Jump to content

Recommended Posts

இனிய உறவுகளே !.

இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள்.

அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன்.

பாகம் பத்து

புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி

அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் .

இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள்.

கடுமையான சண்டை.

நெருப்பு சுவர்களாக புலிகள்.

சுடுகாடாக புதுக்குடியிருப்பு.

புதுக்குடியிருப்பு....

அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்தி.

கடைதொகுதிகளும், கதிரவன், மதி தேநீர்க்கடைகளில் ஒலிக்கும் புரட்சி பாடல்களும், அழகாக அடுக்கிவைக்கபடிருக்கும் மண்ணெண்ணெய் போத்தில்களும், மாவீரர் மண்டபம் அதை ஒட்டி நிற்கும் பெரிய நிழல் தரு மரம்,

பாண்டியன் உணவகம், பேரூந்து நிலையம் அதற்கு முன்னால் அழகான புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம் எல்லாம் அந்த நகருக்கு மிடுக்கை கொடுத்திருந்தன.

மக்கள் நெரிசலை கட்டுப்படுத்த எப்போதுமே அந்த நகரின் சந்தியில் காவல் துறையினர் காத்திருப்பர்.

இன்று ...

கட்டடங்கள் தொடர்ச்சியான கொத்து குண்டுகளாலும், இடைவிடாத கிபிர் தாக்குதல்களாலும் அழிதொழிக்கபடிருந்தன.

நாச்சந்தி எது என்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

இந்த மூலையில் இருந்து பார்த்தால் அந்த மூலை தெரியுமளவுக்கு தரைமட்டமாகபடிருந்தது.

அழகான அந்த நகரம் அலங்கோலமாக..

இருந்தும் புலிகளின் அந்த மனித வேலி, ராணுவ அரக்கனை உள்ளே விடாமல் தடுத்து வைத்துகொண்டிருந்தது.

மக்கள் புகலிடம் தேடி இரணைபாலை, புதுமாத்தளன், ஆனந்தபுரம், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் நோக்கி போய்விட்டார்கள்.

காகங்களும் நாய்களும் மட்டுமே நகருக்கு சொந்தம் கொண்டாடின.

ராணிமைந்தன் அந்த புலிகளின் மனித வேலியின் ஒரு பகுதிக்கு (கொம்பனிக்கு) பொறுப்பாக இருந்தான். அவனது தீரமிகு சண்டைகள் அவனை அந்த நிலைக்கு கொண்டுவந்திருந்தது.

எதிரின் கனரக ஆயுதங்களுக்கும், கொத்து குண்டுகளுக்கும், விமான குண்டுவீச்சுகளுக்கும் நடுவில் சாதாரண ஆயுதங்களையும் மனவலிமையையும் வைத்து போராட போராளிகள் பழகிவிட்டார்கள்.

அன்று அதிகாலை சேகர் அண்ணா, ராணிமைந்தனின் அரணுக்கு வந்திருந்தார். அவனது கடந்த கால செயற்பாட்டுகளை பாராட்டிய அவர், புலிகளின் செய்மதி தொலைதொடர்பு மையத்தில் ஒரு கருவியினை பழுதுபார்க்க அவனை அழைத்து செல்ல வந்திருந்தார்.

புலிகள் அப்படிதான். நேற்றுவரை ஆயுதத்துடன் எதிரியுடன் போராடுவார்கள் , திடீர் என்று களம் மாறி இலத்திரனியல் கருவிகளுடன் போராடுவார்கள். அவர்களின் சிந்தனை மாறுதிறன் அந்நியன் படத்தை தான் நினைவூட்டும்.

அதற்கு ராணிமைந்தனும் விதி விலக்கல்ல.

தனது கள பொறுப்புகளை துணை பகுதிப் பொறுப்பாளனிடம் ஒப்படைத்துவிட்டு சேகர் அண்ணாவுடன் புறப்பட தயாரானான்.

ஆனந்தபுரத்தின் மைய்யபகுதியில் அமைந்திருந்தது அந்த செய்மதி தொடர்பு மையம். புலிகளின், மக்களின் பெரும்பாலான வெளிநாட்டு தொடர்புகள் அந்த மையதினூடாகவே நெறிபடுத்தபட்டன.

நன்றாக உருமறைக்கபட்டு மரங்களூடு செய்மதி கட்டுப்பாட்டு அலைகளை பெறுவதற்காக, மிகவும் சிரமபட்டு ஒழுங்கமைதிருந்தார்கள்.

வன்னி மக்களின் வெளிநாடுக்கான தொடர்பு, பண பரிமாற்றங்கள் (உண்டியல்) எல்லாமே சேகர் அண்ணாவின் கட்டுப்பாடில் இயங்கும் சர்வதேச தொலைதொடர்பு பிரிவினாலே நடாத்தபட்டன. மொத்தத்தில் சேகர் அண்ணா, வன்னிமக்களுக்கு ஒரு கண்காணா தெய்வமாக விளங்கினார் என்று சொன்னால் மிகையாகாது.

என் காதுபடவே மக்கள் பேசியதை கேட்டிருக்கிறேன். "இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் " என்று சேகர் அண்ணாவை தெரியாத சனம் கூட பேசி இருக்கு.

ஒரு செய்மதி அலைவாங்கியில் (Receiver ) பிரச்சனை. நாங்கள் இனி புதிதாக வெளிநாட்டில் கொள்வனவு செய்தாலும் கூட நாங்கள் எல்லாம் செத்தாப்பிறகு தான் வந்து சேரும். பழைய பழுதாகிப்போன அலைவாங்கியில் இருந்து ஏதாவது பகுதிகளை (Parts ) எடுத்து ஒட்டி செய்யவேண்டும்.நிறைய கணித சமன்பாடுகள். நிறைய இலத்திரனியல் நுண்ணறிவுகள் வேண்டும்.

வெளிநாடுகளில் கூட இப்படி செய்திருக்கவே மாட்டார்கள், ஆனால் புலிகள் செய்திருந்தார்கள். அவர்களின் ஆராய்ச்சி திறனுக்கு இரண்டு மூன்று கலாநிதி பட்டங்கள் கூட கொடுக்கலாம். ஆனால் அதை செய்பவர்கள் அடுத்த சண்டையில் சிலவேளைகளில் மக்களுக்காக வீரச்சாவு அடைந்துவிடுவார்கள். அதோடு அவர்களின் திறனும் வீரச்சாவு அடைந்துவிடும்.

புலிகளின் திறன் கண்டு, செய்மதி அலைவரிசை வழங்குனரே மெச்சியிருகிறான். சண்டை முடிந்ததும் தங்கள் நாட்டுக்கு வந்து தங்கள் கூட பணியாற்ற வேண்டும் என்று அழைப்பு கூட விடுதிருகிறான்.

அந்த முகாமுக்கு அருகில் இருந்த பயிற்சி முகாமில் ஆலோசனை வழங்கும் வேலையும் சேகர் அண்ணாவுக்கு இருந்தது. தன்னை அந்த பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு என்னை தொடர்பு மையத்துக்கு போக சொன்னார் சேகர் அண்ணா.

பயிற்சி முகாம்கள் பொதுவாக மக்கள் வாழ்விடங்கள் குறைந்த காட்டுபகுதியில் தான் வைத்திருப்பது வழக்கம். ஆனாலும் எதிரி எங்களை ஒரு குறுகிய நிலபரப்பில் ஒடுக்கி இருந்தமையால், எங்கள் பயிற்சி முகாம்கள் மக்கள் வாழ்விடங்களை அண்டித்தான் அமைக்க வேண்டிய சூழ்நிலை. இருந்தும் நாங்கள் மக்களை விமான தாக்குதல் இலக்கு, செல் இலக்கு குறித்து எச்சரித்து அந்த இடங்களில் இருந்து தள்ளி வாழும்படி கேட்டுகொள்வோம்.ஆனால் மக்களும் தான் எங்கு போவார்கள். அவ்வளவு மக்களையும் தாங்க கூடிய நிலமாக இடமாக அந்த இடங்கள் இருக்கவில்லை. அவர்களும் எங்கள் முகாம்களுக்கு அருகிலேயே வாழ்ந்தும் பழகிவிட்டார்கள்.

நான் சேகர் அண்ணாவை அந்த பயிற்சி முகாமில் விட போகும்போது, காலையில் பின்களபணிக்கு ஆண்களை அனுப்பிவிட்டு (அன்றைக்கு இருந்த ஒரே வருவாய் தரும் தொழில்) வாசலில் காத்திருந்தார்கள் பெரும்பாலான பெண்கள்.

பின்களபணி மரம் தறித்தல், பதுங்குகுழி அமைத்தல், அரண் அமைத்தல் என்று வேறு வேறு பணிகள். எதிரியில் எல்லை கோட்டை வைத்து தான் சம்பளபட்டியல். எல்லைகோட்டில் இருந்து இருநூறு மீற்றருக்குள் ஒரு சம்பளம், இருநூறு மீற்றர் தொடக்கம் ஐநூறு மீற்றர் வரை ஒரு சம்பளம், அதற்கு அப்பால் ஒரு சம்பளம் என்று மாறிக்கொண்டே போகும்.

உங்களுக்கு புரியுதோ இல்லையோ உயிரின் விலை அது.

ஆண்களுக்கும் வேற வழி இல்லை. புலம்பெயர் தொடர்பில்லாத மக்கள் தான் வன்னியில் பெரும்பாலானவர்கள். வயல்களையும் கடலையும் நம்பி வாழ்ந்தவர்கள். பிச்சை எடுத்து பழக்கமில்லாதவர்கள். தன்மானம் காப்பவர்கள்.உதவி நிறுவனங்கள் கூட அங்கெ இல்லை. உயிரை மூலதனமாக்கி உழைத்தார்கள்.

இது உங்களால் முடியுமா உறவுகளே.. இண்டைக்கு திரும்ப வந்து அம்மாவின், மனைவியின், குழந்தையின் முகத்தை பார்ப்போமா என்று கூட தெரியாமல் வேலைக்கு போக உங்களால் முடியுமா.?

அவர்கள் போனார்கள், எல்லாம் கால் வயிற்று கஞ்சிக்காக.

அவர்கள் வரும்வரை, அந்த பெண்கள், அம்மாக்கள், சகோதரிகள், மனைவிகள் வாசலில் காத்திருந்தார்கள். பசியால் அழுதுகொண்டிருந்த பிள்ளைகளுக்கு மாவை தண்ணியில் கரைத்து கொடுத்து கொண்டிருந்தார்கள். எங்களின் சீருடைகளையும் ஆயுதங்களையும் பார்த்து முகங்களில் புன்னைகை தவள விடை கொடுத்தார்கள்.மனசுக்குள்ளே எங்களுக்கான மதிப்பு இன்னும் இருக்கு என்று காட்டும் புன்னைகைகள் அவை.

சேகர் அண்ணாவை, பயிற்சி முகாமில் இறக்கிவிட்டு விடைபெறும்போது,

"ராணி திருத்தி முடிய தொடர்பெடு, நான் அல்பா 1 அலைபேசி எண்ணில் தான் நிற்பேன். மறந்து போய் விட்டுவிட்டு போயிடாதே" என்றார் சேகர் அண்ணா.

இன்னும் சில கணங்களில் எந்த அலைவரிசையிலும் தொடர்பே எடுக்கமுடியாத இடத்துக்கு, எங்களையும் எங்கள் மக்களையும் தவிக்க விட்டு போக போவது தெரியாமல் ...

(தொடரும்)

பாகம் பதினொன்று

திடீரென ஆனந்தபுரம் வான்பரப்பில் நுழைந்தன கிபிர் விமானங்கள்.

அவை கொடிய சிறிலங்கா விமானபடைக்கு சொந்தமானவை.

என்னையும் இழுத்துக்கொண்டு பதுங்கு குழிக்குள் ஓடினார்கள் அந்த சர்வதேச தொலைத்தொடர்பு பிரிவை சேர்ந்த நண்பர்கள்.

பதுங்கு குழி வாசலுக்கு கூட சென்றிருக்க மாட்டேன்.

நெருப்பு பிழம்புகள், மின்னலென தெறிக்க டம்மம்மமார் டமம்ம்ம்மாமமார் என்ற காதை பிளக்கும் சத்தங்கள் மிக அருகிலேயே கேட்டன. என்னை ஒரு கை பதுங்கு குழிக்குள் இழுத்து போட்டது.

மீண்டும் கிபிர் இரைந்து கொண்டு கீழிறங்க விடுதலைபுலிகளின் விமான எதிர்ப்பு பிரங்கிகள் முழங்கின.

தாறுமாறாக குண்டுகளை வீசி விட்டு சென்றான்.

"ராணி அண்ணா, சேகர் அண்ணா போன பக்கம் தான் அடிக்கிறான் போல " என்று நண்பன் ஒருவன் சத்தத்தை வைத்து சொன்ன போது தான், எனக்கு மனசு பக் என்றது.

அவருக்கு தொடர்பு எடுத்து பார்க்க வேணும் என்று உள்மனசு சொன்னாலும்,விமான தாக்குதல் நேரம், ஆகாயத்தில் வட்டமிடும் வேவு விமானங்களுக்காக தொலைதொடர்பு எடுக்க கூடாது என்ற கட்டளை என்னை தடுத்தது.

வானத்தில் வெடிக்கும் குண்டுகள் (ஆட்களை கொல்வதற்காக) , கட்டடங்களை அழிக்கும் குண்டுகள், நிலத்துக்கு கீழே போய்

வெடிக்கும் குண்டுகள் என்று மாறி மாறி மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் பன்னிரண்டு தடவைக்கு மேல் குண்டு வீசியாச்சு. ஒரே புகைமண்டலமும் கந்தக நெடியும் தான். எங்கள் பதுங்கு குழியே பலதடவை அதிர்ந்து உள்ளே மண் சரிய தொடங்கிவிட்டது.

விமானங்களின் இரைச்சல் கரைய தொடங்க, நாங்கள் குண்டு விழுந்த இடத்தை நோக்கி ஓட தொடங்கினோம்.

பொதுவாக விமானங்கள் போனாலும் உடனே போக கூடாது என்று சொல்லுவார்கள். அவன் போற மாதிரி போயிற்று மறுபடியும் வந்து அடிப்பான் மற்றும் விமான குண்டுவீச்சு நடந்த இடத்துக்கு காயபட்ட ஆட்களை தூக்க விடாமல் செல்லாலை அடிப்பான் .

இருந்தும் சேகர் அண்ணாவின் நிலையை அறியவும் காயபட்ட ஆட்களை தூக்கவும் நாங்கள் உடனடியாகவே அந்த இடத்துக்கு விரைந்தோம் சேகர் அண்ணாவை அலைபேசியில் கூப்பிட்டபடி.

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

"சேரா த்ரீ..சேரா த்ரீ .. அல்பா வண்"

என்று எங்கள் அலைபேசியில் கத்தியபடியே ஓடினோம். எந்த பதிலும் வரவில்லை.

சற்று முன்னர் அழகாக தெரிந்த அந்த குடிசைகளும் தென்னை மரங்களும் பிய்த்து போடபட்டிருந்தது. கொலை வெறியாடபட்ட கிராமம் போல காட்சி தந்தது.

அழுகையின் ஓலங்களும், கண்களில் தெரிந்த மரண பீதிகளும், ரத்தம் சொட்ட சொட்ட தலை தெறிக்க ஓடிவரும் ஆட்களும் மனசுக்குள்ளே வெறுமையை தோற்றுவித்தன.

"அண்ணா என்னை காப்பாத்துங்கோ அண்ணா என்னை காப்பாத்துங்கோ" என்று சட்டை எல்லாம் கிழிந்தபடி இரத்தம் சொட்ட சொட்ட ஓடிவந்த பெண்ணொருத்தி, அவளை தாங்கி பிடிக்க நான் ஓடும்போது, எனக்கு ஒரு பத்து மீற்றருக்கு முன்னால் தலைகுப்பற விழுந்தாள்.

ஓடி வந்து மூச்சில் கைவைத்து நாடி துடிப்பை பார்க்கும் போது அவள் இறந்துவிட்டிருந்தாள். பின் தலையில் சிறுபகுதி இல்லை அதன் வழியாக இரத்தம் அவளை மட்டும் அல்ல எங்கள் மண்ணையும் நனைத்து கொண்டிருந்தது.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறீலங்கா கொலைவெறி இராணுவம் விமானத்தாக்குதல் நடந்த இடத்துக்கு கொத்து குண்டு தாக்குதலை தொடக்கி இருந்தான். காயபட்டவர்களை தூக்க கூட மக்கள் வர தயங்கினார்கள். காயப்பட்டவர்களை ஏற்றி செல்ல வந்த உழவு இயந்திரங்கள் கூட எட்டியே நின்றன.

தாக்குதல் நடந்த இடத்தை நான் வாழ்கையில் திரும்ப எப்பவுமே பார்க்க கூடாது. எங்குமே இரத்தமும் சதைகளும், கைகளும், தலை முடிகளும், பாதி தலைகளும், கிழிந்த சட்டைகள் உள்ளாடைகள் சிதறி போய் இருந்தன.

"அண்ணா எங்களை காப்பாத்துங்க, எங்களை காப்பாத்துங்க" என்ற ஓலம் எல்லா பக்கத்திலும் இருந்து வந்து காதிலே எதிரொலித்தன.

யாரை முதலில் காப்பாத்திறது..நீங்களே சொல்லுங்க ..யாரை காப்பாத்திறது..அந்த செல் மழைக்கு நடுவிலும் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். சிறு காயங்களுக்கு உட்பட்டவர்களை மட்டும் முதலில் ஏத்துவம். வயிற்று காயம், தலை காயம் எல்லாம் கடைசியா ஏத்துவோம். ஏன் என்றால் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு போனாலும் மருத்துவம் செய்ய மாட்டார்கள்.

புழுபிடிச்சு சாகும்வரை அப்படியே விட்டுவிடுவார்கள். அது அவர்களின் பிழை இல்லை. அவ்வளவு மருந்து தட்டுப்பாடும், அவ்வளவு காயகாரர்களும். இவர்களுக்கு செலவிடும் நேரத்தை வேறு பத்து காயகாரர்களுக்கு செலவிடலாம் என்பது அவர்களின் கருத்து.

இது தான் உயிரின் பெறுமதி அங்கு. உங்களுக்கு கொஞ்சமாவது புரிகிறதா உறவுகளே..

கிபிரின் குண்டுகள் பெரும்பாலானவை பயிற்சி முகாமின் பெண்கள் பகுதிக்குள்ளேயே விழுந்திருந்தன. அந்த பெண்கள் கூட சில நாட்களுக்கு முன்னர் தான் விரும்பியோ விரும்பாமலோ இயக்கத்தில் இணைக்கபட்டவர்கள்.

கிபிர் குண்டுகளின் தாக்கத்தை உங்களுக்கு எழுத்தில் விபரிக்க முடியாது. அவை அனுபவப்பட்டால் மட்டும் தெரிந்து கொள்ள கூடிய உணர்வுகள். குண்டுவீச்சின் தாகத்தினால் பெரும்பாலான காயபட்ட பெண்களின் உடலில் ஒட்டு துணிகூட இல்லை. காயத்தின் வேதனைகளும், நிர்வாணமாக அங்கெ கிடக்கும் கோலங்களும் அந்த பெண்களின் மனசை எப்படி வாட்டி இருக்கும் என்பதை இதை வாசிக்கும் பெண் உறவுகள் நிச்சயாமாக அறிவீங்கள்.

எங்கள் போராளிகளுக்கு அவர்கள் எல்லாம் சொந்த சகோதரிகள் போலவே தெரிந்தார்கள். எதை பற்றியும் கூட யோசிக்காமல் அவர்களை அப்படியே வாரி அள்ளி தோள்களில் போட்டு கொண்டு ஓடி போய் உழவு இயந்திரங்களில் ஏற்றினார்கள்.

முறிந்து போன கால்களை உடையவர்களை, கிழிந்த சேலைகளில் அள்ளி கொண்டு போய் சேர்த்தார்கள். நானும் ஒரு இரண்டு மூன்று பேரை தூக்கி கொண்டு போய் உழவு இயந்திரத்தில் போட்டு விட்டு, ஓடிவரும்போது " அண்ணா என்னை தூக்குங்கோ என்னை தூக்குங்கோ" என்று கத்திய பெண்ணை நோக்கி ஓடினேன்.

ஒரு கை, என்காலை இறுக்க பிடித்தது. என்னால் அசைய முடியவில்லை. குனிந்து பார்த்தேன், பதுங்கு குழிக்கு போடபடிருந்த தென்னங்குத்திகளுக்கு நடுவில் அகபட்டபடி ஒரு பதின்ம வயது பெண். சரியாக அவதானித்தேன். இடுப்புக்கு கீழே அவளுக்கு இரண்டு கால்களும் இல்லை. இடுப்புடன் சதைகள் மட்டும் தொங்கி கொண்டிருந்தன. அவற்றை அவளால் அவதானிக்க முடியாதபடி தென்னங்குற்றிகள் அவளுக்கு மறைத்தன.

"அண்ணா என்னை காபாத்தண்ணா" அவளின் குரல்கள் என்னை கெஞ்சின. இவளை காப்பாற்றியும் இவள் பிழைக்க போவதில்லை என்றது என் உள்மனம். இவளுக்கு பதிலாக இன்னும் இரண்டு காயபட்டவர்களை தூக்கி ஏற்றினாலாவது அவர்களை காப்பாற்ற முடியும் என்று நினைத்து கொண்டு அவளை உதறிவிட்டு எழ முயன்றபோது,

மீண்டும் "அண்ணா தயவு செய்து என்னை காபாத்தண்ணா" உயிர் வலியின் கெஞ்சல்கள் அவை. உங்களுக்கு புரியுமா உறவுகளே..இதை உங்களுக்கு சொல்லும்போதே எனக்கு கண்ணீர் வருகிறது. வாசிக்கும் உங்களுக்கும் வரும் தானே உறவுகளே...

"தங்கச்சி, இந்த மரங்கள் எல்லாம் தூக்கி உங்களை வெளியில எடுக்க வேணும் என்றால் இரண்டு மூன்று பேர் வேணும், அதோ அங்கெ கத்தி கொண்டிருக்கிற தங்கச்சியை தூக்கிவிட்டு உங்களை வந்து தூக்குகிறேன்" என்று சமாளிச்சேன்.

"அண்ணா, நான் உன்ட சொந்த தங்கச்சி என்றால் என்னை இப்படிதான் விட்டுவிட்டு போவாயா" என்று சாதரணமாக தான் கேட்டாள்.அப்போ அந்த தங்கச்சி கேட்ட கேள்வி என் உயிரையே பிசைந்தது. என் சொந்த தங்கச்சியே கேட்பது போல இருந்தது.

எனக்கு பதில் தெரியவில்லை உறவுகளே.. உங்களுக்கு தெரியுமா..இந்த வலியை என்றைகாவது அனுபவிச்சு இருகிறீங்களா.

எனக்கு அந்த கட்டத்தில் அவளை விட்டு நகர மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் கால்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. "தங்கச்சி உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நீ தப்பிவிடுவாய்" என்ற ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னிடம் ஒன்றும் இல்லை. என் தங்கச்சிக்கு கொடுக்க..

"அண்ணா இடுப்புக்கு கீழே சரியா வலிக்குதண்ணா"

"ஒண்டும் இல்லை மரம் இருக்கிறதால தான் வலிக்குது கொஞ்சம் பொறுங்க ஆக்கள் வரட்டும் தூக்க சரியாயிடும்"

"அண்ணா நான் இயக்கத்துக்கு வந்தது அம்மா அப்பாவுக்கு தெரியாது, கண்டால் சொல்லிவிடுவீங்களா நான் காயபட்டுவிட்டேன் என்று" திக்கி திக்கி பேசினாள்.

"நிச்சயமாக.. எங்கே இருக்கிறார்கள்"

"வலைஞர்மடம் பொது கிணத்தடிக்கு கிட்டே, ராசாத்தி என்று விசாரியுங்கள்"

"கட்டாயம் சொல்லிவிடுறேன்"

"அண்ணா, எனக்கு வாழணும் என்று ஆசையா இருக்கு அண்ணா. என்னை எப்படியும் காப்பாத்திவிடு......" அந்த சொல்லை முடிக்க கூட இல்லை அவள் செத்து விட்டாள். மன்னிக்கவும் வீரச்சாவு.என் சில நிமிட தங்கை என் கண் முன்னாலே வீரச்சாவு.

எல்லாம் உங்களுக்காக தான் உறவுகளே.. இப்போவாவது உங்களுக்கு புரிகிறதா ஏன் எங்களுக்கு விடுதலை வேண்டுமென்று..

இவளை மாதிரி செத்த என் தங்கைகளுக்காக எனக்கு என் நாடு வேணும். உங்களுக்கும் வேணும் என்று தோன்றினால் இந்த தங்கைக்காக ஒரு சொட்டு கண்ணீர் விடுங்கள் அது போதும்.

என் தலை எல்லாம் விறைத்தது. கண்ணீர் வரவில்லை. நெஞ்சை யாரோ சுத்தியலால் அறைவது மாதிரி இருந்தது. என் காலை பிடித்த அவளின் கைகள் இன்னும் விடுபடவே இல்லை. அப்படியே இறுக்கமாக சொந்த அண்ணன் எப்படியும் காப்பாற்றி விடுவான் என்ற நம்பிக்கை அந்த பிடியில் அப்பட்டமாக தெரிந்தது.

சற்றும் முன்னே பேசிய அந்த வாய்கள் திறந்த படி, வாழும் ஏக்கம் அந்த கண்களில் தெரிந்தபடி, அப்படியே எந்த மண்ணுக்காக வந்தாளோ அந்த மண்ணில் தலை சாய்ந்த படி, என் தங்கை மீளா துயிலில்.

எனக்காக அவளுக்கு ஒரு முறை..ஒரே ஒரு முறை நீங்கள் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவீங்களா..

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

"ரோமியோ அல்பா... ரோமியோ அல்பா..அல்பா வண்"

அலைபேசி என்னை உயிர்ப்பித்தது.

"சொல்லுங்கோ அல்பா வண்"

"நிலைமை என்ன மாதிரி"

"சரியான சிக்கல் அல்பா வண். நிறைய சங்கர்.."

(இறந்த ஒருவரை வைத்து இறப்புகளை சொல்லும் சங்கேத மொழி)

"விளங்குது ..சேரா த்ரீயை பார்த்தீங்களா "

"இல்லை அல்பா வண். தேடி கொண்டிருக்கிறேன். சந்திச்சதும் தொடர்பெடுக்கிறேன்"

"சரி நன்றி அவுட்"

"நன்றி"

அந்த தங்கச்சியின் கைகளை எடுத்துவிட்டு சேகர் அண்ணாவை தேடி அலைந்தேன்.

சிதறிய உடல்களுக்கும், சதை பிண்டங்களுக்கும் நடுவில், குப்புற படுத்தபடி சுருள் தலையுடன் ஒரு உடல். நடுங்கியபடியே அந்த உடலை திருப்பினேன், கருகிய முகத்துக்கும் நடுவில் மாறாத புன்னகையுடன், லெப்.கேணல் சேகர் அண்ணா இந்த மண்ணுக்காக சாவை தழுவி இருந்தார்.

நிதி துறையில் இருந்த அவரின் மனைவியை , ராகவன் என்னும் சார்லஸ் அன்ரனி சிறப்பு தளபதி பெயர் தாங்கிய அவரின் மகனை மட்டுமல்ல,அவர் நேசித்த மக்களையும் விட்டு வெகு தூரம் போயிருந்தார்.

பல போராளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த, மக்களுக்காக தன் வாழ்வையே கழித்த மாவீரனாக லெப். கேணல் சேகர் அண்ணா தான் நேசித்த மண்ணை முத்தமிட்டபடி வீரச்சாவை தழுவி இருந்தார்.

"இவ்வளவு செல்லடிகள், குண்டு வீச்சுகளுக்கு மத்தியும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தங்கள் உறவுகளுடன் பேசி,பண பரிமாறல்களை செய்யவைக்கிற அந்த புண்ணியவான் நல்லா இருக்கோணும் "

எனக்கு என் சொந்த அண்ணனையும், சொந்த தங்கச்சியையும் ஒரே நேரத்தில் இழந்த துயரம்..உங்களுக்கு ...?????

(தொடரும்)

Link to comment
Share on other sites

உறவுகளைத் தொலைத்து விட்டோம், அவர்களை காணவில்லை என்று தான் புலம் பெயர் மக்கள் ஏங்குகிறார்கள். ஆனால் எமக்குத் தெரியாது நம் மண்ணில் நடந்த துயரங்கள்.... நமக்காக ஆகுதியாகும் மைந்தர்களைப் பற்றி வாசித்தோ , கேள்வியுற்றோ துயர் பகிர்கிறோம்.. ஆனால் அவர்கள் நமக்காக எப்படியெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என நமக்குத் தெரியாது...

இப்படியான நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து எழுதுங்கள் அபிராம். ஏனென்றால் அவர்களை நாம் என்றுமே மறக்கக் மாட்டோம் என்பதை உலகிற்கே அறியப்படுத்துவோம்.. அவர்கள் வரலாறு என்றும் பேசப்பட வேண்டும்.

உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் வலிக்கிறது. கூடவே குற்ற உணர்வும் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கம்.....

அபிராம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் தகுதி எனக்கு இல்லை...கண்ணீர் அஞ்சலி மட்டும்தான் முடியும்...தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்கூம்...தொடரும் எனப் போட்டு இருக்குறீர்கள் தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம், உங்களது எழுத்துநடை, எங்களை அங்கேயே கூட்டிச் செல்கின்றது!

தொடருங்கள்!!!

Link to comment
Share on other sites

நன்றி அபிராம் பகிர்வுக்கு

நன்றி உடையார்.

உறவுகளைத் தொலைத்து விட்டோம், அவர்களை காணவில்லை என்று தான் புலம் பெயர் மக்கள் ஏங்குகிறார்கள். ஆனால் எமக்குத் தெரியாது நம் மண்ணில் நடந்த துயரங்கள்.... நமக்காக ஆகுதியாகும் மைந்தர்களைப் பற்றி வாசித்தோ , கேள்வியுற்றோ துயர் பகிர்கிறோம்.. ஆனால் அவர்கள் நமக்காக எப்படியெல்லாம் தியாகம் செய்திருக்கிறார்கள் என நமக்குத் தெரியாது...

இப்படியான நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து எழுதுங்கள் அபிராம். ஏனென்றால் அவர்களை நாம் என்றுமே மறக்கக் மாட்டோம் என்பதை உலகிற்கே அறியப்படுத்துவோம்.. அவர்கள் வரலாறு என்றும் பேசப்பட வேண்டும்.

உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் வலிக்கிறது. கூடவே குற்ற உணர்வும் ...

நன்றி கல்கி உங்கள் கருத்து பகிர்வுக்கு. என்னால் இயன்றவரை, நேரம் கிடைக்கும் போதெல்லாம், அங்கெ நடந்தவற்றை வெளிக்கொணர முயற்சி செய்கிறேன்.

கல்கி ! இவை வலிப்பதற்கான வார்த்தைகள் அல்ல. மாறாக வலியின் வார்த்தைகள்.

நினைவுநாள் வீரவணக்கம்.....

அபிராம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறும் தகுதி எனக்கு இல்லை...கண்ணீர் அஞ்சலி மட்டும்தான் முடியும்...தொடருங்கள்

புத்தன்! நன்றி உங்கள் கருத்துக்கு. நானும் அதற்கு தகுதியுடையவனா என்ற கேள்வி இப்போதும் என் மனசை தாக்கி கொண்டு தான் இருக்கிறது.

ம்கூம்...தொடரும் எனப் போட்டு இருக்குறீர்கள் தொடருங்கோ

ரதி ! . இது நான் ஏற்கனவே எழுதிய ஒரு தொடரில் இருந்து இன்றைய நாளுக்குரிய பகுதியை வெட்டி எடுத்து போட்டமையால் அவ்வாறு வந்துள்ளது.

அபிராம், உங்களது எழுத்துநடை, எங்களை அங்கேயே கூட்டிச் செல்கின்றது!

தொடருங்கள்!!!

நன்றி புங்கையூரான் உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும்.

நான் ஒரு எழுத்தாளன் அல்ல. யாழில் எழுவதற்கு முன் எந்த ஒரு இடத்திலோ, ஊடகத்திலோ எழுதியவனுமல்ல. என் பரம்பரையில் கூட யாரும் எழுதியவர்கள் அல்ல. வலிகள் என்னை எழுதவைக்கிறது. அதை எனக்கான ஒரு கடமையாக தான் செய்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.