ஊர்ப்புதினம்

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்!

2 weeks 6 days ago

வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடற்படை தலைமைத்துவத்தில் விசேட கலந்துரையாடல்!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 11:21 AM

image

வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா' முகாமில் நடைபெற்றது.

வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் கடந்த 10ஆம் திகதி இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் மீனவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், எல்லை தாண்டிய மீன்பிடி, சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் கடத்தல்களைத் தடுப்பது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடல் வளங்களை நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவித்தல் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, பொலிஸ், மீன்பிடி திணைக்களம் மற்றும் மீனவ சங்கங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான மீன்பிடி சூழலை உருவாக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வட பிராந்திய கடற்படை அதிகாரிகள், இலங்கை கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள், மீன்பிடி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மீன்பிடி பரிசோதகர்கள் மற்றும் உள்ளூர் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மீனவ சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்படையினர் எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கு மீனவ சங்கப் பிரதிநிதிகள் இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.  

WhatsApp_Image_2026-03-14_at_11.03.08.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.10.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.11.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.12.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.13.jp

WhatsApp_Image_2026-03-14_at_11.03.14.jp

https://www.virakesari.lk/article/240930

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026 – 2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி!

2 weeks 6 days ago

போதைப்பொருள் ஒழிப்பு தேசிய முன்னுரிமை: 2026–2030 புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிட்டார் பிரதமர் ஹரிணி!

Published By: Digital Desk 1

14 Mar, 2026 | 11:04 AM

image

நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை ஒரு தேசிய முன்னுரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும், அது அடிமட்ட மட்டத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

'போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரித்தல், சிகிச்சை அளித்தல் மற்றும் புனர்வாழ்வளித்தல் ஆகியவற்றுக்கான 2026–2030 தேசிய மூலோபாயத் திட்டம்' குறித்த விளக்கமளிக்கும் கூட்டம், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் ஏனைய முக்கிய தரப்பினரின் பங்கேற்புடன் நேற்று வெள்ளிக்கிழமை (13) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இலங்கையில் போதைப்பொருள் பாவனையினால் அதிகரித்து வரும் சுகாதார, சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள தேசிய மூலோபாயம் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட, சான்றுகளின் அடிப்படையிலான தேசிய அணுகுமுறையின் ஊடாகத் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு மற்றும் சமூகமயப்படுத்தல் ஆகிய பணிகளைப் பலப்படுத்துவதை இந்த மூலோபாயத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைப் பிரச்சினையை முன்கூட்டியே கண்டறிதல், தொடர்ச்சியான பராமரிப்பு, சமூகம் சார்ந்த கண்காணிப்பு மற்றும் குணமடைந்த நபர்களை மீண்டும் சமூகத்தில் இணைத்தல் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. ஆரம்ப சுகாதார மற்றும் வெளிநோயாளி மட்டங்களில் பரிசோதனைகளைப் பலப்படுத்துதல், வைத்தியசாலை சிகிச்சை மற்றும் கண்காணிப்புச் சேவைகளை மேம்படுத்துதல், புனர்வாழ்வு பெறுவதற்கான வதிவிட வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் சமூகம் சார்ந்த புனர்வாழ்வு, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுக்கும் திட்டங்களை மேம்படுத்துதல் போன்ற முக்கிய பரிந்துரைகள் இத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளன.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள் இருக்கும் தாய்மார் மற்றும் சிறைக்கைதிகள் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு விசேட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போதைப்பொருள் பிரச்சினைக்கு எதிரான தேசியப் பொறிமுறையைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, போதைப்பொருள் அச்சுறுத்தல் என்பது குடும்பங்களின் ஸ்திரத்தன்மைக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் பாரிய சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சட்ட அமுலாக்கத்திற்கும் புனர்வாழ்வுக்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தல் மற்றும் ஊடகங்களின் பொறுப்புமிக்க செய்தி அறிக்கையிடல் ஆகியவற்றை இந்த தேசிய மூலோபாயத்தின் முக்கிய அங்கங்களாக உள்வாங்குவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சிறைச்சாலைகள் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-14_at_10.55.44.jp

WhatsApp_Image_2026-03-14_at_10.55.45__1

WhatsApp_Image_2026-03-14_at_10.55.45.jp

WhatsApp_Image_2026-03-14_at_10.55.46.jp

https://www.virakesari.lk/article/240928

‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

2 weeks 6 days ago

nnnn.jpg?resize=750%2C375&ssl=1

‘அரச சுபநேரக் குழுவை’ நியமிக்க, முடிவுக்கு வந்த காலக்கெடு! இன்று முற்பகல் விகாரையில் ஆலோசனை!

கலாசார திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் ‘அரச சுபநேரக் குழுவை’ கலைத்ததோடு, அரசாங்கம் இதுவரையில் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை.

இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழுவின் உறுப்பினர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (10) அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டது.

இதற்கிடையில், ஜோதிடர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று புத்தசாசன அமைச்சுக்கு சென்று அரச சுபநேரக் குழுவை உடனடியாக மீளச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், அரச சுபநேரக் குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்காவிடின், தமது கட்சியின் தலையீட்டின் மூலம் மக்களுக்கான புத்தாண்டு சுபநேர பத்திரத்தை முன்வைப்பதாக ‘சர்வஜன அதிகாரம்’ அறிவித்திருந்தது.

இதற்கமைவாக, ‘சர்வஜன அதிகாரம்’ அரசாங்கத்திற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், உறுதியளித்தபடி அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரம் ஒன்றை தயாரிக்குமாறு, பெபிலியான சுனேத்ரா மகா தேவி பிரிவென் ரஜமகா விகாரையின் பரிவேணாதிபதி பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரிடம் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (14) அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ‘சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர உள்ளிட்ட குழுவினர் இன்று முற்பகல் குறித்த பிரிவெனாவுக்குச் சென்று பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தனர்.

இதற்கிடையில், பேராசிரியர் வண. மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் 17 ஜோதிடர்கள் இன்று சுனேத்ரா மகா தேவி பிரிவெனாவுக்கு வருகை தந்து கலந்துரையாடியதுடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்தாண்டு சுபநேர பத்திரத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, அனைவரினதும் இணக்கப்பாட்டையடுத்து குறித்த புத்தாண்டு சுபநேர பத்திரம் வெளியிடப்பட்டது.

https://athavannews.com/2026/1468407

அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபை அனுசரணை - நடவடிக்கை எடுக்க அமைச்சர் லால்காந்தவிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து

2 weeks 6 days ago

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிக்கப்பட்ட விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் - ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Published By: Vishnu

13 Mar, 2026 | 08:16 PM

image

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டசெயலகத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற விவசாயம், கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் தலைமையிலான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா வடக்கு பிரசேசெயலாளர் பிரிவிலுள்ள திரிவச்ச குளம் என்னும் இடத்தில் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

இலங்கையின் சட்டத்தின்படி காடுகளை அழிப்பதெனில் உரிய அனுமதிகளைப் பெறப்படவேண்டும். ஆனால். திரிவச்சகுளம் பகுதியில் அனுமதிகள் எவையும் பெறப்படாமல் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட அடர்வனங்கள் அழிக்கப்பட்டன.

மகாவலி அதிகாரசபை தனது ஆளுகைக்குட்பட்ட இடம் என உரிமைகோரும் பகுதியிலேயே இவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. மகாவலி அதிகாரசபையின் ஆதரவோடுதான் திரிவச்சகுளம் பகுதியில் இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் மண்வெட்டிப்பிடி வெட்டும்போது, காடழிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நான்குவருடங்கள் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இங்கு பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இத்தகைய பாரிய சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கு இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்தோடு இவ்வாறு அடர்வனங்கள் அழிக்கப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள தமிழ்மக்களின் பூர்வீக திரிவச்சகுளத்தின் கீழான வயல்நிலங்களை பெரும்பான்மை இனத்தவர்கள் பத்துப்பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு பகிர்ந்தளிக்கும் அத்துமீறல் செயற்பாட்டிலும் மகாவலி அதிகாரசபை ஈடுபட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக குறித்த தமிழ் மக்களின் பூர்வீக திரிவச்சகுளம் வயல் நிலங்களுக்கு அருகாகவுள்ள பாரிய அடர்வனங்களும் மகாவலி அதிகாரசபையின் துணையுடன் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடு தொடர்பில் நான் நேரடியாகப் பார்வையிட்டதுடன், குறித்த சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்களுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையிடம் வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால் அங்கு சட்டவிரோதமாக காடழிப்புச் செயற்பாட்டில் ஈடுபட்ட பெரும்பான்மை இனத்தவர்களுக்கெதிராக இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

சட்டவிரோத செயற்பாட்டில் யார் ஈடுபட்டாலும் அவர்களுக்கெதிராக மிகக் கடுமையான சட்டநடவடிககை எடுக்கப்படவேண்டும்.

இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபை பாரிய சட்டவிரோத செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்டிருக்கின்றது.

எனவே அமைச்சர் லால்காந்த இவ்வாறு சட்டவிரோத காடழிப்புச் செயற்பாட்டிற்கு ஆதரவாகச் செயற்பட்ட மகாவலி அதிகாரசபைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த விடயத்தில் தற்போதய அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுமெனவும், உரியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விடயத்தில் மகாவலி அதிகாரசபை மரணதண்டனைக்குரிய பாரிய குற்றச்செயலைச் செய்துள்ளது. பாரிய மரங்கள், பாரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு காடழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்களும் எம்மிடமுள்ளன.

எனவே இந்தவிடயத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/240905

சர்வதேச தாய்மொழி தினம் 2026 - பிரதம அதிதியாக பிரதமர் ஹரிணி

2 weeks 6 days ago

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான கூட்டு அர்ப்பணிப்புமாகும் - பிரதமர்  

13 Mar, 2026 | 05:29 PM

image

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய, 2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (13) கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலை அரங்கில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வு 'மொழிகள் இணைக்கின்றன; பன்முகக் குரல்கள், பகிரப்பட்ட மனிதநேயம்' (Languages Unite: Diverse Voices, Shared Humanity) எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை சாரணர் சங்கம் மற்றும் இலங்கை பெண் சாரணர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

2026 சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவியம், கட்டுரை மற்றும் குறும்படப் போட்டித் தொடர்களில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் இதன்போது பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச தாய்மொழி தினம் என்பது மொழி, அடையாளம் மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு இடையிலான ஆழமான தொடர்பை நினைவூட்டும் வலிமையானதொரு நாளாக அமைகின்றது.

இந்த உலகளாவிய நினைவுகூரலானது பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தொலைநோக்கு சிந்தனையுடனான முயற்சியினால் உருவானதாகும். பங்களாதேஷின் இந்த முன்னெடுப்பானது, ஒரு தேசிய நினைவுகூரலை மனிதகுலத்தின் மொழிசார் பாரம்பரியத்தைக் கொண்டாடும் உலகளாவிய இயக்கமாக மாற்றியுள்ளது.

இலங்கையின் மொழிப் பன்முகத்தன்மை எமது பல்லினப் பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பன்முகத்தன்மையானது முகாமைத்துவம் செய்யப்பட வேண்டிய ஒரு சவாலாகப் பார்க்கப்படாமல், மதிக்கப்பட வேண்டிய மற்றும் போற்றப்படவேண்டிய ஒரு பலமாகப் பார்க்கப்படவேண்டும்.

நாம் மொழி உரிமைகளைப் பாதுகாக்கும்போது, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கிறோம். பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும்போது, வருங்கால சந்ததியினரை பலப்படுத்துகிறோம். ஒருவருக்கொருவர் தமது சொந்த மொழிகளில் செவிமடுக்கும்போது, ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை உறுதிப்படுத்துகிறோம். பிளவுகள் எளிதில் வேரூன்றக்கூடிய இக்காலகட்டத்தில், மொழிப் பன்முகத்தன்மை மீதான மரியாதை, ஒத்துணர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான ஒரு பாலமாக அமையும்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள டிஜிட்டல் யுகத்தில், இணையவெளியில் மொழிப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து நாம் சிந்திக்கவேண்டும். உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இன்று அழியும் நிலையில் உள்ளன. 

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியான ஆக்கபூர்வமான முயற்சிகள் இல்லையெனில், பல மொழிகள் மௌனமாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு கலாசாரப் பொறுப்பு மட்டுமல்ல, எமது உலகின் பன்முகத்தன்மையைப் பேணுவதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்புமாகும்.

பல்லினத்தன்மை, கலாசாரப் புரிதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற பகிரப்பட்ட அர்ப்பணிப்புகளுடன் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் Andalib Elias, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்திரி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான FAO பிரதிநிதி விமலேந்திர சரண், இலங்கை பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் கலாநிதி குஷாந்த ஹேரத், இராஜதந்திரிகள், இலங்கை சாரணர் மற்றும் பெண் சாரணர் சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்

7Q8A5860.jpg

7Q8A5900.jpg

7Q8A5903.jpg

7Q8A5920.jpg

7Q8A5922.jpg

7Q8A5930.jpg

7Q8A5971.jpg

7Q8A5974.jpg

7Q8A5993.jpg

7Q8A5983.jpg

7Q8A5999.jpg

https://www.virakesari.lk/article/240885

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் உலக வங்கி கூடுதல் கவனம் - தென்னாசியாவுக்கான உப தலைவர்

2 weeks 6 days ago

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் - உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர்

13 Mar, 2026 | 04:21 PM

image

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக யாழ் வந்த உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தெரிவித்தார்.

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பில் உலக வங்கி தற்போது கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது எனவும் தனது இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் எவ்வாறான வளங்களும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன என்பதை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்ததாக தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கான உலக வங்கியின் உதவிகள் பிரதான 5 துறைகளின் கீழ் அமையவுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இத்திட்டங்கள் தொடர்பில் இம்மாதம் 31ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இவ்விசேட கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ். மாநகர சபை ஆணையாளர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

IMG-20260313-WA0025.jpg

IMG-20260313-WA0027.jpg

IMG-20260313-WA0026.jpg

https://www.virakesari.lk/article/240890

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

2 weeks 6 days ago

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன்  நியமனம்

Published By: Vishnu

13 Mar, 2026 | 07:16 PM

image

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.

நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

https://www.virakesari.lk/article/240904

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

2 weeks 6 days ago

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

13 Mar, 2026 | 05:26 PM

image

(செ.சுபதர்ஷனி)

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து, தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன.

https://www.virakesari.lk/article/240903

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

2 weeks 6 days ago

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

Published By: Digital Desk 1

13 Mar, 2026 | 03:37 PM

image

இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.Geographic Reference

கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும்.

அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/240883

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

2 weeks 6 days ago

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

Mar 13, 2026 - 04:41 PM

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற  அவசர சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். 

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். 

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். 

இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmmosqqu30005356peck1lcwx

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர்

2 weeks 6 days ago

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர்

13 Mar, 2026 | 01:32 PM

image

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர்.

மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.

தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம்.

இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள்.

இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம்.

நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/240871

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

2 weeks 6 days ago

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Mar 13, 2026 - 08:30 PM

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். 

வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், இன்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 

"தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும். 

பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து 'வெப்ப அதிர்ச்சி' (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும்" எனத் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmp0wgbg000b356pg8cd32a8

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2 weeks 6 days ago

MediaFile-30.webp?resize=750%2C375&ssl=1

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1468315

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

3 weeks ago

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

13 Mar, 2026 | 10:32 AM

image

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின்  விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற  சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/240858

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

3 weeks ago

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

adminMarch 13, 2026

TamilNews2-32.png?fit=540%2C720&ssl=1

 

 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார்.

இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

https://globaltamilnews.net/2026/230417/

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

3 weeks ago

MediaFile-25.webp?resize=750%2C375&ssl=1

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன.

அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது.

புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர்.

அதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன.

https://athavannews.com/2026/1468255

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

3 weeks ago

vasantha.jpg?resize=750%2C375&ssl=1

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

குறிப்பாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இதனால் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகள் ஏற்கனவே உள்ளூரில் சரிசெய்யப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஏற்றுமதிகள் அதிக விலையில் வரும்போது மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

சில தனியார் எரிவாயு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய மோதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் பெரும்பாலும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பீதியடைந்து வாங்குவதைத் தவிர்க்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

https://athavannews.com/2026/1468239

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

3 weeks ago

New-Project-1-12.jpg?resize=750%2C375&ss

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி ரூ. 10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், இரண்டு படகுகளிலும் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் நீண்ட தூர கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இழுவைப் படகுகள் அடையாளம் காணப்பட்டன.

ஒரு இழுவைப் படகைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 600 கிலோ கிராம்களுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சாக்குப்பைகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதே கப்பலில் இருந்து எட்டு கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி ஆகியவற்றை கடற்படை மீட்டது.

M16 துப்பாக்கி என்பது பொதுவாக பாதுகாப்புப் படைகளின் சிறப்பு உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரண்டாவது பல நாள் மீன்பிடி இழுவைப் படகு, ஏனைய படகிற்கு கண்காணிப்பு மற்றும் உதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகளும் சந்தேக நபர்களும் நேற்று டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவென்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

https://athavannews.com/2026/1468249

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

3 weeks ago

இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்; நாடு திரும்புவோர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:50 AM

image

(நா.தனுஜா)

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார்.

அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட 'முகமில்லா மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்' எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது. அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த எமது ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பதும், தாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இந்தியாவில் வாழும் எமது உறவுகளும், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அடுத்த தலைமுறையினரும் அந்த மண்ணிலேயே குடியுரிமை பெற்று கௌரவமாக வாழவேண்டும் என்று விரும்பினால், அதனை எம்மால் மறுதலிக்கமுடியாது. மாறாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும்.

ஆகவே அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது இந்திய மண்ணிலேயே குடியுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பது தான் நியாயமானதாகும்.

அதேவேளை பலர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நாட்டம் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் தாயகம் திரும்பும்போது, முன்னர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் தாயகம் திரும்புகையில் அவ்வப்போது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறு மீண்டும் நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இருப்பினும் அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பதனால், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகமும் ஈழத்தமிழ் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/240839

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr