Jump to content

முடிந்து போன போரும் முடிவுறாத உரையாடல்களும்...


Recommended Posts

களத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இறுதிப் போரின்போது அல்லது போர் முடியும் தறுவாயில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாத ஒரு நிலை இன்னும் தொடர்கிறது. சரணடைந்தவர்கள் அனைவரைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மேல் தமக்கு எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் தெரியாது என்கின்றது இலங்கை அரசும் அதன் பாதுகாப்பு அமைச்சும்.

ஆனால், இதை மறுத்துரைக்கின்றனர் சரணடைந்த அந்தப் போராளிகளின் உறவினர்களும் குடும்பத்தினரும். இதைப் பற்றி அவர்கள், இலங்கை அரசினால் - ஜனாதிபதியினால் - அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் தெரிவித்திருக்கின்றனர். பி.பி.ஸி போன்ற சர்வதேச ஊடகங்களிலும் இவர்கள் இதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கலை, பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளராக இருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரையின் மனைவி, திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராகவும் பின்னர் புலிகளின் பரப்புரைப் பொறுப்பாளராகவும் செயற்பட்ட எழிலனின் மனைவி, புலிகளின் படைத்துறைப் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி போன்றோர் வெளிப்படையாகவே தமது கணவர் படைத்தரப்பிடம் சரணடைந்ததாகவும் பின்னர் அவர்களைப் பற்றிய தகவலே இல்லாதிருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக மேலும் சில விவரங்களைத் தெரிவிக்கிறார் சங்கரன் கவி என்பவர். அதிலும் இவர் சொல்லும் தகவல்கள் மேலும் கவனத்திற்குரியவை. சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் சிலர் குடும்பமாகச் சரணடைந்திருக்கின்றனர். சிலர் தங்களுடைய பிள்ளைகளையும் – குழந்தைகளையும் - தங்களுடன் கூட அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த விவரங்களையெல்லாம் எம்மிடம் பகிர்ந்து கொண்டார் கவி. இவரும் ஏனையோரைப்போல தனது கணவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காத நிலையிலேயே இருக்கிறார்.

எனினும் இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் இவர் எங்களுடன் பல விசயங்களைக் குறித்தும் பேசினார்.

***

என்ரை பேர் கவி. இவற்றை பேர் சங்கரன். அதை மற்றவர்கள் இணைத்து சங்கரன் கவி என்று சொல்லுவினம். நாங்கள் இரண்டு பேரும் போராளிகள். ஆனால், காதலிச்சுக் கலியாணம் செய்யேல்ல. அண்ணைதான் (தலைவர் பிரபாகரன்) எங்களின்ர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தவர். அவர்தான் மூத்த தளபதிகளிட்ட விசயத்தைச் சொல்லி எங்களுக்குக் கலியாணம் நடந்தது.

அண்ணை சொல்லி, இயக்கத்தில் மூத்த தளபதிகள் இரண்டு பேர் எங்களோட கதைச்சுத்தான் எங்கட திருமணம் நடந்தது.

முடிந்துபோன போரும் முடிவுறாத உரையாடல்களும்…

எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். சண்டை முடியேக்கை நாங்கள் ஒண்டாத்தான் வந்தனாங்கள். சனங்களோட வந்து, வட்டுவாகலுக்க நிண்டம். அப்ப, படையினர் ஒரு அறிவிப்பை விட்டார்கள்.

இயக்கத்தில இருந்தவையள் எல்லாம் வந்து பதியவேணும். தனியாக இருக்க வேணும் என்று. இது நடந்தது, மே மாதம் 18 ஆம் திகதி. அந்த அறிவிப்பை நாங்கள் எதிர்பார்த்தாலும் என்ன செய்யிறது எண்டு தெரியாத நிலை. ஆனால், அதுக்குள்ள (படையினருக்குள் சிக்குப்பட்டதுக்குப் பிறகு) என்னதான் செய்ய முடியும்? ஒரே குழப்பம். எங்களுக்கு மட்டுமில்ல. எல்லாருக்குந்தான். ஆளையாள் பார்த்துக் கொண்டிருக்கிறமே தவிர, ஆரும் கதைச்சு ஒரு முடிவெடுக்கிறதாகக் காணேல்ல.

பிறகு மெல்ல மெல்லக் குசுகுசுக்கிற மாதிரிக் கதைச்சு, எல்லாரும் ஒரு தீர்மானத்துக்கு வந்தினம். அதுக்குப் பிறகுதான் சரணடைந்தவை.

சரணடையும்போதே சங்கரன் சொன்னவர், 'திரும்பி வாறதெண்டதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏதோ போறம்... நீங்கள் கவனமாக இருங்கோ.... பிள்ளையைக் கவனமாக வைச்சுக் கொள்ளுங்கோ... எண்டு'.

(அழுகிறார். சற்று நேரம் அமைதி அல்லது மௌனம். அவரால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எழுந்து வீட்டினுள்ளே சென்று விட்டார். நாங்கள் எதுவும் செய்வதற்கின்று சில நிமிடங்கள் அங்கே இருந்தோம். அவருடைய நிலைமை எங்களுக்குப் புரிந்தது. சற்று நேரத்துக்குப் பிறகு மீண்டும் வந்து பேசத் தொடங்கினார், கவி).

மன்னிக்க வேணும். என்னால தாங்கேலாமல் இருக்கு, அதுதான்.... அப்ப நானும் வாறன் எண்டு சங்கரனிட்டச் சொன்னன். ஆனால், அவர் அதை விரும்பேல்ல. அப்பிடி நானும் அவரோட போறதெண்டால், பிள்ளையை என்ன செய்கிறது எண்ட பிரச்சினை. பிள்ளையோட போனால் கொஞ்சம் பயம் குறைவு. பிள்ளைக்காக அவர்கள் மனம் இரங்குவினம் எண்டு கொஞ்சப்போர் அப்பிடியே குடும்பமாகச் சரணடைய ஆயத்தமாகிக் கொண்டிருந்திச்சினம். அதாலதான் நானும் அப்பிடிக் கேட்டன்.

ஆனால், சங்கரன் அதை விரும்பேல்ல. அவர் சொன்னார், நாங்கள் இப்ப சரணடையிறமே தவிர, இதுக்குப் பிறகு என்ன நடக்கும் எண்டதுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் எந்தப் பொது அமைப்புகளையும் சாட்சியாக வைத்துக் கொண்டு சரணடையவில்லை. ஐ.நாவோ, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமோ அல்லது அதைப்போல வேற ஏதாவது ஒரு பொது அமைப்போ அல்லது ஒரு மூன்றாந்தரப்போ இந்தச் சரணடைவில் ஒரு சாட்சியாக இருந்தால், நீர் விரும்புகிற மாதிரி நாங்கள் குடும்பமாகவே சரணடையலாம் எண்டார்.

சங்கரன் பொதுவாகவே எல்லாத்திலயும் நிதானமானவர். சண்டை முடியிறதுக்கு முதலே அவர் நிலைமை என்னமாதிரிப் போகப் போகிறது எண்டதை ஓரளவுக்கு ஊகிச்சிட்டார். ஆனால், அதை அவர் என்னட்டைக்கூட வெளிப்படையாகச் சொல்லேல்ல. எண்டாலும் நான் அதை விளங்கிக் கொள்ள வேணும். அந்த யதார்த்தத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேணும் எண்டு நினைச்சுச் சில சாடைகளைக் காட்டினார். ஒரு நாள் நான் நேரிலயே இதைப் பற்றிக் கேட்க, உமக்கு நிலைமை விளங்குந்தானே. இயக்கத்தில் இருந்தவைக்கும் இயக்கத்தை நல்லாத் தெரிஞ்சவைக்கும் அண்ணையை விளங்கினவைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கு எண்டு தெரியும். நாங்கள் எதுக்கும் தயாராக இருக்கோணும் எண்டு சொன்னார்.

அதைப்போல, அவருக்கு இந்தச் சரணடைவில என்ன நடக்கும் எண்டும் தெரியும் எண்டு நினைக்கிறன். என்னைத் தன்னோட வரவேண்டாம் எண்டிட்டார். அவரைத் தனியாகப் போகவிட எனக்கு மனமில்லை. பெரிய கஸ்ரமாக இருந்தது. அந்த நிலைமையைச் சொல்லேலாது...

(அவர் மீண்டும் உடையத் தொடங்கிவிட்டார். இந்த மாதிரி நிலைமையில் ஒருவரை எதிர்கொள்வது எங்களுக்கும் கடினமானது. இன்னும் இதைத் தெளிவாக்கினால், இவர்களின் உள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையைக் கிளறி விடுகிறோமா அல்லது, இவர்களின் உள்ளே வெடிப்பதற்காகக் காத்திருக்கும் துயரங்களையும் வேதனைகளையும் நாங்கள் மீண்டும் கிண்டி விடுகிறோமா? அதாவது, அவர்களைத் துயரப்படுத்துகிறோமா என்ற கேள்வி எங்களுக்கு எழுந்தது. இது ஒரு சங்கடமான நிலைமை மட்டுமல்ல, இதை எதிர்கொள்வதும் கடினமானது. அதுமட்டுமல்ல, இது ஒருவகையான குற்றவுணர்ச்சிக்குரியது. இது தொடர்பாகப் பிறகு நாங்கள் விவாதித்தோம். ஆனால், எப்படியோ இவர்களின் உள்ளே இருக்கின்ற கொதிப்புகளையும் வேதனைகளையும் உண்மைகளையும் சாட்சிபூர்வமாக வெளியே கொண்டு வரவேண்டும் என்பது ஒரு பொதுத் தேவையாகவும் அது இவர்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டதுமாக இருப்பதால் இதை நாம் செய்யத்தான் வேணும் என்று தோன்றுகிறது. அது ஒரு தவிர்க்க முடியாத நியாயமும் கூட. எனவே, இதையெல்லாம் நாம் செய்வது அவசியம் என்ற முடிவுக்கு வந்தோம்)

சற்று நேரத்துக்குப் பிறகு மறுபடியும் கவி தொடர்ந்தார்.

ம்... அப்ப சிலபேர் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு போக ஆயத்தமாக நிற்கினம். படையினர் அறிவிக்கிறார்கள். தாங்களாகவே வந்து சரணடையவேணும். அதில்லாமல், பிறகு ஆதாரமாகப் பிடிக்கவேண்டி வந்தால் பிரச்சினை வரும் எண்டு. இந்த அறிவிப்பு இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்த நேரத்தைப் பார்க்க வேணும். பதற்றமும் என்ன செய்யிறது எண்டுந் தெரியாத நிலை. மெல்ல மெல்லச் சரணடையிறதுக்கு எல்லாரும் ஆயத்தமாகினம். சங்கரன் மற்ற ஆக்களோட கதைக்கிறதும் எங்களிட்ட வாறதுமாக நிற்கிறார். எனக்கு அந்த நேரத்தில என்ன செய்யிறது எண்டே தெரியேல்ல. நானும் சரணடையிறதா இல்லையா எண்ட பிரச்சினை. நீர் நில்லும் எண்டார் சங்கரன். பிறகு நிலைமையைப் பார்த்துச் செய்வம் எண்டார். அதால நான் பிள்ளையை வைச்சுக் கொண்டு மாமா மாமியோட நிண்டன்.

ஒரு இரண்டு மணித்தியாலம் போயிருக்கும். படைத்தரப்பு அறிவிப்புக்கு மேல அறிவிச்சுக் கொண்டிருக்கு. ஒரு அறுபது பேருக்கு மேல அதில சரணடைவதற்கு ஆயத்தமாகிச்சினம். அதில, பேபி சுப்பிரமணியம் என்கிற விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர். அவர்தான் கல்விக்கழகப் பொறுப்பாளராக இருந்தவர். அவர் தன்னுடைய மனைவியோடயும் பிள்ளையோடயும் சரணடைந்தார். அவற்றை மனைவியும் ஒரு போராளியே. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை. பிள்ளைக்கு ஆறு அல்லது ஏழு வயதுதானிருக்கும். அதையும் கூட்டிக்கொண்டே போனார்கள்.

அதைப்போல அரசியல் துறைப் போராளியாக இருந்த கோபி என்கிற இன்னொருதரும் மனைவி, பிள்ளையோடதான் போனார். இன்னொருதர் ராஜா என்ற போராளி. இவர் முன்னர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர். இவரின் மனைவி முன்னர் ஒரு விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். அதால தான் மட்டும் மூன்று பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு போனார். மூன்றும் சின்னப் பிள்ளைகள். அனேகமாக மூத்தபிள்ளைக்கு பன்னிரண்டு வயதுக்குள்ளதான் இருக்கும். கடைசிப் பிள்ளைக்கு இரண்டு வயதுக்குள்ள இருக்கலாம். இப்பிடிப் பலர் போச்சினம்.

எல்லாரையும் பிரான்ஸிஸ் யோசப் எண்ட ஃபாதர்தான் கூட்டிக்கொண்டு போனார். ஒரு மதகுருவோட போகும்போது கொஞ்சம் மரியாதையும் பாதுகாப்பும் இருக்கும் எண்டு நாங்கள் எல்லாரும் நம்பினம். அப்பிடித்தான் சரணடைந்தவையும் நம்பிச்சினம். ஆனாலும் போகேக்கை பெரிய அந்தரமாக இருந்தது. அந்தக் காட்சியை நாங்கள் மறக்கவே ஏலாது. ஒரே அழுகைச் சத்தம். பிரிந்து போறவையும் அழுதுகொண்டே போய்ச்சினம். சிலர் அழுகையைக் கட்டுப்படுத்தினாலும் அவர்களின் மனம் அழுதது. சங்கரனும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமற்தான் போனார். அவரின்ரை கண்களை என்னாலை அப்ப பார்க்க முடியேல்ல. அந்தச் சக்தி எனக்கப்ப இருக்கேல்ல. அதை இப்ப நினைச்சாலும் தாங்கேலாது.... (மீண்டும் அழுகிறார். எங்களாலும் இதைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆனாலும் அந்த நிலையில் அவரை விட்டு வர முடியாது. எனவே சற்றுப் பொறுத்திருந்தோம்....மீண்டும் அவரே தொடர்ந்தார்).

அப்ப சங்கரனும் மற்ற ஆக்களோட சேர்ந்து போனார். அண்டைக்குப் போனவர்தான். பிறகு தகவலே இல்லை. பாலகுமாரனும் தன்னுடைய மகனுடன் இப்பிடித்தான் சரணடைந்தார் என்று கேள்விப்பட்டன். ஆனால், அவர் எங்கட பக்கமாக வந்தமாதிரித் தெரியேல்ல. இப்ப அவரைப் பற்றியும் ஒரு தகவலும் இல்லை. இடையில அவற்றை படத்தையும் மகனின் படத்தையும் பத்திரிகைகளில் பார்த்தோம். ஆனால், ஒருதற்ற தகவலும் இல்லை.

சரணடைந்தவர்கள் எங்கே? அதுவும் பட்டப்பகலில், ஆயிரக்கணக்கான சனங்கள் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கச் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று யார் சொல்வது? இதை யார் கேட்பது? நாங்கள் இப்பிடிச் சில இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறம். அரசாங்கத் தரப்பில இருந்து வந்த நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இப்பிடிப் பலர் முறையிட்டிருக்கிறம். ஆனால், இன்னும் ஒரு பதிலும் இல்லை. இதுக்கிடையில் வதந்திகள் வேறு.

இப்பவாவது இந்த வதந்திகள் கொஞ்சம் குறைவு. முந்திக் கொஞ்சநாள் எங்களைத் தூங்க விடமாட்டார்கள். அந்த அளவுக்குக் கதைகள். அங்க அவர் இருக்கிறார். இங்க இவர் இருக்கிறார். ஓமந்தையில நம்பிக்கையான ஒராள் கண்டவராம். பூஸாவில இன்னாரை வைச்சிருக்கினமாம்.

நம்பிக்கையான ஆட்களை வைச்சு ஆளை மீட்கலாமாம். அப்படி வேற ஆட்களை மீட்டு வெளியில அனுப்பியிருக்கிறார்கள். வேணுமெண்டால் உங்கட ஆளின்ரை விபரத்தைத் தாங்கோ ஆள் எங்க இருக்கிறார் எண்டு கண்டு பிடிச்சுத்தாறம் எண்டு சொல்வார்கள். இந்தக் கதைகளை நாங்களும் ஆரம்பத்தில நம்பிறதோ விடுகிறதோ எண்டு குழம்பியிருக்கிறம். இந்தக் கதைகளை நம்பிக் கனபேர் நிறையக் காசைக் குடுத்து ஏமாந்தும் இருக்கினம்.

இதைவிட வெளிநாடுகளில் இருக்கிற சொந்தக்காரருக்குச் சொல்லி அவையள் இந்த ஆட்களுடன் தொடர்பு கொண்டு காசைக்குடுத்து ஏமாந்ததும் இருக்கு. நாங்கள் தோற்றதுக்குப் பிறகு இப்ப இருக்கிற நிலைமையைச் சொல்லேலாது. எது உண்மை? எது பொய்? யாரை நம்புகிறது? எதை நம்புகிறது? எண்டு ஒண்டுமே தெரியாது. எல்லாம் மாயமாகத்தான் இருக்கு.

சிலவேளை எல்லாத்தையும் நினைத்தால் தலைசுற்றும். இவ்வளவு பொய்யர்களும் எங்கே இருந்தார்கள். ஏமாற்றும் நடிப்பும் பொய்யும் எண்டுதான் நிலைமை இருக்கு.

இப்ப என்னுடைய கேள்வி என்னவென்றால், இப்பிடிச் சரணடைந்த ஆட்களை எப்படி நாங்கள் மீட்கிறது? அவையளைப் பற்றிய சேதிகளை – தகவல்களை எப்பிடிப் பெறுகிறது? யார் மூலமாகப் பெறுகிறது? சரணடையும்போது கூடப்போன பெண்களையும் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளையும் என்ன செய்திருக்கிறார்கள்? அதுகளுக்கு என்ன நடந்தது? அதுகள் இப்படி ஒரு தகவலுமே தெரியாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறதைப் பற்றி இந்த உலகம் என்ன பதில் சொல்லுகிறது? போரின் முடிவில் நிச்சயமாக ஒரு பெரிய சரணடைவு நடக்கப் போகிறது என்பதை நிச்சயமாக இந்தியாவோ, அமெரிக்காவோ, ஐக்கிய நாடுகள் சபையோ தெரிந்தே இருந்தது. அப்படித் தெரிந்திருந்தபோதும் அதற்கான பாதுகாப்பை ஏன் இந்தத் தரப்புகள் செய்யவில்லை? அல்லது முக்கியமான மனித உரிமைகள் அமைப்புகள் கூட முன்னேற்பாடாக இதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம் அல்லவா?

போர் நடந்த நாடுகளில் இப்படிச் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலை ஏற்பட்டிருக்கு. அப்படித் தெரிந்து கொண்டும் ஏன் இதையெல்லாம் செய்யாமல் விட்டார்கள்?

போரின்போதே பெரிய அளவில் சனங்கள் செத்திருக்கு. அதையெல்லாம் செய்மதிகள் மூலமாக இந்தப் பெரிய நாடுகளும் தலைவர்களும் அறிந்து கொண்டேயிருந்திருக்கிறார்கள். ஆனால், அப்படித் தெரிந்து கொண்டும் கடைசிவரைக்கும் தூர நின்றிருக்கிறார்கள். இதிலதான் நாங்கள் கோபப்படுகிறம். விடுதலைப்புலிகள் அமைப்பின் மிஞ்சிய தலைவர்களும் வேண்டாம் என்று எல்லாரும் கருதியிருக்கினமா? ஏனென்றால், எங்களின்ரை தமிழ் அரசியற் தலைவர்கள் கூட இப்படிச் சரணடைந்த ஆட்களின்ரை நிலைமையைப் பற்றிக் கதைக்கிறேல்லை. சும்மா பொதுவாகப் போராளிகளை விடுங்கோ என்று சொல்கிறார்களே தவிர, உண்மையாக சரணடைந்து காணாமற்போன ஆட்களைப் பற்றிக் கதைக்கிறதில்லை. அவையின்ரை குடும்பங்களோட கூட இவையள் கதைச்சதாக இல்லை. முந்தி, இயக்கம் வலுவாக இருந்த காலத்தில் வந்து ஒவ்வொரு பொறுப்பாளரையும் சந்திக்கிறதுக்கெண்டு காத்துக்கொண்டு நிக்கிற ஆட்கள் எல்லாம் - இந்த அரசியற் தலைவர்கள் எல்லாம் இப்ப அதையெல்லாம் மறந்து திரிகிறார்கள்.

நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோமா? அல்லது உண்மையில் எதிரியால மட்டுமல்ல, இந்த மாதிரியான சக்திகளாலயும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறமா எண்டு நான் உண்மையாகவே யோசிக்கிறன். எனக்கு இதெல்லாம் பெரிய மனவருத்தத்தைத் தருகிறது. நாங்கள் உண்மையாக வாழ்ந்தனாங்கள். உண்மையாகப் போராடினாங்கள். இயக்கத்தின் விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செயற்பட்டிருக்கிறம். சனங்களை நேசிச்சிருக்கிறம். போராட்டத்தில் பிழைகளும் தவறுகளும் தோல்விகளும் நடந்திருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக நாங்கள் உண்மையாகப் போராடினது எண்டதை எப்படி மறுக்க முடியும்?...

இண்டைக்கு நாங்கள் எங்கட சோகங்களோட மாரடிக்க வேண்டியிருக்கு. இந்தச் சமூகத்தின் துயரங்களையும் பிரச்சினைகளையும் தீர்க்கிறதுக்கெண்டு போராட வந்தனாங்கள் இப்ப இந்தச் சமூகத்தினால் கைவிடப்பட்டிருக்கிறமா? ... நான் சாதாரணமாக இருக்கிற சனங்களில கோவிக்கவில்லை. அவையளும் எங்களைப்போல சுமக்கமுடியாத சுமைகளோடயும் பாரங்களோடயும் வேதனைகளையோடயுந்தான் இருக்கினம்..... நான் கோவிக்கிறது செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருக்கிற தரப்புகளைத்தான்... இப்ப எங்களுக்கு மெய்யாகவே ஆறுதலைத் தரவேண்டிய ஆட்கள்... அந்தப் பொறுப்பில இருக்க வேண்டிய ஆட்களைத்தான் கோவிக்கிறன்...

(மிகக் கோபமாக கவியின் வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. அவர் கடுமையாகப் பலரையும் விமர்சித்தார். அவற்றையெல்லாம் இங்கே நாம் குறிப்பிடவில்லை. அதைக் கவியும் புரிந்து கொள்வார் என நம்புகிறோம்).

இப்ப இயக்கம் வெற்றிபெற்றிருந்தால் நிலைமை எப்பிடியிருந்திருக்கும் எண்டதை ஒருக்கால் நினைச்சுப் பாருங்கோ... அதைத்தான் நான் சொல்கிறன். அந்தச் சமனிலை வேணும். அந்த நேர்மை வேணும். நாங்கள் உண்மையாக இருக்கோணும் எண்டதைத்தான் வலியுறுத்திறன்.

பிஞ்சுக்குழந்தைகளோட போய்ச் சரணடைந்தவைகளையே கண்டு பிடிக்கத் திராணியற்ற அளவுக்கு எங்களின் நிலைமை மாறியிருக்கு... அந்த அளவுக்கு தமிழர்களின் அரசியற் பலமும் சர்வதேசத்தின் இயலாமையும் இருக்கு.

எனக்கு இயக்கம் விட்ட தவறுகள் விளங்கும். அதை நான் ஒப்புக் கொள்கிறன். ஆனால், அதுக்கு மேல தவறுகளைத்தானே இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் அரசியற் கட்சிகளும் விடுகினம். இதுதான் என்னுடைய கேள்வி. இயக்கத்தில் பிழை என்றால், நீங்கள் அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுங்கள். மனித உரிமைகளை நிலைநாட்டுங்கள். சரணடைந்தவர்களை விடுவியுங்கள். அல்லது அவர்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லுங்கள். இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணுங்கள். மக்களை அமைதியாக இருக்க விடுங்கள். சனங்களை மதியுங்கள். பண்பாட்டையும் மொழியையும் சமூகங்களுக்கான உரிமைகளையும் நிலை நாட்டுங்கள். அதைத்தானே நாங்கள் கேட்கிறம்...

(முடிவுறாத உரையாடலாக – உணர்ச்சிகரமான உரையாடலாக கவியுடனான இந்தச் சந்திப்பு நடந்தது. கவி தொடர்ந்து பேசிக் கொண்டே போனார். அவரைக் கட்டுப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அது அவருக்கு ஓர் ஆறுதலாகவோ அவசியமாகவோ இருந்திருக்கலாம் என்று எண்ணினோம். இன்னும் பல விசயங்களைக் குறித்தும் பல தரப்பினர்களைப் பற்றியும் அவர் வெளிப்படையாகவும் பெயர் குறிப்பிட்டும் பேசினார். அவருடைய நிலைமையைக் கருத்திற் கொண்டு நாங்கள் அவற்றைக் குறிப்பிடவில்லை. கவியுடனான உரையாடலின் இன்னொரு பகுதியை பிறிதொரு சந்தர்ப்பத்தில் தரலாம் என்று கருதியுள்ளோம். இதில் அவர் கூறிய ஒரு பகுதியை அவருடைய தொனிமாறாமற் தருவதற்கு முயற்சித்திருக்கிறோம். ஆனாலும் இதில் நாம் வெற்றியடையவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்).

http://ponguthamil.c...0b-4837d9188e61

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.