Jump to content

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…


Recommended Posts

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…

(இவ்விடயம் ஊர்ப்புதினம் பகுதியில் இணைத்தேன். ஆனால் கதைப்பகுதியில் இந்தக் கைதியின் விடயம் கடந்த வருடம் பெரும் சர்ச்சைகளை உண்டுபண்ணியிருந்தது. கடந்தவருடம் கதையில் வந்து கருத்தாடிய இதயங்கள் மனமிரங்கி இவனுக்காக உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு இணைக்கிறேன்.)

சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான்.

இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது….

பணமிருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்வை முடிவு செய்யும் உரிமைமிக்க இன்றைய காலத்தில் பணம் இல்லை ஆகையால் விடுதலையின்றி மனவுளைச்சல் நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கும் உடல்நலம் உடற்காயங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

5வயது நிரம்பிய அவனது மகன் `அப்பா எப்ப வருவீங்கள்…? என்ற கேள்விகளோடு அப்பாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். எம்மால் முடிந்தது அவனது குழந்தைக்கும் மனைவிக்கும் வாழ்வதற்கான உதவி மட்டுமே. ஆனால் 6லட்சம் இருந்தால் வெளியில் தன்னால் வர முடியுமென்று நம்பும் இவனுக்காக 2மாத முயற்சியின் பயன் எதுவுமில்லை. வழக்கை நடாத்துவதற்கோ வழக்காடுவதற்கோ இவனிடம் வசதியில்லை.

இறுதி முயற்சியாக இவனது மனைவியின் வீட்டை விற்க முயற்சியெடுத்தோம் அதுவும் இப்போது விற்க முடியாத நிலமையில் இருக்கிறது. உறவுகளே இவனுக்கும் இவனது 5வயதுக்குழந்தைக்கும் மனைவிக்கும் வாழ்வுப்பிச்சை தாருங்கள். இவர்கள் வெற்றிகள் படைத்த போது மகிழ்ந்த நாங்கள் இன்று தோற்றுப்போய் கைதிகளாகத் துன்பங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த இளைஞனின் ஒரு வழக்கின் பிரதியை 5ஆயிரம் ரூபா செலவழித்து மொழிமாற்றம் செய்து பெற்றுள்ளோம். இவனுக்கு உங்கள் உதவிகளை வழங்கி சதீசினதும் அவனது குழந்தை மனைவியினதும் வாழ்வை காப்பாற்றுங்கள் உறவுகளே…..!

இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது….

இணைப்பில் அழுத்தி செய்தியை வாசியுங்கள்

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/Bild1.jpg

சதீசின் ஒரு வழக்கின் தமிழாக்கம் கீழ்வரும் இணைப்புகளில் உள்ளது. இணைப்பில் சென்று வழக்கினை வாசியுங்கள்.

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/Bild-14.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh2.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh3.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh4.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh5.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh6.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh7.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh10.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh11.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh12.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh13.png

http://tamilnews24.com/nesakkaram/ta/wp-content/uploads/2011/06/sathesh14.png

கைதியாக உள்ள சதீஸ் அவர்களுக்கு உதவுவதாக தொலைபேசியில் நம்பிக்கை கொடுத்து ஏமாற்றிய கனடா நபர் ஒருவர் பற்றிய பின்னிணைப்பு :-

தினமும் அவனது மனைவியிடமிருந்து வருகின்ற குறுஞ்செய்தியும் இவனிடமிருந்து வாரம் ஒருமுறை வருகின்ற துயரம் நிறைந்த உதவி வேண்டுதலும் எம்மால் நிறைவேற்ற முடியவில்லை. பலரிடம் உதவி கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் எதுவித பயனுமில்லை.

எங்களைப்போல் இவனது நிலமையை சிறையில் இருந்து நேரில் பார்த்த ஒரு நண்பனும் பலரிடம் உதவி கேட்டான். அதன் பயன் கனடாவிலிருந்து ஒருவரின் தொடர்பு கிடைத்தது.

கனடாவிலிருந்து இவனுடன் பேச விரும்பியவருக்கு பேசுவதற்கான ஏற்பாட்டையும் நண்பன் செய்து கொடுத்தான். கனடாவிலிருந்து இவனை அழைத்த அழைப்பை இவன் அதிகமாய் நம்பிவிட்டான். இவன் இயக்கவேலை செய்த காலங்களில் தொடர்போடிருந்தவர்களை இவன் செய்து முடித்த வெற்றிகளுக்கெல்லாம் இனிப்பு அனுப்பி மகிழ்ந்தவர்களையும் இன்னும் பலரையும் பற்றி விசாரித்த கனடாக்காரர் எல்லோரையும் இணைத்து இவனை வெளியில் எடுக்க பண உதவி செய்வதாக வாக்குறுதியளித்தார்.

தனது இருள் நிறைந்த வாழ்வுக்கு ஒளிவரப்போகிறதென நம்பியவன் ஒருநாள் கனடாக்காரரின் தொலைபேசியிலக்கத்தை எனக்குத் தந்து அவருடன் பேசும்படி கேட்டிருந்தான். நம்பிக்கையோடு அந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டேன். தான் வேலையில் நிற்பதாகவும் என்னுடன் தொடர்பு கொள்வதாகக்கூறி எனது தொலைபேசியிலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். நம்பிக்கையுடன் இருந்த எனக்கு மறுநாள் கனடாவிலிருந்து இன்னொருவர் தொடர்பு கொண்டார். தனது நண்பரே என்னுடன் முதல்நாள் கதைத்ததாகவும் அவரும் தானும் இணைந்து இந்தக் கைதிகளுக்காக ஒருபெரும் திட்டத்தை வைத்திருப்பதாகச் சொன்னார். நல்ல திட்டமானால் அதில் இணைந்து செயற்படுவதில் உதவுவதில் என்ன மறுகருத்தென ஒப்புக்கொண்டு திட்டத்தைக் கேட்டேன்.

திட்டம்:- கனடா அமெரிக்கா ஐரோப்பாவில் புலிகளின் பணங்களை கையில் வைத்திருப்பவர்களின் தொலைபேசியிலக்கங்களைத் தருவதாகவும் அவர்களிடம் தொடர்பு கொண்டு அவலப்படுவோருக்கு உதவுமாறு கேட்கச்சொன்னார். அடுத்த ஆயுதப்போராட்டம் அடிபட்ட மக்களின்¸ மனவுணர்வுகளையெல்லாம் படம்பிடித்து வைத்திருப்பது போல விளக்கம் தந்தார். ஏற்கனவே பலர் தந்ததை இந்த நண்பர் திருப்பி அரைத்துத் தந்தார்.

இறுதியில் இப்போது நான் கேட்கும் கைதிக்கான அவரது பங்கென்ன என்பதைக் கேட்டேன். வளமையாக பலர் சொல்லி ஒதுங்கிய…, ஐயோ நான் கனக்கச் செய்திட்டேன் என்னால ஏலாதென்ற என்ற பதில்தான் வந்தது.

அடுத்தநாள் இந்த நபர்கள் பற்றி கனடா நண்பர்களிடம் விசாரித்து இவர்களது தொலைபேசியிலக்கங்களை சரிபார்த்தபோது இடி தான் விழுந்தது. ஒரு கைதி எப்படி தொலைபேசி பாவிக்கிறான் எப்படி அவனது மனைவி இருக்கிறாள் ? கைதிகளின் மனைவிமாரை இராணு அதிகாரிகளுடன் தொடர்பபடுத்திக் கதைபுனைவது இவர்கள் தொழில் என்பதனையும் அறிந்தேன். குறிப்பாக மேற்படி கைதியின் புதினங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே பேசியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இந்த அரிய வேலையைச் செய்தவர் கனடாவில் வாழும் யாழ், ஏழாலையைச் சேர்ந்த கேதீஸ் என்பவர் என்ற உண்மையையும் அறிந்தேன்.

இந்த நபர்கள் 2009ம் ஆண்டு முகாம்களிலிருந்து தப்பி தமிழகம் போயிருந்த பல போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதாகக் கதையளந்து முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததென்ற புதினம் கேட்டுவிட்டு அத்தோடு அவர்களைக் கைவிட்டார்கள். அதுதான் போகட்டும் அவர்களுக்கு உதவிய சிலருக்கு அந்தப்போராளிகள் உளவாளிகள் என்று கதைகட்டி அவர்களது வாழ்வுக்கு உலைவைத்தவர்கள்.

சாவோடும் வாழ்வோடும் போராடும் முன்னாள் போராளிகளுக்கு துரோகிப்பட்டம் வழங்கி தங்களது தேசிய உணர்வை காக்கிற இவர்கள்…., 2009 இந்தத் என்னுடன் கதைத்திருந்தார்கள். பல போராளிகள் பற்றி புலனாய்வுக்கதைகளைச் சொன்னார்கள். நான் தொடர்பில் இருந்த போராளிகளின் குடும்பங்களை போராளிகளை அரச உளவாளிகள் என்று விளக்கவுரையும் தந்து கிடைக்கவிருந்த உதவிகளைக்கூட குறுக்கே நின்று தடுத்தவர்கள். குரல்களை இனங்காண முடியாதவாறு தங்களை உருமாற்றி இப்போதும் அந்தப்பிள்ளைகளின் வாழ்வைக் கருக்கக் கங்கணங்கட்டி நிற்கிறார்கள்.

இந்தத் தொலைபேசியில் நான் உதவி வேண்டும் கைதியுடன் பேசிய ஏழாலையைச் சேர்ந்த கேதீஸ் அவர்கள் பொட்டுஅம்மானின் அணியில் பணியாற்றிய மாதவன் மாஸ்ரருக்காக தான் பணியாற்றியதாகவும் 2009 மே18 தன்னுடன் மாதவன் மாஸ்ரர் தொலைபேசியில் கதைத்து மாறிமாறி கண்ணீரால் பிரியாவிடை பெற்றதாகவும் கனடாவில் கதைசொல்கிறார்.

(மாதவன் மாஸ்ரரின் மனைவியின் மனநலம் பாதிக்கப்பட்டு சிறையில் இருப்பதாக நம்பப்பட்டது. கனடாவிலிருக்கும் மாதவன் மாஸ்ரரின் மனைவியின் சகோதரர் தனது சகோதரியை வெளியில் எடுத்துத் தருவதாகச் சொன்னவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தார். கடைசியில் தானே இலங்கைக்கப் போய் தனது சகோதரியை (மாதவன் மாஸ்ரரின் மனைவியை) இலங்கையின் சிறைகளெங்கும் தேடியும் இன்னும் அந்த அக்காவைக் காணவில்லை. ஒரு சகோதரனாக இயன்ற முயற்சிகளையெல்லாம் செய்தார் அந்தச் சகோதரன். ஆனால் மாதவன் மாஸ்ரரின் மனைவியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது குடும்ப உறவுகளுக்கே தனது இறுதி நேரம் பற்றிச் சொல்லாது போன மாதவன் மாஸ்ரரின் கடைசிப்பயணத்தைக் கண்ணீருடன் முடித்து வைத்ததாகச் சொன்ன கேதீஸ் அவர்கள்…..,

மாதவன் மாஸ்ரர் பணியாற்றிய தென்னிலங்கையில் சயனைட் அருந்தி உயிர் தப்பவைக்கப்பட்ட ஒரு போராளிக்கு உதவாவிட்டாலும் பறவாயில்லை நம்பிக்கையைக் கொடுத்து ஏமாற்றாமல் விட்டிருக்கலாமல்லவா…?

பல போராளிகள் மாவீரர் குடும்பங்களுக்கு உதவுவதாக விபரங்களைப் பெற்று அவர்களுடன் தொடர்பு கொண்டு புதினம் கேட்டறிந்துவிட்டு அவர்களுக்கு எதுவுவித உதவியும் செய்யாமல் அவர்களெல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் என்று பரப்புரை செய்து பலரைத் துரோகியாக்கியுள்ளார்கள்.

இவர் போல இன்னும் பலர் பொட்டுஅம்மானின் ஆட்கள் மாதவனின் றமணாவின் ஆட்களென்று சொல்லி வருகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்கின்ற அவர்கள் நேசித்த தளபதிகள் வளர்த்த போராளிகளுக்கு உதவியென்று கேட்கிறபோது மட்டும் ஒதுங்கிவிடுகிறார்கள். ஏன் ?

சில மாதங்கள் முதல்வரை இன்றுள்ள அனைத்துலகச்செயலகத்துடனும் அறிக்கைப்புலியாக மலேசியாவிலிருந்து அறிக்கைவிட்ட இராமு சுபனுடனும் நேரடியாக ஸ்கைப்பில் விடுதலைப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போது இராமு சுபன் ஓய்வுபெற்று ஆ.அன்பரசன் என்று அறிக்கைப் போர் செய்யும் அனைத்தையும் வைத்திருக்கும் அனைத்துலகச் செயலகத்தின் தூணாக இயங்குகிறார்கள் இவர்கள் என்பதனையும் இப்போது அறிய முடிகிறது.

உதவாவிட்டாலும் பறவாயில்லை. நம்பிக்கைகளைக் கொடுத்து ஏமாற்றாமல் விட்டுவிடுங்கள். புலத்தில் இருந்து நாங்களோ எங்கள் பிள்ளைகளோ ஊரில் போய் வாழப்போவதில்லை. ஆனால் எங்களையெல்லாம் நம்பி சிறைகளிலும் தெருக்களிலும் வாழும் முன்னாள் போராளிகளுக்கு அவர்கள் செய்த தியாகங்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்காமல் விடலாமே. முடிந்தால் ஆளுக்கொரு குடும்பத்தை உயிர் வாழ வைப்போம். இயன்றால் இத்தகைய சதீஸ் போன்ற நிலமையில் உள்ள 638அரசியல் கைதிகளின் (இவர்கள் சந்தேகத்தின் பெயரிலும் சம்பவங்களின் பெயராலும் கைதாகி வருடக்கணக்கில் சிறையில் இருப்பவர்கள்) விடுதலைக்கு இயலுமான உதவிகளை வழங்கி அவர்களை வாழ வைப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இந்தக்கைதியின் குரலை யாரும் இன்னும் படிக்கவில்லையா....? இவனது கதையை பலபக்கங்கள் வரை நீட்டிப் பலர் கருத்தாடியிருந்தீர்கள் உதவியென்கிற போது எல்லோரும் மெளனமாகிவிட்டிர்கள். இவனது நிலமையை வெளியில் சொல்லியிருக்கிறோம்....ஏனிந்த மெளனம் ? சிறுதுளி இவனுக்காக உதவுவீர்களா ? :unsure:

மீள் நினைவு....

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.

எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.

ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?

கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

Link to comment
Share on other sites

இந்தக் கைதி தனது விடுதலைக்கான நாளுக்காக காத்திருக்கிறான். இவனது குழந்தை அப்பா வருவாரென நம்பியிருக்கிறான்......

Link to comment
Share on other sites

நண்பர்களே நாம் சாகும் போது ஒன்றையும் கொண்டு போவதில்லை.இது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் இதனை எமது யதார்த்த வாழ்வில் உணர்ந்து கொள்வதில்லை.நண்பர்களே நாம் எங்களுடைய மேலதிக செலவுகளை குறைத்து அதிலிருந்து ஒரு சிறு துளியை எமது இந்த உறவிற்க்காகவும் அவருடைய அந்த பிஞ்சு மழலைக்காகவும் கொடுப்போம்.

Link to comment
Share on other sites

நண்பர்களே நாம் சாகும் போது ஒன்றையும் கொண்டு போவதில்லை.இது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.ஆனால் இதனை எமது யதார்த்த வாழ்வில் உணர்ந்து கொள்வதில்லை.நண்பர்களே நாம் எங்களுடைய மேலதிக செலவுகளை குறைத்து அதிலிருந்து ஒரு சிறு துளியை எமது இந்த உறவிற்க்காகவும் அவருடைய அந்த பிஞ்சு மழலைக்காகவும் கொடுப்போம்.

இந்தக் கைதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உறவுக்கு எனது சிறு பங்களிப்பொன்றை வழங்க விரும்புகிறேன். விபரம் தாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.