அமைச்சர் ஆனந்தசங்கரி விவகாரம்: இனத்துவேஷத்தின் வெளிப்பாடு?
கடந்த வாரம் பாராளுமன்ற கேள்வி நேரத்தில் இரண்டு கன்சர்வேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஆனந்தசங்கரியை ஹயீனாக்கள் போல வட்டமிட்டுத் துளைத்தெடுத்தார்கள். இது திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒரு விடயமென்பதில் சந்தேகமேயில்லை. இச்சம்பவத்திற்கு முன்னரும் பின்னரும் கன்சர்வேட்டிவ் ஆதரவு நாஷனல் போஸ்ட் மற்றும் குளோபல் தொலைக்காட்சி ஆகியன ஹயீனாக்கள் அமைச்சரை வட்டமிடத் தொடங்கி விட்டன. அமைச்சருக்கு இது நிச்சயமான ஒரு கரும் புள்ளி என்பதில் சந்தேகமேயில்லை.
தமிழர் மத்தியில் இது ஒரு அவமானமாகப் பார்க்கப்பட்டாலும் அமைச்சர் ஒரு தமிழரென்பதற்காக இப்படி நடத்தப்பட்டார் எனக் கூறமுடியாது. வேண்டுமானால் அவர் ஒரு வெள்ளையரல்லாததால் நடந்திருக்க வாய்ப்புண்டு.
பாராளுமன்றத்தில் அமைச்சர் மீது பாய்ந்தவர்களில் முதலானவர் எல்கின் – சென்.தோமஸ் – லண்டன் சவுத் தொகுதிக்கான கன்சர்வேட்டிவ் உறுப்பினர் ஆன்ட்றூ லோட்டன். இவர் ஒரு தீவிர வெள்ளைத் தேசியவாதி. பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகுவதற்கு முன்னர் True North மற்றும் Rebel Media ஆகிய ஊடகங்களில் பணியாற்றியவர். 2022 இல் ட்றூடோ அரசுக்கு எதிராக ஒட்டாவா நகரை முடக்கிய பாரவண்டி ஊர்வல ஒழுங்கமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியேவின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவர். இவரது தீவிர வலதுசாரிக் கொள்கைக்காக, தேர்தலுக்கு முன், கட்சியிலிருந்து இவரை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் பியர் பொய்லியேவ் அதை மறுத்திருந்தார்.
இவரது உடல் மொழியும், சமூக ஊடகப் பதிவுகளும் இவரது நோக்கம் அமைச்சர் ஆனந்தசங்கரியை மானபங்கப்படுத்துது ஒன்றே என்பது தெட்டத் தெளிவாகப் புலனாகியது. ஆனால் அவர் கேட்ட கேள்விகள் அடாத்தானவையல்ல என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். “எல்லைகளைப் பலப்படுத்துவோம்” என்ற சுலோகத்துடன் வந்து குதித்த அமைச்சர் துப்பாக்கி அனுமதிப் பத்திரங்கள் பற்றி அறியாமல் இருப்பது கொஞ்சம் இடிக்கும் ஒரு விடயம் தான். ஒரு முன்னாள் வானொலி talkshow host என்ற வகையில் லோட்டன் தனது வாய்ப் பலத்தை உறுதியாகக் காட்டியிருந்தார். இப்போது அமைச்சர் ஆனந்தசங்கரிக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. ஒன்று கேட்ட கேள்விக்கான பதிலைக் கொடுத்து கேட்டவரது வாயை அடைப்பது அல்லது குதர்க்க (witty) மறுமொழியால் அவரை அவமானப்படுத்தி இருக்க வைப்பது. (பிரித்தானிய மற்றும் காலனித்துவ இலங்கை பாராளுமன்றங்கள் இவற்றுக்குப் பேர் போனவை). ஆனால் அமைச்சர் உறைந்து போன – Fight or Flight நிலையில் – அவர் flight ஐத் தேர்ந்தெடுத்து ‘எனக்குத் தெரியாது’ என ஒப்புக்கொண்டார். அவர் செய்தது சரி எனப் பின்னர் பல அனுபவம் மிக்க விமர்சகர்களும் கூறியிருந்தார்கள்.
இச்சம்பவத்தில் மூக்குடைபட்டுப்போனது கன்சர்வேட்டிவ் கட்சியும் அதன் தலைவர் பொய்லியேவும் தான். புதிதாக வந்திருக்கும் ஒரு அமைச்சரிடம் கேள்வியை நேரடியாகக் கேட்காமல் மறைமுகமாக சுருக்கெழுத்தகளில் (accronnym) கேட்டது நிச்சயமாகக் கபட நோக்கம் கொண்டது என்பது எந்த முட்டாளுக்கும் புரிந்திருக்கும். “For that, my answer would be WABQ” என்றுவிட்டு (வட் ஏ புல்ஷிட் குவெஸ்டியன்) அமைச்சர் போயிருக்கலாமோ என ஒருகணம் தோன்றியது; நமக்கேன் வம்பு?
ஆனால் கன்சர்வேட்டிவ் ஊடகங்களான குளோபல் ரீ.வி., நாஷனல் போஸ்ட் பத்திரிகை தமது வழமையான சாக்கடை ஊடக வியாபாரத்தைச் செய்திருந்தன. இரண்டுமே கடந்தகால செயற்பாட்டாளர் ஆனந்தசங்கரியைப் பாராளுமன்றத்துள் இழுத்து வந்து குதற முயற்சித்தனர். “2009 இல் வான்கூவரில் கரைதட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்த ‘விடுதலைப்புலி பயங்கரவாதிகளை’ அப்போதைய ஹார்ப்பர் அரசு திருப்பி அனுப்பவிடாமல் தடுத்தவர் தான் இந்த அமைச்சர். “எல்லைகளைப் பலப்படுத்துவதற்கு” இவர் எப்படித் தகுதியானவர்?” என இவ்வூடகங்கள் ஓலமிட்டன. இவற்றுக்கு அமைச்சர் சரியான பதிலைக் கூறியதும் வேதாளங்கள் மீண்டும் மரமேறிவிட்டன. லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்ணியும் தன்பங்கிற்கு அவரது statesmanship ஐச் செவ்வனே காட்டியிருந்தார். அமைச்சர் ஆனந்தசங்கரி “highest standard of intergrity with meticulous record” உள்ளவர் என்ற சாரத்தில், அப்பதவிக்கான தனது தேர்வு சரியானதே எனக்கூறியது சாமானியர்களுக்கானதல்ல.
அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் தமது வாழ்வை செயற்பாட்டாளர்களாகவே (activists) ஆரம்பிப்பது வழக்கம். அனுபவமின்மை காரணமாகவோ மிதமிஞ்சிய அட்றீனலின் சுரப்பு காரணமாகவோ அல்லது ‘தமக்கு எல்லாம் தெரியும்’ (nascisisistic) என்ற மமதையின் காரணமாகவோ இவர்கள் அவ்வப்போது மேற்கொள்ளும் கொக்கரிப்புகள், பின்னர் அரசியல்வாதிகளாக அவர்கள் உருமாற்றம் கொள்ளும்போது, வரிசையில் நின்று வருத்தம் தருவது புதிய விடயமல்ல. ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜே தணிகாசலம் மாணவ செயற்பாட்டாளராக இருந்தபோது விடுதலைப் புலிகள் பற்றிக்கூறியவை பின்னர் பூமெராங்க் ஆக வந்து அவரை வதைத்தது சிறந்ததொரு உதாரணம்.
அமைச்சர் ஆனந்தசங்கரியின் இக்கட்டான நிலை குறித்து தமிழ்ச்சமூகமாக நாம் கண்ணீர் வடிக்கவோ அல்லது அடிதடிகளில் இறங்கவோ தேவையில்லை. அவர் ஒரு வெள்ளையாராக இருந்திருப்பின் பாராளுமன்றத்திற்கு உள்ளூம் புறமும் நடந்துவரும் விடயங்கள் வித்தியாசமாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற அனுமானத்தில் தான் எம்மில் பலரது அனுதாபங்கள் இருக்கிறது.
****
2009 இல் வான்கூவரில் கரை தட்டிய சன் சீ, ஓசியன் லேடி கப்பல்களில் வந்தவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்று கூறி ஹார்ப்பர் அரசும் அதன் முன்னணி நட்சத்திரம் ஜேசன் கெனியும் அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் இறங்கியபோது மனித உரிமைகள் சட்டத்தரணி பாபரா ஜாக்மன் உதவியுடன் வழக்குத் தொடர்ந்து அக்கப்பலைத் திருப்பி அனுப்பாமல் செய்த பெருமை கனடியத் தமிழர் பேரவைக்கும் அதன் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை போன்றோருக்குத்தான் சேரும். அப்போது பேரவையின் சட்ட ஆலோசகராக ஆனந்தசங்கரி இருந்தார். இக்கப்பல்களில் வந்தவர்கள் விடுதலைப்புலிகள் என நிரூபிக்க ஹார்ப்பர் அரசுக்கு பலமான ஆதாரம் தேவைப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிய பேராசிரியர் றொஹான் குணரட்ணவின் நிபுணத்துவ சாட்சியம் (expert witness) பெறப்பட்டது. அவ்வழக்கின்போது பேரா.குணரட்ணவின் சாட்சியம் நம்பத்தகுந்தது அல்ல என அவருக்கு எதிராக முன்னாள் விடுதலிப் புலி உறுப்பினரான ககுஸ்தன் அரியரட்ணத்தைச் சாட்சியமாக வைத்து வழக்கை வென்று இக்கப்பல்வாசிகள் அனைவரையும் கனடாவில் குடியமர்த்தியதில் கனடிய தமிழர் பேரவைக்கும் அமைச்சர் ஆனந்தசங்கரிக்கும் பாரிய பங்குண்டு. அப்போது ஆனந்தசங்கரி ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்லாது தமிழ் செயற்பாட்டாளராகவே இதைச் செய்திருந்தார். ஹார்ப்பர் அரசு கூறியதைப்போல் இக்கப்பல்களில் வந்தவர்கள் அனைவருமே விடுதலைப்புலிகள் அல்லர் என்பது பின்னர் நிரூபிக்கப்பட்ட விடயத்தை இப்போது ஓலம் வைக்கும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் வசதியாக மறைத்துவிட்டனர்.
பாராளுமன்றம் செல்வதற்கு முன்னர் அமைச்சர் ஆனந்தசங்கரி தனது சமூகம் சார்ந்து ஆற்றிய நடவடிக்கைகள் குறித்து அவர் எவரிடமும் மன்னிப்புக் கேட்கவேண்டியதில்லை. தனது இந்நடவடிக்கைகள் குறித்தும், மனைவியின் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது சமூக உடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் எதுவும் அகற்றப்படாமல் இப்போதும் அப்படியே உள்ளன. இவையெல்லாவற்றையும் பார்த்துப் பிழிந்தெடுத்த பிறகுதான் சட்ட பரிபாலனம் அவருக்கு இவ்வமைச்சுக்கான பரிந்துரைப்பைச் செய்திருக்கும். இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்காரரும் அவரோடு ஒத்தூதும் விமர்சகர்களும் இருக்கிறார்கள்.
****
அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, எறிந்த சில அம்புகள் திரும்பி வந்து அவரைத் தாக்கிய சம்பவங்களுமுண்டு. இவற்றையெல்லாம் கிண்டியெடுக்குமளவுக்கு கன்சர்வேட்டிவ் உறுப்பினர்கள் பலருக்கு விவேகம் இல்லையாதலால் ஊடகங்கள் அப்பணியைச் செய்துள்ளன. அவற்றிலொன்று: “கனடிய தேசிய பாதுகாப்பு ஆணையங்களான ‘சீஸிஸ்’ மற்றும் ‘ஆர்.சீ.எம்.பி’ போன்றவை சன் சீ கப்பலில் வந்த அகதிகளைத் தொடர்ந்தும் மிரட்டிக்கொண்டிருக்கின்றன” என்ற ஆனந்தசங்கரியின் கூற்று. இப்போது தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும், ‘சீஸிஸ், ஆர்.சி.எம்.பி’ போன்ற ஆணையங்களை மேற்பார்வை செய்யும் அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டிருக்கும்போது தமிழ்ச் சமூகம் சம்பந்தப்படும் எந்தவொரு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் “அவரது கடமையுணர்வு நாட்டையா அல்லது அவரது சமூகத்தையா சார்ந்து நிற்கும்?” என அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. இதற்குப் பதில் தரும் வகையில் அமைச்சர் “ஒரு உள்ளகப் பாதுகாப்பு அமைச்சராக, என் சமூகம் சார்ந்த விடயங்களில் நான் முடிவுகளை எடுப்பதிலிருந்து என்னை விலத்தி வைக்கும் ஒப்பந்தத்தை நெறிமுறை ஆணையருடன் (ethics commissioner) செய்துள்ளேன்” என அவர் அறிவித்துள்ளார். அதுவே அவருக்கும் அவர் சார்ந்த சமூகத்திற்கும் பொருத்தமான ஒரு விடயமாகும்.
ஆனால் அமைச்சர் இச்சத்தியத்தைக் காப்பதற்கு நமது சமூகம் இடம் கொடுக்குமா? இங்குதான் நமது (தென்னாசிய) நண்டுக் கலாச்சாரத்தின் பாதிப்புகள் தலைகாட்ட வாய்ப்புண்டு. “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு நான் முயற்சிப்பேன்” என்ற தேர்தல் காலக் கோஷங்களோடு சில அரசியல்வாதிகளும், “இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிக்கூண்டுகளில் நிறுத்துவேன்”; “தமிழருக்கு நடந்தது இனப்படுகொலை” எனப் பல அரசியல்வாதிகளும் அவ்வப்போது கோஷமெழுப்பி வருகிறார்கள். இக்கூற்றுகள் வெள்ளைத்தோல் அரசியல்வாதிகளின் வாய்களிலிருந்து வந்துவிட்டால் “அவர்களே கூறிவிட்டார்கள், நம்மாள் இன்னும் வாயே திறக்கேல்லை” என்பது போன்ற அழுத்தங்கள் பொழியத் தொடங்கிவிடும். வாக்குக் கனவுகளுடன் இம்மேடைகளில் ஏற வரிசைகளில் நிற்கும் நமது அரசியல்வாதிகளுக்கு -ஆரம்பிப்பவர்களும், அனுபவசாலிகளும் – . அமைச்சரின் இந்த அனுபவம் சிறந்ததொரு பாடத்தைக் கற்பித்திருக்கும் என நினைக்கிறேன்.
கமாக நாமும் எமது எதிர்பார்ப்புகளில் சாமர்த்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்பிரதிநிதிகள் தமிழர்களை மட்டுமல்ல பரந்த கூட்டு சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்; தமிழராக இருப்பது பெருமைதான் என்பதோடு எமது நடவடிக்கைகள் எல்லைப்படுத்தப்பட வேண்டும்.
அமைச்சர் ஆனந்தசங்கரியின் இத்துர்ப்பாக்கியமான நிலைக்கு அவரது கடந்தகால நடவடிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அவை எமது சமூகத்தின்பால் நடைபெற்றவையாயின் அவரது இடரில் எமக்கும் பங்குண்டு. இத் தேவையற்ற சம்பவத்திற்கு மூலகாரணம் இனத்துவேஷம். இது ஒட்டுமொத்த வெள்ளையரல்லாத இனங்கள் அனைத்தையுமே அவமதிக்கும் ஒரு சம்பவம். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கு எமது அதிருப்தியைத் தெரிவிப்பது அவசியம். (Image Credit: WS)