்லாம் சூரி மாறிப்போனானென எண்ணுவாள். எங்கு பார்த்தாலும் ஒன்றை இன்னொன்று பிடித்துத் தின்றுவிடும் நிலமையில் பணத்துக்காக எதுவும் செய்யும் நிலமைக்கு நல்லவர்களென நம்பிய பலர் மாறிப்போனதைத் தினமும் சந்திக்கத் தொடங்கினாள்.

000 000 000

கிடைத்த வெளிநாட்டு உதவியிலிருந்து 3ஆயிரம் ரூபாவை எடுத்துக் கொண்டு வவுனியா நகருக்குப் போனாள் அன்பினி. தனக்காகச் சில பொருட்கள் வாங்கினாள். தனக்கு தற்காலிகமாக இடம் கொடுத்தவர்களுக்குக் கொடுக்கவென அரிசி , மா ,சீனியெல்லாம் வாங்கினாள்.

அந்த நகரத்தின் கடையொன்றில் ஒரு 40வயதுக்காரனைச் சந்தித்தாள். அவளது ஊனத்தைப் பார்த்து இரங்கினான். இலவசமாய் சில பொருட்கைளை அவளுக்கு வழங்கினான். தெளிந்த கண்கள் நெற்றியில் குறியிடப்பட்டிருந்த விபூதிக்கு நடுவில் சந்தணம் வைத்திருந்தான் அவன். அழகனென்று சொல்ல முடியாதுவிடினும் அவனிடம் ஒரு கவர்ச்சி இருந்தது. அழகாகச் சிரித்தான். அவளுக்காக இரக்கப்பட்டான்.

அன்றைய சந்திப்பின் பின்னர் நகருக்குச் செல்லும் போது 40வயதுக்காரனைச் சந்திக்க நேரும். அவனது கடையில் பொருட்களை வாங்குவாள். அவன் மெல்ல மெல்லத் தனது குடும்பம் பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவனது அழகிய சிரிப்புக்குள் தோல்வியும் ஏமாற்றமும் நிறைந்து கிடந்தது. அவன் காதலித்து மணம் முடித்த காதலி சில வருடக்குடும்ப வாழ்வு முறிந்து விவாகரத்துப் பெற்று ஐரோப்பிய நாடொன்றில் குடியேறி இன்னொருவனின் மனைவியாகிவிட்டாளாம்.

பலகோடி சொத்துக்கள் அவனுக்குக் குவிந்து கிடக்க அவனைவிட்டு அவள் போய் 10வருடங்கள் ஆகிவிட்டதாம். அவன் தனது பாவங்களைக் கழுவ இவள் போல ஒரு ஊனமடைந்தவளுக்கு வாழ்வு கொடுக்க விரும்புவதாய்ச் சொன்னான். அந்த வாழ்வு இவளுக்கானதாய் அமைய வேண்டுமாம்.

ஆனால் ஒரு வேண்டுகோள் காதலித்து மணமுறிவு பெற்றவளுக்காக கடைசி வரையும் வாழ்வதாக நம்பும் தனது சமூக அந்தஸ்தைக் கறைப்படுத்தாமல் இவள் காப்பாற்ற வேண்டுமாம். அத்தோடு ஒரு சாதாரண குடும்பப் பெண்ணுக்குரிய குணங்கள் இழந்து போராளியாக வாழ்ந்தவளை ஏற்றுக் கொண்டு வாழ்வதில் தனது சமூகம் தன்னை அவமதிக்குமாம். தனது கவுரவம் போய்விடுமாம். எனக் கன கட்டளைகள் இட்டான்.

நான் வீடுகட்டித் தருவேன். உங்களை கவனிக்க கூலிக்கு ஒரு பெண்ணை நியமிப்பேன். உங்கள் பெயரில் ஒரு மில்லியன் ரூபாய் பணம் எழுதித்தருவேன்….கால் போன நேரம் கன்னச் சதையை அள்ளிப்போனது குண்டு. அந்தச் சதையற்ற கன்னத்தை பிளாஸ்ரிக் சிகிச்சை மூலம் அழகாக்குவேன் ஆனால் இரகசிய மனைவியாய் என்னோடு வாழ வேணும்…..நான் விரும்புகிற நேரங்களில் வருவேன்….போவேன்…..எனது பாவங்களை உங்களுக்கு உதவி செய்து கழுவப்போகிறேன்…..

அந்தக் கணமே அந்த இடத்திலேயே அவளை அழிக்க ஏதாவது கிடைக்காதா என வெம்பியது மனம். ஊனமுற்றிருப்பதை விட இவ்வுலகில் வேறெந்தக் கொடுமையும் இல்லைப் போல. அவளது இயலாமைக்கு உதவியென்ற போர்வையில் அவள் இரகசிய மனைவியாய் வாழ வேண்டுமென்று கேட்க எத்தனை துணிச்சல் வேண்டும் அவனுக்கு…..

இதே நிலமை வன்னிக்குள் அவள் வாழ்ந்த நிர்வாக அமைப்பின் கீழ் இத்தகைய ஒருத்தனுக்கு கிடைக்கும் தண்டனை என்னவாயிருக்கும் ? இப்படி ஒருவனுக்கும் துணிச்சலுடன் கேட்கும் தைரியம் வராது. அங்கத்தைய நிர்வாக நடைமுறை இத்தகைய வெள்ளை வேட்டிகளிடமிருந்து எத்தனையோ பெண்களைக் காப்பாற்றியது. அதையும் மீறி எங்காவது சில மீறல்கள் நிகழ்ந்ததைத் தவிர வேறு எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத கட்டுப்பாட்டுக்குள் பதுங்கியிருந்தே இத்தகைய பசுத்தோல்களும் வந்திருக்கிறார்கள் என்பதை நினைக்க எரிச்சலாயிருந்தது.

அவனைச் சந்திக்கும் தருணங்களைத் தவிர்த்துக் கொண்டாள். மனிதர்களில் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் ? எத்தனை வித்தியாசமான குணங்கள் எத்தனை வகையான சபலம் இவற்றோடெல்லாம் போராடி எப்படி வெல்வதென்பதே இப்போதைய பிரச்சனையாய் அவள் முன்னிருந்தது.

கையில் இருந்த 7500ரூபாயும் முடிந்து போய்விட்டது. தொடர்ந்து உதவி வரும் என்ற வாக்குறுதியும் பொய்த்து 7500ரூபாவோடு ஒருசதமும் வரவில்லை. அவளது படத்துக்கும் கடிதத்துக்கும் கிடைத்த வெகுமதி அவ்வளவுதான். வேலைகள் தேடியலைந்தாள். கடைகளில் தொலைபேசி நிறுவனங்களில் மருத்துவமனைகளில் எங்கும் கேட்டாள். ஒருவரும் அவளது ஊனத்துக்கு ஊதியம் கொடுத்து வேலை வழங்கத் தயாரில்லை. மனமும் உடலும் சோர்ந்து போய்விட்டது. நிம்மதியில்லை நித்திரையில்லை நாளைய வாழ்வு முன்னின்று பயமுறுத்திக் கொண்டேயிருந்தது.

13

அவளது விபரங்களை யாழ்ப்பாணம் அழைத்துப் பெற்றுக் கொண்ட தயாளன் தொடர்பு கொண்டான். வளமைபோல அன்பினியை சுகம் விசாரித்தான். தனது மனைவி நிறைமாதக் கற்பிணியென்பதையும் கூறி சில வாரங்களில் தான் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போவதாகவும் மகிழ்ந்தான். புலம்பெயர் தமிழர்களின் உதவியில் சிலரை வெளிநாடு அனுப்பும் அலுவலாகக் கொழும்பு போவதாகவும் அவர்களை அனுப்பிவிட்டு இந்தியா போய் வரப்போவதாகவும் கூறினான்.

நான் தனியத்தான் போறன் வாவன் சந்தோசமாப் போட்டுவருவம்…..கிடைக்கிற சந்தர்ப்பங்களைச் சரியாப்பயன்படுத்த வேணும்….வாழ்க்கையின் அர்த்தம் என்பது என்ன…..? என்பது பற்றியொரு விரிவுரையே நிகழ்த்தினான் தயாளன். அவளில் அக்கறை காட்டி அவளுக்காக இரங்கிய தயாளனின் வார்த்தைகள் இப்போது அவளைப் பாலியல் ரீதியாக இம்சிக்கத் தொடங்கியது. பயம் அவளை அப்பிக்கொண்டது. ஏதோ சிக்கலுக்குள் தான் மாட்டிப்போய்விட்டதாக எண்ணினாள்.

என்னண்ணா இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள் ? நடுங்கிய குரலில் சொன்னாள். இதென்னடி இதிலையென்ன வெக்கப்படக்கிடக்கு ? உனக்கு விருப்பமோ இல்லையோண்டு சொல்லன் ? அவள் தயாளனின் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாள்.

தினமும் பலதரம் தயாளன் தொடர்பெடுத்தான். தன்னுடன் வராவிட்டால் அவளுக்கான உதவிகள் எதுவும் கிடைக்காதென்று மிரட்டினான். அவளது புகைப்படத்தை இணையங்களில் போடப்போவதாகச் சொன்னான். இணையத்தில் அவளது படத்தையிட்டு இவன் என்ன அநியாயத்தைச் செய்யப்போகிறானோ என்ற பயத்தில் நித்திரையை இழந்து போனாள் அன்பினி. அவள் முன் கெளரவமாய் காட்சி கொடுத்த தயாளன் காமுகனாய் அவளைக் கலைக்கத்தொடங்கினான்.

யாரோவீட்டுக் கோடியில் அவளை அந்தரிக்கவிட்டுவிட்டுப் போன காதலனை நோகவா இல்லை கணவனாய் ஒருநாள் கூட வாழாது மணிக்கூட்டை ஞாபகமாய் தந்துவிட்டு வெடித்த கணவனை நோகவா ? அல்லது அவளுக்கு உயிர் கொடுத்து உதிரம் கொடுத்து இந்த அநியாயம் நிறைந்த அக்கிரமம் புரியும் மனிதர்களுடன் அந்தரிக்க விட்டு அவளை ஆதரிக்காத அம்மா அப்பாவை நோகவா….? யாரை நோக……? பரந்து விரிந்த அவளது வர்ணங்கள் நிறைந்த உலகம் சுருங்கிக் கொண்டது.

தொடர்ந்து எல்லா முயற்சிகளும் ஏமாற்றமாகியது. விரக்தியே மிச்சமாய் அவள் மீது அவளுக்கே வெறுப்பாயிருந்தது. அன்றாட உணவு அவளது அத்தியாவசிய தேவைகள் எல்லாவற்றுக்கும் கையேந்தத் தொடங்கினாள்.

நிறுவனங்கள் பல ஊனமுற்றோர் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்குவதாகச் சொன்னார்கள். நிறுவனங்களைத் தேடிப்போனாள். உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் எதையும் மிச்சம் விடவில்லை. எல்லா இடங்களுக்கும் தனது செயற்கைக்காலின் துணையோடு ஏறாத நிறுவனங்களில்லை. அவளது தகைமைகளை அவர்கள் நேர்முகச் சந்திப்புகளில் கேட்டுப் பதிவு செய்து கொண்டார்கள். அவளுக்கு நிச்சயம் ஒரு வேலை கிடைக்குமென்று பலர் நம்பிக்கை கொடுத்தார்கள்.

அழகான வாகனங்கள் வாசலில் நிற்கும் அழகான ஆடைகள் உடுத்திய மனிதர்கள் அந்த நிறுவனங்களில் பணிசெய்து கொண்டிருந்தார்கள். அவர்களது முகங்களில் நிறைந்து வழியும் கருணையும் சிரிப்பும் தன்னைக் காக்குமென்று நம்பினாள். ஆனால் எல்லாரையும் நம்பி ஏமாந்தாள். எந்த நிறுவனமும் ஒரு சதம்தானும் உதவவுமில்லை தொழிலையும் கொடுக்கவில்லை.

அப்படித்தான் ஒரு நிறுவனத்திடம் உதவி கேட்டுச் சென்ற நேரம் அவளைப்போலொரு முன்னாள் போராளியொருவனைச் சந்தித்தாள். பெயர் பிரபாகரன். பிரபு என்று அழைப்பார்கள். அவனை ஏற்கனவே அறிந்திருக்கிறாள். அவனும் தனது இரண்டு கால்களையும் இழந்திருந்தான். ஜெயசிக்குறுய் சமரில் அவன் காயமடைந்து இவள் போல இருகால்களையும் நாட்டுக்காகக் கொடுத்திருந்தான். இவள் போல் செயற்கைக்கால் பொருத்தி நடக்கப்பழகி நடந்து வந்திருந்தான்.

சினேகபூர்வமான புன்னகையால் அவளை இனங்கண்டு அவளைப்பற்றி அவள் அனுபவிக்கும் வாழ்வு பற்றியெல்லாம் விசாரித்தான். அவளைத் துரத்திய பெற்றோர்கள் மீதுதான் கோபப்பட்டான். தானும் ஒரு ஊனமடைந்தவனாக இருப்பதால் சமூகத்தின் பாராமுகம் பற்றி நிறையவே அனுபவித்திருப்பதாகச் சொன்னான்.

அவனுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள 4ம் ஒழுங்கை, கற்பகபுரம், பம்பைமடு, வவுனியா பகுதியில் அமைந்திருக்கும் Varodlife நிறுவனம் பற்றிச் சொன்னான். அந்த நிறுவனமானது பாதிரியார்களால் நடாத்தப்படுவதாகவும் அங்கே பல ஊனமுற்ற போராளிகள் குடும்பங்களுடனும் வாழ்வதாகவும் அங்கேயே தானும் இருப்பதாகச் சொன்னான். அந்த நிறுவனத்தில் தானும் இணைந்து கொள்ளலாமா என்பதை விசாரித்தாள். அந்நிறுவனத்திற்கு பொறுப்பாக உள்ள பாதிரியாருடன் கதைத்துவிட்டு அறிவிப்பதாக அவளது தொலைபேசியிலக்கத்தைப் பெற்றுக் கொண்டு போனான் பிரபு.

இருண்டு போன தனது வாழ்வுக்கு Varodlife நிறுவனம் ஒளியேற்றுமென நம்பினாள். அவளை அங்கே சேர்த்து விடுவதாகச் சொன்ன காலிரண்டையும் இழந்த பிரபுவின் பதில் வருமெனக் காத்திருந்தாள். ஒருநாள் பிரபு அவளைத் தொடர்பு கொண்டான். சற்றுப் பொறுத்திருக்கும்படியும் Varodlife நிறுவனத்தின் பொறுப்பான பாதிரியார் வெளியூர் சென்றுவிட்டதாகவும் அவர் வந்ததும் கட்டாயம் அவளை அங்கே சேர்த்து விடுவேனென்றும் வாக்குறுதியழித்தான். காத்திருந்தாள் பிரபுவின் பதிலுக்காக….

000 000 000

சில வாரங்களின் பின்னர் பிரபு தொடர்பு கொண்டான். தன்னிடம் ஒரு சிறந்த வழி அவளுக்காக இருப்பதாகச் சொன்னான். அவள் இந்த அவலங்களில் இருந்து மீள வெளிநாடு போகும் நல்ல வாய்ப்பொன்று உள்ளதாகச் சொன்னான். அவள் விரும்பினால் வெளிநாட்டு ஒழுங்கைச் செய்து தருவதாகச் சொன்னான்.

வெளிநாடு போகும் எதுவித எண்ணமும் இல்லாது அன்றாட வாழ்வை ஓட்டுவதற்குப் பிச்சையெடுக்காத குறையாய் இருக்க அதெல்லாம் தனக்கு சரிப்படாது என மறுத்தாள் அன்பினி. தொடர்ந்து அவளோடு கதைத்து வெளிநாட்டுக்கு அவள் செல்வதே சிறப்பென்பதை நிறுவினான் பிரபு.

எவ்வளவு காசு வேணும் ? கேட்டாள் அன்பினி. இரண்டு லட்சம் இருந்தாப் போதும். என்றான். அவன் கூறிய ஐரோப்பா கனடா அவுஸ்ரேலியாவுக்குப் போக பல லட்சங்கள் தேவையென்று பயந்தவளை நம்பிக்கை கொடுத்து வெளிநாட்டுக்குச் செல்லும் முடிவுக்கு அவளைத் தயார்படுத்தினான்.

இந்த வெளிநாட்டு ஆலோசனை நடந்து கொண்டிருந்த நேரம்…, அவள் எதிர்பாராத சில தொலைபேசியழைப்புகள் அவளைத் தேடி வரத்தொடங்கியது. செத்துப்போன நம்பிக்கை துளிர்த்துச் செடியாகி மரமாகியது.

வெளிநாட்டிலிருந்து தாயகம் வந்து பணிசெய்து முள்ளிவாய்க்கால் வரையும் போய் முகாம்களுக்கு வந்தவர்கள் சிலர் முகாம்களிலிருந்து வெளியேறி தாம் வாழ்ந்த நாடுகளுக்குச் சென்றிருந்தனர். அவர்களில் சிலர் இவளைத் தொடர்பு கொண்டனர். இவளுக்காக உதவ விரும்பினார்கள். அவர்கள் அவளுக்காக இரண்டு லட்சரூபாய் பணம் அனுப்பினார்கள்.

அவளுக்குள் வெளிநாட்டு ஆசையை விதைத்த காலிழந்த பிரபு இப்போது நாளுக்கு 3,4 முறை அழைக்கத் தொடங்கினான். அவளது வாழ்வில் நன்மை நிகழவேண்டுமென்ற அக்கறையுடன் கதைத்தான்.

ஒருநாள் இரவு தொடர்பு கொண்டவன்…., நம்பிக்கையான முகவர் ஒருவரை மறுநாள் அழைத்து வருவதாகவும் அவளை வவுனியாவில் உள்ள ஓரிடத்துக்கு வரும்படியும் அழைத்தான்.

மறுநாள் அவன் சொன்ன நேரத்துக்கு அரைமணித்தியாலம் முன்னரே அந்த இடத்திற்குப் போனாள். பிரபு ஒருவரை அழைத்து வந்தான்.

இவர் என்ரை அக்காடை புருசன். என்ரை அத்தான். மட்டக்களப்பில இருக்கிறார். கனபேரை அவுஸ்ரேலியா, கனடா ,ஐரோப்பா எண்டு அனுப்பியிருக்கிறார். என்னையும் அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பக்கேட்டவர் எனக்கு வெளிநாடு போக விருப்பமில்லை. அக்கா அத்தானெண்டு சொந்த பந்தமிருக்க ஏன் வெளிநாடெண்டு மறுத்திட்டன். ஆனா அன்பினி உங்கடை நிலமை வேறை….சொந்த அம்மா அப்பாவே ஒதுக்கித் தனிச்சுப்போனியள். அதுவும் ஒரு பொம்பிளைப்பிள்ளை இஞ்சை தனிய வாழுறதெண்டது எவ்வளவு கஸ்டமெண்டதை நான் இருக்கிற நிறுவனத்தில இருக்கிற சிலரைப்பாத்து அறிஞ்சிருக்கிறேன். எனக்கெண்டா நீங்கள் இந்தியா போறதைவிட மலேசியா போய் அதாலை அவுஸ்ரேலியா அல்லது கனடா போறது நல்லமெண்டு நினைக்கிறன்.

பிரபுவைத் தொடர்ந்து அவனது அத்தான் சொல்லத் தொடங்கினார். நான் மற்ற ஏஜென்சிமார்மாதிரியில்லையம்மா…ஏனெண்டா நானும் ஒரு போராளியா இருந்திருக்கிறேன். நீங்கள் விரும்பினா உங்களை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பிவிடலாம். முதல் சிங்கப்பூர் வீசா எடுத்து அங்கை அனுப்புவன். அங்கையிருந்து கொண்டு மலேசியாவுக்கு ஒருவருச வேலைக்கான அனுமதி வீசா எடுத்துத் தருவன். அங்காலை கொஞ்சநாள்ல அங்காலை இந்தோநேசியா அனுப்பினாப் பிரச்சனை முடியும். அடுத்து நீங்கள் அவுஸ்ரேலியாதான். அங்காலை போட்டீங்களெண்டா ஒருதரும் உங்களுக்கு உதவத்தேவையில்லை. அவுஸ்ரேலிய அரசாங்கமே உங்களை ராணிமாதிரி வைச்சிருக்கும்.

ஒரு ரண்டு லச்சம் தந்தா காணும். இந்தோநேசியா மட்டும்தான் இந்தச் செலவு அங்காலை எங்கடை வெளிநாட்டு இயக்கம் காசுகுடுத்து கப்பலேத்தீடும். உலகத்தில இயக்கத்துக்கு கனக்க கப்பலெல்லாம் ஓடுது. அதிலை ஒண்டில ஏத்தீடுவினம். வடிவா யோசியுங்கோ. ஆலோசனையைச் சொல்றன். முடிவெடுக்கிறது நீங்கள் தான். அடுத்த கிழமை ஒரு குறூப்பை ஏத்தப்போறம். இது விருப்பமெண்டா இவனிட்டைச் சொல்லுங்கோ.

அவளுக்காகவும் தங்களுக்காகவும் வாங்கிக் கொடுத்த குளிர்பானத்துக்குத் தானே பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த முகவர் போனான்.

தங்குமிடத்திற்கு வந்து இரவிரவாய் யோசித்தாள். பெற்றோருமில்லை உறவுகளும் இல்லாமல் இங்கு தவிப்பதைவிட அவன் சொன்னது போல அவுஸ்ரேலிய அரசாங்கம் இவளை வாழவைக்குமென்றால் அங்கே போய்விலாடலாம்…. தன்னைத் தனித்துத் துடிக்கவிட்ட அம்மா அப்பா தம்பி அறிந்து கொள்ள அவள் மகாராணியாய் வாழுவாள் என்றெல்லாம் யோசித்தாள். ஒற்றை மகளான அவளை இப்படி நடுத்தெருவில் நிற்கவிட்டுவிட்டு நிம்மதியாய் வாழும் அம்மாவையும் அப்பாவையும் சாவிலும் தான் சந்திக்காமல் அவுஸ்ரேலியாவில் வாழலாம் என நினைத்தாள்.

அடுத்து வந்த நாளொன்றில் பிரபு தொடர்பு கொண்டான். அவன் தனது அத்தானையும் அழைத்துக் கொண்டு வந்தான். அன்பினிக்கு பாஸ்போட் எடுக்க சிங்கப்பூர் வீசா எடுக்க உடனடியாக் கொழும்பு போக வேண்டுமென்றார்கள். இரண்டு லட்சம் பணம் முதல் தர வேண்டுமென்றொன் அவன். அவன் கேட்ட பணத்தைக் கொடுத்தாள். பிரபு இவளுக்கு அவனது அத்தானை முகவராக அறிமுகப்படுத்தியதற்காக பிரபுவுக்கு இருபதாயிரம் கொடுக்கச் சொன்னான் அவனது அத்தான். அவர்கள் இருவருக்குமான பணத்தைக் கொடுத்தாள்.

அன்று இரவே அவள் பிரபுவினின் அத்தானோடு கொழும்பு புறப்பட்டாள். அவளையும் அத்தானையும் பிரபு இரயில் ஏற்றிவிட்டான்.

வெளிநாடு போனப்பிறகு என்னை மறந்திடாதையும்….நானும் காலில்லாதவன்…..போய் உழைச்சு எனக்கும் உதவவேணும்….என்று சொல்லி அவளுக்குப் பிரியாவிடை கொடுத்து வாழ்த்தி அனுப்பினான். நிச்சயம் தான் அவுஸ்ரேலியா போய் அவனுக்கு உதவ வேண்டுமெனவும் தன்போல அல்லல்படும் ஊனமுற்றவர்களுக்கெல்லாம் முடிந்த உதவியைச் செய்ய வேணுமெனவும் நினைத்துக் கொண்டாள் அன்பினி.

முதலாம் வகுப்பு இருக்கையில் அவளுக்கும் தனக்கும் ரிக்கெட் எடுத்தான். அவள் ரயிலில் ஏற உதவினான். அவள் கொண்டு வந்த பொருட்களைத் தானே கையில் எடுத்துச் சுமந்தான். ஏற்கனவே பலரால் ஏமாற்றப்பட்டு நொந்து போனவளைக் காப்பாற்றியனுப்ப வந்த கடவுள் போல அவன் அவளுக்கான வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தான்.

ரயில் புறப்பட ஆயத்தமானது. கையசைத்து அவளுக்கும் அவனுக்கும் பிரபு விடைகொடுத்தான். பலர் பலரை வழியனுப்பிக் கையசைத்து விடைகொடுக்க இரயில் ஓடிக்கொண்டிருந்தது. வவுனியா ரயில் நிலையம் அவளது பார்வையிலிருந்து விடுபடத்தொடங்கியது. தெரிந்த வெளிச்சம் சிறு புள்ளியாகி மறைந்தது. இருளில் மறைந்திருந்த பூமியின் மடியை மிதித்துக் கொண்டு சுருதிபிசகாத தாளத்தோடு ரயில் போய்க் கொண்டிருந்தது.

இனியொரு போதும் வவுனியா மண்ணை மிதிப்பதில்லை. அவளை அனாதையாக்கிய அம்மா அப்பா தம்பியைக் காண்பதில்லை. தனக்கான ஒரு வாழ்வு வெளிநாடொன்றில் அமையத் தனது பயணத்தை ஆரம்பித்தாள். சிறுவயதில் கொழும்பு போனதற்குப் பின்னால் இன்றுதான் மீண்டும் ரயில் பயணம் செய்கிறாள். அந்தப்பயணம் அவளுக்கு ஒரு புதிய வாழ்வுக்கான நம்பிக்கையைக் கொடுத்தது.

மறுநாள் விடியற்காலை கொழும்பு பிரதான ரயில் நிலையத்தில் போயிறங்கினாள். கொழும்பு நகரின் பிரமாண்டம் கடந்து வந்த துயரங்களையெல்லாம் களைந்து புதியதொரு மக்கள் கூட்டத்தின் முன் அவளை இறக்கியது. வெளியில் வந்து ஓட்டோ பிடித்து லொட்ஜ் ஒன்றிற்குப் போனார்கள். அவளுக்குத் தனியறையும் அவனுக்குத் தனியறையும் ஒழுங்கு செய்தவன் 9மணிக்கு பாஸ்போட் அலுவலகம் போக அவளைத் தயாராயிருக்குமாறு கூறிவிட்டுத் தனது அறைக்குப் போனான்.

பயணக்களைப்பு ஆற நன்றாய் குளித்து மீண்டும் செயற்கைக்காலைப் பொருத்திப் பச்சைநிறப் பஞ்சாபியை அணிந்தாள். தலையை விரித்து உச்சியில் ஒற்றைக் கிளிப்பைக் குற்றினாள். அழகான கிறிஸ்ரால் வைத்த ஸ்ரிக்கர் பொட்டு வைத்துத் தன்னை சிறிய அலங்காரம் செய்தாள். அவளது அழகான முகத்தை இடைஞ்சல் செய்யும் ஒற்றைக்கன்னத்துக் கீறலையும் சதையற்ற காயத்தையும் கண்ணாடியில் பார்த்தாள். அவள் மனதிலும் நிரந்தரமான காயத்தைக் கொடுத்தது அந்த முகக்காயமும் முளங்காலின் கீழ் துண்டிக்கப்பட்ட கால்களுமே. அவளது காதற்கனவை அவளது வாழும் கனவையெல்லாம் பறித்துப்போன 14ஆவணி 2006 நினைவுதான் நினைவுகளைக் கிழறியது.

கதவு தட்டப்பட்டது. அவள் பூசிய பவுடரையும் முகத்தையும் கழுவிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள். அவளை அழைத்து வந்த பயணமுகவர் வாசலில் சிரித்தபடி நின்றான். போகலாமோ….? என்றவன் பின்னால் போனாள்.

000 000 000

14

உள்ளுக்கை ஏதும் விசாரிச்சாங்களெண்டா முகத்துக்குப் பிளாஸ்ரிக் சிகிச்சைக்குப் போறதெண்டு சொல்லுங்கோ…..? கொஞ்சம் அவங்களோடை சிரிச்சுக் கதையுங்கோ…பெரிசா நோண்டாங்கள்……அவள் உள்ளே என்ன சொல்ல வேணும் எப்படிக் கதைக்க வேண்டுமென்றெல்லாம் சொன்னான். அவளுக்கான சிங்கப்பூர் விமானச்சீட்டையும் பாஸ்போட்டையும் விமான நிலைய வாசலில் அவளிடம் கொடுத்தான்.

போய்ச்சேந்தாப்போலை ரெலிபோனெடுங்கோ….மலேசியா வீசா எடுக்கிற அலுவல் செய்ய வேணும் என்ரை நண்பனொருத்தன் ஐரோப்பாவிலயிருந்து வந்து மலேசியாவில நிக்கிறான். அவன் மலேசியாவுக்கான ஒருவருச வீசாவும் எடுத்துத் தந்து இந்தோனேசியா அனுப்பிவிடுவான். அடுத்து நீங்கள் அவுஸ்ரேலியாதான்……சிரித்தபடி சொல்லிக் கடைசிக் கதவுவரை வந்து வழியனுப்பிவிட்டான்.

அவன் சொன்னபடி சொல்லி விமானம் ஏறி சிங்கப்பூர் பயணமானாள். அழகான சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கியது. வகைவகையாய் மனிதர்கள். பலமொழிகளில் உரையாடிக் கொண்டார்கள். அவளுக்கு சிங்கப்பூரில் தங்குதவதற்கு ஒருமாத வீசா அடித்துக் கொடுத்தார்கள். எல்லாமே புதிய அனுபவமாக எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலையானது போல உணர்ந்தாள்.

அவன் சொன்னது போல ரக்சி பிடித்து கொட்டேலொன்றுக்குப் போனாள். தன்னால் பேசத்தெரிந்த ஆங்கில அறிவைக் கொண்டு தனக்கான அறையை தனக்கான உணவையெல்லாம் பெற்றுக் கொண்டாள். அவளை அனுப்பி வைத்த முகவருக்குத் தகவல் அனுப்பினாள். 2நாளில் ஐரோப்பாவிலிருந்து வந்து மலேசியாவில் நிற்கும் அவனது நண்பன் தொடர்பு கொள்வானெனச் சொன்னான். அவள் அழைக்கத் தேவையில்லை அவனே தொடர்பு கொள்வனெனவும் சொன்னான்.

அந்தப்புதிய முகவருக்காக இருவாரங்கள் காத்திருந்தாள். அவன் தொடர்பு கொள்ளவேயில்லை. அவளை அனுப்பிய முகவருக்குத் தகவல் சொன்னாள். ஆனால் அவனோ இன்று நாளையென நாளைக்கடத்திக் கொண்டிருந்தான். கடைசியில் அவனது தொலைபேசியிலக்கமும் தொடர்பறுந்து போனது.

மீண்டும் ஏமாந்து உடைந்து போனாள். கொண்டு வந்த பணமும் கரைந்து சில ஆயிரங்கள் தான் மிச்சம். வேறு எந்த வழியும் தெரியவில்லை. நாடு திரும்பும் முடிவில் பயணத் திகதியைக் குறித்தாள். தொடர் எமாற்றம் வெறுப்பு இயலாமை எல்லாம் மனசைச் சோர்வித்தது. அங்கேயே தன்னை அழித்துவிடுவோமோ என்றுகூட யோசித்தாள். இருந்த கொட்டேலின் மாடியில் நின்று கீழே பார்த்தாள். அங்கிருந்து குதித்தால் நிச்சயம் இறப்புத்தான் என்பது உறுதியானது.

தற்கொலை முடிவைச் சில கணங்களில் ஏனோ மாற்றினாள். ஊருக்குப்போக விமான நிலையம் போனாள். விமானத்தில் ஏறி தனக்கான இருக்கை இலக்கத்தைக் கண்டுபிடித்து இருந்தாள். விமானம் தரையைவிட்டு மெல்ல மெல்ல மேலெழும்பியது. அவளுக்கு வெளிச்சம் நிறைந்த சந்தோசங்கள் நிறைந்த வாழ்வைத் தரும் அவுஸ்ரேலியா போகும் கனவு தூள்தூளாக உடைந்தது. பச்சை நிரம்பிய அழகு அவளைவிட்டுத் தொலைந்து வெண்மை நிறைந்த பஞ்சுக்கூட்ட முகில்களை உதைத்துக் கொண்டு விமானம் இலங்கையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

அழுகையாக வந்தது. ஏன் என்னை எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் ? எனது ஊனத்தை எனது இயலாமையை ஏன் இப்படியெல்லாம் நாசம் செய்கிறார்கள்…? அழுதாள்…..தனது கடந்த காலம் நிகழ்காலம் திரும்பத் திரும்பத் துயரங்களால் நிரம்புவதை நினைத்து நினைத்து அழுதாள்.

15

ரயிலேறி வவுனியா வந்தவள் திரும்பவும் அலையத் தொடங்கினாள். வெளிநாடு போவதாய் போய் கடைசியில் கையில் இருந்த பணம் முழுவதையும் இழந்துவிட்டுத் திரும்பிதோடு எல்லாம் போய்விட்டது. அவளுக்கு வெளிநாட்டு ஆசையை அள்ளியிறைத்து அவளது பணத்தை அழிக்கக் காரணமாயிருந்த Varodlife நிறுவனத்தில் வாழும் பிரபுவைத் தொடர்பு கொண்டாள். தனது நிலமையைச் சொன்னாள். தனது பணத்தைத் திருப்பி வாங்கித் தரும்படி அழுதாள்.

இன்று நாளையென நாளை இழுத்தடித்துக் கடைசியில் தன்னால் பணம் வாங்கிய தனது அத்தானுடன் தொடர்பு கொள்ள முடியவில்லையெனக் கையைவிரித்தான் பிரபு. கடைசியில் ஒரு ஆலோசனை சொன்னான். அவளது நிலமைகளை எழுதி அவளது படத்துடன் தருமாறு கேட்டான். கனடாவிலிருந்து உதவும் புலம்பெயர் தமிழர் நிறுவனம் ஒன்றின் ஊடாக அவளுக்கு உதவி பெற்றுத் தருவதாகச் சொன்னான்.

ஏற்கனவே பலரிடம் உதவிக்கு இறைஞ்சி ஓய்ந்து போய்விட்டாள். உதவியென்று வந்ததில் கூட பங்கு வாங்கினான் சூரியென்ற ஒருவன். தயாளனென்ற மற்றொருவன் என்னுடன் ஒருதரம் இருந்துவிட்டுப் போ உதவிகள் பெற்றுத் தருகிறேன் என்று தொல்லை தருகிறான். இவன் 3வதாக மீண்டும் படம் கடிதம் கேட்கிறான். கேட்க எரிச்சல் தான் வந்தது.

அந்த நிறுவனத்தின் பெயர் என்னவென்று கேட்டாள். அந்த நிறுவனத்தின் பெயரைச் சொன்னான் பிரபு. ஏற்கனவே அவளுக்கு உதவியென்ற பெயரால் ஏமாற்றும் அந்த நிறுவனத்தின் முகவர்கள் 2பேரின் அநியாயத்தை எங்கு சொல்லவென யோசித்திருக்க மூன்றாமவனாகத் தன்னை ஏமாற்றி அவளது பணத்தையும் ஏப்பம் விட்ட இவனும் அந்த நிறுவனத்தின் முகவராம். உதவியும் வேண்டாம் நான் படமும் தரேல்ல கடிதமும் தரேல்ல….என்ர காசை உங்கடை அத்தானிட்டை வாங்கித் தாங்கோ பிரபு…..அது காணும்…..என்று மன்றாடினாள்.

தன்போல் ஊனமடைந்த ஒருவனான பிரபு தன்னை ஏமாற்றி தனது பணத்தைக் கொண்டு போவான் என்று கனவிலும் எண்ணவில்லை. அவன் ஒரு போராளியாக இருந்தவன். இவள் போல எல்லாத் துன்பங்களையும் அனுபவித்தவன். உதவுவான் என நினைத்து 2லட்சத்தை இழந்து போனதுதான் பெருந்துயராயிருந்தது. பணத்துக்காக இலட்சியம் கொள்கைகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு யாரை ஏமாற்றி யாரிடம் பணம் பிடுங்குவதென்ற நினைப்போடே உலவும் பலரை நேரில் கண்டு ஏமாந்து போனாள் அன்பினி.

சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்து அன்றாடச் சோற்றுக்கே அல்லாடிக் கொண்டிருந்த நாட்கள் அது. அவள் மீது கருணைகாட்டியவர்களின் புண்ணியத்தில் கிடைத்த ஒருநேரச்சோறும் பாணும் தேனீருமே அவளுக்கு இப்போதைய ஆறுதல்.

அத்தகைய ஒருநாள் அவளுக்கு வெளிநாட்டுத் தமிழர்களிடமிருந்து உதவி பெற்றுத் தருவதாகக் கூறி விபரம் பெற்றுக் கடைசியில் தன்னுடன் ஒருநாள் வாழ்ந்துவிடுமாறு தொல்லை கொடுக்கும் தயாளன் தொடர்பு கொண்டான். பழைய பல்லவி. அவளை இந்தியா அனுப்பிவிடுகிறானாம். அடுத்த வாரம் வவுனியா வருகிறானாம் அவசியம் சந்திக்கும்படி சொன்னான்.

தொலையாத தொல்லையாய் தயாளன் அவளை மீண்டும் துரத்தத் தொடங்கியதன் சாட்சியாய் அமைந்தது அந்த அழைப்பு. சனியனாய் அவன் அவளை மீண்டும் தொடரத் தொடங்கினான். காவல்துறையில் அறிவித்துவிடுவோமோ என யோசித்தாள். அவனது மனைவி குழந்தைகள் ஞாபகம்வர அந்த முடிவையும் கைவிட்டாள்.

000 000 000

16

அந்த இரவு உறங்கிப்போய்க் கிடந்த நகரத்தின் அமைதியை அவளது விழிப்புக் குழப்பியது. பாவத்தின் மிச்சமாய் தன்னைத் தினமும் அலைக்களிக்கும் ஆண்களின் முகங்கள் அண்ணனாய் வந்து அவளைத் துன்பமாய் துரத்தும் துன்பம் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுவதற்குத் தற்கொலை பற்றிச் சிந்தித்தாள். அந்தநாள் அவள் நெடுநேரம் விழித்திருந்தாள். ஞாபகங்கள் பலவற்றை மீட்டிப்பார்த்தாள். தொடர்ந்து வாழ்வதற்குத் துணிச்சலற்று இந்த வாழ்வு இந்த உலகத்து மனிதர்கள் எல்லோருமே அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். தற்கொலை செய்து கொள்வதில் கூட சிரத்தையெடுக்காமல் விட்டால் இன்னும் துன்பத்தில் தள்ளப்படுவேன் என்று அஞ்சினாள்.

அடுத்தநாள் காலை வெள்ளணவே எழுந்தாள். இரவு நித்திரையில்லாமை கண்கள் எரிச்சலாயிருந்தது. இறைச்சியோடு சோறு சாப்பிட ஆசையாயிருந்தது. தானே வெளியில் போய் கழுத்தில் மிஞ்சியிருந்த சங்கிலியை விற்றாள். நகைக்கடைக்கு வெளியில் வந்தாள். யாரோ அவளைப் பெயர் சொல்லி அழைக்கும் குரல் வந்த திசையைப் பார்த்தாள். அவளது ஒன்றுவிட்ட அக்காவும் 3பிள்ளைகளும் நின்றார்கள்.

அக்காவும் ஒரு போராளியைக் காதலித்து கலியாணம் செய்து 3பிள்ளைகளுக்கும் அம்மாவானாள்….அக்காவும் பிள்ளைகளும் தனித்துப் போக அத்தான் வலைஞர் மடத்தில் வீரச்சாவடைந்துவிட்டான். 28வயதில் அக்கா விதவையாய் தனது குழந்தைகளுடன் வறுமையோடும் வாழ்வோடும் போராடுகிறாள்.

என்னடி வெளிநாடு போட்டியாமெண்டு அறிஞ்சன் இங்கை நிக்கிறாய்…..? அக்காவையும் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு சாப்பாட்டுக் கடையொன்றுக்குள் போனாள். அக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாடும் குளிர்பானமும் வாங்கிக் கொடுத்தாள்.

எங்காலை காசு ? கேட்ட அக்காவுக்கு நகைக்கடையில் விற்ற சங்கிலி பற்றிச் சொன்னாள். அக்கா கண் கலங்கினாள். பெத்தவையிருந்தும் நீ அனாதையடி…..என்னாலையும் உனக்கு உதவேலாதடி….என்ரை நிலமை தெரியும் தானே…..அக்கா அழுதாள். அன்பினிக்கு உதவ முடியாத தனது இயலாமையை நொந்தாள்.

பெரியம்மான்ரை 2வது பல்கலைக்கழகம் முடிச்சு படித்து யாழ்ப்பாணத்தில வேலைசெய்யிறாள் தெரியுமே…..கனடா மாப்பிளை சரிவந்திருக்கு….50லட்சரூபா சீதணம் கேட்டவையாம்…..இப்ப 10லட்சம் தான் தருவமெண்டு பேசி முடிச்சிருக்கினம்….. லண்டன் சின்னம்மான்ரை மூத்தண்ணைதான் 10லட்சம் குடுக்கிறாராம்…. அவள் கனடா போப்போறாளாம்…..உனக்குத்தான் ஒருத்தனும் உதவுறாங்களில்லை…..

பெரியம்மாவின் 2வது மகளும் இவளும் ஒரே வயது. இவள் படிப்பையும் பாதியில் முறித்து இயக்கத்துக்கும் போய் உயிரையும் ஊனமான உடம்பையும் கொண்டு மீண்டிருக்கிறாள். அவளோ படித்துப் பட்டம் பெற்று தொழிலும் செய்கிறாள். இப்போ கனடா மாப்பிளையும் சரிவந்து அவள் திருமணம் முடிக்கப் போகிறாள். அதைக் கேட்க அழுகைதான் வந்தது. லண்டன் , கனடாவில் இருக்கின்றவர்கள் இவளுக்கும் இரத்த உருத்து உள்ளவர்கள் தான். ஆனால் எவருக்கும் இவளது நிலமை தெரியாதுள்ளதா…? அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்களா…? என்பது தெரியவில்லை அவளுக்கு…..

அம்மாட்டையும் அப்பாட்டையும் சொல்லுங்கோ அக்கா…. நான் தெருத்தெருவா அலையிறேனாமெண்டு…..ஒவ்வொரு நேரம் சாப்பாட்டுக்கும் நான் படுற கஸ்ரத்தை ஒருத்தராலையும் புரிஞ்சு கொள்ளேலாதக்கா…..என்னைப் பெத்தினமா இல்லாட்டி எங்கையும் எடுத்தினமா ? ஏனக்கா எனக்கிந்த நிலமை….? அக்காவின் கைகைளைப்பிடித்து அழுதாள் அன்பினி. கொஞ்ச நாளைக்கு உங்கினை சமாளியடி எனக்கு வீட்டுத்திட்டம் சரிவந்திட்டா நான் உன்னை வைச்சுப்பாப்பன்……அக்காவும் அழுதாள்.

000 000 000

தன்னையும் தனது பிள்ளைகளையும் பசியிலிருந்து காக்கவே போராடும் அவளால் என்னத்தைத்தான் இவளுக்காகச் செய்ய முடியும்…..? ஆனால் அனது வறுமையிலும் அன்பினிக்காகத் துடிக்கும் இதயம் அவள்தாள். அந்த ஆறுதல்தான் அன்பினிக்கு அக்காவுடனான உறவை வளர்த்தது. மனமுள்ள அக்காவிடம் வசதியில்லை. இதுதான் இயற்கையின் நியதியோ….?

அக்கா அழுது கொண்டு அவளிமிருந்து விடைபெற்றுப் போனாள். அழுதது போதுமென்று நினைத்தவள் கண்களைத் துடைத்தாள். ஆசைப்பட்டபடி நல்ல சோறும் இறைச்சிக் கறியும் வாங்கிக் கொண்டு அவளுக்கு தற்காலிமாக தங்க இடம் கொடுத்த வீட்டிற்குப் போனாள். கொண்டு வந்த சோற்றுப் பார்சலை கழற்றிச் சாப்பிட்டாள்.

காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கி வாசிக்கும் வசதியற்றவள் உணவுப்பொட்டலங்கள் சுற்றிவரும் பத்திரிகைத்தாள்களைப் படிப்பாள். எங்காவது எறியப்பட்ட கவிதைகளின் தாள்களைக் கண்டால் எடுத்து வாசிக்கும் பழக்கம் உள்ளவள்….அன்றைய உணவுப் பொட்டலத்தைச் சுற்றி வந்த கடதாசியில் கிடந்த அறிவிப்பொன்றைக் கவனித்தாள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளித்து மறுவாழ்வு கொடுக்கும் தமிழ் நிறுவனம் ஒன்றின் உதவி வழங்கும் நிகழ்வுச் செய்தியது.

ஒவ்வொரு முறையும் அவளது சாவின் முடிவைக் கேள்விக்குறியாக்கும் தடங்கல் இம்முறையும் ஒரு செய்தியால் தடுத்தது. ஒருமுறை வாழ்வோமா என தற்கொலை முடிவை மாற்றினாள். மறுநாள் விடிந்ததும் அந்த நிறுவனத்தைத் தேடிப்போனாள். தனது நிலமைகளை விளக்கினாள். அவளுக்கான புதுவாழ்வு அந்த நிறுவனத்தால் கிடைத்தது. அந்நிறுவனம் ஊடாய் வெளிநாட்டிலிருந்து அவளுக்கொரு தோழி கிடைத்தாள். தனது துயரங்களையெல்லாம் அந்தத் தோழியிடம் கொட்டினாள். தனது கதைகளைக் கேட்க தனது கனவுகளுக்கு வடிவம் தரும் தோழியின் தோழில் எல்லாச் சுமைகளையும் இறக்கினாள்.

துயரம் தீரும்வரை தனது கதைகளையெல்லாம் அவளுக்குச் சொன்னாள். நீண்ட நெடுநேரம் அவளோடு உரையாடினாள். நெஞ்சுக்குள் கிடந்து அழுத்திக் கொண்டிருந்த சோகம் முழுவதையும் அவளுக்குச் சொல்லித் தீர்த்தாள். உனக்காக நாங்கள் இருக்கிறோமென நேசக்கரம் கொடுத்துத் தங்களோடு இவளைத் தங்களில் தாங்கிக் கொண்டாள் அந்தத்தோழி. அவளது துயரங்கள் வடியும் வரை அழவைத்தாள். அவளை ஆறுதற்படுத்தினாள். 25வயதோடு உனக்கான வாழ்வு முடிந்துவிடவில்லை நீ இனித்தான் வாழ வேண்டுமென்று நம்பிக்கை கொடுத்தாள்.

எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடும் முனைப்போடு இப்போது சற்றுத் தெளிந்துவிட்டாள். அவளைச் சனியனாய் தொல்லை கொடுத்த தயாளன் மேலும் அன்பினி போன்ற பலரைத் துன்புறுத்துவதாயும் தன்னுடன் வருமாறும் அழைப்பதைப் பலபெண்கள் அவளிடம் சொன்னார்கள் இவள் அழுதது போல் அவர்களும் அழுதார்கள். தங்களது ஆதரவற்றுப் போன நிலமைகளை அன்பினியிடம் பகிர்ந்தார்கள்.

ஆனால் அவளது நிம்மதியைக் குலைத்த காமுகன் தயாளன் இன்னும் புலம்பெயர் நிறுவனத்தின் முகவராய் இயங்கிக் கொண்டிருக்கிறான். இன்னும் பல பெண்களை நாசம் செய்கிறான்….தனது தேவைகளுக்காகப் பயன்படுத்த முனைகிறான்…..உதவிகள் செய்ய உருவான அந்த நிறுவனத்தினர் ஏன் அவனை இனங்காணாது போனார்கள் ? தோழியிடம் ஒருமுறை கேட்டாள்.

உண்மைகளை நாங்கள் சொல்லப்போனால் நாங்கள் துரோகிகள் ஆவோம். எப்படி ஏன் ? கேள்விகள் கேட்டால் நீதிமன்று ஏறாமலேயே கற்றுப் பெறாத பட்டங்களையெல்லாம் தருவார்கள். துரோகிப்பட்டம் வேணுமா ? அல்லது எங்களால் முடிந்த உதவிகளால் உன்போன்றவர்களைக் காப்பதா நல்லது சொல் ? என்றாள் தோழி. அவளிடம் அதற்கான பதில் இருக்கவில்லை.

நம்பிக்கையை ஒளியாய் கொடுத்து உதவும் வெளிநாட்டுத்து தமிழ் அமைப்பின் முகவராய் ஏமாற்றும் தயாளன் , சூரி , பிரபு ஆகிய 3நபர்களை அவள் தன் தோழிக்கு இனங்காட்டினாள். அவர்களை வெளிநாட்டுத் தமிழர்களுக்கு இனங்காட்டு என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறாள். காமுகர்களையும் ஏமாற்றுப் பேர்வழிகளையும் முகவர்களாக்கித் தன்போன்ற பல ஊனமுற்றவர்களையும் உதவிகள் அற்றவர்களையும் நாசம் செய்யும் அந்த முகவர்களின் முகங்களை வெளியில் ஒருநாள் காட்ட வேண்டுமென விரும்புகிறாள்.

உதவியென்ற பெயரில் பல பெண்கள் கண்ணுக்குத் தெரியாமல் விபச்சாரிகள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள். கொழும்பு இந்தியா ஐரோப்பா கனடா அவுஸ்ரேலியா அனுப்புவோம் என்ற அவர்களது ஆசைவார்த்தைகளுக்குப் பல பெண்கள் பலியாகும் கதை சத்தமின்றி யாழ்ப்பாணத்தில் , கிளிநொச்சியில் முல்லைத்தீவில் , வவுனியாவில் , கொழும்பு வரையும் தொடர்கிறது.

அன்பினி கனவுகளை மீண்டும் விதையிட்டு வளர்க்கத் தொடங்குகிறாள். அவளுக்கான ஒரு துணை அவளைத் தாங்கவும் இதயம் சேர்க்கவும் எங்காவது இருக்கும் என்று நம்புகிறாள். அவளுக்கென்றொரு ஒரு அழகான குழந்தை அவள் வாழாது போன வாழ்வை வாழ அவள் வயிற்றில் கருவாகி இவ்வுலகில் வருமென்று நம்புகிறாள். தனது கனவுகளை வர்ணங்களால் நிரப்பி வளர்த்துக் கொள்கிறாள். அந்த வர்ணம் நிறைந்த கனவுலகை மிதித்துக் கொண்டு அவளது முகமும் முளங்காலோடு துண்டிக்கப்பட்ட காலும் முன்னுக்கு வந்துவிடுகிறது. ஆயினும் கனவுகளை வளர்க்கிறாள். கனவுகளாவது தன்னை வாழ்விக்குமென்ற நம்பிக்கையில்…….

(முடியாத கதை)

Link to comment
Share on other sites

 • Replies 142
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரது குடும்பத்திலும் இப்படி பல ஆயிரம் உண்மைக் கதைகள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றுக்கான தீர்வு என்பது ஓரிரு குடும்பங்களுக்கு உதவி செய்வதன் மூலம் தீர்ந்துவிடப் போவதில்லை. ஒட்டு மொத்த மக்களுக்கும் நலன் கிடைக்கக் கூடிய சர்வதேச உதவியோடு அமைந்த பலாபலன்கள்.. மக்களை அடைய வேண்டும். மக்கள் மீண்டும் துன்ப துயங்களில் இருந்து மீண்டு தாம் விரும்பும் வடிவில் வாழ இந்த உலகை நிற்பந்திக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும்..!

Link to comment
Share on other sites

கால்கள் இல்லாத இந்தப் பெண்ணின் துயரக் கதையை கண்கள் இல்லாதவர்கள் வாசித்து புரிந்துகொள்ளப் போகின்றார்களா?

ஓர் அப்பாவிச் சிறுமி மூளைச்சலவை செய்யப்பட்டு சிறுவர் போராளியாக த.வி.புவில் இணைவது தொடக்கம் அவளுக்கு புனிதமான விடுதலைப் போராட்டத்தில் புனிதமான போராளிகளினால், மாவீரர்களினால் கொடுக்கப்பட்ட பல்வேறு உபசரிப்புக்கள், விருந்தோம்பல்கள், கவனிப்புக்கள் என வாழ்வியல் போராட்டம் தத்ரூபமாக விபரிக்கப்பட்டு உள்ளது.

அடிப்படை சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படாதவரை அழிவுகளை சீர்செய்யவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியாது.

இன்று நேசக்கரத்திற்கு $250 பேபல் ஊடாக அனுப்பி வைக்கின்றேன். குறிப்பிட்ட பெண்ணின் மீது அனுதாபப்பட்டு இதை அனுப்பவில்லை. ஓர் கலைஞன் எனும் வகையில் இந்த சிறிய உதவி. இதை அவரிடம் சேர்ப்பித்து விடுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதலில் பெண்களை பாலியல் வன்புனர்வுக்கு கட்டாயப்படுத்துவோரின் ஆண் உறுப்புகளை வெட்டி எறிய வேண்டும்...மிகவும் கவலை தரக் கூடிய விடயம் என்ன என்டால் புலிகள் இருக்கும் போது புலிகளது நிர்வாக கட்டமைப்பின் கீழ் ஒழுக்கமாக இருந்த உறுப்பினர்களே இந்த கேவலம் கெட்ட செயலை தற்போது செய்வதாகும்.

இந்த சமுதாயம் எதற்காக எமக்காக என்று போராடப் போன மக்களை இப்படி ஒதுக்கி வைத்திருக்குதோ தெரியவில்லை?...அதுவும் அப் பெண்ணினது பெற்றோர் தமது ஒரே பெண்ணையே இப்படி ஒதுக்கி வைக்க எப்படித் தான் மனசு வந்ததோ தெரியாது.

புலம் பெயர் நாட்டில் கடைசி யுத்தம் என்று சேர்த்த காசை எல்லாம் இப்படியான பாதிக்கப்பட்ட எமக்காக போராடினவர்களுக்கு கொடுத்து உதவலாமே[கொஞ்சமேனும் மனசாட்சி இருந்தால்]

கலைஞன் இந்த பெண் கட்டாயப்படுத்தப்பட்டு இயக்கத்தில் சேர்ந்த மாதிரி தெரியவில்லை...அவர் புலிகள் அமைப்பை பார்த்து புலிகளுக்கு போனால் தான் தன் வீட்டை விட சுதந்திரமாய் இருக்கலாம் என நினைத்து தான் போய் சேர்ந்து உள்ளார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பதில் எழுத முடியவில்லை.

இது தெரிந்த விடயம். சிலர் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.

புலம்பெயர்ந்தவர்களின் உதவிகள் மூலமே இவர்களின் வாழ்க்கையை மீளமைக்க முடியும். சரணடைந்த சுமார் பத்தாயிரம் போராளிகளின் மீள் வாழ்க்கையே கேள்விக் குறியாய் உள்ள நிலையில் அப்பாவிச் சனத்தின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. சர்வதேசம் இவர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்க முடியாது. காரணம் சர்வதேசத்தை நம்பி அல்லது அவர்களுக்கு கீழ்படிந்து இதுவரை போராட்டம் நடத்தவில்லை.

முக்கிய கேள்வி ஒன்று.

போராட்டத்திற்காக சேர்த்த பணம் எங்கே?

சேர்த்த பணம் சிலரின் பெயரில் சொத்துக்களாக மாறியுள்ளது. இதைப் பற்றி யாரும் கதைப்பது துரோகமாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிக் கதைப்பதை சிலர் விரும்புவதில்லை.

முன்பு கூறினார்கள் தலைவர் வந்து சொன்னால் பணம் தரப்படுமென்று. அதன்பின்பு கூறினார்கள் சண்டைக்கு சேர்த்த பணத்தை வேறு விடயங்களிற்கு செலவழிக்கக் கூடாதென்று.

பணம் அனுப்பினால் அந்நியச் செலாவணி அங்கு போய்விடும் என்று கூறிய இன்னுமொருவர் அண்மையில் இலங்கையில் தனது பெயரில் உல்லாச விடுதிகள் கட்டுவதற்காக 2 கோடி அரசிற்குக் கொடுத்துள்ளார். இந்த மலைவிளுன்கிகள் பகிரங்கப்படுத்தப்பட்டு, அந்த பணம் பாதிக்கப்பட்ட ஈழமக்களுக்குப் போய் சேர வேண்டும்.

மாவீரர் உரையில் புலம்பெயர்ந்தவர்களிடம் போராட்டத்தை ஒப்படைக்கிறோம் என்று கூறியது, புலம்பெயர்ந்தவர்களிடம் பணத்தை ஒப்படைக்கிறோம் என்று தவறாக விளங்கப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் இவர்களின் துரோகம் துகிலுரியப்பட்டு, குடும்பத்துடன் இவர்கள் சந்திக்கு வருவது நிச்சயம்.

மாவீரரை மதிப்பார்கள். வாழும் போராளிகளை மறந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பருந்துகளுக்குள்ளும், வல்லூறுகளுக்கும் இடையில் அகப்பட்ட, தாய்க் கோழியின் பாதுகாப்பை இழந்த ஒரு கோழிக்குஞ்சின் கதை போல போகின்றது! தொடருங்கள் சாந்தி!!!

புலத்தில் சேர்க்கப் பட்ட அவ்வளவு பணத்திற்கும் என்ன நடந்தது என்று எவராவது, சாடை மாடையாகவாவது தெரிவிப்பீர்களா?

முப்பதாண்டு காலத்திற்கு மேலாக இப் பணத்தைப் பல கஷ்டங்களுக்கிடையில், ஒரு பணியாகக் கருதிக் கொடுத்து வந்தவர்களில் நானும் ஒருவன்!

ஆனால் இந்தப் பணம் என்னிடம், ஒரு தடவையாவது வற்புறுத்தப் பட்டு வாங்கப் படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!!

Link to comment
Share on other sites

மக்கள் மீண்டும் துன்ப துயரங்களில் இருந்து மீண்டு தாம் விரும்பும் வடிவில் வாழ இந்த உலகை நிற்பந்திக்க வேண்டியதும் நமது பொறுப்பாகும்..!

மக்கள் தாம் விரும்பும் வடிவில் வாழ எந்த உலகை நிர்ப்பந்திப்பது? நாங்கள் எங்களையே பேக்காட்டுகின்றோமா? கதையில் கூறப்படும் சம்பவங்களை எடைபோடும்போது நம்மவர் கைகளில் அதிகாரமும் கிடைத்துவிட்டால் எப்படியான அழிவுகள் ஏற்படும் என்பதை ஊகிக்கக்கூடியதாக உள்ளது. நம்மவர்களே ஆபத்தானவர்கள்.. இந்நிலையில் சிங்களவனை நொந்து என்ன.. வேலியே பயிரை மேய்ந்தால்...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இக்கதையை PDF வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ள இணைப்பு:-

முன்னுரையை PDF இல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

கதையை PDFஇல் படிக்க இந்த இணைப்பில் அழுத்துங்கள்.

logo.png

முன்னுரை

அந்த வேளையில் தான் எனக்குள் ஒரு ஐீவன் புகுந்தது. அவள் யாரும்மல்ல அவள் தான் எனது வாழ்வைப் பதிவு செய்துள்ள எழுத்துக்குரியவள் சாந்தி ரமேஷ் வவுனியன்

ஒரு அக்காவாக தோழியாக சாந்தி ரமேஷ் வவுனியன் அவர்கள் எனக்கு அறிமுகமாகி எனக்கு உறவாகினார். இவருடன் மனம் விட்டு கதைக்கும் போது எனக்குள் ஓரளவு சுமைகள் குறைந்த உணர்வு.

எனது சொந்த வாழ்வின் காயங்களையெல்லாம் சாந்தி ரமேஷ் வவுனியன் ஊடாகப் பதிவு செய்ய விரும்பி சம்பவங்களை அக்காவுடன் பகிர்ந்து கொண்டேன்.

எனக்குத் துணிச்சல் தந்து எனது வாழ்வு இன்னும் முடியவில்லை நீ வாழ வேண்டுமென்று நம்பிக்கை தரும் தோழியாக அக்கா இருந்திருக்கிறாள். அந்த வகையில் நான் சாந்தி ரமேஷ் வவுனியன் அவர்களுக்கு முதலில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவர்களுக்காக புலம்பெயர்ந்த உறவுகளே இன்று உங்கள் பங்கென்ன…?

இவ்வளவு காலமும் நடந்த போரின் போது இறந்த உங்களது உறவுகள் சகோதரர்கள் நண்பர்களை நினைவுபடுத்தி பார்க்கும் போதும் உங்களது மனங்கள் குமுறுவதில்லையா?

இவர்களுக்கு இந்த நிலைமை ஏன் வந்தது? எதனால் வந்தது? யாரால் வந்தது? என நீங்களே உங்களது மனசாட்சியைத் தட்டிக் கேட்டுப்பார்க்கவும். யுத்தம் எங்களைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது. நாங்கள் ஒருதரம் நிமிர எங்களைத் தூக்கிவிடுங்களென்று கேட்கிறோம்.

ஆனால் உங்களில் சிலர் எங்கள் எல்லாரையும் பணயம் வைத்துப் பந்தயம் நடத்தவே முன்நிற்கிறீா்கள். உங்கள் பிள்ளைகளும் நீங்களும் நீங்கள் வாழும் நாடுகளில் எல்லா வசதிகளோடும் இருந்து கொண்டு எங்களைப் பலிகொடுக்கவே பெரும் பிரயத்தனப்படுகிறீர்கள்.

உங்கள் பிள்ளைகள் பஞ்சு மெத்தையில் தவழ நீங்கள் போராட்டம் நடத்த நாங்கள் வன்னிக்குள் செத்துக் கொண்டிருந்தோம். ஆயிரக்கணக்கில் எங்கள் சிறுவர்கள் செத்துப்போனார்கள். இன்றும் தெருத்தெருவாய் அலைகிறது எங்கள் இளைய சந்ததி. ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? எங்கள் மிச்ச வாழ்க்கையையும் அழித்துவிட்டுத்தான் ஓய்வீர்கள் போல வீரம் பேசுகிறீர்கள்.

இங்கு முன்னை நாள் போராளிகள் ஒவ்வொருவரும் சமூகத்தாலும் உறவுகளாலும் புறக்கணிக்கப்பட்டு இருக்க இடம்மில்லாமல் தொழில் இல்லாமல் தெருக்களில் அலைந்து திரிகிறார்கள். சிலரின் நிலைமை நஞ்சு குடித்து சாகும் நிலைமைகளில் எல்லாம் விரத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் மக்கள் எனச் சொல்லிப் போராட்டம் தொடங்கும் போராடுவோம் என்றெல்லாம் சொல்லிப் போராடும் புலம் பெயர் உறவுகளே….! எங்களால் இனி ஏலாது. நாங்கள் களைத்துப்போனோம். ஒருமாற்றத்திற்காக நீங்கள் வாழும் நாடுகளுக்கு எங்களைக் கொண்டு செல்லுங்கள். யுத்தத்தால் சிதைவுற்ற இந்த நாட்டுக்கு வந்து உங்கள் போராட்டங்களை ஆரம்பியுங்கள். நாங்கள் புலத்தில் இருந்து உங்களுக்கு குரல் தருகிறோம். நிச்சயமாக நீங்கள் வரமாட்டீர்கள்.

யுத்தம் முடிந்து 2வருடங்கள் முடிகிறது. நாங்கள் அன்றாடம் வாழ்க்கையோடு முட்டிமோதித் தடம் புரள்கிறோம். ஆயிரக்கணக்கில் நாங்கள் அவதிப்படுகிறோம். எங்களுக்கு ஆயுதங்கள் தர வேண்டாம். அன்றாடம் வாழ ஒரு வாழ்வு தாருங்கள்.

எங்கள் இளைய சந்ததியைக் காப்பாற்றுங்கள். வன்னிக்கு வந்து சிலவாரங்களாவது வாழ்ந்து பாருங்கள். எங்கள் வாழ்க்கையின் கஸ்ரங்களை அனுபவித்துப் பாருங்கள். உங்கள் பிள்ளைகள் தொலைக்காட்சி கணணி என்று உலகத்தை எப்படி அனுபவிக்கிறார்கள். ஆனால் எங்கள் குழந்தைகள்….? இங்கே வாருங்கள் எங்களது வாழ்வைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

இந்த வேண்டுதல் விடுதலையை விற்றுவிட்டு அம்மணமாய் நாங்கள் வயிற்றுக்காக வாழ்வதாய் நினைப்பீர்கள். ஆனால் யதார்த்தம் இதுதான். பசிதான் உலகில் கொடுமையிலும் கொடுமை. அக்கொடுமையை நாங்கள் வன்னிக்குள் அனுபவித்தோம். உணவில்லை உறக்கமில்லை சாவும் இரத்தமும் அழுகைகளும் குவிந்திருந்த அந்தக் காலத்தில் வாழ்ந்தோம். இன்னும் பல நூறாண்டுகள் சென்றாலும் எங்கள் இதயங்களில் பதிந்து போன இந்தக் காயங்கள் ஆறாது. இங்குள்ள எங்களுக்கு இன்று தேவையானது வயிற்றுப்பசி போக்கி நிம்மதியாய் வாழ ஒரு வாழ்வு.

நீங்கள் எட்ட நின்று கொண்டு நெருப்போடு என்னடா விளையாட்டென்று பாடியாட எங்களை நெருப்புக்குள் தள்ளிவிட்டுச் சாகடிக்கிறீர்கள். தயவு செய்து உங்கள் கனவுகளை நிறுத்துங்கள். எங்கள் வாழ்வுக்கு ஏதாவது துரும்பைத் தர முடிந்தால் தாருங்கள். முடியாவிட்டால் விட்டுவிடுங்கள் நாங்கள் எப்படியாவது வாழ்கிறோம். எங்கள் பெயரால் பிழைப்பு நடத்தி திரும்பவும் எங்களைப் பலியாடுகளாக்கும் கனவை விட்டுவிட்டு சுகமான உங்கள் வாழ்க்கையை வெளிநாட்டிலேயே கடத்துங்கள். எங்களை விடுங்கள்.

இது வெறும் கதையல்ல. நான் வாழ்ந்த வாழ்க்கை , மனக்குமுறல்கள் சொல்லமுடியாத உணர்வுகள். எனது சொந்தக் கதை. இது பலருக்கான கதை. விடுதலைக்காகப் போனவர்கள் நாங்கள் இன்று படுகின்ற அவலங்களின் பதிவு. இருகால்களையும் இழந்த எனது வாழ்வை எனது ஊனமுற்ற துயரத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எனது சமூகத்தாலும் நான் வாழ்ந்த இடங்களிலும் வஞ்சிக்கப்பட்டது போல் பல்லாயிரம் பெண்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். முன்னாள் போராளிகள் என்ற அடையாளத்திற்குள் ஒவ்வொரு பெண்ணும் படுகின்ற அவலங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக எனக்காக உறவுகளே உதவுங்கள். எங்களையும் வாழ வையுங்கள்.

காதல் களம் கணவன் கடைசிக்கனவு (குறுநாவல்)

கதையை மேலோட்டமாகவே வாசித்துள்ளேன்............... ஐ.நா முன் நடக்கவிருக்கும் நிகழ்விற்காக நாளை நியுயோர்க் போகிறேன் விமானத்தில் அதை வாசிக்கலாம் என பிரின் எடுத்து வைத்துள்ளேன். மேலோட்டமாக வாசித்த வரைக்கும்............... சோகங்களே.

நான் பல தடவைகள் சொன்னது போன்று 20வீதமானவர்களின் முதுகில் ஏறி 80வீதமானவர்கள் பயணித்த போராட்டம் இது 80 வீதமானவர்களை சுமந்தவர்களின் வலிகள் எழுத்துகளில் எழுதி யாராலும் புரியமுடியாது ஒரு கணமாவது அதை வாழ்நதாலே அது புரியும். விடுதலையானாலும் மரணபயத்தோடு ஒவ்வொரு இரவையும் கழிக்கும் முன்னை போராளிகளின் வாழ்க்கையை கதையில் சொல்ல முடியாது. அவர்களது எதிரியாக தமிழனே இருப்பது அருவெருப்பானது.

வெற்றிகள் வந்தால் எல்லோரும் பங்காளிகள் தோல்விகள் என்றால் எல்லோரும் அறிவாளிகள். தோற்வனை போட்டு சப்பிதுப்பி தங்களை மேதாவிகளாக காட்டுகிறார்கள்.

எமது இனத்திற்குள் இருந்து களையபட வேண்டியது ஆயிரம் ஆயிரம்.........

சாதியின் பெயரால் சகமனிதனை கொடுமைபடுத்தி இன்பம் கண்ட ஒரு இனம் எளிதில் மாற்றங்களை கொண்டுவரமுடியாது. கொண்டுவர கூடிய சக்தி உடையவர்கள் இப்போது எம்மோடு இல்லை.

பெண்ணின் கதையை வெளிகொண்டுவந்து................... அதன் மூலம் அவளுக்கு ஏதாவது உதவி கிடைப்பின் ஒரு பாராட்டதக்க விடயம். மேலே கலைஞன் என்பர் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த திரியின் கீழேயே கொடுத்திருக்கிறார். அதுவே இந்த கதையை கொண்டுவர நினைத்தவர்களுக்கு ஒரு வெற்றியாக இருக்கும்.

எதிர்மiறாயக இந்த கதையில் வருவதுபோல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைசெய்கிறோம் என்கிற பெயரில் பல பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கும் இவை ஒரு சாதகமானதாக அமைந்துவிடும்.

உரிய உதவிகளை உரிய இடங்களில் சேர்ப்பதற்கு முயற்சிகள் தொடங்கபட வேண்டும்.

இப்போதும் அப்போதும் எப்போதும் தேவைபட்டதும் படுவதும் ஒரு குடையின் கீழ் புகுவதே அது எவ்வளவு துரம் சாத்தியமென்பதே தமிழரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவியாக மாறிவிட்டது. அந்த கருவை வைத்து தமிழனை எதிரிகளும் தோரோகிகளும் நன்றாக எடைபோடுகிறார்கள் அவர்களால் நிதமும் அழியும் தமிழன் மட்டும் அந்த கருவியை தொட்டே பார்க்கிறான் இல்லை.

சில வரிகள் போராட்டம் என்பது புலம்பெயர் மக்களுக்காக தாயக மக்களால் முன்னெடுக்க பட்டதுபோல் உள்ளது. புலத்திற்கும் தயாகத்திற்கும் ஒரு பிரிவினையை உண்டாக்கும் நச்சுவார்த்தைகள் கவன குறைபாட்டால் வந்திருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்களையும் தாயகத்து மக்களையும் பிரிப்பதென்பதை எதிரி சில துரோகிகளினுடா திறம்பட செய்துவருகிறான். பசப்புவார்தைகளை மேலோட்டமாக வாசிப்பவர்கள் அதன் உள்ளர்த்தம் புரியாது தம்மோடும் அதை ஒட்டி செல்கிறார்கள்.

உடலையும் தசையையும் எப்படி பிரிக்க முடியாதோ............. அதேபோலவே ஒரு சாதாரண மனிதனையும் அவனது தாய்மண்ணையும் பிரிக்க முடியாது. எத்தனையோ உலக புரட்சிகள் களத்திற்கு வெளியே தீபற்றியே வென்றிருக்கின்றன........... இந்த அச்சம் எதிரிக்கு இருக்கலாம். அது ஏன் எம்மவர்ககும் இருக்கிறது என்பதுதான் புரியவி;ல்லை.

புலம்பெயாந்து வந்தவர்கள் எத்தனையோ பேர்கள் போராட்டத்திற்காக தமது வாழ்கையை தொலைத்து நிற்கிறார்கள்.......... இன்னும் எத்தனையோ பேர் சிறையிருக்கிறார்கள். உணர்வுள்ளவன் எங்கிருந்தாலும் போராடிகொண்டே இருப்பான் வடிவம் வேறுமாதிரி இருக்கும் இழப்புகள் ஒரே மாதிரியானவையே. காழ்ப்புணர்வுகளை கொட்டிவிட்டும் உதவி செய்யுங்கள் என்று புலம்பெயாந்தவர்களையே கேட்க வேண்டி உள்ளது. இந்த போராட்த்திற்காக எத்தனைகளையோ இழந்தவர்கள்தான் இனியும் உதவ போகிறார்கள்..............

மற்றையபடி தனிபட்ட முறையில் தன்னுடைய பெயர் விளம்பரமாகும் என்றால் உதவி செய்ய இப்போது சில புது காளான்கள் முளைகின்றன. முன்பு புலி என்ற பெயரில் சிறைபோகலாம் என்ற அச்சத்தில் இருந்தவர்கள் இப்போது மனிதாபிமான உடையணிந்து வருகிறார்கள்.................... உள்நோக்கு சுய விளம்பரம்தான்.

நாம் இதய சுத்தியுடன் ஒன்று சேர வேண்டும். கதைகளும் இதயசுத்தியுடன் வெளிவர வேண்டும். சாந்திலே சிந்துபாடுவதுபோல் எமது உள்ளாhந்த எண்ணங்களை இன்னொருவரின் கதைக்குள் புகுத்துவது முறையானதாக எனக்கு படவில்லை.

இனி அதுதான் சரியானது என்று யாராவது வாதிட வந்தால் இல்லை அது தவறு என்று நிருபிக்க மனிதவாழ்ககை அலகு என்னிடமும் இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களையும் தாயகத்து மக்களையும் பிரிப்பதென்பதை எதிரி சில துரோகிகளினுடா திறம்பட செய்துவருகிறான். பசப்புவார்தைகளை மேலோட்டமாக வாசிப்பவர்கள் அதன் உள்ளர்த்தம் புரியாது தம்மோடும் அதை ஒட்டி செல்கிறார்கள்.

உடலையும் தசையையும் எப்படி பிரிக்க முடியாதோ............. அதேபோலவே ஒரு சாதாரண மனிதனையும் அவனது தாய்மண்ணையும் பிரிக்க முடியாது. எத்தனையோ உலக புரட்சிகள் களத்திற்கு வெளியே தீபற்றியே வென்றிருக்கின்றன........... இந்த அச்சம் எதிரிக்கு இருக்கலாம். அது ஏன் எம்மவர்ககும் இருக்கிறது என்பதுதான் புரியவி;ல்லை.

புலம்பெயாந்து வந்தவர்கள் எத்தனையோ பேர்கள் போராட்டத்திற்காக தமது வாழ்கையை தொலைத்து நிற்கிறார்கள்.......... இன்னும் எத்தனையோ பேர் சிறையிருக்கிறார்கள். உணர்வுள்ளவன் எங்கிருந்தாலும் போராடிகொண்டே இருப்பான் வடிவம் வேறுமாதிரி இருக்கும் இழப்புகள் ஒரே மாதிரியானவையே. காழ்ப்புணர்வுகளை கொட்டிவிட்டும் உதவி செய்யுங்கள் என்று புலம்பெயாந்தவர்களையே கேட்க வேண்டி உள்ளது. இந்த போராட்த்திற்காக எத்தனைகளையோ இழந்தவர்கள்தான் இனியும் உதவ போகிறார்கள்..............

மற்றையபடி தனிபட்ட முறையில் தன்னுடைய பெயர் விளம்பரமாகும் என்றால் உதவி செய்ய இப்போது சில புது காளான்கள் முளைகின்றன. முன்பு புலி என்ற பெயரில் சிறைபோகலாம் என்ற அச்சத்தில் இருந்தவர்கள் இப்போது மனிதாபிமான உடையணிந்து வருகிறார்கள்.................... உள்நோக்கு சுய விளம்பரம்தான்.

இது தான் இன்றைய எமது நிலை! இதை உடைக்க வேண்டியதும் நமது கடமையே!

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நன்கொடைகளை வழங்கும்படி நெதர்லாந்து தமிழர்களிடம் கோரப்படுவதாக அந்நாட்டு நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெதர்லாந்தின் நீதிமன்ற தகவல்களை வெளியிடும் செய்தித்தாள் ஒன்றிலேயே இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருவதுடன், விடுதலைப்புலிகளின் நெதர்லாந்து கிளையின் தலைவர் மற்றும் பல விடுதலைப்புலி அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் வாழும் தமிழர்களிடம், விடுதலைப்புலிகள் திட்டமிட்ட வகையில் பலவந்தமாக நிதி வசூலிக்கின்றது.

பணம் கொடுக்க மறுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள போதும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான நிதிச் சேகரிப்பு தொடர்வதாக நெதர்லாந்தின் நீதிமன்ற தரப்பு தெரிவித்துள்ளது.

பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நெதர்லாந்தில் வாழ்ந்துவருகின்றனர். யுத்தம் காரணமாக 1980 காலப்பகுதியிலேயே அதிகமானவர்கள் நெதர்லாந்திற்கு சென்றுள்ளனர். நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் 2006 ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட இயக்கமாக பிரகடனப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்கள்? இந்தப் பணம் எங்கோ போகிறது என்று கேட்க கூட திரணியற்று நிற்கிறோம். இந்த பெண்ணின் கதையை கேட்ட பின்னரும் மனச்சாட்சியற்ற மனிதர்களை என்ன செய்வது?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கதையை மேலோட்டமாகவே வாசித்துள்ளேன்............... ஐ.நா முன் நடக்கவிருக்கும் நிகழ்விற்காக நாளை நியுயோர்க் போகிறேன் விமானத்தில் அதை வாசிக்கலாம் என பிரின் எடுத்து வைத்துள்ளேன். மேலோட்டமாக வாசித்த வரைக்கும்............... சோகங்களே.

நான் பல தடவைகள் சொன்னது போன்று 20வீதமானவர்களின் முதுகில் ஏறி 80வீதமானவர்கள் பயணித்த போராட்டம் இது 80 வீதமானவர்களை சுமந்தவர்களின் வலிகள் எழுத்துகளில் எழுதி யாராலும் புரியமுடியாது ஒரு கணமாவது அதை வாழ்நதாலே அது புரியும். விடுதலையானாலும் மரணபயத்தோடு ஒவ்வொரு இரவையும் கழிக்கும் முன்னை போராளிகளின் வாழ்க்கையை கதையில் சொல்ல முடியாது. அவர்களது எதிரியாக தமிழனே இருப்பது அருவெருப்பானது.

வெற்றிகள் வந்தால் எல்லோரும் பங்காளிகள் தோல்விகள் என்றால் எல்லோரும் அறிவாளிகள். தோற்வனை போட்டு சப்பிதுப்பி தங்களை மேதாவிகளாக காட்டுகிறார்கள்.

எமது இனத்திற்குள் இருந்து களையபட வேண்டியது ஆயிரம் ஆயிரம்.........

சாதியின் பெயரால் சகமனிதனை கொடுமைபடுத்தி இன்பம் கண்ட ஒரு இனம் எளிதில் மாற்றங்களை கொண்டுவரமுடியாது. கொண்டுவர கூடிய சக்தி உடையவர்கள் இப்போது எம்மோடு இல்லை.

பெண்ணின் கதையை வெளிகொண்டுவந்து................... அதன் மூலம் அவளுக்கு ஏதாவது உதவி கிடைப்பின் ஒரு பாராட்டதக்க விடயம். மேலே கலைஞன் என்பர் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த திரியின் கீழேயே கொடுத்திருக்கிறார். அதுவே இந்த கதையை கொண்டுவர நினைத்தவர்களுக்கு ஒரு வெற்றியாக இருக்கும்.

எதிர்மiறாயக இந்த கதையில் வருவதுபோல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைசெய்கிறோம் என்கிற பெயரில் பல பெண்களை துஸ்பிரயோகம் செய்பவர்களுக்கும் இவை ஒரு சாதகமானதாக அமைந்துவிடும்.

உரிய உதவிகளை உரிய இடங்களில் சேர்ப்பதற்கு முயற்சிகள் தொடங்கபட வேண்டும்.

இப்போதும் அப்போதும் எப்போதும் தேவைபட்டதும் படுவதும் ஒரு குடையின் கீழ் புகுவதே அது எவ்வளவு துரம் சாத்தியமென்பதே தமிழரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கருவியாக மாறிவிட்டது. அந்த கருவை வைத்து தமிழனை எதிரிகளும் தோரோகிகளும் நன்றாக எடைபோடுகிறார்கள் அவர்களால் நிதமும் அழியும் தமிழன் மட்டும் அந்த கருவியை தொட்டே பார்க்கிறான் இல்லை.

சில வரிகள் போராட்டம் என்பது புலம்பெயர் மக்களுக்காக தாயக மக்களால் முன்னெடுக்க பட்டதுபோல் உள்ளது . புலத்திற்கும் தயாகத்திற்கும் ஒரு பிரிவினையை உண்டாக்கும் நச்சுவார்த்தைகள் கவன குறைபாட்டால் வந்திருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்களையும் தாயகத்து மக்களையும் பிரிப்பதென்பதை எதிரி சில துரோகிகளினுடா திறம்பட செய்துவருகிறான். பசப்புவார்தைகளை மேலோட்டமாக வாசிப்பவர்கள் அதன் உள்ளர்த்தம் புரியாது தம்மோடும் அதை ஒட்டி செல்கிறார்கள்.

உடலையும் தசையையும் எப்படி பிரிக்க முடியாதோ............. அதேபோலவே ஒரு சாதாரண மனிதனையும் அவனது தாய்மண்ணையும் பிரிக்க முடியாது. எத்தனையோ உலக புரட்சிகள் களத்திற்கு வெளியே தீபற்றியே வென்றிருக்கின்றன........... இந்த அச்சம் எதிரிக்கு இருக்கலாம். அது ஏன் எம்மவர்ககும் இருக்கிறது என்பதுதான் புரியவி;ல்லை.

புலம்பெயாந்து வந்தவர்கள் எத்தனையோ பேர்கள் போராட்டத்திற்காக தமது வாழ்கையை தொலைத்து நிற்கிறார்கள்.......... இன்னும் எத்தனையோ பேர் சிறையிருக்கிறார்கள். உணர்வுள்ளவன் எங்கிருந்தாலும் போராடிகொண்டே இருப்பான் வடிவம் வேறுமாதிரி இருக்கும் இழப்புகள் ஒரே மாதிரியானவையே. [color="#008000"]காழ்ப்புணர்வுகளை கொட்டிவிட்டும் உதவி செய்யுங்கள் என்று புலம்பெயாந்தவர்களையே கேட்க வேண்டி உள்ளது. இந்த போராட்த்திற்காக எத்தனைகளையோ இழந்தவர்கள்தான் இனியும் உதவ போகிறார்கள்.............. மற்றையபடி தனிபட்ட முறையில் தன்னுடைய பெயர் விளம்பரமாகும் என்றால் உதவி செய்ய இப்போது சில புது காளான்கள் முளைகின்றன. முன்பு புலி என்ற பெயரில் சிறைபோகலாம் என்ற அச்சத்தில் இருந்தவர்கள் இப்போது மனிதாபிமான உடையணிந்து வருகிறார்கள்.................... உள்நோக்கு சுய விளம்பரம்தான்.

நாம் இதய சுத்தியுடன் ஒன்று சேர வேண்டும். கதைகளும் இதயசுத்தியுடன் வெளிவர வேண்டும். சாந்திலே சிந்துபாடுவதுபோல் எமது உள்ளாhந்த எண்ணங்களை இன்னொருவரின் கதைக்குள் புகுத்துவது முறையானதாக எனக்கு படவில்லை.

இனி அதுதான் சரியானது என்று யாராவது வாதிட வந்தால் இல்லை அது தவறு என்று நிருபிக்க மனிதவாழ்ககை அலகு என்னிடமும் இல்லை.

நன்றி ஐயா

எனது கருத்தும் இதுதான்

Link to comment
Share on other sites

எமக்கான அரசியல் தீர்வை நோக்கியே நாம் பயணித்தாலும் பாதிக்கபட்டவர்களுக்கான ஒரு புனருத்தாரணம் அவசியம் தேவை.

இரண்டுமே சமகாலத்தில் எடுத்துச்செல்லப்படவேண்டும்.

உண்மை என்னவெனில் நாட்டில் உள்ள தமிழன் சிங்கள அரசுக்கு மேலால் எதுவும் செய்யமுடியாமல் இருக்குன்றான்,இப்போதைக்கு செய்யவும் முடியாது.

புலம்பெயர்ந்தவனுக்கும் ஏறக்குறைய அதே கதி.சிங்கள அரசைவிட கேவலமானவர்களின் கைகளில் கடந்தகாலங்களில் அதிகாரமும் பணமும் போய் சேர்ந்ததில் உண்மையாக நல்லது செய்ய நினைப்பவர்கள் தனிப்படவோ அல்லது புதிதாக ஒரு அமைப்பையோ உருவாக்கவேண்டிய நிலையில் உள்ளார்கள்.

சேர்த்தபணம் ஆற்றில் போட்டது போட்டதுதான்.கருணாநிதி எப்படியெல்லாம் பிரச்சனைகளை திசை திருப்பினாரோ அதைவிட இவர்கள் கேவலமாக காசுக்கதை கதைத்தால் பிரச்சனையை திசை திருப்பிவிடுவார்கள்.கனடாவில் வணிகநிலையங்களாகவும்,கட்டிடங்களாகவும் மாளிகை மாட உல்லாச காரில் பவனி வருகின்றார்கள்,சிலர் கார்ப்பர் அரசால் அகப்பட்டாலும் பலர் தப்பிவிடுவார்கள்.

இவர்கள் அமைப்புகளில் சேர்ந்தததே இதற்காகத்தான்.எவனொருவன் அளவுக்கு அதிகமாக துதிபாடுகின்றானோ அவன் நோக்கமே வேறு.பராசக்தி வசனம் தான் நினைவு வருகின்றது.கோவில்கள் எல்லாம் கொள்ளயர்கள் கூடமாக எப்போதோ மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி எப்படியெல்லாம் பிரச்சனைகளை திசை திருப்பினாரோ

பராசக்தி வசனம் தான் நினைவு வருகின்றது.கோவில்கள் எல்லாம் கொள்ளயர்கள் கூடமாக எப்போதோ மாறிவிட்டது.

நீங்கள் கருணாநிதியைச்சாடிக்கொண்டு

அவரது படத்து வசனத்தையே உதாரணமாகவும் விடுங்கள்.

என்ன ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சினிமா டயலாக்.

இந்தியாவில் வகுப்பெடுத்தது தியேட்டருக்குள்ளே தானா...............???

Link to comment
Share on other sites

கதையை மேலோட்டமாகவே வாசித்துள்ளேன்............... ஐ.நா முன் நடக்கவிருக்கும் நிகழ்விற்காக நாளை நியுயோர்க் போகிறேன் விமானத்தில் அதை வாசிக்கலாம் என பிரின் எடுத்து வைத்துள்ளேன்.

நிலத்தில் குந்தி வாசிக்கும்போது வராத இரக்கம் சிலவேளைகளில் வானில் பறந்து வாசிக்கும்போது வரக்கூடும். இந்தக்கதையை கூறிய அன்பினி துரோகி ஆகப்போகின்றாரா, அல்லது இந்தக்கதையை இங்கு இணைத்த சாந்தி துரோகி ஆகப்போகின்றாரா அல்லது நேசக்கரம் சிறீ லங்கா புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இயங்குகின்றது என்று குற்றம் சாட்டப்படப்போகின்றதா.. உங்களின் இக்கதை பற்றிய பின்னூட்டலை பார்த்தபின்பே தெரியும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலத்தில் குந்தி வாசிக்கும்போது வராத இரக்கம் சிலவேளைகளில் வானில் பறந்து வாசிக்கும்போது வரக்கூடும். இந்தக்கதையை கூறிய அன்பினி துரோகி ஆகப்போகின்றாரா, அல்லது இந்தக்கதையை இங்கு இணைத்த சாந்தி துரோகி ஆகப்போகின்றாரா அல்லது நேசக்கரம் சிறீ லங்கா புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இயங்குகின்றது என்று குற்றம் சாட்டப்படப்போகின்றதா.. உங்களின் இக்கதை பற்றிய பின்னூட்டலை பார்த்தபின்பே தெரியும்.

இதில் மருதங்கேணி ஏதாவது தவறாகச் சொல்லவில்லையே....

அவருக்கு இக்கதையை முழுவதுமாக வாசிக்க நேரம் கிடைக்காது இருந்திருக்கலாம்.

அதற்குள் ஏன் இந்த அவசரக் குடுக்கைத்தனமாக..... துரோகி பட்டத்தை யாருக்கு கொடுப்பார் என்று சாத்திரம் பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிலத்தில் குந்தி வாசிக்கும்போது வராத இரக்கம் சிலவேளைகளில் வானில் பறந்து வாசிக்கும்போது வரக்கூடும். இந்தக்கதையை கூறிய அன்பினி துரோகி ஆகப்போகின்றாரா, அல்லது இந்தக்கதையை இங்கு இணைத்த சாந்தி துரோகி ஆகப்போகின்றாரா அல்லது நேசக்கரம் சிறீ லங்கா புலனாய்வு அமைப்புடன் சேர்ந்து இயங்குகின்றது என்று குற்றம் சாட்டப்படப்போகின்றதா.. உங்களின் இக்கதை பற்றிய பின்னூட்டலை பார்த்தபின்பே தெரியும்.

எனது நண்பர் ஒருவரும் தீடிரென என்னோடு வருவதாக கூறி கூடவே வந்தார் பல விடயங்கள் பேச இருந்ததால் அதை என்னால் இன்றும் வாசிக்க முடியவில்லை. ஆனால் இந்த பின்னோட்டத்தை வாசிக்கும்போது ஒரு கதை ஞபகத்திற்கு வருகின்றது அதை பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன்...............

ஒருவன் ஒரு மரத்தடியில் ஒரு நாள் களைப்பாறிகொண்டிருந்தான் அவன் அருகே ஒரு சிறிய புதர் இருந்தது அதற்குள் சில முட்டைகள் இருந்தன அதை உடைத்துகொண்டு சில குஞ்சுகள் வெளியேற துடித்துகொண்டிருந்தன அவன் அதையே உற்றுபாhத்துகொண்டிருந்தான் எல்லா முட்டைகளையும் உடைத்து கொண்டு எல்லா குஞ்சுகளும் வெளியேறிவிட்டன. ஒரு குஞ்சுமட்டும் வெளியேற முடியாது தவித்துகொண்டிருந்தது அந்த முட்டையில் உள்ள துவாரம் சிறியதாக இருந்ததனால் அதனால் வெளியேற முடியவில்லை. அதை கண்ட அந்த இளைஞன் ஒரு ஈக்கினால் அந்த முட்டையை உடைத்துவிட்டு அந்த குஞ்சு வெளியேற உதவினான். அந்த குஞ்சும் மற்றைய குஞ்சுகள்போல் வெளியேறிவிட்டது. சிறிது நேரம் கழித்து மற்றைய குஞ்சுகள் பறக்க தொடங்கின இவன் உதவிசெய்த குஞ்சு மட்டும் பறக்கவும் முடியாது ஊரவும் முடியாது தவித்துகொண்டிருந்தது காரணம். அந்த குஞ்சுகள் முட்டையின் உள்ளே இருக்கும்போது அவர்களுக்கான பாதுகாப்பை ஒரு வீணிபோன்ற திரவபடிவம் அவர்களை சுற்றியிருக்கும் அவர்கள் முட்டையின் ஊடாக வெளியேறும்போது அந்த வீணிபோன்ற திரவத்தை முட்டையின் கோதுகளில் உள்ள கூர்மையான பகுதிகள் துடைத்துவிடும். இவன் உதவி செய்த குஞ்சு அந்த திரவங்கள் எல்லாம் ஒட்டியபடியே இரந்ததால் அதனால் அதன் இறகுகளை விரிக்க முடியாது இருந்தது................... துடித்துகொண்டிருந்த அந்த குஞ்சு சிறிது நேரத்தின் பின் இறந்துபோனது. அவனுடைய உதவி அந்த குஞ்சுக்கு மரணத்தை தேடி கொடுத்தது. அதை அப்படியே விட்டிருந்தால் அது கஸ்ரபட்டு முட்டையின் துவாரத்தை தானக உடைத்து வெளியேறி மற்றைய குஞ்சுகள்போல் பறந்திருக்கும்.

இதை வாசித்தால் அங்கே உள்ளவர்களை அப்படியே கஸ்ரபடவிடுங்கள் என்று நான் எழுதுவதாக சிலருக்கு விளங்கும். சிலருக்கு உதவிகளை எங்கே எப்போது செய்யவேண்டும் என்பதை சிந்தித்து செய்யவேண்டும் என்று விளங்கும். ஓரே கதை வேறு வேறு ஆட்களுக்கு வேறுமாதிரி விளங்குகிறது. அவர்களுடைய அறிவைபொறுத்து அது தெளிவை பெறுகிறது என்பதே உண்மை. பிக்காசோ வரைந்த ஓவியம் என்று உலகமே வாயை திறந்து பார்க்கிறது எனக்கு சும்மா நாலு கோடுதான் தெரிகிறது இவர்களுக்கு என்ன பைத்தியமா என்றுதான் உள்ளார தோன்றும் எனக்கு உள்ள ஓவிய அறிவு அவ்வளவுதான் அதைபொறுத்தே பிக்காசோவின் ஒவியத்தை புரியமுடியும்.

இந்த கதையிலே இப்போது இரண்டு கதாநாயகர்கள்................. ஒருவர் காலிழந்த போராளி இன்னனொருவர் இவருக்கு உதவி செய்யபோன ஒரு ஜெர்மனிவாழ் புலம்பெயாந்த பெண். (இந்த கதையை இங்கே இணைத்தவரை நோக்கி நான் விரலை காட்வில்லை) சாதாரணமாக இந்த உலகத்தில் எமது தயகத்தில் நடந்துகொண்டிருப்பதையே சொல்கிறேன்) அவர்களை தவிர அந்தோபாவம் தாழாத சோகம் நடந்துவிட்டது இதை இதுவரையில் நான் கேள்விபடவில்லை இணைத்ததற்கு நன்றி இப்பேதே என்னால் ஆனா உதவிகளை அள்ளி தருகிறேன் எனும் குணசித்திர காதாபாத்திரங்களாக சிலர்.

........................................................ இந்த (போராளி)பெண்ணினுடைய துன்பகரமான வாழ்வு என்பது அவள் வாழும்வரை இருக்கபோவதோன்று. இவளுடன் இணநை;துவரும் இந்து கதாபாத்திரங்கள் இன்னும் எத்தனைநாள் அவளோடு தொடரும்? தொடரமுடியும்? என்பதற்கான பதிலையே நான் தேடிகொண்டிருக்கிறேன். இந்த கதை பற்றிய முன்னைய திரியில் புங்கையூரான் என்ற கள உறுப்பினருடைய கேள்விகள் விடைகளற்று நின்றன அவருடைய கேள்விகளுக்கு பதிலை தேட யாரும் முற்படவில்லை.............. மாறா மகாமனிதர்களாக தங்களுக்கு தாங்களே பட்டங்களை சூட்டி அவரை நோக்கி காள்புணர்வுகளே பாய்ந்தன. அதைவாசித்த எனக்கு அவருடைய கேள்விகளுக்கு பதிலை தேடவேண்டிய ஒரு கட்டாயம் இருப்பதாக தெரிந்தது.................. அந்த பதிலையே இங்கே இணைத்தவரிடம் திரும்ப திரும்ப கேட்டேன். விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் அருமையான பட்டமளிப்பை எனக்கு மனப்பூர்வமாக செய்து பதில்களை புதைத்தார். இப்போது கலைஞன் என்பவர் என்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளார்.............. நீங்கள் பட்டம் பெற்றகாலம் முடிந்துவிட்து நீங்களே பட்டம் கொடுக்க தகுதியானவர் ஆகவே யாருக்கு பட்டமளிக்க போகிறீர்கள் என்று ஆவலாக காத்துகொண்டிருக்கிறார்.

விடுதலைபோர் என்ற பெயரில் எமது கண்முன்னே வாழ்ந்த முப்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட கடவுள்களை தீயிலே எறிந்துவிட்டு நிற்கிறோம். இன்று நாம்வாழும் வாழ்வு என்பது அவர்கள்போட்ட பிச்சை ஈழத்திலே ஒரு இனப்பிரச்சனை நடக்கின்றது என்று சர்வதேசத்தையும் ஐநாவையும் ஈழத்திற்கு அழைத்துவந்தது அவர்களுடைய தியாகமே. இன்று வெளிநாடுகளில் நாம் வாழ்நதுகொண்டிருக்கும் வாழ்வு அவர்களை சாடி எமக்கு கிடைத்த அகதி அந்தஸ்தே. அவர்களுடைய கனவை மறந்துவிட்டு எங்களது வேலையை தொடர எம்மால் முடியவில்லை. அதற்காக தாயகத்தில் உள்ளவர்களை ஆயுதம் தாங்கி போராடுங்கள் என்றும் யாரும் வற்புறுத்தவில்லை. எமது இனத்தைநோக்கி எதிரிவிரிக்கும் வலையை உணரதொடங்கியவர்களால் சும்மா இருங்கள் என்று சொல்லமுயடிவில்லை. தாயகத்தில் உள்ள மக்களின் இருப்பை உறுதிசெய்வதென்றால் ஏதோ ஒரு வடிவில் எமது போரை முன்னெடுக்க வேண்டிய நிலையில் நிற்கிறோம் என்பதன் பொருளை அங்கே உள்ளவர்களை சாகுங்கள் என்று சொல்வதாக மொழிபெயர்க்கிறார்கள் இதில் ஏதோ ஒரு லாபம் அவர்களுக்கு இருக்கவேண்டும் என்ற சந்தேகம் எம்மோடு உண்டு.

அவன் காசை அடித்தான் இவன் ஆளையடித்தான் என்று முடிந்தவகைளை வைத்து அலம்பிகொண்டிருந்தால் ஆகபோவது ஏதுமில்லை. ஒரு தமிழனால் அதை துணிந்துசெய்ய முடியாது............. அதையும்தாண்டி அவர்கள் செய்திருப்பின் அதுகும் நல்லதற்கே. கூடாதவர்களை எம்மில் இருந்து அகற்றிவிட்டோம் இப்போது எஞ்சிய நாங்கள் ஏன் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர முடியாது உள்ளது. நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் பிடித்துதின்ன எதிர் எதிரா நின்றுகொண்டு அவனையும் இவனையும் சாடுவதில் என்ன நியாயம் இருந்துவிடபோகிறது????

Link to comment
Share on other sites