ரத்த அழுத்தத்துக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு?
ரத்த அழுத்தத்தை உருவாக்குவதும் சிறுநீரகங்கள்தான். உயர் ரத்த அழுத்தம் உண்டாகக் காரணமும் சிறுநீரகங்கள்தான்.
டாக்டர் கு.கணேசன்26 Sept 2026
நம் உடலில் ரத்த அழுத்தத்துக்கும் சிறுநீரகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
“என்ன டாக்டர், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுறீங்க? இதயத்துக்கும் ரத்த அழுத்தத்துக்கும்தான் தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்”. இப்படித்தான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதயத்துக்கு மட்டுமல்ல, சிறுநீரகத்துக்கும் தொடர்பு உண்டு. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ‘ரத்த அழுத்தம்’ (Blood Pressure) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
நம் உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் இரட்டை மோட்டார், இதயம். அதாவது, ரத்தத்தை உள்வாங்கி வெளித்தள்ளும் ஒரு தசை விசை மோட்டார். இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தம் கொடுத்து ரத்தத்தை உடலுக்குச் செலுத்துகிறது. பெருந்தமனி (Aorta) என்னும் ரத்தக் குழாய் வழியாகக் கல்லீரல், சிறுநீரகம், மூளை என உடலின் பல பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தம் பாய்கிறது. இப்படி நிமிடத்துக்கு நிமிடம் ரத்தம் பாய்கிற அழுத்த வேகமே ரத்த அழுத்தம்.
இந்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டுமானால், ரத்தக் குழாய்ச் சுவர்கள் ஒரு பலூனைப் போல சுருங்கி விரியும் தன்மையில் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், ரத்தக் குழாய் தடித்து கனத்துவிட்டாலோ, சுருங்கிவிட்டாலோ, இந்தச் சுருங்கி விரியும் தன்மை குறைந்துவிடும். அப்படித் தடித்துப்போன அல்லது சுருங்கிப்போன ரத்தக் குழாய்க்குள் ரத்தம் முன்புபோல் பாய வேண்டுமானால், இன்னும் கூடுதலாக அழுத்தம் தேவைப்படும். இப்படி அழுத்தம் கூடுவதைத்தான் ’உயர் ரத்த அழுத்தம்’ (High Blood Pressure) என்கிறோம்.
இதை இப்படிப் புரிந்துகொள்ளலாம்: தோட்டத்துக்குத் தண்ணீர்விட ரப்பர்க் குழாய் வாங்குகிறீர்கள். வாங்கிய புதிதில் அதைச் சுருட்டி வைக்க முடியும். நாள்பட்டால் அதைச் சுருட்ட முடியாது; கடினமாகிவிடும். இதுபோன்றுதான், நம் ரத்தக் குழாய்களும். இயல்பான ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்தக் குழாய்கள் இயல்பாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்தக்குழாய்கள் இறுகியிருக்கும்.
“சரி, டாக்டர். இதில் சிறுநீரகம் எங்கே வருகிறது?” என்றுதானே கேட்கிறீர்கள்? சொல்கிறேன்.
இங்கே கொஞ்சம் அறிவியல் பாடத்தைத் திரும்பிப் பார்ப்போம். ரெனின் (Renin) என்னும் ஹார்மோன்தான் நம் ரத்தக் குழாய்களின் நெகிழ்வுத் தன்மையைத் தீர்மானிக்கிறது. ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிவதற்கு இந்த ரெனின்தான் காரணம். இது சரியான அளவில் சுரந்தால், ரத்தக் குழாய்கள் இயல்பாக இருக்கும். ரத்த அழுத்தமும் சரியாக இருக்கும். இது அதிகமாகச் சுரந்தால் ரத்தக் குழாய் சுருங்கிவிடும். ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். இந்த ரெனினைச் சுரப்பது எது தெரியுமா? சிறுநீரகங்கள்.
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு, ரத்த அழுத்தத்தை உருவாக்குவதும் சிறுநீரகங்கள்தான். உயர் ரத்த அழுத்தம் உண்டாகக் காரணமும் சிறுநீரகங்கள்தான் என்று. அதேவேளை, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு சிறுநீரகத்தில் மட்டுமல்லாமல், இதயம், மூளை, கண், ரத்தக் குழாய்கள் எனப் பலவற்றில் உணரப்படும்.
சிறுநீரகங்கள் நம் உடலில் உள்ள ரத்தத்தைத் தொடர்ந்து வடிகட்டிக்கொண்டிருக்கும் உறுப்புகள். ஒவ்வொரு நிமிடமும் கணிசமான அளவு ரத்தம் சிறுநீரகங்களுக்குச் செல்கிறது. அதில் உள்ள கழிவுப் பொருள்களை நெப்ரான் என்னும் நுண்ணிய வடிகட்டிகள் பிரித்து, தேவையில்லாதவற்றைச் சிறுநீராக வெளியேற்றுகின்றன. இந்த நுணுக்கமான பணியைச் செய்வதற்காகச் சிறுநீரகத்தில் கோடிக்கணக்கான நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. பொதுவாக, சிறுநீரகத்தில் உள்ள இந்த ரத்தக் குழாய்கள் ரொம்பவும் மெல்லிசாக இருக்கும்.
ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, இந்த நுண்ணிய ரத்தக் குழாய்களின் மீது அழுத்தம் அதிகரிக்கிறது. நாளடைவில் அவை தடிமனாகி, கடினமடைந்து, சேதமடையலாம். கடினமான ரத்தக் குழாய்களால் சிறுநீரகத்துக்குப் போதிய ரத்தம் கொடுக்க முடியாமல் சிரமப்படலாம். இதனால் நெப்ரான்கள் பழுதாகி, சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் படிப்படியாகக் குறைந்து, சிறுநீரகம் தன் செயல் திறனை இழக்கலாம். ‘சிறுநீரகச் செயலிழப்பு’ (Renal Failure) என்னும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிடலாம்.
இது ஒருபுறம் இருக்க, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஏதாவது ஒரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எப்படி? பாதிப்புக்குள்ளான சிறுநீரகம் ரெனின் ஹார்மோன் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். அது ரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்துவிடும். இதன் விளைவு, உயர் ரத்த அழுத்தம்.
இது ஒரு புறம் இருக்க, சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாதுக்களைப் பாதிப்புக்குள்ளான சிறுநீரகத்தால் பிரிக்க முடியாது. இவை ரத்தத்தில் தேங்கி, ரத்தக் குழாய்ச் சுவர்களில் படிந்துவிடும். இதனால், ரத்தக் குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை இழந்து, கடினமாகிவிடும். இதனால் இன்னும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
ஆக, கோழி வந்ததால் முட்டை வந்ததா, முட்டை வந்ததால் கோழி வந்ததா என்பது போன்று, ரத்த அழுத்தம் கூடியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதா? சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் ரத்த அழுத்தம் அதிகரித்ததா என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
காரணம் எதுவாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தால் சோடியத்தை வெளியேற்ற முடியாது. ஆகவேதான், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறோம். சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு என்பது உங்களுக்குத் தெரியும்தானே! உணவில் மட்டுமல்லாமால், நாம் சாப்பிடும் ஊறுகாய், அப்பளம், வடகம், சிப்ஸ், பாப்கார்ன் போன்ற உணவுகளிலும், பலதரப்பட்ட பாக்கெட் உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உப்பு மறைந்துள்ளது. ஆகவே, உயர் ரத்த அழுத்தம் இல்லாதவர்களும் உணவில் உப்பைக் கொஞ்சம் குறைத்துச் சாப்பிடுவதில் தவறில்லை.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பைக் குறைத்தல், உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல் போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். சிறுநீரகம் பாதுகாக்கப்படும்.
எனவே, ரத்த அழுத்தம் சரியாக இருந்தால் அது சிறுநீரகத்துக்கு நண்பன். இல்லையென்றால், அது பகைவன்.
https://www.sindhai.com/series/what-is-the-link-between-blood-pressure-and-kidneys-dr-ganesan-article-1366315
By
கிருபன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.