உலக நீரிழிவு தினம்
பட மூலாதாரம்,GETTY IMAGES
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தன் இரு மகள்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது வேலையை விட்டு இந்தியா திரும்ப வேண்டியிருந்தது.
நீரிழிவு நோய் (வகை 1) இருப்பதால் அவர்களுக்கு இன்சுலினை ஊசி வழியாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழக்கமான செலவுகள் போக, இன்சுலின் ஊசிக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் செலவிடுகிறார்கள்.
மத்திய – மாநில அரசுகள் சில உதவிகளை வழங்கி வந்தாலும், இன்சுலின் தேவைப்படும் ஏராளமான இந்தியக் குடும்பங்கள் இதே போல் போராடி வருகின்றன.
சுமதிக்கு தற்போது 54 வயது ஆகிறது. இரு மகள்களும் படித்துக் கொண்டுள்ளார்கள். கணவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றுகிறார்.
“வேலை இருக்கும் போதுதான் வருமானம் இருக்கும். கொரோனா காலத்தில் மிகவும் சிரமப்பட்டோம். சாப்பாட்டைக் குறைத்துக்கூட இன்சுலின் வாங்கினோம் என்று கூறலாம்” என்றார் சுமதி.
அவரது மூத்த மகளுக்கு 21 வயது, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நீரிழிவு வகை 1 கண்டறியப்பட்டது. இன்னொரு மகளுக்கும் நீரிழிவு பாதிப்பு தெரிய வந்து 6 ஆண்டுகள் ஆகின்றன.
இருவரும் குறுகிய காலத்துக்கு வேலை செய்யும் இன்சூலினை பகலில் நான்கு முறையும், நீண்ட நேரத்துக்கு வேலை செய்யும் இன்சுலினை இரவில் ஒரு முறையும் எடுத்துக் கொள்கின்றனர்.
“சர்க்கரை அளவைச் சரிபார்க்க பயன்படுத்தப்படும் 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டிரிப், ஒரு நாளுக்கு நான்கு தேவைப்படும். அதற்காக சிறிய ஊசிகள் 100 வாங்க ரூ.1000 ஆகும். இன்சுலின் செலுத்த தேவைப்படும் 100 ஊசிகள் ரூ.1700, இதற்கு ஜி.எஸ்.டி. உண்டு.
ஒரு ஊசியை நான்கு முறை பயன்படுத்தலாம். இன்சுலினை செலுத்துவதற்குத் தேவையான பேனாவை போன்ற கருவி ரூ.1500 ஆகிறது. அது நீண்ட நாட்களுக்கு உழைக்கும். இவ்வாறு இருவருக்கும் நாளொன்று சுமார் ரூ.450 முதல் ரூ.500 செலவாகிறது” என்று விவரித்தார்.
உடலில் இன்சுலின் குறைவாக இருப்பவர்களுக்கு செயற்கையாக வெளியிலிருந்து உடலில் செலுத்திக் கொள்ள முடியும். பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வரும் இந்த அறிவியல் மைல்கல்லை கண்டுபிடித்தவர் சர் ப்ரெட்ரிக் பேண்டிங் (Sir Fredrick Banting) அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி உலக நீரிழிவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவர் இன்சுலினை கண்டுபிடித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அது இன்னமும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதில்லை என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் சார்பில் 2023 மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி வகை -1, வகை -2 இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து இந்தியாவில் 10.1 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.
(மரபணு உள்ளிட்ட காரணங்களால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, கணையத்திலிருந்து இன்சுலின் சுரக்காமல் இருப்பது வகை 1 நீரிழிவு. வாழ்க்கை முறை காரணமாக உடலில் இன்சுலின் அளவு குறைந்து சர்க்கரை அளவு அதிகரிப்பது வகை 2 நீரிழிவு. வகை 1 நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.)
டெல்லி தொழில்நுட்ப நிறுவனத்தின் மேஹக் நந்தா, ஹரியாணா குருக்ஷேத்ராவில் உள்ள என்.ஐ.டி.யின் ராஜேஷ் ஷர்மா ஆகியோர் இணைந்து இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கான நிதி சுமை குறித்து 2018ஆம் ஆண்டில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட 38% குடும்பங்கள் மிக அதிகமான செலவுகளைச் செய்வதாகவும், 10% குடும்பங்கள் இந்தப் பாதிப்பின் காரணமாகவே வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் மருந்துகளுக்கே கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும், விளிம்பு நிலை சமுதாயங்களுக்கும், பொருளாதாரத்தில் அடித்தட்டில் உள்ளோருக்கும், தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்துவோருக்கும் நிதிச்சுமை கூடுதலாக இருந்ததாக ஆய்வு கூறுகிறது.
பட மூலாதாரம்,GETTY IMAGES
நீரிழிவு சிகிச்சை குறித்து பிபிசியிடம் பேசிய பலர், இன்சுலின் கிடைப்பதில் எழும் சிக்கல்களைத் தெரிவித்தனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் சுமை இந்தியாவில் அதிகரித்துள்ள கடந்த 10 ஆண்டுகளில் இன்சுலின் கிடைப்பதிலும் சவால்கள் எழுந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருப்பவர் கார்த்திக். அவரது மகளுக்கு 5 வயதில் நீரிழிவு நோய் வகை 1 கண்டறியப்பட்டது. இந்நிலையில், தனது மகளுக்குத் தேவைப்படும் இன்சுலினுக்காக கெஞ்சவும், கடன் வாங்கவும் நேர்ந்ததாகக் கூறுகிறார் அவரது மனைவி லீலாவதி.
“நாங்கள் சாப்பிடாமல் இருந்துகூட குழந்தைக்கு இன்சுலின் வாங்கிக் கொடுத்துள்ளோம். ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். எங்களுக்கு அது மிகப்பெரிய தொகை. ராகி உள்ளிட்ட தானிய வகைகளை முதலில் வாங்கிக் கொடுத்தோம், ஆனால் காசு இல்லாததால் இப்போது ரேஷன் அரிசியைத்தான் குழந்தைக்குக் கொடுக்கிறோம். காய்கறிகள், பழங்கள் வாங்கவே காசு போதவில்லை” என்கிறார்.
மேலும், “இன்சுலின் குப்பிகளைப் பயன்படுத்தும்போது பெரிய ஊசிகள் தேவைப்படும். முதல் மூன்று ஆண்டுகள் அதைப் பயன்படுத்தினோம். ஆனால் குழந்தைக்கு வலியும் காயமும் அதிகமானது. எனவே இப்போது இன்சுலின் பேனா வாங்குகிறோம். இதில் ஊசியின் அளவு மிகச் சிறியது. ஒரு பேனா சுமார் ரூ. 3 ஆயிரம் வரை ஆகும். இது அரசு மருத்துவமனையில் கிடைத்தால் எங்களுக்கு மிகப் பெரிய வரமாக இருக்கும்” என்கிறார் லீலாவதி.
பட மூலாதாரம்,SRIDHAR RAJMOHAN
லீலாவதி தனது குழந்தைக்கு, கடந்த 6 மாதங்களாக தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இன்சுலின் பெற்று வருகிறார்.
தமிழ்நாடு டைப் 1 டயாபடிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பைச் சேர்ந்த 36 வயது ஸ்ரீதர் ராஜ்மோகன், “பொதுவாக அரசு மருத்துவமனைகளில் ஹூமன் இன்சுலின் எனப்படும், உடலில் செலுத்தி 45 நிமிடங்கள் கழித்து செயல்படத் தொடங்கும் இன்சுலின்தான் கிடைக்கிறது. ஆனால் வெளிச் சந்தையில் அனலாக் எனப்படும், உடலில் செலுத்திய ஐந்து நிமிடங்களில் செயல்படத் தொடங்கும் இன்சுலின்கள் கிடைக்கின்றன. எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மாதம் 60 முதல் 100 குழந்தைகளுக்கு இன்சுலின் இலவசமாக வழங்குகிறோம்” என்கிறார்.
சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், இன்சுலின் கிடைப்பது, அதுவும் குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கிடைப்பது ஆகியவை ஒவ்வொரு மாநிலத்துக்கு வேறுபடும் என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தின் (Indian Medical Association) தலைவர் ஆர்.வி.அசோகன்.
“இந்தியாவில், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைவிட, தென் மாநிலங்களில் நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேற்கில் மகாராஷ்டிராவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நீரிழிவு நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும் தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில், மாநில அரசுகள் பரவலாக இன்சுலின் வழங்கி வருகின்றனர். இந்த இரு மாநிலங்களிலும் வீடுகளுக்கே மருத்துவக் குழுக்கள் சென்று இன்சுலின் வழங்குகின்றனர்” என்றார்.
பட மூலாதாரம்,DR R V ASOKAN
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நீரிழிவு நிறுவனத்தின் இயக்குநர் தருமராஜன் அரசு மருத்துவமனைகளில் இன்சுலின் இலவசமாக வழங்கப்படுவதாகக் கூறுகிறார்.
“நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து, அவர்களுக்குத் தேவையான அளவு இன்சுலின் குறிப்பிட்ட கால அளவில் வழங்கப்படுகிறது. இன்சுலின் குப்பிகள் மட்டுமல்லாமல், பேனாக்களும் சில நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு நீரிழிவு வகை 1 பாதிப்புடைய நான்கு ஏழை எளிய பிள்ளைகளுக்கு இன்சுலின் பம்ப் (ரூ.2 லட்சம் மதிப்பிலான கருவி) இலவசமாக வழங்கப்பட்டது” என்றார்.
இன்சுலின் பம்ப் என்பது கையில் கட்டிக் கொண்டால் தானியங்கியாக இன்சுலின் ஏற்றக் கூடிய கருவியாகும்.
பட மூலாதாரம்,DR DHARMARAJAN
லான்செட் டயபடீஸ் மற்றும் எண்டோக்ரைனாலஜி ஆய்விதழில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரையில், உலக இன்சுலின் சந்தையில் எலி லில்லி, நோவோ நோர்டிஸ்க், சனோஃபி ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் சந்தை மதிப்பின் 99% இந்த நிறுவனங்களிடமே இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் இப்போது நிலைமைகள் மாறி வருவதாக, இந்திய மருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் விராஞ்சி ஷா தெரிவிக்கிறார், “பயோகான், லூபின், மான்கைண்ட் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள் இன்சுலின் தயாரிப்பு சந்தையில் உள்ளனர். பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து இன்சுலினை பெற்று வணிகம் செய்கின்றனர்.
எனினும் சந்தையில் 30-40 ஆண்டுகளாக சில நிறுவனங்கள் இருக்கும் நிலையில், புதிதாக வரும் நிறுவனங்களுக்கு பொதுவான சவால்கள் இருக்கத்தானே செய்யும். இதனால் இந்திய நிறுவனங்கள் மீது நம்பிக்கையின்மையோ, தரம் குறைந்தது என்றோ அர்த்தம் கிடையாது” என்கிறார்.
இந்தியாவில் நீரிழிவு மருந்துகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.22,000 கோடி எனக் கூறும் விராஞ்சி ஷா, இதில் இன்சுலின் மருந்துகளின் மதிப்பு மட்டும் 20% (ரூ.4,400 கோடி) என்கிறார்.
பட மூலாதாரம்,DR VIRANCHI SHAH
மேலும், பெரும்பாலான ஹூமன் இன்சுலின்கள் சில விதிவிலக்குகளைத் தவிர, விலைக் கட்டுப்பாட்டில் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார்.
"கடந்த 2021ஆம் ஆண்டில், அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் (NLEM) இன்சுலின் கிளார்ஜின் சேர்க்கப்பட்டது. இதனால் அதன் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டது, விலைக் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டது. இந்தியாவில் சுமார் 80% இன்சுலின் பயனர்கள் ஹூமன் இன்சுலினை பயன்படுத்துகிறார்கள்" என்றார்.
மேலும், இந்தச் சந்தையில் பத்துக்கும் குறைவான தயாரிப்பாளர்களே உள்ளதாகக் கூறும் அவர், “உலகிலேயே மிகக் குறைந்த விலையில் இன்சுலின் கிடைக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் ஆகிய இதர வளர்ந்து வரும் நாடுளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இன்சுலின் விலை மிகவும் குறைவு. அரசின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் அது இருப்பதால், விலை கட்டுப்படுத்தப்படுகிறது” என்றார்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு தொற்றா நோய் கட்டுப்பாட்டு முயற்சிகளின் பகுதியாக நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குகிறது. மாநிலங்கள் இதிலிருந்து உதவி பெற முடியும்.
இந்நிலையில், மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் இன்சுலின் சேர்க்கப்பட வேண்டும் என்கிறார் சுமதி.
“நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தபோது காப்பீட்டுத் திட்டத்தில் இன்சுலின் கிடைத்தது மிகவும் உதவியாக இருந்தது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில், இன்சுலின் பம்ப் இலவசமாக குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து பம்ப் வாங்க ரூ.10 லட்சம் செலவாகும். அதுதவிர மாதம் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.30 ஆயிரம் செலவாகும்” என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு