Everything posted by uthayakumar
-
பொருளாதர நெருக்கடியும் இன்னும் தீராத இனப்பிரச்சினையும் - பா.உதயன்
அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகிறது ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து, அடுத்த நேர உணவுக்காய் இன்னும் தான் ஐ.எம்.எப். வாசலில் காத்துக்கொண்டிருக்கிறோம். இதே போல் தமிழர்களும் தங்கள் இனப் பிரச்சினை தீரும் என்று இலவு காத்த கிளி போல பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் வாதிகளின் பொய்மையும் வெறும் போலியான வாக்குறுதிகளும் தான் தொடர்கின்றன. இன்னும் ஏன் இலங்கை இப்படி இருக்கிறது என்று தெரிந்தவரும் இருக்கிறார்கள், தெரியாதவரும் இருக்கிறார்கள். சிங்கப்பூர் கடல் வழிகளை உலகத்தோடு இணைத்தது, பொருளாதாரத்திலும் பலம் பெற்று சிங்கப்பூரின் ஒருவரின் வருமானம் ( Per Capital Income / GDP per Capital) ஐக்கிய இராச்சியதை விட இரு மடங்கு அதிகமாகும். சிங்கப்பூர் தலைவர்களினது திறமையான நிர்வாகம் ஊழலை கட் டுப்படுத்தும் திறன் இத்தோடு கல்வி முதலீடு மூலம் உலகப் பொருளாதார மயமாக்கலில் இணைந்து பொருளாதார வளர்ச்சி கண்டது. மலேசியா பல தொழிற்சாலைகளை உருவாகியது இதன் மூலம் வளர்ச்சி கண்டது. இலங்கை மட்டும் இன்னும் வெறும் பேரினவாத சுவர்களால் பிளவும் இன ரீதியிக்கான பிரிவுமாக இன்னும் காணப்படுகிறது. இலங்கையை இது கால வரையில் ஆட்சி செய்த பல தலைவர்கள் பகுத்தறிவு, நேர்மை, தொலைநோக்குப் பார்வை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை நடைமுறையில் போதுமான அளவில் வெளிப்படுத்தத் தவறியுள்ளனர். இப்படியான நல்ல சிந்தனைகள் குணங்கள் கொண்டவர்களாக இருக்கவில்லை அது மட்டும் இன்றி ஒரு சிலரை தவிர பலர் வெறும் சுய நலங்களுடன் போலியான சோசலிசக் கொள்கையுடன் பயணித்தனர் என்பதே உண்மை. சில அரசியல் ஆய்வாளர்கள் மிகைப்படுத்தி இவர்கள் சிலரை அறிவும் ஆற்றலும் கொண்டவர்களாக சித்தரித்தனர். அடுத்து அன்பு, கருணை, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றைப் போதித்த பௌத்த மதம், புத்த பகவானின் தத்துவார்த்தச் சிந்தனைகளுக்கு முரணாக பேரினவாதத்துடன் அரசியல் முடிவுகள் சார்ந்து பிணைந்திருப்பது பெரும் அவலமாகும். எல்லா இலங்கையின் அரசியல் தலைவர்களும் பௌத்த மத துறவிகளின் காலில் மண்டியிட்டவர்களாகவே இருக்கிறார்கள். மதமும் அரசும் தனித்தனியாக இருக்க வேண்டும். நிர்வாகம், நீதி, அரசியல், மதம் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதாகவே இன்றும் இருக்கின்றன. சமத்துவம் என்பது எல்லா மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் இதையே மத சார்பின்மை (secularism ) என்று கூறுகின்றோம். சுருக்கமாகச் சொல்லப் போனால், இனவாதம், மதவாதம், இலஞ்சம் (ஊழல்), இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமை ஆகியவையே இலங்கையின் முன்னேற்றத்தை இன்றுவரை தடுத்து நிற்கும் பெரும் புற்றுநோய்களாக உள்ளன. அவை மாறாமலும், மாற்றப்படாமலும் தொடர்ந்து நிலைத்திருப்பதே நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது. கடந்த கால அரசுகளினால் அபிவிருத்தி என்ற பெயரில் பெருமளவு பொதுப் பணம் வீணாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி ஊழலிலும் அரசியல் நலன்களிலும் கரைந்தது. கல்வி, சுகாதாரம், பொருளாதார கட்டமைப்பு, சமூக நலன் போன்ற துறைகளுக்குச் செல்ல வேண்டிய வளங்கள் உரிய திட்டமிடல் இன்றி வீணாகின. சரியான பொருளாதார கட்டமைப்பு இன்றி கரரைந்து போனது. இப்படியே இன்னும் கூடவே இனப் பிரச்சினைக்கு எந்த தீர்வும் இல்லாமல் இருக்கிறது. முப்பது ஆண்டுகள் துப்பாக்கிச் சத்தமும், முப்பது ஆண்டுகள் மனித இழப்புக்களும் இரத்தமும், முப்பது ஆண்டுகள் ஒரே நாட்டின் மக்களை ஒருவருக்கு ஒருவர் அந்நியமாக்கியது. இன்னும் ஒரு தேசிய இனத்தை பெரும் அடக்கு முறைக்கு உட்படுத்தியது. ஆசியப் பொருளாதாரம் பல மாற்றங்களோடு முன்னேறிக் கொண்டிருக்கும் போது இன்னும் நாம் இலங்கை பயணிக்கும் சரியான பாதையை உண்மையாக நேர்மையாக சிந்திக்காமல் பேச்சளவில் மட்டுமே சமத்துவம் சமாதானம் என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். கடனில் வாழும் பொருளாதாரமாக இன்னும் எத்தனை காலம் ஓட்டப்போகிறோம். இன்னும் நம்பிக்கையில் வாழும் மக்களாக நீதிக்காக காத்திருக்கும் தமிழர்களாக எத்தனை காலம் காத்திருப்பது. குறைந்த பட்சம் ஒரு மாகாண சவை தேர்தலுக்கே இத்தனை காலம் காத்திருக்க வேண்டி இருக்கின்றது. இவை அனைத்தும் எப்போ நிதர்சனம் ஆகப்போகிறது. ஒரு நாட்டை வறுமை மட்டும் வீழ்த்தாது பேரினவாதமும் இன்னும் ஒரு இனத்தின் மீது மேற்கொள்ளும் அடக்குறையும் மத ரீதியிலான பிளவுகளும் கூடவே பலவீனப்படுத்தும். பிரெஞ்சு தத்துவஞானி ஜீன்-ஜாக் ரூசோ கூறியது போல, மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகவும், கண்ணியத்திலும் உரிமைகளிலும் சமமாகவும் பிறக்கிறார்கள். இந்தச் சிந்தனையே பிரான்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உயரிய கொள்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறலாம். இந்தத் தேசத்தில் உண்மையான அனைவருக்கும் சமத்துவமான நீதி நிலைக்க வேண்டுமெனில், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எவர் எந்தக் குற்றம் செய்தாலும், அரசியல் ரீதியிலான எந்த வகை தலையீடும் இன்றி நீதி தனது கடமையைச் செய்ய வேண்டும். இனங்களுக்கிடையில் உண்மையான நீதி இல்லாமல் நல்லிணக்கமும் நிலையான பொருளாதார வளர்ச்சியும் உருவாகாது. ஆகவே இந்தத் தீவின் எதிர்காலம் நீதியிலும், சமத்துவத்திலும், அனைத்து மக்களும் சுய மரியாதையையுடனும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்விலும் தங்கியுள்ளது. இன்று மக்கள் எதிர்பார்ப்பது உண்மையான சுதந்திரம், நீதி, நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மறுமலர்ச்சியே. இந்த யதார்த்ததை புரிந்து கொண்டு கொடுத்த வாக்குறுதிகளை இன்றைய அனுராவின் ஆட்சி காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் மீண்டும் பெரும் பேரினவாத கட்சிகளே ஆட்சியை அமைப்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி விடும். இது மீண்டும் இந்த நாட்டை பெரும் அவல நிலைக்கு கொண்டு வந்து விடும் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும். பா.உதயன் ✍️
-
துயர் பகிர்வு
நன்றியும் அன்பும் எனது சித்தப்பாவின் மகன் திருநாவுக்கரசு பிரபாகரின் மறைவையொட்டி, இத் துயரத்தில் எங்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதேவேளை, இந்த துயரச் செய்தியை யாழ் இணையத்தில் பதிவுசெய்த யாழ் இணையப் பொறுப்பாளர் மோகன் அவர்களுக்கும், அன்புக்குரிய யாழ் இணையக் கருத்துக்கள நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமரர் திருநாவுக்கரசு பிரபாகரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 🙏
-
வருவதும் போவதும் பயணத்தின் தொடரே-பா.உதயன்
- காலை பொழுதொன்றில் கூவும் குயில்- பா.உதயன்
- மனிதம் அறிவு அறம்- பா.உதயன்
சிலரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் நடத்தைகளையும் காணும் போது அவர்களின் உண்மையான உயரம் வெளிப்படுகிறது. ஒரு மனிதனின் உயரம் அவன் பேசும் மொழியிலும் பண்பிலும், எழுதும் சரியான நெறியிலும், அடுத்தவரை அணுகும் அழகிய மனிதத் தன்மையிலும் தான் காணப்படுகிறது. இதுவே மனிதம் பேசும் மொழியாகும் மற்றவர்களை விமர்சிக்கும் போது கூட பொறுமையுடன் அன்புடன் சரியான வார்த்தை மொழி கொண்டு பண்புடன் பேசுவது, சரியான பார்வையில் தத்துவார்த்த சிந்தனையுடன் அதிகாரத்தின் தவறுகளை அஞ்சாமல் சுட்டிக்காட்டுவது, பலமற்ற மனிதர்களின் துயரத்தை அல்லது தோல்விகளை அறிந்து உணர்ந்து அவர்களிடம் கருணையுடன் நிற்பது, நக்கல் நளினம் கலந்த மிகவும் இழிவான எழுத்துக்களை தவிர்த்து பேசும் மொழியே இவையே ஒரு மனிதனின் உள்ளார்ந்த நாகரிகத்தையும் அறிவையும் அவர்களின் உயரத்தையும் வெளிப்படுத்துகின்றன. உண்மையான அறிவு என்பது வெறும் புத்தக அறிவோ சொற்களின் ஆடம்பரமோ அல்ல. எத்தனை புத்தகங்களை என்ன கல்வியை நீ கற்றாய் என்பதை விட கற்றபடி நின்றாயா என்பதையே வள்ளுவனும் கேட்க்கிறான் கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. கற்ற கல்விக்கு தகுந்த அறநெறியில் நிற்கவேண்டும் எதையும் ஆழமாக அறிந்து கொண்டு தெளிவாகப் புரிந்து கொண்டு, அதை மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்லும் திறமையே அறிவின் அழகு. அந்த அறிவு மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது. இன்றைய எழுத்தாளர்கள் சிலர் மக்களுக்கு புரியாத மொழியில் பேசுவதிலும், சிக்கலான சொற்களால் தங்களை உயர்த்திக் காட்டுவதிலும் பெருமை காண்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களுக்கே எல்லாமே தெரிந்தது போல் நக்கல், இகழ்ச்சி, ஏளனம், மதிப்பில்லாத எழுத்துக்கள் ஆகியவற்றை அறிவின் அடையாளமாக நினைக்கிறார்கள். பிறரை இழிவுபடுத்தும் வார்த்தைகளில் அவர்கள் வெற்றி காணலாம் ஆனால் அதில் மனிதம் இல்லை. ஒரு மனிதனின் தோல்வியை துயரத்தை ஒரு படைப்பாளி மட்டும் இன்றி எவரும் பண்புடன் அணுக வேண்டும் விமர்சிக்க வேண்டும் மனிதனின் தோல்வியையும் துயரத்தையும் புரிந்து கொள்ளாத அறிவு முழுமையான அறிவாக இருக்க முடியாது. அறிவுக்கும் அறத்திற்கும் இடையில் ஒரு ஆழமான உறவு இருக்கிறது இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் அடுத்தவரின் வலியை உணராத சிந்தனை எவ்வளவு பெரியதாகத் தோன்றினாலும் அது வெறுமையாகவே இருக்கும். உண்மையான அறிவுடையவன் மக்களின் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு சரியாக உணர்ந்து கொண்டு பேசுவான் அவர்களின் கண்ணீரை உணர்ந்து எழுதுவான். அவனது சொற்களில் கருணையும் பொறுப்பும் இருக்கும். நீ விரும்பாத ஒன்றை வைத்துக்கொண்டு அதை நக்கல் நளினம் கொண்டு பேசுவது நாகரிகம் இல்லை அறம் இல்லை அதில் அழகும் இல்லை சிந்தனை தெளிவுடன் இருக்கும் மனிதன் இதை பேச மாட்டான் எழுத மாட்டான் இன்னும் ஒருவரை புண்படுத்த மாட்டான். Kind words make a better human. ஒரு சமூகத்தின் சரியான பாதையை வகுப்பவர்களின் கடமை மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லுவதுதான். சரியான கதைகளை பேசுவது எழுதுவது தான். எந்தக் கதையையும் பேசும்போது அது மக்களுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும். மக்கள் மொழியில் பேசாத சிந்தனை மக்களிடம் சென்று சேராது. மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் அல்ல அது ஒரு இனத்தின் நினைவு, வரலாறு, உயிர், அடையாளம், தேசம் தேசியம் சார்ந்த ஓர் கூட்டு அடையாளம் இதை பேசுபவனே சமூக மாற்றங்களோடு கூடிய ஒர் இனத்தின் எல்லா விடுதலையையும் வென்றெடுக்க முடியும் போலி மாயைத் திரைகளிலும் அடையாளம் தொலைத்த இனமாக நாகரிகமான கொண்ட ஒரு சமூகம் மூழ்கிப்போய் இருப்பது வேதனையும் துயரமும் வெட்கமும் கொண்டதாக இருக்கிறது. மக்களை உசுப்பேத்தி பிழையான பாதையில் செல்ல இவை மாத்திரம் இன்றி பல ஊடகவியலாளர் உட்பட சமூக ஊடகங்களும் துணை போகின்றன இன்று இருக்கும் சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் பெரும் காரணமாக இருக்கின்றன. ஒரு இனத்தின் விடுதலை அதன் மொழியோடும் நிலத்தோடும் வரலாறோடும் இணைந்திருக்கிறது. அந்த இனத்தின் பாடல்கள், கதைகள், துயரங்கள், போராட்டங்கள் இவையெல்லாம் அதன் வேர்கள். இவை அழிந்து போனால் அந்த இனத்தின் அடையாளமும் மெல்ல மறைந்து விடும். அதனால் உண்மையான சமூகப் புரட்சியாளர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பற்றியே பேசுவான். அவர்களின் மொழியையும் வரலாறையும் காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்துவான். அரசியல் என்பது பல நேரங்களில் சூதாட்டக் களமாக மாறிவிடுகிறது. அங்கு சுயநலமும் அதிகாரப் போட்டியும் நிறைந்திருக்கலாம் இருந்தபோதிலும் சமூகநீதியுடனும் சரியான தத்துவப் பார்வையுடனும் சிந்திக்கும் மனிதர்களால்தான் மாற்றம் உருவாக முடியும். மாயைகளின் பின்னால் நின்று எந்த சமூகத்தையும் முன்னேற்ற முடியாது. ஒரு மனிதனின் தேடலும் அறிவும் அவனுடைய ஆழமான சிந்தனையில் தெரிகிறது. சரியான பார்வை கொண்ட அறிவு மக்களை இணைக்கும் பாலமாக மாறுகிறது. அடுத்தவர்களின் துன்பத்தையும் துயரத்தையும் புரிந்து கொள்ளும் மனம்தான் மனிதத்துவத்தின் அடிப்படை. அறம் சார்ந்த மனிதனின் பார்வை மாயைகளிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அதில் அன்பும் அறிவும் கருணையும் யதார்த்தமும் இணைந்திருக்க வேண்டும். வெறும் சுயநல அடிப்படையில் பெருமைக்காகவும் புகழுக்காகவும் உங்களை அடையாளப்படுத்தாமல் எந்த தலைமுறைக்கும் சரியான பாதையை காட்ட வேண்டிய பொறுப்பு எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசியல் வாதிகள் தலைவர்கள், சிந்தனையாளர்களுக்கும் உண்டு. சரியானவற்றை தெளிவோடு எழுதுங்கள் பேசுங்கள். இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சமூக ஊடகங்கள் பெருகியுள்ளன. அவை மக்களை விழிப்புணர்வுக்கு அழைத்துச் செல்லவும் முடியும் தவறான பாதைக்கு தள்ளவும் முடியும். பலர் அறிந்தும் அறியாமலும் மக்களின் உணர்வுகளை பயன்படுத்தி தனிப்பட்ட லாபத்தைத் தேடுகிறார்கள். பணமும் புகழும் மட்டுமே நோக்கமாக மாறும்போது சமூகப் பொறுப்பு மறைந்து விடுகிறது. எனவே எதையும் நாம் சரியான பாதையில் சிந்திக்க வேண்டும். ஒரு இனத்தின் உயிர் அதன் மொழியில் இருக்கின்றது அதன் வரலாற்றில் வாழ்கிறது உண்மையும் நேர்மையும் பேசும் ஒரு கவிஞனின் பாடல்களில் ஒலிக்கிறது அதன் நிலத்தில் வேரூன்றுகிறது. இவை தொலைந்தால் ஒரு மக்களின் இருப்பே கேள்விக்குறியாகி விடும். மனிதமும் அறிவும் அறமும் அன்போடு கூடிய பொய்மை இல்லாத வாழ்வும் கொண்டு ஒன்றாக ஒற்றுமையோடு இணைந்த மனிதர்களே சமூகத்தின் உண்மையான வெளிச்சம். எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:424) பா.உதயன் ✍️- அன்பை மறந்த உலகமே - பா.உதயன்-
மிக்க நன்றிகள் 🙏🌺- அன்பை மறந்த உலகமே - பா.உதயன்-
- தமிழும் இசையும்-பா.உதயன்
- ஏழு சுரங்கள்-பா.உதயன்
- மனிதம் பேசும் மொழி-பா.உதயன்
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் துன்பகரமான செய்தி எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அருகில் இருந்தவர் போய் விட்டால் அடி மனதின் வேதனையை யாரால் தேற்ற முடியும். எங்கள் ஆழ்த இரங்கல் மோகன். உங்கள் பெரும் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஓம் சாந்தி 🙏- புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும்-பா.உதயன்
நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒரு பொறுப்பற்ற ஒரு நாட்டின் இறைமையை மீறும் குற்ற நடவடிக்கையாகும் Violation of sovereignty and international law ஜனநாயக விரோத ஒரு நாட்டின் இறைமையை, சர்வதேச சட்டங்களை, ஐ.நா. பிரகடன்களை மீறிய ஒரு சட்டம் அறம் அற்ற ஒரு அத்துமீறிய செயல். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தென் அமெரிக்க நாடுகள் வரை இன்னும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்க தொடர்ந்து தனது நலன் மட்டும் சார்ந்து ஆகிரமிப்பு செய்வதும் அன் நாடுகளின் தலைவர்களை சிறை பிடிப்பதும் இதன் பின் இந்த நாடுகளின் அனைத்து கட்மைப்புக்களையும் அழித்து அந்த நாடுகளை மீண்டும் வளர விடாமல் தொடர்ந்து அங்கு ஸ்திரம் Instability இல்லாத தன்மையை உண்டாக்கி விட்டு ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு இன்னும் ஒரு நாட்டடில் அத்து மீறி நுழைந்து தனக்குத் தேவையான வழங்ககளை சூறை ஆடுவதே அமெரிக்காவின் தந்திரமாக இருக்கின்றது. பலம் மிக்கவர்களினால் செய்யப்படும் ஆட்சி மாற்றங்கள் இறுதியில் பெரும்பாலும் பெரும் ஆபத்தான நீண்டகால வன்முறை மோதல்களாக அந்த நாடுகளில் உருவாக்கி விடுவதை நடை முறையில் பார்த்திருக்கிறோம். ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் இங்கு ஆக்கிரமிப்பே நடைபெற்றன அரசியல் பொருளாதார மற்றும் புவிசார் சர்வதேச உறவுகளை தீர்மானிக்கும் உரிமை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் மட்டுமே உண்டு. இதை விடுத்து பலம் மிக்க நாடு பலம் இல்லாத நாடுகளை அதிகாரத்தின் மூலம் பணிய வைப்பதும் அதை தமது நலனுக்ககாக பாவிப்பதும் ஒரு புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும் Neo colonialism and Neo imperialism புதிய காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய கொள்கைக்கு ஒப்பானது. ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக செய்யப்படும் ஒரு ஆதிக்க சுரண்டலாகும். அமெரிக்காவால் இன்னும் ஒரு இறைமையுள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய இராணுவ தலையீடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பு அதன் விதி முறைகளையும் மீறுகின்றது இதனால் ஒவ்வொரு பலம் குன்றிய நாடுகள் இன்னும் பாதுகாப்பற்றதாகிறது. சக்திவாய்ந்தவர்கள் எதையும் செய்யலாம் என்ற ஒரு செய்தியை இது சொல்லி நிற்கின்றது. இனி வரக்கூடிய எந்தப் போரையும் தடுக்க நமக்கு உள்ள ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகளையும் இது வலுவிழக்கச் செய்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. அமெரிக்காவின் இன்றைய செயல்பாடுகள் ஏகாதிபதியத்தின் ஒரு தொடர்ச்சியே இதை சரியாக விளங்க வேண்டுமானால் காலனித்துவ ஏகாதிபத்தியம் சம்மந்தமாக அரசியல் பொருளாதார கேட்ப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் மூலம் அறிய முடியும். புதிய காலனியா திக்கம் புதிய ஏகாதிபத்யம் உலக அமைப்பு கோடப்பாடுகள் போன்ற கருத்துக்களை பல அரசியல் பொருளாதார நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் முக்கியமான சமூகவியலாளர் இமானுவேல் வால்ரஸ்டீன் (Immanuel Wallerstein) ஆவார். உலகப் பொருளாதார அமைப்பில் பலம் மிக்க நாடுகள் எப்படி சுரண்டுகின்றனர் இந்த உலகு எப்படி சமத்துவமற்று இருக்கிறது என்பதை யதார்த்தமாக உலக அமைப்பு கேட்பாடு (World system theory) மூலம் விளக்குகிறார் காலனித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டாலும் அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்க பலம் வாய்ந்த சக்கித்தியினால் அவர்கள் நலன் சார்ந்து தொடர்ந்து சுறண்டப் படுவதை பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், பனாமா, வெனிசுலா, நையீரியா இப்படி பல நாடுகளை பலம் வாய்ந்த அமெரிக்க அதன் நலன் சார்ந்து இந்த பலம் இல்லாத நாடுகளின் அதன் மூலவளங்களை ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் அங்கு ஆதிக்கம் செலுத்தி பின் அதன் வளங்களை பெரும் தனியார் கம்பெனிகள் ஊடாக சுரண்டலை மேற்கொள்ளுகின்றனர். இன்னும் ஒரு பிரபலமான இலக்கிய பேராசிரியரான எட்வர்ட் சயீத் (Edward Said) பாலைதீனத்தை பிறப்பிடமாக்க கொண்ட அமெரிக்காவின் பிரபல கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராக இருந்த அவர், காலனித்துவம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர் Orientalism என்ற இவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது பல பல்கலைக்கழகங்களில் பாடத் திட்ட நூலாக கற்பிக்கப்படுகின்றது. இந்த நூல் ஏகாதிபத்தியம் என்பது (Imperialism) வெறும் இராணுவ அல்லது பொருளாதார ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, கலாச்சாரம், மொழி, கல்வி, அடையாளம் என்பன ஊடகம் வழியாக மேற்கு உலக எல்லா மேற்கத்திய அறிஞர்களும் வரலாறுகளை மாற்றி தமக்கு சாதகமாக்கி கிழக்கு சமூகங்களின் உள் வேறுபாடுகளை குறைத்துக் காட்டி புவிசார் அரசியல் பொருளாதார நலனுக்காக தமக்கு வேண்டியபடி கோட்ப்பாடுகளை விபரித்தனர் சித்தனித்தனர் எழுதினர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது. சர்வதேச சட்டங்களை மதிக்காத எல்லா அத்துமீறல்கழும் சட்டங்களை மீறி நடக்கும் செயல்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் ஆகும் எனவே இன்று அமெரிக்க தான் குற்றம் இழைத்தவர்களாக இருக்கிறார்கள். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆகிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வன்முறை மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை அகற்றுவது சிறை பிடிப்பது என்பது உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். மனித குற்றங்கள் இழைத்த எந்தத் தலைவர்களையும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களின் அடிப்படையிலேயே கைது செய்ய முடியும். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆக்கிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் பல நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்க எதிர் காலத்தில் வழி சமைக்கலாம். இது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை. பா.உதயன்✍️- இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன்
இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்கு அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று பிரிந்த சக்திகளாக இல்லாமல் அரசியல் வாதிகளில் கைகளில் அகப்பட்டு ஊழலோடு சிக்ககி பலவீனமடைந் திருக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு குறித்த சமூகவியல் பார்வையில் நாம் இதை பார்க்கும் போது அரசியல் பொருளாதார கலாச்சார ரீதியிலால பின்னணியைக் கொண்டதாகவே இது இருக்கும் இனங்களுக்கு இடையிலான அரசியல் ஏற்றத் தாழ்வுகள, சமூக அநீதி, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார பின்னடைவுகள், சட்டம் சமத்துவமாக இல்லாமல் அது தனித்துவமாக இயங்காமல் சட்டத்தின் கைகள் அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதும், தேசிய இனங்களுக்கு இடையிலான அரசியல் தீர்வுகளை சரியான முறையில் நடை முறைப் படுத்தாமல் சமூகப் பிளவுகளை ஏற்படுத்தல், போதை பொருட்களின் பயன் பாட்டை ஊக்குவிற்பதன் மூலம் சமூக சீரழிவுகளை ஏறபடுத்தி இளைய சமுதாயத்தை கல்வி அறிவு மூலம் சிந்திக்க விடாமல் சிதைத்து ஒரு கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தல், ஆட்சி அதிகார சக்திகள் தமது நலன் கருதி போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடப்புகளை பேணுதல் இப்படி பல காரணிகளை சமூகவியல் ரீதியில் பார்க்க முடியும். இதை முழுமையாக நோக்கும் போது இலங்கையின் போதைப்பொருள் பிரச்சனை என்பது சமூக மற்றும் அரசியல் பொருளாதார கலாச்சார அமைப்பின் குறைபாடுகள் என்பதை விளக்கிக் கொள்ள முடியும். எனவே இந்த சிக்லானான பெரும் சமூக அழிவை ஏற்படுத்தும் இந்த நச்சு விதைகளை சரியாக விளங்கி இதனை சமூகவியல் தத்துவார்த்த கோட்பாடுகள் வழியாகப் புரிந்து தீர்வு வழிகளை ஏற்படுதினால் மட்டுமே சரியானதோர் சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பாதையாகும் என்பதை எல்லா அமைப்புகளும் ஆட்சியாளரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகவியலாளர் எமில் டர்க்கெய்ம் (Emile Drrkheim ) பல சமூகவியல் கோட்ப்பாடுகளை நிறுவியவர். கையில் அதிகாரம் என்ற படகை வைத்துக் கொண்டு ஆட்டுகிறார்கள் இதனால் மக்கள் சமூகத்தில் தங்களுக்குரிய இடத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள் குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் பொருளாதார பிரச்சினை வேலை இன்மை இப்படி பல பிரச்சினைகளால் சமூகம் நிலையாக இல்லாமல் அநீதி நிறைந்த குழப்பமான நிலையாக மாறிவிடும் இதனால் இங்கு சமூக சீர்கேடுகளும் சூழ்நிலையையும் உருவாக்குகின்றன என சமூகவியலாளர் எமில் டர்க்கைம் (Émile Durkheim) விளக்குகிறார் இந்த நிலையை “அனோமி” (Anomie) என்று அழைத்தார். இதன் பொருள் சமூகம் பின்பற்ற வேண்டிய விதிகள், நெறிமுறைகள் குழப்பமாகவோ இல்லாமலோ இருப்பது. அனோமி கோட்பாட்டை மேலும் ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். அனோமி என்ற இந்தக் கோட்பாட்டை எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு நன்றாக ஆழமாக ஆய்வு செய்து, சமூகத்தில் குற்றம் எவ்வாறு உருவாகிறது என்பதை விரிவாக விளக்கினார். இலங்கை தேசம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இனமுரண்பாடுகளையும் இனவாதத்தையும் ஊக்குவித்ததே தவிர எவருமே சரியானதோர் அரசியல் பாதையில் செல்லவில்லை இதன் பயனை இன்று தொடக்கம் இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டை நேசிக்கிறோம் என்று ஊழல் அரசியல் வாதிகளாலும் பொய்மையோடு கலந்த இன வாதிகளாலும் போலி இடது சாரிகளாலும் இந்த நாட்டின் அனைத்து நீதி நிர்வாகங்களும் இவர்களை கையில் சிக்கி ஒரு நாடே நாசமாக போகும் அளவுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். இது மாத்திரம் இன்றி பாதுகாப்பு படைகள் கூட இந்த அழிவுக்கு ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். வடக்கு கிழக்கு ஒரு காலம் படிப்போடு இருந்தது இப்போ ஐசோடு இருக்கு அப்போதெல்லாம் கேட்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று ஒரு தலைமை இருந்தது. ஒரு பெண் இரவு சாமத்தில் கூடவே தனியே போகும் காலம் ஒன்றிருந்தது. ஆனால் அந்தத் தமிழர் தலைமை அரசுகளாலும் நம்மோடு இருந்தவர்களாலுமே அளிக்கப்பட்டது. ஆதலால் அரசு படையில் மட்டுமின்றி நாமும் நம் இனத்தின் அழிவுக்கும் துணை நின்றிருக்கின்றோம். போதையை கொடுத்து ஒரு சமூகம் புடுங்கி எறியப்படுகிறது யாரால் என்பது எல்லாம் தெரியும். இந்தத் தலைமையை அழித்து இன்று இந்தத் தமிழ் மக்களை சமூகச் சீரழிவுக்குள் சிக்க வைத்த பெரும் பெறுப்பு இலங்கை இராணுவப் படைகளுக்கு மாத்திரம் இன்றி எம்மவர் கூட இந்த அழிவுக்கு துணை நின்றிக்கிறார்கள். பாலியல் கொடுமைகள், களவு கொள்ளை, கொலை போதைப் பொருள் பாவனை, வன்முறைகள் என்று இன்று பெரும் சமூக சீரழிவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது தமிழ் சமூகம். அன்று இருந்த தமிழ் தலைமையினால் இந்த வகையிலான சமூகச் சீரழிவுகள் வன்முறைகள் எதுவும் தமிழ் சமூகத்தில் அவர்கள் பிரதேசத்தில் இல்லாமல் இருந்தது. எனவே இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு அரச படைகளும் அன்று இருந்த தலைமையை எதிர்த்தவர்களாலும் காட்டிக் கொடுப்பு துரோகம் இப்படி பல வழிகளால் இந்த தமிழர் தலைமை இல்லாமல் போவதற்கு துணை நின்றவர்களாலும் இன்று இந்த சமூக சீரழிவுக்கு பெரும் காரணமாக இருக்கிறார்கள். சர்வதேசம் கூடவே பெரும் யுத்தத்திற்கு துணை நின்றது பெரும் துன்பத்தை இனப் படுகொலையை எதிர் கொண்ட தமிழ் சமூகத்துக்கு யுத்தம் முடிவடைந்த பின்பும் ஒரு நீதியான தீர்வை தமிழர்க்கு பெற்றுத் தர உதவவில்லை. தமிழர் தங்களை தாங்களே பாதுகாக்க கூடிய ஒரு தீர்வை இன்று வரை எந்த அரசும் வழங்கவில்லை. இந்தியா கூடவே தனது அதிகாரத்தை பயன் படுத்தி ஈழத் தமிழ் மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுத் தரவில்லை. இன்று இறுதியில் ஒரு சமூகச் சீரழிவுடனும் இராணுவ ஆக்கிரமிப்புடனும் எந்த வித தீர்வும் இன்றி இருப்பது பெரும் அவலமே. இலங்கை தேசமானது இன்னும் மாற்றமடைய போக வேண்டிய பாதை இன்னும் தூரமே. சரியான பாதையில் போக சிந்திக்காத வரையிலும் இலங்கை இன்னும் எதிர் காலாத்தில் பெரும் அரசியல் பொருளாதாரப் பிரசினைகளை தான் எதிர் கொள்ள வேண்டி வரலாம் உண்மையான இந்த பெரும் தொற்று நோயான போதைத் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமானால் மாற்றங்களோடு கூடிய அரசியல் சீர்திருத்தத்தாலும், நேர்மையான உண்மையான சமத்துவ ரீதியில் சிந்திக்கக் கூடிய ஆட்சியாளர்களாலும், சமூகவியல் சரியான பார்வையிலும், இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை நடை முறைப் படுத்தி மற்றும் இளைய தலைமுறைக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் மனநலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்படுவது அவசியம். இந்தப் போதை காலாச்சாரத்தை ஒழிக்க எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். பாடசாலைகள், சமூக ஊடகங்கள், மத நிறுவனங்கள், மற்றும் சமூக இயக்கங்கள் அனைவரும் இணைந்து இதற் காக உழைக்க வேண்டும் பேச வேண்டும் எழுத வேண்டும் ஒரு சமூக விழிப்புணர்வை இளையர் மத்தியில் உருவாக்க வேண்டும். இந்த நச்சு விதையை ஒழிக்க வேண்டும். அழகான ஒரு வாழ்வை எல்லா இனங்களும் தமது உரிமையோடும் கடமையோடும் வாழும் வழியை ஏற்படுத்த வேண்டும். பா.உதயன் ✍️- போரும் சமாதானமும்-பா.உதயன்
போரும் சமாதானமும்-பா.உதயன் யுத்த அழிவுகளினால் போரும் மனித அவலங்களும் மரணங்களுமாக உலகம் இன்று அமைதி இழந்து ஒரு இருள் சூள்தபடி சுழல்கிறது. ஆக்கிரமிப்பும், அதிகாரமும், சுயநலன்களுமாக நாடுகளுடன் நாடுகளும் மனிதனுக்கு மனிதன் எதிரியாகவும் இருக்கிறான். மனிதனை மனிதன் கொல்லாமல், நாடுகளை நாடுகள் அடிமைப் படுத்தி சுய நலன் கருதி சுரண்டாமல் மனிதன் வாழ கற்றுக் கொள்வானா. தங்கள் தங்கள் தேசிய நலன்களோடும் அதன் நலன் சார்ந்த அணிகளோடும் பயணிக்கும் நாடுகளின் பூகோள அரசியல் ( Geo political strategy ) காய் நகர்தல்களினாலும் விஸ்தரிப்புகளினாலும் மாற்றங்களினாலும் இன்று உலகம் மனிதம் மனிதாபிமானம் அனைத்தையும் மறந்து யுத்தமும் அழிவுகளுமாக பயணித்து வருகிறது. உலக சமாதானம் என்பது இன்று எட்ட முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம். ஆதிகாலத்தில் மனிதனுக்கு மனிதன் சண்டை போட்டது போல் இன்று நாடுகள் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன. அன்பு, அறம், கருணை, சமாதானம், மனிதம் எல்லாம் இன்று தொலைந்த மனிதனாக வெறுப்பும் வேதனையுமாக மனித அவலங்களாக உலகம் இருப்பது பெரும் அவலம். உலக வளங்கள் எல்லாம் பணக்கார வர்க்கத்திடம் இருப்பதும் எத்தனையோ ஏழை நாடுகள் எவ்வித வளர்ச்சியும் இன்றி அந்த நாட்டில் வாழும் மக்கள் ஒரு வேளை உணவுக்கே வழி இன்றி திண்றாடுகின்றனர். உலக சமத்துவமின்மையால் எல்லோருக்கும் எல்லாமே கிடைப்பதில்லை. மானிட வரலாறுகள் எல்லாம் சரிகளோடும் பிழைகளோடுமே நகர்த்திருக்கிறது. மதங்களின் பெயரிலும், காலனித்துவ அதிகார சுரண்டலின் பெயரிலும், வல்லரசுகளின் அரசியல் பொருளாதார நலன் சார்ந்தும் உலகம் எத்தனையோ அழிவுகளை சந்தித்தது. யுத்த வடுக்கள் சுமந்து சென்ற வலிகள் எண்ணில் அடங்காதவை. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், பாலைஸ்தீனம் இப்படி எத்தனையோ நாடுகள் ஆதிக்க வல்லரசுகளின் நலன் சார்ந்த யுத்தங்களினால் ஏற்பட்ட மனித இழப்புக்கள் எத்தனை. இந்த யுத்தங்களுக்காக செலவிடும் எத்தனையோ பில்லியன் பணத்தை கொண்டு எத்தனையோ வறிய நாடுகளை முன்னேற்ற உதவி இருக்கலாம். பசியோடும் இருக்கும் எத்தனையோ குழந்தைகளுக்கு பசியையும் போக்கி கல்வியை கொடுத்து உதவி இருக்கலாம். யுத்தம் தொடர்ந்தபடி தான் இருக்கிறது. இன்று ரஷ்யா உக்ரைன், பாலைஸ்தீனம் இஸ்ரேல் யுத்தங்களினால் உலகம் அமைதியை இழந்திருக்கிறது. மனித அழிவும் துன்பங்களும் தொடர்கிறது இது நிறுத்தப்பட்டு சமாதானகத்துக்கான பாதைகள் திறக்கப் பட வேண்டும். யுத்தங்கள் கொடியவை இவைகள் தவிற்கப்பட வேண்டும். மனிதத் துயர்கள் இல்லாதிருக்க வேண்டும். எதிர்கால குழந்தைகள் பயமின்றி நடந்து செல்லும் அமைதிப் பூங்காவாக உலகமே மாறும் நம்பிக்கையோடு இன்று உலகை சூழ்ந்துள்ள இருள் விலகி இதுகும் கடந்து போகட்டும். இவை எல்லாம் கடந்து போய் யுத்தம் இன்றி சமாதானமாக மனிதனை மனிதன் நேசிக்கும் மானிடமும் அறமும் கொண்ட சுதந்திரம், ஜனநாயகம், சகோதரத்துவம் கொண்டு அன்பு என்ற மொழி பேசட்டும் அழகான பூ பூக்கட்டும். பா.உதயன் ✍️- மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன்
அன்பும் நன்றியும் 🙏- மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன்
மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்- பா.உதயன் எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான். வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன். ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல. எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது. வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும். பா.உதயன் ✍️- ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன்
ஈழத் தமிழர்களும் அவர்கள் இருப்பும்- பா.உதயன் உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி பெளத்த மத முன்னுருமை சிந்தனையில் இருந்து மாறுவதோ அல்லது தமிழர் பிரச்சினைக்கான நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றோ இது வரை அனுரா அரசு முயற்சிற்ததாகவும் இல்லை இவை பற்றி எதுகும் தமிழர் தரப்புடன் பேசியதாகவும் இல்லை. அது வேண்டுமா உங்களுக்கு இது வேண்டுமா என்று அனுரா கேட்க்கிறாரே தவிர தமிழருக்கு எதை கொடுக்க வேண்டும் அவர்கள் இதுவரை எதற்காக போராடினார்கள் எத்தனை துயரம் எத்தனை உயிர் தியாகம் செய்தார்கள் எத்தனை தம் உறவுகளை இழந்தார்கள் என்று கூட ஒரு போராடத்தின் பாதையில் இருந்து வந்து ஆட்சி அமைத்தவர்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான். தமிழர்களின் அரசியல் தீர்வு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, தொலைந்து போனவர்களின் நீதி, காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை இப்படி பல முக்கியமான தமிழர் எதிர்பார்க்கும் தீர்வுகளை இந்த நாட்டில் பல காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த முக்கிய பிரச்சினை குறித்து தமிழர் தரப்புடன் பேசுவதை தவிர்த்து வருகிறார்கள். ஒரு சில மாற்றங்களை தவிர பழையவைகள் தொடர்கின்றன. மீண்டும் மீண்டும் தமிழ் கட்சிகள் தங்களிடையே மோதிக் கொள்வதையும் அவர்கள் திரட்சி ரீதியாக பலவீனம் அடைவதையும் அனுரா தலைமையிலான அரசு விரும்புகிறது அப்போது தான் தாம் வட கிழக்கை கை பற்றி தமிழர்கள் தம்மோடு தான் நிற்கிறார்கள் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் அபிவிருத்தி மட்டுமே அன்றி அரசியல் தீர்வல்ல அதே போல் தமிழர் கோரும் சர்வதேச விசாரணை மற்றும் தொலைத்து போனவர்களுக்கான நீதி இவற்றை கூட நீர்த்து போக செய்யலாம் புலம்பெயர் தமிழர்களையும் இந்த வழியில் கொண்டு வரலாம் என்ற நிகழ்ச்சி நிரலோடு பயணிக்கிறது. தமிழர்களிடையே சில படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவரும் இதை ஆதரிப்பது பெரும் வெட்கமானது. அது அவர்கள் ஜனநாயக உரிமை என்று சொல்லிக்கொண்டாலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலை வேண்டியே இந்த மக்கள் போராடுகிறார்கள் என்பதை சிவப்பு தோழர்கள் உணர்ந்தால் நல்லது. அவர்கள் கூட ஒரு காலம் விடுதலை வேண்டிப் போராடியவர்களே. சமத்துவம் என்ற பார்வையை இவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையே என எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் இலங்கையில் அனுரா அரசால் நடாத்தப்படும் பெளத்த மதம் சார்ந்த சமய நிகழ்ச்சிகளும் அதன் பார்வையும் முன்னைய அரசுகள் போன்றே பெளத்த மதத்தை முன்னிலைப் படுத்திய பெரும் பேரினவாத சிந்தனை போன்றே அமைந்திருக்கிறது. எல்லா இனமும் மதமும் சமத்துவம் என்ற சிந்தனை வெறும் பேச்சோடு தான என எண்ணத் தோன்று கின்றது. உரிமைகளை கேட்பவர்களை இனவாதிகள் என்று சொல்லுவதே பெரும் இனவாதம். தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றப் படுபவர்களாகும் ஏமாறுபவர்களாகும் இருக்கக் கூடாது எனவே தமிழர் ஒரு திரட்சியாக தம் எல்லா தீர்வையும் வென்று எடுக்கும் வரை பலமாக இருக்க வேண்டும் தமிழர் வாக்கு சரியான எதிர்கால சிந்தனையோடு இருக்க வேண்டும் இதை எல்லா தமிழர் கட்சிகளும் உணர்ந்து செயல் பட வேண்டும் இல்லையேல் உங்கள் எதிர் காலமும் இருப்பும் கேள்விக் குறியதாகிவிடும். எது எப்படி இருப்பினும் தென் இலங்கையில் ஒரு சில மாற்றம் வந்ததன் மூலம் கொலைகள் ஊழல் உடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தால் நீதியை பொறுத்த வரையில் ஒரு மாற்றம் வரும். ஆதலால் அனுரா அரசு சரியான பாதையில் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்து சரியான பொருளாதார ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவத்திலேயே தான் இதன் எதிர் காலா வெற்றியும் தங்கியுள்ளது என்பதை உணர்ந்தால் நல்லது. அப்போது தான் நிலத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்கள் இலங்கையின் எல்லா அபிவிருத்தி வேண்டியும் உழைப்பார்கள் எதிர்காலத்திலும் உண்மையான சமத்துவதுடன் உங்களுடன் தமிழர் பயணிப்பார்கள். பா.உதயன் ✍️- ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுங்கள்-பா.உதயன்
அனுராவின் அலை இன்னும் வருகுதாம் அள்ளிப் போக வாக்கை கண்டீர் என்னென்னமோ தாறம் என்று ஏமாற்றும் வித்தை பாரும் வடக்கையும் கிழக்கையும் இரண்டா பிரிச்சுப் போட்ட வந்து இப்போ என்ன கதை சும்மா பொய்கள் சொல்ல வேண்டாம் அண்ணன் தம்பி என்று சொல்லி இப்ப என்ன சமத்துவக் கதை அப்போ எல்லாம் என்ன செய்தீர் நாங்கள் பட்ட துன்பம் கண்டும் கூட ஆமியோடு சேர்ந்து இருந்து எங்கள் இருப்பை எல்லாம் தொலைத்தனீங்கள் அகதியாக்கி எம்மை அலைந்து திரிய கலைத்தனீர்கள் இனவாதப் பேய்களோட நீங்கள் இருந்ததெல்லாம் உண்மை தானே சோசலிசம் கொம்யூனிசம் என்று கொள்கை எல்லாம் சொல்லிறியள் அங்க அது ஒன்றும் இல்லை என்று அறிந்தவனும் தெரிந்தவனும் அறிவர் உண்மையான சோஷலிசவாதி ஒடுக்கப்படுபவன் உரிமைக்காய் குரல் கொடுப்பான் எங்கள் பாதிக் காணியை பிடிச்சுப் போட்டு தமிழர் தேசமெல்லாம் எல்லாம் ஆமிக்காரன் வந்திருக்கான் எம் மண் முழுக்க ஈயைப் போல மொச்சிருக்கான் அரசியல் தமிழ் கைதிகளை அடுத்த நாளே விடுவோம் என்றீர் காணி எல்லாம் விடுவிப்போம் என்றீர் அந்தக் கதையைக் கூட காணவில்லை பயங்கரவாத சட்டத்தை எடுபோம் என்றீர் இப்ப கூட இந்த சட்டம் தமிழருக்காய் தொடருதெல்லோ புதுது புதிதாய் புத்தர் விகாரை கட்டியெல்லோ வைக்கிறீர்கள் ஏதும் நாங்கள் கதைக்கப் போனால் இது இனவாதம் என்கிறீர்கள் தொலைந்த பிள்ளையை தேடி அலைந்து திரியும் தாய்மாருக்கு இனியும் என்ன சொல்லப் போறீர் எங்கு எல்லோரும் பாவம் கழுவப் போறீர் பழசுகளை மறக்க சொல்லி சிலர் வந்து சொல்கிறார்கள் கடந்து நாங்கள் போனாலும் மறந்து நாங்கள் போவோமா அது வேண்டுமா இது வேண்டுமா என்று தமிழரிடம் கேட்கிறியள் இப்போ எதுகுமே தராமல் இருக்கிறியள் வருகிறது அபிவிருத்தி என்று வாயால் மட்டும் சொல்லுறியள் இனப்பிரச்சினை பற்றி எதுகுமே சொல்லவில்லை இது இருக்குதென்று தெரியாததுபோல் நடிக்கிறியள் அபிவிருத்தி என்ற மாய மானை காட்டுறியள் இனிக்க இனிக்க ஏதோ எல்லாம் பேசுறியள் எழுபது வருடமாக எத்தனை துன்பம் தமிழருக்கு இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை தாரும் இருளைக் கடந்து இலங்கையில் சமத்துவமாய் வாழ இது ஒன்றே வழியென்று அறியும் தமிழன் அடையாளம் தொலையாமல் இனி சரியான தலைமை ஒன்றை தமிழர்கள் தெரிய வேண்டும் ஒன்றாக ஒரு சக்தியாக நின்றாக வேண்டும். பா.உதயன் ✍️- காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺
காத்திருப்பேன் மச்சான் கண் உறங்காமல் -பா.உதயன் 🌺 வழி நெடுக மல்லிகைப் பூக்கள் மச்சாள் உனக்கு பறிச்சு வரவா பார்த்து பல பூவாய் பறிச்சு வாடா பவளம் உனக்காக பார்த்து இருப்பாள் கடைகள் முழுக்க காப்பு வளையல் கண்ணம்மா ஒரு சோடி வேண்டி வரவா கைக்கு அளவாக வேண்டிவா மச்சான் காஞ்சிபுர சேலைக்கு சோடாய் இரண்டு காலுக்கு இரண்டு கால் சலங்கை கண்ணம்மா உந்தன் காலுக்கு அளவாய் மேளத்தின் தாளத்துக்கு ஆடும் உன் அழகுக்கு வெள்ளிக் கொலுசு கொண்டு நான் வாறேன் மச்சான் உனக்காய் பார்த்து இருப்பேன் பனம் பலகாரம் சுட்டு நான் வைப்பேன் அடுத்த வீட்டு மாமிக்கு மணக்க மணக்க ஆறு ஏழு கறியோட சோறும் சமைப்பேன் பச்சை நிறத்தில சேலை இரண்டு பவளம் உனக்காய் கொண்டு வாறேன் மச்சாள் உன் கைக்கு மருதாணி பூச மறக்காமல் அது கூட வேண்டி வாறேன் முத்து வைத்த மூக்குத்தி உனக்காய் மறக்காமல் மச்சாள் வேண்டி வாறேன் பார்த்திருப்பேன் உன்னை படலையில் மச்சான் பார்த்து பத்திரமாக வந்து நீ சேரு ஆசையாய் நீ உண்ண அலுவா அரைக் கிலோ நேசமாய் உனக்காய் வேண்டி நான் வாறேன் அளவாக சக்கரை போட்டு நான் மச்சான் ஆடிக் கூழ் உனக்காய் காச்சி வைப்பேன் ஊரிலே எல்லோரும் சுகமாடி பிள்ளை உனக்காக நான் வச்ச மாமரம் பூக்குதா காச்சுக் குலுங்குது என்னைப் போல் மச்சான் கறுத்தக் கொழும்பான் உனக்காக இருக்கு நேசமாய் நீ வந்து பாசமாய் உண்ண பழுத்துக் கிடக்குது மாங்கனி மச்சான் பார்த்திருப்பேன் உன்னை பகல் இரவாக காத்திருப்பேன் மச்சான் கண்ணும் உறங்காமல் அம்மன் திருவிழா தேருக்கு வா மச்சான் ஆசையாய் இருவரும் சேர்ந்தே போவோம் அட மச்சான் ஆடி ஆடி வரும் அம்மன் அழகை கூடி கூடி நின்று நாம் பாடி ரசிப்போம் பா.உதயன் ✍️- குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
அன்பும் நன்றியும் 🙏🌺- குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
வெறி வெறி கொட்டப்பா வேர்க்குது வாடியப்பா ரயேட்டா இருக்குதப்பா கொம்பிளேன் எகேன் கொட்டப்பா கோ வாக்ரு லண்டன் சூனப்பா இப்படியே கத்தி போட்டு பிளைட் ஏற வேண்டியது தான் குமாரசாமி அண்ணன். நான் குளிருக்கு எழுத நீங்கள் வெக்கைக்கு எழுதுறியள் அப்படி போடுங்கோ நல்லாத் தான் இருக்கு.😂👍- குளிர் போட்டு வாட்டுதப்பா-பா.உதயன்
- செந்தமிழாய் எங்கும் இசை-பா.உதயன்
நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺 நன்றிகளும் புதுவருட வாழ்த்துக்களும்🙏🌺- செந்தமிழாய் எங்கும் இசை-பா.உதயன்
உலகம் இன்று நீதி தர்மம் அறம் அத்தனையும் தொலைந்து சுழல்கிறது எங்குமே யுத்த சத்தங்களும் மனிதப் பேரழிவுமாய் பசி பட்டினியுமாய் மனிதத் துன்பங்களுமாய் கிடக்கிறது. இனி பிறக்கும் வருடத்தில் எங்கும் மனிதாபிமானமும் அமைதியும் சமாதானமும் நிலவி இருள் கடந்து ஒளி பிறக்கட்டும். -பா.உதயன் செந்தமிழாய் எங்கும் இசை- காலை புலரும் நேரம் கடல் கரையில் ஒரு ஓரம் தானாய் வந்த பறவை எல்லாம் ஏதோ சொல்லிப் பாடுது ஏழு கடல் ஓடி வந்து எத்தனையோ வர்ணம் தீட்டும் காடு எல்லாம் ஆடி ஆடி கவிதை பல பேசும் ஆலமரம் செழித்து நிற்கும் அன்னைத் தமிழ் இசை பாடும் பாடி வரும் தென்றல் காற்று பண் இசைத்து ஓடி வரும் வசந்தம் எல்லாம் பூத்திருக்கும் வானம் எங்கும் கவி பாடும் பச்சை கிளி பறந்து வந்து மெட்டோடு பாட்டிசைக்கும் வயல்கள் எங்கும் பச்சையாக புல் முளைக்கும் மழைகள் வந்து துளிகளாக நனைந்திருக்கும் ஆலயத்தின் அருகில் ஒரு ஆலமரம் ஆடி நிற்கும் அங்கு வந்து மெல்ல மெல்ல குயில்கள் கூவும் செந்தமிழாய் எங்கும் இசை எட்டுத் திசை ஒலிக்கும் எம் தமிழே எழுந்து வர எத்தனையோ மணி ஒலிக்கும் எங்குமே கவிதை மொழி எம் தமிழில் உயிர்க்கும் வண்ணமான வாழ்வு தனை தமிழ் எங்கும் சொல்லும் ஆற்றம் கரை ஓரம் அன்னை சக்தி வாழும் கோவில் மணி ஏழு கடலும் ஒலிக்கிறது எங்கும் அமைதி கொள்கிறது எங்கிருந்ததோ பெண் ஒருத்தி ஏழு சுரம் இசைக்கின்றாள் இனி ஒரு குறை இல்லை என்றே இருள் விலகப் பாடுகிறாள். பா.உதயன்🌺- எது இனவாதம்- பா.உதயன்
ஈழத்தில் 2009 ல் எங்கள் ஆயுத பலத்தை இழந்தோம். இப்போ அரசியல் பலத்தையும் இழந்திருக்கிறோமா. அப்படி இப்படி நாம் அது எல்லாம் இல்லை என்று பூசி மொழுகினாலும் சில தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். எதிர்காலத்தில் இது நிரந்தரமான தோல்வியாக இருக்காமல் நாம் மாற்றி அமைக்க வேண்டுமானால் நாம் விட்ட தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது போல் விடா கொண்டன் கொடாக் கொண்டனாக இருக்காமல் இனியாவது ஒற்றுமையோடு பயணியுங்கள். தமிழ் கட்சிகள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதும் அதோ போல் புலத்திலும் நிலத்திலும் உள்ளவர்கள் நம்மை நாமே தாழ்த்தியபடி ஆளுக்கு ஆள் மாறி மாறி தேசியம் தெருவில் கிடக்கிறது என்பதும் தமிழ் இனவாதத்தால் வந்த வினை என்பதும் இப்படி தேசியம், தேசம் சுயநிர்ணயம், அடையாளம், இனம் சார்ந்த எந்தத் தெளிவும் இன்றி அவர் அவர் உயரங்களுக்கு தகுந்த மாதிரி எழுதியும் பேசியும் வருகிறார்கள். நாம் வாழும் நாடு நோர்வேயிலே அவர்கள் தமது முழுமை பெற்ற சுதந்திர தினத்தை கொண்டாடும் போது சிறுவர் முதல் பெரியோர் வரை தமது தேசியக் கொடியை தோழில் காவியபடி நாங்கள் எல்லோரும் நமது தேசத்தியும் மண்ணையும் மொழியையும் நேசிக்கிறோம் என்று ஒரே மக்களாக ஒரே திரட்ச்சியாக வானுயர பாடியபடி போவார்கள். இப்படி ஒன்று பட்ட திரட்சியினால் தான் பிரான்சுப் புரட்சியில் இருந்து ரஷியாவின் சிவப்பு சுதந்திர சதுர்க்கம் வரை விடுதலை பெற்ற வரலாற்றை உலகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது. ஒரு இனம் ஒடுக்கு முறைக்கு எதிராக தனது இருப்பு தனது சுதந்திரம் வேண்டிப் போராடுவது எல்லாம் இனவாதம் இல்லை. இனவாதம் என்பது தத்துவார்த்த ரீதியிலான பல கருத்துக்களை கொண்டது அதில் ஒன்று சிறு பான்மை இனத்தின் உரிமை மறுக்கப்படுவதும் சொந்த இனத்தை உயர்வாகக் பார்த்து பிற இனத்தை ஏற்றுக்கொள்ளாமல் தாழ்வாகக் கருதுவது போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசத்தில் வாழும் தேசிய இனங்களை மரத்தை சுற்றிப் படரும் கொடி என்று பெரும்பான்மை சமூகம் கூறுவதும் தான் இனவாதம். தன்னாட்சி கோருவது பிரிவினைவாதம் அல்ல. சட்டப்படி உரிமைகளை கோருவது இனவாதம் அல்ல. உரிமைகளை மறுப்பதே இனவாதமாகும். ஒடுக்கப்பட்ட ஒரு தேசிய சிறு பான்மை இனம் சுய நிர்ணயம், தன்னாட்சி, உரிமைகள் மற்றும் சமத்துவம் சட்டப்படி தமது உரிமைகளை கோருவது பிரிவினைவாதம் இனவாதம் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறது. கொல்லப்பட்ட எம் மக்களுக்கும் தொலைந்து போனவர்களுக்கும் நீதி கேட்பது இனவாதமா அதற்கு மாறாக, அந்த உரிமைகளை மறுப்பது முறையாக மதிப்பீடு செய்யப்படாத செயலாகும் மற்றும் சமத்துவத்தை மறுக்கும் ஒரு நிலையை பிரதிபலிக்கிறது. தமது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் உரிமைக் குரலை மறுத்து பிரிவினை வாதம் இனவாதம் என்று கதைப்பது வாதிடுவது தான் இனவாதம். இதை சரியாக விளங்கிக் கொண்டே ஆளும் கட்சியாக இருந்தாலும் எவரும் எந்தக் கருத்தையும் கூற வேண்டும். ஆழமாக எதையும் விளங்கி சரியானவைகளை எழுத வேண்டும் பேச வேண்டும். பிளவு படாத ஒரே நாட்டுக்குள் சமத்துவமாக வாழ்வோம் என்பதை விட அந்த மக்களின் உரிமைகளை அங்கீகரித்து விட்டு அனைவரும் சமத்துவமாக வாழ்வோம் என்று அழைப்பது தான் உண்மையான சமத்துவம். தமிழர் தேசங்களில் உரிமைகள் மதிப்பு, நீதி, நிர்வாகம், சட்டம், பாதுகாப்பு முறை என்பன அவர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க மரியாதையுடன் சமத்துவமாகவும் நடைமுறைப் படுத்த வேண்டும். இன்று இலங்கையில் பல மாற்றம் நடந்திருக்கிறது குறிப்பாக தெற்கு அரசியல் வாதிகளே முழுக்கு முழுக்கு இனவாதம் பேசியவர்கள் அந்த முகங்கள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறார்கள் இது வரவேற்கத் தக்க மாற்றமாகும். சமத்துவமான சமுதாயமாகவும் நாம் எல்லாம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடக இலங்கை இருக்க வேண்டும் என்ற கனவு கண்டால் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தேசிய இனப் பிரச்சினையாகும். இதன் மூலம் நாம் எல்லோரும் ஒன்றாக சமத்துவமான ஊழல் அற்ற ஒரு கனவுத் தேசத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற யதார்த்தத்தை ஆளும் தரப்பினர் சரியாகப் புரிய வேண்டும். நாமும் இனி வரும் காலத்தில் ஒற்றுமையோடு பயணித்தால் தான் எமக்கான விடுதலையும் அடைய முடியும் என்பதையும் தமிழர் தரப்பும் உணர வேண்டும். பா.உதயன் ✍️ - காலை பொழுதொன்றில் கூவும் குயில்- பா.உதயன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.