Jump to content

நமது சின்னம் வெத்து சின்னம்!


Recommended Posts

நமது சின்னம் வெத்து சின்னம்!

கற்பனை: முகில்

"டேய்.. கைய வைச்சிக்கிட்டு சும்மா இருடா! ஏய்..'னு என்னோட சுவருக்கு வாய் இருந்தா அனைத்துக் கட்சிக்காரங்களையும் பாத்துப் பாடும். அவனவன் என்னோட சுவரை தன்னோட சொந்தச் சுவரா நினைச்சு கட்சி சின்னத்தை உரிமையோட உட்கார வைச்சிட்டுப் போறான். இப்படி கேணையன் கோயிஞ்சாமியா எல்லாக் கட்சிக்காரங்ககிட்டயும் ஏமாந்து போறதுக்குப் பதிலா நாமளே புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி தேர்தல்லே நின்னா என்ன! என்ன? என்ன! என்ன! ச்சீ! ரொம்ப ஓவரா இருக்கோ? "கட்சியெல்லாம் டூ த்ரீ ஃபோர் மச்! வேணும்னா சுயேட்சையா நிக்கலாம்'னு சைடு மூளை ஒரு வைடு பால் போட்டுச்சு! "நீயெல்லாம் சுயேட்சையா நின்னா ஒரு சுண்டெலி கூட மதிக்காது'ன்னு உள்மனசு ஒரு பெüன்ஸர் போட்டுத் தாக்கிச்சு!

"ஒரு முறையாவது தேர்தல்ல நின்னு நீ ஜெயிக்கணுங்கறது என்னோட லைஃப் லட்சியம்'னு பாட்டி வேற தனியா பட்டா போட்டா. நான் தீர யோசிச்சேன். யோசனை தீரத் தீர யோசிச்சேன். சுயேட்சையாகவே நின்னுக்கலாம். ஆனா "கட்சி'ன்னு ஒரு பேரைப் பரப்பிக்கலாம்னு பைனலா முடிவெடுத்தேன்.

நம்மகிட்ட இருக்கறதோ எலிப்புழுக்கை அளவு பணம். ஆனா செலவோ யானை போடுற சாணி அளவுக்கு இருக்கும். "என்ன பண்ணப் போற கோயிஞ்சாமி?'ன்னு மலை மேல நின்னு யாரோ கத்துற மாதிரி எக்கோ ஒலிச்சுது! விடுறா! விடுறா!

"கன்னியாகுமரி தெற்குப் பக்கம்;

காஷ்மீர் வடக்குப் பக்கம்;

அம்பத்தூருக்கு ஆவடி பக்கம்;

ஆண்டவன் என்னிக்கும் என் பக்கம்!'னு எனக்கு நானே பஞ்ச் டயலாக் சொல்லிக்கிட்டு படுத்துத் தூங்கிட்டேன்.

"உம்பேரன் கட்சிக்கு நச்சக்குன்னு ஒரு பேரைச் சொல்லு'ன்னு பாட்டிகிட்ட பக்குவமா ஆலோசனை கேட்டேன். "கோயிஞ்சாமி முன்னேற்றக் கழகம் -இப்படி வையி!'ன்னு சொன்னா! கெழவிக்கு என்னா நக்கலு! கட்சியோட பேருலயே அம்பது சதவிகித அனுதாபத்தை அள்ளணும்னு நெனைச்சேன். சிந்திச்சேன். மூளையே வெறுப்பாகி மண்டைக்குள்ள இருந்து வெளிய எந்திரிச்சுப் போற அளவுக்குச் சிந்திச்சேன். அப்பத்தான் உருவாச்சு "தே.பி.பா.மு.க'. அந்தப் புனிதமான கட்சிப் பெயர் "தேர்தல் பிரசாரத்தால் பாதிக்கப்பட்டோர் முன்னேற்றக் கழகம்'. கட்சிப் பேரை ஒரு பேப்பர்ல எழுதி வைச்சு, அரை மணி நேரம் மனப்பாடம் பண்ணுனேன். அப்புறம் மறந்து போயிடுச்சுன்னா யாரு ஞாபகப்படுத்தி உடுறது!

கட்சிக் கொடி என்னாக் கலரு வைக்கலாம்னு ஒவ்வொரு கலரையா மனசுக்குள்ள நிக்க வைச்சு "இங்கி பிங்கி பாங்கி' போட்டுப் பார்த்தேன். எல்லா கலர் காம்பினேஷனுலயும் எவனாவது கொடியை நட்டு வைச்சுருக்கான். எதுக்கு வம்பு! தேபிபாமுக-வின் கொடியின் நிறம் புடவைக் கடை வெளம்பரத்துல வர்ற மாதிரி அம்பதாயிரம் வண்ணங்கள் கொண்டதா என்னோட சுய செயற்குழு தீர்மானம் நிறைவேத்துச்சு! "எல்லாக் கலர் கொடியும், தேபிபாமுக-வில் மட்டும்'னு ஜோதிகா என் கட்சி வெளம்பரத்துல நடிக்கிற மாதிரி ரெண்டு கண்ணும் கற்பனையா ஸீன் பாத்துச்சு! ராஜீவ் மேனன் ப்ரீயா இருந்தா அவருக்கே நம்ம கட்சியோட வெளம்பரத்தை எடுக்குற பொன்னான வாய்ப்பைக் கொடுக்கலாம்னு, பலசரக்குக் கடை பாக்கியையே இன்ஸôல்மெண்ட்ல கொடுக்குற என்னோட பணக்கார மனசு நெனைச்சுது.

கட்சியோட சின்னமா எதை வைக்கலாம்னு திங்க் பண்ணத் தொடங்கினேன். கொஞ்சம் வீரம் கலந்த சின்னமா இருந்தா நல்லாயிருக்குமே! ஆம்பிளைக்கு மூக்குக்குக் கீழ உதட்டுக்கு மேல ஏதோ இருக்கணும்னு சொல்லுவாகளே! ஆங், மீச..மீசை! அதுக்கே வழியக் காணும்! இத்தனை வருசமா கண்மையால வரைஞ்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கட்சி சின்னமாவது வீரமா இருந்தாத்தான் நாலு பேரு நம்மளையும் மதிப்பாக! உருட்டுக் கட்டை, ஆசிட் பாட்டில், அருவா, சைக்கிள் செயின், சோடா பாட்டில், துண்டு பிளேடு -இப்படி ரவுடி, டூல்ùஸல்லாம் என் தலைக்கு மேல ரிங்கா ரிங்கா ரோஸஸ் விளையாடிச்சு!

ஒரு முடிவுக்கு வந்தேன். கண்ணுல படுற பொருள்களையெல்லாம தனித்தனி துண்டுச் சீட்டுல எழுதி ஒரு டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு நேரா புள்ளையார் கோயிலுக்குப் போனேன். புள்ளையாரை பொங்கப் பொங்கப் பக்தியோட கும்புட்டுட்டு, டப்பாவை சினிமாவுல சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் ஆடுற கெஸ்ட் ஹீரோயின் இடுப்பைக் குலுக்குற மாதிரி குலுக்குனேன். கண்ணுல படுறவங்களையெல்லாம் ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கச் சொன்னேன். அதையெல்லாம் பிரிச்சுப் பார்க்காம, கடைசியா டப்பாவுல மிஞ்சுகிற சீட்டுல இருக்குற பொருளைத்தான் என் கட்சியோட பெருமைக்குரிய சின்னமா அறிவிக்கலாம்னு முடிவு பண்ணுனேன். கடைசிச் சீட்டு மட்டும் டப்பாவுல கிடக்க, கபால்னு எடுத்துப் பிரிச்சிப் பார்த்தா..அதுல நான் ஒண்ணுமே எழுதுல போல! "நமது சின்னம் வெத்துச் சின்னம்! வெற்றியின் சின்னம் வெத்துச் சின்னம்! உங்கள் ஓட்டு வெறுமைக்கே!' ன்னு கூவிக்கூவி என்னோட மனசாட்சியே என்னை வெறுப்பேத்துச்சு!

செம கடுப்பாகி வீட்டுக்கு வந்தேன். பாட்டி அங்க கைரேகை பார்க்குற ஜோசியரோட எனக்காகக் காத்திருந்தா! "வா சாமி வா! வந்து உக்காரு! உன்னோட வருங்கால அரசியல் வாழ்க்கைய அக்கு வேறா சாப்ட்வேரா ஹார்டுவேரா பிரிச்சு மேய்ஞ்ச்சு பிட் எழுதித் தாரே'ன்னு சொன்னாரு அந்த பான்பராக் வாய் ஜோசியர். "நீங்க ரேகை பார்க்குறதுல அம்புட்டுப் பெரிய ஆளா?'ன்னு சந்தேகம் கொப்பளிக்கக் கேட்டேன். "என்னைப் பத்தி என்னா நெனைச்சுக்கிட்ட நீ! பூமீயில அட்ச ரேகை, தீர்க்க ரேகை, பூமத்திய ரேகையெல்லாம் பார்த்துச் சொன்னதே நாந்தான். அப்படிப்பட்டவனுக்கு உன் கைரேகை பார்க்கறதெல்லாம் ஜூஜூபி மேட்டர்!'னு அந்த ஆளு அளந்த வார்த்தைகள்ல வழுக்கி விழுந்துட்டேன்.

இந்தியா மேப்புல இருக்கங்குடி இருக்கான்னு தேடுறமாதிரி, என் கையில லென்ûஸ வைச்சு எதையோ தேடுனாரு ஜோசியர். என் ஜாதகத்தையும் கொல வெறியோட கூர்ந்து பார்த்தாரு. திடீர்னு காணாமப் போன மணிபர்ûஸக் கண்டுபிடிச்ச மாதிரி குதிச்சுக்கிட்டே கூவ ஆரம்பிச்சாரு. "உன்னோட 3வது பாதத்துல ராகு ஒக்காந்திருக்கான். ஆறாவது பாதத்துல கேது ஒக்காந்திருக்கான்'னு அவரு சொல்லறப்பவே வேகமா ஓடிவந்த என் பையன் என்னோட ரைட் பாதத்துல ஒக்காந்தான். "உன்னோட ஜாதகப்படி உனக்கு இருபத்து மூணு வயசுலேயே ஈராக் அதிபராகிற யோகம் இருந்திருக்கு! நீ அப்ப இந்தியாவுல இருந்ததால அது நிறைவேறல! ஆனா உன்னோட அம்பதாவது வயசுல நீ அமெரிக்காவுல இருந்தேன்னா அமெரிக்க அதிபராக வாய்ப்பு பிரகாசமா இருக்குன்!'னு என் காதுல ரத்தம் வர்ற அளவுக்குப் பேசினாரு. "ஐஎஸ்டி காலையெல்லாம் விடுங்க, லோக்கல் ஒரு ரூபா போன் ரேஞ்சுக்கு ஏதாவது சொல்லுங்க! வார்டு கவுன்சிலர் ஆகற பாக்கியமாவது என் வாழ்க்கையில இருக்கான்னு?'னு எதார்த்தத்துக்கு அவரை இறக்கி வுட்டேன்.

"நீ முயற்சி பண்ணுனா தமிழ்நாட்டோட முதலமைச்சரா ஆகுற யோகமே இருக்கு! இதை நான் சொல்லல. ரேகை சொல்லுது'ன்னு சிக்ஸர் அடிச்சாரு. ரேகை என்ன ஆல்-இந்தியா-ரேடியோ ஆறரை மணி மாநிலச் செய்திகளா? இதையெல்லாம் சொல்லுறதுக்கு! "உனக்கு கடந்த எட்டரை வருஷமா ஏழரைச் சனி நடக்குறதால, வர்ற தேர்தல்ல நீ நல்லபடியா நின்னு ஜெயிக்கணும்னா ஒரு யாகம் வளர்க்கணும்'ன்னு அடுத்த யார்க்கரைப் போட்டாரு. "சாமி நான் இருக்குற நிலைமையில நகம் வேணா வளர்க்கலாம். யாகம்லாம் முடியாது'ன்னு அவருக்கு ஒரு அம்பதைத் தள்ளி வீட்டை வுட்டு வெளிய தள்ளுனேன்.

"தேபிபாமு கழகம் -நினைத்தால் படைக்கும் புது உலகம்'னு பிரசாரகீதங்கள் எழுத ஆரம்பிச்சேன். அதுல சில வரிகள் எழுதறப்போ அரிச்ச அரிப்புல என் கன்னத்தை நானே கிள்ளி கொஞ்சிக்கிட்டேன். அவ்ளோ சூப்பரான வரிகள் அது!

"தென்னாட்டுச் சூரியனே!

தெனாவெட்டுச் சந்திரனே!

மண்ணாள வந்த சாமியே!

எந்நாளும் நீ கோயிஞ்சாமியே!' -அன்னிக்குத் தான் எனக்குள்ள ஒளிஞ்சு ஒக்காந்திருந்த கவிஞன் "ஐஸ்பால்'லு சொல்லிட்டு வெளிய வந்தான். அப்படியே கவிதை காலராவா மாறி நிக்காம போக, நானூறு பக்கம் எழுதி முடிச்சேன்.

அப்பத்தான் தூங்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே விடிஞ்சிடுச்சு. ஆஹா..இன்னிக்குத் தான் தேர்தல் நாமினேஷன் ஆரம்பிக்குது. தொகுதில முதல் நாமினேஷன் இந்த "கோமகன் கோயிஞ்சாமி'யோடதாத்தான் இருக்கணும்னு வெறி வந்துச்சு.

சட்டுபுட்டுன்னு குளிச்சி நாமினேஷன் பண்ணக் கௌம்பினேன். ஆனா ஒரு அப்பாவி கெடைச்சா சுத்தி இருக்கிற "அடப்பாவி'களெல்லாம் என்னா பாடு படுத்துவாங்கன்னு எனக்கு அன்னிக்குத்தான் நல்லாவே புரிஞ்சுது. நாமினேஷன் பண்ணப் போய் நான் நாய் படாத பாடு பட்ட சம்பவங்கள்... அடுத்த வாரம்!

Link to comment
Share on other sites

ஆகா முகில் அரசியலுடனும் விளையாடுகின்றாரா?

இணைப்பிற்கு நன்றிகள் சுண்டல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.