தமிழும் நயமும்

மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

2 weeks 2 days ago
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
(truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்)
சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு
(மலையாள எழுத்தாளர்)
தமிழாக்கம்
களியக்காவிளை ஷினு (Shinu R S)
மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க விதத்தில் தாக்குப்பிடித்த மொழியாகவும் தமிழை நாம் காண வேண்டும்.
மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமஸ்கிருதத்தினை கலக்கவிடாமல் மிகக்கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்துசக்தியாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சொல்வளத்தாலும் இசைத்தன்மையாலும் தமிழ் மொழி உலகின் அனைத்து மொழிகளைவிட முன்னணியில் இருக்கிறது. எந்த ஆங்கில வார்த்தைகளுக்கும் அந்த மொழியில் அதற்கு தகுந்த சொல்லாடல்கள் தேவைக்கு தகுந்தபடி தோற்றம் பெறுவதைக் காணலாம். ஏராளமான இயந்திரக் கருவிகள் மேற்குலக நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவதும், அவை இந்தியாவை வந்தடையவும் செய்கின்றன.
நம்மால் எக்கருவியும் கண்டுபிடிக்கப்படாதது மட்டுமின்றி, இல்லாத பழங்கதை பேச்சுகளில் மூழ்கிப் போவதும், எந்தவித வெட்கமுமின்றி கருவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் செய்பவர்கள். நமக்கு அந்த கருவியின் பெயரில் கூட எந்தவித உரிமையும் இல்லை! அச்சூழலிலும் அந்த இயந்திரங்களுக்கு சுயமாக பெயர் சொல்லி அழைப்பதற்காவது முயற்சி செய்யும் மொழிதான் தமிழ். ரெப்ரிஜிரேட்டருக்கு அவர்கள் சாதாரணமாக 'குளிர் சாதனப் பெட்டி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஏர்கண்டிஷனருக்கும் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
சாதனம் என்பதற்கு இயந்திரம் என்பதுதான் தமிழில் அர்த்தம். மொபைல் என்ற சொல்லிற்கு தமிழர்கள் முதல்தர பெயரிட்டிருக்கிறார்கள்; 'அலைபேசி'. கம்ப்யூட்டருக்கு கணினி, கால்குலேட்டருக்கு 'கணிப்பான்', 'எளிகணி' என்னும் இரு பெயரிட்டிருக்கிறார்கள். கணிப்பான் என்ற சொல்லிலிருந்து கணிப்பதற்கும், எளிதில் கணிக்க என்னும் அர்த்தங்களில் இருந்துதான் 'எளிகணி' என்று கால்குலேட்டருக்கு பெயர் படைத்திருக்கலாம்.
பஸ்சை 'பேருந்து' என்று தமிழ்ப்படுத்தினார்கள். போட்டோவிற்கோ மிகவும் ரசனைக்குரிய சொற்பிரயோகமே தமிழுக்கு; நிழல் படம். மற்றும் ஒரு அழகான சொல் 'நிழல்குடை'. இது வேறெதுவுமில்லை. வெயிட்டிங் ஷெட்டிற்கு!
Weather என்பதற்கு சரியான மலையாளம் இன்றைக்கும் இல்லை. Climate என்ற சொல்லுக்கு 'காலாவஸ்த' என்று எழுதுகிறோம். Weather என்பதற்கு 'தைனம்தின காலாவஸ்த' என்றெல்லாம் சில பத்திரிகைகள் எழுத முயற்சித்தாலும் அது எதுவும் சரிப்படவில்லை. உண்மையில் நான் பிறந்த இடமான கண்ணூரில் Weather என்பதற்கு அழகான மலையாளச் சொல் இருக்கிறது - ஆச்ச். வானம் கருமேகங்கள் சூழும்பொழுது மழை மறையும்பொழுது பண்டைய தலைமுறையினர் இப்போதும் சொல்வார்கள். ஆஹா, ஆச்ச் மாறிட்டே என்று. இப்படி எவ்வளவோ கவித்துவமான வட்டார வழக்குகளை மலையாளி இழந்திருக்கிறான். ஏதாவது ஒரு பிரபல தினசரி பத்திரிகை பழக்கப்படுத்தி இருந்தால் சிலவேளை அழியாமல் இருந்திருக்கும்.
எந்த மொழியிலும் புதிய சொல்லாடல்களை வெளியில் இருந்து திணிப்பன் மூலம் உருவாக்க இயலாது. சமீபத்தில் நமது மொழி வல்லுனர்கள் ஆங்கிலத்திற்குச் சமமான வார்த்தைகளை உருவாக்க கடினமாக முயற்சி செய்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. அவ்வாறான சொற்கள் ஓசை நயமோ, நமது கலாச்சாரம் குறித்த ஆழ்மன சித்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனம். 'ஸ்விட்ச்' என்பதற்கு 'வைத்யுத ஆகமன பிரத்தியாகமன யந்திரம்' என்ற ரீதியில் சொற்களை உருவாக்கினால் எப்படி இருக்கும்? 'ரயில்வே ஸ்டேஷனுக்கு' 'அக்னிசகட ஆகமன பிரத்தியாகன யந்திரம்' என்று இரண்டு முறை சொல்லி முடியும்போது, நமக்கான வண்டி கிளம்பிப் போயிருக்கும். இந்த இடத்தில் தமிழ் ஒரு முன்னுதாரணமாகிறது. நேற்று கண்டறிந்த ஆங்கில வார்த்தைக்கும் நாளை தமிழ் வார்த்தையை கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குத்தக வாட்ஸ் - அப்பிற்கு கூட தமிழில் பெயர் வந்துவிட்டது; பகிரி என்னும் சொல். எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய இருக்கிறது.
தமிழ் மொழிக்கு எப்படி இது சாத்தியமாகிறது? விடை எளிது. இசைத் தன்மை கொண்டது அம்மொழி. எளிமையானது. அனேக நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. அதன்மீதான அனைத்து மதிப்பும், அன்பும் அவர்களின் இதயத்தில் அந்த மொழியிடம் இருக்கிறது. 'தமிழன்' என்றுகூட ஒரு திரைப்படத்தின் பெயர் வருகிறது. சுயமரியாதையின் ஆற்றல் ஒரு வியாபார திரைப்படத்தின் பெயரில்கூட வெளிப்படுகிறது. அது மிகவிரைவிலேயே ஒரு சமூக, அரசியல் உணர்வாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது மலையாளி ஒரு திரைப்படத்திற்கு சூட்டிய பெயரைப் பாருங்கள் - 'மலையாளி மாமனுக்கு வணக்கம்' !
இணையோடு புணர்வது குறித்து சொல்வதற்கு காவியத் தன்மை கொண்ட ஒரு சொல் கூட மலையாளத்தில் இல்லை. ஆனால் தமிழில் கவனியுங்கள்; உடல் உறவு. எவ்வளவு தூரம் அழகானதும் ஓசை நயம் கொண்டதுமான சொல். காதலின் மென்மையை வெளிப்படுத்த இதுபோன்ற அதி அற்புதமான வார்த்தை இன்னும் இருக்கிறது தமிழில். அதில் ஒன்று தான் கலவி. 'கலவி' என்பதற்கு 'இரண்டாக இராமல் ஒன்றாவது' என்பதுவே அர்த்தம். காதலுடன் இணைவதற்க்கு இதைப்போன்ற சொல்லழகும் சமூக உணர்வும் உள்வாங்கிய வேறு எந்த சொல் இருக்கிறது? மலையாளத்தில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பகுதியான சொற்களும் விகாரம் தரக்கூடியவை. சுயமரியாதை அற்றதும் கூட. ஒரு நிமிடம், இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவ்வாறான சொற்களை ஆராய்ந்து பாருங்கள்; சொன்னதன் அர்த்தம் புரியும்.
1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில். இந்த விஷயத்தில் கொல்லம் மாவட்டத்தவர்கள் மிகவும் பெருமை கொள்ளலாம். மலையாள நாடும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இதைவிட கூடுதலாக வேறு எதை சொல்ல முடியும்?
