வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
வாச்சாத்தி - உண்டால் அம்ம இவ்வுலகம்
- சுப.சோமசுந்தரம்
கருப்பு, சிவப்பு, நீலம் என்ற இந்த மூன்று வண்ணங்களில் எதிலுமே நிற்காத ஒருவரிடம் நான் அரசியல் பேச விரும்புவதில்லை. அந்த மாதிரியான நபரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது என்று தெரியாததே காரணம். இந்த மூன்று வண்ணங்களும் முறையே திராவிட இயக்க அரசியல், இடதுசாரி அரசியல், தலித் அரசியல் இவற்றைக் குறிப்பன என்பது இன்று தமிழ்நாட்டில் சிறு பிள்ளைகளுக்கும் தெரியும், தெரிய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த மூன்று வண்ணங்களையும் எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவன் நான். அதாவது இவற்றில் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியிலும் உறுப்பினர் ஆகாமலே மூன்றையும் கொண்டாடும் உரிமை பெற்றுள்ளேன். ஆங்கிலத்தில் சொல்வது சுருக்கமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என நம்புகிறேன், "I own them, I belong to them". இதில் ஆகச் சிறந்த நன்மை ஒன்று உண்டு. ஏதாவது ஒரு நிலைப்பாட்டில் மூன்றில் எந்த ஒரு அணியும் மேற்சென்று இடித்தற் பொருட்டாய்க் கடிந்து கொள்ளும் உரிமையே அது. அந்த உரிமை அவர்களிடம் எடுத்து எனக்கு நானே கொடுத்துக் கொள்வது. ஆனால் எந்த நிலையிலும் எதிரிகளிடமும், தன் பெண்டு தன் பிள்ளையென மட்டும் வாழும் சராசரிகளிடமும் இந்த மூவண்ணத்தாரை நான் விட்டுத் தருவதில்லை. நான் வகுத்த வர்ணாசிரமம் இதுவே ! ஏன் இந்தப் பீடிகை ?
இப்போது நாம் கையில் எடுத்துள்ள வாச்சாத்திக்கு வருவோம். வெகு சமீபத்தில் செங்கொடியினரால் வெளியிடப்பட்ட 'வாச்சாத்தி' எனும் ஆவணப்படத்தை மானிடர் அனைவரும் பார்க்க வேண்டும். அதன் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
வாச்சாத்தி தர்மபுரி மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு மலைவாழ் மக்களின் கிராமம். 1992 ஜூன் மாதம் 20, 21, 22 தேதிகளில் தமிழ்நாடு வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை இம்மூன்று அரசு இயந்திரங்களாலும் சூறையாடப்பட்ட சுமார் 200 குடும்பங்களைக் கொண்ட கிராமம். சுமார் 600 கோடி பெறுமானமுள்ள (1992 டிலேயே) சந்தன மரங்கள் சூழ்ந்திருந்த நிலையில், அப்போது தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த அதிமுகவினராலும் துணை போன அதிகார வர்க்கத்தாலும் மூன்றில் ஒரு பங்கு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதாகவும் அரசு இயந்திரங்களின் உதவியோடு மேலும் அத்தனையையும் வெட்டத் திட்டமிருந்ததாகவும் கேள்வி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இடையூறாக இருந்த அந்தக் கிராமத்தினரை அப்புறப்படுத்தவே வன்முறை, பாலியல் வல்லுறவு, வீடுகளை அடித்து நொறுக்குதல், கிராமத்துக் கிணற்றில் மோட்டார் கழிவு எண்ணெயைக் கலத்தல் என எழுத்திலடங்கா வன்கொடுமை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவும் ஏதோ ரவுடிக் கும்பலால் அல்ல; மேலே குறிப்பிட்டுள்ள மூன்று அரசுத்துறைகள் எனும் கும்பலால். கிராம மக்கள் மீது சந்தனம் வெட்டிக் கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். எந்தக் குற்றத்தை அவர்கள் எதிர்த்தார்களோ அந்தக் குற்றமே அவர்கள் மீது சுமத்தப்பட்டது பேரவலம். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட சொல்லொணாத் துயரங்களை இப்போது வெளியாகி உள்ள ஆவணப்படத்தில் அனைவரும் கண்ணீருடன் கண்டு குமுறலாம். அரசுத் துறைகளில் மெத்தப் படித்தோரும் பாதகஞ் செய்தனர். பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று அவர்களைச் சரியாக வழிநடத்தி 31 ஆண்டுகள் ஜனநாயக வழியில் நீதிப் போராட்டம், வீதிப் போராட்டம் என்று நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்த வீரமும் ஈரமும் கொண்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்; அவர்கள் மட்டுமே ! அரசுத் துறை ரவுடிகளால் வன்புணர்வு எனும் கொடுமைக்கு ஆளான 18 பெண்கள் உட்பட அதிகார வெறியாட்டத்திற்கு ஆளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தந்ததோடு அரசுத் துறைகளைச் சார்ந்த 269 பேர் குற்றவாளிகள் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கித் தந்தனர். 269 பேரில் இந்த 31 ஆண்டுகளில் மரணித்த 54 பேரைத் தவிர ஏனைய 215 பேரும் சிறைத் தண்டனை பெற்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நம் செங்கொடித் தோழர்கள் மட்டுமா போற்றுதலுக்குரியவர்கள் ? பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் இத்தனை ஆண்டுகள் உறுதியோடு நின்றார்களே ! ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து அம்மக்களில் ஒவ்வொருவருக்கும், பிறழ் சாட்சியாக மாற, அவர்கள் நினைத்துப் பார்க்காத பணம் பேரம் பேசப்பட்டிருக்கும். ஒவ்வொருவரும் மிரட்டப்பட்டிருப்பர். ஆனால் ஒருவர் கூட உடன்படவில்லை, அஞ்சவில்லை என்பது வரலாற்றில் வேறு எங்கும் நிகழ முடியாத ஒன்று. CPI(M) மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியதைப் போல அந்த மக்களே தலையாய கதாநாயகர்கள் (protagonists). மக்கள் இயக்கம் என்பது எவ்வளவு வலுவானது என்பதை உலகுக்கே உணர்த்தியவர்கள்.
அரசியல் சூட்சமங்கள் அவ்வளவாகத் தெரியாத பாமரர் மனதில் சில கேள்விகள் எழுவது இயல்பு. வாச்சாத்தி கொடுமை நிகழ்ந்தது அதிமுக ஆட்சியில். மணக்கும் சந்தன காசை இழக்க மனமின்றி எத்தகைய கொலை பாதகத்திற்கும் அவர்கள் துணிந்தது புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தில் மும்முரமாக நின்ற தோழர் பி.சண்முகம், தோழர் அண்ணாமலை இவர்களை ஏதாவது ஆக்சிடென்ட் செய்து கதையை முடிக்கச் சொன்ன அப்போதைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையனின் தொலைபேசிப் பேச்சின் பதிவிலிருந்து தெளிவாகத் தெரிகிறது - அதிலும் அப்பதிவு தோழர்களின் கையில் கிடைத்ததால். இடையில் கலைஞர் கருணாநிதியின் திமுக ஆட்சி ஏற்பட்டபோது வழக்கைத் துரிதப்படுத்திக் குற்றவாளிகளை மக்களுக்கு இனங் காட்டியிருக்கலாமே ! மாறாக நீதிமன்ற உத்தரவின் படி சிறைப்படுத்தப்பட்ட 269 காவலர்களை கலைஞர் ஏன் விடுவித்தார் ? இதே கேள்வி ஸ்டெர்லைட் விவகாரத்திலும் எழுகிறது. அமைதி வழியில் போராடிய 13 போராளிகள் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளப்பட்டது எடப்பாடியாரின் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான். ஆட்சி மாறிய பின் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையப் பரிந்துரையின்படி, குற்றம் (குற்றேவல்) புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அரசு நிர்வாக அதிகாரிகளின் மீதும் ஸ்டாலின் அவர்களின் திமுக அரசு ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை ? இக்கேள்விக்கெல்லாம் அனுபவத்தால் முதிர்ச்சி பெற்ற தோழர் ஒருவர் பதிலிறுத்தார், "ஆட்சி மாறினாலும் காவல்துறையின் உயரதிகாரிகளும் நிர்வாக அமைப்பின் உயரதிகாரிகளும் உரியோரைச் சந்தித்து, தங்கள் ஆட்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மொத்த அமைப்பும் நிலை குலைந்து போகும் - அதாவது demoralise ஆகும் - என்று ஓதிவிட்டு வருவார்கள் (சரியாகச் சொன்னால், எச்சரித்து விட்டு வருவார்கள்). என்ன இருந்தாலும் இவர்களை வைத்துதானே ஆட்சி நடத்த வேண்டும் என்ற அடிப்படையில் எந்த ஆளும் கட்சியும் அடக்கி வாசிக்கும்". இது மட்டுமா ? முதுகுளத்தூர் கலவரத்தில் தலித்துகளின் பக்கம் முழுமையாக நிற்க வேண்டிய பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் பஞ்சாயத்து பண்ணத்தானே முயற்சி செய்தார்கள் ? அங்கு பெரும்பான்மையாகத் திகழ்ந்த ஆதிக்க உயர்சாதியினரைப் பகைப்பது வாக்கு வங்கி அரசியலுக்குச் சரிவராது என்ற நிதர்சனம் அன்றி வேறென்ன ? அதுபோலவே கவின் கொலை போன்ற ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டு வருவதில் இப்போது காலதாமதம் ஏன் ? இதுதான் ஜனநாயகத்தின் அவலம். இந்த அரசியலை எதிர்கொள்ள வீதிமன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி ஆள்வோரை நிர்பந்திக்க மக்களும் மக்கள் இயக்கங்களும் முன்வர வேண்டும். இப்பணியினை வாச்சாத்தியில் பாதிக்கப்பட்டோரும் செங்கொடியினரும் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். வாக்கு வங்கி அரசியலில் பங்கு கொள்ளாத கருப்புக் கொடியினரும் தலித் அமைப்பினரான நீலக் கொடியினரும் இதுபோல் இங்கு நிரம்பப் பணியாற்ற வேண்டும். ஏன் செங்கொடித் தோழர்கள் கூட, தம்மால் முன்னெடுக்கப்படாத ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்திலும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திலும், இன்ன பிறவற்றிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிக் குரல் கொடுக்க வேண்டும். தமக்காக மட்டுமல்லாமல் பிறருக்காகவும் போராடும் ஒவ்வொருவரும் கம்யூனிஸ்ட்தானே ! இதை விட பொதுவுடைமைக்கு வேறு என்ன சிறந்த வரையறை இருக்க முடியும் ?
உரைநடையில் கூட மரபுப் பாடல் ஒன்றினை வலுக்கட்டாயமாக இழுக்கும் மன நோய் எனக்கு உண்டு. குறைந்தது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புறநானூற்றுப் பாடல் ஒன்றைப் பாடி இக்கட்டுரைக்கு நிறைவுத் திரை போட விழைகிறேன். பொதுவுடைமைவாதிகளால்தான் இவ்வுலகமே இயங்குகிறது என ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய்ச் சொல்கிறது பாடல். வாச்சாத்தியில் அயராது போராடிய மக்களுக்கும் அவர்களைச் செவ்வனே வழி நடத்திய செங்கொடியினருக்கும் பாடும் மங்கல வாழ்த்தாக இதனைக் கொள்ளலாம். எனது வலைப் பதிவிலிருந்து படி எடுத்து இங்கு பதிவு செய்கிறேன் :
"உண்டால் அம்ம, இவ்வுலகம்! இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சி ரபுகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்; அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே !"
----புறநானூறு 182.
(பொருள் கருதி சீர் பிரித்து எழுதப்பட்டுள்ளது).
பாடியவர் கடலுள் மாய்ந்த பாண்டியன் இளம் பெருவழுதி. பாராளும் மன்னவரும் பாவலராய்த் திகழ்ந்த சங்க காலத்தில் இவர் பாண்டிய மன்னராய் அறியப் பெறுகிறார்.
பாடற்பொருள் : " இவ்வுலகம் உண்டெனில் இதனால்தான் !" (உண்டால் அம்ம இவ்வுலகம் - அம்ம என்பது வியப்பு குறித்த அசைச்சொல்) எனத் தொடங்குகிறது பாடல். இத்தன்மை உடையோரால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்று அத்தன்மைகளைப் பட்டியலிடுகிறார் புலவர். அவையாவன :- இந்திரலோகத்து அமிழ்தமே கிடைத்தாலும், சுயநலத்துடன் இனியது எனத் தாம் மட்டும் உண்ண மாட்டார்கள்; பிறரிடம் சினம், வெறுப்பு கொள்ள மாட்டார்கள் (முனிவிலர்); தாம் மேற்கொண்ட பணியில் சோம்பல் பாரார்(துஞ்சலுமிலர்); பிறர் (நல்லோர்) அஞ்சும் தீமைக்குத் தாமும் அஞ்சுவர்; உலகம் புகழும் நற்செயல்களை மேற்கொள்ள உயிரையுங் கொடுப்பர்; பழிச்சொல் தரும் செயல்களுக்கு உலகையே பரிசாகக் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்கள்; செயல்திறனில் சோர்வு இலாதார் (அயர்விலர்); இந்த மாண்புகள் பொருந்தியவராகி (அன்ன மாட்சியர் அனையராகி), வலிமையான முயற்சி (நோன் தாள்) உடையவரெனினும், தமக்கென முயலாமல் பிறர்க்கென உண்மையாகவே முயலும் தன்மையர். இத்தகைசால் பண்புகள் வாய்க்கப் பெற்றவர்களாலேயே இவ்வுலகம் இயங்குகிறது.





