ஊர்ப்புதினம்

கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

2 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3

05 APR, 2024 | 05:05 PM
image
 

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (05) பகல் இடம்பெற்றுள்ளது.

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய தினம் அமைச்சர் குறித்த தொழிற்சாலையை ஆரம்பித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதன்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும், போராட்டக்காரருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசார் கட்டுப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டம் இடம்பெற்றதுடன், திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றது. 

ஆயினும், மக்களின் தொடர் எதிர்ப்பினால் குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டு அமைச்சர் திரும்பியுள்ளார்.

IMG-20240405-WA0091.jpg

IMG-20240405-WA0096.jpg

IMG-20240405-WA0112.jpg

கிளிநொச்சி - பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார் | Virakesari.lk

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் - யாழில் அநுரகுமார

2 weeks 1 day ago

Published By: DIGITAL DESK 3    05 APR, 2024 | 11:30 AM

image

நாட்டில்  இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

'இலங்கையின் முன்னேற்றம் இன,மத, மொழி கடந்து ஒற்றுமையுடன் இணைந்து செல்லும்போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும்.

எனவே, வடக்கு, கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரினதும் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

ஆகையினால் அனைவரது முன்னேற்றத்துக்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகின்றபோது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும்.

இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள்.

எனவே, அனைவரும் சம உரிமைகளுடன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறுவதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கோருகின்றோம் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180491

பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு - அமைச்சர் டக்ளஸ்

2 weeks 1 day ago

Published By: VISHNU   05 APR, 2024 | 02:07 AM

image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாத ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான்  ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக்  கடந்து வந்தவன்.

தமிழ் மக்களின் அரசியல் அன்றாடப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு.

துரதிஸ்டவசமாக எனக்கு கிடைத்த ஆசனங்கள் போதாமையால் தெற்குடன் பேரம் பேசும் சக்தியை மக்கள் வழங்கவில்லை.  

தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டுமே என்ற நினைப்பு மட்டும் எனக்கு இருக்கிறது, மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை.

நான் கடந்த முறை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைத்திருந்தேன். ஆனால் சில விடயங்களை தொடக்கி விட்டேன் முடித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டேன்.

ஆகவே எனக்கும் வயது சென்று கொண்டிருக்கிறது உடல் இயலாமை தெரிகிறது, அதனால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/180470

தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

2 weeks 1 day ago
IMG-20240404-WA0099-1-750x375.jpg தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி  வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

https://athavannews.com/2024/1376603

திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் பாரிய புத்தர்சிலை

2 weeks 1 day ago

Published By: VISHNU    05 APR, 2024 | 01:37 AM

image
 

திருகோணமலை மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலய காணியில் சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.58_c2

திருகோணமலை மடத்தடி பகுதியில், பிரதான வீதிக்கு அருகாமையில் வீரகத்தி பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி முதல் பாரிய புத்தர் சிலை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டுமானப் பணிகளுக்கு நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உட்பட எவ்வித அரச திணைக்களங்களினுடைய அனுமதியும் பெறப்படாமல் சட்ட விரோதமான முறையில் குறித்த கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.59_dd

இது தொடர்பாக நகர சபையின் செயலாளர் கடந்த மாதம் 23 ஆம் திகதி சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு கட்டுமானங்களை பார்வையிட்டிருந்தார் எனினும் கட்டுமானங்கள் வழமையைப் போல் இடம்பெற்று வருகின்றன. குறித்த பகுதியில் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு பாரிய புத்தர் சிலை வைக்கப்படவுள்ளதாகவும், ஒருகாலத்தில் அப்பகுதியில் விகாரை அமைக்கப்படலாம் எனவும் தமிழ் மக்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் குறித்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் காணிக்குரிய ஆவணங்களை வழங்கக்கோரி கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்கள்.

WhatsApp_Image_2024-04-04_at_23.54.58_0a

மடத்தடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் தமிழ் மக்களுடைய எதிர்ப்பையும் மீறி புத்தர்சிலை வைக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் நிலையம் உட்பட அரச நிர்வாக மட்டங்களிலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது அது அகற்றப்படும் என கூறப்பட்டதாகவும் எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது. குறித்த இடத்திலேயே பாரிய புத்தர்சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.00_6b

இந்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் எனவும், இதுவும் ஒரு வகையாக இன ஆக்கிரமிப்பு என புத்திஜீவிகள் கவலை வெளியிடுகின்றனர். அத்துடன் நாட்டின் சட்டம் மற்றும் அரச நிறுவனங்கள் பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.00_ee

இன நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கத்தால் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் தமிழர் பகுதிகளில் பௌத்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டு இனங்களுக்கு இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் இவ்வாறான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

WhatsApp_Image_2024-04-04_at_23.55.01_56

மடத்தடி வீரகத்தி பிள்ளையார் ஆலயமானது கி.பி 1650 ஆம் ஆண்டளவில் பெரியராசகோன் முதலியார் என்பவரால் திருகோணமலை – மடத்தடி பகுதியில் அவருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது. குறித்த பகுதியில் 1958 ஆம் ஆண்டு கலப்பகுதியில் குறித்த பகுதியை சிங்கள மக்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். தற்போது 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிய வருகின்றது.

https://www.virakesari.lk/article/180466

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

2 weeks 1 day ago

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது!

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) இன்று (04) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இரத்தினபுரியின் தெமுவாவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல் கோபுரத்தை இரண்டு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3,650 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் இரண்டாம் கட்டமாக 14 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 4,500 இலட்சம் ரூபா செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் 27 வணிக வளாகங்களை உள்ளடக்கியதுடன், அதில் 17 வணிக வளாகங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் 10 வணிக வளாகங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கூட்டுத்தாபனத்தின் நிதி இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது வர்த்தகர்களையும் விற்பனையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் ஒரு சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக மையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்கள் மற்றும் ஆபரண விற்பனைக்கான ஆசியாவின் முன்னணி விற்பனை மையங்களான பெங்கொக் மற்றும் ஹாங்கொங்கில் உள்ளதைப் போன்ற சுயாதீன தர சோதனை சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏற்றுமதி சேவைகளும் இங்குள்ளது.

நினைவுப்படிகத்தைத் திரைநீக்கம் செய்து, சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு களவிஜயத்திலும் ஈடுபட்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று திறந்துவைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,

இந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிலையத்தின் பணிகள் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் சாமர சம்பத் ஆகியோரை நாம் நினைவுகூர வேண்டும்.

இந்த நிலையம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல, இது நாட்டிலேயே ஒரு பாரிய இரத்தினம் மற்றும் ஆபரண மையமாக மாறும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் முன்னேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார சரிவு காரணமாக, கடந்த 2021-2022 காலகட்டத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலும் பல சிரமங்களை எதிர்கொண்டது. 2023 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த பங்களிப்பும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

மேலும் வரி அதிகரிப்பால் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அண்மையில் என்னுடன் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, இந்த ஏப்ரல் இறுதிக்குள் வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை சமரப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், எதிர்காலத்தில், இந்தத் துறையில் இருந்து குறைந்தபட்சம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தினச் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும்

இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.

ஜூலை 2022 இல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 7.4 என்ற மறைப் பெறுமானத்தை காட்டியது. ஆனால் 2024 இல் 4.5 என்ற நேர் பெறுமானத்தை காண்பிக்கிறது.இரண்டு வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்தக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது.

2022 ஜூலை மாதமளவில் 54.6% ஆக காணப்பட்ட பணவீக்கம் இன்று 9% ஆக குறைத்திருப்பதால் ரூபாய் வலுவடைகிறது. அன்று 23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அன்று 361 ரூபாயாக காணப்பட்ட டொலரின் பெறுமதி இன்று 300.4 ஆக குறைந்திருக்கிறது. அதனை 280 ரூபாய் வரையில் மட்டுப்படுத்திகொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. உள்நாட்டுக் கடன் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும். இந்தப் பணியைத் தொடர்வதற்கான இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.

அரசாங்கக் கடன் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக காணப்படுகிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 95% ஆக குறைக்க வேண்டும். தற்போது, மொத்த தேசிய உற்பத்திக்கு மேலதிகமாக 35% வருமானத்தை ஈட்ட வேண்டும். 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 13% ஆக குறைக்க வேண்டும். மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 9.4% ஆக காணப்படும் வெளிநாட்டுக் கடன்களை2025 ஆம் ஆண்டிலிருந்து 2.3% உபரியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.

இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால், எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகள், “நீங்கள் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள், எனவே கடனைத் திருப்பித் தாருங்கள்” என்று அறிவிக்கும். ஆனால் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது.

இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.

நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம். நாம் இன்று தொங்குபாலத்தின் நடுவில் நிற்கிறோம். வீழ்வதா? மீள்வதா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,

2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அத்தியாவசியமாக காணப்பட்ட இந்த கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரைவாகப் பெருகும்.

இரத்தினக்கல் வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து இம்மாவட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வியாபார நிலையத்தின் ஊடாக வருடத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதனை விடவும் அதிகமான வருமானம் ஈட்டு முடியுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு இரத்தினக் கல் கூட இல்லாத ஹொங்கொங் இராச்சியம், இரத்தின கற்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. அதேபோல் தாய்லாந்து வருடாந்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால் இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அதனால் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுதந்திர வர்தக முறைமைகளை பலப்படுத்துவது காலோசிதமானதாக அமையும். ஜனாதிபதியும் அந்த பொருளாதார முறைமைகளை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி,

இரத்தினபுரிக்கு மிகவும் அவசியமானதாக காணப்பட்ட இரத்தினக்கல் வியாபார நிலையம் திறக்கப்பட்டமை பொருளாதாரத்திற்கு பலனளிக்கும். கடந்த காலத்தில் இரத்தினக்கல் வர்க்கர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். பொருளாதார நெருக்கடியால் வங்கி விட்டி விகிதம் 30% ஆக அதிகரித்தமையால் நெருக்கடி வலுவடைந்தது.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் சுமூகமான காலம் உதயமானது. இன்று இரத்தினபுரிக்கு சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் கிடைத்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்துள்ளது.

அஸ்வசும திட்டத்தின் மூலம் 20 லட்சம் வறிய குடும்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் காணி உரிமையை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். சரிவிலிருந்து நாட்டை மீட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை சரியாகச் செய்துள்ளார். அனுபவமிக்க தலைவர் நாட்டுக்கு தேவை என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

இன்று திறந்து வைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இரத்தினபுரிக்கு மாத்திரமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வழி செய்யும். இதன் மூலம் இரத்தினபுரியின் இரத்தினக்கல் வர்த்தக சமூகத்தை ஒழுங்குபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வருமானம் ஈட்டும் வீதத்தை அதிகரிக்க முடியும். இந்த நிலையத்தில் இரத்தின வியாபாரத்திற்கான சகல வசதிகளும் உள்ளன.

இன்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது பொருளாதாரக் மீட்சி பற்றிய விடயங்களை காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டடை மீட்க முன்வராத அரசியல் தலைவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பது வேடிக்கையானது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன,

இலங்கை வரலாற்றுக் காலத்திலிருந்தே இரத்தினக் கற்களுக்கு பெயர் பெற்றிருந்தது. அதற்கான பெறுமதி சேர்ப்பதற்கான சரியான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை.முதல் தடவையாக எமது இரத்தினக் கற்களை உலகிற்கு கொண்டுச் செல்வதற்கான மத்திய நிலையம் திறக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் இரத்தினங்களை சரியான விலைக்கு விற்று பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.

இந்த சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2012 இலிருந்து திட்டமிடப்பட்டன. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இன்று முதல் முழுக் கட்டிடமாக சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தை மக்களுக்கு கையளிக்க முடிந்துள்ளமை வர்த்தக சமூகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஊவா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, ஜானக வக்கம்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல, காமினி வலேபொட, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் சில்வா, இரத்தினக்கல் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=186023

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!

2 weeks 2 days ago

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்!

(புதியவன்)

நேற்றைய தினம் (03) வடக்கு மாகாணத்தின் உள் நிலப்பகுதிகள் பலவற்றில் நாளின் அதிகூடிய வெப்பநிலை 40 பாகை செல்சியஸ்க்கு மேலாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கீரிசுட்டானில் 40.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பிற்பகல் 1.38  மணிக்கு பதிவாகியுள்ளது. 

அதேவேளை சில இடங்களில் பிற்பகலுக்கு பின்னர் மிதமான மழை கிடைத்துள்ளது. 

எதிர்வரும் 9ம் திகதி செங்கலடி,ஏறாவூர் பிரதேசங்களுக்கு மேலாகவும், 10ம் திகதி தாண்டிக்குளம், புளியங்குளம், வாகரை பகுதிகளுக்கு மேலாகவும், 11ம் திகதி கிண்ணியா,  ஈரற்பெரியகுளம் பகுதிகளுக்கு மேலாகவும், 12ம் திகதி திரியாய், வஞ்சையன்குளம், புதுக்கமம், ஓமந்தை, மருதன்குளம், இரணைமடு, அம்பகாமம் பகுதிகளுக்கு மேலாகவும், 13 ம் திகதி அக்கராயன், முறிகண்டி, கெருடாமடு,குமுழமுனை, தண்ணீருற்று, பகுதிகளுக்கு மேலாகவும் 14ம் திகதி மண்டைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, மணற்காடு, மருதங்கேணி,உடுத்துறை பகுதிகளுக்கு மேலாகவும் 15ம் திகதி பருத்தித்துறை, நெடுந்தீவுக்கு மேலாகவும் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே இக்காலப்பகுதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை மிக உயர்வாக காணப்படும். அதேவேளை இப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட காலங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வெப்பநிலை மிக உயர்வாக இருக்கும் என்பதனால் போதுமான ஏற்பாடுகளுடன் செயற்படுவது சிறந்தது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். (ஏ)

வடக்கில் பதிவாகிய அனல் பறக்கும் வெப்பம்! (newuthayan.com)

முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன்

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 03:13 PM
image
 

கொரோனா பெருந்தொற்று காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட ‘கட்டாய சடலம் எரிப்பு’ (ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் உணர்வுகள், மத நம்பிக்கை என்பன கருத்திற்கொள்ளப்படாமல் கொரோனா காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த சமூகத்தினர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அதற்கான மன்னிப்பு கோருகின்றேன் எனவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் நேற்று (02 நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் அமைச்சராக பதவியேற்றேன். எனினும், இதுவிடயத்தில் நீர்வழங்கல் அமைச்சு தொடர்புபட்டிருந்ததால் மன்னிப்பு கோருகின்றேன். அதேபோல அக்காலப்பகுதியில் இவ்விடயதானம் தொடர்பில் அமைச்சராக இருந்தவர்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும்.

கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை புதைப்பதால் நிலத்தடி நீருக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது, நீர்வளம் மாசுபடாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டி இருந்தபோதிலும், விஞ்ஞானப்பூர்வமான விடயங்களைக் கருத்திற்கொள்ளாமல் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டது.

நான் அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேற்படி திட்டம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது. துறைசார் நிபுணர்களால் தவறான கொள்கையே கடைபிடிக்கப்பட்டுள்ளது என ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, முஸ்லிம் மக்களிடம் அரசு முறையாக மன்னிப்பு கோர வேண்டும் என்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும்.” – என்றார்.

முஸ்லிம்களிடம் அரசு முறையாக மன்னிப்புக்கோரும் விதத்திலான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் – அமைச்சர் ஜீவன் | Virakesari.lk

யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 04:35 PM
image
 

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் புதிதாக  நிா்மாணிக்கப்படவுள்ள சூரிய கலங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (04) நடைபெற்றது.  

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

அந்நிலையில் இந்திய நிறுவனத்தின் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் இன்றைய தினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. 

யாழ். அனலைதீவில் இந்திய மின் உற்பத்தி நிறுவனம் வேலைகளை ஆரம்பித்தது | Virakesari.lk

யாழ். பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 04:38 PM
image
 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்குகளில் 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தினை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது. 

பண்டத்தரிப்பு பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் இ.யொனிப்பிரகலாதன் தலைமையில், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

அதன் போது, ஒரு வர்த்தக நிலையத்தில் 19 வகையான காலாவதியான பொருட்கள் 245 இணை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உரிமையாளருக்கு 95 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், கடையை சீல் வைத்து மூடுமாறும் மன்று உத்தரவிட்டது. 

பிறிதொரு வர்த்தக நிலையம் ஒன்றில் புழு மொய்த்த, வண்டரித்த அரிசி, கடலைப்பருப்பு என்பவற்றை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. 

அத்துடன், காலாவதியான உணவுப்பொருட்கள் வைத்திருந்த மற்றுமொரு உரிமையாளருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது. 

சுகநலத்திற்கு ஒவ்வாத நிலையிலும் காலாவதியான வண்டடித்த மா உப்பு போன்றவற்றை கொண்டு மிக்சர் உற்பத்தியினை மேற்கொண்டவருக்கு  45ஆயிரம் ரூபா விதிக்கப்பட்டது. 

அதேவேளை ஆனைக்கோட்டைப் பகுதியில் கு.பாலேந்திரகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,  மோசமான நிலையில் உணவகத்தை நடாத்திய இருவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த நிலையில் இருவரும் நீதிமன்றில் சமூகமளிக்காமையால் இருவரிற்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

யாழ். பண்டத்தரிப்பில் சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தண்டம் | Virakesari.lk

இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

04 APR, 2024 | 05:01 PM
image
 

கடந்ந மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதங்கள் சிறை என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (04) நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3 படகுகளில் 1படகினை செலுத்திவந்த படகோட்டியான ஒருவருக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு படகு தொடர்பான வழக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி ஜூன் மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் படகில் இருந்தமையாலும்,  மற்றைய படகின் உரிமையாளரின் மகன் குறித்த படகில் இருந்தமையாலும் அவர் தந்தையின் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்து குற்றத்தினை ஒப்புக்கொண்டமையால் இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டன..

இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை ; ஒருவருக்கு சிறை | Virakesari.lk

தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள் !

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 7

04 APR, 2024 | 05:57 PM
image
 

யாழ். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியில் இன்றையதினம் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் ஊருக்கு வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார்.

அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறைக் கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

--

தாக்குதலுக்கு சென்ற 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள் ! | Virakesari.lk

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்! 11ஆவது நாளாகவும் தொடரும் நீதிகோரி போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு

2 weeks 2 days ago

Published By: VISHNU

04 APR, 2024 | 06:33 PM
image
 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தால் அத்துமீறி பறிக்கப்பட்டு அநீதிகள் இழைக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதிகோரி போராட்டம் 11 ஆவது நாளாக வியாழக்கிழமை (04) இன்றும் தொடர்கிறது.

02.png

இதற்கு ஆதரவு தெரிவித்து நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து பொதுமக்களுடன் இணைந்து நடைபவணியாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.

04.png

இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள், கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள், காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடுகின்றனர்.

03.png

இந்த போராட்டத்தில் பொதுமக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக  விவகாரம்! 11ஆவது நாளாகவும் தொடரும் நீதிகோரி போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு | Virakesari.lk

யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!

2 weeks 2 days ago
யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது! யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட  பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸ் அதிரடிப்  படையினர்  கைது செய்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப்  படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தப்பட்ட  மாடுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2024/1376466

திடீர் விபத்துக்களால் வருடாந்தம் 10,000 பேர் பலி

2 weeks 2 days ago
accident.jpg

திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், உணவு விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/298141

பாதுகாப்புத்துறைசார் விவகாரங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் தமக்கு இல்லை - மனித உரிமைகள் ஆணைக்குழு

2 weeks 2 days ago

Published By: VISHNU

04 APR, 2024 | 02:58 AM
image
 

(நா.தனுஜா)

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற விசேட சட்டம் அவசியமா எனவும் தாம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இருப்பினும் தாம் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல என்பதால், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு அப்பாற்பட்டு தம்மால் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது.

 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் கடந்த ஆண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனிய, ஆணையாளர்களான பேராசிரியர் ரி.தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனீஃபா, கலாநிதி ஜெஹான் டினுக் குணதிலக, நிமல்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர்.

அதற்கமைய நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை, கடமைகள் மற்றும் அதிகாரங்கள், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் என்பன தொடர்பில் தவிசாளர் தெஹிதெனிய தெளிவுபடுத்தினார்.

குறிப்பாக நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறல் பற்றி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் நிலையம் உள்ளடங்கலாக தடுப்புக்காவல் நிலையங்களுக்குச்சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், விசேட தேவையுடையோர் மற்றும் பால்புதுமையின சமூகம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துத்தரப்பினரதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி செயற்படல்,

நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் சீரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றல் போன்றவற்றில் தாம் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி தாம் கடந்த ஆண்டு ஆணைக்குழுவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது உரியவாறான விசாரணைகள் மூலம் தீர்வு காணப்படாத பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகள் நிலுவையில் இருந்ததாகவும், கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல், ஊழியர் பற்றாக்குறை என்பன அதற்குக் காரணமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தாம் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்போது சுமார் 12,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும், அவற்றில் சுமார் 9000 முறைப்பாடுகள் தம்மால் முடிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதுமாத்திரமன்றி கடந்தகாலங்களில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மிகமுக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகக் காணப்பட்டதாகவும், குறிப்பாக 2023 இல் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு தொடர்பில் 24 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவற்றை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் பொலிஸாருக்குரிய வழிகாட்டல்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

 அதேபோன்று அண்மையகாலங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' செயற்திட்டத்தினால் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி 44 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதனையடுத்து சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளல், பெண்களை இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லல், அவ்வாறு அழைத்துச்செல்லும்போது பெண் பொலிஸ் அதிகாரிகள் உடனில்லாதிருத்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராய்ந்து, உரிய வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும் ஆணைக்குழுவில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் பிரிவுக்குப் பொறுப்பாக செயற்படும் ஆணையாளர் தனராஜ் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும், ஆசிரியர் கற்பித்தல் செயற்திட்டத்திலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், விசேட தேவையுடையோருக்கு அவசியமான பயற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.

அதேவேளை பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் பற்றி ஆணையாளர் பர்ஸானா ஹனீஃபாவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளர் ஜெஹான் குணதிலகவும் தெளிவுபடுத்தினர்.

இதன்போது நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதெல்லையைக் குறைக்கும் வகையில் தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச்சட்ட மசோதா என்பன தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு, பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெஹான் குணதிலக சுட்டிக்காட்டினார். 

அதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில், இவ்வாறானதொரு பிரத்யேக சட்டம் நாட்டுக்கு அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெஹான் குணதிலக கூறியதாவது:

'நாம் நாட்டின் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல. எனவே இவ்வாறானதொரு சட்டம் அவசியமா? இல்லையா? என்பது பற்றி எம்மால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது. மாறாக இச்சட்டப்பிரயோகத்தினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அதுசார்ந்த ஆலோசனைகளையே எம்மால் வழங்கமுடியும். இருப்பினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென விசேட சட்டம் அவசியமா எனவும் நாம் ஏற்கனவே வினவியிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

 https://www.virakesari.lk/article/180373

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவனுடன் இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு!

2 weeks 2 days ago

Published By: VISHNU

04 APR, 2024 | 03:23 AM
image

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை (3) மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது.

FB_IMG_1712154357087.jpg

இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றியும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கல்விக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத் தூதுவர் தலைமை அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/180375

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!

2 weeks 2 days ago

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!

 

(மாதவன்)

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,  விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மதிப்புக்குரிய விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்து கொண்டனர்.

பின்னர் கல்லூரி மண்டபத்தில் இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்றன.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுரையினை மெளலவி ஏ.ம்.அப்துல் அஸீஸ் நிகழ்த்தினார்.

தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.

இதன்போது, மரம் நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதுடன் விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் றஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ், பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்துகொண்டனர். (ஏ)

வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!! (newuthayan.com)

---------------------------------------------------------

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

மாதவன்

சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் எற்பாட்டில் புனித ரம்ழானின் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றது.

இதில் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சிறி சாய்முரளி கலந்து சிறப்பித்தார்.

இதில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பின்னர் மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்த்தப்பட்டது.

யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் தலைவர் மெலளவி பி.எ.ஏஸ். சுபியான் ஆகியோர்களுக்கிடையிலான நட்பு ரீதியான பரிமாற்றங்கள் பகிரப்பட்டன.

இதில் இஸ்லாமியர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டு இப்தார் நோன்பினை கடைப்பிடித்தனர்.(க)

யாழில் சமூக நல்லிணக்கத்துக்கான இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (newuthayan.com)

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!!

2 weeks 2 days ago

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!!

(இனிய பாரதி)

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் இனைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகரை சேர்ந்த ஐவரும் யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18,19,20,21, வயதுடைய குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக வலையமைப்புக்குள் இருந்து பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை  விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.

இவர்கள் இன்று புனித பத்திரிசியார் பாடசாலைக்கு அருகில்  வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு  பிரிவினர் இருவரை  கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளின் போது ஏனையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில்  ஒருவர் முச்சக்கரவண்டியில் வியாபாரம்  செய்யும் போது மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் இணைந்து கைது செய்ய முயற்சித்த போது நாவாந்துறை சந்தியில் முச்சக்கரவண்டியை விட்டு விட்டு ஓடும் போது 300 மாத்திரகைளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (ஏ)

யாழில் போதை மாத்திரைகளுடன் அறுவர் கைது!! (newuthayan.com)

பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம்

2 weeks 2 days ago

Published By: DIGITAL DESK 3

03 APR, 2024 | 02:22 PM
image
 

2024 ஆம் ஆண்டில் பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளதாக டைம் அவுட் என்ற சுற்றுலா வழிகாட்டி இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தற்போது பெண்கள் தனியான செல்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக  1997க்குப் பிறகு பிறந்த பெண்களில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தனியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சாகசம் , கலாச்சாரத்தை அனுபவித்தல் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைத் தேடும் அதிகமான பெண்களுக்கு  எங்கு செல்ல வேண்டும்,  எதைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது கேள்விகளாக உள்ளது.

பல நாடுகள் பாதுகாப்பாகவும் தனியாகவும் பெண்கள் பயணிக்க  இடமளிக்கின்றன. அதாவது,  நன்கு நிறுவப்பட்ட  பேக் பேக்கர் வழிகள், நட்புடைய உள்ளூர்வாசிகள், சமூக தொடர்பு மற்றும் அமைதியான தனிமை ஆகிய  இரண்டிற்குமான வாய்ப்புகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த இலக்குகளை அடைவதற்கு பெண்கள் தனியாக சுற்றுலா செய்வதற்கு  சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது.

"இந்து சமுத்திரத்தின் முத்து" என அதன் இயற்கை அழகினால் அழைக்கப்படும் இலங்கை தெற்காசிய கலாச்சாரத்தின் சுவையை வழங்கும் அதேவேளையில் அதன் தனித்துவமான அழகை வெளிப்படுத்துகிறது. அத்தோடு, தனியாக சுற்றுலா செல்லும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் மற்றும் நிர்வகிக்கக்கூடிய அளவு ஆகியவற்றுடன், தனி சாகசங்களை மேற்கொள்ளும் பெண்களுக்கு சிறந்த தொடக்க புள்ளியாக இலங்கை வழங்குகிறது.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியமிக்க தளங்களில்  புராதன இடங்கள் ஏராளமாக இருப்பது இலங்கைக்கு பெண்கள்  தனியாக சுற்றுலா வருவதற்கு  சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.  பிரமிக்க வைக்கும் சிகிரியா குன்று முதல் அற்புதமான தம்புள்ளையின் குகைக் கோயில்கள் வரையான நாட்டின் வளமான வரலாறு மற்றும் கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை  ஆய்வு செய்யவும் மற்றும் கண்டுபிடிப்புக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

அத்தோடு, அறுகம் குடா, மிரிஸ்ஸ மற்றும் ஹிக்கடுவ போன்ற இடங்கள் கடற்கரையோர தங்கும் விடுதிகள், சர்ஃபிங் செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் உணவு வகைகள், ஓய்வெடுப்பதற்கும் பழகுவதற்கும் சரியான பின்னணியை வழங்குகிறது.

டைம் அவுட் குழு உலகளாவிய முன்னணி விருந்தோம்பல் வணிக  ஊடகமாகும். இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது. டைம் அவுட் ஊடகம் பல டிஜிட்டல் மற்றும் இயற்பியல் சேனல்கள் இணையதளங்கள், மொபைல், சமூக ஊடகங்கள், வீடியோக்கள் மற்றும் நேரலை நிகழ்வுகனை தன்னகத்தே கொண்டுள்ளது.

டைம் அவுட் உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.  333 நகரங்கள் மற்றும் 59 நாடுகளில் காணப்படும்  சிறந்த உணவு, பானங்கள், கலாச்சாரம், கலை, இசை, நாடகம், பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றை உள்ளூர் நிபுணத்துவ பத்திரிகையாளர்களின் உலகளாவிய குழுவால் எழுதப்பட்ட உயர்தர உள்ளடக்கத்தை தருகின்றது.

டைம் அவுட் குழு ஒரு முன்னணி உலகளாவிய ஊடகம் மற்றும் விருந்தோம்பல் வணிகமாகும், இது நகரத்தின் சிறந்ததைக் கண்டறியவும் அனுபவிக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் செயல்படுத்துகிறது.

பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம் | Virakesari.lk

Checked
Sat, 04/20/2024 - 14:41
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr