Jump to content

மைக் ஸ்பீக்கிங்!


Recommended Posts

கற்பனை: முகில்

"மைக்'ல நாம பேசலாம். ஆனா "மைக்'கால நம்மகிட்ட பேசமுடியுமா!

-செம ஃபீலிங்கான தத்துவமா இருக்குல்ல! இப்படி ஒரு தனித்துவம் வாய்ந்த தத்துவத்தை ஒரு கட்சிக் கூட்ட மேடையிலே, பேச்சில சோளப்பொறி...ச்சீ...தீப்பொறி பறக்குற ஒரு அரசியல் பேச்சாளர் எடுத்து விட ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நம்ம கதாநாயகன் "மைக்'கேல். இனி ஓவர் டூ மைக்கேல்!

ஹலோ "மைக்' டெஸ்டிங் ஒன்...டூ..த்ரீ...

இங்கே கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நான்தான் "மைக்'கேல் பேசறேன். நீங்க சாதாரணமா பேசுனாலும், சத்தே இல்லாம பேசுனாலும் பேசறதை சத்தமா எல்லாருக்கும் கேக்குற மாதிரி சவுண்டாக்குறதுதான் என்னோட குணம், தொழில். உங்க குரலைச் சவுண்டாக்குற எங்களால, சுயமா சவுண்டா குரலு கொடுக்க முடியாதுன்னு ஒருத்தர் சவுடால் விட்டதை என்னால தாங்க முடியல! நைட்டெல்லாம் தூங்க முடியல! என் மனசுல உள்ளதைக் கொட்டிடுறேன்.

என்னோட பொறப்பு சமாச்சாரம் பத்தியெல்லாம் பெருசா சொல்லுறதுக்கு ஒண்ணுமில்லை. நான் பொது வாழ்க்கைக்கு வரக் காரணமா இருந்தவர் கந்தசாமி. "மெüனம் சவுண்ட் சர்வீஸ்' ஓனர் அவர்தான். என் மேல அவருக்கு ரொம்ப பிரியம். எப்பவும் என்னை ஒரு மஞ்சத் துணியில் சுத்தித்தான் தூங்க வைப்பாரு. நல்லாத் தூங்குவேன். எப்பவாவதுதான் டியூட்டி! ஆனால் என் முதல் அனுபவமே செம ஃபீலிங்காப் போயிடுச்சு! பாட்டு பாடுறதுக்கு மைக் வேணும்னு சொல்லித்தான் வாங்கிட்டுப் போனான் ஒருத்தன். அட, நமக்கு கெடைக்குற முதல் வாய்ப்பே சூப்பரா, மங்களகரமா பாட்டு சான்ஸô இருக்கேன்னு நம்பி நானும் போனேன். அங்க போனா...

"புறங்கையால புலிய விரட்டுவ

முழங்கையால முதலய விரட்டுவ

இடது கையால இமயத்த தூக்குவ

வலது கையால வானத்த தூக்குவ

என் கையால எள்ளுருண்டை தின்னவனே எமன் கைக்கு சோசியம் பாக்கப் போனியோ!' -அப்படின்னு ஒரு பாட்டி மூக்கைச் சிந்திக்கிட்டே ஒப்பாரி வைச்சு ஆரம்பிச்சா!

ச்சே! ஆரம்பமே அழுகையாப் போயிடுச்சேன்னு செம அப்செட் ஆயிடுச்சு! நாலு நாளா ஒழுங்கா சவுண்டே வரல. தொண்டை அப்செட் ஆயிடுச்சு. அடுத்ததா ஒரு ஆளு வந்து "சாயங்காலம் வீட்டாண்ட வந்து குழாய் கட்டிருங்க'ன்னு புக் பண்ணிட்டுப் போனான். இதுவாவது ஒப்பாரியா இல்லாம உருப்படியா இருக்கணும்னு என்னோட இஷ்ட தெய்வம் மைக் மூனிஸ்வரர்கிட்ட வேண்டிக்கிட்டேன். நல்லவேளை. என்னைச் சுத்தி மோளம், கிட்டாரு, ஆர்மோனியம்னு நெறைய விஷயம் வச்சிருந்தாங்க! நல்ல கூட்டம். சினிமாக்காரங்க கச்சேரியாம். சினிமாவுல பாடிக்கிட்டு இருக்குற ஒரு பெரிய பாடகர் பாட வரப்போறாருன்னு சொன்னாய்ங்க! எனக்கு ஒரே பிரம்மிப்பா இருந்துச்சு. உடம்பெல்லாம் சிலிர்த்துக்கிச்சு! தகதகான்னு முட்டியைத் தாண்டி நீண்டுக்கிட்டிருக்குற மாதிரி ஜிப்பா ஒன்னைப் போட்டுக்கிட்டு வந்தாரு ஒரு பாடகரு. பார்த்தா தமிழ்நாட்டுக்காரரு மாதிரி தெரியல. பக்கத்துல ஒரு குண்டு ஆன்ட்டியும் பாட ரெடியா இருந்தாங்க. என் முன்னால வந்து பாட ஆரம்பிச்சாரு அந்தப் பாடகரு.

"வதுமான்கா ஊரத்துங்கோ!

டயிர்ஷாதம் ரெதி பண்ணுங்கோ!

உங்கம்மா எங்கம்மா நம சேட்டு வெப்பாலா!

சும்மா சும்மா நம பெட்டு வித்தாலா'

என்ன இலவுடா இது. இதுக்கு இலவு வீட்டு ஒப்பாரி பாட்டே எவ்வளவோ தேவலைன்னு புரிஞ்சுது. இந்தச் சம்பவம் நடந்ததுல இருந்து, யாராவது பாடுறதுன்னு சொல்லி என்னை வாங்கிட்டுப் போனாப் போதும். வெறுப்பாயிடும் எனக்கு. அது ஏதோ ஆடி மாசமாமே...அந்த மாசம் முழுசும் இதே ரோதனைதான். யாராவது என் முன்னால நின்னு கத்திக்கிட்டு நிக்க, டெய்லி ராக்கூத்துதான். ஒரு வழியா ஆடி முடிஞ்சுப்போச்சு. கொஞ்ச நாளா வேலையே இல்லை. நல்லா ரெஸ்ட் கிடைச்சுது.

"நம்மத் தலைவர் பேசுறாரு. ஏழு மணிக்கு. தேரடி முக்குலதான் 'னு ஒரு தொண்டரடிப்பொடி வந்து சொல்லிட்டுப் போனாரு. அப்பாடா நிம்மதி. பாட்டு இல்ல, பேச்சுதான்னு நிம்மதியா இருந்துச்சு. ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய கூட்டம், பர்ஃபெக்டா எட்டே முக்காலுக்கு தொடங்கிச்சு. சதுரம், முக்கோணம், வட்டம், மாவட்டம் எல்லாம் வரிசையா வந்து "கொழகொழ'ன்னு உளறிட்டுப் போனாய்ங்க! இந்தத் தலைவரு பேச ஆரம்பிச்சாப் போதும் வாய்க்குள்ள டெங்கு கொசு நுழையறது தெரியாமக் கூட கூட்டம் உட்கார்ந்து கேட்கும்னு சொன்னாங்க. வந்தாரு தலைவர்.

"என் கூடப் பிறக்காத உயிரின் உயிர்களே'ன்னு ஆரம்பிச்ச அவரு..

"நான் ஆளும் வர்க்கத்தைக் கடுமையாகக் கேட்கிறேன். கராத்தே தெரியும் என்று சொன்னால் கடைக்காரன் பிளாக் பெல்ட்டை இலவசமாகக் கொடுத்து விடுவானா என்ன?

எந்தப் பாம்பாவது விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்குமா?

விஷம் ஏறுனா நுரை தள்ளும். அதுக்காக நுரை தள்ளுனா விஷம் ஏறாது. தேள் கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா வலிக்காது.'

இப்படி எக்கச்சக்கமா பினாத்திக்கிட்டே போனாரு. அதோட விட்டாரா...

"சுடுற தோசைக் கல்லுல மாவை ஊத்தி தோசை சுடலாம்

அதுக்காக சுடுற துப்பாக்கில மாவை ஊத்தினா தோசை சுட முடியுமா?'

அய்யா சாமி..இதை அந்தக் கூட்டம் விசிலடிச்சு கைதட்டி ரசிச்சதைப் பார்க்கறப்போ என்னால தாங்கவே முடியல!

"கரண்ட் எனக்குள்ளே ஓடினாத்தான் என்னால பேசமுடியும். அதே கரண்ட் உனக்குள்ளே ஓடவிட்டா உன் பேச்சை என்னால நிறுத்த முடியும்'னு பஞ்ச் டயலாக் விடுற அளவுக்கு எனக்குள்ள வெறி ஏத்திட்டுப் போயிட்டாரு அந்தத் தலைவர்.

அடுத்து ரெண்டு நாள் கழிச்சு ஒரு கல்யாண வீட்டுல ஷிப்ட் பாக்கப் போயிருந்தேன். பேசணும் பேசணும்னு என்னை "மொய்'ச்சு எடுத்துட்டாங்க!

"மணமக்களின் நல்வாழ்க்கைக்கு பதினோரு ரூபாய் மொய் செய்த நம் சமூகத்தலைவர் வடக்கம்பட்டி ராமசாமி தற்போது உங்களிடையே பேசுவார்'னு சொன்னாங்க. வந்தாரு வடக்கம்பட்டி.

"இந்த அருமையான தருணத்திலே இந்த அழகான தருணத்திலே ஒரு நல்ல நாளிலே மங்களகரமான நாளிலே நான் இங்கே வந்து எனை பேச அழைத்த ஒரு அருமையான பொழுதிலே மணமக்களை வாழ்த்த வாய்ப்பு கொடுத்த இந்த தம்பதிகளின் வாழ்க்கை நல்ல விதமாக அமைய இவர்கள் பதினாறும் பெற்று உளமாற நெஞ்சார மனதார...' ன்னு பேசிக்கிட்டிருக்கறப்பவே "சாப்பாடு ஆறுது'ன்னு யாரோ சவுண்ட் விட அவ்வளவுதான் என்னைக் கீழே தள்ளிவிட்டுட்டு ஓடியே போயிட்டாரு வடக்கம்பட்டி.

எப்பா இன்னும் சில விரோதிங்க இருக்காங்க எனக்கு . அதுல நம்பர் ஒன் விரோதின்னா அது பல்லைத் தேய்க்காம என் முன்னால வந்து பேசுற பயலுகதான். படுபாவிங்க! அடுத்த "ரவுண்ட்' விரோதிங்கன்னா அது குவார்ட்டர் குப்புசாமிங்கதான். இவங்க பேசறதையெல்லாம் முன்னால உட்கார்ந்திருக்கிற நீங்க கேட்கறீங்களோ இல்லையோ, தலையெழுத்து , ஒரு எழுத்துவிடாம நான் கேட்டுத்தான் ஆக வேண்டியதிருக்கு. இதுல ஒரு படி மேல போயி எச்சியால என்னைக் குளிப்பாட்டுற ஜந்துக்களும் இருக்காங்க.

ஓ.கே. இன்னிக்கு ஏதோ ஸ்பெஷல் ஆர்டர் வந்திருக்கு போல. அதான் நம்ம ஓனர் முகம் இவ்வளவு பிரகாசமா இருக்கு. ஆகா என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியல . நான் டெல்லி போயிட்டிருக்கிறேனா! என்னது நான் பார்லிமெண்டுக்குப் போயிட்டிருக்கிறேனா! வாழ்க்கையில இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லையே! இவ்வளவு நாள் வெட்டிப் பேச்சா இருந்த வாழ்க்கைக்கு இன்னைக்குத்தான் ஒரு அர்த்தம் கிடைக்கப் போகுது. ஆஹா சபை கலைகட்டுதுடோய்! என் முன்னால உட்கார்ந்திருக்கிற எம்.பி. பேசப் போறாருடோய்!

"வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. ஏன்?'

"ஏர்வாய்ஸ் செல்லுல மெúஸஜ் ப்ரீயா?'

"கால்நடைத் துறை அமைச்சருக்கு பால் கறக்கத் தெரியணுமா?'

"மல்லிகா ஷெராவத்துக்கு மாமியாராகப் போறது யாரு?'

என்னடா இவரு ஏதோ கேட்கணுமேன்னு கடமைக்கு கேட்ட மாதிரி இருக்கு. யாராவது எழுதிக் கொடுத்ததை இங்க வந்து கேட்கிறாரோ? இதுல ஏதாவது "மணி' விவகாரம் இருக்கலாம். நமக்கெதுக்கு வம்பு. வழக்கமான டயலாக்கோட நான் முடிச்சுக்கிறேன். இத்துடன் என் பேருரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!

:lol::lol::):):lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.