நலமோடு நாம் வாழ

காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்படுமா?!

2 days 15 hours ago
கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?
கெங்கிஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா?

இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா?

மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள்.

ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான்.

 

12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல.

பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று.

அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள்.

புழுக்கள் மருத்துவ அதிசயம் ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கெங்கிஸ் கான்

வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது.

உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை.

19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார்.

அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார்.

நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

 

புழுக்கள் மருத்துவ அதிசயம் ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர்.

நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்?

ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது.

இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது.

புழுக்கள் மருத்துவ அதிசயம் ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம்

கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான்.

காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும்.

பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புழுக்கள் மருத்துவ அதிசயம் ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை

எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது.

மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது.

ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்கள் சரியா?

5 days 16 hours ago
PCOS, பெண்கள்

பட மூலாதாரம்,KOURTNEY SIMMANG

படக்குறிப்பு, கோர்ட்னி PCOS உள்ள பெண்களுக்கு அங்கீகரிக்கப்படாத சோதனைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்கிறார்

கடந்த 12 வருட காலமாக சோஃபிக்கு வலிமிக்க மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

அவர் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பையில் நீர்க்கட்டிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது 10 பெண்களில் ஒருவருக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை பெற சோஃபி போராடினார்.

தனது ஆரோக்கியத்தை தன் கைகளில் எடுத்துக் கொள்வதே, இதற்கான சிகிச்சை பெறுவதற்கான ஒரே வழி என்று அவர் உணர்ந்தார். அந்த நேரத்தில்தான், கோர்ட்னி சிம்மாங் (Kourtney Simmang) என்பவரது பக்கம் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

PCOS பாதிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை அடையாளம் காணவில்லை. ஆனால் "மூல காரணத்தை கண்டுபிடித்து அதனை குணப்படுத்தப் போவதாக" கோர்ட்னி உறுதியளித்திருந்தார்.

அவர் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனைகள், என்ன உணவு உண்ண வேண்டும் மற்றும் பிற ஊட்டச்சத்து குறித்த முறையான திட்டம் மற்றும் விரிவான பயிற்சி முறைகள் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இதற்காக அவர்களிடம் இருந்து 3,600 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறுகிறார்.

நூற்றுக்கணக்கான டாலர்களை செலுத்தி, கோர்ட்னியிடம் இருந்து சோஃபி அவற்றை வாங்கியுள்ளார்.

"அந்த மருத்துவ பரிசோதனைகளை மக்களுக்கு பரிந்துரை செய்ய கோர்ட்னிக்கு எந்த ஒரு அங்கீகாரமும் இல்லை. அவை குறைந்த அளவிலே மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்படும் சோதனைகள் ஆகும்", என்று மகப்பேறு மருத்துவரும், பெண்கள் உடல்நலம் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துபவருமான மருத்துவர் ஜென் கண்டர் கூறுகிறார்.

சுமார் ஒரு வருடத்திற்கு கோர்ட்னியின் மருத்துவ திட்டங்களை பின்பற்றிய பின்னரும், சோஃபிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அதனால் அவர் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதை கைவிட்டார்.

"எனது PCOS பிரச்னைக்கான தீர்வில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது போல தோன்றியது. உடல்நிலை மற்றும் உணவு பழக்கம் மிகவும் மோசமானதால், நான் கோர்ட்னியின் சிகிச்சை முறையை பின்பற்றுவதில் இருந்து விலகினேன்", என்று சோஃபி கூறினார்.

இந்த கட்டுரைக்காக கோர்ட்னியிடம் பேச முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.

PCOS பாதிப்புக்கு எளிதான மருத்துவ தீர்வு இல்லாததால், மருத்துவரல்லாத சமூக ஊடகங்களில் மில்லியன்கணக்கில் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்கள் பலர் தங்களை நிபுணர்களாக காட்டிக்கொண்டு போலியான மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் சிலர் தங்களை ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது "ஹார்மோன் பயிற்சியாளர்கள்" என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

செப்டம்பர் மாதத்தில் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் " PCOS" ஹேஷ்டேக் கொண்ட அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களை பிபிசி உலக சேவை கண்காணித்து வந்தது, அவற்றில் பாதி தவறான தகவல்களைப் பரப்புவதாக இருந்தது என்று கண்டறிந்தது.

PCOS, பெண்கள்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றது

உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, உலகில் 70% வரையிலான பெண்கள் தங்களுக்கு PCOS பாதிப்பு இருக்கிறது என்பதை அறியாமல் இருக்கின்றனர். மேலும் அவ்வாறு கண்டறியப்பட்டாலும் கூட, அதனை முழுமையாக குணப்படுத்தக் கூடிய சிகிச்சைகளைக் கண்டறிய பெண்கள் போராடுகிறார்கள்.

"உரிய சிகிச்சை கிடைப்பதில் இடைவெளி இருக்கும் போது கிடைக்கும் வாய்ப்பினை இதுபோன்ற போலி மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்", என்று மருத்துவர் கண்டர் தெரிவித்தார்.

சமூக ஊடக இன்ஃப்ளூயென்சர்கள் இது போன்ற தவறான கருத்துகளை முன்வைக்கின்றனர்:

  • உணவு பழக்கங்கள் மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும்
  • குறைந்த மாவுச் சத்து மற்றும் அதிக கொழுப்புள்ள கீட்டோ டயட் போன்ற உணவுமுறை மூலம் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும்
  • கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பு ஏற்படுத்தும் அல்லது நோய் அறிகுறிகளை மோசமாக்கும்
  • இந்த மருந்துகள் எல்லாம் PCOS பாதிப்பை கட்டுப்படுத்த மட்டுமே உதவும், ஆனால் அதற்கான "மூல காரணத்தை" சரி செய்யாது

மிகவும் குறைவான கலோரி கொண்ட உணவுகள் சிறந்த பலன் அளிக்கும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. கீட்டோ டயட் இருப்பது PCOS பாதிப்பை இன்னும் மோசமாக்கலாம்.

கருக்கலைப்பு மாத்திரைகள் PCOS பாதிப்பை ஏற்படுத்தாது, மாறாக அது பல பெண்களுக்கு உதவியாகவே இருக்கின்றன, ஆனால் அது அனைவருக்கும் பலன்னளிக்காது. PCOS பாதிப்பிற்கான அடிப்படைக் காரணம் என்ன என்று எதுவும் கண்டறியப்படவில்லை, அதற்கான உரிய சிகிச்சையும் இல்லை.

"எங்கள் நிறுவனம் தவறான உள்ளடக்கத்தை தளத்தில் பதிவிட அனுமதிக்காது. அது பார்வையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்", என்று டிக்டாக் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பெண்களின் ஆரோக்கியம் குறித்த பயனர்களின் உள்ளடக்கம் "எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல்" தளத்தில் பதிவிட அனுமதிக்கப்படுகிறது என்றும், உடல்நலம் தொடர்பான தவறான தகவல்களைத் தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்

PCOS, பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

PCOS என்றால் என்ன?

பெண்களுக்கு கருப்பையின் இரு பக்கங்களிலும் ஓவரி என்று சொல்லக்கூடிய சினைப்பைகளில் சிறிய, சிறிய நீர்க்கட்டிகள் தோன்றுவது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, உலகில் 8-13% PCOS-யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வலி மிகுந்த ஒழுங்கற்ற மாதவிடாய், அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை PCOS அறிகுறிகளில் அடங்கும் என்று தேசிய சுகாதார சேவை (NHS ) தெரிவிக்கின்றது. கருவுறாமைக்கு PCOS மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும் என்றும் NHS குறிப்பிட்டது. ஆனால் இந்த பாதிப்பு ஏற்படும் பெரும்பாலான பெண்கள் சிகிச்சை மூலம் கர்ப்பமாகலாம்.

கென்யா, நைஜீரியா, பிரேசில், பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 14 பெண்களிடம் பிபிசி இந்த கட்டுரைக்காக பேசியது. அவர்கள் சமூக ஊடகங்களில் இன்ஃப்ளூயென்சர்களால் விளம்பரப்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை பயன்படுத்தியுள்ளனர்.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட டாலீன் ஹேக்டோரியனின் பெயரை இவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட உணவியல் நிபுணரான டாலீன் 219 அமெரிக்க டாலர்களுக்கு ஊட்டச்சத்துகளை விற்பனை செய்து வருகிறார். அவர் உடல் எடையை குறைப்பதற்கான தனது செயலியை மக்கள் பயன்படுத்த 29 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக பெறுகிறார்.

PCOS, பெண்கள்

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு, டாலீன் ஹேக்டோரியன் தனது மில்லியன்கணக்கான பின்தொடர்பவர்களுக்கு போலி மருந்துகளை விற்கிறார்

PCOS பாதிப்பு உள்ள பெண்களுக்கு உதவியாக இருப்பதாக கண்டறியப்பட்ட கருக்கலைப்பு மாத்திரை, நீரழிவு நோய்க்கான மாத்திரை, மெட்ஃபோர்மின் போன்ற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை எச்சரித்து வருகிறார்.

அதற்கு பதிலாக, தனது வாடிக்கையாளர்களிடம் அவர் தனது ஊட்டச்சத்து திட்டத்தை பயன்படுத்தி "இயற்கையாக" குணமடைய ஊக்குவிக்கிறார். அவர் எடை மற்றும் "PCOS தொப்பை" என்று கூறப்படும் அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஏமி, தனது மருத்துவரின் சிகிச்சை மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த போராடிய பிறகு, டாலீனின் சில ஆலோசனைகளைப் பின்பற்ற முடிவு செய்தார்.

"PCOS-யால் உனக்கு இருக்கும் தொப்பையே உனது பலவீனம்", என்று டாலீன் என்னிடம் கூறினார்.

நான் க்ளூட்டன் மற்றும் பால் உணவுப் பொருட்களை குறைவாக உண்ண வேண்டும் என்று டாலீன் எனக்கு ஆலோசனை வழங்கினார். ஒரு நல்ல உணவு பழக்கத்தினால் PCOS பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றாலும், க்ளூட்டன் அல்லது பால் பொருட்களைத் தவிர்ப்பது உண்மையில் பலன் அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

க்ளூட்டன் மற்றும் பால் பொருட்களைக் குறைத்து உண்ண ஏமி மிகவும் சிரமப்பட்டார்.

"இது உங்களை தோல்வியடைந்ததைப் போல் உணர வைக்கிறது," என்று அவர் கூறினார்.

"அதிக உடல் எடையுடன் இல்லை என்றாலும் இவர்கள் என்னை மோசமாக உணர வைப்பார்கள். இந்த சிகிச்சைக்காக உங்களை பல டயட்களை மேற்கொள்ள வைப்பார்கள் அல்லது கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை வாங்க வைப்பார்கள்", என்றும் அவர் தெரிவித்தார்.

PCOS, பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இன்ஃப்ளூயன்சர்கள் பரிந்துரைக்கும் உணவு முறைகளால் உங்கள் உணவு பழக்க வழக்கத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர் கண்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் விற்கும் ஊட்டச்சத்து பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் அவை உயர் தரத்தில் இருப்பவை என்றும் டாலீன் பிபிசியிடம் கூறினார்.

மற்ற மருந்துகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில்லை என்றாலும், அவற்றை பயன்படுத்துவதால் வரும் சாத்தியமான நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்த ஆதார அடிப்படையிலான தகவல்களை வழங்குகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

தன்னைத்தானே நேசிப்பதையும், தனது உடலை ஏற்றுக்கொள்வதையும் ஊக்குவிப்பதே அவரது அணுகுமுறை என்று அவர் கூறினார்.

PCOS பாதிப்பை குணப்படுத்த எந்த சிகிச்சையும் இல்லாத காரணத்தினால், தனது அறிகுறிகளை சீர்படுத்த ஹார்மோன் மாத்திரைகளை அவரது மருத்துவர் ஏமிக்கு வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், மீண்டும் தன்னிடம் வந்து சிகிச்சை எடுக்குமாறு ஏமிக்கு அவரது மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

"இவர்கள், இதற்கான சிகிச்சை கிடைக்காத நிலையில், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தால் தவிக்கும் மக்கள் ஆவார்கள்", என்று மருத்துவர் கண்டர் கூறினார்.

PCOS, பெண்கள்
படக்குறிப்பு, மெட்லின் தனது PCOS பாதிப்பை ஏற்று மற்ற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறார்

தவறான தகவல்களால் இவர்கள் மருத்துவ உதவி பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2) போன்ற மேலும் பாதிப்புகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

நைஜீரியாவில், மருத்துவ மாணவியான மெட்லின், PCOS பாதிப்பினால் வரும் அவமானங்களை சமாளிக்க முயற்சிக்கிறார். டயட் மற்றும் பிற ஊட்டச்சத்துகள் என எதுவும் பலன் அளிக்கவில்லை. அவர் இப்போது மற்ற பெண்களை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்கவும், அதற்கான உரிய சிகிச்சையை எடுக்கவும் ஊக்குவிக்கிறார்.

"உங்களுக்கு PCOS இருப்பது கண்டறியப்பட்டால், அது உங்களுக்கு அவமானம் தருகிறது. நாங்கள் சோம்பேறி என்று மக்கள் நினைக்கிறார்கள், நாங்கள் எங்களை கவனித்துக் கொள்ளவில்லை, நாங்கள் குழந்தை பெற வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள். எனவே யாரும் எங்களை காதலிக்க மாட்டார்கள். எங்களை யாரும் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்", என்று அவர் கூறினார்.

ஆனால் அவர் இப்போது தனது PCOS பாதிப்புகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துள்ளார். "எனது PCOS பாதிப்பு, எனது முடி, எடை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வது கடினமான ஒரு பயணம். இது மற்றவர்களிடம் இருந்து என்னை வேறுபடுத்தி காட்டுகிறது", என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா?

1 week 5 days ago

 

உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்? வயதிற்கு ஏற்றார் போல் உடலின் நாற்றம் மாறுபடுமா?
7 டிசம்பர் 2024
உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்

Getty Images

'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல

உடல் நாற்றம் (Body odour) என்று சொன்னவுடன், பலரும் அதை உடலின் சுத்தத்துடன் மட்டுமே தொடர்புப்படுத்தி பார்ப்பார்கள். அதிகமாக வியர்த்தால் உடலில் அதிக நாற்றம் வரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஆனால், உடல் துர்நாற்றம் என்ற பிரச்னையின் காரணமாக சிலர் உடலின் இந்த அத்தியாவசிய செயலை வெறுக்கிறார்கள் அல்லது அதை குறைக்க நினைக்கிறார்கள்.

 

ஆனால் வியர்வை என்பதே எந்தவொரு நாற்றமோ அல்லது மணமோ இல்லாத ஒரு திரவம்தான். சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள், வியர்வையை 'மணமுள்ள சேர்மங்களாக' பிரிக்கும்போது உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது.

'உடல் நாற்றம்' என்பது சுத்தத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, உணவுமுறை, ஹார்மோன் மாற்றங்கள், மரபியல், சில மருந்துகள், நீரிழிவு அல்லது கல்லீரல் நோய் போன்ற மருத்துவ நிலைமைகள் கூட அதற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வுகளும் நிபுணர்களும் கூறுகிறார்கள்.

இதைவிட ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் வயதிற்கு ஏற்ப உடலின் நாற்றம் மாறும் என ஓர் ஆய்வு கூறுகிறது. 

 

 

உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்

Getty Images

தினமும் இருமுறை குளிக்கும் நபருக்கு கூட 'உடல் துர்நாற்றம்' என்பது ஒரு பிரச்னையாக இருக்கலாம்

 

உடலின் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

 

தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது. உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் (Eccrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

முடி நிறைந்த தோல் பகுதி, அக்குளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் (Apocrine) என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. 

பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன.

மனித உடலில் இருந்து நூற்றுக்கணக்கான ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile organic compounds- விஓசி) வெளியேற்றப்படுகின்றன என்றும், பொதுவாக அவற்றின் கூறுகள் ஒரு நபரின் வளர்சிதை மாற்ற நிலையை பிரதிபலிக்கின்றன என்றும் 'தி ஜர்னல் ஆப் பயோகெமிஸ்ட்ரி' எனும் அறிவியல் ஆய்வு இதழில் வெளியான ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.

இந்த ஆய்விதழ், 1922ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகிறது.

இந்த ஆவியாகும் கரிம சேர்மங்கள் தான் உடலின் நாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. சுவாசம், வியர்வை, தோல், சிறுநீர், மலம் ஆகியவை இந்த சேர்மங்களின் முக்கிய ஆதாரங்கள்.

உடல் துர்நாற்றங்களுக்கு ரத்தமும் ஒரு முக்கிய காரணமாகும், ஏனெனில் வளர்சிதை மாற்றத்தில் உற்பத்தி செய்யப்படும் சில விஓசி சேர்மங்கள் ரத்தத்தில் சுரந்து, பிறகு சுவாசம் மற்றும் அல்லது வியர்வை வழியாக வெளிப்புறச் சூழலுக்கு உமிழப்படுகின்றன.

அதே சமயம், இந்த ஆவியாகும் கரிம சேர்மங்களில் மணமற்றவையும் உள்ளன. மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வெளிப்படும் இந்த சேர்மங்கள் வயது, உணவு, பாலினம், உடலியல் நிலை மற்றும் மரபணு பின்னணி ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன.

 
உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்

Getty Images

நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன

 

'வயதிற்கு ஏற்றார் போல மாறும் உடல் நாற்றம்'

 

ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோஹன் லுண்ட்ஸ்த்ரோம், உடல் துர்நாற்றம் குறித்தும் உடல் வாசனைகள் குறித்தும் ஒரு விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார். 

அவரது குழு வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், "நமது வயதிற்கு ஏற்றார் போல, உடலின் இயற்கையான நாற்றத்திலும் பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்காக, இளம் வயது நபர்கள் (20–30 வயது), நடுத்தர வயது நபர்கள் (45–55), மற்றும் முதியோர்கள் (75–95) ஆகிய மூன்று பிரிவுகளைச் சேர்ந்த 41 தன்னார்வலர்களிடமிருந்து உடல் நாற்றத்தை ஆய்வு செய்வதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அதில் இளம் மற்றும் நடுத்தர வயது நபர்களுடன் ஒப்பிடுகையில், முதியோர்களின் உடல் நாற்றம் என்பது குறைவான தீவிரம் கொண்டதாகவும், அதிக துர்நாற்றம் இல்லாததாக இருந்ததாகவும் தெரிய வந்தது.

இதற்கு காரணம், முதுமை வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. இது வேறுபட்ட 'ஆவியாகும் கரிம சேர்மங்களின்' (விஓசி) உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 

உதாரணமாக, முதியோர்களின் உடலில் அதிக அளவு 2-நோனீனல் (2-nonenal) எனும் சேர்மம் உற்பத்தியாகிறது. இதனால் முதியோர்களிடத்தில் மட்டுமே இருக்கும் ஒரு பிரத்யேக உடல் மணம் (old person smell) உருவாகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

உடல் துர்நாற்றம் ஏற்படுவது ஏன்

Getty Images

முதுமையின் மணத்திற்கும் (old person smell), சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை

முதியோர்களின் இந்த பிரத்யேக உடல் மணம் சிலருக்கு விரும்பத்தகாததாக இருந்தாலும், பெரும்பாலானோர் அந்த மணத்தை தங்களது தாத்தா, பாட்டி மற்றும் வயதான பெற்றோர்கள் குறித்த அன்பான நினைவுகளுடன் தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள்.

அதேசமயம் இந்த முதுமையின் மணத்திற்கும், சுகாதாரத்துக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை. இந்த 2-நோனீனல் சேர்மம் தண்ணீரில் கரையாது. எனவே குளிப்பதன் மூலமோ அல்லது துணிகளை துவைப்பதன் மூலமோ அதை எளிதில் அகற்ற முடியாது.

 

 

உடல் துர்நாற்றத்தைக் குறைப்பது எப்படி?

 

மித்ரா வசந்த்
இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது என்கிறார் தோல் மருத்துவர் மித்ரா வசந்த்

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய தோல் மருத்துவர் மித்ரா வசந்த், "ஒவ்வொருவருக்கும் என தனித்துவமான, இயற்கையான உடல் வாசனை இருக்கும். அதிக வியர்வையால் அந்த வாசனை, நாற்றமாக மாறும்போது அது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு என்று பல வழிகள் உள்ளன. சுலபமான வழி என்றால் டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம்" என்கிறார்.

ஆனால் அதுபோன்ற டியோடொரன்ட் அல்லது வாசனைத் திரவியங்களை நேரடியாக தோல் மீது அல்லாமல், உடுத்தும் ஆடைகள் மீது பயன்படுத்துவது சிறந்தது என்று கூறுகிறார்.

"அதுமட்டுமல்லாது, இருமுறை குளிப்பது, பருத்தி ஆடைகளை அணிவது, துர்நாற்றத்துடன் வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் இருக்கும் முடிகளை அகற்றுவது, போன்றவை உடல் நாற்றத்தைக் குறைக்க உதவும். மற்றபடி வியர்வை என்பது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று."

"வியர்வையை தவிர்த்தால் உடல் நாற்றத்தை தவிர்க்கலாம் என்ற எண்ணம் நல்லதல்ல. உங்கள் அன்றாட வாழ்க்கையை உடல் துர்நாற்றம் பாதிக்கிறது என்றால், அதற்கு மேற்கூறிய வழிகளைப் பின்பற்றலாம். இல்லையென்றால் அடுத்த கட்ட சிகிச்சைகளும் உள்ளன" என்றும் கூறுகிறார்.

அளவுக்கு அதிகமான வியர்வையால், உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது என்றால், முறையாக ஒரு தோல் மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெற வேண்டுமென மருத்துவர் மித்ரா அறிவுறுத்துகிறார்.

"அதீத வியர்வைக்கு என பிரத்யேக மருந்துகள், சிகிச்சைகள் உள்ளன. ஆனால் இதையெல்லாம் தாண்டி உடல் நாற்றம் எப்போதுமே மோசமான விஷயம் அல்ல. இயற்கையான உடல் வாசனையை நாம் வெறுக்கக் கூடாது. அது மிகவும் இயல்பான ஒன்று தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்." என்று கூறுகிறார் மருத்துவர் மித்ரா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 


 

https://www.bbc.com/tamil/articles/c0j18jv02exo



 

 

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

3 weeks 1 day ago
உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது.

உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது.

பிபிசி உலக சேவையின் 'தி ஃபுட் செயின்' (The Food Chain) என்ற நிகழ்ச்சி, மனித உடலில் உப்பின் முக்கிய பங்கு என்ன என்பது குறித்தும், எவ்வளவு உப்பு உடலுக்கு உகந்தது என்றும் அலசியது.

உப்பின் முக்கியத்துவம்

உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார், அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியராக இருக்கும் பால் ப்ரெஸ்லின்.

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது

"நமது நியூரான்கள், மூளை, தண்டுவடம், தசைகள் என மின் சமிக்ஞைகள் மூலம் செயல்படும் அனைத்து செல்களுக்கும் உப்பு அவசியமானது. தோல் மற்றும் எலும்புகளிலும் முக்கிய அங்கமாக உப்பு உள்ளது," என்கிறார் அவர்.

நமது உடலில் போதிய அளவு சோடியம் இல்லை என்றால் நாம் இறந்து விடுவோம் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின்.

உடலில் சோடியம் குறைந்தால், குழப்பம், எரிச்சல் ஏற்படலாம், தசைகளின் உணர்திறன் குறையலாம், வாந்தி, வலிப்பு, கோமா ஏற்படலாம்.

இரண்டு கிராம் சோடியம் கொண்ட ஐந்து கிராம் உப்பை தினமும் எடுத்துக் கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இது, கிட்டத்தட்ட ஒரு டீ ஸ்பூன் அளவிலான உப்பு.

ஆனால், உலக அளவில் சராசரியாக ஒரு நாளுக்கு 11 கிராம் உப்பு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் இருதய நோய்கள், வயிற்று புற்றுநோய், உடல் பருமன், எலும்பு தேய்மானம், சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிக அளவிலான உப்பு எடுத்துக் கொண்டதால் ஒவ்வொரு ஆண்டும் 18.9 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

 
உப்பை அதிகமாக உட்கொள்பவர்கள்
உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே அதிகமாக உள்ளது

நிறைய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே, அதிகமான உப்பு உட்கொள்ளுதலுக்கு காரணமாக அமைகிறது.

ஆனால், சில நேரங்களில் வரலாற்று காரணங்களும் இருக்கலாம். கசகஸ்தானில் இருக்கும் மக்கள் ஒரு நாளுக்கு 17 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர். இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

மரியம், கசகஸ்தானின் தலைநகர் அஸ்தானாவில் வசிக்கிறார்.

“இதற்கு காரணம் எங்கள் பாரம்பரியம்” என்கிறார். “பல நூற்றாண்டுகளாக, நாங்கள் நிறைய இறைச்சியை சுமந்து கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அலைந்து கொண்டிருந்தோம். அந்த இறைச்சியை பதப்படுத்த உப்பு தேவைப்பட்டது.”

“குளிர்காலத்துக்காக உணவை சேகரித்து வைப்பார்கள். ஒரு முழு மாடு, ஆடு அல்லது பாதி குதிரையை கூட பதப்படுத்த வேண்டியிருக்கும்”

எட்டு ஆண்டுகளுக்கு முன், மரியத்தின் மகளுக்கு சில உடல் நல பிரச்னைகள் ஏற்பட்டன. சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமான உணவுகளை குறைத்துக் கொள்ளுமாறு அவரது மருத்துவர் பரிந்துரைத்தார். அவரது குடும்பத்தினர் உடனடியாக உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை நிறுத்துவிட்டனர்.

“அடுத்த நாள், புதிய உணவை சாப்பிட்ட போது மிகவும் அருவருப்பாக இருந்தது. உணவை சாப்பிட்டோம், ஆனால் அது என்ன உணவென்று கூட தெரியவில்லை”

ஆனால், அந்த வெறுப்பு வெகு நாட்கள் நீடிக்கவில்லை. சீக்கிரமே உப்பில்லாத உணவை சாப்பிட அவர்கள் பழகிவிட்டனர்.

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,MARYAM (CONTRIBUTOR)

படக்குறிப்பு, கசகஸ்தானின் பாரம்பரியமும் கலாசாரமும் அவர்கள் உணவில் அதிக உப்பு இருப்பதற்கு காரணம் என்று மரியம் கூறுகிறார்  
உப்பு உள்ளே நுழைந்தால் உடல் என்ன செய்யும்?

நமது எண்ணங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு அடிப்படையான மின் சமிக்ஞைகளை உப்பு உடலில் செலுத்துகிறது. அதனால் நமது உடலும் மனமும் ஆற்றல் பெறுகின்றன.

நாம் உப்பை உட்கொள்ளும் போது, நாக்கில் உள்ள சுவையணுக்கள் மற்றும் தொண்டையில் உள்ள தசைகளால் அவை அடையாளம் காணப்படுகின்றன.

உப்பு நம்முடைய உடல் மற்றும் மனதை மின்னாற்றல் பெறச் செய்கிறது” என்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின்.

உப்பில் உள்ள சோடியம் அயனிகள் எச்சிலில் கரைந்துவிடும்

பிறகு இவை சுவையணுக்களில் நுழைந்து செல்களை இயக்கத் தொடங்கும்.

ஒரு மின் பொறியை உண்டாக்கும்” என்று விளக்குகிறார்.

 
எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?

உப்பின் அளவு காரணமாக உடலில் ஏற்படும் துல்லியமான விளைவுகள், ஒவ்வொருவரது மரபணு அமைப்பை பொருத்தது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பின் அளவை குறைத்துக் கொண்டால், இதனை தடுக்கவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும்.

அதிக அளவிலான உப்பை உட்கொள்ளும் போது, உங்கள் உடல் முதலில் செய்வது, அந்த உப்பை கரைப்பது. உங்கள் உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். எனவே, கூடுதலான திரவத்தைக் கையாளும் போது, உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்,” என்று விவரிக்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகாசில் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் பேராசிரியர் கிளையர் காலின்ஸ்.

இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கலாம்.

உங்கள் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால், உதாரணமாக மூளையில், அவை வெடித்து, அதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும்” என்கிறார்.

பிரிட்டனில், ஒரு நாளில் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்பின் அளவு எட்டு கிராமாக குறைந்துள்ளது. எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இப்போதும் அதிகம். உப்பின் அளவை குறைக்க உணவு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், உட்கொள்ள பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும். சிறுநீர் பரிசோதனையில் உங்கள் உடலில் உப்பு அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்பது தெரிய வரும்.

நீங்கள் எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கணித்துக் கொள்ள, உங்கள் உணவு உட்கொள்ளுதலை தொடர்ந்து பதிவு செய்து வரலாம், அல்லது உணவுப் பொருள்களின் லேபில்களைப் பார்த்து அதிலுள்ள சோடியம் அளவை கணக்கிடும் செயலியை பயன்படுத்தலாம். இரண்டுமே துல்லியமான முறைகள் அல்ல, எனினும் உப்பின் அளவை ஓரளவு கணித்துக் கொள்ள உதவும் என்கிறார் பேராசிரியர் காலின்ஸ்.

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார்
உப்பை குறைத்துக் கொள்ள டிப்ஸ்

நீங்கள் எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் கூட, அதனை குறைப்பது எளிதானது அல்ல. அஸ்தானாவில், கசகஸ்தானின் தேசிய உணவான பெஷ்மார்க்கை சாப்பிடாமல் தவிர்க்க மரியம் போராடுகிறார். அது பாஸ்தாவுடன் கூடிய வேக வைத்த இறைச்சியாகும். அவரது வயதான பெற்றோர்களும் உப்பில்லாமல் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டவில்லை.

ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார்.

நீங்கள் உணவு சமைக்கும் போது, உப்புக்கு பதிலாக மருத்துவ குணமுள்ள இலைகள் அல்லது மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண்

3 weeks 2 days ago
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண்

பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது.

பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர்.

அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிக்கிறது.

#BreastCancer #Cancer #Health  
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

குடும்ப சிகிச்சை: அமீர் கான் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட மனநல சிகிச்சை எதற்காக அளிக்கப்படுகிறது?

3 weeks 6 days ago
குடும்ப சிகிச்சை: அமீர் கான் தனது மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்டது ஏன்? இந்த சிகிச்சை எதற்காக?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மகள் ஐராவும், தானும் கூட்டுக் குடும்பச் சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார்
  • எழுதியவர், அனகா பதக்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

"நான் என் தந்தையிடம் ஒருபோதும் பேசுவதில்லை, நான் சொல்வதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டர்."

"முன்பு எங்களிடையே நல்ல உறவு இருந்தது. ஆனால், இப்போது இடைவெளி அதிகமாகிவிட்டது."

என்ன உறவாக இருந்தாலும் இரு நபர்களுக்கு இடையே இடைவெளி ஏற்படுகிறது, அவர்களுக்குள் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

"நான் பல ஆண்டுகளாக எனது நண்பர்/சகோதரி/சகோதரர்/உறவினர்களுடன் பேசவில்லை," என்று மற்றவர்கள் கூறுவதை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

தாயுடன் உடன்படவில்லை, தந்தையுடன் உடன்படவில்லை என இருப்பவர்கள் ஒரே வீட்டிலே ஒன்றாக வாழ்ந்து அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும், அவர்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள விரும்பாத நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அவர்களுக்கு இடையிலான உறவு நாளுக்கு நாள் மோசமடைகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா?

 

இதற்கு குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை தீர்வாக இருக்கலாம். நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் விவேக் மூர்த்திக்கு அளித்த பேட்டியில், தானும் தனது மகள் ஐராவும் கூட்டுக் குடும்ப மனநல சிகிச்சையில் இருப்பதாக அமீர் கான் கூறினார்.

அடிப்படையில், இத்தகைய தெரபி அல்லது மனநல மருத்துவரிடம் செல்வது ஒரு பலவீனமாக இன்னும் கருதப்படுகிறது. மனநோய் கொண்டவர்களே மனநல மருத்துவர்களிடம் செல்வார்கள் என்ற பார்வை உள்ளது.

ஆனால் விவாகரத்து கட்டத்தை அடைந்த தம்பதிகள், மனநல ஆலோசகரிடம் சென்று தங்கள் உறவை மேம்படுத்தலாம், தங்களுக்குள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, விவாகரத்தை தவிர்க்கலாம் என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மனநல மருத்துவரிடம் செல்வது இன்னும் பலவீனமாக கருதப்படுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மனநல மருத்துவரிடம் செல்வது இன்னும் பலவீனமாகக் கருதப்படுகிறது

ஆனால், மற்ற உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், தொடர்பை மேம்படுத்தவும் வேறுபாடுகளைக் குறைக்கவும், நாம் எவ்வித சிகிச்சைகளையும் பரிந்துரைப்பதில்லை. இதற்கொரு தீர்வாக இருக்கும் குடும்ப மனநல சிகிச்சை அல்லது கூட்டு மனநல சிகிச்சை குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.

குடும்ப மனநல சிகிச்சை என்பது பேச்சு சிகிச்சையின் ஒரு வடிவம். (அதாவது உரையாடுவதன் மூலமாக பிரச்னைகளை சரிசெய்யக் கூடிய சிகிச்சை, இதில் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை.)

இந்த சிகிச்சை, ஒரு குடும்பம் அல்லது குடும்பத்தின் ஒரு சில உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு, தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள உதவும்.

 
குடும்ப சிகிச்சை, கூட்டு சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த சிகிச்சையின் நோக்கம் இருவருக்கு இடையிலான கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பது.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களிடையே தொடர்பை மேம்படுத்தி, அவர்களின் உறவை மேம்படுத்தி, கோபம் மற்றும் வெறுப்பைக் குறைப்பதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம்.

தங்களின் வாழ்க்கையில் நிகழும் எல்லாவற்றுக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தையோ அல்லது குடும்பத்தில் நிகழும் விஷயங்களையோ குற்றம் சாட்டும் போதோ அல்லது குடும்பத்தில் உள்ள சில உறுப்பினர்களின் நடத்தை ஒருவரைத் தொந்தரவு செய்கிறது என்றாலோ, அல்லது அந்நபரின் நடத்தையாலேயே ஒட்டுமொத்த குடும்பமும் சூழப்பட்டிருக்கிறது என்றாலோ இந்த சிகிச்சை பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகிறது.

அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது அவசியம். ஆனால், அர்த்தமில்லாத பேச்சுவார்த்தைகள் அல்லது குற்றச்சாட்டுகளை மட்டுமே பேசும் அளவுக்கு உறவில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.

அந்த நேரத்தில்தான் மனநல ஆலோசகரிடம் சென்று இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

 
குடும்பத்தின் உள் விவகாரங்களை எப்படி வெளியே கொண்டு செல்வது என மக்கள் இந்த சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குடும்பத்தின் உள் விவகாரங்களை எப்படி வெளியே கொண்டு செல்வது என மக்கள் இந்த சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள்.

நிகிதா சுலே மும்பையில் மருத்துவ உளவியல் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். அவர் கூறுகையில், "இந்தியாவில் குடும்பத்தை மையப்படுத்திய கலாசாரம் நிலவுகிறது. இதில், நீங்கள் ஒரே நேரத்தில் பல நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியிருக்கும். அவர்களுடன் உளரீதியாகவும், நிதி, சமூகரீதியாகவும் இணைக்கப்பட்டு இருப்பீர்கள். அப்படியிருக்கும்போது, இந்தியாவுக்கு இத்தகைய குடும்ப சிகிச்சை மிகவும் தேவையான ஒன்று" என்கிறார்.

"உணர்வுரீதியாகத் தொடர்புகொள்வதற்கான வழிகளோ, அந்த உணர்வுகளை மட்டுப்படுத்துவதற்கான வழிகளோ நம்மிடம் இல்லை. இரவு உணவு குறித்தோ அல்லது பணம் அல்லது தொலைக்காட்சியில் என்ன நடந்தது என்பது குறித்தோதான் நாம் பேசுகிறோம். ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள பலர் காயப்பட்டிருப்பார்கள். பிரச்னைகளைப் பேசினாலோ அல்லது நிபுணரின் உதவியை நாடும்போதோ தீர்க்கப்பட்டுவிடும். ஆனால், வீட்டுக்கு வெளியே பிரச்னைகளைப் பேசுவதை அவர்கள் தவிர்க்கின்றனர்" என்கிறார் அவர்.

க்ளெவ்லேண்ட் கிளீனிக் (Cleveland Clinic) எனும் இணையதளம், வெவ்வேறு குடும்ப உறுப்பினர்கள் நிபுணரிடம் ஒன்றாகவோ அல்லது வெவ்வேறு குழுக்களாகவோ அமர்ந்து மேற்கொள்ளும் சிகிச்சை குறித்த தகவல்களை வழங்குகிறது. குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள்கூட ஒன்றாக அமர்ந்து தங்கள் கேள்விகளுக்குப் பதிலைக் கண்டறியலாம்.

 
அமீர் கான், கூட்டு சிகிச்சை, குடும்ப மனநல சிகிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குடும்ப விவகாரங்களை வெளியே சொல்ல முடியாமல் பலரும் தவிக்கின்றனர்

இந்த சிகிச்சை மேலும் சில விஷயங்களில் பயனளிக்கும் என்று இந்த இணையதளம் கூறுகிறது.

  • வீட்டில் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஒருவரையொருவர் குற்றம் சாட்டினாலோ என்ன செய்வது?
  • வயதான பெற்றோர்கள், அவர்களின் நடுத்தர வயது குழந்தைகள் மற்றும் இளம் வயது பேரக் குழந்தைகள் இடையிலான தொடர்புப் பாலத்தை எவ்வாறு உருவாக்குவது?
  • பெற்றோர்கள் பிரிவதால், குழந்தைகள் பாதிப்படையும்போது என்ன செய்வது?
  • வீட்டில் யாராவது மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது மன நோயுடன் போராடினால், அந்தக் குடும்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த சிகிச்சை மூலம் கற்றுக்கொள்ளலாம்.

சீரடியை சேர்ந்த மனநல மருத்துவர் ஓம்கர் ஜோஷி "ஒருவருக்கு மன அழுத்தமோ அல்லது மனச் சிதைவோ (schizophrenia) ஏற்பட்டால், அவர்களுடைய நடத்தை மிகவும் தொந்தரவை ஏற்படுத்தும். பல நேரங்களில் அவர்கள் ஆலோசனைக்குத் தயாராக இருக்க மாட்டார்கள்," என்கிறார்.

அப்படியிருக்கும்போது "அவர்களை எப்படிச் சமாளிப்பது என அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவுறுத்துவோம். ஒருவருடைய மனநல பிரச்னையை அவர்களின் குடும்பத்திற்கு விளக்குவதும் குடும்ப சிகிச்சையில் ஒன்றுதான்" என்கிறார் அவர்.

ஆனால், எத்தனை பேர் இத்தகைய குடும்ப மனநல சிகிச்சைக்குச் செல்வார்கள்? எத்தனை பேர் தங்களுக்குள் உறவு முறிந்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதை சரிசெய்ய ஒப்புக்கொள்வார்கள்?

 
கூட்டு சிகிச்சை, குடும்ப சிகிச்சை, அமீர் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருவருடைய மனநல பிரச்னையை அவரின் குடும்பத்திற்கு விளக்குவதும் இந்த சிகிச்சையின் ஒரு பகுதிதான் என்கிறார் மருத்துர் ஜோஷி

"சிகிச்சை தேவை என்பதைப் பலரும் ஒப்புகொள்வதில்லை. சில தினங்களுக்கு முன்பு ஒரு தாயும் மகளும் வந்திருந்தனர். தாய்க்கு 70 வயதுக்கு மேல் இருக்கலாம், மகள் 40களில் இருக்கலாம். மகள் நன்றாகப் படித்துப் பெரிய பதவியில் உள்ளார். அவருக்கு விவாகரத்தாகி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்றார் ஜோஷி.

"மகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என அவரின் தாய் நினைக்கிறார். இதனால் இருவருக்கும் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. தனது தாய் இறந்தால்கூட தான் கவலைப்பட மாட்டேன் என மகள் கூறும் அளவுக்கு இது சென்றிருக்கிறது.

தனக்கு உதவி தேவை என்பது நன்கு படித்த அவருக்குத் தெரியவில்லை. தனக்கு தாய்தான் பிரச்னை, அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்கிறார் மகள்."

அடிப்படையில், "மகளின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு குடும்ப சிகிச்சை அளிக்கலாம். ஆனால், தங்களுக்கு சிகிச்சை வேண்டும் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்வதில்லை" என்கிறார் அவர்.

இதனால், சிகிச்சைக்கு வருபவர்களிடம் நிபுணர்கள் முதலில் சில மருத்துவப் பரிசோதனைகளைப் பரிந்துரைப்பதாகவும், அதன்பின் அவர்களின் மனநலன் குறித்துப் பரிசோதிப்பதாகவும் கூறுகிறார் ஜோஷி.

மேலும், "ஒருவருடைய இயல்பு, பல்வேறு விஷயங்களுக்கு அவர் எப்படி எதிர்வினையாற்றுகிறார், அவர் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுபவரா அல்லது தனக்குள்ளேயே வைத்துக் கொள்பவரா என்பதைப் பார்க்க வேண்டும். அந்தப் பரிசோதனைகளின் மூலம், அவர்களின் குணநலன்கள், குறைகள் அவருக்கு முன்பாக விளக்கப்படும். இந்த சிகிச்சையில் நாங்கள் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத்தான் கூறுவோம். என்ன செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதைக் கூறுவோம்," என்றார்.

 
தலைமுறை அதிர்ச்சிக்கான தீர்வு
குடும்ப சிகிச்சை, கூட்டு சிகிச்சை, அமீர் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தலைமுறை இடைவெளியால் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஒரே பதில் குடும்ப மனநல சிகிச்சைதான் என மருத்துவர் ஸ்ருத்தி கீர்த்தி ஃபட்னாவிஸ் கூறுகிறார்

தலைமுறை இடைவெளியால் ஏற்படும் குழப்பமும் மனநல ரீதியிலானதுதான். உதாரணமாக, ஒரு தந்தை எப்போதும் கோபம் கொண்டு சிறு விஷயங்களுக்கு எல்லாம் தனது மகனை அடித்தால், அந்த மகனும் வளர்ந்து குழந்தை பெற்ற பிறகு இவ்வாறே செய்வார்.

ஒரு தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் அதிர்ச்சிக்கு சிகிச்சை மேற்கொள்ளாமல், அது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது.

"இதற்கு இருக்கும் ஒரே தீர்வு குடும்ப மனநல சிகிச்சைதான். நம்முடைய கடந்த கால அனுபவங்களில் இருந்துதான் நம்முடைய நடத்தைகள் உருவாகின்றன. நாம் நினைப்பது தவறு என்பதை ஒருவர் கூற வேண்டும்.

சரியானது எது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த சிகிச்சையின் மூலம், இந்தத் தலைமுறை அதிர்ச்சியைக் குணப்படுத்தி, அடுத்த தலைமுறையுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்," என்கிறார் புனேவை சேர்ந்த தெரபிஸ்ட் ஷ்ருதிகீர்த்தி பட்னாவிஸ்.

 
இதன் அடுத்த கட்டம் என்ன?
குடும்ப சிகிச்சை, கூட்டு சிகிச்சை, அமீர் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அனைத்து வல்லுநர்களும் சமூகத்தில் குடும்ப மனநல சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறார்கள்

குடும்ப உறவுகள் சிதைவதற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்கள் கண்டறிகின்றனர். ஏதாவதொரு விஷயம் நடக்கும்போது அதனால் ஏற்படும் கோபத்தைப் பல ஆண்டுகளாக மனதில் வைத்திருப்பதே பெரும்பாலும் இதற்குக் காரணம். பலரும் அந்தச் சம்பவங்களை மறப்பதில்லை.

"அப்படிப்பட்ட நேரத்தில் அவற்றை ஏற்றுக்கொண்டு எப்படி உறவை நகர்த்துவது (Acceptance and Commitment Therapy) என்பதற்கான சிகிச்சை வழங்கப்படும். என்ன நடந்ததோ அதை ஏற்றுக்கொண்டு, பிரச்னைகளைத் தீர்ப்பதே இந்த சிகிச்சை" என்கிறார் ஷ்ருதிகீர்த்தி.

"நம்மால் எந்தளவு பொறுத்துக்கொள்ள முடியும் என்பதற்கான எல்லையை வரையறுக்க வேண்டும்" என்கிறார் ஜோஷி.

இதே கருத்தை வலியுறுத்தும் ஷ்ருதிகீர்த்தி, "நாம் எல்லைகளை நிர்ணயிப்பது இல்லை. முதலில் இது சுயநலமாக இருப்பது போன்று தோன்றும். ஆனால், அதன்மூலம் உறவு மேம்படும். ஏனெனில், ஒருவருக்கொருவர் உள்ள எதிர்பார்ப்புகள் கட்டுப்படுத்தப்படும்" என்கிறார் அவர்.

குடும்ப மனநல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் அவ்வளவாக இல்லை என அனைத்து நிபுணர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர்.

நிகிதா சுலே கூறுகையில், "குடும்ப விவகாரங்களை ஏன் வெளியே சொல்ல வேண்டும் எனப் பலரும் கருதுகின்றனர். சிகிச்சைக்காக நீங்கள் சந்திப்பவர்கள் நிபுணர்கள், அவர்கள் உங்களை மதிப்பிடுவதில்லை. பிரச்னைகளைத் தீர்க்க உதவுகின்றனர்."

"உதவியை நாடாமல் உங்களுக்குள்ளேயே பிரச்னைகளைப் போட்டுக் கொண்டால் வாதங்களும் சண்டைகளும் தொடர்ந்து, உங்கள் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துவிடும்" என்றார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

உலக நீரிழிவு தினம்

1 month 1 week ago
உலக நீரிழிவு தினம்: இந்தியாவில் ஏழை நோயாளிகள் இன்சுலின் வாங்குவதில் உள்ள சவால்கள்
உலக நீரிழிவு தினம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.

நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள்.

மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராளமான இந்தியக் குடும்பங்கள் இதே போல் போராடி வருகின்றன.

 

சுமதிக்கு தற்போது 54 வயது ஆகிறது. இரு மகள்களும் படித்துக் கொண்டுள்ளார்கள். கணவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.

“வேலை இருக்கும் போதுதான் வருமானம் இருக்கும். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். சாப்பாட்டைக் குறைத்துக்கூட இன்சுலின் வாங்கினோம் என்று கூறலாம்” என்றார் சுமதி.

அவரது மூத்த மகளுக்கு 21 வயது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு வகை 1 கண்டறியப்பட்டது. இன்னொரு மகளுக்கும் நீரிழிவு பாதிப்பு தெரிய வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன.

இருவரும் குறுகிய காலத்துக்கு வேலை செய்யும் இன்சூலினை பகலில் நான்கு முறையும், நீண்ட நேரத்துக்கு வேலை செய்யும் இன்சுலினை இரவில் ஒரு முறையும் எடுத்துக் கொள்கின்றனர்.

“சர்க்கரை அளவைச் சரிபார்க்க பயன்படுத்தப்படும் 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டிரிப், ஒரு நாளுக்கு நான்கு தேவைப்படும். அதற்காக சிறிய ஊசிகள் 100 வாங்க ரூ.1000 ஆகும். இன்சுலின் செலுத்த தேவைப்படும் 100 ஊசிகள் ரூ.1700, இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு.

ஒரு ஊசியை நான்கு முறை பயன்படுத்தலாம். இன்சுலினை செலுத்துவதற்குத் தேவையான பேனாவை போன்ற கருவி ரூ.1500 ஆகிறது. அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். இவ்வாறு இருவருக்கும் நாளொன்று சுமார் ரூ.450 முதல் ரூ.500 செலவாகிறது” என்று விவரித்தார்.

 
இந்தியாவில் நீரிழிவு நோய்
உலக நீரிழிவு தினம்

உடலில் இன்சுலின் குறைவாக இருப்பவர்களுக்கு செயற்கையாக வெளியிலிருந்து உடலில் செலுத்திக் கொள்ள முடியும். பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வரும் இந்த அறிவியல் மைல்கல்லை கண்டுபிடித்தவர் சர் ப்ரெட்ரிக் பேண்டிங் (Sir Fredrick Banting) அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவர் இன்சுலினை கண்டுபிடித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது இன்னமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சார்பில் 2023 மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வகை -1, வகை -2 இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.

(மரபணு உள்ளிட்ட காரணங்களால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காமல் இருப்பது வகை 1 நீரிழிவு. வாழ்க்கை முறை காரணமாக உடலில் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை அளவு அதிகரிப்பது வகை 2 நீரிழிவு. வகை 1 நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.)

டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் மேஹக் நந்தா, ஹரியாணா குருக்ஷேத்ராவில் உள்ள என்.ஐ.டி.யின் ராஜேஷ் ஷர்மா ஆகியோர் இணைந்து இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான நிதி சுமை குறித்து 2018ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட 38% குடும்பங்கள் மிக அதிகமான செலவுகளைச் செய்வதாகவும், 10% குடும்பங்கள் இந்தப் பாதிப்பின் காரணமாகவே வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் மருந்துகளுக்கே கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், விளிம்பு நிலை சமுதாயங்களுக்கும், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ளோருக்கும், தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவோருக்கும் நிதிச்சுமை கூடுதலாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது.

 
இன்சுலின் அனைவருக்கும் கிடைக்கிறதா?
உலக நீரிழிவு தினம்: அனைவருக்கும் கிடைக்கிறதா இன்சுலின்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீரிழிவு சிகிச்சை குறித்து பிபிசியிடம் பேசிய பலர், இன்சுலின் கிடைப்பதில் எழும் சிக்கல்களைத் தெரிவித்தனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் சுமை இந்தியாவில் அதிகரித்துள்ள கடந்த 10 ஆண்டுகளில் இன்சுலின் கிடைப்பதிலும் சவால்கள் எழுந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர் கார்த்திக். அவரது மகளுக்கு 5 வயதில் நீரிழிவு நோய் வகை 1 கண்டறியப்பட்டது. இந்நிலையில், தனது மகளுக்குத் தேவைப்படும் இன்சுலினுக்காக கெஞ்சவும், கடன் வாங்கவும் நேர்ந்ததாகக் கூறுகிறார் அவரது மனைவி லீலாவதி.

“நாங்கள் சாப்பிடாமல் இருந்துகூட குழந்தைக்கு இன்சுலின் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். எங்களுக்கு அது மிகப்பெரிய தொகை. ராகி உள்ளிட்ட தானிய வகைகளை முதலில் வாங்கிக் கொடுத்தோம், ஆனால் காசு இல்லாததால் இப்போது ரேஷன் அரிசியைத்தான் குழந்தைக்குக் கொடுக்கிறோம். காய்கறிகள், பழங்கள் வாங்கவே காசு போதவில்லை” என்கிறார்.

மேலும், “இன்சுலின் குப்பிகளைப் பயன்படுத்தும்போது பெரிய ஊசிகள் தேவைப்படும். முதல் மூன்று ஆண்டுகள் அதைப் பயன்படுத்தினோம். ஆனால் குழந்தைக்கு வலியும் காயமும் அதிகமானது. எனவே இப்போது இன்சுலின் பேனா வாங்குகிறோம். இதில் ஊசியின் அளவு மிகச் சிறியது. ஒரு பேனா சுமார் ரூ. 3 ஆயிரம் வரை ஆகும். இது அரசு மருத்துவமனையில் கிடைத்தால் எங்களுக்கு மிகப் பெரிய வரமாக இருக்கும்” என்கிறார் லீலாவதி.

உலக நீரிழிவு தினம்

பட மூலாதாரம்,SRIDHAR RAJMOHAN

படக்குறிப்பு, ஸ்ரீதர் ராஜ்மோகன்

லீலாவதி தனது குழந்தைக்கு, கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இன்சுலின் பெற்று வருகிறார்.

தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த 36 வயது ஸ்ரீதர் ராஜ்மோகன், “பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஹூமன் இன்சுலின் எனப்படும், உடலில் செலுத்தி 45 நிமிடங்கள் கழித்து செயல்படத் தொடங்கும் இன்சுலின்தான் கிடைக்கிறது. ஆனால் வெளிச் சந்தையில் அனலாக் எனப்படும், உடலில் செலுத்திய ஐந்து நிமிடங்களில் செயல்படத் தொடங்கும் இன்சுலின்கள் கிடைக்கின்றன. எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாதம் 60 முதல் 100 குழந்தைகளுக்கு இன்சுலின் இலவசமாக வழங்குகிறோம்” என்கிறார்.

சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், இன்சுலின் கிடைப்பது, அதுவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைப்பது ஆகியவை ஒவ்வொரு மாநிலத்துக்கு வேறுபடும் என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவர் ஆர்.வி.அசோகன்.

“இந்தியாவில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைவிட, தென் மாநிலங்களில் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேற்கில் மகாராஷ்டிராவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும் தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில், மாநில அரசுகள் பரவலாக இன்சுலின் வழங்கி வருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் வீடுகளுக்கே மருத்துவக் குழுக்கள் சென்று இன்சுலின் வழங்குகின்றனர்” என்றார்.

உலக நீரிழிவு தினம்

பட மூலாதாரம்,DR R V ASOKAN

படக்குறிப்பு, இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.அசோகன்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு நிறுவனத்தின் இயக்குநர் தருமராஜன் அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் இலவசமாக வழங்கப்படுவதாகக் கூறுகிறார்.

“நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, அவர்களுக்குத் தேவையான அளவு இன்சுலின் குறிப்பிட்ட கால அளவில் வழங்கப்படுகிறது. இன்சுலின் குப்பிகள் மட்டுமல்லாமல், பேனாக்களும் சில நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நீரிழிவு வகை 1 பாதிப்புடைய நான்கு ஏழை எளிய பிள்ளைகளுக்கு இன்சுலின் பம்ப் (ரூ.2 லட்சம் மதிப்பிலான கருவி) இலவசமாக வழங்கப்பட்டது” என்றார்.

இன்சுலின் பம்ப் என்பது கையில் கட்டிக் கொண்டால் தானியங்கியாக இன்சுலின் ஏற்றக் கூடிய கருவியாகும்.

 
இன்சுலின் சந்தையில் என்ன நடக்கிறது?
உலக நீரிழிவு தினம்

பட மூலாதாரம்,DR DHARMARAJAN

படக்குறிப்பு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு நிறுவனத்தின் இயக்குநர் தருமராஜன்

லான்செட் டயபடீஸ் மற்றும் எண்டோக்ரைனாலஜி ஆய்விதழில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரையில், உலக இன்சுலின் சந்தையில் எலி லில்லி, நோவோ நோர்டிஸ்க், சனோஃபி ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் சந்தை மதிப்பின் 99% இந்த நிறுவனங்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் இப்போது நிலைமைகள் மாறி வருவதாக, இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் விராஞ்சி ஷா தெரிவிக்கிறார், “பயோகான், லூபின், மான்கைண்ட் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள் இன்சுலின் தயாரிப்பு சந்தையில் உள்ளனர். பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இன்சுலினை பெற்று வணிகம் செய்கின்றனர்.

எனினும் சந்தையில் 30-40 ஆண்டுகளாக சில நிறுவனங்கள் இருக்கும் நிலையில், புதிதாக வரும் நிறுவனங்களுக்கு பொதுவான சவால்கள் இருக்கத்தானே செய்யும். இதனால் இந்திய நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மையோ, தரம் குறைந்தது என்றோ அர்த்தம் கிடையாது” என்கிறார்.

இந்தியாவில் நீரிழிவு மருந்துகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.22,000 கோடி எனக் கூறும் விராஞ்சி ஷா, இதில் இன்சுலின் மருந்துகளின் மதிப்பு மட்டும் 20% (ரூ.4,400 கோடி) என்கிறார்.

 
உலக நீரிழிவு தினம்: அனைவருக்கும் கிடைக்கிறதா இன்சுலின்?

பட மூலாதாரம்,DR VIRANCHI SHAH

படக்குறிப்பு, இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் விராஞ்சி ஷா

மேலும், பெரும்பாலான ஹூமன் இன்சுலின்கள் சில விதிவிலக்குகளைத் தவிர, விலைக் கட்டுப்பாட்டில் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

"கடந்த 2021ஆம் ஆண்டில், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM) இன்சுலின் கிளார்ஜின் சேர்க்கப்பட்டது. இதனால் அதன் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டது, விலைக் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 80% இன்சுலின் பயனர்கள் ஹூமன் இன்சுலினை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

மேலும், இந்தச் சந்தையில் பத்துக்கும் குறைவான தயாரிப்பாளர்களே உள்ளதாகக் கூறும் அவர், “உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இன்சுலின் கிடைக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய இதர வளர்ந்து வரும் நாடுளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இன்சுலின் விலை மிகவும் குறைவு. அரசின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அது இருப்பதால், விலை கட்டுப்படுத்தப்படுகிறது” என்றார்.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தொற்றா நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளின் பகுதியாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குகிறது. மாநிலங்கள் இதிலிருந்து உதவி பெற முடியும்.

இந்நிலையில், மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் இன்சுலின் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார் சுமதி.

“நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தபோது காப்பீட்டுத் திட்டத்தில் இன்சுலின் கிடைத்தது மிகவும் உதவியாக இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், இன்சுலின் பம்ப் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து பம்ப் வாங்க ரூ.10 லட்சம் செலவாகும். அதுதவிர மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.30 ஆயிரம் செலவாகும்” என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்களால் உடலுக்கு ஆரோக்கியமா? ஆபத்தா?

1 month 1 week ago
மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தினமும் மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு, இறப்புக்கான ஆபத்து குறைவதாக, ஒரு ஆய்வு கூறுகிறது
  • எழுதியவர், ஜெஸிகா பிரவுன்
  • பதவி, பிபிசி

மிளகாய், மஞ்சள் மற்றும் மற்ற மசாலா பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்ற கூற்றுகள் உள்ளன. "நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்" என்றும் கூறப்படுவது உண்டு. ஆனால், நம் உணவில் இத்தகைய மசாலா பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்தை அளிக்கிறதா? உடல்நலக்குறைவு ஏற்படுவதிலிருந்து அவை நம்மை தடுக்கிறதா?

பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மசாலா பொருட்கள் நம் உணவின் அங்கமாக உள்ளன. சிப்ஸ் வகைகளில் மேலே தூவியோ அல்லது இஞ்சி தேநீராகவோ, நம்முடைய உணவில் சேர்க்கப்படும் மிளகாயாகவோ அவற்றை நாம் உட்கொள்கிறோம். ஆனால், சில ஆண்டுகளாக அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடிய சிறந்த உணவுகளாக அவை அதிகாரப்பூர்வமற்ற முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.

உடல்நல பிரச்னைகளை தடுக்கும் பொருட்டு, 2016 தேர்தல் பிரசாரங்களின் போது நாளொன்றுக்கு ஒரு மிளகாயை ஹிலாரி கிளிண்டன் சாப்பிட்டதாக தகவல்கள் உள்ளன. ஆசியாவில் ஆயிரம் ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்டு வரும் மஞ்சள், உலகம் முழுவதிலும் உள்ள காபி கடைகளில் "கோல்டன் லேட்டே" (மஞ்சள் கலந்த பால்) எனும் பெயரில் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பெருந்தொற்று காலத்தில் மஞ்சள் "நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்", வியாதியிலிருந்து நம்மை காக்கும் என்றும் மெசேஜ்கள் பரவின. அந்த மஞ்சள், ஒரு பிரபல சமையல் கலைஞர் கூற்றுப்படி "எங்கும் உள்ளது."

இதனிடையே, 2013-ல் "பெயோன்ஸ் டயட்" எனும் தவறான ஆலோசனையில் இருந்து (முற்றிலும் தாவர வகையிலான உணவுப்பழக்கம்) இருந்து கெயென் மிளகாய் (ஒருவித குடை மிளகாய்) இன்னும் மீளவில்லை. அதன்படி, அந்த மிளகாயை மேப்பிள் சிரப், எலுமிச்சை பழம் மற்றும் தண்ணீர் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும் என கூறப்பட்டது.

ஆனால், நம்முடைய உணவில் இந்த மசாலா பொருட்கள் ஏதேனும் பலன்களை வழங்குகின்றதா? உடல்நல குறைவு ஏற்படுவதிலிருந்து தடுக்கிறதா? அல்லது இவற்றில் ஏதாவது உண்மையில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா?

மிளகாயின் பலன்கள்

மிகவும் அறியப்பட்ட, பரவலாக பயன்படுத்தப்படும் மசாலா பொருள், மிளகாய் தான். நம்முடைய உடல்நலனில் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அதனால் பலன்கள், மோசமான விளைவுகள் என இரண்டும் ஏற்படும் என அவை கண்டறிந்துள்ளன.

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நம் உடலில் மிளகாய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பல ஆராய்ச்சிகள் உள்ளன, ஆனால் அதன் முடிவுகள் கலவையாக உள்ளன

கேப்சைசின் (Capsaicin) என்பதுதான் மிளகாயில் உள்ள முக்கிய பொருள். நாம் மிளகாயை சாப்பிடும்போது, கேப்சைசின் மூலக்கூறுகள், நம் உடலின் வெப்பநிலை ஏற்பிகளுடன் வினைபுரிந்து, காரமான உணர்வை உருவாக்க மூளைக்கு சமிக்ஞை செய்கின்றன.

நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு கேப்சைசின் உதவலாம் என சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 2019ல் மேற்கொள்ளப்பட்ட இத்தாலிய ஆராய்ச்சியில், மிளகாய் சேர்க்கப்பட்ட உணவை வாரத்திற்கு நான்கு முறை உட்கொண்டவர்களுக்கு, அதை உண்ணாதவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறியப்பட்டது. (ஆராய்ச்சியில் புகைப்பிடித்தல், உடற்பயிற்சி, ஒட்டுமொத்த உணவுப்பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் பழக்கங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன.) சீனாவில் கடந்த 2015-ல் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மிளகாயை உட்கொள்வது இறப்பு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதில், தினந்தோறும் காரமான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு, வாரத்தில் ஒருமுறைக்கும் குறைவாக உட்கொள்பவர்களை விட இறப்புக்கான ஆபத்து 14% குறைந்துள்ளது.

 
மஞ்சள் கலந்த பால் உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மஞ்சள் கலந்த பால் உலகம் முழுவதிலும் பிரபலமாக உள்ளது

"காரமான உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்வது, இறப்புக்கான, குறிப்பாக புற்றுநோய், இதய நோய் மற்றும் மூச்சு சம்பந்தமான நோய்களால் ஏற்படும் இறப்புகளுக்கான குறைவான ஆபத்துடன் தொடர்புடையது என்பதுதான் இதில் முக்கியமான கண்டுபிடிப்பு," என்கிறார், ஹார்வர்டு பொது சுகாதார பள்ளியின் ஊட்டச்சத்து பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான லூ குய்.

எனினும், குறுகிய காலத்தில் அதிகமான மிளகாய்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் காக்கும் அல்லது மூச்சு சம்பந்தமான நோய்களிலிருந்து காக்கும் என்பது இதன் அர்த்தம் அல்ல.

இந்த சீன ஆய்வு ஒவ்வொரு ஏழு ஆண்டும் மக்களை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொள்வது முக்கியம். ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களின் ஆரோக்கியத்தில் மிளகாய்கள் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ ஏற்படவில்லை, காலப்போக்கில் தான் ஏற்பட்டுள்ளது. முதலில், ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் ஏற்கெனவே ஆரோக்கியமாக இருந்தார்கள்.

வயது, பாலினம், கல்வி நிலை, திருமண நிலை, உணவு, மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் உடலியக்க செயல்பாடு உள்ளிட்ட வாழ்வியல் முறை காரணிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மிளகாயை உட்கொள்வதன் விளைவுகளை எல்லாவற்றிலிருந்தும் பிரிக்க முயன்றார் குய். மிளகாயை உண்பதால் நோய்களுக்கான ஆபத்து குறைவதற்கு கேப்சைசின் காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்

"காரமான உணவுகளில் உள்ள கேப்சைசின் போன்ற சில பொருட்கள், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார் அவர். மேலும், "இது இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை விவரிக்க உதவி செய்யலாம்," என்கிறார் குய்.

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மிளகாயில் உள்ள கேப்சைசின் உயர் ரத்த அழுத்தம், அழற்சி போன்றவற்றை மேம்படுத்தலாம் என கண்டறியப்பட்டுள்ளது

கேப்சைசின் நாம் எரிக்கும் ஆற்றலின் அளவை அதிகரித்து, பசி உணர்வை குறைக்கும் என, சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கத்தார் பல்கலைக்கழகத்தின் மானுட ஊட்டச்சத்து துறை இணை பேராசிரியர் ஸுமின் ஷி, மிளகாய் உடல்பருமன் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைப்பதாகவும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளார். அறிவாற்றல் செயல்பாட்டில் மிளகாய் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும் அவர், அதிலும் தான் மூன்றாவது முறையாக வெற்றியடையலாம் என எதிர்பார்த்தார்.

ஆனால், சீனாவில் வயதுவந்தோரிடையே அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மிளகாய் இரண்டுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த போது, அதிகமாக மிளகாய் சாப்பிடுபவர்களுக்கு மோசமான அறிவாற்றல் செயல்பாடு இருந்ததாக கண்டறிந்தார். நினைவாற்றலில் அதன் விளைவு அதிகமாக இருந்தது. ஒரு நாளைக்கு 50கி அளவு மிளகாய் எடுத்துக் கொள்ளும் போது மோசமான நினைவாற்றலுக்கான ஆபத்து இரு மடங்கு அதிகம் இருப்பதாக ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வில் ஈடுபட்டவர்களே தெரிவிக்கும் தரவுகள் நம்பகத்தன்மையற்றது என பரவலாக கருதப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும்.

மிளகாயை உட்கொள்ளும் போது ஏற்படும் காரமான உணர்வு நீண்ட காலமாக விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. இந்த தன்மை, மிளகாய் ஏன் அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையது என்பதற்கான சில பார்வைகளை வழங்குகின்றது. நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து தங்களை பாதுகாக்கும் பொருட்டு தாவரங்கள் அடைந்த பரிணாம வளர்ச்சியே இந்த காரத்தன்மை.

"சில தாவரங்கள் தன்னை பாதுகாத்துக்கொள்ள கசப்புத் தன்மை வாய்ந்ததாகவோ அல்லது காரமானதாகவோ பரிணமித்தன. தாவரங்கள் தன்னைத்தானே நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாற்றிக்கொள்கின்றன," என பிரிட்டனின் நியூகேசில் பல்கலைக்கழகத்தில் நியூட்ரிஷன் ரிசர்ச் சென்டர் பாப்புலேஷன் ஹெல்த் சயின்சஸ் எனும் மையத்தின் மூத்த விரிவுரையாளர் கிர்ஸ்டென் பிராண்ட் தெரிவிக்கிறார்.

ஆனால், இந்த சேர்மங்கள், பூச்சிகளை விட மனிதர்களிடத்தில் குறைவான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. "கேஃபின் போன்று சிறிதளவு நச்சுத்தன்மை நல்லதே. கேஃபின், நம்முடைய வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது, இதனால் நாம் அதிக விழிப்புடன் இருக்கிறோம்," என்கிறார் அவர். "எனினும், அதிகளவு நச்சு நமக்குக் கேடானது." என்றும் அவர் கூறுகிறார்.

இத்தகைய சுவையை அளிக்கும் உணவுப்பொருட்களில் உள்ள சேர்மங்கள், மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல என வாதிடுகிறார், பிர்மிங்காமில் உள்ள ஆஸ்டன் மெடிக்கல் ஸ்கூலில் கற்பிக்கும் மூத்த ஆய்வு மாணவரும் உணவியல் நிபுணருமான டுவேன் மெல்லர். இவர் பிரிட்டனில் உள்ளார்.

"உணவில் நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்கும் நிறைய நிறமிகளும் கசப்புத்தன்மை வாய்ந்த உணர்வும் தாவரங்களை பூச்சிகள் சாப்பிடாமல் பாதுகாப்பதற்காக உள்ளன. இதன் நச்சுத்தன்மைக்கு நாம் பழகிவிட்டோம். கருந்தேநீரில் உள்ள டன்னின்கள் (tannins) உட்பட இத்தகைய தாவரங்களின் சேர்மங்களை அனுபவிக்க நாம் பழகிவிட்டோம், ஆனால் சில உயிரினங்கள் அதற்கு பழகவில்லை." என்று அவர் கூறுகிறார்.

மற்றொரு புறம்,இத்தகைய மசாலா பொருட்கள் சிலவற்றில் பலனளிப்பவையாக இருந்தாலும், வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வழக்கமாக நாம் அதை உட்கொள்வதில்லை.

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விளைவுகளை ஏற்படுத்தும் அளவுக்கு நாம் இத்தகைய மசாலாக்களை உண்பதில்லை

பாலிஃபெனாலை (polyphenols) எடுத்துக்கொள்ளுங்கள்: இது, அழற்சிக்கு எதிரான விளைவுகளை கொண்டுள்ள பல தாவரங்களில் காணப்படுகின்றன. இத்தகைய பாலிஃபெனால் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை பொருத்து அந்த மசாலா பொருட்களின் ஆரோக்கிய பலன்கள் தொடர்புப்படுத்தப்படுகின்றன. எனினும், 2014-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த சேர்மத்தை குறைவாக கொண்டுள்ள மசாலா பொருளை சாப்பிடும்போது அதன் பலன்கள் குறையுமா என்பதில் தெளிவில்லை என கூறுகிறது.

சில ஆராய்ச்சிகள் ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளன. 2022-ம் ஆண்டு 11 ஆய்வறிக்கைகளை ஆராய்ந்ததில், கேப்சைசின் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வதில் உள்ள ஆரோக்கிய பயன்கள் தெளிவாகவில்லை அல்லது அதற்கான ஆதாரங்கள் "உயர் தரத்தில் அமையவில்லை" என்றும் தெரியவந்தது.

மஞ்சளின் பலன்கள்

மனித ஆரோக்கியத்திற்கு அதிக பலன்களை அளிக்கக்கூடிய ஒன்றாக பரவலாக கருதப்படும் மற்றொரு மசாலா பொருள் மஞ்சள். இது, அதிலுள்ள குர்கியூமின் (curcumin) எனும் பொருளுக்காக அவ்வாறு கூறப்படுகிறது. மஞ்சளில் காணப்படும் இந்த சிறிய மூலக்கூறு, மாற்று மருத்துவத்தில் அழற்சிக்கு சிகிச்சையளிக்கவும் மன சோர்வு மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், மஞ்சளின் நற்குணங்களுக்கான ஆதாரங்களுக்கு போதாமை நிலவுகிறது.

பல்வேறு ஆராய்ச்சிகளில், குர்கியூமின் புற்றுநோய்க்கு எதிரான அம்சங்களை கொண்டுள்ளதாக ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆய்வக சூழல் என்பது, மனித உடலில் இருந்து அதிகம் வேறுபட்டது. அது பரிமாறும் அளவை பொறுத்து, எந்த ஆரோக்கியமான விளைவுகளையும் ஏற்படுத்துவதற்கு மிகவும் குறைவானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது மற்ற மசாலா பொருட்களுக்கும் பொருந்தலாம். இருந்தாலும், சில மசாலா பொருட்களை அதிகளவு உட்கொள்ளும்போது நேர்மறையான முடிவுகள் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உதாரணமாக, 2023-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தினமும் இஞ்சியை பிற்சேர்க்கையாக (supplement) எடுத்துக்கொள்வது, ஆட்டோஇம்யூன் உள்ளவர்களிடையே (நோய் கிருமிகளைத் தாக்காமல் உடல் உறுப்புகளையே நோய் எதிர்ப்பு மண்டலம் தாக்குவது) அழற்சியை கட்டுப்படுத்தவும் லூபஸ் (lupus) மற்றும் ருமனாய்டு ஆர்த்ரைட்டீஸ் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும் உதவுவதாக கண்டறிந்துள்ளது.

மேற்கு நாடுகளில் மஞ்சள் போன்ற மசாலா பொருட்களில் குணப்படுத்தும் அம்சங்கள் உள்ளதாக கருதப்பட்ட இடைக்கால கட்டத்தில், மாற்று மருந்தாக அவை கடைசியாக பயன்படுத்தப்பட்டதாக, யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை பேராசிரியர் பால் ஃப்ரீட்மேன் கூறுகிறார்.

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மேற்கத்திய நாடுகள் இடைக்காலகட்டத்தில் மஞ்சள் குணப்படுத்த உதவும் என பரவலாக கருதப்பட்டது

"மசாலா பொருட்கள் உணவின் பண்புகளை சமன்படுத்த பயன்படுத்தப்பட்டன. உணவு சூடு, குளிர்ச்சி, ஈரப்பதம் மற்றும் வறட்சியான பண்புகள் உள்ளவையாக கருதப்பட்ட நிலையில், அவற்றை சமன்படுத்த வேண்டும் என நினைத்தனர்," என்கிறார் அவர். உதாரணமாக, மீன் குளிர்ச்சியானது, ஈரப்பதம் கொண்டது என கருதப்பட்ட நிலையில், மசாலாக்கள் சூடு மற்றும் வறண்ட தன்மை கொண்டவை.

உணவை மருந்தாக பயன்படுத்துவதும் அதன் பண்புக்கேற்ப அவற்றை சமன்செய்வதும் ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கிய கோட்பாடாகும். இது, இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.

நிறைய மேற்கு நாடுகளில், இத்தகைய கருத்துகள் புதிதானவை. "உணவை சமநிலை செய்யும் இந்த கருத்துரு, புதிய, நவீன மருத்துவத்துடன் பகிரப்பட்டுள்ளது," என்கிறார் அவர். "மசாலா பொருட்களுடன் நமக்கிருக்கும் நவீன கவர்ச்சி, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட, இடைக்காலத்தை நமக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்டிபயாடிக் போன்ற நவீன மருந்துகளுக்கும் மாற்று மருத்துவத்திற்கும் (superstitious medicine) இடையே தடுப்பு சுவர் இருந்தது."

தன் வேலையின் ஒரு பகுதியாக இந்த மூலக்கூறுகள் புதிய மருந்துகளுக்கான சேர்மங்களாக இருக்க முடியுமா என ஆராய்கிறார், மின்னிசோட்டா பல்கலைக்கழகத்தின் சிகிச்சை முறைகளின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு குறித்த மையத்தின் முன்னாள் உதவி ஆய்வு பேராசிரியரான கேத்ரின் நெல்சன். குர்கியூமினின் விளைவுகள் குறித்த கூற்றுகள் குறித்து அவருக்கு தெரியவந்ததால் அதுகுறித்து ஆராய அவர் முடிவு செய்துள்ளார்.

"சோதனைக் குழாய்களில் வளரும் செல்களில் இந்த சேர்மங்களை சேர்த்து, அச்செல்களில் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் உழைப்பை செலுத்துகின்றனர்," என்கிறார் அவர்.

ஆனால், குர்கியூமின் ஒரு "பயங்கரமான" மூலக்கூறு என அவர் கூறுகிறார். ஏனெனில், அது செரிமானம் ஆனவுடன் உடல் அதை பயன்படுத்த முடியாது என்கிறார் அவர். சிறுகுடலால் அதை எளிதாக உறிஞ்ச முடியாது. மேலும், சிறு மற்றும் பெருங்குடல்களில் உள்ள புரோட்டீன்களுடன் கலக்கும் போது அதன் அமைப்பில் மாற்றம் ஏற்படலாம். அதனால் பெரும் பலன் இல்லை.

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குர்கியூமினை சிறுகுடலால் எளிதாக உறிஞ்ச முடியாது

மஞ்சளில் உண்மையாக பலனளிக்கக் கூடிய ஒன்று உண்டு, ஆனால், அது குர்கியூமின் அல்ல என்கிறார் அவர். ஓர் உணவில் மஞ்சள் சேர்த்து சமைக்கும்போது, அது மற்ற உணவுப் பொருட்களுடன் சேர்க்கப்பட்டு, சூடுபடுத்தும்போது, அதன் வேதியியல் சேர்மங்கள் மாறும் என்கிறார் அவர்.

"உண்மையில் மஞ்சளில் நாம் பார்க்க வேண்டியது குர்கியூமின் அல்ல. அது மட்டும் மஞ்சளில் இல்லை. அதனை வேதியியல் ரீதியாக மாற்றப்படவோ அல்லது நன்மை பயக்கும் வகையில் ஏதாவது சேர்க்கப்படவோ வேண்டும்."

நிறைய மஞ்சள் சாப்பிடுவது ஆபத்தானது அல்ல என்று கூறும் அவர், ஆனால் சுய-மருந்தாக அதை உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

விளைவுகளும் காரணிகளும்

மிளகாய் மற்றும் மஞ்சள் குறித்து பரவலாக ஆராயப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான சோதனைகள் அதனை உட்கொள்வதால் ஏற்படும் வெவ்வேறு வித ஆரோக்கியமான விளைவுகளை மட்டுமே ஒப்பிட்டுள்ளது. இவை, காரணத்தை விளைவிலிருந்து பிரிக்காது. மேலும், ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு மனித உடலுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஊட்டச்சத்து தொடர்பான பல ஆராய்ச்சிகள் போலவே, காரணத்திலிருந்து விளைவை பிரிப்பது கடினமானது.

கடந்த 2019-ல் மிளகாய் உட்கொண்டால் இறப்புக்கான ஆபத்து குறைவாக கூறப்பட்ட ஆராய்ச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அது அவதானிப்புதான். எனவே, மிளகாய் உட்கொண்டால் நீண்ட காலம் வாழ முடியுமா, ஆராய்ச்சியில் ஏற்கனவே ஆரோக்கியமான மக்கள் மிளகாய்களை உட்கொண்டுள்ளனரா என்பதை அறிவது கடினம். அதுகுறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது.

இத்தாலியர்கள் மற்றும் மத்திய தரைக்கடல் என வெவ்வேறு கலாசாரங்களில் மிளகாயை எப்படி உண்கின்றனர் என்பதில்தான் இது அடங்கியிருப்பதாக, இத்தாலியில் உள்ள மத்திய தரைக்கடல் நரம்பியல் மையத்தின் தொற்றுநோயியல் நிபுணரும் ஆய்வாசிரியருமான மரியாலௌரா பொனாசியோ கூறுகிறார்.

"மத்திய தரைக்கடல் நாடுகளில் மிளகாய் பரவலாக உட்கொள்ளப்படுகிறது," என்கிறார் பொனாசியோ. "பெரும்பாலும் பாஸ்தா, பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடனோ சேர்த்து உண்ணப்படுகிறது."

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய தரைக்கடல் நாடுகளில் பாஸ்தா, காய்கறிகள், பருப்புகளுடன் மிளகாய் பரவலாக உண்ணப்படுகிறது

அவற்றை பருப்பு வகைகள் அல்லது காய்கறிகளுடன் சாப்பிடலாம் என்பது, மசாலா பொருட்கள் எப்படி மறைமுகமாக பலனளிக்கலாம் என்பதற்கான ஓர் உதாரணம்.

பர்கர்களில் மசாலா கலவையைச் சேர்ப்பது, மசாலா இல்லாமல் பர்கரை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் ஒரு நபரின் உடலில் குறைவான நிலையற்ற மூலக்கூறுகளை (free radicals) உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும், மேலும் இறைச்சியை புற்றுநோய் காரணியாக மாற்றலாம் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஆனால், அதன் பலன்களை மசாலா பொருட்களின் பதப்படுத்தும் தன்மைகளை பொறுத்து எளிமையாக விளக்கலாம், என இந்த ஆய்வில் ஈடுபடாத மெல்லர் கூறுகிறார்.

"இறைச்சியில் மசாலா பொருட்களை சேர்ப்பது, இறைச்சியை பதப்படுத்த நன்கு அறியப்பட்ட வழியாகும்," என்கிறார் அவர். "மசாலா பொருட்களின் பலன்கள் நேரடியானதாக அல்லாமல், அதன் பதப்படுத்தும் தன்மையில் அதிகமாக இருக்கலாம். இரு வழிகளிலும் உண்ணும் உணவை ஆபத்து குறைவானதாக ஆக்குவதிலிருந்து நாம் பலனடையலாம்."

 
உடல்நலம்: மஞ்சள், மிளகாய் போன்ற மசாலா பொருட்கள் உடலுக்கு உண்மையிலேயே நல்லதா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பெரும்பாலும் உப்புக்கு பதிலாக இம்மசாலாக்கள் பயன்படுத்தப்படுகிறது, எனவே அதன் பலன்கள் நமக்கு நேரடியாக மட்டும் கிடைப்பதில்லை

நாம் எதனுடன் அந்த மசாலா பொருட்களை சாப்பிடுகிறோம் என்பதிலிருந்து அதன் பலன் நமக்குக் கிடைப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். உதாரணமாக, உப்புக்கு பதிலாக அவற்றை நாம் பயன்படுத்தும் போக்கு, என்கிறார், நியூ யார்க்கில் உள்ள என்.ஒய்.யூ லங்கோன் ஹெல்த் எனும் மருத்துவ மையத்தின் மருத்துவ உதவி பேராசிரியர் லிப்பி ராய். "மசாலாக்கள் உணவை சுவையானதாக மாற்றுகின்றன. இது, உப்புக்கான ஆரோக்கியமான மாற்றாக இருக்கும்," என்கிறார் அவர். உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு பொருட்களுக்கு மாற்றாக மசாலாக்களை பயன்படுத்துவது, வெகுஜன உணவுகளை சுவையானதாக ஆக்குகின்றன என கடந்தாண்டு ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

காய்கறிகளுடன் மிளகாயை உண்ணும் போக்கு நம்மிடையே உள்ளது. இதுவும் நமக்கு பயனளிக்கும்.

எனவே, மஞ்சள் கலக்கப்பட்ட பால், (கோல்டன் லேட்டே) எந்த தீங்கையும் ஏற்படுத்தாது. சில காய்கறிகளை மசாலா தூவி சாப்பிடுவது நல்லது. எந்தவொரு நோயையும் தடுக்கவோ அல்லது போராடுவதற்கோ, நாம் நிச்சயமாக அவற்றை நம்பக்கூடாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பச்சிளம் குழந்தைகளின் மலத்தை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய ரகசியங்கள்

1 month 2 weeks ago
தாயுடன் பச்சிளம் குழந்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியாக்கள் முதலில் வளர்கின்றன என்று மல மாதிரிகளில் இருந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யப்பட்டது. (சித்தரிப்புப்படம்)
  • எழுதியவர், ஸ்மிதா முண்டாசாத்
  • பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி நியூஸ்

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 1000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மல மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

இந்த மாதிரிகள் மூலம், பிறந்த குழந்தையின் குடலில் எந்த வகையான பாக்டீரியா முதலில் வளர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர்.

அந்த ஆய்வில், குழந்தைகளின் மலம் மூன்று வெவ்வேறு நுண்ணுயிரியல் வகைகளின் கீழ் வருவதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொன்றிலும் வெவ்வேறு "முன்னோடி பாக்டீரியாக்கள்" அதிக அளவில் காணப்பட்டன.

இந்த முன்னோடி பாக்டீரியாக்கள் எந்தப் புதிய சூழலிலும் முதலில் குடியேறி வளரக் கூடியவை.

1288 குழந்தைகளின் மல மாதிரிகள் ஆய்வு

இவற்றில் ஒன்று பி.ப்ரீவ் (பிஃபிடோபாக்டீரியம் ப்ரீவ்) என்று ஆரம்ப சோதனைகள் சுட்டிக்காட்டின. இது குழந்தைகளுக்கு தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளை ஜீரணிக்க உதவுகிறது மற்றும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கிறது.

இந்த பாக்டீரியாவின் மற்றொரு வகை தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நேச்சர் மைக்ரோபயாலஜி என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.

ஒரு நபரின் மைக்ரோபயோம் அதாவது அவரது குடலில் வாழும் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் அந்த நபரின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன.

ஆனால் ஒரு குழந்தையின் மைக்ரோபயோம் குறித்து மிகக் குறைந்த ஆய்வுகளே செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் உருவாகிறது.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வெல்கம் சேங்கர் கழகம் மற்றும் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 1,288 ஆரோக்கியமான குழந்தைகளின் மல மாதிரிகளை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பயன்படுத்திய விளக்கப் படம்

பட மூலாதாரம்,WELCOME SANGER INSTITUTE

படக்குறிப்பு,பி.ப்ரீவ், தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளை பயன்படுத்த குழந்தைகளுக்கு உதவும்

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மல மாதிரிகள் அனைத்தும், பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு உள்ளாகப் பிறந்த குழந்தைகளிடம் இருந்து சேகரிப்பட்டன.

பெரும்பாலான மாதிரிகள் மூன்று பரந்த குழுக்களாகப் பிரிந்ததை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதில் வெவ்வேறு பாக்டீரியாக்கள் ஆதிக்கம் செலுத்தின.

பி.ப்ரீவ் மற்றும் பி.லோங்கம் பாக்டீரியா குழு, நன்மை செய்யக்கூடியவை எனக் கருதப்படுகிறது.

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பயன்படுத்த அவை குழந்தைகளுக்கு உதவ முடியும் என்று அவற்றின் மரபணு விவரம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கு சில நேரங்களில் எ.ஃபேகலிஸ் காரணமாகத் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பூர்வாங்க சோதனைகள் கூறுகின்றன.

 
பல காரணிகள்
பச்சிளம் குழந்தைகளின் மலத்தை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய ரகசியங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

விஞ்ஞானிகளால் ஆய்வில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு, பிறந்த முதல் சில வாரங்களில் முழுமையாகவோ அல்லது ஓரளவோ தாய்ப்பால் கொடுக்கப்பட்டது.

ஆனால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது அல்லது ஃபார்முலா பால் கொடுப்பது அவற்றின் குடலில் வாழும் முன்னோடி பாக்டீரியா மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பிரசவத்தின்போது ஆன்டிபயாடிக்குகள் கொடுக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு எ.ஃபேகலிஸ் (Enterococcus faecalis) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டது.

இது ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் தாயின் வயது, இனம் மற்றும் தாய்க்கு எவ்வளவு குழந்தைகள் உள்ளன என்பன போன்ற பிற காரணிகளும் வளரும் நுண்ணுயிரிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியத்தில் இந்த நுண்ணுயிரிகளின் சரியான தாக்கத்தை அறிய மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 
மருத்துவமனை கண்காணிப்பில் பச்சிளம் குழந்தை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசவம் மற்றும் தாய்ப்பால் தொடர்பான முடிவுகள் "சிக்கலானவை மற்றும் தனிப்பட்டவை" என்று நிபுணர்கள் கூறுகிறார்கள் (சித்தரிப்புப் படம்)

"நாங்கள் 1,200க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் இருந்து உயர் தெளிவுத் திறன் கொண்ட மரபணு தகவல்களைப் பகுப்பாய்வு செய்து மூன்று முன்னோடி பாக்டீரியாக்களை அடையாளம் கண்டுள்ளோம். இவை குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை இயக்கும் பாக்டீரியாக்கள்.

எனவே நாம் அவற்றை குழந்தைகளின் மைக்ரோபயோம் பிரிவில் வகைப்படுத்தலாம்,” என்று வெல்கம் சேங்கர் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் யான் ஷாவோ கூறுகிறார்.

"இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் வேறுபாடுகளை காட்சிப்படுத்துவதும் புரிந்துகொள்வதும், ஆரோக்கியமான மைக்ரோபயோமை உருவாக்கப் பயனுள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான முதல் படியாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

"இந்த ஆய்வு வாழ்க்கையின் முதல் மாதத்தில் குடல் நுண்ணுயிரிகளை உருவாக்குவது பற்றிய தற்போதைய அறிவை கணிசமாக விரிவுபடுத்துவதாக" இந்த ஆய்வில் பங்கேற்காத, ஸீ பீச்சில் உள்ள லண்டன் குயின் மேரி பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிர் அறிவியல் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ருய்ரி ராபர்ட்சன் கூறினார்.

"சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் குடல் மைக்ரோபயோம் கலவை, ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை போன்ற பொதுவான குழந்தைப் பருவ நோய்கள் மீது பிறப்பு முறை மற்றும் தாய்ப்பாலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பது பற்றி நிறைய கற்றுக் கொண்டோம்," என்று அவர் கூறுகிறார்.

 
பச்சிளம் குழந்தைகளின் மலத்தை சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்திய ரகசியங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஆனால் இது இன்னமும் பயனுள்ள நுண்ணுயிர்-மையப்படுத்தப்பட்ட சிகிச்சையாக உருமாறவில்லை," என்றார் அவர்.

குழந்தைப் பேறு மற்றும் தாய்ப் பாலூட்டுதல் பற்றிய முடிவுகள் "சிக்கலானவை மற்றும் தனிப்பட்டவை." இதில் சிறந்த வழிகள் என்று வரும்போது, 'அனைத்து அணுகுமுறைகளுக்கும் பொருந்தக்கூடிய' வழி என எதுவும் இருக்க முடியாது என்று லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் கென்னி கூறினார்.

"பிறப்பு முறைகள் மற்றும் குழந்தைக்குப் பாலூட்டும் முறைகள், குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, பிற்காலத்தில் இது அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பன பற்றிய முழுமையான தகவல்கள் எங்களிடம் இல்லை. எனவே இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆராய்ச்சி யுகே பேபி பயோம் என்ற ஆய்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெல்கம் மற்றும் வெல்கம் சேங்கர் கழகம் இதற்கு நிதியளித்தது.

இதில் பங்கேற்றவர்களில் ஒருவரான டாக்டர். ட்ரெவர் லாலி, வயது வந்தோருக்கான ப்ரோபயாடிக்குகளில் பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் இணை நிறுவனராக இருப்பதோடு, வெல்கம் சேங்கர் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இதய நோய், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறிய ஸ்மார்ட் வாட்ச்கள் உதவுமா?

1 month 2 weeks ago
இதய நோய்கள், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், டேவிட் காக்ஸ்
  • பதவி, பிபிசி

நமது உடல் இயக்கம் குறித்து ஏராளமான தரவுகளை ஸ்மார்ட் வாட்ச்கள் சேகரிக்கின்றன. தற்போது இந்தக் கருவியை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம்.

ஸ்விட்சர்லாந்தின் சி.ஹெச்.யூ.வி பல்கலைக்கழக மருத்துவமனையில் (CHUV University Hospital) தலைமை மயக்கவியல் நிபுணராக இருக்கும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர், மயக்கமருந்து அளித்து நீண்ட நேரம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் அனைத்து விளைவுகள் குறித்தும் அறிந்திருக்கிறார்.

அதிகப்படியான ரத்தப்போக்கு நோயாளியை அதிர்ச்சியில் தள்ளும். இதனால், திடீரென மோசமான அளவில் ரத்த ஓட்டம் குறையும். மேலும், ஆழ்ந்த மயக்கம் காரணமாக நோயாளிகளுக்குத் தீவிரமான நுரையீரல் பிரச்னைகளும் ஏற்படலாம். இது, அறுவை சிகிச்சை முடிந்து முதல் ஆறு நாட்களுக்குள் நடக்கும் மொத்த இறப்புகளில் கால் பங்கு இறப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தப் பிரச்னை, நோயாளிகளின் உடலியலில் உள்ள பலவீனங்களால் ஏற்படுகிறது. இந்த பலவீனத்தைக் கண்டறிய இயலாது. ஆனால், இத்தகைய முக்கியமான சிகிச்சைகளுக்கு முன்பாக இதனை விரைவாகவும், குறைவான செலவிலும் மருத்துவமனைகளால் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும்?

அனைத்து உடல் தரவுகளையும் தரும் ஸ்மார்ட் வாட்ச்கள்

பேட்ரிக் ஸ்காய்டெக்கரும் அவருடைய சகாக்களும், அறுவைசிகிச்சைக்குப் பல வாரங்களுக்கு முன்பாகவே நோயாளிகளுக்கு மசிமோ டபிள்யூ1 (Masimo W1) எனும் ‘ஸ்மார்ட் வாட்சைப்’ (smart watch) பொருத்தி சோதனை செய்து வருகின்றனர். அந்த ஸ்மார்ட் வாட்ச் சேகரிக்கும் தரவுகளை வைத்து நோயாளியின் உடல்நலம் குறித்து மதிப்பீடு செய்கின்றனர்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் இதயத் துடிப்பு குறித்த தொடர் தரவுகள், சுவாசத்தின் அளவு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, மற்றும் உடலில் நீரின் அளவு (hydration) ஆகியவற்றை மருத்துவ தரத்திலான துல்லியத்துடன் தருகிறது. இந்தத் தரவுகள் ஒரு நோயாளியின் ‘டிஜிட்டல் இரட்டையர்’ எனும் விதத்தில் ஒத்த அளவாக உள்ளதாகவும் அவை உயிர்காக்க உதவும் என்றும் பேட்ரிக் ஸ்காய்டெக்கர் நம்புகிறார்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாகவும் சிகிச்சைக்குப் பின்பாகவும் ஏற்படக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே கண்டுபிடிக்கவும் அதன் மூலம் அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் அவர்.

வளர்ந்துவரும் ஸ்மார்ட் வாட்ச் சந்தை, (உலகளவில் 2027-ஆம் ஆண்டுக்குள் 40 கோடி ஸ்மார்ட் வாட்ச்கள் விற்கப்படலாம் என சில ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்) உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும் புதிய யுகத்தை எப்படித் திறந்துவிட்டுள்ளது என்பதற்கான ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. மசிமோ, ஆப்பிள், சாம்சங், வித்திங்ஸ் (Withings), ஃபிட்பிட் (FitBit) மற்றும் போலார் போன்ற நிறுவனங்கள், உறக்கம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் ஏற்படும் மாறுபாடுகள், மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு நிலை (இதயம் மற்றும் நுரையீரல் எப்படிச் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் அளவு) ஆகியவற்றின் நிகழ்நேர தரவுகளை அளிக்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களை வடிவமைத்துள்ளன.

 
பார்கின்சன் நோய், இதய நோய், ஸ்மார்ட் வாட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பார்கின்சன் நோய் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அதன் ஆரம்ப நிலை அறிகுறிகளை சில ஸ்மார்ட் வாட்ச்கள் கண்டறிகின்றன
இதய நோய்களை முன்கூட்டியே தெரிவிக்கும் ஸ்மார்ட் வாட்ச்கள்

லண்டனில் உள்ள மயோ க்ளீனிக் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இதய மருத்துவரான கோசியா வமில், சாத்தியமான உடல்நலப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களுக்கு உணர்த்துவதிலும், அவர்கள் அதுதொடர்பாக விரைவாகச் செயலாற்றவும் இந்தத் தகவல்கள் ஏற்கெனவே உதவிவருவதாகக் கூறுகிறார்.

அதிகமான நோயாளிகள் தங்கள் உடல்நலம் தொடர்பான தரவுகளைப் பெற்று, அதனைப் பிரதியாக எடுத்து, அந்த முடிவுகளை எங்களிடம் கொண்டு வருகின்றனர்,” என்கிறார் வமில். “அதை வைத்து மேலும் பரிசோதித்து, உடலில் ஏற்படும் அசாதாரணமான பிரச்னைகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,” என்கிறார் அவர்.

இதுவரை பெரும்பாலான முக்கியமான ஸ்மார்ட் வாட்ச் செயலிகள் இதய நோய் தொடர்பானவையே. ஸ்மார்ட் வாட்சுடன் அமையப்பெற்ற இ.சி.ஜி அளவீடுகள், (இதயத்தின் மின்னணுச் செயல்பாடு குறித்த அளவீடுகள்) ஆரோக்கியமான 50-70 வயதுக்குட்பட்டவர்களில் மிகையான இதயத்துடிப்புகள் குறித்த நம்பகத்தன்மையான தரவுகளை வழங்குவதாக இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது.

இதயத்தில் வழக்கத்திற்கு மாறான மற்றும் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் கட்டுப்படுத்த முடியாத துடிப்புகளை ஏற்படுத்தும் ஏட்ரியல் ஃபைப்ரில்லேஷன் (atrial fibrillation) போன்ற தீவிரமான பிரச்னைகளுக்கான எச்சரிக்கை அறிகுறியாக இது இருக்கலாம்.

 
இதய நோய்கள், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஸ்மார்ட் வாட்ச்களால் சேகரிக்கப்படும் தரவுகள், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் ஆபத்துகளை குறைக்க விரைவில் உதவலாம் என நம்பப்படுகிறது
செயற்கை நுண்ணறிவின் பங்கு

மற்றொரு ஆய்வில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அல்காரிதம்கள் (AI algorithms), ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சின் இ.சி.ஜி அளவீடுகளைப் பயன்படுத்தி இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும் அது வெளியிடும் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பதை (low ejection fraction) 88% துல்லியத்தன்மையுடன் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வித இதய நோய்களும் உள்ள நோயாளிகளிடையே இத்தகைய ஸ்மார்ட் வாட்ச் தரவுகளும் அதுகுறித்து அறிந்துகொள்ளும் தளங்களும் புரட்சியை ஏற்படுத்துபவையாக நிரூபித்துவருகின்றன.

இதயவியல் மருத்துவமனைகளில் படபடப்பாக இருப்பதாகக் கூறும் பல நோயாளிகளைப் பார்க்கிறோம். நாங்கள் அவர்களின் மார்புப்பகுதியில் டேப்களை பொருத்தி 24 மணிநேரமும் இ.சி.ஜி-யைப் பதிவுசெய்கிறோம்,” என்கிறார் வமில்.

பெரும்பாலும் அந்த 24 மணிநேரத்தில் நோயாளிகளிடையே படபடப்பைக் கண்டறிய முடிவதில்லை. ஆனால், ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் நோயாளிகளுக்கு எப்போதெல்லாம் அறிகுறி தோன்றுகிறதோ அவர்களது வாட்சில் பொத்தானை அழுத்தி அவர்களால் இ.சி.ஜி-யை எடுத்து, எங்களிடம் காட்ட முடியும்,” என்கிறார் அவர்.

நோய்த்தடுப்புச் சிகிச்சையில் இது ஏற்கெனவே வழிகாட்டியாக உள்ளதாகவும் இதன்மூலம் வழக்கத்திற்கு மாறான இதயத்துடிப்பு அறிகுறிகளைக் கண்டறிந்து பக்கவாதத்தைத் தடுக்கும் வகையிலான ரத்த உறைவுத் தடுப்பு மருந்துகளைப் (blood thinner tablets) பரிந்துரைக்க முடியும் எனவும் வமில் கூறுகிறார். இந்தத் தரவுகளைப் பயன்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயாளிகளிடையே ஏற்படும் இதய பிரச்னைகளையும் தடுக்க முடியுமா என்பதை கண்டறிய ஆர்வமாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஏன் குறைவான காலம் வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன,” என்கிறார் வமில். “எதிர்காலத்தில் இந்தத் தரவுகள் நோயாளிகளிடையே ஆரம்பநிலை அறிகுறிகள் குறித்து எச்சரித்து, அதன் மூலம் இதய நோய்கள் மற்றும் பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறியப் பயன்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் அவர்.

 
இதய நோய்கள், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதுவரை, பெரும்பாலான முக்கியமான ஸ்மார்ட் வாட்ச் செயலிகள் இதய நோய் தொடர்பானவையே.
நரம்பியல் பிரச்னைகளைக் கண்டறிதல்

ஆனால், இதயத்தைக் கண்காணிப்பதைத் தாண்டி ஸ்மார்ட் வாட்ச் செயலிகளை, வேறு பல விஷயங்களுக்காகவும் பயன்படுத்தலாம். 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒரு வாரத்திற்கு ஸ்மார்ட் வாட்ச் அளித்து அதன் தரவுகளை ஆராய்ந்து ஆய்வறிக்கை வெளியிட்டனர்.

அதன் முடிவுகள், பார்கின்சன் நோயின் அறிகுறிகள் கொண்டவர்களை, அவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதிப்பதற்கு ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே அடையாளம் காண்பது சாத்தியம் என்பதைக் காட்டின. அவர்களது நடையில் ஏற்படும் மிக நுட்பமான அசாதாரணங்கள், ஸ்மார்ட் வாட்ச் மூலம் இயக்க சென்சார்கள் வாயிலாகக் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வை வழிநடத்திய சிந்தியா சாண்டர், இந்த அறிகுறிகளைக் குறிப்பாகக் கண்டறிந்து, ஸ்மார்ட் வாட்ச் மூலம் உறக்கம் போன்றவற்றின் அளவீடுகளை அறிந்து இதனைக் கூறுவது சாத்தியமானது என்கிறார். பார்கின்சன் நோய் உள்ளவர்களில் தூக்கம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

“இயக்கம் தொடர்பான நுட்பமான மாற்றங்கள் நீண்ட காலத்திற்குப் பின்னரே தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்,” என்கிறார் சாண்டர். “லேசான உடல் செயல்பாடுகளின்போது இயக்கம் மெதுவாதல் தான் நாங்கள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியும் அறிகுறி. இது நோயாளிகளேளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நுட்பமானது,” என்கிறார் அவர்.

இத்தரவுகள் நோயாளிகள் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள விரைவில் பயன்படுத்தப்படலாம் என சாண்டர் நம்புகிறார். குறிப்பிடத்தகுந்த அளவில் மூளை பாதிக்கப்பட்ட பின்னர் இந்நோய் கண்டுபிடிக்கப்படுவதாலேயே, திறன் வாய்ந்த சிகிச்சைகள் கூட பலனளிக்காமல் போவதாக ஒரு கருத்து உள்ளது. ஆரம்பகட்டத்திலேயே இதை கண்டறியும்போது பாதிப்புகளை மெதுவாக்கவோ அல்லது அந்நோயிலிருந்து குணமடைவதை எளிதாக்கிறது. “ஸ்மார்ட் வாட்ச் தரவுகள் மூலம் நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இதன்மூலம், நரம்பியல் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்,” என்கிறார் அவர்.

வலிப்பு நோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்னைகள் உள்ள நோயாளிகளிடையே, அவர்களுக்கு வலிப்பு ஏற்பட போவதாக முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கும் விரைவில் ஸ்மார்ட் வாட்ச் தரவுகளைப் பயன்படுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது. வலிப்பு நோய் பாதிப்பு உள்ளவர்கள் வலிப்பு ஏற்பட்டு கீழே விழுதல் மற்றும் மோசமான விபத்துகளுக்கு ஆட்படுதல் ஆகியவை ஆபத்தானதாக கருதப்படுகின்றன.

“எப்போது வலிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறிவது மிகக் கடினமானது என்பது, வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று,” என குயின்ஸ்லாந்து மூளை சிகிச்சை மையத்தில் ஐலீன் மெக்கோனிகல் கூறுகிறார். “எனினும், வலிப்பை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் இன்னும் முன்னேறவில்லை,” என்கிறார் அவர்.

ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்ட எம்பார்டிகா ஸ்மார்ட் வாட்சின் மாதிரி சாதனம், வலிப்பை முன்கூட்டியே கணிக்க உதவுமா என்பதைக் கண்டறிவதில் ஆர்வம் கொள்கிறார் ஐலீன். நடைபெற்றுவரும் ஆய்வு ஒன்றில், அவர் இதன் தரவுகளை செயற்கை நுண்ணறிவு அல்காரிதம்களுடன் பொருத்திப் பார்க்கிறார். இதயத் துடிப்பில் மாறுபாடுகள், தோலின் வெப்பநிலை, உடல் இயக்கங்கள் மற்றும் நரம்பியல் அமைப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளைப் பிரதிபலிக்கும் வகையிலான, வியர்வையால் ஏற்படும் மின்னணு கடத்துத் திறனில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். இவற்றை ஸ்மார்ட் வாட்சால் அளவிட முடியும்.

இதய நோய்கள், பார்கின்சன் நோயை முன்கூட்டியே கண்டறியும் ஸ்மார்ட் வாட்ச்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்மார்ட் வாட்ச்களை முழுமையாக நம்பலாமா?

வலிப்பு ஏற்படுவதற்கு முன்பானச் சில மணிநேர அளவீடுகளைக் கண்டறிவதுதான் எங்கள் இலக்கு,” என்கிறார் மெக்கோனிகல். “வலிப்புகள் எப்போது தோன்றும் என்பதை அதுகுறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் முன்கூட்டியே கண்டறிய வேண்டும். இதன்மூலம், மருந்துகளின் அளவு, கீழே விழுதல், வலிப்புடன் தொடர்பான காயங்களிலிருந்து தவிர்க்கும் வகையில் தினசரிச் செயல்பாடுகளைத் தழுவிகொள்ள முடியும்,” என்று குறிப்பிடுகிறார் அவர்.

ஆனால், இதில் தவறான முடிவுகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் வேறுபட்ட கருத்தையும் முன்வைக்கின்றனர். ஸ்மார்ட் வாட்ச்களை அதிகப்படியாக பயன்படுத்துவது, நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும், சுகாதார வளங்களை மேலும் வடிகட்டக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன.

 
சில ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் இசிஜி அளவீடுகளை பெற முடியும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சில ஸ்மார்ட் வாட்ச்கள் மூலம் இசிஜி அளவீடுகளை பெற முடியும்
ஸ்மார்ட் வாட்ச்களின் எதிர்காலம் என்ன?

“தொழில்நுட்பம் பல வழிகளில் மருத்துவத்திற்கு உதவியாக உள்ளது,” என்கிறார் லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையின் ஆலோசனை நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் ஜெரிமி ஸ்மெல்ட்.

பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிவது அதில் ஒன்று. அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்ற முடியும். ஸ்மார்ட் வாட்ச்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தவறாக நோய்களைக் கண்டறிவது நோயாளிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும். இதனால், தேவையற்ற சமயங்களில் அவர்கள் பொது மருத்துவர்களை நாடுவார்கள்,” என்கிறார் அவர்.

“ஆனால் இதய நோய் உள்ளவர்களுக்கு இது தேவையானதாக உள்ளது, இதன்மூலம் உரிய நேரத்தில் பிரச்னைகளைக் கண்டறிய முடியும்,” என்கிறார் அவர்.

ஸ்மார்ட் வாட்ச்கள் இன்னும் அதிநவீனமாகி வருகின்றன. மேலும், மனித உடல் குறித்த இன்னும் அதிகப்படியான தகவல்களை வழங்கும் விதத்திலான ஸ்மார்ட் வாட்ச்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இதனால், அதன் நோய்த்தடுப்புச் செயல்பாடுகள் இன்னும் அதிகமாகும்.

மசிமோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜோ கியானி, தங்கள் நிறுவனத்தின் அடுத்தகட்ட மேம்பட்ட ஸ்மார்ட் வாட்ச்களில் ஏற்கெனவே கவனம் செலுத்தி வருகிறார். அதாவது, அதன்மூலம், ஆஸ்துமாவைக் கண்டறிவது.

“சுவாசம் சம்பந்தமான அளவீடுகள் இதில் இருக்கும்,” என்கிறார் கியானி.

"சுவாச அளவீடுகள் மூலம், இதயத்துடிப்பு அதிகரிப்பதால் தான் உங்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாக கூற முடியும்,” என்கிறார் அவர்.

“கடந்த 50-60 ஆண்டுகளில், நம் வீடுகளில் தெர்மோமீட்டர் மட்டும்தான் இருக்கும். ஆனால், இனி அவசரச் சிகிச்சைக்குச் செல்லாமலேயே சரியான கவனிப்பைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும் பலவித தகவல்களை நம்மிடம் இருக்கும்,” என்கிறார் அவர்.

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

1 month 3 weeks ago
மூளையின் மைக்ரோக்லியா செல்கள்

பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES

 

மைக்ரோக்லியா என்பது நம் மூளையில் நிரந்தரமாக இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள். நோய்க் கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை அழித்து மூளையின் ரத்த நாளங்களைப் பாதுகாப்பதுதான் அவற்றின் வேலை. ஆனால், அந்த செல்களே மூளைக்குத் தீங்கு விளைவித்தால் என்ன ஆகும்?

நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதுகாக்கும் செல்களாகவே அவை பெரும்பாலும் அறியப்படுகின்றன. ஆனால், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் முதல் வலியை ஏற்படுத்துதல் வரை பலவற்றில் மைக்ரோக்லியா முக்கியப் பங்கு வகிப்பதாக விஞ்ஞானிகள் தற்போது அதிகளவில் நம்புகின்றனர்.

அல்சைமர் நோய், மன அழுத்தம், மனப் பதற்றம், கோவிட் தாக்கம், நாள்பட்ட சோர்வு ( chronic fatigue syndrome) என அறியப்படும் மியால்ஜிக் என்செஃபாலோமைலிடிஸ் (ME - myalgic encephalomyelitis) எனப் பல பிரச்னைகளில் இந்த செல்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக சிலர் நம்புகின்றனர்.

மைக்ரோக்லியா என்பது என்ன?

நமது மூளையில் இரு வகையான செல்கள் உள்ளன. ஒன்று நரம்பு செல்கள் என அறியப்படும் நியூரான்கள், இவை மின் தூண்டுதல் மூலம் உடல் முழுவதும் தகவல்களை அனுப்பும் தூதர்களாகச் செயல்படுகின்றன.

இரண்டாவது வகை செல்கள், க்லியா (glea). இந்த க்லியா செல் குடும்பத்தின் மிகச் சிறிய உறுப்பினர்தான் மைக்ரோக்லியா. மூளையில் உள்ள அனைத்து செல்களிலும் இது 10 சதவீதம்தான் உள்ளது. மையத்தில் நீள் உருளை வடிவிலான “உடலமைப்பைக்” (body) கொண்டுள்ள இந்தச் சிறிய செல்களில், மெல்லிய கொடி போன்ற கிளைகள் காணப்படும்.

“தனது சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கத் தொடர்ச்சியாக நகர்ந்து கொண்டே இருப்பதற்கான அதிக கிளைகளை அவை கொண்டுள்ளன,” என்கிறார், ஜெர்மனியில் உள்ள ஃபிரெய்பெர்க் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் பாவ்லோ டி’எரிக்கோ.

அவர், “சாதாரணமான சூழல்களில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிய, மைக்ரோக்லியா அந்தக் கிளைகளை நீட்டிவிட்டு பின்னர் மீண்டும் பழையை நிலைக்கே கொண்டு வரும்” என்கிறார்.

ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு மைக்ரோக்லியா முக்கியமானவை. நம்முடைய இளம் பருவத்தில் நரம்புகளுக்கு இடையிலான தேவையற்ற நரம்பு இணைப்புகளை அழித்து, மூளையின் வளர்ச்சியை இந்த செல்கள் ஒருங்கமைக்கின்றன.

எந்த செல்கள் நியூரான்களாக மாறுகின்றன என்பதிலும் அவை தாக்கம் செலுத்துகின்றன. மேலும், மைலின் (myelin ) எனப்படும் நியூரான்களை சுற்றியுள்ள உறை போன்ற பாதுகாப்புப் படலத்தைச் சரிசெய்து அவற்றை நிர்வகிக்கின்றன. இந்தப் பாதுகாப்புப் படலம் இல்லாமல் மூளையின் மின் தூண்டுதல் மூலம் தகவல்களைக் கடத்துவது சாத்தியமில்லை.

 
பாக்டீரியா, வைரஸ்களை கண்டறிந்து, அழித்து நம் மூளையை மைக்ரோக்லியாக்கள் பாதுகாக்கின்றன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்களை கண்டறிந்து, அழித்து நம் மூளையை மைக்ரோக்லியா செல்கள் பாதுகாக்கின்றன

அத்துடன் மைக்ரோக்லியாவின் பங்கு முடிந்துவிடுவதில்லை. நம் வாழ்நாள் முழுதும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை கண்டறிந்து, அவற்றை அழித்து மூளையை நோய்த்தொற்றில் இருந்து காக்கின்றன.

நரம்பு செல்களுக்கு இடையே குவியும் கழிவுகளைச் சுத்தம் செய்கின்றன. மேலும், அல்சைமர் நோயில் பங்கு வகிக்கும் அமிலாய்டு புரதக்கற்றை போன்ற வழக்கத்திற்கு மாறான மடிப்புகளைக் (misshapen proteins) கொண்ட நச்சுப் புரதங்களைக் கண்டறிந்து அழிப்பதும் இதன் வேலையாக உள்ளது.

தீங்கு விளைவிப்பது ஏன்?

எனினும் சில சூழல்களில் இந்த செல்களும் தீங்கு விளைவிக்கலாம்.

“மைக்ரோக்லியா செல்களுக்கு நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் உண்டு,” என்கிறார் கொலரடோ பௌல்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் விஞ்ஞானி லிண்டா வாட்கின்ஸ்.

“மைக்ரோக்லியா செல்கள் பிரச்னைகளைக் கண்டறியும். மூளையில் நிகழும் அசாதாரண நரம்பியல் செயல்களைக் கண்டறிந்து அழிக்கும். மூளைக்குள் நிகழும் எந்தவிதமான பிரச்னைகளையும் அவை கண்காணித்துக் கொண்டே இருக்கும். ஆனால், அந்த நல்ல செல்கள் தூண்டப்பட்டால், நோய்த்தொற்றை ஏற்படுத்தும் தீய செல்களாகிவிடும்” என்கிறார் லிண்டா வாட்கின்ஸ்.

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த செல்கள் ஏன் அந்த நிலைக்குச் செல்கின்றன?

மூளையில் தொற்று போன்று ஏதோ தவறு நிகழ்வதாக மைக்ரோக்லியா உணரும்போதோ அல்லது அமிலாய்டு புரதக்கற்றை அதிகளவில் இருக்கும்போதோ, அவை உயர்-வினை (super-reactive) நிலைக்குச் செல்கின்றன.

“கிட்டத்தட்ட பெரிய பலூன்கள் அளவுக்கு அவை அளவில் பெரிதாகிவிடும். மேலும், தன் இணை உறுப்புகளுடன் நகர ஆரம்பித்து, தீங்குகளை ஏற்படுத்தும்," என்கிறார் வாட்கின்ஸ்.

இத்தகைய செல்கள் அழற்சி சைட்டோகைன்களை (inflammatory cytokines) வெளியேற்றும். இந்த சைட்டோகைன்கள் மற்ற நோய் எதிர்ப்பு செல்கள் மற்றும் மைக்ரோக்லியாவை இவற்றை எதிர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட வழிகாட்டும்.

நோய்த் தாக்குதல்களில் இருந்து எதிர்த்துப் போராட இத்தகைய எதிர்வினை அவசியம். வழக்கமாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் மைக்ரோக்லியா செல்கள் தன்னுடைய “நல்ல” நிலைக்குத் திரும்பிவிடும்.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல்

எனினும், சில நேரங்களில் நோய்த்தொற்று காரணி மறைந்துவிட்ட பின்பும், மைக்ரோக்லியா செல்கள் தீய நிலையிலேயே நீண்ட காலத்திற்கு இருக்கின்றன.

இந்தக் கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா பலவித நவீன நோய்கள் மற்றும் நிலைகளுக்குக் காரணமாக உள்ளதாக அறியப்படுகின்றன.

போதைப் பொருளுக்கு அடிமையாதலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பாதிக்கப்பட்டவரின் அதிகமான போதைப்பொருள் பயன்பாடு காரணமாக, டோபமின் ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் நரம்பியல் குறைபாடு காரணமாகவே அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதாக முன்பு அறியப்பட்டது.

 
மூளையில் ஏதோ தவறு நிகழ்வதாக உணரும்போது, மைக்ரோக்லியா செல்கள் அதி-வினை செல்களாக மாறுகின்றன

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மூளையில் ஏதோ தவறு நிகழ்வதாக உணரும்போது, மைக்ரோக்லியா செல்கள் உயர்-வினை செல்களாக மாறுகின்றன

ஆனால், வாட்கின்ஸ் இதற்கு வேறொரு கோட்பாட்டைக் கூறுகிறார். ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ளும்போது, அவர்களின் மூளையில் உள்ள மைக்ரோக்லியா அந்தப் பொருளை “தீங்கு ஏற்படுத்தும் ஒன்றாக” கருதுவதாக, சீனா அகாடமி ஆஃப் சயின்சஸை சேர்ந்த விஞ்ஞானிகளும் வாட்கின்ஸும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில் வாதிட்டுள்ளனர்.

“பலவித ஓபியேட் (opiates) வகை மருந்துகள் (ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படுபவை) மைக்ரோக்லியல் செல்களை தூண்டிவிடுகின்றன என்பதை எங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளோம். இந்தத் தூண்டுதல், நோய் எதிர்ப்பு அமைப்பின் டி.எல்.ஆர். ஏற்பிகள் (toll like receptor - நோய் எதிர்ப்பு அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் புரத ஏற்பிகள்) எனும் அமைப்பின் வழியாக நிகழ்கிறது,” என்கிறார் வாட்கின்ஸ்.

“தீங்கு விளைவிப்பவற்றைக் கண்டறிவதற்காக இந்த டி.எல்.ஆர் ஏற்பிகள் வெகுகாலமாக உள்ளன. பூஞ்சை, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கண்டறிவதற்காக அவை உள்ளன.”

புதிய ஆராய்ச்சி கூறுவது என்ன?

ஓபியேட், கொகைன் அல்லது மெத்தம்பெட்டமைன் போன்றவற்றை மைக்ரோக்லியா கண்டறியும்போது, அவை சைட்டோகைன்களை வெளியிடுகின்றன. அத்தகைய போதைப் பொருட்களை எடுத்துக் கொள்ளும்போது தூண்டப்பட்ட நியூரான்களை இந்த சைட்டோகைன்கள் உயர்-வினை கொண்டவையாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.

இது, நியூரான்களிடையே புதிய மற்றும் வலுவான இணைப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கிறது. மேலும், அந்த நேரத்தில் அதிகப்படியான டோபமின் வெளியேறுகிறது. இதனால், போதைப்பொருட்கள் மீதான ஆசையை வலுப்படுத்தி, அதன் மீதான நாட்டத்தைத் தூண்டுகிறது. மூளை நியூரான்களின் கட்டமைப்பை மைக்ரோக்லியா மாற்றி, வாழ்நாள் முழுதும் நீடிக்கும் வகையிலான போதைப் பழக்கத்திற்கு வழிவகுக்கும்.

இந்தக் கோட்பாட்டை ஆதரிக்கும் சான்றுகள் உள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் மூளையில் அழற்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்கள் (inflammatory cytokines) அதிகமாக இருக்கும். விலங்குகளில் இதைக் குறைக்கும்போது அவை போதைப் பொருட்களை நாடும் பழக்கமும் குறைகிறது. டி.எல்.ஆர் ஏற்பிகளை தடுப்பதன் மூலமும் மைக்ரோக்லியல் செல்களை தூண்டுவதை தடுப்பதன் மூலமும் எலிகள் தொடர்ச்சியாக கொகைன் போன்ற போதைப்பொருட்களை நாடுவதை நிறுத்த முடியும் என்பதை வாட்கின்ஸ் குழு நிரூபித்துள்ளது.

மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைக்ரோக்லியா செல்கள், 12 வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் நாள்பட்ட வலியிலும் முக்கியப் பங்கை வகிக்கலாம். காயம் ஏற்பட்ட பிறகு முதுகுத் தண்டுவடத்தில் உள்ள மைக்ரோக்லியா தூண்டப்பட்டு, வலி நியூரான்களிடையே கூர் உணர்ச்சியை ஏற்படுத்தும் சைட்டோகைன்களை வெளியிடுவதாக வாட்கின்ஸின் ஆய்வு நிரூபித்துள்ளது.

“மைக்ரோக்லியா தூண்டப்படுவதைத் தடுப்பதன் மூலம் உங்களால் வலியைத் தடுக்க முடியும்,” என்கிறார் வாட்கின்ஸ்.

மூத்த குடிமக்கள் அறுவை சிகிச்சை அல்லது நோய்த்தொற்றுக்கு பின்பு ஏன் அறிவாற்றலை இழக்கின்றனர் என்பதற்கு வாட்கின்ஸ் மற்றொரு பார்வையையும் வழங்குகிறார். அறுவை சிகிச்சையோ அல்லது நோய்த் தொற்றோ மைக்ரோக்லியா அதன் தீய பக்கத்தை தகவமைத்துக் கொள்வதற்கான முதல் அடியாகப் பார்க்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன, துரதிருஷ்டவசமாக அவை மீண்டும் மைக்ரோக்லியாவை தூண்டுகின்றன. இதனால் நியூரான்கள் அழிவுக்கு வழிவகுக்கின்றன.

இதுதொடர்பான ஆராய்ச்சி ஆரம்ப நிலையில் இருப்பதால், இந்த ஆரம்பகட்ட முடிவுகளைக் கவனமாக நோக்க வேண்டும். ஆனால், மைக்ரோக்லியா தூண்டுதலைத் தடுப்பதன் மூலம் அறுவை சிகிச்சைக்குப் பின்னான நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

"எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி நான் உங்களை நோக்கி நடந்து வந்து கண்ணத்தில் அறைந்தால் முதல்முறை நான் அதிலிருந்து விடுபடலாம். ஆனால், இரண்டாவது முறை நீங்கள் என்னை விடமாட்டீர்கள். ஏனெனில், இப்போது நீங்கள் பாதுகாப்புடன் தயாராக இருப்பீர்கள்" என்கிறார் வாட்கின்ஸ்.

"க்லியல் செல்களும் அப்படித்தான். வயதாகும்போது அவை வினையாற்றத் தயாராக இருக்கும். இதுதான் முதன்மைக் காரணி. இரண்டாவது சவால் என்னவென்றால் அறுவை சிகிச்சையின் காரணமாக அவை தூண்டப்பட்டு முன்பைவிட அதிகமாக வினை புரியத் தயாராக இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின், உங்களுக்கு ஓபியாய்டுகள் வழங்கப்படுகின்றன. இது மூன்றாவது தாக்குதல்."

 
கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா செல்கள் பல தீவிர நிலைமைக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கட்டுக்குள் இல்லாத மைக்ரோக்லியா செல்கள் பல தீவிர நிலைமைகளுக்குக் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது

மைக்ரோக்லியாவின் இந்த 'முதன்மைக் காரணி'தான் அல்சைமர் நோய்க்குக் காரணமாக இருக்கலாம். இந்த நோய்க்கு வயதுதான் முதன்மையான ஆபத்தாக உள்ளது. நமக்கு வயதாகும்போது மைக்ரோக்லியா அதிக வினை புரிவதற்குத் தயாரக இருக்கும் என்றால், வயதுதான் ஒரு காரணியாக இருக்க முடியும்.

அதேநேரம், மூளையில் உருவாகும் அமிலாய்டு புரதக் கற்றைகள் இந்நோய்க்கு முக்கியக் காரணியாக உள்ளது. இது பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே, குழப்பம் மற்றும் நினைவிழப்பு ஆகிய அறிகுறிகளுடன் உருவாகத் தொடங்கிவிடுகிறது. இந்த அமிலக் கற்றைகளைக் கண்டறிந்து நீக்குவதுதான் மைக்ரோக்லியாவின் வேலை. எனவே, மீண்டும் மீண்டும் தூண்டப்படுவதன் மூலம் மைக்ரோக்லியா நிரந்தரமாகத் தீய செல்களாக மாறுவதற்கு வழிவகுக்கின்றன.

"இந்த அமிலாய்டு குவிவதன் மூலம் மைக்ரோக்லியா தூண்டப்பட்டு அதீத வினை புரியும் வகையில் மாறுகின்றன," என்கிறார் டி'எரிக்கோ.

“இந்த அமிலாய்டு கற்றைகள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும்போது, நாள்பட்ட, தீராத அழற்சியை ஏற்படுத்தும். இது, நியூரான்களுக்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும்.”

நாள்படத் தூண்டப்பட்ட இந்த மைக்ரோக்லியா, நியூரான்களை நேரடியாக அழித்து நரம்பு செல்களுக்கு இடையிலான இணைப்பை அழித்துவிடும். இந்த அனைத்து நடைமுறைகளும் குழப்பம், நினைவிழப்பு, அறிவாற்றல் செயல்பாடு போன்ற அல்சைமரின் அறிகுறிகள் ஏற்பட வழிவகுக்கும்.

மூளையைச் சுற்றி இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அமிலாய்டு கற்றைகளைக் கடத்தி, அல்சைமர் நோய் பரவுவதிலும் மைக்ரோக்லியா பங்காற்றுவதாக டி'எரிக்கோ தனது 2021ஆம் ஆண்டு ஆய்வில் கண்டறிந்துள்ளார்.

 
அல்சைமர் நோயை ஏற்படுத்தும் புரதக்கற்றையை கண்டறிந்து அழிப்பது மைக்ரோக்லியாவின் முக்கிய வேலையாக உள்ளது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அல்சைமர் நோயை ஏற்படுத்தும் புரதக்கற்றையைக் கண்டறிந்து அழிப்பது மைக்ரோக்லியாவின் முக்கிய வேலையாக உள்ளது

இந்த நோயின் ஆரம்பத்தில் புறணி (cortex), மூளையின் பின்புற மேடு (hippocampus), ஆல்ஃபாக்டரி பல்ப் (olfactory bulb) போன்ற மூளையின் முக்கியப் பகுதிகளில் இந்தக் கற்றைகள் திரட்டப்படும்," என்கிறார் டி'எரிக்கோ.

"நோயின் அடுத்தகட்டமாக மூளையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும். அமிலாய்டு புரதக் கற்றைகளை மைக்ரோக்லியா வெளியிடுவதற்கு முன்பாக, ஏற்கெனவே உள்ளவற்றை வேறு பகுதிக்கு நகர்த்துவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார் அவர்.

நினைவாற்றல் இழப்பு, அறிவாற்றல் இழப்பு ஆகிய அல்சைமர் நோயின் அறிகுறிகள், நீண்ட கால கோவிட் பாதிப்பின் அறிகுறிகளாகவும் உள்ளன. எனவே, மைக்ரோக்லியா “கவனச் சிதறலுக்கும்” (brain fog) காரணமாக இருக்கலாம். உதாரணமாக மைக்ரோக்லியா தீய செல்களாக மாறுவதற்கு முக்கியக் காரணமாக வைரஸ் தொற்று உள்ளது.

“வழக்கத்திற்கு மாறாகத் தூண்டப்பட்ட மைக்ரோக்லியா மூளையின் ஒத்திசைவை நீக்கி, அறிவாற்றல் இழப்பு, நினைவாற்றல் இழப்பு மற்றும் கவனச் சிதறலுடன் தொடர்புடைய அனைத்து அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது,” என்கிறார், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஃபெடரல் ஃப்ளூமினென்ஸ் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உயிரியலாளர் கிளாடியோ அல்பெர்ட்டோ செர்ஃபாட்டி. இந்தக் கோட்பாட்டுக்கான ஆதாரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரை தொடர்பாக இவர் பணியாற்றியுள்ளார்.

 
புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும்
மைக்ரோக்லியா: போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் செல்கள் மூளைக்கு செய்யும் நன்மை, தீமைகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இத்தகைய கருத்துகள் புதிய சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

உதாரணமாக, அமிலாய்டுகளை அழிக்கும் வகையில் மைக்ரோக்லியாவின் திறனை அதிகரிக்கக்கூடிய, அல்சைமருக்கான புதிய மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

எனினும், அல்சைமரின் மற்ற மருந்துகளைப் போல இதுவும் பெரியளவில் நரம்பியல் அமைப்பில் அழிவு ஏற்படுவதற்கு முன்பான நோயின் ஆரம்ப நிலையிலேயே சிறப்பாகச் செயலாற்றும் வகையில் உள்ளன.

போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல் தொடர்பாக, தீய செல்களாக மாறிய மைக்ரோக்லியாவுக்கு பதிலாக போதைப்பொருட்களைப் பயன்படுத்தாதவர்களின் மூளைகளில் உள்ள “வழக்கமான” மைக்ரோக்லியாவை மாற்றுவது ஒரு யோசனையாக உள்ளது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் மைக்ரோக்லியாவை ஒட்டும் முறையாக இது உள்ளது.

ஆனால், இத்தகைய செயல்பாடு மிகவும் கடினமானது. தூண்டப்பட்ட மைக்ரோக்லியாக்கள் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் மூளை செயல்பாட்டுக்கும் தேவை என்ற நிலை உள்ளது.

"கோட்பாட்டுரீதியாக இது வேலை செய்யலாம், ஆனால் மூளை முழுவதிலும் உள்ள மைக்ரோக்லியாவுக்கு நீங்கள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட பகுதியில் மைக்ரோக்லியாவை செருகுவது அழிவை ஏற்படுத்தலாம். எனவே, இத்தகைய சிகிச்சைக்கு பாதுகாப்பான வழிமுறையை நாம் கண்டறிய வேண்டும்,” என்கிறார் வாட்கின்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

யாழில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

1 month 3 weeks ago
image

இன்றையதினம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன் போது முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் அடங்கிய குழு ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அவர்கள் அந்த தாக்குதலை எதிர்த்தனர்.

இந்நிலையில் திரும்பிச் சென்ற குழு சுமார் 30 பேர் அடங்கிய குழுவினரை அழைத்து வந்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் மீது மீண்டும் கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பெண் அதிதீவிர சிகிச்சை பிரிவிலும் ஏனைய இருவரும் 24 ஆம் இலக்க விடுதியிலும் சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகிறது.இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197203

நீங்கள் சாப்பிடும் உணவு மட்டுமல்ல, அதை சமைக்கும் முறைகூட 'சர்க்கரை அளவை உயர்த்தலாம்'

1 month 3 weeks ago
சமையல் முறையும் சர்க்கரை அளவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? ஸ்வீட்ஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், வெள்ளை அரிசி போன்ற மாவுச்சத்து நிறைந்துள்ள உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறோம்.

இப்போது அந்தப் பட்டியலில் கிரில் சிக்கன், பூரி போன்ற உணவுகளையும் சேர்க்க வேண்டியிருக்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. உணவை எப்படி சமைக்கிறோம் என்பது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

வேக வைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது வறுத்த, பொரித்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்ததுள்ளது.

உணவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது, சர்க்கரை நோய்க்கு இட்டுச் செல்லக்கூடிய AGE (Advanced Glycation End products) எனும் கூட்டுப் பொருள் உருவாவதாக இந்திய உணவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

AGE (Advanced Glycation End products)என்றால் என்ன?

இந்த ஆய்வு உணவிலும் உடலிலும் இருக்கும் AGE (Advanced Glycation End products) அளவைப் பொருத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு எப்படி மாறுகிறது என்று தரவுகளுடன் எடுத்துக் கூறியுள்ளது.

AGEs என்பவை உணவுகள் அதிக வெப்பநிலையில் சமைக்கப்படும் போதும், உடலில் சில உயிரிவேதியியல் நிகழ்வுகளால் உருவாகும் கூட்டுப் பொருட்களா ஆகும். இவை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல், சிறுநீரக பாதிப்புகளுக்கு வழி வகுக்கக்கூடும்.

இந்தியாவில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்து வரும் நிலையில், சமையல் முறைகளை மாற்றுவது நீரிழிவு (வகை 2) போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தைக் குறைப்பதற்கான எளிய ஆனால் பயனுள்ள உத்தியாக இருக்கலாமென இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நீரிழிவு ஆய்வு மைங்களில் ஒன்றான மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் இந்த ஆய்வை நடத்தியது. அதிக மற்றும் குறைந்த AGE (அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட் ப்ரொடக்ட்ஸ்) கொண்ட உணவுகளின் விளைவுகளை இந்த ஆய்வு ஒப்பிட்டது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சிக்கன் பிரியாணி, ஆலூ பராத்தா, காபி, டீ உள்ளிட்ட46 உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டன. தென்னிந்தியர்களிடம்‌ இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும் பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளில் AGE அளவை பற்றிய மேலும் விரிவான தரவுகளின் தேவையையும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமையல் முறையும் சர்க்கரை அளவும்

பட மூலாதாரம்,FACEBOOK

படக்குறிப்பு, மருத்துவர் வி மோகன்

“புரதங்கள் அல்லது கொழுப்புகள் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையுடன் இணையும்போது உருவாகும் கூட்டுப்பொருட்களே அட்வான்ஸ்டு கிளைகேஷன் எண்ட் ப்ரொடக்ட்ஸ் (AGEs). கிளைகேஷன் என அழைக்கப்படும் இந்தச் செயல்முறை இயற்கையான நிகழ்வாகும். ஆனால் பொரித்தல் மற்றும் வறுத்தல் போன்ற அதிக வெப்பம் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளிலும் இவை உருவாகும். இவை உடலில் இன்சுலின் எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், தொற்று ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இவை நீரிழிவு (வகை 2), இதய நோய்கள், வயது முதிர்ச்சி போன்றவற்றின் முக்கியக் காரணிகள் ஆகும்” என்கிறார், மெட்ராஸ் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் வி.மோகன்.

தெற்காசிய மக்கள்தொகை, குறிப்பாக இந்திய வம்சாவளியினருக்கு, இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உணவு காரணிகளால் இந்த நிலைமைகள் மோசமடையலாம் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவது இன்சுலின் என்னும் கணையத்தில் சுரக்கும் ஹார்மோனின் வேலை. சில உணவுகள் உடலில் இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கக்கூடும். அதாவது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை செல்கள் எடுத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு இட்டுச் செல்லும்.

இப்படியான நிலை உருவாக உணவுகள் எப்படி சமைக்கப்படுகின்றன என்பது ஒரு காரணியாக இருப்பதாக சமீபத்தில் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துக்கான சர்வதேச ஆய்விதழில் (International journal of Food Sciences and Nutrition) வெளிவந்துள்ள ஆய்வு தெரிவிக்கிறது.

பொரித்தல், வறுத்தல், மற்றும் நேரடித் தீயில் சமைத்தல் போன்ற சமையல் முறைகள் உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்டவர்களின் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கும் என்றும் அதே நேரம் வேக வைத்து, கொதிக்க வைத்து சமைக்கப்படும் உணவுகள் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

 
இன்சுலின் ஏற்பு, இன்சுலின் எதிர்ப்பு - என்ன அர்த்தம்?
சமையல் முறையும் சர்க்கரை அளவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்சுலின் ஏற்பு நிலை (insulin sensitivity) என்பது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எந்த அளவுக்கு உடல் எடுத்துக்கொள்கிறது என்பதாகும்.

இதை அளவிடப் பல சோதனைகள் உள்ளன. பொதுவாக பல இடங்களில் பயன்படுத்தப்படுவது OGTT (Oral Glucose Tolerance Test) எனப்படும் பரிசோதனை. எட்டு மணிநேரம் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கும்போது ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும்.

அதன் பிறகு, சர்க்கரை கொண்ட திரவம் ஒன்றைப் பருக வேண்டும். அதிலிருந்து 30 நிமிடங்கள் கழித்து ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும். பிறகு, மேலும் 30 அல்லது 60 நிமிடங்கள் கழித்து மீண்டும் ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்படும். இதன் மூலம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உடல் எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைப் பரிசோதிக்க முடியும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உடலில் உள்ள செல்கள் எடுத்துக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் அது இன்சுலின் எதிர்ப்பு (insulin resistance) எனப்படும். இந்த நிலைக்கு பொதுவாக அறிகுறிகள் இருக்காது. இதைக் கண்டறிய முக்கியமான பரிசோதனை HbA1C எனும் சோதனை.

கடந்த மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவின் சராசரி அளவை இந்தப் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இன்சுலின் எதிர்ப்பு, நாள்பட்ட நீரிழிவு நோய்க்கு இட்டுச் செல்லும். உடல் பருமன், அதிக வயிற்று சுற்றளவு, அதிக ரத்த அழுத்தம், வெறும் வயிற்றில் பரிசோதிக்கும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஆகியவை இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகின்றன என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
ஆய்வு முறைகள்
சமையல் முறையும் சர்க்கரை அளவும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆய்வில் 25-45 வயதுக்குட்பட்ட, அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட 38 பேர் பங்கேற்றனர். இவர்களின் சராசரி உடல் நிறை குறியீடு (BMI) 23க்கும் அதிகம். (உடலிலுள்ள கொழுப்பின் அளவைக் கொண்டு ஒரு நபர் உடல் எடை அதிகமானவரா இல்லையா என்று கூறுவது BMI எனும் அளவீடு. பொதுவாக 25க்கும் அதிகமான பி.எம்.ஐ கொண்டவர்கள் உடல் பருமன் அல்லது அதிக எடை கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.)

இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். இரண்டு குழுக்களுக்கான உணவுகளும் ஒரே மாதிரியான கலோரி மற்றும் ஊட்டச்சத்து கொண்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ஆனால் சமையல் முறைகளில் கணிசமாக வேறுபாடுகள் இருந்தன.

ஒரு குழு வறுத்த, பொரித்த மற்றும் கிரில் செய்யப்பட்ட உணவுகளை உட்கொண்டது. மற்றொரு குழு கொதிக்க வைத்த, ஆவியில் வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டது. ஒரே மாதிரியான ஊட்டச்சத்துகளைக் கொண்டபோதிலும் இந்த உணவுகள் அவற்றின் AGE உள்ளடக்கத்தில் பெரிதும் வேறுபட்டன.

சிக்கன் பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகள் உணவகங்களில் இருந்து பெறப்பட்டன. இவை பொதுவாக உட்கொள்ளப்படும் உணவுகளைப் பிரதிபலிக்கின்றன.

பன்னிரண்டு வாரக் காலத்தில், பங்கேற்பாளர்களின் இன்சுலின் உணர்திறன், கொழுப்பு விவரங்கள், தொற்றுக் குறியீடுகள் அளவிடப்பட்டன. வெவ்வேறு காலகட்டத்தில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

 
ஆய்வின் முடிவுகள் கூறியது என்ன?

ஆய்வின் மிக முக்கியமான விளைவு குறைந்த AGE உணவை உட்கொண்டவர்களிடையே இன்சுலின் உணர்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அதாவது ரத்தத்தில் இருந்து சர்க்கரையை செல்களுக்குப் பயன்படுத்துவது அதிகரித்தது.

இந்த ஆய்வில் மேலும் சில விசயங்கள் தெரிய வந்தன.

கணையத்தில் உள்ள பீட்டா-செல்கள், இன்சுலினை உற்பத்தி செய்து உடலில் செலுத்துகிறது. குறைந்த AGE கொண்ட, அதாவது வேக வைத்த உணவை உட்கொண்டவர்களின் பீட்டா செல் செயல்பாடு, அதிக AGE கொண்ட, அதாவது வறுத்த, பொரித்த உணவை உட்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது அதிகமாக இருந்தது. அதாவது உடலில் இன்சுலின் செயல்பாடு மேம்பட்டது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சமையல் முறைகள் மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் இயற்கையான நிகழ்வின் காரணமாகவும் AGE உருவாகின்றன. ஆனால் இவை அளவுக்கு மீறி இருந்தால் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. வேக வைத்த உணவுகளைச் சாப்பிடும்போது, உடலில் உள்ள AGE-இன் அளவு, வறுத்த, பொரித்த உணவுகளைச் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைகிறது என்பதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

“குறைந்த-AGE கொண்ட உணவுகளைச் சாப்பிட்டவர்களுக்கு உடலில் உள்ள AGE சராசரியாக 3.2 µg/ml குறைந்தது. அதிக-AGE உணவை உட்கொண்டவர்களுக்கு வெறும் 0.8 µg/ml மட்டுமே குறைந்தது” என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

 
'நீண்ட நேரம் அதிக வெப்பத்தில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்'
சமையல் முறையும் சர்க்கரை அளவும்

பட மூலாதாரம்,MDRF

படக்குறிப்பு, மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா

இந்த ஆய்வின் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான நீரிழிவு மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா, நீண்டநேரம் அதிக வெப்பத்தில் சமைப்பது உணவில் AGE கூறுகள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் என்கிறார்.

"பொரித்தல், வறுத்தல், வேக வைத்தல், என இந்திய உணவுகள் பல விதமான முறைகளில் சமைக்கப்படுகின்றன. நீண்ட நேரம் சமைக்கப்படும், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுகளில் dietary AGE உருவாகும். இதை இந்திய சமையலறைகள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பொரித்தல் மற்றும் நேரடி தீயில் சமைக்கும்போது நீண்ட நேரம் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார்.

குறைந்த வெப்பத்திலான திறந்த சமையல் முறையைவிட, பிரஷர் குக்கர் போன்ற மூடிய நிலையில் சமைக்கப்படும் உணவுகளில் அதிக AGE இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

“இந்த ஆய்வில் பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர், திறந்த சமையல் போன்ற சமையல் முறையின் வித்தியாசங்களை ஆராயவில்லை. எனினும், ஒன்றைக் கூற முடியும், திறந்த சமையல் முறையில் சமைப்பதைவிட பிரஷர் குக்கர் போன்று பாத்திரங்களை மூடி அழுத்தத்தையும் வெப்பத்தையும் அதிகரிக்கும்போது, அதில் அதிக AGE உருவாக வாய்ப்புண்டு. அதிக வெப்பத்தில் பிரஷர் குக்கரில் சமைக்கப்படும் அரிசி திறந்த சமையல் முறையில் சமைப்பதைவிட அதிக AGE கூறுகளைக் கொண்டிருக்கும்” என்று விளக்கினார்.

இந்த ஆய்வு 25முதல் 45 வயதுக்குள்ளான ஆண், பெண்களிடம் நடத்தப்பட்டது. பொதுவாக அவர்கள் சாப்பிடும் உணவுகள் குறித்துக் கேட்டறிந்த பிறகு, இரண்டு குழுக்களுக்கான உணவுப் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.

"வயது வாரியாக எவ்வளவு AGE கூறுகளை ஒருவர் உட்கொள்ளலாம் என்று வரையறுக்கப்படவில்லை. ஆனால் அனைவரும் பொதுவாக குறைந்த AGE கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது" என்கிறார் அஞ்சனா.

"இந்த முதல் கட்ட ஆய்வில் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளே பிரதானமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. முறுக்கு, தட்டை, வடை போன்ற எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பல உணவுகள் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை. பல வகையான உணவு வகைகளுக்கான AGE கணக்கிடும் ஆய்வுகள் தேவை" என்கிறார் மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

அறிவியல்: மூளையில் மின்னணு சாதனம் பொருத்தி மன அழுத்தம், மறதிக்கு சிகிச்சை

1 month 4 weeks ago
மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜெனைன் மச்சின்
  • பதவி, பிபிசி நியூஸ், கேம்ப்ரிட்ஜ்
  • 24 அக்டோபர் 2024, 04:41 GMT
    புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

இதயப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் இதயமுடுக்கி (pacemaker) முதல் செவிப்புலனை மேம்படுத்த உதவும் கோக்லியர் சாதனம்(cochlear) வரை சிறிய வகை மின்னணு சாதனங்களை உடலில் பொருத்துவதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ஏற்கெனவே மாறியுள்ளது.

தற்போது, கேம்பிரிட்ஜில் உள்ள ஆரோக்கியம், அறிவியல் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த குழுவினருக்கு, மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டுபிடிக்கப் பல கோடிகள் நிதி வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சுற்றியுள்ள ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் கண்டுபிடிப்புகளை சோதனை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்படும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மறதி, மன அழுத்தம் மற்றும் நாள்பட்ட வலியை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கேம்பிரிட்ஜ் குழுவிலுள்ள முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸ் இந்த அறிவிப்பு தனது புதிய திட்டத்தை ஆதரிக்கும் என்று நம்புகிறார்.

மனநலப் பிரச்னைகளை சரி செய்ய உதவும் தொழில்நுட்பம்

ஐந்தில் நான்கு பேருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நரம்பியல் மற்றும் மனநலப் பிரச்னைகள் எனச் சிலவற்றை கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் மதிப்பிட்டுள்ளது. அவற்றுக்கு சிகிச்சைகளை வழங்க உதவும், அளவில் சிறிய கருவிகளை பேராசிரியர் ஜார்ஜ் மேல்லியராஸின் குழு ஆய்வு செய்து வருகிறது.

"சிகிச்சையே அளிக்க இயலாத, அல்லது மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூளைக்குள் பொருத்தும் சிப் போன்ற சாதனங்கள் மூலம் (Brain Implants) ஒரு புதிய சிகிச்சையை வழங்க முடியும்" என்று பேராசிரியர் மேல்லியராஸ் விளக்குகிறார்.

"அத்தகைய நோய்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் நாம் இங்கே குறிப்பிடுவது, மூளை மற்றும் முதுகுத் தண்டு காயங்கள், நடுக்குவாதம் (Parkinson), மறதி, மன அழுத்தம், அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD) பற்றியது. மேலும் இது முடக்கு வாதம் (Rheumatoid Arthritis), முதல் நிலை நீரிழிவு நோய்களுக்கும் (Type 1 diabetes) சிகிச்சை அளிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.

மேலும், இதுவொரு பயனுள்ள ஆய்வு என்றும் இதில் ஈடுபடுவது மிகுந்த ஊக்கமளிப்பதாகவும் அவர் குறுப்பிட்டார்.

 
நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றம்
மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம்,MARTIN GILES/BBC

படக்குறிப்பு, பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் வகையில் இந்த சிகிச்சை அமையும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் பேராசிரியர் ஜார்ஜ்

உடலில் பொருத்தப்படும் இந்தச் சாதனங்கள் சிறிய மின்சமிக்ஞைகளை அனுப்புவதன் மூலம் நம் உடலில் நியூரான்கள் செயல்படும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நியூரான்கள் என்ற நரம்பு செல்கள் நமது உடலுக்கும் மூளைக்கும் இடையே ஒரு மின் சமிக்கை மூலம் செய்திகளைக் கடத்துகின்றன.

அவை, நம்முடைய நடை, பேசுதிறன், உணவு உட்கொள்ளுதல் மற்றும் சுவாசிக்கும் முறைகளைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த நியூரான்கள் வேலை செய்யும் முறையை மாற்றுவதன் மூலம் வலியைக் குறைக்கவோ, மூளையின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் தூண்டவோ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

"மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நடுக்கத்தைக் குறைக்க முடியும் என்று நமக்கு ஏற்கெனவே தெரியும்," என்று கூறும் பேராசிரியர் மேல்லியராஸ், "ஆனால், இந்த வகையான தொழில்நுட்பத்தை மேம்படுத்த பிரிட்டன் முழுவதும் உள்ள பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்துறையினரை ஒரு குழுவாக ஒருங்கிணைக்க வேண்டும்," என்கிறார்.

 
சவால்கள் என்ன?
மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம்,MARTIN GILES/BBC

படக்குறிப்பு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் மருத்துவர் சௌகுன் டோங்

இந்தக் கருவியின் அளவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது.

"இந்த சாதனத்தில் இருந்து வெளிவரும் மின்முனைகள் ஒரு நியூரானைவிட பெரியதாக இருக்கக்கூடாது. இந்த அளவானது மனித முடியின் விட்டத்தைவிட ஐந்து மடங்கு சிறியது," என்று மேற்கோள் காட்டுகிறார் பேராசிரியர் மேல்லியராஸ்.

"ஆனால், இந்தக் கருவி மிகச் சிறியதாக இருந்தால் அது உடலுடன் தொடர்பை ஏற்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். மருத்துவர்கள் இதை நோயாளிகளின் உடலில் பொருத்துவதில் சிரமங்களை உணரலாம். இரண்டு பிரச்னைகளுக்கும் சமமாகத் தீர்வு காணும் வகையில் இது அமைய வேண்டும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேலும், உள்ளீட்டு சாதனம் அதிக அளவில் தயாரிக்கப்படுவதையும், குறைந்த செலவுடன் இருப்பதையும், நோயாளிகளுக்கு முடிந்த வரை பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதையும் அவர்கள் நிச்சயமாக உறுதி செய்ய வேண்டும்.

 
உந்துதல் சமிக்ஞைகளை உருவாக்கும் கருவி
மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம்,UNIVERSITY OF CAMBRIDGE

படக்குறிப்பு, நரம்புடன் இணைக்கப்பட்டிருக்கும் உள்ளீட்டு சாதனம்

மருத்துவ உள்ளீட்டு சாதனங்களை (Medical implants) பொருத்துதல் இந்தப் பொறியாளர்களுக்குப் புதிதல்ல. மருத்துவர் சௌகுன் டோங் பலவீனமான நரம்புகளைச் சேதப்படுத்தாமல் அவற்றைச் சுற்றிக் கொள்ளும் சாதனத்தை உருவாக்கி வருகிறார்.

கண்ணாடிக் குமிழில், சிறிய ரிப்பன் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொருளை ஆராய்ச்சி செய்து வருகிறார் டோங். இது தங்கத்தால் கோடிடப்பட்ட பாலிமரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் மின்சாரம் செலுத்தும்போது, இது தன்னிச்சையாகச் சுருண்டு கொள்கிறது. இந்தக் கருவிகள், சிக்கலான அறுவை சிகிச்சையின்போது நரம்புகளில் இருந்து வரும் உந்துதல் சமிக்ஞைகளைக் கண்காணிக்கவும், அந்த நரம்பைத் தூண்டவும் உதவும்.

 
மனநலப் பிரச்னைகளை சரிசெய்ய மின்னணு சாதனங்கள்

பட மூலாதாரம்,MARTIN GILES/BBC

படக்குறிப்பு, பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சக்தி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது

பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மின்சாரம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மனச் சோர்வு, இருதுருவ மன நோய் ( bipolar disorder) ஆகியவற்றுக்குரிய சிகிச்சையான எலெக்ட்ரோகான்வல்சிவ் தெரபி (ECT) பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

ஆனால், உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்த அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்பட வேண்டும் என்றாலும், அந்த நோய்களுக்கான ஒரே ஒருமுறை வழங்கும் சிகிச்சையாக அது நன்மை அளிக்கும் என நம்புகிறார் மேல்லியராஸ்.

உடலில் பொருத்தப்படும் சாதனங்கள் மூளையைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அசாதாரண செயல்பாடுகளைக் கண்டறிந்து தேவைப்படும்போது மென்மையான முறையில் சரிசெய்யலாம் என்கிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகள், கடுமையான மனச் சோர்வுக்கு சிகிச்சையளிக்க மூளையில் உள்ளீட்டு சாதனங்களைப் பொருத்துவதன் மூலம் தீர்வு காணலாம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தன.

ஏ.ஆர்.ஐ.ஏ(ARIA) என்ற அரசு ஆதரவு நிறுவனம், கேம்ப்ரிட்ஜ் உடன்பாட்டிற்கு மூன்று ஆண்டுகள் நிதியுதவி செய்யவுள்ளது.

இந்தக் காலகட்டத்திற்குள், புதிய சிகிச்சை முறை குறித்த ஆய்வுகளில் அவர்கள் நெடுந்தூரம் வந்துவிட முடியும் என்று பேராசிரியர் மேல்லியராஸ் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மனித குடலில் வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்

2 months 2 weeks ago
வைரஸ் vs பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஆம்பர் டான்ஸ்
  • பதவி,‎
  • 1 அக்டோபர் 2024, 08:32 GMT
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன?

நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக்டீரியாக்களை உண்ணக்கூடிய நுண்ணுயிரிகளின் தொகுப்பு. மனித செரிமான மண்டலத்திற்குள் இத்தகைய வைரஸ்கள் பில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் இருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் ஃபேஜியோம்.

இந்த ஃபேஜியோம் தொடர்பான அறிவியல் புரிதல் சமீபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் கொலராடோ அன்சுட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாக்டீரியாலஜிஸ்ட் ப்ரெக் டியூர்காப். அவற்றின் மகத்தான பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேலும், சரியான பாக்டீரிய உண்ணி வைரஸை, அதாவது ஃபேஜை (phage) பயன்படுத்தினால் அல்லது குறிவைத்து சிகிச்சை மேற்கொண்டால், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

“பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமே இருக்கும்” என்று ஸ்டான்ஃபோர்ட் மெடிசனின் தொற்றுநோயியல் மருத்துவரும் ஆய்வாளருமான பால் பொலிக்கி கூறுகிறார்.

ஆனால், இப்போதைக்கு மனித குடல் நாளப் பகுதியை எத்தனை பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் ஆக்கிரமித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒன்று அல்லது அதற்கும் குறைவாக இவை இருக்கக்கூடும்.

 
பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் நபருக்கு ஏற்ப மாறுபடுமா?
வைரஸ் vs பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாக்டீரிய உண்ணி வைரஸின் மரபணுக்களை கொண்ட பாக்டீரியாக்களும் குடலில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸ்களை தீவிரமாக உற்பத்தி செய்யவில்லை. அந்த பாக்டீரியாக்களின் மரபணுத்தொகுதியில் பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் டி.என்.ஏ.களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணம்.

இன்னும் நிறைய அடையாளம் காணப்படாத ஃபேஜ்கள் இருக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஃபேஜியோமின் “இருண்ட பொருள்” என்று அழைக்கின்றனர். இது வரையிலான ஃபேஜ் ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி, இந்த வைரஸ்கள் மற்றும் அவை சார்ந்து வாழும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதாக இருந்துள்ளன.

நல்ல ஃபேஜ்களின் தரவுத்தளத்தில், சுமார் 1,40,000க்கும் மேற்பட்ட ஃபேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட அளவுதான். அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழக கல்லூரியின் நுண்ணுயிரியலாளர் கொலின் ஹில், "பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் பன்மைத்துவம் அசாதாரணமானது” என்கிறார்.

விஞ்ஞானிகள் மனித மலத்தின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு வரிசைகளைப் பிரித்தறிவதன் மூலம் இந்த ஃபேஜ் வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள். அதில்தான், ஆய்வாளர்கள் க்ராஸ்ஃபேஜ் (crAsspage) எனப்படும் குடலில் காணப்படும் மிகப் பொதுவான ஃபேஜ் குழுவைக் கண்டறிந்தார்கள்.

குடலில் பொதுவாகக் காணப்படும் க்ராஸ்ஃபேஜ்கள் மனித ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை குடல் பாக்டீரியாவின் பொதுவான குழுவாக அறியப்படும் பாக்டீராய்டுகளை (Bacteroides) பாதிப்பதால், அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறார் ஹில்.

 
வைரஸ் vs பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாக்டீராய்டுகளை பாதிக்கும் பிற பொதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் குபாஃபேஜ் (குடல் நாள பாக்டீராய்டுகளை தாக்கும் ஃபேஜ்) மற்றும் லோவிஃபேஜ் (பல வைரஸ் மரபணுக் கூறுகள்) ஆகியவை அடங்கும்.

இத்தகைய பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் தொகுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நுண்ணுயிரியல் துறையின் 2023ஆம் ஆண்டு மதிப்பாய்வில் (2023 Annual Review of Microbiology) ஹில் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் விவரித்ததன்படி, வயது, பாலினம், உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் பொறுத்து, இந்தத் தொகுப்பில் மாற்றங்கள் இருக்கும்.

வைரஸ் - பாக்டீரியா உறவு

ஃபேஜ் எனப்படும் இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாவை பாதித்து, சில நேரங்களில் அவற்றைக் கொல்கின்றன என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி, வைரஸ், பாக்டீரியா இடையே விவரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலான உறவு இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நாங்கள் முதலில், ஃபேஜ்களும் பாக்டீரியாக்களும் சண்டையிடுகின்றன என்று நினைத்தோம். ஆனால், அவையிரண்டும் எதிர்த்திசையில் இருக்கும் அதேவேளையில், ஒன்றுக்கொன்று நல்லுறவையும் பேணுகின்றன.”

புதிய மரபணுக்களை கொண்டு வருவதன் மூலம் ஃபேஜ்கள் பாக்டீரியாவுக்கு பயனளிக்கின்றன. ஒரு பாக்டீரிய உண்ணி வைரஸ் துகள் ஒரு பாக்டீரியாவுக்குள் ஒன்றிணையும்போது, அந்த வைரஸ் சில நேரங்களில் அதன் புரதக்கூட்டிற்குள் அதன் சொந்த மரபணுப் பொருட்களுடன் சேர்த்து பாக்டீரியாவின் மரபணுக்களையும் அடைத்து வைத்துக்கொள்ளும்.

பின்னர், அந்த மரபணுக்களை ஒரு புதிய ஒம்புயிரி (Host) பாக்டீரியாவாக மாற்றுகிறது. இப்படி தற்செயலாகத் தனது புரதக்கூட்டில் அது சேகரித்த மரபணுக்கள் உதவிகரமாகவும் இருக்கும் என்கிறார் டியூர்காப். ஏனெனில், அவை ஆன்டிபயாடிக் பொருட்களுக்கு எதிர் செயலாற்றும் திறனையும், ஒரு புதிய பொருளை ஜீரணிக்கும் திறனையும் குடலுக்கு வழங்கக்கூடும்.

 
வைரஸ் vs பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாக்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரத்தில் அவற்றைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஹில் கூறுகிறார். பாக்டீராய்டுகள் எனப்படும் பாக்டீரியாக்கள், தங்கள் வெளிப்புற மேற்பரப்பில் பல வகையான பூச்சுகளைக் கொண்டுள்ளன. இந்தப் பூச்சுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பது மற்றும் செரிமான மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகல் இருந்து பலவாறான நன்மைகளை செய்கின்றன.

ஆனால், “க்ராஸ்ஃபேஜ் வகையைச் சேர்ந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இந்தப் பூச்சுகளை அடையாளம் கண்டுவிடக்கூடும். ஆகையால் பாக்டீராய்டுகள் தங்கள் வெளிப்புற பூச்சுகளைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது,” என்கிறார் ஹில்.

இதன்விளைவாக, குடலில் வெவ்வேறு வகை வெளிப்புற பூச்சுகளைக் கொண்ட பாக்டீராய்டுகள் உள்ளன. அதோடு, குடலின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வகையிலும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இவற்றின் எண்ணிக்கை அமைகின்றன.

வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்

பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எல்லை மீறிப் போகாமல் பாக்டீரிய உண்ணி வைரஸ்களான ஃபேஜ்கள் தடுக்கின்றன.

நம் உடலிலுள்ள குடல் நாளம் காடுகளைப் போன்ற ஒரு சூழலியல் அமைப்பைக் கொண்டது. ஒரு காட்டில் வாழும் புலிகளும் ஓநாய்களும் எப்படி மான்களை வேட்டையாடுமோ, அதுபோல, ஃபேஜ் வைரஸ்கள் பாக்டீரியாக்களை வேட்டையாடுகின்றன. காட்டிற்கு புலிகளும் ஓநாய்களும் எப்படித் தேவையோ, அதேபோல, நம் குடலுக்கும் இந்த ஃபேஜ்கள் தேவை.

 
வைரஸ் vs பாக்டீரியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதில், வேட்டையாடிக்கும்(ஃபேஜ்கள்) இரைக்கும்(பாக்டீரியாக்கள்) இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும்போது, நமது செரிமான மண்டலத்தில், குடல் அழற்சி(IBS), குடல் எரிச்சல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடலில், வைரஸ்களின் பன்மைத்தன்மை குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குடல் நாள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேணுவதற்காக, அதற்கேற்ற உணவுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுவார்கள். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மருத்துவரீதியாக மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், பாக்டீரிய உண்ணி வைரஸ்களை சமாளிப்பது மருத்துவத்தில் மிகவும் நேர்த்தியான அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஹில் கூறுகிறார். அதாவது, வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களை விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இல்லாமல் போனால், “சில வகையான பாக்டீரியாக்கள் குடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அதனால், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல் வாயுப் பிரச்னை மற்றும் வயிறு வீக்கம் ஏற்படலாம்.” ஆகவே, நம் குடலின் சூழலியல் அமைப்பை நிர்வகிக்கும் டிரில்லியன் கணக்கான இந்த ஃபேஜ்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த சிறுவன் - என்ன நடந்தது?

2 months 3 weeks ago
மனித சதை உண்ணும் பாக்டீரியாவால் காலை இழந்த ஆந்திர சிறுவன் - என்ன நடந்தது?
மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் சிறுவன் காலை இழந்தானா?

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு, காலை இழந்த சிறுவன் கட்டுரை தகவல்
  • எழுதியவர், கரிகிபட்டி உமாகாந்த்
  • பதவி, பிபிசிக்காக
  • 30 செப்டெம்பர் 2024, 05:40 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

குறிப்பு: இந்த கட்டுரையின் விவரங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

ஆந்திர மாநிலம் பெஜவாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அந்த வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

ஆயிரக்கணக்கான வீடுகளையும், நூற்றுக்கணக்கான காலனிகளையும் மூழ்கடித்த வெள்ளம் முழுமையாக வடிந்தாலும், அதனால் ஏற்பட்ட சேறு இன்னும் குறையவில்லை.

பகலில் வெயில் சுட்டெரித்தாலும், இரவில் மழை பெய்தாலும் சேறு இன்னும் முழுமையாக அகலவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகள் அனைத்தும் அசுத்தமாக காட்சியளிக்கின்றன.

இதனால் நகரின் பல இடங்களில் நோய்கள் பரவி வருகின்றன. பலருக்கும் தொற்று மற்றும் காய்ச்சல் ஏற்படுவது அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் காரணமா?

இம்மாதத்தின் முதல் வாரத்தில் விஜயவாடாவை வெள்ளம் சூழ்ந்தபோது, என்டிஆர் மாவட்டத்தின் ஜக்கையாபேட்டை நகரிலும் ஏராளமான வீடுகள் நீரில் மூழ்கின.

மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் இந்த ஊரைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் உடலில் காயங்கள் ஏதுமின்றி ஆபத்தான பாக்டீரியாக்கள் நுழைந்தது மருத்துவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் சிறுவன் காலை இழந்தானா?

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு, சிறுவனின் உடலில் இ.கோலி மற்றும் கிளெப்சியெல்லா கிருமிகள் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

ஏழாம் வகுப்பு படிக்கும் பவ்தீப் என்ற 12 வயது சிறுவனின் வீட்டிலும் வெள்ளம் புகுந்துள்ளது.

வெள்ளம் வடியும் வரை குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தார். வீட்டில் உள்ள பொருட்கள் நனையாமல் இருக்க பெற்றோருக்கு உதவினார்.

வெள்ளம் வடிந்தபின் ஒருநாள் இரவில் பவ்தீப்பிற்கு சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவர் சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வழங்கினார், ஊசியும் செலுத்தினார். ஆனால், பவ்தீப்பிற்கு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போகவே, பரிசோதனையில் டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, இரு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீர் வெளியேறுவது தடைபட்டது. நான் சித்தார்த்தா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றேன்” என பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார்.

 
வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இப்பிரச்னை இல்லை என்று நாகராஜு கூறினார்
படக்குறிப்பு, வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இப்பிரச்னை இல்லை என்று நாகராஜு கூறினார்

அந்த மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பவ்தீப் விஜயவாடாவில் உள்ள அங்கூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவனுக்கு அரிதான 'நெக்ரோடைசிங் ஃபேசிடிஸ்' நோய் தாக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

சதை உண்ணும் பாக்டீரியா

இந்த நோயின் மற்றொரு பெயர் சதை உண்ணும் நோய்.

இந்த நோயை ஏற்படுத்திய பாக்டீரியா, பவ்தீப்பின் உடலில் புகுந்து தசைகளை தின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்காமல் இருக்க கடந்த 17-ம் தேதி சிறுவனின் தொடை வரை வலது கால் அகற்றப்பட்டது. இடது முழங்காலுக்கு அடியில் உள்ள திசுக்களில் 30 சதவிகிதத்தை கிருமிகள் உண்டதும் கண்டறியப்பட்டது.

இந்த நோய் பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிறது. ஆனால் பவ்தீப்பின் உடலில் எந்த வித காயமும் இல்லாமல் ஆபத்தான பாக்டீரியா எப்படி நுழைந்தது என்பது தெரியவில்லை. சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வரும் குழந்தைகள் நல மருத்துவர்களான வருண் குமார் மற்றும் ரவி ஆகியோர் பிபிசியிடம், பவ்தீப் சாக்கடை நீர் சுற்றியுள்ள பகுதியில் இருந்ததால் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பவ்தீப்பிற்கு இந்தப் பிரச்னை இல்லை என்றும், வெள்ளம் ஏற்பட்ட பின்னர் தான் பிரச்னை தொடங்கியதாகவும் நாகராஜு கூறினார்.

சிறுவனின் உடலின் பாகங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அவரது உடலில் இ.கோலி (E.coli) மற்றும் கிளெப்சியெல்லா (Klebsiella) கிருமிகள் நுழைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 
மருத்துவர் ஹரிஹரன்
படக்குறிப்பு, மருத்துவர் ஹரிஹரன்

இதுகுறித்து மருத்துவர்கள் ரவி, வருண்குமார் கூறுகையில், ‘‘இந்த கிருமிகளில் ஆபத்தான வகைகள் உள்ளன. அவற்றால்தான் கால்கள் வீக்கமடைகின்றன” என்றனர்.

"வெள்ள நீரில் கழிவுநீர் கலக்கிறது. அப்போது பாக்டீரியாவின் பரவல் அதிகமாகும். அப்போது உடலில் பாக்டீரியாக்கள் நுழைந்திருக்கலாம். மறுபுறம், பவ்தீப் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ஆன்டிபயாடிக் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்பட்டது. அவ்வாறு செய்வது ஆபத்தானது,'' என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பவ்தீப்பின் சிகிச்சைக்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பிபிசியிடம் சிறுவனின் தந்தை நாகராஜு தெரிவித்தார்.

சிறுவன் குணமடைய இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுவதாகவும், இதற்கிடையில் ஏற்படும் மருத்துவ செலவுக்கு நன்கொடையாளர்களின் உதவியை நாட உள்ளதாகவும் அவர் கூறினார்.

விஜயவாடாவில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு

விஜயவாடா நகரில் காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக விஜயவாடா நர்சிங் ஹோம் மற்றும் பாலிகிளீனிக்கின் மருத்துவர் ஹரிஹரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"விஜயவாடாவில் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் கனமழையால், நோயாளிகள் அதிகரித்துள்ளனர். இயற்கையாகவே ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காய்ச்சல் அதிகமாகிறது. ஆனால், இம்முறை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்கள், குறிப்பாக வெள்ளம் பாதித்த பகுதிகளில் மிதமான காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

விழிப்புணர்வு தேவை

விஜயவாடா அரசு மருத்துவமனை இணைப் பேராசிரியர் மருத்துவர் ஜோதிர்மயி, வெள்ள நீரில் நடந்து செல்லும் போதும், வெள்ளம் வடிந்த பின்னரும் மக்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

 
மருத்துவர் ஜோதிர்மயி
படக்குறிப்பு,மருத்துவர் ஜோதிர்மயி
  • நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகள் வெள்ளம் மற்றும் மழைக்காலங்களில் அதிக ஆபத்துள்ள நோயாளிகளாகக் கருதப்படுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • தண்ணீர் மற்றும் கழிவுநீரில் நனையாமல் கவனமாக இருக்க வேண்டும்.
  • காய்ச்சி ஆறவைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கவும். சுத்தமான சூடான உணவை உட்கொள்ள வேண்டும்.
  • மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • தொற்று நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.
  • கொசுக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேற்கண்ட முன்னெச்சரிக்கைகளை மருத்துவர் ஜோதிர்மயி பரிந்துரைத்தார்.

"மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன"

"வெள்ளம் வடிந்த பின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கருதி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் தயார் செய்துள்ளோம். ஆனால், அரசு மருத்துவ முகாம்கள் நடத்தி மருந்துகள் வழங்கியதால், பொது மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை" என்றார் ஜோதிர்மயி.

 
மனித சதையை உண்ணும் பாக்டீரியாவால் சிறுவன் காலை இழந்தானா?

பட மூலாதாரம்,NATIONAL HEALTH AUTHORITY

விஜயவாடா நகருடன் என்டிஆர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இம்மாதம் 2-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை 2 லட்சத்து 699 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டதாக பிபிசியிடம் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார துறை அதிகாரியான மருத்துவர் சுஹாசினி தெரிவித்தார்.

மொத்தம் 253 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

எங்கு, எப்போது யாருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சுகாதாரத் துறை தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நமது சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் நமது தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது எப்படி தெரியுமா?

2 months 4 weeks ago
தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ்-ஸ்கெல்லி
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 23 செப்டெம்பர் 2024, 10:58 GMT
    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

நம் தோலின் மேற்பரப்பில் பல நூறு கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்கள் வாழ்கின்றன. நமது ஆரோக்கியம் மற்றும் நலனில் அவை வகிக்கும் முக்கிய பங்கை சமீப காலமாக தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம்.

நமது தோலின் மேற்பரப்பின் ஒரு சதுர சென்டிமீட்டரை எங்கு ஸூம் செய்து பார்த்தாலும் அங்கு 10,000 முதல் 10 லட்சம் பாக்டீரியாக்கள் வரை இருக்கும். உங்கள் உடல் முழுவதும் ஒரு செழிப்பான நுண்ணுயிரிகளின் உலகமே உள்ளது. இது மிகவும் அருவருப்பானது என்று கூட தோன்றலாம்.

ஆனால் இதில் அருவருப்படைய ஒன்றுமேயில்லை.

ஏன் தெரியுமா?

நமது தோல் ‘மைக்ரோபயோட்டா’ நம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதற்கான ஆய்வு ரீதியான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே ஆன்டி-பாக்டீரியா சோப்புகளின் பக்கமே போகாதீர்கள்.

உங்கள் குடலில் வசிக்கும் நுண்ணுயிரிகள் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள், மற்றும் பிற ஒற்றை செல் உயிரினங்களின் இந்தக் குழுவின் பன்முகத்தன்மை, நீரிழிவு நோய் முதல் ஆஸ்துமா மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட நோய்களின் வரம்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.

 
தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நமது தோல் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு வாழ்விடத்தை வழங்குகிறது
நோய்க்கிருமிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்புக் கவசம்

இதே போன்று நமது தோலில் சவாரி செய்யும் நுண்ணுயிரிகள் நமக்கு நன்மை பயக்கும். இது நமது தோலின் மேற்பரப்பு வழியாக ஊடுருவி தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக முதல் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றன. அதுமட்டுமின்றி, அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில ரசாயனங்களை உடைக்கவும், நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கவும் அவை உதவுகின்றன.

நமது குடலுக்கு அடுத்தபடியாகத், தோலில் பாக்டீரியாக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். நமது வாய் அல்லது குடல் பகுதியில் பாதுகாப்பான, சூடான மற்றும் ஈரமான சூழல் இருக்கும். அதனை ஒப்பிடும்போது, நமது தோல், பாக்டீரியாக்களுக்கு உகந்த இடமாக இருக்காது என்று தோன்றலாம்.

“உடலின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பாக்டீரியாக்களுக்கு தோல் உகந்த சூழலாக இருக்காது,” என்று பிரிட்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் ஹுலிங் விரிவுரையாளர் ஹோலி வில்கின்சன் கூறுகிறார்.

“தோல் பகுதி வறண்ட, தரிசு பகுதியாக இருக்கும். வெளிச்சூழல்களுக்கு அதிகம் வெளிப்படும். தோலில் வாழும் பாக்டீரியாக்கள் இந்த அழுத்தங்களைச் சமாளிக்க பல லட்சம் ஆண்டுகளாகத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு தங்கள் தன்மையை மாற்றிக் கொண்டு உருவாகியுள்ளன," என்று அவர் விளக்குகிறார். மேலும், இந்தப் பரிணாமம் நமக்கு பல நன்மைகளை தந்துள்ளது.

அதே சமயம், நமது தோலின் அனைத்துப் பகுதிகளிலும் பாக்டீரியாக்கள் சமமாக வசிப்பதில்லை. பாக்டீரியாக்களுக்கு வசிக்க மிகவும் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன. உங்கள் நெற்றி, மூக்கு, அல்லது முதுகில் பஞ்சை வைத்து சாம்பிள் எடுத்து ஆய்வு செய்து பாருங்கள். இந்தப் பகுதிகளில் க்யூட்டிபாக்டீரியம் (Cutibacterium) என்ற வகை பாக்டீரியா நிறைந்துள்ளது என்பதை நீங்கள் கண்டறிவீர்கள்.

க்யூட்டிபாக்டீரியம் என்ற பாக்டீரியா இனம், நமது சரும செல்களால் உருவாக்கப்பட்ட எண்ணெயை உண்பதற்காக உருவாகியுள்ளது. இது, நமது உடலின் வெளிப்புற அடுக்கை ஈரப்பதமாக்குவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சில பாக்டீரியாக்கள் நமது சரும செல்களைத் தூண்டி, நீர் இழப்பைத் தடுக்கும் `sebum' உற்பத்தி செய்யத் தூண்டுகிறது
மனித-பாக்டீரியா உறவு

வெப்பத்தன்மை கொண்ட, வியர்வை அதிகம் சேரும் அக்குளில் பஞ்சை ஸ்வாப்பை பயன்படுத்தி ஒரு மாதிரியை எடுத்துப் பார்த்தால், அங்கு ஸ்டேஃபிளோகோகஸ், மற்றும் கோரினேபாக்டீரியம் ஆகிய பாக்டீரியாக்களைக் காணலாம்.

கால்விரல்களுக்கு இடையில் ப்ரோபியோனி பாக்ட்ரியம் என்ற இனத்தைச் சேர்ந்த பாக்டீரியா ஏராளமாக இருப்பதைக் காணலாம். அவற்றில் சில பரந்த அளவிலான பூஞ்சைகளுடன் சீஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.

கைகள் மற்றும் கால்கள் போன்ற தோலின் வறண்ட பகுதிகள், பாக்டீரியாக்கள் வாழ உகந்த சூழலாக இருக்காது. எனவே, இங்கு வாழும் நுண்ணுயிரி இனங்கள் இங்கு அதிக காலம் தங்க முனைவதில்லை.

இந்த நுண்ணுயிரிகளும் மனிதர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு வகையான கூட்டுவாழ்வு தொடர்புகளை உருவாக்கியுள்ளனர். நமது தோலில் வசிக்கும் பாக்டீரியா, பூஞ்சை, மற்றும் ‘மைட்’ எனும் சிறு பூச்சிகள் தோலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் உயிர் வாழ்கின்றன. அதே சமயம் நாமும் இந்த நுண்ணுயிரிகளின் இருப்பை சார்ந்துள்ளோம். அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிடுகின்றன. அவை பெருகுவதைத் தடுக்க உதவுகின்றன.

 
இளமையான தோற்றத்தைத் தரும் பாக்டீரியாக்கள்

"இந்த பாக்டீரியாக்கள் அனைத்தும் ஏற்கனவே நம் தோலில் இருப்பதால், நோய்க்கிருமிகள் ஊடுருவுவது மிகவும் கடினம்," என்று வில்கின்சன் கூறுகிறார்.

தோல் பாக்டீரியாக்கள் நோய் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் ரசாயனங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவற்றுக்கு எதிராக போரை நடத்தும், அல்லது அவற்றை நேரடியாகக் கொல்லும். எடுத்துக்காட்டாக, ஸ்டஃபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் (Staphylococcus epidermidis) மற்றும் ஸ்டஃபைலோகாக்கஸ் ஹோமினிஸ் (Staphylococcus hominis) ஆகிய பாக்டீரியா இனங்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளையும் சார்ந்திருக்கக் கூடியவை. தோல் நோய்த்தொற்றுகளின் பொதுவான காரணியான ஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியா இனத்தைத் தடுக்க இந்த இரண்டு பாக்டீரியா இனங்களும் நுண்ணுயிர எதிர்ப்பு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.

சில விஞ்ஞானிகள், நமது குடல் நுண்ணுயிரியைப் போலவே, தோல் நுண்ணுயிரிகளும் குழந்தை பருவத்தில் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் ‘பயிற்சி’ செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றும், எந்த நுண்ணியிரியைத் தாக்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதைக் கற்பிப்பதாகவும் நம்புகிறார்கள். என்வே தோலில் உள்ள சில பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மையால் ஒவ்வாமைகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தோல் நுண்ணுயிரிகள் மற்ற முக்கியச் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. உதாரணமாக, சில பாக்டீரியாக்கள் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, நமது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதன் மூலம் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

நச்சுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள் உள்ளே வருவதைத் தடுக்கவும், நீர்ச் சத்து வெளியேறுவதைத் தடுக்கவும், நமது தோல் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதன் மேல்புறம் எளிதில் ஊடுருவக்கூடிய வகையில் உள்ளது. மேல் அடுக்கு ‘ஸ்ட்ராட்டம் கார்னியம்’ (stratum corneum) என்று அழைக்கப்படுகிறது. கார்னியோசைட்டுகள் எனப்படும் இறந்த செல்களில் உருவாகிறது. இது லிப்பிடுகள் எனப்படும் கொழுப்பு மூலக்கூறுகளுடன் அமைந்துள்ளது.

"தோலின் மேல் அடுக்கு மிகவும் கடினமானது, நீர் புகாதது. அதனால் தான் நாம் மழையில் செல்லும்போது நம் தோல் கரைவதில்லை," என்கிறார் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவத்தின் பேராசிரியரான கேத்தரின் ஓ'நீல்.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல் அனைத்தும் நமது தோலின் நுண்ணுயிரியை பாதிக்கும்

ஸ்ட்ராட்டம் கார்னியத்திற்கு அடியில், கெரடினோசைட்டுகள் எனப்படும் நேரடி தோல் செல்கள் அடுக்கடுக்காக இருக்கும். இந்தத் தோல் செல்களுக்கு இடையே சிறிய இடைவெளிகள் உள்ளன. இவற்றின் மூலம் நீர் கசியும். இதைத் தடுக்க, கெரடினோசைட்டுகள் லிப்பிட்களை (கொழுமியம்) உருவாக்குகின்றன. இது ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.

"இது ஒரு செங்கல், சிமெண்ட் அமைப்பை போன்றது," என்று வில்கின்சன் கூறுகிறார். "உங்கள் செல்களுக்கு இடையில் இந்த லிப்பிடுகள் இருக்கும். அவை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்திருக்கும் பசை போல செயல்படுகின்றன," என்கிறார் அவர்.

இந்தத் தோல் அமைப்பில் பாக்டீரியாக்களின் பங்கு என்ன?

நமது தோலில் வாழும் சில பயனுள்ள பாக்டீரியாக்கள் லிப்பிட்களை தாங்களே உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அதிகக் கொழுப்புகளை உற்பத்தி செய்ய நமது சரும செல்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

எடுத்துக்காட்டாக, க்யூட்டிபாக்டீரியம், லிப்பிட் நிறைந்த சருமத்தை உற்பத்தி செய்ய தோலைத் தூண்டுகிறது. இது நீர் இழப்பைக் குறைக்கிறது, ஈரப்பதத்தை அதிகரிக்கிறது.

முகப்பரு முதல் பொடுகுத் தொல்லை வரை

ஒருவேளை தோல் நுண்ணுயிரியின் மென்மையான சமநிலை சீர்குலைந்தால் என்ன நடக்கும்?

இந்த நிலையை தோல் ‘டிஸ்பயோசிஸ்’ என்பார்கள். இதனால் அடோபிக் டெர்மடிடிஸ் (ஒரு வகை எக்ஸீமா - eczema - எரிச்சல், வறண்ட தோல் ஆகிய பிரச்னைகள்) முதல் ரோசாசியா என்ற முகப்பரு மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் பிரச்னைகள் ஏற்படும்.

உச்சந்தலையில் பொடுகு இருப்பது கூட ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சை இனத்துடன் தொடர்புடையது. Malassezia furfur மற்றும் Malassezia globosa ஆகிய பூஞ்சை இனங்கள் ‘ஒலிக் அமிலம்’ எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இது உச்சந்தலையில் உள்ள ஸ்ட்ராட்டம் கார்னியம் செல்களைத் தொந்தரவு செய்கிது, அரிப்பை ஏற்படுத்துகிறது.

இருப்பினும், இதுபோன்ற சந்தர்பங்களில், நோய் நிலை தோல் நுண்ணுயிரிகளால் உண்டாகிறதா அல்லது நோயின் விளைவாக தோல் நுண்ணுயிரி மாறியதா என்பதை நிறுவுவது கடினம்.

 
நமக்கு வயதான தோற்றம் ஏற்படுவது ஏன்?

பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு மோசமான விளைவு, தோல் வயதான தோற்றம் பெறுவது.

நமக்கு வயதாகும்போது, தோலில் வாழும் பாக்டீரியாக்களின் வகைகள் மாறுகின்றன. நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் நீர் வற்றாமலும் வைத்திருக்க உதவும் ‘நல்ல’ பாக்டீரியா இனங்கள் குறையும். அவற்றுக்குப் பதிலாக தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமி பாக்டீரியாக்கள் சருமத்தில் அதிக அளவில் உருவாகும். இவை தோலின் குணப்படுத்தும் தன்மையில் தாக்கங்களை ஏற்படுத்தும்.

"பொதுவாக, வயதானவர்கள் வறண்ட சருமத்தைக் கொண்டுள்ளனர். இது கொழுப்பு உற்பத்திக்கு உதவும் பாக்டீரியா வகைகள் குறைவதால் ஏற்படும் நிலை," என்று வில்கின்சன் கூறுகிறார். "இது தோலில் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது. ஏனெனில், இது தோலின் இறுக்கமான நிலையை மாற்றி, அதனைத் தளர்வடைய வைக்கிறது. வயதானவர்கள் சருமத்தின் உறுதியான தன்மையை இழக்க நேரிடுவதால், தன்னிச்சையான காயம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்," என்கிறார் அவர்.

துரதிருஷ்டவசமாக, தீங்கு விளைவிக்கும் தோல் பாக்டீரியாக்கள் காயம் ஆறுவதைத் தாமதப்படுத்தக் கூடும். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தோல் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியல் பேராசிரியரான எலிசபெத் க்ரைஸின் ஆராய்ச்சியில், காயமடைந்த எலிகளின் தோலில் நல்ல நுண்ணுயிரி இல்லாத பட்சத்தில் அவை குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்பதைக் காட்டுகிறது.

தோல், பாக்டீரியா, ஆரோக்கியம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தோலில் உள்ள பாக்டீரியா இனங்களின் சமநிலை, சருமத்தின் தோற்றத்தை பாதிக்கிறது

இதற்கிடையில், ஹல் யார்க் மருத்துவப் பள்ளியில் வில்கின்சனின் சக ஊழியர்களின் ஆய்வு, ஒரு நபரின் நாள்பட்ட காயம் குணமாகுமா இல்லையா என்பது தோல் பாக்டீரியாக்களை சார்ந்திருப்பதாக காட்டுகிறது. தோலின் பாக்டீரியா அளவை வைத்து இதனை கணித்து விட முடியும் என்கின்றனர்.

நாள்பட்ட, குணமடையாத காயங்கள் உயிருக்கு ஆபத்தான தோலின் நிலையாகும். இந்தப் பிரச்னை நான்கு நீரிழிவு நோயாளிகளில் ஒருவரையும், 65 வயதுக்கு மேற்பட்ட 20 பேரில் ஒருவரையும் பாதிக்கிறது.

"எதிர்காலத்தில் எந்த நோயாளிகளுக்கு குணமடையாத காயங்களை உருவாகும் அபாயம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கும், அது வருவதற்கு முன்பே வருமுன் காக்கும் தலையீட்டை வழங்குவதற்கும் இதுபோன்ற உத்திகளைப் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறோம். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் கால் நீக்கப்பட வேண்டிய நிலை அல்லது மிகவும் மோசமான தொற்று நோயை உருவாக்கும் சூழலில் இருந்து மீட்கலாம்," என்று வில்கின்சன் கூறுகிறார்.

புற ஊதா கதிர்வீச்சு அபாயத்தை பாக்டீரியாக்கள் தடுக்குமா?

சில ஆய்வுகள் தோல் நுண்ணுயிரிகள் உண்மையில் தோலின் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளன.

புற ஊதா கதிர்வீச்சின் (ultraviolet radiation) சில தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து தோல் நுண்ணுயிரி நம்மைப் பாதுகாக்கும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. புற ஊதா கதிர்வீச்சு, தோலைத் தாக்கும் போது அது டி.என்.ஏ-வைச் சேதப்படுத்தும். இருப்பினும், தோல் செல்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு பொறிமுறையைக் கொண்டுள்ளன.

"புற ஊதா கதிர்வீச்சு தோலைத் தாக்கும் போது. நுண்ணுயிரிகள் பெருகுவதை நிறுத்திவிடுகின்றன. சேதமடைந்த செல்களை அவை சரிசெய்ய முனைகின்றன," என்று ஓ'நீல் கூறுகிறார். "அதைச் சரிசெய்ய முடியாவிட்டால், செல்கள் தாமாகவே அழிந்துவிடும்," என்கிறார் அவர்.

இதற்கு நேர்மாறாக, ஒரு ஆய்வில், தோலில் இருந்து நுண்ணுயிர் நீக்கப்பட்டால், சேதமடைந்த டி.என்.ஏ-வைக் கொண்டுள்ள செல்கள் தொடர்ந்து பெருகிகின்றன என்று கண்டறியப்பட்டது என்கிறார் ஓ'நீல்.

"இந்தச் செயல்முறை தான் புற்றுநோய் போன்ற கட்டிகளுக்கு எதிரான மிகவும் முக்கியமான பாதுகாப்பு பொறிமுறை," என்று ஓ'நீல் கூறுகிறார். "மேலும் இதில் தெளிவாக நுண்ணுயிர் ஒரு பெரிய பகுதியாக செயல்படுகிறது," என்கிறார்.

குடல் ஆரோக்கியம் தோலின் தோற்றத்தை பாதிக்குமா?

தோல் நுண்ணுயிரிகள் குடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, தோல் காயங்கள் குடல் நுண்ணுயிரியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுக்கும், சமீபத்திய ஆய்வின்படி, இது ஒரு நபருக்கு குடல் அழற்சியை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. தோல் நுண்ணுயிரிகளின் பூஞ்சை இனமான 'Malassezia restricta’, ‘கிரோன்’ என்னும் குடல் அழற்சி நோயுடன் தொடர்புடையது மற்றும் பெருங்குடல் அழற்சியை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

"குடல்-தோல் இரண்டுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மோசமான உணவுப் பழக்கம் கொண்டிருப்பவர்கள் மோசமான சருமத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் நமது சரும நுண்ணுயிரியில் ஏதேனும் சமநிலை பாதிக்கப்பட்டால் அது நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்ற எண்ணம் முற்றிலும் தவறு," என்கிறார் பெர்ன்ஹார்ட் பேட்ஸோல்ட். இவர் எஸ்-பயோமெடிக் என்னும் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி. இந்த நிறுவனம் தோல் நுண்ணுயிரியை மீட்டெடுப்பதன் மூலம் முகப்பரு போன்ற நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"இருப்பினும், மிக சமீபத்தில், தோல்-குடல் தொடர்பு உண்மையில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்," என்கிறார் அவர்.

தோல் நுண்ணுயிர்கள் பற்றியும் ஆரோக்கியம் மற்றும் நமது நலனில் அவற்றின் பங்கு பற்றியும் மேலும் அறிந்து கொண்டதால் விஞ்ஞானிகளிடையே உற்சாகம் அதிகரித்து வருகிறது.

சிகிச்சை முறைகள்

நமது தோலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் கொண்டு மாற்றுவதன் மூலம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா என்று பலருக்கு சந்தேகம் எழலாம். நீங்கள் விரும்பினால், ஒரு வகையான நுண்ணுயிர் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இருப்பினும், அவ்வாறு செய்வது உங்கள் உடலில் ஏற்கனவே இருக்கும் மைக்ரோ பயோட்டாவை அழிக்க நேரிடும். இது ஆண்டிபயாடிக் தன்மையின் வளர்ச்சி போன்ற பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

நமது தோல் நுண்ணுயிரிகளும் நமது சுற்றுச்சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே நம் உடலில் உள்ள பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், மற்றும் வைரஸ்களின் பன்முகத்தன்மைக்கு நம்மைச் சுற்றியுள்ள சூழல் எவ்வாறு பங்களிக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் கூட, நமது சரும நுண்ணுயிரிகளின் தன்மையை மாற்றியமைக்க முடியும்.

சில நிறுவனங்கள் ‘ஆரோக்கியமான’ நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு ‘ப்ரீபயாடிக்குகள்’ மற்றும் ‘ப்ரோபயாடிக்குகள்’ மூலம் நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிப்பதன் மூலம் அல்லது உங்கள் முகத்தில் பாக்டீரியா புரதங்கள் அல்லது லிப்பிட்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமாகும் என்று நம்புகின்றன.

இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு சிறிய அளவில் வெளியிடப்பட்ட சில சான்றுகள் உள்ளன. ஆனால், இது பல்வேறு தோல் பாக்டீரியாக்களின் சமநிலையை மாற்றும் அபாயம் உள்ளது.

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்கள் ‘பாக்டீரியோபேஜ்கள்’ என அறியப்படுகிறன. அவை நல்ல நுண்ணுயிரிகளுக்குத் தீங்கு விளைவிக்காமல், ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுமா என்று கூட வில்கின்சன் ஆராய்ந்து வருகிறார்.

"நோய்க்கிருமி பாக்டீரியாவைக் குறைப்பதன் மூலமும், இயற்கையான மைக்ரோபயோட்டாவை மீட்டெடுக்க அனுமதிப்பதன் மூலமும், நீங்கள் காயத்தை சரிசெய்வதை துரிதப்படுத்தலாம்," என்று அவர் கூறுகிறார். "எனவே, இது எங்களுக்கு மிகவும் உற்சாகமானது. மேலும் இது இறுதியில் இந்த நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கும் விதத்தில் ஒரு மாற்றத்திற்கு வழிவகுக்கும்," என்கிறார்.

[இது பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு]

கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள் - தவிர்க்கும் வழிகள்

3 months 1 week ago
கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் வரக்கூடுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT
    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார்.

ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்தக் கட்டி நீக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு இதே போல மற்றொரு கண்ணிலும் கட்டி வந்தது.

இந்தப் பிரச்னை தொடர்ச்சியாக வந்ததால், இதைப் பரிசோதனை செய்த சாருலதாவின் கண் மருத்துவர், "உங்களுக்குக் கண்ணில் மை இடும் பழக்கம் உள்ளதா?" என்று கேட்டு, அதனால்தான் அவருக்குக் கண்ணில் கட்டி வருவதாகக் கூறியுள்ளார்.

இதுவரை எனக்கு மூன்று முறை கண்களில் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. கண் மை இட்டுக்கொள்வதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இதுபோல கண்களில் கட்டி ஏதும் வரவில்லை” என்று சாருலதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரால் பயன்படுதப்படும் கண் மை ஆபத்தானதா? அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?

கண்கள் எவ்வளவு மென்மையானது?

சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி, சமூக ஊடக பக்கங்களில் வைரல் ஆனது. அதில் தொடர்ச்சியாக கண் மை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கண் மருத்துவர் அஷ்வின் அகர்வால் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து கண் மருத்துவர்களிடம் கேட்டபோது, “உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் மென்மையானவை மற்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அதில் தூசி போன்றவை படியும்போது கண் எரிச்சல், கண் கட்டி போன்றவை ஏற்படலாம்,” என்று கூறுகிறார் கண் மருத்துவர் வஹீதா நசீர்.

கண்ணின் விளிம்புகளில் லாக்ரீமல் சுரப்பிகள், மெய்போமியன் சுரப்பிகள் போன்றவை இருக்கின்றன. இவைதான் கண்ணீர் சுரப்பதற்கும், எண்ணெய் போன்றவற்றைச் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்க்கவும் செய்கிறது.”

கண்ணின் வாட்டர்லைனில் மை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் (pores) அடைப்பு ஏற்படும். இதனால் கண்ணில் சுரக்கப்படும் திரவியங்கள் வெளியேற வழி இல்லாமல் உள்ளேயே இருந்து, அது கட்டி போல உருவாகக்கூடும். இந்த பாதிப்பிற்கு கேலேசியான் (chalazion) என்று பெயர்” என்றார் மருத்துவர் வஹீதா.

 
என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
கண்ணில் வரும் இந்த கட்டிகள், இமையின் உள்புரத்திலும் வெளிப் புரத்திலும் தோன்றலாம்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள் பக்கங்களிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம்.

கண்களை அலங்கரிக்க கண் மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷாடோ போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக கண்களின் உள்ளே பயன்படுத்தும்போது, கஞ்சக்டிவைடிஸ் எனப்படும் கண் எரிச்சல், ஸ்டை எனப்படும் கண் கட்டிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் வஹீதா.

"இது போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்தால் இந்த பாதிப்பு அதிகமாகி புற்றுநோய்கூட வரும் வாய்ப்புகள் உள்ளன,” என்றார் அவர்.

கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள்பகுதியிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம். இதனால் பார்வைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு விழிகளில் இந்தப் பாதிப்பு பரவி கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார்.

இதுபோன்று கண்ணில் கட்டி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிப்பு தீவிரமாக இருப்பின், அறுவை சிகிச்சை மூலம் கட்டியிலுள்ள சீழ் வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும், என்று இதைக் குணப்படுத்தும் முறை குறித்து விளக்கினார் மருத்துவர் வஹீதா.

தற்போது பயன்படுதப்படும் கண் மையில் உள்ள வேதிப் பொருட்களால் கண் உலர்ச்சி, கண்ணில் அழுத்தம் அதிகரிப்பு, கார்னியல் அல்சர் எனப்படும் கருவிழிப் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கிறார் கண் மருத்துவர் சிவக்குமார்.

கண் மை பயன்படுவதால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, "இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் கண் மை இட்டுக்கொள்வதும் ஒன்றாக இருக்கின்றது. தொடர்ச்சியாக வேதிப் பொருட்கள் அடங்கிய ஒப்பனை சாதனங்களை கண்ணில் பயன்படுத்தும்போதும், கண்ணில் பிரச்னைகள் இருந்தும் அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்" என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 
‘ஐ மேக்கப்’ - ஒரு பேஷன் டிரெண்ட்
கண்களுக்கு அழகு கூட்டவும், திருஷ்டியை போக்கவே கண்மை பயன்படுதப்படுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர்.

முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன.

"கண் மை என்பது பிரபல பேஷன் டிரெண்டாக எக்காலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம், கண் மை நீர் போன்றவை பட்டு அழியாமல் இருக்க அதில் அதிகளவில் வேதிப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது," என்று ஒப்பனைக் கலைஞர் அகிலா தெரிவித்தார்.

மேலும், இத்தகைய வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பாக 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்த்துவிட்டுத் தொடங்க வேண்டும் என்கிறார் அகிலா.

அதாவது, எந்த ஒப்பனைப் பொருளாக இருந்தாலும், அதை மிகச் சிறிய அளவில் உடலின் ஒரு சிறு பகுதியில் பயன்படுத்திப் பார்த்து, அதனால் எந்தவித விளைவுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்கிறார் அகிலா.

 
பாதிப்புகளைத் தடுப்பது எப்படி?
கண்ணில் ஏற்படும் கட்டிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கண்ணில் ஏற்படும் கட்டிகள்

பொதுவாக உடல் சூடு, தூசி, சுத்தமில்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் கண் இமைகளில் கட்டி வரலாம்” என்கிறார் மருத்துவர் சிவக்குமார்.

இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசிய கண் மருத்துவர் வஹீதா, சில அறிவுறுத்தல்களை வழங்கினார்:

  • முதலில் கண்களில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கண்களில் வேதிப் பொருட்கள் கொண்ட ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.
  • ஒருவேளை பயன்படுத்தினாலும் தேவை முடிந்தவுடன் கண் இமை, இமையிலுள்ள முடி போன்ற கண்ணின் எல்லா பகுதிகளிலும் சரியான முறையில் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். அதை அகற்றாமல் போனால் கண்ணில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
  • ஒருவர் பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. சோப், ஃபேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணை போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது.
  • கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்

3 months 1 week ago
ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம் ரத்த சோகைக்கு சித்த மருந்து கண்டுபிடித்த இந்திய நிறுவனம்.

ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் நாட்டின் புகழ்பெற்ற சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் குழு, தமிழ்நாடு சித்த மருந்து கலவையான அன்னபேதி செந்தூரம், பாவனக் கடுக்காய், மாதுளை மணப்பாகு, நெல்லிக்காய் லேகியம் ஆகியவற்றைக் கொண்ட ‘ஏ.பி.என்.எம்.’ மருந்து, ரத்த சோகை உள்ள வளர் இளம் பருவத்துப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் மற்றும் அதனுடன் கூடிய சத்துக்களின் அளவை மேம்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர்.

ரத்த சோகையை குறைப்பதில் சித்த மருந்துகளை பிரதானமாக பயன்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 2 ஆயிரத்து 648 சிறுமிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆய்வு முடிவுகளின் தாக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர். மீனாகுமாரி இது குறித்து தெரிவிக்கையில், “ஆயுஷ் அமைச்சகத்தின் பொது சுகாதார முயற்சிகளில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

இளம் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, உணவு ஆலோசனை, நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் சித்த மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்த சோகை நோயாளிகளுக்கு பலன்களை அளித்தன. எனவே ரத்த சோகைக்கான சித்த மருந்துகள் செலவு குறைந்த பங்கை பொது சுகாதாரத்துக்கு அளிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1398868

வார நாட்களில் 8 மணி நேரம் தூங்காமல் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்கலாமா? உடலில் என்ன நடக்கும்?

3 months 1 week ago
தூக்கம், மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

வார நாட்களில் வேலைப் பளுவைக் காரணம் காட்டி அல்லது இணையத்தில் மூழ்கி 5 அல்லது 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதை நம்மில் சிலர் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் மனதில் நினைப்பது என்னவென்றால், இதற்கெல்லாம் சேர்த்து வார இறுதி நாட்களில் அல்லது விடுமுறை நாட்களில் தூங்கிக் கொள்ளலாம் என்பது தான்.

இதற்கு ஸ்லீப் டெப்ட் (Sleep Debt) என்று பெயர், அதாவது ஒருநாளைக்கு ஒருவர் 7 முதல் 9 மணிநேரம் வரை தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறும் போது (இது வயதிற்கு ஏற்றாற் போல மாறுபடும்), அதற்கு நேர்மாறாக 5 மணி நேரம் மட்டுமே ஒருவர் தூங்கினால் 2, 3 மணிநேரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இப்படியே பல நாட்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 மணிநேரங்கள் தூக்கத்தை இழப்பது ‘ஸ்லீப் டெப்ட்’ எனப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும்மேலும் கடன் வாங்கிக் கொண்டே இருப்பது போலாகும்.

இவ்வாறு வார நாட்களில் முறையாக தூங்காமல், வார இறுதி நாட்களில் சேர்த்து வைத்து தூங்கிக் கொள்ளலாம் என நினைப்பது சரியா?

‘தூக்கமின்மை முழு உடலையும் பாதிக்கும்’

நரம்பியல் விஞ்ஞானியும் ‘Why we sleep’ என்ற பிரபல புத்தகத்தின் ஆசிரியருமான டாக்டர். மேத்யூ வாக்கர், "தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்திற்கான ஒரு ஆயுதம் போல. அதாவது அதை முறையாக பயன்படுத்தினால் வலிமை கூடும், உடல் நன்றாக இருக்கும், ஆனால் அதை உதாசீனப்படுத்தினால் உடல் கெட்டுப் போகும், நோய்கள் அதிகரிக்கும். தூக்கம் குறைவாக இருந்தால் , உங்கள் முழு உடலும் பாதிக்கப்படும்." என்று சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசுகையில் கூறியிருந்தார்.

தூக்கத்திற்கான சில மணிநேரத்தை நாம் வேறு வேலைகளுக்காக ‘கடன் வாங்கலாம்’, ஆனால் அதை நாம் நிச்சயம் திருப்பிச் செலுத்த வேண்டும் அல்லது அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மேத்யூ வாக்கர் கூறுகிறார்.

ஒரு நாளைக்கு நாம் 8 மணிநேரம் தூங்க வேண்டும். தொடர்ந்து பல நாட்களுக்கு 6 மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான பாதிப்பு 200 சதவீதம் அதிகமாக உள்ளது” என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது
‘தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது’

அமெரிக்காவின் ராசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் டாக்டர். மைக்கன் நெடர்கார்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், “தூக்கத்தின் போது, மூளை ‘கிளைம்ஃபேடிக் சிஸ்டம்’ எனப்படும் ‘சுத்தப்படுத்தும் செயல்முறைக்கு’ உட்படுகிறது. அல்சைமர் நோயுடன் தொடர்புடைய புரதமான பீட்டா-அமிலாய்டு உள்ளிட்ட நச்சுகளை இந்த அமைப்பு மூளையிலிருந்து வெளியேற்றுகிறது.” என்று கண்டறியப்பட்டது.

அதாவது நம் சிறுநீரகம் எப்படி கழிவுகளை வெளியேற்றுகிறதோ அதே போல தூக்கத்தில் மூளை நச்சுகளை வெளியேற்றுகிறது என அந்த ஆய்வு கூறுகிறது.

குறைவான தூக்கத்தால், மூளையின் கழிவுகள் சுத்தமாவது குறையும் என்றும், இது நீண்ட கால அறிவாற்றல் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. எனவே உறக்கம் என்பது ஓய்வுக்காக மட்டுமல்ல, அது மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

‘ஸ்லீப் டெப்ட்’ பற்றி மேலும் அறிந்துகொள்வதற்கு முன்பாக, தூக்கத்தின் கட்டங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் (National Library of Medicine) இணையதள கட்டுரையின்படி, பொதுவாக தூக்கத்தின் ஒரு சுழற்சி என்பது 90- 110 நிமிடங்கள் வரை நீடிக்கும். ஒரு இரவின் தூக்கத்தில் இதுபோன்ற 4-5 சுழற்சிகளை நாம் வழக்கமாக கடக்கிறோம்.

 
மூளையில் குறைவான உறக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும் மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது

இதில் ஒவ்வொரு சுழற்சியிலும் 5 கட்டங்கள் இருக்கும். சுழற்சியின் முதல் மூன்று கட்டங்கள், 'விரைவற்ற கண் அசைவு தூக்கம்' (Non rapid eye movement- என்ஆர்இஎம்) என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் நாம் இதை ஆழ்ந்த தூக்கம் என்று சொல்கிறோம். தூக்கத்தின் 75% ‘என்ஆர்இஎம்’ நிலையில் தான் செலவிடப்படும்.

இரண்டாவது கட்டம், விரைவான கண் அசைவு (REM- ஆர்இஎம்) தூக்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக கனவு காண்கிறோம்.

நாம் தூங்கும் போது, படிப்படியாக ‘என்ஆர்இஎம்’ குறைந்து, ‘ஆர்இஎம்’ அதிகரிக்கிறது.

தூக்கம் தொடர்பான நோய்களை எதிர்கொள்ளும் அனைவருக்குமே, இந்த இரண்டு கட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளன.

ஞாபக சக்தி, முடிவெடுக்கும் திறன், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தி ஆகியவற்றில் இந்த இரண்டு கட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தினசரி தூக்கத்தின் அளவைக் குறைப்பதன் மூலம் ஒருவர் தூக்க சுழற்சியின் முக்கியமான ‘ஆர்இஎம்’ மற்றும் ‘என்ஆர்இஎம்’ கட்டங்களை இழக்க நேரிடும். இது ஞாபக சக்தி குறைதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்திக்கு வழிவகுக்கும் என அமெரிக்க அரசின், தேசிய மருத்துவ நூலகத்தின் கட்டுரை கூறுகிறது.

மூளையில் குறைவான உறக்கம் ஏற்படுத்தும் பாதிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘குறைவான தூக்கம் மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு’

இந்த வருடத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவின் ‘யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின்’ வெளியிட்ட ஆய்வு முடிவுகளில், “அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தூங்குவதற்கும், மூளையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தொடர்புள்ளது. அவை வாழ்க்கையின் பிற்பகுதியில் பக்கவாதம் மற்றும் டிமென்ஷியா (மறதிநோய்), அபாயத்தை அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுளளது.

யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசினின் ஆய்வுக் குழு, மிகக் குறைவான தூக்கம் (ஏழு மணி நேரத்திற்கும் குறைவானது), உகந்த தூக்கம் (ஏழு முதல் ஒன்பது மணி நேரத்திற்கு) மற்றும் அதிக தூக்கம் (ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக தூங்குவது) என இந்த மூன்றும் மூளையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்தது.

இதில் தினமும் ஏழு மணிநேரத்திற்கும் குறைவாக உறங்குவதற்கும், மூளை மற்றும் உடலின் ஆரோக்கிய குறைபாட்டிற்கும் நேரடி தொடர்பு உள்ளது என கண்டறியப்பட்டது.

 
‘தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம்’
எஸ்.ஜெயராமன்
படக்குறிப்பு,எஸ்.ஜெயராமன், நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர்

வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு குறைவான நேரம் உறங்கிவிட்டு, பின்னர் வார இறுதியில் 10 முதல் 12 மணிநேரம் வரை உறங்குவது நிச்சயமாக நாம் இழந்த தூக்கத்தை ஈடுசெய்யாது. தற்காலிகமாக உடல்சோர்வு நீங்கியது போல தோன்றினாலும் கூட, நீண்ட காலத்திற்கு இதை பின்பற்றுவது, இதய நோய்கள் முதல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்” என்கிறார் நுரையீரலியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஸ்லீப் மெடிசின் (Sleep medicine) துறை வல்லுநர் எஸ்.ஜெயராமன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இரவு 10 முதல் காலை 6 மணி வரை என்பதே தூங்க உகந்த நேரம். அதுவும் கண்டிப்பாக 8 மணிநேரம் தூக்கம் அவசியம். ஒருவேளை இரவு நேரப் பணிக்குச் செல்பவர்கள் என்றால், பணி முடிந்த பிறகு தினமும் 8 மணி நேரம் தொடர்ச்சியாக உறங்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.” என்கிறார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, டெய்சுகே ஹோரி என்ற 40 வயதான நபர், கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாகவும், தனது ஆயுட்காலத்தை இரட்டிப்பாக்க அவர் இவ்வாறு செய்வதாகவும் ஆங்கில நாளிதழான ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டது.

குறைவான, அதே சமயத்தில் ஆழமான தூக்கத்தால் தனது செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அவர் கூறுவதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் வைரலாகப் பரவியது.

இது குறித்து எஸ்.ஜெயராமனிடம் கேட்டபோது, “இது நிச்சயம் எல்லோருக்குமானது அல்ல. தூக்கம் குறித்து எவ்வளவோ ஆய்வுகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் ஏற்படும் என்றே அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் வரக்கூடும். எனவே பொது மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்த்து விட்டு, குறைவான நேரம் உறங்கக்கூடாது.” என்கிறார்.

மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை தூக்கத்தில் கழிக்கும் வகையிலேயே மனித இனம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறிய எஸ்.ஜெயராமன், “தூங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பு டிஜிட்டல் திரைகள் பார்க்காமல் இருப்பது, சீக்கிரமாக இரவு உணவு எடுத்துக்கொள்வது, தினமும் உடற்பயிற்சி செய்வது, போன்ற சில பழக்கங்கள் மூலம் தினமும் 8 மணி நேர தூக்கம் என்பது சாத்தியமே” என்று கூறினார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Checked
Sun, 12/22/2024 - 06:57
நலமோடு நாம் வாழ Latest Topics
Subscribe to நலமோடு நாம் வாழ feed