குளிக்கும் வேலை
குளிக்கும் வேலை
----------------------------
ஏதாவது புதிய யோசனைகள்
உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர்
அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன
மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை
இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார்
மௌன அஞ்சலி செலுத்துவது போல
மௌனமாக இருந்தோம் நாங்கள்
இரண்டு நிமிடங்கள் முடிய
இன்று மதியம் என்ன உணவு என்று
முடிவெடுத்து இருந்தேன்
பரவாயில்லை
குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும்
அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார்
நாளை கூட சொல்லலாம் என்றார்
சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது
ஒரு இருபது வருடங்களின் முன்
எனக்கும் இப்படித்தான்
சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல்
தோன்றிக் கொண்டிருந்தன
பின்னர் எப்பவோ அது நின்று போனது
அன்று குளிக்கும் போது
ஒன்றைக் கண்டு பிடித்தே விடுவது என்று
தலையில் தண்ணீரை விட்டேன்
குளியலறையில்
வழுக்கி விழுந்த
சொந்தங்கள் தெரிந்தவர்கள்
ஒவ்வொருவராக
வந்து போயினர்.