நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி
Published By: Digital Desk 3
17 Dec, 2025 | 11:19 AM

டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும்.
அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.
இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில்,
“நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.
இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.”
மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில்,
“கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.
இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார்.
இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
https://www.virakesari.lk/article/233603