அறிவியல் தொழில்நுட்பம்

மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்

2 days 20 hours ago
இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல்
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி நியூஸ்

மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா?

நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது.

விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் நடத்தப்படும்போது, விண்வெளி வீரர்களுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று குஜராத்தை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஆகாவில் (Aaka), விண்வெளி பொறியாளராகப் பணிபுரியும் ஆஸ்தா கச்சா-ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார்.

ஹேப்-1, விண்வெளி தரத்திலான டெஃப்ளான் உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் பாதுகாக்கப்பட்ட ஃபோம் (foam) அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

 

இதில் ஒரு மெத்தை, வேலை செய்வதற்கான மடித்து வைக்கக்கூடிய ஒரு மேசை, தினசரி மற்றும் அவசரக்கால தேவைகளுக்கான பொருட்களை வைப்பதற்கான ஓர் இடம், சிறிய சமையலறை மற்றும் கழிவறை இருக்கின்றன. இந்தச் சோதனைக்காக மூன்று வாரங்கள் வரை விண்வெளி வீரர் ஒருவர் இங்கு தங்கியிருந்தார்.

"செவ்வாய் கிரகமோ, நிலவோ எதுவாக இருந்தாலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் நிலவும் மிகக் குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் கட்டுமான சவால்களைக் கருத்தில் கொண்டே ஹேப்-1 கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தண்ணீருக்கு சிக்கல் இருக்கும் என்பதால் நீர் இன்றி இயங்கும் கழிவரையை உருவாக்கியுள்ளோம். அதில் துர்நாற்றம் வெளிவராத வகையில் கழிவை வெளியேற்றும் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம்," என்கிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா.

இஸ்ரோவின் முதல் 'விண்வெளிக் குடியிருப்பை', அதாவது விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதிரி குடியிருப்பை லடாக்கில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜாலா ஈடுபட்டுள்ளார்.

 

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் விண்வெளிக் குடியிருப்புகள் குறித்த இந்தத் திட்டத்திற்கான சோதனை முயற்சிகளும் தொடங்கியுள்ளன.

சுமார் 400 கி.மீ. உயரத்தில், பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கு விண்வெளியில் வீரர்களை நிலை நிறுத்துவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டம். இதற்கான அனைத்து செயல்முறையும் திட்டமிட்டபடி நடந்தால் இத்திட்டம் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும்.

இந்தியா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2040ஆம் ஆண்டிற்குள், மனிதனை நிலவுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளும், விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதுபோன்ற பல 'விண்வெளி வாழ்க்கை' தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை சோதனை செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையில், ககன்யான் திட்டத்தில் பங்குபெறத் தேர்வாகியுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் இருவருக்கு தற்போது நாசாவில் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, நிலாவிலோ செவ்வாயிலோ நிலவும் சுற்றுச்சூழலில், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஹேப்-1 வடிவமைக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா

"விண்வெளி வாழ்வனுபவம் தொடர்பாகத் தனது சொந்த திட்டங்களை இந்தியாவால் செயல்படுத்த முடியுமானால், நமது விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கு மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டியதிலை," என்று லடாக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படிப்புகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் சுப்ரத் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் லடாக் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது.

லடாக் பாறைகள் நிறைந்த ஒரு தரிசு நிலம் எனக் கூறுகிறார் அவர். "செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்புடன் லடாக்கின் நிலவியல் ஒத்திருக்கிறது. அதனால், இந்தப் பகுதி விண்வெளி ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இங்கு சோதனை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் சுப்ரத் ஷர்மா தெரிவித்தார்.

இந்தச் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் விண்வெளியில் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விண்வெளியில் வீடுகளை அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்கின்றனர்.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO

படக்குறிப்பு, இந்தியாவின் சோதனை விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்களை செலவிட்ட விண்வெளி வீரர்.

இந்திய- சீனா எல்லையில் உள்ள இந்த இமயமலைப் பகுதி சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும். அதாவது ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் -18 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும்.

இது செவ்வாயின் வெப்பநிலைக்கோ (-153 செல்சியஸைவிட குறையலாம்) அல்லது நிலவின் வெப்பநிலைக்கோ (ஆழமான பள்ளங்களில் -250 செல்சியஸ் வரை இருக்கும்) எந்த விதத்திலும் பொருந்தவில்லை. ஆனாலும் ஒரு மனிதரால் எந்த அளவு வரையிலான வெப்பநிலையைத் தாங்க முடியும் என்பதை அறிவதற்கான முயற்சியே இந்தச் சோதனை.

"ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைக்காக விண்வெளிக்குச் செல்ல முடியாது என்பதால், விண்வெளி போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சோதனை நிலையம் அவசியமாகத் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் ஷர்மா.

மேலும், "லடாக்கில் தரிசு நிலங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், நீங்கள் விண்வெளியில் தனியாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்," என்றார் அவர். தானும் இதே போலத்தான் உணர்ந்ததாக மூன்று வாரங்கள் இந்தக் கட்டமைப்பில் தங்கியிருந்த விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார்.

"மனித சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து நான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது அன்றாடப் பணிகள், எப்போது எழ வேண்டும், எப்போது என்ன செய்ய வேண்டும், தூங்க வேண்டும் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நான் செய்யும் அனைத்து வேலைகளும் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். எனது செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்," என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத, இந்தச் சோதனையில் பங்கெடுத்த 24 வயது நபர் ஒருவர் தெரிவித்தார்.

"ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது போல் இருந்தது. இது எனது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தது. நான் தூங்கும் முறையைப் பாதித்தது, எனக்கு கவனக் குறைப்பாட்டை ஏற்படுத்தியது."

விண்வெளி வீரரின் உடலில் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டு அவரது தூக்க முறை, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவரது உடல் எந்த அளவிற்கு இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறது என்பதை அவரது ரத்தம் மற்றும் எச்சிலை தினமும் சோதனை செய்து கண்காணித்தனர்.

இஸ்ரோ, ஹேபிடட்-1, விண்வெளி நிலையம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டு பஸ் ஆல்ட்ரின் நிலவில் நடக்கும் புகைப்படம் இது.

விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் உளவியல் காரணிகளைக் கண்டறிவதும் இந்தச் சோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிலையங்கள் தங்களுடைய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப, அவர்களுக்கென நிரந்தரமான தங்குமிடத்தை இனி வரும் காலங்களில் அமைக்க முயன்று வருகின்றன. அதனால் இதுபோன்ற திட்டங்கள் விண்வெளிக்கான ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரேகன் என்ற இடத்தில் நாசாவின் லாஸீ என்ற இயந்திர நாயை நிலவின் மேற்பரப்பில் நடக்க வைப்பதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நான்கு பேர், டெக்சாஸில் உள்ள விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வசதியில் தங்கியிருந்து வந்தனர். இந்தச் சோதனை பிரத்யேகமாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை வழங்கும்.

எகனாமிஸ்ட் நாளிதழைப் பொருத்தவரை, நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 3D அடித்தளத்தை நாசா அமைக்கப் போகிறது. அதேநேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர்.

விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கிய நிலையில் இருக்க விரும்பவில்லை. "லடாக்கில் சேமிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, நமது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உதவ, சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு இது உதவும்" என்று பேராசிரியர் ஷர்மா கூறுகிறார்.

"பூமியைவிட இரவும் பகலும் அதிகமாக இருக்கும் நிலவிலும் அதேபோல ஆக்சிஜன் இல்லாத விண்வெளியிலும் வாழ்ந்தால் நமது மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?

4 days 16 hours ago
நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,DEAN RAPER

படக்குறிப்பு, நீரிழிவு ரெட்டினோபதியால் டெர்ரி க்வின் பார்வை இழக்க நேரிட்டது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், Christine Ro
  • பதவி, Technology Reporter

டெர்ரி க்வின் இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அடிக்கடி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளையும், வழக்கமான சோதனைகளையும் அவர் எதிர்த்தார். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக உணர அவர் விரும்பவில்லை.

என்றாவது ஒரு நாள் தன் கால் துண்டிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். நீரிழிவு நோயின் மற்றொரு சாத்தியமான சிக்கல், பார்வை இழப்பு.

அதுகுறித்து க்வின் முன்பே அறிந்திருக்கவில்லை.

"நான் என் பார்வையை இழக்க நேரிடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை"என்று மேற்கு யார்க்ஷயரில் வசிக்கும் க்வின் கூறுகிறார்.

 

ஆனால் ஒரு நாள் அவர் கண்ணில் ரத்தம் வருவதை கவனித்தார். அவருக்கு நீரிழிவு விழித்திரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். நீரிழிவு நோயினால் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு தான் நீரிழிவு விழித்திரை நோய்.

இதற்கு லேசர் சிகிச்சைகள் மற்றும் ஊசிகள் தேவைப்பட்டன.

சிகிச்சைகள் இருந்த போதிலும், டெர்ரியின் பார்வை தொடர்ந்து மோசமடைந்தது. அவர் நடந்து செல்லும் போது சில நேரங்களில் விளக்கு கம்பங்கள் மீது இடித்துக் கொள்வார், தோள்பட்டை வலிக்கும். மகன் முகத்தை கூட அவரால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை, வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டியிருந்தது.

"நான் எதுவும் செய்ய முடியாத மனிதனின் நிழலைப் போல உணர்ந்தேன்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.

விரக்தியிலிருந்து வெளியேற அவருக்கு உதவிய ஒரு விஷயம், பார்வையற்றோருக்கான அமைப்பிலிருந்து கிடைத்த வழிகாட்டி நாய்களின் ஆதரவாகும். அதன் மூலம் அவர் ஸ்பென்சர் என்ற கருப்பு லாப்ரடார் நாயின் உதவி கிடைத்தது.

"அவர் என் உயிரைக் காப்பாற்றினார்," என்று அந்த வழிகாட்டி நாய் குறித்து க்வின் கூறுகிறார். அவர் இப்போது வழிகாட்டி நாய்களுக்கு நிதி திரட்டுகிறார்.

 

பிரிட்டனில் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) நீரிழிவு தொடர்பான கண் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகளை சரிபார்ப்பதற்கும் பார்வை இழப்பைத் தடுக்க உதவுவதற்கும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீரிழிவு கண் பரிசோதனை செய்துகொள்ள நோயாளிகளை அழைக்கிறது.

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், பலர் இதை நடைமுறையில் பின்பற்றுவதில்லை.

"பரிசோதனை செய்துகொள்வது, பார்வை இழப்பைத் தடுக்கிறது என்பதற்கு மிகத் தெளிவான சான்றுகள் உள்ளன" என்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்தின் விழித்திரை நிபுணர் ரூமாசா சன்னா கூறுகிறார்.

"அமெரிக்காவில் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான முட்டுக்கட்டைகளில் செலவு, தகவல் தொடர்பு மற்றும் அதற்கான வசதி ஆகியவை அடங்கும். பரிசோதனைகளை எளிதாக அணுகுவது நோயாளிகளுக்கு உதவும்" என்று டாக்டர் சன்னா நம்புகிறார்.

நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறிய, சுகாதார வல்லுநர்கள் ஃபண்டஸ் எனப்படும் கண்ணின் பின்புற உட்புறச் சுவரின் படங்களை எடுக்கிறார்கள்.

"அதிக முறை செய்யும் வேலையாக அது உள்ளது" என்று டாக்டர் சன்னா குறிப்பிடுகிறார்.

ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI), இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் செலவுகளைக் குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

நீரிழிவு ரெட்டினோபதி வெவ்வேறு நிலைகளில் உருவாகும் என்பதால், இந்த நிலைகளை திறம்பட கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) உதவும்.

சில சமயங்களில், கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரை செய்ய வேண்டுமா அல்லது படங்களை மதிப்பாய்வு செய்யும் நிபுணர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமா என்பதை செயற்கை நுண்ணறிவால் (AI) மதிப்பிட முடியும்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்

போர்ச்சுகலை தளமாகக் கொண்ட ரெட்மார்கர் (Retmarker) என்ற சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தால் அத்தகைய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் அமைப்பு, சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஃபண்டஸ் படங்களைக் கண்டறிந்து, அடுத்தக்கட்ட ஆய்வுக்காக மருத்துவ நிபுணருக்கு அனுப்புகிறது.

"பொதுவாக, சிகிச்சை தொடர்பான ஒரு முடிவை எடுப்பதற்கு மனிதனுக்குத் தேவையான தகவலை வழங்குவதற்கான ஆதரவுக் கருவியாக நாங்கள் இதைப் பயன்படுத்துகிறோம்" என்று ரெட்மார்க்கரின் தலைமை நிர்வாகி ஜோனோ டியோகோ ராமோஸ் கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பங்கள் குறித்தான மக்களின் தயக்கம், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் கருவிகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது என்று அவர் நினைக்கிறார்.

ரெட்மார்க்கர் பரிசோதனை (Retmarker Screening) மற்றும் ஐனுக்கின் ஐஆர்ட் (Eyenuk's EyeArt) போன்ற அமைப்புகளின் உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட தனித்தன்மை ஆகிய இரண்டு பண்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதங்களில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உணர்திறன் என்பது நோயைக் கண்டறிவதில் ஒரு சோதனை முறை எவ்வளவு சிறந்தது என்பதை குறிக்கும்.

குறிப்பிட்ட தனித்தன்மை என்பது நோய் பாதிப்பு இல்லாததைக் கண்டறிவது எவ்வளவு நல்லது என்பதை குறிக்கும்.

பொதுவாக, மிக அதிக உணர்திறன், அதிகப்படியான தவறான முடிவுகள் கிடைக்க காரணமாகலாம். தவறான முடிவுகள், கவலையையும் செலவையும் உருவாக்குகின்றன. அதனால் மருத்துவ நிபுணர்களைத் தேவையற்று சந்திக்க நேரிடும்.

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில், மோசமான தரத்தில் உள்ள படங்கள் தவறான சோதனை முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கண்ணின் பின்புறச் சுவரின் படங்களை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவும்

தாய்லாந்தில் இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்ட போது, கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு, இந்த அமைப்பு வேலை செய்யவில்லை.

ஒரு முக்கிய சிக்கல் என்னவென்றால், ஃபண்டஸ் படங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் நீரிழிவு ரெட்டினோபதியின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கும், கணினி பின்பற்றும் படிப்படியான செயல்முறைகள் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் , படங்கள் எடுக்கும் போது, லென்ஸ்கள் அழுக்காக இருந்திருக்கலாம். விளக்கின் ஒளி சீரற்றதாக இருக்கலாம். கேமரா ஆபரேட்டர்கள் இந்த செயல்முறை குறித்த பயிற்சியில் பல்வேறு நிலைகளில் இருக்கலாம்.

சிறந்த தரவுகளுடன் பணிபுரிவதன் முக்கியத்துவம் மற்றும் பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கூகுள், தான் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு குறித்த நம்பிக்கையுடன் உள்ளது.

அக்டோபரில், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள பங்குதார்களுக்கு உரிமம் வழங்குவதாக, கூகுள் நிறுவனம் அறிவித்தது. செயற்கை நுண்ணறிவு மாதிரியை பயன்படுத்துவதற்கான செலவு மற்றும் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தாய்லாந்து பொது சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் கூகுள் கூறியது.

புதிய தொழில்நுட்பத்தின் விலை அதன் மிக முக்கியமான அம்சமாக உள்ளது.

ரெட்மார்க்கரின் சேவையில், ஒரு முறை பரிசோதனை செய்வதற்கு சுமார் 5 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்) செலவாகும் என்று ராமோஸ் கூறுகிறார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப செலவில் மாறுபாடுகள் இருக்கும். அமெரிக்காவில் மருத்துவ பில்லிங் குறியீடுகளுக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளன என்றும் ராமோஸ் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் டேனியல் எஸ் டபிள்யூ டிங் மற்றும் அவரது நண்பர்கள் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனையில் ஈடுபடும் மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் செலவை ஒப்பிட்டனர்.

மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுக்கும் அதிக செலவாகும். மறுபுறம், அதிக எண்ணிக்கையிலான தவறான முடிவுகளின் காரணமாக, முழுவதும் தானியங்கியாக இயங்கும் பரிசோதனை முறையும் முழுவதும் ஏற்புடையது அல்ல.

மிகவும் மலிவு விலையில் செயற்கை நுண்ணறிவும், மனிதர்களும் இணைந்து செய்யும் மாதிரி உள்ளது. இந்த மாதிரியில், முடிவுகளின் ஆரம்பக்கட்ட பரிசோதனையை செயற்கை நுண்ணறிவு கையாண்டது, பின்னர் மருத்துவ நிபுணர்கள் இந்த முடிவுகளை மதிப்பாய்வு செய்து சரி பார்த்தனர்.

இந்த மாதிரியானது, இப்போது சிங்கப்பூர் சுகாதார சேவையின் தேசிய தகவல் தொழில்நுட்பத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும்.

சிங்கப்பூர் ஏற்கனவே நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான வலுவான உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், செலவுகளை குறைக்க முடிந்தது என்று பேராசிரியர் டிங் நம்புகிறார்.

நீரிழிவு, பார்வை இழப்பு, செயற்கை நுண்ணறிவு

பட மூலாதாரம்,BILAL MATEEN

படக்குறிப்பு, பணக்கார நாடுகளுக்கு அப்பால் உள்ள பிற நாடுகளிலும் மருத்துவத் துறைக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என்று பிலால் மதின் கூறுகிறார்

எனவே இந்த செயற்கை நுண்ணறிவு முறையில் உள்ள காரணிகளான, செலவு மற்றும் செயல்திறன் பெரிதும் மாறுபடும்.

ஹெல்த் என்ஜிஓ PATH இன் தலைமை அதிகாரி பிலால் மதின் கூறுகையில், பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் அல்லது சீனா போன்ற சில நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பார்வையைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவற்கு ஆகும் செலவு மற்றும் அதன் செயல்திறன் தரவு மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கு அப்படி இல்லை என்று தெரிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்குகிறோமா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிவுகளை எடுக்கும்போது செயல்திறன் தரவைக் காட்டிலும் அதிகமானவற்றைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் மேடீன் வலியுறுத்துகிறார்.

டாக்டர் சன்னா, அமெரிக்காவில் உள்ள சுகாதார சம பங்கின் இடைவெளியை சுட்டிக்காட்டுகிறார். இந்த தொழில்நுட்பம் அதனைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார். "கண் பராமரிப்புக்கு இன்னும் குறைந்த அணுகல் உள்ள இடங்களுக்கு நாங்கள் அதை விரிவுபடுத்த வேண்டும்."என்றும் அவர் தெரிவித்தார்.

வயதானவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண் மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். நீரிழிவு கண் நோயைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு முறை வசதியாக இருந்தாலும், கண்களின் மற்ற குறைபாடுகளை கண்டறிவதன் முக்கியத்துவத்திலிருந்து, திசை திருப்பப்படாமல் இருப்பதும் முக்கியம்.

கிட்டப்பார்வை மற்றும் க்ளைகோமா போன்ற சிக்கல்களைக் கண்டறிவது, செயற்கை நுண்ணறிவு முறைகளுக்கு கடினமாக உள்ளது.

ஆனால் அந்த எச்சரிக்கைகள் இருந்தாலும் , " செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியதாக உள்ளது " என்கிறார் டாக்டர் சன்னா.

"நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் பரிசோதிக்கப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன். நீரிழிவு நோயின் சுமையைக் கருத்தில் கொண்டு, இது ஒரு சிறந்த தீர்வு என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் அவர்.

க்வின், மீண்டும் யார்க்ஷயரில் புதிய தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

அவரது நீரிழிவு ரெட்டினோபதியை முன்கூட்டியே கண்டறிய செயற்கை நுண்ணறிவு மாதிரி இருந்திருந்தால், "நான் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பேன்"என்றார் க்வின்.

கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?

1 week ago
மனித மூளை

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு, மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும் இந்த தரவுகள் உதவும் என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்

மனிதக் கருவின் மூளையின் மிக விரிவான 3டி உயர் தெளிவுத்திறன் படங்களை வெளியிட்டுள்ளது ஐஐடி மெட்ராஸ். 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் மூளையின் 5,132 பகுதிகள் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

மனித மூளை குறித்த அடுத்தகட்ட ஆய்வுகளுக்கும், நரம்பியல் துறையின் மேம்பாட்டிற்கும், மூளை தொடர்பான நோய்களின் சிகிச்சைக்கும் இது உதவும் என்று ஐஐடி மெட்ராஸ் கூறியுள்ளது.

'தரணி' (DHARANI) எனப் பெயரிடப்பட்டுள்ள மனிதக் கருவின் மூளை குறித்த இந்த புதிய தரவுத் தொகுப்பு, அனைத்து ஆராய்ச்சியாளர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கும் வகையில், ஓபன் சோர்ஸ் முறையில் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது.

மனிதக் கருவின் மூளை குறித்த இந்த ஆராய்ச்சியின் தனித்துவம் என்ன? இதனால் நரம்பணுவியல் துறையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படலாம்?

மனித மூளையை ஆய்வு செய்வதில் உள்ள தடைகள்

இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரோமேனியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட பல்துறை வல்லுநர் குழு, ஐஐடி மெட்ராஸின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டதாக ஆய்வுக் குழுவின் தலைவரும் பேராசிரியருமான மோகனசங்கர் சிவப்பிரகாசம் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"மனித மூளையை முழுமையாக ஆய்வு செய்வதில் உள்ள தடைகளைக் களையவே இந்த 'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை' 2022இல் நிறுவினோம்." என்கிறார் சிவப்பிரகாசம்.

தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பேசியவர், "மனிதக் கரு முதல் முதியோர்கள் வரை, மனிதர்களின் மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன, எவ்வாறு மூளை சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது" என்கிறார்.

மனித மூளை என்பது மிகவும் சிக்கலான அமைப்பைக் கொண்டது எனக் கூறும் அவர், "முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஒரு முழு மனித மூளையை செல் அளவில் பிரித்து, அதாவது அரை மைக்ரான் (Micron என்பது ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு) என்ற அளவில் பிரித்து, வரைபடமாக்கி, அதை 3டி முறையில் மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்" என்கிறார்.

ஆய்வுக்காக அரை மைக்ரான் அளவுக்கு மூளையின் பகுதிகளை வெட்டுவதில் பல சவால்கள் இருந்தன என்று கூறும் சிவப்பிரகாசம், "நாங்கள் இந்த ஆய்வை தொடங்கியது 2020இல். அப்போது தேவையான உபகரணங்கள் கூட கிடைக்கவில்லை. பிறகு கொரோனா பெருந்தொற்று கால சவால்கள் வேறு இருந்தன" என்கிறார்.

மூளைகள்

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு 14, 17, 21, 22 மற்றும் 24வது வார மூளைகள் என 5 இறந்த சிசுக்களின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன
மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பம் என்றால் என்ன?

மூளையின் பகுதிகளை ஆய்வு செய்ததில் இருந்து பெறப்பட்ட பல பெடாபைட்கள் அளவிலான (1 Petabyte = 10,48,576 ஜிகா பைட்கள் அல்லது GB) தரவுகளை, 3டி வடிவத்தில் கொண்டு வர புகழ்பெற்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Nvidia உதவியதாக ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது.

இப்போது வெளியாகியிருக்கும் இந்த 'தரணி' என்ற முதல் தரவுத் தொகுப்பு, 12 முதல் 24 வாரங்கள் வரையிலான மனித சிசுவின் மூளையின் விரிவான அதிநவீன வரைபடம் (Brain mapping) என்றும், அடுத்தடுத்த கட்டங்களாக வளரிளம் பருவத்தினர் முதல் முதியோர்கள் வரையிலான மனித மூளைக்கும் இதுபோன்ற தரவுகள் வெளியிடப்படும் என்று கூறுகிறார் சிவப்பிரகாசம்.

ஒரு மனித கருவின் மூளையின் வளர்ச்சிக்கு, 12 முதல் 24 வாரங்கள் என்பது மிகவும் முக்கியமான காலகட்டம் என்று கூறும் சிவப்பிரகாசம், 14, 17, 21, 22 மற்றும் 24வது வார மூளைகள் என 5 இறந்த சிசுக்களின் மூளைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த மூளை வரைபடம் (Brain mapping) என்பது கூகுள் வரைபடத்திற்கு இணையானதுதான் என்று கூறும் சிவப்பிரகாசம், "அதாவது கூகுள் மேப் உலகின் எந்தப் பகுதியையும், அதன் வீதிகள் வரை கூட 'ஜூம்' செய்து பார்க்க முடியும். அதேபோல தான், இந்த மூளை வரைபடமும். மூளையில் 100 பில்லியன் செல்கள் (பத்தாயிரம் கோடி) இருக்கிறது என்றால், எந்த செல்லை வேண்டுமானாலும் பார்க்க முடியும்."

"அதை மூளை வரைபடமாக்கும் தொழில்நுட்பம் மூலம் செய்கிறோம், அதற்கான தொழில்நுட்ப தளத்தையும் சொந்தமாக ஐஐடி மெட்ராஸ் உருவாக்கியுள்ளது." என்கிறார்.

ஐஐடி மெட்ராஸ்

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு 0.5 மைக்ரான் அளவில் மூளையின் பகுதிகளை வெட்டுவது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறுகிறார்
மூளையின் வரைபடம் குறித்த முந்தைய ஆய்வுகள்

கடந்த மே மாதம், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜெஃப் லிச்ட்மேன் மற்றும் கூகுள் ஆராய்ச்சியின் (Google research) டாக்டர் விரேன் ஜெயின் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் (Electron microscope) பயன்படுத்தி, கியூபிக் மில்லிமீட்டர் (Cubic millimeter) அளவிலான மனித மூளை திசுக்களின் ஒரு பகுதியை உயர் தெளிவுத்திறனில் (High resolution) படம்பிடித்தது.

அந்த மாதிரியின் திசுக்களை 5,000க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரித்து அந்தக் குழு ஆய்வு செய்தது. அதன் மூலம் 1,400 டெராபைட் (TB- 1 டெராபைட் என்பது 1000 ஜிபி) தரவுகள் பெறப்பட்டன. இந்த தரவுகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் அந்த மாதிரியில் உள்ள ஒவ்வொரு செல்லையும் 3டி வடிவத்தில் மீண்டும் உருவாக்கினர்.

ஆனால், மேலே கூறப்பட்ட ஆய்வு போல அல்லாமல், மனிதக் கருவின் மூளை முழுமையாக செல்-தெளிவுத் திறனில் (cell-resolution) டிஜிட்டல் முறையில் படமாக்கப்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று ஐஐடி மெட்ராஸின் அறிக்கை கூறுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஐஐடி மெட்ராஸ் தலைவர் காமகோடி, "இந்த ஆய்விற்கு தேவையான தொழில்நுட்பங்கள் அல்லது உபகரணங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அதிலும் 0.5 மைக்ரான் அளவில் மூளையின் பகுதிகளை வெட்டுவது தான் மிகப்பெரும் சவாலாக இருந்தது. அதற்கான கருவிகளையும் எங்கள் குழுவே வடிவமைத்தது" என்று கூறுகிறார்.

முழு மனித மூளையைப் பற்றிய இத்தகைய விரிவான ஆராய்ச்சி இதுவரை எங்கும் நடத்தப்படவில்லை என்று கூறிய காமகோடி, 3டி வடிவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தப்பட்ட இந்தத் தரவுகள் ஆய்வாளர்கள், நரம்பியல் துறை நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஓபன் சோர்ஸ் முறையில் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

"இந்த 'தரணி' திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தொகையைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் செலவிடப்பட்டுள்ளது." என்று கூறுகிறார் பேராசிரியர் மோகனசங்கர் சிவப்பிரகாசம்.

'சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்', கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள பல மருத்துவ நிறுவனங்களிடமிருந்து வெவ்வேறு வகையான 200-க்கும் மேற்பட்ட (இறந்துபோன மனிதக் கரு, குழந்தைகள், வளரிளம் பிள்ளைகள், வயது வந்தோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோரின் (பக்கவாதம், டிமென்ஷியா)) மூளைகளை ஆய்வுக்காக சேகரித்துள்ளது என ஐஐடி மெட்ராஸ் கூறுகிறது.

அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை, 3டி வடிவில் டிஜிட்டல் தொகுப்புகளாக மாற்ற ஆய்வாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அது தெரிவிக்கிறது.

சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம்

பட மூலாதாரம்,IIT MADRAS

படக்குறிப்பு, மனித மூளையை ஆய்வு செய்வதில் உள்ள தடைகளைக் களையவே சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையத்தை நிறுவினோம் என்கிறார் சிவப்பிரகாசம்
'அமெரிக்காவிடம் கூட இல்லாத தரவுத்தொகுப்பு'

இந்த ஆய்வின் முடிவுகள், நரம்பணுவியல் மற்றும் அது தொடர்பான துறைகளுக்கான ஆய்விதழான 'ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி'இல் (Journal of Comparative Neurology) விரைவில் வெளியிடப்படும் என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது. இந்த ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி ஆய்விதழ் 1891ஆம் முதல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆய்வை வெளியிட ஏற்றுக்கொண்ட பிறகு, ஐஐடியிடம் கருத்து தெரிவித்துள்ள 'ஜர்னல் ஆஃப் கம்பேரேட்டிவ் நியூராலஜி ஆய்விதழின்' ஆசிரியர் சுசானா ஹெர்குலானோ-ஹவுசல், "மனிதக் கரு மூளை பற்றி பொதுவில் அணுகக்கூடிய மிகப்பெரிய டிஜிட்டல் தரவுத்தொகுப்பு என்றால் அது 'தரணி'தான். ஆலன் பிரைன் அட்லஸ்-க்கு (Allen brain atlas) செலவிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் பத்தில் ஒரு பங்குதான் இந்த திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது." என்கிறார்.

'ஆலன் பிரைன் அட்லஸ்' என்பது மனித மூளை குறித்த தகவல்கள் மற்றும் வரைபடங்களின் தொகுப்பாகும். அவையும் 'தரணி' போல பொதுவில் கிடைக்கின்றன.

மனிதர்களின் மரபணுக்களில் 90 சதவீதம் எலிகளுடன் ஒத்துப்போவதால், எலிகளின் மூளையுடன் ஒப்பிட்டு மனித மூளை குறித்த வரைபடங்களை 'ஆலன் பிரைன் அட்லஸ்' வழங்குகிறது, ஆனால் ஐஐடி மெட்ராஸ் போல முழுமையான மனித கரு மூளையின் வரைபடங்கள் அல்ல.

'மைக்ரோசாப்ட்'இன் இணை நிறுவனர் பால் ஆலனின் ஆராய்ச்சி நிறுவனமான 'ஆலன் இன்ஸ்டிடியூட் ஃபார் பிரைன் சயின்ஸ்' இதை உருவாக்கியுள்ளது.

இந்த ஆய்வின் விளைவாக, மனித மூளைக்கான வரைப்படம் தொடர்பான துறையில், ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூடுக்கு அடுத்தபடியாக ஐஐடி மெட்ராஸ் இணைகிறது என்று சுசானா கூறுகிறார்.

ஐஐடி மெட்ராஸின் இந்த தரவுகள் அமெரிக்காவின் ஆலன் பிரைன் இன்ஸ்டிடியூட்டிடம் கூட கிடையாது என்று கூறும் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, "உலகின் பல நாடுகள் மனித மூளை குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. ஆனால் 3டி வடிவில் முழு மனித மூளையைப் பற்றி அறிய எங்கள் தரவுகளே முதன்மையானதாக இருக்கும்." என்று கூறுகிறார்.

இந்த ஆய்வின் பயன்கள் என்ன?
லட்சுமி நரசிம்மன்
படக்குறிப்பு, மூளை வளர்ச்சியின் சிக்கலான செயல்முறைகளைப் படிக்க இந்த வரைபடங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்கிறார் லட்சுமி நரசிம்மன்

ஒவ்வொரு ஆண்டும் உலகில் பிறக்கும் 25 மில்லியன் குழந்தைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் பிறக்கிறது என ஐநாவின் யுனிசெப் (UNICEF) அமைப்பு கூறுகிறது.

இதைச் சுட்டிக்காட்டி, இதுபோன்ற இந்திய மனித கருவின் மூளை குறித்த ஒரு தரவுத் தொகுப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று கூறுகிறார், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் மற்றும் நரம்பியல் துறையின் தலைவர், மருத்துவர் லட்சுமி நரசிம்மன்.

இந்தியாவின் பழமையான மருத்துவக்கல்லூரியான, சென்னை மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறையின் முன்னாள் இயக்குனரான இவர், "இந்தியர்களின் மூளை வரைபடம் குறித்த ஒரு தரவுத் தொகுப்பு இதுவரை உருவாக்கப்பட்டதில்லை. நரம்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண நாம் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பயணத்தில் இந்த ஆய்வு ஒரு முக்கியமான மைல்கல்" என்கிறார்.

நரம்பியல் இணைப்புகளின் உருவாக்கம், வளர்ச்சி முறைகள் மற்றும் மூளைப் பகுதிகளின் வேறுபாடு உள்ளிட்ட மனிதக் கருவின் மூளை வளர்ச்சியின் சிக்கலான செயல்முறைகளைப் படிக்க இந்த வரைபடங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் என்று அவர் கூறுகிறார்.

"சாதாரண, அதாவது எந்தப் பிரச்னையும் இல்லாத மனிதக் கருவின் முழுமையான மூளை வரைபடம் இருந்தால் தானே, அதனுடன் ஒப்பிட்டு அசாதாரணமான அல்லது பிரச்னைக்குரிய மூளை கட்டமைப்பு எது என்பதை தெரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக நரம்பியல் மற்றும் மூளை வளர்ச்சிக் கோளாறுகளை ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண உதவும்." என்கிறார் லட்சுமி நரசிம்மன்.

இந்த விரிவான மூளை வரைபடங்கள் மருத்துவ மாணவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் நரம்பியல் விஞ்ஞானிகளுக்கு விலைமதிப்பற்ற கல்விக் ஆதாரங்களாக செயல்படக்கூடும் என்று கூறும் லட்சுமி நரசிம்மன், கருவின் மூளை உடற்கூறியல் பற்றிய தெளிவான பார்வையை உலகிற்கு வழங்குவதால், இந்த ஆய்வு நிச்சயம் பாராட்டப்படவேண்டிய ஒன்று என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cge9gy4zdlvo

பூமியில் மிக ஆழமான துளை போடும் திட்டம் - எதற்கான தேடுதல் வேட்டை இது?

1 week 4 days ago
புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,QUAISE ENERGY

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,நோர்மன் மில்லர்
  • பதவி

நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும்.

ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல.

அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்ளன. அவை, பூமியின் கீழே எரியும் புவிவெப்ப நெருப்பால் சூடாகின்றன. சூடான நீர் மற்றும் நீராவி அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் தரையில் இருந்து வெளியேறி, கொதிக்கும் நீர் மற்றும் நீராவியை வெந்நீருற்று உருவாக்குகிறது.

 

ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அதாவது, பூமியின் உள்ளே புவிவெப்ப ஆற்றல், அங்குள்ள 85% வீடுகளுக்கு வெப்பம் அளிக்க பயன்படுகிறது. நாட்டின் மின்சார உற்பத்தில் 25% இதில் இருந்து கிடைக்கிறது.

புதுப்பிக்கத்தக்க வளத்தைப் பயன்படுத்துவதற்கு, இது ஒரு அருமையான வழியாகும்.

வற்றாத பசுமை ஆற்றல் மூலமான, புவிவெப்ப ஆற்றலை பூமி வழங்குகிறது. பூமியின் மையத்திலிருந்து வெப்பம் தொடர்ந்து உமிழப்படுவதாலும், நமது பூமியின் மேலோட்டத்தில் இயற்கையாக நிகழும் கதிரியக்கத் தனிமங்களின் சிதைவாலும், காற்று அல்லது சூரிய சக்தியைப் போலல்லாமல், புவிவெப்ப ஆற்றல் "எப்போதும் இயங்கும்".

புவிவெப்ப ஆற்றல், ஒரு நம்பிக்கைக்குரிய ஆற்றல் மூலமாகும். இது ஒரு நல்ல தீர்வாக இருந்தாலும், இந்த பரந்த ஆற்றல் மூலத்தை திறம்பட பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும்.

பூமி தொடர்ந்து அதிகளவு வெப்பத்தை வெளியிட்டு வருகிறது.

பூமியில் பல மடங்காக உள்ள தேவைகளைச் சமாளிக்க இந்த வெப்பம் போதுமானது.

இருப்பினும், இந்த வெப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலானது .

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலையே அதிகம் பயன்படுத்துகிறது.
உலகெங்கிலும் உள்ள புவிவெப்ப மின் நிலையங்கள்

தற்போது உலகில் 32 நாடுகளில் மட்டுமே புவிவெப்ப மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

உலகம் முழுவதும் 700க்கும் குறைவான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 2023 இல் சுமார் 97 டெராவாட் மணிநேர மின்சாரம்(TWh) உற்பத்தி செய்யப்பட்டது.

இது அமெரிக்காவில் மட்டும் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவில் பாதிக்கும் குறைவானது.

மேலும் உலகளாவிய ஆற்றல் தொகுதியில், புவிவெப்ப ஆற்றலின் சாத்தியமான பங்களிப்புக்கான மதிப்பீடுகளை விட இந்த அளவு மிகவும் குறைவு.

ஏனென்றால், புவிவெப்ப ஆற்றல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆண்டுக்கு 800 - 1400TWh மின்சாரத்தை மேலும் 3,300-3800TWh வெப்பத்தையும் வழங்க முடியும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர் .

புவிவெப்ப ஆற்றல் நிபுணரான அமண்டா கோல்கர், அமெரிக்காவில் உள்ள தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் (NREL) புவிவெப்ப திட்ட மேலாளராக உள்ளார்.

"பூமியின் இயற்கையான வெப்ப ஆற்றல், தூய்மையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவும்" என்று அமண்டா கோல்கர் நம்புகிறார்.

2023 ஆம் ஆண்டு அறிக்கையில், தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள புவிவெப்ப ஆற்றலின் திறனை அவர் எடுத்துரைத்தார்.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளமான ரெய்க்ஜேன்ஸில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு
பத்து மடங்கு அதிக ஆற்றலை வழங்கும் 'சூப்பர்ஹாட்' கிணறுகள்

ஆனால் ஒவ்வொரு நாடும் ஐஸ்லாந்தைப் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அங்கு சுமார் 120-240C (248-464F) வெப்பநிலையில் சூடான நீரின் நீர்த்தேக்கங்களை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் எளிதாக அணுக முடியும் .

நாட்டின் பிற பகுதிகளில், 1.5 மைல் (2.5 கிமீ) ஆழம் வரை தோண்டப்பட்ட கிணறுகள் 350C (662F) வரையிலான வெப்பநிலைக்கு அணுகலை வழங்குகின்றன.

உதாரணமாக, ரெய்க்ஜேன்ஸில் உள்ள ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளம், 600C (1112F) அளவுக்கு அதிக வெப்பமடையும் திரவங்களை அணுகுவதற்கு 2.9 மைல்கள் (4.6 கிமீ) சோதனைக் கிணறுகளைத் தோண்டியுள்ளது.

ஏற்கனவே, ஆண்டுக்கு 720 ஜிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்ய 320C (608F) வெப்பநிலையில் ஆழமற்ற கிணறுகளைப் பயன்படுத்தி தினசரி வெப்பப் பிரித்தெடுத்தல் நடைபெறுகிறது.

புவிவெப்ப ஆற்றல் பரவலாக இல்லாததற்கு ஒரு காரணம், அந்த ஆற்றலைப் பிரித்தெடுக்கத் தேவையான அதிக முன் முதலீடு ஆகும்.

ஆனால் தொழிநுட்ப உதவியின்றி அதைச் செய்வதும் கடினமாகும். புவிவெப்ப ஆற்றலின் பலன்களை உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல, பூமியின் உள்ளே ஆழமாக தோண்டி எடுக்க வேண்டும்.

மின்சாரம் உற்பத்தி செய்ய அல்லது வீடுகளுக்குத் தேவையான அளவு வெப்பநிலை அதிகமாக கிடைக்கும் பகுதிகளை நாம் அடைய வேண்டும்.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஐஸ்லாந்தில் காணப்படும் வெந்நீரூற்று
இதில் இருக்கும் சவால்கள் என்ன?

பூமியின் பெரும்பகுதி முழுவதிலும், பூமியின் வெளிப்புற அடுக்கின் வழியாக நீங்கள் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சராசரியாக 25-30C (77-86F) வெப்பநிலை அதிகரிக்கிறது .

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், பூமியின் வெளிப்புற அடுக்கின் உள்ளே 5 கிமீ தூரத்திற்கு, சுமார் 140C (284F) ஆக மேற்பரப்பு வெப்பநிலை உள்ளது என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு கூறுகிறது.

220பார்களுக்கு (கடல் மட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி அழுத்தம் ஒரு பார் எனப்படும்) மேலான அழுத்தத்தில் நீர் வெப்பநிலை 374C (705F) ஐத் தாண்டிய ஒரு புள்ளியை அடைய முடியும்.

இங்குதான் நீர், அதன் தீவிர ஆற்றலை அடைகின்றது. இது 'சூப்பர் கிரிட்டிக்கல் நிலை' என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் , நீர் திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாத வடிவத்தில் உள்ளது . அது வெப்பமாகவும் அதிக அழுத்தத்தோடும் இருந்தால், அங்கு புவி வெப்ப ஆற்றல் அதிகமாக கிடைக்கும்.

உண்மையில், அதி சூடான புவி வெப்பக்கிணறு ஒன்று, வணிக புவிவெப்ப கிணறுகள் உற்பத்தி செய்யும் ஆற்றலை விட ஐந்து முதல் 10 மடங்கு ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம் கூறுகிறது.

புவிவெப்ப ஆற்றலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், வெப்பமான பகுதிகளை அடைய பூமியில் போதுமான ஆழத்தில் துளையிடுவது கடினம்.

பாரம்பரிய கருவிகள், வைர நுனிகளைப் போல் கூர்மையான கருவிகள் கூட, மிகவும் வெப்பமான பகுதிகளை அடைந்து பூமியில் ஆழமாக துளையிடும் அளவுக்கு வலுவாக இல்லை.

நிலத்தடியில் உள்ள அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் துளையை எளிதில் சேதப்படுத்தும்.

மேலும் குப்பைகள் இல்லாமல் துளையை வைத்திருப்பதும் கடினம்.

எடுத்துக்காட்டாக, 2009-ஆம் ஆண்டில், ஐஸ்லாந்தின் துளையிடல் திட்டத்தில் பணிபுரியும் ஒரு குழு , பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.2 மைல் (2 கிமீ) கீழே உள்ள கிராஃப்லா எரிமலையில் உள்ள மாக்மா அறைக்குள் (பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திரவ பாறையின் உட்பகுதி) துளையிட்டபோது கவனக்குறைவாக 'சூப்பர் கிரிட்டிகல்' பகுதியை அடைந்தது.

அந்தத் துளையிலிருந்து வெளிப்படும் சூடான நீராவி, அதிக அமிலத்தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்துவதும் கடினமாக இருந்தது . அங்கு உயர் அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்துவதும் கடினமாக இருந்தது. மேலும் வால்வு செயலிழந்து துளைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு அதை இரண்டு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் வெளியேற்ற வேண்டியிருந்தது .

ஆழமான துளையிடுதல் முறை, விலையுயர்ந்தது. மேலும் துளையிடுவதற்கு நீண்ட நேரம் ஆகலாம்.

மனிதர்களால் தோண்டப்பட்ட ஆழமான துளை, பனிப்போருக்கு முந்தையது.

இருப்பினும், பூமியின் மேலோட்டத்தில் முடிந்தவரை துளையிடுவதற்கு வல்லரசுகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தபோது.

சோவியத்தால் 7.6 மைல் (12.2 கிமீ) வரை பாறை வழியாக ஊடுருவ முடிந்தது. கோலா தீபகற்பத்தில், ஆர்க்டிக் வட்டத்தில் 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலை (மிக ஆழமான துளை ) சோவியத் உருவாக்கியது.

அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தேவைப்பட்டன.

தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) மதிப்பீட்டின்படி , 1 கிமீ ஆழத்தில் கிணறு தோண்டுவதற்கான செலவு சுமார் 2 மில்லியன் டாலர் செலவாகும். அதே நேரத்தில் இதே அளவில் நான்கு மடங்கு ஆழம் தோண்டுவதற்கு 6 மில்லியன் டாலர் முதல் 10 மில்லியன் டாலர் வரை செலவாகும்.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரஷ்யாவில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான துளையான 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலின் காட்சி
ஆராய்ச்சியில் எம்.ஐ.டி

ஆழமான புவிவெப்ப ஆற்றலை அணுகுவது சவாலானதாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்க பலன்களையும் வழங்குகிறது.

பூமியின் மிக வெப்பமான பகுதிகளை நாம் அடைந்தவுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

எரிவாயு போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதை விட இது மலிவானது, மேலும் புவி வெப்ப ஆற்றல், குறைவான பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் சிறந்தது.

இந்த சவால்களை சமாளிக்க, விஞ்ஞானிகளும் நிறுவனங்களும் பூமியில் ஆழமாக துளையிடுவதற்கு புதிய நுட்பங்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகின்றன.

அவ்வாறு செய்வதன் மூலம், முன்னர் பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் புவிவெப்ப ஆற்றலின் திறனைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

உதாரணமாக, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology- MIT) விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட குவைஸ் எனர்ஜி என்ற நிறுவனம், 500C (932F) அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை அணுகுவதற்கு 12 மைல்கள் (20km) வரை ஆழமான பகுதிகளில் துளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

"மற்றவர்கள் தரையில் மண்வெட்டிகளை வைக்கும்போது, நாங்கள் முதல் முறையாக மைக்ரோவேவ்களைத் தரையில் வைக்கிறோம்," என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் மாட் ஹவுட் கூறுகிறார்.

அவரும் அவரது நண்பர்களும் மில்லிமீட்டர் அலை ஆற்றல் கற்றைகளைப் பரிசோதித்து வருகின்றனர். அதன் மூலம் கடினமான பாறையும் கூட ஆவியாகின்றன.

இது நுண் அலைகளைப் போன்ற உயர் ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை மையப்படுத்துகிறது. பாறையின் ஒரு பகுதியின் மீது, அதை 3,000C (5,432F) வரை சூடாக்குகிறது. இதனால் அது உருகி ஆவியாகிறது.

கதிர்வீச்சை இயக்குவதன் மூலம் அது பாறை வழியாக துளையிடும். இதன் மூலம், பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும். இது பூமியின் ஆழமான, வெப்பமான பகுதிகளில் துளையிட அனுமதிக்கிறது.

"மில்லிமீட்டர்-அலை துளையிடுதல் என்பது ஆழத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய ஒரு செயல்முறையாகும். மேலும் அழுக்கு, தூசி நிறைந்த சூழல்கள் மூலமாகவும் மில்லிமீட்டர்-அலை ஆற்றலை கடத்த முடியும்." என்று ஹவுட் கூறுகிறார்.

மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் 'பிளாஸ்மா சயின்ஸ் அண்ட் ஃப்யூஷன் சென்டரின் பொறியியலாளர் பால் வோஸ்கோவ்' நடத்திய அணுக்கரு இணைவு பிளாஸ்மா சோதனைகளிலிருந்து இத்தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,QUAISE ENERGY

படக்குறிப்பு, பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும்
தொழில்நுட்பத்தில் உருவான மாற்றங்கள்

1970 களில் இருந்து அணுக்கரு இணைவு உலைகளில் பிளாஸ்மாவை சூடாக்குவதற்கான ஒரு வழியாக, மில்லிமீட்டர்-அலை ஆற்றல் ஆராயப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வோஸ்கோவ் இத்தொழில்நுட்பத்திற்கான மற்றொரு பயனும் இருப்பதாக வெளிப்படுத்தினார்.

பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்'(கைரோட்ரான் என்பது வெற்றிட மின்னணு சாதனம் (VED) அதிக சக்தியும், உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளையும் உருவாக்குகிறது) எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை ஆய்வகத்தில், சிறிய பாறை மாதிரிகளில் மட்டுமே சோதித்துள்ளனர்.

இருப்பினும், இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.5 மீ (11.5 அடி) வரை பாறை வழியாக துளையிட முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது .

மேலும் மைக்ரோவேவ் பீம், பாரம்பரிய முறையைப் போல தேய்ந்து போகாது அல்லது அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் மற்ற நன்மைகள் உள்ளன.

குவைஸ் ஆற்றலானது, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் களச் சோதனைகளைத் தொடங்குவதற்கு முன், மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்பம் ஆய்வக சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது.

ஆனால் மில்லிமீட்டர்-அலை துளையிடும் தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து, துளையிடும் செயல்பாட்டிற்கு எடுத்துச் செல்வது இன்னும் சவாலாக இருக்கும்.

"ஆழமான உயர் அழுத்த மேற்பரப்பு சூழலில் அவை இதற்கு முன் பயன்படுத்தப்படவில்லை" என்று வோஸ்கோ கூறுகிறார்.

"துளையிடுதலில் பயன்படுத்தப்படும் தீவிர ஆற்றல்- பொருள் இரண்டின் தொடர்பு காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஒரு புதிய கற்றல் முறை தேவைப்படுகிறது." என்கிறார் வோஸ்கோ.

இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட 'ஜிஏ டிரில்லிங்', பூமியின் மேலோட்டத்தில் துளையிடுவதற்கு உயர் ஆற்றல் துளையிடும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது.

இந்த முறை, பிசுபிசுப்பான உருகிய பாறை உருவாகுவதைத் தவிர்க்கிறது. உருகிய பாறைகளை அகற்றுவது கடினம்.

"பாறையை நொறுங்கும் அளவு அதிர்வுடன் இந்தச் செயல்முறை மிக விரைவாக நடப்பதால், பாறை உருகுவதற்கு நேரம் இல்லை" என்கிறார் ஜிஏ டிரில்லிங்கின் தலைமை நிர்வாகியும் தலைவருமான இகோர் கோசிஸ்.

"ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர்கள் (3-5 மைல்கள்) வரை செல்வது, நமது தற்போதைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான இலக்காகும். பின்னர் 10 கிமீக்கு அதிகமாக துளையிடுவது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்' எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளை பயன்படுத்தப்பட்டது.
நகரங்களிலும் இந்த வேலை நடைபெறலாம்

புவிவெப்ப துளையிடுதலுக்கான மற்றொரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறை, Geothermal energy and Geofluids (GEG) குழுவின் தலைமையிலான ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆராயப்படுகிறது.

அவர்கள் பாறையை உடைக்க 6,000 டிகிரி செல்சியஸில் நம்பமுடியாத அளவிற்கு அயனியாக்கம் (ionised gas ) செய்யப்பட்ட வாயுவின் மூலம் சக்திவாய்ந்த வெடிப்புகளைப் உருவாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இந்த முறை, பாறை உருகுவதைத் தவிர்க்கிறது, மேலும் ஆழமாக துளையிடுவதை எளிதாக்குகிறது மற்றும் பூமியின் வெப்பத்தை மிகவும் திறமையாக அணுகுகிறது.

GA டிரில்லிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கான்ஸ்டான்டினா வோகியாட்சாகியுடன் இணைந்து, மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தி சூப்பர் கிரிட்டிகல் திரவங்களைப் புரிந்துகொண்டு கட்டுப்படுத்துகிறது.

பிளாஸ்மா துளையிடல் மூலம் அணுகப்பட்ட பூமி மூலங்களிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க இந்த திரவங்களைப் பயன்படுத்தலாம்.

சில நிறுவனங்கள் புவிவெப்ப துளையிடல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விண்வெளி ஆய்வுகளை எதிர்பார்க்கின்றன. 475C (887F) வெப்பநிலையை எட்டக்கூடிய வீனஸின் மேற்பரப்பில் கிரக ஆய்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், புவிவெப்ப துளையிடும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

உதாரணமாக, Ozark Integrated Circuits என்ற நிறுவனம், மிக அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய மின்னணு பாகங்களை உருவாக்கி வருகிறது.

குறிப்பாக, இந்த மின்னணு பாகங்கள் புவிவெப்ப ஆற்றலுக்காக துளையிடும் கருவிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிக வெப்பநிலை கொண்ட இடங்களை அடையலாம்.

தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம், அதன் சொந்த பங்கிற்கு, சிக்கலான நிலத்தடி சூழல்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு பக்கம் திரும்பியுள்ளது.

இது, சூப்பர் கிரிட்டிகல் நீருக்கான சிறந்த இடங்களைக் கண்டறிய முயற்சிக்கிறது. அதே போல், அவற்றைக் கண்டறியும் முயற்சிகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தவறுகளைக் கணிக்கவும் , கண்டறியவும் உதவுகின்றன.

புவி வெப்ப ஆற்றல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

பட மூலாதாரம்,MIT

மேலும் சில நிறுவனங்கள் ஏற்கனவே பூமியில் ஆழமாக ஊடுருவி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஜெரெஸ்ட்ரீடில் உள்ள ஒரு தளத்தில் இரண்டு செங்குத்து கிணறுகளுடன் மூன்று மைல் (5 கிமீ) ஆழத்தை அடைந்ததாக புவிவெப்ப ஆற்றல் நிறுவனமான ஈவர், பிபிசியிடம் கூறிகிறது.

ஈவர் லூப் என அழைக்கப்படும் மூடிய லூப் வடிவமைப்பிற்குள் நீரை சுற்றுவதன் மூலம் புவிவெப்ப வெப்பத்தை மேற்பரப்பிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆலை பூமியின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்.

மேலும் இம்முறை மூலம், அவர்கள் குளிர்ந்த நீரைச் சுழற்ற திட்டமிட்டுள்ளனர். அதை ஆழமான நிலத்தடியில் சூடாக்குகிறார்கள்.

பின்னர் இந்த சூடான நீரை மீண்டும் மேற்பரப்புக்கு கொண்டு வந்து மின்சாரம் தயாரிக்கவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் பயன்பாட்டிற்கு அனுப்பவும் முடியும்.

ஈவர், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பிலிருந்து புவி வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ரெட்ஃர்ன் கூறுகிறார்

"எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் 11 கிமீ (6.8 மைல்கள்) வரை துளையிட விரும்புகிறது" என்று புவியியலாளரும் ஈவர் இணை நிறுவனருமான ஜீனைன் வானி கூறுகிறார்.

"அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அதி வெப்ப பாறைகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார்.

ஆழமான புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உந்துதல், பழைய படிம எரிபொருள் மின் நிலையங்களுக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வரக்கூடும்.

ஏனெனில் நாடுகள் தங்களின் பாரம்பரிய கார்பன்-உமிழும் ஆற்றல் மூலங்களை கைவிட விரும்புகின்றன .

நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் கைவிடப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அடையாளம் கண்டுள்ளார், வோஸ்கோவ்.

அடுத்த பத்தாண்டுகள் முடிவதற்குள் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஆழமான வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க, இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்படலாம் என்று அவர் நம்புகிறார்.

ஒரு காலத்தில் படிம எரிபொருட்களை நம்பியிருந்த நிலக்கரி மின் நிலையத்தை கற்பனை செய்து பாருங்கள், இப்போது அது சுத்தமான ஆற்றல் மையமாக மாற்றப்படும் என்பது புவிவெப்ப ஆற்றல் குறித்து எதிர்காலத்திற்கான பார்வை.

பூமியின் வெப்பத்தை நிலத்தடியின் ஆழத்தில் இருந்து எடுப்பதன் மூலம், சுத்தமான மின்சாரத்தை உருவாக்க முடியும்.

இருப்பினும், உயர் வெப்பநிலை ஆற்றல் மூலங்களை அணுகும் அளவுக்கு ஆழமாக துளையிடுவதில் சவால் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக்இன்ஸ்டாகிராம்எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/ckg90lxnj17o

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி

1 week 5 days ago

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முற்றிலும் இலவச Software Engineering பாடநெறி

இலங்கை கணினிச் சங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் DP Education அனுசரணையில் மொறட்டுவை பல்கலைக்கழகம் இலவச மென்பொருள் பாடநெறியை வழங்குகிறது.

Trainee Full Stack Developer எனப்படும் இந்த பாடநெறியானது software engineering மற்றும் web development அறிவை வழங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் பாடநெறியில் பின்வரும் விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன.

1. Python for Beginners

2. Web designing for beginners

3. Python programming

4. Front-end web development

5. Server-side web programming

6. Professional practice in software development (Soft skills & Technical skills)

பாடநெறி முடிவில் பெறுமதிமிக்க சான்றிதழும் மொறட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும்.

இன்றைய நாட்டு நிலைமையில் சாதாரண தரப் பரீட்சை ,உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் மாணவர்கள் IT படிக்கிறேன் என்று பணத்தை அள்ளி செலவழிக்காமல் இத்தகைய பெறுமதியான இலவச பாடநெறியை கருத்திற் கொள்ளவும்.

நீங்களும் இவ்விலவச பாடநெறியை கற்க விரும்பினால் கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்.

https://open.uom.lk

 

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிரவும்

விண்ணில் ஏவப்பட்ட ப்ரோபா-3: செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி சூரியனை ஆராயப் போவது ஏன்?

2 weeks 2 days ago
ப்ரோபா-3: செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும் செயற்கைக்கோள்

பட மூலாதாரம்,ESA

படக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர்.

ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது.

ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது.

ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கப் போவது எப்படி?

பட மூலாதாரம்,ISRO

இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும்.

இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தில் விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்?

இரண்டு செயற்கைக் கோள்கள் எதற்காக?

இந்தத் திட்டம் ஒருவகையில் மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இதில் ஒன்றல்ல, இரண்டு செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிலையம் பயன்படுத்துகிறது.

அவற்றுக்காக, புதிய வகைத் தொழில்நுட்பங்கள், புதிய அல்காரிதம்கள், புதிய மென்பொருள்கள், சென்சார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரிதான வகையில், ப்ரோபா-3 திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுவது ஏன்?

ஆண்டுக்கு 50 முறை சூரிய கிரகணத்தை ப்ரோபா-3 உருவாக்கும்.

பட மூலாதாரம்,ESA SCIENCE\X

இரண்டு செயற்கைக் கோள்களையும் "துல்லியமான பாதையில் நிலைநிறுத்தி" அவற்றை ஒன்றாகப் பறக்கச் செய்து ஒரு நிலையான கட்டமைப்பு பராமரிக்கப்படும்.

அதாவது, இரண்டும் விண்வெளியில் நெருக்கமாக, ஒரு நிலையான வடிவத்தில் நகரும். இந்த வகையான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. செயற்கைக்கோள்கள் இரண்டுக்கும் இடையே ஒரே தொலைவையும் நோக்குநிலையையும் பராமரிக்க ஒன்றிணைந்து செயல்படும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், போர் விமான சாகசங்களின்போது, இரண்டு போர் விமானங்கள் நெருக்கமாக இணைந்து பறப்பதைப் பார்த்திருப்போம். அதைப் போன்ற ஒரு செயல்முறையை இந்தத் திட்டத்தில், விண்வெளியில் இரண்டு செயற்கைக் கோள்கள் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம்.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-1, 2 ஆகியவை இந்தத் திட்டத்தின் முன்னோடிகள். இதில் ப்ரோபா-1, 2001ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ப்ரோபா-2 2009இல் ஏவப்பட்டது.

ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுக்கள் ப்ரோபா-3 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.

 
ப்ரோபா-3 சூரியனை எப்படி ஆய்வு செய்யும்?
ப்ரோபா-3 மிஷனை ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆய்வாகும்.

பட மூலாதாரம்,ESA SCIENCE\X

இரண்டு செயற்கைக் கோள்களும் இணைந்து பறக்கும்போது அவற்றின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரண்டுக்குமான இடைவெளியில் ஒரு மில்லிமீட்டர் மாறுபட்டாலும், இது பலனளிக்காது.

ஒரு செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும், அதனுடனான தொடர்பை, பாதை அமைப்பை நிலைநிறுத்த மற்றொரு செயற்கைக் கோளும் அதே வகையில் துல்லியமாக நகர வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே இந்த இணைப்பு சாத்தியப்படும்.

சூரிய ஒளியால் கண்கள் கூசுவதைத் தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துவோம், அல்லவா! அதையே தொலைநோக்கி போட்டுக் கொண்டால் எப்படியிருக்குமோ, அப்படிப்பட்ட கருவிகள்தான் ப்ரோபா-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு செயற்கைக்கோள்கள்.

சூரியனின் பிரகாசம் அளவிடற்கரியதாக இருப்பதால், அதன் வளிமண்டலம் மற்றும் அதிலுள்ள பிற சிறிய பொருள்களை ஆய்வு செய்வது மிகக் கடினம். ஆகவே, அதற்கு உதவும் வகையில் இவை செயல்படுகின்றன.

 
சூரியனைப் பற்றி ஆய்வு செய்யும் ப்ரோபா-3

பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY\X

படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-3 இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது.

இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், சூரியனின் பெரும்பகுதியை மறைப்பதன் மூலம் அக்கல்ட்டர் என்ற செயற்கைக்கோள் ஒரு செயற்கையான கிரகணத்தை உருவாக்கும். இதன் விளைவாக, சூரியனின் மிகப் பிரகாசமான ஒளி தடுக்கப்படும்.

இதன்மூலம், சூரியனின் கொரோனா படலம், கொரோனாகிராஃப் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் மற்றொரு செயற்கைக் கோளுக்கு தெரியும் வகையிலான அமைப்பை இரண்டும் இணைந்து உருவாக்கிக் கொள்ளும். பிறகு குறைவாக அறியப்பட்ட சூரியனின் மேற்பரப்பில் உள்ள அம்சங்களைப் படம்பிடித்து கொரோனாகிராஃப் ஆய்வு மேற்கொள்ளும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும். அந்த வேளையில் மற்றொன்று சூரியனை கண்காணிக்கும். இந்த இரண்டுமே நீள்வட்டப் பாதையில் ஒன்றாக நிலைநிறுத்தப்படும்.

ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கப் போவது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ப்ரோபா-3 ஆய்வு செய்யும்.

எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் தொலைநோக்கியாகச் செயல்படும், மற்றொன்று துல்லியமாக 150 மீட்டர் தொலைவில் அதற்கு உதவும் வகையில் நிலைநிறுத்தப்படும். இப்படி நிலைநிறுத்துவது, சூரியனின் கொரோனா படலத்தைக் கண்காணிப்பதை எளிதாக்கும்.

சூரியனை ஆய்வு செய்யும் கொரோனாகிராஃப் கருவி, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் ப்ளாஸ்மா கதிர்களின் வெப்பத்தை, கொரோனா படலத்தில் இருக்கும் சூரியக் கதிர்களை ஆய்வு செய்யும்.

சூரிய மண்டலத்தின் விண்வெளிப் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்களான, சூரியப் புயல், சூரியக் காற்று ஆகியவற்றின் தோற்றுவாயாக இந்த கொரோனா படலம் இருப்பதால், அதை ஆய்வு செய்யும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், சூரியனால் வெளியேற்றப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சூரியத் துகள்கள் மூலம் விண்வெளியில் ஏற்படும் நிலைமைகளை அறியலாம். இந்த ஆய்வுத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

நீங்களும் கார் மெக்கானிக்தான்

2 weeks 5 days ago

கார்களில் ஏற்படும்  நம்மால் சரி செய்யப்படக்கூடிய கோளாறுகளை இவர் விளக்குகிறார்.

இதனை ஏற்பதும் விடுவதும் நமது இஷ்டமே.

ஆனால் ஒன்று  மெக்கானிக்கிட்ட போனால் உங்களுக்கு 3000 டொலர் செலவாகியிருக்கும் என்று அடிச்சு விடுறார் அதுதான் நெருடல். ஏனென்றால் நம்மவர்களில் சிலர் வைத்திருக்கும் காரே 3000 டொலர்தான் வரும்.

..................................................................

இயந்திரம் குலுங்குவது ஏன் அதை எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார்

 

கார் கதவு , Fan belt  எழுப்பும் சத்தங்களை சவர்க்காரத்தின் உதவியுடன் எப்படி சரி செய்யலாம் என்று சொல்கிறார்.

எஞ்சின் லைட் எரிந்தால் அதனை சரி செய்வதுபற்றி

 உருளைக்கிழங்கால் தேய்த்தால் எவ்வளவு மழை அடித்தாலும் கார் கண்ணாடி இருளாகாது என்கிறார்

 கார் டயர் பற்றிய தகவல்

 

கார் திறப்பு காருக்குள் சிக்கிக்கொண்டால் 

பிரேக் திடீரென பிடிக்காவிட்டால், ஆனால் எல்லா காருக்குமிது பொருந்தாது

 

காருக்குள் லொகேற்றர் பொருத்தியிருந்தால் கண்டுபிடிப்பது எப்படி

மேலும் சில 

 

அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

3 weeks ago
அணுக்கரு கடிகாரங்கள்

பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN

படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரங்களைக் காட்டிலும் துல்லியமானதாக இருக்கும் (சித்தரிப்பு படம்)
  • எழுதியவர், அலெஹாண்ட்ரா மார்டின்ஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்

“கோடிக்கணக்கான ஆண்டுகள் ஓடினாலும் ஒரு நொடியைக்கூட தவறவிடாத கைக்கடிகாரத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.”

“இன்னும் நாங்கள் அந்த அளவுக்குத் துல்லியமான ஒன்றைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் நாங்கள் அதை நெருங்கிவிட்டோம்,” என்று அமெரிக்காவிலுள்ள தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIST) ஆராய்ச்சியாளரும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான இயற்பியலாளர் ஜன் யே தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் குறிப்பிடும் கடிகாரம், அணுக்கரு கடிகாரம் (Nuclear clock).

 

சமீபத்தில் நேச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் ஜன் யேவும் சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவும் இந்தக் கடிகாரத்தின் முதல் முன்மாதிரியை விவரித்தனர். மேலும் இப்படிபட்ட ஒரு கடிகாரத்தை உருவாக்கத் தேவையான அனைத்து சாதனங்களும் இப்போது நமக்கு நேரடியாகக் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது காலத்தை அளவிட உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் தரநிலையாக, அணுக் கடிகாரங்கள் (Atomic clock) உள்ளன.

அணுக்கரு கடிகாரங்கள், அணுக் கடிகாரத்தைவிட மிகவும் துல்லியமாக இருக்கும். மேலும் இதன் வழியாக பிரபஞ்சத்திலுள்ள கரும்பொருள் (Dark matter) போன்ற பல்வேறு மர்மங்களை அறிஞர்களால் கண்டறிய முடியும்.

அணுக்கரு கடிகாரங்களின் வளர்ச்சியைப் பற்றி பேசத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், சமீபத்தில் நேச்சர் இதழில் இதைப் பற்றி வெளியான கட்டுரை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது? அணுக் கடிகாரத்துக்கும் அணுக்கரு கடிகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?

 
அணுக் கடிகாரம் என்றால் என்ன?
அணுக் கடிகாரங்களின் பங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கணினிகள், செல்போன்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல தொழில்நுட்பங்களில் அணுக் கடிகாரங்களின் பங்கு உள்ளது.

அணுக் கடிகாரங்கள் எலக்ட்ரான்களில் இருந்து வரும் சமிக்ஞைகளைப் பதிவு செய்து அதன் ஆற்றலை மாற்றுகிறது. இதைத்தான் குவாண்டம் லீப் எனக் குறிப்பிடுவர்.

"எந்தவொரு கடிகாரத்திற்கும், டிக் என்று சுழலும் பெண்டுலம் போன்ற ஒன்று, அதுபோக இந்த ஊசலைக் கணக்கிடும் ஓர் அமைப்பு என இரண்டு அமைப்புகள் இருக்கும்,” என்று கொலம்பியாவின் விஞ்ஞானி ஆனா மரியா ரே கூறினார்.

இவர் என்.ஐ.எஸ்.டி-இல் அணு இயற்பியலாளராகவும், போல்டரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், அணுக் கடிகாரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணராகவும் இருக்கிறார்.

“ஒரு சாதாரண கடிகாரத்தில் ஒரு பெண்டுலம் இருக்கும். அதை இயக்கவும், எத்தனை முறை அந்த பெண்டுலம் நகர்ந்தது என்று நமக்குச் சொல்லவும் ஓர் இயக்கமுறை இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்” என்கிறார் ரே.

“அணுக் கடிகாரத்தைப் பொறுத்தவரை, அலைவுறுவது (ஊசலுக்குச் சமமானது) ஒளியின் மின்காந்த அலையாகும். ஒளியியல் அணுக் கடிகாரங்களில் வழக்கமாக லேசர் இருக்கும். அதில் அலைவுகளைக் கணக்கிடுவது அணுக்களின் எலக்ட்ரான்கள்” என்கிறார் ரே.

“அணுக் கடிகாரத்தின் அலைவுகளை (Oscillation) சாதாரண எலக்ட்ரான்களால் அளவிட முடியாது. ஏனென்றால் அது மிகவும் வேகமாக அசையும். எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட அதிர்வலையில்தான் ஆற்றலை உள்வாங்குகிறது. இதைத்தான் எலக்ட்ரானின் அதிர்வெண் என்று கூறுவர். இந்த நிலையில்தான் எலக்ட்ரான்கள் தூண்டப்படும்” என்று ரே விளக்கினார்.

“லேசர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட அளவிலான அலைவுகளைக் கொண்டுள்ளதால், உலகம் முழுக்க நேரத்தைக் கணக்கிட இது சிறந்த வழியாகப் பார்க்கப்படுகிறது” என்கிறார்.

அணுக் கடிகாரங்களின் பங்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜிபிஎஸ் பயன்படுத்தி, ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வாறு செல்வது என்பதற்கான வழிகளைக் கேட்கும்போது, நாம் அணுக் கடிகாரங்களையே சார்ந்துள்ளோம்.

கணினிகள், செல்போன்கள், விண்வெளி ஆய்வு உள்படப் பல தொழில்நுட்பங்களில் குறைந்தபட்சம் 16வது இலக்க துல்லியத்துடன் (Sixteenth digit accuracy) தற்போதைய உலகளாவிய ஒத்திசைவுக்கு அணுக் கடிகாரங்களே பொறுப்பாகும்.

'பதினாறாவது இலக்க துல்லியம்' என்பது குறைந்தபட்சம் நேரத்தைக் கணிப்பதில், இந்தக் கடிகாரம் 16 தசம இடங்களுக்குத் துல்லியமாக இருக்கும் என்று பொருள். இந்த நிலை என்பது நம்ப முடியாத அளவிற்குத் துல்லியமானது. அதாவது, ஒரு நொடியின் ஒரு பின்னம் வரை நம்மால் நேரத்தைத் துல்லியமாக அளவிட முடியும். அது பில்லியன் கணக்கான ஆண்டுகளில் ஒரு விநாடியை அளவிடுவதற்குச் சமமாக இருக்கும்.

“அனைத்து அளவீடுகளுமே நேரத்தைக் கொண்டுதான் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக ஒளியின் வேகத்தை அறிந்ததால்தான் நம்மால் தூரத்தின் அளவைக் கணக்கிட முடிகிறது” என்கிறார் ரே.

அனைத்திலுமே அணுக் கடிகாரங்களின் பங்கு உள்ளதாகக் குறிப்பிடும் ரே, “ஜிபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் செயற்கைக்கோள்களில்கூட அணுக் கடிகாரம் இடம்பெற்றுள்ளது. அதுதான் நாம் ஜிபிஎஸ் பயன்படுத்தி, ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லும் வழியைக் காண்பிக்க உதவுவதாக” ரே தெரிவிக்கிறார்.

அணுக்கரு கடிகாரம் எவ்வாறு செயல்படுகிறது?

அணுக்கரு கடிகாரத்தைப் பொறுத்தவரை, அணுவின் உட்கருவில் இருந்து வரும் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக எலக்ட்ரான்களில் இருந்து வரும் சமிக்ஞைகள் பயன்படுத்தப்படுகின்றன.

“அணுக் கடிகாரங்களைப் பொறுத்தவரை அவை அணுவிலுள்ள எலக்ட்ரான்களை தூண்டும். ஆனால் ஓர் அணு என்றால் அதில் எலக்ட்ரான், அணுவின் கருவில் நியூட்ரான் மற்றும் ப்ரோடோன் இருக்கும். அதனால் இவையும் சேர்த்துத் தூண்டப்படலாம்,” என்றார் ரே.

“ஆனால் இந்தத் தூண்டுதலுக்கு அதிக அளவிலான ஆற்றல் தேவைப்படும். தோரியம் போன்ற மிகக் குறைந்த அளவிலான அணுக்களிலே இந்தத் தூண்டுதலுக்கான ஆற்றல் குறைவாகத் தேவைப்படுகிறது."

இதன் மையப்பகுதி லேசரில் இருந்து குறைந்த அளவிலான அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும். மையப்பகுதியை மாற்றியமைக்கத் தேவைப்படும் மிகத் துல்லியமான லேசர் அதிர்வலைகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு வரும் முயற்சியாகவே இருக்கிறது.

இந்த மாற்றம் 70களில் கணிக்கப்பட்டு இருந்தாலும் இது "வைக்கோல் போரில் ஓர் ஊசியைக் கண்டுபிடிப்பதைப்" போன்றது என்பதால் அது கண்டுபிடிக்கப்படவில்லை என்று ரே சுட்டிக்காட்டுகிறார்.

திடமான ஒரு படிகத்தில் பொறிக்கப்பட்ட தோரியத்தின் கருவில் ஏற்பட்ட ஆற்றல் மாற்றத்தைப் புறஊதா கதிர்களைக் கொண்டு அதன் அதிர்வெண்ணை துல்லியமாகக் கணக்கிட்டதைத்தான் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு முடிவுகளில் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

"ஓர் அணுவைவிட ஆயிரம் மடங்கு சிறியதாக இருக்கும் அணுவின் கருவில்தான் அணுக்கரு கடிகாரத்தின் குவாண்டம் ஜம்ப் நிகழும். முதல்முறையாக எங்களின் செயல் இதை நிரூபித்துள்ளது" என்று ஜெர்மன் விஞ்ஞானியும் வியன்னா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரும், இந்த ஆய்வின் ஆசிரியருமான தோர்ஸ்டன் ஷாம் கூறுகிறார். அவர், இதைப் பற்றிக் கூறுகையில் “இந்த நிலையில் நியூட்ரான்தான், ஒரு ஆற்றல் நிலையில் இருந்து மற்றொரு ஆற்றல் நிலைக்கு மாறுவதாகத்,” தெரிவித்தார்.

 
அணுக்கரு கடிகாரத்தில், ஒரு அதி-துல்லியமான லேசர் ஒரு படிகத்தில் உள்ள அணுவின் கருவை தூண்டுகிறது

பட மூலாதாரம்,TU VIENNA, O. DIEKMANN

படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரத்தில், அதி-துல்லியமான லேசர் ஒன்று ஒரு படிகத்தில் உள்ள அணுவின் கருவைத் தூண்டுகிறது (சித்தரிப்பு படம்)

அணுக்கரு கடிகாரங்கள் மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று ஷாம் நம்புகிறார்.

“இனி எல்லாமே மிக விரைவில் நடக்கும். இந்த ஒரு ஆண்டிலேயே பல முன்னேற்றங்களைப் பார்த்துவிட்டோம். லேசரில்தான் பெரும்பான்மையான முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. அதைச் செய்து முடிக்க ஐந்து ஆண்டுகள் மட்டுமே போதும்” என்கிறார்.

மேலும், “முதல் மாதிரியின் மூலம் தோரியத்தை கொண்டு மிகத் துல்லியமான அளவீடுகளுக்காக அதை ஒரு குரோனோமீட்டராக பயன்படுத்தலாம். இன்னும் சில தொழில்நுட்ப முன்னேற்றங்கள்தான் தேவைப்படுகிறதே தவிர வேறெந்தத் தடையும் கிடையாது” என்றும் ஷாம் தெரிவித்தார்.

‘பிரபஞ்சத்திற்கான ஒரு புதிய பாதை’

அணுக்கரு கடிகாரம், அணுக் கடிகாரத்தைவிடத் துல்லியமாக இருந்தாலும், அது அதிகமாக அறியப்படுவது அதன் செயல் திறனால் அல்ல, அதன் நிலைத் தன்மையால்தான்.

“ஏனென்றால் இதன் மையம் மிகவும் சிறியதாக உள்ளதால், இதில் ஈடுபடும் அணுக்கரு ஆற்றல் அதிகம். வெப்பநிலை, காந்தம் புலம் போன்ற வெளிப்புறக் காரணிகளால் இந்தக் கரு பாதிப்படையாது” என்கிறார் ஷாம்.

“மிகவும் எளிமையான கண்ணாடி போன்ற பொருட்களில் நிறைய எண்ணிக்கையிலான மையங்களை அதன் செயல்திறனைக் குறைக்காமல் பொறிக்க முடியும்” என்கிறார்.

தொழில்நுட்பத்தில் இந்த அணுக்கரு கடிகாரங்களின் பயன்பாட்டைவிட, விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் அதிகம் உற்சாகமடையைக் காரணம், இனி பிரபஞ்சத்தைப் பற்றி ஆய்வு செய்ய நிறைய புதிய பாதைகள் திறக்கப்படும் என்பதுதான்.

“இந்த அணுக்கரு கடிகாரம் வெளிப்புறக் காரணிகளால் பாதிப்படையவில்லை என்றாலும் உட்புறக் காரணிகளால் பாதிப்படையும். மின்காந்த சக்தியும் அணுக்கருவின் சக்தியும்தான் இந்தக் கருவைப் பாதுகாக்கிறது. இதைப் பற்றி ஆராய்வது மிகவும் கடினமான ஒன்று. அதனால் இந்த அணுக்கரு கடிகாரம் சில இயற்கையான சக்திகளுக்கு சென்சாராக செயல்படுகிறது” என்று விளக்குகிறார் ஷாம்.

ஷாம்

பட மூலாதாரம்,WILKE PHOTO

படக்குறிப்பு, அணுக்கரு கடிகாரம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்று ஷாம் நம்புகிறார்

எந்தெந்த கேள்விகளுக்கு அணுக்கரு கடிகாரத்தால் பதிலளிக்க முடியும்?

“இந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன,” என்கிறார் ரே.

“உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தில் உள்ள 80% ஆக்கக் கூறுகள் கரும்பொருள் என்று நமக்குத் தெரியும், ஆனால் நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. அணுக் கடிகாரத்தால் உணரப்படாத பல விளைவுகள் அணுக்கரு கடிகாரங்களில் உணரப்படுவதால், கரும்பொருளின் மூலப்பொருளைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியும்” என்கிறார்.

அணுக்கரு கடிகாரங்களை, அணுக் கடிகாரங்களுடன் ஒப்பிடுகையில் ஒளியின் வேகம் போன்ற உலகளாவிய மாறிலிகள் நேரம் மற்றும் வெளியில்கூட மாறுபாடின்றி செயல்படுமா என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியும்.

"எங்களுக்கே இன்னும் தெரியாத பல கேள்விகள் உள்ளன" என்று ரே கூறுகிறார்.

"எனவே இது எதிர்கால ஆராய்ச்சிக்கான புதியதொரு வழி. இது பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் விஷயங்களைக் கண்டறிய அனுமதிக்கும். இது நிகழும்போதெல்லாம், நமக்குச் சிறந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கிடைக்கும்” என்கிறார்.

‘இயற்பியலின் அழகை உணர்ந்தேன்’

தோரியத்தின் அணுக்கரு நிலையை மாற்றும் மிகத் துல்லியமான அதிர்வலையைக் கண்டுபிடித்தது எத்தகைய உணர்வை அளித்தது என்பது குறித்து பிபிசியிடம் ஷாம் பகிர்ந்து கொண்டார்.

“இது மிகவும் அருமையான உணர்வு. பெரும்பாலான நேரத்தை நாங்கள் உடைந்துபோன விஷயங்களை சரி செய்வதில்தான் செலவிடுவோம், அப்பொழுதில் இதை நாங்கள் சரியாகச் செய்து முடித்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வோம்.

இறுதியாக அதைச் செய்து முடித்துவிட்டோம். சில ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே இந்தச் சிறந்த தருணத்தில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய குழுவினருக்கும், கூட்டுப் பணியாளர்களுக்கும் இந்த நீண்ட பயணத்தில் துணை நின்றதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”

அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அணுக் கடிகாரங்களும் அணுக்கரு கடிகாரங்களும், கோட்பாட்டு இயற்பியலில் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் எப்படி கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படத்துகின்றன என்பதை உணர்த்துகின்றன.

“கோட்பாட்டு இயற்பியலைக் கொண்டு இந்த பிரபஞ்சம் செயல்படும் விதத்தைப் பல ஆய்வுகளின் மூலம் நம்மால் அறிய முடியும்,” என்கிறார் ஆனா மரியா ரே.

“உதாரணமாக எல்லாக் கணினிகளும் டிரான்சிஸ்டர்களை கொண்டுதான் செயல்படுகின்றன. குவாண்டம் மெக்கானிக்ஸ் தெரிந்தால்தான் நம்மால் டிரான்சிஸ்டர்களை பயன்படுத்த முடியும். ஓர் உலோகத்தில் உள்ள எலக்ட்ரான்கள் எவ்வாறு அசைகின்றன என்பதை அறியவும் குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றிய புரிதல் மிக அவசியம்” என்கிறார் ரே.

“இயற்கை புதிய வழிகளில் எவ்வாறு செயல்படும் என்பதை அறியவும், அதை விவரிக்கவும், விவாதிக்கவும் கோட்பாட்டு இயற்பியல் வழிவகுக்கிறது. இதன் விளைவாகவே மின்னணுவியல், தொடர்பியல், போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளில் அனுதினமும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடந்துகொண்டே உள்ளன. இதுவும் குவாண்டம் மெக்கானிக்ஸ் புரிதலின் அடிப்படையிலேயே நிகழ்கிறது” என்றும் கூறுகிறார்.

மேலும், “அணுக்கரு கடிகாரங்களின் மூலம் குவாண்டம் மெக்கானிக்ஸை புரிந்துகொள்வதற்கான மற்றொரு புதிய வழியை நம்மால் தெரிந்துகொள்ள முடியும். என்கிறார் ரே.

 
ஆனா மரியா ரே

பட மூலாதாரம்,MACARTHUR FOUNDATION

படக்குறிப்பு, இது பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் விஷயங்களைக் கண்டறிய அனுமதிக்கும் என்று ரே கூறுகிறார்

அறிவியல் முன்னேற்றங்களை ஊக்குவிக்கும் அமெரிக்க நிறுவனமான ‘ஆப்டிகாவுடனான’ நேர்காணலில், ஆனா மரியா ரே தனது முதல் இயற்பியல் வகுப்பில் நிகழ்ந்த ‘யுரேகா தருணத்திற்கு’ பிறகு தன்னுடைய வாழ்க்கைத் தொழில் எதுவென்பதைக் கண்டுகொண்டதை நினைவுகூர்ந்தார்.

“என் மனதில் இருந்த அனைத்து சிந்தனைகளும் உயிர்பெற்றன. இயற்பியலின் அழகை உணர்ந்தேன். இதுதான் நமது பிரபஞ்சத்தை வழிநடத்துகிறது. ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான் நகர்வு முதற்கொண்டு கருந்துளைகளின் செயல்பாடு வரை அனைத்துமே இயற்பியலால்தான் செயல்படுகிறது” என்று கூறினார்.

“உலகத்தைப் பற்றிய அனைத்தையும் சொல்லும் புதிராக இது இருந்தது, அதைத் தீர்க்க முடிந்ததால் நான் அதன் பக்கம் ஈர்க்கப்பட்டேன்” என்கிறார் ரே.

தற்போது ஈடுபட்டிருக்கும் கடிகாரங்களின் ஆராய்ச்சியிலும் அதே அழகை உணர்கிறாரா ரே?

இந்தக் கேள்விக்கு, “ஆம், நிச்சயமாக, ஒவ்வொரு நாளுமே,” என்று பிபிசியிடம் அவர் பதிலளித்தார்.

“தினமும் வேலைக்கு வரும்போது மிகுந்த உற்சாகத்துடன் வருவேன். இயற்பியலின் சமன்பாடு மூலமாக இந்தப் பிரபஞ்சம் செயல்படும் விதத்தைக் கண்டுபிடிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”

“கணித மாதிரிகளைக் கொண்டு அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கணிப்பது மாயாஜாலத்தை போன்றது. அதுதான் எனக்கு உற்சாகமாக இருந்தது. எனது கோட்பாட்டைக் கொண்டு ஒரு பரிசோதனையாளரிடம் ‘இதைப் பயன்படுத்துங்கள், அதை அளவிடுங்கள், நீங்கள் இதைக் கண்டுபிடிப்பீர்கள், நீங்கள் அதைக் கண்டுபிடிப்பீர்கள்’ என்று என்னால் சொல்ல முடிந்தால், அதுதான் எனக்கு நடக்கக்கூடிய மிகச் சிறந்த விஷயம்" என்கிறார் ரே.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தலை அசைவை கொண்டே செல்லும் திசையை அறியும் - புதிய வாழ்வு தரும் ஏஐ சக்கர நாற்காலி

3 weeks 2 days ago

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் கூடிய சக்கர நாற்காலி, பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.

பெருமூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட பலரால், சக்கர நாற்காலியை தாங்களாகவே இயக்க முடியாது. இந்த ஏஐ சக்கர நாற்காலி, அவர்கள் தலை அசைவை கொண்டே அவர்கள் செல்லும் திசையை அறிந்துக்கொள்ளும்.

முழு விவரம் காணொளியில்...

https://www.facebook.com/bbcworldservice/videos/this-new-powered-wheelchair-uses-ai-and-is-helping-people-with-cerebral-palsy-ge/875565824602179/

https://www.bbc.com/tamil/articles/c5yr1l14empo

ஆண் கொசுவை செவிடாக்கினால் டெங்கு காய்ச்சல் பரவாது - புதிய கண்டுபிடிப்பு

1 month 1 week ago
ஒரு நபரின் கையில் அமர்ந்து, ரத்தத்தை எடுக்க தயாராக உள்ள ஒரு கொசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ்
  • பதவி, பிபிசி நியூஸ்

டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு.

பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும்.

கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெண் கொசுவுடனும் உறவில் ஈடுபடவில்லை என்பதைக் கண்டுபிடித்தனர்.

பெண் கொசுக்கள் தான், மக்களுக்கு நோய்களை பரப்பக் கூடியவை. அந்த கொசுக்களை முட்டை இடாமல் தடுப்பதன் மூலம், அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை குறைக்கும்.

செவித்திறனை நீக்கியதால் கொசுக்களின் இனச் சேர்க்கையில் பாதிப்பு

ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்பும் ஏடிஸ் எஜிப்டய் (Aedes aegypti) எனும் கொசுக்களைப் பற்றி இர்வினில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் கொசுக்களின் இனச் சேர்க்கை பழக்கங்களை ஆய்வு செய்தார்கள். இதன் கால அளவு சில நொடிகளிலிருந்து ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே இருந்தது. பிறகு தான் மரபணுக்களை கொண்டு எப்படி இதை தடுப்பது என்று கண்டுபிடித்தனர்.

டி.ஆர்.பி.வி.எ. (trpVa) என்ற புரதத்தை அவர்கள் குறிவைத்தனர். இந்த புரதம் தான் கொசுக்களின் செவித்திறனுக்கு முக்கியமானது.

மரபணு மாற்றம் பெற்ற கொசுக்கள், அவற்றின் இணையின் இறக்கை சத்தத்திற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

அந்த சத்தம் கேட்கமுடியாத அவற்றின் காதுகளில் விழுந்தது.

இதற்கு மாறாக, மரபணு மாற்றம் பெறாத கொசுக்கள் பல்வேறு முறை உடலுறவில் ஈடுபட்டு அந்த கூண்டில் இருந்த அனைத்து பெண் கொசுக்களையும் கருத்தரிக்க செய்தன.

பிஎன்ஏஎஸ் அறிவியல் இதழில் தங்கள் படைப்புகளை வெளியிட்ட கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மரபணு மாற்றம் ஏற்படுத்திய செவித்திறன் நீக்கம், கொசுக்களின் இனச்சேர்க்கையை முற்றிலுமாக தடுத்து விட்டது என்று கூறினார்கள்.

 
ஏடிஸ் எஜிப்டய் கொசுக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏடிஸ் எஜிப்டய் கொசுக்கள் ஆண்டொன்றுக்கு நாற்பது கோடி மக்களுக்கு நோய் பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்களை பரப்புகின்றன
உணவுச் சங்கிலியில் கொசுக்களின் பங்கு

ஜெர்மனியிலுள்ள ஓல்டன்பர்க் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஜோர்க் ஆல்பர்ட், கொசுக்களின் இனப்பெருக்கத்தைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர். அவரிடம் இந்த ஆய்வை பற்றி நான் கேட்டேன்.

“கொசுக்களின் செவித்திறனை அழிப்பது கொசுக்களை கட்டுப்படுத்த ஒரு சிறந்த வழியாக இருந்தாலும் இதில் இன்னும் நிறைய அறிய வேண்டியுள்ளது.” என்று அவர் கூறினார்.

“இந்த ஆய்வில் வழங்கப்பட்ட முதல் நேரடி மூலக்கூறு சோதனையின் முடிவில், கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு செவித்திறன் முக்கியமானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட என்பதைக் காட்டுகிறது.” என்றார்.

“ஆண் கொசுக்களின் செவித்திறன் மட்டுப்படுத்தப்பட்டாலோ, அவை சத்தத்தினை கேட்டு ஈர்க்கப்படவில்லை என்றாலோ கொசுக்களின் இனமே அழிந்துவிடும்.” என்றும் ஆல்பர்ட் கூறுகிறார்.

கொசுக்களை கட்டுப்படுத்த மற்றொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், அதாவது கொசுக்களால் அதிகம் நோய்கள் பரவும் இடங்களில் மலட்டு ஆண் கொசுக்களை நாம் விட்டுப் பார்க்கலாம்.

என்னதான் கொசுக்கள் நோய்களை பரப்பினாலும், இவை உணவுச்சங்கிலியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக மீன்கள், பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு இவை ஊட்டச்சத்து ஆதாரமாக விளங்குகின்றன. இவற்றில் சில வகை கொசுக்கள் முக்கியமான மகரந்த சேர்க்கையாளர்களாகவும் இருக்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நிலா, செவ்வாய் ஆய்வுக்கு நாசாவை விட மிகக் குறைந்த செலவில் இஸ்ரோ விண்கலனை அனுப்புவது எப்படி?

1 month 2 weeks ago
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு, சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.
  • எழுதியவர், கீதா பாண்டே
  • பதவி, பிபிசி செய்திகள், டெல்லி

சமீபத்தில் இந்தியா 227 பில்லியன் ரூபாய் செலவில் பல்வேறு விண்வெளி திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது.

நிலவுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, வெள்ளி (venus) கிரகத்திற்கு ஒரு விண்கலத்தை அனுப்புதல், நாட்டின் முதல் விண்வெளி நிலையத்திற்கான முதல்கட்ட பணிகளை தொடங்குதல் மற்றும் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான புதிய மறுபயன்பாட்டு கனரக ராக்கெட்டை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.

இந்தியாவில் விண்வெளி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு இதுவே ஆகும். ஆனால் திட்டங்களின் அளவு மற்றும் அதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை கருத்தில் கொண்டால், இது மிகவும் ஆடம்பரமான செலவு அல்ல. இதுவரையிலும் இந்தியா விண்வெளி திட்டத்திற்காக மிகவும் குறைவாகவே செலவு செய்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் சூரியனுக்கு எப்படி குறைந்த செலவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆய்வு பயணங்கள் மேற்கொள்கிறது என்பதை உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

 

செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை அனுப்ப 74 மில்லியன் டாலர்களையும், கடந்த ஆண்டு சந்திரயான்-3 திட்டத்திற்கு 75 மில்லியன் டாலர்களையும் இந்தியா செலவிட்டது. இது சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான ‘கிராவிடியை’ தயாரிக்க செலவிடப்பட்ட 100 மில்லியன் டாலர்களை விட மிகக் குறைவானது.

நாசாவின் மேவன் விண்கலத்தை தயாரிக்க 582 மில்லியன் டாலர்கள் செலவானது. சந்திரயான் -3 விண்கலம் தரையிறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலவின் மேற்பரப்பில் மோதிய ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்திற்கு 133 மில்லியன் டாலர்கள் செலவானது.

குறைந்த அளவில் செலவு செய்தாலும் இந்தியா, முக்கியமான விண்வெளி ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமாக சாதித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சந்திரயான்-1 விண்கலம் நிலவில் நீர் இருப்பதை முதன் முதலில் உறுதி செய்தது; செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் அளவு பற்றி ஆய்வு செய்ய மங்கள்யான் ஒரு கருவியை கொண்டு சென்றது. சந்திரயான்-3 விண்கலம் அனுப்பிய படங்கள் மற்றும் தரவுகள் உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகின்றன.

இந்தியா எப்படி குறைந்த செலவில் இவற்றை செய்கிறது?

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,SCREENSHOT FROM DOORDARSHAN

படக்குறிப்பு, ககன்யான் விண்கலம் திட்டத்தில் ஒரு பெண் மனித உருவத்தை விரைவில் விண்வெளிக்கு அனுப்புவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது

1960-களில் விஞ்ஞானிகள் முதன்முதலில் ஒரு விண்வெளித் திட்டத்தை அரசாங்கத்திற்கு முன்வைத்த போதிலிருந்து இந்த சிக்கனப்போக்கு தொடங்கியது என்று இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ISRO-வின் நிதியை நிர்வகித்த அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சிசிர் குமார் தாஸ் கூறுகிறார்.

இந்தியா 1947 ஆம் ஆண்டு பிரிட்டன் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அப்போது மக்களின் பசி போக்கவும், போதுமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை கட்டவும் இந்தியா போராடி வந்தது.

“ISRO-வின் நிறுவனரும் விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாய், விண்வெளித் திட்டம் என்பது இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஒரு அதிநவீன ஆடம்பரம் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு நம்ப வைக்க வேண்டியிருந்தது. இந்தியா தனது குடிமக்களுக்கு சிறப்பாகச் சேவை செய்ய செயற்கைக்கோள்கள் உதவக்கூடும் என்று அவர் விளக்கினார்,” என்று பிபிசியிடம் சிசிர் குமார் தாஸ் கூறினார்.

ஆனால் இந்தியாவில் விண்வெளித் திட்டத்தை, மிகவும் குறுகிய பட்ஜெட்டுக்குள் செயல்படுத்த வேண்டியிருந்தது. 1960கள் மற்றும் 70களின் புகைப்படங்கள், விஞ்ஞானிகள் ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை சைக்கிள்கள் அல்லது ஒரு மாட்டு வண்டியில் கொண்டு செல்வதைக் காட்டுகின்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகும், பல வெற்றிகரமான விண்வெளி பயணங்களுக்கு பிறகும், இஸ்ரோவிற்கான நிதி இன்னும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்காக 130 பில்லியன் ரூபாய் ($1.55 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவில் நாசாவின் இந்த ஆண்டு பட்ஜெட் 25 பில்லியன் டாலர்கள் ஆகும்.

உள்நாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துவதால் இஸ்ரோவின் பணிகளுக்கு மிகவும் குறைந்த செலவு ஏற்படுவதாக சிசிர் குமார் தாஸ் கூறுகிறார்.

1974 ஆம் ஆண்டில், இந்தியா தனது முதல் அணுசக்தி சோதனையை நடத்திய பிறகு, இந்தியாவுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம் செய்ய மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. இந்த கட்டுப்பாடுகள் இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கு மறைமுகமான நன்மையாக இருந்தன என்று அவர் கூறுகிறார்.

"இந்திய விஞ்ஞானிகள் அதை உள்நாட்டிலேயே தொழில்நுட்பத்தை உருவாக்க ஒரு ஊக்கமாக பயன்படுத்தினர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. அமெரிக்கா அல்லது ஐரோப்பாவை விட இங்கு ஊதியம் மற்றும் தொழிலாளர்களுக்கான செலவினமும் மிகவும் குறைவாக இருந்தது”. என்றார் அவர்.

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,ISRO

படக்குறிப்பு, சூரியனை பற்றி ஆராய்வதற்கான இந்திய விண்கலமான ஆதித்யா L1-னுக்காக வெறும் 46 மில்லியன் டாலர்களே செலவானது

"இஸ்ரோவைப் போலல்லாமல் நாசா தனது செயற்கைக்கோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கிறது. அதன் பணிகளுக்கு காப்பீட்டையும் எடுத்துக்கொள்கிறது, இது அவர்களின் செலவுகளை அதிகரிக்கிறது" என்று கூறுகிறார் அறிவியல் எழுத்தாளர் பல்லவ பாக்லா.

நாசாவைப் போலல்லாமல், இந்தியா ஒரு திட்டத்தை சோதனை செய்ய பயன்படுத்தப்படும் பொறியியல் மாதிரிகளை உருவாக்காது. நாம் ஒரே ஒரு இயந்திரத்தை மட்டுமே உருவாக்குகிறோம், பின்னர் அதனை ஏவுகிறோம். இது ஆபத்தானது, விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது, ஆனால் இது ஒரு அரசாங்க திட்டம் என்பதால் அந்த ஆபத்தையும் அறிந்து நாம் செயல்படுகிறோம்”. என்று பிபிசியிடம் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். இவர் இந்தியாவின் முதல் மற்றும் இரண்டாவது நிலவு பயணங்கள் மற்றும் செவ்வாய் கிரக பயணத்தின் தலைவராக இருந்தார்.

இஸ்ரோ மிகக் குறைவான நபர்களையே வேலைக்கு அமர்த்துகிறது மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்குகிறது, இது இந்திய திட்டங்களை போட்டித்தன்மை கொண்டதாக ஆக்குகிறது”, என்று அவர் கூறினார்.

மயில்சாமி அண்ணாதுரை 10-க்கும் குறைவான நபர்கள் கொண்ட சிறிய குழுக்களை வழிநடத்தியுள்ளார். அந்த நபர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் பணி செய்ததற்கான ஊதியம்கூட இல்லாமல் பல மணிநேரம் வேலை செய்தார்கள் என்றும், செய்யும் பணியின் மீது அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

"திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே பட்ஜெட் ஒதுக்கப்பட்டதால், சில சமயங்களில் அவர்கள் புதுமையான, எளிய வழிமுறைகளை யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர், இது புதுமையான திட்டங்களுக்கு வழிவகுத்தது" என்று அவர் கூறினார்.

"சந்திரயான்-1 திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 89 மில்லியன் டாலர் மட்டுமே. இது அசல் கட்டமைப்பிற்கு வேண்டுமானால் போதுமானதாக இருந்தது. ஆனால் பின்னர், விண்கலம் நிலவை ஆய்வு செய்ய கூடுதலாக 35 கிலோ கொண்ட கருவியை எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது." என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

அப்போது, விஞ்ஞானிகள் முன்பு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று, இந்த திட்டத்திற்கு கனரக ராக்கெட்டைப் பயன்படுத்துவது, ஆனால் இது செலவை அதிகரிக்கக் கூடும். மற்றொன்று சுமையை குறைக்க சில கருவிகளை நீக்குவது.

 
இந்தியா - விண்வெளி ஆராய்ச்சி - இஸ்ரோ - சந்திரயான் - மங்கள்யான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விண்வெளித் திட்டங்கள் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்கிறது

"நாங்கள் இரண்டாவது முறையை தேர்ந்தெடுத்தோம். நாங்கள் திரஸ்டர்களின் எண்ணிக்கையை 16-இல் இருந்து 8 ஆகக் குறைத்தோம், மேலும் பிரஷர் டேங்குகள் மற்றும் பேட்டரிகளும் இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டன”.

பேட்டரிகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம், 2008 ஆம் ஆண்டு இறுதிக்குள் விண்கலத்தை ஏவ வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது என்று மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்.

"இது நீண்ட சூரிய கிரகணத்தை எதிர்கொள்ளமல் நிலவை சுற்றி வர விண்கலத்திற்கு இரண்டு ஆண்டுகள் கொடுக்கும், இந்த கிரகணம் பேட்டரியின் ரீசார்ஜ் செய்யும் திறனை பாதிக்கக்கூடும். எனவே விண்கலம் குறிப்பிட்ட நேரத்தில் ஏவப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் கடுமையான பணிமுறையை பின்பற்றினோம்”.

“சந்திரயான்-2 விண்கலம் ஏவுவதற்கு தாமதமானதால், நாங்கள் அதற்கு வடிவமைத்த இயந்திரங்களையே மங்கள்யான் விண்கலத்திற்கும் அதிக அளவில் பயன்படுத்தினோம்”, என்று மங்கள்யான் செலவும் மிகவும் குறைவாக இருந்தற்கான காரணம் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறுகிறார்.

இவ்வளவு குறைந்த செலவில் வரும் இந்தியாவின் விண்வெளித் திட்டம் "ஒரு அற்புதமான சாதனை" என்கிறார் பல்லவ பாக்லா. ஆனால் இந்தியா திட்டங்களை மேம்படுத்தும் போது, செலவுகளும் அதிகரிக்கக்கூடும்.

தற்போது, இந்தியா விண்கலத்தை ஏவ சிறிய ராக்கெட்களை பயன்படுத்துகிறது. ஏனெனில் இந்தியாவிடம் சக்தி வாய்ந்த, கனரக ராக்கெட்கள் எதுவும் இல்லை. இதனால், இந்தியாவின் விண்கலங்கள் இலக்கை அடைய அதிக நேரம் எடுக்கும்.

சந்திரயான் -3 ஏவப்பட்டபோது, அது நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்வதற்கு முன்பு பூமியை பல முறை சுற்றி வந்தது. நிலவில் தரையிறங்குவதற்கு முன்பு நிலவையும் சில முறை சுற்றி வந்தது. மறுபுறம், ரஷ்யாவின் லூனா -25 விண்கலம் ஒரு சக்திவாய்ந்த சோயுஸ் (Soyuz) ராக்கெட்டை கொண்டு ஏவப்பட்டதால் அது விரைவாக பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறியது.

"நாங்கள் பூமியின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நிலவை நோக்கி விண்கலத்தை ஏவினோம். இதற்காக நாங்கள் பல வாரங்கள் திட்டமிட்டோம். இஸ்ரோ இதுபோல பல முறை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது”. என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

ஆனால் 2040 ஆம் ஆண்டிற்குள், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இந்தியா அறிவித்துள்ளதாகவும், அதற்கு சக்திவாய்ந்த ராக்கெட்டுகள் தேவைப்படும் என்று பல்லவா பாக்லா கூறுகிறார்.

இது போன்ற புதிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணிக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் 2032 ஆம் ஆண்டுக்குள் அது தயாராகிவிடும் என்றும் இந்திய அரசு சமீபத்தில் கூறியது. இந்த அடுத்த தலைமுறை ராக்கெட் (NGLV) அதிக எடையை சுமந்து செல்லக் கூடியதாக இருக்கும். ஆனால் அதனை தயாரிக்க அதிக செலவாகும்.

இந்தியா விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் வரவால் செலவுகள் மிகவும் குறையக்கூடும் என்றும் பல்லவ பாக்லா கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

டைனோசரை அழித்ததை விட 200 மடங்கு பெரிய விண்கல் மோதிய பிறகு பூமியில் உயிர்கள் செழித்தது எப்படி?

1 month 3 weeks ago
S2 விண்கல், அறிவியல், விண்வெளி, பூமி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர்

2014-ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய விண்கல் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

டைனோசரை அழித்த விண்கல்லைக் காட்டிலும் 200 மடங்கு பெரிய விண்கல் சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கியது.

இதை பற்றி தெரிந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்காவில் இந்த விண்கல் விழுந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் சென்றனர். அங்கு அவர்கள் ஸ்லெட்ஜ் சுத்தியல்களை கொண்டு அந்த விண்கல்லின் சில பாறை துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

மிகப்பெரிய இந்த விண்கல் தாக்கியதால் பூமியில் பேரழிவு ஏற்பட்டதையும் தாண்டி, பூமியில் உயிர்கள் செழிக்க உதவியது என்பதற்கான ஆதாரங்களையும் விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.

"பூமி உருவான கால கட்டத்தில், விண்வெளியில் ஏராளமான சிறிய விண்கல்கள் சுற்றிக்கொண்டிருந்தன. அவற்றில் பலவும் பூமி மீது மோதியிருக்கலாம் என்பதை நாம் அறிவோம்", என்று இந்த புதிய ஆராய்ச்சியை வழிநடத்திய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நட்ஜா டிராபன் கூறுகிறார்.

 

"ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய விண்கல் மோதலுக்கு நடுவே, பூமியில் உயிர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற நெருக்கடியான நிலை இருந்தது என்பதை கண்டறிந்தோம். ஆனால் அதன் பிறகே உயிர்கள் மிகவும் செழிப்பாக உருவாகி வளர்ந்துள்ளன", என்று அவர் கூறுகிறார்.

நமக்கு இதற்கு முன் தெரிந்த விண்கற்களை விட S2 விண்கல் மிகப் பெரிய ஒன்று. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் அழிவுக்கு வழிவகுத்த விண்கல் சுமார் 10 கிலோமீட்டர் அளவுக்கு அகலமானது.

பூமியின் தொடக்க காலகட்டத்தில் S2 விண்கல் பூமியை தாக்கியது. அப்போது பூமி பெரும்பாலும் கடலால் சூழப்பட்டு இருந்தது. சில கண்டங்கள் மட்டுமே உருவாகியிருந்தன. அப்போது இருந்த உயிர்களும் ஒற்றை செல் உடைய எளிய உயிர்களாக இருந்தன.

இந்த விண்கல் தாக்கிய கிழக்கு பார்பர்டன் கிரீன்பெல்ட் பகுதி பூமியின் பழமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு விண்கல்லின் எச்சங்கள் இன்னும் உள்ளன.

S2 விண்கல், அறிவியல், விண்வெளி, பூமி

பட மூலாதாரம்,NADJA DRABON

பேராசிரியர் டிராபன், தன்னுடன் பணியற்றுபவருடன் இணைந்து மூன்று முறை இந்த பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இந்த மலைப்பகுதிகளில் யானைகள், காண்டாமிருகங்கள் போன்ற வன விலங்குகளிடமிருந்தும் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்தும் அவர்களைப் பாதுகாக்க துப்பாக்கிகளுடன் படைவீரர்கள் உடன் சென்றனர்.

அவர்கள் இந்த விண்கல்லின் சிறிய துகள்களை தேடிச் சென்றனர். சுத்தியலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான கிலோகிராம் பாறை துண்டுகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அவர்கள் கொண்டு சென்றனர்.

இதில் முக்கியமான மதிப்பு மிக்க விண்கல் துகள்களை பேராசிரியர் டிராபன் தனது பெட்டியில் வைத்திருந்தார்.

"நான் பயணம் செய்யும் போது பெட்டிகளை சோதனை செய்வதற்காக நிறுத்தப்படுவேன். அப்போது அதிகாரிகளிடம் விஞ்ஞானம் எவ்வளவு அற்புதமானது என்பதைப் பற்றி ஒரு பெரிய விளக்கத்தை கொடுப்பேன். இதை கேட்டு அவர்கள் சலிப்படைந்து என்னை கடந்து செல்ல அனுமதிப்பார்கள்", என்று அவர் கூறுகிறார்.

S2 விண்கல் பூமியில் விழுந்த போது என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதேபோன்ற மாதிரியை இந்த குழு செயற்கையாக மீண்டும் உருவாக்கி ஆய்வு செய்தது. இந்த விண்கல் பூமியில் விழுந்த போது 500 கிலோமீட்டர் அளவிற்கு பெரிய பள்ளத்தை உருவாக்கியது. அதிலிருந்து சிறு பாறை துண்டுகள் மிக வேகமாக சிதறின. இதனால் உலகம் முழுவதும் புகை மண்டலம் போல உருவானது.

"ஒரு மழை மேகத்தை கற்பனை செய்து பாருங்கள். அதிலிருந்து நீர்த்துளிகள் கீழே விழுவதற்கு பதிலாக, வானத்தில் இருந்து உருகிய பாறைத் துகள்கள் பொழிவதை போன்றது அது", என்று பேராசிரியர் டிராபன் கூறினார்.

S2 விண்கல், அறிவியல், விண்வெளி, பூமி

பட மூலாதாரம்,NADJA DRABON

உலகம் முழுவதும் கடலில் ஒரு பெரிய சுனாமி எழும்பி, கடலோரப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கும்.

"அந்த சுனாமியுடன் ஒப்பிடுகையில், 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி மிகவும் சாதாரண ஒன்று" என்று பேராசிரியர் டிராபன் கூறுகிறார்.

அப்போது வெளிப்பட்ட அதிக அளவிலான ஆற்றல், அதிக அளவில் வெப்பத்தை ஏற்படுத்தி கடலை கொதிக்கச் செய்து, பல மீட்டர் ஆழம் அளவிற்கு தண்ணீரை ஆவியாகச் செய்திருக்கிறது. இதனால் காற்றின் வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்திருக்கும்.

வானம் தூசி மற்றும் துகள்களால் நிறைந்து கருப்பாக மாறி இருந்திருக்கும். இந்த கருமையை தாண்டி சூரிய ஒளி ஊடுருவாது என்பதால், ஒளிச்சேர்க்கையை நம்பியிருந்த நிலத்திலும் நீரிலும் இருந்த உயிர்கள் அழிந்திருக்கக் கூடும்.

இந்த தாக்கங்கள் S2 விண்கல் போன்ற மற்ற பெரிய விண்கல் தாக்கிய இடங்களை போல ஒத்திருந்தது என்று புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்

ஆனால் பேராசிரியர் டிராபன் மற்றும் அவரது குழு அடுத்து கண்டுபிடித்ததுதான் ஆச்சரியமாக இருந்தது. இந்த பாறை துகள்கள் மாதிரிகளை ஆராய்ந்து பார்த்ததில் உலகில் உள்ள உயிர்களின் உணவான பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துகள் அதில் இருந்தன.

S2 விண்கல், அறிவியல், விண்வெளி, பூமி

பட மூலாதாரம்,NADJA DRABON

"பூமியில் இருந்த உயிர்கள் தாக்குப்பிடித்து, விரைவாக மீண்டு வந்து செழித்துள்ளன", என்று அவர் கூறுகிறார்.

"இது காலையில் பல் துலக்குவது போன்றது. என்னதான் அது 99.9% பாக்டீரியாவைக் கொன்றாலும், மாலைக்குள் அவை அனைத்தும் மறுபடியும் உண்டாகிவிடும் அல்லவா?" என்றார் அவர்.

S2 விண்கல் மோதியதால் ஏற்பட்ட மிகப்பெரிய தாக்கம் என்னவென்றால், பாஸ்பரஸ் போன்ற உயிர்கள் செழிக்கத் தேவையான இன்றியமையாத பொருட்களை உலகம் முழுக்கப் பரவச் செய்திருக்கலாம் என்று புதிய கண்டுபிடிப்பு கூறுகிறது.

அப்போது ஏற்பட்ட சுனாமி கடலின் அடியாழத்தில் இருந்து இரும்புச்சத்துள்ள நீரை மேலே கொண்டு வந்ததன் மூலம் பூமியின் தொடக்க காலத்தில் இருந்த எளிய உயிர்களுக்கு கூடுதல் ஆற்றல் கிடைத்திருக்கலாம்.

பூமியின் தொடக்க காலத்தில் நிகழ்ந்த விண்கற்களின் அடுத்தடுத்த மோதல்களே ஆரம்ப கால உயிர்கள் தோன்ற வழிவகுத்திருக்கலாம் என்ற விஞ்ஞானிகளின் கருதுகோளுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு வலுசேர்க்கிறது.

"பூமியில் இந்த விண்கல் மோதலுக்குப் பிந்தைய சூழல் உயிர்கள் செழிக்க சாதகமான சூழலை உருவாக்கியிருக்கலாம் என்பது போல் தோன்றுகிறது" என்று அவர் கூறுகிறார்.

இந்த கண்டுபிடிப்புகள் அறிவியல் இதழான PNAS-இல் வெளியிடப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?

1 month 3 weeks ago
பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம்

பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA; ESA/GAIA/DPA

படக்குறிப்பு, பிரபஞ்சத்தின் நீள்வட்ட வடிவம்
  • எழுதியவர்,ஆசிரியர் குழு
  • பதவி,பிபிசி முண்டோ

‘யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கி’ மூலம் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முப்பரிணாம வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் 10 கோடி நட்சத்திரங்களையும் விண்மீன் திரள்களையும் காட்டுகிறது.

இந்த யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியது ஐரோப்பிய விண்வெளி முகமை (இ.எஸ்.ஏ). இப்போது அந்த அமைப்பு இந்தப் படங்களை வெளியிட்டுள்ளது.

1,000 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்கள் மற்றும் நட்சத்திரங்களைக் கவனிப்பது தொடர்பாக, யூக்ளிட் தொலைநோக்கி இந்தாண்டு தன் பணியை தொடங்கியது. அதன் ஒரு சதவிகித பணிதான் இந்த முப்பரிணாம வரைபடத்தின் முதல் பகுதி.

(ஓர் ஒளி ஆண்டு = ஓர் ஆண்டில் ஒளி கடக்ககூடிய தூரம் - அதாவது, சுமார் 9.5 லட்சம் கோடி கிலோமீட்டர்கள்)

ஆறு ஆண்டுகள் நீடிக்கும் இப்பணி மூலம், நுண்ணிய தகவல்களுடன் கூடிய பிரபஞ்சத்தின் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள். விண்வெளியின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த ஏராளமான தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும்.

எத்தனை கேலக்சிகள்?

வரைபடத்தின் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒரு பகுதியில் மட்டுமே கோடிக்கணக்கான விண்மீன் திரள்கள் (கேலக்சிகள்) உள்ளன, என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறினார் யூக்ளிட் காப்பகத்தின் பொறுப்பாளரான விஞ்ஞானி புரூனோ அல்டீரி.

“பல்வேறு வகையான விண்மீன் திரள்கள் தொடர்புடைய இடங்கள், காலப்போக்கில் அவை எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன, பல நூறு கோடி ஆண்டுகளாக அவை ஏன் நட்சத்திரங்களை உருவாக்கவில்லை என்பது பற்றிய புள்ளிவிவரங்களை இதன்மூலம் உருவாக்க முடியும்,” எனவும் அவர் தெரிவித்தார்.

விண்வெளியின் மூன்றில் ஒரு பகுதியை 2030-ஆம் ஆண்டுக்குள் வரைபடமாக்கும் தங்கள் இலக்கை அடைய முடியும் என, விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 
யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது

பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA

படக்குறிப்பு, யூக்ளிட் தொலைநோக்கியின் ஒரு சதவிகித பணிதான் இது என, ஐரோப்பிய விண்வெளி முகமை கூறுகிறது
பிரபஞ்சம் குறித்த மாபெரும் புதிர்

தனது பணியின் முதல் படியில், யூக்ளிட் தொலைநோக்கி வானத்தின் தெற்கு அரைக்கோளத்தின் 132 சதுர டிகிரி பகுதியைப் படம்பிடித்தது. இது சந்திரனின் மேற்பரப்பை விட 500 மடங்கு அதிகம்.

இதன் மூலம் ‘பிரபஞ்சத்தை ஒரு மாபெரும் ஜிக்சா புதிரைப் போன்று’ இந்தத் தொலைநோக்கி உருவாக்கியுள்ளது. வரும் ஆண்டுகளில் அந்த ஜிக்சா புதிரின் பகுதிகள் சேர்க்கப்படும்.

"இது பிரபஞ்ச வரைபடத்தின் 1% தான். ஆனால், இந்த ஒருபகுதி மட்டுமே பல்வேறு வகையான ஆதாரங்களால் நிரம்பியுள்ளது. இதன்மூலம் பிரபஞ்சத்தை விவரிக்கப் புதிய வழிகளை விஞ்ஞானிகள் கண்டறியக் கூடும்," என்று, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் யூக்ளிட் திட்ட விஞ்ஞானி வலேரியா பெட்டோரினோ ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த வரைபடத்தின் மிக முக்கியமான விஷயம், அடர்த்தியான கரும்புள்ளிகளால் ஆன பிரகாசமான ‘கேலக்டிக் சிர்ரஸ் மேகங்கள்’ (galactic cirrus clouds) என்று அழைக்கப்படும் நீல ‘மேகங்கள்’. இவை, தூசி மற்றும் வாயுவின் கலவையாகும். “இவற்றிலிருந்து தான் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன,” என்கிறார், அல்டீரி.

யூக்ளிட் தொலைநோக்கி என்ன காட்டுகிறது என்பதை 2 டிகிரி கோணத்தில் புலப்படும்படி இ.எஸ்.ஏ இந்த வரைபடத்தில் விளக்கியுள்ளது. இதனை 600 முறை பெரிதாக்குவதன் மூலம், பிரபஞ்சத்தின் சிறிய பகுதியில் இருக்கும் விண்மீன் திரள்களைக் காணலாம்.

 
யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம்

பட மூலாதாரம்,ESA/EUCLID/EUCLID CONSORTIUM/NASA

படக்குறிப்பு, யூக்ளிட் செய்துள்ள இந்த அவதானிப்பின் மூலம் விண்மீன் திரள்களைக் காணலாம்
மிக நுணுக்கமான வரைபடம்

ஐரோப்பிய விண்வெளி முகமை தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ள இந்த வரைபடம், முன்பு அரிதாகவே அடையப்பட்ட அதீதமான தெளிவுத்திறனைக் (resolution) கொண்டுள்ளது. அதாவது, 208 மெகாபிக்சல்கள் தெளிவுத்திறனை இந்த வரைபடம் கொண்டுள்ளது.

இந்த வரைபடத்தை மேலும் ‘ஜூம்’ செய்ய முடிகிறது. அதன்மூலம், சுழல் விண்மீன் திரள்களின் (spiral galaxy) சிக்கலான கட்டமைப்பையோ இரண்டு விண்மீன் திரள்கள் ஒன்றோடொன்று தொடர்புகொள்வதையோ உங்களால் காண முடியும்.

பிரபஞ்சம் குறித்த ஒரு விரிவான பார்வையை யூக்ளிட் தொலைநோக்கி வழங்குகிறது. இதன்மூலம், ஒரேயொரு படத்தின் மூலம் பிரபஞ்சத்தின் விரிவான காட்சியைக் காண முடிகிறது. இதற்கு நேர்மாறாக, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி குறுகிய பார்வையையே வழங்குகிறது. ஆனால், அதன்மூலம் விண்வெளியின் வெகு தொலைவில் இருக்கும் பகுதிகளைப் பார்க்க முடியும்.

பிரபஞ்சத்தின் மர்மம் அவிழுமா?

பிரபஞ்சத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிவதற்கான மிகவும் விரிவான வரைபடத்தை உருவாக்குவது, இத்திட்டத்தின் இறுதி இலக்கு.

ஆனால் அதனோடு சேர்த்து மிகப்பெரிய அறிவியல் புதிர்களில் ஒன்றின் மீதும் வெளிச்சம் பாய்ச்ச முயல்கிறது இத்திட்டம்.

அது: ‘டார்க் மேட்டர்’ அல்லது ‘கரும்பொருள்’ (பிரபஞ்சத்தில் கண்ணுக்குத் தெரியாத, மர்மமான பொருள் - dark matter) மற்றும் ‘இருண்ட ஆற்றல்’.

இவை பிரபஞ்சத்தின் 95%-த்தை உள்ளடக்கியுள்ளது. உண்மையில் இவைபற்றி நமக்கு எதுவும் தெரியாது.

டார்க் மேட்டர் (25%) மற்றும் இருண்ட ஆற்றல் (70%) ஆகியவை எதிரெதிர் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. டார்க் மேட்டர் விண்மீன் திரள்களை ஒன்றாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில் இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது.

இந்த வரைபடம் மூலம், விண்மீன் திரள்களின் பரவல் மற்றும் பிரபஞ்சத்தின் விரிவாக்கம் ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளை மேற்கொள்ள முடியும். இது, அண்டத்தின் கருதுகோள் மாதிரிகளைச் செம்மைப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

நாசாவின் புதிய பணி

1 month 4 weeks ago

image

மு.தவக்குமார் 

ஊடகக் கற்கைகள் துறை, 

யாழ். பல்கலைக்கழகம்.

ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத் தொடர்ந்து அப்பல்லோ திட்டத்தில் முதல் ஆளுடன் அனுப்பப்பட்ட பணி அப்பல்லோ 7 பணியாகும். 

இந்த நேரடி ஒளிபரப்பு, தான் விண்வெளி ஆய்வு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் ஒரு முக்கிய மைல்கல்லைத் தொட்டன எனலாம். முதல் முறையாக விண்வெளி வீரர்களை விண்வெளியில் இருந்து நேரலையில் பார்க்கவும் கேட்கவும் உலகெங்கிலும் உள்ள மக்களை அது அனுமதித்தது. 

இந்த நிகழ்வு விண்வெளியில் இருந்து எதிர்கால ஒளிபரப்புகளுக்கு களம் அமைத்தது. இந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட நாசா ஆய்வு மையம் இன்று வரை விண்வெளி தொடர்பாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

நாசா லேசர் தகவல் தொடர்பு மூலம் அற்புதமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது. முதன்முறையாக, லேசர் தகவல்தொடர்புகள் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது.

இந்த தொழில்நுட்பம் பூமிக்கும் விண்வெளிக்கும் இடையே தரவு எவ்வாறு அனுப்பப்படுகிறது என்பதில் புரட்சியை ஏற்படுத்துவதாக தொழிட்நுட்ப வல்லுனர்கள் உறுதியளிக்கின்றனர். பாரம்பரிய ரேடியோ அலைகளை விட கணிசமாக வேகமான மற்றும் திறமையான பரிமாற்றங்களை இது வழங்குகிறது.

இந்த முன்னேற்றங்கள் நாசாவின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆழமான விண்வெளி ஆய்வுக்கான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் இன்று நாசா மிகத் துல்லியமான விண்வெளி தகவல்தொடர்பு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கான புதிய பாதைகளைத் திறக்கிறது. 

நாசாவின் இந்த மாதத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ப்ளு ஆரிஜினின் புதிய க்ளென் ரொக்கெட், ஒக்டோபர் 13, 2024 அன்று செவ்வாய் கிரகத்திற்கான நாசா பயணத்துடன் அறிமுகமாக இருந்தமையாகும். ESCAPADE (Escape and Plasma Acceleration and Dynamics Explorers)  என பெயரிடப்பட்ட இந்த பணி, செவ்வாய் கிரக ஆய்வில் ஒரு முக்கிய படியைக் குறிக்கும் ப்ளூ ஆரிஜினின் புதிய ஹெவி-லிஃப்ட் ராக்கெட்டின் சோதனையாக இருப்பது  குறிப்பிடத்தக்கது.

ESCAPADE அல்லது எஸ்கேப் அண்ட் பிளாஸ்மா ஆக்சிலரேஷன் மற்றும் டைனமிக்ஸ் எக்ஸ்ப்ளோரர்ஸ் என்பது, நாசாவின் ஒரு இலட்சியப் பணியாகும் . மேலும் உலக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிற நாசாவின் மற்றுமொரு மயில்கல்லாகும். இது செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலம் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றை ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.  

செவ்வாயக்கிரகம், ஒரு காலத்தில் பூமியைப் போன்றது, அதன் வளிமண்டலத்தின் பெரும்பகுதியை இழந்து, குளிர்ந்த, தரிசு நிலப்பரப்பு தற்போது எஞ்சியுள்ளது. ESCAPADE என்பது NASA இன் Mall Innovative Missions for Planetary Exploration (SIMPLEx)  திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது சிறிய, செலவு குறைந்த விண்கலத்தைப் பயன்படுத்தி முக்கிய அறிவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். 

இந்த பணி இரண்டு சிறிய, ஒரே மாதிரியான விண்கலங்களைக் கொண்டுள்ளது, இவை “இரட்டை ஆய்வாளர்கள்” என்று விவரிக்கப்படுகின்றன. அவற்றின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய முக்கியமான தரவுகளை சேகரிப்பதாகும். பல பில்லியன் ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் வழிமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தரவு அவசியமாகிறது. 

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் நீண்ட காலமாக அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தில் தடிமனான வளிமண்டலம் மற்றும் பூமியைப் போன்ற ஒரு காந்தப்புலம் இருந்ததாக நம்பப்படுகிறது. 

இது மிகவும் மிதமான காலநிலையை கொண்டதாகும். இருப்பினும், அதன் காந்தப்புலம் பலவீனமடைந்து மறைந்ததால், கிரகத்தின் வளிமண்டலம் சூரியக் காற்றால் அரிக்கப்பட்டு, அதன் வளிமண்டலத்தின் குறிப்பிடத்தக்க பகுதியை அகற்றி, மெல்லியதாகவும், மேற்பரப்பில் திரவ நீரை பிடித்து வைத்திருக்கும் திறனற்றதாகவும் ஆகியது. 

இந்த வளிமண்டல இழப்பின் பின்னணியில் உள்ள செயல்முறைகளைப் புரிந்துகொள்வது செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, எதிர்கால ஆய்வு முயற்சிகளைத் தெரிவிப்பதற்கும் மற்ற கிரகங்களின் வாழ்விடத்தை ஆய்வு செய்வதற்குமாகும். 

கிரகங்களில் வளிமண்டலங்கள் எவ்வாறு உருவாகலாம் என்பதற்கான ஒரு சிறந்த ஆய்வை செவ்வாய் கிரகம் வழங்குகிறது. மேலும் வளிமண்டலத்தில் காந்த மண்டலத்தின் பங்கைப் பற்றிய நமது புரிதலில் உள்ள சந்தேகங்களை  நிரப்ப நாசாவின்  இந்த நுளுஊயுPயுனுநு பணி தயாராக உள்ளது.

ESCAPADE பணியானது பல முக்கிய அறிவியல் நோக்கங்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தின் காந்த மண்டலத்தின் இயக்கவியல் மற்றும் சூரியக் காற்றுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறது.

செவ்வாய் வளிமண்டலத்துடன் சூரியக் காற்று எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை அளவிடுவதன் மூலம், காலப்போக்கில் கிரகத்தின் வளிமண்டலத்தில் எவ்வளவு விண்வெளியில் தொலைந்து போனது என்பதைக் கணக்கிட இந்த ESCAPADE உதவும். 

செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற  காந்தப்புலம் இல்லை என்றாலும், அது குறிப்பிட்ட மேற்பரப்புக்களில் காந்தப்புலங்களைக் கொண்டுள்ளது. ESCAPADE இந்த காந்த முரண்பாடுகள் சூரியக் காற்றுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதை ஆய்வு செய்கிறது.

ESCAPADE பணியானது ஒரே மாதிரியான இரண்டு விண்கலங்களைக் கொண்டுள்ளது, அவை ஒரே ராக்கெட்டில் ஒன்றாக ஏவப்பட்டு பின்னர் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி தனித்துவமான, நீள்வட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்படும். சற்று வித்தியாசமான பாதைகளில் சுற்றுவதன் மூலம், இரண்டு விண்கலங்களும் ஒரே நேரத்தில் செவ்வாயின் காந்த மண்டலத்தை வெவ்வேறு பார்வை புள்ளிகளில் இருந்து அளவிட முடியும்.  

சூரியக் காற்று என்பது சூரியனால் உமிழப்படும் சக்தியேற்றப்பட்ட துகள்களின் (பிளாஸ்மா) நிலையான பரவுதல் ஆகும், மேலும் அது ஒரு கிரகத்தின் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, அது காலப்போக்கில் வளிமண்டலத் துகள்களை அகற்றும். செவ்வாய் கிரகத்தைப் பொறுத்தவரை, காந்தப்புலம் இல்லாததால், வளிமண்டலம் இந்த வகையான அரிப்புக்கு ஆளாகிறது. 

இவ்வகையில்,  ESCAPADE ஆனது சூரியக் காற்று எவ்வாறு அயனோஸ்பியருடன் (செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் சக்தியேற்றப்பட்ட அடுக்கு) தொடர்பு கொள்கிறது என்பதனையும் அளவிடுகிறது. கிரகத்தின் பின்னால் உள்ள ஒரு பகுதி, சூரியக் காற்று கிரகத்தின் காந்தப்புலக் கோடுகளை நீட்டி, வால் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இங்குதான் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறுவதைத் துரிதப்படுத்தும் பல செயல்முறைகள் நடைபெறுகின்றன. 

 ESCAPADE குறிப்பாக செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் கண்டுபிடிப்புகள் கிரக அறிவியலுக்கும் வெளிக்கோள்களின் ஆய்வுக்கும் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/196922

சூரிய குடும்பத்தைக் காட்டிலும் மிகப்பெரிய கருந்துளைகள் கண்டுபிடிப்பு - அவை எப்படி உருவாகின்றன என்று தெரியுமா?

1 month 4 weeks ago
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA GODDARD

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான்
  • பதவி, பிபிசிக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா?

நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாயுக்களையும் தனக்குள் இழுத்துக் கொள்கிறது.

பால்வெளி நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் இந்தப் பெரும் கருந்துளை தான் அதன் இதயம். இதுதான் நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் பிறப்பையும், அதன் 1,300 கோடி ஆண்டுகால வரலாற்றையும் நமது சூரியக் குடும்பத்தின் தோற்றத்தையும் இயக்குகிறது.

 

சில நேரங்களில், ஏதேனும் நட்சத்திரம் அதன் அருகில் சுற்றிச் செல்லலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் அது உடைந்து, அதன் இருப்பின் அடையாளமே இல்லாமல் மறைந்துவிடும்.

கருந்துளைகள் இயற்கையின் அச்சுறுத்தும் அம்சங்கள். மிகப் பிரமாண்டமான அளவில் ஆக்கவும் அழிக்கவும் வல்லவை.

கிட்டத்தட்ட எல்லா பெரிய நட்சத்திர மண்டலமும் தன் மையத்தில் ஒரு பெரும் கருந்துளையைக் கொண்டுள்ளது. பால்வெளி மண்டலம் என்றழைக்கப்படும் நமது நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் இருக்கும் கருந்துளை ‘சஜிடேரியஸ் ஏ*’ (Sagittarius A* - ‘Sagittarius a star’) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் எடை குறைந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சியாளர்கள் 'அல்ட்ராமாஸிவ் ப்ளாக் ஹோல்ஸ்' என்று அழைக்கப்படும் மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் உட்பட பல கருந்துளைகளைக் கண்டறிந்துள்ளனர். சில கருந்துளைகள் சஜிடேரியஸ் ஏ*-வைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு பெரியவை. சில நம்முடைய சூரியக் குடும்பத்தைக் காட்டிலும் மிகப்பெரியவை.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி தற்போது வெளியிட்டுள்ள காட்சிகள், காலம் துவங்கும் போது இத்தகைய பிரம்மாண்டமான கருந்துளைகள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி அறிய புதிய தகவல்களை வழங்குகிறது.

ஆனால் இவை எங்கே இருந்து வந்தன? இவை இன்னும் எவ்வளவு பெரிதாக இருக்கக்கூடும் என்பவையெல்லாம் புரியாத புதிராகவே உள்ளன.

மிகப்பெரிய கருந்துளை எது?

கருந்துளைகளின் அளவை மதிப்பிடுவது (அதன் நேரடி வரையறையின் படி கணிக்க இயலாது) அவ்வளவு எளிமையானது அல்ல. ஆனால் மிகப்பெரிய கருந்துளைகள் பற்றி நாம் அறிவோம். இதுவரை கண்டறியப்பட்ட கருந்துளைகளில் மிகவும் பெரியது டான் 618 ஆகும். புவியிலிருந்து 18 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் அது அமைந்துள்ளது.

சூரியனைக்காட்டிலும் 66 பில்லியன் எடை கொண்டது இது. சூரியனுக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 40 மடங்கு அகலம் கொண்டது.

நம்முடைய பால்வெளி குழுமங்களின் மத்தியில் ஹோம் 15ஏ என்ற கருந்துளை உள்ளது. அதனுடைய எடை சூரியனைப் போன்று 44 பில்லியன் அதிகமாக இருக்கும் என்றும் அதன் தூரம் நெப்டியூனுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைப் போன்று 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் சமீபத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

இவை மறுக்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. ஆனால் அதனைக் காட்டிலும் மிகப்பெரிய கருந்துளைகள் அங்கே இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இங்கிலாந்தின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கண்காணிப்பு அண்டவியல் நிபுணரான ஜேம்ஸ் நைட்டிங்கேல், "கோட்பாடுகள் என்ற கோணத்தில் பார்த்தால் கருந்துளையின் அளவு இவ்வளவுதான் என்று மதிப்பிட இயலாது," என்று கூறுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சூரியனைப் போன்று 33 பில்லியன் அதிக எடை கொண்ட கருந்துளையை கண்டுபிடித்தவர்.

நாம் இது நாள் வரை அறிந்திருக்கும் கருந்துளைகள் பல்வேறு அளவைக் கொண்டவை. மிகச்சிறிய கருந்துளைகள் ஒரு அணுவின் அளவிற்கு சிறியதாக இருக்கும். நட்சத்திரங்கள் அழிந்து உருவாகும் ஸ்டெல்லர் மாஸ் கருந்துளைகள் அதிக பரிட்சயமானவை. இவை சூரியனின் எடையைப் போல் மூன்று மடங்கு முதல் 50 மடங்கு வரை பெரியவையாக இருக்கலாம்.

ஆனால் அவை 'லண்டன் அளவுடைய கருந்துளைகள்' என்ற பொருள்படுத்தப்படுகிறது என்று கூறுகிறார் கனடாவில் உள்ள மாண்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜூலி ஹ்லாவசெக் லாரோண்டோ. அவர் அங்கு விண்வெளி இயற்பியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார்.

இதற்கு அடுத்த வகை கருந்துளைகள் 'இண்டர்மீடியேட் மாஸ்' கருந்துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சூரியனைக்காட்டிலும் 50 ஆயிரம் மடங்கு எடை கொண்டவை. வியாழன் கோளின் அளவுக்கு விரிந்து காணப்படுகின்றன.

அடுத்தது 'சூப்பர்மாஸிவ்' கருந்துளைகள். அவை சூரியனைக் காட்டிலும் பல மில்லியன், பில்லியன் எடைக் கொண்ட கருந்துளைகள் ஆகும்.

 
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,EHT COLLABORATION

படக்குறிப்பு, பால்வீதியின் மையத்தில் அமைந்துள்ள கருந்துளையை சுற்றிக் கொண்டிருக்கும் வாயு வளை
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் என்றால் என்ன?

'அல்ட்ராமாஸிவ்' கருந்துளைகளுக்கான வரையறை ஏதும் இதுவரை இல்லை என்ற போதும் அவை பொதுவாக சூரியனைக் காட்டிலும் 10 பில்லியன் அதிகம் எடையில் துவங்கும் என்ற கருத்தை பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என்கிறார் லாரோண்டோ.

கருந்துளைகள் அவ்வளவு பெரியதாக மாறாது என்று கோட்பாட்டு அளவில் கூற இயலாது.

ஒப்பீட்டளவில் பிரஞ்சத்தின் இளம்வயது என்பது 13.7 பில்லியன் ஆண்டுகள் என்பதையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதை கருத்தில் கொண்டால், அவற்றின் இருப்பானது மனித எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது.

தன்னைச் சுற்றி இருக்கும் பொருட்களை ஈர்ப்பு விசையினால் உள்ளிழுத்துக் கொள்கிறது கருந்துளைகள். இதனை மேற்கோள்காட்டி பேசும் லாரோண்டோ, "இந்த பாரம்பரிய கருத்தாக்கத்தை கணக்கில் கொண்டால் அதிக எடையிலான கருந்துளைகள் உருவாவது சாத்தியமற்றது," என்கிறார். மக்கள் இதன் இருப்பை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

கோட்பாடு அளவில், தொடர்ச்சியாக கருந்துளைக்குள் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகள் சென்று கொண்டே இருக்கும் போது அது அளவில் பெரிதாகிக் கொண்டே இருக்கும். நடைமுறையில், பிரபஞ்சத்தின் வயது மற்றும் நாம் ஒரு கருந்துளை வளரும் விகிதமாக நாம் கருதும் விகிதம் கருந்துளைகளின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

கோட்பாட்டளவில், காலம் கணக்கிடப்பட்ட நாளில் இருந்து கருந்துளைக்குள் நட்சத்திர கழிவுகளும் இதர வானியல் கூறுகளும் சென்று கொண்டே இருந்திருந்தால் இன்றைய தேதிக்கு அந்த கருந்துளையானது 270 பில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளையாக அது மாறியிருக்க வேண்டும்.

ஆனால், கருந்துளைகள் அவ்வாறு வளரும் என்று யாரும் கருதவில்லை அதனால் தான் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகள் எனப்படும் பாரிய கருந்துளைகள் யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள், சில கருந்துளைகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை ஈர்ப்பு விசை மூலம் கிரகித்துக் கொண்டு, நவீன பிரபஞ்சத்தில் டிரில்லியன் சோலார் எடை கொண்ட கருந்துளைகளாக மாறியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.

மிகப் பெரிய கருந்துளைகள் என்ற முத்திரை குத்தப்பட்ட இவை, ஒரு ஒளி ஆண்டின் ஆரத்தைக் கொண்டிருக்க கூடும். ஆனால் அத்தகைய கூறுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில நட்சத்திர மண்டலங்களின் மையங்களில் அவை மறைந்திருக்கலாம் என்ற கருத்தையும் நம்மால் நிராகரிக்க இயலாது.

2010களில் வானியல் ஆராய்ச்சியாளர்கள் முதல் 'அல்ட்ராமாசிவ்' கருந்துளைகளைக் கண்டறிந்தனர். பிறகு, 2023ம் ஆண்டில் நைட்டிங்கேல் மற்றும் அவருடைய குழு கண்டறிந்த கருந்துளை உட்பட கிட்டத்தட்ட 100 கருந்துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெகு தூரத்தில் உள்ள விண்மீன் மண்டலத்தில் கருந்துளையைச் சுற்றி ஒளி வளைந்து சென்றதன் விளைவாகவே இத்தகைய கருந்துளைகள் கண்டறியப்பட்டன. "இது மிகவும் தற்செயலான கண்டுபிடிப்பு" என்கிறார் நைட்டிங்கேல்.

"அவை பிரபஞ்ச வரலாற்றின் ஆரம்பத்தில் பிறந்து, பின்னர் மூர்க்கமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை விழுங்கியிருக்கக் கூடும்," என்கிறார் அவர்.

 
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,SLOAN DIGITAL SKY SURVEY

படக்குறிப்பு, குவாசர் அருகே நிலை கொண்டிருக்கும் டான் 618 அல்ட்ராமாஸிவ் கருந்துளை
கருந்துளைகள் உருவாக்கத்திற்கு பின்னால் இருக்கும் இயற்பியல் என்ன?

கருந்துளைகளை அவற்றின் இயல்பின் காரணமாக நாம் நேரடியாகப் பார்க்க முடியாது. ஈவன்ட் ஹொரைசன் (Event Horizon) என்று அழைக்கப்படும் கருந்துளைகளின் எல்லையில், ஈர்ப்பு விசை மிகவும் தீவிரமாக இருக்கும்.

அதில் இருந்து எதுவும் தப்பிக்க இயலாது. ஒளியும் கூட. எனவே கருந்துளையால் ஈர்க்கப்படும் அதனைச் சுற்றியுள்ள பிரகாசமான பொருட்களின் மீது விழும் அதனின் நிழலைக் கொண்டே கருந்துளைகளைக் காண இயலும்.

இருப்பினும், ஒரு பால்வீதியைப் பார்த்து அதில் மத்திய கருந்துளையின் விளைவுகளைக் குறிப்பிடுவதன் மூலம் அவற்றின் இருப்பை நாம்மால் எளிமையாக யூகிக்க இயலும்.

கருந்துளையின் துருவங்களிலிருந்து வெளியேற்றப்படும் பலமிக்க ஒளிக்கற்றைகளை காண்பது மற்றொரு வழி. "இது போன்ற ஒளிக்கற்றைகளை அது எவ்வாறு உருவாக்குகிறது என்று நமக்கு தெரியாது. ஆனால் அவற்றால் இதனை செய்ய இயலும்," என்கிறார் லாரோண்டோ. ரேடியோ ஜெட்கள் என்று அழைக்கப்படும் இந்த ஒளிக்கற்றைகள் மில்லியன் ஒளி ஆண்டுகள் நீளத்தை கொண்டிருக்கலாம்.

கருந்துளைகள் சூடான வளையங்களையும் உருவாக்கும். அக்ரிஷன் டிஸ்க்குகள் (Accretion disks) என்று அழைக்கப்படும் இந்த வளையங்கள் கருந்துளைகளைச் சுற்றி சுழலும் பொருட்கள் கருந்துளைக்குள் இழுக்கப்படும் போது உருவாகுகின்றன.

கருந்துளையைச் சுற்றி பொருட்கள் அபரிமிதமான ஈர்ப்பு விசையால், "ஒளியின் வேகத்தில்" வேகமாகச் சுழல்கிறது என்கிறார் லரோண்டோ. கருந்துளையை நோக்கி பொருட்கள் விழும் போது, எக்ஸ் கதிர்கள் வெளியிடப்படுகிறது.

ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் பொருட்கள் விழும். மேலும் அதில் இருந்து தப்பிக்க இயலாது என்ற இயற்பியல் - அல்ட்ராமாஸிவ் மற்றும் சிறிய கருந்துளைகளுக்கு இடையே பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளது. அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் அவற்றின் அளவு காரணமாக ஒரு சுவாரஸ்யமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் துரதிர்ஷ்டவசமாக ஒரு நட்சத்திர தூசி கருந்துளையில் விழுந்தால், உங்கள் கால்களுக்கும் உங்கள் தலைக்கும் இடையே உள்ள ஈர்ப்பு வித்தியாசத்தின் காரணமாக, உங்கள் உடல் நீளமாக்கப்பட்டுவிடும். ஸ்பாகெட்டிஃபிகேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

ஆனால் ஒரு அல்ட்ராமாசிவ் கருந்துளையில், ஈர்ப்பு மிகவும் குறைவாவும் செங்குத்தானதாகவும் உள்ளது, ஏனெனில் அது விண்வெளியில் மேலும் விரிவடைகிறது.

ஈவன்ட் ஹொரைசன் எனப்படும் அதன் எல்லைக்கு அப்பால் விழுவதை நீங்கள் உணரக் கூட இயலாது. "உங்கள் உடல் நீட்டிக்கப்படாது" என்கிறார் நைட்டிங்கேல். கருந்துளையின் ஈர்ப்பு விசையின் காரணமாக உங்களைச் சுற்றியுள்ள நட்சத்திர ஒளியின் சிதைவுதான் உங்கள் விதியை மாற்றி அமைக்கும் ஒரே விசயமாக இருக்கும்.

 
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA

படக்குறிப்பு, சூப்பர்மாஸிவ் கருந்துளைகளில் இருந்து வெளியேறும் ஒளிக்கற்றைகள்

ஜேம்ஸ் வெப் தொலை நோக்கிக்குத்தான் நன்றி கூற வேண்டும். பிரபஞ்சத்தின் எந்த மூலைகளில் இருந்தும் வரும் வெளிச்சம் நம்மை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் காரணமாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தொலைதூரத்தில் உள்ள வானியல் கூறுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபஞ்சத்தின் முதல் சில நூறு மில்லியன் ஆண்டுகள் வயதான விண்மீன் திரள்களைப் பார்க்க வழிவகை செய்கிறது இந்த தொலைநோக்கி. அவற்றில் சில ஏற்கனவே பெரிய கருந்துளைகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தொலைதூர கருந்துளைகள் இவ்வளவு பெரியதாக வளர, அவை பிரபஞ்ச வரலாற்றின் துவக்கத்திலேயே பிறந்திருக்க வேண்டும், பின்னர் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான வரம்புகளைப் பற்றி நமக்கு அறிந்த அனைத்தையும் மீறும் விதமாக அதனைச் சுற்றியுள்ள பொருட்களை கடுமையாக உள்வாங்கியிருக்க வேண்டும்.

ஆராய்ச்சியாளர்கள், எதிர்பார்த்ததை விட மிகவும் பிரகாசமாக ஒளிரும் நூற்றுக்கணக்கான விசித்திரமான, சிறிய விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவை பிக் பேங்கிற்கு சுமார் 600 மில்லியன் ஆண்டுகள் முதல் ஒரு பில்லியன் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். நிறம் மற்றும் அளவு காரணமாக அவை லிட்டில் ரெட் டாட் (Little Red Dot) விண்மீன் திரள்கள் என்று அறியப்படுகின்றன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவை வெளியிடும் ஒளி, அவற்றுக்குள் ஏற்கனவே சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் இருப்பதை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.

ஆராய்ச்சிகள், கருந்துளைகள் உண்மையில் விரைவாக வளரும் தன்மை கொண்டவை என்கின்றன. நமது பிரபஞ்சத்தில், விண்மீன் திரள்களின் மையங்களில் உள்ள பெரிய கருந்துளைகள் ஹோஸ்ட் கேலக்ஸியைக் காட்டிலும் விட சுமார் 1,000 மடங்கு சிறியதாக இருக்கும்.

ஆனால் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கருந்துளைகள் பிரபஞ்சம் உருவான காலத்தில் இருந்தே அதன் பால்வீதி மண்டலங்களின் அளவைக் கொண்டுள்ளன என்று கண்டறிந்துள்ளது. பால்வீதி மண்டலங்கள் உருவாவதற்கு முன்பே அங்கு கருந்துளைகள் இருந்திருக்கக் கூடும் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன.

நம்முடைய பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில், இந்த கருந்துளைகளின் எடையானது நாம் எதிர்பார்ப்பதை விட பத்து முதல் சில நூறு மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அண்டவியல் நிபுணர் ஹன்னா அப்லெர் கூறுகிறார்.

 
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வானியல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டன்கள் எனப்படும் ஆரம்பகால கருந்துளைகளை அதீத எடை கொண்ட கருந்துளைகள் என அழைக்கின்றனர்
சூப்பர்மாஸிவ் கருந்துளைகள் எப்படி உருவாகியிருக்கக் கூடும்?

கருந்துளைகள் எவ்வாறு வளருகின்றன என்பது புதிராக உள்ளதோ அவ்வாறே ஆரம்பகால பிரபஞ்சத்தில் எவ்வாறு இது தோன்றியது என்பதும் புதிராக உள்ளது.

பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள் அழிந்த போது இது தோன்றியிருக்கக் கூடும் என்று ஒரு சிலர் நம்புகின்றனர். பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய நட்சத்திரங்கள் பாப்புலேசன் 3 ஸ்டார்கள் (Population III stars) என்று அழைக்கப்படுகின்றன. மிகப்பெரிய நட்சத்திரங்களான இவை சூரியனைக் காட்டிலும் 100 முதல் 1000 மடங்குகள் நிறை கொண்டவை.

ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் அவை உருவானது. அந்த நட்சத்திரங்களின் இறுதி காலத்தில் ஏற்பட்ட சூப்பர்நோவா பெரும்வெடிப்பால் எடை கொண்ட பொருட்களாக அது வெடித்துச் சிதறியது. அவையே பிறகு இதர நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் நம்முடைய சூரியனாகவும் பூமியாகவும் உருப்பெற்றன.

ஆனால் இதே நட்சத்திர அழிவு பெரிய கருந்துளைகளை உருவாக்கி ஈர்ப்பு விசைக் காரணமாக உள்புறமாக வெடித்துச் சிதறியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நட்சத்திரங்களில் இருந்து தோன்றிய கருந்துளைகள் நட்சத்திர நிறை கருந்துளைக் காட்டிலும் அதிக எடை கொண்டவை என்று விவரிக்கிறார் வானியல் இயற்பியலாளர் மர் மெஸ்குவா. ஸ்பெயினில் உள்ள வானியல் அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவர், "இந்த நிலையில் இருந்து வளர முடியும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதீத எடை கொண்ட சூப்பர்மாஸிவ் கருந்துளைகளாக மாற இயலும்," என்றும் தெரிவிக்கிறார்.

முதல் கருந்துளைகள் ஏற்பட்ட மற்றொரு சாதகமான சாத்தியக்கூறாக பின்வரும் கருத்தாக்கம் முன்வைக்கப்படுகிறது. முதல் கருந்துளைகள் நட்சத்திரங்களிலிருந்து உருவாகவில்லை. மாறாக, நேரடி வெடிப்பு கருந்துளைகள் (direct collapse black holes) எனப்படும் வாயு மேகங்களிலிருந்து உருவாகின என்பதாகும்.

வழக்கமாக, இந்த மேகங்கள் ஈர்ப்பு விசையால் அடர்த்தி அடையும் போது நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் வெப்பநிலை போதுமான அளவிற்கு அதிகமாக இருந்தால், சில மேகங்கள் நட்சத்திரங்களை உருவாக்காமல் நேரடியாக கருந்துளைகளாக வெடித்திருக்கலாம். "இது போன்ற சூழலை தற்போதைய பிரபஞ்சத்தில் நாம் காணவில்லை" என்கிறார் மெஸ்குவா. ஆரம்பகால வெப்பமான, கொந்தளிப்பான பிரபஞ்ச சூழ்நிலையில் அது சாத்தியமாகியிருக்கலாம் என்கிறார் அவர்.

பாப்புலேசன் 3 நட்சத்திரங்கள் (Population III stars) அல்லது நேரடி வெடிப்பு கருந்துளைகளை (direct collapse black holes) நாம் இன்னும் உறுதியாக காணவில்லை. எனவே ஆரம்பகால பிரபஞ்சத்தில் கருந்துளை உருவாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியவை இந்த இரண்டில் எது என்பதை நம்மால் துல்லியமாக கூற இயலாது.

 
அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விண்மீன் திரள்கள் அனைத்தும் பிரகாசமாக இருப்பதில்லை. பெரிய கருந்துளைகளை கொண்ட திரள்கள் அனைத்தும் இருண்டே இருக்கின்றன

எப்படியாக கருந்துளைகள் உருவாகியிருந்தாலும் அவை பெரிய அளவில் வளர விரைவாக ஒரு வழியை கண்டுபிடித்திருக்கின்றன. அதற்கான சாத்தியமான கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அதிக அளவில் அவை உருவாக்கப்பட்டு பிறகு ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய கருந்துளைகளை அவை உருவாக்கியிருக்க வேண்டும்.

முதலில் இடைநிலை நிறை கொண்ட கருந்துளைகள். பின்னர் சூப்பர்மாஸிவ் கருந்துளைகள். பின்னர் அல்ட்ராமாஸிவ் கருந்துளைகள். இது பாப்புலஸ் 3 நட்சத்திரங்களிலிருந்து தோன்றிய கருத்தாக்கத்தை ஆதரிக்கும்.

"இன்று நாம் பல இடைநிலை கருந்துளைகளைக் கண்டால், அவை பாப்புலஸ் 3 நட்சத்திரங்களின் மூலம் உருவாகின்றன என்று அர்த்தம்" என்கிறார் மெஸ்குவா. சிறிய விண்மீன் திரள்கள் மத்தியில் ஒரு சில இடைநிலை எடை கொண்ட கருந்துளைகளைக் கண்டறிந்தால் அவை பெரிதாகும் என்று சில வானியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அல்ட்ராமாசிவ் கருந்துளைகள் வெடிப்புகளில் அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை விரைவாக உட்கொள்வதன் மூலம் விரைவாக வளர்ந்திருக்கலாம்.

இதற்கான ஆதாரங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆய்வு செய்து வருகிறது. பிரகாசமான மற்றும் சுறுசுறுப்பான சில ஆரம்பகால விண்மீன் திரள்களை வானியலாளர்கள் கவனித்துள்ளனர். ஆனால் மற்ற பெரிய கருந்துளைகளுடன் உள்ள விண்மீன் திரள்கள் அனைத்தும் செயலற்றதாகத் தோன்றுகின்றன. இவை இவ்வாறு செயலற்று போவதற்கு முன்பு அதனைச் சுற்றியுள்ள வானியல் கூறுகளை ஈர்ப்பின் காரணமாக உட்கொண்டிருக்கக் கூடும் என்று பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

"இந்த சுழற்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரியாது," என்கிறார் லாரோண்டோ. இருப்பினும், வேகமாக அனைத்தையும் உள்ளே கிரகித்துக் கொள்ளும் போக்கானது அரிதாகவே இருக்கும் என்று அவர் கூறுகிறார். "கருந்துளையின் வாழ்நாளில் 1% இருக்கலாம்."

நவீன பால்வெளியில் எவ்வளவு பெரிய கருந்துளைகள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "பிரபஞ்சத்தின் வயதை அடிப்படையாகக் கொண்டே அதன் எடையானது 270 பில்லியன் சோலார் நிறை கொண்டதாக இருக்கலாம் என்று நாங்கள் தோராயமாக மதிப்பிட்டுள்ளோம்" என்று லாரோண்டோ கூறுகிறார். "ஒருவேளை பிரபஞ்சம் நம்மை மீண்டும் ஆச்சரியப்படுத்தும்." என்று கூறினார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ஐஸ்லாந்தில் சீறும் எரிமலையில் துளையிடும் விஞ்ஞானிகள் - எதற்காக தெரியுமா?

2 months ago
கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அட்ரியன் முர்ரே
  • பதவி, பிபிசிக்காக வடகிழக்கு ஐஸ்லாந்தில் இருந்து
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

நான் உலகின் எரிமலை ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான, வடகிழக்கு ஐஸ்லாந்தின், `கிராஃப்லா’ எரிமலைக்கு அருகில் இருக்கிறேன்.

சிறிது தூரம் தள்ளி என்னால் எரிமலையின் விளிம்பை பார்க்க முடிகிறது.

கடந்த 1,000 ஆண்டுகளில் கிராஃப்லா சுமார் 30 முறை வெடித்துள்ளது, கடைசியாக 1980 களின் நடுப்பகுதியில் வெடித்தது.

ஜார்ன் குமுண்ட்சன்(Bjorn Guðmundsson) என்னை ஒரு புல்வெளி மலைக்கு அழைத்துச் சென்றார். அவர் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவை நிர்வகிக்கிறார்.

"துளையிடப் போகும் இடத்தில் தான் நாம் தற்போது நின்று கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

`கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ (KMT) ஆய்வு, `மாக்மா’ அல்லது `உருகிய பாறை’ நிலத்திற்கு கீழே எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலை மேம்படுத்த செய்யப்படுகிறது.

இந்த ஆய்வு விஞ்ஞானிகளுக்கு எரிமலை வெடிப்புகளின் அபாயத்தை முன்னறிவிப்பதற்கு வழிவகுக்கும். விஞ்ஞானிகளுக்கு அதிக வெப்பமான எரிமலை ஆற்றலை அணுக அனுமதிப்பதன் மூலம் புவி வெப்ப ஆற்றலை (geothermal energy) பயன்படுத்த புதிய சாத்தியக்கூறுகளை கண்டறிய உதவும்.

 

`கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ ஆய்வின் முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டு, முதல் குழுவானது இரண்டு போர்ஹோல்களில் முதலாவது துளையிடும் பணியைத் தொடங்கும். அதன் பின்னர் ஒரு தனித்துவமான நிலத்தடி மாக்மா ஆய்வகம் உருவாகும். இது நிலத்தடியில் சுமார் 2.1 கிமீ (1.3 மைல்) ஆழத்தில் இருக்கும்.

"இது நிலவுக்கு விண்கலம் அனுப்புவது போன்றது. அதாவது இந்த ஆய்வு விஷயங்களை மாற்றப் போகிறது” என்கிறார் யான் லாவல்லீ.

இவர் மியூனிச்சில் உள்ள லுட்விக்ஸ்-மாக்சிமிலியன் பல்கலைக் கழகத்தில் மாக்மடிக் பெட்ரோலஜி மற்றும் எரிமலையியல் பேராசிரியராகவும், கேஎம்டியின் அறிவியல் குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

எரிமலைகளின் செயல்பாடு பொதுவாக நிலநடுக்கமானி (seismometers) போன்ற கருவிகளால் கண்காணிக்கப்படுகின்றன. ஆனால் மேற்பரப்பில் உள்ள எரிமலைக் குழம்பு பற்றி நமக்கு தெரிந்த அளவுக்கு பூமிக்குக் கீழே உள்ள மாக்மாவைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது என்று பேராசிரியர் லாவல்லி விளக்குகிறார்.

 
கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்
படக்குறிப்பு, ஜார்ன் குமுண்ட்சன் கிராஃப்லாவின் மாக்மாவில் (magma) துளையிடத் திட்டமிட்டுள்ள சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவை நிர்வகிக்கிறார்.

"நாங்கள் மாக்மாவைக் கருவியாகப் பயன்படுத்த விரும்புகிறோம், அதன் மூலமாக பூமியின் துடிப்பைக் கேட்க முடியும்" என்று அவர் கூறினார்.

`மோல்டன் ராக்ஸ்’ எனப்படும் உருகிய பாறையில் அழுத்தம் மற்றும் வெப்பநிலை கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்படும்.

"இவை நாம் ஆராய வேண்டிய இரண்டு முக்கிய அளவுருக்கள், இதன் மூலம் மாக்மாவில் என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே சொல்ல முடியும்," என்று அவர் விவரித்தார்.

உலகெங்கிலும் 80 கோடி மக்கள், எரிமலைகளில் இருந்து 100 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அபாயகரமான சூழலில் வாழ்கின்றனர்.

தற்போது முன்னெடுத்திருக்கும் துளையிடல் பணி மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்ற உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஐஸ்லாந்தில் 33 சீறும் எரிமலைகள் (Active Volcano) உள்ளன. அவை யூரேசிய மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தட்டுகள் பிரிந்து செல்லும் பிளவின் மீது அமைந்துள்ளன.

மிக சமீபத்தில், ரெய்கேன்ஸ் தீபகற்பத்தில் எட்டு எரிமலை வெடிப்புகள் நிகழ்ந்து அப்பகுதியின் உள்கட்டமைப்பை சேதப்படுத்தின. மக்களும் பாதிக்கப்பட்டனர்.

குமுண்ட்சன் மேலும் எய்யாஃப்லட்யோகுச் (Eyjafjallajökull) என்னும் பகுதியை சுட்டிக்காட்டினார். இது 2010-இல் பேரழிவை ஏற்படுத்தியது. எரிமலையின் சீற்றத்தால் மேகங்கள் சாம்பல் நிறமாயின. 1,00,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் £3 பில்லியன் ($3.95bn) மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டது.

"அந்த எரிமலை வெடிப்பை நாம் சிறப்பாகக் கணிக்க முடிந்திருந்தால், நஷ்டம் ஆகாமல் தவிர்த்திருக்கலாம்" என்று அவர் கூறுகிறார்.

 
மாக்மா ஆற்றலில் இருந்து மின்சாரம்
கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கிராஃப்லா

`கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ ஆய்வின் இரண்டாவது போர்ஹோல் புதிய தலைமுறை புவிவெப்ப மின் நிலையங்களுக்கான சாத்தியங்களை உருவாக்கும். இது மாக்மாவின் தீவிர வெப்பநிலையைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க அனுமதிக்கும்.

"மாக்மா மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பொதுவாக நீர்ம வெப்ப ஆற்றல் அமைப்புகளில் (hydrothermal systems) வெப்ப மூலமாக மாக்மா பயன்படுகிறது. எனவே நேரடியாக மாக்மாவை ஆற்றல் மூலமாக ஏன் பயன்படுத்தக் கூடாது? " என்று பேராசிரியர் லாவல்லி கேள்வி எழுப்புகிறார்.

ஐஸ்லாந்தின் 25% மின்சாரமும், 85% வீட்டுக்கு தேவையான வெப்ப ஆற்றலும் புவிவெப்ப மூலங்களிலிருந்து தான் வருகிறன. இந்த செயல்பாட்டில் ஆழமான நிலத்தடியில் இருக்கும் வெப்பமான திரவங்களின் மூலம், நீராவியை உருவாக்கி டர்பைன்களை இயக்கி மின்சாரத்தை உருவாக்குகிறது.

கிராஃப்லா மின் உற்பத்தி நிலையம் சுமார் 30,000 வீடுகளுக்கு சுடு நீர் மற்றும் மின்சாரம் வழங்குகிறது.

"மாக்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக துளையிடுவதே எங்களின் திட்டம்" என்று பிஜார்னி பால்சன் புன்னகையுடன் கூறுகிறார். இவர் தேசிய ஆற்றல் வழங்குநரான லாண்ட்ஸ்விர்க்ஜுனில் புவிவெப்ப வளர்ச்சியின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

மாக்மாவை நிலத்தடியில் கண்டறிவது மிகவும் கடினம். ஆனால் 2009 இல் ஐஸ்லாந்திய பொறியாளர்கள் தற்செயலாக ஒரு மாக்மாவை கண்டுபிடித்தனர்.

அந்த பொறியாளர்கள் 4.5 கிமீ ஆழமான ஆழ்துளைக் கிணற்றை உருவாக்கி மிகவும் சூடான திரவங்களைப் பிரித்தெடுக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் வியக்கத்தக்க வகையில் ஆழமற்ற மாக்மாவை கண்டறிந்தனர். இதனால் துளையிடும் செயல்பாடு நிறுத்தப்பட்டது.

"2.1 கிமீ ஆழத்தில் மாக்மா தட்டுப்படும் என்று நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை" என்று பால்சன் கூறுகிறார்.

மாக்மாவை கண்டறிவது அரிதானது. இதுவரை ஐஸ்லாந்து, கென்யா மற்றும் ஹவாய் பகுதிகளில் மட்டுமே இது நிகழ்ந்துள்ளன.

நிலத்தடி புவி வெப்ப ஆற்றல்

உலகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட புவிவெப்ப மின் நிலையங்கள் காணப்படுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறைந்த கார்பன் கொண்ட ஆற்றலுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

புவி வெப்ப ஆற்றலை பிரித்தெடுக்க அமைக்கப்படும் கிணறுகள் பொதுவாக சுமார் 2.5 கிமீ ஆழத்தில் இருக்கும். மேலும் 350°C க்கும் குறைவான வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.

பல நாடுகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சிக் குழுக்கள், 5 முதல் 15 கிமீ ஆழத்தில் 400 டிகிரி செல்சியஸைத் தாண்டும் `சூப்பர்-ஹாட் ராக்’ என்று அழைக்கப்படும் மிகவும் மேம்பட்ட மற்றும் தீவிர ஆழமான புவிவெப்ப ஆற்றலை நோக்கி முன்னேறுகின்றன.

மிகவும் ஆழமான பகுதி நோக்கி ஆய்வுகள் விரைவடையும் போது, அங்கு கிடைக்கும் வெப்ப ஆற்றல் பொக்கிஷம் போன்றது" என்று கிரிஃபித் பல்கலைக்கழகத்தின் டீனும், நியூசிலாந்தில் உள்ள புவிவெப்ப நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான ரோசாலிண்ட் ஆர்ச்சர் கூறுகிறார்.

"இந்த ஆய்வில் நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் மெக்சிகோ ஆகியவையும் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ தான் துளையிடும் செயல்பாட்டை நெருங்கி உள்ளது" என்று அவர் கூறுகிறார்.

"இது எளிதான செயல்பாடு அல்ல, அதே சமயம் மலிவானதும் அல்ல." என்றார்.

 
கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்
படக்குறிப்பு, புவிவெப்ப சக்திக்கு அதிக தேவை உள்ளது
துளையிடுவதில் இருக்கும் சவால்கள்

இது போன்ற தீவிர சூழலில் துளையிடுவது தொழில்நுட்ப ரீதியாக சவாலானதாக இருக்கும், மேலும் அதி நவீன உபகரணங்கள் தேவைப்படும்.

"அது சாத்தியம். ஜெட் என்ஜின்கள், அணுசக்தி பணிகள் ஆகியவற்றிலும் தீவிர வெப்பநிலை காணப்படுகிறது. அங்கு பணிகள் தடங்கல் இன்றி நடக்கின்றன. எனவே இதுவும் சாத்தியம் தான்” என்று பேராசிரியர் லாவல்லி நம்பிக்கை கொண்டுள்ளார்.

"நாங்கள் புதிய மற்றும் அதிக அரிப்பை எதிர்க்கும் உலோகக் கலவைகளை ஆராய வேண்டும்" என்கிறார் ஐஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் தொழில்துறை மற்றும் இயந்திர பொறியியல் பேராசிரியரான சிக்ருன் நன்னா கார்ல்ஸ்டோட்டிர்.

அவரது ஆய்வகத்தின் உள்ளே, ஆராய்ச்சியாளர்கள் குழு தீவிர வெப்பம், அழுத்தம் மற்றும் அரிக்கும் வாயுக்களை தாங்கும் உலோக கலவைகளை சோதித்து வருகிறது.

புவிவெப்ப கிணறுகள் பொதுவாக கார்பன் எஃகு மூலம் கட்டமைக்கப்படுகின்றன. ஆனால் வெப்பநிலை 200 ° C ஐ தாண்டும் போது அது விரைவாக வலிமை இழக்கிறது.

"நாங்கள் உயர் தர நிக்கல் உலோகக் கலவைகள் மற்றும் டைட்டானியம் உலோகக் கலவைகளில் கவனம் செலுத்துகிறோம்" என்று அவர் கூறுகிறார்.

எரிமலை மாக்மாவில் துளையிடுவது ஆபத்தானதா?

எரிமலை மாக்மாவில் துளையிடுவது ஆபத்தானதாகத் தெரிகிறது. ஆனால் குமுண்ட்சன் வேறு கோணத்தில் அணுகுகிறார்.

"ஒரு பெரிய மாக்மா அறைக்குள் ஒரு சிறிய ஊசியை உள்ளிடுவதன் மூலம் ஒரு பெரிய விளைவை உருவாக்கும் என்று எங்களுக்கு தோன்றவில்லை," என்று அவர் நம்புகிறார்.

"துளையிடுதலால் ஆபத்தான விளைவு ஏற்பட்ட சம்பவம் 2009 இல் நடந்தது, மேலும் அவர்கள் இதனை முன் ஆராய்ச்சி இல்லாமல் செய்திருக்கலாம். எங்களை பொருத்தவரை இது பாதுகாப்பானது என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.

பூமியில் துளையிடும் போது நச்சு வாயுக்கள், நிலநடுக்கங்களை ஏற்படுத்தும் விளைவுகளை போன்று மற்ற அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஆர்ச்சர்.

இந்த பணிக்கு பல ஆண்டுகள் எடுக்கும், ஆனால் மேம்பட்ட சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட எரிமலை சக்தியைக் கொண்டு வர முடியும்.

"ஒட்டுமொத்த புவிவெப்ப உலகமும் `கிராஃப்லா மாக்மா டெஸ்ட்பெட்’ திட்டத்தை உற்று நோக்குகிறது என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் பேராசிரியர் ஆர்ச்சர். "இது மாற்றத்தை ஏற்படுத்தும்." என்பது அவரது நம்பிக்கை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

பணப்பறிப்பு(Pick Bucher)

2 months ago

இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள்.

எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.

சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது.

இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது.

நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள்.

இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள்.

Full Show;-

https://www.hotstar.com/in/shows/neeya-naana/1584/neeya-naana/1700049182/watch

 

https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/page/3/

மேலே உள்ள தளத்திலேயே நான் பார்ப்பேன்.

வேற்றுக்கிரகவாசிகளின் உலகில் பகல்-இரவு இருக்காது என்று கருதப்படுவது ஏன்?

2 months ago
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், மரியன் கோஹன்
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பகலும் இரவும் மாறிமாறி வந்து, பூமியில் உயிர்கள் செழிக்க உதவுகின்றன. ஆனால் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கும் பல வேற்றுக்கிரகங்களில், இத்தகைய தெளிவான சூழலைக் கொண்டிருக்கவில்லை.

இரவு பகலை பற்றி பேசுகையில், வேற்றுக்கிரகவாசிகள் தூங்குவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது. உயிர்களை உருவாக்கக் கூடிய தன்மை கொண்ட பல கிரகங்களில் பகல்-இரவு சுழற்சி இல்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே சமயம், பூமியிலும் ஆழமான நிலத்தடி அல்லது கடலின் அடிப்பகுதியில் வாழும் உயிரினங்கள் ஒளியற்ற வாழ்விடங்களில் வசிக்கின்றன.

இவை சர்க்காடியன் இசைவு (circadian rhythm) இல்லாத வேற்றுக்கிரகங்களில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

நமது விண்மீன் மண்டலத்தில் உயிர்கள் வாழக்கூடிய தன்மை கொண்ட பில்லியன்கணக்கான கிரகங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கைக்கு பின்னால் ஒரு விளக்கம் உள்ளது. பால் வீதியில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன.

 

இவற்றில் 70% சிறியளவிலான, சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள் ஆகும். அவை M-dwarfs என்று அழைக்கப்படுகின்றன. 2013-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு விரிவான எக்ஸோபிளானட் கணக்கெடுப்பு, எம்-டிவார்ஃப்ட் நட்சத்திரங்களில் 41% அவற்றின் "கோல்டிலாக்ஸ்" மண்டலத்தை சுற்றிவரும் கிரகங்களை கொண்டிருப்பதாக மதிப்பிட்டுள்ளது. இந்த மண்டலத்தில் கிரகத்தில் திரவ நீருக்கு ஏற்ற சரியான வெப்பநிலை உள்ளது.

இதனை உயிர்கள் வாழக்கூடிய சூழல் கொண்ட மண்டலம் என்றும் கூறலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழலைக் கொண்டிருக்கும். எனவே, உயிர்கள் வாழ இது உதவும். ஆனால், இந்த கோள்களில் உண்மையில் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

`டைடல் லாக்கிங்'

எம்-டிவார்ஃப்-இன் 'உயிர்கள் வாழக்கூடிய மண்டலத்தில்' சுற்றிவரும் பாறை கிரகங்கள் எம்-எர்த்ஸ் (M-Earths) என்று அழைக்கப்படுகின்றன. அவை அடிப்படையான விஷயங்களில் நமது பூமியிலிருந்து வேறுபடுகின்றன. ஒன்று, எம்-டிவார்ஃப் நட்சத்திரங்கள் சூரியனை விட மிகவும் குளிர்ந்த நிலையில் இருக்கும். அவை நெருக்கமாக அமைந்திருக்கும்.

நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசை, கிரகத்தின் மறுபுறத்தைக் காட்டிலும் அருகில் உள்ள பக்கத்தின் மீது அதிகமாக செயல்படுகிறது. இது கிரகத்தின் சுழற்சி வேகத்தைக் குறைக்கிறது.

எம்-எர்த்களில் பெரும்பாலானவை டைடல் லாக்கிங் (Tidal locking) செய்யப்பட்டிருக்கும் என்பதை இது குறிக்கிறது. அதாவது, அந்த கிரகத்தின் ஒரு அரைக்கோளம் தொடர்ந்து அந்த நட்சத்திரத்தை நோக்கி இருக்கும். மற்றொன்று எப்போதும் விலகியே இருக்கும்.

Tidal locking அல்லது `ஒத்தியங்கு சுழற்சி’ என்பது ஒரு வானியல்சார் பொருள் மற்றொரு வானியல்சார் பொருளைச் சுற்றி வரும் போது வானியல் பொருளின் ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும்.

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகத்தின் ஆண்டு அதன் நாளின் நீளத்திற்கு சமம். நிலவு பூமியுடன் டைடல் லாக்கிங் செய்யப்பட்டுள்ளது. அதன் விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. நிலவின் மறுபக்கத்தை பூமியில் இருந்தபடி நம்மால் ஒருபோதும் பார்க்க முடியாது.

எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது.
எம்-எர்த் கிரகங்களில் பகல், இரவு இல்லை

டைடல் லாக்கிங் செய்யப்பட்ட ஒரு கிரகம் விசித்திரமானதாகத் தோன்றலாம், ஆனால் உயிர் வாழக்கூடிய தன்மை கொண்ட கிரகங்கள் இதுபோன்று தான் இருக்கும். நமது கிரகத்திற்கு அருகிலுள்ள ப்ராக்ஸிமா சென்டாரி பி (நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஆல்பா சென்டாரி அமைப்பில் அமைந்துள்ளது) அநேகமாக டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்-எர்த் ஆக இருக்கலாம் .

நமது பூமியைப் போலல்லாமல், எம்-எர்த்களுக்கு பகல், இரவு மற்றும் வெவ்வேறு பருவங்கள் இல்லை. பூமியில் பாக்டீரியாக்கள் முதல் மனிதர்கள் வரை பெரும்பாலான உயிரினங்கள் பகல்-இரவு சுழற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது சர்க்காடியன் இசைவைக் கொண்டுள்ளது.

இந்த சுழற்சியில் நமக்கு வெளிப்படையாக தெரிந்ததெல்லாம் இரவில் தூங்க வேண்டும் என்பது தான். ஆனால், சர்க்காடியன் சுழற்சி என்பது உயிர்வேதியியல், உடல் வெப்பநிலை, உயிரணுக்களின் மீளுருவாக்கம், நடத்தை என பலவற்றை பாதிக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபர்கள், பிற்பகலில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை விட அதிக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு இரவு, பகல் என வெவ்வேறு தாக்கத்தைக் கொண்டிருக்கும்.

 
பயோரிதம்களை வெளிப்படுத்தும் உயிரினங்கள்
எம்-எர்த், பகல்-இரவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பூமியைப் போன்ற கிரகமான ப்ராக்ஸிமா சென்டாரி பி, ஒரு டைடல் லாக்கிங் செய்யப்பட்ட எம்.எர்த், இது தனித்துவமான பகல் மற்றும் இரவுகள் இருப்பதை பாதிக்கும்

தூக்கம் மற்றும் உயிரணுக்களின் மீளுருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவம் நிச்சயமற்றது. அவ்வப்போது ஓய்வு தேவைப்படாத உயிரினங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

உதாரணமாக ஆழ்கடல் உயிரினங்கள், குகையில் வசிக்கும் உயிரினங்கள் மற்றும் பூமியின் மேலோடு மற்றும் மனித உடல் போன்ற இருண்ட வாழ்விடங்களில் வசிக்கும் நுண்ணுயிரிகள் எப்படி பகல் வெளிச்சம் இன்றி நன்றாகச் செயல்படுகின்றன?

இந்த உயிரினங்கள் பல பயோரிதம்களை வெளிப்படுத்துகின்றன, அவை ஒளியைத் தவிர வேறு தன்மையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நேக்டு மோல் எலிகள் தங்கள் முழு வாழ்க்கையையும் நிலத்தடியில் கழிக்கின்றன. சூரியனை அவை பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவை தினசரி மற்றும் பருவகால வெப்பநிலை, மழைப்பொழிவு சுழற்சிகளுக்கு ஏற்ப சர்க்காடியன் கடிகாரங்களைக் கொண்டுள்ளன.

ஹாட் வென்ட் இறால் மற்றும் ஆழ்கடல் மஸ்ஸல்கள் கடலின் அலைகளைப் பின்பற்றி வாழ்கின்றன.

மனித குடலில் வாழும் பாக்டீரியாக்கள் அவை வசிக்கும் உடலில் உள்ள மெலடோனின் ஏற்ற இறக்கங்களுடன் ஒத்திசைகின்றன. மெலடோனின் என்பது இருளில் உடல் உற்பத்தி செய்யும் ஹார்மோன் ஆகும்.

வெப்ப துளைகள், ஈரப்பத ஏற்ற இறக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வேதியியல் மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகள் அனைத்தும் உயிரினங்களில் உயிர்-அலைவுகளைத் தூண்டும் எனவே `பயோரிதம்கள்’ உள்ளார்ந்த நன்மைகளைக் கொண்டுள்ளன என்பதை பிரதிபலிக்கிறது.

எம்-எர்த்ஸ் நாட்கள் மற்றும் பருவங்களுக்கு பதிலாக சுழற்சிகளைக் கொண்டிருக்கலாம் என்பதை சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இது போன்ற கேள்விகளை ஆய்வு செய்ய, ப்ராக்ஸிமா சென்டாரி பி (Proxima Centauri) உட்பட, எம்-எர்த்ஸ்-இன் சூழல் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தியுள்ளனர்.

இந்த உருவகப்படுத்தலில், எம்-எர்த்ஸின் பகல் நேரத்திற்கும் இரவு நேரத்திற்கும் இடையிலான வேறுபாடு, விரைவான காற்று மற்றும் வளிமண்டல அலைகளை உருவாக்குவதாகத் தெரிகிறது. இது வளைந்து அலைந்து செல்லும் பூமியின் `ஜெட் ஸ்ட்ரீம்’ காற்றுக்கு ஒத்திருந்தது. கிரகத்தில் தண்ணீர் இருக்குமாயின், பகலில் மின்னல்கள் நிறைந்த அடர்த்தியான மேகங்கள் உருவாகலாம்.

 
பரிணாமம் எப்படி நடக்கும்?

காற்று, வளிமண்டல அலைகள் மற்றும் மேகங்களுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு நிலைகளுக்கு இடையேயான காலநிலையை மாற்றக்கூடும். இதனால் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு ஆகியவற்றில் வழக்கமான சுழற்சிகள் ஏற்படலாம்.

இந்த சுழற்சிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் பத்து முதல் நூற்றுக்கணக்கான பூமி நாட்கள் வரை வேறுபடும். அவை கிரகத்தின் சுழற்சி காலத்துடன் தொடர்புப்படுத்தப்படாது. இந்த கிரகங்களின் வானத்தில் நட்சத்திரம் நிலையாக இருக்கும் போது கூட, சூழல் மாறிக்கொண்டே இருக்கும்.

எம்-எர்த்ஸில் உள்ள உயிர்கள் இந்த சுழற்சிகளுடன் ஒத்திசைந்த பயோரிதம்களை உருவாக்கலாம் அல்லது உயிர்கள் பரிணாமம் நடப்பதற்கு வேறு ஒரு விசித்திரமான தீர்வு இருக்கலாம்.

கிரகத்தின் பகல் நேரத்தில் வாழும் இனங்கள் ஓய்வெடுக்கவும் மீளுருவாக்கம் செய்யவும் கிரகத்தின் இரவு நேரத்திற்கு குடிபெயரும் இனங்கள் இருக்கலாம் என்பது கற்பனையான யூகம். எனவே சர்க்காடியன் கடிகாரம் என்பது வேற்று கிரகங்களில் நேரத்தை சார்ந்திருப்பது அல்ல.

ஒருவேளை வேற்று கிரகங்களில் வாழ்க்கை இருந்தால், தற்போது நமக்குத் தெரிந்த அனுமானங்களை விட இன்னும் ஆழமான உண்மைகளை கொண்டிருக்கும். அது நம்மை ஆச்சரியப்படுத்தும் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும் தெரியுமா? எளிய விளக்கம்

2 months ago
புயல், வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும் கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம்.

கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும்.

கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும்.

இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது.

தொடர்ந்து வெப்பக் காற்று கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். எனவே தான் புயல் நிலத்தை அடைந்த பிறகு, அது முற்றிலும் ஓய்ந்து விடுகிறது.

புயல் வெவ்வேறு கடல் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் 'டைஃபூன்' எனவும், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 'ஹரிக்கேன்' எனவும், தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 'டோர்னடோ' எனவும், வட மேற்கு ஆஸ்திரேலியாவில் 'வில்லி-வில்லிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது.

புயலின் வகைகள்

புயல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப மண்டலப் (tropical) புயல்கள் மற்றும் வெப்ப மண்டலச் சேய்மை (extra tropical) எனப்படும்.

வெப்ப மண்டலப் புயல் என்பது கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு (tropic of Capricorn) இடையில் உருவாகக்கூடியது ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63கி.மீ வேகத்தை விட அதிகம் கொண்டதாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்குகிறது.

வெப்ப மண்டலச் சேய்மைப் புயல்கள் மிதமான வெப்பம் இருக்கும் மண்டலங்களில் உருவாகும்.

புயல், வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் புயலை, டைஃபூன் என அழைக்கிறார்கள்
புயலின் தீவிரம்

இந்தியாவில், காற்றின் வலிமை, மழைப்பொழிவு, புயலின் எழுச்சி ஆகியவற்றைக் கொண்டு புயல் எவ்வளவு வீரியமானது என வகைப்படுத்தப்படுகிறது.

காற்றின் வேகம் மணிக்கு 31கி.மீ-க்கு கீழ் இருந்தால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும்.

காற்றின் வேகம் 31கி.மீ முதல் 49கி.மீ வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று வகைக்கப்படுத்தப்படுகிறது.

மணிக்கு 49 கி.மீ முதல் 61 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தால் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது என்று அர்த்தம்

அடுத்த நிலை, அதாவது மணிக்கு 61கி.மீ முதல் 88கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்போது அது புயல் என்றழைக்கப்படும்.

அதை விடவும் காற்றின் வேகம் அதிகமாக, மணிக்கு 88கி.மீ முதல் 117கி.மீ வரை இருந்தால், தீவிர புயல் என்றழைக்கப்படும்.

அந்த வேகத்தையும் விட அதிகமாக இருக்கும் புயல்கள் சூப்பர் புயல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்து ஒன்று முதல் ஐந்து வரை இந்தியாவில் வகைப்படுத்தப்படுகின்றன.

  • ஒன்று – குறைந்த சேதம்
  • இரண்டு – மிதமான சேதம்
  • மூன்று – பரவலான சேதம்
  • நான்கு – தீவிர சேதம்
  • ஐந்து – மிக மோசமான சேதம்
 
புயலின் பாகங்கள்
புயல், வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2019இல் இந்தியாவை நோக்கி வரும் ஃபானி புயல் (கோப்புப் படம்)

புயலுக்கு மூன்று பாகங்கள் உள்ளன.

நடுப்பகுதி - மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். இது தான் புயலின் 'கண்' பகுதி எனப்படும். இது வட்டமாக, நீள்வட்டமாக, அல்லது ஒரே மையத்தைக் கொண்ட அடுத்தடுத்து அடுக்குகளாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அடுத்தடுத்த அடுக்குகள் கொண்டதாக இருக்கும்.

இதைச் சுற்றியுள்ள பகுதி ‘eye wall’ எனப்படும் பகுதி அதிவேகக் காற்றைக் கொண்டதாகும். இதுவே புயலின் மிகவும் முக்கிய மற்றும் ஆபத்தான பகுதி. இந்தப் பகுதி கரையை கடக்கும் போது தான் அதிகனமழை, சூறைக்காற்று உருவாகும்.

இதற்கும் வெளியே இருக்கும் பகுதி மேகக்கூட்டங்களால் ஆனது. இவற்றால் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம்.

புயல், வானிலை, தமிழ்நாடு, சென்னை, மழை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன
தென்னிந்தியாவில் புயல்கள்

தென்னிந்தியாவில் புயல்கள் வங்கக் கடல் அல்லது அரபிக் கடலில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை பொருத்து உருவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கடலில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் அதிகரித்துள்ளன. போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஒரு தசாப்தத்தில் 50.5% புயல்கள் உருவாகின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 49.8% புயல்களும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 28.9% புயல்களும் உருவாகின என்றும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரபிக் கடலில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகத் துவங்கியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரபிக் கடலில் உருவாகி வந்த நிலையில், 20 ஆண்டுகளில், புயல்கள் அதிகமாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் இரண்டு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதே நேரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புயல் பாதிக்கும் இடங்கள் குறித்த வரைபடக் குறிப்பில், இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் புயலால் பாதிப்படையக்கூடிய நான்கு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தைக் குறிப்பிடுகிறது. 1891 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன.

இதற்குத் தமிழகத்தின் பூகோள அமைப்பு ஒரு காரணமாகும். வங்கக் கடலில் உருவாகும் புயல்கள், தமிழகத்துக்குத் தென்கிழக்கே அமைந்திருக்கும் இலங்கையின் காரணமாக வடக்கு நோக்கி திருப்பப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை

2 months 1 week ago
பூமிக்கு வந்த ராக்கெட் பாகத்தை 'கேட்ச்' பிடித்த ஏவுதளம்: ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் சாதனை
ஸ்டார்ஷிப் பூஸ்டரை 'கேட்ச்’ பிடித்த ஏவுதளம் : ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் செய்த உலக சாதனை

பட மூலாதாரம்,SPACEX

கட்டுரை தகவல்
  • எழுதியவர், எஸ்மி ஸ்டாலார்ட்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ்
  • 14 அக்டோபர் 2024, 09:43 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டர் பூமியில் அது ஏவப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிய நிலையில், அதன் ஒரு பகுதியை லான்ச்பேட் 'கேட்ச்’ பிடிப்பது போல கைப்பற்றியது. உலகளவில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சிகளில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.

ஸ்பேஸ்எக்ஸ் ஏவிய ராக்கெட்டின் கீழ் பாதி அதன் ஏவுதள கோபுரத்திற்கு அருகில் மீண்டும் வந்தடைந்த போது, பிரமாண்ட இயந்திர கைகளால் அது கைப்பற்றப்பட்டது. உலகிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆக கூறப்படும் ஸ்பேஸ்க்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் விண்கலத்தின் ஐந்தாவது சோதனையின் ஒரு பகுதியாக இது நிகழ்ந்துள்ளது.

இதன் மூலம், முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்குவதற்கான ஸ்பேஸ்எக்ஸ்-இன் லட்சியம் ஒருபடி முன்னேறியுள்ளது.

'வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெறும் நாள் இது' என்று குறிப்பிட்டு, ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டர் பகுதி பாதுகாப்பாக தரையிறங்கிய செய்தியை அறிவித்தனர்.

ஸ்டார்ஷிப் பூஸ்டரை 'கேட்ச்’ பிடித்த ஏவுதளம் : ஈலோன் மஸ்க்கின் நிறுவனம் செய்த உலக சாதனை

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஸ்டார்ஷிப் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது
ஏவுதளத்தை நோக்கித் திரும்பிய பூஸ்டர்

'சூப்பர் ஹெவி பூஸ்டர்' எனப்படும் ராக்கெட்டின் அடிப்பகுதி, முதல் முயற்சியிலேயே முழுமையாக மீண்டும் கைப்பற்றப்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது.

ராக்கெட் ஏவப்படுவதற்கு முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் குழு, பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்திற்கு திரும்பாமல் மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியது.

கடந்த இரண்டு சோதனையின் போதும் சில அசாதாரண சாதனைகளை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிகழ்த்தி உள்ளது.

விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் அனுப்ப வடிவமைக்கப்பட்ட ஸ்டார்ஷிப் விண்கலம் 2023-இல் அதன் முதல் சோதனையின்போது, மேலே பறந்த சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.

இந்தச் சம்பவம் நடந்து பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நிகழ்ந்த தோல்விகளை அதன் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஸ்பேஸ்எக்ஸ் கருதுகிறது. விண்கலம் வெடித்துச் சிதறிய பின், அது தொடர்பான தரவுகளைச் சேகரித்து, அதன் அமைப்புகளை விரைவாக உருவாக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஐந்தாம் கட்டச் சோதனையின் போது, ஏவப்பட்ட இரண்டே முக்கால் நிமிடங்களுக்குப் பிறகு ஸ்டார்ஷிப் விண்கலம், ராக்கெட் பூஸ்டரில் இருந்து பிரிந்தது.

ஸ்டார்ஷிப் பூஸ்டரை `கேட்ச்’ பிடித்த ஏவுதளம்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, ஸ்டார்ஷிப்

அதன் பின்னர் அந்த பூஸ்டர் டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள தனியார் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஏவுதளத்தை நோக்கித் திரும்பத் தொடங்கியது.

தரையிறங்குவதற்கு இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில், ஏவுதள கோபுரத்தை இயக்கும் குழுவினரால் இறுதிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சரியாக நடக்குமா என்று பொறியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

ஸ்டார்ஷிப் திட்டத்தின் இயக்குனர் 'எல்லாம் சரியாக நடக்கிறது, go-ahead’ என்று அறிவித்த பின்னர் முழு ஸ்பேஸ் எக்ஸ் குழுவும் உற்சாகமடைந்தது.

சூப்பர் ஹெவி பூஸ்டர் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த போது அதன் வேகம் குறைந்துவிட்டது.

146மீ உயரம் (480 அடி) கொண்ட ஏவுதள கோபுரத்தை அது நெருங்கியபோது, அதன் தரையிறக்கத்தைக் கட்டுப்படுத்த, ராப்டார் இயந்திரங்கள் இயக்கப்பட்டன. அது ஏறக்குறைய மிதப்பது போல் தோன்றியது, ஆரஞ்சு நிறத் தீப்பிழம்புகள் பூஸ்டரைச் சூழ்ந்தன, மேலும் அது சாமர்த்தியமாக பிரமாண்ட இயந்திரக் கரங்களுக்குள் புகுந்தது. இந்தச் செயல்பாடு கிரிக்கெட் போட்டியில் பந்தை 'கேட்ச்' பிடிக்கும் வீரர்களை நினைவுப்படுத்தியது.

"எங்கள் விண்கலம் அதன் இலக்கை அடைந்துவிட்டது! எங்கள் இரண்டு இலக்குகளில் இரண்டாவதை அடைந்துவிட்டோம்," என்று ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஈலோன் மஸ்க் X-இல் பதிவிட்டுள்ளார்.

 
ஈலோன் மஸ்க் vs அமெரிக்க அரசாங்கம்

ஏவுதளத்தில் தரையிறங்குவதற்குப் பதிலாக பூஸ்டரை கைப்பற்றுவதால், தரையில் செய்ய வேண்டிய சிக்கலான வன்பொருளின் தேவையைக் குறைகிறது. மேலும் எதிர்காலத்தில் விண்கல பாகங்களை விரைவாக மறுஉபயோகம் செய்யவும் இந்தச் செயல்பாடு உதவும்.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மனிதர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் அனுப்பும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டது குறித்து மகிழ்ச்சியடையும். 2026-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை மீண்டும் நிலவுக்குக் கொண்டு செல்லக்கூடிய ஒரு லேண்டராக ஸ்டார்ஷிப்பை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு நாசா $2.8 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 23,500 கோடி ரூபாய்) வழங்கியுள்ளது.

அமெரிக்க அரசாங்க முகமையான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் அனுமதிகளை மறுபரிசீலனை செய்து நவம்பருக்கு முன்னதாக இந்தச் செயல்பாடுகளைத் துவங்கக் கூடாது எனக் கூறியது. இதனை மீறி ஈலோன் மஸ்க் ராக்கெட் சோதனைகளை நடத்தினார்.

எஃப்.ஏ.ஏ மற்றும் ஈலோன் மஸ்க் இடையே கடந்த மாதம் பிரச்னை ஏற்பட்டது. அதன் உரிமத்தின் விதிமுறைகளை மீறியதற்காகவும், முந்தைய சோதனைகளுக்கான அனுமதி பெறாததாலும் எஃப்.ஏ.ஏ, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு $633,000 (இந்திய மதிப்பில் சுமார் 5.3 கோடி ரூபாய்)அபராதம் விதித்தது.

இதுபோன்ற விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு முன், எஃப்.ஏ.ஏ முகமை அதன் தாக்கத்தை, குறிப்பாகச் சுற்றுச்சூழலில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பாய்வு செய்கிறது.

 
ஸ்டார்ஷிப் டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது
‘தவறான புகார்’

அபராதம் விதித்த எஃப்.ஏ.ஏ முகமைக்கு பதிலளிக்கும் விதமாக, அதன் மீது வழக்குத் தொடரப்போவதாக மஸ்க் அச்சுறுத்தினார். ராக்கெட்டின் ஒரு பகுதி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற 'தவறான புகாருக்கு' எதிராக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமூக ஊடகத்தில் அறிக்கை வெளியிட்டது.

"எஃப்.ஏ.ஏ முகமை சுற்றுச்சூழலில் உமிழ்வுகளின் பரவலான தாக்கங்களைக் காட்டிலும் தற்போது ராக்கெட் ஏவுதல்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தற்காலிக பாதிப்பை மட்டுமே கருதுகிறது,” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வளிமண்டல வேதியியல் பேராசிரியர் டாக்டர் எலோயிஸ் மரைஸ், "மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடுகையில் ராக்கெட்டுகளில் இருந்து வெளிவரும் கார்பன் உமிழ்வுகள் குறைந்த அளவில் தான் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கிரகத்தை வெப்பமாக்கும் அதன் வேறு மாசுக்கள் பற்றி இன்னும் பரிசீலிக்கப்படவில்லை," என்றார்.

"கருப்பு கார்பன் என்பது மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று. ஆனால் ஸ்டார்ஷிப் ராக்கெட் திரவ மீத்தேன் பயன்படுத்துகிறது. இது ஒப்பீட்டளவில் புதிய உந்துசக்தியாகும். மேலும் திரவ மீத்தேனில் இருந்து வரும் உமிழ்வுகளின் அளவு பற்றிய சரியான தரவுகள் எங்களிடம் இல்லை," என்று அவர் கூறினார்.

மரைஸ் மேலும் கூறுகையில், "ராக்கெட்டுகளில் இருந்து வெளியாகும் கருப்பு கார்பன் பற்றிய கவலை என்னவென்றால், அவை விமானங்களை விட நூற்றுக்கணக்கான மைல்கள் உயரத்தில் வளிமண்டலத்தில் உமிழ்வை வெளியிடுகின்றன. அங்கு அது நீண்ட காலம் நீடிக்கும்,” என்று கூறினார்.

Checked
Sun, 12/22/2024 - 06:57
அறிவியல் தொழில்நுட்பம் Latest Topics
Subscribe to அறிவியல் தொழில்நுட்பம் feed