அரசியல் அலசல்

ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்

1 month 1 week ago
ஒரு பல்கலைக் கழகமும் ஒரு இசைநிகழ்ச்சியும்- நிலாந்தன்

IMG-20230226-WA0011-1024x576.jpg

பாடசாலைகளை, பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் முதலீடு செய்வதில்லை. தாயகத்தில் முதலீடு செய்பவர்களிலும் மிகச்சிலர்தான் கல்வித்துறையில் முதலீடு செய்கிறார்கள். ஆளில்லா ஊரில் ஆலயங்களைக் கட்டுவதை விடவும் கல்விச்சாலைகளை கட்டுவது மகத்தானது. அப்படி ஒரு முதலீடுதான் கந்தர்மடம் சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நோர்தேன் யுனி என்று அழைக்கப்படும் தனியார் பல்கலைக்கழகம்.

போட்டிக் கல்வி வியாபாரமாக மாறிய ஒரு கல்விச்சூழலில், ஒரு முதலாளி கல்வியில் முதலீட்டைச் செய்யும்பொழுது அங்கேயும் வியாபார இலக்குகள் இருக்கும். ஆனால் தனது முதலீட்டை விளம்பரப்படுத்துவதற்காக சினிமாத் துறைப் பிரபல்யங்களை கொண்டு வரும்போதுதான் சர்ச்சை எழுகிறது.

கடந்த இரு நூற்றாண்டுகளிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் இந்து மத மறுமலர்ச்சியாளர்களும் போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு பிரதேசம்தான் யாழ்ப்பாணம். நவீன யாழ்ப்பாணம் எனப்படுவது அவ்வாறு போட்டிக்குப் பள்ளிக்கூடம் கட்டிய ஒரு போக்கின் தேறிய விளைவு.

அமெரிக்காவில் தமது சுகபோகங்களைத் துறந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து பள்ளிக்கூடங்களைக் கட்டிய மிஷன் தொண்டர்கள்; ஊரூராக பிடியரிசி சேர்த்து இந்துக் கல்லூரிகளைக் கட்டிய இந்து மறுமலர்ச்சியாளர்கள் என்ற மகத்தான முன்னுதாரணங்கள் ஈழத் தமிழர்களுக்கு உண்டு.

இம்மாதம் ஆறாந் திகதி உடுவில் மகளிர் கல்லூரியில், அக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டு 200ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் தொடக்கின.

Harriet_L._Winslow-1-c.jpg

சரியாக 200 ஆண்டுகளுக்கு முன் திருமதி.ஹரியற் வின்சிலோ  என்று அழைக்கப்படும் அமெரிக்கப் பெண், தனது 28ஆவது வயதில் உடுவில் மகளிர் கல்லூரியைத் தொடங்கினார். தென்னாசியாவில் விடுதி வசதியோடு கூடிய முதலாவது பெண்கள் பள்ளி அது. யாழ்ப்பாணத்தில் ஹரியற் அம்மையார் தங்கியிருந்த காலத்தில் அவருடைய ஐந்து பிள்ளைகள் தொற்று நோய்க்கு இரையானார்கள். அமெரிக்காவுக்கு படிப்புக்காக அனுப்பப்பட்ட அவருடைய ஆண்பிள்ளை கடல் பயணத்தில் இறந்து போனார். தொடர்ச்சியான தனிப்பட்ட இழப்புகளால் நொறுங்கிப்போன போன ஹரியற் தன்னுடைய 37ஆவது வயதில், இளவயதில் இறந்து போனார். அவரோடு சேர்ந்து பணிபுரிய வந்த அவருடைய இரண்டு சகோதரிகள் அவருக்குப் பின் இறந்து போனார்கள். தன் மூன்று சகோதரிகளோடு சேர்ந்து பணிபுரிவதற்கென்று அமெரிக்காவிலிருந்து வந்த மற்றொரு சகோதரி யாழ்ப்பாணத்தில்  வந்து இறங்கிய பின்னர்தான் தன்னுடைய ஏனைய மூன்று சகோதரிகளும் உயிரோடு இல்லை என்பதை அறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தின் கல்வியை கட்டியெழுப்புவதற்காக எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து சந்நியாசிகள்போல வாழ்ந்து, தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மதம் மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்களுடைய செயற்பாடுகளுக்கு எதிராக இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டியெழுப்பினார்கள்.

மிஷன் பள்ளிக்கூடங்களை எதிர்கொண்டு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் சுதேசிகளின் பள்ளிக்கூடங்களைக் கட்டினார். அவ்வாறு பள்ளிக்கூடங்களைக் கட்டுவதற்கு அவர் பிடியரிசித் திட்டம் என்ற ஒரு சமூகப் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் தோறும் பிடியரசி சேகரிக்கப்பட்டு, அந்த நிதியில் யாழ்.இந்துக் கல்லூரியும் உட்பட பல்வேறு சுதேச பள்ளிக்கூடங்களை இந்து மறுமலர்ச்சியாளர்களும் இந்து அறக்கட்டளைகளும் கட்டினர்.

உடுவில் மகளிர் கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் மருதனார் மடத்தில் ராமநாதனின் கல்லூரி கட்டப்பட்டது. அப்பள்ளிக்கூடத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய திருமதி லீலா ராமநாதன் ஒரு ஒஸ்ரேலியப் பெண். அவருடைய சேவையை வியந்து போற்றுபவர்கள் அவருடைய வெண்ணிறப் பாதங்களில்  அந்த ஊரின் செம்பாட்டுச் சாயம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்று கூறுவார்கள்.

IMG-20240214-WA0018-c-1.jpg          உடுவில் மகளிர் கல்லூரியின் முதலாவது பட்டதாரி

இவ்வாறு எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்த வெள்ளைக்காரப் பெண்களும் ஆண்களும், உள்ளூரில் சைவசமய மறுமலர்ச்சியாளர்களும் கல்விச்சாலைகளைக் கட்டியெழுப்பிய போது அவர்கள் அதை அதிகபட்சம் தொண்டாகவே செய்தார்கள். கல்விப் பணி என்பது உன்னதமான ஒரு தொண்டாகக் கருதப்பட்டு, போற்றப்பட்ட காலகட்டம் அது.

இப்படிப்பட்ட கல்விச்சாலைகளைக் கட்டும் ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில் வைத்து நோர்தென்  யூனியையைப் பார்க்க வேண்டும். அந்த பல்கலைக்கழகம் கட்டப்பட்டிருக்கும் கந்தர் மடம் சந்தியில் இருந்து அரசடிச் சந்தியை நோக்கி வரும் கந்தர் மடம் வீதியில், முன்பு ஒரு சைவப் பிரகாசா வித்தியாசாலை இருந்தது. அங்கே மாணவர்களின் வரவு குறைந்தபடியால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு; பின்னர் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இப்பொழுது ஏதோ ஒரு அரச கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அச்சிறிய பள்ளிக்கூடத்துக்கு ஈழப்போரில் ஒரு முக்கியத்துவம் உண்டு. 1983ஆம் ஆண்டு தொடக்கத்தில், உள்ளூராட்சி  சபைத் தேர்தல் நடந்தபொழுது சைவப்பிரகாச வித்தியாசாலை ஒரு வாக்களிப்புச் சாவடியாக இருந்தது. அத்தேர்தலைப் பகிஷ்கரித்த விடுதலைப் புலிகள் இயக்கம் அந்தச் சாவடியில் காவலுக்கு நின்ற படையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்பொழுது மாணவர்கள் இல்லை என்பதால் அப்பள்ளிக்கூடம் மூடப்பட்டு விட்டது. அது அமைந்திருக்கும் வீதி பலாலி வீதியில் வந்து ஏறும் சந்தியில் நோர்தேன் யூனி கட்டப்பட்டிருக்கிறது.

கனடாவில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர் அதைக் கட்டியிருக்கிறார். தனது தாயகத்தில் அவர் முதலீடு செய்ய விரும்புகிறார். குறிப்பாக அதனைக் கல்வித் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறார். தமிழ் மக்களுக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டும். தமிழ்மக்கள் தங்களுக்கு வேண்டிய துறைகளை விருத்தி செய்வதற்கு அரசாங்கத்தில் தங்கியிராத அதுபோன்ற பல்கலைக்கழகங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் அந்த முதலீட்டை வரவேற்க வேண்டும்.

IMG-20240214-WA0016-c.jpg                                                                                                              இராமநாதன் இணையர்

அந்த முதலீட்டாளரின் மனைவி இந்தியாவின் சினிமாப் பிரபல்யங்களில் ஒருவரான ரம்பா. அதனால் அப்பல்கலைக்கழகத்தை விளம்பரப்படுத்த முயன்ற முதலீட்டாளர் தன்னுடைய மனைவியின் துறைசார்ந்து சிந்தித்து விட்டார். தன் மனைவியின் துறை சார்ந்த பிரபல்யங்களை கொண்டு வந்து பெருமெடுப்பில் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்துவதன்மூலம் தனது பல்கலைக்கழகத்திற்குப் பொருத்தமான விளம்பரம் கிடைக்கும் என்று அவர் கருதியிருக்கலாம்.

தமிழ் வெகுசனைப் பண்பாட்டில் சினிமாவின் தாக்கம் வலியது. பெருந்தமிழ் பரப்பில், குறிப்பாக தமிழகத்தில், அரசியல் எனப்படுவது ஏதோ ஒரு விகிதமளவுக்கு சினிமாவின் நீட்சியும் அகட்சியும்தான். ஊடகமாகட்டும் பொழுதுபோக்கு ஆகட்டும், எல்லாவற்றிலும் சினிமாவின் தாக்கம் உண்டு. கேபிள் தொலைக்காட்சி எனப்படுவது சுந்தர ராமசாமி கூறுவதுபோல வீட்டுக்கு வந்த திரைப்படம்தான். அது வீட்டில் வரவேற்பறையில் எப்பொழுதும் இருப்பது. எனவே தமிழ்ப் பொது உளவியலின் மீது தமிழ்ச் சினிமாவின் செல்வாக்குப் பெரியது.

தென்னிந்திய வணிக சினிமாவானது மேலோட்டமானது; தமிழ்ப் பொதுப் புத்தியைச் சுரண்டுவது அல்லது அவமதிப்பது; பெண்ணுடலைப் போகப்பொருளாகப் பார்ப்பது. தமிழில் ஜனரஞ்சகமானவற்றுள் பெரும்பாலானவை மேலோட்டமானவை; ஆழமற்றவை; அறிவுக்கு விரோதமானவை. இந்த அடிப்படையில் பார்த்தால் அறிவைக் கட்டியெழுப்பும் ஓர் உயர்கல்வி நிறுவனத்துக்கு ஜனரஞ்சகமான விளம்பரஉத்தி ஒன்றைத் தெரிந்தெடுத்த விடயத்தில் அந்த முதலீட்டாளர் தவறிழைத்து விட்டார்.

நிகழ்வில் கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த அவர் மேடையில் பேசுகிறார். தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் புலம்பெயர்ந்து போன நாட்டில் இருந்து வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் கூட்டம் அவருக்கு அடங்கவில்லை. அவருடைய மனைவி ரம்பா பேசுகிறார். கூட்டம் அடங்கவில்லை. போலீஸ் அதிகாரி பேசுகிறார் கூட்டம் அடங்கவில்லை. அப்படி ஒரு கூட்டத்தை எதிர்பார்த்து அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததன் விளைவு அது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி அதிகாரத்துக்குள்ள வரையறைகளை உணர்த்திய ஒரு நிகழ்வும் அது.

424779313_810912224385950_21170100510080
426934938_1424740895141467_1094763175333

ஆனால் அந்தக் குழப்பம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளுக்கு விரோதமானது அல்ல. முதலீட்டை விளம்பரப்படுத்த எடுத்துக்கொண்ட வியாபார உத்தியின் விளைவு அது. மேலும்,ஹரிஹரனின் இசையை பார்வையாளர்கள் அவமதித்ததாகவும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு தமிழ் முதலீட்டாளர் தமிழ் பொதுப்புத்தியை கையாள்வதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு என்பதனை உணர்த்திய ஒரு குழப்பம் அது. தாயகத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களும் தாயகத்தில் உள்ள அரசியல் சமூகமும் இணைந்து ஒன்றிணைந்த ஒரு வேலைத் திட்டத்துக்குப் போகவேண்டியிருப்பதை உணர்த்திய ஒரு நிகழ்வு அது.

தாயகத்துக்கு முதலீடுகள் அவசியம். தாயகத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லை; அல்லது மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை இல்லை; அல்லது முன்னேறுவது கடினம் என்று கருதும் ஒரு தொகுதி மக்கள் தாயகத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும்  ஒரு காலகட்டம் இது. “இந்த மண் எங்களின் சொந்த மண்”என்று பாடிய ஒரு மக்கள் கூட்டம், அந்த மண்ணை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே தாயகத்தைத் தொழிற் கவர்ச்சி மிக்கதாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகள் அவசியம். ஆனால் அந்த முதலீடுகளை எந்த நோக்கு நிலையில் இருந்து முன்னெடுப்பது என்பதுதான் இங்குள்ள சவால்.

“நாங்கள் தானம் செய்கின்றோம் அல்லது தொண்டு செய்கிறோம்”என்ற நிதி அதிகார மனோநிலையில் இருந்து அல்ல, மாறாக, தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது; அதற்கு வேண்டிய துறைசார் நிறுவனங்களைக் கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் தாயகத்தில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். அதாவது தேச நிர்மானத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் முதலீட்டாளர்கள் தாயகத்தை நோக்கி வரவேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளை எப்படி தேச நிர்மானத்தின் பங்காளிகளாக மாற்றுவது என்று தாயகத்தில் உள்ள அரசியல் சமூகம் சிந்திக்க வேண்டும்.

முதலாளிகள், அவர்கள் தமிழர்களோ, சிங்களவர்களோ,வெள்ளைக்காரர்களோ யாராக இருந்தாலும், முதலாளிகள்தான். அவர்களிடம் லாப நோக்கம் இருக்கும். முதலாளிகள் அப்படித்தான் சிந்திப்பார்கள். ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளை கொழும்புமைய நோக்கு நிலையில் இருந்துதான் அணுகுவார். அவர் அப்படித்தான் சிந்திப்பார். ஆனால்,முதலீடுகளை தேச நிர்மாணத்தின் ஒரு பகுதியாகத் திட்டமிட வேண்டியது தாயகத்தில் உள்ள அரசியல் சமூகத்தின் பொறுப்பு, கொழும்பின் நோக்கு நிலையில் இருந்தல்ல; அல்லது தனிய லாப நோக்கு நிலையில் இருந்தல்ல;தேசத்தைக் கடியெப்புவது என்ற நோக்கு நிலையிலிருந்து முதலீடு செய்யுமாறு,தமிழ் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும். அவர்களைத் தேச  நிர்மாணத்தின் பங்காளிகளாக்க வேண்டும். பாரதி பாடியது போல “ஆலைகள் செய்வோம்;கல்விச் சாலைகள் செய்வோம்”

https://www.nillanthan.com/6549/

 

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!

1 month 1 week ago

இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு எமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார் என  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதற்தடவையாக வடக்குக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர் தனியார் விடுதியில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், புத்திஜீவிகளையும் இராப்போசன விருந்துபசாரத்துடன் சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை

இந்தச் சந்திப்பின்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில், அரசியல் மற்றும் சிவில் சமூகத்தினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

தமிழ் மக்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, இந்திய இலங்கை ஒப்பந்தமானது, தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீகத்தையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாகும். அந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சார்பில் இந்தியாவே கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது வரையில் அந்த ஒப்பந்தத்தினை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.

13ஆவது திருத்தச்சட்டம்

அதுமட்டுமன்றி, குறித்த ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு காலத்தை இழுத்தடித்து வருகின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

இதேநேரம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படாது தற்போது அவை இயங்காத நிலைமைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆகவே இந்தியா இந்த விடயங்களில் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பெருவாரியாக கைகொடுத்து வருகின்ற நிலையில் அவற்றைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

நரேந்திரமோடி வலியுறுத்தல்

இதற்குப் பதிலளித்த, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,

தமிழ் மக்களின் சுதந்திரம், சமத்துவம், சகவாழ்வு சம்பந்தமாக நாம் ஆழமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது பிரதமர் நரேந்திரமோடி, நேரடியாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் தலைவர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

அத்துடன், 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம், அரசாங்கத்தின் அனைத்துச் சந்திப்புக்களிலும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எனினும் நாம் தொடர்ச்சியாக அந்த விடயத்தில் கவனம் செலுத்துவோம்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு

இதனையடுத்து, அவர், போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் எழுச்சிக்கு தமது அர்ப்பணிப்பான பங்களிப்பு தொடரும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு! | Pm Modi Urged To Formalize The India Sl Agreement

விசேடமாக, வடக்கு, கிழக்குக்கும் இந்தியாவுக்கும் நீண்டகாலமான பிணைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தப் பிணைப்புக்களின் அடிப்படையில், இந்தியா குறித்த பகுதியின் மீள் எழுச்சியில் பாரிய கவனம் செலுத்துவதோடு, தொடர்ச்சியான பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலாநதன், சி.சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி.சர்வவேஸ்வரன், யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் த.மங்களேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

https://ibctamil.com/article/pm-modi-urged-to-formalize-the-india-sl-agreement-1708223045

 தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும்  -பா.உதயன்   

1 month 1 week ago

தமன்னாவும் எங்கள் தம்பிமாரும் பொருளாதார அபிவிருத்தியும் 
-பா.உதயன்  

ஒரு சமூகத்தில் எல்லா விதமான மக்களும் இருப்பார்கள். எது பிழை எது சரி என்று அறிந்து கொள்வதில் தான் சமூகங்களிடையே குழப்பங்களும் பிரச்சினைகளும் உருவாகுகின்றன. கலாச்சாரம் எல்லாம் இப்போ மெல்ல மெல்ல காணாமல் யாழ்ப்பாணத்தில் இருக்க கல்வி தாறன் என்று சொல்லி தமன்னாவை கூட்டி வந்து காட்டினா தம்பிமார் சும்மாவா இருப்பாங்கள் மானாட மயிலாட இவங்கள் சேர்ந்தாடி கூத்தாடாமலா விடுவார்களா. பொருளாதார அபிவிருத்தி என்று வந்தால் தனியவே  உங்கள் பொக்கற்றை  மட்டும் நிரப்புவது இல்லை. இந்த மக்களுக்கும் இதன் பலன் போய் சேர வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் மக்களை குழப்பக் கூடாது. ஒரு தொழில் அதிபருக்கு சரியான திட்டமிடல் Leadership and planning என்பது தெரிந்து தான் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆலோசனைகளை அந்த மக்களிடமோ சிவில் அமைப்புகளிடனோ கூடி கதைத்திருக்க வேண்டும். A vision without a strategy remains an illusion. சரியான திட்டமிடலும் மூலோபாயத் திட்டமும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான பாதையாகும்.

வன்னியிலும் மலையகத்திலும் மனிதர் படும் துன்பம் கண்டும் ஒருவேளை உணவுக்காய் பல சனம் படும் பாடு கண்டும் பள்ளி சென்று படிக்க கூட வழியில்லாமல் பலர் இருக்க யுத்த வடுக்களும் துன்பமும் துயரமும் இன்னும் எம் இனத்தை விட்டு அகலாத போதும் இத்தனை லட்ஷம் பணத்தை இப்படியா தமிழர் கொட்டுவது. நாங்கள் அறிவு சிந்தனை நாகரீகத்தோடு வாழ்ந்த மக்கள் ஆதலால் நாம் இன்று தொலைந்து போன எம் அமைதி வாழ்வையும் சுதந்திரத்தையும் தான் முதலில் தேட வேண்டும். பொருளாதார அவிவிருத்தி மட்டுமே போதும் அரசில் தீர்வும் தேவை இல்லை என்பது தான் இலங்கை அரசின் நிலைப்பாடு. நிரந்தர ஒரு சமாதான தீர்வு இல்லாத எமக்கான பாதுகாப்பு இல்லாத திட்டமிடப்படாத பொருளாதார அபிவிருத்திகள் இப்படியான குழப்பங்கள் பிரச்சினைகளில் தான் முடியும். 

எது எப்படி இருப்பினும் 2009 க்கு பின் ஈழத் தமிழர் மத்தியிலே பல மாற்றங்கள் நடந்திருப்பது அவதானிக்க முடிகிறது. ஒன்றாக கூடி ஒரே தலைமையின் கீழ் இணைந்திருந்த மக்கள் இன்று அந்தத் தலைமை எதுவும் இல்லாமல் சிதறிப் போய் இருக்கிறார்கள். கல்வி கலை ஒழுக்கம் என்று அமைதியாக வாழ்ந்து வந்த மக்கள் இன்று பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள் அதேபோலவே திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கலாச்சார சீரழிவுகளும் போதைப் பொருட்களின் உபயோகமும் என இளைஞர்கள் மத்தியிலே கூடி அங்கு வன்முறைகளாக குழு மோதல்களாக இருந்து வருவதைப் பார்க்கிறீர்கள். ஒரு காலம் கல்வியிலே முன்னேறி இருந்த யாழ்ப்பாணம் இன்று இந்த கலாச்சார சீரழிவுகளினால் மெல்ல சிதைந்து வருவது உண்மைதான். மேய்ப்பவன் இல்லா மந்தைகள் போல சரியான தலைமைகள் இல்லாமல் நாம் எங்கு போவதென்று தெரியாமல் நிற்கிறோம்.

இருந்த போதிலும் இந்த இளையர்களை குறை கூறி என்ன வருவது. இவர்களை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை சரியான வழிகாட்டல் இன்றி இந்த இளைஞர்கள் பிழையான பாதைகளை தெரிவு செய்கின்றனர். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலவே நல்லவை கெட்டவை என்ற பக்கங்கள் இருக்கும். குழப்பங்களும் பிரச்சனைகளும் எல்லா உலக சமூகத்திலும் தான் இருக்கின்றன தனியவே தமிழர் சமூகத்தில் மட்டும் இல்லை. நாகரீகமான சமுதாயமென்று சொல்லிக் கொள்ளும் ஐரோப்பிய சமுதாயத்தில் அரசியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இங்கும் எத்தனையோ குழப்பங்களை கண்டிருக்கிறோம். ஒரு உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெறும் பொழுது அங்கு கூடி பல குழப்பங்களை விளைவித்து அடிதடியில் முடிவடைவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். அரசியல் பொருளாதார பிரச்சினைகள் என்று இருக்கும் தேசங்களில் இது இன்னும் பிரச்சினையானதாகவே இருக்கும். நாமும் நம் மூதாதையினர் விட்டுச்சென்ற நாகரிகமான பாதையில் சென்று அறமும் தர்மமும் ஒழுக்கமும் தொலையாமல் எங்கள் ஒற்றுமையோடு கூடிய தேசிய உணர்வும் அடையாளமும் தொலையாமல் இருப்போம்.

பா.உதயன்✍️
 

சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

1 month 1 week ago
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!
சந்திக்கு வந்துள்ள தமிழரசுக்கட்சி!

— கருணாகரன் —

நீண்டகால இழுபறி, தாமதங்களுக்குப் பிறகு, தமிழரசுக் கட்சியின் தலைவராக (21.01.2024) சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டு, அவர் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் அமர்க்களமான முறையில் அதைக் கொண்டாடினாலும் அந்தக் கட்சிக்குள் கொந்தளிப்புகள் அடங்கவில்லை. முக்கியமாக, தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவுக்குப் பிறகு சம்பிராயபூர்வமாக நடக்க வேண்டிய பதவியேற்பு மற்றும் தேசியமாநாடு போன்றவை நடத்தப்படாமலே நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால், கட்சிக்கு வெளியே தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் என்ற அடிப்படையில் கனேடிய, பிரித்தானிய, இந்தியத் தூதர்களைச் சந்தித்திருக்கிறார் சிறிதரன். அவர்களும் புதிய தலைவருக்கான வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதைப்போல தமிழக முதல்வருக்கும் புதிய தலைவர் என்ற அடிப்படையில் சிறிதரன், ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைதியாக இருந்து விடுதலையாகி சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உதவும்படி கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இப்படி கட்சிக்கு வெளியே தலைவராகச் செயற்படும் சிறிதரனால், கட்சிக்குள்ளே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் (யாப்பின் பிரகாரமும் நடைமுறையிலும்) கொண்டுவர முடியவில்லை. 

இதற்குப் பிரதான காரணம், செயலாளர் குறித்த பிரச்சினையே. இந்தப் பிரச்சினையை (பிணக்கினை) கையாள்வதில் சிறிதரனுக்குள்ள தடுமாற்றமேயாகும். இதுவே செயலாளர் பிரச்சினை மேலும் நீடித்துச் செல்லக் காரணமாகியுள்ளது. 

தெரிவின் அடிப்படையில் செயலாளராகக் குகதாசனை ஏற்றுத் தன்னுடைய தலைமையில் தேசிய மாநாட்டைக் கூட்ட முற்பட்டிருந்தால் இந்தளவு சிக்கலுக்குள் சிறிதரன் சிக்கியிருக்க மாட்டார். தமிழரசுக் கட்சியும் சீரழிவு நிலைக்குள்ளாகியிருக்காது.

இதனால்தான் கட்சியின் தேசிய மாநாடு நடத்தப்படாமலும் பதவியேற்பு நிகழ்வு நடைபெறாமலும் தள்ளிப்போகின்றன. இவற்றைத் தீர்மானிப்பதில் இன்னும் பழைய தலைவரான மாவை சேனாதிராஜாவின் கரங்களே வலுவானதாக உள்ளன. அதாவது இப்படி இவை தள்ளிப் போவதால் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்னும் மாவை சேனாதிராஜாதான் உள்ளார் என்ற ஒரு தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது. அவ்வாறே சத்தியலிங்கமே இன்னும் பதில் செயலாளர் என்றமாதிரியும் தோன்றுகிறது. புதிய செயலாளர் விவகாரம் பற்றிய விடயத்தை சத்தியலிங்கத்தின் வீட்டில் வைத்துப் பேசியது இதற்கொரு உதாரணம். 

சட்டப்படி (யாப்பின்படி) பொதுச்சபையின் வாக்கெடுப்பில் திருகோணமலையைச் சேர்ந்த திரு. குகதாசன் (27.01.2024) தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் கட்சிக்குள் ஒருபிரிவினர் தொடர்ந்தும் எதிர்த்தும் மறுத்தும் வருகின்றனர். செயலாளர் பதவியைக் குறிவைத்திருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஸ்ரீநேசனைச் சமாளிப்பதற்கு சிறிதரன் தொடர்ந்தும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக வவுனியாவில் கடந்த வாரம் இருதரப்புக்கும் இடையில் இணக்கப்பாட்டை எட்டும் வகையிலான சந்திப்பொன்று நடந்தது. அதில் முதலாண்டு குகதாசனும் அடுத்த ஆண்டு ஸ்ரீநேசனும் பதவி வகிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. 

 அதற்குப் பின்பும் தமிழரசுக் கட்சிக்கான செயலாளர் யார் என்பது இன்னும் மங்கலான – குழப்பமான நிலையிலேயே உள்ளது. இந்தப் பத்தி எழுதப்படும் 15.02.2024 மாலைவரையில் இந்த நிலைமையே நீடிக்கிறது. மட்டுமல்ல, இப்போது தேசிய மாநாட்டை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதி மன்றத்தில் தடையுத்தரவு கோரி வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை குகதாசனை ஏற்றுக் கொள்ள முடியாது. பதிலாக ஸ்ரீநேசனையே செயலாளராக அமர்த்துங்கள் என்று சிறிதரனுக்கு ஸ்ரீநேசனின் ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக யாப்பை முன்னிறுத்திச் சிறிதரனால் பதிலளித்திருக்க முடியும். அதுதான் சரியானதும் கூட. அப்படிச் செய்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்காது.

இதை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. எம். ஏ. சுமந்திரன் தெளிவாகக் கூறியிருக்கிறார். 

யாப்பின்படியும் பொதுச்சபை உடன்பாட்டுடனும் பகிரங்க வெளியில் நடந்த விடயங்களை மறுத்துச் செயற்படுவதும் யாப்பை மீற முயற்சிப்பதும் பாரதூரமான விடயங்களை உருவாக்கும் என்று சுமந்திரன் எச்சரித்திருக்கிறார். 

ஆனாலும் சிறிதரனோ இதற்குத் தீர்வு காண முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். மாவை சேனாதிராஜா, சம்மந்தன் என மூத்த தலைவர்களை முன்னிறுத்தி இந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம் என்று முயற்சிக்கிறார் போலுள்ளது. இதனால் கட்சிக்குள் குழப்பங்கள் தொடர்கின்றன. சிறிதரனின் ஆதரவாளர்களே இப்பொழுது சலித்துப் போகின்ற அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. 

இது சிறிதரனின் ஆளுமைப் பிரச்சினையாகும். 

இதுவரையிலும் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், எந்தப் பொறுப்பும் இல்லாமல் அதிரடிப் பேச்சை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தவர் சிறிதரன். 

இப்பொழுதுதான் அவருக்குப் பொறுப்புக் கிடைத்துள்ளது. அதுவும் தலைமைப்பொறுப்பு. அதை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிதரன் தன்னைத் தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். 

சிறிதரன் தலைமைப் பதவிக்குத் தெரிவாகும்போதே பிரச்சினை உருவாகி விட்டது. வழமைக்கு மாறாக தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவு, இந்தத் தடவை போட்டியின் மத்தியில் நடைபெற்றது. மட்டுமல்ல, தொடர்ந்து செயலாளர் தெரிவும் போட்டியில்தான் நிகழ்ந்தது. அப்படி நிகழ்ந்த பிறகும் அது தீராப் பிரச்சினையாகத் தொடருகிறது என்றால் சிக்கலின் மத்தியில்தான் சிறிதரனின் தலைமைப் பொறுப்பு உள்ளது. இதற்கு சிறிதரன் கடுமையாக உழைக்க வேண்டும். மிக நிதானமாகச் செயற்பட வேண்டும். தன்னுடைய அணியை மட்டுமல்ல, எதிரணியினரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதற்கான உபாயங்களை வகுத்துக் கொள்வது அவசியம். அவை நீதியான, நேர்மையான முறையில் அமைய வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் பேணப்படுவது முக்கியமானது.

ஆனால், சிறிதரனின் குணவியல்பும் அணுகுமுறையும் (Character and attitude) எப்போதும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஏற்றதல்ல. அவர் எப்போதும் எதையும் தடாலடியாகப் பேசுகின்றவர். அப்படியே செயற்படுகின்றவர். முன் யோசனைகளின்றி வார்த்தைகளை விடுகின்றவர். பின்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அப்படித் தான் சொல்லவே இல்லை என்று மறுப்பவர். பொய்ச் சத்தியம் செய்கின்றாரே என்று சிலரைச் சொல்வார்களே, அப்படியான ஒருவராகவே சிறிதரன் இருந்திருக்கிறார். 

இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து, படித்து, பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியபோதும் அவருடன் கூடப்படித்த, இணைந்து பணியாற்றியவர்களில் பாதிக்கு மேற்பட்டோரைக் கையாள முடியாமல் எதிர்நிலைக்குத் தள்ளியிருக்கிறார். ஒட்டுமொத்தமான கிளிநொச்சிச் சமூகத்தை இரண்டாகப் பிளவுறச் செய்தே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார். அரசியலுக்கு அப்பால் இணைந்து செயற்பட முடியாத ஒரு நிலையை கிளிநொச்சியில் சிறிதரன் உருவாக்கியிருப்பது பகிரங்கமான உண்மை. விவசாய அமைப்புகள், கலை, இலக்கியத் தரப்புகள், கூட்டுறவாளர்கள், கல்விச் சமூகத்தினர் என அனைத்திலும் இந்தப் பிளவைக் காணலாம். 

கிளிநொச்சியில் உள்ள அளவுக்கு வடக்குக் கிழக்கில் உள்ள பிற மாவட்டங்களில் இந்த மாதிரிப் பிளவுகளும் மோதல்களும் இல்லை. பலரும் இந்த நிலையைக் குறித்துக் கவலை கொண்டுள்ளனர்.  

தேர்தல் மேடைகள் தொடக்கம் இலக்கியக் கூட்டங்கள் உட்பட பொது இடங்கள் வரையிலும் பிறரை அவமதித்தும் தூற்றியும் வந்திருக்கிறார் சிறிதரன். அவரை அடியொற்றி அவருடைய அடுத்த நிலையில் உள்ளவர்களும் இதைத் தொடருகின்றனர். இந்தளவுக்கு (இப்படியான ஒரு அரசியலை) வேறு எந்தத் தமிழ் அரசியற் தரப்பினரும் இப்போது செயற்படுவதில்லை. துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் வெளியைப் பிளவுறுத்தி வைத்திருப்பவர்கள் இருவர். ஒருவர் உதயன் பத்திரிகையின் பணிப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான சரவணபவன். மற்றவர் சிறிதரன். சரவணபவன் கட்சியிலிலும் அரசியலிலும் மிகப் பின்னடைந்து விட்டார். சிறிதரன் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். 

தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது துரோகி – தியாகி என்ற அடிப்படையில் தன்னுடைய கட்சிக்குள்ளேயே ஆட்களை நோக்க முடியாது. அப்படிக் கையாளவும் முடியாது. ஆனால் அவருடைய உளம் தியாகி – துரோகி என்ற வகையில்தான் சிந்திக்கிறது. அவருடைய ஆதரவாளர்களும் அப்படித்தான் சிந்திக்கிறார்கள். இதனால்தான் அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகிய பின், 2009 க்கு முன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் செயற்பட்டதைப்போன்ற ஒரு நிலையை உருவாக்கப் போகிறேன் என்றபோது பலரும் சிரித்தனர். மட்டுமல்ல, இதை மறுதலிப்பதாக, அப்படி ஒற்றுமை வேண்டுமென்றால் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனும் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் மறுத்துரைத்தனர். இதற்குக் காரணம், கடந்த காலத்தில் இந்தத் தரப்பினரை ஒட்டுக்குழுக்கள் (துரோகிகள்) என்ற வகையில் சிறிதரன் நோக்கி வேலை செய்ததாகும். 

ஆகவே அவர் வைத்த எல்லா முட்களும் இப்பொழுது காலில் குத்தத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இருந்ததைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஒற்றுமைப்படுத்துவேன் என்று சொன்னவருக்கு தன்னுடைய கட்சியையே ஒற்றுமைப்படுத்த முடியாத நிலை வந்திருக்கிறது. இப்பொழுது கட்சி நீதிமன்றப் படிக்கட்டில்  நிற்கிறது. இனி அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற த்ரில்லர் படத்தைப்போல அடுத்தடுத்த காட்சிகளுக்காக பலரும் காத்திருக்கின்றனர். அதாவது தமிழரசுக் கட்சி இன்றொரு வேடிக்கைப் பொருளாகி விட்டது. ஆம், புதிய தலைமையின் கீழ் கட்சி இரண்டாகப் பிளவுண்ட நிலையில் சந்திக்கு வந்துள்ளது.

 

 

https://arangamnews.com/?p=10474

சிவில் பரப்பை மூடுவதற்கான திட்டம் துரிதமாகத் தொடர்கிறது

1 month 1 week ago
14 FEB, 2024 | 05:30 PM
image

கலாநிதி ஜெகான் பெரேரா

ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் இவ்வருடம் நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிக்காட்டிவருகிறார். கடந்தவாரம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த வேளையிலும் அதை அவர் வெளிக்காட்டியதாக செய்திகள் கூறின.

மக்களின் ஆணையுடன் அரசாங்கம் ஒன்று பதவிக்கு வருவதை உறுதிசெய்யக்கூடிய தேர்தல்களுக்காக காத்திருப்பவர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்களை நேர்மறையாக நோக்குவார்கள். ஜனாதிபதி பதவி நாட்டின் மிகவும் பலம்பொருந்திய பதவி. சர்வதேச வங்குரோத்து நிலைக்குள் நாடு மூழ்கிக்கிடக்கும் மிகவும் தீர்க்கமான இந்த காலப்பகுதியில்  ஜனாதிபதி நாட்டுக்கு தலைமைதாங்குகின்ற போதிலும், அவருக்கு மக்களின் ஆணை கிடையாது.

அரசாங்கத்தின் அடுத்த இரு மட்டங்களான  மாகாணசபைகளும் உள்ளூராட்சி சபைகளும்  மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாதவையாக இருக்கின்றன.    மக்களின் ஆணையின்றி ஆட்சிசெய்வது தீர்மானங்களை எடுப்பவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதாக இருக்கலாம். ஆனால், அதனால், பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள்  நாளடைவில் கிளர்ச்சியில் இறங்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

துரதிர்ஷ்டவசமாக, தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நோக்கங்கள் குறித்து உட்கிடையான ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. உரிய காலத்தில் தேர்தல்களை நடத்தாமல் பல தசாப்தகாலமாக நீடித்த மூன்று அரசாங்கங்களில்   உறுப்பினராக இருந்தவர் இன்றைய ஜனாதிபதி.

ஆறு வருடங்களுக்கு பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு 1982  ஆம் ஆண்டில் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியபோது ஜனாதிபதி கல்வியமைச்சராக பதவி வகித்தார். 1917 ஆம் ஆண்டில் தேர்தல் சீர்திருத்தங்களை செய்வதில் இறங்கிய அரசாங்கத்தில் அவர் பிரதமராக இருந்தார். அந்த சீர்திருத்த முயற்சி மாகாணசபைகளை தொடர்ந்து முடக்கநிலையில் வைத்திருக்கிறது.

மீண்டும், 2022 ஆம் ஆண்டில் பணம் இல்லை என்று காரணம் கூறி உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைத்த அரசாங்கத்தில் ஜனாதிபதியாக விங்கிரமசிங்க இருக்கிறார்.

சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன "ஒரு நிதியாண்டில் வருவாயையும் செலவினத்தையும் சமநிலைப்படுத்துவது அரசாங்கத்தைப் பொறுத்தவரை, மிகவும் சவாலான பணியாக இருக்கிறது. நீண்டகால பட்ஜெட் பற்றாக்குறைகளை கையாளுவதற்கு பொறிமுறைகளைக் கண்டறியும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. அதற்கு மத்தியிலும்   இந்த வருடம் ஜனாதிபதி தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதற்கு 1,000 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

1,000 கோடி என்பது 2022 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அன்று கேட்ட தொகையாகும். இடைப்பட்ட காலத்தில் பணவீக்கம் உயர்வாக இருந்த நிலையில் அதே தொகை   இரு தேசிய தேர்தல்களையும் நடத்துவதற்கு போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. பொருளாதாரம் மீட்சி பெற்றவரும் நிலையில் 2022 ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாவை தேடுவதை விடவும் இன்று 2,000 கோடி ரூபாவை தேடுவது சுலபமானதாக இருக்கவேண்டும்.

சுதந்திரங்களைக் கட்டுப்படுத்துதல்

தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடைபெறும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்த பொருளாதாரப் பயன்களை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க ஆனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு பல தசாப்தங்களாக இருபது இலட்சம் விவசாயக் குடும்பங்கள் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவந்த நிலங்களை அவர்களுக்கு சொந்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

பெருந்தோட்டத் துறையில் தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் பல தசாப்தங்களாக கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு ( இதுகாலவரையில் இவர்கள் நிலமற்றவர்களாக இருந்துவருகிறார்கள் )  வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கும் வீட்டுத் தோட்டங்களைச் செய்வதற்கும்  சொந்தமாக நிலங்கள் வழங்கப்படும்.

மக்களுக்கு சொந்தமாக நிலங்கள் வழங்கப்படுவதால் அதில் அவர்கள் முதலீடுகளைச் செய்யக்கூடியதாக இருக்கும் அல்லது பெரியளவில் விவசாயத் தொழில்துறையை முன்னெடுப்பதில் நாட்டம் கொண்டிருக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கு நிலங்களை அவர்கள் விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும். ஆனால், தற்போதைய வறுமைக்கு மத்தியில் அந்த நிலங்களை அவர்கள் மலிவான விலைக்கு விற்றுவிடக்கூடாது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது நிலங்களை விற்பனை செய்வதற்கு கட்டுபாடுகளை விதிக்கவேண்டிய தேவை ஏற்படலாம்.

பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது என்று பெரும்பாக பொருளாதாரத் தரவுகள் காண்பிக்கும் நிலையில்,  வரிகளைக் குறைப்பதற்கான  சாத்தியம் குறித்தும் ஜனாதிபதி பேசிவருகிறார். சனத்தொகையில் வறிய மக்களுக்கு இந்த வரிகள் தாங்கமுடியாத சுமையாக இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரங்களில்  மேம்பாட்டை ஏற்படுத்துவது  தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கக்கூடிய நிச்சயமான வழியாகும்.

கடந்த வாரம்   பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க ( வரைபடத்தின் பிரகாரம் ) V வடிவிலான பொருளாதார மீட்சி பற்றி குறிப்பிட்டார். வறுமை அதிகரிப்பு, மந்தபோசாக்கு, பிள்ளைகள் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிடுதல் பற்றி செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வருகின்ற எதிர்மறையான தகவல்களை பெற இது உதவும்.

"முன்னென்றும் இல்லாத வேகத்தில் கீழ் நோக்கிச் சென்ற பொருளாதாரம் ரொக்கட் வேகத்தில் மீட்சிபெற்றுவருகிறது.V வடிவிலான இந்த மீட்சி நம்பிக்கையைத் தருகிறது" என்று ஜனாதிபதி தனது உரையில் கூறினார்.

மக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு புறம்பாக அரசாங்கம் மாற்றுக் கருத்துக்களை குறிப்பாக எதிரணிக் கட்சிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதன் அல்லது ஒடுக்குவதன் மூலமாக பொது விவாதத்தில் தனது கருத்துக்களை பலப்படுத்தும் நடவடிக்கைகளிலும் நாட்டம் காட்டுகிறது. எதிர்க்கருத்துக்களை சட்டவிரோதமாக்குவதற்கும் குற்றமாக்குவதற்கும் புதிய சட்டங்களை அரசாங்கம்  கொண்டுவருகிறது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்  விமர்சனக் குரல்களை மௌனமாக்குவதன் மூலமாக பொது விவாதத்தை அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் மாற்றுவதற்கு அதன் உறுப்பினர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் இணையவெளி பாதுகாப்பு சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டம் சர்ச்சைக்குரிய சூழ்நிலைக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இரு கொடூரமான சட்டமூலங்களையும் அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் பிரதான ஊடகங்களை அச்சுறுத்தும் வகையிலான ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமுலமுமே அவையாகும்.நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த அதே அரசியல் தலைவர்கள் பொதுவெளியில்  விமர்சனங்களை முன்வைப்பதும், மாற்று யோசனைகளை கூறுகின்றதுமான குரல்களை நசுக்க உறுதி பூண்டிருக்கிறார்கள்.

ஏற்றுக்கொள்ளமுடியாத  சட்டம்

1980 ஆண்டின் தன்னார்வ சமூக சேவைகள் அமைப்புக்கள் சட்டத்தை சிவில் சமூக அமைப்புக்கள் அவை  செய்கின்ற பணிகளுக்கு சட்டரீதியான அந்தஸ்தைப் பெறுவதற்கு  பயன்படுத்திவருகின்றன. அந்த சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கு  அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை சட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவரவிருக்கிறது.  அதன் வரைவு இப்போது வெளிவந்து இருக்கிறது. அது சிவில் பரப்புக்கு (Civil Space ) பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்துவரும் பொதுச்சட்ட பாரம்பரியத்தின் பிரகாரம் அமைப்புக்கள் தங்களைப் பதிவுசெய்வதற்கு பலவகையான தெரிவுகள் இருந்தன. சட்ட அந்தஸ்தைப் பெறவேண்டுமானால் அமைப்புக்கள் கம்பனிச் சட்டத்தின் கீழும் தங்களைப் பதிவுசெய்துகொள்ளமுடியும் அல்லது உள்ளூர் மட்டத்தில் அரசாங்கத்தின் மாவட்ட செயலகங்களில் அல்லது பிரதேச செயலகங்களில் பதிவுசெய்து கொள்ளலாம்.

தற்போது கூட அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களுக்கு வரும் நிதி மத்திய வங்கியின் உகந்த கவனிப்புடன் கூடிய வங்கிகளின் ஊடாகவே வருகிறது. வழங்குநர்களின்  கணக்காய்வுக்கும் அந்த நிதி உட்படுத்தப்படுகிறது. தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் பதவுசெய்துகொள்ளாத அமைப்புக்கள் ஏனைய அரச நிறுவனங்களினால் மேற்பார்வை செய்யப்படுகின்றன.

உத்தேச புதிய சட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. சிவில் அமைப்புக்களை (அவை பெரும்பாக நிதி அமைப்புக்களாக இருந்தாலென்ன நம்பிக்கை நிதியங்களாக இருப்பதாலென்ன அல்லது பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டவையாக இருந்தாலென்ன) ஒரே இடத்தில் பதிவுசெய்ய அது நிர்ப்பந்திக்கிறது.

புதிய சட்டத்தின் பிரகாரம் சிவில் அமைப்புக்கள் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகத்தில் தங்களைப் பதிவுசெய்யவேண்டும். இந்த செயலகம் தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பதிவு மற்றும் மேற்பார்வைச் செயன்முறை ஊடாக சிவில் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சித்து வந்திருக்கிறது.

சந்தேகத்துக்குரிய சூழ்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பொலிஸ் முற்றுகைகளுக்கும் கைதுகளுக்கும் வழிவகுத்திருக்கும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை காரணமாக தற்போது தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பெரும் கவனத்துக்குள்ளாகியிருக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழேயே பொலிஸ் இருக்கிறது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செயலகம் அமைந்திருக்கும் இடம் சிவில் அமைப்புக்களை சட்டம் ஒழுங்கு கட்டமைப்புக்குள் வைத்து அரசாங்கம் நோக்குகிறது என்ற  எதிர்மறையான செய்தியையே கொடுக்கிறது. கொடூரமான புதிய சடடம் சிவில் அமைப்புக்கள் குற்றவியல் வழக்கு தொடுப்புக்களுக்கும் தண்டனைக்கும் உள்ளாகக்கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கும்." அடிப்படை கலாசார விழுமியங்களுக்கு " எதிராகச் செயற்படுவதாகக் கூறி சிவில் அமைப்புக்களை இடைநிறுத்தவும் மூடிவிடவும் முடியும்.

இந்த கட்டுபாட்டின் பிரகாரம் மதசார்பற்ற அரசுக்கு கோரிக்கை விடுவதையோ, தன்பாலினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதையோ அல்லது கருக்கலைப்புக்கான உரிமைக்காக வாதிடுவதையோ அடிப்படைக் கலாசார விழுமியங்களுக்கு எதிரான செயல்கள் என கருதமுடியும். தங்களை எதிர்ப்பவர்களுக்கு அல்லது தங்களது வழிக்கு வராதவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு அரசாங்கங்கள் சட்டங்களைப் பயன்படுத்திவந்திருக்கின்ற பாணியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது உத்தேச சட்டம் மிகவும் ஆபத்தானதாகும்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவி வகித்து முன்னைய அரசாங்கம் இதே போன்ற சட்டம் ஒன்றை 2018 ஆம் ஆண்டில்  கொண்டுவந்தது. அந்த நேரத்தில் தேசிய அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுனங்கள் செயலகம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் கீழ் இருந்தது. அமைச்சுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அலட்சியம் செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட சிவில் சமூகத் தலைவர்கள் குழுவொன்று அன்றைய பிரதமர் விக்கிரமசிங்கவைச் சந்தித்து தங்களது வேண்டுகோளை முன்வைத்தனர்.

சில நாட்களுக்குள்ளாகவே அந்த சட்டவரைவு வாபஸ்பெறப்பட்டது. சிவில் சமூகத்துக்கான கட்டமைப்பு ஒன்று தொடர்பில் சொந்த யோசனைகளின் அடிப்படையிலான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தன்னைச் சந்தித்த சிவில் சமூகத் தலைவர்களிடமே விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

பரந்தளவில் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளுடன் இரு வருட கலந்தாலோசனைகளுக்கு பிறகு தன்னார்வத் துறையினருக்கான சட்டக் கட்டமைப்புை ஒன்று தொடர்பில் வழிகாட்டல்கள்  வகுக்கப்பட்டன. அவை ஒரு வருடத்துக்கு முன்னர் அரசாங்கத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டன.  ஆனால் அவற்றின் உள்ளடக்கமோ அல்லது உணர்வோ தற்போதைய சட்டவரைவில் இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், 2018 ஆம் ஆண்டில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது சந்தித்துப் பேசக்கூடியதாக இருந்ததைப் போன்று தற்போதும் ஜனாதிபதியாக அவரைச் சந்தித்து அதே விடயத்தை பேசுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அன்று வெளிப்படுத்திய நல்லெண்ண அணுகுமுறையையே அவர் தற்போதும் சமூகத்தினதும் நாட்டினதும் மேம்பாட்டுக்காக கடைப்பிடிக்கவேண்டும்.

https://www.virakesari.lk/article/176379

அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றுவோம் - ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸ்ஸர்

1 month 1 week ago
11 FEB, 2024 | 07:22 PM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி  

க்கிய நூற்றாண்டு முன்னணி  அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் போட்டியிடும். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம் என்று ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர்  பிரசான் டி விஸ்ஸர் தெரிவித்தார். 

பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்  என்றும் அவர் குறிப்பிட்டார்.  

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர் இதனை குறிப்பிட்டார்.   செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது  என்ற அமைப்பின் ஊடாக நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? 

பதில் நான் உயர்தரம் கற்றதன் பின்னர்  புலமை பரிசில் பெற்று அமெரிக்காவில் உயர்கல்வி கற்க சென்றேன்.  அங்கு சர்வதேச தொடர்புகள் தொடர்பாக  கற்றேன்.  அதன் பின்னர்  இலங்கைக்கு திரும்பி இலங்கை  ஐக்கியமடைகிறது என்ற அமைப்பை நிறுவி செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். 

கேள்வி : இந்த அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?  அதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? 

பதில் 2006 ஆம் ஆண்டு இதனை நாங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தோம்.  2008 இல் இதனை இலாப  நோக்கமற்ற நிறுவனமாக பதிவு செய்தோம்.   சகலரும் ஒன்றிணைந்த இலங்கை அடையாளம் என்பதே இந்த அமைப்பின் பிரதான நோக்கமாகும்.  அனைத்து இலங்கையர்களும் பிரதான பிரஜைகள்,  அனைவருக்கும் நீதி,    சமத்துவம்,  மற்றும் செழிப்பான நாடு என்பனவே எமது  பிரதான நோக்கங்களாக இருக்கின்றன.  எமது முன்னைய சந்ததியினருக்கு இதனை செய்ய முடியவில்லை.  நாம் அதனை செய்ய முயற்சிக்கிறோம்.  நீதி கிடைக்கின்ற,  சகலரும் வாழ முடியுமான ஒரு நாட்டை உருவாக்குவது எமது நோக்கமாகும்.  எமது தாத்தா பாட்டியை எம்மால் மாற்ற முடியாது.  ஆனால் எமது பிள்ளைகளை மாற்ற முடியும்.  நாம் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தபோது எனக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் இலங்கையில் இளைஞர் யுவதிகளில்  70 வீதமானோர்க்கு தமது இனம் தமது மதங்களுக்கு அப்பால் நண்பர்கள் இல்லை என்பதாகும்.  நண்பர்கள் இல்லாவிடின்  வெறுப்பு ஏற்படுவது இலகுவாகும்.  பிரச்சினைகள் இலகுவாகவே ஏற்படும்.  புரிந்துணர்வு இருக்காது.  தொடர்பாடலே அனைத்தையும் தீர்மானிக்கிறது.    இலங்கையில் 10,400 பாடசாலைகள் இருக்கின்றன.  அவற்றில் 112 பாடசாலைகள் மட்டுமே இரண்டு மொழிகளையும் மூலமாக கொண்டவையாக இருக்கின்றன.  மறுபுறம் அரசியல்வாதிகள் மக்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தி ஊழல்களை செய்து மக்களை அச்சுறுத்தி தலைவர்கள் வாக்குகளை பெற்றுக்கொள்கின்றனர்.  உங்களுக்கு யாரும் இல்லை,  நாங்கள் மட்டுமே இருக்கின்றோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர்.  

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தபோது ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இருந்தது.    ஆனால் இன்று இனவாதம் மதவாதத்தை ஏற்படுத்தி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடு எங்கு இருக்கின்றது என்பது தெரிகிறது. 

கேள்வி : இலங்கை ஐக்கியமடைகிறது என்ற அமைப்பில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்?  அவர்கள் என்ன செய்கின்றார்கள்? 

பதில் எமது அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.  இலங்கை முழுவதும் 9 மாகாணங்களில்  9 அலுவலகங்கள் இருக்கின்றன.  இதில் முக்கியமாக எதிர்கால தலைவர்கள் மாநாடு என்ற கருப்பொருளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கிறோம்.   இதற்காக ஐந்துநாட்கள் முகாம் நடத்தி நாட்டின் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுகிறோம்.  அதன்பின்னர் பாடசாலைகளுக்கு இடையில் தொடர்பாடல்களை ஏற்படுத்துகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 500 பாடசாலைகளில் இவ்வாறு வேலைத்திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலுவலகத்தில்  தகவல் தொழில்நுட்பம்  தொடர்பாக பாடநெறிகள் காணப்படுகின்றன.  திறமை விருத்தி,  தொழில் முயற்சியாண்மை,  உள்ளிட்ட பல பாடத்திட்டங்கள் அங்கே காணப்படுகின்றன.  இளைஞர்கள்,  யுவதிகள் அங்கு சென்று தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.  இளைஞர்கள் யுவதிகளால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்.  இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்,  இந்த நாட்டுக்காக ஏதாவது  செய்யும் முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் அவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறோம்.  ஆனால் இதற்கு சகலரும் ஒற்றுமைப்பட வேண்டும்.  ஏனையவர்களின் துயரத்தை புரிந்து கொள்வது அவசியம்.  எமக்கு மட்டுமே துயரம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மற்றவர்களின் துயரத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.  எமது இந்த செயற்பாட்டின் பிரதான நோக்கம் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் எதிர்கால தலைவர்களை உருவாக்குதல்,  நீதியை நோக்கி பயணித்தல்,  என்பனவாகும். 

அதாவது கொரோனா வராமல் இருப்பதற்கு தடுப்பூசி  ஏற்றுவதைப் போன்று இனவாதம் வராமல் இருப்பதற்கான தத்துவங்களை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் விதைக்கிறோம்.  நாங்கள் சகல பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.  அதேபோன்று ஐந்தாம் ஆண்டிலிருந்து எட்டாம் ஆண்டு வரையான மாணவர்களுக்காக சிறுவர் நிகழ்ச்சித்திட்டங்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். 

கேள்வி : நீங்கள் சர்வதேச நிறுவனங்களுடனும் தொடர்பு பட்டிருக்கின்றீர்கள். இதனை எவ்வாறு முன்னெடுக்கின்றீர்கள் ? 

பதில் எமது இந்த முயற்சிகளுக்கு சர்வதேச மட்டத்தில் எமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  பொதுநலவாய நாடுகள் அமைப்பில்  உலகில் செயற்படுகின்ற  25 கீழ்மட்ட நிறுவனங்களில் ஒன்றாக நாம் அங்கீகரிக்கப்பட்டோம்.  உலகில் இருக்கின்ற சிறந்த இளைஞர்களை  கொண்டியங்கும் எட்டு நிறுவனங்களில் ஒன்ற ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம்.   இதனைப் பார்த்த பல சர்வதேச நிறுவனங்கள் எமது இந்த திட்டத்தை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன.   இளைஞர்களை ஒருமுகப்படுத்திய,  நீதியை நல்லிணக்கத்தை நிலைநாட்டுகின்ற,   நாட்டை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயற்பாட்டை ஏனைய பல நாடுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.  அதனடிப்படையில் கொங்கோ நாட்டில் இருந்து ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து எமது இந்த செயற்பாடு தொடர்பாக கற்றறிந்து  அங்கு இதனை ஆரம்பித்து செயல்படுத்துகின்றனர்.  நானும் யாழ்ப்பாணம் மாத்தறை மாவட்டங்களில் இளைஞர்களை அழைத்துக் கொண்டு கொங்கோ நாட்டுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை கற்றறிந்தோம்.   கென்யா உகண்டா போன்ற நாடுகளிலும் எமது அமைப்பை போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.  13 நாடுகளில் எமது இந்த செயற்பாடு தற்போது முன்னெடுக்கப்படுகிறது.  

கேள்வி : சரி இந்த பின்னணியில் ஏன் அரசியல் கட்சி ஒன்றை அதாவது நூற்றாண்டு ஐக்கிய முன்னணி என்ற அரசியல் கட்சியை ஏன் நீங்கள் ஆரம்பித்தீர்கள் ?  

பதில் நாம் இந்த எமது இலங்கை ஐக்கியப்படுகிறது என்ற செயற்பாட்டை  முன்னெடுத்து செல்லும்போது   பல அரசியல் கட்சிகள் இனவாதத்தைக் கொண்டு அரசியல் செய்வதை நாம் அவதானித்தோம்.  நாம் இனவாதத்தை போக்கி நல்லிணக்கத்தை மேற்கொள்ள எவ்வளவு முயற்சித்தாலும் அரசியல் கட்சிகள் அதற்கு மாறாக செயல்படும் போது இதனை மாற்றுவது கடினமானதாக எமக்கு தெரிந்தது.  எனவே நாம் எமது அரசியல் கல்வியகம்  ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்து முதலில் நூற்றாண்டு கல்வியாகத்தை ஆரம்பித்தோம். 

அதாவது இலங்கை சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளாகும் போது 2048  இல் நாம் எவ்வாறான இலக்குகளை அடைய வேண்டும் என்பது தொடர்பாக சிந்தித்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தோம்.  பத்து இலக்குகளை அடைய வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.  அதில் ஆறு கொள்கை திட்டங்களை நாங்கள் இளைஞர்  யுவதிகளுக்கு கற்பிக்கின்றோம்.  அரசியல்,சுகாதாரம்,  கல்வி,  விவசாயம் மற்றும்   நல்லாட்சி மற்றும் சகலரும் இணைந்த முன்னெடுப்பு  ஆகிய விடயங்களை கற்பிக்கின்றோம்.  மூன்று மாதங்கள்  அவர்களுக்கு திறமைகளை நாம் கற்பிப்போம்.   பின்னர் ஏனைய பல்வேறு விடயங்கள் கற்பிக்கப்படும்.  அப்போது அந்த பாடத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட இலங்கை முழுவதும் இருந்து 1000 இளைஞர்கள்  விண்ணப்பித்தனர்.  இதனூடாக இளைஞர்கள் மிகவும்  ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.  ஆனால் அவ்வாறு எமது கல்வியகத்தில் கல்விகற்ற எதிர்கால தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகளில் இடம் கிடைக்கவில்லை.  எனவே தான் நாம் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டியேற்பட்டது.  நாம் அதனை ஆரம்பித்தோம். 

அதனூடாக  எதிர்கால தலைவர்கள் என்ற பாடத்திட்டத்தை கற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேறு எந்த அரசியல் கட்சிகளையும் நாடாமல் எமது கட்சியிலே சேர்ந்து போட்டியிட முடியும். 

கேள்வி : அப்படியானால் அடுத்துவரும்  அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவீர்களா?

பதில் அடுத்து வருகின்ற சகல தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம்.  நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்போம்.  எமது கட்சியில் வேட்பாளர்கள் தமது சொத்துக்களை  பிரகடனம் செய்யவேண்டும். அதன்பின்னரே   நாங்கள் வேட்புமனு கொடுப்போம்.   ஒவ்வொரு வருடமும் பிரகடனம் செய்ய வேண்டும்.  இப்போது பாராளுமன்றத்தில் 225 எம்.பி.க்களில் 15 பேர் அளவிலேயே   சொத்துப்பிரகடனம் செய்துள்ளனர்.  

35 வீதமான வேட்பாளர்கள் 35 வயதுக்கு கீழ் பட்டவர்கள்.   தற்போது பாராளுமன்றத்தில் 35 வயதுக்குட்பட்ட 11 பேர் மட்டுமே இருக்கின்றனர்.  அதில் 10 பேர் அரசியல் ரீதியான குடும்பங்களை பின்னணியாக கொண்டவர்கள்.  இலங்கையில் 1931 ஆம் ஆண்டு  ஐந்து வீத பெண் பிரதிநிதித்துவம்  இருந்தது. 2023 ஆம் ஆண்டிலும் பாராளுமன்றத்தில் ஐந்து வீத  பெண்களே இருக்கின்றனர்.  எனவே எமது கட்சியில் வேட்பாளர்களில் 50 வீதமானோர்  பெண்கள்.

கேள்வி : உங்கள் கட்சியின் கட்டமைப்பு என்ன?

பதில் எமது கட்சிக்கு ஒரு நிறைவேற்று குழு  உள்ளது. அதன் ஊடாக தலைவர் நியமிக்கப்படுவார்.  தற்போது இந்த வருடத்துக்கு  நானே எமது கட்சியின் தலைவராக இருக்கின்றேன்.  அதேபோன்று சிரேஷ்ட பிரஜைகள் எமக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.  சகல மாகாணங்களில் இருந்தும்  நிறைவேற்று குழுவில் உறுப்பினர்கள்  உள்ளனர். 

கேள்வி : உங்கள் கட்சியின்  இலக்கு என்ன? 

பதில் சுதந்திரம் பெற்ற நூறு வருடங்கள் நிறைவடையும்போது இலங்கையின்   அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். நிச்சயமாக எதிர்கால சந்ததியினருடன் இணைந்து அதனை செய்ய முடியும்.  ஊழலற்ற பொருளாதார சுபிட்சமான நாட்டை உருவாக்க வேண்டும்.  மக்கள் வறுமையாக இருப்பதே அரசியல்வாதிகளுக்கு சாதகமாக அமைகிறது.  எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற கல்விமான்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.  

கேள்வி : இலங்கையில் நீங்கள் அடையாளம் காண்கின்ற இளைஞர் யுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன? 

பதில் முக்கியமான சில பிரச்சினைகளை நாங்கள் அடையாளம் கண்டு இருக்கின்றோம். முதலாவதாக எமது கல்வி திட்டத்தை குறிப்பிட வேண்டும். எமது கல்வி திட்டத்தில் மேலே பயணிப்பதற்கு ஏணி இருக்கின்றது. ஆனால் ஏனியை பிடித்து எங்கே செல்வது என்பது இங்கு தெளிவாக இல்லை.  அடுத்ததாக வேலையின்மை காணப்படுகிறது.  தமது திறமைக்கேற்ற தொழிலை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது இலங்கையில் இருக்கின்ற பிரதான பிரச்சினையாகும்.  அதனால் திறமையானவர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.  சிறுபான்மை இளைஞர்களுக்கு  தமது அடையாளம் தொடர்பான ஒரு பிரச்சினை காணப்படுகிறது.  அவர்களுக்கு   நீதி கிடைக்கும் என்று நம்பிக்கையில் இல்லை.  தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.  வடக்கில் உள்ள எனது சகோதர சகோதரிகளின் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.  அவர்களின் காயங்கள் ஆற்றப்பட வேண்டி இருக்கிறது.  அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.  அங்கே ஆற்றுப்படுத்தல் இல்லை. இறந்தவர்களை  நினைவு கூருவதற்கு  உரிமை இருக்க வேண்டும்.

கேள்வி : தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன? 

பதில் இலங்கையில் இருந்த சென்ற 3 மில்லியன் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள்.  அவர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கின்றனர்.  ஆனால் இங்குள்ள நிலைமை அவர்களை தடுக்கிறது.  அந்த மூன்று மில்லியன் மக்கள் தமது நாடுகளின் பொருளாதாரத்துக்காக கிட்டத்தட்ட 200 பில்லியன் டொலர்களை பங்களிப்பு செய்கின்றனர்.  இலங்கையின் பொருளாதாரம் வெறுமனே 80 பில்லியன் டொலர்களாகும்.  இங்கு தொழில்சார் தன்மை வெளிப்படைத்தன்மை ஊழலற்ற தன்மை இருந்தால் நிச்சயமாக அந்த முதலீடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.  தற்போது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இளைஞர்கள் 7 பில்லியன் டொலர்களை அனுப்புகின்றனர்.  அதனை 20 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க எம்மால் முடியும். அடுத்ததாக வர்த்தகங்களை செய்வதற்கான இலகு தன்மை உறுதிப்படுத்தப்படுவது அவசியம்.  அந்தநிலையை உறுதிப்படுத்தினால் இங்கு அதிகளவு வெளிநாட்டவர்கள் வியாபாரம் செய்ய வருவார்கள்.  சகல விடயங்களும் டிஜிட்டல் மையமாக வேண்டும்.  அனைத்து முதலீடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் டிஜிட்டல் மையத்தில் இடம் பெற வேண்டும்.  இவர்களுக்கு எரிபொருள் க்யூ ஆர் கோட்டா முறையை    செய்வதற்கே மூன்று மாதங்கள்  சென்றன.  இந்தியா இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து சீனா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தக சந்தர்ப்பங்களை நாங்கள் பெற வேண்டும்.   சுற்றுலாத்துறை ஊடாக  வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே உச்சபட்சமாக இலங்கை பெற்றிருக்கின்றது.    நான்கு வருடங்களில் அதனை 15 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முடியும்.  சிறுவர்களை இலக்கு வைத்த சுற்றுலாத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.  இலங்கையை சர்வதேச மாநாட்டு தலமாக உருவாக்க முடியும்.  அதுமட்டுமின்றி சர்வதேச மட்டத்தில் இலங்கையை நேசிக்கின்ற நாடுகள் இருக்கின்றன.   எம்மால் அந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இருக்கிறது.

கேள்வி : இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் நீண்ட காலமாக தமக்கான அரசியல் தீர்வை கோரி வருகின்றனர்.  அரசியல் தீர்வு திட்டம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு என்ன?

பதில் பதிமூன்றாவது திருத்த சட்டத்துக்கு அமைவாக மாகாண சபைகளை  பலப்படுத்த வேண்டும்.  13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவது அவசியம்.  வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெற்கு மக்களின் பிரச்சினைகளுடன் பார்க்கையில் வேறுபட்டவை.  அதுபோன்ற மத்திய மாகாண மக்களின் பிரச்சினைகள் வேறுபட்டவை.  எனவே அந்தந்த மாகாண மக்கள் தமது பொருளாதார செயல்பாடுகளை மேற்கொண்டு  செல்வதற்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.  மத்திய அரசாங்கம் தலைமைத்துவம் வழங்க முடியும்.  ஆனால் அதிகாரங்களை பரவலாக்கும் போது அங்கு வெளிப்படை தன்மையும் போட்டித் தன்மையும் உருவாகின்றன.  ஆனால் இங்கு சகலதையும் மத்திய அரசாங்கம் வழங்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  ஒரு மாகாணம்  தனது பொருளாதாரத்தை இயக்குவதற்கான உரிமையை வழங்க வேண்டும்.  பொருளாதாரம்  சட்டம் ஒழுங்கு காணி உரிமை போன்ற விடயங்கள் வழங்கப்படுவது  அவசியமாகும்.    கொழும்பில் இருக்கின்ற மாணவிக்கும் மொனராகலையில் வளர்கின்ற மாணவிக்கும் இடையிலான திறமைகளில் வித்தியாசம் இருக்கும்.  

மேலும்  இங்கு சகலர் மத்தியிலும் அவநம்பிக்கை காணப்படுகிறது.  முதலில் மக்கள் மத்தியில் இந்த நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்.  

கேள்வி : இந்த நாட்டில் ஒரு   அரசியல்  கலாசார மாற்றத்தை செய்ய முடியும் என்று எப்படி நீங்கள் இவ்வளவு திடமாக நம்புகிறீர்கள் 

பதில் உலகில் இதற்கு முன்னர் பல நாடுகள் மாறி இருக்கின்றன.  எம்மைவிட யுத்தம் இருந்த எம்மைவிட வறுமையாக இருந்த நாடுகள் இன்று முன்னேறி இருக்கின்றன.  சிங்கப்பூர் வியட்நாம் இந்தோனேசியா மலேசியா    ருவாண்டா கானா போன்றவற்றை குறிப்பிடலாம்.  நாம் இன்றும் எமது இனம் எமது மதம் தொடர்பாகவே சிந்திக்கின்றோம். அந்த செயற்பாடு மாறவேண்டும்  திருடர்கள் எமது வீட்டை உடைத்து திருடிவிட்டு செல்லலாம்.   அதனை நாம் தடுக்க வேண்டும்.   மாறாக நாம் வீட்டை விட்டு ஓடிவிட முடியாது.  தமிழ் மக்களை பொறுத்தவரையில் அவர்கள்  பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.    அதனால் அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் இருக்கின்றது.   ஆற்றுப்படுத்தல் இல்லை.     1983 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடந்ததை  இன்னும் தமிழ் மக்கள் மறக்காமல் இருக்கலாம்.  நான் அண்மையில் கனடாவுக்கு சென்றபோது அங்கு ஒருவர் 1983 ஆம் ஆண்டு கலவரம் தற்போது நடைபெற்றது போன்று என்னுடன் பேசினார்.    அந்த வேதனையை யாரும் ஆற்றுப்படுத்த இன்னும் முயற்சிக்கவில்லை என்பதே இங்கே குறைபாடாக இருக்கிறது.  குறைந்தபட்சம்  அரசாங்கம் இதுவரை மன்னிப்பு கேட்டிருக்கின்றதா ? 

கேள்வி : உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில்... 

பதில் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.  காணாமல் போனோர்  தொடர்பான அலுவலகம் செயற்படுவது அவசியம்.  உலகத்திற்காக அல்ல,  எமக்காக  அதனை செய்ய வேண்டும்.

https://www.virakesari.lk/article/176128

என்று தணியும் வெளிநாட்டு மோகம்

1 month 2 weeks ago

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை -இனவழிப்புக் காரணமாக உயிர்பிழைக்கும் நோக்குடன் வெளிநாடுகளுக்கு தமிழர்கள் ஓடித் தப்பினர். காலாட்டத்தில் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது ஒரு கட்டாயக் கடமையாகவே மாறி விட்டது. போர்க்காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவுடனேயே இளைஞர்கள் பெற்றோரால் வளர்க்கப்படும் துரதிர்ஷ்டமான சூழலே இங்கு அதிகம் நிலவுகின்றது.

2011 -2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அதிகளவானோர் சட்டவிரோதமான வழியில், படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லலாம் என நம்ப வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் பலர் கடலில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர். வெகு சிலரே அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்த தீவுகளை சென்றடைந்தனர். அவர்களில் மிகச் சிலருக்கே அவுஸ்திரேலியாவுக்கு நுழைவதற்கான அனுமதி கிடைத்தது. பல இலட்சங்களைச் செலவு செய்து ஏமாந்தவர்களே அதிகம். அவுஸ்திரேலிய அரசாங்கம், சட்டவிரோதமாக தனது நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை பரப்புரைப்படுத்தினாலும் எம்மவர்களின் வெளிநாட்டு ஆசை முன்பாக அவை ஏறவில்லை. 2016-2020 வரையிலான காலப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்குச் சென்ற எம்மவர்கள் பலர் அங்கு உயிரிழந்த சோகங்கள் அரங்கேறியிருந்தன. எல் லைப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல நாள் நடைபயணம், ஆபத்தான வகைகளில் கனரக வாகனங்களில் அடைத்துச் செல்லப்படுதல் என ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு முயன்று உயிர் பிரிந்த சோகங்கள் தான் நடந்தன. இப்போது கனடாவுக்குச் செல்லுதல் என்ற அடிப்படையில் பலரும் தங்கள் புலம்பெயர்தலை ஆரம்பித்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாகச் செல்கின்றோம் என்று சொல்லிக் கொண்டாலும், வெளிநாட்டுக் கலாசாரம் எங்கள் மனதில் இன்னமும் ஆழமாக வேரூன்றியிருப்பதுவும் தற்போதைய புலம்பெயர்தலுக்குக் காரணமாக இருக்கின்றது.

இதை வைத்து பணம் உழைக்கும் கூட்டமும் இருந்து கொண்டிருக்கின்றது. எத்தனை தடவைகள் ஏமாந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழப்பதற்குத் தயாராக இருக்கின்றனர். வடக்கிலுள்ள காவல் நிலையங்களில், அண்மைக்காலமாகப் பதிவாகும் முறைப்பாடுகளில் பிரதான இடத்தைப் பிடித்திருக்கும் சம்பவமாக, வெளிநாட்டுக்குச் செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தைச் செலுத்தி ஏமாறுவதே இருக்கின்றது. இது தொடர்பில் காவல்துறையினர் மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தியும் திரும்பத் திரும்ப ஏமாந்து கொண்டேயிருக்கின்றனர். எந்தவொரு நம்பிக்கையும் இல்லாது வெளிநாட்டு மோகத்துக்காக பல இலட்சங்களை இழக்கத் தயாராக இருக்கும் மக்கள் அதை இங்கேயே முதலீடாக்கி வருமானமீட்டத் தயாரில்லை.

தமிழ் அரசியல் தலைமைகளும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை அறிவூட்டுவதில்லை. வெறுமனே அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவது மாத்திரம் அவர்களது பொறுப்பு அல்ல. எந்த மக்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்குகின்றனரோ, அவர்கள் வழி தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் அவர்களது கடமையே.

 

https://newuthayan.com/article/என்று_தணியும்_வெளிநாட்டு_மோகம்

இன்னுமொரு வாய்ப்பந்தல்

1 month 2 weeks ago

அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் (08) நேற்று முன்தினம் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார். மிக நீண்ட அவரது உரையில், தன்னால் இந்தநாட்டின் பொருளாதாரம் நிமிர்ந்திருக்கின்றது என்ற சுய புராணமே அதிகமாகத் தெரிந்தது. தனது இந்த முயற்சிக்கு ஏனைய அரசியல் தரப்புகள் ஆதரவளிக்கத் தான்வேண்டும் என்பது போலவே அந்த உரை அமைந்திருந்தது.

பொருளாதார மேம்பாடு மாத்திரமே இந்த நாடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரே சவால் என்பதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருந்தார். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என்பதும், பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்னமும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக கடன்களை மீளச் செலுத்தத் தொடங்கும் போது நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டதுடன், ஆட்சியாளர்கள் கடன்களை வாங்கி வாங்கியே குவித்து இந்த நாட்டு மக்களையும் அதற்குப் பழக்கப்படுத்தி விட்டனர் என்றெல்லாம் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதார மீட்சிக்காக சில திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு விவசாயத்தை நவீனமயப்படுத்தி ஏற்றுமதி ஊடாக அந்தியச் செலாவணி, வெளிநாட்டு முதலீடுகள், மாகாணங்களுக்கு இடையிலான போட்டி உற்பத்தி என்று சில விடயங்களைப் பட்டியலிட்டிருந்தார். இவையெல்லாவற்றையும் முன்னெடுப்பதற்கு இருக்கும் தடங்கல்களை மேலோட்டமாகவே கொள்கை விளக்கவுரையில் குறிப்பிட்டிருந்தார். அதை ஆழ அகலமாக அலசி ஆராய்வதற்கு அவர் விரும்பவில்லை. அதை வேண்டுமென்றே அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க தவிர்த்திருந்தார்.

இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருக்கின்ற இனப்பிரச்சினை தொடர்பில், அப்படியொன்று இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தொடர்பில் அரச தலைவர் ரணில் மூச்சே விடவில்லை. அதற்குத் தீர்வை எட்டாமல் இந்த நாடு பொருளாதாரத்தில் மீட்சியடைவது என்பது சாத்தியமேயில்லாத விடயம். அரச தலைவர் ரணில் தனது கொள்கை விளக்கவுரையில், மாகாணங்களுக்கான நிகழ்ச்சி நிரலில் மேலும் சில அதிகாரங்கள் வழங்குவதன் பொருளாதார ரீதியில் உறுதிப்பாடுடையவை அவற்றை மாற்ற முடியும் என்று கூறுகிறார்.

ஆனால் இப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வுக்கான யோசனை எதையும் முன்வைக்கவில்லை. கடந்த ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகான காணப்படும் என்று கூறி எதுவுமே நடக்காததால் இம்முறை அது தொடர்பில் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருக்க கூடும் ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணாமல் பொருளாதார மேம்பாடு என்பதை எட்டவே முடியாது என்பதை மிக நீண்ட பழுத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்க உணர்ந்திருந்தும், அதை வெளிக்காட்டாமல் வெறுமனே பூசி மெழுகுவது பொருந்தப்பாடானதாக இல்லை.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டும் என்ற உளரீதியான விருப்பு இருக்குமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை - தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை முன்வைக்க வேண்டும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரவேண்டும் என்பதை திரும்பத் திரும்பச் சொல்லும் இந்த அரசாங்கம், அவர்கள் தங்கள் முதலீட்டுக்கு இந்த நாடு பாதுகாப்பில்லை 'என்பதை உணருவதையும் ஏற்றுக் கொள்ளும் அரசாங்கம், அதற்கான காரணங்களைத் தீர்ப்பதற்கு மாத்திரம் தயங்குகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் மக்களுக்கு எந்தவொரு உரிமையும் வழங்கக்கூடாது என்ற எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கின்றமை தெளிவாகவே தெரிகின்றது. அரச தலைவர் ரணிலும் அதற்கு விதிவிலக்கில்லை என்பதைத் தான் அவரது உரை பறைசாற்றியிருக்கின்றது.

https://newuthayan.com/article/இன்னுமொரு_வாய்ப்பந்தல்

சுமந்திரனின்  சுயபரிசோதனை

1 month 2 weeks ago
சுமந்திரனின்  சுயபரிசோதனை
சுமந்திரனின்  சுயபரிசோதனை 

— வீரகத்தி தனபாலசிங்கம் —

    மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு  முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

  தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில்  தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார்.

  கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் உழைத்த உங்களுக்கு எதிராக கட்சிக்குள் ஏன் இந்தளவு  எதிர்ப்பு  என்று நேர்காணலைக் கண்ட பத்திரிகை ஆசிரியர் சுமந்திரனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு ; 

  ” நீங்கள் கேட்கின்ற விடயம் குறித்து நான் நிறையவே யோசித்தேன். ஒரு கருத்து எனது மனதில் இப்போது பதிகிறது. நான் கட்சிக்கு என்ன செய்தேன், எவ்வாறு செயற்பட்டேன் என்பதைப் பற்றிச் சொன்னால் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், நான் எவ்வளவுதான் செய்தாலும் கூட, எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படாமல் இருக்கும் வரை என்னுடைய அணுகுமுறை எமது மக்களின் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகின்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கவில்லை. 

 ” இது ஏனென்று சொன்னால், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன் சர்வதேச மட்டத்தில்  சந்திப்புக்களையும்  நடத்துகின்ற நான் சில விடயங்களை, சில உணர்ச்சிகளை வெளிப்படுத்தமுடியாது. அதற்கேற்ற வண்ணமாக நான் சில நகர்வுகளைச் செய்யவேண்டும். நானும் தமிழ்த் தேசியத்தைப் பகிரங்கமாகப் பேசுகிறேன். ஆனால், நான் பேச்சுவார்த்தைகளை நடத்தும் தரப்புகளுக்கு ஒரு முகத்தையும் கட்சிக்கும் எமது மக்களுக்கும் வேறு ஒரு  முகத்தையும் காட்டுவதில்லை. அவ்வாறு காட்டவும் முடியாது.

  ” பிரச்சினைத் தீர்வுக்கான ஒரு வழி வந்திருந்தால், மக்களுடைய நிலைப்பாடு வித்தியாசமானதாக இருந்திருக்கும். ஆனால் பிரச்சினை தீராமல் இருக்கும்போது, நம்பிக்கை இல்லாமல் இருக்கும்போது குறைந்தது தங்களது உணர்ச்சிகளையாவது வெளியில் சொல்லவேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம்.  ஆனால், நான் அவ்வாறு சொல்கிறவன் அல்ல என்கிற ஒரு ஆதங்கம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது ஒரு காரணமாக இருக்கலாம்.

  “இந்த நேரத்தில் எங்களுடைய உணர்வை தென்னிலங்கைக்கு வெளிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக எமது மக்கள் உணருகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.

  “திருகோணமலையில் தலைவர் தேர்தல் முடிந்து  கொழும்பு திரும்பியபோது பல கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை. வியப்பாக இருக்கிறதே என்று என்னிடம் கூறினார்கள். எங்களுடைய பிரச்சினை கள் தீர்க்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். தோல்வியடைந்த ஒருவனாகவே என்னை எமது மக்கள் நோக்குகிறார்கள். உங்களுடன் பேசி எந்தப்  பிரயோசனமும் இல்லை. அதுவே உண்மையான நிலைமை. நீங்கள் பிரச்சினையை தீர்க்காமல் இருக்கும் வரை எமது மக்கள்,  பிரச்சினைதான் தீராமல் விட்டாலும் சரி, தங்களுடைய உணர்ச்சிகளையாவது  வெளிப்படுத்துகின்ற ஒருவர் தேவை என்று இந்த  தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

  “நான் அந்த உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்திப் பேசியவனல்ல. அவ்வாறு இனிமேலும் செய்யப்போகிறவனும்  இல்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை. அரசியலுக்காக, கட்சித் தலைமையைப் பெறவேண்டும் என்பதற்காக அவ்வாறு செயற்படப்போகிறவனும்  அல்ல. ஆனால், சிறிதரன் அடைய நினைக்கின்ற அதே இலக்கை அடைவதற்காகவே நானும் இவ்வளவு காலமும் பாடுபட்டிருக்கிறேன். அதை அவரும் இணங்கிக்கொள்வார். அதை  நாங்கள் தொடர்ந்து செய்வோம். 

  “ஆனால், எமது மக்களுக்கு இப்போது முக்கியமாக தேவைப்படுவது தங்களுடைய உணர்வுகளை வெளியுலகத்துக்கு  குறிப்பாக தென்னிலங்கைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே. அதனால் அவர்கள் சிறிதரனை தெரிவு செய்திருக்கிறார்கள். நல்லது. அதற்குப் பின்னால் நான் முழு மூச்சையும் கொடுத்து ஒத்துழைப்பேன்.”

  இறுதியாக கட்சியின்  பொதுச்செயலாளர் உட்பட நிருவாகிகள் தெரிவு குறித்து கிளம்பிய சர்ச்சை தொடர்பாக பேசியபோது பதவி விலகும் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் யாப்பின் பிரகாரம் சகல விடயங்களையும் கையாளமுடியாது என்று கூறியதை நேர்காணலில் ஒரு கட்டத்தில் சுட்டிக்காட்டிய சுமந்திரன் அந்த யாப்பை தானே நீதிமன்றத்தில் காப்பாற்றிக் கொடுத்தாகவும் இப்போது அவர்கள் அதற்கு அப்பால் செயற்பட முனைவதாகவும் குறிப்பிட்டார்.

   தமிழரசு கட்சி சமஷ்டி முறையிலான அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பதன் மூலமாக நாட்டுப் பிரிவினையை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது என்று கூறி களனிப்பகுதியைச் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர்  உயர்நீதிமன்றத்தில் 2014 மார்ச்சில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு 2017 ஆகஸட் 4 வழங்கப்பட்டது. அதில் தமிழரசு  கட்சிக்காக சுமந்திரனே வாதாடினார்.

  அன்றைய பிரதம நீதியரசர் பிரியசத் டெப் தலைமையில் நீதியரசர்கள் உபாலி அபேரத்ன, அனில் குணரத்ன ஆகியோரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றுக்காக குரல் கொடுப்பது இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகவோ நாட்டுப் பிரிவினையைக் கோருவதாகவோ அமையாது என்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பை வழங்கியது. அந்த வழக்கில் தமிழரசு கட்சியின் யாப்பை நியாயப்படுத்தி சுமந்திரன் செய்த வாதம்  தமிழ்த் தேசிய அரசியலுக்கு  அவர் வழங்கிய முக்கியமான  பங்களிப்பாக பரவலாக நோக்கப்படுகிறது.

  அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசியலமைப்பு வழிமுறையின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண முயற்சிகளை முன்னெடுத்த சகல தமிழ்த் தலைவர்களுக்கும் இறுதியில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையே தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் சுமந்திரனும் சந்திக்கவேண்டியேற்பட்டது. அரசாங்கம் உட்பட தென்னிலங்கை அரசியல் சமுதாயம் காலங்காலமாக கடைப்பிடித்த ஏமாற்றுத்தனமான அணுகுமுறைகள் தமிழ் மிதவாத தலைவர்களை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்திய வரலாறு ஒன்று இருக்கிறது. 

   அரசாங்கங்களுடன் தாங்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை நியாயப்படுத்தி தங்களது மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியதாக இடைக்காலத்தில் குறைந்தபட்ச பயன்களையாவது  காண்பிப்பதற்கு தமிழ் தலைவர்களினால் முடியுமாக இருந்ததில்லை. அந்த நிலைவரத்துக்கு காரணமான அரசாங்கங்களின் அணுகுமுறைகளும் செயற்பாடுகளுமே தமிழ் மக்கள் மத்தியில் தீவிரவாத சிந்தனை கொண்ட சக்திகள் செல்வாக்கு பெறுவதற்கு வழிவகுத்து வந்திருக்கிறது.

  இந்த பின்புலத்திலேயே தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரனின் வெற்றியையும் சுமந்திரனின் தோல்வியையும் நோக்கவேண்டும்.

  தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்ற ஒருவரே தேவை என்பதால் சிறிதரனை கட்சியின் தலைவராக தமிழர்கள் தெரிவு செய்தார்கள் என்பதையும் தன்னால் அவ்வாறான அரசியலைச் செய்யமுடியாது என்பதையும் வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கும்  சுமந்திரன் புதிய தலைவருடன் முழுமையாக ஒத்துழைப்பதாக கடந்த மூன்று வாரங்களிலும் பல தடவைகள் உறுதியளித்தார்.

  ஆனால், தலைவராக தெரிவுசெய்யப்பட்ட தினம் முதலாக சிறிதரன்  வெளிப்படுத்திவரும் கருத்துக்களும் அணுகுமுறைகளும் சுமந்திரனைப் போன்றவர்களைப்  பொறுத்தவரை அவருடன் ஒத்துழைத்து அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுப்பில் உள்ள பிரச்சினைகளை தெளிவாக உணர்த்துகின்றன. 

  கட்சியின் நிருவாகப் பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்வதில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்ட சர்ச்சையை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் சிறிதரனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாகத் தெரியவில்லை.

  இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்கு பிறகு சிறிதரன் வெளிப்படுத்திருக்கும் கொள்கை நிலைப்பாடுகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

  திருகோணமலையில் ஜனவரி 28 நடைபெறவிருந்த கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை ஏற்றுக்கொண்டு சிறிதரன் தனது கொள்கை நிலைப்பாடுகளையும் எதிர்கால அணுகுமுறைகளையும்  விளக்கிக்கூறுவார்  என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது சாத்தியமாகாமல் போய்விட்டது.

  அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் சிறிதரன் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு  அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

  ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யப்போவதில்லை  என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார்.

  தமிழர்களின் நிலம், மொழி மற்றும்  கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதுவும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

  மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று தமிழ் கார்டியனுக்கு கூறிய அவர், தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை  ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

  எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களது பயணம் ஈழத்தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை குறிப்பாக அவர்கள் மத்தியில் இருக்கும் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட  கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களை  உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே அவர் அந்த கருத்துக்களை வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை. தலைவராக தெரிவு செய்யப்பட்ட உடனடியாகவே கூட அவர் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது வெற்றிக்கு செய்த பங்களி்ப்புக்காக நன்றி தெரிவித்தார்.

 நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தல் மாத்திரமே. தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து பரந்துபட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

  உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில் இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொண்டு செயற்படவேண்டிய தலையாய  பொறுப்பு இருக்கிறது.

  தமிழர்களின் மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்துவது என்பது வேறு. கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களைக் கட்டி வைத்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வேறு. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்.

  கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவரும் சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை (அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல்) அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதற்கு வழிகாட்டுவதாக அமையவேண்டும்.

  வெறுமனே உணர்ச்சிவசமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக் கொண்டிருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும். 

  ஆயுதப்போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல்  கோட்பாடுகளையும் சுலோகங்களையும் பாராளுமன்ற அரசியலுக்கு பிரயோகிப்பதில் உள்ள நடைமுறைச் சாத்தியமற்ற தன்மை புரிந்து கொள்ளப்படவேண்டும்.

  மண்ணில் நிலவும் உண்மையைப் பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாதச் சிந்தனையுடன்  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் (இத்தகைய குழுக்களில் ஒன்றுதான் துவாரகா வீடியோ  நாடகத்தையும் தயாரித்து ஒளிபரப்பியது)  நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய  சூழ்நிலைகளை வடக்கு, கிழக்கில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட  வேண்டும். 

  ஏற்கெனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்கு திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது.
 

https://arangamnews.com/?p=10465

மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

1 month 2 weeks ago
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்
மாவை சேனாதிராஜாவின் பொறுக்க முடியாத சுயநலம்

— டி.பி.எஸ்.ஜெயராஜ் —

  கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

  தமிழரசு கட்சி  2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

  மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு 20 பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர்  மொத்தமாக 25   வருடங்களாக  பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார். 2014 தொடக்கம்  2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

  தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக  இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

  இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில்  தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

   தமிழரசு கட்சியின் மகாநாடு :

   ===================

  சுமார் ஒரு தசாப்தகாலமாக “நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

 2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது  தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

  இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

   அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும்  அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

  தமிழரசு கட்சியின்  யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

   ஆனால், ஜனவரி 27  தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

 

  பொதுச்செயலாளர் :

  =============

   இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக  முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

  தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது.  வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும்.  சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

  மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

  பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள்  பட்டியலும்  ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும்  பொதுச்சபையினாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால்  இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை’ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

   பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார்.

‘ஆம்’ என்ற வாக்குகளும்  ‘இல்லை’ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

  சண்முகம் குகதாசன் :

  ===========•==

  செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

  தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28  கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

  சேனாதிராஜா அப்போது “விசித்திரமான” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

  இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும்  நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

  சிறிதரனும் சுமந்திரனும் :

  ===============

  சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது  செல்லுபடியாகாது.

 பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

  சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

   சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா “கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம்  என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

  சட்டரீதியான நிலைப்பாடு

  ===============

 அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு  விரைவாக அவர்  வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும்  சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஒளிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள்  தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

  அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால்  தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான தற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

  ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது  மேலும் மோசமானதாகும்.

  இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல்  மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலமாக ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

 ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

 மகன் கலையமுதன் :

 =============

 மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

  இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான  இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

  அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக்  கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில்  ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு  சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

   

மாவையின்  கடந்த காலம்

   =========

     தமிழரசு கட்சியில் மாவை  சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான  தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

  அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக  நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத்  தயாராயிருக்கும்  ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது  தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

  அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை  “சேனாதி அண்ணை” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

 

https://arangamnews.com/?p=10461

தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

1 month 2 weeks ago
தமிழரசு கட்சியின் தலைவராக சிறிதரனும் தமிழர் அரசியலும்

on February 9, 2024

 
GEXkxLEWAAECGQs.jpeg?resize=1200%2C550&s

Photo, TAMIL GUARDIAN

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில் சமூகம் மற்றும் அவதானிகளினதும்  இடையறாத வேண்டுகோளாக இருந்து வருகிறது.

ஆனால், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. ஏற்கனவே இருபது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பல்வேறு மாச்சரியங்களுக்கு மத்தியிலும் கூட நீடித்து நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடந்த முற்பகுதியில் இல்லாமற் போய்விட்டது.

கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை அந்தக் கட்சிகள் ஐக்கியப்பட்ட ஒரு அமைப்பாக ஒருமித்து  முன்வைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால், மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாகவே உயர்ஸ்தானிகரிடம் கூறியதாகவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை தனது கட்சி ஏற்றுக்கொள்வில்லை என்பதை அதற்கான காரணமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

வேறுபாடுகள் இருந்தாலும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது அறிவார்ந்த செயற்பாடாக இருக்கும் என்று சந்தோஷ் ஜா தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் கூறியதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியாவினால் கேட்கமுடியுமே தவிர அது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன.

இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லி நெருக்குதலைக் கொடுக்கவேண்டும் என்பதே தமிழ் கட்சிகளின்  நிலைப்பாடாக இருக்கிறது. புதிய உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் அது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கும் எனலாம்.

தமிழ் கட்சிகளின் ஐக்கியத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டையும் குறித்த அவரின் அறிவுரையே இலங்கை தமிழர்களுக்கான அவரின் பிரதான செய்தி.

ஆனால், அது தொடர்பில் தமிழ் மக்களின் நலன்கருதி விட்டுக்கொடுப்புடனும்  அக்கறையுடனும் பரிசீலிக்க தமிழ்க்கட்சிகள் முனைப்புக்காட்டுவாக இல்லை. மாறாக ஐக்கியம் என்பதை ஒவ்வொரு கட்சியும் அவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அணுகப்பார்க்கின்றன என்றே தெரிகிறது..

இரு வாரங்களுக்கு முன்னர்  இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மறுநாளே தமிழ் கட்சிகளை மீண்டும் ஐக்கியப்படுத்தப்போவதாகவும்  2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை மீட்டெடுக்கப்போவதாகவும் கூறினார்.

ஆனால், தமிழரசு கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சில தமிழ்க்கட்சிகள்  சிறிதரனின் அறிவிப்புக்கு அனுகூலமான சமிக்ஞையைக் காட்டவில்லை.

மாறாக, தாங்கள் ஏற்கெனவே அமைத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தமிழரசு கட்சி வேண்டுமானால் இணைந்துகொள்ளலாம் என்று கூறுகின்றன.

ஆயுதப்போராட்ட இயக்கங்களாக இருந்து பிறகு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த இந்த கட்சிகள் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கண்ட அனுபவங்கள் காரணமாக மீண்டும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழான கூட்டமைப்பு ஒன்றில் பங்கேற்கத் தயாராயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுதற்கான அணுகுமுறை தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து அந்தக் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பிலேயே நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தன. அந்தத் தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது வேறுவிடயம்.

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்தான் முக்கியம் என்றால் அந்தக் கூட்டணியில் சிறிதரன் தலைமையிலான தமிழரசு கட்சி இணைந்துகொள்வதே முறையானது என்று அதன் பேச்சாளரான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சிறிதரனிடம் இருந்து இது தொடர்பில் இதுவரையில் எந்த பிரதிபலிப்பும் வெளிவரவில்லை. பொதுச்செயலாளர் உட்பட கட்சியின் ஏனைய பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்ததில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையை அடுத்து கட்சியின் மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்தவாரம் சிறிதரனுக்கு நீண்டகடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாக தெரியவில்லை.

தனது கட்சிக்குள் தோன்றியிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சிறிதரன் தற்போதைக்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் தனது நிலையை  வலுப்படுத்துவதற்கும் கட்சிக்குள் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னதாக ஏன்தான் சிறிதரன் தமிழ் தேசிய கூட்மைப்பை 2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டுவருவது குறித்து அவசரப்பட்டுப் பேசினாரோ தெரியவில்லை.

கொள்கை நிலைப்பாடுகள்

இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்குப் பிறகு சிறிதரன் வெளிப்படுத்தியிருக்கும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து பார்ப்போம்.

அவர் ஊடகங்களுக்குக் கருத்துக்களை கூறியிருந்தபோதிலும், ஜனவரி 28 திருகோணமலையில் நடைபெறவிருந்த தமிழரசு கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் அந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையை அவரால் நிகழ்த்த முடியாமற்போய்விட்டது.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு 2010 பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றப் பிரவேசம் செய்த 56 வயதான  சிறிதரன் விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளர். அதைப் பகிரங்கமாக சொல்வதற்கு ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் அவர் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை அடிக்கடி கூறிவந்திருக்கிறார். அதற்காக அவர் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளின் கடுமையான  கண்டனங்களுக்கும் ஆளாகி வந்திருக்கிறார்.

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான பின்னரும் கூட அவர் வெளியிட்ட கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆனால், ஆயுதப்போராட்டம் இல்லாத அரசியல் பாதையில் கட்சியை வழிநடத்துவதில் அவர் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டின.

அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் சிறிதரன் உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார்.

தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று குறிப்பிட்ட சிறிதரன் தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் கூறினார்.

எல்லாற்றுக்கும் மேலாக  தங்களது பயணம் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், தற்போது நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தலேயாகும். தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசில் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொள்ளவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது.

தமிழர்களின் மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் உயிர்த் தியாகத்தைச் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவதும் கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களை கட்டிவைத்திருக்கக் கூடிய அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதும் வேறுபட்ட விவகாரங்கள்.

கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை என்பது அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவிட்ட சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும்.

வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும்.

ஆயுதப் போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளை நாடாளுமன்ற அரசியலுக்குப் பிரயோகிப்பதில் உள்ள அறவே நடைமுறைச் சாத்தியமற்ற தன்மைபுரிந்து கொள்ளப்படவேண்டும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னரான காலப்பகுதியில் உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்கி அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களினால் வடக்கு, கிழக்கில் தமிழர்களை பிரமாண்டமான முறையில் அணிதிரட்டக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்று செய்வது இயலாத காரியம்.

இன்று தமிழ் மக்களின் தேவைகளும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் பெருமளவுக்கு மாறிவிட்டன. பெரும்பாலான தமிழர்கள் அதுவும் முக்கியமாக வடக்கு தமிழர்கள் மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்வது பற்றியே கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள்.

மண்ணில் நிலவும் உண்மையை பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாத சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலையை தமிழ்ப் பகுதிகளில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்குத் திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த காலச் சம்பவம் ஒன்றை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னதாக 1975 ஆகஸ்ட் மாதம் என்று நினைவு. இலங்கையில் தனித்தமிழ்நாடு சாத்தியமா இல்லையா என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.தருமலிங்கத்துக்கும் (புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார்) சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைலர் என். சண்முகதாசனுக்கும் இடையில் விவாதம் ஒன்று சுன்னாகம் சந்தை மைதானத்தில் இடம்பெற்றது.

சுன்னாகம் அன்று கணிசமானளவுக்கு இடதுசாரிகளுக்குச் செல்வாக்கான பகுதியாக விளங்கியது. விவாதத்தின் நடுவராக தருமலிங்கத்தினதும் சண்முகதாசனினதும் ஆசிரியர் ஒறேற்றர் சுப்பிரமணியம் இருந்தார்.

ஒரு கட்டத்தில் சண்முகதாசன் தருமரை நோக்கி தனித்தமிழ்நாட்டை எந்த வழியில் அடையப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தருமர் எந்த வழி என்பது தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று பதிலளித்தார். மிகுந்த நகைச்சுவையுணர்வுடைய ஒறேற்றர் குறுக்கிட்டு தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று அவர் சொல்வதால் இரகசியத்தைக் கூறவேண்டும் என்று சண்முகதாசன் வலியுறுத்தக்கூடாது என்று கூறிவிவாதத்தை முடித்துவைத்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அந்த இரகசியம் என்ன எனபதும் பிறகு தமிழர்களுக்கு நேர்ந்த அவலமும் கடந்த அரைநூற்றாண்டு வரலாறு.

இலக்கை அடைவதற்குத் தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமுடையதுமான எந்தவிதமான  சிந்தனையோ விளக்கப்பாடோ இன்றி மக்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் அரசியல் முழக்கங்களைச் செய்த அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்கள் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

இன்று சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வே தங்களது இலட்சியம் என்று கூறும் எமது தமிழ் அரசியல்வாதிகளில் எவராவது அந்தத் தீர்வை எவ்வாறு காண்பது என்பது பற்றி ஏதாவது சிந்தனை இருக்கிறதா? அதுவும் தருமர் அன்று கூறியதைப் போன்ற இரகசியமா?

இதற்குள் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து பயணத்தைத் தொடங்குவது பற்றி பேசுகிறார்.

குழந்தையாக இராமர் இருந்தபோது வானத்தில் உள்ள நிலாவைப்பிடித்து கையில் தந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுததாக ஒரு கதை உண்டு. தாயார் கோசலை எதுவும்  செய்யமுடியாமல் வசிஸ்ட்ட முனிவரின் உதவியை நாடவே அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அதில் நிலாவைத் தெறிக்கவைத்து குழந்தை இராமரின் கையில் கொடுத்தாராம். அவரும் தனது கையில் நிலா கிடைத்துவிட்டது என்ற திருப்தியில் அழுகையை நிறுத்தி தாயார் உணவை ஊட்ட தாராளமாகச் சாப்பிட்டாராம்.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அன்று தமிழ் தலைவர்கள் முன்வைத்ததை பற்றி தருமருடனான அந்த விவாதத்தில் சண்முகதாசனே இந்த கதையையும் கூறினார்.

இன்று மீண்டும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களுக்கு கண்ணாடியில் நிலாவைக் காட்டும் அரசியல் வேண்டாம்.

Thanabalasingam-e1660548844481.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=11239

டில்லிக்குப் போன ஜேவிபி – நிலாந்தன்.

1 month 2 weeks ago
Anura-India1-750x375.jpeg டில்லிக்குப் போன ஜேவிபி – நிலாந்தன்.

ஜேவிபியின் தூதுக்குழு ஒன்று புதுடெல்லிக்கு சென்று இருக்கின்றது. இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று உத்தியோகபூர்வமாக அக்குழு அங்கு சென்று இருக்கின்றது. அங்கே இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் அத்தூதுக்குழு சந்தித்திருக்கின்றது.

அரசியலில் இது ஒரு தலைகீழ் மாற்றம் என்று வர்ணிக்கலாமா? ஜேவிபி ஓர் ஆயுதப் போராட்ட இயக்கமாக இருந்தபோது அதன் ஐந்து வகுப்புகளில் ஐந்தாவது வகுப்பு இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிரானது. ஜேவிபி இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் கருவியாக மலையக மக்களை பார்த்தது. மேலும் ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தை நசுக்கியதில் இந்தியப் படைகளுக்கும் பங்களிப்பு உண்டு. அதுபோல ஜேவிபியின் இரண்டாவது ஆயுத போராட்டத்தை பொறுத்தவரையிலும், அதை நசுக்குவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்திய அமைதி காக்கும் படையினர் பங்களிப்பு செலுத்தினார்கள். எப்படி என்றால் ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டம் எனப்படுவது இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிரானது. அதாவது இந்தியாவுக்கு எதிரானது. இந்நிலையில் ஜேவிபியை விடவும் அதிக இந்திய எதிர்ப்பை கையில் எடுத்த பிரேமதாச இந்திய அமைதி காக்கும் படையை வெளியே போகுமாறு உத்தரவிட்டார். அதற்கு அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒத்துழைப்பையும் பெற்றார். அவ்வாறு இந்திய அமைதி காக்கும் படை வெளியேற்றப்பட்ட பின் பிரேமதாச ஜேவிபியை மிகக் கொடூரமாக வேட்டையாடினார்.

இப்பொழுது ஜேவிபி ஒரு மிதவாதக் கட்சி. எனினும் கடந்த 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரகலய என்று அழைக்கப்படுகின்ற சிங்கள மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களின் போது ஜேவிபியின் செல்வாக்குக்கு உட்பட்ட மாணவ அமைப்புகள் பின்னணியில் நின்றன. அரகலய போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிரான சுலோகங்களையும் காட்சிப்படுத்தினார்கள். குறிப்பாக இந்தியாவின் அதானி குழுமம் ராஜபக்சக்களின் ஒத்துழைப்போடு இலங்கையில் முதலீடு செய்வதற்கு எதிராக அச் சுலோகம் காணப்பட்டது. அதில் இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக என்ற வார்த்தை காணப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஜேவிபி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டோடு தான் காணப்பட்டது. அதன் ஆயுதப் போராட்டங்களிலும் அதுதான் நிலைமை. அது சம்பந்தப்பட்ட ஆயுதம் இல்லாத மக்கள் எழுச்சியின் போதும் அதுதான் நிலைமை.

அவ்வாறு தொடர்ச்சியாக இந்திய எதிர்ப்பை முன்னெடுத்த ஒரு கட்சியின் தூதுக்குழுவை தலைநகருக்கு வருமாறு இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்திருக்கின்றது. ஏன்?

அரகலய போராட்டத்தின் பின்னர் ஜேவிபியின் தலைவரை அமெரிக்க தூதுவரும் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறார்கள். இப்பொழுது இந்தியா அவர்களை உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கின்றது.

ஏனெனில் ஜேவிபியானது அண்மை ஆண்டுகளில் குறிப்பாக அரகலயவின் பின் சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் செல்வாக்கு பெற்ற ஒரு கட்சியாக வளர்ந்து வருவதே காரணம். தென் இலங்கையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளின்படி ஜேவிபிக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பது தெரிகிறது. இக் கருத்துக் கணிப்புகள் முழுமையான திருத்தமானவயா என்ற கேள்விகள் உண்டு. எனினும் ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது என்பது மட்டும் வெளிப்படையானது. ஆனால் இந்த ஆதரவு மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது என்றும் தென்னிலங்கையில் உள்ள சில தொழிற்சங்கவாதிகள் கூறுவது உண்டு. தனது பலத்தைக் குறித்து ஜேவிபி மிகைப்படுத்தி சிந்திக்கின்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இதுதான் அக்கட்சி எதிர்க்கட்சிகளோடு இணைந்த ஒரு கூட்டை உருவாக்க முடியாமலிருப்பதற்குக் காரணம் என்றும் கருதப்படுகின்றது.

லண்டனை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் அரசியல் விமர்சகர் ஜேவிபியின் ஆதரவு வளர்ந்திருக்கிறதா என்ற கேள்விக்கு கூறிய பதிலை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். பாம்பாட்டிக்கு வெள்ளி திசை வந்தால், அவன் மேலும் இரு நாகக் குட்டிகளை வாங்கி வைத்துக் கொள்வான். அதற்கு மப்பால் அவன் அரசனாகப் போவதில்லை என்று. அப்படித்தான் ஜெவிபியின் வளர்ச்சி என்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் 15 விகித வாக்குகளைத் தான் பெற முடியும் என்றும் ஒரு கருத்து உண்டு.ஜேவிபியின் மிதவாத அரசியல் எழுச்சிக் காலம் எனப்படுவது விடுதலைப்புலிகள் கோலோச்சிய ஒரு காலகட்டம் தான். அக்கால கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விட்டுக் கொடுப்பற்ற இனவாதத்தை ஜேவிபி முன்னெடுத்தது. அதன் விளைவாக இனவாதத்தின் கூர் முனைகளில் ஒன்றாக அது காணப்பட்டது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ எல்லா இனவாதிகளை விடவும் பெரிய இனவாதியாக எழுச்சி பெற்று விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தபொழுது, ஜேவிபியின் அரசியல் அடித்தளம் பலவீனமடைந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டபொழுது ஜேவிபியும் ஏறக்குறைய தோற்கடிக்கப்பட்டது என்று திருநாவுக்கரசு கூறுவார்.

எனினும்,2022ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது ஜேவிபியின் செல்வாக்கை மேலும் வளத்தெடுத்தது.தென்னிலங்கையில் தோன்றியிருக்கும் தலைமைத்துவ வெற்றிடம் ஜேவிபியின் கவர்ச்சியை அதிகப்படுத்தியது. அனுரகுமாரவின் தலைமைத்துவத்தை நோக்கிய எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன.படைதரப்பின் மத்தியிலும் ஓய்வு பெற்ற படைத்தரப்பின் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மக்கள் மத்தியில் ஜேவிபியை நோக்கிய எதிர்பார்ப்பு அந்தளவுக்கு இல்லை.

ஏனெனில் இனப்பிரச்சினை தொடர்பாக ஜேவிபி இன்றுவரையிலும் தமிழ் மக்களுக்குத் திருப்தியூட்டும் தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடும்போக்கு வாக்குகளை இழப்பதற்கு அவர்கள் தயாரில்லை.அதைவிட முக்கியமாக,இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி தான்.அது தொடர்பாக ஜேவிபி இன்று வரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை.அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும் சுயநிர்ணய உரிமையையும் ஜேவிபி ஏற்றுக்கொள்ளவில்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கைப் பிரித்த ஒரு கட்சியை இந்தியா டெல்லிக்கு அழைத்திருக்கின்றது. அதே சமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவை தலையிடுமாறு கோரி பல மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு கடிதம் எழுதிய தமிழ் கட்சிகளுக்கு இன்றுவரை இந்தியாவிடம் இருந்து அழைப்பு கிடைக்கவில்லை.கடிதம் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. இக்காலப் பகுதிக்குள் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வந்த இந்திய பிரமுகர்கள் யாரும் குறிப்பிட்ட 6 கட்சிகளையும் ஒன்றாக அழைத்துப் பேசியதாகத் தெரியவில்லை. அந்த ஆறு கட்சிகளுக்குள் இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான கட்சிகள் உண்டு. குறிப்பாக ஆயுதப் போராட்டம் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய அமைதிகாக்கும் படையோடு இணைந்து செயல்பட்ட, இந்தியாவின் மாகாண சபையை ஆபத்துக்களின் மத்தியிலும் துணிந்து கையில் எடுத்த கட்சிகள் அதில் உண்டு.

தமிழ்த் தேசியப்பரப்பில் 13வது திருத்தம் குறித்த பரவலான எதிர்ப்பின் பின்னணியில், மேற்படி கட்சிகள் இந்தியாவை நோக்கி அப்படி ஒரு கூட்டுக் கடிதத்தை எழுதின.ஆனால் அக்கடிதத்தை மதித்து அல்லது பொருட்படுத்தி இந்திய அரச உயர் மட்டும் இன்று வரையிலும் அக்கட்சிகளோடு உத்தியோகபூர்வமாக சந்திப்புகளை ஒழுங்குபடுத்தவில்லை.கூட்டமைப்பு என்ற அடிப்படையில் அல்லது பொதுவாக தமிழ் கட்சிகள் என்ற அடிப்படையில் சில சந்திப்புகள் நிகழ்ந்தன. ஆனால் கடிதம் எழுதிய கட்சிகளைச் சந்தித்தல் என்ற அடிப்படையில் அதாவது கடிதத்திற்கு பதில் கூறுவது என்ற அடிப்படையில் சந்திப்பெதுவும் இன்றுவரை நடக்கவில்லை.

ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்திய எதிர்ப்பை அதன் அரசியல் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு கட்சி அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் இந்திய எதிர்ப்பை அதன் சுலோகங்களில் ஒன்றாகக் கொண்டிருந்த ஒரு கட்சியை, இந்தியா புது டெல்லிக்கு அழைத்திருக்கிறது. இது எதை காட்டுகின்றது?

ஜேவிபி தன்னை ஒரு வலு மையமாகக் கட்டி எழுப்பி வருவதுதான் பிரதான காரணம்.அது ஒரு பலமான சக்தி என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் நம்புகின்றன.அதன் பலத்தை அவர்கள் எந்தளவுக்கு மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.ஆனால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் நடக்கக்கூடிய தேர்தல்களிலும் ஜேவிபி சில சமயம் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக வளரலாம் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் பின்னணியில் நிற்கக்கூடிய ஜேவிபியோடு பேச வேண்டிய தேவை உண்டு. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை வேறு ஒரு விசேஷ காரணமும் இருக்கலாம்.

இந்தியா ரணில் விக்கிரமசிங்கவை அதிகம் ஆர்வத்தோடு பார்க்கவில்லை என்பது வெளிப்படையானது.அவர் கெட்டிக்காரன்.தந்திரசாலி.எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைக்கக் கூடியவர்.அது இந்தியாவுக்குப் பாதகமானது.இந்தியா தன்னை நோக்கி நெருக்கி வரக்கூடிய பலவீனமான ஒரு தலைவரை ஆட்சிக்கு கொண்டுவர விரும்பக் கூடும் என்பதனை கடந்த ஆண்டு தமிழ் கட்சிகளிடம் டளஸ் அழகப்பெருமாவை ஆதரிக்குமாறு இந்தியா கேட்ட பொழுது ஊகிக்கக்கூடியதாக இருந்தது.எனவே இந்தியா இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடு இருந்தால்,ரணிலுக்கு எதிராக எழுச்சி பெறக்கூடிய சக்திகளை அல்லது ரணிலுக்கு எதிராக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய கூட்டுக்களுக்குள் இணையக்கூடிய தரப்புகளை அழைத்துப் பேச வேண்டிய ஒரு தேவை; கையாள வேண்டிய ஒரு தேவை இந்தியாவுக்கு உண்டு.அந்த அடிப்படையில் இந்தியா ஜேவிபியை உத்தியோகபூர்வமாக அழைத்திருக்கலாம்.

ஆனால் இந்தியா தங்களை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்று கருதும் தமிழ் கட்சிகள் இதில் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களை ஒரு வலு மையமாக அவர்கள் கட்டியெழுப்பினால் எல்லாப் பேரரசுகளும் அவர்களை நோக்கி வரும் என்பதுதான். தமிழ்க் கட்சிகள் ஒன்றில் தேர்தல் மூலம் மக்களானையைப் பெற்று தங்களை பலமான வலு மையங்களாகக் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கக்கூடிய சக்தி தமக்கு உண்டு என்பதனை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தங்களைத் தவிர்க்கப்படவியலாத வலு மையங்களாகக் கட்டி எழுப்பாதவரை,இந்தியா மட்டுமல்ல,ஐநா மட்டுமல்ல,அமெரிக்கா மட்டுமல்ல,ஏன் அவர்களுடைய சொந்தத் தமிழ் மக்களே அவர்களை எதிர்பார்ப்போடு பார்க்கப் போவதில்லை.

https://athavannews.com/2024/1369364

தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்

1 month 2 weeks ago
தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்

Untitled-112.jpg

தமிழரசுக்  கட்சிக்குள் சுமந்திரன் அணியெனப்படுவது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. அது தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலேயே இருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தொடக்கம் ஒப்பீட்டளவில் புரட்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் அதன் கடந்த 73 ஆண்டுகால வரலாற்றையும் தொகுத்துப் பார்த்தால் அக்கட்சியானது இலட்சியத்தில் சறுக்காத கட்சி என்று கருதத் தேவையில்லை. 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றி,தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியே முதன்மையானது. அவ்வாறு வட்டுக்கோட்டைத்  தீர்மானத்தை நிறைவேற்றிய ஒரு கட்சி 1981இல் அதாவது ஐந்து ஆண்டுகளில் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. 1977இல் நடந்த தேர்தலில், தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து அமோக வெற்றிபெற்ற ஒரு கட்சி, ஐந்தே ஆண்டுகளில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் பங்குபற்றியது. மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்குள் எதுவும் இல்லை என்பதனை 1980ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்திரபாலா, பாலகிருஷ்ணன், சீலன் கதிர்காமர், மு.நித்தியானந்தன், மு.திருநாவுக்கரசு ஆகியோர் அக்கருத்தரங்கில்  பேசினார்கள். அவர்களுடைய கருத்தை, அப்பொழுது தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த அமிர்தலிங்கம்  ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், எது சரி என்பதை வரலாறு பின்னர் நிரூபித்தது.

தமிழ் மிதவாதிகளின் மேற்கண்ட உறுதியின்மை, சமரசப்போக்கு  போன்றவற்றின் மீது நம்பிக்கையிழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தின் பக்கம் போனார்கள். எனவே தமிழரசுக் கட்சியானது தன் இலட்சியத்தில் இருந்து சறுக்காத ஒரு கட்சி என்று எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. ஏன் அதிகம் போவான்? 2015இல் மன்னாரில் நடந்த “தடம் மாறுகின்றதா தமிழ்த் தேசியம்?”என்ற தலைப்பிலான கருத்தரங்கில், நான் ஆற்றிய உரையில், சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் வெளியாரின் நிர்பந்தங்களின்றித் தானாக ஒரு தீர்வுக்கு இறங்கி வராது என்று கூறினேன். அதற்குப் பதிலளித்த சம்பந்தர் “அது ஒரு வறண்ட வாதம் வறட்டு வாதம்” என்று கூறினார். 2015இல் இருந்து 2018வரையிலும் சம்பந்தர், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தோடு ஒத்துழைத்து “எக்கிய ராஜ்ய” என்ற ஒரு தீர்வு முயற்சிக்காக உழைத்தார். அதை அவர் சமஷ்டிப் பண்புடையது என்று சொன்னார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அதனை ஒற்றைட்சியாட்சிதான் என்று சொன்னார்கள். சிங்களத் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு ஒன்றைச் சொன்னார்கள், தமிழ்த் தலைவர்கள் தமது வாக்காளர்களுக்கு வேறு ஒன்றைச் சொன்னார்கள்.

எனவே தமிழரசுக் கட்சி தூய இலட்சியவாதக் கட்சியல்ல. அது கொழும்புடன் சமரசத்துக்குப் போகாத கட்சியுமல்ல. இதில் ஆகப்பிந்திய உதாரணம் சம்பந்தர். அவர் தனது செயல் வழியைப் பலப்படுத்துவதற்காக உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். சுமந்திரன் மட்டுமல்ல சாணக்கியனும் அப்படிப்பட்டவர்தான். அண்மையில் யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் நடந்த ஒர் இளையோர் ஒன்றுகூடலில் சாணக்கியனும் உரையாற்றினார். அதில் அவர் எனது உரையை மேற்கோள்காட்டி பிரச்சனைகளைத் தீர்ப்பதே தன்னுடைய அரசியல் செயல்வழி என்று சொன்னார். பின்னர் அவரோடு உரையாடும்போது நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன் “அது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் உள்ள ஒரு வார்த்தை…நீங்கள் தமிழ் மக்களின் தாயகத்தை ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பை ஏற்றிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுடைய அரசியல் ஒழுக்கம் என்பது தேசத்தை நிர்மாணிப்பது”என்று. அதற்கு அவர் திரும்பிக் கேட்டார் “அதுவும் ஒரு பிரச்சனைதானே? அந்தப் பிரச்சினையையும் தீர்க்க வேண்டும்தானே?” என்று. அப்பொழுது நான் சொன்னேன்…. ”தேச நிர்மாணம் என்பது ஓர் அரசியல் பதம் . பிரச்சனைகளைத் தீர்ப்பது என்பது அரசு சார்பற்ற நிறுவனங்களின் அகராதியில் அதிகம் உள்ள ஒரு வார்த்தை. நீங்கள் தமிழ்த் தேசியக்கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அரசியல் அடர்த்தி மிக்க வார்த்தையைத்தானே பயன்படுத்தலாம் ?” என்று.

சுமந்திரன் சாணக்கியனைப் போன்றவர்களின் சிந்தனாமுறை அது. தமிழரசுக் கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியது. அக் கட்சிக்குள் அது ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல. எனவே சுமந்திரன் அணி என்பது கட்சிக்குள் ஒரு புதிய தோற்றப்பாடு அல்ல.

எனவே, சுமந்திரனுக்கு வாக்களித்தவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தத் தேவையில்லை. அப்படித்தான் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிள்ளையானுக்கும் வாக்களிக்கும் தமிழ் மக்களை தமிழ்த் தேசத்துக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தலாமா? இல்லை. அவர்கள் தமிழ் மக்கள். அவர்களை எப்படித் தேசத் திரட்சிக்குள் உள்ளீர்ப்பது என்றுதான் சிந்திக்க வேண்டுமே தவிர அவர்களை தேசத்துக்கு வெளியே தள்ளிவிட முடியாது. இது சுமந்திரன் அணிக்கும் பொருந்தும். இந்த தமிழ் யதார்த்தத்தை சிறீதரன் உள்வாங்க வேண்டும். தேசத் திரட்சியை எப்படிப் பலப்படுத்துவது என்று அவர் சிந்திக்க வேண்டும்.

கிளிநொச்சியில் அவருடைய நடவடிக்கைகளை விமர்சிக்கும் அவருடைய அரசியல் எதிரிகள் அவரை “கிளிநொச்சியின் ஜமீன்” என்று அழைப்பார்கள். தமிழரசுக் கட்சியின் ஏனைய மாவட்டக் கிளைகளோடு ஒப்பிடுகையில் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியானது அதன் அரசியல் எதிரிகளை துரோகிகள் அல்லது இனப்படுகொலையின் பங்காளிகள் என்று வகைப்படுத்துவது உண்டு. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டம் என்பதனால் கிளிநொச்சியில் அப்படிக் கூறமுடிந்தது. ஆனால் இப்பொழுது சிறீதரன் ஒரு மாவட்டத்தின் பிரதிநிதி அல்ல. தமிழ்த் தேசிய அரங்கில் உள்ள பெரிய கட்சியின் தலைவர்களில் ஒருவர். ஏனைய கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டு முன்னணியை உருவாக்கப் போவதாக வேறு கூறிவருகிறார். எனவே அவர் அதற்கு வேண்டிய தகுதிகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

GF5pMnCXgAAHlXu-c.jpg
GFPqeSBb0AA8e6r-1.jpg

சுமந்திரன் அணியின் எழுச்சி என்பது தேர்தலோடு ஏற்பட்ட ஒரு தோற்றப்பாடு அல்ல. தேர்தலோடு அது மேலும் பலமடைந்தது என்பதே சரி. அது கட்சிக்குள் ஏற்கனவே காணப்பட்ட ஒரு தோற்றப்பாடு. இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல மாவட்ட அபிவிருத்தி சபைகளை ஏற்றுக் கொள்கின்ற; ஐக்கிய ராஜ்ஜியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு தரப்பு கட்சிக்குள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது.

எனவே அந்த உட்கட்சி யதார்த்தத்தை உள்வாங்கி சிறீதரன் கட்சியைச் சீரமைக்க வேண்டியவராக இருக்கிறார். சுமந்திரன் கட்சியைத் தேசிய நீக்கம் செய்தார் என்று அவர் கருதினால், கட்சியை முன்னரை விட அதிகமாக தேசிய மயப்படுத்த வேண்டியது இப்பொழுது சிறீதரனுடைய பொறுப்பு.

குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகளின் விளைவாக கட்சிக்குள் மற்றொரு சிறு பிளவு மேற் கிளம்பும் ஆபத்துத் தெரிகிறது. அது மட்டக்களப்பு- திருகோணமலை என்ற முரண்பாடு. கிழக்கை யார் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பதில் மட்டக்களப்பா? திருக்கோணமில்லையா? என்ற ஒரு போட்டி அங்கே தோன்றியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவம் தமிழரசுக் கட்சிக்கு விட்டுச் சென்றிருக்கும் மற்றொரு தீங்கான விளைவு அது. கிழக்கை மையமாகக் கொண்ட சம்பந்தர் தலைவராக இருந்த ஒரு காலகட்டத்தில்தான் கிழக்கில் பிள்ளையானின் கட்சிக்கு பலமான வாக்காளர் வங்கி ஒன்று உருவாகியது. அது கிழக்கின் யதார்த்தங்களில் ஒன்று. பிள்ளையானின் வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வசித்தவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதுவும் கிழக்கின் யதார்த்தம்தான். இவ்வாறு ஏற்கனவே வடக்குக் கிழக்காகப் பிரிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில், இப்பொழுது கிழக்குக்குள்ளேயே ஒரு பிரிவு தோன்றக்கூடிய ஆபத்துத் தெரிகிறது. அதாவது ஏற்கனவே பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் ஒரு தமிழ்த் தேசிய பரப்பில் ஒரு புதிய உடைவுக்கான அறிகுறிகள் தெரிகின்றன. சிறீதரன் அதையும் கையாள வேண்டியுள்ளது

GFgIgMrXYAAYOrO.jpg
GFgIhLJXYAAXHZ-.jpg

அவர் பதவியேற்றவுடன் மாவீரர் துயிலும் இல்லத்துக்குச் சென்றார். அது கொழும்பில் உள்ள மேற்கத்திய தூதரகங்களால் பெரிய அளவிற்கு ஆர்வத்துடன் பார்க்கப்படவில்லை என்று சுமந்திரனுக்கு நெருக்கமான சிலர் கூறியதாக அறிகிறேன். எனினும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் சிலர் சிறீதரனை சந்தித்திருக்கிறார்கள். அவர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதும் சிங்கள ஊடகவியலாளராகிய சுனந்த தேசப்பிரிய பின்வருமாறு ருவிற் பண்ணியிருந்தார் “தமிழரசுக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் சுமந்திரனை  சிறீதரன் வென்றமையானது தமிழ் அரசியல் தீவிரப்போக்கடைவதைக்  காட்டும் ஒரு  சமிக்ஞையாகும்”

அதாவது சிறிதரனின் தலைமைத்துவம் தமிழ் அரசியலில் தீவிரவாத போக்கை மேலும் அதிகப்படுத்தப்போகிறது என்று கொழும்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்களக் கடும்போக்கு வாக்குகளைக் கவர விரும்புகிறவர்களுக்கு அது வழிகளை இலகுவாக்கிக் கொடுக்குமா? குறிப்பாக நடந்து முடிந்த சுதந்திர தினத்திலன்று சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டமும் அதில் சிறீதரன் நடந்து கொண்ட விதமும், அவர் கட்சியை எந்த திசையில் செலுத்த விரும்புகிறார் என்பதனை உணர்த்துகின்றதா? சில சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுவதுபோல தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கஜேந்திரகுமார் கிடைத்திருக்கிறாரா?

சுதந்திர தினமன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறிதரன் நடந்து கொண்ட விதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியிலானது. கட்சிக்குள் தன்னுடைய நிலையைப்  பலப்படுத்துவதற்கு அது சிறிதரனுக்கு உதவும்.

சிறீதரன் முதலில் கட்சிக்குள் தன்னை பலப்படுத்த வேண்டியிருக்கிறது. சம்பந்தரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியானது கொழும்பை நோக்கி அதிகம் அதிகம் திருப்பப்பட்டு விட்டது. அதை மீண்டும் வாக்காளர்கள் நோக்கித் திருப்பவேண்டும். அதே சமயம் கட்சி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுவதுபோல ஒரு சமஸ்ரியை அடைவதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டும். சுதந்திர தினத்தன்று ஆதரவாளர்களுக்கு வீரமாகத் தலைமை தாங்குவது கட்சிக்குள் சிறிதரனை பலப்படுத்த உதவலாம். அதற்குமப்பால் சமஸ்ரியை அடைவதற்கான செயல்பூர்வமான வழியை அவர் தனது தொண்டர்களுக்குக் காட்ட வேண்டும்; மக்களுக்கும் காட்ட வேண்டும்.
 

https://www.nillanthan.com/6533/

 

இந்தியாதான் காப்பாற்றியது - இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில்

1 month 2 weeks ago
இந்தியாதான் காப்பாற்றியது - நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம்- இந்திய ஊடகத்திற்கான பேட்டியில் ரணில்

Published By: RAJEEBAN   10 FEB, 2024 | 04:43 PM

image
 

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்தவேளை இந்தியா வழங்கிய உதவிகள் ஆதரவிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமான wion ற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு நன்றி இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பியிருக்கமாட்டோம், இதன் காரணமாகவே இரு நாடுகள் மத்தியிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

கேள்வி – எனது முதல் கேள்வி இந்திய இலங்கை உறவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள் இந்த உறவுகள் குறித்த உங்கள் தொலைநோக்கு பார்வை என்ன ?

பதில் - உண்மையில் இந்திய இலங்கை உறவுகள் முன்னேற்றமடைகின்றன. நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்த முயல்கின்றோம், இரு நாடுகளிற்கும் இடையிலான தொடர்புகளை அதிகரிக்க முயல்கின்றோம். இதுவே சரியான வழி என நான் கருதுகின்றேன்.

 

கேள்வி- இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை 4 பில்லியன் டொலர் உதவியுடன் முன்வந்த நாடு இலங்கை உங்கள் நாட்டிற்கான இந்தியாவின் உதவியை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்-நாங்கள் இந்தியாவிற்கு நன்றியுடையவர்களாக உள்ளோம் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் தப்பிபிழைத்திருக்கமாட்டோம். இதன் காரணமாகவே நாங்கள் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து கவனம் செலுத்துகின்றோம் குறிப்பாக வர்த்தக பொருளாதார வெற்றிகள் குறித்து முன்னோக்கி செல்வதற்கு இதுவே வழி.

 

கேள்வி- உங்கள் நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது எவ்வாறு உள்ளது?

பதில்- நாங்கள் கடன் மறுசீரமைப்பை முன்னெடுத்தோம் அதனை பூர்த்தி செய்துள்ளோம். நாங்கள் ஓசிசியுடன் உடன்படிக்கையொன்றை செய்து கொள்ளவேண்டும். எங்களின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், ஆரம்ப கட்ட நடவடிக்கைள் தற்போது இடம்பெறுகின்றன உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான உடன்படிக்கைக்கு பின்னர் நாங்கள் ஏனைய அனைத்து கடன்வழங்கிய நாடுகளுடனும் நிதியமைப்புகளுடனும் உடன்படிக்கையை செய்துகொள்ளவேண்டும்.

 

கேள்வி – அது எப்போது சாத்தியமாகும்?

பதில்- ஜூன் மாதமளவில் அது சாத்தியமாகும் என நினைக்கின்றேன்.

 

கேள்வி – பிராந்திய பாதுகாப்பு என்ற விடயம் குறித்து பேசும்போது சீன கப்பல்களின் விஜயம் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. சீன கப்பல்களிற்கு அனுமதி வழங்குவது இல்லை என்பது குறித்து இலங்கை ஆராய்ந்து வருவதாக அறிகின்றேன். சீன கப்பல்களின் விஜயங்கள் குறித்தும் அவற்றிற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானம் குறித்தும் கருத்துகூற முடியுமா?

பதில்- நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம். இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளளோம்.

இலங்கைக்கு வந்த சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்.

ஏனைய நாடுகளின் ஏனைய கப்பல்களுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதா? இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்பவேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

இதன்காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வரமுடியாது என நாங்கள் தெரிவித்துள்ளோம். ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம்.

 

கேள்வி – உங்களிற்கு சீனா கப்பல்களின் வருகை குறித்து தெரியவருமா?

பதில் - சீன கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன, இந்திய கப்பல்கள் வருகின்றன, ஜப்பான் கப்பல்கள் வருகின்றன அனைத்து கப்பல்களும் வருகின்றன – அமெரிக்க கப்பல்கள் வருகின்றன.

 

கேள்வி- இந்தியா இந்த விஜயங்கள் குறித்து கவலையடைந்துள்ளது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்துவரும் பிரசன்னம் குறித்து கவலையடைந்துள்ளது என்பதால் சீனா இந்தியாவிற்கும் உங்களிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றது என கருதுகின்றீர்களா?

பதில் - சீனகப்பல்கள் நீண்டகாலமாக இலங்கைக்கு வருகின்றன. சீனா இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முயலவில்லை, நாங்கள் இந்தியாவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றே அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் கரிசனை கொள்ளவேண்டிய விடயம் என்று எதுவுமில்லை, இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் இல்லை, குறையவுமில்லை, மேலும் இலங்கைக்கு வருகை தராத நாடுகளின் கப்பல்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.

 

கேள்வி – கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் சீனாவின் பங்களிப்பு – சீனா உரிய பதில்கள் இல்லாமல் இழுத்துச்செல்கின்றதே?

பதில் - கடன் மறுசீரமைப்பு குறித்து சீனாவிடம் நோக்கம் உள்ளது. அவர்கள்  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவில் இல்லை. ஆனால் அவர்கள் கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர். இதற்கான அவர்களின் கட்டமைப்பு ஏனைய நாடுகளிடமிருந்து வித்தியாசமானது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் சீனாவின் அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயற்படவேண்டும். அந்த நாட்டின் எக்சிம் வங்கியுடனும் இணைந்து செயற்படவேண்டும்.

 

கேள்வி – மற்றுமொரு முக்கியமான விடயம் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது. இது குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றது – முன்னோக்கி செல்வதற்கான வழி என்ன?

பதில் - அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன் காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டித்தன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க  தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன. என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம். ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன.

https://www.virakesari.lk/article/176049

சர்வதேச சட்டத்தில் தென்னாபிரிக்காவின் "தருணம்"

1 month 2 weeks ago
07 FEB, 2024 | 05:25 PM
image

(ரமிந்து பெரேரா)

கடந்த வாரம், தென்னாபிரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட காஸா பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை சர்வதேச நீதிமன்றத்துக்கு (ICJ) பரிந்துரைத்ததுடன், இராணுவ நடவடிக்கைகள் இனப்படுகொலை குற்றத்துக்கு ஒப்பானவை என்று வாதிட்டது. இந்த வழக்கின் வாய்வழியிலான விசாரணைகள் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் ஹேக்கில் நடைபெற்றதுடன், இந்த வழக்கு ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

ICJ என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை அமைப்பு என்பதுடன், தென்னாபிரிக்கா இஸ்ரேல் தங்களின் இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற தற்காலிக ஏற்பாட்டை நாடுகிறது. இந்த கட்டத்தில், இனப்படுகொலை உண்மையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை தென்னாபிரிக்கா நிரூபிக்க வேண்டியதில்லை. ஒரு தற்காலிக உத்தரவைப் பெறுவதற்கு, இனப்படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருப்பதாக முகத்தோற்றமளவில் நிரூபிப்பது போதுமானதாகும்.

குற்றங்களினுடைய குற்றம்

சர்வதேச குற்றவியல் சட்டத்தில் இனப்படுகொலை மிகக் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இது 'குற்றங்களின் குற்றம்' என்று அழைக்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியால் ஆறு மில்லியன் யூதர்கள் அழிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பின்னராக, 1948இல் இனப்படுகொலை தொடர்பான பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரகடனத்தின் நோக்கமும் குறிக்கோளும் மீண்டும் அத்தகைய நிகழ்வு இடம்பெறாமல் தடுப்பதாகும்.

எனவே, இப்பிரகடனம் இனப்படுகொலையை 'தடுக்கவும் தண்டிக்கவும்' அரச தரப்பினர் செயற்பட வேண்டிய கடமையை குறிப்பிடுகிறது. 

பிரகடனத்தின் உறுப்புரை 8, இனப்படுகொலைச் செயல்களை தடுக்கவும் ஒடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தகுதி வாய்ந்த அமைப்புகளை எந்தவொரு திறத்துவ நாடும் அழைக்கலாம் என்று குறிப்பிடுகிறது. தென்னாபிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் இனப்படுகொலை பிரகடனத்தின் திறத்துவ நாடுகள் என்பதுடன், தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு பிரகடனத்தின் மேற்கூறிய ஏற்பாடுகளை நம்பியுள்ளது.

உள்நாட்டுச் சட்டத்தைப் போலல்லாமல், சர்வதேச சட்டத்தில் வலிமையான அமுலாக்கப் பொறிமுறை இருப்பதில்லை. எனவே, ICJ நாடுகளுக்கு இடையேயான மோதல்களில் தீர்ப்பளிக்க முடியுமென்றாலும், ஒரு திறத்துவ நாடு தீர்ப்பை புறக்கணிப்பதாக தெரிவு செய்தால், அத்தகைய நாட்டுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக, 2022இல், ரஷ்ய படையெடுப்பின்போது, உக்ரைன் ICJக்கு முறைப்பாடளித்து, ரஷ்யாவை அத்தகைய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு தற்காலிக உத்தரவைப் பெற்றது.

ஆனால், அந்த உத்தரவை ரஷ்யா ஏற்கவில்லை. கிழக்கு உக்ரேனில் வசிக்கும் ரஷ்ய இன மக்களுக்கு எதிராக உக்ரைன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டிய உக்ரேனிய சூழலில் இனப்படுகொலையின் வரைவிலக்கணத்தின் பிரயோகத்தை தெளிவுபடுத்துமாறு உக்ரைன் ICJயிடம் கோரிக்கை விடுத்ததால் அந்த சம்பவமும் இனப்படுகொலை பிரகடனத்தை உள்ளடக்கியது.

இருப்பினும், தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டுகளை ICJ ஏற்றுக்கொண்டால், அது இராஜதந்திர மட்டத்தில் இஸ்ரேலுக்கு குறிப்பிடத்தக்க இழப்பை கொண்டுவரலாம். மேலும், இஸ்ரேலின் மேற்கத்திய நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள், அவர்களின் ஆதரவு ஒரு இனப்படுகொலை போருக்கு உதவுவதாக கருதப்படுவதால் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும். 

இந்த சாத்தியமான பின்விளைவுகளை எதிர்பார்த்து, மேற்கத்திய நாடுகள் தென்னாபிரிக்காவின் இனப்படுகொலைக்கான கோரலை நிராகரிக்க ஏற்கனவே விரைந்துள்ளன.

அமெரிக்கா இனப்படுகொலைக்கான கோரலை 'தகுதியற்றது' என்று அறிவித்துள்ள நிலையில், ஜேர்மனி இஸ்ரேலின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் தரப்பல்லாத வகையில் வழக்கில் தலையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கிடையில், உலகளாவிய தெற்கிலிருந்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த நாடுகள் மற்றும் பொலிவியா, கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற முஸ்லிம் அல்லாத நாடுகள் என பல நாடுகள் தென்னாபிரிக்காவின் தலையீட்டுக்கு தங்களது ஆதரவை அறிவித்துள்ளன.

வாதங்கள் மற்றும் எதிர்வாதங்கள்

வாய்வழி விசாரணை சுற்றுகளில், தென்னாபிரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டும் ICJ முன்பாக தங்களது வழக்குகளை முன்வைத்தன. இனப்படுகொலை பிரகடனம் இனப்படுகொலையை 'ஒரு தேசிய, இன, சாதிய அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள செயல்கள்' என வரையறுக்கிறது. எனவே, குழுவில் உள்ளவர்களைக் கொல்வது, கடுமையான உடல் மற்றும் உளநலப் பாதிப்பை ஏற்படுத்துவது, உடலியல் ரீதியாகவோ அல்லது பகுதியளவில் உடலியல் ரீதியாகவோ அழிவைக் கொண்டுவரும் நிலைமைகளை ஏற்படுத்துவது போன்ற செயற்பாடுகள் இனப்படுகொலைச் செயல்களாக வரையறுக்கப்படுகின்றன.

காஸா பகுதியில் 23,000க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்ற, 85 சதவீத மக்களின் இடப்பெயர்வுக்கு காரணமான கண்மூடித்தனமான குண்டுவெடிப்பு, மக்களுக்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படும்போது மருத்துவ வசதிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை காஸாவில் இனப்படுகொலை நிலைமையை விவரிப்பதற்கு தென்னாபிரிக்கா கொண்டுவந்த உண்மைகளில் உள்ளடங்கும்.

குற்றத்தை நிரூபிப்பதற்கு, இனப்படுகொலை நோக்கம் இருந்தமையை நிரூபிக்க வேண்டும். தென்னாபிரிக்கா பாலஸ்தீனத்தை ஒரு தேசியக் குழுவாக அழிக்கும் நோக்கத்தைக் குறிக்கும் பிரதமர் உட்பட இஸ்ரேலிய உயர் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பல அறிக்கைகளை நம்பியுள்ளது. உதாரணமாக, 13 ஒக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இஸ்ரேல் எரிசக்தி அமைச்சர் கூறுகையில்:

"காஸாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாங்கள் வெற்றி பெறுவோம். அவர்கள் உலகை விட்டு வெளியேறும் வரை ஒரு சொட்டு நீர் அல்லது ஒரு மின்கலம் கூட அவர்களுக்கு கிடைக்காது.

இந்த வகையான அறிக்கைகளுக்கு இஸ்ரேலின் எதிர் சமர்ப்பிப்பு என்னவென்றால், அவை 'எழுந்தமானமான அறிக்கைகள்' என்பதுடன் அவற்றில் சில சூழலிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இனப்படுகொலை சம்பவங்களில் சவாலான பகுதி, உள்நோக்கினை நிரூபிப்பதாகும். ஏனெனில், செயலை மேற்கொள்ளும் ஒரு கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட குழுவை அழிக்கும் குறிப்பான நோக்கத்தை தொடர்புடைய அரசு கொண்டிருந்தது என்பதை நிரூபிப்பது இலகுவானதல்ல. ஒரு அரசின் செயல்களில் இருந்து நோக்கினை ஊகிக்க முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த சிக்கலான தன்மையின் காரணமாக இனப்படுகொலை உரிமைகோரல்களில் (2007) போஸ்னியா செர்பியாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த முன்னைய வழக்கில், ஸ்ரெப்ரெனிகா படுகொலையை இனப்படுகொலை என்று கண்டறிந்தாலும், ICJ செர்பியாவுக்கு பொறுப்பேற்கவில்லை. இதற்கு இனப்படுகொலையின் குறிப்பிட்ட நோக்கினை நிரூபிக்கத் தவறியதே காரணமாகும்.

இஸ்ரேலின் பாதுகாப்பின் பிரதான முன்மாதிரி என்னவென்றால், அது ஐக்கிய நாடுகளின் சாசனத்தால் நன்கு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையான தற்காப்புக்காக செயற்படுகிறது என்பதாகும். தற்காப்பு எனும் வாதம் இரண்டு காரணங்களுக்காக பலவீனமான நிலையில் உள்ளது.

முதலாவதாக, சட்டபூர்வமான தற்காப்பு என்பது இனப்படுகொலையை அனுமதிக்கும் அளவிற்கு நீடிக்காது. இனப்படுகொலையை தடைசெய்வது சர்வதேச சட்டத்தில் ஒரு முடிவான விழுமியமாக கருதப்படுகிறது. எனவே, தடை முழுமையானது தடையிலிருந்து எந்த அவமதிப்பும் அனுமதிக்கப்படாது. வெறுமனே, தற்காப்பு என்ற பெயரில் இனப்படுகொலை செய்ய முடியாது.

இரண்டாவதாக, பாலஸ்தீனம் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக இருப்பது தற்காப்பு வாதத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான வினாவினை எழுப்புகிறது. சர்வதேச சட்டத்தின் கீழ், அரசாங்கங்கள் மற்றைய அரசாங்கங்களுக்கு எதிராக தற்காப்பை பயன்படுத்துகின்றன. 1967 போருக்குப் பிறகு, பாலஸ்தீனம் இஸ்ரேலின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக கருதப்படுகிறது.

பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் ஊடுருவி இஸ்ரேல் சுவர் கட்டியதன் சட்டபூர்வமான தன்மையை ஆய்வு செய்த வழக்கில் 2004ஆம் ஆண்டு ICJ இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது (இஸ்ரேலிய சுவர் ஆலோசனை அபிப்பிராயம்). உங்களது சொந்த ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள ஒரு பிரதேசம் தொடர்பில் தற்காப்பு வாதத்தை கொண்டுவர முடியுமா என்பது விவாதத்துக்குரியதாகும்.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நிலையை மறுத்தாலும், குறிப்பாக 2006இல் காசாவில் இருந்து வெளியேறியதில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாக இருப்பதாக பலமுறை கூறியுள்ளன.

மனிதாபிமானத்தின் எதிர்காலம்

சர்வதேச அரசியலில் மனிதாபிமான வாதங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதில் ஒரு குறிப்பிட்ட திருப்புமுனையை குறிப்பதால் தென்னாபிரிக்க வழக்கு குறிப்பிடத்தக்கதாகும்.

மற்றைய அரசாங்கங்களின் நடத்தையை கண்காணிப்பின் கீழ் கொண்டுவருவதற்கு மனிதாபிமான வாதங்களை முன்வைப்பது 1990களுக்குப் பிறகு பொதுவான ஒன்றாகும்.

1990களின் பிற்பகுதியில் யூகோஸ்லாவியா மீதான நேட்டோ குண்டுவெடிப்புகளில் இருந்து ஆரம்பித்து, மனிதாபிமானம் பெரும்பாலும் மேற்கத்திய மேலாதிக்க கும்பலால் அவர்களின் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் பிரகாரம் எழுப்பப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றில், 'குற்றம்சாட்டப்பட்டவர்கள்' முன்னர் காலனித்துவ நாடுகளான உலகளாவிய தெற்கைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் எப்பொழுதும் ஐரோப்பியர் அல்லாத மக்களை 'நாகரிகமானவர்கள்' ஆக்குவதற்கு ஒரு நாகரிக நோக்கம் இருப்பதாக ஒரு காலத்தில் நினைத்த, அவர்கள் உலகளாவிய தெற்கில் உள்ள அரசாங்கங்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கிய முன்னைய காலனித்துவ எஜமானர்களாவர். 

மனிதாபிமானம் என்பது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உருவான ஒரு முனை உலக ஒழுங்கின் சித்தாந்தமாக மாறியது.

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நிகழ்வுகள் வெளிவருவதையடுத்து, அலை ஓர் சுவாரஸ்யமான திருப்பத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலின் கொடூரமான நடத்தையை மேற்குலகம் வெட்கமின்றி பாதுகாக்கும். அதேவேளை, உலகளாவிய தெற்கில் இருந்து - ஈரான் முதல் சீனா வரை தென்னாபிரிக்கா முதல் பிரேசில் வரையிலான நாடுகள் படுகொலை செய்யப்படுபவர்களுக்காக முன்வந்துள்ளன.

மற்ற கருவிகளுக்கிடையில், இஸ்ரேலின் தவறான செயல்களை எதிர்கொள்வதற்கு சர்வதேச சட்டமும் பயன்படுத்தப்பட்டது. முரண்பாடாக, இதுவரை உலகளாவிய தெற்கில் உள்ள பழுப்பு, கறுப்பு மற்றும் மஞ்சள் மக்களுக்கு மனிதாபிமானத்தின் நற்பண்புகளை போதித்த அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இப்போது சாத்தியமான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் குற்றவாளியான இஸ்ரேலை குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

காஸாவுக்குப் பிறகு, மேற்கத்திய மனிதாபிமானத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? 

ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் படைகள் தலையிட்ட அட்டூழியங்கள் காரணமாக மேற்கத்திய மனிதாபிமானத்தின் வேண்டுகோள் எந்த வகையிலாவது வீழ்ச்சியடைந்துள்ளது.

இஸ்ரேலின் கொடூரமான குற்றங்களை பரந்த பகலில் பாதுகாத்த பிறகு, மீண்டும் மனித உரிமை மொழியை பேசவும், மற்ற நாடுகளை நோக்கி வினா எழுப்பவும் மேற்கு கூட்டமைப்புக்கு தார்மீக நிலைப்பாடு இருக்குமா?

ICJ இல் தென்னாபிரிக்காவின் தலையீடு, மனிதாபிமானம் தொடர்பாக மேற்கு நாடுகள் அனுபவித்த ஏகபோகத்தின் முடிவைக் குறிக்கிறதா? சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகளையும் அவற்றின் நட்பு நாடுகளையும் கேள்விக்குட்படுத்த உலகளாவிய தெற்கு அதே மன்றங்கள் மற்றும் பிரச்சாரங்களைப் பயன்படுத்த ஆரம்பித்த புதிய தொடக்கத்தை இந்த வழக்கு சுட்டிக்காட்டுகிறதா? 

இந்த வினாக்களுக்கான பதில்கள் எதுவாக இருந்தாலும், தென்னாபிரிக்கா ஒரு சிறந்த தலையீட்டைச் செய்துள்ளதாக தோன்றுவதுடன், இது உரிய அங்கீகாரத்துக்கு தகுதியான தலையீடாகும்.

https://www.virakesari.lk/article/175798

அமெரிக்க காங்கிரசுடன் கஜேந்திரகுமார் சந்திப்பு.

1 month 2 weeks ago

 

நல்லதொரு சந்திப்பு.

இப்படியான சந்திப்புக்கள் அடிக்கடி நடைபெற்று எமது மக்களின் துயரங்களை எடுத்துச் சொல்லி இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

Checked
Thu, 03/28/2024 - 16:25
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed