ஊர்ப்புதினம்

பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!

1 day 23 hours ago

WhatsApp-Image-2026-04-01-at-15.11.38.jp

பொலிசாரைத் துரத்தித் துரத்தி கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

WhatsApp-Image-2026-04-01-at-15.11.35.jpeg?resize=600%2C338&ssl=1

ரம்பொட வெதமுல்ல தோட்டப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்து வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அங்கு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட அதிகாரிகளின் 2 பேர் கொத்மலை வைத்திய சாலையிலும் மேலும்
ஆபத்தான நிலையிலுள்ள 5 பேர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் 03 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2026/1470666

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

2 days 6 hours ago

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

April 1, 2026 11:10 am

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சமஷ்டியை அடிப்படையாக வைத்தே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அந்தச் சமஷ்டிக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்தினாலேயே தமிழரசுக் கட்சி ‘சமஷ்டிக் கட்சி’ என்று அழைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை அந்த அடிப்படை மாறாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பயணித்து வருகின்றது. அத்தகைய உன்னத கொள்கையை எமக்குத் தந்த பெருந்தகையை இன்று நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்றோம்.

தந்தை செல்வாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்மாதம் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நினைவு தின நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘இலங்கை அரசமைப்பு சீர்திருத்தம் சமஷ்டி வழியில்’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விசேட சொற்பொழிவை ஆற்றவுள்ளார். சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டே தந்தை செல்வா அரசியலை முன்னெடுத்தார் என்பதால், அந்தத் தலைப்பில் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.” – என்றார்.

https://oruvan.com/the-tamil-nadu-government-will-never-deviate-from-the-federal-policy-sumanthirans-firm-determination-in-jaffna/

இயக்கச்சி இராணுவ முகாம் முன் பாரிய போராட்டம்

2 days 6 hours ago

இயக்கச்சி இராணுவ முகாம் முன் பாரிய போராட்டம்

புதன், 01 ஏப்ரல் 2026 05:52 AM

இயக்கச்சி இராணுவ முகாம் முன் பாரிய போராட்டம்

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக இயக்கச்சி பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த போராட்டத்திற்கு வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

https://jaffnazone.com/news/55972

வட கிழக்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சந்தேகத்திற்கிடாமான மற்றொரு ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

2 days 6 hours ago

வட கிழக்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சந்தேகத்திற்கிடாமான மற்றொரு ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

Published By: Vishnu

01 Apr, 2026 | 05:39 AM

image

 (செ. சுபதர்ஷனி)

வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது.

மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கைக்குச் சொந்தமான மேற்படி ஆழ்கடல் மீன்பிடி படகு நாட்டின் வட கிழக்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது. புலனாய்வுப்பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆழ்கடலில் வைத்து, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கைது செய்திருந்தனர்.

கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீன்பிடி படகில் பயணித்த சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் அடங்கியது என சந்தேகிக்கப்படும் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு புதன்கிழமை (1) அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/242450

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு

2 days 6 hours ago

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு

01 Apr, 2026 | 11:32 AM

image

முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31)  கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள் கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

எவ்வித தடையுமின்றி இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்கரையை அண்மித்து வருகைதந்து கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும்வரையில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள்.

இவ்வாறு அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதார வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர். இது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

அத்து மீறி எமது கடற்பரப்புகளுக்குள் உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளை கடற்படையினருக்குத் தெரிவதில்லையா?

அல்லது அத்து மீறி எல்லைதாண்டி எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கடற்படையினரிடமுள்ள கருவிகள் பழுதடைந்துள்ளனவா?

அவ்வாறு கடற்படையினரிடமுள்ள கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள். நாம் ஜனாதிபதியுடன்பேசி புதிய கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடுக்கை மேற்கொள்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது கடற்படை அதிகாரி பதிலளிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக 24மணித்தியாலங்களும் கடற்படையினர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அவ்வாறு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் ரேடார் கருவிகள்மூலம் கண்காணித்து அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடற்படை அதிகரியினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/242467

காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள்

2 days 7 hours ago

காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள்

adminApril 1, 2026

TamilNews2.png?fit=540%2C720&ssl=1

அல்லைப்பிட்டியில்  காவல்துறையினாின்  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறைப் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி  காவல்துறையினரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அல்ஃபினோ அருள்பாய்ஸ் (வயது 17) எனும் சிறுவன் உயிரிழந்திருந்தாா்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் , தமக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் தம்மை மோட்டார் சைக்கிள்களில் இனம் தெரியாத நபர்கள் பின் தொடர்பாகவும் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை கடந்த 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தம்மை அச்சுறுத்தும் வகையில் இருவர் பின் தொடர்ந்ததாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர் .முறைப்பாட்டின் போது , தம்மை பின் தொடர்பவர்கள் குறித்த ஒளிப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த முறைப்பாட்டை அடுத்து, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் யாழ்.மாவட்ட  காவல்துறை  அத்தியட்சகருக்கு பணித்துள்ளார்.

அது தொடர்பிலான விசாரணைக்காக , முறைப்பாட்டாளரான உயிரிழந்த சிறுவனின் தாயாரை இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பிரிவுக்கான உதவி  காவல்துறை ர் அத்தியட்சகர் வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துள்ளார்.

அதேவேளை குற்றம் சாட்டப்படும் காவல்துறைப்  பிரிவினரே குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் வேறு பிராந்திய காவல்துறையினரோ , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அதேவேளை சிறுவன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றம் சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொள்வதற்கும் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரின் விசாரணைகளில் திருப்தி இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்ந்த மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து , துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://globaltamilnews.net/2026/231347/

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

2 days 7 hours ago

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

Apr 1, 2026 - 10:01 AM

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். 

 

நேற்று (31) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு ஏற்ப தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

 

பல்வேறு காரணங்களினால் பரீட்சை காலப்பகுதிகள் மாற்றமடைந்ததால் கடந்த காலங்களில் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அதன் காரணமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார். 

 

இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளதுடன், தற்போது முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (01) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இங்கு மேலும் தெரிவித்தார். 

 

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.

https://adaderanatamil.lk/news/cmnfjr4wr0009356pwvvlq4ke

'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு

2 days 7 hours ago

'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' மஹிந்த, மைத்திரி, கோட்டா,சஜித் பங்கேற்புடன் நூல் வெளியீடு

Published By: Vishnu

01 Apr, 2026 | 05:21 AM

image

(இராஜதுரை ஹஷான்)

பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலவினால் எழுதப்பட்ட 'உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை தேடிச்செல்லல்' எனும் நூல் செவ்வாய்க்கிழமை (31) வெளியிடப்பட்டது.

நூல் வெளியீட்டு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (31) கொழும்பு சம்புத்த ஜயந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, நாமல் ராஜபக்ஷ, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜி.எல் பீரிஸ், டலஸ் அழகபெரும, விமல் வீரவன்ச,அநுர பிரியதர்ஷன யாப்பா,சாகல ரத்நாயக்க, வஜிர அபேவரத்தன, உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பௌத்த மத அனுஸ்டானத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க ஆரம்ப உரையாற்றி ' உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்புண்டு என்பதை ஏற்க முடியாது. ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குறிப்பிடுவதை முற்றாக நிராகரிக்கிறேன். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ராஜபக்ஷர்கள் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து உதய கம்மன்பில தான் எழுதிய நூலை பௌத்த மத தலைவர்களுக்கு வழங்கி வைத்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கி வைத்தார். நிகழ்வு ஆரம்பமாகி 10 நிமிடத்துக்குள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிகழ்வில் இருந்து இடைநடுவே சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய உதய கம்மன்பில, குண்டுத்தாக்குதல் பற்றி முழுமையாக அறிந்துக் கொள்வதற்கு தான் எழுதிய புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பயங்கரவாதி சஹ்ரான் என்றும், தாக்குதல்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்ட இப்ராஹிம் 300 மில்லியன் ரூபா செலவழித்ததாகவும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/242448

பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை

2 days 7 hours ago

பயங்கரவாத சட்ட வரைவு; மனித உரிமை சீர்திருத்தத்தில் தயக்கம் - சர்வதேச ஆய்வாளர் எச்சரிக்கை

Published By: Vishnu

31 Mar, 2026 | 11:02 PM

image

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என நெதர்லாந்தின் டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ எச்சரித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் புதிதாக வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தீவிர கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அதேவேளை அவ்வரைவு தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை அனுப்பிவைப்பதற்கு நீதியமைச்சினால் வழங்கப்பட்டிருந்த பொதுமக்கள் கருத்தறியும் காலப்பகுதி கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

இருப்பினும் இவ்விடயத்தில் தாம் முன்னெடுக்கவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் அறிவிக்காத நிலையில், நெதர்லாந்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆய்வுக்கட்டமைப்பான டி.எம்.சி அஸேர் நிலையத்தின் ஆய்வாளர் நிக்கி சியாம்பாகோ இப்புதிய வரைவு தொடர்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கடந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதத்தடைச்சட்டம் உள்ளடங்கலாக அனைத்து ஒடுக்குமுறைச்சட்டங்களையும் நீக்குவதாகவும், நாட்டின் சகல பகுதிகளிலும் வாழும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் உறுதியளித்தது. இருப்பினும் அரசாங்கம் அவ்வாக்குறுதியைத் தற்போதுவரை நிறைவேற்றவில்லை.

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டமானது சிவில் சமூகம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தவறாகப் பிரயோகிக்கப்பட்ட நீண்டகால வரலாற்றைக் கொண்டிருக்கிறது. 2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் செயற்திறன்மிக்கதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், பொறுப்புக்கூறத்தக்கதுமான புலனாய்வு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்பின் தேவைப்பாட்டை உணர்த்தின. இத்தகைய பின்னணியில் முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கான திருத்தங்களும், பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவுகளும் முன்மொழியப்பட்ட போதிலும், அவை எவற்றாலும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புக்கட்டமைப்பை சர்வதேச சட்ட நியமங்களுக்கு அமைவாகக் கொண்டுவரமுடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் 2024 இல் தேர்தல்களின் பின்னர் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம் குறித்து ஆராய்வதற்கும், புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவை முன்மொழிவதற்குமென ஒரு குழு நியமிக்கப்பட்டது. அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு' கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

போருக்குப் பின்னரான சவால்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மீதான நீண்டகால விமர்சனங்கள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்துவதற்கான இலங்கையின் அரசியல் கடப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இச்சட்டவரைவு பெரும்பாலும் முன்னைய அரசாங்கங்களின் முன்மொழிவுகளையே பிரதிபலிக்கிறது. அத்தோடு சர்வதேச சட்டத்துக்கு இணங்குவதற்குரிய ஐந்து அத்தியாவசிய முன்நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வதற்கும் அது தவறியிருக்கிறது.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் பயங்கரவாத செயல்களுக்கு மிகப்பரந்துபட்ட வரையறை வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட உள்நோக்கத்துடன் செய்யப்படும் பட்சத்தில் எனக் குறிப்பிட்டு, தாக்குதல், சொத்துச்சேதம், கொள்கை, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மத அல்லது கலாசார இடங்களை சேதப்படுத்தல் போன்ற சாதாரண குற்றங்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. இந்த விரிவான வரையறை மற்றும் குற்றவியல் நோக்கத்தின் பரந்துபட்ட தன்மை என்பன அரசியல் எதிரிகளையும் சிவில் சமூகத்தையும் குறிவைப்பதற்குத் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.

அதேபோன்று இப்புதிய சட்ட வரைவு படையினருக்கு மட்டுமீறிய அதிகாரங்களை வழங்குகிறது. 'நியாயமான சந்தேகம்' என்ற அடிப்படையில் நபர்களை நிறுத்தவும், தேடவும், விசாரணை செய்யவும், வளாகங்களுக்குள் நுழைந்து சோதனையிடவும் சட்டத்தின்கீழ் ஒரு குற்றத்துடன் தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பொருட்களைக் கைப்பற்றவும் இது இடமளிக்கிறது. இந்தப் பரந்துபட்ட அதிகாரங்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல் வரலாறு என்பவற்றைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இவ்வதிகாரங்கள் தன்னிச்சையான தடுத்துவைப்புகள் மற்றும் சித்திரவதைகளுக்கு வழிகோலும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.

இவையும், இச்சட்ட வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள ஏனைய பல சரத்துக்களும் மனித உரிமைகளை மட்டுபடுத்துவதற்கோ அல்லது இல்ஙகையின் போருக்குப் பின்னரான விரிவான இடைக்கால நீதிச்செயன்முறையை சீர்குலைப்பதற்கோ வழிவகுக்கக்கூடும். இச்சட்டத்தை நிறைவேற்றுவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் சார்ந்து இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளை சமரசம் செய்யும் வகையில் அமையும்.

குறிப்பாக இலங்கை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையினால் பயனடைந்து வருவதுடன், அச்சலுகைக்கு மீண்டும் விண்ணபிப்பதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் அதற்கு ஈடாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் எனும் கடப்பாட்டை இலங்கை நிறைவேற்றவேண்டும். இல்லாவிடின் 2010 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப்போல, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் இடைநிறுத்தப்படலாம் அல்லது புதுப்பிக்கப்படாமல் போகலாம். இது இலங்கையின் பொருளாதாரத்தில் மோசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது. இந்த அணுகுமுறை சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கிறது. அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது. அதுமாத்திரமன்றி இந்தப் போக்கு இலங்கைக்கு நீண்டகால அடிப்படையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/242438

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

2 days 8 hours ago

Screenshot-2026-04-01-094251.png?resize=

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

https://athavannews.com/2026/1470573

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

2 days 19 hours ago

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன - கல்வித் திணைக்களம்

Published By: Vishnu

31 Mar, 2026 | 11:45 PM

image

கல்வித் திணைக்களம் நாட்டில் நடைபெற்ற பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளை அறிவித்துள்ளது.

இந்த வருடம் நாட்டின் 2,362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்றது, இதில் மொத்தம் 3,40,525 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 2,46,521 பேர் பாடசாலை வழிக் விண்ணப்பதாரர்கள் மற்றும் 94,004 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் ஆவர்.

பரீட்சை பெறுபேறுகளை https://www.doenets.lk இணையத்தில் பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/242441

பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் யாழில் போராட்டம்

2 days 20 hours ago

யாழில் போராட்டம்

Published By: Digital Desk 3

31 Mar, 2026 | 01:33 PM

image

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பெண்களுக்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில் இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

IMG_6793.jpeg

IMG_6794.jpeg

IMG_6792.jpeg

https://www.virakesari.lk/article/242395

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

2 days 21 hours ago

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

Mar 31, 2026 - 04:51 PM

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்

அரசாங்கத்தினால் முறையான இடமாற்ற நடைமுறை ஒன்று தயாரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் குறித்து இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த முறையான இடமாற்றச் செயல்பாட்டின் மூலம், குறிப்பிட்ட சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல வைத்தியர்களுக்கு நீதி கிடைத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:


"மே 10ஆம் திகதியாகும் போது சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இது பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 13 வருடங்களாக இவ்வாறான முறையான நடைமுறை ஒன்று இடம்பெறவில்லை. இடமாற்றச் சபைகளில்  இருந்ததாகக் கூறிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சில இடங்களில் 13 முதல் 17 வருடங்கள் வரை தங்கியிருந்தனர். கண் வைத்தியசாலையில் இருந்தவர்கள் தமக்குரிய தேசிய வைத்தியசாலைக்குச் செல்ல முடியாமல் வீதியைக் கடக்கக் கூடத் தயங்கினர். இவ்வாறான அனைத்து முறைகேடுகளையும் நிறுத்தி, வருடாந்த இடமாற்ற நடைமுறையை நாம் முன்னெடுத்து வருகிறோம். இதனால் நீண்டகாலமாக அநீதிக்குள்ளாகியிருந்த பெரும்பான்மையான வைத்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறைவேற்றுச் சபை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது மனைவிகளை தமக்கு விருப்பமான இடங்களில் பல வருடங்களாகத் தங்க வைத்திருந்தவர்களே இதனை எதிர்க்கின்றனர். எனவே, இந்த இடமாற்ற நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.


2018ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விசேட பட்டியல் ஒன்று இருந்தது. யுத்த காலத்திலும் அதன் பின்னரும் அந்தப் பகுதிகளுக்கு வைத்தியர்களை அனுப்புவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. யுத்தம் முடிந்து 8-9 வருடங்கள் ஆகியும் அதனை நிறுத்த யாரும் முயற்சிக்கவில்லை. 2020இல் இது 'கஷ்டப் பிரதேசப் பட்டியல்' என மாற்றப்பட்டது. சுகாதார அமைச்சு இதற்காக 7 பிரதான அளவுகோல்களைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தச் சங்கத்தின் அழுத்தத்தினால் அந்தப் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றிருந்தன.


இம்முறை சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களை இணைத்து பலகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அந்த 7 அளவுகோல்களின் அடிப்படையில் புதிய கஷ்டப் பிரதேசப் பட்டியலைத் தயாரித்துள்ளோம். இந்தப் பட்டியலைத் தயாரிக்க சுகாதார அமைச்சுக்கு தொழிற்சங்கங்கள் தேவையில்லை. அது தொழிற்சங்கங்களின் வேலை அல்ல, சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதன்படி 265 இடங்களைக் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு சங்கங்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை."

https://adaderanatamil.lk/news/cmneivj6q0005356pmhh7gmgd

அரசாங்கத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிக நஷ்டம்: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

2 days 21 hours ago

அரசாங்கத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிக நஷ்டம்: ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டில் கைது

Published By: Digital Desk 1

31 Mar, 2026 | 10:07 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

அரசாங்கத்திற்கு 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி இழப்பை ஏற்படுத்தியமை மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர், அதிக வருமானம் ஈட்டும் நபர் ஒருவருக்கு விவசாயி என்ற தகுதியின் கீழ் போலியான வருமானச் சான்றிதழை வழங்கியுள்ளார். இதன் மூலம் அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய 10,625,000 ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளித்தரப்பு நபர் ஒருவருக்கு நிதி ஆதாயங்களையும், வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஊழல் நடவடிக்கையை அவர் முன்னெடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (30) மதியம் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

https://www.virakesari.lk/article/242368

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!

3 days 6 hours ago

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க இன்று முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு அறிமுகம்!

Published By: Digital Desk 1

31 Mar, 2026 | 09:42 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை (31) முதல் மத்திய மின்னணு கட்டமைப்பு திறக்கப்படுவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இந்த மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் இந்த மத்திய மின்னணு கட்டமைப்பு, இன்று காலை 10.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்ததன் பின்னர், சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும், தமது விபரங்களை இந்தக் கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/242364

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

3 days 6 hours ago

New-Project-6-18.jpg?resize=750%2C375&ss

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது.

அதன்படி, ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பால் தேநீர் மற்றும் பிளேன் டீ ஆகியவற்றின் விலைகளும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2026/1470523

வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

3 days 20 hours ago

வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

adminMarch 30, 2026

TamilNews2-116.png?fit=900%2C1200&ssl=1

அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.  யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

“எமது பிரதேசங்களில் அண்மையில்  நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன. அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர். தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற  காவல்துறையினரை இடித்துக் கொலை செய்கின்றனர்.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன.
இவை  எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன.

எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது.

அண்மையிலே  காவல்துறைஅதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரர், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்?

உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது.

கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய  நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது.

இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையினருக்கும்  மாநகர சபைக்கும் இடையிலான  முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2026/231269/

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர்

3 days 20 hours ago

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன - வடக்கு மாகாண ஆளுநர்

30 Mar, 2026 | 04:18 PM

image

வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது.

வடக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் அவற்றினை நிச்சயம் வலுவூட்டும்.

இந்தத் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்து வருமானத்தைக் கூட்டிக்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அது தொடர்பான விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

இந்த நிதியைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்மொழிந்துள்ளமையின் ஊடாக அவற்றின் வருமானங்கள் நிச்சயம் அதிகரிக்கும்.எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தச் செயற்றிட்டங்களை நிறைவுறுத்துவதற்குத் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.

இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள 22 பிரதேச சபைகளால் 54 திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கு ஒவ்வொரு திட்டம் என்ற அடிப்படையில் 22 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2__2___1_.jpeg

2__1___1_.jpeg

https://www.virakesari.lk/article/242326

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

3 days 21 hours ago

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

Mar 30, 2026 - 08:07 PM

5-ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இன்று (30) முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. 

அரசாங்கப் பாடசாலை அல்லது அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே இப்பரீட்சைக்குத் தோற்ற முடியும். 

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, 2027 ஜனவரி 31 ஆம் திகதியன்று 11 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. 

விண்ணப்பங்கள் இணையவழியில் (Online) சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இது தொடர்பான அறிவுறுத்தல்களை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். 

விசேட தேவையுடைய மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய முறை குறித்த விரிவான தகவல்கள் அறிவுறுத்தல் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்களுக்கு: 0112 784 537 / 0012 786 616 / 0112 784 208 / 0112 786 200 / 0112 784 201 

அவசர தொலைபேசி இலக்கம்: 1911 

பெக்ஸ் (Fax): 0112 784 422 

மின்னஞ்சல்: gr5schexam@gmail.com

https://adaderanatamil.lk/news/cmndak07n0007356pqr4bypmw

ஏப்ரல் முதல் மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

4 days 1 hour ago

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

Mar 30, 2026 - 02:15 PM

மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிப்பதற்குப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் பயன்படுத்தும் மின்சார அலகுகளின் அடிப்படையில் இம்முறை மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சதவீதம் மாறுபட்டுள்ளது.

இந்த மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.



அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது. 

இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது. 

மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

91 - 120 அலகுகளுக்கு மின்சாரக் கட்டணம் 7.1% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி மாதக் கட்டணம் 420 ரூபாவினால் உயரும். 

180 அலகுகளுக்கு மேல் இந்த கட்டத்திற்கு அதிகப்படியான கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மின்சாரக் கட்டணம் 25% இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான சலுகை: மாதாந்த மின்சார நுகர்வு 180 அலகுகளுக்குக் குறைவாகக் காணப்படும் மதத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனினும், அதே பிரிவில் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மாத்திரம் 9.6% கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmncxysd60007356pqpyrrftt

இந்தக் கட்டண நிர்ணயமானது, உச்ச நேரங்களில் மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்கு மின்சார விநியோக நிறுவனங்களையும் மின்சார நுகர்வோரையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, எதிர்காலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாட்களிலும் தொழிற்சாலைகள், விடுதிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டுத் துறைகளுக்குக் குறைந்த மின்சாரக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதிலும் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு தொடர்பாக ஒரு பொது கலந்தாய்வை நடத்தியதுடன், சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் தகவலுக்கு, திரு ஜயசூரியன் (உதவி பணிப்பாளர்- பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவு) அவர்களை 0770 399 119 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr