இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் - பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன - பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Published By: RAJEEBAN
31 JUL, 2025 | 10:54 AM
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரான்சின் எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்திக்குறிப்பொன்றில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
தமிழர்களிற்கு எதிரான தசாப்தகால விசாரணைகளை கண்டித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டுக்கான உரிமையை வலியுறுத்தியுள்ளனர்.
யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அதிகாரிகளால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய்பட்டனர் என பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பல அறிக்கைகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 40,000 என்கின்றன என தெரிவித்துள்ள அவர்கள் பல்வேறு நிபுணர்களின் கருத்துப்படி இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும் என தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது கனரக ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ளுதல், சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்முறைகள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், சித்திரவதை மற்றும் போதிய மருத்துவ உணவு வசதியின்றி தமிழர்களை இடைத்தங்கள் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டது என பல ஆவணங்களை மேற்கோள்காட்டி பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செம்மணியில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றமையும் 80 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்தும் அங்கு அமைதியாக வாழ முடியாத நிலை காணப்படுவதும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் நீதியை கோரி நிற்கின்ற போதும், இதுவரை சுயாதீன விசாரணையெதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது செய்திக்குறிப்பில் இலங்கையின் வடக்குகிழக்கில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை பட்டியலிட்டுள்ளதுடன், இது இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து விலக்களித்து வருவதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றது என்பதை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் நம்பகதன்மை மிக்க நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செம்மணி மனித புதைகுழிகள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் இவற்றிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கும் முக்கியமான வாய்ப்பை வழங்குகின்றன என பிரான்ஸ்நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் வசிக்கும் 220,000 தமிழ் வம்சாவளி மக்கள், அவர்களில் பெரும்பாலோர் 1980 களில் போரிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், உலகெங்கிலும் உள்ள மற்ற தமிழ் சமூகத்தைப் போலவே, அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடு அவசரமாகத் தேவை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டுப் பிரகடனத்தில் LFI-NFP கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ (வால் டி'ஓய்ஸ்), எரிக் கோக்வெரல், அலி டியோரா மற்றும் தாமஸ் போர்டெஸ் (சீன்-செயிண்ட்-டெனிஸ்), பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் (ரீயூனியன்) ஆகியோர் கையெழுத்திட்டனர்.