யாழ்ப்பாண மாவட்டம் நாகர்கோவில் பிரதேசத்தில் 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி சிறீலங்கா இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதலில் பலியான 39 மாணவர்களின் 21ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்வை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மகாவித்தியாலத்தியில் உயிரிழந்த மாணவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி நண்பகல் 12.30 மணியளவில் மாணவர்கள் தமது விளையாட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தவேளையில் சிறீலங்கா விமானப்படையின் புக்காரா விமானத்தினால் கண்மூடித்தனமாக நடாத்தப்பட்ட குண்டுவீச்சில் 39 மாணவர்கள் பலியாகினர். 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுக்குள்ளாகினர். விமானத்தின் சத்தத்தைக் கேட்ட மாணவர்கள் பயத்தினால் ஒரு மரத்தின்கீழ் நின்றவேளை மரத்தின்மீது விழுந்த குண்டினால் அந்த இடத்திலேயே 25 மாணவர்கள் உடல் சிதறிப் பலியானார்கள். இவர்கள் அனைவரும் 6-16 வயதிற்குட்பட்ட மாணவர்களே. இன்றைய இந்நினைவுகூரல் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். http://thuliyam.com/?p=42219