விண்வெளியில் போர் மூளுமா? அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் யார் வலிமையானவர்?
பட மூலாதாரம், Getty Images
9 மணி நேரங்களுக்கு முன்னர்
சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது.
இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது.
இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது.
தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது.
மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார்.
விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார்.
ஆனால் இதுவரை எந்தப் போரும் விண்வெளியில் நடக்கவில்லை. அமெரிக்காவும் இதை விரும்பவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கைக்கோள் போர் உலகுக்கு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மிகவும் முக்கியம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாக கூறுகிர் முனைவர் ராஜி ராஜகோபாலன்
ஆஸ்திரேலிய மூலோபாய நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும் விண்வெளி பாதுகாப்பு விஷயங்களில் நிபுணருமான முனைவர் ராஜி ராஜகோபாலன், தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் 11,700 செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்கள் இருப்பதாகக் கூறுகிறார்.
செயற்கைக்கோள்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் தொடர்பு மற்றும் தகவல்தொடர்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த செயற்கைக்கோள்களில் சுமார் 630 செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்த செயற்கைக்கோள்களில் பாதியளவு ராணுவ செயற்கைக்கோள்கள் என்று ராஜி ராஜகோபாலன் குறிப்பிட்டார்.
இவற்றில் சுமார் 300 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவிற்கு சொந்தமானவை.
ரஷ்யாவும், சீனாவும் பல ராணுவ செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியுள்ளன.
இந்த செயற்கைக்கோள்கள் ராணுவ நடவடிக்கைகளில் ராணுவத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படுகின்றன. இவை ராணுவத்தின் செயல்திறனை அதிகரிக்கின்றன.
1990ஆம் ஆண்டு இராக்கிற்கு எதிரான வளைகுடா போரில் நேச நாட்டுப் படைகளின் நடவடிக்கைகளில் செயற்கைக்கோள்கள் மிக முக்கிய பங்கு வகித்தன.
பாலைவனத்தில் வீரர்கள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல செயற்கைக்கோள் மூலம் இயக்கப்படும் ஜிபிஎஸ் பயன்படுத்தப்பட்டது.
உலகின் முதல் விண்வெளிப் போர் என்றும் இது அழைக்கப்படுகிறது.
"இப்போதெல்லாம் அரசாங்கங்கள் உளவுத்துறை தகவல்களைச் சேகரிக்கவும் இலக்குகளைக் கண்காணிக்கவும் இதைப் பயன்படுத்துகின்றன. எதிர்காலத்தில் அனைத்து முக்கியப் படைகளும் இந்த அமைப்பை பயன்படுத்தும். செயற்கைக்கோள் உதவியுடன், இலக்கு கண்டறியப்படுவது மட்டுமல்லாமல், இலக்கைத் துல்லியமாகத் தாக்க ஆயுதங்களும் வழிநடத்தப்படுகின்றன" என்று முனைவர் ராஜி ராஜகோபாலன் கூறுகிறார்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியா 2029 ஆம் ஆண்டுக்குள் 52 செயற்கைக்கோள்களை விண்வெளியில் அனுப்பும் திட்டத்தை விரைவுபடுத்துவதாக அறிவித்தது.
அப்படியானால் ஒரு நாடு செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு தகவல்களை வழங்குவது அவசியமா?
எந்தவொரு நாடும் செயற்கைக்கோளை ஏவுவதற்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் விண்வெளி நிறுவனத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறார் முனைவர் ராஜி ராஜகோபாலன்.
அந்த செயற்கைக்கோள்
என்ன வகையானது?
எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
எவ்வளவு காலம் செயல்படும்?
அதை மீண்டும் எப்படிக் கொண்டு வருவார்கள்?
விண்வெளியில் எங்கு வைக்கப்படுகிறது? என்பன போன்ற அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இது செயற்கைக்கோள்கள் ஒன்றோடோன்று மோதுவதைத் தடுக்கும்.
ஆனால் இப்போது பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்கள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதில்லை.
1962 ஆம் ஆண்டில், அமெரிக்கா விண்வெளியில் ஒரு அணுகுண்டை சோதித்தது, அதன் கதிர்வீச்சு பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சேதப்படுத்தியது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் கீழ், விண்வெளியில் அணு மற்றும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது.
ஐக்கிய நாடுகள் விண்வெளி நிறுவனம் இப்போது அதைக் கண்காணித்து வருகிறது.
இந்த அமைப்பு விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதிகம் பங்களித்திருக்கிறது என்கிறார் ராஜி ராஜகோபாலன்.
இந்த ஒப்பந்தத்தில் விண்வெளியில் உள்ள வழக்கமான ஆயுதங்களைப் பற்றி எந்தத் தடையும் இல்லை. அவை கூட பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என்பதால், இது ஒரு முக்கியமான பாதுகாப்பு சிக்கல்.
அதேபோல், கடந்த சில ஆண்டுகளில் விண்வெளியில் வணிக செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உட்பட பல தனியார் நிறுவனங்களின் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் பிராட்பேண்ட் இணைய வசதி மற்றும் பிற வசதிகளுக்காக விண்வெளியில் உள்ளன.
அதேபோல், விண்வெளியில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடுகளுக்கு இடையிலான பதற்றமும் அதிகரித்து வருகிறது.
விண்வெளியில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விண்வெளி போட்டியில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வந்த முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவைத் தோற்கடித்தது.
ஜெர்மன் சர்வதேச மற்றும் பாதுகாப்பு விவகார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான ஜூலியன் சூஸ், பூமியில் எங்காவது தாக்குதல் நடந்தால், அதை நாம் பார்க்க முடியும் என்கிறார்.
ஆனால் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் என்ன செய்கின்றன என்பது பற்றிய தகவல்களை செயற்கைக்கோள்கள், ரேடார் அல்லது செயற்கைக்கோள் கண்காணிப்பு தரவுகளால் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் பெறுகிறோம்.
ஒரு நாடு வேண்டுமென்றே மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழிக்க முயன்றால் என்ன நடக்கும்?
"இது ஒரு லட்சுமண ரேகை, இதுவரை யாரும் அதைக் கடக்கவில்லை. ஆம், செயற்கைக்கோள்கள் சிக்னல்களை சீர்குலைத்து தவறான சிக்னல்களை உருவாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன" என்கிறார் ஜூலியன் சுஸ்.
தற்போது விண்வெளி வளங்கள் நேட்டோவின் வாஷிங்டன் ஒப்பந்த பிரிவு 5 இல் சேர்க்கப்பட்டுள்ளன.
அதாவது, நேட்டோ உறுப்பினரின் செயற்கைக்கோளை யாராவது தாக்கினால், நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 இன் கீழ் தாக்குதல் நடத்தும் நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் விளக்குகிறார்.
ஆனால் செயற்கைக்கோள் சேதமடைவதற்கான காரணம் குறித்த உடனடித் தகவல் கிடைக்காததும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.
ஒரு செயற்கைக்கோள் மற்றொரு செயற்கைக்கோளுக்கு அருகில் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் சூஸ்.
இது ஒரு செயற்கைக்கோளைப் படம் எடுப்பதற்கான முயற்சியாகவோ அல்லது அதைப் பற்றிய உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கான முயற்சியாகவோ இருக்கலாம்.
குறிப்பாக, அந்த செயற்கைக்கோளின் செயல்பாடு பற்றிய தகவல்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்றால், அது மிக முக்கியமான விஷயமாகும்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலகில் பெரிய ராணுவங்களை கொண்டுள்ளன. இந்த அனைத்து ராணுவங்களும் விண்வெளியில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை உருவாக்கியுள்ளன.
இவை பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் அல்ல, எனவே விண்வெளியில் அவற்றின் சோதனைக்கு எந்த தடையும் இல்லை.
விண்வெளியில் அமெரிக்கா மிகப்பெரிய சக்தியாக உள்ளது என்று ஜூலியன் சூஸ் கூறுகிறார்.
2008 ஆம் ஆண்டில், அது அதன் செயற்கைக்கோள்களில் ஒன்றை அழித்தது. இதைத் தவிர, அமெரிக்கா மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்கிறது.
உதாரணமாக, அமெரிக்கா மற்ற செயற்கைக்கோள்களைப் போலவே ராக்கெட்டைப் பயன்படுத்தி விண்வெளியில் செலுத்தக்கூடிய X-37 விண்வெளி விமானத்தை உருவாக்கி வருகிறது. இந்த விமானம் இரண்டு ஆண்டுகள் விண்வெளியில் தங்கி பின்னர் தானாகவே பூமிக்குத் திரும்பும்.
அதேபோல், தகவல் தொடர்புகளுக்கான ஜிபிஎஸ்-க்கு மாற்றாக லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
விண்வெளி பந்தயத்தில், ரஷ்யா 1957 ஆம் ஆண்டு பூமியைச் சுற்றி வரும் முதல் செயற்கைக்கோளை ஏவி அமெரிக்காவை முந்தியது.
ஆனால் அதன் பின் வந்த காலத்தில் ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் அமெரிக்காவை விட பின்தங்கி விட்டது.
யுக்ரேன் போருக்குப் பிறகு ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் அதன் விண்வெளித் திட்டங்களையும் பாதித்துள்ளன.
மறுபுறம், உளவுத்துறை மற்றும் தகவல் தொடர்புகளைச் சேகரிப்பதற்கு செயற்கைக்கோள்களையே அமெரிக்கா பெருமளவில் சார்ந்துள்ளது.
ரஷ்யா இதை அமெரிக்காவின் பலவீனமாகக் கருதி, செயற்கைக்கோள்களை குறிவைத்து ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. சீனாவும் இந்தத் துறையில் பின் தங்கிவிடவில்லை.
"2024 ஆம் ஆண்டில் 100 செயற்கைக்கோள்களை ஏவுவதே சீனாவின் இலக்காக இருந்தது, ஆனால் அதனால் 30 செயற்கைக்கோள்களை மட்டுமே அனுப்ப முடிந்தது. செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில், அதன் செயற்கைக்கோள்கள் மற்ற செயற்கைக்கோள்களைச் சுற்றி வேகமாக நகரும் திறனைப் பெற்றுள்ளன. சில செயற்கைக்கோள்கள் மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களுக்கு ஆபத்தான முறையில் அருகில் சென்றன," என்று கூறுகிறார் ஜூலியன் சுஸ்.
செயற்கைக்கோள்கள் விண்வெளியில் அதிக வேகத்தில் சுழல்கின்றன, அவை ஒன்றுடன் ஒன்று மோதினால், அவற்றின் துண்டுகள் விண்வெளியில் சிதறக்கூடும்.
ஒரு சென்டிமீட்டர் துண்டு கூட, அதிவேகத்தில் நகர்ந்தால், ஒரு வெடிகுண்டை போலவே சேதத்தை ஏற்படுத்தும் என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படியான சூழ்நிலையில் செயற்கைக்கோள்களை அழிக்கும் ஆயுதங்களை பயன்படுத்தினால் அது பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார் ஜூலியன் சுஸ்.
உதாரணமாக, ரஷ்யா விண்வெளியில் அத்தகைய ஆயுதத்தைப் பயன்படுத்தினால், செயற்கைக்கோள் சிதைவதால் உருவாகும் துண்டுகள் அதன் சொந்த செயற்கைக்கோள்களையும் சேதப்படுத்தும்.
சமீபத்தில், சீனாவும் ரஷ்யாவும் நிலவில் ஒரு அணு உலையை நிறுவ ஒப்புக்கொண்டன. இது எதிர்கால ஆராய்ச்சிப் பணிகளுக்கு மின்சாரம் தயாரிக்கப் பயன்படும்.
தொழில்நுட்ப திட்டங்கள்
பட மூலாதாரம், Chip Somodevilla/Getty Images
படக்குறிப்பு, கோல்டன் டோம் அமெரிக்காவை வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் விண்வெளிச் சட்டம் மற்றும் தரவு திட்டத்தின் இயக்குனர் சாடியா பெக்கரானன், விண்வெளித் தொழில்நுட்பம் என்பது ராக்கெட்டுகள் மற்றும் விண்கலங்களை விண்வெளியில் ஏவுவது மட்டுமல்ல என்கிறார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஈடிடி (EDT) எனப்படும் தானியங்கி ரோபாட்டிக்ஸ்(autonomous robotics) போன்ற பல புதிய தொழில்நுட்பங்கள் இதில் அடங்கும் என்று சாடியா கூறினார்.
தானியங்கி ரோபாட்டிக்ஸ் மூலம், இயந்திரங்கள் விண்வெளியில் தானாகவே வேலை செய்ய முடியும்.
"இது எதிர்காலத்தில் விண்வெளி பாதுகாப்பின் முழு கட்டமைப்பையும் மாற்றக்கூடும். இது அமெரிக்காவை வான் தாக்குதல்கள் அல்லது ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு பாதுகாப்புக் கவசத்தையும் (Golden Dome) கொண்டுள்ளது."
ஸ்டார்ஷீல்ட் என்பது பல செயற்கைக்கோள்களை பயன்படுத்தும் ஒரு பாதுகாப்பு அமைப்பு.
இது அமெரிக்க அரசாங்கத்தாலும் ராணுவத்தாலும் பயன்படுத்தப்படுகிறது.
ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் கோல்டன் டோம் திட்டத்தை முன்மொழிந்தார். எதிரி ஏவுகணைகளைக் கண்டறிய ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் தேவைப்படும்.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளை விரைவாக பகுப்பாய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் திறனை ராணுவம் பெறும் என்கிறார் சாடியா பெக்கரானேன் கூறுகிறார்.
இது பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கலாம்.
இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் மற்ற நாடுகளை விட முன்னிலையில் உள்ளன என்கிறார் சாடியா பெக்கரானன்.
"விண்வெளியைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பதால் அவர்கள் இதில் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன்."
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ராணுவ செயற்கைக்கோள்களின் செயல்பாட்டுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேள்வி எழுப்பினால், எந்த தொழில்நுட்பமும் நிலைத்திருக்க முடியாது என்கிறார் சாடியா பெக்கரானன்.
விண்வெளியில் இந்த உபகரணங்களின் ஆயுட்காலம் காலாவதியாகும் தருவாயில், அவற்றை சரிசெய்ய வேண்டியிருக்கும்.
அத்தகைய சூழ்நிலையில், புதிய தொழில்நுட்பம் அவற்றை விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக அகற்றவும் உதவும்.
உலகில் அவற்றின் தாக்கம் எத்தகையது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.
முனைவர் பிளெவின்ஸ் போவன், பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆஸ்ட்ரோ பாலிடிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியராக உள்ளார். செயற்கைக்கோள் போர் தொடர்பான விஷயங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு அவர் ஆலோசனை வழங்கி வருகிறார்.
விண்வெளியில் ஒரு செயற்கைக்கோள் போர் நடந்தால், அதனால் ஏற்படும் சேதம் மற்றும் தாக்கத்தை துல்லியமாக மதிப்பிடுவது கடினம் என்று அவர் நம்புகிறார், ஏனெனில் விண்வெளியில் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் உள்ளன, அவற்றின் உதவியுடன் மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன.
எந்த செயற்கைக்கோள்கள் அழிக்கப்படுகின்றன என்பதையே இது பெரும்பாலும் சார்ந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது வழியைக் கண்டறிய அல்லது உணவை ஆர்டர் செய்ய உதவும் ஜிபிஎஸ் சிக்னல்களை அனுப்பும் செயற்கைக்கோள்களை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், பொருளாதாரச் சேவைகளில் இன்னும் கடுமையான பாதிப்பு ஏற்படும், ஏனெனில் செயற்கைக்கோள்களில் அணு கடிகாரங்கள் பொருத்தப்பட்டுள்ளன, வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் பரிவர்த்தனையின் நேரம் என்ன என்பதை யாருடைய நேரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றன என்பதைப் பொறுத்து இந்த சேவைகள் நிறுத்தப்படலாம்.
விவசாயிகள் மற்றும் வானிலை துறைகள் விவசாயம் அல்லது இயற்கை பேரழிவுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை மதிப்பிடுவதற்கு செயற்கைக்கோள்களிலிருந்து தகவல்களைப் பயன்படுத்துகின்றன.
இது மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக, புயல்கள் அல்லது பிற பேரழிவுகள் பற்றிய துல்லியமான தகவல்களை மக்கள் சரியான நேரத்தில் பெறவில்லை என்றால், பலர் இறக்க நேரிடும்.
ஒரு நாடு ஒரு செயற்கைக்கோளின் இழப்பை எவ்வாறு சமாளிக்கிறது என்பது அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைப் பொறுத்தது.
விண்வெளியில் நேரடித் தாக்குதலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையைச் சமாளிக்க நாடுகளுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவைப்படும் என்றும் முனைவர் பிளெவின்ஸ் போவன் நம்புகிறார்.
அவர்கள் விண்வெளியில் மாற்று செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த வேண்டும், அல்லது செயற்கைக்கோள்கள் இல்லாமல் வேலை செய்யக்கூடிய உபகரணங்களின் வலையமைப்பை பூமியில் உருவாக்க வேண்டும்.
அவை செயற்கைக்கோள்களைப் போல பயனுள்ளதாக இல்லாவிட்டாலும், அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் செயற்கைக்கோள்கள் எப்போது, எப்படி தாக்கப்படும் என்பதைக் கணிப்பது மிகவும் கடினம்.
விண்வெளியில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் உள்ளன என்கிறார் பிளெவின்ஸ் போவன்.
"பூமியில் நாடுகளுக்கு இடையிலான மோதல் கட்டுப்பாட்டை மீறும் போதுதான் விண்வெளியில் போர் பரவும். வெளிப்படையாக பலர் அதில் இறந்துவிடுவார்கள். இது மிகவும் தீவிரமான விஷயம், எனவே பூமியில் நடக்கும் மோதல்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை விட விண்வெளிப் போரைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படக் கூடாது என்பதே எனது கருத்து."
எனவே செயற்கைக்கோள் போரினால் உலகம் எவ்வளவு ஆபத்தை எதிர்கொள்கிறது?
விண்வெளியில் உள்ள இயற்கையாலோ அல்லது மனிதனாலோ உருவாக்கப்பட்ட மிகச்சிறிய பொருள் கூட ஆபத்தானதாக இருக்கலாம்.
செயற்கைக்கோள்களை ஆயுதமாக்குவது எப்போதும் நோக்கமாக இருக்காது. ஆனால் தொழில்நுட்பம் இப்போது வணிக மற்றும் ராணுவ செயற்கைக்கோள்களுக்கு இடையிலான கோடுகளை மங்கலாக்கியுள்ளது.
பல நாடுகள் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை தாக்கி அழித்து தங்களத திறனை பரீட்சித்துப் பார்த்துள்ளன.
ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டின் செயற்கைக்கோளை அழித்துவிட்டால், அழிக்கப்பட்ட செயற்கைக்கோளின் துண்டுகளால் அதன் சொந்த செயற்கைக்கோள்களும் அதன் நட்பு நாடுகளின் செயற்கைக்கோள்களும் சேதமடையும் அபாயம் உள்ளது.
அதேபோல், விண்வெளியில் தாக்குதல் நடந்தால், அது பூமியிலும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு