• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
jkpadalai

சுந்தர காண்டம்!

Recommended Posts

"
ஆழ நீர்க்கங்கை அம்பி கடாவிய
mekala_thumb.jpg?imgmax=800

ஏழை வேடனுக்கு, 'எம்பி நின்தம்பி, நீ

தோழன், மங்கை கொழுந்தி ' எனச் சொன்ன

வாழி நண்பினை உன்னி, மயங்குவாள்"

பொருள்: கங்கைக் கரை வேடன் குகனிடம் நட்பு கொண்டு என் தம்பி, இனி உனக்குத் தம்பி என்றும், நீ எனக்குத் தோழன் என்றும், சீதை உனக்குக் கொழுந்தி என்றும் சொன்ன அந்தப் பரிவை எண்ணி மயங்குகிறாள். என்னைத் திருமணம் புரிய வந்து, ஜனகன் சபையில் இருந்தோர் வியப்புற வடவரை போன்ற சிவதனுசை நொடியில் வளைத்து ஒடித்த பெருமான் இன்று என்னை வந்து மீட்காமல் இருக்கிறாரே என்று வருந்துவாள்

புத்தகத்தில் ஆழ்ந்திருந்தவள் இராணுவ போலீஸ்காரியின் அழைப்பைக்கேட்டு திரும்பினாள்.

“மிஸ்டர் குமார ஓயாவ பலன்ட அவிள்ள இன்னவா” ( திரு குமார உன்னை பார்க்க வந்திருக்கிறான்)

“குமார? ஹூ இஸ் இட் … கவுட?”

“குமாரா, ஓய தன்னவலு?” (குமார, உனக்கு தெரியுமாம்)

சிலிர்த்தெழுந்தாள் மேகலா,

“இஸ் இட் குமரன்? குமரன்த?”

“ஔ எயா தமாயி” (ஓம் அவனே தான்)

--------------------------------------------------

கிளிநொச்சி மகாவித்தியாலயம் முடிவடைந்து மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருந்தனர். மேகலா கணித நோட்டுகளை எல்லாம் அடுக்கி ஒரு பையில் போட்டாள். பரீட்சை நேரம். இன்றிரவு எல்லாவற்றையும் திருத்த வேண்டும். இந்நேரம் குமரன் வந்து காத்துக்கொண்டு இருப்பான். குமரனை பார்க்கபோகிறோம் என்று நினைத்தாலே அடிவயிற்றை ஏதோ உருட்டியது. காலை தானே அவனைப்பார்த்தோம். ச்சே என்ன மனம் இது? கண்ணாடியில் ஒரு தடவை முகத்தை மீண்டும் பார்த்தாள். ம்ஹூம், வகுப்பறையின் கிரவல் மண் அப்படியே முகத்தில் ஓட்டி இருந்தது. அத்தோடு சாக் பீஸ் நிறமும் சேர அவளுக்கே தன்னைப்பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. உடனே பாடசாலை கிணற்றடிக்கு சென்று முகம் அலம்பிக்கொண்டாள். இந்த மண்ணின் நிறம் தான், சனியன் எப்படி கழுவினாலும் போக மாட்டேன் என்று ஒட்டிக்கொண்டே இருக்கிறது. தலையை அங்கே இங்கே சரிசெய்து, கூடவே கொண்டுவந்திருந்த பொன்ஸ் முகப்பவுடரை பூசிக்கொண்டாள். இப்போது தேவலாம். அவனுக்கெல்லாம் இது வே ரொம்ப அதிகம். மேகலா வெளியே வரும்போது டிராக்டர் டயரில் ஓய்யாசமாய் சாய்ந்துகொண்டே குமரன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். கிளிநொச்சி வெயில் அனல் பறந்தது.

kilinochchi%252520central%252520college%252520grounds_thumb%25255B6%25255D.jpg?imgmax=800

என்ன டீச்சர், இஸ்கூல் முடிஞ்சு அரை மணித்தியாலம் ஆயிட்டு, எக்ஸ்ரா கிளாஸ் ஆ?

இல்ல … குமரன், பேப்பர் கரெக்ஷன், அதான் கொஞ்சம் ….

சரி சரி …. பாக்கவே தெரியுது

-- குமரன் சிரித்தான், சின்னதாய் குழி விழுந்தது. இந்த சிரிப்புதான் .. படுபாவி!

குமரனுக்கு கிளிநொச்சி புதுசு. யாழ்ப்பாண நகரத்தில் ஒரு சிறிய புத்தகக்கடை நடத்தி வந்தவன். நன்றாக படிக்கக்கூடியவன் தான், ஆனால் அண்ணா புலிகளோடு இணைந்ததோடு, கடையின் பொறுப்பு முழுதும் இவனின் தலையில் விழுந்தது. பாடசாலைக்கு போகாது விட்டாலும், புத்தகக்கடை என்பதால் அத்தனை புத்தகங்களையும் வாசித்துவிடுவான். ஒரு நாவல் கூட எழுத ஆரம்பித்திருந்தான். எல்லாமே இரண்டு வருடங்களுக்கு முன்னர், போட்டது போட்டபடியே இடம்பெயர்ந்து வன்னிக்கு போனதோடு போய்விட்டது. மீண்டும் சாமான்களை எடுத்து வர செல்வதற்கு அம்மா அனுமதிக்கவில்லை. இருக்கும் ஒரே பிள்ளையையும் இழக்க அவள் தயாராக இல்லை. இப்போது கடையும் இல்லை. கதையும் இல்லை. ஒரு டிராக்டர் டிரைவர் ஆக வட்டக்கச்சியில் மாசக்கூலி வேலை பார்த்து வருகிறான்.

“இன்னிக்கு என்ன லோட் ஏத்தினாய்? பின்னாலே பெட்டியிலேயே இருக்கட்டுமா?”

டிராக்டரை ஸ்டார்ட் செய்த குமரனை பார்த்து மேகலா கேட்டாள். வேண்டாம் முன்னே பக்கத்தில் வந்து உட்கார சொல்லுடா, ப்ளீஸ் என்றது மனம்.

“பெட்டியிலேயே இரு மேகலா, mudguardல இருக்கிறது அவ்வளவு வசதி இல்ல, பிறகு நீ விழுந்தா ஐயாக்கு நான் பதில் சொல்ல முடியாது”,

அழுத்தக்காரன். மனதில் இருப்பதைககாட்டிக்கொள்ளவே மாட்டான். குமரன் ஐயா என்று சொன்னது மேகலாவின் தந்தையைத்தான். வட்டக்கச்சியின் மிகப்பெரிய பண்ணையார் அவர். நான்கு டிராக்டர்கள், மூன்று வண்டில்கள், பத்துக்கும் மேற்பட்ட கூலியாளர்கள், ஏராளமான மாடுகள், எத்தனை என்றெல்லாம் இங்கே எண்ண மாட்டார்கள். குமரன் அவரிடம் இருக்கும் மாஸ்சி 135, 25ஸ்ரீ டிராக்டரை தான் ஓட்டுகிறான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏதிலிகளாய் குமரனும் அம்மாவும் வந்து இறங்கியபோது இருக்க இடமும் குமரனுக்கு இந்த வேலையையும் போட்டுக்கொடுத்தவர். குமரன் அவரின் மேல் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தான்.

“அப்படியெல்லாம் நீ என்ன விழ விட்டிடுவியா என்ன?”

மேகலா சிரித்துக்கொண்டே சேலையை ஒருக்களித்து இலாவகமாக குமரனின் பக்கத்தில் ஏறி உட்கார்ந்தாள். குமரன் மறுபக்கம் திரும்பி மெலிதாக புன்னகைத்துக்கொண்டே கியரை போட்டான். 135 என்ஜின் உறுமியபடியே புறப்பட்டது.

------------------------

மேகலா இருப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ள பாவாடை சட்டையை எடுத்து அணிந்துகொண்டாள். பத்து வருடங்கள் ஓடிவிட்டது. என்ன இன்று திடுப்பென்று வந்து நிற்கிறான்? இடையில் குமரனுடனான தொடர்பு முற்றாகவே அறுந்திருந்தது. நாவலை எழுதி முடித்திருப்பானா என்ன? இப்போது எப்படி இருப்பான்? முடியெல்லாம் கொட்டியிருக்கும். குமரனுக்கு இந்த ஆவணியுடன் முப்பத்தைந்து வயது ஆகவேண்டும். வெளிநாடு போனதாக முன்னர் ஒரு செய்தி வந்தது. கன்னம் எல்லாம் உப்பி களையாக வந்திருப்பான். இன்னமும் கன்னத்தில் குழி விழுமா? மேகலா பத்து வருடங்களில் முதன் முறையாக வெட்கப்பட்டாள். தன்னிடம் இருந்த சின்ன கண்ணாடியில் முகம் பார்த்தாள். ச்சே கண்ணுக்கு கீழே குழி எல்லாம் விழுந்துவிட்டது. விசுவமடு சண்டையில் லேசாக பட்ட துவக்கு சன்னத்தின் காயம் இன்னமும் நெற்றியில். அசிங்கமாக இருக்கிறேனா? உதடு எல்லாம் கறுத்து காய்ந்து போய் இருந்தது. பூசுவதற்கு பவுடர் கூட இல்லை. சென்ற வாரம் அம்மா கொண்டு வந்த பவுடரையும் எதற்கு என்று திருப்பி அனுப்பிவிட்டாள். புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு வர சொல்லி இருந்தாள். பாவாடை கூட நூல் இழுபட்டு போய் இருந்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது?

-------------------------

“குமரன், யாழ்ப்பாணத்தில சொந்த கடை வச்சிருந்திட்டு இங்க இப்பிடி கூலிக்கு வேலை செய்யிறது உனக்கு கஷ்டமா இல்லையா? நீ ஏன் திரும்பவும் படிக்கக்கூடாது?

மேகலாவுக்கு குமரனைப்பார்க்க பாவமாய் இருந்தது. சாரத்தை மடித்து கட்டியிருந்தான். காலில் எதுவும் அணிந்திருக்கவில்லை. போன வருஷம் வந்து நின்ற குமரனுக்கும் இந்த குமரனுக்கும் நிறைய வித்தியாசங்கள். கறுத்துவிட்டான். கைகள் எல்லாம் கன்றி இருந்தன. முன்னர் எல்லாம் தன் கடையில் இருந்த செங்கைஆழியான் சுஜாதா புத்தகங்கள் பற்றி கதை கதையாய் சொல்லுவான்.இந்த சண்டைக்குள்ளும் இடையிடையே நூலகத்துக்கு போய் வாசிப்பில் மூழ்கி விடுவான். குமரனிடம் ஏதோ இருக்கிறது என்பதை மேகலா அப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.

“படிப்பா? எனக்கா? இருப்பத்திரெண்டு வயசு ஆச்சுது, பாக்கறயில்ல? இரவு பகலாய் டிராக்டர் ஓட்டம். இனி என்னத்த படிச்சு என்னத்த செய்ய? ”

“இல்ல குமரன்…”

“அப்பெல்லாம் படிக்கனும் போல இருக்கும் மேகலா, நிறைய இலக்கியம், ஜெயராஜ் தெரியமா? அவரோட பேச்சு தான் எப்போதும் கேட்பேன், கம்பராமாயணத்தில சுந்தர காண்டம் எல்லாம் அத்துப்படி..ம்ஹூம் எல்லாமே போச்சு”

“இந்த சண்டை உன்னை நல்லா பாதிச்சிட்டு இல்ல”

“அண்ணா இயக்கத்துக்கு போய் கொஞ்ச நாளிலேயே செத்துப்போனான், பயிற்சியின் போதுதான் நடந்தது. இப்ப பத்தாயிரம் பேர்ல அவனும் ஒருத்தன். யாருமே ஞாபகம் வச்சிருக்கபோறதில்ல. எல்லாருக்கும் திலீபனையும் கிட்டுவையும் தான் தெரியும்! அண்ணாவும் அவங்கள போல தானே போராட போனார்? நாங்க பாடியை கூட பாக்க இல்ல தெரியுமா? அம்மா மட்டும் தான் ஒவ்வொரு நாளும் அழறா.

ஏன் இந்த சாவு என்று தெரிய இல்ல. ஓடிக்கொண்டே இருக்கிறோம். முதல்ல வசாவிளான், அப்புறம் உரும்பிராய், பளை, இப்ப வட்டக்கச்சி .. இதெல்லாம் எங்க போய் முடியப்போகுது மேகலா?”

அவன் தலையை மிருதுவாக தடவி விட வேண்டும் போல தோன்றியது. கிளிநொச்சி குளக்கட்டருகே டிராக்டர் சென்று கொண்டு இருந்தது. குளத்திலே சிறுவர்கள் நீந்தி விளையாடிக்கொண்டு இருந்தனர். நூறடிக்கு ஒருமுறை ஏதாவது ஒரு கடை இருந்தது. சைக்கிள் கடை, சாப்பாட்டுக்கடை, வெறும் டீ கடை, பாலைப்பழக்கடை என அநேகமான கடைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் போட்ட கடைகள் தாம். ஒவ்வொரு கடையின் முன்னேயும் ஒரு கூட்டம் எப்போதுமே எதையோ பேசிக்கொண்டு இருக்கும். வீதியால் சென்றுகொண்டிருந்த சிலர் மேகலாவையும் குமரனையும் ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டு போக மேகலா இயலுமான மட்டும் தள்ளியே உட்கார்ந்தாள்.

“கவனம், விழுந்திட போறாய். … உனக்கு என்ன பிளான் மேகலா? காம்பஸ் கிடைச்சா போயிடு, இது வேண்டாம், இந்த சண்டை, இப்படி கிடுகுக்கொட்டிலில வகுப்பு சொல்லிக்குடுக்கிறது, எப்ப ஷெல் அடிப்பான், எப்ப பம்பர் வரும் .. வேணாம், பேசாம போயிடு … மொறட்டுவவோ பெராதனையோ .. எது கிடைச்சாலும் போயிடு”

“என்ன சொல்ற குமரன்? இங்க எல்லாத்தையும் விட்டிட்டு போக சொல்றியா? இது தான் என்ர இடம். அப்பா அம்மா தம்பி, இந்த ஆடு மாடு, டிராக்டர் எல்லாத்தையும் விட்டிட்டு எப்பிடி போறது? இந்த கொட்டிலில தான் நானும் படிச்சேன். நாளைக்கு எண்ட தம்பி நல்ல இஸ்கூல் கட்டிடத்தில படிக்கோணும் ஏண்டா நான் இங்க தான் இருக்கோணும். ஏன் நாங்க எல்லோரும் இருக்கோணும். தேவை எண்டா சண்டையும் பிடிக்கோணும். நீ இருக்க மாட்டியா குமரன்? இண்டைக்கு மாதிரி நீ என்னை தினமும் இப்படி கூட்டிகிட்டு போக மாட்டியா?”

மேகலா சொல்லும் போது அதில் காதலோடு வாஞ்சையும் இருந்தது. அப்பா அம்மா, தன் வீடு, தன் உடமை, தன் நாடு என்று எல்லாவற்றிலும் அந்த காதல். என்ன மாதிரி பெண் இவள்? கேட்டுவிடுவோமா? குமரன் சற்றே தடுமாறினான். டிராக்டர் குளக்கட்டருகிலிருந்து திருவையாறு வீதிக்குள்ளே குலுங்கியபடியே இறங்கியது..

“என்ன குமரன் பேசாமல் வாறாய்? நான் கேட்டதுக்கு ஒண்ணுமே சொல்லல நீ?”

“என்ன சொல்லச்சொல்ற மேகலா? இது என்ட ஊர் கிடையாது. யாழ்ப்பாணத்த ஆர்மி பிடிச்சிட்டான். நாங்க போனா மாவீரர் குடும்பம் எண்டு யாராவது போட்டுக்குடுத்துடுவாங்க. அப்புறம் நான் பூசா கேம்ப்புக்கு தான் போகணும்? இங்க இப்பிடியே இருந்து டிராக்டர் ஓட்டி சீவிக்க சொல்றியா?”

“அப்ப போயிடுவியா? எல்லாத்தையும் விட்டிட்டு போயிடுவியா? அப்புறம் இரவெல்லாம் யாரோட பொன்னியின்செல்வன் பற்றி கதைப்பேன்? பாவை விளக்கு தேவகியோட நிக்குது? சேர்ந்து வாசிப்போம்னு சொன்னியே”

மேகலா ஏதேதோ அரற்றினாள். போகப்போகிறானோ என்ற பயம் நெஞ்சில் பற்றிக்கொண்டது.

“மேகலா, பதட்டப்படாத, என்னோட நிலையையும் கொஞ்சம் யோசிச்சுபாரு, இங்கேயே இருந்தா முன்னேற முடியாது, போகணும், எப்பிடியாவது வெளிநாட்டுக்கு போகணும்”

குமரன் சொல்வதும் வாஸ்தவம் போல தான் பட்டது. ஆனாலும் இவன் ஏன் அவளையும் சேர்த்து யோசிக்க மாட்டேங்கிறான் என்று மேகலா வருந்தினாள். நான் இருக்கும் இடம் அவனது இல்லியா? இவனுக்கு எப்படி புரிய வைப்பேன்? இவனோடு வாழும் வாழ்க்கையை நான் ஒவ்வொரு நொடியும் யோசிப்பது போல இவனுக்கேன் தோணமாட்டேங்குது? இல்லை நடிக்கிறானா? விருமம் பிடிச்சவன். இவனையெல்லாம் கட்டி என்ன அல்லல் பட போகிறோமோ? மேகலா மனதுகுள்ளேயே நொந்தாள். டிராக்டர் பண்னங்கண்டி பாலத்தை நெருங்கிக்கொண்டு இருந்தது. வயல்கள் பச்சை காட்டின.

--------------

மருதமடு முன்னாள் போராளிகள் நலன்புரி நிலையத்தின் பார்வையாளர் சந்திக்கும் அறை நிறைந்து வழிந்தது. பலரின் குடும்பத்தினரோ, நண்பர்களோ வந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஒரு தாய் தன் கைக்குழந்தையை கொண்டு வந்திருந்தாள். கணவன் இன்னமும் மறியலில் தான் இருக்கவேண்டும் போல. அந்த குழந்தை தகப்பனின் கையில் இருக்கையில் கதறி அழுதது. மற்றொருபுறம் ஒரு வயோதிபர் தான் கொண்டு வந்த மதிய உணவை மகனுக்கு கொடுத்து சாப்பிட சொல்லிக்கொண்டு இருந்தார். சில வெளிநாட்டு வாழ் தமிழர்களும் உறவினரை பார்க்க வந்திருந்தனர். மேற்கத்திய G-Star, Armany, NIKE பிராண்டுகளை பார்க்கவே புரிந்தது. இப்படி பல உறவுகள். சில அநாமதேய நடமாட்டங்களும் இல்லாமல் இல்லை.

மேகலா நுழையும்போது உள்ளே காத்திருந்த குமரன் உடனே எழுந்து ஓடி வந்தான். அடடா முடி அந்த அளவுக்கு கொட்டவில்லை. கன்னம் எல்லாம் பளபளவென்றிருந்தது. டெனிம் ஜீன்சுக்கு வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். மேகலாவுக்கு தன்னை நினைக்கையில் வெட்கமாய் இருந்தது. ச்சே ஒரு நல்ல சுடிதார் கூட இல்லை. பக்கத்து அறை வானதியிடம் வாங்கி போட்டுகொண்டு வந்திருக்கலாம். அவசரப்பட்டுவிட்டாள்.

எப்பிடி இருக்கிறாய் மேகலா? தெரியுதா என்னை?

மேகலா சன்னமாய் சிரித்தாள்

ஆஸ்திரேலியாலயே செட்டில் ஆயிட்டியா குமரன்?

அஞ்சு வருஷம் ஆச்சு மேகலா, இப்ப தான் பாஸ்போட் கிடைச்சுது, பாரு ஒன்ன பாக்க வந்திட்டன்

எப்பிடி கண்டு பிடிச்சாய்?

வீட்ட போனேன் மேகலா, ஐயா தான் சொன்னார் … நீ இங்க முகாமில எண்டு …

மேகலா இப்போது கொஞ்சமே விம்மத்தொடங்கி இருந்தாள். தாங்க முடியவில்லை அவளுக்கும். இத்தனை நாள் மனதில் அடக்கி வைத்திருந்தது, மறைக்கமுடியவில்லை.

உன்னோட வந்திருக்கணும் குமரன், விசரி நான், மண் மண் எண்டு கடைசில எங்க கிடக்கிறன் பாரு. தம்பி எங்க எண்டு கூட தெரியாது தெரியுமா? கடைசி நாளுக்கு மொத நாள் தான் பிடிச்சுகிட்டு போனாங்கள். நீ சொன்னது தான் சரி குமரன். இது வேண்டாம், இந்த மண், சண்டை, மரணம் ஒண்டுமே வேண்டாம். எங்கேயாவது … காலைல எழுந்தா, ஒண்ணுக்குமே பயப்படாமல் … எப்ப ஷெல் வரும், ஆர்மி வரும், சாவு வரும் … பயம் ஒண்ணுமே இருக்கக்கூடாது குமரன்.. முடியுமா"?

உனக்கு ஒண்ணு சொல்லணுமே மேகலா..

---------------------------

பண்னங்கண்டி வாய்க்காலில் தண்ணீர் சற்றே மேவிப்பாய்ந்து கொண்டு இருந்தது. கிரவல் பாதையில் மழை பெய்து ஒரே பள்ளமும் குழியுமாய். டிராக்டர் ஏறுக்கு மாறாய் போய்க்கொண்டிருக்க புதுசாய் ஓட்டப்பழகிய குமரன் சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட்டான்.

குமரன் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?
kalavani-pictures069_thumb%25255B26%25255D.jpg?imgmax=800

சொல்லு மேகலா

இல்ல விடு, நீ தப்பா நெனைப்ப!

இல்ல சொல்லு

..

தெரியாமா தான் கேட்கிறேன், இவ்வளவு பேசறோம் … ஆனா உனக்கு ஒண்ணுமே தோனல இல்ல?

குமரன் அமைதியாய் இருந்தான். பண்னங்கண்டி பாலத்தில் சிலர் மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டிருந்தனர். மாடுகள் தம் வாலால் பூச்சிகளை அடிக்கும் லாவகமும் அதற்கு சட்டை செய்யாமல் பூச்சிகள் அங்கேயும் இங்கேயும் பாய்வதும் வேடிக்கையாய் இருந்தது.

குமரன்…

உணமைய சொல்லட்டா மேகலா? பத்து மணிக்கே வேலை முடிஞ்சுது. இன்னிக்கும் வேற எங்கேயும் போகேல்ல, இஸ்கூலுக்கு வந்து உனக்காகவே காத்திட்டிருந்தேன் மேகலா. நீ இப்ப பக்கத்திலே இருக்கிறயா …இளையராஜா பாட்டெல்லாம் … அப்பிடியே .. ச்சே விடு மேகலா … வேணாம் … புரியாது

மேகலா மெலிதாக சிரித்தாள். திருடன்! இவ்வளவு ஆசையை வைத்துக்கொண்டு மறைத்திருக்கிறான். கேட்காமல் விட்டிருந்தால் சொல்லியே இருக்கமாட்டான். அழுத்தக்காரன். அகிலனின் பாவை விளக்கை சேர்ந்து வாசிப்போமா என்று அவன் அன்றைக்கு கேட்டபோதே அவளுக்கு புரிந்துவிட்டது. இவனையெல்லாம் எப்படி கட்டி அழப்போகிறோமோ, மேகலாவுக்கு சந்தோசம் தொண்டைக்குழியை அடைத்தது.

அப்ப சாரே, நாளைக்கு சரியான டைமுக்கு வந்து பிக்அப் பண்ணுங்க. ஆ இன்னொரு விஷயம். இந்த சாரம் எல்லாம் இனி வேண்டாமே. ஜீன்ஸ் இருக்கில்லையா? .. ஆ அப்புறம், காலுக்கு ஸ்லிப்பர் ஏதாவது வாங்கி போடு சரியா?

“ரெண்டு நிமிஷம் கூட ஆக இல்ல, அதுக்குள்ளயா?”

குமரன் சிரித்துக்கொண்டே சொல்லும்போது வீடும் வந்தது. மேகலா இறங்கி வாசல் படலையை திறந்துவிட்டாள்.

மூஞ்சிய நல்லா அலம்பிட்டு சாப்பிட வா முதல்ல …

மேகலா அழகாய் சிரித்தாள். தூரத்தில் இராணுவ ஹெலிகோப்டர் ஒன்று விரையும் சத்தம் கேட்டது.

---------------------------

அப்பாவை பார்த்தியா குமரன்? எப்பிடி இருக்கிறார்? தம்பி காணாம போனதில ஷாக் ஆகி, வீட்டிலேயே முடங்கீட்டாரு, அம்மா தான் மாசா மாசம் இங்க வரும். புத்தகம் நிறைய கொண்டுவரும். சொன்னா சிரிப்பாய். ஒரு நாவல் எழத தொடங்கீட்டன். பெயர் என்ன சொல்லு பார்ப்பம்?.

மேகலா, உனக்கு நான் ஒண்டு சொல்லோணும்

நினைச்சேன்! நீ கண்டு பிடிக்கமாட்டாய், உனக்கு பிடிச்ச தலைப்பு தான், “சுந்தர காண்டம்” … புரியுதா என்ன கதை எண்டு?

ப்ளீஸ் … என்னை கொல்லாத மேகலா … உனக்கு ஒண்டு சொல்ல தான் இங்க வந்திருக்கேன்

.குமரன் இந்த தடவை சற்று அழுத்தமாகவே சொன்னான்.

மேகலா அமைதியாய் இருந்தாள். அவளுக்கு புரிந்துவிட்டது. அவள் இது நாள் வரை எதை எண்ணி பயந்தாளோ அதுவே தான். ஜன்னல் வழியே வெறித்துப்பார்த்தாள். வவுனியா வெயில் சுட்டு எரித்தது. மேகலா சற்றே குளிருவது போல உணர்ந்தாள். கைகள் இரண்டையும் இறுக்கமாக மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டாள். அறை திடீரென்று நிசப்தமானது போல தோன்றியது. தந்தையின் கையில் இருந்த குழந்தை இன்னும் அழுதுகொண்டிருந்தது.

மேகலா…வந்து…

------

------

வேணாம் குமரன் .. சொல்லாத .. வேணாம் … தயவு செஞ்சு திரும்பிப்போயிடு .. ஒண்டுமே சொல்லாத ப்ளீஸ் … தாங்க மாட்டேன்டா

மேகலா தலை குனிந்தபடியே, இழுபட்டுக்கொண்டிருந்த பாவாடையின் அறுபட்ட நூலை மெதுவாக பற்றிக்கொண்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

அந்த தந்தையின் கையில் இருந்த குழந்தை இப்போது அழுகையை நிறுத்தி சிரிக்க ஆரம்பித்திருந்தது.

---------------------------------------------------- முற்றும் ------------------------------------------------------------

http://orupadalayinkathai.blogspot.com/2011/10/blog-post_31.html

Share this post


Link to post
Share on other sites

நல்ல வர்னனை.கதை நிஜத்தை தழுவியதால் பலரால் ஏற்க்க முடியாமல் இருக்கலாம்.ஆனால் சுட்டாலும் கசந்தாதலும் இப்ப நிஜம் பெரும்பாலும் இது தான்.எனது புரிதலின் படி அவன் தான் மனிதன்.

Share this post


Link to post
Share on other sites

நிலைமையை சட்டென புரிந்துகொண்ட குமரனின் நெற்றியில் பல நூறு மடிப்புக்கள் ஓயாத அலைகளாக ஓடின. தடிப்பான மூச்சும் இறுதியில் அமைதியானது.

நிதானமாக மேகலாவின் தந்தையை நோக்கி நடந்தான் குமரன், அந்த குழந்தையை இருகையால் வாங்கிக்கொண்டான். சில வினாடிகள் முகத்தை உற்றுப்பார்த்த அவன், புன்முறுவலை தவழவிட்டான், காரணம் குழந்தையின் ஆட்டமும் பாட்டமும்.

இவ்வளவற்றையும் கண்ணுற்ற மேகலா இனம்புரியாத உணர்வுகளுடன் ஊசலாடினாள். எங்கேயோ ஒரிடத்தில் அவள் மனத்தில் சிற்றாறு போன்ற மகிழ்வு ஊற்றெடுத்தது.

குழந்தையின் பெரியப்பாவும் மாமனும் காற்றோடு வந்து வாழ்த்தியும் வணங்கியும் சென்றார்கள்.

அங்கே தாயக மண்ணில் உயர்ந்து நின்றான் குமரன்.

---------------------------------------------- முற்றும் ------------------------------------------------------------

(இப்படியான குமரன்கள் தான் உண்மையான ஆண்கள் )

Edited by akootha

Share this post


Link to post
Share on other sites

அன்புள்ள அகூதா,

நன்றி உங்கள் கருத்துக்கு.

நேர்மையான, உண்மையான கதை மாந்தரை எழுதுவது எல்லாம் கல்கி காலத்து இலக்கியம். இப்போது ரமணிச்சந்திரன் எழுதுகிறார். contemporary இலக்கியம் நிஜத்தை பேச வேண்டும். சிக்கலான உணர்வுகளை ப்ராக்டிகலாக சொல்லவேண்டும். மேகலாவின் பக்கத்தில் இருந்து எழுதப்பட்ட கதை இது. குமரனுக்கும் ஒரு பக்கம் இருக்கிறது. மனித உணர்வுகளை அவ்வளவு இலகுவில் நீதி, அநீதி என்ற இரண்டு பக்கங்களுக்குள் ஒடுக்கிவிட முடியாது.

கதை கோபத்தையும், ஆற்றாமையையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தும். அது தான் என்ன் நோக்கமும் என்பதை தாழ்மையாக தெரிவித்துகொள்கிறேன். நேர்மையான கதை மாந்தரை பற்றி எழுதுவது கஷ்டமில்லை. ஆனால் அப்படி எழுது பெயர்வாங்கவும் இஷ்டமில்லை.

நன்றி

நன்றி சஜீவன்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையில் இழையோடியிருப்பது இன்றைய வாழ்வியல் யதார்த்தம். ஒரு பெண்ணாக மேகலா தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ள பாங்கு நிஜம். சிலர் தாம் பட்ட துன்பத்தில் இருந்து விடுபட முடியாமல், நான் மண் என்று பற்றுக் கொண்டிராவிட்டால் தானும் மற்றோர் போல குடும்பம் குழந்தை என்று வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவது இயல்பு. அதுவும் இன்றைய அவல வாழ்வில் சிக்குண்ட பெரும்பாலான பெண்கள் இப்படி நினைப்பது தவறு என்று கண்டு பிடிக்க சிறிது வசதியாக வாழும் எவருக்கும் உரிமையில்லை என்று நான் கருதுகிறேன் . அந்த வகையில் தங்கள் கதை நன்று.

Edited by கல்கி

Share this post


Link to post
Share on other sites

அதுவும் இன்றைய அவல வாழ்வில் சிக்குண்ட பெரும்பாலான பெண்கள் இப்படி நினைப்பது தவறு என்று கண்டு பிடிக்க சிறிது வசதியாக வாழும் எவரும் அப்படி நினைக்க மாட்டார்கள். . அந்த வகையில் தங்கள் கதை நன்று.

மன்னிக்கவும் , இந்தக் கருத்தை எழுதும் போது, சிறிது வசதியாக வாழும் எவரும் இப்படி நினைக்கமாட்டார்கள் என்று எழுத வந்ததை தவறாக உரிமையில்லை என்று எழுதிவிட்டேன். உரிமையில்லை என்ற சொல் சிறிது கடினச் சொல்லாக இருக்குகிறது. மன்னிக்கவும்.

Share this post


Link to post
Share on other sites

நன்றி கல்கி, கதையை நீங்கள் புரிந்து கொண்ட விதமும், அதை அலசிய விதமும் சிறப்பாக இருக்கிறது! யாழ் கள நண்பர்கள் காட்டமான, காத்திரமான விமர்சனங்கள் எழுதுவது திருப்தியாக இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.