ஊர்ப்புதினம்

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி

3 hours 45 minutes ago

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி

வெள்ளி, 03 ஏப்ரல் 2026 05:06 AM

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.

'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. 

துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.

அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர்

குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை  சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

https://jaffnazone.com/news/56017

காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்

4 hours 8 minutes ago

காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்

adminApril 3, 2026

TamilNews2-8.png?fit=900%2C1200&ssl=1

யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது.

கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி  சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை  உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து  காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார்.

உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல்நிலையத்தில் கடமையாற்றும்  காவல்துறை   சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட்  (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

https://globaltamilnews.net/2026/231397/

யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

4 hours 11 minutes ago

யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

adminApril 3, 2026

TamilNews2-9.png?fit=900%2C1200&ssl=1

படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக  காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்திருந்தார்.  யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் குடும்பத்தினரின் நலன்சார்ந்து மன்றில் தோன்றி தனது சமர்ப்பனங்களை முன் வைக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில்,

சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் நான் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் தான் முன்னிலையானேன். அது தொடர்பில் நீதிமன்ற வழக்கேடுகளில் கூட தெளிவாக உள்ளது. ஆனால் நான் சந்தேகநபர் சார்பில் முன்னிலையானதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ஊடகங்களுக்கு நீதிமன்று பொதுவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும்.

அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் , சிலவற்றையும் அவர் இறுதி வரையில் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சில தடய பொருட்களை நீதிமன்றத்தின் ஊடாக   காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளோம்.

அத்துடன் முதலாம் சந்தேக நபருக்கு எதிராக விரிவுரையாளர் மேற்கொண்ட   காவலதுறை  முறைப்பாடுகள் தொடர்பிலும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பிலும் ,நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தனது சமர்ப்பனத்தில் குறிப்பிட்டார்.

விரிவுரையாளரின் படுகொலை வழக்கில் அவரது மகள் இரண்டாவது சந்தேகநபராகவும் , மகளின் கணவன் முதலாவது சந்தேக நபராகவும் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து , படுகொலையான விரிவுரையாளர் சார்பில் முன்னிலையான எம்.ஏ சுமந்திரனை 2ஆம் சந்தேக நபரான கொலையான விரிவுரையாளரின் மகள் சார்பில் முன்னிலையானர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2026/231401/

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

4 hours 25 minutes ago

23-649a73eeaa0f3.jpg?resize=600%2C375&ss

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1470794

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

4 hours 28 minutes ago

Court.jpg?resize=750%2C375&ssl=1

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர்.

சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது.

https://athavannews.com/2026/1470852

உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து

17 hours 43 minutes ago

உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து

Apr 2, 2026 - 08:16 PM

உலக வங்கி - இலங்கைக்கு இடையில் புதிய கூட்டாண்மை கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை கட்டமைப்பை இன்று (2) ஆரம்பித்து வைத்தன. 

இலங்கையின் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும், நடுத்தர காலத்தில் 7% பொருளாதார வளர்ச்சியை எட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இது பங்களிக்கவுள்ளது. 

தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரத்தன்மை, பலப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை மற்றும் வருவாய் அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மீது எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

நடுத்தர காலத்தில் 7% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்காகும். உலக வங்கி கடந்த 7 தசாப்தங்களுக்கும் மேலாக எம்முடன் பயணித்துள்ளது 

இந்த புதிய ஒப்பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும், என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

தனியார் துறையினூடாக வேலைவாய்ப்பு உருவாக்கம் இந்த புதிய கூட்டாண்மையின் மையமாக தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் காணப்படுகிறது. 

அடுத்த தசாப்தத்தில் சுமார் 10 இலட்சம் இளைஞர்கள் வேலைச் சந்தையில் நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தகுதியான வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய தனியார் முதலீடுகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அடுத்த 5 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான நேரடி மற்றும் திரட்டப்பட்ட முதலீடுகள் சர்வதேச நிதி நிறுவனம் (IFC) வழங்கவுள்ளது. 

அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் 1 பில்லியன் டொலர் வரையிலான குறைந்த வட்டி கடன் வசதியை உலக வங்கி வழங்கவுள்ளது. 

அரச ஒழுங்குமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலராக உயர்த்த இந்த கூட்டாண்மை ஊடாக திட்டமிடப்பட்டுள்ளது. 

கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் 2030க்குள் இலங்கையின் மின்சாரத் தேவையில் 70 வீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறுதல். இதன் மூலம் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா மூலோபாயத் திட்டம் 2026-2030 க்கு ஆதரவளித்தல் மற்றும் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பிரத்யேக முதலீடுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். 

2025 நவம்பரில் ஏற்பட்ட 'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, எதிர்கால அனர்த்தங்களின் போது விரைவாக மீண்டெழவும், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளை பலப்படுத்தவும் நிதி ஒதுக்கப்படும். 

இந்தக் கட்டமைப்பின் கீழ் முதல் முக்கிய திட்டமாக REVIVE (Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

100 மில்லியன் டொலர் முதலீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறையை மேம்படுத்தும் இத்திட்டம் யாழ்ப்பாணம், பாசிக்குடா, திருகோணமலை மற்றும் அருகம்பே ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டது. 

இத்திட்டம் 2031 ஆம் ஆண்டளவில் 3,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக வங்கி கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையுடன் பணியாற்றி வருவதுடன், தற்போது கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் 1.5 பில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய 13 செயற்திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmnhl4ftv000d356pdjisor27

ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு

17 hours 52 minutes ago

ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு

Apr 2, 2026 - 07:27 PM

ஜனாதிபதியை சந்தித்த IMF தூதுக்குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (2) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழ் இதுவரை எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. 

அண்மைய பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முடிவுகள் குறித்து ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இதன்போது பாராட்டியுள்ளனர். 

குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், முறையான வருமான முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை கொண்டதாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். 

அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்து பேணுவதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றும் விதம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மத்திய கிழக்கு போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அத்துடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 

இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைச் சீராக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தமது நன்மதிப்பைத் தெரிவித்தனர். 

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணிக் குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியு உட்பட அதன் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmnhjerop000b356pcxy07uve

நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல்

18 hours 6 minutes ago

நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல்

Apr 2, 2026 - 05:56 PM

நிலக்கரி மோசடிக்கு பின்னால் ஜனாதிபதி - நாமல்

நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். 

கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 

இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார். 

கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார். 

இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். 

ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது. 

ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார். 

அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது. 

ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmnhg40vw0008356p3wx8eo45

பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர்; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு

18 hours 14 minutes ago

பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட பஸ் நடத்துநர் ; 2,500 ரூபா தண்டப்பணம் விதிப்பு

02 Apr, 2026 | 02:32 PM

image

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் பயணி ஒருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பயணியிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் யாழ்ப்பாண பஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துநர் குறித்த பயணியிடம் மேலதிக கட்டணம் அறவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு அதிகார சபையால் 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், மீண்டும் இவ்வாறான விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு எழுத்துமூலமான உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தின்போது தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்படுவது தொடர்பிலோ அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ, எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் சூ.விமலேஸ்வரன் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குப் பொதுமக்கள் உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/242561

கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்!

18 hours 17 minutes ago

கொழும்புக்கு நீர் வழங்கும் கலட்டுவாவையில் இன்னும் 20 நாட்களுக்கே நீர்!

Published By: Digital Desk 1

02 Apr, 2026 | 02:56 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (02) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது.

எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

வைத்தியசாலைகள், பாடசாலைகள் மற்றும் அத்தியாவசிய அரச நிறுவனங்களுக்குத் தடையின்றி நீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியுள்ளதால், ஏனைய பகுதிகளில் நீர் விநியோகக் கோளாறுகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.

வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நீர் நுகர்வு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களை நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/242559

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

19 hours 15 minutes ago

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

Apr 2, 2026 - 04:26 PM

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்று முதல் (02) அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அவர் இலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட் படையணியினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmnhcsl080003356psgcofpfg

யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்

23 hours 30 minutes ago

யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என  கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீர்வாழ் உயிரினச் செய்கை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர்  இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத்தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடலட்டை வளர்ப்பு பெரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, குறிப்பாக வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது. 

மேலும், ஊர்காவற்துறை, வேலணை, சங்கானை மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் கடற்பாசி வளர்ப்பும் தீவிரமாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பைப் பயன்படுத்திப் புதிய வளர்ப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் 

 இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறால், நண்டு மற்றும் சிப்பி வகை வளர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும், கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

அத்துடன், கடல்வளமற்ற வவுனியா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியைப் பிரத்தியேகமாக மேம்படுத்தலாம்.

குஞ்சு உற்பத்தி நிலையங்களின் பற்றாக்குறை, மன்னார் (மாந்தை மேற்கு, நானாட்டான்) மற்றும் கிளிநொச்சி (பூநகரி) பகுதிகளில் புதிய காணிகளை அடையாளங்காண்பதில் வனவள மற்றும் வனஉயிரிகள் திணைக்களங்களுடனான முரண்பாடுகள், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின்மை மற்றும் காலாவதியான அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தலில் ஏற்படும் தாமதங்கள் ஆகியன பிரதான சவால்களாகக் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள பண்ணைகளின் சனநெரிசலைக் குறைத்தல், பூநகரி போன்ற பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உள்ளூர் கடற்றொழிலாளர்களின் பாரம்பரியத் தொழில்களுடன் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சுமுகமான பொறிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியம் உள்ளது. 

இவ்வாறான சவால்கள் தீர்க்கப்படுவதன் ஊடாக வடக்கு மாகாணத்திலிருந்து வருடாந்தம் அண்ணளவாக 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

யாழில் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது - கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும் கண்காணிப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்  | Virakesari.lk

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்!

23 hours 33 minutes ago

02 Apr, 2026 | 05:48 PM

image

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (2) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இதன்போது பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை பிள்ளையானை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2025 ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட அவர், சுமார் 359 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அவரிடம் விசாரணை நடத்துவதற்காக நான்கு முறை தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டிருந்த நிலையில், இறுதி உத்தரவு நாளை (3) நிறைவடையவிருந்த நிலையிலேயே அவர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

671ff879-9b4a-4f70-891e-02dc669abf8b.jpg

உபவேந்தர் காணாமல்போன சம்பவம் மட்டுமன்றி, பிரிட்டனின் 'செனல்-4' (Channel 4) தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் இவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த ஒரு வருடமாக விரிவான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

பிள்ளையானின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்த அசாத் மௌலானா முன்வைத்த வெளிப்படுத்தல்களின் அடிப்படையில், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை முன்னெடுத்த குழுவினருக்கும் இலங்கையின் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகளுக்கும் இடையில் சந்திப்புகளை ஒருங்கிணைக்க பிள்ளையான் உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிள்ளையான் சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிலிருந்தார். இருப்பினும், 2021ஆம் ஆண்டு சட்ட மா அதிபரினால் குறித்த வழக்கு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை, பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் : பிள்ளையான் விளக்கமறியலில்! | Virakesari.lk

பண்டிகை கால சுற்றுலா பயணங்களின்போது புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

23 hours 35 minutes ago

Published By: Digital Desk 3

02 Apr, 2026 | 04:57 PM

image

(செ.கவிஷனா)

பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி சுற்றுலாச் செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்களை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் ‘செல்பி’ புகைப்படங்களை பதிவிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

தற்போது பல தரப்பினர் பல நாட்களுக்கு தங்களது வீடுகளை பூட்டிவிட்டு வெளிப்பிரதேசங்களுக்குச் சுற்றுலா செல்வதையும், அங்கு எடுக்கும் புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான பதிவுகள் மூலம் தங்களது வீடுகளில் ஆள் நடமாட்டமின்றி இருப்பதை திருடர்களுக்கு நீங்களே தெரியப்படுத்துவதாக அமைகிறது.

மேலும், தங்களது பயணத் திட்டங்கள் அல்லது தற்போதைய இருப்பிடம் குறித்து வெளி நபர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியமற்ற விடயமாகும். இவ்வாறான பதிவுகளைக் காண்பதன் மூலம் திருடர்கள் திட்டமிட்டு இருப்பிடங்களுக்குள் புகுந்து பணம், நகை மற்றும் பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடிக்கத் தூண்டுவதாக அமைகிறது. அவ்வாறு நீண்ட நாட்களுக்கு வீட்டை விட்டு செல்லும் சந்தர்ப்பங்களில் அருகிலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கோ அல்லது சிவில் பாதுகாப்புக்குழு தலைவருக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். அத்துடன் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கமராக்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புக்களை சரியாகச் செயற்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பதிலும் சொத்துக்களை கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

பண்டிகை கால சுற்றுலா பயணங்களின்போது புகைப்படங்களை உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை தவிர்க்கவும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk

மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர்

23 hours 36 minutes ago

02 Apr, 2026 | 04:51 PM

image

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

மலையக மக்கள் எதிர்கொள்கின்ற கல்வி, வீடு மற்றும்  காணிப் பிரச்சினைகள் குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்த அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு விசேட கவனம் செலுத்தினார்.

மேலும், மலையகப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, தகுதியான தமிழ் மொழி  மூல ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான பி. திகம்பரம், வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-04-02_at_4.41.56_PM_


 மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஜனாதிபதியை சந்தித்தனர் | Virakesari.lk

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

1 day 3 hours ago

images-2026-04-02T084316.027.jpg?resize=

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சால்,  இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட, 2016 ஏப்ரல் 29 திகதியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களுக்குக் மேலதிகமாக, இந்தச் ளசுற்றறிக்கையில் உள்ள விதிமுறைகள் இனி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பகுதியை மேற்கோள் காட்டி இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படிஇ கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

தண்டனையாகவோ அல்லது வேறு எந்தக் காரணத்திற்காகவும் எந்தக் குழந்தையும் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்படக்கூடாது என்றும்இ எந்த நிலையிலும் எந்தவிதமான உடல்ரீதியான தண்டனையும் விதிக்கப்படக்கூடாது என்றும், தவறு செய்பவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பான விஷயங்களைக் கையாளும்போது, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1470694

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

1 day 5 hours ago

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்

Lenin Raj   / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:46

image_5e93935c22.jpg

முன்னாள் அமைச்சரான மஹிந்த விஜேசேகர தனது 81 ஆவது வயதில் காலமானார்.

கடற்றொழில் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர், முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, அக்குரஸ்ஸ - கொடபிட்டிய பகுதியில் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ (LTTE) தற்கொலை குண்டுத் தாக்குதலில் மஹிந்த விஜேசேகர அவர்கள் கடுமையாக காயமடைந்தார்.

அவர் உயிரிழக்கும் வரை அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மஹிந்த-விஜேசேகர-காலமானார்/175-374966

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி

1 day 19 hours ago

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையில் வீழ்ச்சி  

01 Apr, 2026 | 04:59 PM

image

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், குறிப்பாக மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்றே குறைவடைந்துள்ளது.

2026 மார்ச் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மட்டும் மொத்தமாக 175,661 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரி (277,327) மற்றும் பெப்ரவரி (279,328) மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. எனினும், மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கையில் சற்றே வீழ்ச்சி காணப்படுகிறது.

மார்ச் மாதத்தில் தினசரி சராசரி வருகை 6,057ஆகப் பதிவாகியுள்ளது. மார்ச் 14ஆம் திகதி அதிகபட்சமாக, ஒரே நாளில் 7,318 பயணிகள் வந்துள்ளனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 45,650 பயணிகள் (26%) வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,030 பயணிகள், ரஷ்யாவிலிருந்து 15,579 பயணிகள், சீனாவிலிருந்து 13,449 பயணிகள், ஜெர்மனியிலிருந்து 12,603 பயணிகள், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,219 பயணிகள், பிரான்ஸிலிருந்து 8,015 பயணிகள், அமெரிக்காவிலிருந்து 5,150 பயணிகள், ஜப்பானிலிருந்து 4,338 பயணிகள், பங்களாதேஷிலிருந்து 4,192 பயணிகள் மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து மொத்தமாக 39,436 பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து மார்ச் 29 வரை மொத்தம் 732,316 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/242504

எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் விடுதலை

1 day 20 hours ago

எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் விடுதலை

Apr 1, 2026 - 08:05 AM

எல்லை தாண்டிய 25 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.


நேற்று (31) இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 25 மீனவர்களுக்கும் எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார்.


இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குறித்த மீனவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://www.virakesari.lk/article/242491

பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!

1 day 21 hours ago

WhatsApp-Image-2026-04-01-at-15.11.38.jp

பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

WhatsApp-Image-2026-04-01-at-15.11.35.jpeg?resize=600%2C338&ssl=1

ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும் மேலும்
ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1470666

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr