Wednesday, August 20, 2014
மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும் தெரிகிறது!
கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப் பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா தமிழர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வரிகளைக் கையாளுகிறார்கள் !! சரி, முழுக்கவிதையும் உங்கள் பார்வைக்கு இதோ!
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
எளிமையாகத் தொடங்கினாலும் ஒவ்வொரு வரியிலும் கருத்தாழம் கூடிக்கொண்டேசெல்கிறது! நன்மை தீமைகள் பிறர் தர வரவில்லையென்றால் எப்படி வருகின்றன? நியூட்டன் விதி போல பிறர்கின்னா செய்தால் தமக்கு தானே வரும் என்பது உள்கருத்து! அதைக்கூட நம்பிக்கையின்பாற்பட்டதாகக் கொள்ளலாம்! ஆனால் துன்பப்படுத்தலும் அது தணிதலும் அதுபோலவேதான் என்ற வரி இன்னும் ஆழமானதென நினைக்கிறேன். ஒரு நிகழ்வு குறித்து துன்பப்படுவதும் துனபம் தணிவதும் பிறராலா அல்லது நாம் உள்மனத்தின் தெளிவாலா?
இறப்பு புதிதில்லை, வாழ்தல் இனிதென்று கொண்டாடவுமில்லை! ஆஹா! மரணம் இயல்பானது, பாவத்தின் சம்பளமில்லை என்ற தெளிவு எத்தனை பெரியது! வாழ்வு இனிதென்று கொண்டாடாத அதே நேரத்தில் கோபம்/வெறுப்பினால் வாழ்வு இனியதல்லவென்றும் சொல்வதில்லை! அடேயப்பா! எத்தனை எதிரெதிரான கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாமால் அடுக்கிச்செல்கிறார்! ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வுசெல்லும் என்று உணர்ந்ததால் புகழில் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று முடிக்கிறார்!
சிறியோரையிகழ்தல் அதனினுமிலமே என்பதை முன்னிலைப்படுத்தினால் யாவரும் கேளிர் என்பது கேலிக்குறியதாகிவிடும்! சிறியோர் என நினைத்தால் கேளிராய் நினைத்தல் எங்ஙனம்? பெரியோர் என்று மதிக்கலாம்; ஆனால் மலைத்துப்போனால் இயல்பாகப் பழக இயலாது போகலாம்! அன்பு ஒளிந்துகொள்ளும்; மாறாகப் பணிவு நாடகம் அரங்கேறும்! பெரியோராய்ப் பார்க்கப்படுபவர் நம்மைச் சிறியோராய்க் கருத நேரிடும்! கேளிராய் நினைத்தல் இயலாமல் போகும்! இது தவிர, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை"என்ற தெளிவு இருந்தால் மட்டுமே மற்ற இரண்டும் கைகூடும்! இல்லாவிடில் இது ஒரு வெற்று வேடமாகவோ அல்லது கர்வத்தின் மூலகாரணமாகவோ முடியக்கூடும்.
அதுமட்டுமில்லை புகழ்பெறுவதும் பெறாமற்போவதும் வெளியுலகு சார்ந்தது. புகழ்பெற்றவர் எல்லோரும் அறிவுடையவர் என்று சொல்வதற்கில்லை! அறிவில் பெரியோர் சொன்ன கருத்துக்களை உணர்ந்து தெளிந்ததால் மாட்சியின் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று கூறிய கூரிய அறிவை வியக்காமல் எப்படியிருப்பது!!
அடேயப்பா, பாட்டின் ஒவ்வொரு வரியையும் கடைபிடிப்பதுடன், வள்ளுவரையும் சேர்த்துக் கடைபிடிக்கவேண்டும்! எண்ணிப்பார்க்கையில் மலைப்பாகத்தானிருக்கிறது!