Jump to content

“பெயரிடாத நட்சத்திரங்கள்” ஆயுதம் தாங்கிய போரிலக்கியம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20737045.jpg

ஊடறு, விடியலின் வெளியீடாக வந்த “பெயரிடாத நட்சத்திரங்கள்” (2011) எனும் கவிதைத் தொகுப்பில் 26 ஈழப்பெண் போராளிகளின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.கவிஞர் நகுலா எழுதிய “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் கவிதையின் தலைப்பே இத்தொகுப்பிற்கும் வைக்கப்பட்டுள்ளது.

கவித்துவம் நிரம்பிய இத்தொகுப்பு வாசிப்பாளனுக்கு ஈழப்பெண் போராளிகளைப் பற்றிய புதிய அனுபவங்களைத் தருகிறது. “இதுவல்லோ கவிதை” என்கிற எண்ணம்தான் ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணரமுடிகிறது. இந்நூலை வாசிக்கத் தொடங்கும்போது பிடித்தமான வரிகளை அடிகோடிடுவதற்கு வண்ணம் பூசும் பேனாவை எடுத்துக்கொண்டேன்.

ஒவ்வொரு கவிதையின் வாசிப்பிலும் உணர்கிறேன், பிடித்தமான வரிகளை வண்ணமிடுவதென்றால் எல்லா வரிகளையும் வண்ணமிட வேண்டும். இருப்பினும் சில வரிகளையாவது வண்ணமிட்டு வைத்துக் கொள்ளலாம் என நினைத்து வண்ணமிட்டால் வண்ணமிடப்படாத வரிகளைப் பார்த்து நான் ஒரு வகையான குற்ற உணர்ச்சிக்குத்தான் ஆளாக நேர்கிறது.

இதை அவரவர்களின் வாசிப்பில்தான் உணரமுடியும். சாதியம் வேரோடிபோன இந்திய மண்ணில் அதன் அதிகாரத்தை எதிர்த்து “யாருக்கும் நான் அடிமை இல்லை” என்றார் டாக்டர் அம்பேத்கர். இந்த எண்ணம் எந்த ஒரு மனிதனையும் தலைநிமிர்வோடு வாழச்செய்கிறது.

73047315.jpg

யாருக்கும் நான் அடிமை இல்லை என்கிற உணர்வைத்தான் இவர்களின் கவிதைகளில் பெரும்பாலும் காணமுடிகிறது. இது அடிப்படையில் மேல், கீழ் என்கிற உணர்வையே தகத்தெறிகிறது.

பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை.

களத்தில் நின்று போராடி மக்களின் விடுதலைக்காக தம் வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் எழுதுகிறபோது, உண்மையிலேயே அவ்வெழுத்துக்கள் வலிமையோடு இருக்கின்றன.

இந்த வகையில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” சிறப்புத்தன்மை பெறுகிறது. போர்க்களத்தில் ஆயுதமேந்திப் போராடிய பெண் இராணுவ வீரப்புலிகளின் கவிதைகள் துடிப்புள்ள நம் இரத்தங்களை இன்னும் சூடேற்றுகிறது.

“கண்ணுறக்கம் தவிர்த்த நடுநிசி

எல்லை வேலியில்

நெருப்பேந்துகிறது என்னிதயம்

ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான

என் காவலிருப்பு”

இனவெறியர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற காவலிருக்கும் கவிஞர் அம்புலிக்கு யுத்தம் பிடிக்காது என்றும் கால நிர்ப்பந்தமே அவரை கட்டாயப்படுத்தியிருக்கிறது என்றும் கூறுகிறார். யுத்தத்தை அம்புலி வெறுத்தாலும், யுத்தம் செய்தே ஆக வேண்டும் என்கிற நெருக்கடி வருகிறபோது அவருடைய மறப்பண்பு வெளிப்படுகிறது.

“அஞ்சியும் கெஞ்சியும்/ பணிந்தும் குனிந்தும்/ வாழ்வதல்ல என் விதி” இவ்வரிகள் அடிமைபட மறுத்த அம்புலியின் வீர உணர்வு. இக்கவிஞர்களிடத்தில் எப்பொழுதும் ஒரு வெற்றியுணர்வை காணமுடிகிறது. அது வீரத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது; கோழைத்தனத்திற்கும் வீரம் கற்பிக்கும் இவர்களின் வரிகள். போர்க்களத்தைப் பாத்திராத, அதைப் பற்றி அறியாத கவிஞர்களுக்கு வாய்க்காத வரிகள் இவர்களின் கவிதைகளில் காணமுடிகிறது என்றால் அதுதான் அவர்கள் வாழ்ந்த வரலாறு. கவிஞர் கலைமகளின்

“மீட்சி பெறுகின்ற என்

உணர்வுகளில் உறுதி பிறக்கிறது

சற்றுத் தூரத்தை

உற்றுப் பார்க்கிறேன்

சலனமற்று சாவை எதிர்பார்த்து

எனக்காகக் காத்திருக்கிறது

பகைவீடு”

எனும் வரிகள் போர்க்களத்தில் அவர் தன்மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. இத்தொகுப்பில் சிலகவிதைகள் இந்தியாவைப் பற்றியும் பதிவுசெய்து இருக்கின்றன. “இந்தியா என்கின்ற இமாலயம்/ எங்கள் மனப்பரப்பில் இடிந்து/ நொறுங்குகின்றது” என்கிறார், கவிஞர் ஆதிலட்சுமி. இதைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.

சுமியின் மற்றொரு கவிதையில் இந்திய இராணுவம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்த ஓரிடத்தில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியம் பற்றியது.

“இங்கேதான்

இந்தியன் ஆமி குடியிருந்தது

கதிரை, மேசை

கதவு, ஜன்னல் எல்லாம் உடைத்து

சப்பாத்தி சுட்டது.

பள்ளி வளவில் உயர்ந்து நின்ற

தென்னைகளைத் தறித்து

வீதிக்குத் தடையாய்ப் போட்டது”

ஆதிலட்சுமியின் இந்த கவிதை வரிகள் இந்திய இராணுவம் செய்த அட்டூழிய கொடுமைகளில் ஒரு சிறிய இம்மியினுள் ஒரு கூறைத்தான் இங்கே படம்பிடித்துக் காட்டியுள்ளது. உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதை சொல்லுவதற்குக் கூட ஆதிலட்சுமிக்கு “உண்மை ஒருபோதும்/ புதைகுழிக்குள் உறங்காது” என்று போர்க்களம் சார்ந்த சொல்லே வசப்படுகிறது.

53627487.jpg

இவர் “அரச பயங்கரவாதத்தின் அடிமைகளல்ல நாம்” என்பதை எதிரிகள் உணரவேண்டும் என்று நினைத்தவர்.

கவிஞர் வானதி அவர்களின் போர்க்கவிதை பெண்பற்றிய சிந்தனையையும் முன்வைக்கிறது. “ஆணாதிக்கப் புயலால் அடுப்படியில் அகதியாகி தீயோடு மௌனயுத்தம் நடத்துபவளே புறப்பட்டு வா” என விளிக்கும் வானதி

“எம் இதயம் நேசிக்கும்

தேசத்து விடுதலை

எமக்கு எட்டும்போது – அங்கே

பெண்ணடிமைக்கு

சமாதி கட்டப்படும்

சமுதாயத்தின் பிற்போக்கு சிந்தனைகளுக்கு

புதைகுழி தோண்டப்படும்” – என்கிறார்.

நாம் எதிர்பார்த்திருந்த ஈழவிடுதலை நிகழ்ந்திருக்குமேயானால், அதன்பிறகு ஈழப்பெண்கள் வானதி கருதுவது போன்று நடத்தப்பட்டிருப்பார்களா? அல்லது கடந்த கால பெண்ணின் வாழ்க்கைமுறை போன்றே பிற்போக்குசிந்தனைகளின் பாதையில் அவர்களின் வாழ்க்கை நடத்தப்பட்டிருக்குமா? என்பன போன்ற கேள்விகள் இருந்தாலும் ஆணின் அடக்குமுறையில் வாழ்ந்த பெண்கள் போர்க்காலத்தில் தம் தேசத்து ஆண்களைப் போலவே எதிரிதேசத்து ஆண் இராணுவ வீரர்களுக்கு எதிராக போர்முனையில் ஆயுதம் ஏந்தி போராடிய வரலாறு கடந்த காலத்தில் பல நூற்றாண்டுகளாக ஆணதிகார சமூகத்தில் நிலவிவந்த பெண்பற்றிய சிந்தனையை முறித்துப் போட்டிருக்கிறது.

“மழையில் நனைந்து

அடுத்த ஆடை மாற்றாது

‘பொஸிசனில்’ நின்றதை

பசி மறந்து

தூக்கம் மறந்து

எதிரி எல்லையை மீறுவதெனில்

எம் உடல்களின் மேலாகத்தான் என

உறுதியோடு காவலிருந்ததை

கூறுவாயா?”

இதுபோன்ற வானதியின் கவிதைகள் ஒரு உத்வேகத்தை தருகின்றன. கவிஞர் கஸ்தூரியின் கவிதைகள் ஈழத்தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனைகளை நாட்டாமை செய்வதாய் சென்ற அயல்நாட்டைப் பற்றி அதிகமாகவே பேசுகிறது. நேரடியாக ஒளிவு மறைவுயின்றி மூஞ்சிலே காரியை துப்புவதைப் போலத்தான் இருக்கிறது. இதுபற்றி கஸ்தூரியின் காலம் அவளது கைபிடித்து நகர்கிறது, அவை வெற்றுடல்கள் அல்ல வெடிமருந்துப் பொதிகள், வல்லரசுகள் போன்ற கவிதைகள் பேசுகின்றன. “வல்லரசுகளே/ நீங்கள் வாழ்வதற்காக/ வாழ்பவர்களை வதைப்பவர்கள்/ உங்கள் வல்லமை/ ஆய்வு செய்யப்படுகையில்/ வளர்முக நாடுகளே/ வாழா வெட்டியாகின்றன/ நீங்கள்/ நிலவில் வரலாறு படைக்க/ மண்ணை மானபங்கம் செய்பவர்கள்” இப்படி வல்லரசுகளின் முகங்களை கூர்மையான கவிதை நகங்களால் கீறும் கஸ்தூரியின் கவிதைகள் வல்லரசு நாடுகளைப் பற்றிய போலிமுகத்தையும் திரையிட்டு காட்சிப்படுத்துகிறது.

35572908.jpg

நாமகள் என்ற கவிஞரின் கவிதை தன்னுடைய காதல் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது. இருவர்களுமே ஆயுதமேந்திய போராளிகள். வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்ட காதலனைப் பார்க்க முடியாமல் தவிக்கும் காதலி எத்தனையோ முறை பார்க்க முயற்சி செய்தும் பார்க்க முடியாமல், அவர்களின் உணர்வுகளைப் பறிமாறிக்கொள்ள கடிதங்களே துணைசெய்கின்றன. இப்படியே நீடீக்கிற வாழ்க்கையில் “எப்போதாவது தெருவில்/ அவசர இயக்கத்தில்/ கண்டுவிட நேர்கையில்/ சந்திப்பை வரவேற்பதாய் அவன்/ கண்கள் ஒருமுறை விரியும்/ மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்./ அவனுக்குத் தெரியும்/ எனக்கு அது போதுமென்று” என்கிறார், கவிஞர் நாமகள். போர்க்காதல் விடுதலையை வென்றெடுக்கத் துடிக்கும் துப்பாக்கிகளே. கவிஞர் வானதி 1991-இல் ஆனையிறவு சமரின்போது ‘எழுதாத என் கவிதை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இக்கவிதை வானதி (கேப்டன்) எழுதிக்கொண்டிருந்தபோது அவருடைய அருகில் இருந்தவர் போராளி நாதினி. 2000- ஆம் ஆண்டில் ஆணையிறவுத் தளம் மீட்டெடுத்ததின் பின் போராளி நாதினி ‘எழுதாத உன் கவிதை’ என்ற தலைப்பில் கேப்டன் வானதியின் எண்ணம் நிறைவேற்றப்பட்டதற்கு எழுதியுள்ளார். அக்கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. எழுதாத என் கவிதை என்பது வானதியின் கடைசிக் கவிதையென்றால் எழுதாத உன் கவிதை என்பது நாதினியின் முதல் கவிதை.

“ ‘எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்’ எனும்

உன் கவிதை எழுதப்பட்டுவிட்டது.”

“உன் துப்பாக்கி முனையை விட

உனது பேனா கூர்மையானதால்,

எழுதாது போன உன் கவியை

எழுதுவதற்காக இவர்

உயிரைக் கோலாக்கி

உதிரத்தை மையாக்கினர்.

எழுதாத உன் கவிதையை எழுதிவிட்டு

எம் செல்வக் குழந்தைகள்

உன்னிடமே வந்துவிட்டனர்.”

நாதினியின் இந்த கவிதையை முழுமையாக வாசிக்கிறபோது இது முதலில் கவிதை எழுதத் தொடங்கும் ஒருவரின் கவிதை இது என்று சொல்லும்படியாக இல்லை. கவிதை இலக்கியத்தை எழுதி எழுதி பயிற்சிப் பெற்ற ஒருவர் எழுதிய கவிதை போன்றே உள்ளது. இது நாதினியின் முதல் கவிதை என்றால் அவரின் வாழ்வின் பின்னணி அவரை இந்த அளவிற்கு எழுதத் தூண்டியுள்ளது எனலாம்.

கவிஞரும் போராளியுமான கஸ்தூரியின் மறைவுக்குப் பின்னர் பாரதி என்ற போராளி கஸ்தூரியைப் பற்றி எழுதுகையில் அவரின் இலக்கியத்தை விமர்சனம் செய்வதாகவும் அமைந்துள்ளது. அது பின்வருமாறு அமைகிறது. “உனை இனங்காணத் தவறிய/ இலக்கிய உலகின்/ இதயத்திற்கு/ இப்போதாவது தெரிந்திருக்கும்/ நீ இமயமென்று./ துப்பாக்கி மட்டுமே/ தூக்கத் தெரிந்தவர்கள் என்ற/ தப்பான வெற்றுக் கோள்களுக்கு/ நீ வெடிகுண்டு”. பாரதி கஸ்தூரியை இலக்கிய இமயம் என்று வருணித்துள்ளார். இவர்களுடைய இலக்கியங்களும் ஆயுதக்கருவிகளாவே இருந்துள்ளன. இவர்கள் ஏந்துகின்ற பேனாக்கள் ஆயுதக் கருவிகளை உற்பத்திச் செய்யும் தொழில்கூடமாகவும், இவர்கள் எழுதிய கவிதையைத் தூக்கிச் சுமந்த காகிதங்கள் ஆயுதக்கிடங்குகளாகவும் இருந்துள்ளன.

1988-ல் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் செய்த படுகொலை தொடர்பாக கவிஞர் தூயவள் “அந்நியன் பிடியில் எங்கள் கிராமம்” எனும் தலைப்பிட்ட கவிதையை எழுதியுள்ளார். “இறந்து கிடப்பவர்கள் ஈழத் தமிழர்கள் அல்ல இந்தியாவின் மனிதாபிமானமும் ஜனநாயகமும்தான்” என்று கூறும் தூயவள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார். இந்திய இராணுவத்தின் மீது அவள்கொண்ட கோபம் எரிமலையாய் கொழுந்துவிட்டு திமிறி எழுகிறது.

“இத்தனைக்கும்

பதில் சொல்ல வேண்டும்

எம்மால் இயன்றவரை

இறப்பதற்கு முன்னர்

ஓர் இந்திய ஆமியையாவது

அழிக்க வேண்டும் என்ற வெறி

கொழுந்து விட்டு எரிகிறது.”

கவிதைகளின் அம்சத்தைப் பொறுத்து பலவகையில் சிறப்படையும் “பெயரிடாத நட்சத்திரங்கள்” எனும் இக்கவிதைத் தொகுப்பில் 31.10.1996-ல் யாழ்ப்பாணம் மாணவர் ஒன்றியம் செம்மணி புதைகுழி பற்றி வெளியிட்ட துண்டுப்பிரசுரமும் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இத்துண்டுப் பிரசுரம் “அமைதி நகரின் மன்னம்பெரிகள்” எனும் தலைப்பில் அமைந்துள்ளது. மன்னம்பெரி என்பது ஒரு போராளியின் பெயர். அவரை 1971-ல் ஏற்பட்ட கிளர்ச்சியின் போது கைதுசெய்து, கடுமையாக சிதைத்து, வீதி ஊர்வலமாக இழுத்துச்சென்று பின் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளை இயற்றிய 26 கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி நாம் இங்கு விரிவாகப் பேசவில்லை. இந்த தொகுப்பை வாசிப்பவர்களுக்கு இக்கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளைக் குறித்து முழுமையாக அறிய வாய்ப்புண்டு. இத்தொகுப்பில் 26 பெண்போராளிகளைப் பற்றிய குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்நூலை வாசிப்பவர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் விருதுகளுக்காக எழுதப்படாமல், விடுதலைகளுக்காக எழுதப்பட்டவை. இவற்றில் அஞ்சிய வார்த்தைகளோ, கெஞ்சி நடுங்கும் சொற்களோ இல்லை. எதிரிகளின் இரக்க மனப்பான்மையையோ இன்ன பிறர்களின் உதவியையோ கேட்கவில்லை. கோடிக்கணக்கான யானைகளில் ஆயிரம் தேசங்கள் படையெடுத்து வந்தாலும் கண்ணில் பயம் அறியாது நெஞ்சிலே வீரத்தையும் தோளிலே துப்பாக்கியையும் ஏந்தி ஈழவிடுதலைக்காக போராடிய பெண் போராளிகளின் கவிதைத் தொகுப்பு “பெயரிடாத நட்சத்திரங்கள்” ஆயுதம் தாங்கிய போரிலக்கியம்.

- ஜெயப்பிரகாஷ், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி

நன்றி பதிவு

ஏன் என்னால் நேரடியாக படங்களை இணைக்க முடியாமல் உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது இந் நூலை புலம் பெயர் நாட்டில் எங்காவது வாங்கி இருந்தால் எங்கே வாங்கினீர்கள் என்ட விபரத்தை தருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“உன் துப்பாக்கி முனையை விட

உனது பேனா கூர்மையானதால்,

எழுதாது போன உன் கவியை

எழுதுவதற்காக இவர்

உயிரைக் கோலாக்கி

உதிரத்தை மையாக்கினர்.

எழுதாத உன் கவிதையை எழுதிவிட்டு

எம் செல்வக் குழந்தைகள்

உன்னிடமே வந்துவிட்டனர்.”

உதிரத்தை மையாக்கி எழுதிய நூல் பற்றிய விபரம் அறியவில்லை.

Link to comment
Share on other sites

சுதந்திர பறவைகள் வாங்கினாலே முதல் பார்ப்பது அம்புலியின் கவிதைகள் தான் அம்புலி திருமணம் ஆகி

குழந்தை ஒன்றும் இருந்தது இப்போது இவர்கள் எங்கேயோ..?..

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி ரதி

இந்தப் தொகுப்பை எங்கு வாங்கலாம் என்ற தகவல் யாருக்கும் தெரிந்தால் தரவும்

Link to comment
Share on other sites

53627487.jpg

நம்ம ,, வல்வை சஹாரா அக்கா ரேஞ்சில சொல்லணும்னா.......

இந்த தொகுப்பு , வகுப்பு ..பகுப்பு எல்லாம் வேணாமே........

சிரிச்சுகொண்டே ஓடினவங்க ......

சிரிச்சுகொண்டே செத்தும் போனாங்க ..........

அவுங்க ஆத்மாவ தூங்க விடுங்க..

புத்தகம் எழுதுறம் & தகவல் சேர்க்குறம் பேர்வழின்னு .. அவுங்க எலும்புகூடுகள .. மறுவாட்டி.. கிளறி எடுக்காதீக!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சுகொண்டே ஓடினவங்க ......

சிரிச்சுகொண்டே செத்தும் போனாங்க ..........

அவுங்க ஆத்மாவ தூங்க விடுங்க..

அறிவிலி இந்த வசனங்களை வாசிக்க மனது கனக்கிறது?

எப்படி இருந்தார்கள்..............

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”

சு.குணேஸ்வரன்
 


போர்ப்பகைப்புலத்தில் இருந்த பெண்கவிஞைகளின் வரிகளாக உயிரின் வாசத்தோடும், உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளோடும் வந்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்களின் கவிதைகள். பெண் படைப்புக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவத்தோடு எளிய மாந்தர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளோடு தாய்மையுணர்வுமுதல் தாயகநேசிப்பு வரையான கவிதைகளைக் கொண்டிருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள்.


ஊடறுவும் விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 26 கவிஞைகளின் 70 கவிதைகள் உள்ளன. அதிகமும் அறியப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி ஆகியோருடன் அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் ஆகிய ஒவ்வொருவரினதும் மூன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.


மேலும்; காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞானமதி, புரட்சிகா, கிருபா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபி மார்க்கட், சிரஞ்சீவி, தயாமதி ஆகியோரின் ஒவ்வொரு கவிதைகளைக் கொண்டதாகவும் தொகுப்பு உள்ளது.


ஒரு போராட்ட அமைப்பு என்ற சார்புநிலைக்கு அப்பாலிருந்து தொகுக்கப்பட்ட தொகுதியாக இது இருப்பதை முதலில் குறிப்பிடவேண்டும். அமைப்பு, அதன் கொள்கை, அதன் பிரச்சாரத்தேவை என்ற முன்னுதாரணங்களை விலக்கிவிட்டுப் பார்ப்போமானால் பெண் படைப்புக்களின் வரிசையிலே போர்க்காலப் படைப்புக்களுக்கு வலிமைசேர்க்கக்கூடிய தொகுப்பாக அமைகிறது.


போர்க்கால இலக்கியப் போக்கினை மதிப்பிடுகின்றபோது அவற்றை பொதுவாக மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று சார்புநிலையாக வெளிப்படும் படைப்புக்கள். மற்றையது எதிர்நிலையில் இருந்து வெளிப்படும் படைப்புக்கள் – இவற்றை அரசியல் விமர்சனம் சார்ந்த படைப்புக்கள் என்றும் கூறலாம். மூன்றாவது, சார்பும் எதிருமின்றி நியாயத்தைப் பேசும் படைப்புக்கள் – இவற்றை காலங்கடந்தும் வாழக்கூடிய படைப்புக்கள் என்றும் சொல்லலாம்.


சார்புநிலையைப் பேசும் படைப்புக்கள்; குறித்த அமைப்பின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவோ அல்லது அதன் கொள்கை பரப்பலாகவே இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். அது மறுபுறத்தில் அபத்தமாகப் படலாம்.
 

ஆனால் இத்தொகுப்பில் வந்துள்ள கவிதைகள் போர்க்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய அவலங்களையும் அந்த அவலங்களைத் தீர்ப்பதற்கு புறப்பட்டவர்களின் உணர்வுகளையும் பேசுவனவாக உள்ளன. போராடுபவர்களின் பக்கம் நின்றுகொண்டு அதற்கான நியாயப்பாடுகளைப் பேசுகின்றன.

 


ஒட்டுமொத்தமாக தொகுப்பில் உள்ளடங்கியுள்ள கவிதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
 

1. போரினால் மக்கள் படும் அவலங்களைப் பேசுதல்
2. பெண் அடக்குமுறை, சமூகத்தின் போலியை எதிர்த்தல்
3. விடுதலை வேட்கையைப் பாடுதல்
4. வீடு, உறவு, இளமைக்காலம் ஆகியவற்றை மீட்டுப் பார்த்தல்
5. உலகு பற்றிய பார்வை
 

இந்தப்போர் மக்களை எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கிறது என்பதனை பல பெண்கவிஞைகள் பாடியுள்ளனர். காலங்காலமாக வாழ்ந்த பூர்வீகத் தேசத்தைவிட்டு ஏதிலிகளாக அலைந்துலைந்து வாழவேண்டிய நிலையினையும், போரால் இழந்துவிட்ட உயிர்கள் பற்றியும் பலவிதத்திலும் பேரின் கரங்கள் மக்களின் மீது தொடர்ந்துகொண்டிருக்கும் அவலநிலையினையும் பாடுகின்றனர்.
 

 

“பாலியல் வன்முறைக்கு
இரையான
பள்ளிக்கூட மாணவி நீ
உன்னைச் சூழ்ந்து நின்று
மிருகங்கள் சுவை பார்த்து
சிரித்த பொழுது
நீ சத்தமிட முடியாமல்
சாவோடு போராடினாய் – உன்
விழிகளிரண்டும்
வான்நோக்கி நிலைத்தபோது
என்னம்மா நினைத்திருப்பாய்?” (ஆதிலட்சுமி)
 

என்ற வரிகள் கிருஷாந்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவூட்டுகின்றன. மக்களை ஒடுக்குவதற்கு பாலியல் ரீதியான அடக்குமுறை ஒரு ஆயுதமாக அடக்கப்படுபவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது மக்களுக்கு மிகுந்த அச்சத்தையும் இயலாத்தனத்தையும் ஏற்படுத்துகிறது.
 

ஒரு சாதாரண குடிமகன் என்ன நினைத்திருப்பான். தானும் தன் வீடும் தன் பிள்ளையும் தோட்டமும் என்று ஒரு குடிலில் வாழ்ந்த மனிதர்கள் சாவின் எல்லைவரை விரட்டப்படுகிறார்கள் இது இன்னொரு கவிஞையிடம்

 

“உயிர் வாழ்வதன்றி வேறொன்றறியா
எம் உறவுகள்
மண்ணோடு போக
உளம் புண்ணாகி உடல் சோர்ந்து
வீதியிறங்கி
வியர்வைத் துவாரங்களால் இரத்தம் கசிய
கதறியழுது அலையும் வாழ்வு
ஏன் எனக்கு வந்தது?” (மலைமகள்)


இவ்வாறான துன்பங்கள் தொடர்வதற்குத்தான் காரணங்கள் என்ன? அந்தத் துன்பத்தை வலிமை பெற்றவர்கள் கூட்டாக எளியவர்கள் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் இந்தக் கவிஞைகள் பாடுகின்றனர். மக்களின் துன்பம் தொடர்வதற்கு படிப்படியாக மாறிக்கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள்தான் காரணம் என்கிறார்கள். ஆட்சியாளர்களுடன் கைகுலுக்கிக் கொண்டு வந்த வல்லரசுகள் மக்களைக் கொன்று குவிக்க உதவியமையை கவிதையொன்று சுட்டிக்காட்டுகிறது.


“அனைத்து நாடுகளும்
அண்ணாந்து பார்த்து நிற்க
உயரத்தில் விழுந்தன
உணவுப் பொட்டலங்கள்.
ஒருதலைப்பட்சமாய் உள்ளே வந்த வல்லரசால்
அரிசிப் பொதிகள் விழுந்த
அதே குச்சொழுங்கைகளில்
குப்பெனப் பீறிட்டது குருதியாறு” (கஸ்தூரி)

 

என்று வரலாற்றில் நடந்த ஒர் அவலத்தை மிகத் தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறார் கவிஞர்.


“தேநீர்க் கடையின் பாட்டுக்கூட
நின்றுபோயிருந்தது.
வெறிச்சோடிய வீதியில்
அவன் மட்டும்
தனியாகக் கிடந்தான்
கையொன்று வீதியின் மறுகரையில்
விரல்களை நீட்டியபடி
யாரையோ குற்றம் சாட்டுவதாய்.

சில நிமிடங்கள் தான்
அம்புலன்ஸ் எல்லாவற்றையும்
அள்ளிக் கொண்டுபோனது
எஞ்சியதாய்
அவனது இரத்தம் கொஞ்சம்
ஒன்றிரண்டு சைக்கிள் கம்பிகள்
செல் துண்டுகள் அவ்வளவுதான்.” (நாமகள்)


என்ற கவிதை எமது மக்கள் ஊமையாய் உக்கிப்போய் செத்துப்போன நிலைகளை எடுத்துக்காட்டுகிறது. சேரன் 80 களின் தொடக்கத்தில் எழுதிய ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ என்ற கவிதையினையும் இவ்வரிகள் ஞாபகப்படுத்துகின்றன.

 

இவை தவிர மலையக மக்களின் பிரச்சினைகளுடன் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுதல் பற்றிய கவிதையும் இத்தொகுப்பில் உள்ளமை கவனிக்கத்தக்கது. எங்கள் சொந்தச் சகோதரர்கள் எவ்வாறு சுரண்டப்படுகின்றனர்?


“சுரண்டல் தராசுகளில்
கொழுந்துக் கூடைகளை
கொழுவிவிட்டு
தேனீருக்கான ஏங்கும்
இத் தேயிலைச் செடிகள்
அக்கினியாய் அணிவகுத்து
அவலங்களை எரிப்பதெந்நாள்?” (கஸ்தூரி)


என்று ‘கொழுந்துக் கூடைகள்’ கவிதையில் எழுதுகிறார்.


இன்னொரு கவிதை புலம்பெயர்ந்து சென்ற ஈழமகன் ஒருவனைப் பற்றிய சித்திரத்தை அழகாகத் தருகிறது. புலம்பெயர்ந்து செல்லமுன் ஒர் ஆண்மகன் வீட்டில் இருந்த நிலை, புலம்பெயர்ந்தவர்கள் அங்கு எதிர்கொள்கின்ற வாழ்க்கை முரண்கள், அவர்களின் தாயகஉறவு பற்றிய அந்தரநிலை என்று பல விடயங்களை பாடுகிறார்.


வீட்டில் சாப்பிட்ட கோப்பையே கழுவாதவன் ஹோட்டலில் தட்டுக் கழுவிச் சம்பாதித்து தன் உறவுகளுக்கும் தாயகத்திற்கும் உதவுவதையும் சுட்டிக்காட்டுகிறார். போர்; மனிதர்களை எவ்வாறெல்லாம் மாற்றி விடுகிறது என்பதற்கு நல்ல உதாரணம் இக்கவிதை.


“கழிப்பறைக்கு நீர் சுமக்கவும் மறுத்த
தம்பியின் வாழ்வு
குளிர் பனிக்குள்
கழிப்பறைத் தூய்மையிலே கரைந்தது.
திண்ட கோப்பைகூடக்
கழுவத் தெரியாத பிள்ளை
ரெஸ்ரோரண்டில்
அதைக் கழுவிப் பிழைத்தே
காசு அனுப்பியது” (அம்புலி)


என்று இன்னும் பல சம்பவங்களையும் குறிப்பிடுகிறார். உறவைப் பிரிந்துபோன ஏக்கம், தனிமைவாழ்வு, மொழிக்கலப்பு ஆகியனவும் பேசப்படுகின்றன. ‘தூரவிருந்து குரலை உயர்த்தி கரத்தையிணைத்து துணையிருக்கும் உறவுகள்’ எனவும் புலம்பெயர்ந்துபோன ஈழத்தமிழ் மக்களை நன்றியுடன் நினைக்கின்ற கவிதையாகவும் இது அமைந்திருக்கின்றது.


சமூகக் கொடுமைகள் பற்றிச் சுட்டும்போது சீதனம் பெறுதல் மற்றும் பெண்அடிமைத்தனம் பற்றிப் பாடுகின்றனர். பெண்ணைப் பார்த்துக் குட்டக் குட்டக் குனிந்து கொண்டு (வானதி) குசினிக்குள்ளே முடக்கிப் போகாமல் சமூகத் தளைகளை உடைக்க வெளியே வா என சமூகத்தின் பிற்போக்குத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக எழுமாறு அறைக்கூவும் கவிதைகளும் உள்ளன.
மகாகவி பாரதியை முன்னிறுத்திப் பாடுவதுபோல் அமைந்த கவிதையில் இன்று சீதனம் வாங்கும் ஆண்களின் நிலையை பின்வரும் கவிதை சுட்டிக்காட்டுகிறது.
 

“காசு பெரிதில்லை
நெஞ்சிலுள்ள காதல் பெரிதென்றாய்
இங்கோ கண்ணன்கள்
காசு பெரிதென்று
காதலை முறிக்கிறார்கள்” (ஆதிலட்சுமி)


விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் கவிதைகள் என்ற வகையில் பார்ப்போமானால் போராளிகளின் விடுதலையுணர்வு, அவர்களின் தியாகம், அவர்களிடம் இருக்கக்கூடிய நம்பிக்கை, எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தற்துணிவு என்பன இக்கவிதைகளில் பேசப்படுகின்றன.


ஓராயிரம் விழிகளின் உறக்கத்திற்காக தங்கள் காவல் முக்கியம் என்று அம்புலி எழுதுவார். இரவு பகல் வெய்யில் மழை என்றும் பாராமல் அவர்களின் காத்திருப்பும் கவலிருப்பும் குறிப்பிடப்படுகிறது. கொள்ளி வைக்க இருந்த பிள்ளையும் போய்விட்டதே என்று கலங்கும் தந்தைக்கு தாயினூடாகப் பதிலுரைக்கும்போது இறந்தபின்னர் அடக்கம்செய்யும் மயானத்திற்காகவும் தான் நான் காவலிருக்கிறேன் (‘அப்புறமாய் வருகிறேன்’ – ரூபி மார்க்கிரட்) என்று பாடுகிறார்.


“ஓர் அழகிய காலையை
உனக்கு
காட்டமுடியாத வசந்த காலத்தில்
விளையாட முடியாத
பாலைவன நாட்களையே
உனக்குப் பரிசளிக்கிறேன்” (அம்புலி)


என்று ஒரு தாயின் உணர்வுநிலையில் இருந்து கொண்டு குழந்தைக்குச் சொல்லும் வரிகளாக அவை அமைந்து விடுகின்றன.


இதேபோன்று வானதியின் ‘எழுதாத கவிதை’ விடுதலை உணர்வையும் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பினையும் ஊட்டுகின்ற கவிதையாக அது அமைந்திருக்கிறது.


“சீறும் துப்பாக்கியின் பின்னால்
என் உடல்
சின்னாபின்னப்பட்டுப் போகலாம்
ஆனால் என்
உணர்வுகள் சிதையாது
உங்களைச் சிந்திக்க வைக்கும் அது.
அப்போது
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன்.” (வானதி)


என்று எழுதுகிறார். இதனை நாதினி என்ற இன்னொரு கவிஞை எழுதாதுபோன உன் கவிதையை எழுதுவதற்காக உயிரைக் கோலாக்கி உதிரத்தை மையாக்கி அணிவகுத்து நிற்பவர்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.


இவர்களிடம் உலகு பற்றிய பார்வையும் உள்ளமை மற்றொரு சிறப்பம்சமாகும். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நடந்த இனவழிப்பை இலங்கையில் நடந்த இனவழிப்புடன் ஒப்பிட்டுப் பாடுகின்றனர்.
 

“மொழிவேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்றுதானே.
அகதிமுகாம் வாசலிலே
அம்மாவைத் தேடு என்று
ஐ.நா கூறியதாமே
யாரைப் பார்த்தாலும்
அம்மாவாய்த் தெரிகிறதா?
சின்ன வயதில் உங்கள் தோள்களிலே
சிலுவையை ஏற்றி வைத்தது யார்?” (ஆதிலட்சுமி)


சர்வதேசம் பற்றிக் கூறும்போது அது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக உள்நாட்டுப் பிரச்சினைகளைப் பெரிதாக்கி விடுகின்றன. இதனை ‘வல்லரசுகள்’ என்ற கவிதையிலே பாடும்போது


“சமாதான நாடுகளில்
சாமர்த்தியமாய் நுழைந்து
ஆணிவேரை அறுத்துவிட்டு
வாடாது நிற்க
நீர் ஊற்றுபவர்கள் நீங்கள்.
உங்கள் தலையீடுகளால்
தரைமட்டமாகிப் போன தேசங்களே அதிகம்.” (கஸ்தூரி)


தாயகம், வீடு, உறவு பற்றிய உணர்வுநிலைகள் மிக அழகாக வந்துள்ளன. ‘அன்பான அம்மா’ என்ற பாரதியின் கவிதையில் சிறுவயது நினைவுகள், வீடு மற்றும் கிராமத்து நினைவுகள் வருவதனைக் காணலாம்.
 

இளமை நினைவுகள், பள்ளிக்கூட வாழ்க்கை, அதன்பின்னர் பல நண்பர்களை தாம் இழந்துவிட்டமை, கால் இழந்து விட்ட நிலையிலே அசையமுடியாது மரத்துப்போனதுபோல் இருக்கின்ற நிலை… என கவிதையின் போக்குப்பற்றி மேலும் குறிப்பிடலாம். அம்மா பற்றிய கவிதைகளும் அம்மா பற்றிய படிமமும் பல கவிஞைகளின் கவிதைகளில் அற்புதமாக வந்துள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கவை. தாயின் அன்பும் அவளின் அரவணைப்பும் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு அவள் தங்களை வளர்த்து ஆளாக்கியமையும் இக்கவிதைகளில் பாடப்படுகின்றன. மேலும் தமது உணர்வுகளைத் தாயை முன்னிறுத்திப் பாடும் கவிதைகள் அதிகமாக உள்ளமையும் கவனிக்கத்தக்கது. தந்தையிடம் கூறவேண்டியதை தாயிடம் கூறுதல், அவளை விட்டுப் பிரிந்து வந்த சோகத்தைக் கூறுதல் என்பன இங்கு முக்கியமானவை.


“அன்பான அம்மாவே
நான் உன்னை
அளவு கடந்து நேசிக்கிறேன்
அதனிலும் பார்க்க
நான் ஓடி விளையாடிய
என் வீட்டு முற்றத்தை
நான் கால் பதித்த
ஒற்றையடிப் பாதைகளை
செம்பாட்டு மண்படிந்த என்
தெருக்களை
சணல் பூத்துக் குலுங்கும் என் தேசத்தை
தோட்ட வெளிகளை
இப்படி இப்படியாய்
எத்தனையோ.” (பாரதி)

 

“ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாக தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச நான் தயார்.
நிம்மதியான பூமியிலே நித்திரைகொள்ள
எனக்கும் விருப்புண்டு” (அம்புலி)


என்று தாய் பற்றிய உணர்வையும் அவளின் அன்பையும் தவிர்க்கமுடியாமல் தாங்கள் புறப்பட்ட நிலையையும் எடுத்துக் காட்டுகின்றனர்.
 

நூலின் முன்னுரையில்
 

“பெண்களுக்காக வரையறுக்கப்பட்ட பல கலாசாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுது பார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணிகளிலும் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி, இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி என பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள்.”


என்று இக்காலத்தில் இருந்த பெண்களின் புதிய எழுச்சியை போர்க்காலத்தின் பதிவாகக் குறிப்பிடுகின்றனர் தொகுப்பாளர்கள்.


இயல்புநிலை அழிக்கப்பட்ட சூழலிலிருந்து பாடப்பட்ட கவிதைகள் இவையென்பது முக்கியமாக கவனத்தில் எடுக்கவேண்டியதாகும். கவிதைகள் எளிமையாக இருக்கின்ற அதேவேளை அவற்றின் புனைதிறன் உத்தியிலும் ஓரளவு சாத்தியத்தை எட்டியிருக்கின்றன. தங்கள் பிரச்சினைகளை, தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை, காலத்தின் தேவையை பாடியிருக்கிறார்கள்.


உணர்வும் உயிரும் அற்ற வெற்றுவார்த்தைகளை மாபெரும் படைப்பெனக் கூறிக்கொண்டு நாங்களும் காலத்தின் வரலாற்று நாயகர்கள்தான் என எழுதிக்கொண்டிருப்பவர்களின் மத்தியில் இவை உண்மையான எழுத்துக்கள்தான் என்பதை இந்தக் கவிதைகள் உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
 

‘மறையாத மறுபாதி’, ‘சொல்லாத சேதி’ போன்ற பெண் படைப்பாளிகளின் தொகுப்புக்களின் வரிசையில் போர்க்காலப் படைப்புக்களில் பெண்களின் குரல்களாக வந்திருக்கும் ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ ஈழத்து இலக்கியப் போக்கில் கவனத்திற் கொள்ளவேண்டிய தொகுப்பாக அமைந்திருக்கிறது.

 

http://puthu.thinnai.com/?p=16380

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்தவருடம் இந்நுால் கனடா சுவிஸ் டென்மார்க் இன்னபிற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்த வெளியீடு. இங்கே தொடர்பு கொண்டு பார்க்கலாம்

 

www.oodaru.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தவருடம் இந்நுால் கனடா சுவிஸ் டென்மார்க் இன்னபிற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்த வெளியீடு. இங்கே தொடர்பு கொண்டு பார்க்கலாம்

 

www.oodaru.com

 

உடுமலையில் வாங்கமுடியவில்லை. வடலிக்காரரைக் கேட்டுப் பார்த்தால் பின்னர் பதில் போடுகின்றோம் என்று அப்படியே விட்டுவிட்டார்கள். இலண்டனில் ஒருநாள் அகப்படும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • 5 years later...
  • கருத்துக்கள உறவுகள்

பெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.

Wednesday, June 20, 2018 @ 7:36 PM

நா.நவராஜ்

இருபத்தியாறு கவிஞைகளின் எழுபது கவிதைகளைக் கொண்ட நூல்: பெயரிடாத நட்சத்திரங்கள் கிடைத்தது. ரமேஷ் அதனைத் தந்தார். அது பற்றிய ஒரு மதிப்பீட்டுக்காக. கவிதைகளோடு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நான் என்னத்தை மதிப்பீடு செய்வது. பெண்போராளிகள் வேறு அதனைப் படைத்துள்ளனர். கவிதையென்றாலும் ஓரளவு பரவாயில்லை. அரசியல் நான் பிரவேசிக்க விரும்பாத பக்கமாகவே இருக்கின்றது. என்றாலும் அச்சூழலில் வாழ்வதால் நானும் ஓர் அரசியல் விலங்குதானே. பார்த்துவிட்டுப் பதில் உரைப்பதாகக் குறிப்பிட்டேன். எனக்குப் பரிச்சயமில்லாத, நான் பிரவேசிக்கவிரும்பாத இருநிலைகளைக் கொண்ட பிரதியுள், தொகுதியுள் ஊடறுத்து உட்புகுந்த போது ‘ஊடறுப்பு’ என்ற தலைப்பினுள் இருந்த உரைப்பகுதியில் ‘இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் எம் வாசிப்பில் தோற்றுவிக்கும் அதிர்வுகள் போரியலையும், போரியலைத் தாண்டிய வெளிகளையும் தொட்டு பன்முக – சமூக, அரசியல், இலக்கிய, பெண்ணிய – உரையாடல்களையே இங்கு வேண்டிநிற்கின்றன’ (பக்கம் – 12) என்ற வேண்டுதலைக் கண்டு, நின்று நிதானித்து மதீப்பீடு செய்து பார்க்கும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு வாசித்த போது அந்நூல் பற்றி எழுந்த எனது சிந்தனைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம், பதிவு செய்யலாம் எனக் கருதித் தொடர்கின்றேன்.

PeyaridathaNadsathirankal-jpg

மனிதனது வாழ்வியல் பால், பால்நிலை என்ற இரு கருத்தாக்கங்களுக்கு உட்பட்டுத் தன்னைக் கட்டமைத்து வைத்திருக்கின்றது. பால் என்னும் போது ஆண், பெண் என்ற உடல்சார்ந்த பேதங்களைக்கொண்டதான இயற்கையால் இயல்பாக உருவாக்கப்பட்ட உருவம் சார்ந்த ஓர் அம்சமாகக் கொள்ளலாம். பால்நிலை என்னும் போது அந்த உருச்சார்;ந்த உடல்சார்ந்த அடிப்படைகளை வைத்து ஆண் என்றால் இப்படியிருக்க வேண்டும் பெண் என்றால் இப்படியிருக்க வேண்டும் என எம்மால், சமூகத்தால் உடல் உளம் சார்ந்து கருத்தேற்றப் பட்ட ஓர் அம்சம் எனலாம். இந்தப் பால்நிலைசார்ந்த கருத்தேற்றத்திற்கு உட்பட்டே காலம் காலமாக ஆண்களும் பெண்களும் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். அது சமூகத்தின் முக்கியமான கருத்தேற்றமாக ஆகிவிட்டது. அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. இதனை ஆண்களும் பெண்களும் நம்பத்தொடங்கி, தமது எல்லைகளை வரையறுத்து இயங்கத்தொடங்கினர் எனலாம். குறிப்பாகப் பெண்கள் அந்த எல்லைக்குள் இயங்க வற்புறுத்தப்பட்டனர். இவ்எல்லைகள் மீறப்படுகின்ற போது ஆண்களைப் ‘பொண்ஸ்’ என்றும் பெண்களை ‘ஆண்மூச்சுக்’ கொண்டவள் போன்றவசைச்சொற்களைக் கொண்டு அடக்குவதும் பிறழ்வான நடத்தை என முத்திரை குத்துவதும் சமூகத்தின் தேவையாகிப்போனது. உதாரணமாக ஆண்கள் வீரத்தின் பிறப்பிடமாகவும் பெண்கள் அன்பின் இருப்பிடமாகவும் கணிக்கப்பட்டனர். இந்தக் கணிப்பீட்டில் மாற்றம் நிகழும் போது சமூகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறலை அது எதிர்கொள்கின்றது. அதனைக் குணமாக்க அத்தகையவர்களை அது தன்னில் இருந்து வெளித்தள்ளித் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றது. ஆனால் இதற்கு மாறான நிலைகள் எமது வாழ்வியலில் இருக்கத்தான் செய்கின்றன. சமய நோக்கில் பார்த்தால் வீரத்திற்குப் பெண்ணையும் (துர்க்கை) அன்பிற்கு ஆணையும் (சிவபெருமான்) போற்றுகின்ற முரண்நிலையை நாம் கண்டுணரலாம்.இந்தப் பண்புகள் முடிந்த முடிவாக இன்னாருக்கு இன்னதுதான் என்று நிலைநிறுத்தப்படவில்லை. புராணங்களில் நிகழும் சம்பங்களில் இவை இணைந்தும் மாற்றமுற்றும் நிகழ்வதை நாம் தரிசிக்கமுடியும். சாதாரண வாழ்வியலில் ஆண்நிலைப்பட்ட மனோபாவம் இதனை (ஆணுக்கு வீரம் பெண்ணுக்கு அன்பு என) மாற்றியமைத்து, இது மாற்றமுடியாத இயல்பு, இதுதான் இயற்கை என்று நிலைநிறுத்தி வைத்திருக்கின்றது. இந்தப் பின்னணியில் வாழ்ந்த பெண்கள் அவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டுத் தமது வாழ்க்கையை நடத்திவந்துள்ளனர். வருகின்றனர். எனினும் அதற்கு எதிரான அதில்இருந்து விடுபடவேண்டும் என்ற மனப்பாங்கினையும் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். இருக்கின்றனர். அதற்கான களம் அன்று அவர்களுக்குச் சரிவர அமையவில்லை என்றே சொல்லலாம்.

 

பாரதி நீ
சிறுமைகளைக் கண்டால்
சீறு… காறு… என்றாய்..
சீறிய போது சமூகம் இவளைச்
சினத்தது.
பெண்ணினத்தைச் சீரழிக்கும்
பேடிகளைக் கண்டு இந்த
குஞ்சுப் பாஞ்சாலி
குரல் கொடுத்த போதெல்லாம்.
பாண்டவர்களே இவளைத்
தூசித்தார்கள்.
என்று ஆதிலட்சுமி (பக்கம்- 53)

கூறுவது போல் தமது எண்ணங்களை நடைமுறைப்படுத்தியவர்களைச் சமூகம் நேர்மையற்றவர்கள், அடங்காப்பிடாரிகள் என்றது. இப்படித்தான் எமது சமூகம் தனது மனப்பாங்கை நிலைநிறுத்தி வைத்திருந்தது. எனவே அதனிலிருந்து விட்டுவிடுதலையாகி நிற்கும் விருப்பினை அவர்கள் தமது ஆத்மாவிற்குள் அடைகாத்து வைத்திருந்தனர். அது அவர்களினூடாக அவர்கள் பிள்ளைகளுக்கு, பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு எனக் கடத்தப்பட்டுவந்திருக்கின்றது. போராட்டம் அதற்கான களத்தைக் கொடுத்தபோது அதில் ஈடுபட்ட பெண் ஒருத்தி வியப்பெய்துகின்றாள்..

நான் எரிமலையிலிருந்துதான்
தோன்றியிருக்க வேண்டும்
ஆம் அப்படித்தான் இருக்கும்
இல்லையேல்
எனக்குள்ளிருக்கும் நெருப்பு
எங்கிருந்து வந்தது.?

ஆம், ஒரு தொடர்பில்லாமல், வேர் இல்லாமல் அது வந்திருக்க முடியாது. அப்படியானால் அம்மாவிடமிருந்தா அது வந்தது? என அவள் ஆராய்கின்றாள். அம்மாவைப் பார்த்தால் அப்படியில்லையே,

அவள் ஊருக்கெல்லாம் சோறு போட்டு
தன் பசியாறுபவள்
என் சிரிப்புக்காகவே உயிர்வாழ்பவள்
அவளிடம் நான் எரிநெருப்பை
ஒருபோதும் கண்டதில்லை.
என்றே அவள் முடிவிற்கு வருகின்றாள். ஆனால் அதற்கான பதிலை
ஓ! ஒருவேளை அவள்
ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும்
அடக்கி வைத்த ஆத்திரம் தான்
என்னிலிருந்து
பெரும் பொறியாய் எழுகிறதோ
அவளது உரிமைகள்
மறுக்கப்பட்டதால் தான் என்
குரல் ஓங்கி ஒலிக்கின்றதோ. (மலைமகள்: பக்கம் – 88)

எனத் தாயாரின் ஆழ்மனத்தில் அது இருந்திருக்கலாம் என்ற புரிதலில் கண்டுகொள்கின்றாள். தனிநபரைப் பொறுத்தவரையில் அடக்கப்படுகின்ற கோப உணர்வானது இடப்பெயர்ச்சிநிலையில் வெளிப்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்கள் வாழ்வியலில் நடைபெறுகின்றமையை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால் இந்த கவிதையில் உள்ள உணர்வு ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு ஊடுகடத்தப்பட்டு, கூட்டுநனவிலியில் கிடந்து தனக்கான களம் கிடைக்கும் போது தனது தேவையைத் தீர்த்துக்கொள்கின்றது. ஒட்டுமொத்தப் பெண்களின் குரலையும் அது எதிரொலிக்கின்றது. நாம் எமக்காக மட்டுமல்ல எம் மூதாதையரின் அடக்கிவைக்கப்பட்ட ஆத்திரத்தின் திரட்சியாகவே, கிடைக்கப்பெற்ற களத்தில் திரண்டு முன்நிற்கின்றோம் என்கிறது. இந்தவாறு போராட்ட களத்தில் இனவிடுதலைக்காகவும் பெண்விடுதலைக்காகவும் முன்னின்ற இவர்களிடம் தெளிவான பரந்துபட்ட சிந்தனைப் பாங்கு இருந்திருக்கின்றது. வழிவழியாக வந்த எரிநெருப்பை, பெண்விடுதலையின் பெருநெருப்பைத் தமது நெஞ்சங்களில் மட்டும் வைத்திருக்காமல் மற்றவர்களுக்கும் அதனைத் தொற்றவைக்க வேண்டும் என்ற பெருவிருப்பிருந்திருக்கின்றது. உயிர்ப்பு என்ற கவிதையில் கிருபா (பக்கம் – 87)

காலத்தின் சுமைகள் என்
இதயத்தை அழுத்துகின்றன – நான்
விடுகின்ற மூச்சுக் கூட
முனகியபடியேதான்.
இருப்பினும்
ஊன்றிச் சுவாசிக்கின்றேன்
அது செல்லட்டும்
தூரச் செல்லட்டும்
மிகத் தூரச் செல்லட்டும்
ஒரு சிறிய மூலைக்குள்ளும்
பொந்துக்குள்ளும் கூட
செல்லட்டும் – அங்கே
என்னைப் போன்ற
இன்னொருவருக்கு அது
உயிர்ப்பளிக்கலாம். (கிருபா: பக்கம் – 87)

என்று கூறுவதைப் போராட்டம் என்ற எல்லைக்குள் குறுக்கிவிடநான் விரும்பவில்லை. பெண்விடுதலை என்ற தளத்தில் வைத்துப்பார்க்கவே விரும்புகின்றேன். மனிதர்களின் பொருட்டு தேவஉலகத்தில் இருந்து நெருப்பை எடுத்து புறொமீதியஸ் மனிதர்களுக்குக் கொடுத்தார். அதனால் அவர் பெரும்பாறையில் கட்டிவைக்கப்பட்டு அவரது ஈரலைப் பிடுங்கித் தண்டிக்கப்பட்டார். பிடுங்கி எடுக்கப்படும் ஈரல் மீள வளர வளர அது ஒவ்வொரு நாளும் கழுகளால் பிடுங்கப்படும் தண்டனையை அனுபவித்தார். என்கின்றது கிரேக்கம். அடக்கப்பட்ட பெண்களின் பொருட்டு அவர்தம் ஆழ்மன நெருப்பை ஏந்திப் புறப்பட்ட இக்கவிஞைகள், பெண்விடுதலையைப் பெறும் தமக்கான வெளியாகப் போராட்டத்தையே கண்டுகொண்டனர்.

உன்னைக் குட்டுபவர்கள்
குட்டக் குட்ட
நீயும் குனிந்து குனிந்து
அங்கே குசினிக்குள்ளேயே
குமுறிக்கொண்டிருப்பாய்.
புறப்பட்டுவா
ஒரு புதுயுகம் படைப்போம்,
நாம் தூக்கிய
துப்பாக்கியின் பின்னால்.
எம் இதயம் நேசிக்கும்
தேசத்து விடுதலை
எமக்கு எட்டும்போது – அங்கே
பெண்ணடிமைக்கு
சமாதி கட்டப்படும்
சமுதாயத்தின்
பிற்போக்குச் சிந்தனைகளுக்கு
புதைகுழி தோண்டப்படும். (வானதி: பக்கம் -66)

என்று நம்பிக்கை வளர்த்திருந்தனர். இதனால் போராட்டத்தில் இணைந்து தமக்குள் இருந்த தலைமைத்துவத்தினைச் சிந்திக்கும் திறனை, வீரத்தினை வளர்த்து முன்பிருந்த சமூகத்தடைகளை உடைத்து முன்செல்லும் பாதையினை உருவாக்கிக்கொண்டனர். பெண்கள்சார்ந்திருந்த பால்நிலைசார் சமூகமனப்பாங்கினைப் புறந்தள்ளி சாதனைகளையும் சாகசங்களையும் புரிந்து பலபெண்களுக்கு முன்மாதிரிகள் ஆயினர். எனினும் போரின் பின்னரான தற்காலச் சூழலில் அவர்களது நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டு, முன்னைய நிலையிலும் கீழான நிலைக்குப் பின்தள்ளப்பட்டதுடன், இவர்கள் குடும்ப வாழ்விற்குச் சரிப்பட்டுவரமாட்டார்கள் என்ற மனப்பாங்கினையும் ஊன்றி வளர்த்துச் சமூகம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய வேதாளமாகவே தன்னை இனங்காட்டி நிற்கின்றது. சற்றும் சலிப்பில்லாமல் சமூகமாகிய வேதாளத்தைத் தம்மைநோக்கி இழுத்துவரும் விக்கிரமாதித்த மனநிலையையே தற்போது பெண்கள் அடைந்திருக்கின்றனர். குறிப்பாகப் போராளிகளாக இருந்த பெண்கள் தமது உள்ளத்தில் இருந்த நெருப்பை வெளிப்படுத்தியதால் புறொமீதியஸ் போல கணத்திற்குக் கணம் ஈரல் பிடுங்கி எடுக்கப்படும் வலியையே அனுபவிக்கின்றனர். போர்க்காலங்களில் கௌரவமாகவும் புனிதமாகவும் பார்க்கப்பட்டவர்களுக்கு, இன்று சாதாரண சமூகச் சூழ்நிலையில் தம்மைப் பொருத்திக் கொள்ள முடியாதபடி விரக்தியும் சலிப்பும் இனியென்ன வாழ்க்கை என்ற கையறுநிலையும் கொண்ட வாழ்க்கைமுறைமையையே நமது சமூகம் வழங்கி நிற்கின்றது. அன்ரன் செக்கொவின் ‘அந்திமாலைப் பாடல்’ என்ற நாடகத்தில் வயதான ஒரு நடிகனின் மனநிலையைப் புலப்படுத்திச்செல்லும்போது அவன் தனது காதலைப் பற்றிச் சொல்லும் ஓர் இடத்தில் ‘… அவை கைதட்டி ஆரவாரஞ்செய்து என்னைப் போற்றுவினம்; என்ரை படத்தை வேண்ட ஒரு றூபிள் சிலவழிப்பினம்; ஆனால், அவையைப் பொறுத்தவரையில் நான் ஒரு அன்னியன்; அவையைப் பொறுத்தளவிலை நான் அழுக்கு நிறைஞ்சவன்; கிட்டத்தட்ட ஒரு விபச்சாரி! தங்கடை போலிப்பெருமையைத் திருப்திப்படுத்த அவை என்ரை அறிமுகத்தை நாடுவினம்; ஆனால், அவேலை ஒருத்தராவது தங்கடை சகோதரியையோ, மகளையோ எனக்குக் கலியாணம் செய்து வைக்கத் துணிய மாட்டினம்..’ எனக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இந்த வசனம் நடிகனுக்கு மட்டுமல்ல நாட்டைக் காக்கப்புறப்பட்டவர்களுக்கும் உரியதாகவே எனக்குப்படுகின்றது. அவர்கள் போராட்ட மேடையில் நிற்கும் போது விசில் அடித்து உணர்ச்சிவயப்பட்டு ஆரத்தழுவிய சமூகம் இன்று அவர்களைத் தனக்குள் ஈர்த்து வாழ்வளிப்பதற்குத் தயங்கும் மனநிலையுடய ஒன்றாகவே தன்னை இனங்காட்டி நிற்கின்றது. எத்தனை அனுபவங்களைப் பிரச்சினைகளை எதிர்கொண்டு சமூகத்தில் முன்நிலைக்கு வருகின்ற போதும் சுதந்திர உணர்வை அனுபவிக்கின்ற போதும் ஆழப்பதிந்த சமூதாயக் கருத்தேற்றங்கள் என்ற மனத்தளைகளில் இருந்து எளிதில் மீளமுடியாது எமது சமூதாயமும் தவித்துக்கிடக்கின்றது.சமூகத்தின் இ;ந்த நிலைப்பாடு மட்டும் அவர்களைப் பின்தள்ளவில்லை போராட்டக் களத்தைத் தமது விடுதலைக்கான பாதையாகத் தெரிந்தெடுத்து அதனை ஒரு தவக்கோலமாகக் கண்டு அந்த நினைப்புக்குள்ளும் சம்பவங்களுக்குள்ளும் ஆழமாக ஊறிப்போனவர்களாக சிலர் இருந்தனர். இதனால் இயல்பான இன்றைய சூழலிலும் வெளியே வந்து அச்சூழலோடு இணைந்து செயற்படமுடியாத இறுக்கமானமனதைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். இந்தவாறு முன்னர் வாழ்ந்த வாழ்க்கையில் கொண்ட பற்றுறுதியும் இன்றும் பலருக்குப் பிரச்சினையைத் தந்து நிற்கின்றது. இவற்றோடு சம்பவங்களின் மீள் சூழற்சி, அதிபரமன எழுச்சி, தற்போதும் முன்னர் வாழ்ந்த சூழுலில் வாழ்வது போன்ற நினைப்புக்கள், கனவுகள், தொட்டதற்கும் கோபங்கொள்பவர்களாக ஒதுங்கியிருப்பவர்களாக அவர்களை மாற்றிவைத்திருக்கின்றன. 2002 இன் பின்னர் திறக்கப்பட்ட ஏ-9 வீதியைப் பார்த்து 2004 இல் ‘ஏ-9 வீதி பற்றிய குறிப்புகள்;’ (பக்கம் – 26) என்ற கவிதையில் அம்புலி இவ்வாறு எழுதுகின்றார்;.

அந்தச் சாலையை நீங்கள்
இப்போது
அழகாய்ப் பார்க்கிறீர்கள்
சொகுசு வாகனங்களும்
தார்போட்ட மவுசுமாய்
கடைகள்
கடைநிறையக் கன பொருட்கள் என
கலகலத்துக் கிடக்கிறது…….
இனி அந்த வழி நெடுகிலும்
ஆனந்தப் பயணங்களே
தொடர்வதான கனவு.
எனக்கு அவ் வீதியின்
வர்ணங்களெதுவுமே தெரிவதில்லை
முன்பு எப்படித் தெரிந்ததோ
அப்படியே
புற உருவத்தை ஊடுருவி
என்புருவைக் காட்டும்
‘எக்ஸ்றே’ படங்களைப்போல்
இந்த வீதியின்
சில வருடங்கள் முன்னான
காட்சிகளே
கனவிலும் வருகிறது……
காலம் ஆற்றமுடியாத வலியாய்
இக்காட்சிகளே
என்னுள் பதிந்து போயின…

அவரின் இக் கவிவரிகள் சுட்டுகின்ற மனநிலைக்கு உட்பட்டவர்களாகப் பலர் வாழ்கின்றனர். கவிஞர் சேரன் குறிப்பிடுவது போன்று ஆற்றொணா அஞருக்கு (மனவடுவிற்கு) உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இது சீர்செய்யப்படவேண்டியது. சமூகம் இதற்கான வழியைத் திறக்கவேண்டும். அதைவிடுத்து வலிகளை விளம்பரமாக்கி விற்கக்கூடாது.போராட்டக்களத்தைத் தமது விடுதலைக்கான வழியாக அவர்கள் தெரிந்தெடுத்திருந்தாலும் அதில் ஈடுபாட்டோடு இருந்தாலும். சீ.வீ. வெஜ்வூட்டின் ……எந்தவொரு பிரச்சினையையும் யுத்தம் தீர்த்து வைத்ததில்லை. அதன் உடனடியான விளைவுகளும் மறைமுகமான விளைவுகளும். எதிர்மறையானவையாகவோ, பேரழிவு மிக்கனவாகவோதான் இருந்துள்ளன…. யுத்தம், யுத்தத்தை மட்டுமே ஈனும் என்பதை, மனிதர் அன்றும் அறிந்திருக்கவில்லை, இன்றுவரை அறிந்துகொள்ளவும் இல்லை.” என்கின்ற யுத்தம் பற்றி கூற்றுக்கு ஏற்பச் சிலர் யுத்தத்தை மனதளவில் வெறுக்கும் கருத்துநிலையைக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.

யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புக்களில்
வெறுப்படைகிறேன்
நரம்புகள் அறுந்து தசைகள் பிய்ந்த
மனிதர்களின்
கோரச் சாவு கண்டு என்
மனம் குமுறுகின்றது……
எப்பொழுதும்
யுத்தம் எனக்குப்பிடிக்கவில்லை
ஆயினும் அதன் முழக்கத்தினிடையே
எனது கோலம் மாற்றமடைந்தது
கால நிர்ப்பந்தத்தில்.. (அம்புலி: பக்கம் – 16)

யுத்தம் திணிக்கப்பட்டதாக இருக்கிறது. அந்தத் திணிக்கப்பட்ட பாதையில் நடந்து தமக்கான சுதந்திர வெளியை அடைவதற்கு அவர்கள் விரும்பினர். எரிக்ஃபிராம் தேவைகளை எட்டு அடிப்படைத் தேவைகளாகக் காண்கின்றார். அதில் மிக முக்கியமான தேவையாகக் கடந்துசெல்லுதல் என்ற தேவையைக் குறிப்பிடுகின்றார். அது தங்களுடைய சம்பந்தமின்றி உலகினில் தூக்கி எறியப்பட்ட மனிதர்கள், மக்களை அல்லது பொருட்களை அழிப்பதன் மூலமாகவோ அல்லது படைப்புக்களின் வழியாகவோ தங்களது இயற்கையைக் கடந்து செல்ல வேண்டியதாக இருக்கின்றது என விளக்கப்படுகின்றது. ( இந்த விளக்கத்திற்கு வேறு பரிமாணங்களும் உண்டு. இங்கு நான் இந்தக் கவிஞைகளின் கவிதைகாட்டும் மனநிலைக்கு ஏற்ப இதனை விளக்கமுயல்கின்றேன்.) இந்த அடிப்படையில் பார்க்கும்போது பெண்களுக்குக் குறிப்பாக இந்தப் பெண் போராளிக் கவிஞைகளுக்கு தங்களது சம்பந்தமின்றித் தம்மை அடக்கிய, பின்தள்ளிய சமூகத்தின் வரையறையைக் கடந்து செல்ல வேண்டிய தேவை இருந்தது. அதற்கு அவர்கள் போராடுதல் (அழித்தல்), படைத்தல் என்ற இருநிலைகளைப் பிரயோகிக்க வேண்டும். பெண்போராளிகளில் எல்லோரும் படைப்பவர்கள் ஆகவில்லை. அழிப்பதோடு அதாவது யுத்தம் புரிவதோடு மட்டும் பலர் நின்றுவிட்டார்கள். இப் பெண்போராளிக் கவிஞைகளைப் பொறுத்தவரையில் யுத்தம் புரிந்து எதிரிகளை, தமக்கெதிரான சமூகமனப்பாங்கினை அழித்துத் தாம் விரும்பும் சுதந்திரத்தைப் படைத்தல், படைப்பினூடாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தித் தமக்கான இலக்கினைப் படைத்தல் என்ற இரண்டு வழிகளையும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இந்த இரு அடிப்படைகளையும் தம்மகத்தே கொண்டு வெளிக்கிளம்பும் இவர்களிடம் யுத்தம் தேவை என்ற மனநிலையும் யுத்தம் தேவையில்லை என்ற மனநிலையும் இருப்பது இயல்பானது. ஓன்று அழித்தலை விரும்புகின்றது மற்றயது படைத்தலை விரும்புகின்றது. மொத்தத்தில் இந்த இருநிலைகளுக்கும் ஊடாகத் தமது பிரச்சினைகளைக் கடந்து சென்று உன்னதத்தை அடைய படைக்க அது விரும்புகின்றது. மேற்குறிப்பிட்ட கவிதையின் இறுதியில் அது இவ்வாறு விபரிக்கப்படுகின்றது.ஆயினும்

ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்
எனை மறக்கவும்
ஒரு குழந்தையை மென்மையாகத்
தாலாட்டவும்
என்னால் முடியும்.
குளத்தடி மரநிழலில்
எனது புல்லாங்குழலைத் தழுவும்
காற்றோடு கதைபேச
நான் தயார்
நிம்மதியான பூமியில் நித்திரை கொள்ள
எனக்கு விருப்புண்டு. (அம்புலி: பக்கம் – 17)

இந்தத் தளத்தில் நின்று கொண்டு இப்பெண்போராளிக் கவிஞைகள் தமது துன்பத்தை, கால்களில் பூட்டப்பட்ட விலங்கை முதலில் உடைத்துப் பின்னர் உலகுதழுவிய அக்கறைகாட்டுபவர்களாகவும் தம்மையொத்த துன்பம் உறுபவர்கள் மீது இனம் மொழி கடந்து நேசத்தைப் பொழிபவர்களாகவும் தமக்கு ஏற்ற வகையில் சமூகத்தைக் கட்டமைக்க நினைப்பவர்களாகவும் இறப்பின் பின்னரும் இருக்கும் தமது இருப்பின் தொடர்ச்சிகளை விரும்பி நிற்பவர்களாகவும் தமது கவிதைகளின் செல்நெறிகளை அமைந்துச் செல்கின்றனரோ என எண்ணத்தோன்றுகின்றது.அவள் ஒன்றுக்கும் அசையாள் என்ற கவிதையில் மலைமகள் இப்படி எழுதிச் செல்கின்றார்;.

வானமே கிழிந்தது போல்
வாரிவாரி மழைபெய்தது
காவலரணையும் மேவி
வெள்ளம்
கால் பரப்பி நடந்தது
கடும்பயிற்சி எடுப்பதால்
தேய்ந்து நைந்து
கிழிந்த காற்சட்டை ஒன்றை
தைத்தவாறிருந்தாள் ஒருத்தி.
ஊசியில் நூல் கோர்த்தவாறு
அவள் மெல்லச் சொன்னாள்
‘வானமும் பீத்தலாய்ப் போய்ச்சுது
இது முடிய அதையும் நான்
பொத்தித் தைக்கப்போறன்’ (மலைமகள்: பக்கம் -90)

தனது பிரச்சினையாக இருக்கும் கிழிந்த காற்சட்டை என்ற பிரச்சினையை சீர்செய்ய முனையும் ஒருத்தி அதன் முடிவில் வானத்தைத் தைக்கப்போவதாகக் கூறுவதை, சுயதேவையை முன்னர் பூர்த்திசெய்து விட்டு அதன் பின்னர் பொதுப்பிரச்சினையைச் சீர்செய்யும் மனநிலையின் வெளிப்பாடு எனக் கொள்வது பிழையில்லை என நினைக்கின்றேன். தமது சுயதேவைகளில் இடைவெளியைவைத்திருப்பவர்கள், சுயபிரச்சினைகளைச் சீர்செய்யமுடியாதவர்கள் பொதுவெளிகளில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பது கேள்விக்குறியே. அவர்களால் நேர்மையுடனும் தைரியத்துடனும் தொழிற்பட முடியாது என்றே கருதுகின்றேன். வேண்டுமானால் தம்மை நேர்மையானவர்கள், தைரியமானவர்கள் என்று காட்டலாம்; நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து. இதனைத் தான் இங்கு நாம் அரசியலாகப் பார்த்து நிற்கின்றோம். அதுதான் இன்றைய யதார்தம் போலும்.தன்னில் இருந்து கிளம்பும் இந்த விடுதலை உணர்வு தம்மையொத்த துன்பத்தை உணரும் மற்றவர்களிடத்திலும் நேசத்தை உருவாக்கி விடுகின்றது. உன்னைப்போல் உன் அயலவனை நேசி என்பது தன்னை நேசிக்கும் ஒருவராலேயே சாத்தியமாகும். தன்னை நேசிக்காத ஒருவரால் தன் குடும்பத்தையும் நேசிக்க முடியாது, தன் தேசத்தையும் நேசிக்க முடியாது. தன்தேசத்தை நேசிக்க முடியாத ஒருவரால் பிறர் தேசங்களை எப்படி நேசிக்க முடியும். அவர்களால் உலகத்தவரைநோக்கி நான் உங்களுக்காய் உருகித்துடிக்கின்றேன் என உண்மையாகச் சொல்லமுடியாது. ஆனால் இனவெறி ருவண்டாவில் வீசியபோது ஆதிலட்சுமி சொல்லுகிறார்.

குஞ்சுகளே! உங்கள்
கூடுகலைத்த குரங்கு எது?
அஞ்சி அஞ்சி நீங்கள்
அழுது துடிப்பதனை
எண்ணிப் பார்க்க எந்தன்
இதயம் வலிக்கிறது
மொழி வேறு என்றாலும்
எங்களுக்கும் உங்களுக்கும்
மூச்சு ஒன்றுதானே. (ஆதிலட்சுமி:பக்கம் – 54)

உண்மையாகச் சொல்லுகிறார். மூச்சினூடு கலந்துவிடுகின்றார். இத்தகைய பரந்த மனம் உள்ள இக்கவிஞைகள், போரட்டம் (அழித்தல்) படைத்தல் என்ற இரண்டு விடயங்களுக்குள்ளும் நின்று உன்னதமான நிலையொன்றை அவாவி நின்றார்கள் என்று முன்னே குறிப்பிட்டேன் அந்த உன்னதமான நிலையில் தமது சமூகத்தின் நிலைமை எப்படியிருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதைத் தமது தாய் எப்படியிருக்க வேண்டும் என்பதன் ஊடாகச் சொல்லிச் செல்கின்றனர் என்றே நான் கருதுகின்றேன். தமக்கு மூலமான தம் தாய் ஒரு சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மூலமான தாய் எப்படியிருக்க வேண்டு;ம்.


என்னால்
பரிசளிக்க முடியாத வாழ்வை
நீயே சென்றடைவாய்
வழிகளில் சிவப்பும்
இறக்கைகளில் நெருப்பும்
உனக்குச் சொந்தமாகட்டும்
எம்மை வேகவைத்த காலம்
உன்னால் வேகி
சாம்பராகட்டும்
ஒரு புதிய வாழ்வு
உன்கரங்களில் பிறக்கட்டும் (அம்புலி:பக்கம் -25)

என்று கூறி வழிப்படுத்துபவளாக, பிள்ளைகளைச் சுயமாக இயங்கத் தூண்டும் உந்துசக்தியாக இருக்கவேண்டும். ‘தேடி அடைவாய்’ என்ற கவிதையில், ஒரு தாயின் கூற்றாக வரும் கவிதையில் மேற்படி வரிகள் வருகின்றன. ரூபி மார்க்கிரட் ‘அப்புறமாய் வருகின்றேன்’ என்ற கவிதையில் தாயாருக்கு ஒரு உபதேசத்தையே நடத்திவிடுகின்றாள். தாம் காணும் சமுதாயத்தில் எப்படியான எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் இருக்கவேண்டும் என அவள் கூறுகின்றாள்.

கன்றுக்குப் புல்சேர்த்து வைத்து

பசுவொன்று இறந்ததாய்
வரலாறு கிடையாது – அதனால்
கவலையை விடு (ரூபி மார்க்கிரட்: பக்கம் – 108)

தனது வாழ்வைத் தான் பார்த்துக் கொள்வேன் எனத் தன்னைப்பற்றிக் கவலை கொள்ளாதிருக்கப் பாடம் நடக்கிறது. ஆனால் இதற்கான, கவலையைத் தீர்ப்பதற்கான தீர்வு முன்வைக்கப்படவில்லை. கவலையை விடு என்றால் அது விட்டுப்போகுமா..? பாரதி தனது ‘அன்பான அம்மா’ என்ற கவிதையில், தனது உள்ளத்துணர்வுகளைத் தாய்க்கு கூறுவதாக வடிக்கும் கவிதையில் இதற்கான ஒரு மாற்று ஏற்பட்டைத் தன் தாய்க்கு கூறுகின்றார்.

நாளை
திரும்பிவராத உன்
மகளை எண்ணி
நீ கவலைப்படாதே
என் மறைவின் பின்னர்
புதிய தோழர்கள்
அந்த வைகறைக்காய்
புறப்படுவர்கள்
அதற்கு முன்னால்
அவர்கள் உன்னிடம் வரலாம்
அப்போது அவர்களின் ….
இனிய முகங்களில்
என்னைப் பார்
அடுத்துவரும் நாட்களில்
அவர்களும்
இல்லாமல் போகலாம்…
எம் மக்கள் புறப்படுவர்கள்
அப்போது அந்தப்
புதிய விடியலை வரவேற்கும்
அதிகாலைப் புஷ்பங்களாய்
மெல்லிய பனித்துளியின்
முகத்தின் பின்னால்
நாம் முகையவிழ்ந்து
தென்றலின் தடவலில்
முகமலர்ந்தாடுவோம்.
அப்பொழுது நீ இருந்தால்
உற்றுப்பார்
உன் செல்ல மகளின் முகம்
சிரித்தபடி தெரியும். (பாரதி:பக்கம்-117)

மற்றவர்களில் தன்னைத் தரிசிக்கும் நேசத்தை வழங்குகின்றாள். தமது தாய்மார் இப்படியிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் ஊடாகச் சன்னதம் கொண்ட ஊழிக்காற்றாய், தாய்மாரின் பால்நிலைசார்ந்த பிம்பத்தைச் சுடரை அணைத்துச் செத்தைக் கதவை நீக்கிக் கடலில் இருந்து தண்ணொளி பரப்பி எழுகின்ற மதியைப் பார்க்க வைக்க முயன்றார்கள். அரிஸ்டோட்டிளின் கவிதையியல் என்ற நூலில் அவர் பாத்திர உருவாக்கம் பற்றிக் கூறும் போது ‘எந்தப்பாத்திரத்தையும் ஆண்மையுள்ளதாகப் படைக்க முடியும்; ஆயினும் ஒரு பெண்பாத்திரத்தை இங்கு நாம் கருதும் வகையில் ஆண்மையுடையதாகவோ, அஞ்சவரு தோற்றமுடையவளாகவோ படைக்க முடியாது அப்படிப்படைத்தால் பாத்திரப்பொருத்தம் அமையாது என்கிறார். (அறிவு, நுட்பம், வீரம் போன்றவற்றில் ஆண்களைவிடப் பெண்கள் இயற்கையாகவே குறைந்தவர்கள் என்ற தனது காலக் கிரேக்கக் கருத்தியலில் அதனைச் சொன்னார்). அதனை மாற்றி உடைத்து தமது மனஉணர்விற்கும் கருத்தியலுக்கும் ஏற்றதாகத் தம் தாய்மாரினை மாற்றுவதன் மூலம் சமூகத்தின் மாற்றத்தை அவர்கள் எதிர்பார்த்தார்கள் போலும் இதற்காகவேகவிதைகளைச் சுமந்த

கருவறையை இன்று
கல்லறை ஒன்று சுமக்கிறது (பாரதி: பக்கம் – 113)

என்னக் கிடந்தார்கள் என்றே சொல்லத் தோன்றுகின்றது. ஆனால் இன்று காண்பதென்னவோ காந்தாவின் ‘எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த’ என்ற கவிதையில் வரும் தாயின்

எந்த மகனுக்காய்
என் கால்களை நகர்த்த?
நேற்று விதையுண்டு போன
மூத்தவனுக்காக? இல்லை
இப்போதுதான்
விதைக்கப்பட்ட
என் இளைய குஞ்சுக்கா? (அ.காந்தா: பக்கம் – 35)

என்ற கேள்வியோடு கூடிய இருதலைக் கொள்ளியினுள் எறும்பொத்த மனநிலையுடன் தனித்துத் தவித்திருக்கும், தாய்மார்களின் பெருக்கத்தையே.
இந்தவாறே காதல் என்ற உணர்விலும் புதிய பரிமாணம் கொண்டுவரப் படவேண்டும் என்று நாமகளின் ‘காதலின் புதிய பரிமாணம்’ (பக்கம் – 98) என்ற கவிதை பேசுகின்றது.

எப்போதாவது தெருவில்

அவசர இயக்கத்தில்
கண்டுவிட நேர்கையில்
சந்திப்பை வரவேற்பதாய் அவன்
கண்கள் ஒருமுறை விரியும்
மறுகணம் ஆழ்ந்து மூடிக்கொள்ளும்.
அவனுக்குத் தெரியும்
எனக்கு அது போதுமென்று.

பாலுக்குரிய ஈர்ப்பினால் காதல் உருவாகிவிடினும் இலட்சியத்திற்கு அது தடையாக இருந்துவிடக் கூடாது என்ற விழிப்புநிலையை அதில் தரிசிக்கலாம். அத்துடன் காதல் என்பது விடுதலையின் மீதானதாக இறப்பின் பின்னரும் வாழும் விருப்புடன் தன்னைப் பிணைத்துக்கிடக்கின்றது. எரிக் ஃபிராமின் மொழியில் இதனை வேர்பிடித்த தன்மை என்ற தேவையாகச் சொல்லலாம். இயற்கையின் பிடியை உதறிக் கடந்துபோனாலும் மீளவும் இவ்வுலகில் சொந்த வீட்டிலிருப்பதைப்போல் உணர்வதற்கும், அதில் வேர்பிடித்து நிலைகொள்ளுவதற்கும் தேவை உள்ளது என்று அவர் குறிப்பிடுகின்றார். இக்கவிஞைகளின் இத்தேவையினை தமது மரணத்தின் பின்னரும் மற்றவர்களில் எம்மைக் கண்டுகொள்ளுங்கள், சுதந்திரத்தின் பின்னரான வேளையில் அதனை நாம் பார்த்து மகிழ்வோம் போன்ற தொனியில் அமைந்த கவிவரிகள் வெளிப்படுத்துகின்றன. வானதியின் ‘எழுதாத கவிதை’ (பக்கம் – 65) என்பதில் வரும்

அர்த்தமுள்ள என் மரணத்தின் பின்
அங்கீகரிக்கப்பட்ட தமிழீழத்தில்
நிச்சயம் நீங்கள்
உலா வருவீர்கள்
அப்போ எழுதாத என் கவிதை
எழுந்து நிற்கும் உங்கள் முன்
என்னைத் தெரிந்தவர்கள்
புரிந்தவர்கள் அரவணைத்தவர்கள்
அன்புகாட்டியவர்கள் அத்தனைபேரும்
எழுதப்படாமல் எழுந்து நிற்கும்
என் கவிதைக்குள் பாருங்கள்
அங்கே
நான் மட்டுமல்ல, என்னுடன்
அத்தனை மாவீரர்களும்
சந்தோசமாய்
உங்களைப் பார்த்து
புன்னகை பூப்போம்

வரும் கவிவரிகளில் அதனைத் தரிசிக்கலாம் போலத் தோன்றுகின்றது.இந்தவாறு பல கருத்துநிலைகளைச் சிந்தனையில் கிளறிவிடும், புறத்தே போர் நடந்த போது தம் அகம் தீண்டிய கருக்களை உள்ளே வைத்துக் கிடைத்த கால இடை வெளியில் பிரசவிக்கப்பட்டவையாகக் காணப்படும் இக்கவிதைகள். புறப்போர் முடிவுற்று அது ஒவ்வொருவர் உள்ளத்திலும் அகப்போராக மாற்றமுற்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகச் சூழலில் சூழ்நிலைமை கருதிப் பெயரிடாத நட்சத்திரங்களாக வெளிவந்திருக்கின்றன. உள்ளிருக்கும் நட்சத்திரங்களைப் பார்க்கும் போது அவை எரிகற்களாகவே எனக்குத் தெரிகின்றன. நட்சத்திரங்கள் என்று அழைப்பவை கூட தொலைவில் இருக்கும் எரிகற்கள் தானே. தூரத்தில் இருந்து தரிசிப்பவர்களுக்கு, இந்த அனுபவத்திற்குத் தொலைவில் நிற்பவர்களுக்கு வேண்டுமானால் இது நட்சத்திரங்களாகத் தெரியலாம். அவர்கள் அதனை நட்சத்திரங்கள் என்று கொண்டாடலாம். ஆனால் அந்தத் தகிப்பில் கிடந்து புரண்டு எழும் நமக்கு, அருகில் இருந்து பார்த்த எமக்கு இவை எரிகற்களாகவே புலப்படுகின்றன. எரிகற்கள் என்று குறிப்பிடுவதற்கு இன்னுமொரு காரணம் உண்டு. இலக்கியங்கள் உண்மைகளை முன்வைப்பதில்லை அதி உண்மைகளை முன்வைக்கின்றது என்று அரவிந்தரின் கருத்தை ஒட்டி ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். அவர் அதி உண்மை என்பதைச் செறிந்த உண்மை என்கின்றார். உண்மையில் நடந்த ஒரு விடயத்தை புனைவுகளின் ஊடாக இலக்கியம் செறிந்த உண்மைகளாக, அதி உண்மைகளாக மற்றி விடுகின்றது. ஆனால் இக்கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகள், உண்மைகளாக மட்டுமே இருக்கின்றன. அவை அதிஉண்மைகளாக மாற்றப்படவில்லை.

ஊர்ந்து போன கதை
ஊர் கலைத்த எதிரிகளை
உளவறிந்த கதை
கொல்லவந்த பகைவருக்கு
குண்டெறிந்த கதை
அலையலையாய் நாம் புகுந்து
‘ஆட்டி’ அடித்த கதை என
ஆயிரம் கரு எமக்கு
கவிதை எழுத.. (மலைமகள்: பக்கம் – 95)

மேற்போந்த வரிகளை அதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இப்படிப் பல கவிதைவரிகள் இத்தொகுதியில் காணப்படுகின்றன. இதனால் கிடைத்த அனுவம் அல்லது கரு ஆழ்மன ஆழத்திற்குக் கொண்டு செல்லப்படாமலேயே படைக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றமை தவிர்க்க முடியாது. மேற்படி கவிதையின் (மலைமகள்: பக்கம் – 95) இறுதிப்பந்திக்கு முதல்பந்தி இவ்வாறு சொல்கின்றது.

பளை போவதற்காய்
இயக்கச்சி கடக்கையிலே
அரியாலையில் அடிவைத்தார்
கைதடியில் கால்பதித்தார்
நாவற்குழியை
நாலு எட்டில் கடந்தார்
நானெதை எழுத?
இந்த அவசரத்தில் எதை
என்னவென்று எழுத?

இந்த அவசரம் இத்தொகுதியில் உள்ள எல்லாக் கவிஞைகளுக்கும் உரிய பொதுமைப்பாடுடைய ஒன்றாகவே கருதத்தக்கது. இதனால் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் கவிதையின் உயர்ந்த தரத்தை அடையாமல் பெரும்பான்மையாக வெளிப்படைத்தன்மை கொண்டவையாகக் காணப்படுவதோடு போராட்ட உணர்ச்சியைத் தூண்டுதல், பிரசாரப்பாங்கு, வெற்றியைப்பாடுதல், புகழ்பாடுதல் போன்ற அம்சங்களையே வெளிப்படுத்தி நிற்கின்றன எனக்கருதத்தக்கதாக இருப்பினும் அலையிசையினுடைய நான்கு கவிதைகள் இக்கவிதைத் தொகுதியில் ஓரளவிற்கு உண்;மைகளைச் செறிந்த உண்மைகளாக்க முயன்றிருக்கின்றன என்றே எனக்குத்தோன்றுகின்றது.

வாழ்வுப் படிம அத்திவாரங்களின்
வேர்களை
கறையான்கள் அரித்திருந்தன
எஞ்சியவைகளில்
அவர்களின் ரேகைள்
உருவேறிய மனங்களின் தாண்டவங்கள்
அரங்கேறத் துடித்தன (அலையிசை: பக்கம் – 38)

இவை அரவிந்தரின் அளவுகோலை வைத்துச்சொல்ல முனைவது. இது முடிந்த முடிவல்ல. இரண்டாம் உலகமாகா யுத்தத்தின் பின்னரான சூழு;நிலையில் எழுந்த கவிதைகள் உளவெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்ட உளவெளிப்பாட்டுக் கவிதைகளாக இருந்ததை அவதானிக்க முடியும். அவை சுயம் என்ற புள்ளியில் நின்று தனக்கும் சுயத்திற்குமான முரண்பட்ட நிலைகளையும் தனிநபர்கள் தங்களுக்குள் அனுபவிக்கும் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாத வேதனைகளையும் துன்பங்களையும் வெளிப்படுத்துபவையாகத் தம்மைக் காட்டி நின்றன. இவ்வகைப்பட்ட கவிதைகள் கவிஞர்களுக்கான ஓர் ஆறுதல்; மொழியாக மட்டுமல்லாமல் சிகிச்சை மொழியாகவும் இருந்தது. இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள் யுத்த காலத்தில் எழுதப்பட்டவையாக இருப்பினும் உளவெளிப்பட்டுத் தன்மையின் உட்கூறுகளைக் கொண்டவையாகக் காணப்படவில்லை.

ஏராளம் எண்ணங்களை எழுத
எழுந்து வர முடியவில்லை
எல்லையில் என்
துப்பாக்கி எழுந்து நிற்பதால்
எழுந்துவர என்னால் முடியவில்லை
எனவே
எழுதாத என் கவிதையை
எழுதுங்களேன். (வானதி: பக்கம் – 64)

என்ற வேண்டுதலை மட்டுமே அவை முன்வைக்கின்றன. சுயம் என்பது போராட்டத்தை மையப்படுத்தியதாகக் கட்டமைக்கப்பட்டாலும். போரினால் ஏற்பட்ட தனிமனித உணர்வுகளை அகம் சார்ந்து பேசாமல் புறவயமாகப் பொதுமைப்படுத்தியே இக் கவிதைகள் பேசுகின்றன. புறவயமாகப் பேசினாலும் அவை சத்தியத்தின் சாரத்தைப் பேசுகின்றன. இதனால் இத்தொகுதியில் உள்ள கவிதைகள்

நீயும் இல்லை
உனக்குக் கல்லறையும் இல்லை
கண்ணீர் விட்டு அழமுடிந்தும்
பெயர் சொல்லியழ முடியவில்லைத் தோழி
கல்லறையில்லாத காவியமே உன்
தணியாத காதலை நான் அறிவேன்
உன்னை ஓவியமாய்
கண்ணெதிரே வரையாவிட்டாலும்
கற்பனைச் சித்திரமாய்
இதயத்தில் வரைந்துவிட்டேன் (நகுலா:பக்கம் – 97)

என்ற நிலையையே வாசகராகிய எமக்கு ஏற்படுத்தி, உண்மையின் அடிப்படையில் மனிதர்கள் மதிப்பிடப்படவேண்டும் என்ற நீதியுணர்வினை எமக்குள் விட்டுச்செல்வதோடு

ஒரு தேசத்தின் இருளை
விடியலை நோக்கி அசைக்கும்
ஆயிரமாயிரம் பேருடனான
என் பயணமும்
ஒருநாள் இலக்கை அடையும். (ஞானமதி:பக்கம் – 63)

என்று அமைதிகொள்ளச் செய்கின்றன. ஒட்டுமொத்தத்தில் ‘பெயரிடாத நட்சத்;திரங்கள்’ ஒரு காலத்தின் பதிவாகச் சாட்சியாக எம்முன் விஸ்;வரூபம் எடுத்து நிற்கின்றது. இவை எப்பொழுதோ முடிந்த காரியம் ஆனால் முழுதும் உண்மை. அவ்வளவும் தான்.

மௌனமாக என்
மன இடுக்குகளில் பதியப்பட்டுள்ள
உயிரின் உணர்வுகளோடு ஒன்றிப்போக
வாழ்வு நகர்கிறது
இமைப்பொழுதிலும்
ரணமாகும் உயிரின் நிதர்சனத்தை
என் அகம், பாடலாக
என்றுமே இசைத்துக்கொள்ளும். (அலையிசை: பக்கம் – 37)

 

http://www.oodaru.com/?p=11386

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.