முடியாட்டம் - அஜிதன்
முடியாட்டம் அஜிதன்
கொல்லத்திலிருந்து பத்து மைல் கிழக்கே அஷ்டமுடி காயலின் கரையில் இருக்கும் அந்தப் படகுத்துறை ஆரம்பத்தில் ’பிராந்தன் தம்புரான் கடவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் ஊர் மக்களின் வழக்கொலியில் அது வெறும் ’பிராந்தங்கடவு’ என்றானது. இப்போது அதை யாரும் எப்படியும் அழைக்க வேண்டியத் தேவை இல்லை. கொல்லத்தில் படகுச் சேவை நிறுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அருகிலேயே ஐந்து கோடி செலவில் அரசாங்கம் நிர்மானித்த மாபெரும் கான்கிரீட் பாலம் ஒன்று இடைவெளிகள் விழுந்த தன் ராட்சதப் பற்களால் காயலைக் கவ்விப்பிடித்தது போல் குறுக்கே சென்றது. அதில் விரையும் வாகனங்களுக்கும் அவற்றின் பரபரப்புக்கும் தொடர்பே இல்லாதது போல நண்பகலிலும் இறுக்கமான அமைதியில் பிராந்தங்கடவு மூழ்கிக் கிடக்கும்.
பித்தனின் எல்லா அசைவுகளிலும் பித்தின் சாயலைக் காண்பது போல, அந்தப் பாழடைந்த படகுத்துறையையும், அருகே நூற்றாண்டுகள் பழைமையான நீர் ததும்பும் விழிகளைப் போன்ற சிறுகுழிகள் கொண்ட அந்தப் படித்துறையையும் காணும்போது, எக்கணமும் அவை உயிர்பெற்று ஓலமிடக்கூடும் எனத் தோன்றும். சூழ இருக்கும் தென்னை, ரப்பர் தோட்டங்களில் அவ்வப்போது கொடும் காற்றுவீசும்போது சமயங்களில் அவ்வாறே ஓசை எழும். சருகுகள் இடையே முணுமுணுக்க ’ஓ’வென்ற ஒலியுடன் உச்சவலியில் அவை அலறுவது போலிருக்கும். காயலை ஒட்டிய கரைகளில் நெருங்கிப் படர்ந்த கைதைப் புதர்களில் எப்போதும் குடியிருக்கும் இருட்டுச் சில நேரங்களில் கரிய பாம்பாக யாரும் காணாதபோது ஒற்றையடிப் பாதைகளை ஊர்ந்து கடக்கும். இரவு நெருங்க, அந்தி வெளிச்சத்தில் சற்றும் தோயாமல், ஒழுகும் கூந்தலைப் போல காயல் இருளுக்குள் செல்லும். அஷ்டமுடி காயலின் எட்டுக் கிளைகளில் இருந்தும் இருள் எழுந்து நிலமெங்கும் தழுவிப் பரவும். அந்நேரம் பறவைகளும் ஓசையெழுப்ப அஞ்சும்.
பிராந்தங்கடவுக்கு மறுபுறம் ஆள் நடமாட்டமற்ற ரப்பர் தோட்டத்தின் நடுவில் உடலெங்கும் நகங்கள் முளைத்த வஞ்சி மரங்கள் நெருக்கமாகச் சூழ ’புல மாடத்தி’ என்றழைக்கப்படும் நங்கேலியம்மாவின் சிறுகோயில் ஒன்று உள்ளது. மிகவும் நேர்த்தியில்லாமல் செய்யப்பட்ட பெண் உருவம் ஒன்று கைகளில் மலர் ஏந்தி தலையில்லாது புடைப்புச் சிற்பமாக அங்கே அமர்ந்திருக்கும். விரி கூந்தலுடன் செதுக்கப்பட்ட அவளது தலை புடைப்பு உருவாகத் தரையில் கண்கள் மூடி வீற்றிருக்கும்.
நங்கேலியம்மாதான் ராதிகாவின் குலதெய்வம். நாங்கள் ஆண்டுக்கொரு முறை வெவ்வேறு காரணங்களுக்காக இங்கு வருவதுண்டு. ஒவ்வொரு முறை அவள் என்னை அழைத்து வரும்போதும் காரணமில்லாமல் நான் வார்த்தைகள் வற்றி மௌனத்தில் ஆழ்வேன். ஆனால், அவள் கண்கள் துடிப்புற்று ஆயிரம் எண்ணங்களைப் பிரதிபலிப்பதைப் போல படபடத்து இமைக்கும். நீர் பரப்பில் பரல் மீன்கள் என எண்ணங்கள் எழுந்துவருவதை அவற்றில் காணமுடியும். கரிய கழுத்துக் குழியும் மேலுதடும் வியர்வையில் மின்ன உற்சாகப் பதற்றத்துடன் அவள் பேசத் துவங்குவாள். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் அவளது அந்தப் புன்னகை என் நெஞ்சில் ஒவ்வொரு முறையும் துருவேறிய முள்ளெனத் தீண்டிச் செல்லும். இன்னும் நூறு வருடங்கள் அவளுடன் வாழ்ந்தாலும் அது மாறாது எனத் தோன்றும். மெலிந்த அவளது தோள்பட்டையில் புரளும் சுருள்முடி எத்தனை ஆயிரம் முறை கட்டியணைத்து முகர்ந்தாலும் தலைக்குள் சுரந்தெழும் உன்மத்தத்தைத் தணிக்காது. படபடத்துப் பேசும்போது அவளது சிறு நாசிநுனி மிக மென்மையாக, அழகாக அழுந்தி விடைக்கும். அதில் வெளியேறும் மூச்சுக்காற்றின் கூரிய உஷ்ணத்தை நான் நன்கறிவேன். நீரின் அடியாழம் போல குளிர்ந்திருக்கும் அவள் உடலில் எதிர்பாராது எழும் வெப்பம். சிறுதுளியைக் கூட அள்ளிவிட முடியாத காமம் என்பது தூய அழகு மட்டுமே அல்லவா. வைரம் போன்ற அழகு. அதன்முன் எப்போதும் நான் தோற்றே நின்றிருக்கிறேன்.
அசைவற்றுத் தனக்குள் எனத் ததும்பி நின்ற காயலைக் கண்ணெடுக்காமல் பார்த்து நின்றவள் மெல்ல பின்னால் என் மார்பின்மீது சரிந்து உள்ளங்கையைக் குளிர் விரல்களால் பற்றிக்கொண்டு ஆங்கிலத்தில் சொன்னாள்,
“நான் உன்னைக் காதலிக்கிறேன்”
மேலும், எதையோ சொல்ல நினைத்தது போல, உணர்ச்சியில் அவள் மேலுதடு மென்மையாக அதிர, மெல்ல அதை இறுக்கி அடக்கிக்கொண்டாள். சற்று நேரம் கழித்து தாழ்ந்த குரலில், “போகலாமா? அங்கு நிகழ்ச்சி தொடங்கும் நேரம்” என்றாள்.
நாங்கள் வந்திருந்தது நங்கேலியம்மாவைக் காணத்தான். திருவோணத்திற்கு இன்னும் ஆறு நாட்கள் இருக்க, விசாகத் தினத்தன்று அந்தச் சிறு கோயிலில் ஓணச் சிறப்பு நிகழ்வு ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு ஏற்பாடாகியிருந்தது. இன்னும் அந்தச் சுற்றுவட்டத்தில் வாழ்ந்த ராதிகாவின் உறவினர்கள், தெரிந்தவர்கள் பலரும் அன்று அங்கு வர இருந்தார்கள். எனக்கும் ஒருவகையில் பூர்வீகம் இங்குதான். மங்கலங்காவு இல்லம் என்று இங்கிருந்த பழைய தரவாட்டிற்கும் எனக்கும் தாய்வழித் தொடர்பு உண்டு. ஆனால், நாங்கள் யாரும் அதைப் பொதுவெளியில் சொல்வதில்லை. ராதிகா கூட மிகப் பின்னால்தான் அதை அறிந்துகொண்டாள். பிராந்தன் தம்புரானோடு அந்தத் தரவாடும் பழங்கதையாய் மறைந்துபோன ஒன்று. மிகச் சமீபகாலம் வரை அந்தப் பெரிய இல்லத்தின் அஸ்திவாரம் ரப்பர் தோட்டங்களுக்கு நடுவே இடிபாடுகளாக எஞ்சியிருந்தது. பிராந்தன் தம்புரான் என்ற பாஸ்கரன் பிள்ளைக்குக் குழந்தைகள் இருக்கவில்லை. ஆனால், வாரிசாக அவன் தத்தெடுத்த வளர்ப்பு மகன் வழியாக எங்கள் தாய்வழி நீளும். எனவே, பிராந்தன் தம்புரானின் கதை எங்கள் குடும்பத்தில் காரணவர்கள் வழியாக நான் சிறுவயதிலேயே கேட்ட ஒன்று. அது நங்கேலியின் கதையும் கூட.
இரவுகளில் மிக அணுக்கமானவர்கள் கூடும்போது, முகம் தெரியாத இருளுக்குள் அமர்ந்து சில கோப்பைகள் மதுவின்மீது அந்தக் கதைகள் சொல்லப்படும். என் பதின்வயதில் ரவியண்ணா என்று எல்லாரும் அழைத்த என் தாய்மாமன் சொன்ன அக்கதை எனக்கு இன்றும் வார்த்தை மாறாமல் நினைவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் பழம்பெருமை பேசாத ஒரே ஆள் அவர்தான். திருவனந்தபுரம் புறநகரில் அவருக்கு இருந்த மாபெரும் பங்களாவின் முற்றத்துத் தோட்டத்தில் ஒரு நள்ளிரவு, வீட்டில் விளக்குகள் எல்லாம் அணைந்த பின் அவர் அதைச் சொல்லத் துவங்கினார்.
”டா புல்லே, ஆ பிராந்தண்டெ சோரையாடா நம்மளு. கேட்டா?” நீண்ட நேர அமைதிக்குப் பின் அவர் சட்டென்று ஆரம்பித்தார்.
நான் அவர் கதை சொல்லும்போது எதுவும் பதிலளிப்பது இல்லை. அவ்வபோது அவர் நீட்டிய கோப்பையில் சோடாவை ஊற்றுவதும் தொடுகைகளைப் பிரித்து வைப்பதும் மட்டுமே செய்துகொண்டிருப்பேன். ‘ம்ம்’ என்ற மறுமொழியைக் கூட அவர் விரும்புவதில்லை. மறந்து அவ்வாறு ஏதேனும் ’ம்ம்’ கொட்டிவிட்டால் சட்டென்று கதையை நிறுத்திவிட்டு ‘யாரடா அவன்?’ என்பது போல தலையை நிமிர்த்திப் பார்ப்பார். அன்று நான் எதுவும் பேசவில்லை, செவிகளால் மட்டுமே அங்கிருந்ததைப் போல உணர்ந்தேன். மாமா தன் மயிரடர்ந்த மார்பை இடது கையால் வருடியபடி, எங்கோ வானத்தைப் பார்த்துச் சற்றே கரகரத்த குரலில் பிராந்தனின் கதையைச் சொல்லத் துவங்கினார்.
இது நடந்தது நூற்றியைம்பது வருடங்களுக்கு முன்பு. அப்போது கொல்லத்தின் இப்பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் தனி ராஜ்ஜியமாக இருந்தது. அன்றெல்லாம் அஷ்டமுடி காயலின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிகள். அதில் நில அடிமைகளாக வேலை செய்யும் ஆயிரக்கணக்கான புலையர் குடிகள். பச்சை வெளியெனப் பரந்து விரிந்த பாடங்களில் விளையும் நெல், மூட்டை மூட்டையாகக் காயல் வழி மேற்கே கொல்லம் சந்தைக்கும் அப்படியே அங்கிருந்து தெற்கே திருவனந்தபுரத்திற்கும் சென்றது. அதேபோல மேலும் தானியங்கள் காயல் வழியாகவே வடக்கே வேம்பநாட்டையும் கொச்சியையும் அடைந்தன.
கொல்லத்தின் வளத்திற்கெல்லாம் காரணம் இங்கு நிலத்தோடு பிணைக்கப்பட்டிருந்த அடிமை மக்களே. பெரும்பாலும் அவர்கள் ஒற்றைச் சாதியைச் சேர்ந்தவர்கள். தண்டப்புலையர் அல்லது குழிப் புலையர் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். அரை நூற்றாண்டுக்கு முன் வடக்கே கொச்சி பகுதிகளிலிருந்து இங்கு குடியேற்றப்பட்டவர்கள். பாலக்காட்டிலும் வட கேரளத்திலும் இருந்த மற்ற புலையர் குடிகளைப் போல அல்லாமல் தண்டப் புலையர்கள் முற்றிலுமாக நில அடிமைகளாக இருந்தனர். அங்கு போல் இவர்களுக்குச் சொந்தமாக நிலமோ தனியாக விவசாயம் செய்யும் உரிமைகளோ இல்லை.
ஆற்றோரம் வளரும் தண்டை என்ற ஒருவகை புல்லையே அப்புலைய பெண்கள் ஆடையாக அணிய வேண்டும். அதிலிருந்தே தண்டப்புலையர் என்ற இடுபெயர் தோன்றியது. பனைநார் அல்லது பாக்கு மட்டையால் செய்த கோவணம் ஒன்றை மட்டுமே ஆண்கள் அணிந்தார்கள். பெண்களும் திருமணமாவது வரை அதையே அணிந்தார்கள். திருமணமான சில வருடங்களுக்குப் பின் தண்டக்கல்யாணம் என்ற சிறு சடங்கு நடத்தி, அதில் உறவினர்களாலோ உற்றார்களாலோ புல்லாடை அணிவிக்கப்பட்டனர். நெய்யப்பட்ட ஆடையல்ல அது, புற்களை ஒரு நுனியில் மட்டும் குஞ்சலங்கள் போல சேர்த்துக்கட்டி அதை இடுப்பைச் சுற்றி அணிந்துகொள்வார்கள். புலையப் பெண்கள் யாருக்கும் மேலாடை அணிய உரிமையில்லை. கற்களாலும் செதுக்கிய மரத்துண்டுகளாலும் செய்யப்பட்ட கல்லுமாலை ஒன்றை தங்கள் அடையாளமாக கழுத்தில் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
மாமா சொன்னார், ”நீ படித்திருப்பாய். உத்தரம் திருநாள் மஹாராஜாவின் ஆட்சிக் காலத்தில் திருவிதாங்கூர் அரசு 1854ஆம் வருடம் முதல் அடிமை முறையைத் தடை செய்தது என்றுதான் உனக்குத் தெரிந்திருக்கும். அது பாடபுத்தக வரலாறு, பெயரளவிலேயே நடப்பிலிருந்தது. உண்மையில் அடிமை முறை கொல்லமெங்கும் நீடித்தது. அரசுக்குக் கொல்லம் ராஜ்ஜியத்தின்மீது முழு அதிகாரம் இல்லாதது ஒரு காரணம் என்றாலும், இங்கே விளையும் நெல்லுக்குத் திருவிதாங்கூர் அரசு கட்டுப்பட்டது என்பதுதான் உண்மை.”
பெயரளவிலான அந்த ‘அடிமை ஒழிப்பு’முறை அவர்கள் ஒவ்வொருவருக்கும் விலை வைத்தது. தலைக்குப் பதினைந்திலிருந்து இருபது ரூபாய் வரை அது மாறுபடும். புலையர்கள் தாம் பெறும் கூலியைக் கொண்டு அந்தத் தொகையைச் செலுத்தி தங்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது மொழி. ஒருநாள் கூலியாக இரண்டே இடநாழி நெல் பெற்ற அவர்கள், கூலிபெறாத தங்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களின் உணவுத்தேவை போக ஒருபோதும் அந்தத் தொகையை அடைக்கமுடியாது. இரு இடநாழி கூலியிலும் பல சமயம் வெவ்வேறு காரணங்களுக்காகத் தண்டனையாகக் கூலி பிடிக்கப்பட்டது.
புலையர்கள் பகல் வெளிச்சம் முழுவதும் நிலத்தில் வேலை செய்தனர். ஆயிரக்கணக்கில் என அவர்கள் இருந்தாலும், அவர்கள் வேலை செய்ய அதேபோல பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உழைப்புக் கோரி காத்திருந்தன. உழவு, நடவு, களை பறித்தல், பள்ளங்களிலிருந்து நீர் இறைத்தல், அறுவடை, களமடித்தல் என அவ்வேலைகள் தீராது பெருகிக்கொண்டே சென்றன. இன்று நாம் கண்கள் குளிர எண்ணிக்கொள்ளும் பசும் வயல்வெளி ஒரு புலையரின் கனவில் முதுகுத்தண்டைச் சொடுக்கச் செய்யும் கொடும் ராட்சசனைப் போலவே காட்சியளித்திருக்கும். அவர்கள் அதன் நடுவிலேயே, ஏறுமாடங்களில் மூங்கில் கழிகளாலும் குழைத்த மண்ணாலும் சுவரெழுப்பி, பனையோலை கூரையிட்ட குடில்கள் கட்டி வாழ்ந்தனர். தரைதளத்தில் எங்கும் அவர்கள் வசிக்கக் கூடாது என்பது விதி.
உள்ளங்கை வெள்ளை தெரிவது முதல் மறைவது வரை அவர்கள் வயல்களில் வேலை செய்ய வேண்டும். தினமும் பதினான்கு மணிநேரம். இந்நேரத்தில் அவர்களுக்கு உணவுண்ணவோ நீரருந்தவோ கூட அனுமதி கிடையாது. வயல்களில் நீர் அருந்தினால் புலத் தீட்டெனக் கருதி அவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். வயல் அதற்குப் பின் ’தூய்மை’ படுத்தப்பட்டது. தண்டனைகள் நிர்வாணமாக வெயிலில் கிடத்துவதில் தொடங்கி நூறு கசையடிகள் வரை செல்லும். ஆனால், மரண தண்டனை மிக அரிதாகவே கொடுக்கப்பட்டது. ‘உயர்’சாதி ஆண்களை எதிர்ப்பதோ, ‘உயர்’சாதிப் பெண்களுடன் உறவு கொள்வதோ மரணதண்டனைக்குரியது. மற்றபடி ஒரு புலையரின் இறப்பு என்பது வருமான இழப்பாகவே நாயர்களால் கருதப்படும்.
இவை போக புலையர்கள் வெவ்வேறு வேலைகளுக்காக வாங்கி விற்க கைமாற்றப்பட்டனர். விவசாய வேலைகள் அதிகம் இல்லாதபோது கிழக்கிந்திய கம்பெனி கூட அவர்களை வாங்கிக்கொண்டது. சிலர் கிழக்கே இடுக்கி பகுதிகளுக்குத் தோட்டவேலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வாழ்வில் எந்தவிதமான நிச்சயத்தன்மையும் இருக்கவில்லை. ஏழ்மைக்கும் அடிமை முறைக்கும் அடிப்படை வித்தியாசம் அதுவே. தப்பிப் பிழைத்துச் சென்ற புலையர்களைப் பிடித்துவருவதற்கென்றே தனிப்படைகள் இருந்தன.
இறப்பது வரை மீட்பில்லாத ஒரு நரகம் எனத் தோன்றினாலும் அதற்குள்ளும் அவர்கள் தங்கள் கொண்டாட்டங்களைக் கண்டுகொண்டனர். மூத்த புலையர்கள் குறி சொன்னார்கள். குழந்தைகள் வரப்புகளில் நண்டுகளும் காயலில் மீன்களும் பிடித்தார்கள். இரவில் கள்ளும் பாட்டும் நடனமும் இருந்தன. நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி நின்று கோல்களால் அடித்து நடனமாடினர். தோல் வாத்தியங்களைக் கொட்டியும் வாய்மொழிப் பாடல்கள் பாடியும் இரவுகளைக் கழித்தனர். வயலை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பது என்ற பெயரில் இவை அனுமதிக்கப்பட்டன.
புலையர்கள் அவர்களது கொண்டாட்டங்களையே தங்கள் தெய்வங்களுக்கும் மூதாதையருக்கும் காணிக்கையாக வைத்தனர். கண்டகர்ணனும் கொடுங்காலியும் அறுகொலையான தெய்வங்களும் அதைப் பெற்று மகிழ்ந்தன.
மிஷனரிகள் அவர்களை மீட்க முன்வந்தனர். அவர்கள் தங்கள் தேவனைத் தொட்டு முத்தமிடலாம் என்றனர். தங்கள் வேதத்தைக் கையில் ஏந்தலாம் என்றனர். நில அடிமைகளாக இருந்தவர்களின் தலைக்கான விலையை அளித்தும் கூட தங்களை விடுவிக்கத் தயாராக இருந்தும் பல புலையர்கள் தங்கள் அறுகொலை தெய்வங்களை, மூதாதைகளைக் கைவிடத் தயங்கியே கிறிஸ்தவர்களாக மாறாமல் நீடித்தனர். அதேசமயம் அவ்வாறு மதம் மாறிய சிலர் நல்லாடைகளும் கல்வியும் பெற்றுச் சிறு தொழில்களும் சொந்த நிலங்களுமாக முன்னேற்றம் கண்டனர்.
அன்று மாமா சொன்னார், “விவேகானந்தன் அக்காலத்தில் இங்கு வந்து பார்த்த பின் சொன்னானே அதுசரிதான், கேட்டாயா? அன்றைய கேரளம் என்பது ஒரு பைத்தியக்கார விடுதிதான். பைத்தியம் என்றால் ஸ்கிசோபெர்னியா. கலெக்டிவ் ஸ்கிசோபெர்னியா. நீ பார்த்திருக்கிறாய் அல்லவா அது போன்றவர்களை? ஹைலி சிஸ்டமெட்டிக் அண்ட் டோட்டலி இம்பிராக்டிக்கல், அன்ரியலிஸ்டிக்.
சிலர் கேட்கலாம், இந்த நெல் வளமும் பிற வளங்களும் அதிலிருந்துதானே வந்தன என்று. ஒற்றுமையில்லாமல் வலிமையில்லாமல் என்ன வளம் இருந்து என்ன? எல்லாச் செல்வமும் போரிலும் வெள்ளைக்காரனுக்கு அளித்த கப்பத்திலும் அல்லவா சென்றது? எத்தனை போர்கள், எத்தனை பஞ்சங்கள், பெருந்தொற்றுகள். காலராவோ மலம்பனியோ வந்தால் ஒவ்வோர் ஆண்டும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செத்தார்கள். கூலியை மிச்சப்படுத்தியதால் மட்டுமே விவசாயத்தில் சிறு இலாபம் வந்தது. தொழிற்நுட்பமோ, கல்வியோ எந்தச் சாதியிலும் கிடையாது.
இருபதாயிரம் முப்பதாயிரம் நாயம்மார்களைக் கொண்டு இதே கொல்லத்தில் வேலுத்தம்பி பிரிட்டீஷை எதிர்த்த கதை உனக்குத் தெரியும்தானே? ஆறே மணிநேரம், மொத்தப் படையையும் திரும்ப ஓடவிட்டார்கள் வெள்ளைக்காரர்கள். வெறும் முன்னூறே வீரர்கள் கொண்ட படைதான் கம்பெனியிடம் இருந்தது. போரின் முடிவில் இருநூறு நாயர்களை ஒரே மைதானத்தில் தூக்கில் தூக்கி காட்சிக்கு நிறுத்தினார்கள். பின்னே எப்படி நடக்காது! ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்டுப்பாடு. நம்பூதிரிய நாயர் தொடக்கூடாது, நாயரைக் கண்டா ஈழவர் பன்னிரண்டடி தள்ளி நிக்கணும், புலையர் அறுபத்தாறடி தள்ளி நிக்கணும், பறையர்கள் நூறடி தள்ளி, இதுபோக தோட்டியும் காட்டு நாயக்கனும் பகலில் கண்ணிலேயே படக்கூடாது. மொத்தத்துல ஒரு பிராந்தன் கண்ட சொப்பனம் மாதிரி. அதில் பிராந்தன் தம்புரான் போன்ற ஆட்கள்தான் இயல்பாக இருக்க முடியும் போல.”
பிராந்தன் தம்புரானின் மங்கலங்காவு என்ற அந்த இல்லம் கொல்லம் பெரிநாடை அடுத்து இருக்கும் பெரும்பகுதி நிலத்தைக் கையில் வைத்திருந்தது. நிலம் என்றால் அன்றைய கணக்கில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நெல் வயல்கள், அதுபோக ஊரும் காடும். இல்லத்தில் பாஸ்கரன் பிள்ளை என்ற மூத்தப்பாச்சுதான் மூத்த மகன். அவன் போக இரண்டு இளையவர்களும் இருந்தார்கள். திருவிதாங்கூர் மஹாராஜாவின் வாளும் பட்டும் பெற்ற இல்லம் அது. ஆண்டுக்கொருமுறை அனந்தபத்மநாபன் கோயிலில் நவராத்திரியின்போது முழுதணியில் எழுந்தருளிய மஹாராஜாவை நேரில் சென்று காணும் உரிமையும் இல்லத்திற்கு உண்டு.
பெரும் படகுகளில் நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்ல அஷ்டமுடி காயலில் மட்டும் பதினான்கு படகுத்துறைகள் அவர்களுக்கென்றே இருந்தன. அவை ஒவ்வொன்றை அடுத்தும் மாபெரும் அறுத்தடிப்புக் களங்கள், நெல் பத்தாயங்கள். இவை போக இல்லத்திற்கென்று சொந்தமாக இருந்த மற்றுமொரு முக்கியமான பெருஞ்சொத்து ஏறத்தாழ அறுநூறு புலையர் குடும்பங்கள். அவர்களில் பெரும்பகுதி பேர், ஆண்களும் பெண்களும், பன்னிரெண்டு வயது முதல் அறுபது வயது வரை, முழுநேரமாக வயல்களில் உழைத்தனர். அறுவடை காலத்தில் வடக்கிலிருந்து மேலும் புலையர்கள் கடன் வாங்கப்பட்டனர். கொல்லம் ராஜ்ஜியத்திலேயே மிகவும் இரக்கமற்ற நிலக்கிழார்களாக மங்கலங்காவு இல்லத்தார் அறியப்பட்டனர். அவர்களது கொடுமைகளிலிருந்து தப்பிப் பிழைத்துச் செங்கோட்டை வழி தமிழகம் செல்ல முயன்ற புலையர்கள் எத்தனை மாதங்களானாலும் கைகளில் பச்சை குத்தப்பட்ட சின்னத்தை வைத்து அடையாளம் கண்டு இழுத்துவரப்பட்டனர்.
மூத்தப் பாச்சு அண்ணனுக்கு இளையவர்கள் இருவரும் இரண்டு கைகளாகத் துணை நின்றனர். கிழக்கிந்திய கம்பெனியுடனும் கொல்லம் சந்தையில் செட்டியார்களுடனும் வியாபாரம் பேசுவதும் கணக்கு வழக்குகளை மேற்பார்வையிடுவதும் (பார்வையிடும் அளவுக்கு அவர்களுக்குப் படிப்பறிவு இருக்கவில்லை) என்று அவர்கள் வருடம் முழுவதும் செல்வந்தர்களுக்கான சத்திரங்களிலும் விடுதிகளிலும் தங்கிக் காலத்தைக் கழித்தனர். பயணத்திலும் தாசிகளிலும் ருசி கண்டுகொண்டதாலோ என்னவோ, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணமான மூத்தப் பாச்சு பிள்ளை இல்லத்திலேயே நின்று நிலங்களையும் விவசாயத்தையும் பார்த்துக்கொண்டான். ஆண்டுக்கு ஆண்டு சமஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணம் அதிகரித்தாலும் இல்லத்துக்காரர்கள் அதைவிட மும்மடங்கு பொருளீட்டினர். ஈட்டிய பொருளையெல்லாம் செய்வதறியாது பொன்னும் அணிகளுமாக வாங்கிக் குவித்தது போக, கம்பெனியிடமே ஐரோப்பிய பொருட்களுக்காக மீண்டும் செலவிட்டனர். பலசமயம் கம்பெனி பணத்திற்குப் பதில் பரிசுகளாகவே தங்கள் கொடுக்கல்களை நடத்தினர். நீலக் கண்ணாடி, பீங்கான் ஜாடிகள், நிலைக்கடிகாரங்கள், சல்லடைத்துணி இழைகள் என.
மங்கலங்காவில் வாங்கிக் குவித்த பொன்னும், பட்டும், கம்பெனித்துணியும் யார் அணிகிறார்கள் என்பதே நாயர் குல வட்டாரங்களில் பேச்சாக இருந்தது. பாஸ்கரன் பிள்ளைக்கு பிராந்தன் தம்புரான் என்ற பட்டம் வந்ததும் அப்படித்தான். மூத்தப் பாச்சு புலையர் பெண்கள் மீது அடங்காத மோகம் கொண்டிருந்தான். பகலில் அறுபது அடிக்கு நெருங்கி வரக்கூடாது என்று விதியமைக்கப்பட்ட புலையர் பெண்கள் இரவுகளில் ரகசியமாக, வலுக்கட்டாயமாக இல்லத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இது அக்காலத்தில் மிகச் சாதாரண வழக்கமாக இருந்ததுதான். புலையப் பெண்களுடன் உறவில்லாத நாயர் தரவாடுகளே இல்லை எனலாம். அதுபோலவே சில நாயர் பெண்களுடன் புலையர் ஆண்களுக்கும் உறவிருந்தது. அவ்வாறான உறவில் நாயர் பெண்கள் கருவுற்றபோது வைத்தியர்கள் அழைத்துவரப்பட்டுக் கருகலைக்கப்பட்டது. ஆனால், புலையர் பெண்களுக்கு அந்த வசதி இருக்கவில்லை. அப்படி அவர்கள் முறைமீறி பெற்ற பிள்ளைகள் ’புலையாடி மக்கள்’ என்ற விளிப்பெயருடன் கைவிடப்பட்டுப் புலையர் குடிகளிலேயே வளர்ந்தனர். அவர்களுக்கு அக்குடிகளிலும் எந்த மதிப்போ அதிகாரமோ இருக்கவில்லை.
இவையெல்லாம் அன்றைய கேரளமென்னும் அந்த மாபெரும் பைத்தியக்கார விடுதியின் சாதாரண அன்றாடங்களே. பிராந்தன் தம்புரானுக்கு இதில் மேலும் சில பிரத்யேக நாட்டங்கள் இருந்தன. தனக்குக் கீழ் புலையர் குடிகளில் உள்ள அழகிகளை ஆட்களை வைத்துத் தேடிக் கண்டடைந்து இல்லத்திற்கு அழைத்துவருவான். அதில் பல சமயம் பருவமாகாத பெண்களும் இருந்தனர். அத்தகைய பெண்களுக்காகவென்றே சில குடும்பங்களை அவன் வாங்கவும் செய்ததுண்டு. அவ்வாறு இரவு அழைத்துவரப்படும் பெண்கள் இல்லத்தின் ரகசிய வாசலிலேயே தங்கள் புல்லாடைகளையும் கல்லுமாலையையும் அவிழ்த்து நிர்வாணமாக வேண்டும். பின் இல்லத்திற்குள் நுழையும் அவர்களுக்குத் தந்தத்தில் வேலைப்பாடுகள் கொண்ட மரப்பேழையில் வைக்கப்பட்ட பொன்னணிகளும் பட்டும் வழங்கப்படும். அதை அவர்கள் அணிந்துகொண்டு அவன்முன் செல்ல வேண்டும். மூத்தப் பாச்சு அப்பெண்களை ஓர் அரசியைப் போலவே நடத்துவான். இரவு முழுவதும் அவர்களுக்குச் சேவைகளும் உபசாரங்களையும் செய்வான். தாம்பூலம் மடித்துத் தருவதும், கால்களைப் பிடித்துவிடுவதும் என அது செல்லும். பின்னிரவில் ஏதோ ஒருகட்டத்தில் அந்த நாடகம் முடிவுக்கு வரும்.
புலையர்கள் மறுநாள் தங்கள் பெண்களை உடலெல்லாம் ரத்தக் காயங்களுடன் காயல் கரைகளில் கண்டெடுத்தனர். நிழலாடிய கரிய நீரில் கூந்தல் நீர்பாசி போல மெல்ல அலைப்பாய கிடந்த அவர்கள் பல சமயம் பொன்னும் பட்டும் அணிந்திருந்தார்கள். கண்டெடுத்தபோதே இல்லையென்றாலும் பெரும்பாலும் அப்பெண்கள் ஓரிரு நாட்களில் இறந்தும் போனார்கள். அவர்கள் விஷமேற்றப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லுவதுண்டு. புலையர்கள் அப்பெண்களைக் காயலோரமாக அவ்வணிகளுடனே புதைத்தார்கள். யாரும் அந்தப் பொன்னைத் தீண்டக்கூட நினைக்கவில்லை. கொடுங்கனவு என அந்த ஆபரணங்கள் அவர்கள் நினைவுகளில் தங்கியது.
மூத்தப் பாச்சுவின் இந்தச் செய்கையை இல்லத்தில் யாரும் கேள்வி கேட்கவில்லை. இளையவர்கள் கூட அவரிடம் இதைப் பற்றிப் பேசத் தயங்கினர். இக்கதை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் வரை நாயர் தரவாடுகளில் பரவியது, வெறும் கேலிப்பேச்சாக. அவர்கள் யாரும் அதில் அநீதியென்றோ கொடுமையென்றோ எதையும் காணவில்லை. சேமித்த தன் சொத்துகளையெல்லாம் வீணாக எரித்தழிக்கும் ஒரு மூடன் என்றே அவர்கள் அவனைக் கண்டார்கள். அப்படித்தான் மங்கலங்காவில் மூத்தப்பாச்சுவுக்கு பிராந்தன் என்ற பெயர் நாயர் தரவாடுகளிலும் புலயர் குடிகளிலும் இருவேறு அர்த்தங்களில் பரவியது.
இவ்வாறு ஐம்பதுக்கும் மேற்பட்ட புலையப் பெண்கள் கொலையுண்ட பிறகே ஒருநாள் மாலைப் பொழுதில் பிராந்தன் தம்புரான் இளம் நங்கேலியைக் கண்டான்.
காயல்கரையில் தூண்டிலிட்டுக்கொண்டிருந்த அம்மையும் மகளுமான இரு பெண்களும் பல்லக்கில் சென்ற தம்புரானைக் கண்டு நீருக்குள் இறங்கி நின்றனர். அக்காலத்தில், புலையர்கள் சட்டென்று ’உயர்’ சாதியினரைக் கண்டுவிட்டால் அறுப்பத்தியாறடி என்ற அந்த எல்லையைக் கடைபிடிக்க முடியாத சூழலில், நீருக்குள் இறங்கி நிற்பது வழக்கம். நீர் அத்தீட்டைக் கழித்துவிடும் என்று கருதப்பட்டது.
முழங்காலளவு நீரில் இறங்கி கைகட்டிக் குறுகி நின்ற தாயின் அருகே அந்த இளம் பெண்ணை மூத்தப் பாச்சு கண்டான். காயலோரம் பறித்த பொன்னரளிப்பூ ஒன்றை விரித்திட்ட தன் சுருள் கூந்தலில் சூடியிருந்த அவள் இடுப்பில் ஒரு கையை வைத்தபடி சற்றும் பயமில்லாமல் தம்புரானை ஏறிட்டுப் பார்த்தாள். தாய் அருகிலிருந்து அவளை உலுக்கியபோது அவள் சற்றே ஏளனமாக ஒரு புன்னகைப் புரிந்து திரும்பிக்கொண்டாள்.
அன்றிரவு முழுவதும் மூத்தப் பாச்சுவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை. அந்தியில் அவன் கண்ட பொன்னரளிச் சூடிய அந்தப் பெண்ணின் சிரிப்பு அவனது கற்பனையில் பலநூறாகப் பெருகியது. உடலெங்கும் பற்றியெரிவது போல, படுக்கையே அனலானது போல அக்காட்சி வருத்தியது. இந்த விரிந்த உலகத்தில் அச்சிறிய தலைக்குள் தான் மட்டும் அனுபவிக்கும் நரகம் ஒன்றை அவன் கண்டுகொண்டான். ஆனால், அங்கு மட்டுமே அவனால் வாழமுடியும், தன் இன்பங்களைத் தேடிக் கண்டடைய முடியும் எனத் தோன்றியது. மற்ற அனைத்தும் பொருள்படாத வெறுமைகள். மட்கி மண்ணாகச் செல்பவை, இந்தப் பாழுடலும் கூட. அவன் அறைக்குள் எழுந்து நடந்தான். இரவு முழுவதும் பித்தனைப் போல நடந்துகொண்டே இருந்தான். ஜன்னல் வழியாகத் தொலைவில் அஷ்டமுடி காயலின் கரிய ஒழுக்கு முழு நிலவொளியில் அவனுக்குத் துணையிருந்தது.
மறுநாள் முதல், காயலோரம் கண்ட அந்தப் புலையப் பெண்ணுக்கான தேடுதல் முழுவீச்சில் துவங்கியது. தம்புரானுக்கு அவள் தன் நிலத்தைச் சேர்ந்தவள் என்று மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால், அவனது நிலங்கள் காயல் கரையோரமாக ஐந்தாறு மைல்கள் வரை நீண்டுகிடந்தன. தம்புரானின் ஆட்கள் அவன் சொன்ன அடையாளத்தைக் கொண்டு ஒவ்வொரு சிறு குடிகளாக விசாரித்து நெருங்கியபடியிருந்தனர்.
அச்செய்தி மெல்ல புலையர் குடிகள் முழுக்கப் பரவ, நங்கேலியின் தாய்க்கு அவர்கள் தேடுவது தன் மகளைத்தான் என்று உடனே தெரிந்தது. யாரிடமும் சொல்லாமல் கண் காணாத கிணற்றடி ஒன்றிற்குள் சென்று, “ஞன்டே கொடுகல்லூரம்மோ, பெரும்புலையோ, மாவேலியப்போ, ஞன்டே பொன்னுமோளானே, அவளக் காக்கனே!” என வயிற்றிலடித்துக்கொண்டு கதறி அழுதாள். அவள் பெற்ற ஏழு குழுந்தைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்தவை போக தங்கியது நங்கேலி மட்டுமே. அக்குடியில் வேறெந்தத் தாயும் வளர்க்காதது போல அவள் தன் மகளைப் போற்றி வளர்த்தாள். புலையர் குடியில் தன் மகளே பேரழகி என்பதால் அவளை ஒருபோதும் தம்புரானின் பார்வையில் படாதவாறு அதுவரை பாதுகாத்திருந்தாள்.
நங்கேலியோ கரிய வைரம் போன்ற பெண்ணாக இருந்தாள். சிறுவயதிலேயே எதற்கும் அவள் அஞ்சுவதில்லை. வயலில் ஓடும் கருநாகத்தை இடக்கையில் பிடித்து வீசியெறிந்தாள். எந்நேரமும் அவள் பெரும் பசிகொண்டிருந்தாள். வயலில் செல்கிற நண்டுகளைப் பிடித்து ஓடை நீரிலேயே அலசி உடைத்து உண்டாள். எவர் பார்வைக்கும் அவள் தயங்கவில்லை. பால் வைத்திருந்த பச்சை நெல்லை உருவி வாயிலிட்டு மென்றாள். தோள்களில் ஆண்களுக்கு இணையான திண்மையும் அதே நேரம் உந்தி எழுந்த இளம் முலைகளில் பெண்மையின் அத்தனை அழகும் அவளுக்குச் சேர்ந்திருந்தது.
அந்தப் பதினாறு வயது வரை நங்கேலியின் தாய் ஒவ்வொரு நாளும் அவளை நினைத்து வருந்தினாள். இத்தகைய பெண் இந்தப் பாழ் பூமியில் ஏன் பிறக்க வேண்டும், இந்தச் சபிக்கப்பட்ட மண்ணில் ஏன் காலடியெடுத்து நடக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ’தெய்வங்களே! அவளை நீயே பார்த்துக்கொள்!’ என்று கடைசியாக நினைப்பாள்.
சென்ற அறுவடையில்தான் நங்கேலிக்குத் தண்டக் கல்யாணம் நடத்திப் புல்லாடை அணிவித்தார்கள். அவளது கணவன் புலையர் குடியிலேயே மிகவும் சாதுவான, உழைக்கும் இளைஞன். ஆனால், நங்கேலி இன்னமும் முழுமையாக அவனுடன் செல்லவில்லை. உடல் நலிந்திருந்த தாயைப் பார்த்துக்கொள்ள பெரும்பாலும் அவளுடனே தங்கினாள்.
நங்கேலியின் தாய் அன்றிரவு தன் மகளின் கால்களில் விழுந்து கெஞ்சினாள். “நீ எங்காவது ஓடிவிடு மகளே, இவர்களிடமிருந்து எப்படியாவது தப்பிவிடு, இவர்கள் உன்னைக் கொன்றுவிடுவார்கள். என் உடல் மட்டும் நன்றாக இருந்தால் நானும் உன்னுடனே வந்துவிடுவேன். இங்கிருந்து போய்விடு”
நங்கேலி சற்றும் யோசிக்காமல் பதிலளித்தாள் “இது ஞன்டெ மண்ணு, ஞன்டெ காயலு, ஞான் எபிடெக்கும் போவில்லா, உவன் இஞ்ஞாடு வரட்டு.” அவளது கண்கள் நம்ப முடியாத அளவுத் தீவிரம் கொண்டிருந்தன.
நங்கேலியின் தாய் அப்போதே நடந்தேறவிருக்கும் முழுவதையும் ஒரு நொடியில் அறிந்துகொண்டவள் போல, அதன் முடிவைக் கண்டவள் போல, இரு கைகளையும் தலைமீது கூப்பி அழுதுகொண்டே குடிலின் ஒரு மூலையில் சென்றமர்ந்தாள்.
பிராந்தன் தம்புரானின் ஆட்கள் நங்கேலியைத் தேடிக் கண்டடைய அதிக நாட்கள் ஆகவில்லை. அன்றிரவு அவர்கள் வந்த செய்திக் கேட்டு நங்கேலியின் தாய் மூர்ச்சையாகி விழுந்தாள். இத்தனை நாள் கதிர் கொய்ய இறங்கும் கிளியைப் போல வளர்த்த பெண்ணை அன்றுதான் கடைசியாகக் காணப்போகிறாள் என்றே நினைத்தாள். ஆனால், நங்கேலியின் முகத்தில் சிறிதும் அச்சமில்லை, சிறு அதிர்ச்சியும் கூட இல்லை. அந்தக் கணத்திற்காகவே காத்திருந்தவள் போல அவர்களுடன் செல்லத் தயாரானாள். செல்லும் முன் கண்களால் கணவனிடம் தாயைப் பார்த்துக்கொள்ளும்படி ஆணையிட்டாள். பருத்தியாடைகள் அணிந்து பந்தம் ஏந்திய ஆண்களின் மத்தியில் இடுப்பில் புல்லாடை மட்டும் அணிந்த நங்கேலி தோள் புரண்ட விரிகூந்தலுடன் ஒரு வன தெய்வத்தைப் போல நடந்துசென்றாள். வயல்வெளியின் இருளுக்குள் பந்தங்கள் அலையாடி ஆடி சிறு புள்ளிகளாகத் தொலைதூரம் சென்று மறைவதை ஏறுமாடங்களில் அமர்ந்து அவர்கள் கண்டனர்.
மறுநாள் அதிகாலை அதே புல்லாடையும் கல்லுமாலையுமாகத் தனியாகக் குடில் மீண்ட நங்கேலியை அவளது தாய் நம்பமுடியாமல் பார்த்தாள். புல்விரித்தத் தரையில் எழ முடியாமல் கிடந்த தன் தாயை மடியில் கிடத்தி நங்கேலி சொன்னாள், “உவன் என்ன தொட்டில்லம்மா”
புலையர் குடியெங்கும் அவள் மீண்டுவந்த செய்திப் பெரும் வியப்பாகப் பேசப்பட்டது. இறந்துபோனவள் மீண்டுவந்ததைப் போல அவள் முதலில் பார்க்கப்பட்டாள். அவளை மீண்டும் குடியில் ஏற்றுக்கொள்வதா ஒதுக்கிவைப்பதா என்று குல மூத்தோர் குழம்பினர். குடிக்குச் சாபத்தைக் கொண்டுவருவாளோ என்று அஞ்சினர். ஆனால், நங்கேலி மறுநாள் எப்போதும் போல வயல் வேலைக்கு வந்தாள். எல்லார் கண்களையும் நேரடியாக எதிர்கொண்டாள். அவளுக்கு எதிராகச் சொல்லெடுக்கக் கூட பிறர் அஞ்சினர். இரவு தன் கணவனிடம் மட்டும் ரகசியமாகச் சொன்னாள், “அவன் என்னை ஒருபோதும் தொடமாட்டான்.”
அன்று நடந்தது தம்புரானுக்கும் நங்கேலிக்கும் மட்டுமே தெரிந்தது. தன் புல்லாடையை வாசலில் களைந்து முழுதணி கோலத்தில் அவள் அவன் முன் நின்றாள். அதுவரை எந்தப் பெண்ணும் தொடத் தயங்கிய ஆபரணங்களையெல்லாம் அவள் மிக இயல்பாகத் தொட்டெடுத்துச் சூடிக்கொண்டிருந்தாள். தோள் தழைந்த சுருள்முடியை அள்ளிக் கொண்டையிட்டு, அதில் வைரங்கள் பதித்த நெற்றிச்சுட்டி அணிந்து, சரம் சரமாக முத்து மாலைகள், தொங்கும் தங்கக் காதணிகள், நீலக் கற்களும் பவளமும் பதித்த கசவு மாலையும், பச்சை மரகதம் பதித்த நாகப்பட மாலையும், சரப்பொலி, முல்ல மொக்கு, மாங்கா மற்றும் காசு மாலைகளும், கை ஆரங்களும், வளையல்களும் மோதிரங்களும் ஒட்டியாணமும் கொலுசும் அணிந்து, வெண்பட்டு முண்டும் மார்க்கச்சையும் உடுத்தி, தங்கச் சரிகை வைத்த செம்பட்டுச் சால்வை ஒன்றை அதன்மீது போர்த்தி அவன்முன் சென்றாள். அக்கோலத்தில் அவளைக் கண்ட பிராந்தன் தம்புரானின் உடலெங்கும் வியர்த்துக் குளிர்ந்தது. ஏதோ புரியாத ஓசையெழுப்பி கால்முட்டுகள் நடுங்க அவன் நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்துவிட்டான்.
அவன் உடல்மீது அக்கணம் மனித வரலாற்றின் ஒட்டுமொத்தச் சுமையும் ஒரு மாபெரும் கரிய யானையொன்றின் பாதத்தைப் போல தோள்களில் படிந்து அவனைப் பின்னிலிருந்து பெரும் எடைகொண்டு அழுத்தியது. சற்றுப் பிசகினாலும் அவனை மண்ணோடு அழுத்தித் தேய்த்துவிடும் எடை. நங்கேலி அவனைக் கண்டு மிக மெல்ல பரிகாசமாகப் புன்னகை புரிந்தாள். தம்புரானின் கண்கள் பெருகி வழிந்தன. நெஞ்சு வெடித்துவிடும் என்பது போல அதிர, அவன் கைகளைக் கூப்பியபடி “தேவி!” என்று கூறி தரையோடு தலை பதித்தான். நங்கேலி மெல்ல மரப்பாதுகையிட்ட தன் வலக்காலை அவன் தலைமீது வைத்தாள். பித்தனின் தலை அந்நொடியே குளிர்ந்த எண்ணெய்க் குடத்தைக் கவிழ்த்தது போல தணிந்திறங்கியது. நங்கேலி மெல்ல நடந்து படுக்கை அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள்.
அன்று தம்புரான் இரவெல்லாம் அறைக்கு வெளியிலேயே படுத்துக்கொண்டான். பல வருடங்களுக்குப் பின் அன்றிரவு அவன் நிம்மதியாக உறக்கமுற்றான், உடலே எழுந்து மிதப்பது போல. அவன் கனவுகளில் அன்று இனிமையான இளமையின் நினைவுகள் தோன்றின. காலை அவன் எழுந்தபோது நங்கேலி அங்கிருக்கவில்லை.
புலையன் கேட்டான், “உனக்கு அந்த அணியெல்லாம் பிடித்திருந்தனவா?”
அவன் தலையைத் தன் மென்மையான இளம் மார்போடு அள்ளிப்பற்றி அணைத்துக்கொண்டு சொன்னாள், “அவை வெறும் சருகுக் குப்பைகளடா, உனக்காக நான் அணியும் இந்தக் கல்லுமாலை போல அவை ஏதும் வருமோ?”
அவன் அவளைத் தழுவி அணைத்துக்கொண்டு விம்மி அழுதான்.
சில நாட்களில் நங்கேலியை மீண்டும் தம்புரானின் ஆட்கள் வந்து அழைத்துச் சென்றனர். நாளடைவில் அது வெறும் வழக்கமானது. பல நாட்கள் அவள் தேடிவந்த ஆட்களை மறுத்துத் திருப்பி அனுப்பினாள். அவள் குடி யாருக்கும் என்ன நடக்கிறதென்று புரியவில்லை. நங்கேலி அதைக் குறித்து யாரிடமும் பேசிக்கொள்ளவும் இல்லை. அவளது அன்றாடம் எப்போதும் போல வயல் வேலைகளில் கழிந்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு அக்குடியில் மதிப்பும் அதிகாரமும் வந்தது. சில நாட்களில் அவளது வார்த்தையே குடியின் கடைசிச் சொல் என்றானது. அது பிற புலையக் குடிகளுக்கும் பரவியது. பிராந்தன் தம்புரான் நங்கேலிக்கு அடிமை என்பது பெரிநாடெங்கும் வாய்ப்பாட்டானது.
நங்கேலி புலையர் குடிகளில் பல மாற்றங்களைக் கற்பித்தாள். புலையர்களின் மூத்த மக்கள் கூட அவள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டனர். கெடு மந்திரங்கள் சொல்வதையும் சபித்துக் கட்டுவதையும் அவள் கடுமையாக நிந்தித்தாள். குழந்தைகளை எக்காரணம் கொண்டும் துன்புறுத்துவதை அவள் ஏற்கவில்லை. கருங்காலிகளைக் குடியிலிருந்து எல்லா விதங்களிலும் ஒதுக்கி வைத்தாள். ஆண்டுக்கொருமுறை பெரிய அம்பலத்திற்குப் புலையர்கள் வைக்கக் கடமைப்பட்ட காணிக்கையை மறுத்து அனுப்பினாள்.
அக்காலத்தில் பிராமணர்கள் பூசை செய்யும் கோயில்களுக்குப் புலையர்கள் கால் மைல் தொலைவில் நடப்பட்ட ஒரு கல்லின் அருகில் தங்கள் காணிக்கையாகத் தேங்காயும் காசும் வைத்து விலகிச் செல்ல வேண்டும். அதைக் கோயில் வேலை செய்யும் பணியாள் நீர் தெளித்துச் சுத்தம் செய்து பிராமணரிடம் வைத்துப் பூசை செய்து சந்தனமும் தீர்த்தமும் எடுத்துவந்து அக்கல்லின் அருகே வைத்துச் செல்வார். இது ஆண்டுக்கொருமுறை அறுவடையை ஒட்டிச் செய்ய வேண்டிய சடங்காக நீடித்தது.
நங்கேலி அவ்வருடம் புலையர் குடிகள் யாரும் காணிக்கை வைப்பதில்லை என்று முடிவுசெய்தாள். “உவன்டே தெய்வவும் ஞன்டெ தெய்வவும் எங்கனயா ஒன்னாயிரிக்குக? ஞம்மடே கள்ளும் மீனும் உவன்டெ மாடன் தின்னுவோ?”
புலையர்களின் இந்த எதிர்க்குரல்கள் ஒவ்வொன்றும் இல்லத்திற்கு வந்த இளைய தம்புரான்மாரை எட்டியது. ஆனால், மூத்தப் பாச்சுவை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மூத்தப் பாச்சுவுக்கு நங்கேலி மீது இருக்கும் அடங்காப் பித்தின் முன் அவர்கள் எதுவும் சொல்ல முடியாதென்று தெரிந்தது. அவன் எதிலும் கவனம் கொள்ளாதவன் ஆனான். எப்போதும் சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தான். சரியான உணவில்லாமல் அவனுடல் வேகமாக மெலியத் துவங்கியது. மேலும் மேலும் பொன்னாபரணங்களை வாங்கிக் குவித்தான். அதனால் அவ்வருடத்தின் வரிப் பணத்தையோ கோயில் நிபந்தங்களையோ கூட இல்லத்தால் செலுத்த முடியாமல் ஆனது. சமஸ்தானத்தில் இல்லத்திற்கு இருந்த செல்வாக்கால் தற்காலிகமாக அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இப்படியாகப் பல நாட்கள் சென்ற பின்னொருநாள் பிராந்தன் தம்புரான் நங்கேலியைப் பகல் வெளிச்சத்தில் கண்டான். வயல் நடுவே ஏறுமாடத்தில் தன் குடிலில் அமர்ந்திருந்த அவள், கணவனின் காலை மடியிலேந்தி, அதைக் கைகளால் மெல்லப் பிடித்துவிடுவதை அவன் தொலைவிலிருந்து பார்த்தான். அவர்கள் பேசிச் சிரித்துக்கொண்டதையும் கண்டான். அவளிடம் அந்தக் கணம் அவன் காணும் எந்த நிமிர்வும் பாவனையும் இல்லை. கணவன்முன் முழுமுற்றாக, இயல்பாக, மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தாள்.
பிராந்தனின் உடலெங்கும் கடும் சினம் மூண்டது. அவனைச் சுற்றிலும் கண்ணெட்டும் தொலைவரை அறுவடைக்குக் காத்திருந்த நெல் வயல்களனைத்தும் மாலை ஒளியில் பற்றியெரிவது போல சிவந்து நின்றன. அக்கணமே அதை மொத்தமும் தீயிட நினைத்தான். அதனுடன் சேர்த்து அக்குடிகள் எல்லோரையும் எரித்தழிக்க வெறிகொண்டான். புழுக்களைப் போல அவர்கள் அத்தீயில் வெந்து கரிவதை எண்ணியெண்ணிக் களிப்புற்றான். தலைக்குள் அவ்வெண்ணங்கள் மீண்டும் மீண்டும் பற்றி எரிந்து கொதிக்கச் செய்தன. “புழுக்கள், எல்லாம் புழுக்கள்!” உடலெல்லாம் கூச அவன் பல்லக்கிலிருந்து காறி உமிழ்ந்தான்.
அடுத்தமுறை நங்கேலி இல்லத்திற்கு வந்தபோது அவன் சினம் பொங்க “எடீ, ஆரடீ அவன்” என்று கூவி அவள் கையைப் பிடிக்க நெருங்கினான். சட்டென்று திரும்பிய அவள் “ஞீ என்ன தொடுவோடா?” என்று உருமியபடி தன் கால் பாதுகையை எடுத்து அவனை மீண்டும் மீண்டும் அறைந்தாள். தம்புரானின் தசைகள் ஒவ்வொன்றும் முறுக்கேறித் தளர்ந்தன. அவன் தலைக்குள் சிறுமையும் அவமானமும் சினமும் பெருக, அவற்றையெல்லாம் மீறிய பெரும் களிப்பொன்றும் ஒருசேர எழுந்தது. கைகளால் தன் தலையை மறைத்தபடி குருகி அமர்ந்துகொண்டு “இல்லா, இல்லம்மே இல்லா” என்று கேவினான். நங்கேலி அவனைப் பாதுகையிட்ட காலால் மிதித்துத் தள்ளிவிட்டு அங்கிருந்து மறைந்தாள்.
அன்றிரவே நங்கேலி தன் கணவனுடன் மீண்டும் அங்கு வந்தாள். புல்லாடையும் கல்லுமாலையுமாக அவனைக் கைப்பிடித்து வாயிலைக் கடந்து உள்ளே சென்றாள். மூத்தப்பாச்சு சொல் ஒன்றும் எழாமல் திகைத்து நிற்க, அவள் கணவனுடன் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டாள். சற்று நேரத்திலேயே பூட்டிய அறைக்குள் அவர்கள் உறவுகொள்ளும் சத்தம் எழுந்தது. வன் மிருகங்கள் புணர்வது போன்ற ஓசை. இறைச்சலும் ஓலமுமாக, பெரும் சுகமும் உச்ச வலியுமாக, இல்லத்தின் மரத்தளம் அதிர, மண்சுவர்கள் அதிர அது எதிரொலித்தது. பற்களைக் கடித்தபடி பிராந்தன் இரு காதுகளையும் அடைத்துக்கொண்டான். ஆனால், அக்கூச்சல் அரம்போல அவன் செவியைத் துளைத்து ஊடுறுவி உடலை நடுக்கியது. அவன் கழுத்து நரம்புகள் புடைத்தெழுந்தன.
“கொடு கொடு, வேண்டும் வேண்டும், தீராது தீராது வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் அக்குரல் சுவரைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. பிராந்தனின் உடலில் தசைகளனைத்தும் தீப்பட்டது போல எரிய, தாளமுடியாத ஒருகணத்தில் அறைச் சுவரில் பதித்த மஹாராஜாவின் வாளை உருவி கதவை அறைந்தான். மீண்டும் மீண்டும் மூர்க்கமாக அதைத் தாக்கினான். அறைக்குள்ளே புணர்வொலிகள் மேலும் உச்சமடைந்தன. பிராந்தன் தனக்குள் எழுந்த மொத்த ஆற்றலையும் திரட்டிக் கதவை ஓங்கி அறைந்து திறந்தான்.
விரிந்த கூந்தல் தோள்களில் புரள, கரிய உடலெங்கும் வியர்வையில் நனைந்திருக்க, நகைக் கூச்சலிட்டபடி நங்கேலி தரையில் கிடந்த தன் கணவன் மீது மூர்க்கமாக எழுந்தமர்ந்து உறவுகொண்டாள். தரையில் சுற்றிலும் பொன்னணிகள் சிதறிக் கிடந்தன. முத்துச்சரங்கள் உடைந்து பரல்கள் எங்கும் சிதறியிருந்தன. அவள் உடல் சன்னதம் கொண்டது போல இடுப்பிலிருந்து அலையலையாக நடுக்கமுற்றது. மாபெரும் கரிய கூந்தல் இடமும் வலமுமாகத் துள்ளியெழுந்தது. அவள் பின்னால் அஷ்டமுடி காயல் கரிய மினுக்குடன் ஒளிர்ந்து ஒழுகியது.
தம்புரான் வாளை ஓங்கியபடி அவளை நிறுத்தும்படிக் கூவினான். அவன் கண்களைப் பார்த்து உறக்கச் சிரித்தபடி கேட்டாள், “புலயத்திடெ பூர்க்கே கேறனாடா தம்ப்ரானே?”
கைகளை தரையில் ஓங்கி அறைந்து மீண்டும் கேட்டாள் “புலையத்தியின் யோனியில் ஏற வேண்டுமாடா தம்புரானே?”
அக்கேள்வி தம்புரானின் தலையிலிருந்து முதுகுத் தண்டுக்குச் சிலிர்த்துப் பரவியது. வாளை ஓங்கியபடி அவளை நோக்கி ஓடினான். அவனால் ஒருபோதும் அவளை எதிர்க்க முடியாது என்று அதுவரை எண்ணியிருந்தான். அவன் நெருங்கிய கணம் அவள் “அரிஞ்ஞிடடா தலையே!” என்று கூறி பேய் போல நகைத்து, கையால் முடியை அள்ளி விலக்கிக் கழுத்தைக் காண்பித்தாள். தம்புரான் ஒருகணம் அதில் சிறு அரவைப் போல புடைத்தெழுந்தோடிய பச்சை நரம்பைக் கண்டான். “தேவி!” என அவன் நெஞ்சம் எழுந்தது, அவ்வெண்ணம் அவனைக் கடந்த கணமே அவன் வாள் கையிடறியது. நங்கேலி கணமும் தாளாமல் கீழே விழுந்த வாளை எடுத்து ஒங்கித் தன் கழுத்தை அரிந்திட்டாள். நகைக்கும் அவள் முகம் எடைகொண்டு ஓசையுடன் தரையில் விழுந்து புரண்டு தம்புரானின் காலை வந்து தொட்டது.
அன்று தம்புரானின் பேய் போன்ற அலறல் அஷ்டமுடி காயலெங்கும் எதிரொலித்தது. உதறிய அவன் கால்கள் அவள் சுருள்முடியில் சிக்குண்டன. நகைக்கும் அப்பார்வை அவனை விழுங்க வந்தது போல. மீண்டும் மீண்டும் அதை வெறிகொண்டு உதறியபடி அலறிக்கொண்டே ஆடைகளெல்லாம் களைந்து இல்லத்திலிருந்து ஓடி மறைந்தான்.
மாமா பெருமூச்செடுத்துச் சற்று நிறுத்தினார். “நங்கேலி வெறும் பெண்ணில்லையடா, ஒருபோதும் இறப்பில்லாத ஒன்றின் சொல்” அவர் சொன்னார், “மரணத்தின் மீது குத்திவைத்த எதுவும் அழிவில்லாததே. அவளுடைய அந்தச் சிரிப்பு இருக்கிறதல்லவா, அது அந்தக் காலனின் செய்தியல்லவா?” வானத்தைப் பார்த்திருந்த அவர் கண்களில் சிறிது ஈரம் தங்கியிருந்தது.
நங்கேலியின் இறப்பையடுத்து அவள் கணவனும் இரண்டாம் நாள் காய்ச்சலில் இறக்க, மங்கலங்காவு இல்லத்தின் புலையர் குடியினர் மொத்தமும் திரண்டுவந்து இல்லத்தின் மாளிகையைத் தீயிட்டு எரித்தனர். இளைய தம்புரான்களில் ஒருவன் தீயில் இறக்க மற்றவனும் இல்லத்து மக்களும் ரகசிய வாசல் வழி தப்பி பட்டனம்திட்டா சென்றனர். மூன்று நாட்கள் அந்த மாளிகை நின்றெரிந்தது. பத்தாயங்களில் இருந்த நெற்களெல்லாம் எல்லோராலும் பிரித்தெடுக்கப்பட்டுப் பின் அப்பத்தாயப் புரைகள் கொளுத்தப்பட்டன. களமெங்கும் சிதறிய நெல்மணிகளைக் கொத்த காடுகளிலிருந்து கூட்டம் கூட்டமாகக் கிளிகள் வந்திறங்கின. கொல்லத்தில் விடுதலையடைந்த முதல் மக்களாக மங்கலங்காவின் புலையர்கள் இருந்தனர். நங்கேலி, சமூக வரலாறுகளில் மறைந்துபோன அவர்களின் முதல் போராளி. புலையர்கள் பலரும் பல திசைகளில் சிதறிப் பரவினர். வெகு சிலர் காயல்கரைகளிலேயே தங்கிவிட்டனர். சிறு நிலங்களைக் கைப்பற்றிச் சொந்தமாக விவசாயம் செய்தனர். இல்லத்தாரால் பிறகு ஒருபோதும் தங்கள் மைய நிலத்தை மீட்க முடியவில்லை. வெவ்வேறு நாயர் சிறுகுடிகளால் அவை அபகரிக்கப்பட்டன. புலையர்கள் நங்கேலியைப் புதைத்த வஞ்சி மரங்கள் அடர்ந்த ஒரு காயல்கரையில் அவளுக்காக நடுகல் ஒன்றை நட்டனர்.
பல நாட்களுக்குப் பிறகு ஆடைகளில்லாமல் ஒருவன் புலையர் குடியருகே தோன்றினான். முகமெல்லாம் முடியடர்ந்து, உடல் வற்றி எலும்பும் தோலுமாக இருந்த பிராந்தனை அவர்கள் உடனே அடையாளம் கண்டுகொண்டனர். ஆனால், யாரும் அவனை எதுவும் செய்யவில்லை. தன் உடலில் சிறு துரும்பென எது பட்டாலும் அவன் அலறித் துடித்தான். தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டான். எப்போதும் கால்களை வெறிகொண்டவன் போல உதறினான். அது பல இடங்களிலும் புண்ணாகிச் சீழ்கட்டியிருந்தது. சிலர் அவன்மீது இரக்கம் கொண்டு உணவு வைத்தனர். புலையர் குடியிலேயே எப்போதும் அவன் படுத்துறங்கினான். சில நாட்களுக்குப் பின் அவன் மீண்டும் காணாமலானான். அந்தியில் ஒருநாள் வெளிறிய அவன் உடல் அஷ்டமுடி காயலின் நடுவே கரிய மாபெரும் கூந்தலில் சிக்கிய சிறு ஈறு போல மிதந்ததை அவர்கள் கண்டார்கள். அவன் உடலெங்கும் நீண்ட பாசிகள் பற்றியிருந்தன. அந்தப் படித்துறைதான் நாளடைவில் பிராந்தன் கடவு என்றானது.
கொல்லத்தில் பின் என்னவெல்லாமோ கால மாற்றங்கள் வந்துவிட்டன. அய்யன்காளியும் கல்லுமாலை அறுத்து வீசும் போராட்டமும் நடந்து முடிந்தது. இப்போது அந்தப் பழைய கேரளம் ஓர் அரசியல் நினைவாக, கேரள நவோத்தானம் செழித்த வளமிக்க மண்ணாக நினைவில் நிற்கிறது.
“ஆனாலும் அந்தப் பிராந்து விட்டிட்டில்ல மோனே, அது ஒருபோதும் நம்மை விடாது”
மாமா ஒருவித விலக்கத்துடன் அக்கதையைச் சொல்லி முடித்தார். அன்று அவரது மனதிற்குள் என்ன எண்ணம் சென்றுகொண்டிருந்தது என்று அப்போது சிறுவனாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் கசப்பால் நிரம்பியிருந்தார் என்று இப்போது சொல்ல முடிகிறது. எல்லா அறிவுஜீவி மலையாளிகளைப் போல அவரும் இளம் வயதில் கம்யூனிஸத்திற்குள் சென்று பின் அதன் உள்ளரசியலால் விலகிவந்தவர்தான். ஆனால், இறுதிவரை செங்கொடி கண்டால் கண்ணீர் சிந்தும் ’சகாவு’ ஒருவர் அவருக்குள் இருந்தார். பின்னாளில் பெரிய வியாபாரம் ஒன்றைத் தொடங்கி, அதுவும் மெல்ல நஷ்டத்தைச் சந்தித்தது. தன் தொழிலாளிகள் அனைவருக்கும் நல்ல வசதி ஏற்படுத்திக் கொடுத்து விலகினார். கடன்கள் பெருகின. அன்று அக்கதையைச் சொன்ன காலங்களில் அவர் கசப்பான குடும்பச் சூழலில் இருந்தார். அதன்பின் சில மாதங்களிலேயே மனைவியுடன் திருமண விலக்கம் பெற்றார். கடுமையான குடியில் மூழ்கினார்.
எனக்கு என் குடும்பத்தில் தொடர்பிருந்த ஒரே ஆள் அவர்தான். அவர் ஒருவர்தான் ராதிகாவுக்கும் எனக்குமான உறவை ஏற்று வாழ்த்தினார். எங்கள் திருமணத்திற்கும் அவர் மட்டும்தான் வந்திருந்தார். ராதிகாவைக் கட்டியணைத்து வாழ்த்திவிட்டுக் கடும் மதுநெடியுடன் என்னருகே வந்து என் கையைப் பற்றிக்கொண்டு சொன்னார் “நெஞ்சில் தீயுள்ள குட்டியானு, நீ ஒன்னும் நோக்கண்டா”
சில வருடங்களுக்குப் பிறகு கோவளத்தின் அருகே கடலில் குதித்து மாமா தற்கொலை செய்துகொண்டார். இரண்டு நாட்கள் கழித்துக் கரையொதுங்கிய அவரது ஊதிய மீன்கள் அரித்த உடலை நான்தான் அடையாளம் கண்டு சொன்னேன்.
ராதிகாவைத் திருமணம் செய்துகொண்ட இந்தப் பத்தாண்டுகளில் எனக்கு என் குடும்பத்துடன் வேறு எந்தத் தொடர்பும் இல்லை.
நாங்கள் நின்ற இடத்திலிருந்து நங்கேலியம்மாவின் கோயிலுக்கு அரைக்கிலோமீட்டர்வரை உள்ளே நடக்க வேண்டும். இருபுறமும் ரப்பர் மரங்கள் நெருக்கமாக வைக்கப்பட்டிருந்த தோட்டத்தின் நடுவே தனியாகச் சென்ற ஒற்றையடிப்பாதையில் இறங்கி நாங்கள் நடந்தோம். ஒருகாலத்தில் இவையெல்லாம் நெல்வயல்களாக இருந்தன என்பதை நம்பவே சாத்தியம் இல்லை. கோயிலை நாங்கள் நெருங்க நெருங்கக் கூட்டத்தின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தது. சற்று தூரத்தில் வஞ்சிமரங்கள் அடர்ந்த அந்த வளைப்பும் சிறு கோயிலும் கண்ணுக்குத் தெரிந்தது. ராதிகா உற்சாகமாக என்னை நோக்கி “பார்த்தாயா, அதோ” என்று புன்னகைத்தாள். அங்கே ஆண்களும் பெண்களுமாக ஐம்பது பேர் வரை கூடியிருந்தது தெரிந்தது. என்னையறியாமல் சற்று மிகைக் கவனமானேன்.
ராதிகா ஓடிச் சென்று அங்கே நின்ற பெண்களை வாழ்த்தினாள். அவர்கள் எல்லோரும் அவளது உறவினர்களே. எல்லாரிலும் வெவ்வேறு விதமாக அவளின் சாயல் தெரிந்தது. அவர்கள் என்னைக் கண்டவுடன் புன்னகையுடன் வாழ்த்தினர். “மோனே சுகந்தன்னல்லா?”
நான் ‘ஆம்’ என்று தலையசைத்துப் புன்னகையுடன் ராதிகாவைப் பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவராக அவளைக் குறித்து என்னிடம் புகார்கள் அளிக்கத் துவங்கினர். அவள் அவர்களுடன் பேசுவதில்லை, அவள் மெலிந்துவிட்டாள், ஆளே மாறிவிட்டாள், அழகிய முடியைக் கத்தரித்துக்கொண்டாள் என.
அவர்கள் எல்லாரும் வெகு நாட்களுக்குப் பிறகு அன்று நங்கேலியம்மா கோயிலில் ‘முடியாட்டம்’ என்ற நிகழ்த்துக் கலையை ஆட வந்திருந்தனர். ஓணத்தை ஒட்டி ஆடப்படும் ஒரு வளச்சடங்கு அது. வெகுநாட்களாக நின்றுவிட்ட அதை இப்போது மீட்டெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ‘குறிப்பிட்ட’ சாதிக்கே உரிய அச்சடங்கு நிகழும்போது ‘பிற’ சாதியிலிருந்து யாரும் அந்த வட்டாரத்திற்குள் நெருங்கக்கூடாது என்று முறை இருந்தது. அதை மீறி தவறுதலாக அச்சமயத்தில் யாரேனும் கண்ணில் பட்டுவிட்டால் அவர்கள் கடும் துர்வாக்குகளால் சபிக்கப்பட்டனர். சில சமயம் வெறுமனே கைகளால் சுட்டப்பட்டனர். ‘சூண்டல்’ எனும் அச்சாபம் ஏழு தலைமுறைகளைத் தொடரும் என்றும் ‘சூண்ட’ப்பட்டவரின் வீட்டில் மூதேவி குடியேறி தொடர் துர்மரணங்களும் குழந்தையின்மையும் ஏற்படும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது. எங்கள் குடும்பத்திலும் கூட அந்தச் சாபம் உள்ளதாக மாமா இறந்தபோது பேசப்பட்டது.
இப்போது முடியாட்டம் கலை வெறும் கலாச்சார காட்சிப் பொருளாக மாறி தேய்ந்துவிட்டது. அன்றைக்குக் கூட அச்சடங்கைப் படம் பிடிப்பதற்காக ஒரு குழு மைக்கும் கேமராவுமாக வந்து நின்றது.
சற்று நேரத்திலேயே நிகழ்ச்சித் துவங்கியது. கூடியிருந்தவர்களில் ஒரு பெண் ஒற்றைக் குரலில் முதலடி பாட பிற பெண்கள் ஒன்றாக அதைத் திரும்பப் பாடுவது போல அது அமைந்திருந்தது. அருகே செண்டையும் மத்தளம் போன்றதொரு வாத்தியத்தையும் இரு இளைஞர்கள் வாசிக்க, முன்னால் நின்ற ஆறேழு பெண்கள் மொத்த உடலையும் இடமும் வலமுமாக அசைத்தனர். அப்பெண்களில் பத்து வயதே ஆகியிருந்த சிறுமியும் இருந்தாள். ஆடத் தொடங்கியபோதே அவள் மிக நளினமாகத் தன் ஹேர் கிளிப்புகளைக் கழற்றி அருகில் நின்ற தந்தையிடம் கொடுத்துவிட்டுப் புன்னகைத்தாள், ராதிகாவின் அதே புன்னகை.
பாடல் வரிகள் ஒவ்வொன்றாக அவர்கள் பாடப்பாட ஆடிய பெண்களின் அசைவுகள் தாளத்தோடு சேர்த்து அதிகரித்தன.
முடியாடுன்ன கன்யகப் பெண்ணே, காணட்டே முடியாட்டு
முடியாடுன்ன கன்யகப் பெண்ணே, காணட்டே முடியாட்டு
அந்தப் பெண்கள் மெல்ல தங்கள் சுருள் கூந்தலை எடுத்து ஒருபுறமாக இட்டனர்.
அழிச்சிட்ட வார் முடிக்கட்டு, மாடி மறிக்கட்டே
அழிச்சிட்ட வார் முடிக்கட்டு, மாடி மறிக்கட்டே
இப்போது அவர்கள் குனிந்தபடி கைகளால் இருபுறமும் முடியை மாறி மாறி வீசியெறிந்தனர்.
இடத்தோட்டும் வலத்தோட்டும் அங்கன, ஆடி பொலியம்மே
சேலொத்த சோடுகள் வச்சு, ஆடி பொலியம்மே
கன்னியும் அன்னையும் ஒன்றான தருணம். அவர்களது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரம் கொள்ளத் துவங்கியது. ஆண்கள் கொண்டாட்டமாகத் தாளம் கொட்ட, பார்த்திருந்த பெண்களின் கண்கள் மட்டும் தீவிரம் கொண்டன. ஒவ்வொருவரும் மனதால் அந்த ஆட்டத்தை நிகழ்த்திப் பார்த்தபடி நின்றது தெரிந்தது.
முடியாட்ட களத்திலு வந்நு, ஆடி தெளியம்மே
சேலுறு நங்கேலி தேவி, ஆடி தெளியம்மே
என்றவுடன் சூழ இருந்த பெண்களெல்லாம் ஓசையெழுப்ப ஆடியவர்கள் வேகமாக முடியைச் சுழற்றிச் சுழற்றி வீசினர். சில பெண்களின் நீண்ட சுருள் கூந்தல் தரையில் வந்து வந்து அறைந்து சென்றது. சுற்றியிருந்த பெண்கள் சிலரும் சன்னதம் வந்தது போல அவர்களுடன் இணைந்துகொண்டனர்.
முடியாட்ட களத்திலு வந்நு, ஆடி தெளியம்மே
சேலுறு நங்கேலி தேவி, ஆடி தெளியம்மே
மீண்டும் அதே வரிகள், இம்முறை தாளம் மேலும் வேகமெடுத்தது. என் கண் முன்னால் கருங்கூந்தல் பரப்பொன்று அலையடித்துச் சென்றது. விசையுடன் அள்ளித் தெளித்த நீர் போல, காற்றில் எழுந்து சுடர் விடும் கரிய நெருப்பைப் போல. எங்கோ காலமற்ற ஓரிடத்தில் நின்றுகொண்டு அவை எதையோ சொல்லின. மீண்டும் மீண்டும் அதே உக்கிரத்துடன் மண்ணில் அறைந்தறைந்து சொல்லின.
நான் அச்சிறுபெண்ணைப் பார்த்தேன். ஒரு முழமே நீண்டிருந்த அவள் கூந்தலும் அதே உக்கிரத்துடன் சுழன்றாடியது. எத்தனை ஆழம்? அதன் ஆழம் நீண்டு நீண்டு மண்ணின் பாதாளம் வரை தீண்டிவந்தது.
அங்கெழுந்த விம்மல் ஒலிகள் கூட அந்த ஆழத்திலிருந்து வருபவை போல. மாபெரும் கரிய ஒழுக்கு, ஒற்றை பேரொழுக்கு, பின்னிப்பிணைந்த மாபெரும் வேர்க்கத்தை. வலியும் வேதனையுமென்றே ஆன ஆதி வேர்க்கத்தை, ஒவ்வோர் உயிரும் அதன் சிறு தளிரிலை மட்டுமே. வேரொன்றே அழிவில்லாதது. கரிய விழுதுகள். இரவில் படர்ந்து உலகை அணைக்கும் ஆதிபேரிருள். அன்னை, அன்னை!
நான் அச்சிறிய பெண்ணையே பார்த்தபடி நின்றேன். அவள் உடலே இடமும் வலமும் கொடுங்காற்றில் நாணல் போல அசைந்தாடியது.
முடியாட்டம் காணும்போழ் அம்மா, ஆனந்தம் கொள்ளுந்நே
முடியாட்டம் காணும்போழ் அம்மா, ஆனந்தம் கொள்ளுந்நே
மீண்டும் மீண்டும் அவ்வரிகள். என் உடல் மெல்ல நடுக்கம் கொள்ளத் துவங்கியது, அக்கரிய இருளுக்குள் முடிவில்லாது வீழ்ந்து அழிவதுதானா மானுட விதி? மீட்பில்லாத அந்த மரணக்குழி, கூந்தல் நீரிலென நான் மூழ்கினேன், மூச்சு முட்டுவது போல ஒருகணம். என் கால்கள் உலைந்தன, யாரோ பலமாக அதைப் பற்றிப் பின்னிழுப்பது போல உணர்ந்தேன். அவள் புன்னகை, ஆம் அதுவேதான். நான் நிலைகுலைந்து சட்டென்று அவள் கையைப் பற்றிக்கொள்ள நினைப்பதற்குள் யாரோ நெஞ்சில் உதைத்தது போல் பின்னால் தள்ளப்பட்டேன். கண்கள் இருள, என் உடலெங்கும் கரிய வேர்கள் சூழ்ந்துகொண்டன. உதற உதற என் கால்களும் கைகளுமெல்லாம் அதில் மேலும் மேலும் சிக்குண்டு நிலைத்தன, கோடி வேர் நுனிகளின் தழுவல் என, மிக மென்மையாக, மிகத் தீவிரமாக. உச்சவிசையும் அசைவின்மையும் என அதை ஒருசேர உணர்ந்தேன். காலமற்ற நரகம். காலமற்றது, உருவற்றது, அசைவற்றது. மூச்சில் நிறைந்தது அதன் குளிர்ந்த பாசி மணம். முடிவற்ற இருள். உதறுவதே பிராந்து, மீள முயல்வதே பித்து. “அம்மே!” என நான் பணிந்தேன். மெல்ல ஒப்புக்கொடுத்தேன். “அம்மே பொறுப்பாய், என்னைப் பொறுப்பாய்!”
அவள் என் கையை இறுக அணைத்துக்கொண்டாள். அவளது குளிர்ந்த விரல்களும் இளம் சூடான இடமார்பும் என்னைத் தீண்டின. “நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன்” எங்கோ தொலைவில் அவள் குரல் கேட்டது.
கண்களில் கண்ணீர் வழிந்தோட விழித்தபோது என் பார்வை கோயிலின் உள்ளே இருளில் அமர்ந்திருந்த சிலைமீது சென்று படிந்தது. அதன் கைகளில் எங்கோ அடியாழங்களிலிருந்து எடுத்துவந்தது போன்று ஒரு சிறு மலர். கீழே பாதமெங்கும் உதிர்ந்துகிடந்தன பொன்னரளிப் பூக்கள்.
https://theneelam.com/ajithan-short-story/