தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!
-இலக்குவனார் திருவள்ளுவன்
தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது;
விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லே அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதும் கவனத்திற்கு உரியதாகும்..
முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம்.
இராமன் வனவாசம் முடிந்து திரும்பிய நாள்;
வால்மீகி இராமாயணத்தில் இராமன் தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும், இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாட்டமாக வரவேற்றார்கள். மிதிலை நகரம் மக்கள் ஏற்றிய ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த நாளே தீபாவளி என்பது ஒரு கதை.
கேதார கெளரி நாள்;
கேதாரம் என்றால் பாலி மொழியில் விளை நிலம் எனப் பொருள். இமய மலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டு விட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை.
சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதப் பெற்ற பிற்காலத்தில் இறைவனும், இறைவியும் கலந்த உருவமாகக் கடவுளை உருவகப்படுத்தினர். இதை ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து(அடி 1),
“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது.
“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்”
என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை.
நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்;
நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம் தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம்.
கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக் கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்!
முன்னோர் நினைவு நாள்;
நீத்தார் நினைவுநாள் இறுதிச் சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர்.
புரட்டாசி மாதம் எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையலிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். எனவே, முன்னோர்களுக்காகக் கடைப் பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டது என்ற கூற்றும் உள்ளது.
மகாவீரர் வீடுபேறடைந்த நாள்
சமண மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்) வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த இந்த நாளில் இன்றும் சமணர்கள் இல்லங்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி விழா கொண்டாடுகின்றனர். இது இந்துக்களுக்கு தீபாவளி எனப்படுகிறது.
பிராமணிய மதத்திற்கு மாற்றாக வந்ததே சமண மதம். சமணர்களின் இருபத்தி நாலாவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் இரவு முழுவதும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதிகாலையில் சொற்பொழிவு முடிவடைந்த நிலையில் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வருத்தமான மகாவீரர் இறைவனோடு கலந்தார்.
உலகுக்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை வழிபடும் வகையில், அவர் வீடுபேறடைந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி அன்று முதல் இன்று வரை சமணர்கள் கொண்டாடும் விழாவே தீபாவளி. சமண மதம் பலவீனம் அடைந்த பிறகு, சமணர்கள் கணிசமாக இந்து மதத்தில் சேர்ந்த பிறகும் தீபாவளியைக் கொண்டாடினர். அவர்களை பார்த்தே இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் கூறியுள்ளார்.
ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படி தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கி.பி.1117 இல் சாளுக்கிய திரும்புவன மன்னன், சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.
தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன்.
வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அக்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்ரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசி தான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம் அயலவர்கள் விழா, பழக்க வழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக் கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார்.
கார்த்திகை தீபத் திரு நாளே தீபாவளியாயிற்று;
தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசை தான்.
கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம்.
நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!-
தூதொடு வந்த, மழை.
என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார்.
கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவே தான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.
இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டினார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை சொன்னர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள் தான் கார்த்திகை என்றனர்.
தமிழ் நூல்கள் போல் கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக் கூறுகின்றன. சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை கி.பி.1021 ஆண்டு கல்வெட்டொன்று தெரிவிக்கிறது.
`குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே நமது ஐப்பசியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது.
நமது கார்த்திகை தான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரலாம்.
கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா!
கட்டுரையாளர்; இலக்குவனார் திருவள்ளுவன்,
https://aramonline.in/19663/history-of-deepawali-karthigai/