எந்தவொரு சமூகத்தினரினதும் வரலாற்று உணர்வும் மொழியில்தான் உயிர் வாழ்கிறது. வடக்கிலிருந்து உருவாகும் ஆரிய மயமாக்கல், தென்மேற்கு கரை ஓரங்களிலிருந்து உருவான வியாபார மிஷனரி தொடர்புகளினால் நாம் நமது தாய் மொழியான தமிழிலிருந்து பெருமளவுக்கு விலகி போய்யிருக்க வேண்டும். மொழியால் திணிக்கப்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான காலனித்துவம் இன்றும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மொழியைக் கற்றிராத எந்தவொரு மலையாளியாலும் ஓரளவுக்கு தமிழில் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி தமிழ் மொழியுடன் கொண்டிருப்பது தொப்புள் கொடி உறவாகும். தமிழின் சங்ககால காவியங்களில் ஒன்றினை எழுதியது ஒரு கேரளீயர். இளங்கோவடிகள் என்பது கவிஞனின் பெயர். படைப்பு; சிலப்பதிகாரம். ஒன்றிரண்டு அல்ல, 5700 வரிகள் இருக்கிறது. நாம் அறிந்திடாத கேரளக் கவிஞர்களின் பெயர்கள் இன்னும் இருக்கலாம். எட்டுத்தொகையின் சில கவிதைவரிகள் கேரளாவின் கவிஞர்கள் எழுதியதாக கருதப்படுகிறது.
இந்த குறிப்பின் நோக்கம் மொழி மீதான உரிமை கோரும் வாதமல்ல. உலகிலுள்ள எந்த மொழியும் பிற மொழிகளுக்கு எதிராக இல்லை என்பதுவே மேன்மையான உண்மை. உலகில் மிகவும் குறைவான மக்கள்தொகையினர் பேசும் மொழியைக்கூட மனிதன் பாதுகாக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ஒரு மனிதன் நான். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு எந்த மொழியையும் திணிப்பதற்கு நான் எதிராளியும் கூட. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மொழிக்குப் பின்னால் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் குரூர மனம் இருக்கிறது.
வேர்களை கைவிட்ட மரங்கள் அதன் ஆன்மாவை விரைவில் இழந்துவிடும். துணை மொழியாக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் முக்கியத்துவம் கொடுத்து கற்க வேண்டியது தமிழ் மொழியைத்தான். காரணம், வெயில் இலைகளை பசுமையாக்குவது போன்று, மண்ணின் ஆழங்களில் ஊடுருவும் வேர்கள் அதன் தாய்த்தடிகளையும் கிளைகளையும் வலுப்படுத்தும். கேரளாவில் வாழ்பவர்களின் தாய்மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்தின் தாய்மொழி தமிழ். அதில் ஒரு தற்காப்பு அரசியல் செயல்படுவதை நாம் அவதானிக்கலாம்.
(பி.கு: இந்த கட்டுரையை பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் முக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது போன்று வீண் பெருமை பேசும் நோக்கத்தில் அல்ல. மாறாக தாய்மொழி கல்வியின் சிறப்பை இதைவிட எதார்த்தமாக தற்போதைய சூழலில் எளிமையாக புரியவைக்க முடியாது என்பதற்கே.
இந்த கட்டுரையை வாசிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவு வருகிறது. சோவியத் வீழ்ந்து முப்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டு இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் சில நேரம் மூத்த தோழர்கள் வீடுகளில் காண கிடைக்கும். அந்த புத்தகத்தை தொட்டு பார்த்து "முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ” என்ற வரியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வர்ணிக்க முடியாது. வெறும் தமிழ் என்றில்லை சோவியத் கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் அவரவர் தாய் மொழியிலேயே புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்து ஏற்றுமதி செய்தார்கள். தாய் மொழி கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக கம்யூனிச ஆசான்கள் பெரும் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்)

நன்னீரை வாழி அனிச்சமே ! - சுப. சோமசுந்தரம்

4 weeks 2 days ago

                                       நன்னீரை வாழி அனிச்சமே !

                                                                                                                        --- சுப. சோமசுந்தரம்

            நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின் வாடி" எனச்  சாற்றும் பாலைக்கலியைப்  பாடிப் பார்த்தவன். அஃதாவது தனது நிழலில் நின்று பொய்யுரைத்த ஒருவனது இதயம் படபடக்க, அவனது உடலியல் மாற்றத்தின் விளைவாக மரம் வாடி நின்ற கதை அது. ஒருவன் பொய்யுரைத்ததை உலகிற்குப் பறைசாற்றிய பொய் காண் கருவியாய் (Lie detector) மரம் நின்ற அறிவியல் அது. இங்ஙனம் இயற்கையுடன் மனிதன் சங்க காலத்தில் கொண்ட மேதகு உறவினை சங்கமருவிய காலத்தும் கொண்டு செல்லும் வேட்கையும் சான்றாண்மையும் படைத்தவன் நம் தலைவன்.
        
          தற்காலத்தில் காதலின் நுட்பம் அறிந்த தலைவனொருவன் ஒரு நாள் முழுதும் தானே தலைவிக்காக சமையல் செய்வதாகவோ அல்லது இன்னபிற குற்றேவல்கள் செய்வதாகவோ உறுதி ஏற்பதில்லையா ? அதுபோல நமது அக்காலத் தலைவன் தானே மலர்கள் கொய்து மாலையாக்கித்  தலைவிக்குச் சூட ஆவலுற்றான். அவன் வாழ்ந்த இடச்சூழல், அப்பருவச் சூழல் இவற்றின் தாக்கத்தினால் சோலை எங்கும் அனிச்சத்தின் ஆட்சி மலர்ந்திருந்தது. பூவினத்தில் மென்மையானது எனப் பார் போற்றும் அனிச்சத்தின் ஆட்சி வன்முறை ஏதுமற்ற மென்முறை ஆட்சி. மலர் கொய்யவே செடியினை அணைந்து நின்றவன் மலரினின்றும் விலகி நின்றான். மோப்பக் குழையும் அனிச்சம் என்பதினால் மூச்சுக்காற்றும் தீதாம் எனும் அச்சம். அகலாது அணுகாது தீக்காய்வார் போல் பூக்காய்ந்தான் போலும். நற்றிணை மாந்தர் மரஞ்செடி கொடிகளுடன் உறவாடியதைப் போல் மலரிடம் உரையாடினான், "ஏ அனிச்சமே ! உன் மென்மையுடன் மேன்மையாய் நீ வாழ்க ! எனினும் உன்னை விட மென்மையானவள் நான் வீழும், வாழும் என் தலைவி" என அவன் அவளின் நலம் புனைந்துரைத்தான். வேறு மானிடரிடம் சென்று இவ்வாறு உரைப்பதுதானே தற்பெருமையாகவும் முதிர்ச்சியின்மையாகவும் அமையும் ? தன் மனதிடம் உரைப்பது போல் மலரிடம் உரைப்பது கலைநயம் அன்றி வேறென்ன !
"நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்"

      ----(குறள் 1111; களவியல்; அதிகாரம்: நலம் புனைந்துரைத்தல்)

          மலர் கொண்டவன் மாலை கட்டினான். அக்கலை அவளிடமே அவன் கற்றது. கட்டும்போது கவனமாக ஒவ்வொரு மலராகக் காம்பினைக் களைந்தான். அவன்தன் மனத்திரையில் பழங்காட்சியொன்று விரிந்தது. அனிச்சமலரை மட்டுமே தாங்கும் வல்லமை பெற்ற மெல்லிடையாள் அவள். எனவே ஒரு முறை அனிச்சத்தைச் சூட முனைந்த அவளிடம் சொன்னான், "காம்பினைக் களையாமல் சூடிக் கொண்டாயானால், நல்ல பறை ஒலியாது; சாப்பறைதான் (இழவுக் கொட்டுதான்) ஒலிக்கும்". அதாவது மலரின் எடை தாங்கும் அவளின் இடை, மலர்க்காலின் எடை தாங்காது முறிந்திடுமாம்; அப்புறம் இழவுதானாம். "அந்தப் பாறாங்கல்ல நீ தூக்ககுனே, அப்புறம் எழவுதாம்லே !" என்று இக்காலத்தில் கூட நண்பனிடம் சொல்வதில்லையா ? அப்போதும் அதே சொல் வழக்கு !
"அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை"

    ---(குறள் 1115)
(நுசுப்பு - இங்கு இடைவருத்தத்தைக் குறித்தது)

           பெருந்தடாகக் கரையின் அமைந்த பொழில் அது ஆதலின், ஆங்கு மணலானது அனிச்சத்தினும் மென்மையாய் அமைந்ததோ, என்னவோ !  மேலும் தடாகத்தின்கண் நீந்தும் அன்னப் பறவைகளின் மென்மையான இறகுகள் அம்மணற் பரப்பில் விரவிக்  கிடந்தன; கூடவே அனிச்சத்தின் இதழ்கள் வேறு. மாலையுடன் தலைவியின் வரவுக்காகக் காத்திருந்த தலைவன் மணற்பரப்பில் பரவியிருந்த அனிச்ச இதழ்களையும் அன்னத்தின் இறகுகளையும் இயன்றவரை நீக்கி அச்சோலையை மேலும் செம்மைப்படுத்தினான்.  அனிச்சமும் அன்னத்தின் தூவியும் கூட தலைவிதன் மென்மையான பாதங்களை வருத்துமாம், உதிர்ந்த நெருஞ்சிப் பழம் நம் பாதங்களை உறுத்துவது போல.
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்"

                 ----(குறள் 1120)

           அன்றிலிருந்து இன்று வரை நிலவும் ஆணாதிக்க சமூகத்தில் தலைவிதானே தலைவனின் வழிமேல் விழி வைத்து நிற்பாள் ? அன்றே அதில் மாற்றத்தை நிகழ்த்திய நம் தலைவன் தன்னேரில்லாத் தலைவனே ! அந்தி மாலையில் அவன் கோர்த்த மாலைக்காகவே வந்தது போல் தலைவியும் வந்தாள். மாலை சூடினான் மனம் கவர்ந்த மன்னன் அவன். பொய்கைக் கரைக்கு அவனையணைந்து சென்று அமர்ந்தாள் பதுமை அவள். அவளிடம் படுபாவி (!)  என்னென்ன பிதற்றினானோ, அக்கற்பனை உலகில் கூட அவை நம் காதில் விழவில்லை. விளைவு மட்டும் கண்கூடாய்த் தெரிந்தது. அவன் நெஞ்சமதில் பாவையவள் தஞ்சமானாள். நம் மனத்திரைக்குத் தணிக்கை எதுவும் இல்லை. அம்பலத்தில் சொல்ல தணிக்கை உண்டே ! எனவே அக்காட்சிக்கு இவ்விடத்தில் நிறைவுத் திரை போடும் கையறு நிலை நமக்கு.

            நூறாண்டு பல கழிந்து தலைவனின் வழிவந்த ஒருவன்
"அனிச்சம் பூவழகி
-----------------------------------
------------------------------------
கிறங்க வைக்கும் பேரழகி"

என்று வெள்ளித்திரையில் பாடியபோது ஏற்பட்ட நம் எண்ண அலைகளின் பதிவே மேற்கூறியதாம்.

யார்... பெரியவர்?

3 months 1 week ago
May be an image of nature
யார் பெரியவர் ?
மரத்தின் மேலிருந்து தொங்கும் கூட்டைக் கட்டி,
எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள, அதற்கு கீழாக வாசலை வைத்து...
தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் அமரவும்
இடத்தை ஒதுக்கிக் கட்டியுள்ள தூக்கணாங் குருவி
எறும்பினும் சிறிய தொட்டால் நசியக்கூடியது,
 
ஆயினும்.. ஆளுயுர புற்றுக் கட்டி,
அதனுள் அடுக்கடுக்காக தங்களுக்கான வீட்டைக் கட்டும் கரையான்,
 
தன் உணவான... திரவத்தை கீழே சிந்தாமல் அந்தரத்திலே நிற்கச் செய்யும் தேனி,
 
தன் உணவு தன்னைத் தேடி வந்து, தன் வலைக்குள்ளே விழச் செய்யும் சிலந்தி..
 
என ஒவ்வொன்றுக்கும், ஒரு திறனை இயற்கை வழங்கியிருக்க...
பெரியவர் என யாரும் செருக்கு கொள்ளத் தேவையில்லை.
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
படித்ததில் பிடித்தது. 
Checked
Wed, 08/17/2022 - 07:18
தமிழும் நயமும் Latest Topics
Subscribe to தமிழும் நயமும் feed