பட மூலாதாரம்,FIDE
தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ்.
செஸ் போர்டில் தனது காய்களை நகர்த்துவதற்கு முன்பாக, சில நொடிகள் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பது குகேஷின் வழக்கம்.
இந்த முறை அவர் கண்களை மூடி யோசித்தது உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் காட்சியாக இருந்திருக்கலாம், அந்தக் காட்சி தற்போது நனவாகியுள்ளது. உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜா ஆடினார்.
இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே மிகவும் சவாலான போட்டியாக இருவருக்கும் இருந்து வந்துள்ளது.
முதலில் சில சுற்றுகளில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக ஆடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர்.
பட மூலாதாரம்,FIDE
அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர்.
பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். பதினொன்றாவது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார். அடுத்த சுற்றையும் அவர் கைப்பற்றியிருந்தால் உலக சாம்பியன் பட்டத்துக்கான கனவு கிட்டத்தட்ட அப்போதே நிறைவேறியிருக்கும்.
டிங் லிரேனை ஒரு நெருக்கடிக்கு ஆளாக்கும் போதுதான் அவர் ஆபத்தானவராகிறார் என்று இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு ஏற்றாற்போல், 12வது சுற்றில் மீண்டும் சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் டிங் லிரேன்.
எனவே அடுத்த சுற்றான 13வது ஆட்டத்தை உலகின் செஸ் ரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கி வந்தனர்.
அதற்குள்ளாக இரு வீரர்களின் நகர்வுகளையும் நேரலையில் பார்த்துக் கொண்டு, யார் எந்த நகர்வை எப்படிச் செய்திருந்தால், யார் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற தீவிர அலசல்கள் ஒருபுறம் இருந்து வந்தன. ஆனால், அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த 13வது ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது.
14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் என்ன கூறினார்?
உலக செஸ் சாம்பியன் போட்டியின் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குகேஷ், "இரண்டு வருட தீவிர பயிற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது" என்றார்.
இந்தப் போட்டிக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
குகேஷ் 10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறியதோடு, இந்தியாவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டதாகவும் தெரிவித்தார்.
உலக சாம்பியன் ஆனது பெரு மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர் லிரேன் தோல்வி அடைந்ததற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இறுதியாக, இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்பணிப்பதாகக் கூறினார் குகேஷ்.
11 வருடங்கள் கழித்து நனவான கனவு
பட மூலாதாரம்,FIDE
இதனால் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது. இருவருக்கும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்புகள் இருந்தன.
ஒரே ஒரு தவறான நகர்வினால், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தைப் பெறும் குகேஷின், இந்தியாவின் கனவு நொறுங்கிவிடும். இந்த நிலையில் இரு வீரர்களுக்கும் இடையில் நெருக்கமான போட்டி நிலவியது.
ஆரம்பத்தில் இந்தப் போட்டியும் ட்ராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குகேஷ் டிங் லிரேனை செக் மேட் செய்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி புதிய உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் குகன், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியர் ஆவார்.
பட மூலாதாரம்,FIDE
மேக்னஸ் கார்ல்சனுடன் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடிய போது, குகேஷ் பார்வையாளராக இருந்தார், மேலும் ஒருநாள் உலக சாம்பியன்ஷிப்பிற்காக விளையாட வேண்டும் என்று அன்றே முடிவு செய்தார்.
11 வருடங்கள் கழித்து அந்த கனவு நனவாகி உள்ளது.
போட்டியின் 13வது ஆட்டத்தின் முடிவில் குகேஷ் மற்றும் லிரன் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியானது, ரஷ்யா மற்றும் மேற்கு நாடுகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் செஸ் உலகில் மீண்டும் ஒரு புதிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் இந்த போட்டியின் மற்றொரு சிறப்பு, இதில் பங்குபெற்ற இருவருமே ஆசியாவைச் சேர்ந்த வீரர்கள். இறுதி போட்டியில் ஆசிய வீரர்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் முதல் செஸ் சாம்பியன்ஷிப் இதுதான்.
குகேஷுக்கு முதல்வர், பிரதமர் வாழ்த்து
பட மூலாதாரம்,FIDE
படக்குறிப்பு, சீன வீரர் டிங் லிரேனுடனான ஆட்டத்தின்போது குகேஷ்
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோதி இதை வரலாற்றுச் சாதனை என்றும் குகேஷ் அனைவருக்கும் முன்மாதிரியான ஆளுமை என்றும் பாராட்டியுள்ளார்.
``இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. இந்த சாதனைக்கு குகேஷுக்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றின் விளைவு. அவரது வெற்றி, இந்திய செஸ் வரலாற்றில் அவரது பெயரைப் பொறித்தது மட்டுமல்லாமல், கோடிக்கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "உங்களை பார்த்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று பாராட்டியுள்ளார்.
``மிகவும் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது இந்தப் பெரும் சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தை நிலை நிறுத்துகிறது. மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலகின் செஸ் தலைநகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
``எங்கள் மண்ணின் மைந்தனான கிராண்ட்மாஸ்டருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
``தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இலைட் (ELITE) பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச செஸ் போட்டிகளில் நிலையான வெற்றிகளைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
அவரது வெற்றி நம் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதோடு மட்டுமின்றி, தமிழகத்தின் மீதான கவனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமை கொண்டிருப்பது உத்வேகம் அளிக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.
குகேஷ் சாதனை குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறியது என்ன?
பட மூலாதாரம்,CHESS24INDIA
விஸ்வநாதன் ஆனந்த் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
``இதுவொரு பெருமையான தருணம், இந்தியாவிற்கு பெருமையான தருணம், வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமிக்கு (WACA) ஒரு பெருமையான தருணம், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பெருமையின் தருணம்.
டிங்கும் மிகவும் பரபரப்பான ஆட்டத்தைத் திறம்பட விளையாடினார். அவரும் ஒரு சாம்பியன்தான்" என்று விஸ்வநாதன் ஆனந்த் பதிவிட்டுள்ளார்.
மேலும், செஸ் தொடர்பான ஒரு யூட்யூப் சேனலில் குகேஷின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்வில் வீடியோ மூலமாகப் பங்கேற்ற ஆனந்த், குகேஷுக்கு நேரலையில் வாழ்த்து தெரிவித்தார்.
ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்ததாகக் கூறிய விஸ்வநாதன் ஆனந்த், 15 நிமிடத்திற்கு முன்பு வரை குகேஷ் வெல்வாரா என்று சந்தேகித்ததாகக் கூறினார்.
குகேஷின் பின்னணி
படக்குறிப்பு, வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ்
சென்னையை சேர்ந்த குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார்.
குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார்.
பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஷ்.
வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.
தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஷை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர்.
அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.
வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஷின் பொழுதுபோக்காகவே ஆனது.
பட மூலாதாரம்,FIDE
குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை (இஎன்டி) அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஷின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.
குகேஷின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்
வெற்றி மேல் வெற்றி
கடந்த 2015ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் குகேஷ். 2015ஆம் ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ந்து அந்தப் பட்டத்தை வென்றார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) ரேட்டிங் அவருக்கு முதல்முறையாக கிடைத்தது. அது குகேஷை மிகவும் ஊக்கப்படுத்தியது.
FIDE தரவரிசையில் குகேஷ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இவ்வளவு போட்டிகளை எதிர்கொண்டு, பதக்கங்களை பெற்று வரும் சென்னையைச் சேர்ந்த குகேஷின் குடும்பத்தில் இவரே முதல் சதுரங்க வீரர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு